Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript சந்திரோதயம்-8 | SudhaRaviNovels

சந்திரோதயம்-8

Kripnythaa

Moderator
Mar 26, 2018
463
150
63
சந்திரோதயம்-8

ஆரோகன், ஆத்ரேயன் இருவரும் பள்ளியை விட்டு வீட்டிற்கு வந்து சேரும் முன்னரே சந்துரு வருணாவிடம் மிகவும் தீர்மானமாகக். கூறியிருந்தான். அவர்கள் இருவரும் வந்தவுடன் எவ்விதக் கேள்விகளையும் எழுப்பக்கூடாது. எப்பொழுதும் போன்றே நடந்துக் கொள்ள வேண்டும்.

தான் பேசும் வரை இதனை பற்றி யாரிடமும் வாயை திறக்கக் கூடாது எனறுக் கூறியவற்றிற்கெல்லாம் தலையாட்டிய வருணா தனக்குள்ளே "சின்னப் பசங்களை பெரியவங்க மாதிரி நடத்த வேண்டியது. பெரியவளான என்னை எப்பப் பார்த்தாலும் சின்னப்புள்ள மாதிரி அப்படி செய்யாதே இப்படி செய்யாதேன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு.

வர வர இவரு வக்கீலா வாத்தியாரான்னு என்று எனக்கே சந்தேகம் வருது", என முணுமுணுத்துக் கொண்டாள். அவளின் முணுமுணுப்பை பின்புறமிருந்து கேட்டுவிட்டு சந்துரு "அது ஒன்னுமில்லை வருணா! நம்ம பெத்த பிள்ளைங்ககிட்ட இருக்குற கேடித்தனம் உனக்கு இன்னும் வரலை. அது வந்ததுக்கு அப்புறம் உன்கிட்டயும் நான் இந்த மாதிரி எல்லாம் சொல்ல மாட்டேன்", என சிரித்துக்கொண்டேக் கூறினான்.

நீங்க சொல்றது சரிதான் ஜி! இந்த ரே அநியாயம் பண்றான். நான் போடுற டிரஸ்ல இருந்து என்னோட ஹேர்ஸ்டைல் வரைக்கும் அம்மா இப்படி பண்ணாதீங்க அப்படி பண்ணாதீங்கன்னு எப்பப் பார்த்தாலும் நொரனாட்டியம் பேசுறான். என்னையே இந்தப் பாடு படுத்துறானே! அப்படின்னா உனக்கு வரப்போறப் பொண்டாட்டியை என்ன பாடுபடுத்துவான்னு எனக்கு பாவமா இருக்கு", என என்றோ வரப்போகும் மருமகளுக்காக தன்னுடைய முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கூறிய வருணாவை பார்த்து சந்துரு "நீ இன்னும் அப்படியே மாறாமல் இருக்க வரு!", எனக் கூறிவிட்டு நகர்ந்து விட்டான்.

சந்துருக் கூறியதை மனதில் நிறுத்தி கொண்டிருந்தாலும், வருணாவின் மனதிலும் பலவித கேள்விகள் ஓடிக் கொண்டுதான் இருந்தன. ஆனால் சந்துரு பொறுமையாக கேட்கும் கேள்விகளை போல் தன்னால் கேட்க இயலாது என்பதை உணர்ந்து இருந்ததாலோ, என்னவோ அவர்கள் வந்தவுடன் அவர்களிடம் எவ்வித கேள்விக்கணைகளையும் தொடுக்க அவள் விரும்பவில்லை.

ஆனால் சூர்யாவையும், கார்த்திக்கையும் விட்டு வைக்கும் எண்ணம் வருணாவிற்கு சிறிதளவும் இல்லை.அதனால் தன் மகன்கள் வருவதற்கு முன்னரே அவர்கள் வந்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவளிடம் இருந்தது.ஆனால் அவளது எண்ணத்தை பொய்யாக்கும் வண்ணம் முதலில் வந்தது ஆரோகனும், ஆத்ரேயனும் தான்.

இருவரும் உள்ளே நுழையும் பொழுதே தங்களின் பெற்றோரை ஓரக்கண்ணில் சற்று ஆராய்ச்சிப் பார்வையுடன் நோக்கிய வண்ணம்தான் வந்தனர். அதனைக் கண்டும் காணாமல் அமர்ந்திருந்த சந்துரு தன்னுடைய வேலையில் மூழ்கியிருந்ததால் அவர்களுக்கும் இதற்கு அடுத்து எவ்வித விசாரணையும் இருக்காது என்ற எண்ணமே தோன்றியது.

உடனே தங்களை ரெஃப்ரஷ் செய்து கொண்டு வந்தவர்கள் "அம்மா பசிக்குது ஏதாவது எடுத்து வையுங்களேன்", என வழக்கம் போல் கேட்டனர். வருணாவும் பசி என்று கேட்டதால் அனைவருக்கும் டிபன் எடுத்து வைத்தவள் " ஹாலுக்கு கொண்டு போய் சாப்பிடுங்க. நான் வர்றேன்", என அவர்களிடமே கொடுத்து அனுப்பினாள்.

நால்வரும் அமர்ந்து சிற்றுண்டியை கொறித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் கார்த்திக்கும்,சூர்யாவும் வீட்டினுள் நுழைந்தனர். அவர்கள் இருவரையும் பார்த்தவுடன் மகன்களின் முகத்தில் ஏதேனும் மாறுதல் தோன்றுகிறதா என கவனித்துக்கொண்டிருந்த சந்துருவிற்கு இருவரது முகத்தில் இருந்தும் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் ஒருமித்த குரலில் இருவரும் வந்தவர்களை "வாங்க சித்தப்ஸ்", என வரவேற்றனர். வந்தவர்கள் நேராக சந்துருவிடம் "என்னண்ணா நீங்க அவ்ளோ சீக்கிரமா போன் பண்ணி வரச் சொன்னீங்க... ஏதாவது முக்கியமான வேலை இருக்கா? சொல்லுங்க. உடனே முடிச்சுடுவோம்", எனக் கேட்டதற்கு இருவரின் கையிலும் வருணா சிற்றுண்டி தட்டை கொடுத்து "இதிலுள்ளதை சாப்பிட்டுட்டு பிறகு பேசுங்க", எனக் கொடுத்தாள்.

"தேங்க்ஸ் அண்ணி! வர்றப்போ அவ்வளவு பசியில வந்தேன். ரெண்டு புரோட்டாவை பிச்சு வயித்துக்குள்ள போட்டுட்டு போகலாம்னு சொன்னதுக்கு சூர்யா கேட்கவே இல்லை. அண்ணி ஏதாவது செஞ்சு தருவாங்கன்னு இங்க நேரா இழுத்துட்டு வந்துட்டான். நீங்களும் அதே மாதிரி எங்களுக்காக செஞ்சு வச்சுருக்கீங்களே! நீங்க ரொம்ப கிரேட் அண்ணி", என கார்த்திக் வருணாவை புகழ்ந்துவிட்டு தட்டில் இருந்த சிற்றுண்டியை எடுத்து உண்ண ஆரம்பித்து இருந்தான்.

ஆனால் சூர்யாவோ சந்துருவின் பார்வையையும்,அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆரோகனையும், ஆத்ரேயனையும் மாறி மாறிப் பார்த்த வண்ணம் இருந்தான். தன்னுடைய முழங்கையினால் கார்த்திக்கின் விலாவில் இடித்து அதனை சைகையால் காட்ட மிகவும் பிரயத்தனப்பட்டு அதில் தோல்வியடைந்த நிலையில் சந்துருவை நிமிர்ந்து பார்த்தபோது அவனோ தன்னுடைய வாயில் ஒற்றை விரலை வைத்து அமைதியாக இருக்குமாறுக் கூறிக் கொண்டிருந்தான்.

அதற்கு பின்னர் சூர்யாவும் தன்னுடைய முயற்சியை விட்டுவிட்டு முன்னாடி இருந்த சிற்றுண்டியை விழுங்குவதா?இல்லை பின்னாடி வரப்போகும் பிரச்சனை என்னவென்று அறிந்து கொள்ள என்ன செய்யலாம் என முயற்சிப்பதா? என இரு பெரும் ஆலோசனையில் தனக்குள்ளேயே ஈடுபட்டிருந்தான். அவனது முகத்திலேயே என்ன நினைக்கிறான் என்பதை உணர்ந்துகொண்ட வருணா "சூா்யா சாப்பிடு. சாப்பிட்டு முடிச்சதுக்கப்புறம் பேசினாதான் நல்ல நல்ல வேலை எல்லாம் நல்லாவே செய்ய முடியும்", இரு பொருள்படக் கூறினாள்.

"அது கரெக்டுதான் அண்ணி! சாப்பிட்டாதான் நிறைய வேலை செய்ய முடியும். சாப்பாடு எவ்வளவுக்கு எவ்வளவு சாப்பிடுகிறோமோ அந்த அளவுக்கு நம்ம வேலையும் நிறைய செய்யலாம்", என சூர்யாவிடம் கூறியதற்கு பதிலாக கார்த்திக் வருணாவிற்கு பதில் அளித்துக் கொண்டிருந்தான்.

"அது நீ ஏற்கனவே செஞ்சு வச்சிருக்கிற வேலையிலேயே நல்லாத் தெரியுது", என வருணாக் கூறியதும் நிமிர்ந்து பார்த்த கார்த்திக்கிற்கு அப்போதுதான் சூழ்நிலையில் இருந்த மாற்றம் புரிந்தது. என்னவென்று வாய் திறந்து கேட்டு அதற்கும் மொத்து வாங்குவதற்கு பதிலாக அவர்களேக் கூறட்டும் என்ற எண்ணம் தோன்ற சாப்பிட்ட தட்டை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்து விட்டான்.

சூர்யா சாப்பிடாமலே வைத்து இருப்பதை பார்த்த சந்துரு "சூர்யா! எதுவா இருந்தாலும் சாப்பிட்டுட்டுதான் பேசணும். இப்படியே வச்சிட்டு இருந்தா நீ முடிக்கிற வரைக்கும் நானும் வெயிட் பண்ணுவேன்", என உரைத்ததும் அவனும் தட்டிலிருந்ததை வேகவேகமாக காலி செய்தான்.

இருவரும் அவரவர் இடத்தில் வந்து அமர்ந்த பின்னர் ஆத்ரேயனையும், ஆரோகனையும் பார்த்த சந்துரு முதலில் ஆத்ரேயனிடம் தன் விசாரணையை ஆரம்பித்தான். "இன்னைக்கு நானும், உங்கம்மாவும் ஸ்கூலுக்கு வந்திருந்தோம் உனக்கு தெரியுமா?", எனக் கேட்டதற்கு "தெரியும்பா! ஆனா எனக்கு உங்க மேல செம கோபம்", என பதில் உரைத்தான்.

"உனக்கு ஏன்டா ஸ்கூலுக்கு வந்ததுக்கு கோபம் வருது?", என வருணா இடை புகுந்தவுடன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு சந்துருவின்புறம் திரும்பிய ஆத்ரேயன் "நீங்க ஏன்ப்பா பிரின்ஸிபலையும், அந்த ராகவி அம்மாவையும் சும்மா விட்டீங்க? சொல்லப்போனா ராகவி மேல ஆக்சன் எடுத்திருக்கனும்.ரோ வச்சிருந்த ஃபைலிலிருந்து எப்படி திருடலாம்? அப்படின்னா அந்த பொண்ணுக்கு எவ்வளவு தைரியம் இருக்கனும்?

முறையா விசாரிக்காம உங்களை, அம்மாவை கூப்பிட்டு வச்சு நேரத்தை வீணடிச்சதும் இல்லாம நம்ம ரோவையும் வர வச்சு நிக்க வச்சிருக்காரு அந்த பிரின்ஸிபல். அவரை சும்மா விட்டது தப்பு. நீங்க ஏதாவது பண்றீங்களா? இல்லை நான் அவரை கவனிக்க வேண்டிய விதத்துல கவனிக்கட்டுமா?", என வீராவேசமாகப் பேசினான்.

அவன் பேசியதில் தலையும், புரியாமல் வாலும் புரியாமல் அமர்ந்திருந்த கார்த்திக்,சூர்யா இருவரும் ஒரே குரலில் "என்னது ரோ பிரின்ஸிபல் முன்னாடி நின்னானா? அந்த பொண்ணு வேற யாரு?", என வினவினர்."பேசிக்கிட்டு இருக்கேன் இல்லை. பேசி முடிச்சிட்டு உங்ககிட்டதான் வர்றேன். அது வரைக்கும் வாயை திறக்காம என்னன்னு காதுகொடுத்து மட்டும் கேளுங்க", என அவர்களை மிரட்டிய சந்துரு "எனக்கு ஒரு விஷயத்துக்கு மட்டும் பதில் சொல்லு ரே! ஆரோகன் கவிதை எழுதுவானா?", என அழுத்தம் திருத்தமாகக் கேட்டான்.

"எனக்கு எப்படித் தெரியும்?", என அதற்கு பதில் கூறிய ஆத்ரேயன் ஆரோகனின் புறம் திரும்பி "டேய் ரோ!நீ கவிதை எழுதுவியா? என்கிட்ட சொல்லவே இல்லை", என்றொரு கேள்வியை வேறுக் கேட்டு வைத்தான்.

ஆரோகன் அதற்கு எவ்வித பதிலும் கூறவில்லை. யாரின் முகத்தையும் நிமிர்ந்து பார்க்காமல் தலைகுனிந்த வண்ணம் அமர்ந்திருந்தவனை பார்த்த சந்துரு தன் பார்வையை மாற்றாமலேயே ஆத்ரேயனிடம் அடுத்தக் கேள்விகளை வீச ஆரம்பித்தான்.

"ரோ வந்து உன்கிட்ட இன்னைக்கு நாங்க வந்த விஷயத்தை சொல்லியிருந்தா வீட்டுக்கு வந்தவுடனேயே ஏன் இதைப்பத்தி நீ கேட்கலை? அப்படி கேட்காம இருக்கிறது உன்னோட பழக்கம் கிடையாதே! எதுவா இருந்தாலும் உனக்குதான் முதல்ல தெரியணும்னு நினைப்ப", என அடுத்தடுத்துக் கேட்க ஆரம்பித்தான்.

வருணாவிற்கோ "இது என்ன இவரு ஆரோகிட்ட கேட்காம ஆத்ரேயன்கிட்டே கேட்டுக்கிட்டு இருக்காரு. ஒன்னும் புரிய மாட்டேங்குது நமக்கு",என்ற எண்ணம்தான் ஓடிக்கொண்டிருந்தது. சந்துரு கேட்டக் கேள்விகள் எதற்கும் அசராமல் சந்துருவிற்கு தானும் சளைத்தவன் இல்லை என்பதை ஆத்ரேயன் தன்னுடைய பதில்களில் நிரூபித்தான்.

"அப்பா! எனக்குத் தெரியவேண்டிய விஷயம் அப்படின்னா நான் கண்டிப்பா எனக்கு ஏன் சொல்லலைன்னுக் கேட்டிருப்பேன். ஆரோகன் என்கிட்ட அம்மா,அப்பா வந்தாங்க. ராகவியோட அம்மா இந்த மாதிரி பிரச்சனை பண்ணுனாங்கன்னு மட்டும்தான் சொன்னான். அதுவுமில்லாம இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது ரோ! நான் வந்த உடனே கேள்வி கேட்டா நீங்க திரும்ப அதை பத்திபட பேச ஆரம்பிப்பீங்க. அவன் மனசு அதனாலக் கஷ்டப்படும்.

என்ன இருந்தாலும் அவன் எனக்கு முன்னாடிப் பிறந்தவன் இல்லையா? தம்பி உடையான் படைக்கு அஞ்சான் அப்படின்னு சொல்லி இருக்காங்க. இந்த தம்பி அந்த படையே வந்தாலும் அண்ணனை கஷ்டப்படுத்தாம பார்த்துக்க நினைக்கிறவன். ஒரு படையையே கஷ்டப்படுத்த விடக்கூடாதுன்னு நினைக்கிறவன் அவனை உங்க வார்த்தையாலக் கஷ்டப்பட விடுவேனா? சொல்லுங்க!", என பதில் பேசினான்.

அவன் பேசுவதைக் கேட்டு ஆர்வக்கோளாறில் கார்த்திக் தன்னுடைய இரு கைகளையும் தட்டிப் பாராட்ட வருணா "உனக்கு ராத்திரி சோறு இல்லை", என அவனிடம் கூறி அமைதிப் படுத்தினாள். ஆத்ரேயன் பேசியதைக் கேட்ட சந்துரு "நாங்க ரெண்டு பேருமே வக்கீல். இருந்தாலும் வீட்டில் இந்த மாதிரி சட்டதிட்டம், நியாய தர்மம் எதுவுமே பேசுறதுக் கிடையாது. சாதாரணமாகத்தான் இருக்கோம்.

ஆனா நீ பேசுறதப் பார்த்தா பிற்காலத்துல நீதான் வக்கீலா வருவ போல இருக்கே!", என வஞ்சப் புகழ்ச்சியில் மகனுக்கு பதில் தந்தான். "அதைத்தான் நானும் கேட்கிறேன். ரெண்டு பேரும் வக்கீலா இருந்துட்டு அந்த பிரின்ஸிபல், ராகவி அம்மாவை ஏன் சும்மா விட்டீங்க? இதனால இப்ப என்ன ஆச்சு தெரியுமா? கிளாஸ்ல எல்லாருமே ரோகிட்ட வந்து எங்களுக்கு கவிதை எழுதிக் கொடுன்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க", என ஆத்ரேயன் கூறிய பதிலில் சந்துருவிற்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது.

ஆத்ரேயனிடம் எவ்வளவுதான் பேசினாலும் தான் பிடித்த பிடியில் நின்று சாதிக்கும் அவனுடைய சிறுவயது குணம் சற்றும் மாறவில்லை. அதனால் அவனிடம் பேசுவதற்கு பதிலாக ஆரோகனிடமேக் கேள்விகளை கேட்கலாம் என முடிவெடுத்து அவன் பக்கம் திரும்பிய பொழுது தன்னுடைய அப்பா கேள்வி கேட்க ஆரம்பிப்பதற்கு முன்னரே "சாரிப்பா! உங்களை ஸ்கூலுக்கு வரவச்சதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். இனிமே இந்த மாதிரி நடக்காம நான் பார்த்துக்கிறேன்", என முடித்து விட்டான்.

வருணாதான் சந்துருவை நோக்கி "ஜி! அம்புட்டு பேச்சு பேசின ஆத்ரேயனை கூட நம்பிடலாம். ஆனால் நடந்த விஷயம் என்னன்னு சொல்லாமலேயே சாரி இனிமேல் நடக்காதுன்னு சொல்ற இவனை சுத்தமா நம்பக்கூடாது. அவனை கேட்டதை விட பத்து மடங்கு கேள்வி இவனை கேளுங்க ஜி!", எனக் கூறினாள்.

வருணாக் கூறியதை சற்றும் காதில் வாங்காமல் சந்துரு தன்னுடைய அடுத்த கேள்வியைக் கேட்க ஆரம்பித்தான். "சரி ரோ! நீ செஞ்சது தப்புன்னு ஒத்துக்கிற. ஆனா அது என்ன தப்புன்னு கொஞ்சம் எனக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணுனா நல்லா இருக்கும்", எனக் கூறினான். இதில் ஆரோகனை விட அதிர்ந்தது ஆத்ரேயன் தான்.உடனடியாக "அப்பா! அவங்க தேவையில்லாம அவசரப்பட்டு உங்களை ஸ்கூலுக்கு வர வச்சதுக்குதான் ரோ மன்னிப்புக் கேட்டான்.

அவன் தான் தப்பு செஞ்சதா சொல்லவே இல்லை. நீங்க இந்த மாதிரி டிவிஸ்ட் பண்ணி கேள்விக் கேட்டா அவன் தாங்கமாட்டான். எதுவா இருந்தாலும் டைரக்ட் கேள்வியை கேளுங்க", எனக். கூறினான். "ரே! உன்னை உட்கார வச்சுப் பேசனும்னு நினைக்கிறேன். இந்த மாதிரி ஏதாவது அவனுக்கு பதிலா நீ வாய்ஸ் கொடுக்கிறதா இருந்தா எந்திரிச்சு உள்ள போ! நான் அவன்கிட்ட தனியா பேசிக்கிறேன்", என சந்துரு வழக்கமான தன்மையை விட்டு சிறிது கண்டிப்பாகக் கூறியதில் ஆத்ரேயன் அமைதியாக அடங்கினான்.

இப்போது ஆரோகன்புறம் திரும்பி "உன் தம்பி சொன்ன மாதிரி நேராவே கேள்வி கேட்கிறேன். நீ எதுக்காக டிசைன் பண்ணி அதுல கவிதை டைப் பண்ணி தனியா ஃபைல் போட்டு வைச்சிருந்த? அதை ஸ்கூலுக்கு வேற ஏன் எடுத்துட்டு போன? அதோட ராகவி உன்னோட ஃபைலிலிருந்து பேப்பர் எடுத்தா அந்த மிஸ் ஆன பேப்பரை பத்தி உனக்கு தெரிஞ்சிருக்கும் தானே!

அந்த பொண்ணு சொல்றதை வச்சுப் பார்த்தா இந்த வருஷம் ஆரம்பிச்சதில் இருந்து நீ எழுதி வச்சிருந்த கவிதை எல்லாம் எடுத்து இருக்கு. உனக்கு அது எப்படி தெரியாமப் போச்சு?", என அவன் யோசிப்பதற்கு சற்றும் இடம் கொடாமல் தனக்கு தோன்றியவற்றை எல்லாம் சந்துரு கேள்விகளாக்கிக் கொண்டிருந்தான்.

"எனக்குக் கவிதை எல்லாம் படிக்க ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. அதனாலதான் நான் எழுதி வச்சா மிஸ் ஆகுறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு நினைச்சு சூர்யா சித்தப்பாகிட்ட சொல்லி டிசைன் பண்ணி அதுல டைப் பண்ணி வச்சுக்கிட்டேன்", என திக்கித் திணறி பதில் கூறிய ஆரோகன் சந்துருவின் இறுதி கேள்விக்கு எவ்வித பதிலையும் கூறவில்லை. மகனின் பதிலை கேட்டு வருணா "நீயாடா கவிதை எழுதுன? அம்மாகிட்ட எதுக்கு சொல்லவே இல்லை. நானும் படிச்சுப் பார்த்து நம்ம சொந்தக்காரங்ககிட்ட ,என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் உன்னை பத்திப் பெருமையா சொல்லி இருப்பேன் இல்லை",என அவன் என்ன எழுதியிருந்தான் என்பதைப் பற்றி தெரியாமலேயே அதிசயித்துப் போய் வினவினாள்.

"வருணா! நீ சும்மா இரு", என அவளை அடக்கிய சந்துரு "சரி ஏதோ கவிதை எழுதின... அதை சூர்யாகிட்ட சொல்லி நீ டிசைன் பண்ணி எல்லாம் ரெடி பண்ணி வச்சுக்கிட்ட. ஆனால் ராகவி எடுத்தது உனக்கு எப்படி தெரியாமப் போச்சு? சாதாரணமா ஒரு பத்து பேப்பர் இருக்கு அப்படின்னா ஒரு பேப்பர் மிஸ் ஆனாலும் நம்மளுக்கு தெரியும்தானே! இது நீ ஒரு பேப்பரில்தானே வச்சி இருந்து இருப்ப? அது மிஸ் ஆனா யாரும் எடுத்துட்டாங்கன்னு நீ தேட மாட்டியா?

படையக் கூட உன் பக்கத்துல விட மாட்டேன்னு சொல்ற உன் தம்பிக்கும் சொல்லாமலா நீ அப்படி ரகசியமாக வச்சுட்டு இருந்த? அதுவும் இல்லாம நீ அதை எதுக்கு டெய்லி ஸ்கூலுக்கு வேற கொண்டு போய்கிட்டு இருக்க?", என விடாமல் நான் கேட்டதற்கு பதில் வந்தே ஆகவேண்டும் என்ற தொனியில் கேட்ட சந்துரு ஆரோகனின் பாவமான முகத்தை பார்த்து சற்றும் இளகவில்லை.

அவன் பதில் எதுவும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்த சந்துரு இப்போது சூர்யா கார்த்திக்கிடம் கேள்விகளை கேட்க ஆரம்பித்தான். தங்களின் புறம் திரும்பிய உடனேயே "இன்னைக்கு வந்திருக்க கூடாது. கொஞ்சம் வேலை இருக்கு நாளைக்கு வரேன்னு சொல்லி இருக்கலாமோ!", என தன் மைண்ட் வாய்ஸில் கார்த்திக் எண்ணிக் கொண்டிருக்க சூர்யாவும் அவனது தோளை உலுக்கி அண்ணன் கேட்கிறார் பதில் சொல்லு என முணுமுணுத்தான்.

சூர்யா கூறியதில் கனவிலிருந்து விழித்ததைப்போல் முழித்தவன் "அண்ணே!அண்ணே! நீங்க என்னக் கேட்டீங்க? இன்னொரு தடவை திரும்ப கேளுங்களேன்", என பதறியபடி வினவினான். "நான் இன்னும் ஒன்னும் கேட்கவே ஆரம்பிக்கலைடா. நீ ஏன் இந்தளவுக்குப் பதட்டப்படுற?", என அவனை அடக்கிய சந்துரு சூர்யாவிடம் "நீ சொல்லு சூர்யா! டிசைன் பண்ணி கவிதை பிரிண்ட் எடுத்ததெல்லாம் உன்கிட்டதான் வாங்கி இருக்கான்.

நீ எதுக்கு அதை பத்தி என்கிட்ட ஒண்ணுமே சொல்லலை. ஆரம்பத்துல அவன் நிறைய சந்தேகம் கேட்குறான். அதை கிளியர் பண்றேன் அப்படின்னு சொன்ன. ஆனா இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்ததா ஏன் நீ என்கிட்ட சொல்லலை", என வினவினான்.

இன்னிக்கு என்ன நடந்துச்சுன்னு உங்களுக்குத் தெரியுமா?", எனக் கேட்டு காலையில் பள்ளியில் இருந்து அழைத்து அழைப்பு வந்ததில் இருந்து ராகவியின் அம்மா செய்த பிரச்சனை வரை அனைத்தையும் கூறிய சந்துரு "இப்ப நான் உங்க ரெண்டு பேருகிட்டயும் எந்த கேள்வியும் கேட்க மாட்டேன். என்ன நடந்துச்சுன்னு நீங்க ரெண்டு பேரும் வாயை திறந்து சொல்லிடணும்", எனக் கூறிவிட்டு அமைதியாக அமர்ந்து கொண்டான்.

சாதாரணமாகவே சந்துருவின் பேச்சை தட்டாமல் கேட்கும் இவர்கள் இருவரும் நடந்தவற்றைக் கடகடவென மாற்றி மாற்றி ஒப்பிக்க ஆரம்பித்து விட்டனர். அதில் முதலில் ஆரம்பித்தது கார்த்திக்தான். "இல்லைண்ணா! ரோ ஒரு நாள் எனக்கு போன் பண்ணி "சித்தப்பா எனக்கு கொஞ்சம் கவிதை எல்லாம் எழுதி தரணும் அப்படின்னு கேட்டான். நானும் நம்ம பசங்க கவிதை எழுதுவாங்க இல்லையா? அவங்ககிட்ட சொல்லி கொஞ்சம் பொதுவான கருத்து சொல்றக் கவிதையா எழுதி வாங்கி தந்தேன்.

ஆனா அதையெல்லாம் படிச்சி பார்த்துட்டு இதெல்லாம் நல்லா இல்லை. கொஞ்சம் காதல் கவிதைகள் மாதிரி எழுதிக்கொடுங்க சித்தப்பா அப்படின்னு சொல்லிக்கேட்டான். நான் அப்பவே கேட்டேன். என்னடா இதெல்லாம் கேட்குறன்னு... ஆத்ரேயன் கேட்டாலும் ஒரு நியாயம் இருக்கு. ஆனா நீ வரவர சரி இல்லை டா! அப்பாகிட்ட சொல்லப் போறேன்னு சொன்னவுடனே சித்தப்பா நீங்க சொல்லக் கூடாது.

எனக்கு கவிதை வாங்கி தர முடியுமா? முடியாதா? அப்படின்னு கேட்டான். சின்ன வயசுல இருந்தே நான் தூக்கி வளர்த்த பையன். ஒரு விஷயம் கேட்குறான். எப்படி செய்ய முடியாதுன்னு சொல்றது? அதனாலதான் நானும் அவன் கேட்குறப்ப எல்லாம் வாங்கிக் கொடுத்திடுவேன். முதல்ல பேப்பர்ல எழுதிக் கொடுத்துட்டு இருந்தானுங்க. திடீர்னு ஒரு நாள் பேப்பர்ல வைக்கிறது தண்ணி பட்டு எப்படியோ அழிஞ்சுப் போகுது. எனக்கு இது கொஞ்சம் அட்ராக்டிவாக, பொ்மனென்டாக வேணும் அப்படின்னு கேட்டடனே நான்தான் சூர்யாவை கேட்கச் சொன்னேன்", என கார்த்திக் ஒப்புதல் வாக்குமூலத்தை முழுவதுமாக அளித்திருந்தான்.

அவன் கூறி முடித்ததும் சூர்யா "என்கிட்ட ரோ நேரடியாக் கேட்கலைண்ணா. முதல்ல கார்த்திதான் பேசுனான். இந்த கவிதை எல்லாம் பேக்ரவுண்ட் நல்லா டிசைன் பண்ணி அதுல டைப் பண்ணி குடுடா அப்படின்னு சொல்லிட்டு தந்தான். நானும் கார்த்திக் தந்த கவிதை எல்லாம் படிச்சுப் பார்த்துட்டு அவன் பொண்டாட்டிகிட்ட சொல்லிடுவேன்னு சொல்லி மிரட்டினேன்.அப்பதான் அவன் சொன்னான். இல்லைடா இது நம்ம ரோ கேட்டான் அப்படின்னு.

அதுக்கு அடுத்து நான் ரோ க்கு கால் பண்ணி என்னடா இதுன்னு கேட்டா உடனே பண்ணி தாங்க சித்தப்பா அப்படின்னு மட்டும்தான் சொன்னான். தவிர நான் பண்ண முடியாதுன்னு சொன்னா வெளியில போய் பண்ணிக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டான். வெளியிலேயே எங்கேயோ போயி பசங்க தேவையில்லாமல் தண்டத்துக்கு செலவழிச்சுகிட்டு ஏன் அப்படின்னு சொல்லிதான் நானே டிசைன் பண்ணி அதை டைப் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்துக் கொடுப்பேன்.

அதை கார்த்தி வாங்கிட்டுா் போய் பசங்க ஸ்கூலுக்கு போற நேரத்துல அவங்ககிட்ட கொடுத்துடுவான்",எனக் கூறினான். "அடப்பாவிங்களா! ரெண்டு பேரும் என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னீங்களாடா?", என வருணா இருவரையும் நோக்கி தன் கையிலிருந்த குஷனை தூக்கி எறிந்தாள்.

சூர்யா பிரிண்ட் எடுத்துக் கொடுப்பேன் என்றதில் சற்று யோசித்த சந்துரு "எத்தனை காப்பி பிரின்ட் எடுத்துக் கொடுப்ப?", எனக் கேட்டான். அதற்கு சூர்யா பதில் கூறும் முன்னரே ஆத்ரேயன் முந்திக்கொண்டு "என்னப்பா பிரின்ட் ஒரு காப்பி வாங்கி இருக்கப் போறான். நீங்க இதுல வேற கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க?", என அவசரமாக பதில் கூறினான்.

"அப்ப சொன்னதுதான் இப்பவும் சொல்றேன். பேசாம இருந்தா இரு. இல்லைன்னா உள்ள போ", என சந்துரு கண்டித்ததில் வாயை மூடிக்கொண்டு அவன் தன்னுடைய தாயை பார்த்தான். வருணா சந்துரு கேள்வி கேட்கும் விதத்தை பார்த்து தன் வாயை பிளந்தவாறு அமர்ந்திருந்தாள். ஆத்ரேயனிடம் பேசிவிட்டு மீண்டும் சூர்யாவின் புறம் திரும்பிய பொழுது அவன் உண்மையை உரைத்து விட்டான்.

"அண்ணா ஆரம்பத்துல ஒரு நாலஞ்சு தடவை ஒரே ஒரு பேப்பர் மட்டும்தான் பிரின்ட் எடுத்துக் கொடுத்தேன். அதுக்கடுத்து எடுத்து தந்தது அத்தனையும் வேற வேற டிசைன் பண்ணி ஒரே கவிதையை குறைஞ்சது பத்து காப்பி எடுத்துக் கொடுத்திருக்கிறேன்.அதை பிரிண்ட் எடுத்து லேமினேட் பண்ணிதான் தருவேன். அப்படியே பேப்பரா தரமாட்டேன்", எனக் கூறினான்.

வருணா மீண்டும் வாயைத் திறக்க முனைந்த பொழுது சந்துரு இடையிட்டு " வருணா! நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு. இப்ப ஃப்ரிட்ஜ்ல நீ பால் வச்சு இருக்க. நான் ஃப்ரிட்ஜ் திறக்கிறப்ப பால் வச்ச கிண்ணத்தோட மூடி சரியாக மூடாமல் இருந்து அதை கவனிக்காமல் நான் கொட்டி விட்டுட்டா தப்பு யாரு மேலேன்னு சொல்லு", என தன் பாரியாளிடம் வினா எழுப்பினான்.

அதற்கு அவளும் சற்றும் யோசிக்காமல் பாலை ஒழுங்கா மூடாமல், தட்டி விடுற மாதிரி இடத்துல வச்ச என்னோட தப்புதான்", என பதிலுரைத்தாள். "அதே தான் இப்ப இவங்க கேட்டு அவங்க செஞ்சு கொடுத்து இருக்காங்க. அதனால நீ சூர்யாவையோ, கார்த்திக்கையோ திட்டுற வேலை வச்சுக்காத. நீ திட்டுறதுக்கு முழுசும் தகுதியானவங்க நீ பெத்து வச்சிருக்க இந்த ரெண்டு பசங்க மட்டும்தான்.

சூர்யா,கார்த்திக்கு இவனுக்கு இந்த மாதிரி பிரச்சனை பண்ணிருவாங்க அப்படின்னு தெரியாமல் இருந்திருக்கலாம். அதனால ஹெல்ப் பண்ணிட்டாங்க. இதுக்குமேல நம்மளுக்கு தெரியாமல் எதுவும் செய்யமாட்டாங்கன்னு நம்பலாம்", என அவர்கள் இருவரையும் பார்த்தபோது சூர்யாவும்,கார்த்திக்கும் "கண்டிப்பாண்ணா, கண்டிப்பா நாங்க உங்ககிட்ட சொல்லாம எதுவும் செய்ய மாட்டோம்", எனக் கூறினர்.

அவர்கள் இருவரும் மேலும் சிறிது நேரம் இருந்து விட்டு கிளம்பிச் செல்லும் வரை யாரும் எதுவும் பேசவில்லை. சந்துருவும் தன் மகன்களிடம் வேறு எந்த விதமான கேள்விகளையும் கேட்காமல் எப்போதும் போல அவர்கள் படிக்கும் வேலை செய்யட்டும் என்று விட்டு விட்டான்.ஆனால் வருணாவால்தான் தன் பையன்கள் இவ்வாறு செய்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அதிலும் முக்கியமாக அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்திருந்த ஆரோகன் செய்ததை சற்றும் தாங்க இயலாமல் அவ்வப்பொழுது கேட்பதற்கு வாயை திறந்து சந்துருவின் முறைப்பில் அமைதியாகினாள். மீண்டும் இரவு உணவு உண்ணும் போதுதான் சந்துரு பேச்சை ஆரம்பித்தான்.

"ரோ ஒரு காப்பி ராகவி திருடினாலும் மீதி இருந்த காப்பி எல்லாம் எங்கே போச்சு? நீ யோசிச்சு சொல்றியா? இல்லை இப்ப உன் வாயில் வர்ற கதையை சொல்றியா?", எனக் கேட்டும் ஆரோகன் எதுவுமே பேசவில்லை.அதனைக் கண்ட சந்துரு "இதுக்கு மேல உன்கிட்ட எதுவும் கேட்கிறதா இல்லை.

ஆனா இதுல என்ன தப்புன்னு யோசிச்சு சரி பண்ணிக்கோ! ஏதாவது இருந்தா என் கிட்ட சொல்லிடு. கடைசி நேரத்தில் பிரச்சனைன்னு வந்தா உனக்கு உதவி செய்ய மாட்டேன்", எனக்கூறிவிட்டு படுக்கச் சென்றுவிட்டான். சந்துரு சென்றபின்னர் ஆத்ரேயனும்,ஆரோகனும் வருணாவையே சுற்றி சுற்றி வந்தனர்.

எப்பொழுதும் அவர்களுடன் அளவுக்கு அதிகமான நேரத்தை செலவு செய்யும் வருணா அன்று இருவரிடமும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அதனால் தன்னையே சுற்றி சுற்றி வந்தவர்களை கண்டுகொள்ளாமல் எனக்கு தூக்கம் வருது நான் போய் தூங்கணும் எனக் கூறிவிட்டு அவளும் படுக்கை அறைக்கு சென்றாள்.

ஆனால் தூங்கு சென்றவள் தானும் தூங்காமல் சந்துருவையும் தூங்கவிடாமல் நொண நொணவென பேச ஆரம்பித்தாள். "என்ன ஜி! இப்படி பண்ணிட்டானே ரோ! அவன் மேல நான் எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன் தெரியுமா? ரேதான் இந்த மாதிரி வேலையெல்லாம் செய்வான்னு நெனச்சிக்கிட்டு இருந்தா அவன் மாறி இப்ப இவன் இந்த மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கானே", என திரும்பத் திரும்ப அதையே புலம்பிக் கொண்டிருந்த போதுதான் சந்துரு தன் மனதில் இருந்த அந்த எண்ணத்தை வினாவாக வருணாவின் முன் வைத்தான்.

சந்துரு முன்வைத்த வினா வருணாவின் பேச்சை நிறுத்திடுமா? இல்லை மேலும் பேசச் செய்திடுமா?