Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript சந்திரோதயம்-5 | SudhaRaviNovels

சந்திரோதயம்-5

Kripnythaa

Moderator
Mar 26, 2018
463
150
63
சந்திரோதயம்-5

ஆத்ரேயன்,ஆரோகன் இருவரும் அவ்வருட இறுதி தோ்வை எழுதி முடித்ததும் வருணா சந்துருவிடம் " ஜி! இவனுங்களுக்கு சொல்லிக் கொடுத்தே என் மூளை உருகிடுச்சு.அதை பழைய நிலைக்கு கொண்டு வரணும்னா ஏதாவது நீர் வீழ்ச்சி இருக்குற இடத்துக்கு போயே ஆகணும்", என மிகவும் சீரியசாகக் கூறினாள்.

வருணாவின் பேச்சை கேட்ட சந்துரு அடக்கப்பட்ட சிரிப்புடன் "வருணா மேடம்! அப்ப குற்றாலத்துக்கு போகலாமா?", எனக் கேட்டான். சந்துரு விளையாட்டுத்தனமாகக் கேட்டாலும் அதற்கு பதிலாக வருணா "நிஜமாகவே ஜி! இவங்களோட ஒரு ரெண்டு நாள் நீங்க மல்லுக்கட்டுங்க... அதுக்கு அடுத்து குற்றாலத்துக்கு போனாலும் தப்பு இல்லைன்னு நீங்களே சொல்லிடுவீங்க...எங்கப் போறதுன்னு சீக்கிரமா முடிவு பண்ணிட்டு சொல்லுங்க", எனக்கூறிவிட்டு கூறிவிட்டு சமையல் அறைக்கு சென்று விட்டாள்.

வருணாவின் பேச்சைக் கேட்ட பின்னர் சந்துருவுக்கு என்னது ரெண்டு நாள் இவனுங்களை நான் கட்டி மேய்க்கனுமா? அதுக்கு கோர்ட்லேயே உட்கார்ந்து ஏதாவது கிரிமினல் கேஸ் எடுத்து வாதாடிடலாம்", என மனதில் எண்ணியவாறு தாங்கள் விடுமுறையை கழிப்பதற்கு எந்த இடம் உகந்தது என தேடிப் பார்க்க ஆரம்பித்து விட்டான்.

சந்துரு எங்கே செல்லலாம் என்று தேடிக் கொண்டிருக்கும் பொழுதே அங்கே வந்த ஆத்ரேயன் "அப்பா! டூர் போறோமா?", என மிகவும் மெதுவான குரலில் கேட்டான். அவனது குரலிலேயே ஏதோ விஷயம் உள்ளது என புரிந்து கொண்ட சந்துரு "கண்டிப்பா போறோம்", என்றதும் "ஓகே! ஓகே! போறதும் போறோம் ஏதாவது நிறைய கேர்ள்ஸ் வர்ற இடத்துக்கு கூட்டிட்டு போங்கப்பா", என அவன் அசால்ட்டாக உரைத்ததும் அதைக் கேட்டுக் கொண்டே வந்த வருணா தன் கையில் இருந்த கரண்டியை அவனை நோக்கி வீசினாள்.

வருணா வீசிய கரண்டி தன்மேல் விழும் முன்னரே சற்று நகர்ந்த ஆத்ரேயன் "அப்பா நீங்க கரெக்டான இடத்துக்கு கூட்டிட்டு போகலைன்னா உங்களுக்கும் இதுதான் நிலைமை", என்றுக் கூறியவாறு அவ்விடத்திலிருந்து ஓட்டம் பிடித்தான்.

கரண்டி வந்த வேகத்திலேயே அது மகனுக்காகவா இல்லை தனக்காகவா என்று புரியாத நிலையில் இருந்த சந்துரு உடனடியாக தான் இருக்கும் வாட்ஸ்அப் குரூப் அனைத்திலும் ஏதாவது நல்ல ஃபால்ஸ் இருக்கிற இடமா சொல்லுங்கடா என்ற கோரிக்கை வைத்திருந்தான். ஒவ்வொருவரும் சந்துருவின் கோரிக்கைக்கு கிண்டல் செய்தாலும் இந்தியாவில் இருக்கும் பல இடங்களை பரிந்துரைத்தனர்.

ஆனால் அதில் எதிலும் திருப்தியுறாத சந்துரு ஆத்ரேயனை அழைத்தான். அவன் வந்ததும் "டேய்! போன வருஷம் உன்னோட ஃப்ரெண்டு ஆலியா ஃபேமிலியோட எங்கேயோ போயிட்டு வந்தாங்களே! அது எந்த இடம்ன்னு உனக்கு தெரியுமா? இல்லைன்னா அம்மாவை விட்டு அவங்ககிட்ட கேட்க சொல்லனும்", என்றுக் கூறியதும் மிகவும் குஷியான ஆத்ரேயன் "இதெல்லாம் ஒரு விஷயமா?", எனக்கூறிவிட்டு வீட்டிலிருந்த லேண்ட் போனை கையில் எடுத்தவாறு "டே ரோ! அந்த மினி டைரியை எடுத்துட்டு வா", என மூத்தவனுக்கு கட்டளையிட்டான்.

இவனது செய்கையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சந்துரு சமையல் அறையையும் திரும்பிப் பார்த்துக் கொண்டான். ஏனென்றால் இவன் செய்யும் அலப்பறையில் வருணா மறுபடியும் வந்து தன்னுடைய மண்டையை பிளந்து விடக் கூடாதே என்ற பயம் அவனுக்கு அதிகமாக இருந்தது. பயத்தில் மகன் பேசியதை கவனிக்காமல் விட்ட சந்துரு தன்னுடைய தோளை தொடுவதை போல் உணர்ந்தவுடன் தான் தன் நிலைக்குத் திரும்பினான்.

"என்னப்பா! என்கிட்ட டீடெயில்ஸ் கேட்டுட்டு நீங்க பேசாம உட்காா்ந்து இருக்கீங்க?", என்று சந்துருவை பிடித்து உலுக்கிய ஆத்ரேயன் "உங்களோட லேப்டாப் எடுத்து கூகுளாண்டவர்கிட்ட ஜாக் ஃபால்ஸ்( jog falls) அப்படின்னு சொல்லி கேளுங்க" என கட்டளையிட்டான். ஏன்டா நீ சொல்லி நான் கேட்க வேண்டியதா இருக்கு என நொந்து கொண்ட சந்துரு மகன் கூறியதை செய்யவும் தவறவில்லை. ஆத்ரேயன் கூறிய அந்த இடம் கர்நாடக மாநிலத்தில் சிமோகா மாவட்டத்தில் அமைந்திருந்தது. அதிலிருந்த விளக்க உரை சந்துருவுக்கு திருப்தியாக இருந்ததால் அங்கே செல்வதற்கான ஆயத்தங்களை உடனடியாக செய்ய ஆரம்பித்து விட்டான்.

தாங்கள் தங்க வேண்டிய இடம், செல்ல வேண்டிய முறை அனைத்தையும் பதிந்த பின்னரே வருணாவிடம் வந்து இந்த மாதிரி ஒரு இடத்தை செலக்ட் பண்ணி இருக்கேன் என கூறியதும் அதுவரை அமைதியாக இருந்த வருணா பொங்கிவிட்டாள். "எங்கேப் போறோம் அப்படிங்கறதை என்கிட்ட சொல்லிட்டு பிறகு புக் பண்ணக்கூடாதா? எல்லாமே நீங்கதான் முடிவு எடுக்கனுமா?", என அன்றைய நாள் முழுவதும் வறுத்தெடுத்து கொண்டிருந்த வருணாவை பார்த்த சந்துருவுக்கு மிகவும் கவலை ஆகிப்போனது.

இவளை பசங்களை பார்த்துக்கிடட்டும்ன்னு தனியா விட்டது தப்பாப்போச்சு. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்று எண்ணிக் கொண்டிருந்தவன் தன்னுடைய தலையை தானே உலுக்கிக் கொண்டு ரெண்டு பேரும் இல்லை இந்த சிறுசு மட்டுமே இவளை அளவுக்கு அதிகமாக டென்சனாக்கி வச்சிருக்கானோ? என எண்ணியவாறு முகத்தை பாவமாக வைத்துக்கொண்டான்.

தானும் அளவுக்கு அதிகமாக பேசியதை உணர்ந்த வருணா "சரி கிளம்ப வேண்டியதுக்கான வேலையை பார்ப்போம்", என்றவள் ஏதோ ஞாபகம் வந்தவளாக ஆத்ரேயா என்று கத்தினாள். வருணாவின் குரலில் அடித்து பிடித்து ஓடி வந்தவன் என்னம்மா என கேட்டதும் அவனது முன் மண்டியிட்டு அமர்ந்தவள் "உன்கிட்ட கெஞ்சி கேட்டுக்குறேன்... அந்த இடத்தில வர எந்த பொண்ணுங்ககிட்டயும் போய் நீ பேசக்கூடாது", எனக் கூறினாள்.

அம்மாவின் பேச்சை கேட்டவன் "அப்புறம் உங்ககிட்டயும் பேசக்கூடாதாம்மா", என்ற அதி புத்திசாலித்தனமான கேள்வியை அவளது முன் வைத்தான். "என்கிட்ட நீ பேசாம இருக்கிற வரைக்கும் சந்தோஷம்தான் ராசா! எதுவானாலும் உங்க அப்பாவை மட்டும்தான் கேட்கணும். ஆரோகன் பிரச்சினையே கிடையாது. ஆனா நீ யார்கிட்ட எப்ப பேசி என்ன வம்பை விலைக்கு வாங்கிட்டு வருவன்னு எனக்கு தெரியாதே!", எனக் கூறியவள் மீண்டும் மீண்டும் அதையே கூறி அவனை பயணத்திற்கு தயார் படுத்தினாள்.

சில நேரங்களில் சங்கு ஊதினாலும் பலரின் காதில் விழுவதில்லை. அவர்களிடம் கேட்டால் சங்கு ஊதியதா என வினவுவா். அதுபோன்றுதான் ஆத்ரேயனிடம் தான் கூறிய அறிவுரையும் என்பது வருணாவிற்கு அந்த நொடியில் புரியாமல் போனது. நிலைமை கைமீறி சென்ற பின்னர்தான் தான் பேசியது அனைத்தும் வீண் என்று வருணா உணர்ந்து மகனிடம் அறிவுரை கூறுவதை விடுவாளோ?

சந்துருவின் குடும்பம் ஹுப்ளி வழியாக தாங்கள் செல்ல வேண்டிய சகாராவை( Sagara) அடைய திட்டமிட்டிருந்தனர். அதனால் சென்னையில் இருந்து ஹூப்ளிக்கு விமானத்தில் பயணம் செய்யும் பொழுதே ஆத்ரேயன் தன்னுடைய வேலையை தொடங்கிவிட்டான். விமான நிலைய நடைமுறைகள் அனைத்தும் முடிந்து விமானத்தில் ஏறும் வரை அமைதியாக இருந்தவன் ஃபிளைட் மேலே நோக்கி செல்ல ஆரம்பித்தவுடன் தன்னுடைய பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த கூலர்சை எடுத்து மாட்டிக் கொண்டான்.

போகுமிடம் குளிராக இருக்கும் என்று வருணா இருவருக்கும் குளிர் தாங்கும் உடைகளை அணிவித்திருந்தாள். ஆரோகன் தன்னுடைய தாயின் மடியில் அமர்ந்து கொண்டு வானத்தில் ஊர்ந்து செல்லும் மேகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஆத்ரேயன் தன்னுடைய ஸ்வெட்டரின் மேலிரண்டு பட்டன்களை கழட்டிவிட்டு அதனை பின்புறமாக தூக்கி விடுவதும் கண்களை மூடி இருந்த கூலர்சை சரி செய்வதுமாக இருந்தாள்.

அவனை கடந்து சென்ற ஏர் ஹோஸ்டஸை எக்ஸ்க்யூஸ் மீ என மிகவும் மரியாதையுடன் அழைத்தவுடன் அப்பெண்ணும் அவனது அருகில் வந்து அமர்ந்து வாட் டூ யூ வான்ட் மை டியா் என தன் இனிய குரலில் கொஞ்சினாள். யூ ஆா் அலூரிங்( alluring)என்று அவள் கேட்ட கேள்விக்கு பதில் கூறியவன் அத்துடன் நிறுத்தாமல் அவளது கன்னத்தில் ஒரு முத்தத்தையும் வைத்து அனுப்பினான்.

சிறு பையனாக இருந்து கொண்டு அவன் செய்த செயலில் மகிழ்ந்து போன அப்பெண்ணும் அவனது கன்னத்தில் முத்தமிட்டு உள்ளே சென்று திரும்பி வந்தவள் அவனது கையில் பயணிகளுக்கு கொடுக்க வைத்திருக்கும் சாக்லேட்டை கொடுத்துவிட்டு மீண்டும் ஒருமுறை கொஞ்சிவிட்டு நகர்ந்தாள். சாக்லேட் வாங்கிக் கொண்டு கண்ணில் இருந்த கண்ணாடியை கழட்டி விட்டு திரும்பியவன் கண்டதோ தன்னை முறைத்துக் கொண்டிருந்த வருணாவைதான்.அந்த முறைப்புக்கெல்லாம் அசருபவனா ஆத்ரேயன்? இது போன்று கடந்து செல்ல வேண்டிய முறைப்புகளும்,திட்டுகளும் கணக்கில் அடங்காமல் இருக்கும் பொழுது இதுக்கே அசந்து விடுவானா? வருணாவை கண்டுகொள்ளாமல் அவளது மடியில் அமர்ந்திருந்த ஆரோகனை "டேய்! அம்மாவோட ஒட்டிகிட்டே இருக்காதே! இந்த பக்கமா வந்து உட்காரு", என தன்னுடைய அண்ணனையும் சேர்த்துக் கெடுப்பதற்கு அழைப்பு விடுத்தான்.

ஹூப்ளியை அடைந்தவுடன் இவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்த காரில் ஏறும் முன்னர் சந்துருவின் புறம் திரும்பிய ஆத்ரேயன் "அப்பா வீட்டுலதான் அம்மா பக்கத்துல உட்கார்ந்து எதுவும் பேசாம எப்ப பார்த்தாலும் லேப்டாப்,போனை நோண்டிட்டு இருக்கீங்க. இப்பவாவது அம்மா பக்கத்துல உட்காா்ந்து பேசிட்டு இருங்க",என்றவன் அந்த டிரைவரின் புறமாகத் திரும்பி "அண்ணே! எவ்வளவு நேரத்தில் கொண்டு போய் விடுவீங்க?", என கேட்டு அவரையும் சிரிக்க வைத்தான்.

கன்னடம் பேசுபவராக இருந்தாலும் தனக்கு தெரிந்த அரைகுறை தமிழில் அவனிடம் "இங்கிருந்து 130 கிலோமீட்டர்... ஒரு ஒன்றரை மணி நேரத்துல நான் உங்களை அங்க கொண்டு போய் விட்டுடுவேன்", என சிரித்துக்கொண்டே பதிலுரைத்தார். அதைக் கேட்டவன் இந்த ஒன்றரை மணி நேரமாச்சும் அம்மா கூட உட்கார்ந்து பேசுங்கப்பா... படுத்து தூங்கிடாதீங்க", என சந்துருவுக்கு அறிவுரை கூறிவிட்டு "டேய் ரோ! முன்னாடி வந்து உட்காரு", என அவனையும் தன் அருகில் அமர வைத்துக் கொண்டான். இருவரும் அமர்ந்தவுடன் டிரைவரிடம் "சீட் பெல்ட்டை ரெண்டு பேருக்கும் சேர்த்து மாட்டி விடுங்க", எனக் கூறியும் அதனை மாட்டிக் கொண்டான்.

அதன் பின்னரே பின்புறம் திரும்பி வருணாவிடம் "இப்ப ஹேப்பியாம்மா?", என அவள்தான் இவ்வாறு செய்ய சொன்னது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டு பாதையில் கவனம் செலுத்திய டிரைவரிடம் பேச ஆரம்பித்துவிட்டான். அவனது பேச்சில் சந்துரு சிரித்துக்கொண்டிருக்க வருணாவோ நடு ரோட்டில் தனது தலையில் தட்டிக் கொள்ள முடியாமல் அலுத்துக் கொண்டு பின்புறம் ஏறினாள்.

சந்துரு குடும்பத்தினர் வந்திருந்த நேரம் காலை நேரமாதலால் மதிய உணவிற்கு தாங்கள் தங்க வேண்டிய இடத்தை அடைந்து விட்டனர். ஆத்ரேயன் கூறியபடி சந்துருவும்,வருணாவும் பேசினார்களோ இல்லையோ ஆத்ரேயன் வாய் மூடாமல் பேசிக்கொண்டே வந்தான். அவர்களை இறக்கி விடும் பொழுது அந்த டிரைவரே வருணாவிடம் "எப்படி மேடம் சமாளிக்கிறீங்க?" எனக் கேட்டுவிட்டார்.

தாங்கள் தங்க வேண்டிய அறைக்கு வந்து சேர்ந்தவுடன் வருணா ஆத்ரேயனை தன் பிடியில் நிறுத்திக் கொண்டாள்."டேய்! உன்னை என்ன சொல்லி நான் கூட்டிட்டு வந்தேன்? நீ என்ன செஞ்சுகிட்டு இருக்க?", என அவனிடம் வினா எழுப்பியவள் சந்துருவின் புறம் திரும்பி "இவனை கொஞ்சம் கண்டிச்சு வைங்க ஜி!", என பரிதாபமாகக் கூறினாள்.

ஆனால் ஆத்ரேயனோ "அம்மா! நீங்க பொண்ணுங்ககிட்டதான் பேசக்கூடாதுன்னு சொன்னீங்க. டிரைவர் பாய்தானே பேசினா அதுல என்ன தப்பு?", என ஒரு வினாவை எழுப்பிவிட்டு சீக்கிரமா சாப்பாடு ஆர்டர் பண்ணி கொடுங்க என அமர்ந்துகொண்டான். "விடு வருணா! சின்னப்பையன்தானே... தேவையில்லாமல் நீயும் உங்க அப்பா மாதிரியே டென்ஷனாகாத", என சந்துரு தன்னுடைய பங்கிற்கு வருணாவை கடுப்பேற்றி நால்வரும் சாப்பிட தேவையான உணவினை தங்களின் அறைக்கு வரவழைத்தான்.

சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்த ஆத்ரேயன் "அப்பா! எங்க சுத்த போகலாம்?", எனக் கேட்டதும் "இன்னைக்கு எங்கயும் ஊர் சுத்த போகலை. ரெஸ்ட் எடுங்க.டிரைவர் பண்ணி வந்தது டயர்டா இருக்கு.நைட் இங்கே கேம்ப் ஃபயர் போடுவாங்க. அதுல கலந்துக்கலாம். நாளைக்கு காலையில் இருந்து வெளியில சுத்தி பாா்க்கப் போறோம்", என தங்களின் திட்டத்தினை கூறினான்.

சிறுவர்கள் துருதுருவென அலைந்தாலும் அவர்களுக்கும் ஒரு நிலைக்கு மேல் உடல்நிலை ஒத்துழைப்பதில்லை. அதனாலோ என்னவோ ஆத்ரேயனும் சந்துரு கூறியதற்கு ஒத்துக்கொண்டு அன்று முழுவதும் அமைதியாகவே சுற்றித் திரிந்தான். மறுநாள் காலை வரை எவ்வித பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது தன் மகன் சமத்தாக இருந்ததிலேயே மகிழ்ந்து போன வருணா "நம்ம ரே ரொம்ப நல்லவன்தான்... வெளியில வந்தா எப்படி நடந்துக்கணும்னு கரெக்டா நடந்ததுக்குறான். இல்லையா?", என புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தாள்.

அதற்கு மேலும் பொறுமை காக்க இயலாத ஆத்ரேயன் வெளியே கிளம்புவதற்கு தயாராக ஆரோகனையும் அழைத்துக்கொண்டு அருணாவின் துப்பட்டாவை பிடித்து இழுக்க ஆரம்பித்து விட்டான். டேய் பொறுமை என்றுக் கூறினாலும் வருணாவும் ஆர்வமாகவே அவர்களுடன் கிளம்பினாள்.

தங்கும் இடத்தில் இருந்து நேராக ஜாக் ஃபால்ஸ் சென்றவர்கள் அதன் அழகில் மெய்மறந்து நின்று கொண்டு விதவிதமாக தாங்கள் கொண்டு வந்திருந்த கேமராவில் போட்டோக்களை அள்ளிக் கொண்டிருந்த பொழுது அவர்களுக்கு மிக அருகினில் "இந்த ஃபால்ஸ் எங்கிருந்து வருதுப்பா?", என்ற ஒரு சிறுமியின் குரல் நன்றாகவே காதில் விழுந்தது. அதற்கு அக்குழந்தையின் பெற்றோர் மேலிருந்து வருதும்மா என கூறிக் கொண்டிருந்தனர். சிறுமியும் விடாமல் அப்பா மேல இருந்துதான் எப்படி ஆரம்பிக்குது என மிகவும் தெளிவாக தனது கேள்விக்கணையை தொடுத்தாள்.

டூர் வந்த இடத்தில் இப்படி கேள்வி கேட்கிறாளே என நொந்து கொண்ட பெண்ணின் தந்தையோ மேலே இருந்துன்னா உயரத்திலிருந்து என தனக்கு தெரிந்த வரையில் கூறிக்கொண்டிருக்கும் போதே அவ்விடத்தில் சம்மன் இல்லாமல் ஆஜரானான் நமது ஆத்ரேயன்! அச்சிறுமி இவனை விட ஒரு வயது அதிகமானவளாக இருக்கலாம். ஆத்ரேயன் செல்வதை கண்ட மற்ற மூவரும் அவனைப் பின் தொடர்ந்தனர்.

அங்கு சென்றவன் நேராக அப்பெண்ணிடம் சென்று தன் கையை நீட்டி "ஐ ஆம் ஆத்ரேயன்", என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். இவன் கை நீட்டிய உடன் திரும்பிப் பார்த்தவள் கண்ணில் கூலர்சுடனும்,ஸ்வெட்டரை தன்னுடைய இடுப்பில் மிகவும் ஸ்டைலாக கட்டியிருந்ததுடனும் புன்னகை முகமாக இருந்தவனை கண்டவுடன் தன்னுடைய கையையும் நீட்டி விட்டாள்.

சிறுவன் தங்களிடம் வந்து அறிமுகப்படுத்திக் கொண்டதும் அப்பெண்ணின் பெற்றோர்களும் வருணா, சந்துருவிடம் அறிமுகமாகிக் கொண்டிருந்தனர்.அவர்கள் டெல்லியில் இருந்து விடுமுறை கொண்டாட வந்திருப்பவர்கள் என அறிந்து கொண்டதும் அனைவரும் ஒன்றாக அருவியை பார்க்க ஆரம்பித்தனர். அவர்கள் டெல்லி என்று கூறியதில் சற்று அலா்ட்டான ஆத்ரேயன் அப்பெண்ணிடம் திரும்பி "பப்லி" என அவளை அழைத்தான்.

அவளோ "என் பேரு பப்லி இல்லை. என் பேரு அனு", என்றுக் கூறினாள். "அது என்னவா இருந்தாலும் சரி. நீ எனக்கு பப்லிதான்", என்றுவிட்டு "இந்த ஃபால்ஸ் பத்தி உங்க அப்பாகிட்ட கேட்ட அதேக் கேள்வியை என்கிட்ட திரும்பக் கேளு", என அதிகாரமாக அவளிடம் கூறினான். அனுவும் அவன் செய்யும் அதிகாரத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாமல் அதே கேள்வியை திரும்பவும் கேட்டாள். இங்கேயும் வந்து ஆரம்பிச்சிட்டானா என தன் மனதில் எண்ணிக்கொண்டு வருணா சந்துருவை பரிதாபமாகப் பார்த்தாள்.

வந்திருந்தவர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதிலேயே அவர்களுடன் ஐக்கியமான சந்துரு அனுவின் அப்பாவுடன் சரளமாக பேச ஆரம்பித்திருந்தான். அனுவின் அம்மாவும் வருணாவின் அருகில் வந்து "உங்க பையன் ரொம்ப தெளிவா இருக்கான்", என புகழாரம் சூட்டி கொண்டிருந்தாள். தன்னை விட ஒரு இன்ச் அதிகமாக வளர்ந்து இருந்த அனுவை கொஞ்சம் குனி எனக் குனிய வைத்து அவள் தோள் மேல் கையைப் போட்டுக் கொண்ட ஆத்ரேயன் ஆரோகனை நோக்கி இந்தப் பக்கமா வந்து நில்லுடா என தனது அண்ணனையும் வரவழைத்து இருவரின் தோள் மேல் கையை போட்டவன் "இந்த ஃபால்ஸ் பத்தின டீடெயில்ஸ் நான் சொல்றேன். கேளு", எனக் கூறத் தொடங்கினான்.

ஆத்ரேயனின் வார்த்தைகளைக் கேட்டவுடன் பெரியவர்கள் நால்வரும் சற்று அதிர்ந்துதான் போயினர். ஏனென்றால் ஆத்ரேயன் கூறியபொழுது கூகுளில் அந்த அருவியைப் பற்றி மேலாக பார்த்த சந்துருவுக்கு எதுவும் ஞாபகம் இல்லை. இவன் எப்படி கூறப்போகிறான்?எதுவும் சொந்தக் கதையை புனைய போகின்றானா? என எண்ணிக் கொண்டு அருகில் வரும் பொழுது ஆத்ரேயன் மிகத் தெளிவாக கூற ஆரம்பித்து இருந்தான்.

"இது ஷராவதி ஆறுல இருந்து வர்ற அருவி. இந்தியாவிலேயே உயரமான இடத்தில் இருந்து விழுகிறதுல இது மூன்றாவது இடத்தில் இருக்கு. இதை கெருசொப்பெ அருவி, ஜோகதகுந்தி அருவி அப்படின்னும் சொல்லுவாங்க. ராஜா, ராணி, ராக்கெட், ரோரர் (Roarer) இந்த நாலு அருவிகளும் சேர்ந்துதான் ஜாக் ஃபால்ஸ்ன்னு சொல்றாங்க. இந்த அருவியை பல விதமாக ரசிக்கலாம் .இப்ப அதுல ஒண்ணுதான் கீழே போயி ரசிக்கிறது. கீழே போறதுக்கு மொத்தம் 1600 படிகள் இருக்கு.

அதுல போறப்ப ரொம்ப வழுக்குமாம், நிறைய அட்டைப்பூச்சி எல்லாம் இருக்குன்னு சொன்னாங்க... அதையும் தாண்டி போனால் அருவி பாா்க்க அவ்ளோ அழகா இருக்குமாம்.நீ ஒரு வார்த்தை சொன்னால் போதும் அந்த ஆயிரத்து அறநூறு படிலயும் உன்னை நானே தூக்கிட்டு போறேன்", என கூறி அருவியின் கதையை ஆத்ரேயன் முடித்த பொழுது அனுவின் அம்மா தன்னுடைய வாயில் கையை வைத்து இருந்தாள். வருணாவும், சந்துருவும் மகன் கூறிய விவரங்களில் நம்ம மகனுக்கு இம்புட்டு அறிவா என வியந்து போய் இருந்தவர்கள் அவன் கடைசியில் கூறிய வார்த்தையை கேட்டு ஆரம்பித்து விட்டானே என தலையில் கையை வைத்து விட்டனர்.

அனுவின் அம்மா "நீ இங்க வந்துடு அனு! அப்படி எல்லாம் எங்கேயும், யார் கூடவும் போகக்கூடாது", என அவளை அழைக்க ஆரம்பித்து இருந்தாள். ஆனால் பெரியவர்களுக்கு தெரியாத விஷயங்களை ஆத்ரேயன் அரைகுறையாக விட்டுவிட்டுக் கூறினாலும் அவன் மிகவும் சிறந்த அறிவாளி என தன் மனதில் பதிய வைத்துக் கொண்ட அனு " இல்லை! இல்லை! நான் ரே கூடதான் சுத்துவேன்", என அவனதுக் கையை விடாமல் இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.

வேறு வழியின்றி பிடித்தோ பிடிக்காமலோ அனுவின் பெற்றோரும் அடுத்தடுத்து அவர்கள் சென்ற இடங்களுக்கு சந்துரு உடனேயே சென்றனர். இறுதியாக மாலை நேரத்தில் தாங்கள் தங்கும் இடத்திற்கு செல்ல கிளம்பிய சந்துரு நாங்க கிளம்புறோம் எனக் கூறியபொழுது அடம்பிடித்து "இல்லை நாமளும் அவங்ககூடதான் போகணும்", என அனு அழ ஆரம்பித்துவிட்டாள்.

அப்பொழுதுதான் நீங்கள் எங்கு தங்கி இருக்கிறீர்கள் என கேட்டு விபரம் அறிந்த பொழுது இருவரும் ஒரே இடத்தில்தான் தங்கி உள்ளனர் என தெரியவந்தது. அறைக்கு வரும் வரை மட்டுமல்ல வந்த பின்னரும் அன்று இரவு தூங்கும் பொழுது கூட ஆத்ரேயனை விட்டுப் பிரியாமல் அனு அழிச்சாட்டியம் செய்ய ஆரம்பித்துவிட்டாள். அனுவின் அப்பா "சின்ன குழந்தை, அவளுக்கு இங்கு வெளையாட வேற யாரும் இல்லை... அதுவும் தமிழ் பேசுற பசங்கன்னு தெரிஞ்ச உடனே ஒட்டிக்கிட்டா. தப்பா எடுத்துக்காதீங்க. தூங்கட்டும்", என தனது மகளை இவர்கள் உடனே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

அனுவின் அம்மாதான் விட்டுச் செல்ல மனமின்றி தூங்குனதுக்கப்பறம் எடுத்துட்டு போய் படுக்க வைக்கிறேன் என கூறினார்.அதுபோன்றே அனு உறங்கிய பின்னர் இரவு இரண்டு மணிக்கு மேல்தான் அவளை எடுத்துக் கொண்டு தங்களது அறைக்கு சென்றார். அதுவரை கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த வருணா தூங்கிக்கொண்டிருந்த ஆத்ரேயனின் முதுகில் நன்றாகவே மொத்த ஆரம்பித்து விட்டாள்.

அவளை தடுத்து நிறுத்தியதோடு "சின்னப் பையன் அவன். எவ்வளவு தெளிவா இவ்வளவு டீடையில் சொல்றான். அதைப் பற்றி பெருமைப்படு. அந்தப் பொண்ணும் குழந்தைதானே!", என அப்பொழுதும் வருணாவைதான் சமாளித்தான். ஆனால் தன்னுடைய மகனால் ஏற்படப் போகும் பின் விளைவுகளை அறிந்திருந்தால் சந்துரு வருணாவுடன் சேர்ந்து அவனை நன்றாக மொத்தி எடுத்திருப்பான். பாவம் பின்விளைவுகள் புரிவதில்லை மனிதர்களுக்கு…

மறுநாளில் காலை விடிந்தும் விடியாத நிலையிலேயே சந்துரு தம்பதியினரின் கதவு படபடவென்று தட்டப்பட்டது. மிகவும் தாமதமாகத் தூங்கியதால் ஆழ்ந்த நித்திரையில் இருந்தவர்களுக்கு அந்த சத்தத்தை கேட்ட உடன் புரிந்துபோனது தூக்கம் கலைந்து அடுத்த போராட்டத்திற்கு தயாராக வேண்டும் என்பது. வருணா படுக்கையிலேயே யோசித்துக் கொண்டிருந்த நிலையில் சந்துரு சென்று கதவை திறந்தவுடன் "ஹலோ! ரே! நீ இன்னும் எழுந்துக்கலயா?", என்ற சத்தத்துடன் அனு உள்ளே ஓடி வந்தாள்.

அவளது பின்னே வந்த அவளது பெற்றோரும் சங்கடமான முகத்துடனே மன்னிப்புக் கோரும் பார்வையில் நின்று கொண்டிருந்த நேரத்தில் சந்துருதான் "பரவாயில்லை விடுங்க.. சின்ன குழந்தைதானே! இங்க இருக்குற ரெண்டு நாளைக்கு, அதுக்கடுத்து அவங்கவங்க வேலையை பார்க்க போய்டுவாங்க, எதையும் யோசிக்காதீங்க", எனக் கூறி அவர்களையும் தங்களின் அறைக்குள் வருமாறு அழைத்தான். ஆனால் அவர்களோ இல்லை நீங்க கிளம்பி ரெடியாகி வாங்க நாங்க கீழ ரெஸ்டாரண்டில் வெயிட் பண்றோம் எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டனர்.

அனுவின் சத்தத்தை கேட்டவுடன் எழுந்து ஆத்ரேயன் முதலில் கூறியது "என்னதான் நான் உன்கூட நல்லா பழகினாலும் நான் தூங்குறப்ப என்னை எழுப்பக்கூடாது.எனக்கு அது சுத்தமா பிடிக்காது", என பெரிய மனிதன் தோரணையில் கூறினான். அனுவும் இனிமே இந்த மாதிரி எழுப்ப மாட்டேன் இது தான் கடைசி எனக் கூறி தன்னுடைய தவறை ஒத்துக் கொண்டாள்.

இந்த கொடுமையெல்லாம் பார்க்க வேண்டியதா இருக்கு என நொந்து கொண்ட ஆரோகனையும் எழுப்பி அன்றைய சுற்றலுக்கு தயார் செய்ய ஆரம்பித்தாள். அன்றைய நாள் முழுவதும் இரு குடும்பங்களும் இணைந்தவாறே சன்செட் பாயிண்ட், பசுமைப் பள்ளத்தாக்கு, கஜனூர் அணை போன்ற இடங்களை சுற்றிப் பார்த்தனர்.

மறு நாளைய பொழுது ஹோன்னேமாரடு(Honnemaradu) சென்றுவிட்டு அன்றைய இரவுப் பொழுதே அவரவர் ஊருக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். திட்டத்தின்படி மறுநாள் ஹோன்னேமாரடு சென்றவர்கள் ராஃப்டிங்( Rafting)முதலில் செல்வதாக முடிவெடுத்தனர்.

அனுவின் அம்மாவிற்கு ராஃப்டிங் செல்வதில் சற்று பயம் இருந்ததால் தன்னுடைய மகளையும் செல்ல விடாமல் தன்னுடனேயே வைத்துக் கொண்டு "நான் இங்க உட்கார்ந்துக்கிறேன். நீங்க போயிட்டு வாங்க" ,என தன்னுடைய கணவரிடம் கூறினார். ஆனால் அனுவோ "ரே இருக்கிறப்ப எனக்கு ஒன்னும் ஆகாது... அவன் என்னை பத்திரமா பார்த்துப்பான்", என ஆத்ரேயன்தான் தனக்கு முழு முதல் பொறுப்பு என்பது போல் கூறி விட்டு சந்துருவிடம் வந்தவள் "அங்கிள்! என்னை உங்க கூடவே கூட்டிட்டு போங்க", என கேட்க ஆரம்பித்து விட்டாள்.

வருணாவிற்கு இதில் சற்றும் விருப்பமில்லை என்றாலும் சிறுகுழந்தை ஆசையா கேட்கிறாள் என அவளுடைய அப்பாவுடன் சேர்த்து அவளையும் அழைத்து சென்றனர். ராஃப்டிங் செல்வதற்கு சிறு குழந்தைகளை பொதுவாக அனுமதிப்பதில்லை. இருப்பினும் அங்கு செல்லும் நீரில் சிறு பரிசல்கள் உபயோகப்படுத்தப்பட்டது. நாம இதிலேயே ஏறிக்கலாம் என முடிவெடுத்து இரண்டு பரிசல்களில் ஏறிக்கொண்டனர். அதுமட்டுமின்றி அதற்கடுத்து சென்ற டிரெக்கிங்கிளும் ஆத்ரேயனை விடாமல் பிடித்துக்கொண்டுதான் அனு சுற்றினாள்.

அவ்வப்பொழுது ஆத்ரேயனும் அவளது காதுகளில் எதையோ முணுமுணுத்த வண்ணம் வந்து கொண்டிருந்தான். அது என்னவென வருணாவும், அனுவின் அம்மாவும் அறிந்து கொள்ள முயன்றும் அவர்களுக்கு கிட்டியது என்னமோ பூஜ்யமே! சரி என்ன பேசிடப் போறான் பெருசா என நினைத்துக்கொண்டு எதுவும் கூறாமல் அன்றைய பொழுதை ஓட்டிவிட்டு அறைக்கு வந்தவர்கள் ஊருக்கு கிளம்பி விட்டனர்.

ஊருக்கு கிளம்பும் பொழுது ஆத்ரேயனை கட்டிக்கொண்டு அனு அழுத அழுகையில் இவளை கூட்டிட்டுா் போறது ரொம்பக் கஷ்டமா இருக்கும் போலவே என இரு பெற்றோரும் எண்ண ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அவர்கள் எண்ணத்தினை பொய்யாக்கும் வகையில் ஆத்ரேயன் அனுவினை தனியாக அழைத்துக் கொண்டு சென்று அவளது காதில் ஏதோக் கூறினான்.அவளும் அதனைக் கேட்டவுடன் சமாதானமாகி உடனே தன்னுடைய பெற்றோருடன் கிளம்பிவிட்டாள்.

திரும்பி வந்தவுடன் "அனுகிட்ட என்னடா சொன்ன?", என வருணா மிரட்டிய பொழுது "பெருசா ஒன்னும் சொல்லலை. நல்ல விஷயமாகதான் சொல்லி இருக்கேன். நாம சீக்கிரமா ஊருக்கு போகலாமா? இன்னும் ரெண்டு நாள்ல ஆலியாவோட பர்த்டே வருது. நான் கண்டிப்பா இருந்தே ஆகணும்னு ஆலியா சொல்லிட்டா", என அனுவிலிருந்து ஆலியாவிற்கு தாவிய மகனை நினைத்து வருணா வேதனை அடைந்தாள்.

திரும்பிய பொழுதுதான் சந்துரு ஆத்ரேயனிடம் "உனக்கு யாருடா இந்த அருவியை பற்றிச் சொன்னது? நான் எதுவும் சொல்லலையே! உங்க தாத்தா சொன்னாரா?", என வினா எழுப்பினான். "தாத்தாவா அவர் கிருஷ்ணரோட கேர்ள் பிரண்ட்ஸ் பத்தியும் அர்ஜுனாவோட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் பத்தியும்தான் எனக்கு சொல்லுவாரு. வேற எதை பத்தியும் சொல்ல மாட்டாரு", என வருணாவின் அப்பாவை கலாய்த்தவன் "இது எனக்கு ஆலியா அழுதுகிட்டு இருக்குறப்ப அவங்க வீட்ல போய் உட்கார்ந்தேன் இல்லையா? அப்ப அவளுடைய அழுகை நிறுத்த எனக்கு இந்த ஃபால்ஸ் பத்தின ஃபுல் டீடைய்ல் சொல்லுங்கன்னு அந்த மாமாகிட்ட டீல் பேசினேன்.

அவர் தான் கூகுள்ல படிச்சு ஒவ்வொன்னா சொன்னாரு" எனக் கூறி தன்னுடைய சாதனையை விளக்கினான். நல்லா வருவடா என அவனை வஞ்சப் புகழ்ச்சியில் கூறியவர்கள் அன்றைய நடு இரவில் வீடு வந்தடைந்தனர். அதற்குப் பின்னர் வந்த ஒரு வாரமும் எவ்வித பிரச்சனைகளும் இன்றி கழிந்து கொண்டிருந்த பொழுது அன்றைய நாளின் நடு இரவில் சந்துருவின் அலைபேசி அலறத் தொடங்கியது.

அலைபேசி அலறத் தொடங்கியதும் அதனை எடுத்துப் பார்த்த சந்துரு அனுவின் அப்பா அழைப்பதைப் பார்த்து இந்த நேரத்தில் எதுக்கு கால் பண்றாரு என்று எண்ணியதுடன் நம்ம நம்பர் கொடுத்தது தப்பு என்ற ஒரு எண்ணத்தையும் தன்னுள் ஓட விட்டான். அவன் அலைபேசி எடுக்கும் முன்னரே அது துண்டிக்கப்பட்டு மீண்டும் அலற ஆரம்பித்திருந்தது. அந்த சத்தத்தில் எழுந்த வருணா "அதை எடுத்து தொலைங்க ஏன் தூங்க கூட விட மாட்டேங்கறீங்க?", எனக் கத்த ஆரம்பித்துவிட்டாள்.

அந்த அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்ததும் " என்னது 1098 ஆ?", என சந்துரு அதிர்ச்சியடைந்தான். எதிர்முனையில் கூறிய எண்ணிற்கும் சந்துருவின் அதிர்ச்சிக்கும் மூலகாரணம் யாரோ?அதனை சந்துரு உரைத்திடும் நொடியில் உலைக்களம் கொலைக்களமாக கொதித்திடுமோ?