Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript சந்திரோதயம்-11 | SudhaRaviNovels

சந்திரோதயம்-11

Kripnythaa

Moderator
Mar 26, 2018
463
150
63
சந்திரோதயம்-11

ஆத்ரேயனும், ஆரோகனும் உள்ளே சென்ற உடனே வருணா சந்துருவை நோக்கி "நீங்க எதுக்காக ஜி திரும்பப் போய் ராகவிகிட்ட பேசுனீங்க? அந்தப் பொண்ணோட அம்மா ஏற்கனவே அம்புட்டு அவ்வளவு பேச்சு பேசுனாங்க. இப்ப மறுபடியும் போய் பார்த்து பேசி அந்த பொண்ணுகிட்ட இந்த பேப்பரை வாங்கிட்டு வந்து இருக்கீங்கன்னு தெரிஞ்சா இன்னும் அளவுக்கு அதிகமா பேசுமே", எனக் கேட்டதும் அதனை ராஜேந்திரனும்,ஜானகியுமே ஆமோதித்தனர்.

ராகவிகிட்ட பேசுனா மட்டும்தான் நம்ம பசங்க நெஜமாவே தப்பு பண்றாங்களா இல்லையான்னு புரிஞ்சிக்க முடியும்னு எனக்கு தோணுச்சு வருணா! நான் ஸ்கூல்ல கூப்பிட்டு வச்சு பேசியிருந்தா ராகவி அம்மா அந்தப் பொண்ணை தேவையில்லாம டார்ச்சர் பண்ணிட்டு இருப்பாங்க. அதெல்லாம் வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டுதான் தனியாக் கூப்பிட்டு பேசுனேன்.

ஏற்கனவே பிரின்ஸிபல்கிட்ட சொல்லி அந்தப் பொண்ணோட மொபைல் நம்பர் வாங்கிட்டு வந்துட்டேன். இது எப்ப நடந்துச்சுன்னு நீ உடனே யோசிக்க எல்லாம் வேண்டாம் வருணா! அன்னைக்கு சாயங்காலம் அவருக்கு கால் பண்ணி பேசிதான் வாங்கினேன். அங்க ஸ்கூல்ல வச்சு வாங்கலை. நம்பா் வாங்கிட்டு ராகவிக்கு முதல்ல ஒரு மெசேஜ் போட்டு பேச முடியுமான்னு கேட்டேன்.

அந்த பொண்ணு ஓகேன்னு சொல்லிட்டு உடனே கால் பண்ணிடுச்சு. நான் பார்த்துப் பேசணும்னு இன்னைக்கு வரச் சொல்லி இருந்தேன். அதனாலதான் போய் பார்த்து பேசினேன்", என சந்துரு தான் செய்தவற்றைக் கூறினான்.

"சரி! பேசினதுல என்னத்தை டிடெக்டிவ் கண்டுபிடிச்சி இருக்கீங்க?", என வருணா நக்கலாகக் கேட்டவுடன் "கண்டுபிடிக்கிறதுக்கு டிடெக்டிவா இருக்கணும்னு அவசியம் கிடையாது. நம்ம பசங்களோட கேடித்தனம் தெரிஞ்சு இருந்தாலே போதும்", என சந்துரு அதனைவிட நக்கலாக பதிலளித்தான்.

"பசங்களுக்கு இதெல்லாம் தெரியாது மாப்பிள்ளை. ஏதோ விளையாட்டுத்தனமா செஞ்சுட்டாங்க. அவ்வளவுதான்", என ஜானகிக் கூறியதும் அவரைத் திரும்பிப் பார்த்த ராஜேந்திரன் "மாப்பிள்ளை சொல்றாருன்னா கண்டிப்பா அதுல ஒரு நியாயம் இருக்கும். எனக்கு என்னமோ இது ஆத்ரேயன் செஞ்ச வேலையாதான் தோணுது. நீங்க என்ன மாப்பிள்ளை நினைக்கிறீங்க?", என மனைவியிடம் ஆரம்பித்து மருமகனிடம் கேள்வியில் முடித்தார்.

"எனக்கு அந்த சந்தேகம் இருந்துகிட்டுதான் இருக்கு மாமா! ஆனால் அதற்கான ஆதாரம் நம்ம கையில சுத்தமாக் கிடையாது. ராகவி ஆரோகன் பேக்ல இருந்துதான் இந்த பேப்பர் எல்லாம் எடுத்ததா சொல்றா. ஆத்ரேயன் கிளாஸ்ல எந்த பொண்ணுகிட்டயும் பேசமாட்டானாம். வேற யாராவது பேச வந்தாலும் பக்கத்துல ஆரோகன் இருந்தா இவங்ககிட்ட நீயே பேசிக்கோ அப்படின்னு சொல்லிட்டு நகர்ந்து போய்டுவானாம்", என சந்துரு ராகவியின் பேச்சில் இருந்து தான் சேகரித்த விவரங்களையும் எடுத்துரைத்தான்.

ஏனோ சந்துருவும், ராஜேந்திரனும் கூறியதை வருணாவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் என்னதான் ஆத்ரேயன்தான் இதைச் செய்திருப்பான் என சந்தேகித்தாலும் அவளால் துளி அளவேனும் தன் மகனை சந்தேகிக்க இயலவில்லை. அதனையே வாய்மொழியாகவும் அவர்களிடம் கூறினாள்.

"நீங்க ரெண்டு பேரும் என்னதான் மாத்தி மாத்தி சொன்னாலும் எனக்கு என்னமோ தெரியலை. சுத்தமா ஆத்ரேயன் மேல சந்தேகம் வரமாட்டேங்குது. ரோ செஞ்சுட்டான். அதை அக்சப்ட் பண்ணிக்க உங்க ரெண்டு பேருக்கும் மனசு இல்லை.அதுக்காக ஏன் தேவையில்லாம ரேவை பத்தி தப்பாப் பேசுறீங்க? இது கொஞ்சம் கூட நல்லா இல்லை ஜி!", என சந்துருவிடம் கூறியவள்

"அப்பா! நீங்கதான் ஆத்ரேயனுக்கு ஆரம்பத்தில் இருந்தே கதையெல்லாம் சொல்லி கொடுத்தீங்க. சின்ன வயசுல எல்லா குழந்தைகளும் இருக்கிற மாதிரி சாதாரணமா திரிஞ்சவன் இப்ப தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்குறான். நீங்க இப்படி பேசுறது கொஞ்சம் கூட நல்லா இல்லை", என ராஜேந்திரனிடமும் தன் மன வருத்தத்தை வெளியிட்டாள்.

இதற்கு சந்துரு பதில் கூறும் முன்னர் ராஜேந்திரன் தன் மகளைப் பார்த்து "வருணா! அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரிதான் தெரியும். அது மாதிரிதான் ஆரோகன் மேலே பழி விழுந்த உடனே அவன்தான் இதைச் செஞ்சு இருப்பான்னு நீ நம்புற. உன்னன விட எங்க ரெண்டு பேருக்கும் ஆத்ரேயன் பத்தி ரொம்ப தெளிவா தெரியும். சின்ன வயசுல இருந்தே ஏதாவது ஒரு தப்பு செஞ்சா அதை கொஞ்சம் கூட யோசிக்காம ஆரோகன் மேல போட்டுடுவான்", எனக் கூறியதும் வருணா

"அது சின்ன வயசுலப்பா! இப்ப வளர்ந்துட்டான். இப்ப அவன் பேக்ல இருந்து ராகவி எடுத்தா அப்படின்னு நீங்க சொன்னா ஒத்துக்கலாம். ஆனால் எடுத்தது ஆரோகன் பேக்ல இருந்து தானே ராகவி எடுத்துருக்கா. ரே யார்கூடவும் பேச மாட்டான்னும் சொல்லிருக்கா. பிறகு எப்படி நீங்க அவன் மேல சந்தேகப்படலாம்? ரெண்டு பேருமே தப்பு பண்றீங்க", என மீண்டும் தன் பிடியிலேயே நின்றாள்.

ராஜேந்திரன் மீண்டும் பேசுவதற்கு வாய் திறந்தபோது சந்துரு "விடுங்க மாமா! சில விஷயம் பட்டு தெரிஞ்சாதான் புரியும். விடுங்க", என அவரை தடுத்து நிறுத்தி விட்டான். அத்துடன் தனக்கு வேலை இருப்பதாக கூறி அலுவலக அறைக்குள் நுழைந்தவன் வருணாவை பார்த்து "ஓவர் கான்ஃபிடன்ஸ் ஒடம்புக்கு ஆகாது வருணா! எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கோ", எனக்கூறிவிட்டுதான் உள்ளே சென்றான்.

அவன் அவ்வாறுக் கூறியதும் வீறுகொண்டு எழுந்த வருணா "நான் வச்ச கான்ஃபிடன்ஸ் தப்பா போனாலும் நான் வச்ச நம்பிக்கை போய்டுச்சுன்னு புலம்பமாட்டேன். தப்பே பண்ணுனாலும் நான் என் பிள்ளைகளுக்குதான் சப்போர்ட் பண்ணுவேன்", என காரணமின்றி கத்திவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

சிறிதுநேரம் தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்த வருணா
அதற்கு மேலும் தன்னுடைய கோபத்தை இழுத்து வைத்திடத் தெரியாமல் நேராக சந்துருவின் முன்னே சென்று நின்றாள். "ஏன் ஜி! அப்படி சொல்லிட்டு வந்தீங்க?", என அவனிடம் கேட்டதற்கு "

என்ன சொல்லிட்டு வந்தேன்? வருணா நான் என்னோட வேலையை செஞ்சுகிட்டு இருந்தேன். என்கிட்ட வந்து தலையும் இல்லாம வாலும் இல்லாம மொட்டையா ஏதோப் பேசுற. என்ன விஷயம்", என சந்துருக் கேட்டதும் அவனுக்கு எதிரிலேயே அமர்ந்துவிட்டாள்.

அவளது டென்ஷனை புரிந்த சந்துரு "வருணா! ரொம்ப ஈஸியா எடுத்துக்கோ. எதுக்கு தேவையில்லாம டென்ஷன் ஆகுற? அப்படியே ரோ லவ் பண்ணாலும் பிரச்சனை கிடையாது. என்ன ஸ்கூல் படிக்கிறான். அது ஒன்னுதான் பிரச்சனை. இதுவே காலேஜ் முடிச்சு வளர்ந்ததுக்கு அப்புறம் நான் லவ் பண்றேன்னு சொன்னா என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கலாம். அது ஆத்ரேயனா இருந்தாலும் அதை ஏத்துக்குறதுக்கு நம்ம மனசை நாம தயார்படுத்திக்கணும்.

நீயும் வக்கீலுக்குதான் படிச்சிருக்க. ஒரு பக்க நியாயத்தை மட்டும் பார்க்கக்கூடாதுன்னு உனக்கு தெரியாதா? எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதுல வேற யாராவது சம்பந்தப்பட சான்ஸ் இருக்கான்னு யோசிச்சு பார்க்கணும். நானும், மாமாவும் ஆத்ரேயன் மேல சந்தேகப்படுறதுக்கு காரணங்கள் நிறைய இருக்கு", எனக்கூறி இடைவெளி விட்டு தன் மனைவி தான் கூறுவதை காது கொடுத்து கேட்கிறாளா என கவனிக்க நிறுத்தினாள்.

"சொல்லுங்க! சொல்லுங்க! சொல்றதெல்லாம் காதுல விழுந்துகிட்டுதான் இருக்கு. ஆனா ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு புரியுது ஜி! உங்ககிட்டயும் உங்க மாமனார் கிட்டயும் யாராவது சிக்குனா வாத்தியாரை விட நீங்க அளவுக்கு அதிகமா லெக்சா் அடிக்கிறீங்க. பேசுற பேச்சுல கேட்குறவங்களுக்கு தூக்கம் வந்துடுது", என அப்பொழுதும் தன் இயல்பிலிருந்து மாறாமல் கூறிய வருணாவைப் பார்த்து புன்னகைத்த சந்துரு தன் பேச்சை தொடர்ந்தான்.

"இந்தப்பிரச்சனை நடந்ததில் இருந்து பாரு, ஆரோகன் யாரையோ காப்பாத்த போற மாதிரி வாயை மூடிக்கிட்டு இருக்கானே தவிர்த்து எனக்கும், இதுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை அப்படின்னு சொல்லவே இல்லை. நான்தான் செஞ்சேன் அப்படின்னும் சொல்லலை", என அழுத்தம் திருத்தமாகக் கூறினான்.

ஆனால் சந்துருவின் பேச்சை கேட்ட வருணா "நான் செஞ்சிட்டேன். என்னை மன்னிச்சிடுங்கன்னு ஸ்கூல்ல இருந்து வந்ததும் பேசுனப்ப சொன்னானே!", என தன்னுடைய ஞாபக அடுக்கில் கிண்டிக் கிளறி அவன் கூறியதை மீண்டும் எடுத்துரைத்தாள்.

"சொன்னான். ஆனா அது எந்த சூழ்நிலைல சொன்னான்? நல்லா யோசிச்சுப் பாரு வருணா!",என சந்துருக் கூறியதும் வருணா அன்றைய நாளில் நடந்த பேச்சுவார்த்தையை தன் நினைவடுக்கில் மீண்டும் கொண்டுவர முயன்றுக் கொண்டிருந்தாள்.

அவளது முயற்சியினை கண்ட சந்துரு " ரொம்ப யோசிக்காத!நானே சொல்றேன். ஆத்ரேயன் படபடன்னு பேசிகிட்டு ஆரோகனுக்கு பதிலா சண்டை போடுற மாதிரி பேசின நேரத்துலதான் இந்த வார்த்தையை சொன்னான். யோசிச்சிப் பாரு... சின்ன வயசுல இருந்தே ஆத்ரேயன் என்ன பண்ணுவான்,அவன் தப்பு செஞ்சா எந்த மாதிரி ரியாக்ட் பண்ணுவான்னு உனக்கு நல்லாவே தெரியும்.

அப்படியே ரோ இந்த வேலையை செஞ்சிருந்தா ரே அவன்கிட்ட ஏன்டா என்கிட்ட சொல்லலை அப்படின்னு முதல்ல சண்டை போட்டிருப்பான். அதை விட்டுட்டு தன்னுடைய அண்ணனுக்கு சப்போர்ட் பண்ற அளவுக்கு அவன் நல்லவன் எல்லாம் கிடையாது. எங்கேயாவது வெளியே போகணும் அப்படின்னு சொன்னா ஆரோகன்கிட்ட சொல்லி அவனைத் தூண்டிவிட்டு இவனோட வேலையை சாதிச்சுப்பான்.

ராகவி பேப்பர் எடுத்தது வேணும்னா ரோ பேக்ல இருந்து இருக்கலாம். ஆனால் அது ஆத்ரேயனுக்காக அவன் தன்னோட பேக்ல வச்சிருந்திருக்கலாம்கிறது என்னோட அனுமானம்", என சந்துரு தனக்கு சந்தேகமாக தோன்றியவற்றை எல்லாம் வரிசைப்படுத்தினான்.

அதனைக் கேட்ட வருணா "ஜி! சின்ன வயசுல செஞ்சதுக்கு இப்ப நீங்க சம்பந்தப்படுத்தி பார்க்காதீங்க. இப்ப ஆத்ரேயன் எப்படி இருக்கான் அதை மட்டும் யோசிங்க", என தனக்கு தோன்றியதையும் கூறியதற்கு சந்துரு அளவான புன்னகையை சிந்தினான்.

"சின்ன வயசுல செஞ்சதை மட்டும் வச்சு சொல்லலை. இப்ப அவன் நடந்துக்குற நடைமுறையை வச்சுதான் நான் இதை உறுதியா சொல்றேன். அவனுக்கு பொண்ணுங்ககிட்ட பேச பிடிக்கலைன்னா பேசாம ஓரமா ஒதுங்கி போய் இருக்கனும். அதை விட்டுட்டு எல்லாருக்கும் கூட்டம் போட்டு சொல்லிட்டு யார்கிட்டயும் பேசாத மாதிரி நடிக்க எவ்வளவு நேரம் ஆகப்போகுது. ஆத்ரேயன் நடிச்சுக்கிட்டு இருக்கான். நீ தேவையில்லாம டென்ஷன் ஆகாம இரு. நான் பாத்துக்குறேன்", என சந்துரு வருணாவிற்கு ஓரளவுப் புரிய வைத்து அவளை ஆறுதல்படுத்தினான்.

சந்துரு கூறியதைக் கேட்டவளுக்கு அப்படியும் இருக்குமோ என்ற எண்ணம் முளைக்க ஆரம்பித்து விட்டது. உடனடியாக சந்துருவிடம் "அப்ப இதை நீங்க ஆத்ரேயனை கூப்பிட்டு வச்சு கேட்டுருக்கலாமே! அவன் தப்பு செஞ்சிருந்தா செஞ்சேன்னு ஒத்துப்பான்தானே!", என மிகவும் அப்பாவித்தனமாகக் கேட்டாள்.

அவளின் அப்பாவித்தனத்தை பார்த்த சந்துரு "வருணா! இப்படி ஏமாளியா இருக்காதே! அவன் பெரிய எம்டன்... திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்துடுவான். ஏதோ பிளான் பண்ணிதான் ஆரோகனை மாட்டிவிட்டுருக்கான். நான் பேசுறதை விட நாளைக்கு அம்மா வரட்டும். அம்மாகிட்ட அவன் ஓவர்குளோஸ். அவங்களை விட்டு மெதுவாய் என்னன்னு கேட்க சொல்லுவோம்.

மே பீ அவங்க மூலமா உண்மை வெளியே தெரிய வரலாம். இல்லை தெரியாமலும் போகலாம்", எனக் கூறிய பதிலில் வருணாவிற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை. அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்த சந்துரு "ஈசியா விடு வருணா! தேவையில்லாமல் நீயும் யோசிச்சி எங்களையும் அளவுக்கு அதிகமா பேச வைக்குற. அவனுங்களை விட உன்கிட்டதான் சின்னப்பிள்ளை மாதிரி பொறுமையா உட்காா்ந்து பேசிட்டு இருக்கேன். அது எனக்கே கடுப்பாகுது", என சற்றே கோபத்துடன் கூறிய பின்னர்தான் அவ்விடத்தைவிட்டு நகன்றாள்.

ஆனால் அன்று முழுவதும் ஒருவித சோக சித்திரமாகவே வருணாவின் முகத்தை பார்த்தவர்களுக்கு சிரிப்புதான் வந்தது. அதிலும் இரவு உணவு உண்ணும் பொழுது அருணாவின் முகத்தை பார்த்த ஆத்ரேயன் " ரோ! யார் யாருக்கோ கவிதை எழுதிக் கொடுக்குற... ஒரு நாலஞ்சு கவிதை நம்ம அம்மாவை பத்தி எழுதி கொடு.

பியூஸ் போன பல்பு மாதிரி இருக்கறவங்க உன் கவிதையை படிச்சி கான்ஜுரிங் படத்துல வர்ற அந்த பொம்மை மாதிரி ஆகிடுவாங்க. பிறகு நம்ம அம்மாவும் அழகா இருப்பாங்க", என கலாய்த்துக் கொண்டிருந்தான். ஆத்ரேயன் கூறியதைக் கேட்ட சந்துரு உடனே "ஆமாம் ரோ! ரே சொல்றது சரிதான். நீ எப்படி கவிதை எழுதுவன்னு நாங்களும் பார்த்ததில்லை.
நீ எழுதுறது ரொம்ப நல்லா இருக்குறதா ராகவி சொன்னாள். எங்களுக்கு ஆளுக்கு ரெண்டு கவிதை எழுதி கொடு", என தன் பங்கிற்கு வருணாவை கடுப்பேற்றிக் கொண்டிருந்தான்.

இவர்கள் இருவரின் பேச்சையும் கேட்ட வருணா "நீங்க ரெண்டு பேரும் அவன்கிட்ட கவிதை கேட்குறது பரோட்டாக் கடையில ஆளுக்கு நாலு பரோட்டா கட்டிக்கொடுன்னு கேட்குற மாதிரியே இருக்கு. கலாய்க்கிறோம்ன்னு போ்ல அப்பாவும், பிள்ளையும் மொக்கை போடுறீங்க. டேய் ரோ! இவங்க பண்ற அக்கப்போருக்காகவாச்சும் நீ எங்க அம்மா நல்லவ, வல்லவ, நாலும் தெரிஞ்சவ அப்படின்னு ஒரு கவிதை எழுதி எனக்கு லேமினேஷன் பண்ணி தரனும். நான் அதை நடு ஹால்ல மாட்டனும்", எனக் கூறிவிட்டு தன் தட்டில் இருந்த உணவில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாள்.

உணவு உண்டு முடித்தவுடன் தங்கள் அறையினுள் சென்று ஒரு பேப்பர் பேனாவுடன் வந்த ஆரோகன் எதையோ எழுத ஆரம்பித்து விட்டான். சந்துருவும், ஆத்ரேயனும் "நாம சும்மா சொன்னா இவன் ரொம்ப சீரியஸா செஞ்சுகிட்டு இருக்கான். அப்படி நல்லா கவிதை எழுதிட்டான்னா அம்மாவை கையில பிடிக்க முடியாது", என தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பொழுதே ஆரோகன் தான் எழுதிய பேப்பரை எடுத்து வருணாவிடம் கொடுத்தான்.

அதனை படித்தவள் "ஏன்டா! அந்த ராகவி பிள்ளைக்கு மட்டும் அம்புட்டு அழகா கவிதை எழுதி கொடுத்து இருக்க... எனக்கு ஏன்டா இப்படி ஒன்னு கிறுக்கி கொடுத்த? இதுக்கு நீ எழுதி கொடுக்காம இருந்திருக்கலாமே! ஐயோ! இப்படி பண்றானே! இதை என்னன்னு கேட்க மாட்டீங்களா? அப்பா,ஜி இவன் எழுதி வச்சதை நீங்களும் பாருங்க", என வீட்டில் இருந்த ஒவ்வொருவரையும் அழைத்து ஆரோகன் எழுதிய பேப்பரை அவர்களின் கையில் கொடுத்தாள். அதில்,

அன்னை வீசிச் சென்றப்
பார்வையில்
அவளின் விழிகளுக்கு
விருந்தானது மட்டுமின்றி
மனதிலும் தென்றலை பரப்பினவே அவளின் மனம் கவர்ந்த
மணம் நிறைந்த பிரியாணியும்
பஞ்சு போன்ற பரோட்டாவும்

என எழுதி இருந்தது.

அதனை படித்த மற்றவர்கள் சிரித்திட வருணா "ஏன்டா நான் உன்கிட்ட கேட்டேனா? எனக்கு பிரியாணியும், பரோட்டாவும் எப்படி இருக்குனு கேட்டேன்? ஊரே மானத்தை வாங்குற மாதிரி கவிதை எழுதி இருக்குறியே!", என புலம்பித் தவித்தாள்.

ஆத்ரேயன் வருணாவின் புலம்பலை பார்த்துவிட்டு "அப்பா! இதை லேமினேஷன் பண்ணி நாளைக்கு நம்ம வீட்டு ஹால்ல மாட்டுறீங்க. அந்த அன்னையின் போட்ட இடத்துல பிராக்கெட் போட்டு வருணா அப்படின்னு எழுதி பிறகு மாட்டிடுங்க", என மேலும் அவளை கடுப்பேற்றினான்.

என்னதான் ஆத்ரேயனுடன் இணைந்து வருணாவை நக்கலடித்துக் கொண்டிருந்தாலும் சந்துரு அவனை ஒரு ஆராய்ச்சிப் பார்வையுடன்தான் பார்த்துக்கொண்டிருந்தான். அது அவன் பெற்ற பையன்களுக்கு தெரியவில்லை என்றாலும் வருணாவுக்கு நன்றாகவே புரிந்திருந்தது. மேலும் அவனிடம் அதைப்பற்றிக் கேட்டு அவனுடைய நீண்ட பேச்சில் தூங்க விருப்பமில்லாமல் அதனை கேட்காமலே விட்டுவிட்டாள்.

ஆனால் தங்களின் அறைக்குள் நுழைந்தவுடன் ஆத்ரேயன் ஆரோகனிடம் கூறிவிட்டான். " ரோ!அப்பாவுக்கு என் மேல சந்தேகமா இருக்கு", என ஆத்ரேயன் கூறியதைக் கேட்ட ஆரோகன் "ரே! என்னடா இப்படி சொல்ற? உன் மேல எதுக்கு சந்தேகப்படனும்?", என பதில் கேள்வி எழுப்பினான்.

"இல்லை. ஏதோ சந்தேகம் இருக்கு. என்னதான் அம்மாவை நாம நக்கலடிச்சு பேசிகிட்டு இருந்தாலும், உன்கிட்ட பேசுற மாதிரி இருந்தாலும் அப்பாவோட பார்வை முழுக்க என் மேல மட்டும்தான் இருக்கு. சம்திங் ராங். நீ எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு ரோ!" என தீவிர பாவனையுடன் கூறிய ஆத்ரேயன் படுத்துத் தூங்குவதற்கு முன்னர் சில பல வேலைகளை செய்து விட்டே தூங்கச் சென்றான்.

மறுநாள் வந்த சந்துருவின் அம்மாவும்,அப்பாவும் அந்த வாரத்தில் நடந்த பிரச்சனையை பற்றி கேட்டுவிட்டு தங்கள் பேரன்களின் திறமையை பற்றி சிரிக்க மட்டுமே செய்தனர். சந்துருதான் தன் அம்மாவிடம் கூறி ஆத்ரேயனிடம் விசாரிக்கச் சொன்னான். அதன்படி அவனுடன் தனியாக பேச்சுக் கொடுத்தவரிடம் ஆத்ரேயன் "ஆச்சி! அப்பா என்கிட்ட பேச சொல்லி ஏதாவது சொன்னாரா? நீங்க இந்த மாதிரி எல்லாம் பேச மாட்டீங்களே! உங்களுக்கு என்னை பத்தி தெரியாதா ஆச்சி? எதுவா இருந்தாலும் டைரக்ட் டீலிங்தான். இந்த சுத்தி வளைச்சு மூக்கு தொடுறதெல்லாம் நமக்கு செட்டாகாது ஆச்சி! டோன்ட் ஒர்ரி. அப்படி ஏதாவது பண்றதா இருந்தா அம்மா,அப்பாகிட்ட கூட சொல்லமாட்டேன்.உங்ககிட்டதான் முதல்ல சொல்லுவேன் ஆச்சி!", என பல ஆச்சிகளை போட்டு அவரின் மனம் குளிரும்படி செய்து என் பேரன் அந்த மாதிரி எல்லாம் செய்யவே மாட்டான் என அவரது வாயாலேயே உரைக்க செய்துவிட்டான்.

இப்பிரச்சனை அத்துடன் முடிந்திட அதற்கு அடுத்து வந்த இரண்டு வருடங்களும் எவ்வித பிரச்சினையுமின்றியும், சந்துருவின் தீவிர பார்வையில் இருந்தும் தப்பியவாறு ஆரோகன்,ஆத்ரேயனின் பள்ளிப்படிப்பு முடிந்தது. 12 ஆம் வகுப்பிற்கான மதிப்பெண்கள் வந்த பின்னர்தான் இருவரும் என்ன செய்யப் போகின்றார்கள் என தெரிந்து கொள்ள விரும்பிய சந்துரு இருவரிடமும்

"ரெண்டு பேருக்கும் ஒரே காலேஜ்ல சீட்டு வாங்கனுமா? இல்லை வேற ஏதாவது ப்ரொபஷனல் கோா்ஸ் படிக்கப் போறீங்களா?", என வினவினான். அதற்கு ஆரோகன் "அப்பா நான் என்ஜினியரிங் முடிச்சிட்டு மேற்கொண்டு படிச்சு காலேஜ் புரஃபசராக போகணும்னு ஆசைப்படுறேன்", எனக் கூறியதில் ஆத்ரேயன்தான் அதிகமாக அதிர்ந்தான்.

அவனது அதிர்ச்சியை பாா்த்து இது அவனுக்கும் புதிய செய்தி என உணர்ந்து கொண்ட சந்துருவும்,வருணாவும் "நீ என்ன பண்ண போறே?", என அவனிடம் வினவினர். "எனக்கு ஐபிஎஸ் ஆகனும்கிறதுதான் லட்சியம். அதனால ஏதாவது ஒரு டிகிரி பண்ணிட்டு டிகிரி முடிச்சவுடனே அதுக்கான எக்ஸாம் அட்டென்ட் பண்ணலாம்னு இருக்கேன்", என உரைத்த ஆத்ரேயன் தான் பொலிடிகல் சயின்ஸ் எடுக்க விரும்புவதையும் கூறினான்.

இத்தனை வருடங்கள் ஒன்றாகவே வளர்ந்து ,படித்து வந்தவர்கள் இப்போது வேறு வேறு கல்லூரி மாறி செல்லப் போவது பெற்றோர்களுக்கு வருத்தத்தைத் தந்தாலும் இது அவர்களுக்கான லட்சியப் பாதையின் நுழைவுவாயில் என்பதால் ஒத்துக் கொண்டனர். ஆனால் தங்களின் தனிமையில் ஆத்ரேயன் ஆரோகனிடம் "நான் இதை எதிர்பார்க்கலை ரோ! பிளஸ்டூல நீ மேத்ஸ் குரூப் எடுக்கணும்னு சொன்னப்பகூட ரெண்டு பேரும் ஒரே காலேஜ் போகணும் அப்படின்னுதான் நெனச்சேன்.

நீ என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். எனக்கு பிஇ படிக்கதான் விருப்பம் அப்படின்னு சொல்லியிருந்தா நானும் அதிலேயே சோ்ந்து படிச்சிட்டு பிறகு ஐபிஎஸ் பண்ண போவேன். நீ ஏன் என்கிட்ட மறைச்ச அப்படின்னு எனக்கு புரியலை", என உரைத்தவன் அவனிடம் மீண்டும் ஒரு கேள்வியை வினவினான்.

அதற்கு ஆரோகன் கூறிய பதிலில் ஆத்ரேயனின் மனதில் முதன்முதலாக தனிமை என்ற உணர்வு தோன்றியது. அவனின் தனிமை உணர்வு அவனது மனநிலையை பாதித்திடுமா? இல்லை எப்பொழுதும் போல் தன்னிலை மாறாமல் இருந்திடுவானா?