Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript சந்திரோதயம்-10 | SudhaRaviNovels

சந்திரோதயம்-10

Kripnythaa

Moderator
Mar 26, 2018
463
150
63
சந்திரோதயம்-10

சிரிப்பொலியை அனைவரும் சிதறவிட்டுக் கொண்டிருந்த நொடியில் நண்பர்களை சந்திக்கச் சென்று விட்டு உள்ளே வந்த சந்துரு "வருணா! இதை நான் உன்கிட்ட இருந்து கொஞ்சமும் எதிர்பார்க்கலை. எப்பவுமே வருணா என்னை எந்த விஷயத்திலும் விட்டுத் தர மாட்டான்னுப் பெருமையா நெனச்சுக்கிட்டு இருந்தேன். அதை இன்னைக்கு நீ சிதறடிச்சிட்ட", என கோபமாக சற்று உயர்ந்தக் குரலில் கூறினான்.

ஜானகியும்,ராஜேந்திரனும் என்றும் குரல் உயர்த்திடாத தங்கள் மருமகன் மகளிடம் கோபம் கொள்ளவும் என்னவோ ஏதோவென்று பதறிப் போயினர். ஆனால் வருணா சற்றும் கலங்காமல் "என்ன ஜி! உங்களை விட்டுட்டு நான் மட்டும் சாப்பிட்டேன் அப்படின்னு சொல்றீங்களா? இதெல்லாம் அரசியல்ல சகஜம்தானே!

எத்தனை நாள் நீங்க வெளியில போய் வெளுத்துக்கட்டிட்டு வர்றீங்க. நான் ஏதாவது சொல்றேனா? இதுக்கெல்லாம் நீங்க எதுவுமே பேசக் கூடாது. போங்க, போங்க. போய் வேற வேலை இருந்தாப் பாருங்க", என மிகவும் அசால்ட்டாக உரைத்தாள். அவளின் பேச்சைக் கேட்டு ராஜேந்திரன் "இவளுக்கு இத்தனை வருஷம் ஆகியும் இன்னும் கொஞ்சம் கூட மெச்சூரிட்டி வரலையே ஜானகி! நான் என்னதான் செய்றது?", என புலம்பித் தவித்த பொழுது சந்துரு

"அது எப்படி வருணா நான் என்ன கேட்க வருவேன்னு புரிஞ்சுகிட்டு கேக்குறதுக்கு முன்னாடியே பதில் சொல்ற. இந்த விஷயத்துல உன்னை அடிச்சுக்க ஆளே இல்லை", என அவளின் கன்னத்தை பிடித்துக் கொஞ்சினாள். " டேய் ரோ!இந்த கொடுமையெல்லாம் பார்க்குறதுக்கு பதிலா வா நாமப் போய் படிக்கிற வேலையை பார்ப்போம்", என ஆத்ரேயன் ஆரோகனை இழுத்துக் கொண்டு தங்களின் அறைக்குள் செல்லப் போக சந்துரு அவர்கள் இருவரையும் "அங்கேயே நில்லுங்கடா", என தடுத்து நிறுத்தினான்.

ஆரோகன் எதுவும் பேசாமல் நின்று விட்டான்.ஆனால் ஆத்ரேயன் "இப்ப எதுக்குப்பா நிக்கச் சொல்றீங்க? நாங்க சாப்பிட்டாச்சு. தாத்தா,பாட்டி கூட டைம் ஸ்பென்ட் பண்ணியாச்சு. படிக்க வேண்டிய வேலை இருக்கு. நாளைக்கு ஆச்சியும்,தாத்தாவும் வேற ஊர்ல இருந்து வர்றாங்க. இன்னைக்கு இருக்கிற டைம்ல படிச்சு முடிச்சுட்டா நாளைக்கு அவங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ணலாம். அதெலலாம் நடக்க விடாம நிறுத்தி வைக்குறீங்க", என வாய் மூடாமல் பேசினான்.

சந்துரு எதுவும் பதில் கூறாமல் அவனை உற்றுப் பார்த்த பொழுதும் சற்றும் அசையாமல் அந்தப் பார்வையை எதிர்கொண்டவன் வருணாவின் புறம் திரும்பி "என்னன்னுக் கேளுங்க", என முணுமுணுத்தான். வருணா கேட்பதற்கு வாய் திறந்த பொழுது ராஜேந்திரன்தான் இடையிட்டு "வருணா! மாப்பிள்ளை நிக்க சொல்றாருன்னா ஏதாவது காரணம் இருக்கும். நீ ஏன் அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நுழையுற. நீ ஓரமா ஒதுங்கி நில்லு", என தன் மகளை அடக்கி வைத்தார்.

"ரெண்டு பேரும் வந்து உட்காருங்க. நீங்க படிக்கிற வள்ளல் எப்படின்னு எனக்கு நல்லாவே தெரியும்", என அவர்களுக்கு பதில் உரைத்த சந்துரு அவரிடம் தன்னுடைய கார் சாவியை கொடுத்து "வருணா! காா்ல ஒரு ஃபைல் இருக்கும். அதை எடுத்துட்டு வா. நான் மறந்துட்டேன்", என அவளை கீழே அனுப்பினான். சந்துருவின் பார்வையே ஏதோ பிரச்சனை என்று உரைத்ததில் வருணாவும் அமைதியாக சென்று விட்டாள். அவள் சென்ற பின்னர் ஜானகியிடம் காபி கேட்ட சந்துரு ஆத்ரேயனையும்,ஆரோகனையும் வந்து அமருமாறுப் பணித்தான்.

அவர்கள் இருவரும் வந்து அமர்ந்த பின்னரும் எதுவும் கூறாமல் ராஜேந்திரனிடம் திரும்பி மற்ற விவரங்களை பேச ஆரம்பித்ததும் ஆரோகன் ஆத்ரேயன்புறம் திரும்பி "ரே!ஏதாவதுப் பிரச்சனையா இருக்குமா? அப்பா எதுக்கு மறுபடியும் நம்மளை உட்காரச் சொல்றாரு?", என மெதுவாக வினவினான். "பிரச்சனை வந்தா அதை பெருசா எடுத்துக்காம சமாளிக்கிறவன்தான் பிள்ளை... பெத்தவங்க பேசுறாங்கன்னு அதுக்கு பயந்துப் போறவன் பிசாசு. நீ பிசாசா இருக்கப் போறியா? பிள்ளையா இருக்கப் போறியான்னு முடிவு பண்ணிக்கோ", என அவன் கேட்டதற்கான பதிலை கூறாமல் தன்னுடைய தத்துவத்தை உதிர்த்த ஆத்ரேயன் மிகவும் சாதாரணமாக இருப்பதைப் போல்தான் இருந்தது.

வருணா இதற்கு இடையில் சந்துரு எடுத்துவரக் கூறியதை எடுத்துவந்து அவனின் கையில் தந்துவிட்டு அவளும் அங்கேயே அமர்ந்து கொண்டாள். ஃபைலை வாங்கி வைத்த சந்த்ரு அப்போதும் பையன்களிடம் எதுவும் பேசாமல் ராஜேந்திரனிடம்தான் பேசிக்கொண்டிருந்தான். இது வேலைக்காகாது என நினைத்த ஆத்ரேயன் நிஞ்சா ஹட்டோரி வைத்து பார்க்க ஆரம்பித்து விட்டான்.

அது வரை அவா்களிடம் எதுவும் பேசாமல் இருந்த சந்துரு "பார்க்குறது நிஞ்சா ஹட்டோரி. செய்றது எல்லாம் தில்லாலங்கடித்தனம்", என ஆத்ரேயனை பார்த்து உரைத்தான். "இப்ப நான் என்ன தில்லாலங்கடித்தனம் செஞ்சுட்டேன்னு சொல்லி நீங்க இப்படி இன் டைரக்டாப் பேசுறீங்கப்பா? எதுவா இருந்தாலும் நேராப் பேசுங்க", என ஆத்ரேயன் எகிறிட ஆரோகன்" ரே! சும்மா இரு! அப்பா என்ன சொல்றாங்கன்னு கேட்டுட்டு அப்புறம் பேசு", என அவனை அடக்கினான்.

அவனின் பேச்சைக் கேட்ட சந்துரு " ரோ! பேசுற அவனை கூட நம்பிடலாம்.ஆனா ஒன்னுமே பேசாம அப்பா பேச்சை கேளு. அம்மா பேச்சை கேளுன்னு ஆட்டு குட்டி மாதிரி தலையாட்டுற உன்னை சுத்தமா நம்பவேக் கூடாதுடா",என்றவன் தான் எடுத்து வரக் கூறி இருந்த ஃபைலை எடுத்து அண்ணாவிடம் தந்தான். "இது என்ன ஜி?", என்று வினவியவளிடம் "அதுல இருக்கிற கவிதை எல்லாம் படிச்சுப் பாரு. அப்புறம் தெரியும்", என உரைத்ததும் வருணாவும் அதிலிருந்தவற்றைப் படிக்க ஆரம்பித்தாள்.

அவள் படித்து முடிக்கும்வரை எதுவும் பேசாமல் அமர்ந்து இருந்த சந்துரு அவள் முடித்த நொடியில் "என்ன எல்லாம் சூப்பரா இருக்கா?", எனக் கேட்டான். அதற்கு பதிலாக "போங்க ஜி! லவ் பண்ற காலத்துல எல்லாம் ஒரு கவிதை கூட தந்தது இல்லை.அப்ப எல்லாம் எப்பா் பார்த்தாலும் என்னை கூட்டிட்டு போய் பன்னு பரோட்டா, சிக்கன் பப்ஸ், நாட்டுக்கோழின்னு வாங்கி கொடுத்தீங்க.

இந்த மாதிரி கவிதை எல்லாம் கொடுத்திருந்தா நான் எவ்வளவு பத்திரமாக வச்சிருந்திருப்பேன். எவ்வளவு பெருமையா எல்லார்கிட்டயும் சொல்லியிருப்பேன். இப்போ போய் கொண்டு வந்து கொடுக்குறீங்க. இதெல்லாம் நல்லாவே இல்லை" என மிகவும் கோபமாக வருணாக் கூறியதைக் கேட்டு சந்துரு தன் தலையில் அடித்துக் கொண்டான்.

அதை பார்த்த உடன் "அச்சோ! ஜி! ஏன் தலையில அடிச்சுக்கிறீங்க?உங்க கவிதை எல்லாம் நல்லா இருக்கு. ஆனா அதை இத்தனை வருஷம் கழிச்சு நீங்க குடுத்ததுதான் நல்லா இல்லை", என வருணா பதிலுரைத்து தான் ஒரு மிகப் பெரிய அறிவாளி என்பதை அவ்விடத்தில் நிரூபித்தாள். "ஒன்னும் சொல்றதுக்கு இல்லை வருணா", எனக் கூறிய சந்துரு "அந்தக் கவிதையெல்லாம் எல்லாம் ராகவி ஆரோகன்கிட்ட இருந்து எடுத்தது", என அழுத்தம் திருத்தமாகக் கூறியவுடன் என்னது என்ற அதிர்ச்சி அவளதுக் குரலில் வெளிப்பட்டது.

அதே அதிர்ச்சியுடன் ஆரோகனிடம் திரும்பியவள் "ஏன்டா! அந்தக் கவிதையெல்லாம் படிச்சுப் பார்த்தா உங்களுக்கு அதுல எதுவுமே தப்பாத் தெரியாதுன்னு சொன்னியேடா! லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட உங்க அப்பாக் கூட இப்படியெல்லாம் எழுதினதுக் கிடையாது. நீ என்னடா இப்படி ஒரே காதல் கவிதையா எழுதி வச்சிருக்க. என்னடா இதுவாடா தப்பா தெரியாம இருக்கிற கவிதைகள்?", என அவனிடம் பொரிந்து தள்ளினாள்.

அதுவரை இவர்களின் பேச்சினை புரிந்தும் புரியாமலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ராஜேந்திரனும், ஜானகியும் "என்னது ஆத்ரேயன் கவிதை எல்லாம் எழுதுறானா?", என ஒரு ஒருமித்தக் குரலில் வினவினர். அவர்களின் வினாவினை கேட்டு சந்துரு சிரித்தானென்றால் வருணா "அம்மா, அப்பா! இது ஆரோகன் எழுதியிருக்கான்", என அவர்களின் தவறை திருத்தினாள்.

"ஆரோகனா? ஆரோகனா? என மீண்டும் மீண்டும் அவர்கள் கேட்டதில் நொந்துபோன வருணா அவனேதான்! அவனேதான்! என அதே வழியில் பதிலுரைத்தாள். அதன்பின்னர் சந்துருதான் ராஜேந்திரனிடமும், ஜானகியிடமும் பள்ளியில் நடந்த பிரச்சனையையும், அதன் பின்னர் அவன் பிள்ளைகள் இருவரிடம் பேசியதைப்பற்றியும் உரைத்தான்.

அதனைக் கேட்டு இருவரின் பார்வையும் வருணாவின் புறம் திரும்பியது. அவர்களின் பார்வையை உணர்ந்த சந்துரு என்னாச்சு மாமா என கேட்டவுடன் ராஜேந்திரன் "இல்லை. நீங்க எங்க மேல மரியாதை வச்சு சொல்ற விஷயத்தைக்கூட கூட எங்க பொண்ணு மூச்சுக் காட்டலை", என ஒருவித வருத்தமானக் குரலில் கூறினார். "எனக்கு இது சொல்லணும்னு தோணலை", என வருணா பதில் உரைத்ததும்

சந்துருதான் "கண்டிப்பா நாம இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் சொல்லித்தான் ஆகணும். சில நேரத்துல நம்மளாலக் கையாள முடியாதப் பிரச்சினைகளை அவங்க நிதானமா யோசிச்சு எப்படி வழிநடத்தனும்னு நமக்கு சொல்லுவாங்க. அதுவும் பேரப் பசங்களோடச் சின்ன சின்ன விஷயங்களும் தாத்தா பாட்டிகளுக்கு தெரிஞ்சுதான் ஆகணும். நாளைக்கு அம்மா,அப்பா வந்த உடனே நான் அவங்ககிட்டே சொல்லதான் செய்வேன்", என ஆத்ரயனை பார்த்துக் கொண்டே உரைத்தான்.

சந்துரு ஆரோகனை பற்றிக் கூறினாலும் பார்வை அனைத்தும் ஆத்ரேயன் மேல்தான் வைத்திருந்தான். அதனை பார்த்த ராஜேந்திரன் பேரன்கள் இருவரையும் பார்த்து ரெண்டு பேரும் உள்ளேப் போங்க என அனுப்பி வைத்தார்.

"இவங்க இருக்க சொல்றப்ப இருக்கணும். போக சொல்றப்ப போகணும். நமக்கே நமக்குன்னு சொல்லி எதையும் தீர்மானிக்க உரிமை இல்லை", என ஆத்ரேயன் முணுமுணுத்துக்கொண்டே ஆரோகனை இழுத்துக் கொண்டு உள்ளேச் சென்றான். அவர்கள் செல்லும் வரை பாா்த்திருந்த ராஜேந்திரன் சந்துருவிடம் "மாப்பிள்ளை இதை ரோ செய்யாம ஆத்ரேயன்தான் செஞ்சிருப்பான்னு நீங்க நினைக்கிறீங்களா?", எனக் கேட்டார்.

வருணா தன் தந்தையின் கேள்வியைக் கேட்டு வியந்து போனாள். அவள் வியப்பினை முக உணர்வில் பார்த்த ஜானகி "என்னாச்சு வருணா?", எனக் கேட்டதும் "இல்லைம்மா.நேத்திக்கு சந்துரு இதைதான் சொன்னாரு. அப்பாகிட்ட அதைப் பத்தி எதுவுமே சொல்லவே இல்லை. ஆனால் அப்பா இப்படி கேட்குறார். இவங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற அண்டர்ஸ்டாண்டிங் பார்த்து எனக்கு ஆச்சரியமா இருக்கு", எனக் கூறினாள்.

"என்னப் பண்றது? என் மாமனாருக்கு இருக்கிற மூளை அவரோட மகளுக்கு இல்லை", என சந்துரு சிரித்துக்கொண்டே கூறியவுடன் "அது கரெக்ட்தான் ஜி!", என்று உரைத்தவள் பின்னர்தான் அது தன்னை குறிப்பிட்டு சொல்கின்றான் என உணர்ந்தாள். வருணா சந்துருவின் பேச்சுக்காக அவன் முறைப்பதற்கு முன்னர் ராஜேந்திரன் மீண்டும் அதே கேள்வி கேட்டவுடன்

"எனக்கு சந்தேகமா இருக்கு மாமா! ஆனா உறுதியா சொல்ல முடியலை. இப்போ ஒரு அஞ்சு வருஷமா ஆத்ரேயன் கேர்ள்ஸ் யாருகிட்டயும் பேசுறதுக் கிடையாது. அதை வச்சு மட்டுமே அவனை நம்பவும் முடியாது. இந்த கவிதையில 20 கவிதைதான் கார்த்தி அவனோட ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லி எழுதி வாங்கி தந்திருக்கான். மீதி எல்லாம் யார் எழுதினாங்கன்னு சொல்லியும் தெரியலை.

ஏதாவது புக்ல இருக்குற கவிதையான்னு சொல்லி பசங்ககிட்ட குடுத்து படிச்சுப் பார்க்க சொன்னா இல்லை இல்லை. இதெல்லாம் புக்ல இருக்கிற மாதிரி இல்லை. சொந்த கவிதை மாதிரி இருக்குன்னு சொல்றாங்க", என்றவன் ஒரு பேப்பரை எடுத்து ராஜேந்திரன் கையில் கொடுத்தான். அதில்
என்னவளே
என்னை
இருளாக்கிக் கொண்டேன்
நிலவாக
நீ ஜொலித்திட !

என எழுதி இருந்தது. இது கார்த்தி ஃப்ரெண்ட் எழுதிக்கொடுத்த கவிதை கிடையாது. வேற புக்குல இருக்கான்னு நம்மளுக்கு தெரியலை் என்னால ஒரே ஒரு விஷயம் மட்டும் உறுதியாக சொல்ல முடியும். இது ஆரோகன் எழுதின கவிதை கிடையாது.

நான் ராகவிகிட்ட இன்னைக்கு திரும்ப பேசினப்ப ஒரு கேள்விக் கேட்டேன். நீங்க அவனோட ஃபைலிலிருந்து எடுத்து இருக்கீங்க. அவன் கண்டுபிடிச்சு உங்க கிளாஸ் டீச்சர்கிட்ட நான் எழுதி வச்ச கவிதையை யாரோ திருடிட்டாங்கன்னு சொல்லியிருந்தா என்ன செஞ்சிருப்பிங்கன்னு கேட்டதுக்கு அந்த பொண்ணு அங்கிள் ஆரோகன் எப்பவுமே குறைஞ்சது பத்து காப்பி வச்சிருப்பான்.

அப்படி இருக்கிற அன்னைக்கு மட்டும்தான் நான் பேப்பர் எல்லாம் எடுக்கிறது. ஒரு காப்பி இருந்துச்சுன்னா அன்னைக்கு நான் எடுக்க மாட்டேன் அப்படின்னு சொல்லுச்சு", என சந்துரு உரைத்த பொழுது ஜானகி இடையிட்டாா்.

" என்னதான் இருந்தாலும் அவனை வச்சுக்கிட்டு நீங்க எங்களுக்கு சொல்லியிருக்க கூடாது. பிள்ளை மனசு பாடுபடும். அவன் இல்லாத நேரத்துலகூட சொல்லியிருக்கலாம்", என தன்னுடைய வருத்தத்தை அவர் வெளியிட்ட போது சந்துரு புன்னகைத்துக் கொண்டான்.

"நீங்களும் இந்த வீட்ல ஒரு ஆளு. அப்படி இருக்கிறப்போ உங்ககிட்ட ஏன் மறைக்கணும்? நாங்க உங்ககிட்ட மறைக்காம எந்தளவுக்கு விஷயத்தை பகிர்ந்துக்கிறோமோ அதே மாதிரிபசங்களும் எங்ககிட்ட நடந்துப்பாங்க. சொல்லப்போனா மறைமுகமா பெத்தவங்ககிட்ட எதையும் மறைக்கக்கூடாதுன்னு நான் சொல்லி இருக்கேன்.

அது ஆரோகனுக்கு புரியாம இருக்கலாம். ஆனால் ஆத்ரேயனுக்கு நல்லாவே புரிஞ்சு போச்சு. இப்ப உள்ள கூட்டிட்டுப் போய் இதை தான் அவன் அண்ணனுக்கு சொல்லிக்கிட்டு இருப்பான்", என சந்துரு தெள்ளத்தெளிவாக தன் பேச்சுக்கான காரணத்தை எடுத்தியம்பினான்.

சந்துருவின் அனுமானம் சரி என்பது போல்தான் அறையின் உள்ளே சென்றவர்களின் பேச்சுவார்த்தை இருந்தது. அறைக்குள் சென்றவுடன் ஆரோகன் தன்னுடைய வாசிப்பு மேசையில் இருந்த புத்தகங்களை எடுத்து புரட்ட ஆரம்பித்தான். ஆனால் ஆத்ரேயனோ அறையின் நீள, அகலத்தை குறுக்கும், நெடுக்குமாக நடந்து அளந்து கொண்டிருந்தான்.

அதனைக் கண்ணுற்ற ஆரோகன் "நீ என்ன படிக்காம இப்படி நடந்துகிட்டு இருக்க?", எனக் கேட்டதில் அவனை ஆத்ரேயன் கையில் ஏதாவது கிடைத்தால் அதை வைத்து மொத்தலாம் என்ற ரீதியில் முறைத்து வைத்தான். அதற்கும் என்னாச்சு என்றவுடன் "ரோ! உனக்கு புரியுதா? இல்லையா? அப்பா எதுக்கு தாத்தா பாட்டிகிட்ட நம்ம முன்னாடியே சொன்னாங்கன்னு உனக்கு தெரியும் இல்லையா?", என கோபமாக வினவினான்.

ஆத்ரேயனின் கோபமான குரலில் கதவினை பார்த்த ஆரோகன் அது சாத்திய நிலையில் மட்டுமே இருப்பதை கண்டான். "அங்கே என்ன பார்க்குற? லாக் பண்ணிட்டு இவன் பேசலாம்னு யோசிக்கிறியா? லாக் பண்ணு. அப்பா அதுக்கும் வந்து நம்ம மண்டையிலேயே ரெண்டு போடுவாரு", எனக் கடுப்புடன் உரைத்த ஆத்ரேயன் ஆரோகனின் அருகில் இன்னொரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்துகொண்டான்.

பிள்ளைங்களுக்கு தனியறை, அளவான சுதந்திரம் என்று கொடுத்தாலும் அறையை தாழிட சந்துருவும்,வருணாவும் அனுமதிப்பதில்லை.அது உங்களுக்கு ஒரு ஸ்டேஜ் வரும். அப்ப நீங்க லாக் போட்டுக்கோங்க. இப்ப ஸ்கூல் படிக்கிற பசங்களுக்கு அது என்ன பழக்கம்? என ஒருமித்தக் குரலில் கூறி இதற்கு மட்டுமான அனுமதி அவர்கள் இருவருக்கும் எப்பொழுதுமே கிடைப்பதில்லை. இதுவரையிலும் ஆரோகனும்,ஆத்ரேயனும் அப்படி ஒரு நிலைமையை எதிர் பார்த்ததும் கிடையாது. ஆனால் இன்றைய நிலையில் இந்த டோர் லாக் பண்ணிட்டு பேசினா நல்லா இருக்குமே என எண்ணாமல் அவர்கள் இருவராலும் இருக்க முடியவில்லை.

வேறு வழியின்றி அண்ணனின் அருகில் அமர்ந்து விட்டு கதவை மற்றொரு முறை பார்த்தவன் மெது குரலில் பேச ஆரம்பித்தான். "ரோ! அம்மா தாத்தா,பாட்டிகிட்ட சொல்லவே இல்லை. அவங்க முன்னாடி அதைப் பத்தி காமிச்சுக்கக் கூட இல்லை. ஆனா அப்பா ஏன் சொன்னார்னு உனக்கு புரிஞ்சதா எனக்கேட்டு கேட்டு அவனின் இல்லை என்ற தலையசப்பை மட்டுமே பெற்றான்.

ரொம்ப கஷ்டம் என தன்னுடைய பற்களைக் அடித்தவன் "ரோ! அப்பா நம்மளுக்கு இன் டைரக்டா வாா்னிங் கொடுத்திருக்காரு. பெத்தவங்ககிட்ட எந்த விஷயத்தையும் மறைக்கக்கூடாது அதுதான் அவர் சொல்ல வந்த விஷயம். வயசானதுக்கு அப்புறமும் நாங்க எங்க பேரன்ட்ஸ்கிட்ட எப்படி எல்லா விஷயமும் சொல்றோமோ அதே மாதிரி நீங்களும் இருங்கடா அப்படின்னு நம்மளுக்கு சொல்றாரு. அதை புரிஞ்சுக்காம நீயும் அங்கே உட்கார்ந்து தலையை ஆட்டிக்கிட்டு இருக்க. உன்னை எல்லாம் என்னடா செய்றது?", எனக் கூறிய ஆத்ரேயன் மீண்டும் எழுந்து நடக்க ஆரம்பித்தான்.

அவன் நடக்கும் பொழுது அவ்வப்பொழுது கதவினை சிறிதளவு சத்தமில்லாமல் திறந்து பார்த்து வெளியில் யாரேனும் இருக்கிறார்களா என்பதையும் கவனித்துக் கொண்டான். ஆத்ரேயனின் பேச்சில் தீவிர சிந்தனையில் இருந்த ஆரோகன் வேறு எதுவும் கூறாமல் "சாரி? எனக்கு புரியலை. எப்பவுமே நீதான் எனக்கு புரிய வைப்ப", என வருத்தமான குரலில் உரைத்ததும் ஆத்ரேயனின் மனமும் இளகிவிட்டது.

"விடு! விடு! நாம பார்க்காததா இதெல்லாம் அசால்ட்டா பார்த்துக்கலாம். முதல்ல மண்டே ஸ்கூலுக்கு போன உடனே இந்த ராகவியை பேசுறதுல இனிமே அவ உன் பேக்ல இருந்து எதையும் எடுக்கக்கூடாது", எனக் கூறிய ஆத்ரேயன் திடீரென தன் தலையில் தட்டியவாறு யோசிக்க ஆரம்பித்து விட்டான். அவனது யோசனையை கண்டிருந்த ஆரோகனுக்கு அடுத்து என்ன திட்டுவாங்க போகிறோமோ என்ற பயம்தான் நிறைந்திருந்தது.

எப்பொழுதுமே அவன் அண்ணன் ஆத்ரேயன் தம்பி என்ற நிலை இருந்தது கிடையாது. சிறுவயது முதலே அவனுக்கு பக்கபலமாக இருப்பது ஆத்ரேயன்தான். யாரேனும் அவனை அடித்தாலோ, திட்டினாலோ அவர்களை எதிர்த்து சண்டை போட்டு அண்ணனை காக்கும் தம்பியாகதான் இன்றுவரை இருந்து வந்துள்ளான். ஆரோகனின் பயத்தை மெய்ப்பிக்கும் விதமாக ஆத்ரேயன் "ரோ! எனக்கு ஒரே ஒரு விஷயம் சொல்லு. நீயேன் ராகவிகிட்ட பேச மாட்டேங்குற. மத்தவங்களுக்கு கொடுத்த அந்த கவிதை பேப்பர் எல்லாம் ராகவிக்கு மட்டும் ஏன் கொடுக்கலை?", என ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டே கேட்டதும் ஆரோகன் நிமிர்ந்து பார்க்கவில்லை.

பதில் சொல்லுடா என ஆத்ரேயன் அதட்டியவுடன் "அது அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு", என மெது குரலில் கூறினான். "உன்கிட்ட இருந்து கவிதை வாங்குன பொண்ணுங்க எல்லாம் நல்லவங்க இல்லையா?", எனக் கேட்டதற்கு "இல்லை. ராகவி எப்பவுமே நல்லா படிப்பா. ரொம்ப நல்ல பொண்ணு . நான் பேசலனாலும் என்கிட்ட வந்து பேசுறதுக்கு ட்ரை பண்ணுவா. அதனால்தான் ராகவிகிட்ட கொடுக்க வேண்டாம்ன்னு கொடுக்கலை", என உரைத்தவன் "ரே! ஒரு ஹெல்ப். தயவு செஞ்சு ராகவியை எதுவுமே பேசிடாத.இந்தப பிரச்சனையை எப்படி ஹான்டில் பண்ணனும்னு நான் பார்த்துக்கிறேன்.

இதுல நீ பேசுனா தேவையில்லாத சந்தேகம் வரும். அதனால நீ இதுல வாயை மூடிட்டு இரு. இது உன்னோட அண்ணன் நான் சொல்றேன்", என ஆரோகன் கூறினான். அவனது பேச்சினைக் கேட்டு ஆத்ரேயனுக்கு சிரிப்புதான் வந்தது. சில நேரங்களில் வருணாவும், ஆரோகனும் செயல்,பேச்சு என அனைத்திலும் ஒன்றாகவே தெரிவார்கள். அதுபோல்தான் இப்பொழுது ஆத்ரேயனுக்கு தோன்றியது.

ஆரோகனின் பேச்சைக் கேட்ட ஆத்ரேயன் "அம்மா மாதிரியே பேசுறடா. கொஞ்சம் கூட ராகவிக்கு சப்போர்ட் பண்ணி பேசுனா இவன் நம்மளை தப்பா நினைப்பான் அப்படிங்கிற எண்ணமே உனக்கு வரலை. அவங்க அம்மாவை கூட்டிட்டு வந்து ஸ்கூல்ல பிரின்ஸ்பல் முன்னாடி உன்னை நிக்க வெச்சுருக்கா.

நம்ம அப்பா,அம்மாவை நிக்க வச்சிருக்கா. அவளை சும்மாவிட்டா நாளை பின்ன வரலாறு இந்த ஆத்ரேயனை பத்தி தப்பா பேசாதா? இந்த விஷயத்துல நீ ஒதுங்கி இரு. என்ன பேசணும், எப்படி பேசணும்னு எனக்கு தெரியும்", என பெரிய மனிதன் தோரணையில் கூறியவன் "இதுக்குமேல ராகவிக்கு சப்போர்ட் பண்ணுன அம்மாகிட்ட சொல்லிடுவேன்", என மிரட்டவும் செய்தான்.

அவன் பேச்சைக் கேட்டு ஆரோகன் பதில் எதுவும் உரைக்காமல் அமைதியாக இருந்தான். ஆனால் அவனது கைகள் எதிரில் இருந்த பேப்பரில் எதையோ கிறுக்கிய வண்ணம் இருந்தன. தான் பேசுவதைக் கேட்டு ஏதும் பதில் கூறாமல் அவன் எழுதிக் கொண்டிருப்பதை பார்த்த ஆத்ரேயன் சத்தம் செய்யாமல் பின்புறமாக வந்து என்ன எழுதுகிறான் என்று எட்டிப் பார்த்தான். அதில்,

பேசாமலே
பெரும் பூகம்பத்தை
என்னுள்ளே ஏற்படுத்தியவள்
அவளின் பேச்சில்
தொலைந்திட்ட
என்னை
உணர்ந்திடுவாளா!
என எழுதி இருந்தால்.

அந்த பேப்பரை பின்புறமாக இருந்து உருவிய ஆத்ரேயனோ "இது வேறயா? இரு அப்பாகிட்ட கொண்டு போய் கொடுக்குறேன்", என கதவைத் திறந்து செல்வதுபோல் அவ்விடத்திலிருந்து நகன்றான்." போ! போய் கொடு. எனக்கென்ன வந்துச்சு? அப்பவாச்சும் நான் கவிதை நல்லா எழுதுவேன்னு அப்பா ஒத்துப்பார்தானே!

அவ்வளவு கவிதையை பார்த்துட்டும் கண்டிப்பா நான் எழுதி இருக்க மாட்டேன்னு தான் இந்த நிமிஷம் வரைக்கும் சொல்லிட்டு இருக்காரு. ஆனா எனக்குள்ள இருக்குற திறமையை அவர் புரிஞ்சிக்கனும்னா அவர் முன்னாடி உட்கார்ந்து நான் இனிமே டெய்லி நாலு கவிதை எழுதணும் போல இருக்கு", என ஆரோகன் கூறிய பதிலில் நல்லா தேறிட்ட என அவனை பாராட்டிய ஆத்ரேயன் அந்த பேப்பரை அவனிடம் கொடுத்துவிட்டு தன்னுடைய வேலையை பார்க்கச் சென்றான்.

இவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டிருக்க ஹாலில் அமர்ந்து இருந்தவர்களோ ராகவியை எப்பொழுது ஏன் சந்துரு சென்று பார்த்தான் என வினவிக் கொண்டிருந்தார்கள்.

அதற்கு சந்துரு அளித்த பதிலில் சற்றும் எதிர்பாராத ஒரு திருப்பம் உள்ளதை யாரும் அந்நொயில் உணர்ந்திடவில்லை. உணரும் பொழுது நிலைமை கட்டு மீறிப் போயிருக்குமோ? கட்டினுள் அடங்கிடுமோ?