கொஞ்சும் வண்ண காதல் - கதை திரி

Shobana

Member
Jun 15, 2020
43
57
18
வண்ணம் - (25)அபிஷேக் சட்டையை பிடித்த ரித்விக், "நீ எதுக்கு டா அவள அரெஸ்ட் பண்ற?" என்றிட "மினிஸ்டர் பையன் கொலை கேஸ்க்காக" என்றான்.

இவர்கள் பேசுவதை கேட்டு இந்து வெளியே வர ரித்விக், அபிஷேக் சட்டையிலிருந்து கையை எடுத்து விட்டு "அவ மூஞ்சிய பாருடா. அவ குழந்தைடா, கொலை பண்ணானு சொல்ற" என்றான்.

அபிஷேக், "டேய் அவ எனக்கு தங்கச்சிடா. எனக்கு தெரியாதா அவள பத்தி, ஆனால் ஆதாரம் அவளுக்கு எதிரா இருக்குடா. இது மேல் இடத்தோட ஆடர்டா. என்னால எதுவும் பண்ண முடியாது. இப்ப நான் இவள கூட்டிட்டு போறேன். நீ லாயரை கூட்டிட்டு வாடா. ஜாமீன் டிரை பண்ணலாம்" என்றிட ரித்விக், "இந்துவ நீ கூட்டிட்டு போக கூடாது" என தடுக்க "புரிஞ்சுக்கோடா இப்ப நான் கூட்டிட்டு போகணும். நம்ம லாயரை வைத்து கோர்ட்ல நம்ம இந்துவை நிரபராதி என்று வெளியே கொண்டு வரலாம்" என்றவன் இந்துவை அழைத்துச் செல்ல கண்ணீர் வழியும் கண்களோடு அவனை திரும்பி பார்த்தவள், வண்டியில் ஏறிச் சென்று விட்டாள்.

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன், சுவற்றில் ஓங்கி குத்த அவன் கைகளிலிருந்து ரத்தம் வழிந்தது. வேகமாக உள்ளே சென்றவன் வழக்கறிஞர் நம்பருக்கு அழைத்து விவரத்தைக் கூறி போலீஸ் ஸ்டேஷன் வருமாறு கூறியவன் போலீஸ் ஸ்டேஷன் விரைந்தான்.

கொலை வழக்கு என்பதால், அங்கு ஜாமீன் தரமுடியாது என்று மறுத்து விட்டனர். விஷயம் அறிந்து சாரதாவும் மீனாட்சியும் ரித்விகிற்கு அழைத்தனர்.

சுந்தரராஜன், "ரித்விக் என்னாடா நடந்துச்சு. நியூஸ்ல சொல்றது உண்மையா? இந்துவ அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?" என்றிட "ஆமாம்ப்பா, ஜாமீன்ல கூட விடமாட்றாங்க. அவ பாவம், யாருக்குமே கனவுல கூட துரோகம் நினைக்கமாட்டா. அவளை போய் கொலை கேஸ்ல உள்ள தள்ளீட்டாங்க.... எனக்கு என்ன பண்றதுனே தெரியலைப்பா" எனக் கூற "நீ கவலைப்படாதடா, இந்து மேல தப்பு இருக்காது. கண்டிப்பா அவள் வெளியில வந்துருவா. இரு நாங்க உடனே கிளம்பி வர்றோம்" என்று கூறியவர் தனது குடும்பத்துடன் சென்னைக்கு புறப்பட்டார்.

சதாசிவம் நியூஸை பார்த்து விட்டு கஜேந்திரன் தொடர்பு கொண்டு "டேய் டி.வில பார்த்தியா, அவங்க சொல்லுறது உண்மையா? என் புள்ளைய கொலை பண்ணது அந்த பொண்ணு தான."

கஜேந்திரன், "ஐயா! அவங்க சொல்றது உண்மை தான். நான் விசாரிச்சுட்டேன்."

சதாசிவம், "அப்ப அவளைக் கொல்லாம விட கூடாது. கோர்ட்டுக்கு வரும் போது நம்ம ஆளை வைச்சு போட்டுத் தள்ளிடு."

"சரிங்கய்யா நீங்க சொன்ன மாதிரி செய்கிறேன்" எனக் கூறி அழைப்பை துண்டித்தான்.

ரித்விக், அபிஷேகை தொடர்பு கொண்டு "டேய் ஜாமீன் கிடைக்கலைடா. இப்ப என்ன பண்றது" என்று வினவ "நானும் ட்ரை பண்ணேன். எதுவுமே பண்ண முடியலை. இன்னும் ரெண்டு நாள்ல கோர்ட்டில ஆஜர் பண்ணுவாங்க. அங்கு வந்து வழக்கறிஞரை வைத்து ஜாமீன் வாங்கலாம்."

"ரெண்டு நாள், அவ அங்க தான் இருக்கணுமா? வேற எதுவும் பண்ண முடியாதா?"

அபிஷேக், "எனக்கு ரொம்ப கஷ்டமா தான் இருக்கு. ஆனா என்ன பண்றது தெரியலை. நான் எல்லா வகையிலும் முயற்சி பண்ணீட்டேன்."

ரித்விக், " நான் ஒரு தடவை இந்துவைப் பார்க்க முடியுமா?" என்று வினவ சிறிது நேரம் யோசித்தவன் , "சரி வாடா" எனக் கூறி அழைப்பை துண்டித்தான்.சுந்தரராஜன், "என்னப்பா என்ன சொல்றாங்க."

ரித்விக், "இரண்டு நாள் கழிச்சு கோர்ட்ல தான் ஜாமீன் வாங்க முடியும்னு சொல்லீட்டான்ப்பா" என்றுக் கூற,

சாரதா, "ஐயோ என் பொண்ணு இரண்டு நாள் ஜெயில்ல தான் இருக்கணுமா? அவ எந்த தப்புமே பண்ண மாட்டாளே... அவள போய்" எனக் கதறியவர் அப்படியே மயங்கி விழுந்தார்.

மீனாட்சி ஓடிவந்து அவரை தூக்க, ரித்விக் சாரதா முகத்தில் தண்ணீர் தெளித்தான். அவள் கண்விழிக்க ரித்விக், "அத்தை நீங்க கவலைப்படாதீங்க, என்ன நம்புங்க, இந்து என் பொண்டாட்டி. அவள இந்த பிரச்சினையில் இருந்து வெளியே கொண்டு வரது என்னோட முழு பொறுப்பு" என்றான்.

சுந்தரராஜன், "சாரதா இந்து எங்க வீட்டு பொண்ணு. அவளுக்கு ஒரு பிரச்சனைனா நாங்க சும்மா விடுவோமா. நீ பயப்படாத நாங்க லாயர் கிட்ட பேசுறோம். தைரியமா இரு. இப்படி அழுது உடம்ப கெடுத்துக்கிட்டா நாங்க உன்ன நெனச்சு கவலைபடுறதா இல்ல இந்துவ பார்க்கிறதா?" என்றவர் "மீனாட்சி சாரதாவ உள்ள கூட்டிட்டு போ" என்றார்.


ரித்விக், "அப்பா நான் போய் இந்துவ பார்த்துட்டு வரேன்" எனக் கூறி கிளம்ப அஸ்வின் நானும் வரேன் என்றிட அவனையும் அழைத்துச் சென்றான்.


அங்கு சென்றவர்கள் அபிஷேக்கை பார்க்க "ரித்விக் இரண்டு நிமிஷம் தான், பார்த்துட்டு வேகமா வா. இதுவே அன்அபிசியலா தான் நான் பண்றேன்" என்றுக் கூறி அவனை உள்ளே அனுப்பினான்.


அங்கே இந்து ஒரு டேபிளில் அமர்ந்து இருக்க வேகமாக அவளை நோக்கிச் சென்றவன் அவளை அணைத்துக் கொண்டான்.

அவள் முகத்தை நிமிர்த்தி வழியும் கண்ணீரைத் துடைத்தவன் "நீ பயப்படாத, நான் இருக்கேன். கண்டிப்பா உன்ன இதிலிருந்து வெளியில் கொண்டு வருவேன்" எனக் கூற அவன் கையை விலக்கி்யவள் "எனக்கு டிவோர்ட்ஸ் வேணும். நான் கொலை கேஸ்ல உள்ள வந்துட்டேன்னு சொல்லி அப்ளை பண்ணு, கண்டிப்பா கிடைச்சுடும். நீ வேற பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ" என்றாள்.

கோவமாக அவளை அடிக்க கை ஓங்கியவன், "என்ன பத்தி நீ என்ன நினைக்கிறடி. உனக்கு பிரச்சனைனு வந்தா விட்டுட்டு போயிடுவேன்னு. எப்ப பார்த்தாலும் டிவோர்ட்ஸ் வேற வார்த்தையே பேச மாட்டியா?" என்று சொல்ல அதை தூரத்திலிருந்து பார்த்த அஸ்வின் வேகமாக ஓடி வந்து அவன் தோளைத் தொட ரித்விக் கையை கீழே இறக்கி விட்டான்.

அஸ்வின், "என்னடா ஆச்சு, ஏன் இப்படி பண்ற?" எனக் கேட்க தன் தோளிலிருந்த அவனது கையை தட்டி விட்டு வேகமாக வெளியே சென்று விட்டான்.

அஸ்வின், "இந்து என்ன ஆச்சு, எதுக்கு அவன் இப்படி பண்றான்" என்று வினவ அவள் எதுவுமே கூறாது மௌனமாகக் கண்ணீர் சிந்தினாள்.

அவள் கண்ணீரை துடைத்து விட்டு "பயப்படாத நாங்கள் இருக்கோம். சீக்கிரமே உன்னை வெளிய கூட்டிட்டு வந்திடுவோம்" எனக் கூறி வெளியேற இருவரும் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.

அஸ்வின் வண்டி ஓட்ட ரித்விக் பக்கத்து சீட்டில் கண்மூடி சாய்ந்திருந்தான்.
அஸ்வின், "ரித்விக் இந்துக்கிட்ட எதுக்கு அப்படி நடந்துகிட்ட. அவ எப்படி அழுகுறா பாரு. எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு" என்றிட தலையை நிமிர்த்தி அவனை பார்த்தவன் "எனக்கு மட்டும் கஷ்டமா இல்லையா? அவ டிவோர்ட்ஸ் கேட்குறாடா" என்றான்.

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அஸ்வின், "என்னடா சொல்ற" என்று வினவ,

"ஆமாடா, அதனால் தான் நான் டென்ஷன் ஆகி அவளை அடிக்க கை ஓங்கினேன்" என்று கூறியவன் அபிஷேக் மொபைல்க்கு அழைப்பு விடுக்க அது ஏற்கப்பட்டவுடன் "அபி எனக்கு ஒரு உதவி பண்ணுடா" என்று கூற "சொல்லுடா என்னால முடிஞ்சா கண்டிப்பா பண்றேன்."

"இந்துவுக்கு எதிராக ஆதாரம் இருக்குன்னு சொன்னியே. அது என்னது மட்டும் சொல்ல முடியுமா?"

அபிஷேக், "இல்லடா இந்த கேஸ் ஒன் வீக் முன்னாடி தான் நான் என் உயர் அதிகாரி கைக்கு போச்சு. மினிஸ்டர பையன்றதால் பிரஷர் அதிகம்டா. அதனால தான் என்னால எந்த உதவியும் பண்ண முடியலை. நாளைக்கு கோர்ட்ல தான் சப்மிட் பண்ணுவாங்க. அப்ப தான் எனக்கே தெரியும். என்னால் எதுவுமே பண்ண முடியாது. சாரிடா."

ரித்விக், "சரி பரவாயில்லை, நான் பாத்துக்கிறேன்" எனக் கூறி அழைப்பை துண்டித்தான். அஸ்வின் மொபைலுக்கு அழைப்பு வந்து கொண்டே இருக்க அவன் துண்டித்துக் கொண்டே இருந்தான். ரித்விக், "யாரு என்று பாருடா" என்றுக் கூற "வித்யா தான்டா கூப்பிடுறா, அப்புறம் பேசிக்கிறேன்" என்றான்.


இந்து இரண்டு நாள் கழித்து கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டாள். மற்றவர்களை வீட்டில் விட்டுட்டு அஸ்வின், ரித்விக் மட்டுமே கோர்ட்டுக்கு வந்து இருந்தனர்.

இந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டாள். அரசு தரப்பில் "மினிஸ்டர் மகன் ஆர்யா கொலை செய்யப்பட்ட பகுதியில் இருந்த கேமராவை ஆராய்ந்த போது ஆர்யாவின் வண்டி அடுத்த இந்துவின் வண்டியைத் தவிர எந்த வண்டியும் அரைமணி நேரத்திற்கு செல்லவில்லை மற்றும் அதற்குப் பின் இந்து வண்டி மட்டும் அப்பகுதியை கடந்து உள்ளது. மேலும் ஒரு செயின் அந்த இடத்தில் இருந்து கிடைத்ததாகவும் அது இந்துவினுடையது என்று உறுதி செய்யப்பட்டதாகவும்" கூறப்பட்டது. மேலும் குற்றவாளியை வெளியே விட்டால் சாட்சியை கலைக்க நேரிடும். அதனால், பதினைந்து நாள் அரசு காவலில் வைக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.

ரித்விக் தரப்பு வழக்கறிஞர் வாதாடியும் பலன் கிடைக்காமல் இந்துவை பதினைந்து நாட்கள் அரசு காவலில் வைக்க உத்தரவிட்டனர்.

இந்துவை போலீஸ் ஜீப்பில் ஏற்ற பின்னாடி வேகமாக ஓடி வந்து ரித்விக், "நான் இவங்க ஹஸ்பெண்ட். ஒரு இரண்டு நிமிஷம் இவங்ககிட்ட பேசலாமா?" என அந்த போலீஸ்கார பெண்மணியிடம் கேட்க "இரண்டு நிமிஷம் தான். வேகமா போயிட்டு வாங்க" எனக் கூறி அனுப்பினார்.

சோர்வான அவளது முகத்தையும் மெலிந்த உடலையும் கண்டவன் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்க அதை அவளிடம் காட்டாமல்
மறைத்தவன் அவளைப் பார்த்து "மினிஸ்டர் பையன் கேஸ்க்கும் உனக்கும் என்ன சம்பந்தம். உன் செயின் எப்படி அங்க போச்சு" என்று வினவ அவள் மௌனத்தையே பதிலளித்தாள்.

"வாயை தொறந்து பேசுடி. ஏதாவது சொன்னால் தான உன்னை இதுல இருந்து காப்பாத்த முடியும். என்னால முடியலைடி, கொஞ்சம் கொஞ்சமாக செத்துகிட்டு இருக்கேன்."

இந்து, " இதுல எனக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கும் என்று எனக்கு தெரியும். அதான் என்னை விட்டு விலகிப் போனு சொன்னேன். எனக்காக உன்னோட வாழ்க்கையும் அழிச்சுக்காத" எனக் கூறியவள் வண்டியை நோக்கி புறப்பட்டாள்.

செல்லும் அவளது முதுகையே வெறித்து பார்த்தவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவனது தோளை தொட்டு அஸ்வின் திருப்ப அவனது கண்களில் வழியும் கண்ணீரைக் கண்டு "டேய்! நீ எதுக்குடா அழுகுற. கண்டிப்பா நம்ம அவள இதிலிருந்து வெளியே கொண்டு வரலாம்."

ரித்விக், "நானும் அப்படி தான் நினைச்சேன். ஆனா ஆதாரத்தை பார்த்தா கண்டிப்பா அவளுக்கும் இந்த கேஸ்க்கும் சம்பந்தம் இருக்குனு தோனுது. நீ நினைக்கிற மாதிரி அவள வெளிய கொண்டு வரது அவ்வளவு ஈஸி இல்ல. என்ன நடந்ததுனு முழுசா தெரிஞ்சா தான் அவள எப்படி வெளிய கொண்டு வரதுனு யோசிக்க முடியும். அதுவும் இல்லாம இந்த கேஸ்ல சம்பந்த பட்டிருக்கிறது மினிஸ்டர் பையன். அதனால பிரஷர் அதிகமா இருக்கும். எனக்கு என்ன பண்றதுனே தெரியலை. அவ என்னை விட்டு போய்டுவாளோனு பயமா இருக்குடா" எனக் கூற,

அஸ்வின், "குழப்பமா இருக்கும் போது யோசிச்சா எந்த வழியும் கிடைக்காது. வா பொறுமையா யோசிப்போம். நிச்சயம் நமக்கு ஏதாவது க்ளு கிடைக்கும். அந்த பதினைந்து நாள் டைம் நமக்குனு நினைச்சுக்கிட்டு தேடுவோம். ஏதாவது கிடைக்கும் இந்த ஊர்லயே பெரிய வக்கீலா பார்ப்போம். நீ நம்பிக்கை மட்டும் தளர விடாத" என்று கூற தன் கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவன் "நீ சொல்றது சரி தான். என்னால முடியும். கண்டிப்பா நான் அவளை வெளியே கொண்டு வருவேன்" என்றான். அதை கேட்ட அஸ்வின் " இப்பதான்டா நீ எனக்கு அண்ணன் மாதிரி பேசுற. வா வீட்டுக்கு போகலாம் என கூறி அவனை வீட்டிற்கு அழைத்து வந்தான்.வண்ணங்கள் மிளிரும்...
 
  • Like
Reactions: lakshmi

Shobana

Member
Jun 15, 2020
43
57
18
வண்ணம் - (26)வீட்டிற்கு வந்தவன் நடந்ததை கூற அனைவரும் அமைதியாகவே இருந்தனர். சாரதா, "ரித்விக் நான் உங்கள நம்புறேன். கண்டிப்பா நீங்க என் பொண்ண வெளியில் கொண்டு வருவீங்க. ஒரே இடத்தில் முடங்கிடாதீங்க. நல்லா யோசிங்க பெரிய வக்கீலா பாருங்க."

சுந்தரராஜன், "ரித்விக், சாரதா எவ்வளவு தைரியமா இருக்கா பாரு. கண்டிப்பா என் மருமக வெளியில வருவா. நாங்க எல்லோரும் உனக்கு துணையாய் இருக்கோம். அடுத்து அடுத்து ஆக வேண்டியதை பாரு" என்றார்.

ரித்விக், "சரிப்பா" எனத் தலையாட்ட மீனாட்சி, "ரித்விக் சாப்பிட வா" என்றழைக்க "வேண்டாம்மா, எனக்கு பசிக்கலை" என்றான்.

மீனாட்சி, "அவளை வெளியே கொண்டு வருவதற்க்காவது உனக்கு தெம்பு வேண்டாமா? இப்படியே சாப்பிடாம இருந்தா உடம்பு என்னாகுறது. நாளைக்கு உன் பொண்டாடாடி வந்து என் புருஷனை இப்படி தான் பட்டினி போடுவீங்களானு என் கூட சண்டைக்கு வர போறாடா... வந்து கொஞ்சம் சாப்பிடுடா" என வற்புறுத்த வேண்டா வெறுப்பாக டைனிங் டேபிளில் அமர்ந்தான்

சாப்பாடை எடுத்து இரண்டு வாய் வைத்தவனுக்கு அன்று அவளுடன் சாப்பாட்டிற்காக சண்டை போட்ட ஞாபகம் வர 'அவ சாப்பிட்டாளா என்னன்னு தெரியலையே' என நினைத்தவன் அப்படியே கையை கழுவி விட்டு எழுந்தான்.

மீனாட்சி, "ரித்விக் ரித்விக்" என
அழைக்க காதில் வாங்காமல் ரூம்க்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான். வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளும் அவளுடன் போட்ட செல்ல சண்டைகளையும் அவளையும் ஞாபகப்படுத்தியது. 'எப்படி ஈஸியா என்னை விட்டுட்டு போனு சொல்றா. உன்னால மட்டும் எப்படி டி இப்படி பேச முடியுது' என புலம்பிக் கொண்டிருந்தான். கோர்ட்டில் அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவன் காதில் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. திருமணம் நடந்தது முதல் ஒவ்வொரு நிகழ்வையும் அவனது மனது அசைப் போட்டுக் கொண்டிருந்தது.

திடீரென தனது மூளை அபாய ஒலி எழுப்ப வேகமாக எழுந்து கிளம்பி வெளியே வந்தவன் "அஸ்வின் ஒரு முக்கியமான வேலை இருக்கு" என்று அவனை அழைத்தான்.

சாரதாவிடம், "அத்தை உங்க வீட்டு சாவி எங்க இருக்கு" என்றிட "என்கிட்ட தான்இருக்கு" என்று கூறி சாவியை நீட்ட அதை வாங்கிக் கொண்டு கிளம்பினான்.

மீனாட்சி, "இந்த டைம்ல எதுக்குடா அவங்க வீட்டு சாவி. இப்ப எங்க போறீங்க."

ரித்விக், "ஒரு முக்கியமான வேலை போயிட்டு வந்திடறேன்" என கூறியவன் வேகமாக காரை நோக்கி புறப்பட்டான். அஸ்வின் மறுபுறம் ஏறிக் கொள்ள காரை இந்துவின் வீட்டை நோக்கி செலுத்தினான்.

அஸ்வின், "டேய் என்னடா ஆச்சு. எதுக்கு இப்ப அத்தை வீட்டுக்கு."

ரித்விக், "ஒரு முக்கியமான விஷயம். வா அங்க போய் சொல்றேன்" என்றவன் ஆள் அரவமற்ற சாலையில் பறந்தான்.

வீட்டின் முன் காரை நிறுத்தியவன் அதை திறந்து வீட்டிற்குள் சென்று லைட்டை ஆன் பண்ணி விட்டு இந்து ரூமை நோக்கி ஓடினான்.

ரூம் திறந்து உள்ளே சென்றவன் எதையோ தேட அஸ்வின், "டேய் எதை தேடுறேனு சொன்னா நானும் தேடுவேன்ல."

ரித்விக், "டைரி டா" என்றான். இருவரும் சேர்ந்து அந்த ரூமை புரட்டிப் போட்டு தேடியும் பலனில்லை. பீரோவை பார்த்த அஸ்வின், "இது மட்டும் தான் பாக்கி. இதை திற" என்றிட வேகமாக சாவியைத் தேடி எடுத்தவன் அதை திறந்து தேடினான்.

சிறிது நேர தேடலுக்குப் பிறகு அந்த டைரியை கைப்பற்றினான். அதை பார்த்தவுடன் மனதில் அன்றைய நினைவுகள் தோன்ற லேசாக அவனது உதட்டில் புன்னகை அரும்பியது.

அஸ்வின், "டேய் என்னடா தனியா சிரிக்கிற" என்று கேட்க தன் தலையை ஆட்டி "ஒன்றுமில்லை" எனக் கூறியவன் கட்டிலில் அமர்ந்து அதை புரட்ட ஆரம்பித்தான்.

அவள் முதல் பக்கத்தில் என்னவனுக்காக என எழுதியிருந்தத கவிதையை படித்தவன் அடுத்த பக்கத்தை திருப்ப அதில் வரைந்திருந்த அவனது முகத்தை கையால் வருடினான். அவள் அதில் முக்கியமானவர்கள், அவள் வாங்கிய பரிசுகள் தன் வாழ்வின் நிகழ்வுகளை எழுதி இருந்தாள். அவன் படிக்க துவங்கினான்.


"நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது எங்க அப்பாவுக்குப் பணிமாறுதல் காரணமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் கிராமத்துக்கு குடிபெயர்ந்தோம். எங்க வீட்டு பக்கத்து வீடு தான் மீனாட்சி அத்தை. அவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு புது ஃபிரண்ட் அஸ்வின் கிடைச்சான். நானும் அவனும் தான் எப்பவுமே விளையாடுவோம். அவனோட அண்ணன் தான் ரித்விக். அவன் கிட்ட நான் பேச மாட்டேன். ரொம்ப நல்ல பையன் தான். ஆனா எனக்கு தான் பேசுறதுக்கு பயமா இருக்கும். நாங்க மூனு பேரும் ஒரே ஸ்கூல்ல தான் படிச்சோம். அப்புறம் நான் பத்தாவது போயிட்டேன்.

அவன் பணிரெண்டாவது படிச்சான். அவன எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன் தெரியலை. எல்லாருக்கும் உதவி செய்யவான். ஸ்கூல் ஃபர்ஸ்ட் மார்க் வாங்குவான். எல்லா இடத்திலேயும் அவனைப் பற்றிப் புகழ்வாங்க. அதனால அவன் மேல எனக்கு ஒரு ஈர்ப்பு உருவாகிடுச்சு. இது அந்த வயசுல சரியானு எனக்கு தெரியலை. எல்லோர்கிட்டயும் சகஜமா பேசி பழகுற என்னால அவன மட்டும் அப்படி கடந்து போக முடியலை.

அஸ்வின் அவனுக்கு அப்படியே ஆப்போசிட். படிக்கவே மாட்டான் ரொம்ப சேட்டை பண்ணி அடி வாங்குவான்.

திடீர்னு ஒருநாள் ரித்விக் உடம்பு சரி இல்லாம போச்சு, அப்புறமா உக்காந்து ரொம்ப அழுதேன். அம்மா கூட எதுக்குன்னு கேட்டாங்க. எனக்கு காரணம் சொல்ல தெரியலை. அவன் கூட யாராவது பொண்ணுங்க பேசினாலே எனக்கு கோபம் வரும். ஏன் எனக்கு தெரியாது. எங்க வீட்டு மாடில இருந்து அப்பப்ப அவன பாத்துக்கிட்டே இருப்பேன்.

என்னோட ஃப்ரண்டு ஒருத்தி என் கிட்ட வந்து ரித்விகை லவ் பண்றேன்னு சொன்னா. அவன் கிட்ட சொல்ல ஹெல்ப் பண்ண சொன்னா. எனக்கு கோபமா வந்துச்சு. ஆனா அதை வெளிகாட்ட முடியலை. என்கிட்ட லெட்டர் கொடுத்து அவன் கிட்ட கொடுக்க சொன்னா. நான் மாட்டேன்னு சொன்னேன்.

ரொம்ப வற்புறுத்துனா. வேண்டா வெறுப்பா "நான் உன் கூட வறேன். நீயே கொடு" என்று சொன்னேன்.


லஞ்ச் ப்ரேக்ல அவன பார்க்க போனோம். நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டே போனேன். கண்டிப்பா அவன் அக்சப் பண்ண கூடாதுன்னு. நாங்க அவன் கிளாசுக்கு போனோம். அவன் பிரெண்ட்ஸ் கூட நின்னு பேசிட்டு இருந்தான். நான் தூரத்தில் நின்று கிட்டு நீ போய் பேசுனு சொன்னேன்.

அவ நீயும் வா என்று என் கையை பிடித்து இழுத்தா. அவனுக்கு எங்க அம்மாவ தெரியும். நான் வந்தா போட்டு கொடுத்துடுவான் சொல்லி நான் மறுத்துட்டேன். நீ போ பேசுனு அவளை அனுப்பினேன்.

அவன் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் சொன்னாள். அவனும் என்னன்னு கேட்டு கொஞ்சம் தள்ளி வந்து நின்றான்.

அவங்களுக்கும் எனக்கும் இடையில சுவர் தான் இருந்துச்சு. அவங்க பேசுறது எனக்கு நல்லா கேட்டுச்சு.

அவ அவன் கிட்ட லெட்டர் கொடுத்து நான் உங்களை லவ் பண்றேன்னு சொன்னா. அவன் நீ சின்ன பொண்ணு அது தப்புன்னு சொல்லி அட்வைஸ் பண்ணனான்.

அவ "நான் சின்ன பொண்ணு இல்ல. எனக்கு எல்லாம் தெரியும்" சொல்லி அவன் கூட மல்லுக்கு நின்னா. அவன், "பைத்தியம் மாதிரி பேசாதே. நல்லா படிக்கிற வழியைப் பாரு. உனக்கு கல்யாண வயசு வரும் போது இதெல்லாம் பண்ணலாம். உனக்கு இன்னும் மெச்சூரிட்டி வரலைன்னு அட்வைஸ் பண்ணி லெட்டரை கிழிச்சு போட்டு அவளை அனுப்பி வைச்சான்.

எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. 'நாம போய் சொல்லி இருந்தாலும் அப்படி தான் பண்ணி இருப்பான். நல்ல வேளை நம்ம தப்பிச்சோம்' என்று நினைச்சு சந்தோசப்பட்டேன். அவ மூஞ்சியை தொங்க போட்டு கிட்டு வந்தா. நான் என்னன்னு கேட்டப்ப நடந்ததை சொன்னாள். நானும் சரி விடு அவன் சொல்றது சரி தான் என்று சொல்லி அவளை சமாதானம் பண்ணுனேன்.

நான் பத்தாவது படிக்கும்போது எங்க அப்பாவுக்கு மறுபடியும் டிரான்ஸ்பர் ஆயிடுச்சு. எனக்கு அவன விட்டுட்டு போறதுக்கு மனசு இல்ல. அவன் கிட்ட சொல்லலைனாலும் தூரமாக நின்று அவனை ரசிப்பேன். இனிமே அது முடியாது நினைக்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நான் ரொம்ப அழுதேன். அஸ்வினும் அழுதான். ஏன்னா என்னோட க்ரைம் பாட்னர் அவன் தான். நானும் அவனும் சேர்ந்து ரொம்ப சேட்டை பண்ணி மாட்டிக்குவோம். மீனாட்சி அத்தை கூட சொன்னாங்க இந்து அழுகாத. பக்கத்து ஊருக்கு தான போறீங்க. அடிக்கடி இங்கு வந்து தங்கிட்டு போனு சமாதானம் பண்ணாங்க.

எல்லா பொருளையும் வண்டியில் ஏற்றி
கிளம்பி ரெடி ஆகி எல்லோரும் வண்டிக்கிட்ட நின்னாங்க. எனக்கு அந்த வீடும் ரொம்ப புடிச்சிருந்துச்சு. நான் தனியா அங்க நின்று வீட்ட கடைசியா ஒரு தடவை பார்த்தேன். ரித்விக் என் கிட்ட வந்தான். "இந்து அழுகாத. நீ என்ன சின்ன குழந்தையா. இன்னும் ரெண்டு வருஷத்துல காலேஜ் போக போற" என்று சொல்லி அட்வைஸ் பண்ணான்.

எனக்கு ஆச்சரியமா போச்சு. எனக்கு உங்களை விட்டுப் போறது கஷ்டமா இருக்குனு சொன்னேன்.

"நீ என்ன விட்டு போகல. கண்டிப்பா நான் உன்னை தேடி வருவேன்' என்று சொல்லி சிரிச்சான். எனக்கு அந்த அர்த்தத்தை புரிஞ்சுக்க முடியலை. அப்ப புரிஞ்சுக்கிற நிலையயிலும் நான் இல்லை.

"சரி வா" என்று என் கையை பிடிச்சு வண்டி கிட்ட கூட்டிட்டு வந்தான். அவன் கண் என்கிட்ட எதுவும் சொல்ல ட்ரை பண்றது எனக்கு தெரிச்சது. அது என்னனு மட்டும் புரியலை. ஆனா அவனோட நடவடிக்கை அன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா இருந்துச்சு. அதுக்கு அப்புறம் நாங்கள் கிளம்பிட்டோம்.

ஆனா அதே ஸ்கூல்ல தான் படிச்சேன். அவன் காலேஜ் போயிட்டான். ஸ்கூலுக்கு வரலை. எனக்கு கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் பழகிடுச்சு. அப்பப்ப அவங்க வீட்டுக்கு போன் பண்ணி அம்மாவும் நானும் பேசுவோம்.

ரித்விக் பாரின் போய்ட்டான். நானும் ஸ்கூல் முடிச்சுட்டேன். சென்னைல காலேஜ் ஜாயின் பண்ணிட்டேன். அப்பா விடமாட்டேன் சொன்னாங்க. நானும் அம்மாவும் பேசி கஷ்டப்பட்டு ஒத்துக்க வைத்தோம்.

காலேஜ்ல சுஷ்மி, ரோஹித் நான் மூனு பேரும் ரொம்ப க்ளோஸ். ரோஹித்க்கு அவன் தங்கச்சிய ரொம்ப பிடிக்கும். நான் அவளை மாதிரியே இருப்பேன் என்று அவன் சொல்லுவான். அதனால அவனுக்கு என்னைய ரொம்ப பிடிக்கும். அவங்க வீட்டுக்கு எல்லாம் போவோம். வீக் என்ட் அங்க தான் இருப்போம். காலேஜ் லைஃப் ஜாலியா இருந்துச்சு.


மெடிக்கல் நான் விரும்பி படிச்சதால் எனக்கு கஷ்டமா தெரியலை. ரித்விக்கை மறக்கல. நமக்கு ரொம்ப புடிச்ச விஷயம் நாம மறக்க மாட்டோம். ஆனால் அந்த சூழ்நிலையில் நியாபகம் இருக்காது. அது மாதிரி தான் அவனும் ஆழ்மனசுல இருந்தான்.

அப்புறம் நாங்க காலேஜ் முடிச்சுட்டு ரோஹித் அப்பாவுக்கு சொந்தமான ஹாஸ்பிடல்ல நாங்க மூணு பேரும் வேலைக்கு சேர்ந்தோம். லைஃப் செம ஜாலியா போச்சு. அப்ப தான் திடீர்னு ஒரு நாள் எங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் என்று எங்கம்மா போன் பண்ணாங்க. நானும் விழுந்தடிச்சு ஓடினேன். ரிப்போர்ட் பார்த்தப்ப தெரிந்தது இது அவருக்கு இரண்டாவது அட்டாக். ஏற்கனவே ஒரு தடவை வந்து இருக்கு. அவர் எங்களுக்கு தெரியாம ட்ரீட்மென்ட் எடுத்து இருக்கார்.

அப்புறம் நான் போய் அவரை பார்த்தேன். ரொம்ப அழுதேன். அவர் தான் என்னை சமாதானப்படுத்தினார். எனக்கு ஒன்னும் இல்லைன்னு சொன்னார். அப்புறம் என்கிட்ட "நான் இன்னும் எத்தனை நாள் இருப்பேன்னு தெரியலை. நான் போறதுக்குள்ள உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பாக்கணும். அப்பதான் என் ஆத்மா சாந்தியடையும்" என்று சொன்னார்.வண்ணங்கள் மிளிரும்....
 
  • Like
Reactions: lakshmi