காதல் களமாட வா!! - கதை திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,686
1,503
113
அத்தியாயம்- 18

எதிர் எதிரே நின்ற இருவரின் முகமும் உள்ளுக்குள் எரிமலையை சுமந்து கொண்டு இருந்தது. கேசவனின் சிந்தனை முழுவதும் ஹசன் சகோதரர்களை எப்படி மடக்குவது என்று ஓடிக் கொண்டிருந்தது.

“கார்த்தி! அவனுங்களோட பிசினெஸ் பார்ட்னர்ஸ், பாக்டரி லேபரர்ஸ் என்று ஒரு இடம் விடாம நம்ம ஆட்களை உள்ளே புகுந்து ஆட சொல்லு. நம்ம கட்டுப்பாட்டை மீறி அவனுங்க எங்கேயும் நடமாட முடியாதபடி செய்”.

அவன் சொன்னதும் சற்றே யோசனையுடன் “அதனால சக்திக்கு...” என்று முடிக்க விடாமல் “எதுவும் ஆகாது...ஆகவும் விட மாட்டேன். சொன்னதை செய்” என்றான்.

அதன்படி அடுத்த ஒரு மணி நேரத்தில் ஹசன் சகோதரர்களிடம் கூட்டணி வைத்திருப்பவர்கள் முழுவதும் அவர்களிடம் சத்தம் போட ஆரம்பித்தனர். அவர்களின் வீடுகளில் யாரோ புகுந்து தாக்குதல் நடத்துவதாக தகவல் தந்தனர். அதே போல அவர்களது தொழிற்சாலையில் தீடீரென்று கலவரம் வெடித்து வேலை நிறுத்தம் செய்யப்பட்டது. அவர்களது அலுவலகத்தில் டாகுமென்ட்ஸ் வைக்கப்பட்டிருந்த அறை தீப்பற்றிக் கொள்ள, அந்த இடமே அல்லோகலப்பட்டது.

அனைத்தும் எதனால் என்று தெரிந்தவர்கள் உடனே கேசவனை அழைத்தனர்.

“என்ன மிஸ்டர். ஆதி நாங்க யாருன்னு தெரியாம எங்க கிட்ட விளையாடி பார்க்குறீங்களா? உங்க வைப் என் கிட்ட இருக்கிறது மறந்து போச்சா?”

அவனோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் “என் வைப்பை தூக்கினதுக்கு தான் இந்த பிரச்சனை. அவ மேல கையை வைக்க நினைச்சா ஒருத்தன் உயிர் கூட உடலில் தங்காது”.

அவர்களோ அப்போதும் புரிந்து கொள்ளாமல் “எங்களைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள் மிஸ்டர். ஆதி. இங்கே உள்ளவர்களை கேட்டுப் பாருங்க. நாங்க ரொம்ப கொடூரமானவங்க”.

அவர்கள் புரிந்து கொள்ளப் போவதில்லை என்று புரிந்து கொண்டவன் “நீ பொழைப்பு நடத்த ரவுடியானவன். நானெல்லாம் பிறந்ததே ரவுடியாகத் தான். தேவையில்லாம சக்தி மேல கை வச்சிட்ட...விளைவுகள் ரொம்ப மோசமாக இருக்கும்” என்று கூறிவிட்டு போனை அனைத்தவன் அவளை எந்த இடத்தில் வைத்திருப்பார்கள் என்று அலசி ஆராய ஆரம்பித்தான்.

கடத்தப்பட்ட நேரத்திலிருந்து மயக்க மருந்தின் வீரியத்தில் மயங்கி கிடந்தவளுக்கு மெல்ல விழிப்பு வர, அறையின் இருட்டு பயமுறுத்தியது. முதலில் தான் எங்கு இருக்கிறோம் என்று புரியாமல் தவித்தவளுக்கு, தனது கைகளும், வாயும் கட்டப்பட்டிருப்பதை வைத்து கடத்தப்பட்டிருக்கிறோம் என்று புரிந்தது.

மதியம் நடந்தவைகள் எல்லாம் நினைவிற்கு வர, தன்னை மீறி கண்ணீர் கன்னங்களில் வழிய, ‘சாரி ஆதி! உங்களை மனதார என் மனம் ஏற்றுக் கொண்டு விட்டது. அதை நான் உணர எனக்கு இத்தனை நாட்கள் ஆகி இருக்கு. ஆனால் நான் உணர்ந்த நேரம் இந்த விதி என்னை உங்களிடமிருந்து பிரித்து வைத்திடுச்சு’ என்று வருந்தினாள்.

அதே சமயம் ‘நீங்க கட்டாயம் என்னை விட்டுக் கொடுக்க மாட்டீங்க. என்ன ஆனாலும் ஆதிகேசவனின் மனைவியா தைரியமா நான் காத்திருப்பேன்’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள் சுற்றுபுறத்தை ஆராய்ந்தாள்.

மையிருட்டு எங்கும் பறவை இருக்க, அது எந்த இடம் என்று கூட கண்டுபிடிக்க வழியில்லாமல் இருந்தது. தான் அமைதியாக இருப்பது நல்லதில்லை என்று உணர்ந்தவள் மெல்ல நாற்காலியை சப்தமில்லாமல் நகர்த்தி அருகே எதுவும் தட்டுப்படுகிறதா என்று ஆராய்ந்தாள். அன்றைய சோர்வு முழுவதும் அவளைத் தாக்க, அவளால் அதிகமாக செயல்பட முடியாமல் இருந்தது.

அந்த சமயம் எங்கோ இருவர் பேசும் குரல்கள் கேட்க, யாரோ அங்கே வருகிறார்கள் என்று உணர்ந்து கொண்டு, மயக்கத்தில் இருப்பது போல சரிந்தமர்ந்து கொண்டாள். இருட்டின் நடுவே கதவு திறக்கும் ஓசை கேட்க, இருவரின் குரல் அருகே கேட்க ஆரம்பித்தது.

சட்டென்று அறையில் வெளிச்சம் பரவ, அவளின் அருகே இருவர் வந்து நிற்பதை உணர்ந்தாள்.

“என்ன இன்னும் மயக்கத்திலேயே இருக்கா?”

“சரியான சோனியா இருக்கா...இந்த மருந்து வச்சதுக்கே இப்படி கிடக்குறா”.

அவர்கள் இருவரும் அந்த ஊர்க்காரர்கள். கிரியோல் மொழியில் அவளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதை கவனித்துக் கொண்டு மிகுந்த கவனத்துடன் மயக்கத்தில் இருப்பது போல அமர்ந்திருந்தாள்.

அவள் முன்னே ஒருவன் குனிந்து பார்த்துவிட்டு “ஒரிஜினல் மயக்கம் தான்...வா நாம ரெண்டு பேரும் போயிட்டு இன்னும் ரெண்டு பெக் போட்டுட்டு வருவோம். அடுத்து என்ன ஆர்டர் வருதுன்னு தெரியாது நாம ரெடியா இருக்கணும்” என்றபடி கதவருகே சென்று விட்டார்கள்.

அந்த வாய்ப்பை பயன்படுத்தி அரைகுறையாக கண்களைத் திறந்து அந்த அறையை அவதானித்துக் கொண்டாள். எந்த இடத்தில் என்னென்ன இருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டாள்.

அவர்கள் சென்றதும் அவசரமாக நாற்காலியை நகர்த்திக் கொண்டு அறையின் மூளைக்குச் சென்றாள். அவளது மனம் முழுவதும் எந்த சேதாரமும் இல்லாமல் ஆதியிடம் செல்ல வேண்டும் என்பது தான். தன்னுடலில் எப்படி அத்தனை வலு வந்தது என்று அவளுக்கே புரியவில்லை. அங்கிருந்த ஒரு மேஜையின் கூர்முனையில் தனது கட்டுக்களை அவிழ்க்க முயன்றாள். மனமோ ஆதியிடம் செல்ல வேண்டும் என்று ஜபம் செய்ய ஆரம்பித்திருந்தது.

அதே நேரம் கேசவனும் சக்தி இருக்குமிடத்தை அறிந்து கொண்டுவிட்டான். கார்த்தியை மட்டும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான். ஹசன் சகோதரர்களுக்கும் அவன் அந்த இடத்தை கண்டு பிடித்துவிட்டான் என்று தெரிந்து போக, அவளை அங்கிருந்து மாற்றியாக வேண்டும்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,686
1,503
113
அதனால் அவர்களும் கேசவனுக்கு முன்பு சென்றாக வேண்டும் என்கிற வேகத்துடன் அவர்கள் அந்த இடத்தை அடைந்து வீடும் வேகத்தோடு சென்றார்கள். சக்தியும் எப்படியாவது சீக்கிரம் தனது கட்டுக்களை அவிழ்த்து விட வேண்டும், என்கிற வேகத்தோடு பரபரவென்று கையை அசைத்து அறுத்துவிட முயன்றாள்.

அவளின் வேகத்திற்கு கயிறு ஒத்துவரவில்லை என்றாலும் சிறிதளவு அறுந்து இடம் கொடுக்க, அதை வைத்து தனது கைகளை விடுவித்து விட்டாள். பின்னர் கால்களையும் விடுவித்துக் கொண்டவள், நாற்காலியை தன்னை முதலில் அமர்த்தி வைத்திருந்த இடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று கயிற்றை கொண்டு கட்டி இருப்பது போல தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

அவளது நல்ல நேரம் அனைத்தையும் முடிக்கும் நேரம் கதவருகே குரல் கேட்கத் தொடங்கியது. இனி, மயங்கியது போல நடிக்கத் தேவையில்லை என்றெண்ணி கதவை பார்த்தவண்ணம் நிமிர்ந்து அமர்ந்தாள்.

ஹசன் சகோதரர்கள் மிகவும் பரபரப்பாக அங்கே நின்றிருக்க, உடனே சக்தியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டு உள்ளே நுழைந்தனர். மயக்கம் தெளிந்து அமர்ந்திருந்த சக்தியைப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தவர்கள், அவளது கட்டுக்களை சீக்கிரம் அவிழ்த்து விடும்படி ஆட்களிடம் கூறினார்கள்.

சகோதரர்கள் இருவர் தவிர, மேலும் இருவர் இருக்க, வாயிலின் வெளிப்புறம் மற்றும் இருவர் நின்றிருந்தனர். தனது கட்டுக்களை அவிழ்க்க முயலும் போது தன்னை விடுவித்ததை கண்டு கொள்வார்கள் என்றெண்ணி உடனே முடிவெடுத்து, அவர்கள் தன்னிடம் நெருங்கும் முன்னே படாரென்று பாய்ந்து அவர்களை தள்ளிவிட்டு ஓடி இருந்தாள்.

அதை எதிர்பார்க்காதவர்கள் திகைத்து ஒரு நிமிடம் நிற்க, அதை பயன்படுத்தி கம்பவுன்டையும் தாண்டி இருந்தாள். சகோதரர்கள் சுதாரித்துக் கொண்டு அவளை பிடிக்கும்படி கத்தினர்.

அவளோ உயிரை கையில் பிடித்துக் கொண்டு ‘என் ஆதி கிட்ட போயிடனும்...என்ன நடந்தாலும் சரி இவனுங்க கிட்ட சிக்க கூடாது’ என்று ஓட ஆரம்பித்திருந்தாள். அவர்கள் அவளைத் துரத்த, என்ன தான் வேகமாக ஓடினாலும், அவளின் சோர்வு சீக்கிரம் அவர்களின் கையில் தள்ளிவிடும் நிலைக்கு இருந்தது. அதை புரிந்து கொண்டவள் எப்படியாவது அவர்களிடம் சிக்காமல் போக வேண்டும், என்கிற எண்ணத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு முழு வேகத்துடன் ஓடியவள், எதிரே வந்த காரை பார்க்கவில்லை.

அந்த கார்காரனும் திடீரென்று ஒரு பெண் கண்மண் தெரியாமல் ஓடி வருவாள் என்று எதிர்பார்க்காததால் அவன் வளைத்து திருப்பும் முன் பலத்த வேகத்துடன் மோதி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தாள்.

அவன் அதிர்ந்து நின்றுவிட, அவர்களின் பின்னே வந்த காரிலிருந்து கேசவன் இறங்கி ஓடி வந்துவிட்டிருந்தான். யாரோ ஒரு பெண் என்று எண்ணி பதட்டத்துடன் வந்தவனுக்கு, ரத்த வெள்ளத்தில் தன்னவளைப் பார்த்ததும் அந்த நிமிடம் இதயம் நின்று போனது.

கேசவனை அங்கு பார்த்ததும் அவளை துரத்தி வந்தவர்கள் பயந்து பின்னே போக, கார்த்தியும் காரை நிறுத்திவிட்டு அங்கு வந்திருக்க, சக்தியை ரத்த வெள்ளத்தில் பார்த்து அவனுமே திகைத்து நின்று விட்டான். பின்னர் முதலில் சுதாரித்துக் கொண்டவன் “கேசவா! சீக்கிரம் சக்தியைத் தூக்கு” என்று கத்தினான்.

கார்த்தியின் குரலில் சுதாரித்துக் கொண்டவன் குனிந்து தன்னவளை தூக்க, முகமெங்கும் ரத்தம் வழிவதை பார்த்து கலங்கிப் போக, அது வரை மயங்கி இருந்தவளோ தன்னவனின் தொடுகையை உணர்ந்து கொண்டவள் “உங்க கிட்ட வந்துட்டேன்...என் ஆதி கிட்ட வந்துட்டேன்” என்று கூறி மயங்கி சரிந்தாள்.

அவள் அப்படி சொன்னதும் உருகிப் போனவன் அவளை தூக்கிக் கொண்டு தங்களது காரை நோக்கி நடக்க, சிறிது தூரம் சென்று பின்பக்கம் திரும்பி துரத்தி வந்தவர்கள் அனைவரையும் தன் கூறிய விழிகளால் அளவெடுத்துக் கொண்டு சக்தியுடன் காரில் அமர்ந்தான். அவன் பார்வை சொன்ன செய்தியை படித்தவர்களின் நெஞ்சு கூடு காலியானது. நிச்சயம் தங்களை அவன் சும்மா விட மாட்டான் என்பதை புரிந்து கொண்டார்கள்.

புயல் வேகத்தில் கார் சீறிப் பாய, தன்னவளை நெஞ்சோடு அணைத்தபடி அமர்ந்திருந்தவனின் மனம் முதல் முறையாக இறைவனிடம் கோரிக்கை வைத்தது. நான் செய்த பாவங்களுக்கு எல்லாம் தண்டனையாக என்னவளை என்னிடமிருந்து பிரித்து விடாதே. நான் அவளுடன் பல்லாண்டு வாழ வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறேன். தயவு செய்து அவளை எனக்குத் திருப்பிக் கொடு என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தான்.

கார்த்தி கண்ணாடி வழியாக நண்பனை பார்க்க, கேசவனின் பார்வை முழுவதும் சக்தியின் மீதே இருந்தது.

எதற்காகடி என் வாழ்வில் வந்தாய்? எனக்காக என்று யோசிக்க, அரவணைக்க யாருமில்லாமல் வாழ்ந்தே மடிந்து போயிருப்பேன். உனக்கான அனைத்தையும் பறித்த என்னை ஏன் ஏற்றுக் கொண்டாய்? நீ என் வாழ்வில் வராமல் இருந்திருந்தால் யார் கையாலோ குத்து வாங்கி இறந்து போயிருப்பேனே? இப்படி பாதியில் விட்டுப் போகவா என் வாழ்வில் வந்தாய்? என்னைப் பார்க்காமல் இருந்திருந்தால் எங்காவது நன்றாக இருந்திருப்பாய். இப்போதும் என்னால தானடி இந்த நிலமை. நீ பிழைத்து வா! ஆனால் நான் வேண்டாம் உனக்கு. நல்லவன் ஒருவனை மணந்து அமைதியான வாழ்க்கையை ஏற்றுக் கொள். நான் வேண்டாமடி உனக்கு. என் வாழ்நாள் முழுவதும் உன் நினைவுகளோடு வாழ்ந்து முடித்து விடுவேன்.

அவனுக்காக அவனுடன் வாழும் ஆசையுடன் ஏற்றுக் கொண்டவளின் மனம் புரியாது கேசவன் அவளுக்கான நல்லதாக வேறு ஒன்றை சிந்தித்து விட்டான். அவள் அதை ஏற்றுக் கொள்வாளா? தனது காதலால் அவனை காப்பாற்றிக் கொள்வாளா?
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,686
1,503
113
அத்தியாயம் – 19

மருத்துவமனையில் அனுமதித்து விட்டு வேறு எந்த நினைவும் இல்லாமல், அவளது நலனை மட்டுமே எண்ணிக் கொண்டு மருத்துவரின் பதிலுக்காக காத்திருந்தான் கேசவன். அவனது இந்த பரிமாணம் கார்த்திக்கிற்கு புதிதாக இருந்தது.

சக்தியின் மீது இத்தனை காதலை வைத்துக் கொண்டா எதையும் வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தான் என்று அதிசயமாக இருந்தது. அவனது தவிப்பிற்கு மதிப்பளித்து ஓரமாக ஒதுங்கி சென்று, தங்களது ஆட்களிடம் சக்தியை துரத்தி வந்தவர்கள் மற்றும் ஹசன் சகோதரர்களை தேடி, தங்களது கோடவுநிற்கு கொண்டு வந்துவிடும்படி கூறிவிட்டு கேசவன் அருகில் வந்து நின்று கொண்டான்.

சுமார் ஒரு மணி நேர காத்திருப்பிற்கு பின் வெளியே வந்ததும் அவசரமாக அவரை நோக்கிச் சென்றான்.

அவளுக்கு ஆபத்தில்லை என்றாலும் நேரடியாக நெஞ்சில் அடிபட்டிருப்பதால் பதிப்பு சற்று அதிகம் தான் என்றார். ஆனாலும் உயிருக்கு எந்த தீங்கும் இல்லை, நாளை காலை அவளுக்கு நினைவு திரும்பி விடும், அதன் பின்னர் பத்து பதினைந்து நாட்கள் மருத்துவமனையில் இருக்க நேரிடும் என்று கூறினார்.

அதை கேட்ட பின்னர் தான் அவனது முகம் இயல்புக்கு திரும்பியது. ஐசியுவில் வைக்கப்பட்டிருந்ததால் ஜன்னலின் வழியே அவளது முகத்தை பார்த்தவனுக்கு தன்னால் தான் அவளுக்கு இந்த நிலைமை என்கிற எண்ணம் அழுத்தமாக பதிந்தது.

நாளை காலை தான் அவளுக்கு நினைவு திரும்பும் என்றறிந்ததும் கார்த்திக்கை அழைத்துக் கொண்டு சக்தியின் இந்த நிலைமைக்கு காரணமவர்களைத் தேடிச் சென்றான். கார்த்திக் கொடுத்த உத்தரவை வைத்து ஹசன் சகோதரர்கள் சம்மந்தப்பட்ட அனைவரையும் தூக்கி இருந்தார்கள்.

காரில் ஏறி அமர்ந்ததும் எதுவும் பேசாமல் இருக்க, கார்த்திக் தங்களின் கோடவுன் உள்ள இடத்திற்கு வண்டியை ஓட்ட ஆரம்பித்தான். கேசவனின் அழுத்தம் அவனுக்கு ஏற்புடையதாக இல்லை. அதனால் மெல்ல பேச்சுக் கொடுத்தான்.

“கேசவா! அது தான் சக்திக்கு எதுவுமில்லேன்னு டாக்டர் சொல்லிட்டாரே. சீக்கிரம் சரியாகிடும்”.

அவனை திரும்பிப் பார்த்து பெருமூச்சு விட்டவன் “அவளோட இந்த நிலமைக்கு நான் தான் காரணமில்லையா. நான் அவள் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் அவ குடும்பமும், அவளும் நல்லா இருந்திருப்பாங்க”.

அவனது இந்தப் பேச்சு கார்த்திக்கு அதிர்ச்சியை கொடுக்க “என்ன பேசுற கேசவா? சக்தி ஒருநாளும் அப்படி நினைக்க மாட்டா. நீ இப்படி எல்லாம் யோசிக்காதே”.

“இல்ல நான் முடிவு பண்ணிட்டேன் கார்த்தி. அவளுக்கு சரியாகி வந்ததும் நான் விலகிடப் போறேன். நானில்லாமல் இருந்தா எங்காவது நிம்மதியாக இருப்பா” என்றான்.

பட்டென்று காரை நிறுத்தியவன் “என்ன பேசிட்டு இருக்க நீ? இத்தனை நாள் அவளோட மனசு மாறணும்னு காத்திருந்த. இப்போ எல்லாம் மாறி வரும் நேரம் உளறிகிட்டு இருக்க”.

அவனது முகம் பார்க்காது “இப்பவும் அதே காதலால தான் சொல்றேன் கார்த்தி. நான் அவ வாழ்க்கையில் வந்ததுனால தான் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறா. இப்போ அவள் உயிருக்கே என்னால தான் பிரச்சனை வருது. அவள் வாழ்க்கையில் நானில்லாமல் இருந்தா எங்கேயாவது நிம்மதியா இருந்திடுவா”.

அவனை முறைத்து “இதை சொன்ன அடுத்த நிமிடமே செத்துடுவா. இந்த ஒருவாரமா நீ அவளை விட்டு ஒதுங்கி இருந்தப்ப அவளோட மனசு பட்டபாட்டை நான் பார்த்துகிட்டு இருந்தேன். இப்போ தான் முழுமையா உன் மேல அவளுக்கு காதல் வந்திருக்கு. இப்போ போய் பேசி எல்லாவற்றையும் கெடுத்துடாதே”.

“என்னால அவளை இப்படி பார்க்க முடியல கார்த்தி...கிராமத்தில் இருந்தப்ப எப்படி சுதந்திரமா சந்தோஷமா இருந்திருப்பா. எல்லாம் என்னால தானே”.

“நீ சொல்றது எல்லாம் சரி தான். ஆனால் அதெல்லாம் ஒரு காலம். இப்போ அவ சக்திஆதிகேசவன் ஆக தான் இருக்க விரும்புகிறாள். அதை புரிஞ்சுக்கோ. உனக்கு சந்தேகமா இருந்தா நமீதா உன் வாட்ஸ் ஆபிற்கு உனக்கு ஒரு ஆடியோ அனுப்பி இருப்பா அதை கேட்டுட்டு சொல்லு” என்று சாய்ந்தமர்ந்து கொண்டான்.

அவன் சொன்னதும் சுவாரசியம் இல்லாது வாட்ஸ் ஆப்பை திறந்து அந்த வாய்ஸ் மேச்செஜை கேட்க ஆரம்பித்தான். முதலில் என்னவோ என்று நினைத்தவனுக்கு அங்கு நடந்தவற்றை கேட்ட போது மனம் தவித்துப் போனது. அதே சமயம் சக்தியின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து அமர்ந்து விட்டான். அவளது மனம் தன்னை ஏற்றுக் கொண்டதை நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் அதை போட்டுக் கேட்டான்.

அந்த நிமிடம் எப்படி உணர்ந்தான் என்றே தெரியவில்லை. இதற்காக தானே அனைத்தையும் உதறி விட்டு மூன்று வருடங்களுக்காக காத்திருக்கிறான். சக்தியின் வாயாலையே தன்னை கணவன் என்று சொன்னது அப்படியொரு நிம்மதியை தந்தது. அதே சமயம் கார்த்தியைப் பற்றிய விவாதத்தைக் கேட்டு கோபமடைந்தவன், அவன் எதிர்பார்க்கும் முன்பு சாடென்று அவன் கன்னத்தில் அறைந்திருந்தான்.

“நான் தான் அவளை பார்த்துக்கிறேன்னு சொன்னேன் இல்ல. அப்புறம் நீ எதுக்கு இதில் தலையை நுழைச்ச. என் சக்திக்கு எந்த இடத்திலும் அவப் பெயர் வரக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனா அவள் இப்படி ஹான்டில் பண்ணுவான்னு எதிர்பார்க்கவே இல்லைடா” என்று நண்பனை தழுவியும் கொண்டான்.

கார்த்தியோ “அடிக்கிற கை தான் அணைக்கும்னு சொல்வாங்க. அது வேற மாதிரி சொன்னது. இங்கே என்னடா நடக்குது...விடுடா என்னை” என்று நெளிந்தான்.

“நமீதா கிட்ட தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லுடா...அவ மட்டும் ரிகார்ட் பண்ணலேன்னா நான் மிஸ் பண்ணி இருப்பேனடா”.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,686
1,503
113
“எது! நான் சொல்லனுமா? எதுக்கு அவ என் மண்டையில பூஜாடியை உடைக்கவா? போதும்டா! என் வாழ்க்கையில் இனி கல்யாணத்துக்கே ஆசைப்பட மாட்டேன்”.

அவன் சொன்னதும் அதுவரை இருந்த இறுக்கம் போக சிரித்தவன் “அதுக்கு நீ நமீதாவை செலெக்ட் பண்ணி இருக்க கூடாது”.

“அவளை தானே இந்த வெட்கம் கெட்ட மனசுக்கு பிடிச்சிருக்கு”.

“அப்போ அனுபவி!” என்றவன் “சரி காரை எடு! நம்ம வேலையைப் பார்ப்போம்”.

அவனை திரும்பி பார்த்து “நீ முதல்ல சொல்லு. சக்தியை இனி விட்டுக் கொடுப்பியா?”

கேசவனின் முகம் தீவிரமாக “முடியாதுடா! இனி, அவளை பாதுகாக்க வேண்டியது என் பொறுப்பு. அவளுக்கு என்னால போன வாழ்க்கையை விட பல மடங்கு அன்பான வாழ்க்கையை தர வேண்டியது என் பொறுப்பு” என்றான்.

“இதை இதைத் தான் எதிர்பார்த்தேன். கிளம்பு! மச்சான்களுக்கு கச்சேரியை வைப்போம்” என்று வண்டியை எடுத்தான்.

இருவரும் கோடவுனுக்கு சென்றதும் அவர்களின் வருகைக்காக காத்திருந்தனர். ஹசன் சகோதரர்கள் மட்டுமில்லாமல் அவர்களின் மொத்த கூட்டமும் அங்கே கொண்டு வரப்பட்டிருந்தது. காரிலிருந்து இறங்கும் வரை சக்தியைப் பற்றிய எண்ணத்திலேயே வந்து கொண்டிருந்த கேசவன், காரிலிருந்து இறங்கியதுமே அவனது முகமும், உடலும் இறுகிப் போனது. மூன்று வருடங்களுக்கு முந்தைய கேசவன் திரும்பி இருந்தான். அவனது மாற்றத்தை உணர்ந்து கொண்டான் கார்த்திக். இன்று ஹசன் சகோதரர்களுக்கு சங்கு தான் என்பதை உணர்ந்து கொண்டான்.

உள்ளே நுழைந்ததும் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கார்த்திக்கிடம் திரும்பியவன் “சக்தியை துரத்திகிட்டு ஓடி வந்தவங்க யாரு?” என்றான் இறுகிய குரலில்.

கார்த்திக் அருகே இருந்த ஆட்களிடம் கண்களை காட்ட நான்கு பேரை முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்கள். கேசவனைப் பற்றி அறியாதவர்கள் திமிருடன் நிற்க, என்ன செய்து விடுவான் என்று நினைக்கும் முன்னே ஒவ்வொருவரையும் நெஞ்சில் ஓங்கி உதைத்து நான்கு மூளைகளிலும் விழ வைத்திருந்தான். அவனது இந்த வேகம் கண்டு நடுங்கிப் போன ஹசன் சகோதரர்களின் விழிகளில் பயம் வந்திருந்தது.

அவர்கள் இருவரின் முன்னே நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவன், சற்று நேரம் ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது அமைதியே அவர்களுக்கு மேலும் பயத்தை கொடுத்தது. சற்று நேரத்திற்குப் பின்னர் “உங்களுக்கு நான் என்ன கெடுதல் பண்ணினேன்? பிசினெஸ் உலகில் போட்டி இருக்கலாம் ஆனா எதிரியா நினைக்க கூடாது. நாம ரெண்டு பேரும் ஒரே துறையில் இருந்தாலும், அவங்க அவங்களுக்கான வியாபாரம் நடந்து கொண்டு தானே இருந்தது?”

“நீ எங்க லைனில் குறுக்கே வந்திருக்க...இங்கே நாங்க தான் இந்த துறையில் ராஜாவாக இருந்தோம். எங்கிருந்தோ வந்த நீ இந்த மூன்று வருடத்தில் எங்களை ஓரம் கட்டியிருக்க”.

“அதுக்கு என் மனைவி மேல கை வைப்பீங்களா?”

“நீ தான் எங்களோட எல்லா இடங்களிலும் கை வச்ச...அதன் பின்னாடி தான் நாங்க எங்க ஆட்டத்தை தொடங்கினோம்”.

சட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்து கொண்டவன் “சோ நீங்க ஆரம்பிச்சதை ஒத்துக்க மாட்டீங்க. என்னைப் பற்றி உங்களுக்கு தெரியாதில்ல” என்றவன் கார்த்திக்கிடம் “மொபைலை கொடு” என்று கேட்டு கூகிளில் தன்னைப் பற்றிய செய்தியை எடுத்து அதை அவர்களிடம் காண்பித்தான்.

முதலில் கிண்டலாகப் பார்த்தவர்களின் விழிகள் ஸ்தம்பித்து நிற்க, அவனையும் அந்த செய்தியையும் மாற்றி மாற்றி பார்த்தார்கள்.

“எனக்கு ஒரு கெட்டப் பழக்கம் இருக்கு. யாரையும் மன்னிக்கிற மனப்பான்மையே இல்ல. இப்போ நீங்க செய்த தப்புக்கு உங்களுக்கு தண்டனை கொடுக்கட்டுமா வேண்டாமா?” என்று கேட்டவனின் விழிகள் அவர்களை கூர்ந்து நோக்கியது.

அதுவரை அவனைப் பற்றி தெரியாது தெனாவெட்டாக இருந்தவர்கள் நிலைமையை உணர்ந்து கொண்டு “வேண்டாம்! இனி, உன்னோட விஷயத்தில் நாங்க தலையிட மாட்டோம்” என்றார்கள் கெஞ்சலாக.

கார்த்திக்கின் புறம் திரும்பியவன் “என்ன கார்த்தி பண்ணலாம்?” என்றான்.

கேசவனின் இந்தப் பேச்சு கார்த்திக்கை குழப்பிவிட, “சும்மா விடுறதுக்கு இவனுங்க ஒன்னும் தியாகிகள் இல்ல” என்றான் எரிச்சலாக.

அவர்களை திரும்பிப் பார்த்தவன் “அப்படியா?” என்றான்.

அவர்களுக்கு அடுத்து என்ன நடக்குமோ என்கிற பீதி எழ, “நீ என்ன சொன்னாலும் கேட்கிறோம் எங்களை விட்டுடு” என்று கெஞ்சினார்கள்.

மீண்டும் அவர்களின் முன்னே அமர்ந்தவன் “என் மனைவியை கடத்தினதுக்கு பழைய கேசவனாக இருந்தால் இந்நேரம் கேள்விகளுக்கே இடமில்லாமல் இங்கே அத்தனை பேர் தலையும் உருண்டிருக்கும். ஆனா சக்தியை விரும்புகிற இந்த கேசவன் அவளுக்குப் பிடிக்காத எதையும் செய்ய மாட்டான்” என்றவன் கார்த்திக்கிடம் திரும்பி “எல்லோரையும் அனுப்பிடு” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் கார்த்திக்கிற்கு மட்டுமல்ல, அனைவருக்குமே அதிர்ச்சி தான். தங்களது கதை அன்றோடு முடிந்தது என்று எண்ணி இருந்தவர்களுக்கு இது பேரதிர்ச்சி.

“என்ன சொல்ற கேசவா?”

“ம்ம்...இந்த மூன்று வருஷமா சக்திகாக எல்லாவற்றையும் விட்டுட்டு பிஸ்னெஸ் பார்த்துகிட்டு இருக்கேன். இப்போ அவளுக்ககன்னு சொல்லி மறுபடியும் அதே தப்பை செய்றது நல்லதில்லை”.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,686
1,503
113
“ஆனா நாம போகாம இருந்திருந்தா சக்திக்கு எதுவும் நடந்திருக்க வாய்ப்பிருந்தது இல்லையா? இவங்களை அப்படியே விடுறது தப்பில்லையா?”

கார்த்தி சொன்னதும் ஹசன் சகோதரர்கள் பயந்து போய் “நிச்சயமா இனி இப்படியொரு தப்பை செய்ய மாட்டோம். எங்களை விட்டுடுங்க” என்று கெஞ்சினார்கள்.

“அப்போ நான் சொல்கிறபடி செய்ங்க. ஒரு அஞ்சு வருடத்துக்கு உங்க பிசினெஸ்ல என்னோட அனுமதி இல்லாம எதுவும் நடக்க கூடாது. என்னையும் ஒரு பார்ட்னர் ஆக்குங்க”.

“வாட்!”

“இஷ்டமில்லேன்னா சொல்லிடுங்க நான் என்ன செய்யணுமோ செய்றேன்”.

அண்ணன் தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.

“இது நீங்க சக்தியை டார்கெட் பண்ணினதுக்கான தண்டனை”.

விருப்பம் இல்லாமல் “ம்ம்..சரி” என்றனர்.

கார்த்திக்கிடம் திரும்பியவன் “பேப்பர் வொர்க்ஸ் எல்லாம் பார்த்து முடித்த பிறகு இவங்களை அனுப்பு” என்று கூறிவிட்டு அங்கிருந்து வேக நடையுடன் வெளியேறினான்.

கதவருகே செல்லும் போது மெல்ல திரும்பி “இன்னொரு முறை என்னை க்ராஸ் பண்ண நினைச்சா ஒரு ஆள் உயிரோட இருக்க மாட்டீங்க” என்று மிரட்டலாக சொல்லிவிட்டு காரை நோக்கிச் சென்றான்.

அவர்களை அங்கேயே பாதுகாப்பாக வைத்துவிட்டு கார்த்திக்கும் கேசவனுடன் கிளம்பி விட்டான். மருத்துவமனைக்கு போகும் வழியில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை கார்த்திக்கு சொல்லி விட்டான். கேசவன் அவர்களை மன்னித்து விட்டான் என்பதை ஏற்க முடியாமல் இருந்தவனுக்கு, அவன் கூறியவற்றை கேட்டதும் அத்தனை சந்தோஷமாக இருந்தது.

“என்னால ஏத்துக்கவே முடியல கேசவா. ஆனா நீ சக்திகாகன்னு சொன்னதும் என்னால எதுவும் பேச முடியல. ஆனா வச்சே பாரு ட்விஸ்ட். கேசவனா கொக்கா” என்று சந்தோஷமாக சிரித்தான்.

“என் மனைவியின் உயிருக்கு பிரச்சனை உண்டாக்கினவனை எப்படி அப்படியே விட்டுடுவேன்?” என்றான் சிரிப்புடன்.

ஹசன் சகோதரர்களுக்கு செக் வைத்து விட்டான். அவர்களின் பிசினெஸ் அவர்களிடம் இருந்தாலும், கேசவனின் அனுமதி இல்லாமல் எதையுமே செய்து விட முடியாது. மொத்தத்தில் கேசவனுக்கு கீழே வேலை பார்ப்பது போல ஒரு டீலை உருவாக்கி விட்டான். மொத்தமாக அவர்களை மடக்கி விட்டான். தங்களை மீறி எதையும் செய்து விட முடியாதபடி முடக்கி விட்டான்.