Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript காதலாகி நின்றேன் - ஷெண்பா | SudhaRaviNovels

காதலாகி நின்றேன் - ஷெண்பா

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
149
495
63
View attachment 760

அத்தியாயம் – 25

வீட்டின் முன்புற லானிலிருந்த ஊஞ்சலில் அமர்ந்து ஒரு காலை ஊன்றி மெல்ல ஆடிக்கொண்டே ஏதோ யோசனையில் இருந்தாள் தேவி.

ஒரு வாரமாக தமிழ்ச் செல்வனிடமிருந்து அழைப்போ, இல்லை அவனது தரிசனமோ கிடைக்காததில் மனம் தவித்தது தான் உண்மை. அதை ஒப்புக் கொள்ள தயக்கமாக இருந்தாலும், அதுதான் நிஜம். மனத்தில் கல்வெட்டாக பதிந்து போன சஹானாவின் வார்த்தைகளை மீறும் தைரியம் இப்போது அவளுக்கு நிச்சயமாக இல்லை.

ஆனாலும், கடிவாளம் இட்ட குதிரையைப் போல மனத்தை அடக்க நினைத்தாலும், அடங்காமல் தறிகெட்டு ஓடும் புரவியாக, அவளது எண்ணங்கள் தடமறியாமல் துள்ளியோடிக் கொண்டிருந்தன. தன்னிலை இல்லாமல் கைகள் வரைந்து கொண்டிருந்தவள், வாசலில் வந்து நின்ற காவல் துறை வாகனத்தை கவனிக்கவில்லை.

வரைந்து கொண்டிருந்தவள் அந்தக் காகிதத்தைக் கசக்கி தூர எறிந்துவிட்டு, வேறு பேப்பரை எடுத்துக் கொண்டிருந்தவள், “ஹாய்!” என்று காதருகில் ஒலித்த கிசுகிசுப்பான குரலில் திடுக்கிட்டுத் திரும்பினாள்.

காக்கிச் சீருடையில் மிடுக்காக நின்றிருந்த தமிழைக் கண்டதும், ஸ்தம்பித்துப் போனாள். அவனைக் கண்டதும் கண்களில் தோன்றிய மலர்ச்சியும், இதழ்களில் பூத்த முறுவலும், வந்த வேகத்தில் காணாமல் போனது.

நொடி நேரத்தில் வந்து சென்ற அவளது மனத்தின் பேரின்ப பெருவெள்ளத்தையும், மறுகணமே அதை மறைத்துக் கொண்டதையும் அவனது கண்கள் கவனிக்கத் தவறவில்லை.

“என்ன ஆச்சு மேடம்? என்னைப் பார்த்ததும் வந்த சந்தோஷத்தை, அதேவேகத்துல மறைக்கறீங்க. அப்போ சம்திங் சம்திங் தானே?” என்றவனை, பிரமிப்பு மாறாமல் பார்த்தாள்.

”என்னைப் பார்த்த சந்தோஷத்துல பேச்சு வரலையா?” என்றான் கிண்டலாக.

அவனது கிண்டல் எரிச்சல் மூட்டினாலும், பேச்சு வந்தால் தானே. “நீ… நீ…” என்றவளுக்கு அதற்கு மேல் பேச வார்த்தைகள் வரவில்லை.

“நீ…யா? ரொம்ப மரியாதைதான் உனக்கு. இப்போ ‘நீ’ கல்யாணத்துக்கு அப்புறம், ‘டா’வா?” என்று போலியாகப் பதறியவன், “எனக்கொன்னும் பிரச்சனை இல்ல. நம்ம ப்ரைவேட் டைம்க்குள்ள என்ன வேணாலும் சொல்லு. எங்க அம்மா எதிரில் மட்டும் கொஞ்சம் மரியாதையா பேசு” என்று வக்கனையாக நீட்டி முழக்கியவனைக் கண்டு கடுப்பேறியது அவளுக்கு.

“ஆஹ்ஹ்…!” என்று அடித்தொண்டையில் கத்துவதைப் போலச் செய்தவள், “நீங்க எங்க இங்கே வந்தீங்க?” என்றாள் எரிச்சலுடன்.
“உன்னைப் பார்க்கத்தான்னு” என்றவனை, “என்ன?” என்றாள் எரிச்சலுடன்.

“அப்படிச் சொல்வேன்னு நினைச்சியா? என் தங்கச்சியைப் பார்க்க வந்தேன்” என்றபடி கையிலிருந்த தொப்பியை, அவளது தலையில் மாட்டினான்.

வேகமாக அதைக் கழற்றியவள், “உங்க தங்கச்சி, உள்ளே இருக்காங்க. போய்ப் பாருங்க” என்றாள் முணுமுணுப்பாக.

“ஹேய்! உனக்கும் அழகாத்தான் இருக்கு. போட்டுக்க…” சொல்லிக் கொண்டே அவளையும் சேர்த்து இழுத்துக் கொண்டு ஊஞ்சலில் அமர்ந்தான்.

“தமிழ்! என்ன நீங்க இப்படிப் பண்றீங்க? வீட்ல அம்மா, அண்ணியெல்லாம் இருக்காங்க. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்று கோபத்துடன் அவனை முறைத்தாள்.

அவளுக்கு எதிர்மறையாக அவனது முகம் மலர்ந்து விகசிக்க, “தேங்க்யூ!” என்றான் சந்தோஷத்துடன்.

சந்தேகத்துடன், “எதுக்குத் தேங்க்ஸ்?” என்றாள்.

“நீ, என்னை லவ் பண்றேன்னு மறைமுகமா சொன்னியே அதுக்கு” என்றான்.

“உங்களுக்குப் பைத்தியம்தான் பிடிச்சிருக்கு”சொல்லிக் கொண்டே எழுந்தவளது கரத்தை, அழுந்தப் பற்றினான்.

“தமிழ்! கையை விடுங்க” என்றவள் கரத்தை அவனது பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள முயன்றாள்.

“அப்படி எதுவும் இல்லன்னு சொல்லப் போறியா தேவி!” உருக்கமாகக் கேட்டவனது முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

மீிண்டும் அவனருகில் அமர்ந்தவள், “உண்மையைச் சொல்லட்டுமா?” எனக் கேட்டாள்.

அவன் அமைதியாக அவளது மறுவார்த்தைக்காகக் காத்திருந்தான்.
கீழுதட்டை உள்ளாக மடித்தவள் ஒரு பெருமூச்சுடன், “எனக்குக் கல்யாணம் செய்துக்க இஷ்டமில்ல. வீணா, உங்க மனசுல கற்பனையை வளர்த்துக்காதீங்க” என்றாள் சோகமாக.

“ஓ!” என்றவனது முகத்தில், எந்தப் பாவமும் இல்லை.

மீண்டும் ஆழமூச்செடுத்தவள், டிராயிங் போர்டை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள். நான்கடி சென்றதும், எழுந்து சென்று அவளுடன் இணைந்து நடந்தான் தமிழ்ச் செல்வன்.

போர்ட்டிக்கோவை நெருங்கும் நேரம், “ஏதோ உண்மையைச் சொல்றேன்னு சொன்னியே, என்ன அது?” என்று எதுவுமே தெரியாததைப் போலக் கேட்டவனை உறுத்து விழித்தாள்.

அவனது உதடுகள் இளநகையை வெளிப்படுத்த, பட்பட்டென கையிலிருந்த டிராயிங் போர்டால் அவனது முதுகிலும், கையிலும் வலிக்காதவண்ணம் அடித்தாள்.

“ஏய் லூசு! யூனிஃபார்ம் போட்ட போலீஸ்காரன் மேலயே கை வைக்கிறியா?” – அதட்டலாகக் கேட்டான்.

“ம், கேஷுவல்ஸ்ல வந்தாலும், அடிப்பேன்” என்றவள், அவனை மேலும் ஒரு அடி அடித்துவிட்டு வீட்டிற்குள் ஓடினாள்.

அவன் பேசியதை நினைத்துச் சிரித்தபடி துள்ளிக் கொண்டு வீட்டிற்குள் ஓடிவந்தவள், எதிரில் வந்த தந்தையைக் கண்டதும் சட்டென அடங்கிப் போனாள். திருதிருவென விழித்த மகளை, காணாததைக் கண்ட அதிசயத்துடன் பார்த்தார் புருஷோத்தமன்.

“என்னம்மா! இப்படிக் கன்னுக்குட்டி மாதிரி துள்ளிகிட்டு வர்ற?” என்றார்.

“அதுப்பா… அண்ணியோட…” என ஆரம்பிக்கவும், “ஹலோ அங்கிள்!” என்று வாசலில் நின்று குரல் கொடுத்தான் தமிழ்.

அவனை அடையாளம் கண்டுகொண்டவர், “அடடே வாங்க!” என்று முன்சென்று வரவேற்க தேவி, சஹானாவின் அறைக்கு விரைந்தாள்.

மாமனார், மாமியாருடன் பேசிக்கொண்டிருந்த தமிழ்ச்செல்வனைப் பாசத்துடன் உபசரித்தாள் சஹானா.

“இப்பவாவது எங்க வீட்டுக்கு வரணும்னு தோணுச்சே உங்களுக்கு. ரொம்பச் சந்தோஷம்” என்றாள்.

“நான் போலீஸ்காரன்மா. இருபத்தி நாலு மணி நேரமும் ஆன் டியூட்டி” என்று சிரித்தான்.

“அதுக்காக, சொந்தமெல்லாம் வேணாமா?” என்றாள் சிரிப்புடன்.

“சொந்தமெல்லாம் வேணும்னு நினைக்கறதால தானே வந்திருக்கேன்” என்றவனது பார்வை தேவியைத் தேடியது.

அவளோ காதுகளையும், மனத்தையும் ஹாலில் வைத்துவிட்டு, அண்ணியின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு அறைக்குளேயே அமர்ந்திருந்தாள்.

“நீங்க பேசிட்டு இருங்கண்ணா! இன்னைக்கு நம்ம வீட்லதான் உங்களுக்கு லஞ்ச்” என்று எழுந்தாள் சஹானா.

“அதெல்லாம் வேணாம்மா! இன்னொரு நாள் பார்க்கலாம்” என்றவனை அன்பான உபசரிப்பாலும், பாசத்தாலும் அவ்வீட்டினர் கட்டிப் போட்டனர்.
அரைமணி நேரம் கழித்து தேவியின் அறைக்குச் சென்றவள், அவளை ஹாலில் வந்து அமரும்படிச் சொல்லிவிட்டுச் சமையலறைக்குச் சென்றாள்.

மதிய உணவை முடித்துக்கொண்டு அவன் கிளம்பும்போது, “நீங்க எல்லோரும் ஒரு நாளைக்கு நம்ம வீட்டுக்கு வரணும். சஹி! மாப்பிள்ளையையும் கூட்டிட்டு வரணும்” என்றான்.

“கண்டிப்பாண்ணா!” என்றாள்.

மரியாதைக்காக போர்ட்டிக்கோ வரை வந்தவர்கள், அவன் சஹானாவுடன் ஏதேனும் பேசக்கூடும் என்று நாசுக்காக விலகிக் கொண்டனர்.
மெயின் கேட்டை நோக்கி நடந்துகொண்டே, “ஓக்கேம்மா! நான் கிளம்பறேன்” என்றான்.

“ம்” என்று தலையசைத்தவள், “நான் நல்லாயிருக்கேன். என்னைப் பத்திக் கவலைப்பட வேணாம்னு அண்ணாகிட்ட சொல்லிடுங்கண்ணா!” என்றாள்.
வியப்புடன், “சஹிம்மா!” என்றான் தமிழ்.

“நான், குழந்தை இல்லண்ணா! இன்னைக்குக் காலைல அண்ணன் போன் செய்தாங்க. இப்போ, நீங்க வந்திருக்கீங்க. எனக்குப் புரியாதா?” என்றாள் மென்நகையுடன்.

“நீ, எங்க டிப்பார்ட்மெண்ட்ல சேர்ந்துடும்மா! உன்னை மாதிரி அறிவாளிங்க எங்களுக்குத் தேவை” என்றவனைப் பார்த்துச் சிரித்தாள்.

“ஓகே சஹி! டேக் கேர்” என்றவன் காரில் ஏற முற்பட, அவனது கரத்தைப் பற்றினாள்.

திரும்பிப் பார்த்தவனிடம், “தேவிக்குப் படிப்பு முடிய இன்னும் ரெண்டு மாசம் இருக்கு. அதுவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கண்ணா! முறைப்படி அத்தை, மாமாகிட்ட பேசுங்க. அவருக்குத் தெரிஞ்சா… எனக்குச் சங்கடமா இருக்கும். புரிஞ்சிக்குவீங்கன்னு நினைக்கிறேன்” என்றாள்.
நெற்றியைத் தடவிக் கொண்டவன், “சாரி சஹி! உன்னோட ஆங்கில்ல நான் யோசிக்கவேயில்ல” என்று உண்மையாகவே வருத்தம் தெரிவித்தான்.

“பரவாயில்லண்ணா! புரிஞ்சிக்கிட்டதுக்கு தேங்க்ஸ்” என்றவளிடம் விடைபெற்றுக் கிளம்பியவனை, புன்னகையுடன் வழியனுப்பி வைத்தாள்.

காதல் வளரும்...
 
  • Like
Reactions: lakshmi and saru