என் தேசம்

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,652
1,596
113
என் தேசம்


பரந்து விரிந்த இந்த பாரத பூமிக்கென்று ஒரு அடையாளம் உண்டு. அது மாதசார்பற்ற நாடு என்கிற அந்த அடையாளம்.


எனது சிறு வயதிலிருந்து பாடப்புத்தகங்களில் ஆகட்டும், நான் பார்த்து பழகிய மக்கள் ஆகட்டும் இனம், மதம் கலாச்சாரம் தாண்டி அன்பை மட்டுமே போதித்து அன்பை மட்டுமே பகிர்ந்து கொண்டு வாழ்ந்த பூமி இது.


எனது பள்ளித் தோழி ஷமீம் பானுவா இல்லை எஸ்தர் ராணியா என்பதல்ல அங்கு பேச்சு. அவர்கள் எனது தோழிகள். நான் அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது அங்கு நடக்கும் அவர்களின் அன்றாட தொழுகையின் போது ஒதுங்கி நின்று அவர்களின் பூஜைக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நிற்ப்போம். அவர்களும் அப்படியே.


பச்சயம்மாவுக்கு உடல் நலம் கெட்டுப் போனால் அவர்களது பக்கத்து வீட்டு தோழி மேரியம்மா கஷாயம் போட்டு வந்து கொடுப்பார். மேரியம்மா வேளாங்கண்ணி செல்லும் போது பச்சையம்மா தன்னாலான காணிக்கையை மாதாவுக்கு செலுத்தும்படி கொடுத்து விடுவார். இது நமது அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் பார்க்க கூடியது தான்.


விஷக்கடி என்றால் நம் மக்கள் ஓடிச் செல்வது மசூதி வாசலுக்கு தான். மசூதியில் இருப்பவர் மந்திரித்து கொடுக்க அதை பிள்ளைக்கு கொடுத்து விட்டு அவருக்கு நன்றி சொல்லும் மக்கள் ஊர் பக்கம் அதிகம்.


பாரதம் என்பது ஒரு மதத்தினருக்கு மட்டும் சொந்தமான நாடல்ல. இங்கு இந்து, முஸ்லிம், கிருத்துவர்கள் என்று அனைவரும் சேர்ந்தது தான் இந்நாடு. சகோதரத்துவத்துடன் வாழ்ந்த இந்நாட்டில் நம் மனதில் வேறுபாட்டை ஏற்றிக் கொள்ளாமல் நான் பார்த்த அதே தேசத்தை என் வருங்கால பிள்ளைகளும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.


எனது தோழியுடன் விடுமுறை நாட்களில் பைபிள் வகுப்பிற்கு சென்று வந்திருக்கிறேன். அதை அவளது பெற்றோரும் தடுக்கவில்லை எனது பெற்றோரும் தடுத்ததில்லை. வெளிநாட்டிலிருந்து தன்னுடனே காரை கப்பலில் எடுத்து வரும் ஒளி முகமது ஐயா எனது தாத்தா வீட்டிற்கு வரும் முன்பே சொல்லி அனுப்பி விடுவார். இன்று நான் வரும் போது இட்லியும் மிளகாய் பொடியும் செய்து வையுங்கள் என்று.


அவர்கள் மனதில் பேதம் என்றும் இருந்ததில்லை. பிள்ளைகளான எங்களிடம் அவள் வேறு மதம் நான் வேறு மதம் என்றெண்ணி பார்த்து பழகியதில்லை. இன்றும் இந்த பேதம் கிராமங்களிலோ, நாம் பழகும் மக்களிடமோ இல்லை. அரசியல்வாதிகளும் ஊடகங்களும், இணையத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள விரும்புவர்கள் மட்டுமே விஷ விதைகளை பரப்புகின்றனர்.


நான் கண்ட அந்த தேசத்தை என் வருங்கால தலைமுறையினரும் காண வேண்டும் என்பது அவா..


இது முற்றிலும் என் கருத்து மட்டுமே..இங்கு நான் எவரையும் பழிக்க்கவுமில்லை குறை காணவுமில்லை....
 
Last edited: