உனைக் கண்டு உயிர்த்தேன் - கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
17​

ஒற்றைப்பார்வை, என்

இதழ் தெறிக்கும் முத்தம், காற்றென உரசும்

உன் கைகளின் ஸ்பரிசம்...

மிச்சம் வைத்திருக்கிறாயா?

இன்னும் என்னைக்

கொல்வதற்கான வித்தைகள்!பூர்ணிமா, அலுவலகத்திற்குள் நுழைந்தபோது அனைவரும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்ய, புரியாமல் அவர்களைப் பார்த்தாள். அனைவருக்கும் நடுநாயகமாக கையில் பூங்கொத்துடன் நின்றிருந்த ரிஷி, அவளை நோக்கி வந்தான்.

“வாழ்த்துக்கள் மேடம்!” என்று அவன் அளித்த பூங்கொத்தை, “தேங்க்ஸ்!” என்று புன்னகையுடன் வாங்கிக்கொண்டாள்.

“ஃப்ரெண்ட்ஸ்! இத்தோடு பார்ட்டி முடியல. ஈவ்னிங், நம்ம வர்க்கலை ரிசார்ட்ல சின்னதா டீ பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கோம். எல்லோரும் அவசியம் கலந்துக்கணும். உங்க சந்தோஷத்தைப் பகிர்ந்துக்கோங்க. பார்ட்டி முடிந்ததும் எல்லோரும் வீடு போய்ச் சேர, வேன் ஏற்பாடு செய்திருக்கு!” என்று சொல்ல, அனைவரும் ஆரவாரத்துடன் தங்கள் வேலையைக் கவனிக்கச் சென்றனர்.

மாலை நான்கு மணி. வர்க்கலை பீச் ரிசாட்.

மாலைச் சிற்றுண்டி, டீயுடன் ஒரு நினைவுப் பரிசும் அனைவருக்கும் வழங்கப்பட, இரண்டு மணி நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கிளம்பத்தொடங்கினர்.

பூர்ணிமா, ரிஷியை நோக்கி வந்தாள். தன்னை நோக்கி அவள் வருவதைக் கவனித்தவன், பேசிக்கொண்டிருந்தவர்களிடம் ஏதோ சொல்லிவிட்டு, அவளை எதிர்கொண்டு சென்றான்.

“ரொம்பத் தேங்க்ஸ் சார்! நேரமாகுது, நான் கிளம்பறேன்.”

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பூர்ணா! நீங்க போக வேண்டிய இடத்துக்கு, யாரும் போற ஆள் இல்ல. நான்தான் உங்களை டிராப் பண்ணணும். அதோடு, உங்ககிட்ட முக்கியமாகப் பேசணும். ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்… வந்திடுறேன்!”

அவளுக்குத் தயக்கமாக இருந்தபோதும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “சரி” என்றாள்.

“தேங்க்யூ! ஆஃபிஸ் ரூம்ல வெயிட் பண்ணுங்க. வந்திடறேன்” என்றவன், அங்கிருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றான்.

ரிஷி சென்றதும் அந்த அறையை நோட்டமிட்டாள். வெளியிலிருந்து பார்க்க அறைபோல தெரிந்தாலும், உள்ளே வந்தபின் தான் தெரிந்தது, அது மூன்று அறைகளைக் கொண்ட சூட் என்று . முன் ஹாலில் சோஃபாவில் அமர்ந்தவளுக்கோ, சங்கடமாக இருந்தது.

பூர்ணிமாவைத் தனது சூட்டில் அமரவைத்துவிட்டு மற்றவர்களைக் கிளப்பி அனுப்பியவன், “விஷால்! நான் பூர்ணிமாவிடம் இன்னைக்குப் பேசப் போறேன். அதனால், கொஞ்ச நேரம்...” என்று இழுத்தான்.

உள்ளுக்குள் தயக்கமிருந்த போதும், “ஆல் த பெஸ்ட் மேன்!” என்று அவன் தோளில் தட்டிவிட்டு, சிரிப்புடன் அங்கிருந்து அகன்றான் விஷால்.

லேசான வெட்கச் சிரிப்புடன் தலையைக் கோதிக் கொண்டவன், தனக்குள் எழுந்த படபடப்பைச் சற்றுச் சிரமத்துடன் கட்டுக்குள் கொண்டு வந்தான். தூரத்திலிருந்து அவனைக் கவனித்துக் கொண்டிருந்த விஷாலுக்கோ, அவனது செய்கைகள் சிரிப்பை வரவழைத்தன.

அறைக் கதவை இரண்டுமுறை தட்டிவிட்டு உள்ளே செல்ல, புரட்டிக் கொண்டிருந்த புத்தகத்தை மூடிவிட்டு பூர்ணிமா எழுந்து நின்றாள்.

“உட்கார் பூர்ணா!” என்று அவன் சொன்னாலும், இருவரும் நேராகப் பார்த்துக் கொள்ளவில்லை.

எதிர் சோஃபாவில் அமர்ந்தவன், விரல்களால் கைப்பிடியில் தாளம் போட்டுத் தனது பதட்டத்தைத் தணித்துக் கொண்டிருக்க, பூர்ணிமாவோ கைவிரல்களைச் சொடக்கெடுப்பதும், வளையல்களுடன் விளையாடுவதுமாக இருந்தாள். எழுந்த ரிஷி, அங்கிருந்த சிடி பிளேயரில் பாரதியார் பாடலை ஒலிக்கவிட்டான்.

மெல்லிய குரலில் ஒலித்த, “பாயுமொளி நீ யெனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு” என்ற பாடல், அந்த இடத்தையே ரம்யமாக்கியது. இருவருமே, பேசுவதற்கெனச் சிறிதும் முயற்சிக்கவில்லை; பேசவும் முடியவில்லை!

பாடலின் ஒவ்வொரு வரியும், இருவருக்குள்ளும் ஆயிரமாயிரம் செய்திகளைச் சொன்னது. அவர்களின் உணர்வுகளை விவரிக்க, வார்த்தைகள் தேவையில்லாமல் போனது. ஒருவருக்கொருவர் நேரடியாகப் பார்த்துக் கொள்ளாமலேயே, அவர்களின் மனங்கள் சங்கமிப்பதை உணரமுடிந்தது.

தன் மனம் போகும் போக்கை நினைத்து, அச்சமாக இருந்தது பூர்ணிமாவிற்கு. கட்டுக்குள் வைத்திருந்த உணர்வுகளெல்லாம், கட்டவிழ்த்துக் கொண்டு குதியாட்டம் போட்டன.

காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு...!” என்ற வரியைக் கேட்டவுடன், அவளால் அங்கே உட்காரவே முடியவில்லை. அங்கு இருவர் இருந்தபோதும், பேச்சே எழாமல் இருந்தது. இருவருக்குமிடையில் நிலவிய உணர்வுகளின் போராட்டத்தில், ‘எங்கே தான் தொலைந்து விடுவோமோ!’ என்ற பயம், அவளை ஆட்கொண்டது.

அந்த இடத்தில் நிலவிய இறுக்கமே தன்னைக் கொன்றுவிடுமோ என்ற அச்சத்தில், சட்டென்று எழுந்து வாசற்கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தவள், அப்படியே உறைந்து போய் நின்றாள்.

சிடியில் பாடலை ஒலிக்கவிட்ட ரிஷி, ஜன்னலருகில் சாய்ந்து நின்றான். பேச்சை ஆரம்பிக்க முடியாமல், சிலநொடிகள் அவன் தயக்கத்துடன் திணறினாலும், தன்னைச் சீராக்கிக்கொண்டு பேச விழைந்தபோது, பூர்ணிமாவை நிமிர்ந்து பார்த்தான்.

அப்போது, அவள்தான் அதிகம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தாள். ‘எங்கே தன் மனம் வெளிப்பட்டுவிடுமோ’ என்ற அச்சத்தில் இருந்தாள். பார்வையில் தவிப்புடனும், கைகளில் நடுக்கத்துடனும், தன்னையும் அறியாமல் தன்னையே வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் பூர்ணிமா.

சிலநொடிகள் அவளது அவஸ்தையைப் பார்த்துக் கொண்டிருந்தவன், இனிமேலும் அவளால் தாங்கமுடியாது என்று நினைத்து, அவளருகில் செல்ல யத்தனித்தான். அந்த நேரத்தில், கண்களை மூடி தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தவளைக் கண்டு, சற்றே திகைத்துப் போனான்.

ஆனால், அடுத்த நொடியிலேயே அவள் சிலையென நின்ற தோற்றத்தைக் கண்டு வியந்தான்.

சுட்டும்விழிச் சுடர்தான் - கண்ணம்மா

சூரிய சந்திரரோ
?’

அவள் கையிலிருந்த கைப்பை நழுவிக் கீழே விழுந்தது. கண்கள் கலங்க, இமைகள் துடித்தன.

முதன்முதலாய் அவளது காதல் மலர்ந்து மணம் பரப்பிய வாசம், அவளில் கலந்தது. கால்கள் தள்ளாடின. நிற்கச் சக்தியற்றவள் போல் அருகிலிருந்த சுவற்றைப் பிடிக்க முனைய, சட்டெனத் தன்னோடு தாங்கிப் பிடித்துக்கொண்டான், அவளுக்குப் பின்னே வந்து நின்றவன்.

“பூர்ணா!” என்று அவனது குரல் பதட்டத்துடன் ஒலிக்க, “நந்தா...” என்று அவளது உதடுகள் காதலுடன் உச்சரித்த வார்த்தை, அவனது செவிகளை எட்டவில்லை.

அவளைத் தன்புறமாகத் திருப்பியவன், முகத்தை இரு கரங்களிலும் ஏந்தினான். அவளது கண்களை நேருக்கு நேராகக் கண்டவன், அதில் தெரிந்த காதலில் கரைந்தே போனான்.

“பூ.ர்.ணா…!” ஆத்மார்த்தமான அவனது அழைப்பில், அவள் உலகம் மறந்து போனாள். தன்நிலை மறந்து போனாள். அவளது கண்களுக்கு, அவளுடைய நந்தா மட்டுமே தெரிந்தான். தங்கள் நேசத்துக்குச் சாட்சியாக இருந்த அந்தப் பாடலைத் தவிர, வேறெந்த சப்தமும் அவளது செவிகளில் விழவில்லை.

சாத்திரம் பேசுகிறாய் - கண்ணம்மா

சாத்திர மேதுக்கடீ?

ஆத்திரம் கொண்டவர்க்கே - கண்ணம்மா

சாத்திர முண்டோடீ
?’

காதலின் எல்லை கரைதாண்ட ஆரம்பிக்க, அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் அவன்.

மூத்தவர் சம்மதியில் - வதுவை

முறைகள் பின்புசெய்வோம்;

காத்திருப்பேனோடீ? - இது பார்

கன்னத்து முத்தமொன்று!’


கடைசி வரிகளுக்கேற்ப, அவளது கன்னத்தில் தன் இதழ் பதித்தான்.

அந்த நொடியில், இருவருக்கும் உலகமே மறந்து போனது. உயிரோடும், உணர்வோடும் கலந்து மெய்மறந்து நின்றனர். கன்னத்தில் பதிந்த அவனது உதடுகள், காதுமடலை உரசிவிட்டுக் கழுத்தில் பதிய, கூச்சத்தில் சிலிர்த்த அவளுக்கோ, உடல் முழுவதும் மின்சாரம் தாக்கியது போலிருந்தது.

படாரெனக் காற்றில் அறைந்த கண்ணாடி ஜன்னலின் சப்தத்தில் சகலமும் அதிர, தங்கள் நிலையிலிருந்து இருவரும் வேகமாக விலகினர். பூர்ணிமாவின் நிலையோ, சொல்லவே தேவையில்லை. அப்படியே, ஸ்தம்பித்து நின்றிருந்தாள்.

ஒருமாதிரியான கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டு, சிரிப்புடன் தலையைத் தடவியபடி ரிஷி ஜன்னல் பக்கமாகச் செல்ல, தன்னைச் சமாளித்துக்கொண்ட பூர்ணிமா சரேலென அறையிலிருந்து வெளியேறினாள்.

“பூர்ணா!” என்று அழைத்தபடி அவளைப் பின்தொடர்ந்தவன், கீழேயிருந்த அவள் கைப்பையை எடுத்துக்கொண்டு, வெளியே வந்தான்.

அவனது அழைப்பைக் காதில் வாங்காமல் அவள் செல்வதைக் கண்டவன், விஷாலை மொபைலில் அழைத்தான்.

“சொல்லுடா...” என்றான் விஷால்.

“எங்கே இருக்க?”

“காட்டேஜ் கிட்டதான். என்ன விஷயம்?” எனக் கேட்டான்.

“சீக்கிரமா சூட்கிட்ட வா. பூர்ணிமா கிளம்பிட்டா. கொஞ்சம் நெர்வஸா இருக்கா. ஹாண்ட்பேகை வேற இங்கேயே விட்டுட்டுப் போய்ட்டா. நான் இப்போ நேராக போனால், அவளுக்குச் சங்கடமா இருக்கும். நீ அவளை ட்ராப் பண்ணிடு!” என்றதும், சில நொடிகள் மௌனம் காத்த விஷால், “வரேன்” என அழுத்தமானக் குரலில் சொல்லிவிட்டுப் போனை வைத்தான்.

வேகமாக வந்தவன் ரிஷியின் கையிலிருந்த கைப்பையை வாங்கிக்கொண்டு, பூர்ணிமாவைத் தேடிச் சென்றான்.
 
  • Wow
Reactions: Rithi

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
18​

அளவிட்டுச் சொல்ல முடியாத

உன் காதல் நிரம்பியிருக்கிறது

என் ஒவ்வொரு யுகங்களிலும்.


பூர்ணிமாவின் இதயம் வேதனையில் விம்மியது. நடந்த அத்தனையும் கனவாக இருக்கக் கூடாதா? என்று அவளது மனம் துடித்தது. ஆனால், நடந்ததை எப்படி மாற்றமுடியும்? தான் செய்திருக்கும் இமாலயத் தவறை, அவளால் ஜீரணிக்கமுடியவில்லை. மனத்திற்குள் குழிதோண்டிப் புதைத்து வைத்திருந்த காதல், மீண்டும் இப்படி உயிர்த்தெழுமென்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.

கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தவளை உரசிக்கொண்டு விஷாலின் கார் வந்து நின்றது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தவள், விஷாலைக் கண்டதும் மூக்கு விடைக்க, கண்ணீரைக் கொட்டத் தயாராக இருந்த கண்களுடன், துடிதுடித்த இதழ்களுமாக அவனை முறைத்தாள்.

காரிலிருந்து இறங்கியவன், “வந்து வண்டியில் ஏறு” என்றான்.

“முடியாது...” என்று திட்டவட்டமாகக் கூறியவளை எரிச்சலுடன் பார்த்தான்.

“இங்கே பார்! வீணா சீன் கிரியேட் பண்ணாதே. பேசாமல் வந்து வண்டியில் ஏறு” என்றான் கட்டளையிடும் குரலில்.

“முடியாதுன்னு சொன்னா என்ன செய்வீங்க?” என்றாள் வீம்பாக.

அதுவரை தீவிர பாவனையில் பேசிக்கொண்டிருந்தவன் அவளது கடைசி வாக்கியத்தைக் கேட்டதும், தன்னையும் அறியாமல் சிரித்தான். அவனது சிரிப்பைக் கண்டவளுக்குக் கோபத்தில் முகம் சிவந்தது.

“விஷாலண்ணா!” என்று கோபத்துடன் அழைத்தாள்.

அவளை ஆழ்ந்து நோக்கியபடி, “தேங்க்ஸ் பூர்ணிமா!” என்றவனது குரல் தழுதழுத்தது.

சட்டென இருவருக்கும் இடையில் கனத்த மௌனம் நிலவியது.

“ப்ளீஸ் பூர்ணிமா! வந்து வண்டியில் ஏறு. எல்லோரும் நம்மையே பார்க்கறாங்க” என்று சொல்லச் சுற்றி முற்றிப் பார்த்துவிட்டு காரின் முன்கதவை திறந்து அமர்ந்தாள்.

“ரிஷி, உன்னிடம் பேசினானா?” என்று மெதுவாகக் கேட்டான்.

“ஏன்? உங்ககிட்ட சொல்லிட்டுத் தானே செய்திருப்பார். அவரையே கேட்க வேண்டியது தானே” என்றாள்.

“அதுக்கு எதுக்கு இந்த ரியாக்ஷன்? அவனோட மனசுல இருக்கறது ஏற்கெனவே தெரிந்தது தானே.”

“உளறாதீங்க. நடக்கும் கதையைப் பேசுங்க. நான் இங்கே வந்ததே தப்பு. அதுவும், இந்த வேலைக்கு வந்திருக்கவே கூடாது. மறந்த விஷயம், மறந்ததாகவே இருந்திருக்கும்” என்று சொல்லிக்கொண்டே போனவளை,அவன் இடைமறித்தான்.

“சும்மா, மறந்துட்டேன்னு சொல்லாதே. நீ எதையும் மறக்கல. அது எனக்கும் தெரியும்; உனக்கும் தெரியும். உன்னையே நீ ஏமாத்திக்காதே. ரெண்டு வருஷம் உங்களோட அன்யோன்யத்தை நேரில் பார்த்தவன் நான். அவனுக்காக, நீ எப்படியெல்லாம் எத்தனை அவஸ்தையைப் பொறுத்துப் போயிருக்கேன்னு எனக்கு நல்லாவே தெரியும்.

அந்த நாளையெல்லாம் மறந்துட்டேன்னு சொல்றியா? அவன் உன்னையே சுத்திச் சுத்தி வந்ததை மறந்துட்டேன்னு சொல்றியா? இத்தனைக்கும் மேலே அவன், உன்னைத் தொட்டுத் தாலி கட்டியதை மறந்துட்டேன்னு சொல்றியா? இதையெல்லாம் நான் நம்பணுமா?” என்று வரிசையாக கேட்க, அவள் உடைந்து போய் அழத் துவங்கினாள்.

“இல்ல இல்ல இல்ல… நான் எதையுமே மறக்கல. என் உயிரோட கலந்தவரை என்னால எப்படி மறக்க முடியும்? ஆனா, மனைவின்னு தெரியாம என்னிடமே காதலைச் சொன்னாரே, அந்தத் துர்பாக்கிய நிலைமை எந்தப் பொண்ணுக்கும் வரக்கூடாது. என் நந்தாவை நான் திரும்ப முழுமனுஷனா பார்ப்பேன்னு கனவில்கூட நினைக்கல. நிச்சயம் அதுக்கு முழுக் காரணம் நீங்களாகத் தான் இருப்பீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.

அவரைப் பார்த்த போது பாதி உயிரா நடமாடிக்கொண்டிருந்த என்னை, முழு உயிராக உயிர்த்தெழ வச்சீங்க. அவரைச் சேர்த்துப் பிடிச்சிக் கதறி அழணும் போலிருந்தது. ஆனா, நீ யாருன்னு அவர் கேட்டிருந்தா என்ன செய்திருப்பேன்? அதோடு, எனக்கு இந்தச் சந்தோஷம் நிரந்தரம் இல்லையே.

வேலைக்கு வரும்போது கூட அப்பாவோட வற்புறுத்தலுக்காகப் போகிறோம்னு என்னை நானே பொய்ச் சமாதானம் செய்துகிட்டு தான் வந்தேன். ஆனா, அவரைப் பக்கத்திலிருந்து பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிட மனமில்லாமல் வந்தேன்னு சொல்லும் தைரியம் எனக்கு இல்லாம போச்சு.

உங்களை முதன்முதலில் சூப்பர் மார்க்கெட்டில் பார்த்தபோது, எனக்குள் ஒரு சின்ன சந்தோஷம் வந்தது தான். ஆனா, நீங்க எப்படியும் என்னைச் சமாதானப்படுத்த பார்ப்பீங்கன்னு எனக்குத் தெரியும். அதனால் தான் கடுமையா பேசி விலகிப் போனேன். ஆனா, விதி திரும்ப என்னை அவரெதிரில் கொண்டுவந்து சேர்த்துடுச்சி.

நியாயமா, உங்களுக்கு நன்றி சொல்லியிருக்கணும். ஆனா, அதைச் சொல்லக்கூடிய நிலைல நான் இல்ல. இன்னொரு பிரிவை ஏத்துக்கக் கூடிய அளவுக்கு என் உடம்பிலும், மனசுலயும் சக்தி இல்ல. அந்தப் பிரிவு என்னை முழுமையா சாய்ச்சிடும்” என்று கதறி அழுதவளைத் தேற்றும் வழி தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களும் கலங்கின.

அவன் அன்று கண்ட பூர்ணிமா, ஒன்றும் அறியாத சிறு பெண். ஆனால், சில காலமாக அவன் அறிந்த பூர்ணிமா சகலமும் அறிந்த, சாதூரியமான பெண். அவளது வாழ்வில் காலம் செய்த கோலம் கொஞ்சம் நஞ்சமல்ல. அவளது இத்தனைக் கண்ணீருக்கும் காரணமானவர்களை நினைத்தபோது அவனுக்குக் கோபத்தில் உடலே நடுங்கியது.

அத்தனை உரிமையும் இருந்தும், இன்னொரு பிரிவைத் தாங்கமுடியாது என்று கதறுபவளைப் பார்த்து அவனால் விதியை நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது.
 
  • Wow
Reactions: Rithi

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
19கனவுகள் பற்றி வளர்கிறது

நம் காதல்...

ஸ்ப்ரிசங்களால் உயிர்த்து விடு

என் ஒவ்வொரு நாளையும்.பூர்ணிமா, ஆலப்புழா வந்து ஐந்தாவது நாள் காலை.

குளித்துவிட்டு யோசனையுடனேயே தன் அறையிலிருந்து வெளியே வந்தவளை, “ஹாய் பூரி! குட் மார்னிங்” என்றபடி கடந்து போன விஷாலிடம், “குட் மார்னிங்” என்றபடி அவன் பின்னோடே நடந்தாள்.

“என்ன பூரி, என் பின்னாலேயே வர என்ன விஷயம்..?”

“எனக்கு ஒரு விஷயம் தெரியணும்” என்றாள்.

சட்டென நின்றவன், “என்ன?” என்றான்.

“ரெண்டு நாளா ரத்திரியில் எனக்கு ஒரு கெட்டக் கனவு. யாரோ கத்துறது போல. ஆனா, நேத்துத் தான் அது கனவு இல்லைன்னு தெரிந்தது” என்றபடி அவனது முகத்தைப் பார்த்தாள்.

“ஓஹ்...” என்றவன் பதில் சொல்லாமல் நின்றான்.

“எனக்கு ரூமுக்குள்ள இருக்கவே பயமாயிருக்கு” என்றாள் கலவரமான முகத்துடன்.

“ஹே! இதுல பயப்பட ஒண்ணுமில்லம்மா! ம்ம், நான் அவசர வேலையா வெளியே போறேன். வந்ததும் உனக்கு விளக்கமா சொல்றேன். ஆனா, பெரியம்மாகிட்ட இதைப் பத்தி எதுவும் சொல்லாதே; கேட்காதே” எனச் சொல்லிவிட்டுச் சென்றவன் திரும்பி வந்து, “அப்புறம் பின்னால இருக்கற வீட்டுக்குப் போகாதே” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தான்.

அவன் பான்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுக்கும்போது, சாவிக்கொத்து ஒன்று கார்பெட்டின் மீது விழுந்தது.

ஓடிச்சென்று எடுத்தவளுக்கு அது அவனது பைக்கின் சாவி இல்லை என்று புரிய, ‘இது என்ன சாவி? ஒருவேளை, பின் வீட்டுச் சாவியாக இருக்குமோ? அப்படி என்ன ரகசியம் அங்கே இருக்கு? என்னை ஏன் அங்கே போக வேண்டாம்னு சொன்னாங்க?’ யோசிக்க யோசிக்க அவளால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை.

‘செய்யாதே என்று சொன்னால்; செய்ய வேண்டும்’ என்ற எண்ணம் தோன்றுமே… இப்போது பூர்ணிமாவிற்கும் அது தோன்றியது.

காலை உணவு சாப்பிடும் போதும், லஷ்மி அத்தைத் தன்னிடம் சரியாகப் பேசாதது அவளுக்கு உறுத்தியது. அவரிடம் கேட்கவேண்டும் என்று நினைத்தாலும், சிரமத்துடன் அடக்கிக்கொண்டாள். வேலையாட்களிடம் கேட்டு வேவு பார்க்கும் பழக்கமும் இல்லாததால், என்ன செய்வது என்று ம் புரியவில்லை.

மதிய உணவுக்கு லஷ்மி அம்மா வரவில்லை. ‘அழைத்து வருகிறேன்’ என்றவளிடம், ‘அம்மா, தொல்லை செய்ய வேண்டாம்’ என்று சொல்லிவிட்டதாக தனக்குத் தெரிந்த அறைகுறை தமிழில் பணியாள் சொல்ல, வேறு வழியில்லாமல் உணவைக் கொறித்தாள்.

விஷால் வரும்வரை நேரத்தை எப்படிக் கடத்துவதென்று தெரியவில்லை. எத்தனை நாளைக்குத் தான் தனது அறையைச் சுத்தம் செய்து, மாற்றி அடுக்குவது! வீட்டின் ஒவ்வொரு இடத்தையும், தூணையும் நின்று அணுஅணுவாக ரசித்தபோதும் மனம் அதில் லயிக்கவில்லை.

தன் அறையிலிருந்து ஜன்னல் வழியாகப் பின் வீட்டைப் பார்த்தாள்.எந்த அரவமும் இல்லாமல், வீடே அமைதியாக இருந்தது. அறையிலிருந்து வெளியே வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, வீட்டின் பின் வாசற்கதவை ஓசையில்லாமல் நிதானமாகத் திறந்தவள், திரும்ப மூடிவிட்டு பின்வீட்டின் பக்கவாட்டிலிருந்த ஜன்னலருகில் சென்றாள்.

ஜன்னலைத் திறக்க முயன்றும் முடியவில்லை. சிறிதுநேரம் முயன்றும் முடியாமல் போக கதவருகில் வந்தாள். விஷால் விட்டுச்சென்ற சாவியால் திறக்க, பூட்டும் திறந்து கொண்டது. திரும்பி வீட்டைப் பார்த்தவள் தாழ்ப்பாளைத் திறக்கும்போது உதறலாக இருந்தது.

பெரிய அறை. விடிவிளக்கு எரிந்துகொண்டிருந்த போதும், அந்த அறைக்குப் போதிய வெளிச்சத்தைக் கொடுக்காமல் சற்று மங்கலாகவே இருந்தது. இருட்டு கண்ணுக்குப் பழக சிறிதுநேரம் பிடித்தது. அறையின் நடுவிலிருந்த பெரிய கட்டிலை நெருங்கினாள். காலடியில் ஏதோ தட்டுப்பட, அது இரும்புச் சங்கிலி என்று புரிந்தது.

குனிந்து சங்கிலியை எடுத்தவள் தன் பின்புறம் யாரோ வருவதுபோல் சப்தம் கேட்கவும், அவள் திரும்புவதற்குள் அவள் மீது எதுவோ வேகமாகப் பாய்ந்தது.

தடுமாறியவள் கட்டிலின் விளிம்பில் இடித்துக் கொள்ள, “அம்மா...” என்று வலியில் அலறியபடி திரும்பினாள்.

முகத்துடன் முகம் உரசும் நிலையில் கோபத்துடன் ஜொலித்த இரு விழிகளுடன் அத்தனை அருகில் தெரிந்த ஆணின் முகத்தைக் கண்டதும், சப்த நாடியும் ஒடுங்கியது அவளுக்கு. அவளை முழுவதுமாக ஆராய்ந்த அவனது விழிகள் அவள் நெற்றி காயத்திலிருந்து வழிந்த ரத்தத்தைக் கண்டதும் இளகியது.

“ஐயோ! ரத்தம்…” என எதுவும் புரிபடாமல் சுற்றிச் சுற்றி பார்த்தவன், சட்டென குனிந்து தன் குர்தாவின் முனையைப் பிடித்து ரத்தத்தை துடைக்க போக, பூர்ணிமா பயத்துடன் அலறிக்கொண்டே மெத்தையில் கைகளை ஊன்றி பின்னால் நகர்ந்தாள்.

திடீரென அவள் அலறியதில் கலவரமானவன், தானும் சேர்ந்து கத்திக்கொண்டே இரண்டடி பின்னால் விலகிவந்தான்.

இருவரின் அலறல் சத்தமும், வீட்டில் முடங்கிக் கிடந்த லஷ்மி அம்மாவை திடுக்கிட வைத்தது.

வேலையாட்கள் மூவரும் என்னவோ ஏதோவென பயத்துடன் பின்பக்கமாகப் பார்த்துக்கொண்டு நின்றிருக்க அறையிலிருந்து வெளியே வந்த லஷ்மி அம்மா..., “காத்யாயணி பூர்ணிமா எங்கே?” என்று பதட்டத்துடன் கேட்டார்.

“என்ன பெரியம்மா! ஏன் எல்லோரும் இப்படித் திகிலோடு நிக்கிறீங்க?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான்.

“விஷால்! பூர்ணிமா பின் வீட்டுக்குப் போய்ட்டா போல...” என்று பரபரப்புடன் சொல்லும் போதே, விஷால் அந்த வீட்டை நோக்கி ஓடினான்.

வீட்டை நெருங்கும் போதே, “ஏய்! பயப்படாதே... எனக்குக் கோபம் வந்தா என்ன பண்ணுவேன்னு தெரியாது” என்று கத்திக் கொண்டிருப்பதும், பூர்ணிமா பயத்துடன் அழுவதும் காதில் விழுந்தது.

விஷால் வீட்டினுள் நுழையும்போது பூர்ணிமா மழையில் நனைந்த கோழிக்குஞ்சாக நடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவள் விழிகள் கண்ணீரில் நனைந்திருந்தது.

“ரிஷி!” என்று விஷாலின் குரல் கேட்க, அவளை மிரட்டிக் கொண்டிருந்தவன் திரும்பிப் பார்த்தான்.

நடுங்கிக்கொண்டிருந்த பூர்ணிமா, “விஷால் அண்ணா!” என்று ஓடிச்சென்று அவன் முதுகுக்குப் பின்னால் மறைந்து நின்று கண்களில் பயத்துடன் அவனது தோளுக்கு மேலாகப் பார்த்தாள்.

நடுக்கத்துடன் விஷாலின் கையைப் பற்றினாள்.

“பயப்படாதே! அவன் ஒண்ணும் செய்யமாட்டான்” என்று அவளுக்குத் தைரியம் சொல்லிக்கொண்டிருக்க, இருவரின் கையையும் மாறி மாறிப் பார்த்தான்.

“விஷால்! யார் இது? இங்கே வரச்சொல்லு...” என்று மிரட்டலாகச் சொன்னான்.

“பூர்ணிமா போ! அவன் எதுவும் செய்யமாட்டான். நாங்களெல்லாம் இருக்கோம் இல்ல போ” என்று அவளது கரத்தைப் பிடித்து முன்னால் இழுத்து நிற்க வைத்தான்.

அவளுக்குக் கைகால்கள் நடுங்கின. பயத்தை மறைக்க முயன்றாலும், முடியாமல் அழுகை வரும் போல உதடுகள் பிதுங்கியது. கதவருகில் நின்றிருந்த லஷ்மி அம்மா நடப்பதை பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

கட்டில் விளிம்பில் இடித்துக்கொண்டதில் அவளது நெற்றியிலிருந்து கோடாக வழிந்த ரத்தம் புருவத்தின் அருகில் வர, “அச்சச்சோ...! ரத்தம்... பாரு இன்னும் நிற்கலை” என்றவன் மீண்டும் தன் குர்தாவை பற்ற,

“இரு இரு... நான் பஞ்சு கொண்டு வரேன்” என்று தடுத்த விஷால், அலமாரியைத் திறந்து டெட்டாலில் நனைத்த பஞ்சைக் கொண்டு வந்தான்.

“குடு குடு..., நானே துடைக்கிறேன்...” என்றதும் ரிஷியின் கையில் கொடுத்துவிட்டான்.

சுவரோரமாக இருந்த மர ஸ்டூல் ஒன்றை இழுத்து வந்தவன், “உட்கார்...” என்று தட்டிக் காட்ட, விஷாலையும், லஷ்மி அத்தையையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தயக்கத்துடன் அமர்ந்தாள் பூர்ணிமா.

காயத்தைச் சுற்றித் துடைத்தவன், காயத்தில் பஞ்சை அழுத்தினான். சுர்ரென எரிச்சல் எடுக்க, “ஸ்ஸ்... ஹா...” என்று முகம் சுருக்கினாள்.

“அவ்வளவு தான் சரியாப் போச்சு. இப்போ எரியுதா? என்று குனிந்து மெல்ல ஊதினான்.

“இப்போ வலி போச்சு இல்ல...” என்று கள்ளமில்லாமல் சிரித்தவனை அதுவரை பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தவள், முகம் இளக மென்னகைப் புரிந்தாள்.

“நீ யாரு?” என்று மலையாளத்தில் கேட்டான்.

“ரிஷி! அவளுக்குத் தமிழ்தான் தெரியும்” என்று விஷால் சொல்ல,

“ஓஹ்! உன் பேர் என்ன?” என்று தூய தமிழ் உச்சரிப்பைக் கேட்டு ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“பூர்ணிமா...”

“பூர்ணா!”

“இல்ல பூர்ணிமா...”

“எனக்கு, பூர்ணாதான் பிடிச்சிருக்கு. நான் அப்படித் தான் கூப்பிடுவேன்...” அவனது முரட்டுப் பிடிவாதத்தைப் பார்த்து அவளுக்குப் புன்னகை அரும்பியது.

“சரி, அப்படியே கூப்பிடுங்க” என்றாள்.

“ஹய்!” என்றவன், “விஷால்! பூர்ணா. அம்மா! இது பூர்ணா. பூர்ணா! நீ பூர்ணா…” என்று ஒவ்வொருவரின் அருகிலும் சென்று குதுகலத்துடன் சொன்ன மகனைப் பார்த்து, லஷ்மி அம்மாவுக்குக் கண்கள் கலங்கின.

“ரிஷி! போதும், நீ வா. பூர்ணிமா போகட்டும்...” என்று மகனின் அருகில் வந்தார்.

“எங்கே? எங்கே போகட்டும்...?” அதுவரை இருந்தவனுக்குச் சிறிதும் சம்மந்தமில்லாமல் அவன் பாவனையும், குரலும் மாறியது.

“வீட்டுக்குப் போகட்டும்ப்பா!”

“ஏன் இங்கேயிருந்தா என்ன? பூர்ணா! நீ என் பிரெண்ட் தானே. நீ என் கூடத் தானே இருப்ப. நீ போகக்கூடாது இங்கேயே என் கூடவே இருக்கணும்...” என்று அவளருகில் செல்ல, அவளோ பயத்துடன் பின்னால் நகர்ந்தாள்.

“ரிஷி! அவள் இங்கே இருக்க முடியாது. பாரு அவள் பயப்படுறா...” என்று லஷ்மி அம்மா சமாதானமாகச் சொன்னார்.

“நான் ஒண்ணும் செய்யமாட்டேன்மா” என்றவன் அவளிடம் திரும்பி, “பயப்படாதே பூர்ணா! நான் உன்னை ஒண்ணும் பண்ணமாட்டேன்” என்று குழந்தை போல முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான்.

அவனைப் பார்க்கப் பார்க்கப் பூர்ணிமாவுக்கு உள்ளுக்குள் என்னவோ செய்தது. மெல்ல அவனருகில் சென்றாள்.

“நந்தா!” என்று அவள் அழைத்ததும் அவன்முகம் கொள்ளா சிரிப்புடன் நிமிர்ந்து பார்த்தான்.

“என்ன பூர்ணா?”

“நான் இப்போ போய்விட்டு நாளைக்கு வரேன்.”

“ம்ம்...” என்று சிறிது சிந்தனையில் இருந்தவன், “ம்ம்... சரி” என்று தலையை ஆட்டிக்கொண்டே, “போய்ட்டு நாளைக்குக் கட்டாயம் வரணும். நீ வரலன்னா, நான் வந்திடுவேன்” என்று மிரட்டுவது போல் சொன்னான்.

“இல்ல. நானே வரேன்!” என்றவாறே வெளியேற விஷாலும், லஷ்மி அம்மாவிடம் தலையை அசைத்துவிட்டு அவளோடு வெளியே வந்தான்.20

உன் தீர்ந்து விடாத காதலால்

உயிர்த்துக்கொண்டிருக்கிறேன்

நான்..தன் அறையை நோக்கி நடந்தவளின் ஜடையைப் பிடித்து இழுத்தான் விஷால்.

ஆவென வலியில் கத்தியவள், “ஏன் விஷாலண்ணா முடியைப் பிடிச்சி இழுக்கறீங்க?” எனச் சிணுங்கினாள்.

“ஏய் பூரி! உன்னை அங்கே போகாதேன்னு சொல்லிட்டுத் தானே போனேன்” என்று மிரட்டலாகக் கேட்டான்.

“போகாதேன்னு சொன்னதாலே தான், போகணும் போலிருந்தது. போனேன்...” வாய்குள்ளேயே முனகினாள்.

“அட ஆர்வக்கோளாறே! உன்னை என்ன செய்தா தகும்? என்னவோ உன் நல்லநேரம் இன்னைக்கு அவன் நல்ல மூடில் இருக்கான்… நீ தப்பிச்ச. இல்லன்னா…”

“இல்லன்னா, என்ன செய்திருப்பார்?” என வீம்புடன் கேட்டாள்.

“ம்ம்..! கைல கிடைச்சதில் ரெண்டு போட்டு, உன்னைக் கடிச்சி வச்சிருப்பான்” என்று கடுப்புடன் சொன்னான் அவன்.

அவள், அரண்டு போய்ப் பார்த்தாள். “சரி விடு. இனி, தனியா போகாதே. நான், இல்லன்னா பெரியம்மா இருக்கும்போது போ” என்றான் அவளைச் சமாதானப்படுத்தும் விதமாக.

சரியென அவள் தலை மட்டும் உருண்டது.

“ஏய்... வாலு பயந்துட்டியா?” என்று கனிவுடன் கேட்டான்.

“ஆ..! இல்ல” என்றாலும், தலை ஆமாம் என்று உருண்டது.

“சரி ரொம்ப யோசிக்காதே தலைவலிக்கப் போகுது. போய் ரெஸ்ட் எடு” என்று கூறிவிட்டுச் சென்றவனை, “விஷாலண்ணா..” என்று அழைத்தாள்.

“ம்... என்னம்மா...?” என்று திரும்பினான்.

“அவருக்கு எப்படி இப்படி ஆச்சு?” என்ன சொல்வானோ என்று தயக்கத்துடன் வந்தது அவள் கேள்வி.

பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவனின் கண்களில் ஒரு வேதனைப் பரவியது.

“மூணு வருஷத்துக்கு முன்னே சென்னையில் காலேஜில் படித்துக்கொண்டிருந்த போது அக்ஸிடெண்ட் ஆயிடுச்சி.”

“ஓஹ்!” என்றவள் சில நொடிகள் எதுவும் பேசமுடியாமல் தவித்தபடி நின்றாள். “அத்தை எப்படிச் சமாளித்தாங்க?”

“என்ன செய்றது? நடந்த விஷயத்தை மாற்ற முடியாது. தப்பு இவன் மேல இல்ல. பின்னால வந்த வண்டிதான் ரொம்ப வேகமா வந்து இடித்து இவன் தலை ரோடுக்கு நடுவில் இருக்கும் பேரிகேட்டரில் போய் முட்டி...” அதற்கு மேல் சொல்லமுடியாமல் நிறுத்தினான்.

அதை நினைத்துப் பார்க்கவே அவளுக்கு உடல் நடுங்கியது.

“ஹாஸ்பிட்டல்ல வச்சிப் பார்த்தோம். ஆனால், மனநிலை பாதிக்கப்பட்டவங்க நடத்தப்படும் கேவலமான நிலையைப் பார்த்ததும் பெரியப்பா எவ்வளவு வசதியாக வாழ்ந்த பையன், அங்கே படும் அவஸ்தையைப் பார்த்து வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டார்.

அவன் எப்படியிருந்தான் தெரியுமா பூர்ணிமா? ரொம்ப நல்லவன். சிரிக்கச் சிரிக்கப் பேசுவான். அவனோட தாத்தா கௌறி சண்டைக் கத்துக்கொடுப்பார். இவன் மூணு வயதிலேயே அதெல்லாம் கத்துக்க ஆரம்பித்தான். ரொம்பத் தைரியமானவன். அதே நேரத்தில் ஒரு வேலையைச் செய்யும்முன் ரொம்ப யோசிப்பான். தன் நிலையில் மட்டும் இல்ல, அடுத்தவங்க நிலையிலும் யோசிப்பான்.

இவனோட நிலையைப் பார்க்க முடியாமலேயே பெரியப்பா இறந்து விட்டார். பெரியம்மாவும் கோவில், எதாவது விசேஷம்னா திருவனந்தபுரம் வீட்டுக்குப் போவதோடு வேறு எங்கேயும் வர்றதில்ல. அவங்க இந்த ரெண்டு வருஷத்தில் அவங்களோட நட்புக்காகவும், உன்னைக் கூப்பிடவும் தான் திருச்சி வந்தாங்க” என்றவன், “சரி எல்லாத்தையும் சொல்லி உன்னைப் போரடிக்கிறேன். நீ போய் ரெஸ்ட் எடு” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

அறைக்கு வந்தவளால் நடந்ததை மறக்கவே முடியவில்லை. எங்கேயும் செல்லாத அத்தை தனக்காக வந்ததை எண்ணி மகிழ்ந்து போனாள். பாவம் அத்தை… மகனும் இப்படி..., கணவனும் இல்லாமல் எத்தனைக் கஷ்டம் அவங்களுக்கு. முடிந்த அளவுக்கு அத்தைக்கு நாம ஒத்தாசையாக இருக்கவேண்டும் என்று மனத்திற்குள் உறுதி எடுத்துக்கொண்டாள்.

இரவு உணவு நேரம் பூர்ணா வந்தால் தான் சாப்பிடுவேன் என்று ரிஷி முரண்டு பிடிக்க, வேறுவழி இல்லாமல் விஷால் அவளை அழைத்துச் சென்றான்.

”பூர்ணா...” என்று சந்தோஷத்துடன் அவளருகில் வந்தவனை அப்போது தான் நன்றாகப் பார்த்தாள்.

கேரள நாட்டின் வளமையுடன்.., திருத்தமாக, நிமிர்ந்து நின்றிருந்த தோரணையும், வசீகரமான எழிலுடன் இருந்தவனை அவள் கண்கள் அளவெடுத்தது. அவனது செயல்களை கூர்ந்து கவனிக்காவிடில் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று யாருமே சொல்ல முடியாது.

ரிஷியின் குர்தா முழங்கை வரை ஏறி இருக்க, மணிக்கட்டை சுற்றி கன்றி சிவந்திருந்தது.

“கைகால் காயத்துக்கு மருந்து எதுவும் போடலையா அத்தை...”

“போடவே விடமாட்டென்றாம்மா...”

“நான் வேண்டுமானால்...?”

“நீயா...?” என்று யோசித்தவர், “சரி பார்...” என்று தயக்கத்துடன் சொன்னார்.

தன் அம்மா உருட்டி வைத்திருந்த சாத உருண்டையை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தவனை, “நந்தா...” என்று அழைத்தாள்.

“என்ன பூர்ணா...?” என்று தலை சாய்த்து அழகாக கேட்டான்.

புன்னகையுடன் அவனருகில் சென்றவள், “உங்க கையை கொஞ்சம் நீட்டுங்க” என்றாள்.

“ம்... இதோ...” என்று இரண்டு கைகளையும் அவள் முகத்துக்கு நேராக நீட்டினான்.

அலமாரியிலிருந்து கொண்டுவந்திருந்த மருந்தைக் கையில் எடுத்தாள்.

“வேணாம்... இது வேணாம்...” என்று அங்கிருந்து ஓடினான்.

“ஏன் வேணாம்...?”

“அது வலிக்கும் எரியும். இவனும் இந்த அம்மாவும் என்னைக் கட்டிப்போட்டுட்டுப் போயிடுவாங்க. எனக்கு எப்படி வலிச்சது தெரியுமா...?” என்று கண்ணை கசக்கியவனைப் பார்த்தவளுக்கு மனம் வலித்தது. தனக்கே இப்படியிருந்தால் அத்தை என்று திரும்பி பார்த்தவள் அவர் நாசுக்காக கண்ணை துடைத்துக் கொண்டிருப்பதை பார்த்தாள்.

அவளது காதருகில் வந்த ரிஷி, “ஆனா உனக்கு ஒண்ணு தெரியுமா...? அவங்களுக்குத் தெரியாமல் நான் சாவியை எடுத்து வச்சிருந்து சங்கிலியைக் கழட்டிட்டேனே...” என்று ரகசிய குரலில் சொல்லி சிரித்தான்.

“அப்படியா! வெரி குட். ரெண்டு பேரும் நல்லா ஏமாந்துட்டங்க இல்ல...” என்று பூர்ணிமாவும் உடன் சேர்ந்து சிரிக்க, அவனுக்கு மேலும் குஷியாகிவிட்டது.

இங்கே பாருங்க நான் அவங்ககிட்ட சொல்லி இனி உங்களை கட்டிப்போட வேண்டாம்னு சொல்றேன். இப்போ இந்த மருந்தை போட்டுக்கோங்க...”

“எரியும் பூர்ணா...ஹும்...” என்று சிணுங்கினான்.

“இங்கே என்னை நேராகப் பாருங்க...” என்று அவன் முகத்தை தன் பக்கம் திருப்பினாள். “இப்போ மருந்து போடலைனாலும் உங்களுக்கு வலிக்குது தானே...”

ஆம்... என்று தலை அசைத்தான்.

“மதியம் நீங்க எனக்கு மருந்து போட்டீங்க இல்லயா...? எனக்கும், இத்துணூன்டு தான் எரிந்தது. இப்போ சரியாகிடுச்சே. உங்களுக்கும் அதே போலச் சரியாகிடும்...”

“சரியாகிடுமா?”

“ம்ம்... நிச்சயமா சரியாகிடும்...”

“அப்போ சரி” என்று கையை அவள் முன்னே நீட்டிவிட்டு தலையை மறுபக்கம் திருப்பிக் கொண்டவன், “ஆ அம்மா... எரியுதே...” என்று கத்தினான்.

“நந்தா! நான் இன்னும் மருந்தைத் திறக்கவேயில்லை” என்று செல்லமாக மிரட்டியவள், அவனது கையைப் பற்றி மருந்திட்டாள்.

சிறு முகச் சுணக்கம்கூட இல்லாமல் போட்டுக் கொண்டவன், அவள் கொடுத்த மாத்திரையையும் எந்த வம்புமில்லாமல் விழுங்கினான்.

“வெரிகுட்! நீங்க நல்ல பிள்ளையா தூங்குங்க. குட் நைட்...” என்று சிரிப்புடன் வாசலை நோக்கி நடந்தாள்.

“பூர்ணா...” என்று ஓடிவந்து அவளெதிரில் நின்று, “எப்போ வருவ...?” என்றான்.

“நாளைக்குக் காலையில் வரேன்...”

“வருவியா...”

“கட்டாயம்...”

“சரி, அப்போ குட் நைட்!” என்று அவன் சல்யூட் அடித்தான்.

“குட் நைட்!” என்று சிரிப்புடன் சென்றாள்.

விஷாலும், லஷ்மி அம்மாவும் நடந்ததையெல்லாம் ஆச்சரியத்துடன் ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

“விஷால்! என் மகன் கூடிய சீக்கிரம் குணமாகிடுவான்னு, என் உள் மனசு சொல்லுதுப்பா” என்றார் தழுதழுப்புடன்.

“நிச்சயமா பெரிம்மா! இப்போ, நீங்க போய்ப் படுங்க. நான் நந்தாவோட இருக்கேன்...” என்று அவரையும் அனுப்பி வைத்தான்.

வெகு நாட்களுக்குப் பிறகு, லஷ்மி அம்மா நிம்மதியுடன் உறங்கினார். ஆனால், அதற்குச் சற்றும் பொருந்தாமல், ஜன்னலருகில் நின்றபடி பின்வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள் பூர்ணிமா.
 
  • Love
Reactions: Rithi

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
21உறக்கம் தின்னும் கனவு நீ

உன்னில் தொலையும் உறக்கம் நான்காலையில் எழுந்து பாட்டு ஒன்றை முணுமுணுத்தபடி தயாராகிக் கொண்டிருந்தவள், கதவைத் தட்டும் சப்தம் கேட்டுத் திறத்தாள்.

“வாங்க அத்தை! கூப்பிட்டிருந்தா நானே வந்திருப்பேனே...” என்றாள்.

“உன்கிட்ட கொஞ்சம் பேசவேண்டி இருந்தது. அதான், நானே வந்தேன்” என்றவர் இருக்கையில் அமர்ந்தார்.

அருகில் அமர்ந்தவள், “சொல்லுங்க அத்தை!” என்றாள் அன்புடன்.

“உனக்கு ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கணும். நீ பயந்துடப் போறேன்னு சொல்லல. எப்படியிருந்தாலும், உனக்குச் சொல்லியிருப்போம்” என்றார் பீடிகையுடன்.

“சாரி அத்தை! நானும் அங்கே தனியா போயிருக்கக்கூடாது” என்றாள் பணிவாக.

“பரவாயில்லை, என் வாயால் சொல்ல வைக்காம, நீயே தெரிஞ்சிகிட்ட அவ்வளவு தானே” என்றபடி, அவளது கரத்தைத் தன் கைகளுக்குள் பொத்திக்கொண்டு, “சில சமயங்களில் ரொம்ப முரட்டுத்தனமாக நடந்துக்குவான். அடுத்தவங்களை மட்டும் இல்லம்மா, தன்னையே காயப்படுத்திக்குவான். நான் ஊருக்குக் கிளம்பி வந்த அன்னைக்கும் அப்படித்தான் நடந்திருக்கு. அந்தநேரத்துல அவனை ரெண்டு மூணு நாளைக்கு, மயக்கத்திலேயே தான் வச்சிருப்போம். என் தங்கச்சித் தான் அவனுக்கு வேண்டிய மருந்தையெல்லாம் பாரின்லயிருந்து வரும்போது வாங்கிட்டு வந்து தருவா. அப்படித் தான் இந்த மருந்தையும் கொண்டுவந்து கொடுத்தா.

நாம ஊரிலிருந்து திரும்பி வரும்போது அவன் மயக்கத்திலிருந்ததால் தான் உனக்கு அவன் இருப்பது தெரியாமல் இருந்தது. புது ஆளுங்க யாரையும் பக்கத்தில் வரவே விடமாட்டான். ஆனால், உன்னிடம் அவன் பழகுவதை பார்த்ததும் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. என் மகன் திரும்ப எனக்குப் பழையபடி கிடைச்சிடுவான்னு நம்பிக்கை வந்திருக்கு” என்றவரைக் கனிவுடன் பார்த்தாள்.

“நீ இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து, எல்லாமே நல்ல விஷயமா தான் நடந்து கொண்டு இருக்கு. எனக்கு ஒரு உதவி செய்யறியா...?” என்றார்.

“என்ன செய்யணும்னு மட்டும் சொல்லுங்க அத்தை.”

“நீ இந்த வீட்டில் இருக்கற வரைக்கும், ரிஷிக்குத் துணையா இருக்கணும். உன் வேலை நேரம் போக, மற்ற நேரத்தில்தான்...” என்றார்.

நா தழுதழுக்க, “கண்டிப்பா அத்தை! நான் இருக்கும் வரைக்கும் நந்தாவுக்குத் துணையா இருப்பேன்” என்று உறுதியளித்தாள்.

“என்னோடு வா...” என்று பூஜையறைக்கு அழைத்துச் சென்றவர், “விளக்கை ஏத்து” என்றார்.

திகைத்த பூர்ணிமா, “அத்தை! இது உங்க குடும்பப் பாரம்பரிய விளக்கு. இதை நான்...?” என்றாள் தவிப்புடன்.

“என்னைக்கு நாங்கல்லாம் நல்லாயிருக்கணும்னு நினைச்சி, எங்களுக்காக வாழணும்னு நினைச்சியோ… அன்னைக்கே நீயும் இந்தக் குடும்பத்தில் ஒருத்தி ஆகிட்ட. உங்க மாமா இருந்திருந்தாலும், அதைத்தான் சொல்லியிருப்பார்” என்று தீப்பெட்டியைக் கொடுக்க, பூர்ணிமாவும் கடவுளிடம் வேண்டியபடி விளக்கை ஏற்றினாள்.

சொன்னபடியே பூர்ணிமா, ரிஷிநந்தனுக்குத் தன்னாலான அத்தனை உதவிகளையும் செய்தாள். அவற்றால், விஷாலுக்குத் தான் பெருமளவு வேலைச்சுமை குறைந்தது. வீட்டு வேலைகள், வெளிவேலைகள், தோப்புத் துரவு வேலைகள் என்று எல்லாவற்றிலும் தலைகாட்டியவனுக்குப் பூர்ணிமாவின் தலையீட்டால் ரிஷிக்காக செய்த வேலைகள் பெருமளவு குறைந்தது.

காலையில் பூர்ணிமா பள்ளிக்குக் கிளம்பும் முன்னர், ரிஷி நந்தனுக்குக் காலை உணவை சிறுகுழந்தைக்குப் பரிமாறுவதை போல நிதானமாக கொடுப்பாள். சில நாட்கள் அவன் கதை பேசிக்கொண்டே சாப்பிடுவான். சில நாட்கள் அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி ஓடி அவளுக்கு ஆட்டம் காட்டுவான்.

இரவு உணவின் போது அவன் விளையாட்டை இரசித்துச் சிரிப்பவள் காலை வேளைகளில் பள்ளிக்குச் செல்ல நேரமாகிவிடுவதால், “நந்தா! இப்போ ஒழுங்காச் சாப்பிடப் போறீங்களா இல்லையா?” என்று அவனை வேண்டுமென்றே மிரட்டுவாள்.

“முடியாது! எனக்கு வேணாம்” என்று அவளைப் போலவே நேராக நின்று கையைக் கட்டிக்கொண்டு முகத்தை வேறுபக்கமாகத் திருப்பியபடி அவன், அவளைச் சமாதானம் செய்யும் போது எப்படி இருப்பாளோ, அதன்படியே இவன் பதில் சொல்ல அவளுக்கு வரும் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது.

சிலசமயம் கோபம் கொண்டால், அவளைச் சுற்றி வந்து குழந்தை போல முகத்தை வைத்துக்கொண்டு, பேசும்படி கெஞ்சுவான். அவனது முகபாவனைகளைப் பார்ப்பவளுக்கு அதற்குமேல் கோபமிருப்பது போல இழுத்து பிடித்து இருக்கமுடியாது.

பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வியாக இருந்தபோதும், ஆர்வத்துடன் சக மாணவ -மாணவிகளிடம் மலையாளம் கற்றுக்கொண்டாள். ஆரம்பத்தில் அவளது கொச்சை மலையாளத்தை மற்றவர் கிண்டல் செய்தபோதும், அவளது தளராத முயற்சியைக் கண்டு அவளைக் கேலி செய்தவர்களே முன்வந்து கற்றுக்கொடுத்தனர்.

வீட்டிற்கு வந்தாலும், வேலையாட்களிடமும் மலையாளம் தான். அவளது சில செய்கைகள் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கும். இரண்டே மாதத்தில் மலையாளம் சரளமாக பேசுவது, ரிஷி நந்தனை ஒற்றை ஆளாக சமாளிப்பது என்று எல்லவற்றிலும் விபரமானவளாக இருந்தாள்.

சமையல் அறையில் புகுந்தால் ஒரு வேலை பாக்கியில்லாமல், எல்லவற்றிலும் சூரியாக இருந்தாள்.

“அத்தைக்கு ஏற்கெனவே கொலஸ்ட்ரால் இருக்கு. இவ்வளவு தேங்காய் போடாதீங்க” என்பவள் கொஞ்சம் புழுங்கல் அரிசியை வறுத்துப் பொடிச்சி தேங்காயுடன் அரைத்துச் சேர்ப்பாள்.

“உங்க ஊர் அடை பிரதமனையே சாப்பிடுறீங்க. எங்க ஊர் பால் கொழுக்கட்டை சாப்பிட்டு பாருங்க” என்று சமையலிலும் அசத்துவாள்.

தனது சுபாவத்தால், அந்த வீட்டில் அனைவருக்கும் செல்லப் பிள்ளையாகிப் போனாள். லஷ்மி அம்மாவிற்குப் பிரியமானவளாக இருந்தாள். இப்போதெல்லாம் வீட்டின் அன்றாட சமையல் மெனு பூர்ணிமாவினுடையதாக மாறியது.

“எப்போதும் வீட்டு வேலைகளிலும் படிப்பிலும் மட்டும் கவனம் செலுத்தாதே பூரி கொஞ்சம் உலகத்திலும் என்னவெல்லாம் இருக்கு. என்னவெல்லாம் நடக்குதுன்னு பாரு...” என்று தன்னிடமிருந்த மடிக்கணினியை கொண்டுவந்து கொடுத்தான் விஷால். இண்டர்நெட்டை இயக்கவும் கற்றுக்கொடுத்தான்.

முதல் ஐந்து நாட்கள் சற்று மேம்போக்காக இருந்தவளின் வாழ்க்கை, அடுத்து வந்த நூற்றி இருபது நாட்களில் காலில் சக்கரம் கட்டிக்கொள்ளாத குறையாக, அவளது வாழ்க்கை முறையே மாறிப்போனது. ஆற்றிற்கு இருபுறம் இருப்பதைப் போல, பூர்ணிமாவைப் பிடிக்காதவர்களும் இருக்கத்தான் செய்தனர்.

முதல் நாள் நெட்டிலிருந்து தரவிறக்கிய பாரதியார் பாடல்களை, ஒரு சிடியில் பதிவேற்றி எடுத்துக்கொண்டு ரிஷியின் அறைக்குச் சென்றாள். இப்போதெல்லாம் இரவில் அவன் உறங்கும் முன், சிடியில் மெல்லிசைப் பாடல்களைக் கேட்பதை அவனுக்கு வழக்கமாக்கி இருந்தாள்.

அறைக்குள் சென்றபோது, மேற்கூரையையே கூர்ந்து பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவனை, அருகில் சென்று உற்றுப் பார்த்தாள்.

“என்ன பண்றீங்க நந்தா?”

கண்ணை மட்டும் அசைத்து அவளைப் பார்த்தவன், “ஷ்...” என்று விட்டு மீண்டும் தன் பழைய வேலையைத் தொடந்தான்.

சிறிது நேரம் பேசாமல் அமர்ந்திருந்தவள் சலிப்புடன், “ம்ச்சு...” என்றாள்.

மெல்ல அவள்புறமாகத் திரும்பியவன், ‘என்ன?’ என்பது போலத் தலையசைத்தான்.

“இன்னைக்குச் சனிக்கிழமை; ஸ்கூல் லீவ். உங்ககூட கொஞ்சம் நேரம் பேசிட்டிருக்கலாமேன்னு வந்தேன். நீங்க என்னமோ, சாமியார் ரேஞ்சுக்கு மோட்டுவளையைப் பார்த்துட்டிருக்கீங்க...” என்று சிணுங்கினாள்.

“நான் அப்படி உட்கார்ந்திருப்பது உனக்குப் பிடிக்கல இல்ல” கண்கள் மின்னக் கேட்டான்.

“ம்ம்...” என்று தலையை ஆட்டினாள்.

“எனக்குக் கூடத்தான் பிடிக்கல...”

“என்ன பிடிக்கல?”

“நீ எப்போ பாரு மெடிடேஷன் பண்ணுன்னு சொல்றது பிடிக்கல” என்றான்.

“ஓ...! அதுக்குத்தான் சார் இந்தப் பில்டப் கொடுத்தீங்களா?” என்று இடுப்பில் கைவைத்துக் கொண்டு கேட்டாள்.

“ம்ம்...!” என்று ஒற்றைக் கண்ணை மூடிக்கொண்டு, உதடுகளை அழுந்த மூடி புன்னகையுடன் தலையாட்டினான்.

“ஹய்யோ! அழகு...” என்று அவனது கன்னத்தைத் திருஷ்டிக் கழிப்பது போலச் செய்தவள், “எங்க ஊர்ல தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை இப்படித்தான் இருக்கும். இப்போ, உங்களைப் பார்த்தா எனக்கு அப்படித்தான் இருக்கு...” என்று சொல்லிவிட்டுக் கலீரென புன்னகைத்தவளைப் புதுப்பார்வை ஒன்று பார்த்தான்.

அவன் ஏன் அப்படிப் பார்த்தானோ! ஆனால், அந்தப் பார்வை அவளது கண்களின் வழியாக, இதயத்தைத் தாக்கியது. அவளது சிரிப்பு, சட்டென நின்றது. அவனை நேர்ப்பார்வை பார்க்கமுடியாமல், அவளது இமைகள் நிலத்தை நோக்கின.

செந்தூரம் பூசிக்கொண்ட அவளது கன்னங்களை இரு கைகளிலும் ஏந்திக் கொள்ளவேண்டும் என்ற ஆவல் உந்த, “பூர்ணா...!” என்றழைத்தபடி அவளருகில் வந்தான்.

ஏனோ, பூர்ணிமாவால் அங்கே நிற்கவே முடியவில்லை.

“நான் கொஞ்சம் நேரம் கழித்து வரேன்...” என்றவள், அவனைப் பார்க்காமலேயே வாசலை நோக்கி நடக்க முயல, அவளது மணிக்கட்டைப் பற்றினான்.

அதேநேரம், “பூர்ணிமா...” என்று விஷாலின் அம்மா சௌமினியின் குரல் கேட்டது.

திரும்பி வாயிலைப் பார்த்தவள், “ஆன்ட்டி! வாங்க... எப்போ வந்தீங்க?” என்று உபசரித்தாள்.

“ஐ...! சித்தி...” என்று அவரருகில் சென்றான் ரிஷி.

“நீ எதுக்காக இங்கே வந்த? யார் உன்னை இங்கே அனுமதித்தது?” என்று கோபத்துடன் கேட்க, பாதி தூரம் சென்ற ரிஷி அப்படியே நின்றான்.

“சித்தி! எதுக்கு நீ பூர்ணாவைத் திட்டுற?” என்று கோபத்துடன் கேட்டான்.

திகைத்துப் போன சௌமினி, “கண்ணா...! அவ இங்கேல்லாம் வரக்கூடாதுப்பா” என்றார் குரலில் தேனைப் பூசிக்கொண்டு.

“ஏன்...? ஏன்...? ஏன்... வரக்கூடாது?” என்று ஆவேசமாக கேட்டபடி மீதி தூரத்தைக் கடந்து வந்தவன், “பூர்ணா, ரொம்ப நல்லவ சித்தி! திட்டாதே பாவம்...” என்று சட்டென மாறியவனை, அதிர்ந்து போய் பார்த்தார்.

சமாளிப்பாக, “சரிப்பா திட்டல...” என்று சொல்லும்போதே, ‘எல்லாம் தன் கைமீறிவிட்டதோ!’ என்று மனத்திற்குள் ஒரு பயம் வந்தது.22

வசமிழந்து போகிறேன் உன்னிடமே

உன் நினைவுகளை கடந்து செல்ல

முயலும் நேரங்களில்...“போச்சு... எல்லாம் போச்சு..., என் ஆசை, லட்சியம் எல்லாம் கனவாகவே போயிடும் போலிருக்கே... இப்படி ஏதாவது நடக்கும்ன்னு என் உள் மனம் அப்பவே சொல்லுச்சி. அவளை இந்த வீட்டில பார்த்த பிறகு, நான் இங்கேயே இந்திருக்கணும். அப்போவே சொன்னேன் இந்த விஷால்கிட்ட, இவளை வைக்கவேண்டிய இடத்தில் வைன்னு. இப்போ ரிஷியை நெருங்கிட்டா.

அவன் குணமாகக்கூடாதுன்னு நான் எத்தனைத் தூரம் அவனுக்கு மாத்திரை மருந்தை மாத்தி, செக் பண்ண வந்த டாக்டர்களைச் சரிகட்டி, ஒண்ணும் தெரியாத எங்க அக்காவை எந்த விஷயத்திலும் ஈடுபடுத்தாம, நானே முன்னால் நின்று... எவ்வளவு வேலைங்க செய்தேன்.

இருக்கறதைப் பார்த்தா அந்தப் பூர்ணிமா, இந்த வீட்டு மருமகளாகவே வந்திடுவா போலிருக்கே. கடைசில..., இப்படி ஒருத்தி உள்ளே புகுந்து என் கனவுகளைக் கலைக்கவா எல்லாம் செய்தேன்...” என்று பொருமிக் கொண்டிருந்தார்.

“அதைவிடு..., இத்தனைத் தூரம் உங்க அக்கா வீட்டுப் பிசினஸைக் காப்பாற்றவா நான் பாடுபடுறேன். எல்லாத்தையும் என் கண்ட்ரோலுக்குக் கொண்டு வரத்தானே. இவனைக் கடைசி வரைக்கும் பைத்தியமாகவே வைத்திருந்து எல்லாத்தையும் நாம அனுபவிக்கணும்ன்னு தானே செய்தேன். உன் அக்கா வீட்டுக்காரன் இருந்தப்ப ஒரு பைசாவுக்குக் கூட நம்மள மதிக்கமாட்டான். எவ்வளவு கேவலமா நடத்துவான். அவன் பிசினஸைக் காப்பாத்தி அவன் பிள்ளைகிட்டக் கொடுக்க எனக்கென்ன தலையெழுத்தா?” என்றார் ஆங்காரத்துடன்.

சௌமினியும், நாராயணனும் மாற்றிமாற்றி புலம்பிக்கொண்டு இருக்க விஷால் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு வேதனையுடன் அமர்ந்திருந்தான்.

“நாங்க பெத்த பிள்ளை உனக்கு ஏன்டா இப்படிப் புத்திப் போகுது? உன்னை மாதிரி இருந்தா விளங்கிடும்...” என்று சௌமினி புலம்ப, சலிப்புடன் எழுந்தான்.

“உங்களை மாதிரி அப்பா, அம்மா இருப்பதுக்கு, நான்தான் அழணும். பெரியம்மா உங்களை எந்த அளவுக்கு நம்புறாங்க. அவங்களுக்கு எத்தனைப் பெரிய துரோகம் செய்றீங்க. ஏம்மா! அப்பாவுக்காவது அவங்க யாரோ. ஆனால், உன் கூடப்பிறந்த அக்கா குடும்பத்தை நாசமாக்கப் பார்க்கறீங்களே… உங்களுக்கே அசிங்கமாக இல்ல” என்று அருவருப்புடன் அவர்களைப் பார்த்தான்.

“அசிங்கத்தைப் பார்த்தால் இன்னைக்கு நாம வாழ்ந்துட்டிருக்கற வாழ்க்கை நமக்குக் கிடைச்சிருக்குமா? இதெல்லாம் எங்களுக்காகவா செய்றோம்! நாளைக்கு நீ, சந்தோஷமாக இருக்கத்தானே...”

“அப்படின்னு நினைச்சி என்மேல பாவமூட்டையை ஏத்தி வச்சிருக்கீங்க. இதை நான் இன்னும் எத்தனை ஜென்மத்துக்குச் சுமக்கணுமோ? அந்தப் பாவத்தையெல்லாம் இந்த ஜென்மத்தில், கொஞ்சமாவது தீர்த்துக்கத்தான் பெரியம்மாவோடு இங்கேயே இருக்கேன். ரிஷிக்கு ஒரு வேலைக்காரனா இருக்கேன். இன்னைக்கு மட்டும் இல்ல, என்னைக்கும் அவன் கூடத்தான் இருப்பேன்.

ஒண்ணு மட்டும் சொல்றேன். பெரியம்மாவுக்கோ, ரிஷிக்கோ ஏதாவது ஆபத்து ஏற்படுத்தணும்ன்னு நினைச்சா, என்னை நீங்க முழுசாகப் பார்க்கமுடியாது” என மிரட்டியவன், “பூர்ணிமா இந்த வீட்டு மருமகளா ஆகிடுவாளோன்னு சந்தேகமா சொல்லாதீங்க. பூர்ணிமா தான் இந்த வீட்டு மருமகள்... ரிஷிக்கு மனைவியா அவளைத் தவிர யாரும் வரப்போவதில்லை” என்று சொல்லிவிட்டு வெளியேற, பெற்றவர்கள் இருவரும் சிலையென உறைந்து நின்றிருந்தனர்.

வெறித்துப் பார்த்த சௌமினியின் மனத்தில், பூர்ணிமா மீது வன்மமே எழுந்தது.

‘விடமாட்டேன்டீ... உன்னை நிம்மதியாக இருக்க விடமாட்டேன். நீ அசிங்கப்பட்டு இந்த வீட்டை விட்டுப் போகும் அளவுக்குச் செய்யாவிட்டால், நான் சௌமினி இல்லை...’ என்று மனத்திற்குள் சூளுரைத்துக்கொண்டார்.

இது எதையும் அறியாத பூர்ணிமா, வழக்கம் போல வீட்டில் இருப்பவர்களிடம் கலகலப்புடன் பேசிக் கொண்டிருந்தாள்.
 
  • Wow
Reactions: Rithi

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
23

உன் நினைவுகளில்லாத என் கனவின்

ஒரு மூலையில் கூட நானிருக்க

சாத்தியமில்லை...“அத்தை! இன்னைக்கு நந்தாவைப் பார்க்க டாக்டர் வரார் இல்லயா... அவருடைய எல்லா ரிப்போர்ட்ஸும் வேணும். ஏற்கெனவே, எல்லாத்தையும் அவருக்கு அனுப்பியாச்சு. ஆனாலும், இப்போ அவர் கேட்டால் வேணுமில்ல.”

“விஷால்கிட்ட இருக்கு. வாங்கிக்கோம்மா!” என்றவர் தயக்கத்துடன், “பூர்ணிமா! இப்போ திரும்ப முதலிலிருந்து வைத்தியம் ஆரம்பிக்கணுமா?” என்று பயத்துடன் கேட்டார்.

“அத்தை! இத்தனை நாளாக வைத்தியம் பார்த்தும் குணமாகலைனா ஒண்ணு இன்னும் என்னன்னு கண்டுபிடிக்காமல் இருக்கனும் இல்லைனா நோய்கான சரியான மருந்தைக் கொடுக்காமல் இருக்கணும். எப்போதோ ஹாஸ்பிட்டலில் கொடுத்த மருந்தையே இன்னும் தொடர்ந்து கொடுப்பதும் செய்யக்கூடாது, மருத்துவரோட கவனிப்பு இல்லாமல் மருந்து கொடுப்பதும் கூடாது.

இப்போ வரப்போகும் டாக்டர் ரொம்பக் கைராசியான டாக்டர். ஃபேஸ்புக்கில் இவரைப் பத்தி நிறைய ஆர்ட்டிக்கில்ஸ், பேட்டி எல்லாம் வந்திருந்தது. இவர் நம்ம ஊருக்கு வந்திருப்பது, நம்ம நல்ல நேரம்னு நினைச்சிக்குவோம். அவர் வந்து பார்க்கட்டும். அதுக்கு மேலும் உங்க மனசுக்கு சங்கடமாயிருந்தா, நாம பழைய மருந்துங்களையே கொடுப்போம்...” என்று தற்காலிக சமாதானத்தைச் செய்துவிட்டுச் சென்றாள்.

“அக்கா எனக்கு என்னவோ நீ இந்தப் பொண்ணுக்கு அதிகமாக இடம் கொடுக்குறியோன்னு தோணுது”

“இல்ல சௌமினி! அவள் சொல்றதிலும் அர்த்தமிருக்கு. மாமா இறந்ததுக்குப் பின்னால, நாம ரிஷியை எந்த டாக்டரிடமும் கூட்டிட்டுப் போகலையே. வரட்டும்… இவர் என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்” என்று முடித்துக்கொள்ள, சௌமினியின் உள்மனம் கோபத்தில் கனன்றது.

“ஹலோ! ரிஷிநந்தன் எப்படியிருக்கீங்க?” என்று விசாரித்த டாக்டரை ஆழ்ந்து பார்த்தான்.

“குட் மார்னிங் டாக்டர். ஃபைன்..” என்றான்.

மற்றவர்களை அனுப்பிவிட்டு, அவனிடம் தனிமையில் பேசினார்.

ஒருமணி நேரத்திற்குப் பிறகு, வெளியில் வந்த டாக்டர், “ரிஷியோட அம்மா நீங்க தானே?”

“ஆமாம் டாக்டர்...”

“பூர்ணா?” என்று கேள்வியாகப் பார்த்தார்.

“நான்தான் டாக்டர்...” என்று முன்னால் வந்தவளைப் புன்னகையுடன் பார்த்தார்.

“என்ன படிக்கிற?”

“ப்ளஸ் ஒன்...”

“நீதான் ரிஷியோட ஃப்ரெண்டா!” புன்னகையுடன் கேட்டார்.

“ஆமாம்” என்று தயக்கத்துடன் சொன்னாள்.

“ஏன் டாக்டர்? இனி, அவளைப் பார்த்துக்க வேண்டாம்னு சொல்லப் போறீங்களா?” சௌமினி அவசரமாக கேட்க, டாக்டர் ஏறயிறங்க அவரைப் பார்த்தார்.

“நீங்க...?”

“ரிஷியோட சித்தி.”

“ஓ...” என்றவர், பூர்ணிமாவிடம் சில கேள்விகள் கேட்டார்.

தன் கையிலிருந்த பைலிலிருந்து ஒரு பேப்பரை எடுத்துக் கொடுத்தாள். காலையிலிருந்து அவன் செய்யும் வேலைகள், என்னென்ன சாப்பிடுகிறான். அவன் சாப்பிடும் மருந்து மாத்திரைகள், இரவு தூங்கும் வரை செய்யும் அத்தனை வேலைகளையும், தான் வந்தபோது அவன் இருந்ததற்கும், இப்போது இருப்பதற்கும் இருக்கும் வித்தியாசங்கள் என்று அனைத்தையும் தெளிவாக எழுதியிருந்தாள்.

ஆன்லைனில் தான் படித்தது, சிலரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டது என்று அனைத்தையும் அவரிடம் சொன்னாள்.

“கையைக் கொடு..., பிரில்லியண்ட் கேர்ள்” என்று பூர்ணிமாவை நோக்கித் தன் கையை நீட்டினார்.

“லஷ்மி மேடம்! வெரி குட் சாய்ஸ். அவரோட பேசினதில் நிறைய தெரிந்தது. அது எல்லாமும் பூர்ணிமா அழகா எழுதிவச்சிருக்கா. பழைய மெடிசின்ஸ் எல்லாத்தையும் நிறுத்திடுங்க. நான், புது மெடிசின்ஸ் தரேன். அதைக் கண்டினியூ பண்ணுங்க. அவருக்கு ஆக்சிடெண்டால் ஏற்பட அதிர்ச்சியில் தான் அவருடையை மூளை சமநிலையில் இல்லாமல் இப்படியும் அப்படியுமாக இருந்திருக்கார். மூளையில் பெருமளவு பாதிப்பு எதுவும் இல்ல.

சிலசமயம் அவர் வயலண்டா இருக்க இப்படி அடைத்து வைத்திருப்பது கூட ஒரு காரணம். ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து மெடிசின்ஸ் சரியாக எடுத்திருந்தால், இந்நேரம் கியூர் ஆகியிருக்க நிறைய சான்சஸ் இருந்திருக்கும். ஓகே போனதை விட்டுட்டு இனி, தொடர்ந்து பாருங்க. முதலில், நம்ம மகன் கூடிய சீக்கிரம் பழையபடி திரும்ப கிடைப்பான்னு நம்புங்க.”

“டாக்டர்! நந்தாவை வெளியே கூட்டிக்கொண்டு போகலாமா?” என்று கேட்டான் விஷால்.

“முதலில் உங்க வீட்டுக்குள்ளே கூட்டிப் போங்க. தனியா இருப்பதைவிட எல்லோரோடும் சேர்ந்திருப்பது பெட்டர். கொஞ்ச நாள் ஆகட்டும் பிறகு, வெளியே போகலாம். டிவியில் வரும் நல்ல ப்ரோகிராம்ஸ் போட்டுக்காட்டுங்க. அவர் பேசுறதை, காது கொடுத்து கேளுங்க.

அப்புறம், பழைய மெடிசின்ஸ் நிறுத்திடுறதால மீதம் இருப்பதைக் கொடுங்க. நான் அதையெல்லாம் எதாவது ஹாஸ்பிட்டலுக்குக் கொடுத்திடுறேன்” என்று வாங்கிக்கொண்டு கிளம்பியவர், பூர்ணிமாவிடம் எந்த ஸ்கூல்ல படிக்கிற என்று யதார்த்தமாக விசாரித்து தெரிந்துக் கொண்டு விடைபெற்றார்.

டாக்டர் வந்து சென்ற இரண்டு நாட்களில் விஷாலும், பூர்ணிமாவும் வீட்டையே தலைகீழாக மாற்றினர். ரிஷியின் பழைய அறையைச் சீரமைத்தனர்.

“அண்ணா... நந்தாவுக்குப் புளுகலர் தான் பிடிக்கும். சுவருக்கு லைட் புளூ, ஜன்னலுக்கெல்லாம் கொஞ்சம் டார்க் புளூ. ஸ்கிரீன் கடல் நீலத்தில் பூக்கள் போட்டது போல மாத்திடலாம். ரூஃபில் நட்சத்திரம், நிலான்னு ஸ்டிக்கர்ஸ் ஒட்டிடலாம். அவரோட வார்ட்ரோப் இந்தப் பக்கம், இங்கே ஜன்னல் ஓரமா ஒரு டேபிள் சிடி ப்ளேயர் சிடிஸ் வச்சிடலாம். கட்டிலை ஒட்டி அலமாரியில் புக்ஸ், எதிரில் டிவி வச்சிடலாம்” என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வதை, லஷ்மி அம்மா புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்க, சௌமினி அழுத்தமாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.

அன்று பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தவள் யதேச்சையாக ரிஷிநந்தனைப் பார்த்துவிட்டுச் சென்ற டாக்டரைச் சந்தித்தாள். ஆனால், அது யதேச்சையானது இல்லை காரணத்தோடுதான் டாக்டர் தன்னை சந்தித்திருக்கிறார் என்று புரிந்தபோது அவளது மனநிலை மோசமாக இருந்தது.

வீட்டுக்கு வந்தவள் சிறிதுநேரம் அறைக்குள்ளேயே முடங்கிக்கொண்டாள். அதேநேரம் லஷ்மி அத்தையிடம் சொல்லவும் தைரியமில்லை. அப்படியே விடவும் மனமில்லை. இரவு வரை பொறுமையுடன் காத்திருந்தவள், விஷாலின் பெற்றோர் தங்கியிருந்த வீட்டை நோக்கி நடந்தாள்.

ஆழ்ந்த யோசனையுடன் விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்த சௌமினி, சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். கைகளைக் கட்டிக்கொண்டு தன்னையே பார்த்துக் கொண்டிருந்த பூர்ணிமாவைக் கண்டதும் விரைப்புடன் எழுந்து நின்றார்.

“எப்படி நந்தாவை முழுபைத்தியமாக்குவதுன்னு யோசிக்கிறீங்களா?” என்று ஆத்திரத்துடன் கேட்டாள்.

“ஏய்...! என்ன வாய் நீளுது? அனாதை நாயே” என்று கோபத்துடன் அலறினாள்.

“சும்மா கத்தாதீங்க. நான் அனாதை தான். ஆனா, சொந்த அக்கா குடும்பத்தையே கெடுக்கும் வஞ்சகி இல்ல.”

“நான் நானா வஞ்சகி...” சௌமினியின் ரத்த அழுத்தம் ஏகத்துக்கு எகிறியது.

“சந்தேகம் வேறயா? இங்கே பாருங்க, உங்களைக் காட்டிக்கொடுக்க, எனக்கு ஒரு நிமிஷம் போதும். ஆனால், எனக்கு எந்தக் குடும்பத்தையும் கெடுக்கணும்ங்கறா கேவலமான எண்ணம் இல்ல. அது எவ்வளவு பெரிய அயோக்கியதனம் நிறைந்தவங்களாக இருந்தாலும். இதுதான் உங்களுக்கு முதலும், கடைசியுமான எச்சரிக்கை. உங்க மரியாதையை நீங்கதான் காப்பாத்திக்கணும்.

இனி, நந்தாவுக்கோ, அத்தைக்கோ ஏதாவது கெடுதல் பண்ணணும்னு நினைச்சீங்க, நான் சும்மா விடமாட்டேன். இப்போகூட அத்தையோட மனம் கஷ்டப்படக்கூடாதுன்னு தான் இதை அவங்ககிட்ட சொல்லாமல் விடுறேன்” என்று கோபத்துடன் அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு வெளியேறியவளை ஆத்திரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

வீட்டுப் பொறுப்பு, அக்காவின் அன்பு, ரிஷியின் பிரியம், வேலையாட்களின் பாசம், இதற்கெல்லாம் மேலாக தன் மகனின் பாதுகாப்பு என்று பூர்ணிமா சகல சௌக்கியத்துடன் இருக்க, எல்லாமிருந்தும் எதுவும் இல்லாமல், தன்னால் எதுவும் செய்யமுடியாமல், நேற்று வந்த ஒருத்தியால் எச்சரிக்கப்பட்டு நின்றுகொண்டிருந்த சௌமினியால் எதையும் ஜீரணிக்கமுடியவில்லை.

மனத்திற்குள், வன்மம் அசுரவேகத்தில் வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அவருக்கான நாளுக்காக வெகுநாட்கள் காத்திருக்கவேண்டி வந்தது. தான் விரித்த வலையில் பூர்ணிமா எனும் மீன் மாட்ட, ரிஷிநந்தனையே தூண்டி புழுவாக்கினார்.24

உன்னைத் தாண்டிச் செல்லும்

ஒவ்வொரு நொடியிலும்

சுவாசம் தடுமாறச் செய்கிறாய்..நாட்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. பூர்ணிமா, பள்ளி இறுதியாண்டின் கடைசி நிலையில் இருந்தாள். ரிஷி நந்தன் தன் வேலைகளைத் தானே செய்துகொள்ளும் அளவிற்கு முன்னேறி இருந்தான்.

பூஜை முடித்துவிட்டு கற்பூரத் தட்டை அவன் முன்பாக நீட்ட, கண்களில் ஒற்றிக்கொண்டவனின் நெற்றியில் சந்தனத்தை வைத்துவிட்டாள். குங்குமத்தை வைக்கும் நேரம் வேண்டுமென்றே நிமிர்ந்து பின்னால் சாய, அவனது உயரத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் எட்டி அவனது நெற்றியில் குங்குமத்தை வைத்தவள், “வளர்ந்து கெட்டவனே...” என்று செல்லமாக வைதாள்.

சிரித்தவன், “குள்ளக் கத்திரிக்கா...” என்று வேண்டுமென்றே அவளைச் சீண்டினான்.

“நான் ஐந்தடி மூணு அங்குலம் தெரியுமா?” என்று சிலிர்த்துக்கொண்டு சொன்னாள்.

“வெவ்வேவே” என்று கேலி செய்தவன், ஆரத்தித் தட்டிலிருந்த குங்குமத்தை எடுத்து அவளது நெற்றியில் வைத்துவிட்டுச் செல்லவும், பூர்ணிமாவிற்கு ஜிவ்வென பறப்பது போலிருந்தது.

திரும்பியவள், கண்களில் குறுகுறுப்புடன் தன்னையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த விஷாலைக் கண்டதும், எங்கிருந்தோ ஓடிவந்த வெட்கம் அவளைப் பற்றிக் கொண்டது.

கற்பூரத்தட்டை வைத்துவிட்டுத் அறைக்கு ஓடிச்சென்றவள், ஜன்னலில் அமர்ந்து கொண்டாள். மனம் தனக்குப் பிடித்தப் பாடலை உற்சாகத்துடன் பாடியது.

“பூங்குயில் சொன்னது காதலின்

மந்திரம் பூமகள் காதினிலே

பூவினைத் தூவிய பாயினில்

பெண்மனம் பூத்திடும் வேளையிலே

நாயகன் கை தொடவும்,

அந்த நாணத்தைப் பெண் விடவும்.”

நாணம் மிகுதியில் தன் கைகளிலேயே முகம் புதைத்துக்கொண்டாள்.

இதே ரிஷி நந்தன் ஆரம்பத்தில் தன்னைத் தொட்ட போது என்ன அமர்க்களம் செய்தோம்? என்று எண்ணிக்கொள்ள அவளுக்கே சிரிப்பாக வந்தது.

ஆரம்பத்தில் அவன் தொடுகைகள்… பேசிக்கொண்டிருக்கும் போதே சட்டென அவள் மடியில் படுத்துக்கொள்வது, அவளது விரல்களுடன் விரல்களை கோர்த்துக்கொள்வது என்று சில செயல்கள் அவஸ்தையாக இருக்கும்.

அன்றொரு நாள் மழை பொழிந்து கொண்டிருந்த மாலை நேரம்..., ரிஷி நந்தன் படித்துக்கொண்டிருந்த பூர்ணிமாவிடம், “பூர்ணா... வாவா மழை பெய்யுது. நாம போய் ஜாலியா விளையாடிட்டு வரலாம்” என்று அழைத்தான்.

“வேண்டாம் நந்தா..., இந்த மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும். எனக்கு ரெண்டு நாளில் எக்ஸாம் இருக்கு” என்று மறுத்தவள், “நீங்களும் போகக்கூடாது. உங்க ரூமுக்குப் போய்ப் பாட்டுக் கேளுங்க... இல்லனா ஏதாவது புக் படிங்க” என்று சொல்லிவிட்டுத் தன் பாடத்தைத் தொடர்ந்தாள்.

சிறிதுநேரம் அப்படியும் இப்படியும் நடந்துக் கொண்டிருந்தவன், பூர்ணிமா கவனிக்காத நேரம் பார்த்து, வெளியே சென்று விட்டான். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தவள், வேலையாட்களின் பேச்சையும் கேட்காமல் தானும் தெப்பலாக நனைந்து அவர்களையும் மழையில் இழுத்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்தவனை கோபத்துடன் பார்த்தாள்.

“நந்தா! என்ன இது?” என்று சப்தமாக அதட்டினாள்.

“மழை பூர்ணா! ஜாலியாயிருக்கு நீயும் வா...” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே வேகமாக அவளது கையைப் பற்றி மழையில் இழுத்து விட்டான்.

தன்னைச் சுதாரித்துக் கொள்வதற்குள் முழுதுமாக நனைந்தவள் கோபத்துடன், “ச்சே..., நான் சொல்றதைக் கேட்கல இல்ல என்கிட்ட பேசாதீங்க...” என்று வீட்டினுள் சென்றவள் துண்டை எடுத்துப் பரபரவெனத் தலையைத் துடைத்துக் கூந்தலை அடியில் முடிச்சிட்டுக் கொண்டே கதவை மூடத் திரும்பினாள்.

தண்ணீர் வழிய முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு அறையின் வாசலில் நின்றிருந்தான் ரிஷி நந்தன். அவன் நின்றிருந்த தோரணையைக் கண்டதும் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டாள்.

“பூர்ணா…” என்று ஆரம்பித்தவனை, “பூர்ணாவுக்கு என்ன? நான் சொல்றதைக் கேட்காதவங்க, இங்கே வரத் தேவையில்ல. உங்க ரூமுக்குப் போய் உடுப்பை மாத்துங்க...” என்று சொல்லிவிட்டுத் தன் பீரோவைத் திறந்தாள்.

அவளுக்குப் பின்னால் வந்து நின்றவன், “சாரி பூர்ணா! இனி, இப்படிச் செய்யமாட்டேன் என்கிட்டப் பேசு. ப்ளீஸ்!” என்று கெஞ்சலாகச் சொன்னான்.

நைட்டி ஒன்றை எடுத்தபடி, “உங்க சாரியை நீங்களே வச்சிக்கோங்க...” என்று அதட்டலாகச் சொல்லிவிட்டுச் சிரிப்பை அடக்கியபடி அங்கிருந்து நகர்ந்தவளை, பின்னால் நின்றிருந்த ரிஷியின் கரங்கள் இடுப்பைச் சுற்றி வளைத்தன.

ஒரே ஒரு கணம் என்ன நடந்தது என்று அவளுக்குப் புரிந்து கொள்ளமுடியாமல் தடுமாற்றமாக இருந்தது. இடுப்பைச் சுற்றி அணைத்தவன், அவளது கழுத்தில் முகத்தை வைத்தபடி நிற்க, அவளது கால்கள் பலமிழந்து தள்ளாடின.

இடுப்பைச் சுற்றியிருந்த கரத்தை எடுத்து விடக்கூட முடியாமல், அவள் கைகள் நடுங்கின. முதுகுத் தண்டில் சில்லெனப் பய உணர்வு தோன்ற, மயங்கி விழுந்து விடுவோமோ என்று பயமாக இருந்தது.

“நந்தா! கையை எடுங்க...” நடுக்கத்துடன் குரல் அவளுக்கே கேட்காத வண்ணம் இருந்தது.

“மாட்டேன். இப்படியே இருக்கலாம் இதுவே நல்லா இருக்கு...” என்று கண்ணை மூடிக்கொண்டு மனத்தில் எந்தவித கல்மிஷமும் இல்லாமல் சொன்னான்.

“ப்ளீஸ் நந்தா! நான் உங்க சாரியை ஏத்துக்கறேன். தள்ளி நில்லுங்க...” என்று கூறும்போது அவளுக்கு அழுகையே வந்துவிட்டது.

அழுகையில் அவளது உடல் குலுங்க, கண்களைத் திறந்து பார்த்தான்.

“அழாதே பூர்ணா! இனி, இப்படி மழையில் நனையமாட்டேன். நீ சொல்றதைக் கேட்கிறேன்” என்று அவளெதிரில் வந்து நின்று கண்ணைத் துடைக்க முயன்றான்.

“முதல்ல வெளியே போங்க...” என்று அதட்டலாகச் சொல்ல, தயங்கி நின்றவன் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி அறையிலிருந்து வெளியேறினான்.

மறுநாள் அவளது அறைக்கதவு திறக்கப்படாமலேயே இருக்க, லஷ்மி அம்மா அவளது அறைக்கு வந்தார். பலமுறை அவள் பேர் சொல்லி அழைத்தும் சப்தமில்லாமல் போகப் பயந்துவிட்டார். விஷால் வந்து அழைத்தும் கதவு திறக்கவில்லை.

பார்த்துக்கொண்டு நின்றிருந்த ரிஷிக்குத் தவிப்பாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தவன் விஷாலை விலக்கிக் கொண்டு, “பூர்ணா... கதவைத் திற பூர்ணா...” என்று தட்டினான்.

இத்தனை நேரம் அனைவரும் சப்தமிட்டு தட்டியதாலா, இல்லை ரிஷிநந்தனின் குரலில் விழித்தாளோ படுத்திருந்தவள் மெல்ல அசைந்தாள். சிரமத்துடன் எழுந்துவந்து கதவைத் திறந்தவள், கூடியிருந்த அனைவரையும் பார்த்தபடியே மயங்கி விழுந்தாள்.

வெளிச்சம் கண்ணில் பட உடல் எங்கோ பறப்பது போலிருந்தது.

“என்ன பூரி... எப்படியிருக்க?”

மலங்கமலங்க விழித்தவள், ‘எனக்கு என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் கொஞ்சம் சிரமத்துடன் எழுந்தவளைக் கைத்தாங்கலாகப் பிடித்து உட்கார வைத்தான்.

“விஷால் அண்ணா! எனக்கு என்ன ஆச்சு?”

“ஹப்பா! நல்லவேளை. விஷால் அண்ணான்னு கூப்பிட்டு, என் வயிற்றில் பாலை வார்த்த. எனக்கு என்ன ஆச்சுன்னு மொட்டையா கேட்டிருந்தா, நான் மயக்கம் போட்டு விழுந்திருப்பேன். ஒருத்தனைச் சமாளிப்பது போதாமல் இன்னொன்னா?”

அவனது ஜோக்கை ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை என்று உணர்ந்தவன், “ரெண்டு நாளா எங்களையெல்லாம் பயமுறுத்திட்டியே பூரி...” என்றான் ஆற்றாமையுடன்.

“ரெண்டு நாளாகவா?”

“அதுகூடத் தெரியாம... ஹாயா ரெஸ்ட் எடுத்துட்டு, நாங்களெல்லாம் உனக்குப் பணிவிடை செய்துட்டு பயத்தோட இருந்தோம். இந்த ரிஷிதான் பாவம். அவன்தான் ராத்திரியெல்லாம் உன்கூடவே இருந்து, ஈரத்துணியால் நெற்றியில் ஒத்தடம் கொடுத்தான். இப்போதான் அசந்து தூங்கினான்” விஷால் சொல்லிக்கொண்டிருக்க அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“எல்லாரும், நீ மழையில் நனைந்ததால் தான் உனக்கு ஜுரம் வந்ததுன்னு நினைச்சிட்டு இருக்காங்க. ஆனால், எனக்கு என்ன காரணம்ன்னு தெரியும்...” என்றதும் திடுக்கிடலுடன் அவனைப் பார்த்தாள்.

“ரிஷி சொன்னான்...” என்றான்.

“ஓ...” என்றவளது குரலில் ஸ்ருதி இறங்கியிருந்தது.

அவளருகில் அமர்ந்தவன், “பூர்ணிமா! அவன் யதார்த்தமா தான் நடந்துட்டிருக்கான்” என்றதும் அவள் அழத் துவங்கினாள்.

“ஹே... நான் சொல்றேன் இல்ல. அவன் இப்போதான் கொஞ்சங் கொஞ்சமாக குணமாகிட்டு வரான். அவனும், இப்போதைக்கு ஒரு குழந்தையைப் போலத் தான் பூர்ணிமா...” என்று அவளுக்குப் புரியவைக்க முயன்றான்.

“என்ன பேசறீங்க நீங்க? என் அறைக்குள் நடந்ததால போச்சு. இதுவே, அத்தனைப் பேருக்கும் முன்னால் நடந்திருந்தா, என்னைத் தானே எல்லோரும் கேவலமாக நினைச்சிருப்பாங்க” கோபத்தில் பேச்சுக் குழறினாலும், சொல்லவந்ததைச் சொல்லி முடித்தாள்.

“ஓகே ஓகே... உன் நிலைமை எனக்குப் புரியுது. உன் நிலையில் நான் இருந்திருந்தாலும் அதையே தான் செய்திருப்பேன். ஆனா, நீ அவன் நிலைலயிருந்து யோசிச்சிப் பாரேன்” என்று என்னென்னவோ சொல்லி அவளைச் சற்று தேற்றினான்.

“இனி, அவன் இப்படி நடந்துக்கமாட்டான். நான் பார்த்துக்கறேன் சரியா?”

“ம்ம்...”

“தேங்க்ஸ்! நீ குளிச்சிட்டு வா. கீழே வந்து எல்லோரோடும் பேசிட்டிருந்தா உனக்குக் கொஞ்சம் தெம்பாக இருக்கும்...” என்று சொல்லிவிட்டு சென்றான்.

“இரண்டு நாட்களாக வீடு வீடாகவே இல்லை” என்று வேலையாட்களும், “நீ இப்படிக் கண்ணுக்கு முன்னால, நடமாடிட்டிருந்தாலே போதும். ரெண்டு நாளா தவிச்சிப் போயிட்டேன்...” என்று லஷ்மி அத்தையும் சொல்ல, அவளுக்குச் சங்கடமாக இருந்தது.

அவளே ரிஷிநந்தனின் அறைக்குச் சென்று பேச, அவனுக்கும் உற்சாகமாகிவிட்டது. அவனது சிரிப்பைக் கண்டதும் தான், அவளது அகமும் மலர்ந்தது.

இருவரையும் பார்த்த விஷால், தனக்குள் சிரித்துக்கொண்டான்.

நாட்கள் இறக்கைக் கட்டிக்கொண்டு பறந்தன. பூர்ணிமா, பள்ளி இறுதித் தேர்வை நல்லபடியாக முடித்துவிட்டு வந்தாள். விஷால் அவளிடம் கல்லூரியில் சேருவது பற்றிப் பேசினான்.

“பூர்ணிமா! இது லைஃப்ல முன்னேற வேண்டிய தருணம். நீ ரெசிடென்ஷியல் காலேஜில் சேர்ந்துப் படி.”

தயங்கியவள், “இல்லண்ணா நந்தா...” என இழுத்தாள்.

“அடேங்கப்பா! எங்களுக்கும் அவன்மேல அக்கறையிருக்கு...” என்று சிரித்தவன், “உன் மேலேயுமிருக்கு. இங்கேயிருந்து நீ காலேஜ் போய் வர்றது உனக்கு நேர விரயம், அலைச்சல். ஹாஸ்டல்ல சேர்ந்துட்டா, வெள்ளிக்கிழமை ஈவ்னிங் வீட்டுக்கு வந்துட்டு, திங்கட்கிழமை காலைல ஹாஸ்டலுக்குக் கிளம்பிடலாம்” என்று பொறுமையாக விளக்கினான்.

அவள் மனமோ, சமாதானம் அடையவில்லை. நந்தாவைப் பார்க்காமல் இருப்பது அவளுக்கே கடினம் என்று தோன்றியது. எப்படிச் சொல்வது என்று புரியாமல், தவிப்புடன் அமர்ந்திருந்தாள்.

அவளது தவிப்பு எதற்கென்று புரிய, விஷாலுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தது. அதேநேரம் பாவமாகவும் இருந்தது.

“மூணு வருஷம் தானே… ஓடியே போயிடும்.”

“ம்ம்... நந்தாவிடம் எப்படிச் சொல்றது?”

வாய்விட்டுச் சிரித்தவன், “அவனைக் கூடச் சமாளிக்கலாம் போல. இப்போ, உன்னைத் தான் எப்படிச் சம்மதிக்க வைக்கறதுன்னு தெரியல...” என்று சொல்ல பூர்ணிமா தன் குட்டு வெளிப்பட்டுவிட்டதோ... என்று தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவளை, பாசத்துடன் பார்த்தான்.

யோசிக்கட்டும் என்று அவளுக்குத் தனிமை கொடுத்துச் சென்றான்.

யோசித்தவளுக்கு, விஷால் சொன்னது சரி என்று பட, அவனைத் தேடிச்சென்றாள்.

“நீங்க சொன்னதுக்குச் சம்மதிக்கிறேன். அத்தையிடமும்...”

“உங்க, அத்தையிடம் நேத்தே பேசிட்டேன். மருமகளோட பதிலுக்காகதான் காத்திருக்கேன்” என்று புன்னகைத்தான்.

பூர்ணிமா திடுகிட்ட மனத்துடன், ‘மருமகள் என்று வெறும் வார்த்தைக்காகச் சொன்னானா! இல்லை, என்னைப் புரிந்து கொண்டு சொல்கிறானா?’ என எண்ணிக்கொண்டு அவனை ஓரப்பார்வை பார்த்தாள்.

ஆனால், அவன் ஏதோ வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க, அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அதேநேரம் மருமகள் என்ற ஒற்றை வார்த்தை அவள் முகத்தையே பிரகாசமாக மாற்றியது. இது எத்தனைத் தூரம் சாத்தியம் என்று அவளுக்கு நினைக்கத் தோன்றவேயில்லை.

“பூர்ணா! கங்கிராட்ஸ்” என்ற ரிஷி கையிலிருந்த ஸ்வீட்பாக்ஸிலிருந்து லட்டு ஒன்றை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட, பூர்ணிமா மறுக்காமல் உண்டாள்.

லஷ்மி அம்மாவும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

அருகில் வந்த சௌமினி, “பாஸ் பண்ணிட்டியாமே கை கொடு” என்று சொல்ல, முதன்முறையாக தன்னிடம் இன்முகத்துடன் பேசுபவரை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டே கையை நீட்டினாள்.

“கோவிலுக்குப் போய்ட்டு வரலாமா?” என்று அவர் கேட்டதை, இன்னும் நம்பமுடியாமல் நின்றாள்.

“ஆன்ட்டி!” என்று வியப்புடன் பார்த்தாள்.

“என்னம்மா! இவளா இப்படி மாறிட்டான்னு ஆச்சரியமா இருக்கா?” எனக் கேட்டார்.

“அதெல்லாம் இல்லை ஆன்ட்டி! கோவிலுக்குத் தானே. தாராளமாகப் போகலாம்” மகிழ்ச்சியுடன் சொன்னாள்.

“சித்தி! நானும் வரேன்” என்று ரிஷிநந்தனும் உடன் கிளம்பினான்.

“இல்லை நந்தா...” என்று ஆரம்பித்த பூர்ணிமாவை இடை மறித்தார் அவர்.

“வரட்டும்மா! டாக்டர் தான் வெளியே கூட்டிட்டுப் போகலாம்ன்னு சொல்லிட்டாரே... முதல்ல கோவிலுக்கே போகலாமே. அக்கா, நீ, நான், விஷால் இத்தனைப் பேர் இருக்கோமே பார்த்துக்கலாம்” என்றார்.

“விஷால்! கார் சாவியைக் கொடு நான் ஒட்டுறேன்...” என்றான் ரிஷி.

“ஐயா சாமி! நாம கோவிலுக்குத் தான்டா கிளம்பறோம்... நீ முதலில் போய் ஸ்டடியா உட்கார கத்துக்கோ. பூரி! இவனைப் பிடித்து உனக்கும், பெரியம்மாவுக்கும் நடுவில் போடு...” என்றான்.

“நீங்க வாங்க நந்தா” என்று அவனுக்கு வழிவிட்டாள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, வெளியே செல்வது ரிஷி நந்தனுக்குக் குதூகலத்தைக் கொடுக்க, ஒவ்வொன்றையும் பார்த்து இது என்ன? அது என்ன? என்று குழந்தையைப் போலக் கேட்டுக்கொண்டே வந்தான்.

அவனுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லிக்கொண்டு வந்தனர் பூர்ணிமாவும், லஷ்மி அம்மாவும்.

தரிசனம் முடித்து பிரகாரத்தைச் சுற்றி வந்தனர். பின்னாலிருந்த மண்டபத்தில் ஒரு கல்யாணம் நடந்து கொண்டிருந்தது. ரிஷிநந்தன் கல்யாணத்தைப் பார்த்துவிட்டுப் போகலாமெனச் சொல்ல, லஷ்மி ஒரு ஓரமாக அமர்ந்து கொள்ள, மற்ற நால்வரும் அங்கிருந்த மண்டபத்தின் அருகில் நின்றனர்.

அட்சதைத் தூவி ஆசிர்வதிக்க, கல்யாணம் நடந்தது. தன் மீது விழுந்த அட்சதைகளை பார்த்துக் குஷியானவன், அருகில் தொங்கிக்கொண்டிருந்த பூச்சரத்திலிருந்த பூவை உருவித் தன் மீதே போட்டுக்கொண்டு சிரித்தான்.

“ஷ்... நந்தா! இப்படியெல்லாம் செய்யக்கூடாது. பாருங்க எத்தனைப் பேர் உங்களையே பார்க்கிறாங்க” என்று அவனைக் கட்டுப்படுத்தினாள்.

“அவங்க மேலே போடுறாங்களே பூர்ணா!”

“அவங்களுக்குக் கல்யாணம். ஆசிர்வாதம் செய்ய பெரியவங்க பூத்தூவி வாழ்த்துறாங்க...”

“அப்போ கல்யாணத்துக்குத் தான் இப்படிப் போடுவாங்களா?”

“ஆமாம்...”

“எதுக்குப் பூர்ணா கல்யாணம் செய்றாங்க?”

அவனது அத்தனைக் கேள்விக்கும் பதில் சொல்லிக்கொண்டு வந்தவளுக்கு, என்ன சொல்வதென தெரியாமல் உதவிக்கு அருகிலிருந்த சௌமினியைப் பார்த்தாள்.

அவரும் சிரித்துக்கொண்டே, “கல்யாணம் செய்துகிட்டா ரெண்டு பேரும் ஒரே வீட்டில், எப்போதும் ஒண்ணா இருக்கலாம் அதுக்குதான்” என்று சொன்னதைத் தீர்க்கமாகக் கேட்டுக் கொண்டான்.

அவனது பாவனையைப் பார்த்த பூர்ணிமா, சிரித்துக்கொண்டாள்.

ஆனால், இந்தப் பதில் தன் வாழ்க்கை பாதையை மாற்றப்போகிறது என்று அப்போது அவளுக்குத் தெரியவில்லை.
 
  • Love
Reactions: Rithi