இவன் வேற மாதிரி - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,641
1,247
113
அத்தியாயம் – 19

இரவெல்லாம் மண்ணில் புரண்டு கதறி அழுது தீர்த்தவர், விடியலின் முன்னே எழுந்து சென்று குளிக்க வெந்நீர் போட்டுவிட்டு, நின்று யோசித்தார். அவரது மனம் பல கணக்குகளைப் போட்டது. ஒரு தீர்மானத்திற்கு வந்தவர் சூடான வெந்நீரில் தலை முழுகினார். அதோடு அவரது கவலைகளையும் சேர்த்து மூழ்கி விட்டு வெளியே வந்தவர், பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து விட்டு சற்று நேரம் கண் மூடி அமர்ந்து விட்டார்.

ஹாலில் தெரிந்த வெளிச்சத்தில் உறக்கம் கலைய எழுந்த நதியா மெல்ல வ்வெளியே வந்து பார்த்தாள். அவளின் நடமாட்டத்தை கண்டு கண்களை திறந்தவர், “எழுந்திட்டியாம்மா?” என்று கேட்டு பூஜையறையிலிருந்து வெளியே வந்து கரம் பற்றி குளியலறைக்கு இழுத்துச் சென்றார்.

ஒரு ஸ்டூல் போட்டு அவளை அமர செய்தவர், சமயலறைக்குச் சென்று ஒரு பெரிய கிண்ணம் முழுவதும் மஞ்சளை கரைத்து எடுத்து வந்திருந்தார். பக்கத்தில் சுட-சுட வெந்நீரை கலந்து வைத்துவிட்டு, ஒரு சொம்பு தண்ணீரை அவளது தலையில் ஊற்றி “இந்த நிமிஷத்திலிருந்து நீ துளசிச் செடி மாதிரி புனிதமானவ. உன்னை சுற்றிக் கிடந்த அழுக்குகள் எல்லாம் கரைஞ்சு போச்சு ” என்று கூறி மஞ்சளை எடுத்து உடல் முழுவதும் அழுத்தி தேய்த்து தண்ணீரை ஊற்றினார்.

அவரின் செயலில் திகைத்து பின் கண்ணீர் பொங்க இரு கை கூப்பி “ஆண்ட்டி!” என்றாள்.

“அத்தை! உன்னோட மாமியார். விஷாலோட அம்மா”.

அதன் பின்னர் அவளுக்கு பேச்சு வராமல் போக, அவரோ அவளை சுத்தபடுத்தி தலையை துவட்டி அழைத்து வந்தவர், தன்னிடமிருந்த புதிய பட்டுப் புடவை ஒன்றை அவளுக்கு கொடுத்து உடுத்திக் கொள்ள செய்தார். பிரிட்ஜிலிருந்து பூவை எடுத்து தலையில் வைத்துவிட்டு, நெட்டி முறித்து திருஷ்டி எடுத்தவர் “இனிமே உனக்கு எல்லாம் நல்லதே நடக்கும்” என்று கூறிவிட்டு ஹாலிற்கு சென்றார்.

செல்வநாயகம் உறக்கம் கலைந்து எழுந்து வந்தவர் மனைவியின் செயலை கண்டு ஒன்றும் புரியாமல் “என்ன பத்மா? என்ன பண்ணிட்டு இருக்க?” என்றார்.

அவரின் முகம் பார்க்காது “ஏழரை ஒன்பது நல்ல நேரம். நம்ம வீட்டில் நம்ம கண் முன்னாடி விஷால் அவ கழுத்தில் தாலி கட்டப் போறான். நீங்க போய் குளிச்சிட்டு வந்துடுங்க” என்றார்.

நெற்றியை சுருக்கி “என்ன? ஏன் பத்மா இங்கே செய்யணும்? அவங்க வீட்டிலும் பேசிட்டு மண்டபத்தை பிடிச்சு சொந்தக்காரங்க மத்தியில் செய்யலாம் இல்ல?”

காப்பியை கலந்து அவர் கையில் கொடுத்து விட்டு “அதுக்கெல்லாம் நேரமில்லை. நான் சொன்னதை செய்ங்க” என்றுவிட்டு விஷாலின் அறைக் கதவை தட்டினார்.

மனைவி ஏன் இப்படி செய்கிறாள் என்று புரியாமல் “கிருஷ்ணாவை வர சொல்லிட்டியா?” என்று அவரின் கேள்வி பத்மாவின் காதை தொட்டதும் அவரது மேனி இறுகிப் போனது.

“சொல்லல! நமக்கு நேரமில்ல” என்றார்.

செல்வநாயகம் சற்றே குழம்பி போனவர் “என்ன நீ எதை கேட்டாலும் நேரமில்லேன்னு சொல்லிட்டு இருக்க?” என்று எரிந்து விழுந்தார்.

விஷால் கதவை திறந்ததும் செல்வநாயகத்தின் பக்கம் திரும்பியவர் “மணி இப்போவே ஏழு. நீங்க குளிச்சிட்டு வந்தா தாலி கட்டுறதை பார்க்கலாம். இல்லேன்னா நீங்களும் இல்லாம நடக்கும்” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.

அவரின் அந்த பிடிவாதமான பதிலில் அதிர்ந்து போன செல்வநாயகம் விஷாலைப் பார்க்க “என்னப்பா?” என்றான்.

பத்மாவோ சமயலறையில் இருந்தபடி “நீ போய் குளிச்சிட்டு அப்பா கிட்ட பட்டு வேட்டி சட்டை வாங்கி போட்டுக்கிட்டு தயாராகு. நேரத்தை வீணாக்காதே” என்றார் சத்தமாக.

முதல் நாள் நடந்தது எல்லாம் விஷாலுக்கு நினைவுக்கு வர, தந்தையிடம் தலையசைத்து விட்டு நதியா இருந்த அறைக்குச் சென்றான். அங்கே அவள் தயாராகி அமர்ந்திருப்பதை பார்த்ததும், அன்னையின் மனநிலை புரிந்தது. எதுவும் சொல்லாமல் தந்தையிடம் வந்தவன் “அம்மா சொல்றதை கேட்போம் பா. வாங்க வந்து வேட்டி சட்டை எடுத்துக் கொடுங்க” என்றான்.

மகனாவது அன்னையிடம் சண்டை போடுவான் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்க, அவனும் அமைதியாக அவள் சொன்னதற்கு தலையாட்டிவிட, வேறு எதுவும் சொல்லத் தோன்றாமல் அவனை அழைத்துக் சென்று அவன் கேட்டவைகளை எடுத்துக் கொடுத்தார்.

சுமார் அரை மணி நேரத்தில் அனைவரும் தயாராகி இருக்க, அங்கு என்ன நடக்கின்றது என்று ஒவ்வொருவரின் மனதிலும் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் பத்மாவிடம் கேட்க முடியாமல் அவர் சொன்னதை செய்து கொண்டிருந்தனர். அம்மா செய்து கொண்டிருப்பது சரியானது என்று நித்யாவும், விஷாலும் மனதிற்குள் பாராட்டிக் கொண்டிருந்தனர்.

மகனையும், மருமகளையும் பூஜை அறையில் நிற்க வைத்து கடவுளின் முன்பு கண் மூடி மனதார பிரார்த்தனை செய்தவர், ஒரு சில ஸ்லோகங்களை எல்லாம் சொல்லி பூஜை செய்து முடித்துவிட்டு, அம்மனின் பாதத்தில் இருந்த தாலிக் கொடியை எடுத்து மகன் கையில் கொடுத்தார்.

அவன் அதை வாங்கிக் கொண்டதும் “எந்த காலத்திலேயும் அவளை கை விட மாட்டேன், வார்த்தையால் கூட அவளது மனதை காயப்படுத்த மாட்டேன்னு மனதார சத்தியம் செய்த பின்பு அவள் கழுத்தில் கட்டு விஷால்” என்றார்.

அன்னை சொன்னதை செய்தவன் அங்கிருந்தவர்களின் ஆசியுடன் அவளது கழுத்தில் இரெண்டாம் முறையாக தாலியை கட்டினான். நதியாவின் உடல் லேசாக நடுங்க, கண்களிலிருந்து விழுந்த கண்ணீர் துளி, தாலிக் கயிற்றை நனைத்தது.

அவளது கண்ணீர் அங்கிருந்தவர்கள் அனைவரின் மனதையும் பாதித்தது. அதிலும் செல்வநாயகத்தை தவிர மற்ற மூவருக்கும் அதற்கான காரணம் தெரியுமாதலால், அவளது மனநிலையை நன்றாக உணர்ந்தனர்.

விஷாலை அவளது நெற்றியில் குங்குமம் வைக்க சொல்லிவிட்டு, இருவரையும் ஆசிர்வாதம் செய்து நதியாவிடம் “இனி, உன் கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் விழக் கூடாது. உன்னோட கண்ணீரோட பலம் உனக்கு தெரியனும். தேவையற்ற குப்பைகளுக்காக கண்ணீரை சிந்தாதே. இவன் தான் உன் நிகழ்காலம்,எதிர்காலம் எல்லாம். நீங்க எல்லாம் தெளிவாக சிந்திக்க தெரிந்தவர்கள். உங்க வாழ்க்கை எப்படி இருக்கணும்னு உட்கார்ந்து பேசி முடிவு பண்ணுங்க. படி, வேலைக்கு போ. பிள்ளைகள் பெற்று நல்ல முறையில் வளர்த்து இந்த சமூகத்துக்கு நல்ல குடிமக்களாக இருங்க” என்று பெரிய பிரசங்கத்தை கொடுத்தார்.

மனைவியின் பேச்சில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று யோசித்தார் செல்வநாயகம். அன்னையின் பேச்சில் தெரிந்த விரக்தியை உணர்ந்து கொண்ட விஷால் அவரை தோளோடு அணைத்து “நிச்சயமாக அம்மா! உங்க பிள்ளையா நீங்க சொன்ன மாதிரி வாழ்வோம்” என்றான் கலங்கிய கண்களுடன்.

நித்யாவும் நதியை கட்டிப் பிடித்துக் கொண்டு “நானிருக்கேன் உனக்கு. அண்ணன் எதுவும் திட்டினா என்கிட்டே சொல்லு” என்றாள் கலங்கிய கண்களுடன்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,641
1,247
113
அதைப் பார்த்துக் கொண்டிருந்த பத்மா “நித்தி! அவ உன்னோட பிரெண்ட் இல்ல அண்ணி. இனிமே மரியாதையா பேசிப் பழகு. அண்ணனும், அண்ணியும் தாய் தந்தைக்கு சமம். உனக்கான எல்லாம் இனி அவங்க தான் செய்வாங்க” என்றார்.

நித்தியோ காலை உதைத்து “மா! அவளுக்கும் என் வயசு. நான் எப்படி?” என்று கேட்டுக் கொண்டிருக்க, விஷாலுக்கும், செல்வநாயகத்துக்கும் பத்மாவின் பேச்சிலிருந்த விஷயம் நெருடலாக பட்டது.

“நாம இருக்கும் போது நித்திக்கு செய்ய வேண்டியது எல்லாம் ஏன் விஷால் செய்யணும்?”

கண்களில் வெறுமையுடன் “ஒரு பொறுப்பு இருக்கு என்பதை நினைவு படுத்தினேங்க” என்றார்.

அப்போது செல்வநாயகத்தின் போன் அழைக்க, அங்கிருந்து வெளியே சென்றவர் சற்று நேரம் பேசிவிட்டு உள்ளே வந்தார். அவரது முகத்தில் குழப்பம் மண்டிக் கிடந்தது. பெண்கள் மூவரும் சமயலறையில் இருக்க, விஷாலிடம் வந்தவர் “தோட்டத்துக்கு வா விஷால். உன் கிட்ட பேசணும்” என்றழைத்து விட்டு சென்று விட்டார்.

அவரின் முகம் பார்த்து எதுவோ பிரச்சனை என்று புரிந்து கொண்டவன் அவரின் பின்னே செல்ல, அங்கே அவர் யோசனையுடன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். பயம் ஒருபுறம், அதிர்ச்சி ஒருபுறம் என்று அவர் முகத்தில் பல நிறங்கள் வந்து போய் கொண்டிருந்தது.

“அப்பா!”

சட்டென்று நின்று “விஷால்! என் பிரெண்ட் மூர்த்தி போன் பண்ணினான். சுனிதாவோட அப்பா. அவன் சொல்றதெல்லாம் எனக்கு ஒன்னும் புரியல. ஆனா கிருஷ்ணாவை நினைச்சு பயமா இருக்கு” என்றார்.

“என்னப்பா சொல்றீங்க? அவர் என்ன சொல்றார்?”

“கிருஷ்ணா மும்பையில தப்பான தொடர்புகள் எல்லாம் வச்சிருக்கானாம். உன் பையனை விசாரின்னு சொல்றான்-டா”.

அவர் கையைத் தட்டிக் கொடுத்தவன் “அப்படி எல்லாம் இருக்காதுப்பா. நீங்க ஒன்னும் பதட்டப்படாதீங்க”.

“இல்லடா போன மாசமே போன் பண்ணி சொன்னான். அதை அப்போ சீரியஸா எடுத்துக்கல. ஆனா இப்போ நீ ஒருமுறை இங்கே வந்துட்டு போ. அப்போ தான் உண்மை தெரியும்னு சொல்றான்” என்றார் டென்ஷனாக.

“அப்பா! பிரச்சனை எதுவும் இருக்காது. நீங்க டென்ஷன் ஆகாதீங்க. மும்பை பார்க்கணும் தானே. நானும் கூட வரேன் போகலாம்”.

“நம்ம கிருஷ்ணா தப்பானவனாடா?” என்றார் கலவரமாக.

“அப்பா! விடுங்க!” என்று அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.

விஷாலின் மனதிற்குள் அப்பா சொன்ன விஷயம் உறுத்த, மெல்ல போனை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றவன் மூர்த்திக்கு அழைத்து பேசினான். அவர் கூறிய விஷயங்கள் கிருஷ்ணாவைப் பற்றி புட்டு புட்டு வைக்க, தலையைப் பிடித்தபடி படுக்கையில் அமர்ந்து விட்டான். சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன் ஒரு முடிவிற்கு வந்திருந்தான்.

இதை உடனடியாக முடித்தே ஆக வேண்டும் என்றெண்ணியவன், அறைக் கதவை திறந்து கொண்டு வந்து “மா! எனக்கு மும்பைல ஒரு மீட்டிங் ஏற்பாடாகி இருக்கு. ஒரு மணி நேரத்தில் கிளம்பனும்” என்றான்.

“என்னடா இது திடீர்னு?”

“மா! போகாம இருக்க முடியாதும்மா”.

செல்வநாயகம் மகன் தனக்காக தான் செல்கிறான் என்று புரிந்து கொண்டு “நானும் வரேன் விஷால். மூர்த்தியை பார்த்து நாளாச்சு” என்றார்.

அவரை முறைத்த பத்மா “நல்லாருக்கு நீங்க பேசுறது. அவன் பொண்டாட்டியை கூட்டிட்டு போனாலும் அவங்க வீட்டு ஆட்கள் கிட்ட பேசி சரி பண்றதுக்கு வசதியா இருக்கும். அதை விட்டுட்டு நீங்க எங்கே போறீங்க?” என்று கடுப்படித்தார்.

தந்தைக்கு ஆதரவாக “மா! அப்பா வரட்டுமே. அங்கிள் வீட்டில் இறக்கி விட்டுட்டு நான் என் வேலையை பார்க்கிறேன்” என்றான்.

“அப்போ இவ எங்களோட இங்கே இருப்பாளா? இவளையும் கூட்டிட்டு போ. அவங்க அக்கா வீட்டில் பேசி சமாதானம் பண்ணுகிற வேலையை பார்”.

“என்னமா நீங்க? நான் ஆபிஸ் வேலையா போறேன். எல்லோரையும் கூட்டிட்டு பிக்னிக் போகிற மாதிரியா போக முடியும்?”

“அப்பாவை விட்டுட்டு இவளை கூட்டிட்டுப் போ” என்று முடித்துக் கொண்டார்.

அவரோ “இல்ல பத்மா நானும் போகணும். மருமகளும் வரட்டும். ஆனா நான் கண்டிப்பா போயாகனும்” என்றார் அழுத்தமாக.

கணவரை அழுத்தமாக பார்த்தவர் “நீங்க போறேன்றீங்க சரி... ஆனா பின்னாடி வருத்தப்படக் கூடாது” என்றவர் அங்கிருந்து சென்று விட்டார்.

மனைவி சென்ற திசையே பார்த்த செல்வநாயகம் “என்னடா இவ இரண்டு நாளா மந்திரிச்சு விட்ட மாதிரியே சுத்துறா. என்ன சொல்றான்னே புரியல’ என்று எரிச்சல் பட்டார்.

“விடுங்கப்பா அம்மாவுக்கு என்னையும் தியாவையும் பற்றி கவலை”.

மருமகளை பார்த்து “நீ போய் கிளம்பும்மா” என்றவர் நித்யாவிடம் “நீ வேணா லீவ் போட்டுட்டு அம்மாவுக்கு துணையா இரு” என்றார்.

சமயலறையிலிருந்து “எதுக்கு? எல்லோரும் அவங்க அவங்க வேலையை ஒழுங்கா செய்ங்க. நித்தி! நீ காலேஜுக்கு கிளம்பு. ஒருத்தரும் என் பேச்சை கேட்கிறதில்லை” என்று சத்தமாக டம்ளரை மேடை மீது வைத்தார்.

தந்தையும், மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு மும்பைக்கு கிளம்ப தயாரானார்கள். நதியாவும் தான் உடுத்தி இருந்த பட்டுப்புடவையை மாற்றி விட்டு சுடிதாரை அணிந்தவளுக்கு அக்காவையும், மாமாவையும் எண்ணி கவலையாக இருந்தது. தனது திருமணத்தை எப்படி எதிர்கொள்வார்கள் என்று பயந்தாள். அதே சமயம் இத்தனை பிரச்சனைக்குப் பிறகு மாமியார் தனக்கு ஆதரவாக இருப்பதை எண்ணி நெகிழ்ந்து போயிருந்தாள். கையில் புடவையுடன் அமர்ந்திருந்தவளின் அருகே வந்த பத்மா “என்னமா மாத்திட்டியா? தைரியமா உங்க அக்கா கிட்டேயும், மாமா கிட்டேயும் பேசு. எல்லாம் சரியாகும். இந்தப் புடவையை உன் கல்யாணப் புடவையா பத்திரமா வச்சுக்கோ” என்றவர் அவளது கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டு “எனக்கொரு சத்தியம் செய்து கொடும்மா. நித்தி உனக்கு நாத்தனார் மட்டுமில்ல. ப்ரெண்டும் தான். அவ வாழ்க்கையை நல்லா அமைச்சுக் கொடுக்கிற பொறுப்பை உன் கையில் கொடுக்கிறேன். என் ஸ்தானத்தில் இருந்து நீ தான் எல்லாம் செய்யணும். அவளுக்கு எந்த குறையும் வந்துடக் கூடாது” என்றார் அவளின் கன்னங்களை வருடி.

அவரின் பேச்சில் திகைத்து “நா...நான் எப்படி? நீங்க இருக்கும் போது உங்க பின்னாடி நின்று எல்லாத்தையும் செய்து கொடுக்கிறேன் அத்தை . உங்க பேச்சை மீறி நான் எதையும் செய்ய மாட்டேன்” என்று அவருக்கு சத்தியம் செய்து கொடுத்தாள்.

அவளை இறுக்கி அணைத்து விடுவித்து “பழசை எல்லாம் மறந்திட்டு நீ நல்லா வாழனும். என்னோட ஆசீர்வாதம் உனக்கு எப்பவும் இருக்கும். நல்லபடியா போயிட்டு வா. உனக்கான விடியல் இங்கே காத்திருக்கும்” என்றார்.

*****************************************தொடரும்************************************
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,641
1,247
113
அத்தியாயம் – 20

மூவரும் மும்பை செல்ல கிளம்பி வர, அவர்களுக்கு தேவையானவற்றை செய்த பத்மாவின் முகம் தீர்க்கமாகவும், தெளிவாகவும் இருந்தது. விஷாலுக்கு மட்டும் ஏனோ அந்த தெளிவு ஒரு நெருடலைக் கொடுத்தது. செல்வநாயகமோ மும்பையில் மூர்த்தி பெரியவனை பற்றி என்ன சொல்லப் போகிறானோ என்கிற எண்ணத்திலேயே இருந்தார். நதியாவோ மாமியாரின் பின்னேயே ஒட்டிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள்.

மூவரும் உணவை முடித்துக் கொண்டு கிளம்ப, விஷால் அன்னையை தனியே அழைத்துச் சென்று “என்னமா உங்க முகத்தில் ஏதோ யோசனை தெரியுது? கிருஷ்ணாவை போய் பார்க்க போறீங்களா?” என்றான்.

ஒரு வித நிமிர்வுடன் “யார் கிருஷ்ணா? அவனை ஏன் நான் போய் பார்க்கணும்?” என்றார்.

பட்டென்று அன்னையைக் கட்டிக் கொண்டு கண் கலங்கி “இது போதும்மா! மனசை விட்டுடாதீங்க. தைரியமா இருங்க. நாளைக்கு காலையில வந்துடுவோம்” என்று கூறி விடுவித்தான்.

அவரும் அவனது தோளை தட்டி “நதியா வீட்டில் நல்லவிதமா பேசி சமாதானப்படுத்துகிற வழியைப் பாரு. அவளோட பொறந்த வீட்டு உறவுகள் அவளுக்கு முக்கியம்டா ராஜா” என்றார்.

“சரிம்மா” என்று அவரை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

செல்வநாயகமோ “என்னடா இது கிளம்புகிற நேரத்தில் அம்மா முந்தானையைப் பிடிச்சுகிட்டு சுத்திகிட்டு இருக்க?” என்று கடுப்படித்தார்.

கணவரின் கோபத்தைக் கண்டு சிரித்துக் கொண்டவர் “சரி நேரமாச்சு கிளம்புங்க. நல்லபடியா போயிட்டு வாங்க” என்று வழியனுப்பி வைத்தார்.

அவர்கள் சென்றதும் நித்யாவும் கல்லூரிக்கு கிளம்ப, வாயிலருகே சென்றவளிடம் “நித்தி! இந்த சாவியை வச்சுக்கோ. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீ வரதுக்குள்ள நான் வர முடியலேன்னா வாசலில் நிற்க வேண்டாம்” என்று கூறி அவளிடம் கொடுத்தார்.

அவளோ குழப்பத்துடன் பார்த்து “என்னம்மா எங்கே போறீங்க? அதுவும் சாயங்கால நேரம்?” என்றாள்.

மகளை ஆதரவாக பார்த்து “நம்ம சொந்தக்காரங்களை எல்லாம் கூப்பிட்டு ஒரு பூஜை பண்ணலாம்னு இருக்கேன். அதுக்கு ஐயரை பார்க்கணும், அவர் கொடுக்கிற லிஸ்ட்ல உள்ளதை எல்லாம் வாங்கணும். அதுக்கு தாண்டா”.

“அண்ணன் வந்த பிறகு போகலாம் இல்ல”.

“இல்லடா! அப்பாவும், அண்ணனும் திட்டுவாங்க. இதெல்லாம் வேண்டாம்னு சொல்வாங்க. நான் ஏற்பாடு பண்ணிட்டா அமைதியா இருந்திடுவாங்க”.

“ஓகே மா...பார்த்து போயிட்டு வாங்க” என்று கூறிவிட்டு அவளும் கிளம்பி விட்டாள். அதன் பின்னர் கதவை சாற்றி விட்டு சென்று சோபாவில் அமர்ந்தவரின் சிந்தனை கிருஷ்ணாவை சுற்றியே இருந்து கொண்டிருந்தது.

சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு போனை எடுத்தவர் கிருஷ்ணாவை அழைத்தார்.

“ஹலோ!”

“கிருஷ்ணா! ஆபிசுக்கு கிளம்பிட்டியா?”

“ம்ம்...கிளம்ப போறேன்”.

“லஞ்சுக்கு இங்கே வந்துடு”.

“வேண்டாம்! நான் ஆபிசிலேயே பார்த்துக்கிறேன்”.

“எனக்கு உன்னை பார்க்கணும் போல இருக்குப்பா”

“ம்ச்...இப்போ எதுக்கு இப்படியொரு பேச்சு. இன்னைக்கு எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு”.

“இந்த அம்மாவுக்காக ஒரு மணி நேரம் செலவு பண்ணமாட்டியா?”

“மா! ...சரி வரேன்...நேரமாச்சு” என்று கூறி போனை அணைத்து விட்டான்.

உள்ளமெல்லாம் பற்றி எரிய, அவனது பேச்சை அசை போட்டபடி அமர்ந்திருந்து விட்டு, சுமார் அரை மணி நேரம் கழித்து அவனது கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மேனிற்கு அழைத்து வீட்டிற்கு வரும்படி கூறினார்.

அதன்பின்னர் அவரது முகத்தில் கவலையோ, வேதனையோ வலியோ தென்படவில்லை. ஒருவித தீவிரம் மட்டுமே குடி கொண்டிருந்தது. மடமடவென்று வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார். சற்று நேரத்தில் கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மேனும் வந்துவிட, அவனுக்கு காப்பி போட்டு கொடுத்தவர். அவனுடன் பேச ஆரம்பித்தார்.

முதலில் தயக்கமாக ஆரம்பித்தவன் அவரின் கேள்வியில் அதிர்ந்து பின் நீலா வந்து சென்ற அன்று நடந்தவைகளை எல்லாம் கூறினார். அதை கேட்க கேட்க அவரது உள்ளம் எரிமலையென கனன்று கொண்டிருந்தது.அவனிடமிருந்து வேண்டிய தகவல்களை பெற்றுக் கொண்டு, ஒரு சில வேலைகளை செய்து கொடுக்கும்படி வெளியே அனுப்பினார்.

அதே நேரம் நதிர் அனுப்பிய ஆட்கள் நீலாவின் வீட்டை அடைந்திருந்தனர். பக்கா அரசியல்வாதி தோற்றத்தில் இருந்தவர்களின் முகம் அவர்களின் தொழிலை இனம் காட்டியது. நீலாவின் பெற்றோர்களிடம் துக்கம் விசாரிப்பது போல வீட்டினுள் நுழைந்து விட்டு, கேசை வாபஸ் வாங்க வேண்டும் என்று மிரட்ட ஆரம்பித்தனர். முதலில் இவர்களின் மிரட்டல் என்ன செய்து விட முடியும் என்று தைரியமாக எதிர்த்தார் நீலாவின் தந்தை. ஆனால் அவர்களோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் நீலாவின் தாயின் கழுத்தில் கத்தியால் ஒரு கொடு போட்டனர். வெளியில் சப்த்தம் வந்து விடாமல் இருக்க, அவரது வாய் அடைக்கப்பட்டது.

அதுவரை தைரியமாக மறுத்துக் கொண்டிருந்தவரின் விழிகள் பயத்தைக் காட்ட, “மரியாதையா போய் என் பொண்ணு சாவில் எந்த சந்தேகமும் இல்லேன்னு எழுதிக் கொடுத்திட்டு கேசை வாபஸ் வாங்கு. இல்லேன்னா நீயும் உன் பொண்டாட்டியும் பொண்ணு போன இடத்துக்கே போக வேண்டியது தான்” என்று மிரட்டினார்கள்.

பொண்டாட்டியின் கழுத்தில் வழியும் ரத்தம் அவரை அனைத்தையும் மறக்க செய்தது. இரு கை கூப்பி அவர்களை கும்பிட்டவர் “அவளை விட்டுடுங்க. நான் வாபஸ் வாங்கிடுறேன்” என்று கெஞ்சினார்.

“நீ முதல்ல போய் எழுதி கொடுத்திட்டு வா. அப்போ தான் நாங்க விடுவோம்” என்றான் மிரட்டலாக.

மிரட்சியுடனும், கலங்கிய கண்களுடனும் “நான் போறேன். தயவு செய்து அவளை ஒண்ணும் பண்ணிடாதீங்க” என்றார்.

வந்திருந்தவர்களில் தலைவன் போலிருந்தவன் “டேய்! இந்தாள் கூட போ. அவன் எழுதி கொடுத்திட்டு வரானான்னு நல்லா பார்த்திட்டு வா. நீ கூட போறது யார் கவனத்தையும் கலைக்க கூடாது” என்று அவரின் காவலுக்கு ஒருவனை அனுப்பி வைத்தான்.

போலீஸ் ஸ்டேஷன் வாசல் வரை சற்று தூரமாகவே தொடர்ந்தான். போலீஸ் ஸ்டேஷனிலும் அவர்களது ஆட்கள் இருந்தனர். அவர் சற்றே நடுக்கத்துடன் சென்று தனது பெண்ணின் மரணத்தில் சந்தேகம் எதுவுமில்லை என்றும், கேசை வாபஸ் வாங்கிக் கொள்வதாக கூறினார்.

இன்ஸ்பெக்டருக்கு திடீரென்று அவர் வந்து அப்படி கூறவும், எதிரே இருந்த நாற்காலியை காட்டி அமர சொன்னவர் “என்ன திடீர்னு? உங்களை யாரும் மிரட்டுராங்களா?” என்றார் கேள்வியாக.

உள்ளுக்குள் பதட்டம் இருக்க, உடலெல்லாம் வியர்த்து வழிய “அதெல்லாம் இல்ல சார். என் பொண்ணு திடீர்னு வேலையை விட்டு வந்துச்சு. எதுவுமே இல்லாம தூக்கு மாட்டி சாகவும் ஒரு குழப்பத்தில் அப்படி கம்ப்ளைன்ட் கொடுத்திட்டேன்” என்றார் திணறலாக.

அவரை கூர்ந்து பார்த்தவர் “நாங்க விசாரிச்சுகிட்டு இருக்கோம். இப்போ வந்து வேண்டாம்னா என்ன சொல்றது?ம்ம்..”

இரு கைகளையும் உயர்த்தி “நான் கும்பிடுற சாமியா நினைச்சு இந்த கேசை விட்டுடுங்க. என் பொண்ணு ஆத்மா சாந்தியடையும்” என்றார்.

சற்றே யோசித்து கான்ஸ்டபிளை அழைத்து எதிரே இருந்தவரிடம் கேசை வாபஸ் வாங்குவதற்கான கடிதத்தை எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பும்படி கூறினார்.

அதை கேட்டதும் அவர் முகத்தில் பெருத்த நிம்மதி. அதை கவனிக்காத மாதிரி கவனித்துக் கொண்டு தான் இருந்தார் இன்ஸ்பெக்டர். ஸ்டேஷனை விட்டு அவர் வெளியேறியாதும், அவசரமாக போனை எடுத்து தனது நண்பன் மாறனுக்கு அழைத்தார்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,641
1,247
113
“மாறா எங்கே இருக்க?”

அவர் இருக்குமிடத்தை கூற “நான் சொல்றதை கவனமா கேளு. அந்த ஏரியாவில் இப்போ கொஞ்ச நாள் முன்னாடி ஒரு தற்கொலை நடந்துச்சே. அந்த பெண்ணோட வீட்டை கண்காணி. அங்கே ஏதும் தவறான நடமாட்டம் தெரியுதான்னு பார்த்து சொல்லு” என்றார்.

இன்ஸ்பெக்டரை பொறுத்தவரை இந்த கேசில் எதுவுமில்லாமல் தான் இருந்தது. கிஷ்ணாவின் கம்பனியில் விசாரித்தவரை எதுவுமே தவறாக தோன்றவில்லை. அந்த பெண்ணும் எந்த இடத்திலும் தவறானவளாக நடந்து கொள்ளவில்லை. எங்கோ, யாரோ ஒருவனிடம் கற்பிழந்து இருக்கிறாள் காதல் என்கிற பெயரில். அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். அவன் யாரென்று சிறிதளவு கூட துப்பு கிடைக்கவில்லை. அதனால் இந்த வழக்கை முடித்து விடலாம் என்கிற எண்ணத்தில் தான் இருந்தார். ஆனால் அந்த பெண்ணின் தந்தை முகத்தில் ஒரு கலவரத்துடன் வந்து வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்று சொன்னதும் உஷாராகி விட்டார்.

மும்பை சென்றிறங்கியவர்கள் நேரே நதியாவின் வீட்டிற்கு சென்றனர். நதியாவின் அக்காவிற்கும் மாமாவிற்கும் இவர்கள் இப்படி வந்து நின்றது அதிர்ச்சியாக இருந்தது. செல்வநாயகமும், விஷாலும் திருமணம் நடந்து முடிந்ததை எடுத்துச் சொல்லி அவர்களை சமாதனப்படுத்த முயன்றார்கள். அவளின் மாமா முதலில் மறுத்தாலும், பின்னர் சமாதனம் அடைந்தார். ஆனால் அவள் அக்காவிற்கு நதியாவின் மேல் அத்தனை கோபம். தாய், தந்தை இல்லாத குறையே தெரிய கூடாதென்று பார்த்து பார்த்து செய்ததற்கு, தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் திருமணம் செய்து கொண்டது வருத்தத்தை அளித்தது.

விஷால் பேசிப்பேசி அனைவரையும் கரைத்து விட்டான். அவர் சமாதானம் ஆனதும் நதியாவை அவர்களிடம் விட்டுவிட்டு தந்தையை அழைத்துக் கொண்டு மூர்த்தியை காண சென்றார்கள். அவர்களின் வரவிற்காகவே காத்திருந்தார் மூர்த்தி. சுனிதாவும் வீட்டிலிருந்தாள். அவர்களின் முகங்களில் பயத்துடன் கூடிய குழப்பம் இருந்தது.

செல்வநாயகம் அவரிடம் படபடவென்று ஆரம்பித்து விட்டார் “என்னப்பா என் பையனைப் பற்றி என்னெனவோ சொல்ற?” என்று.

விஷாலுக்கு தான் வேதனையாக இருந்தது. தந்தை தெரிந்து கொள்ள கூடாதவற்றை எல்லாம் தெரிந்து கொள்ள போகிறாரே என்று தவித்துக் கொண்டிருந்தான்.

“நான் சொல்றேன்னேன்னு தப்பாக நினைக்காதே செல்வா. கிருஷ்ணா நீ நினைக்கிற மாதிரி அமைதியானவன் இல்ல. அவனோட தொடர்புகள் மகா மோசமாக இருக்கு. அதிலும் கிருஷ்ணா பெண்கள் விஷயத்தில் இப்படி இருப்பான்னு நினைக்கல செல்வா” என்று போட்டுடைத்தார்.

“என்ன சொல்றடா?” என்றார் அதிர்ச்சியுடன்.

அதுவரை அவர்கள் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சுனிதா “நான் சொல்றேன் அப்பா” என்றவள் தான் அவனை விரும்பியது, திருமணம் செய்து கொள்ள சொல்லி போராடியது என்று அனைத்தையும் கூறியவள் “அன்னைக்கு ஆபிசில் வைத்து என்கிட்டே அவன் பேசிய வார்த்தைகளை கேட்டு பயங்கர அதிர்ச்சி. இவனையா விரும்பினேன்னு அருவெறுத்துப் போச்சு” என்று நிறுத்திவிட்டு எதிரே இருந்தவர்களை பார்த்தாள்.

விஷாலுக்கு நெஞ்சு தடதடவென்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. அந்தப் பாழாய் போனவன் என்ன சொல்லித் தொலைத்தானோ? அதை இவள் தந்தையிடம் சொல்ல வேண்டுமா? என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

சற்று நேர அமைதிக்குப் பின் “அவனுக்கு ஒரு பெண்ணோட வாழ்வதில் விருப்பம் இல்லையாம். அதிலும் கல்யாண வாழ்க்கை சான்சே இல்லேன்னு சொன்னான். அதோட நான் அவனோட தான் வாழணும்னு ரொம்ப பிடிவாதமா இருந்தா ...” என்று நிறுத்தியவளின் கண்ணீர் கன்னங்களைத் தொட,குரல் உள்ளுக்குள் செல்ல “ஒரே ஒரு முறை என்னோட...” என்று சொல்ல முடியாமல் இரு கை கொண்டு முகம் மூடி அழுது விட்டாள்.

செல்வநாயகத்திற்கு ‘நா’ உலர்ந்து போனது. அவரது முகம் பேயறைந்தார் போல் ஆனது. தன் மகனா இப்படி ஒரு பெண்ணிடம் பேசினான்? என்று அவரால் அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. மூர்த்தியோ மகளின் வேதனை கண்டு கொதிப்புடன் “பார்த்தியா செல்வா! எப்படிப்பட்ட பொறுக்கியை பெத்திருக்கன்னு? என் பொண்ணு இதை அன்னைக்கே சொல்லி இருந்தா உன் மகன்னு பார்க்காம கேஸ் கொடுத்து உள்ளே தள்ளி இருப்பேன்” என்றார் கோவமாக.

விஷாலுக்கு எவரையும் நிமிர்ந்து பார்க்கும் தைரியம் வரவில்லை. நினைவு தெரிந்த நாளில் இருந்தே அவனுக்கு சுனிதா நல்ல தோழி. மும்பை வந்தால் இருவரும் ஒன்றாக தான் சுற்றுவார்கள். கிருஷ்ணா அவளை மணக்க வேண்டும் என்கிற ஆசை விஷாலுக்கு நிறைய இருந்தது. ஆனால் அவன் செய்து வைத்திருக்கும் வேலையை எண்ணி உடல் கூசி கூனி குறுகி அமர்ந்திருந்தான்.

செல்வநாயகத்திற்கு பேச்சே வரவில்லை. தன் மகன் இத்தனை கேடுகெட்டவனா? என்று எண்ணி மூச்சடைத்துப் போனார். தந்தையின் நிலையை உணர்ந்த விஷால் அவசரமாக எழுந்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினான். அவரது கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் ஓட ஆரம்பித்திருந்தது. சுனிதாவை பார்த்து “மன்னிச்சிடும்மா! இந்த வார்த்தை உன்னோட வேதனைக்கு மருந்தாகாதுன்னு தெரியும். எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ இப்படியொரு பிள்ளைக்கு அப்பனா போயிட்டேன். எங்க குடும்பமே உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் கூட ஆகாது” என்றார்.

மூர்த்தியோ கடுப்பு மாறாமல் “இன்னும் முடியல செல்வா. உன் பையனுக்கு நதிர் என்கிற ஒரு பொறுக்கியோட தொடர்பு இருக்கு. நான் விசாரிச்ச வரை அவன் பொண்ணுங்களை சப்ளை பண்றவன். உன்னை எதுக்கு வர சொன்னேன்னா...நான் வைத்திருக்கிறது ஒரு பொண்ணு. எனக்கு அவ வாழ்க்கை நல்லா இருக்கணும். அதனால நாம பார்ட்னர்சிப்பை முறிச்சுக்கலாம். உன் பையனால எங்க குடும்பத்துக்கு எந்த ப்ராப்ளமும் வரக் கூடாதுன்னு நினைக்கிறேன்” என்று அடுத்த குண்டை போட்டார்.

அன்று அவர் காதில் விழுந்த சொற்கள் எல்லாம் அணுகுண்டாக அவரது நெஞ்சத்தை தாக்க, இதயம் சுக்கு சுக்காக உடைந்து போயிருந்தது. அவரது மனமோ இவற்றை எல்லாம் என்னாலையே தாங்க முடியவில்லையே பத்மாவுக்கு தெரிந்தால் என்னாவாள் என்று பயந்தார்.

ஒரு மணி நேரத்திலேயே பல வருடங்களை கடந்து மூப்படைந்தவர் போல, உடல் நைந்து, தொய்ந்து போய் அமர்ந்திருந்தார். மூர்த்திக்கு நண்பனை நினைத்து பாவமாக தான் இருந்தது. ஆனால் கிருஷ்ணாவின் லீலைகளை முழுவதுமாக ஆராய்ந்து அறிந்து கொண்டிருந்தவருக்கு, பின்னே வரவிருக்கும் பெரும் சுழலில், தன் பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடக் கூடாது என்று தெளிவாக இருந்தார்.

நண்பனை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, விஷாலை அழைத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கம் சென்றவர் தான் அறிந்து கொண்டவற்றை எல்லாம் அவனிடம் பகிர்ந்து கொண்டார்.

“ஒரு மூணு நாலு வருஷமாக தான் அவனோட பழக்கம் இருக்கும் போல விஷால். இதுல என்னன்னா உன் அண்ணனுக்காக பல குடும்பத்து பெண்களை, காலேஜ் போகும் வழியில், வீட்டிற்கு தெரியாமல் சினிமா பார்க்க வரும் பெண்களை, தோழிகளோடு மாலுக்கு வரும் பெண்கள் என்று கணக்கு வழக்கில்லாமல் கொண்டு வந்திருக்கான். எப்படியும் இது வெளில வராம போகாது. அதனால அவனை வீட்டை விட்டு விலக்கி வைக்கப் பாருங்க. நித்யா வாழ்க்கையும் இவனால பாதிக்கப்படும்” என்றார் கவலையாக.

தொண்டை அடைத்தது. பேச வார்த்தைகளே எழவில்லை. என்ன சொல்வது? தன் மனைவியையும் கூட அவன் விட்டு வைக்கவில்லையே. அதை இவரிடம் சொல்லிவிட முடியாதே. எத்தனை அழகாக சென்று கொண்டிருந்த வாழ்க்கை, இவனது பெண் மோகம் அனைத்தையும் கெடுத்து விட்டதே.

ஆண்மகன் அழக் கூடாது என்று யார் சொன்னார்கள்? அவனுக்கு பயங்கரமாக அழுகை வந்தது. யாரிடம் சென்று அழ முடியும்? உடன் பிறந்தவனின் கேவலமான செய்கையால் குடும்பத்தினர் அனைவருக்கும் தலைகுனிவு மட்டுமா? எத்தனை பெண்களின் சாபத்தை வாங்கி இருக்கிறான்? ஆண்மகனாக பிறந்ததையே அந்த நிமிடம் வெறுத்தான்.

அவனது நிலையுணர்ந்து தோளை தட்டிக் கொடுத்தவர் “ஏதாவது செய்து அவனை மும்பை பக்கம் வர விடாம பண்ணுங்க. அதே சமயம் அவனை மாற்றப் பாருங்க” என்றார்.

உடல் இறுகி, அவமானத்தை சுமந்த விழிகளுடன் “ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்! உங்க இடத்தில் வேற யாராவது இருந்திருந்தா எங்க நிலைமை என்னவாகி இருக்கும்” என்றான் கலங்கிய கண்களுடன்.

“அப்பாவையும், அம்மாவையும் இதிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டிய பெரிய பொறுப்பு உனக்கு இருக்கு விஷால். அவங்களால நிச்சயமா சாதரணமா எடுத்துக்க முடியாது. நீ தான் அவங்களை ஜாக்கிரதையா பார்த்துக்கணும்” என்று தட்டிக் கொடுத்தார்.
 
  • Sad
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,641
1,247
113
அவரிடம் தலையசைத்துவிட்டு வீட்டினுள் நுழைந்தவனது பார்வை தந்தை மீது படிய, கூனி குறுகி அமர்ந்திருந்தவரைக் கண்டு நெஞ்சம் துடித்துப் போனது. வேகமாக சென்று அவர் அருகே நின்றவன் “அப்பா! வாங்க போகலாம்” என்றான்.

மகனை தலை நிமிர்ந்து பார்க்க கூட அந்த தகப்பனுக்கு கூசியது. மெல்ல தடுமாறியபடி எழுந்து கொண்டவர் மூர்த்தியின் முகம் காணாது “எல்லாவற்றுக்கும் நன்றி-டா” என்று கூறி விட்டு மனது கரம் பற்றிக் கொண்டு வெளியேறினார்.

மூர்த்தியின் மனமும் துடித்தது. எப்படி இருந்த நண்பன் துவண்டு போய் செல்கிறானே என்று வருத்தமடைந்தார்.

சென்னை வீட்டில் வடை, பாயசத்துடன் உணவு தயாரித்து முடித்துவிட்டு மகனின் வரவிற்காக காத்திருந்தார் பத்மா. அவரது முகத்தில் அத்தனை அமைதி. நடந்த எதுவுமே அவரை பாதிக்காதது போல அமர்ந்திருந்தார். சுமார் ஒரு மணியளவில் மணியடிக்க, கண்களை மூடி திறந்தவர் ஆழமாக மூச்சிழுத்துக் கொண்டு தன்னை சுதாரித்தவர் மெல்ல நடந்து சென்று கதவைத் திறந்தார்.

உள்ளே நுழைந்தவனது பார்வை வீடெங்கும் ஏற்றி வைக்கப்பட்டிருந்த சாம்பிராணி வாசனையைக் கண்டு முகம் சுளித்து “என்னமா எதுவும் பூஜையா?” என்றான்.

“ஆமாம்-பா! பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்கணும்னு பூஜை பண்ணினேன்” என்று கூறிவிட்டு நடந்தார்.

அவனது விழிகள் நதியாவை தேடி அலைய, வீட்டின் ஜன்னல் கதவுகள் அடைக்கப்பட்டிருப்பது தெரிய “ஜன்னலை ஏன் சாத்தி வச்சிருக்கீங்க? இந்த புகை மூச்சடைக்குது” என்றான் எரிச்சலாக.

“கொஞ்ச நேரத்தில் சரியாகிடும்”.

“எங்கே எல்லோரையும் காணும்? என்னை மட்டும் பூஜைக்கு வர சொன்னீங்களா?”

அவனது கேள்விக்கு பதில் அளிக்காமல் “வாப்பா! இல்லை போட்டுட்டேன். எதுவா இருந்தாலும் சாப்பிட்டிட்டு பேசலாம்” என்றழைத்தார்.

அவனுக்கு எப்போதும் வாழை இலையில் சாப்பிடுவது மிகவும் விருப்பம். பலவகை பதார்த்தங்களை ஒரு பிடிபிடிப்பதில் அத்தனை இன்பம். அதனால் எதுவும் பேசாமல் கை கழுவி விட்டு வந்து இலை முன்பு அமர்ந்தான். ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து பரிமாற ஆரம்பித்தார். எல்லாமே அவனுக்கு பிடித்தவை. எதையும் யோசிக்காமல் அன்னை பரிமாற பரிமாற ஒரு பிடி பிடித்தான்.

அவன் முழுவதுமாக சாப்பிட்டு முடிக்கும் வரை பேசாமல் இருந்தவர் “கை கழுவிட்டு உட்காரு கிருஷ்ணா. உன் கிட்ட பேசணும் ” என்றார்.

உண்ட களைப்பு அவனுக்கும் இருக்க, மின் விசிறியின் வேகத்தை அதிகப்படுத்திவிட்டு சோபாவில் சென்றமர்ந்தான். பத்மா சாப்பாட்டை ஒதுங்க வைத்துவிட்டு அவனெதிரே வந்தமர்ந்தார்.

அவர் ஏதோ பேச விரும்புகிறார் என்று புரிய “சொல்லுங்கம்மா” என்றான்.

அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் போனிலிருந்து ஒரு ரெகார்டிங்கை ஒலிக்க விட்டார். அது அன்று நதியாவிடம் அவன் பேசியது. வயிறு நிறைந்து போய் சோபாவில் சாய்ந்தமர்ந்திருந்தவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. முதலில் திகைத்தாலும், அடுத்து அலட்சியம் அவன் முகத்தில் வந்தமர்ந்து கொண்டது.

“உங்க கிட்ட சொல்லிட்டாளா?..ம்ச்” என்றான் சிறிதும் கவலைப்படாமல்.

“நீ மனுஷன் தானா? தம்பி பொண்டாட்டி கிட்ட என்ன பேசி இருக்க?” என்றார் கத்தி போன்ற குரலில்.

அவரை நன்றாக பார்த்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்தவன் “இது மட்டும் தான் தெரியுமா? இல்ல எல்லாமே தெரியுமா?” என்றான் கிண்டலாக.

அவரோ கடுமையாக முறைத்து மீண்டுமொரு ரெக்கார்டிங்கை ஒலிக்க விட்டார். அதில் கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மேன் நீலாவுடனான உறவை புட்டு-புட்டு வைத்திருந்தார்.

அவனோ இளக்காரமாக இதழ் வளைத்து “பரவயில்லையே நிறைய வேலை பார்த்திருப்பீங்க போல?” என்றான் கிண்டலாக.

அவனிடம் ஒரு பயம், திகைப்பு, அதிர்ச்சி என்று ஏதாவது ஒரு உணர்வு வெளிப்படும் என்று எதிர்பார்த்திருந்தவருக்கு அவனது நடத்தை கோபத்தை உண்டாக்கியது. வேகமாக எழுந்து சென்று அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்.

அதற்கும் அலட்டிக் கொள்ளாமல் இரு கை தட்டி “சபாஷ்!” என்றான்.

அவரது கண்களில் அத்தனை கொதிப்பு. நன்றாக நிமிர்ந்து நின்று “நான் கூட ஒரு நிமிடம் தப்பு செய்கிறோம்னு யோசிச்சேன். ஆனா என்னோட முடிவில் எந்த தவறுமில்லேன்னு நிரூபிக்கிற. ஒரு பெண்ணோட உணர்வுகளுக்கு மதிப்பளிக்கணும், அவளோட சம்மதம் இல்லாம விரல் நுனியைக் கூட தொடக் கூடாதுன்னு சொல்லித்தானே வளர்த்தேன். அப்புறம் எப்படி-டா?” என்று ஆதங்கமாக முடித்தார்.

“உங்களுக்கு புரியாது...அந்த இன்பத்தை ருசித்தவன் வேறு எதையும் ரசிக்க மாட்டான்”.

“உனக்கும் ஒரு தங்கை இருக்கா-டா. அவளும் பெண் தான்” என்றார் கடுமையான கோபத்தோடு.

“ம்ச்...இந்த டயலாக் எல்லாம் வேண்டாம். உங்களால என்ன செய்ய முடியும் என்னை. நான் இப்படித்தான்” என்றான் தெனாவெட்டாக.

அவரோ “ஒரு துளி கூட உன் மனதில் குற்ற உணர்வே இல்லையா? நீ அரக்கனா இல்ல மிருகமா? எப்படி-டா இந்த மாதிரி மாறிப் போன?”

“லுக் மா! இது என் வாழ்க்கை! அனாவசியமா தலையிடாதீங்க. நான் இப்படித்தான். பிடிக்கலேன்னா வீட்டை விட்டு வெளியே போயிடுறேன்” என்றான் எரிச்சலாக.

அதுவரை இருந்த சிறிய நம்பிக்கை முற்றிலுமாக உடைந்து போக “நீயெல்லாம் வாழவே தகுதி இல்லாதவன். உன்னை எல்லாம் வெளியே விட்டா இந்த சமூகமே அசிங்கமாகிடும்”.

ஏளனமாக சிரித்தவன் “என்ன என்னை அடிச்சு கொல்லப் போறீங்களா? நோ வே! போய் வேலையை பாருங்க” என்று கதவருகே சென்றான்.

அவனது முதுகை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவர் “அடிச்சு தான் கொல்லணும்னு இல்ல. உனக்கு போட்டேனே சாப்பாடு அதிலேயே கலந்துட்டேன்” என்றார் வெறுப்பாக.

சட்டென்று அவனது நடை தடைபட, கிண்டலான சிரிப்புடன் “உங்களால அது முடியாது” என்றான்.

“ஏன் முடியாது? அம்மாவுக்கு பிள்ளைக்கு உயிர் கொடுக்கவும் தெரியும் அழிக்கவும் தெரியும்” என்றார் ஆக்ரோஷமாக.

அவரது அந்த கோபம் அவனை சற்று யோசிக்க வைக்க, அந்நேரம் வயிற்றில் சுரீர் என்று வலி சுண்டி இழுக்க, பல்லைக் கடித்துக் கொண்டு குனிந்தான். சிறிது நேரத்தில் வலி குறைய, மெல்ல நிமிர்ந்தவனை மீண்டும் இழுத்துச் சாய்த்தது. வாழ்நாளில் அப்படியொரு வலியை கண்டதில்லை. நிமிர முடியாமல் வலியுடனே “என்னத்தை கலந்து தொலைச்ச?” என்று கத்தினான்.

முகத்தில் ஆங்காரத்துடன் நின்றிருந்த பத்மாவோ “எதை கொடுத்தா குடலெல்லாம் வெந்து போகுமோ? எதை சேர்த்தால் ஆண்மை கருகி போகுமோ, எதை கொடுத்தால் சதை எல்லாம் பொசுங்கி போகுமோ அத்தனையும் கலந்திருக்கேன்” என்றார்.

மீண்டும் மீண்டும் வலி சுண்டி இழுத்துக் கொண்டே இருக்க, அவரின் பதிலில் வெகுண்டு போனவன் “நீ ஒரு தாயா? பெத்த பிள்ளைக்கு விஷம் வச்சிருக்கியே” என்று கையை ஓங்கிக் கொண்டு அடிக்க பாய்ந்தான்.

அதை எதிர்பார்த்தே கையில் ஒரு கழியுடன் நின்றிருந்தவர் அவனை ஓங்கி அடித்து கீழே தள்ளி இருந்தார்.

“என்ன கேட்டே? தாயான்னா? ஆமாடா! உன்னை போல ஒருத்தனை பெத்தவ நிச்சயமா நல்ல தாயாக இருக்க முடியாது. நான் அந்த புனிதத்தை இழந்து வெகு நாளாச்சு ” என்றவர் அவனை எழ விடாமல் அடித்து துவைத்தார்.

வயிற்றில் ஏற்பட்ட வலி ஒருபுறம், அவர் அடித்தது ஒருபுறம் என்று மெல்ல அவன் சோர்வடைய ஆரம்பித்தான். அப்போது அடி வயிற்றிலிருந்து கிளம்பிய ஒரு பந்து அப்படியே வாய் வழியே வெளியே வந்தது. குபுகுபுவென்று ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. அதை தாங்க முடியாதவன் “மா! என்னை விட்டுடு! என்னால முடியல” என்று கெஞ்சினான்.

“வலிக்குதா? உடம்பு முழுக்க எரியுதா? அப்படித்தானே அந்த பொண்ணுங்களுக்கும் எரிஞ்சிருக்கும்? அப்போ சந்தோஷமா இருந்தது இல்ல. இப்பவும் அதே சந்தோஷத்தோட இந்த வலியையும் அனுபவி” என்றவரின் கண்களில் வலியும், வேதனையும் இருந்தது.
 
Status
Not open for further replies.