இவன் வேற மாதிரி - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,582
1,173
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

புத்தாண்டு அன்று புதிய கதையுடன் உங்களை எல்லாம் சந்திக்க வந்து விட்டேன்.

அத்தியாயம் – 1

விடியலின் நேரம் அரை இருளில், பறவைகளின் கீச்சு கீச்சு ஒலியை ரசித்துக் கொண்டே மாடியில் யோகாசனம் செய்ய ஆரம்பித்தான் கிருஷ்ணா. உடலை பாதுகாப்பதில் அவனை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.

பூமியே சுழற்சியை நிறுத்திக் கொண்டாலும் கூட உடற்பயிற்சி செய்வதை மட்டும் நிறுத்தவே மாட்டான். முப்பத்தொரு வயதிலும் இருபத்தி எட்டு வயது இளைஞன் போல காட்சி தருவதற்கு அதுவே காரணம்.

அனைத்திலும் ஒழுங்கை எதிர்பார்க்கும் பெரிய மகனை எண்ணி அவன் தாயார் பத்மாவதிக்கு அத்தனை பெருமை. ஊர் உலகமே பாராட்டும் தன் மகன் திருமணத்தை மட்டும் வெறுப்பது அவருக்கு பெருங்கவலையை கொடுத்தது.

முண்டா பனியனும், பின் கொசுவம் வைத்து கட்டிய வேட்டியுடன் யோகா செய்து கொண்டிருந்தவனை பக்கத்து வீடுகளில் இருந்த சிறுசுகள் ஜன்னலின் வழியே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தன. நாள் தவறாமல் விடியலில் யோகா செய்பவனை பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு, என்றாவது ஒரு நாள் அவன் தங்களை பார்க்க மாட்டானா என்கிற ஏக்கம் இருந்தது.

அதே நேரம் கிருஷ்ணாவின் தம்பி விஷால் தலைவரை இழுத்து மூடிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தான். அன்று அவனுக்கு முக்கியமான க்ளையன்ட் கால் ஏழு மணிக்கு இருக்கிறதென்றும், தன்னை சீக்கிரம் எழுப்பி விட கூறி விட்டு படுத்தவன் தான். அடித்து போட்டது போல உறங்கிக் கொண்டிருந்தான். உடற்பயிற்ச்சி என்றால் என்ன என்று கேட்பவன் அவன். அதற்காக உடல் பருமனாக இருப்பான் என்று என்ன வேண்டாம். கிருஷ்ணாவை போன்று இல்லாவிடினும், அவனும் கச்சிதமாகவே இருப்பான்.

“விஷாலு! டேய்! எழுந்திரிடா”

அன்னையின் குரல் கிணற்றின் உள்ளிருந்து கேட்பது போல் கேட்டாலும், எழ மனமில்லாமல் கண்களை இறுக்க மூடிக் கொண்டு மேலும் நன்றாக உறங்கினான்.

அடுப்பில் வைத்திருந்த பால் பொங்கும் சப்தம் கேட்க, பதட்டத்துடனும் எரிச்சலுடனும் அருகே இருந்த மேஜை மேல் வைத்திருந்த புத்தகத்தை எடுத்து அவன் மீது வீசி விட்டு “எருமை! நீயெல்லாம் வேலைக்கு போய் உருப்பட்ட மாதிரி தான்” என்று புலம்பிக் கொண்டே நகர்ந்தார்.

புத்தகம் பலமாக மேலே விழுந்ததும் அடித்து பிடித்து எழுந்து கொண்டவனின் விழிகள் சுவற்றில் இருந்த கடிகாரத்தில் விழ, நேரம் ஆறு ஐம்பத்தைந்து என்று காட்டியது.அடுத்த நிமிடம் துள்ளி எழுந்தவன் ‘ஐயையோ! மணி ஆறு ஐம்பத்தைந்து!’ என்று கத்திக் கொண்டே அவசரமாக குளியலறை நோக்கி ஓடினான்.

பத்மாவதியோ எரிச்சலுடன் “ஒரு நாளாவது பெரியவனை மாதிரி எழுந்திரிச்சு இருக்கியா? எல்லாம் கடைசி நேரம் தான்” என்று திட்டிக் கொண்டே காப்பியை கலந்து எடுத்துக் கொண்டு வந்தார்.

கிருஷ்ணா மாடியிலிருந்து இறங்கி வரவும், அவனிடம் டம்ளரை கொடுக்க, அந்நேரம் தனது அறையிலிருந்து பாய்ந்து வந்தவன் கிருஷ்ணாவின் கையிலிருந்த டம்ளரை பிடிங்கிக் கொண்டு ‘சாரி அண்ணா! எனக்கு காப்பி இல்லேன்னா வராது” என்றவன் மடக்கு மடக்கென்று குடித்து முடித்து அன்னையின் கையில் டம்ளரை வைத்துவிட்டு, லாப்டாப்பை தூக்கிக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

பரபரப்பாக நடந்து முடிந்து விட்ட நிகழ்விலிருந்து வெளி வந்தவர் “என்னடா இவன் இப்படி இருக்கான்? அந்த லாப்டாப்பை வேற கக்கூசுக்கு எதுக்கு தூக்கிட்டு போறான்?”

சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாக சிரித்தவன் “அங்கே இருந்து தான் கிளையன்ட் கால் பண்ண போறான் மா”

முகத்தை அஷ்டகோணலாக சுழித்தவர் “என்னாது? அங்கே உட்கார்ந்துகிட்டா? இவனுக்கு ஏண்டா இப்படி புத்தி போகுது?”

“விடுங்கம்மா! எனக்கு நேரமாகுது காப்பி தரீங்களா?”

ஒருவித அசூயையுடனே அங்கிருந்து நகர்ந்தவர் நித்யாவின் அறைக் கதவு திறப்பதைக் கண்டு, “வாம்மா மகராசி! இப்போ தான் விடியுதா? இங்கே ஒருத்தி தனியா கஷ்டப்படுறேனேன்னு கொஞ்சமாவது அக்கறை இருக்கா” என்று படபடவென்று பொரிய ஆரம்பித்தார்.

அந்நேரம் சரியாக வாக்கிங் முடித்து விட்டு உள்ளே நுழைந்த செல்வநாயகம் “காலையிலேயே ஆரம்பிச்சிட்டியா பத்மா. உன்னோட சத்தம் தெரு முழுக்க கேட்குது” என்றார் சலிப்பாக.

அன்னையை முறைத்தவள் வேகமாக தந்தையின் அருகே சென்று நின்று கொண்டு “நல்லா கேளுங்கப்பா? காலேஜ் படிக்கிற நான் என் படிப்பை விட்டுட்டு இவங்க கூட கிட்சேன்ல நிற்கணுமா?”

அவர்களின் சண்டையை கவனித்தபடி நின்ற கிருஷ்ணா, அது இப்போதைக்கு அடங்காது என்பதை உணர்ந்து கொண்டு தானே சென்று தனக்கும் தந்தைக்கும் காப்பியை கலந்து கொண்டு வந்தான்.

அவன் கையில் காப்பியை பார்த்ததுமே “பாருடி! ஒரு கம்பனி வச்சு நடத்துறவன் அலுத்துக்காம போய் காப்பி போட்டு எடுத்திட்டு வரான். நீ என்னவோ காலேஜில படிக்கிறதுக்கு இந்த அலப்பறை பண்ற” என்று தோளில் இடித்துக் கொண்டு சமையலறை நோக்கி சென்றார்.

தந்தையும் மகனும் சிறிது நேரம் நாட்டுநடப்பு மற்றும் அவனது கம்பனி குறித்து பேசிக் கொண்டிருந்து விட்டு, அவரவர் வேலைகளை கவனிக்க சென்றனர். நித்யாவோ அன்னையின் தோளில் சாய்ந்து கொண்டு மெல்ல அவரை சமாதானாப்படுத்தும் விதத்தில் பேசிக் கொண்டிருந்தாள். அப்போது விஷால் அறையிலிருந்து வெளியே வர, அவனைப் பார்த்ததும் முகத்தை சுளித்தவர் “ஏண்டா இந்த வீட்டில் உனக்கு உட்கார்ந்து பேச இடமாயில்ல? இப்படி கக்கூசுல போய் உட்கார்ந்து பேசுறியே? அவனுங்களுக்கு தெரியாதா?”

“மா! அவனுங்களுக்கு எப்படிமா தெரியும்?”

“நாற்றம் இருக்குமேடா”

இதழில் எழுந்த சிரிப்பை அடக்கியபடி “கம்பியுட்டர் வழியா நாற்றம் அவனுக்கு போகாதும்மா” என்றதும் நித்யா கொல்லென்று சிரித்து விட, இருவரையும் முறைத்தவர் “மூணு பெத்தும் ஒன்னு தான் உருப்படியா இருக்கு” என்று இடித்து விட்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

அப்போது வேலைக்கு கிளம்பி தயாராகி வந்தவனை பார்த்த நித்யா “அண்ணா! நீங்க இன்னைக்கு என்னை காலேஜில் விட முடியுமா?” என்றாள் கெஞ்சலாக.

அவள் கேட்டதுமே முகம் மாற “விஷாலை கூட்டிட்டு போ நித்யா” என்றவன் “மா! டிபன் ரெடியா?” என்றான் சற்றே அழுத்தமான தொனியில்.

நித்யாவோ விடாது “ஒரு நாளாவது உங்களோட காலேஜுக்கு போகலாம்னு நினைக்கிறேன். ஏண்ணா இப்படி பண்றீங்க?” என்றாள் சிணுங்கலாக.

அவளை அழுத்தமாக பார்த்தவன் “ஒரு தடவை சொன்னா புரியாதா நித்யா. என்னை எப்பவும் காலேஜுக்கு கூப்பிடாத. விஷால் கூட்டிட்டு போக முடியலேன்னா அப்பாவை கூட்டிட்டு போ” என்றவன் அன்னை எடுத்து வைத்த உணவை சாப்பிட ஆரம்பித்தான்.

அண்ணனை முறைத்து பார்த்துக் கொண்டே நின்றவள் ‘சரியான முசுடு...காலேஜுக்கு போகணும்னு சொன்னா மட்டும் முசுட்டுத்தனம் வந்துடும்’ என்று திட்டிக் கொண்டே தானும் உணவருந்த ஆரம்பித்தாள்.

அந்நேரம் விஷாலும் வந்துவிட, அமைதியாக இருந்த இடம் மீண்டும் கலகலப்பானது. கிருஷ்ணா அதிகம் பேசவில்லை என்றாலும், அனைவரும் பேசுவதை கேட்டபடி உணவருந்தி முடித்தான். அன்னையிடமும், தந்தையிடமும் சொல்லிக் கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினான்.

அவனை தொடர்ந்து விஷாலும், நித்யாவும் கிளம்பினர். அனைவரும் கிளம்பியதும் வீடே வெறிச்சோடி இருக்க, மெல்ல சோபாவில் அமர்ந்தவர் “என்னங்க! பெரியவன் கிட்ட நீங்களாவது பேசக் கூடாதா? முப்பதொரு வயசாச்சு. இவன் வயசு பையனுங்க எல்லாம் குழந்தையே பெத்தாச்சு. இவன் என்னடான்னா சாமியார் மாதிரி இருக்கான்” என்றார் கவலையாக.

செல்வநாயகம் முகத்திலும் கவலையின் சாயல்.

“எனக்கும் அவனை நினைத்து தான் கவலையாக இருக்கு பத்மா”.

சற்றே தயங்கியவர் “அவனுக்கு எதுவும் பிரச்சனை இருக்குமாங்க?”
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,582
1,173
113
மனைவி கேட்க வருவது என்னவென்று புரிந்தாலும் நிச்சயமாக அதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றியது.

“இருக்காது பத்மா! அவன் மனசுல பொண்ணுங்க மேலையோ, திருமண வாழ்க்கை மேலையோ ஈர்ப்பில்லைன்னு தோணுது”.

“அவன் கிட்ட நான் பேசுறதை விட நீங்க பேசுங்க...எதுவும் பிரச்சனை இருந்தா சரி செய்து கல்யாணத்தை பண்ணி வைப்போம். இப்படியே விட முடியாதில்ல” என்றார் சோர்வாக.

“ம்ம்...பார்க்கலாம்”

விஷாலுடன் காரில் சென்று கொண்டிருந்த நித்யா போனில் தோழியை அழைத்து “நதி! நான் கிளம்பிட்டேன். நீயும் கிளம்பி வந்திடு” என்றாள்.

“சரி நித்தி! நான் கிளாசில் இருக்கேன் நீ வந்திடு”

“நதி! நீ கேட் கிட்ட நில்லு. நாம சேர்ந்தே போகலாம்”.

சற்று நேர அமைதிக்குப் பின் “இல்லடி! நான் நேராக கிளாசுக்கு போயிடுறேன். நீ வந்துடு” என்று கூறி போனை வைத்தாள்.

அவள் அப்படி கூறியதும் உள்ளுக்குள் எழுந்ந்த கோபத்தை போனில் காட்டி வேகம் வேகமாக மூச்சை இழுத்தாள். ஓட்டுவதில் கவனம் இருந்தாலும் தங்கையின் கோபத்தை உணர்ந்து கொண்டவன் “என்ன நித்தி? உன் பிரெண்ட் வழக்கம் போல வர மாட்டேன்னு சொல்லிட்டாளா?”

“ஆமாண்ணா”

இதழில் எழுந்த குறுநகையுடன் “என்னை பார்த்தா மயங்கிடுவோம்னு வர மாட்டேன்றா போல”

பட்டென்று அவன் முதுகில் சாத்தியவள் “நினைப்பு தான் உங்களுக்கு. நீங்க அவளை பார்த்து மயங்காம இருந்தா தான் சரி. எங்க காலேஜ் பியுட்டி அவ தான். அவளோட சின்ன விழியசைவிற்காக எத்தனை பேர் காத்திருக்காங்க தெரியுமா?”

“ஒ...அவ்வளோ பெரிய அப்பாட்டக்கரா உன் பிரெண்டு? அப்போ நிச்சயம் பார்த்திட வேண்டியது தான்”

ஒற்றை விரலை காட்டி மிரட்டியவள் “அண்ணா! வேண்டாம்!”

அவனோ சொல்லி சொல்லி உசுப்பேத்திட்டு வேண்டாம்னா விட்டுடுவோமா? பார்த்திட்டு தான் மறுவேலை பார்க்கணும் என்று எண்ணிக் கொண்டான்.

தங்கையை காலேஜில் இறக்கி விட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பியவன் அலுவலகத்திற்கு செல்லாமல் சிறிது தூரம் சென்று விட்டு மீண்டும் கல்லூரி வாசலுக்கே வந்து நின்றான். அவன் மனதிலோ அப்படி என்ன ரம்பை அவள். தன் கண்முன்னே வராமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறாள். இன்று கண்டிப்ப்பாக அவளை பார்த்து விட என்று முடிவு செய்து கொண்டான்.

அலுவலகத்திற்குள் நுழைந்த கிருஷ்ணாவோ அனைவருக்கும் ஒரு தலையசைப்பை கொடுத்து விட்டு, தனது கேபினிற்குள் நுழைந்தான். இன்டிரியர் டிசைனிங் கம்பனி வைத்து நடத்திக் கொண்டிருப்பவனிடம் இருபது பெண்களும், பதினைந்து ஆண்களும் வேலை செய்கின்றனர். தொழில் வட்டாரத்தில் தனக்கென்று நிலையான ஒரு இடத்தை பிடித்து வைத்திருந்தான். அதனால் எந்நேரமும் அவனது அலுவலகம் பிசியாகவே இருக்கும்.

“குட் மோர்னிங் கிருஷ்ணா” என்றபடி தன் கையிலிருந்த ட்ராயிங்கை அவன் முன்னே வைத்து விட்டு “கரெக்ஷன்ஸ் பார்த்திடுங்க...அப்போ தான் நான் அடுத்ததை பண்ண முடியும்” என்றாள் மாயா.

அவளை பார்த்து மென்னகையுடன் “குட் மார்னிங் மாயா. நான் செக் பண்ணிட்டு சொல்றேன். நீங்க அந்த அண்ணாநகர் ட்ராயிங்க்ஸ் பார்த்திடுங்க” என்றவன் தன் முன்னே வைக்கப்பட்டிருந்த படத்தை ஆராய ஆரம்பித்தான்.

அவள் வெளியே வந்ததும் “என்ன மாயா சார் வந்தாச்சா? வந்தாச்சு நீலா”

“எப்பவும் அவர் வந்தவுடனே பார்க்கிற முதல் ஆள் நீ தானே” என்றாள் குத்தலாக.

தனது கேபினிற்கு திரும்பிக் கொண்டிருந்தவள், அப்படியே நின்று “என்ன சொல்ற நீலா? தப்பா பேசுகிற மாதிரி தெரியுதே” என்றாள் கோபமாக.

அவளின் கோபம் கண்டு சுதாரித்துக் கொண்டவள் “இதுல என்ன தப்பிருக்கு மாயா. மார்னிங் வந்தவுடனே நீ தானே முதலில் பார்ப்ப. அதை தான் சொன்னேன்”

அவளை ஆழ்ந்த பார்வை பார்த்தவள் “இங்கே பார் நீலா! இந்த மாதிரி ஒரு பாதுகாப்பான ஒரு கம்பனியும், முதலாளியும் கிடைக்கிறது பெரிய விஷயம். இப்படி தேவையில்லாததை பேசிப்பேசி அதை கெடுத்துக்காதே”.

அவள் அப்படி சொல்லியதும் எதுவும் பேசாமல் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு நகர இருந்தவளை தடுத்து நிறுத்தியது மாயாவின் குரல்.

“இன்னொரு விஷயத்தை நினைவில் வச்சுக்கோ நீலா! எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கு. என்னை நம்பி என் குடும்பம் இருக்கு. உன்னுடைய வார்த்தை பிரயோகத்தில் கவனமா இரு” என்று அழுத்தமாக கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

இவர்களின் பேச்சு வார்த்தை ஆரம்பித்ததுமே மெல்ல எழுந்து வந்து கதவருகே நின்று அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா. யாருக்கும் எதுவும் சொல்லாமல் அமைதியாக சென்று தன் வேலைகளை தொடர்ந்தான்.

நீலா ஓய்ந்து போய் தன் இருக்கையில் சென்று அமர, அவளது தோழி கீர்த்தி “உனக்கு ஏன் இந்த வேலை? மாயா கேட்டதில் என்ன தப்பு? நீயே உன் மனசாட்சியை தொட்டு சொல்லு? என்னைக்காவது ஒரு நாள் நம்ம முதலாளி நிமிர்ந்து நம்ம முகத்தை பார்த்திருப்பாரா? இது தப்பு நீலா”.

குனிந்த தலையை உயர்த்தாமலே “எனக்கு தப்புன்னு தெரியும் கீர்த்தி. என் மனசில் இருக்கும் ஆசைக்கு ஆயுள் கிடையாதுன்னு தெரிஞ்சாலும் ஏற்றுக் கொள்ள முடியல. அதனால தான் மாயா தினமும் அவர் வந்ததும் போய் பார்க்கிறாங்கன்னு கோபப்பட்டுடேன்”.

அவளது பதிலில் அதிர்ந்து போன கீர்த்தி “என்ன பேசுற?” என்றவள் அவசரமாக சுற்றிலும் பார்த்துவிட்டு “நம்ம நிலைமையை உணர வேண்டாமா? முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட கதையா இருக்கு நீலா. இதை முளையிலேயே கிள்ளி எறிஞ்சிடு. அது தான் உனக்கு நல்லது” என்றாள் மெல்லிய குரலில்.

“மூளைக்கு புரிஞ்ச விஷயம் மனசுக்கு புரியல கீர்த்தி. ஏதாவது ஒரு மாயம் நடந்து என் ஆசை பலித்து விடாதான்னு இருக்கு”.

அவளது கைகளை அழுத்தமாகப் பற்றி “வேண்டாம் நீலா! இப்போ எதையும் யோசிக்காதே! வீட்டுக்குப் போய் உன் குடும்பத்தை பார். அவங்க நிலைமையை யோசி தன்னால உன் பிரச்சனைக்கான முடிவு தெரியும்”.

கண்ணோரம் துளிர்த்த நீரை புடவை முந்தானையால் துடைத்துக் கொண்டவள் “ம்ம்...யோசிக்கிறேன்” என்றவள் நீண்ட நெடிய பெருமூச்சுடன் தன் வேலையை செய்ய துவங்கினாள்.

கல்லூரியின் அருகே சற்று தள்ளி காரை நிறுத்தி விட்டு, நடந்து வாயிலுக்கு சென்ற விஷாலை பார்த்ததும் “என்ன தம்பி பாப்பா எதுவும் விட்டுட்டு வந்துடுச்சா?” என்றார் காவலாளி.

எப்படி உள்ளே செல்வது என்று குழம்பிக் கொண்டே நின்றவனுக்கு அவரது கேள்வி விடை கொடுக்க “ஆமா அண்ணே! பீஸ் கட்ட பணம் கேட்டிருந்தா, கொடுக்க மறந்துட்டேன்”.

கேட்டை திறந்து விட்டவர் “ போங்க தம்பி! நேரா போய் வலது பக்கம் பழுப்பு பில்டிங்கல ரெண்டாவது மாடியில் முதல் கிளாஸ் உங்க தங்கச்சி கிளாஸ்” என்று வழி காட்டினார்ர்.

அவர் சொன்ன வழியில் அவளது வகுப்பிற்கு அருகே சென்றவன், உள்ளே சென்று தங்கையை பார்த்திட தயங்கினான். அதனால் வகுப்பின் ஒரு ஜன்னலோரம் சற்று தள்ளி நின்று மெல்ல உள்ளே பார்வையை படர விட்டான். முதல் மூன்று வரிசைகளில் தங்கையை தேடியவனின் விழிகள் நித்யாவை கண்டு விட, அவள் அருகே இருபக்கமும் இருந்தவர்களின் மீது பார்வை படிந்து விலகியது.

நித்யாவின் வலது பக்கம் அமர்ந்திருந்தவளின் மீது பதிந்த பார்வை அப்படியே ஸ்தம்பித்து நின்றது. ஒரு பக்கம் மட்டுமே தெரிந்த முகத்தின் வசீகரத்தில் மொத்தமாக வீழ்ந்தான். கயல் போன்ற விழிகளும், காதோரம் ஆடும் சிறிய ஜிமிக்கியும், எள்ளுப்பூ நாசியும், உதட்டோரம் இருந்த சிறிய மச்சம் கூட அவன் பார்வையில் தப்பவில்லை.

அந்நேரம் அவனை கவனித்து விட்ட பேராசிரியர் “யார் சார் நீங்க? இங்கே என்ன பண்றீங்க?” என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்தார்.

அனைவரின் பார்வையும் அவன் மீதிருக்க, நித்யாவிற்கோ ‘அடப்பாவி அண்ணா! இங்கே என்ன செய்ற?’ என்று மனதிற்குள் அதிர்ந்தாள்.

முதலில் அதிர்ந்தாலும் பின்னர் சமாளித்துக் கொண்டவன் “நித்யாவோட ப்ரதர் மேம். நோட்ஸ் வாங்க பணம் கேட்டிருந்தா, அதை கொடுக்க மறந்துட்டேன். அதான் வந்தேன்” என்று புழுகினான்.

நித்யாவோ ‘நோட்சா? நான் எப்போ கேட்டேன்? என்ன நோட்ஸ்?’ என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டு எழுந்து நின்றாள்.

அவனது பதிலில் திருப்தியடைந்தவர் “சரி கொடுத்திட்டு போங்க” என்று நித்யாவை அழைத்து பணத்தை வாங்கிக் கொள்ள கூறி விட்டு உள்ளே சென்று விட்டார்.

அவன் அருகே நெருங்கி நின்ற நித்யா “என்ன இது! நான் எப்போ நோட்ஸ் வாங்க பணம் கேட்டேன்?” என்றாள் முறைப்பாக.

அவனோ தலையை குனிந்தபடி பர்சிலிருந்து பணத்தை எடுத்து நீட்டியவன் “கண்டுக்காதே விடு! என்ன வேணுமோ வாங்கி என்ஜாய் பண்ணு” என்று கூறி விட்டு நகர்ந்தான்.

அவளோ நொந்து போய் “என்னங்கடா நடக்குது!” என்கிற தோரணையில் தன் இடத்திற்கு சென்றாள்.

விஷால் வந்ததிலிருந்து கவனித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு தெரிந்து நித்யா எந்த நோட்சம் வாங்க கேட்டிருக்க மாட்டாள் என்பதில் உறுதியாக இருந்தாள். அப்புறம் இதற்கு தேடி வந்து பணம் கொடுத்து விட்டு செல்கிறான் என்று செல்லுபவனையே அவளது பார்வை பின் தொடர்ந்தது.

ஜன்னலின் ஓரம் வரை தலையை குனிந்தபடி சென்றவனுக்கு, அவளின் பார்வை தன்னை தொடர்வது தெரிந்தே இருந்தது. அமைதியாக நடந்தவன் சட்டென்று திரும்பிப் பார்க்க, அவளின் பார்வையும், அவனது பார்வையும் மோதிக் கொண்டது.

அடுத்த நிமிடம் தன்னை அறியாமல் கண்ணடித்து விட்டு, அவளின் அதிர்ந்த முகத்தை ஒரு நிமிடம் நோக்கியவன், விறுவிறுவென்று கீழிறங்கி சென்று விட்டான்.

இதை முற்றிலும் எதிர்பார்க்காத நதியாவிற்கு இதயம் எகிறி குதித்தது. என்ன தைரியம் அவனுக்கு? முதன் முறையாக பார்க்கும் ஒரு பெண்ணிடத்தில் இப்படியா நடந்து கொள்வான்?. அவள் கேள்விப்பட்டவரை நித்யாவின் அண்ணன்கள் இருவரும் பத்தரை மாற்று தங்கம் என்று தான் சொல்லி இருக்கிறாள்.


இவன் யார் பெரியவனா, சிறியவனா? எதற்காக இங்கு வந்தான்? ஒருவேளை தன்னை பார்ப்பதற்க்கா? என்கிற கேள்வி அவள் மனதில் எழுந்ததுமே உள்ளுக்குள் வியர்க்க ஆரம்பித்தது.

தொடரும்.......


 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,582
1,173
113
அத்தியாயம் -2

அன்று முழுவதும் நதியா ஒருவித பதட்டத்துடனே இருந்தாள். நித்யாவோ விஷால் கொடுத்த பணத்தை வைத்துக் கொண்டு என்ன வாங்கலாம் என்று யோசிப்பதிலேயே நேரத்தை கடத்தினாள். ஆனாலும் மனதின் ஓரத்தில் இங்கே எதுக்கு வந்தாங்க? நான் நோட்ஸ் வாங்க பணம் எதுவும் கேட்காமல் அதை வேற கொடுத்திட்டு போயிருக்காங்களே, என்று யோசித்தபடி தோழியை திரும்பி பார்த்ததும் நினைவிற்கு வந்தது.

இவளை பார்க்கணும்னு காலையிலே மல்லுக்கு நின்னாங்களே. ஒருவேளை அதுக்காக தான் வந்தாங்களோ? என்று யோசிக்கும் போதே பயம் வந்தது. ஒரு பக்கம் ‘ச்சே! ச்சே! அண்ணன் அவ்வளவு எல்லாம் மோசமில்ல’ என்று எண்ணிக் கொண்டாள். என்ன சமாதானப்படுத்திக் கொண்டாலும் மனம் என்னவோ ஏற்க மறுத்தது.

நகத்தை கடித்தபடி தன் முன்னே அமர்ந்திருந்தவளிடம் “நதி! ஏன் இன்னைக்கு இவ்வளவு டென்ஷனா இருக்க?”

சட்டென்று நிமிர்ந்து அவளது முகத்தைப் பார்த்தவள் “அது! என்னவோ ஒரு பயம் நித்தி! என்ன சொல்றதுன்னு தெரியல. உள்ளுக்குள்ள என்னவோ பயமா இருக்கு”.

“அது தான் ஏன்?”

“சொல்லட்டுமா?”

“சொல்லு நதி!”

“உங்க அண்ணன் என்னை பார்க்க தான் காலேஜுக்கு வந்தாங்களோன்னு டவுட்”.

சற்றே கோபத்தை உள்ளடக்கிய குரலில் “எப்படி சொல்ற? இவ்வளவு உயர்ந்த எண்ணம் எப்படி வந்துச்சு?”

“தப்பா நினைச்சுக்காத நித்தி”.

“கடுபேத்தாம சொல்லு”

எச்சிலை விழுங்கி முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு “போகும் போது ஜன்னல் கிட்ட நின்னு என்னை பார்த்து கன்னடிச்சாங்க”

அவளிடம் கேட்டுவிட்டு தண்ணீரை பருகிக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு, நதி சொன்ன விஷயம் புரைக்கேற வைத்தது. உள்ளுக்குள் ‘அடேய் அண்ணா! இந்த வேலை பார்க்க தான் காலேஜுக்கு வந்தியா?’ என்று கழுவி ஊற்றிக் கொண்டிருந்தாள்.

அவள் தலையை தட்டிக் கொடுத்து “நானும் எதிர்பார்க்கல நித்தி. நீ உங்க அண்ணனுங்களை பத்தி சொன்னதை வச்சு ரொம்பவும் மரியாதை வச்சிருந்தேன்” என்றாள்.

மனதிற்குள் எழுந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு பல்லை கடித்தபடி “நீ ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க நதி. அண்ணன் அப்படிப்பட்ட ஆள் இல்ல”.

“அப்போ நீ என்ன நோட்ஸ் வாங்க பணம் கேட்டிருந்த?”

“அது... வந்து...”

“விடு நித்தி!” என்றவள் எழுந்து அங்கிருந்து விடுவிடுவென்று சென்று விட்டாள்.

நித்தியாவிற்கோ அண்ணனை அடித்து துவைத்து விடும் ஆத்திரம் எழ, அதே கோபத்தோடு வீட்டிற்கு சென்றாள்.

வீட்டினுள் நுழைந்ததும் அன்னையிடம் பேசாமல் சென்று தனது அறையில் கதவடைத்துக் கொண்டாள். பத்மாவோ என்னவாயிற்று இந்தப் பெண்ணிற்கு என்று பார்த்தபடி அமர்ந்திருந்தார். செல்வநாயகமும் “எதுவும் மார்க் வந்திருக்கோ பத்மா? இப்படி கோபமா போறா?”

“தெரியலங்க! விடுங்க கொஞ்ச நேரத்தில் தானா வருவா” என்று கண்டு கொள்ளாமல் தன் வேலையை பார்க்க சென்றார்.

கிருஷ்ணா மதியத்திற்கு மேல் வேலை நடக்கும் இடங்களை மேற்பார்வையிட சென்று விட, கீர்த்தி காலையில் நடந்தவைகளை எல்லாம் அசைபோட்டபடி அமர்ந்திருந்தாள். நீலா என்ன செய்கிறாள் என்று பார்க்க, சோகமே உருவாக வேலை செய்து கொண்டிருந்தாள். மெல்ல அவள் அருகே சென்றவள் தோளில் கையை வைத்து அழுத்தி “நீலா! நீ வேணா பெர்மிஷன் போட்டுட்டு கிளம்புறியா? மனசுல போட்டு உருகிக்கிட்டு இருக்காதே!”

சோர்வான முகத்துடன் “இல்ல கீர்த்தி! சார் இதை எவனிங் முடிச்சிடனும்னு சொல்லி இருக்கார்”

“உன் முகமே சரியில்ல நீலா! சோர்வா தெரியுற”

சட்டென்று கண்கள் கலங்கிவிட “அடுத்த ஜென்மத்திலேயாவது பணக்காரியா பிறக்கணும் கீர்த்தி”.

அவள் கூறியதை கேட்டதுமே விழிகள் தெறித்து விழும் அளவிற்கு விரிய “அத்தனை அன்பா அவர் மேல? நான் கூட ஏதோ தினமும் பார்க்கிறதுனால ஏற்படும் ஈர்ப்புனு நினைச்சேன் நீலா. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. இந்த அன்பை அடைய அவர் கொடுத்து வைக்கல அவ்வளவு தான் சொல்வேன்” என்றவள் அவளது கையைப் பற்றி எழுப்பி “வா! போய் ஒரு காப்பி குடிச்சிட்டு வருவோம். இப்படியே இருந்தா மயங்கி விழுந்திருவ” என்று கூறி இழுத்துச் சென்றாள்.

ஐந்தரை மணியளவில் ஒவ்வொருவராக கிளம்பிவிட, நீலாவும் அவன் கொடுத்துச் சென்ற வேலையை முடித்து விட்டு, அவனைப் பார்க்க சென்றாள்.

அனைத்தையும் சரி பார்த்தவன் “குட் நீலா! நான் நினைத்ததை விட சீக்கிரமா முடிசிட்டீங்க” என்று பாராட்டினான்.

அவனது பாராட்டில் முகம் மலர “தேங்க்ஸ் சார்” என்றாள்.

நிமிராமலே “நீங்க போகலாம்” என்றான்.

அவன் தன்னை ஒருமுறையாவது நிமிர்ந்து பார்க்க மாட்டானா என்கிற ஏக்கத்துடன் பார்த்துவிட்டு கதவருகே சென்றவளை தடுத்து நிறுத்தியது அவனது குரல்.

“நீலா! ஒரு நிமிஷம் நில்லுங்க! உங்க கிட்ட பேசணும்”

அந்த அழைப்பில் மகிழ்ந்து அவசரமாக திரும்பி அவனைப் பார்க்க, தன் கையிலிருந்த பேனாவை உருட்டியபடி அப்போதும் அவளை நிமிர்ந்து பார்க்காது “என்னை லவ் பண்றீங்களா?” என்றான் அதிரடியாக.

அவனது கேள்வியில் அதிர்ந்து போனவளின் விழிகள் விரிய “சா..ர்..”

“மிஸ்.கீர்த்தி கிட்ட நீங்க பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன்” என்று சொன்னவனின் பார்வை இப்போது அவளை துளைத்தது.

அவன் பார்க்க மாட்டானா என்று ஏங்கி இருந்தது போக, இப்போது அவனது பார்வையை சந்திக்கும் தைரியமற்றவளாக தலை குனிந்து நின்றாள்.

“நான் உங்களை தப்பு சொல்லல நீலா. எனக்கு என்று சில கொள்கைகள் இருக்கு. நான் என்னைக்கும் அதை தாண்டி வெளில வர மாட்டேன். அதோட நீங்க என்னோட ஸ்டாப். இதை தாண்டி இங்கே எந்தவொரு ரிலேஷன்ஷிப் வளருவதை நான் என்னைக்கும் அனுமதிக்க மாட்டேன்” என்றான் கூர்மையான குரலில்.

“சா..சாரி சார்” என்றாள் தளும்பிய கண்ணீரை உள்ளடக்கியபடி.

“நான் சொன்னதை நல்லா மனசில் வச்சுக்கோங்க. மறுபடியும் இதே மாதிரி உங்க பிரெண்ட் கிட்டையோ, மற்றவங்க கிட்டேயோ லவ் பண்றேன் அது இதுன்னு பேசுவது காதில் விழுந்தா அடுத்த நிமிஷம் டெர்மினேட் பண்ணிடுவேன்”.

அவனது மிரட்டலில் உடல் நடுங்கி போனவள் “இல்ல சார்! இனி இப்படி சொல்ல மாட்டேன்” என்றாள் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட.

“ஓகே கெட் அவுட்” என்றான் அவள் முகம் பார்க்காமலே.

அவனது அலட்சியமும், மிரட்டலும் அவளை பாதித்தது என்று சொல்வதை விட, என் மீது காதலை வளர்த்துக் கொள்ளாதே என்று கூறியது தான் வலித்தது.

தள்ளாட்டமான நடையுடன் சென்று தனது பொருட்களை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து வெளியேறினாள். அவனோ அவளை வெளியே அனுப்பிய பிறகு அதை பற்றி கவலை கொள்ளாமல் தனது வேலைகளை முடித்துக் கொண்டே கிளம்பினான்.

விஷாலோ அன்று முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தான். பாதி நேரம் கனவிலேயே மிதந்தான். அவனது கனவு காதலியை கண்டுவிட்ட மகிழ்வு அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

“என்ன மச்சி? தௌசண்ட் வாட் பல்ப் எரியுது முகத்தில்? என்ன விஷயம்?
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,582
1,173
113
“மச்சி! என் வருங்காலத்தை பார்த்துட்டேன்”

“என்னடா சொல்ற?”

“ஆமாம் மச்சி! என் தங்கச்சியோட பிரெண்ட். சும்மா அழகுன்னா அழகு அப்படியொரு அழகு...அவ தாண்டா! நான் முடிவு பண்ணிட்டேன்”.

“மச்சி! எத்தனை தடவை பார்த்திருப்ப அந்த பெண்ணை?”

“இன்னைக்கு தாண்டா பார்த்தேன்...முதல் பார்வையிலேயே விழுந்துட்டேன் டா”.

நண்பனின் தோள்களை அழுந்த பற்றிக் கொண்ட சித்தார்த் “அவசரப்படாதேடா! பழகி பாரு...அவங்களுக்கும் பிடிச்சா பிரச்சனை இல்லை”.

“என்னை யாருக்காவது பிடிக்காம போகுமாடா? செம ஹன்ட்சம், நல்ல கலர், பெண்களுக்கு பிடிச்ச மாதிரி ஹைட், நல்ல சம்பளம் வாங்குறேன்...அப்புறம் முதல் பார்வையிலேயே லவ் பண்ண வைக்கிற தில்லு. இதெல்லாம் வேண்டாம்னு யாராவது சொல்லுவாங்களா?”

அவன் சொன்னதைக் கேட்டு வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்த சித் “பார்த்தவுடனே பிடிக்குதோ இல்லையோ, உன் பேச்சில் கவுத்திடுவடா” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே விஷாலின் முகம் சுணங்கியது.

“என்னடா? என்னாச்சு?”

காலையில் நடந்தவைகளை அவனிடம் சொல்ல “அவளை பார்க்கணும்ன்ற ஆசையில் காலேஜுக்கு பொய் சொல்லிட்டு போயிட்டேன். இப்போ வீட்டுக்குப் போனா என் தங்கச்சி பிசாசு கிட்ட சிக்கி சின்னாபின்னம் ஆகிடுவேண்டா”.

“காதலில் இதெல்லாம் சகஜம் மச்சி”.

“இப்போ தாண்டா பார்க்கவே ஆரம்பிச்சிருக்கேன்”.

“விடுடா! உன் தங்கச்சி தானே! பார்த்துக்கலாம்”.

“ம்ம்..நம்பிக்கை தான் வாழ்க்கை” என்று கூறினாலும் நித்யாவிடம் என்ன சொல்வது என்கிற சிந்தனை எழுந்து மறைந்தது.

எட்டு மணியளவில் வீடு திரும்பியவனை அமைதியான வீடு வரவேற்றது. பொதுவாக அந்நேரத்திற்கு நித்யா அன்னையிடம் ஏதாவது வளவளத்துக் கொண்டிருப்பாள். ஆனால் இன்று பத்மா மட்டும் அமர்ந்து ஏதோவொரு மொக்கை சீரியலை பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்னம்மா நித்யா எங்கே? தனியா உட்கார்ந்திருக்கீங்க?”

“என்னன்னு தெரியல விஷாலு. சாயங்காலம் வந்துதுலே இருந்து கதவை சாத்திகிட்டு உட்கார்ந்திருக்கா? மார்க் எதுவும் ஊத்திகிட்டோ?”

அதைக் கேட்டதுமே உள்ளுக்குள் உதறல் எடுக்க ‘சுனாமி எபெக்ட் பலமா இருக்கும் போல...சேதாரம் அதிகம்டா விஷாலு...இன்னைக்கு கதை கந்தல் தான்’ என்று சொல்லிக் கொண்டவன் “அதெல்லாம் இருக்காதுமா...பிரெண்டு கிட்ட எதுவும் சண்டையா இருக்கும்” என்றவன் அவர் அருகே அமர்ந்து கொண்டான்.

“ஒ...இருக்கும்...இருக்கும்”

“அண்ணன் வந்தாசாம்மா?”

“வந்துட்டாண்டா! எப்பவும் போல நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதேன்னு மாடியில பாட போயிட்டான்”

அவர் சொன்னதைக் கேட்டு பக்கென்று சிரித்தவன் “உங்க பசங்களை கலாய்க்க வேற யாரும் வேணாம்” என்று மெல்ல எழுந்து தன்னறைக்கு சென்றான்.

அவன் வந்ததிலிருந்து பேசியவை அனைத்தையும் தன்னறையிளிருந்து கேட்டுக் கொண்டிருந்த நித்யாவிற்கு மேலும் கோபத்தை அதிகப்படுத்தியது. ஒண்ணுமே நடக்காத மாதிரி எப்படித் தான் இருக்க முடியுதோ? இங்க வரட்டும் பேசிக்கிறேன் என்று அவனது வரவிற்காக காத்திருந்தாள்.

அவளது காத்திருப்பு புரிந்தே வேண்டும் என்றே மெதுவாக தனது வேலைகளை முடித்துக் கொண்டு அவளது அறைக் கதவை தட்டினான். உடனே திறந்து விடாமல் சற்று நேரம் காக்க வைத்துவிட்டே திறந்தாள். அவன் உள்ளே நுழைந்ததும் கதவை சாத்தி தாளிட்டவள் இரு கைகளையும் குறுக்கே கட்டிக் கொண்டு அவனை முறைத்தபடி நின்றாள்.

மெல்லிய சிரிப்போடு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவன் “அடேங்கப்பா! வரவேற்ப்பே பலமா இருக்கு?”

முறைப்புடன் சிறிது நேரம் பார்த்தவள் “எதுக்கு காலேஜுக்கு வந்தீங்க?”

“நோட்ஸ் வாங்க பணம் கேட்டுட்டு மறந்திட்டியே. அதை கொடுக்க தான் வந்தேன்” என்றான் சிரிப்புடன்.

“யாரு? நான்? பணம் கேட்டேன்? அதுவும் நோட்ஸ் வாங்க?” என்றாள் இடுப்பில் கை வைத்தபடி.

“இல்லையா பின்ன?” என்று மேலும் சிரித்து வெறுப்பேற்ற, அவளின் கோபம் எல்லைக் கடந்தது.

“அண்ணா! என்ன பண்றீங்க? நீங்க பண்ணின வேலையில் என் பிரெண்ட் உங்களையும், அண்ணனையும் தப்பா பேசிட்டா” என்றாள் கலங்கிய கண்களுடன்.

“என்னடா சொல்ற?”

“ஆமாண்ணா! நதியை பார்த்து நீங்க கன்னடிச்சது தப்பு தானே? அது தான் அவ கேட்கிறா...என்னவோ உங்க அண்ணனுங்களை பத்தி ஆஹா ஓஹோன்னு சொன்ன..ஆனா இவ்வளவு கேவலமா பீகேவ் பண்றாங்கன்னு கேட்டுட்டா”.

அவ்வளவு நேரம் சிரிப்புடன் இருந்தவன் “நான் பண்ணினது தப்பு தான் இல்லேன்னு சொல்லல. ஆனா அதுக்கு நீயும் ஒரு காரணம். என் பிரெண்ட் அப்படி இருப்பா, இப்படி இருப்பா...அவ சிரிப்புக்கு காலேஜே அடிமைன்னு உசுப்பேத்துனது நீ தான்”.

“என்ன! இதெல்லாம் அநியாயம். பெரிய அண்ணனுக்கும் தான் சொல்லி இருக்கேன். அவங்க என்ன உங்களை மாதிரி பண்ணினாங்களா?”

“அவன் கண்ணு முன்னாடி வந்தாலும் கல்லையும், மண்ணையும் பார்க்கிற மாதிரி பார்த்திட்டு போவான். நான் அப்படி இல்லை. கலா ரசிகன். அதிலும் நதியா! நீ சொன்னது ரொம்பவே கம்மி” என்றான் கண்களை மூடிக் கொண்டு.

அவன் முதுகில் ரெண்டு மொத்து மொத்தியவள் “இது நல்லதுக்கு இல்லை சொல்லிட்டேன். இதோட விட்டுடுங்க”.

“நோ வே! அவளே விஷாலை எனக்கு ரொம்ப பிடிக்கும் சொல்ல வச்சு கட்டிக்கிறேன். அதுவரை ப்ளீஸ் க்ளோஸ் தி டோர்”.

கைகளை உதறி “அண்ணா! இப்படி எல்லாம் செஞ்சீங்கன்னா நான் பெரியண்ணா கிட்ட சொல்லிடுவேன்”.

“சொல்லேன்! அப்படியாவது அவன் யாராவது பொண்ணை கரெக்ட் பன்றான்னான்னு பார்ப்போம்”.

ஓங்கி தலையில் அடித்துக் கொண்டவள் அழுகுரலில் “தயவு செஞ்சு கேட்கிறேன் விட்டுடுண்ணே. அவளுக்கு அக்கா, மாமா தவிர யாருமில்ல. அதுவும் அவங்க மும்பையில இருக்காங்க. என்னோட பிரெண்ட்ஷிப் தான் அவளுக்கு இங்கே ஆசுவாசம்”.

மெல்லிய சிரிப்புடன் “தேங்க்ஸ் பார் தி இன்பார்மேஷன்...நானிருக்கும் போது அவளுக்கு வேற என்ன வேணும்” என்று சொல்லிவிட்டு கதவருகே சென்றவனை ஓங்கி முதுகில் அடித்தாள்.

“அடங்கவே மாட்டீங்களா?”

“ஸ்...ஸ்...உன் அண்ணி கிட்ட என்னுடைய பராக்கிரமங்களை எல்லாம் சொல்லி ஹெல்ப் பண்ணினா நீ கேட்கிற எல்லாம் வாங்கி தரேன்” என்றான் கண் சிமிட்டி.

கோபமும், அழுகையும் ஒன்று சேர புசுபுசுவென்று மூச்சை விட்டுக் கொண்டு அவனைத் தாண்டி அறையை விட்டுச் சென்றாள். அவளை பார்த்து சிரித்தபடி கிருஷ்ணாவை காண மாடிக்குச் சென்றான்

அங்கோ அண்ணாந்து வானத்தை பார்த்தபடி நின்றிருந்தவன் அருகில் சென்ற விஷால் “எந்நேரமும் இப்படி இயற்கையையே பார்த்திட்டு இருக்கியே உனக்கு அலுக்கவே இல்லையா?”

அவன் குரல் கேட்டதும் திரும்பி அவனை பார்த்தவன் “எனக்கு பிடிச்சிருக்கு பார்க்கிறேன்” என்றான் பட்டும்படாமலும்.

கைப்பிடிச் சுவர் மீதேறி அமர்ந்தவன் “அம்மாவும், அப்பாவும் உன்னைப் பத்தி தான் கவலைப்படுறாங்க. நீ ஏன் அவங்க பேச்சை கேட்டு கல்யாணம் பண்ணிக்க கூடாது”.

தம்பியின் எதிரே இருந்த சுவற்றில் சாய்ந்து கொண்டவன் ‘உன்னை என் கிட்ட பேச சொன்னாங்களா?”

“இல்ல நானே கேட்கிறேன்...எது உன்னை தடுக்குது?

“எனக்கு கல்யாணம், குழந்தை பேரன், பேத்தின்னு இந்த லௌகீக வாழ்க்கையில் விருப்பமில்லை விஷால்”.

அவனை குறுகுறுவென்று பார்த்தவன் “நான் ஒன்று கேட்டா தப்பா எடுத்துக்க கூடாது”.

“ம்ம்...கேளு”

“உனக்கு இந்த செக்ஸ் பத்தி எதுவும் பயம் இருக்கோ” என்று கேட்டுவிட்டு அவன் அடிக்க வந்துவிடுவானோ என்று ஓடுவதற்கு தயாரானான்.

கிருஷ்ணாவோ இந்த கேள்வியை எதிர்பார்க்காதவன் சுற்றுப்புறமே அதிரும் அளவிற்கு விழுந்து பிரண்டு சிரித்தான். அதை பார்த்த விஷாலுக்கோ ‘ஹப்பாடா அடி வாங்காம தப்பிச்சோம். ஆனா எதுக்கு இவன் இப்படி சிரிக்கிறான்?’ என்று வாயை பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரம் சிரித்து முடித்து விஷாலை பார்த்ததும் மீண்டும் சிரிப்பு எழ, “ஏண்டா இப்படியொரு கேள்வியை என்னைப் பார்த்து கேட்ட?” என்று விட்ட இடத்திலிருந்து மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான்.

“ஹையோ எதுக்கு இப்படி சிரிக்கிற?”

சிரிப்பை அடக்கிக் கொண்டு “ஒருத்தன் கல்யாணம் வேண்டாம்னு சொன்னா இது தான் காரணமா இருக்கனுமாடா? அதுவும் அண்ணனைப் பார்த்து கேட்கிற கேள்வியாடா இது?”

அவனோ சற்றும் சளைத்துக் கொள்ளாமல் “நானாவது கேட்டேன்... அம்மாவும், அப்பாவும் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போக ப்ளான் பண்றதுக்கும் சான்ஸ் இருக்கு..எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கோ” என்று கூறி விட்டு இறங்கி ஓடியே விட்டான்.

ஓடுகிறவனின் பின்பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தவனின் இதழ்கள் சிரிப்புடன் விரிந்தது. திரும்பி நின்று இருட்டை வெறித்தவனின் இதழ்களில் நிரந்த புன்னகை. மனமோ எதையோ அசை போட்டுக் கொண்டிருந்தது.

உடல் லேசாகி பறப்பது போன்ற உணர்வை கொடுத்தது அவனுக்கு. விஷால் பேசிச் சென்றதும் சிலபல நினைவுகளில் மூழ்கியது. கையிலிருந்த போனை எடுத்தவன் தனது பிஏவிற்கு அழைத்து மறுநாள் மும்பைக்கு டிக்கெட் போடும் படி கூறிவிட்டு போனை வைத்தான்.

தொடரும்.......
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,582
1,173
113
அத்தியாயம் -3

மறுநாள் காலை எழும் போதே இன்று விஷாலுடன் கல்லூரிக்கு செல்லக் கூடாது என்று எண்ணிக் கொண்டாள் நித்யா. கிருஷ்ணாவோ மும்பை கிளம்புவதற்கான ஆயத்தங்களில் இருந்தான்.

மூவரும் கிளம்பி வர, விஷாலை பார்த்த நித்யாவோ கடுகடுப்புடன் முகத்தை திருப்பிக் கொள்ள அவனோ “இன்னையிலருந்து நான் உன்னை காலேஜுக்கு கூட்டிட்டு போக மாட்டேன்” என்றான் கடுப்பாக.

அவனுடன் போக கூடாது என்கிற தீர்மானத்தில் இருந்தாலும் அவன் அதை சொன்னதை விரும்பாதவள் “யார் உன் கூட வர ரெடியா இருக்கா? நீயே கெஞ்சி கூப்பிட்டாலும் நான் உன் கூட வர மாட்டேன்” என்று முறுக்கிக் கொண்டாள்.

வீட்டிலிருந்த மற்றவர்கள் அனைவரும் இவர்களின் சண்டையின் காரணம் புரியாமல் விழிக்க, கிருஷ்ணா மட்டும் “என்ன பிரச்சனை?” என்றான் யோசனையாக.

“இவன் என் பிரெண்ட்சை சைட் அடிக்க தான் காலேஜுக்கு வரான் அண்ணா” என்று போட்டுடைத்தாள்.

அவள் கூறிய விஷயத்தைக் கேட்டு அனைவரும் திகைத்து நிற்க, விஷாலோ கடுப்பாகி ஓடிச் சென்று அவள் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்து “லூசு மாதிரி பேசாதே! என் டைம் வேஸ்ட் பண்ணி உன்னை காலேஜில் கொண்டு விட்டதுக்கு இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ”.

அவர்கள் இருவரின் சண்டையை பார்த்துக் கொண்டிருந்த பத்மா “ரெண்டு பேரும் நிறுத்தப் போறீங்களா இல்லையா? அண்ணனைப் பார்த்து இப்படி பேசுறது தப்பு நித்தி”.

“அம்மா! உங்களுக்கு தெரியலமா இவனை பற்றி...பெரியண்ணன் மாதிரி இல்ல இவன்” என்றாள் கோபமாக.

அவள் பேசபேச பல்லைக் கடித்துக் கொண்டு “ரொம்ப ஓவரா போற நித்தி”

“எனக்கு தெரியாதா இவனை...ரெண்டையும் நான் தான் பெத்தேன். பெருசு சாமியாருன்னா இவன் நித்தியானந்தா மாதிரி. எல்லாம் என் கெரகம்” என்று தலையில் அடித்துக் கொண்டார்.

அன்னை சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவன் “அம்மா! அந்தாளோட என்னை கம்பேர் பண்றீங்க? அவ்வளவு மோசமில்ல நான்” என்றான் பதற்றத்துடன்.

கிருஷ்ணாவிற்கு அவர்களின் பேச்சு வார்த்தை சிரிப்பை வரவழைக்க “காலேஜில் கொண்டு விட இந்த அலப்பறையா? மா! நான் இன்னைக்கு மும்பை கிளம்புறேன். வரதுக்கு நாலு நாள் ஆகும். சீக்கிரம் டிபனை எடுத்து வைங்க”.

“இவன் ஒருத்தன் எந்த ராஜா பட்டினம் போனா என்ன வந்தா என்னன்னு கம்பனியை கட்டிட்கிட்டு அழுவான். அந்த மும்பையில எவளும் உனக்கு அழகா கண்ணுல படலையா கிருஷ்ணா. நீ கழுதையை கட்டிகிட்டேன்னு சொன்னா கூட ஒத்துக்க தயாரா தானே இருக்கேன். அப்புறம் ஏன் தான் இப்படி சாமியாரா சுத்துறியோ?” என்று அலுத்துக் கொண்டே பதார்த்தங்களை டேபிளின் மீது கொண்டு வைத்தார்.

விஷாலோ அன்னையை முறைத்துக் கொண்டே “ஏம்மா! உங்களுக்கே இது நியாயமா இருக்கா? வேண்டாத பிள்ளையை கட்டிக்கோ கட்டிகோன்னு சொல்றீங்க. ஆனா என்னை மட்டும் கரிச்சு கொட்டுறீங்க”.

“அவனுக்கு என்ன வயசு உனக்கு என்ன வயசு விஷால்?” என்றார் அதுவரை அமைதியாக இருந்த செல்வநாயகம்.

அவனோ அவரின் கேள்வியின் ஒரு பகுதியை விட்டுவிட்டு “அப்போ வயசு தான் முக்கியம். அந்த வயசு வந்ததும் நானும் யாரை வேணும்னாலும் கூட்டிட்டு வரலாம்” என்றான் மேஜையில் தாளம் போட்டுக் கொண்டே.

பெரிய மகனுக்கு பரிமாறிக் கொண்டிருந்தவர் “எடு அந்த செருப்பை! இந்த நினைப்பெல்லாம் வச்சுகிட்ட சோத்துல விஷத்தை வச்சிருவேன் பார்த்துக்க” என்றார் மிரட்டலாக.

அன்னை சொன்னதைக் கேட்டதும் அவரை பாய்ந்து கட்டிக் கொண்ட நித்தி “லவ் யு மா” என்றவள் விஷாலை பார்த்து கண்ணடித்தாள்.

நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்து கொண்டவன் “உங்களுக்கு உங்க பெரிய மகன் தானம்மா முக்கியம். அவன் ஒரு நாள் பெரிய குண்டா போடப் போறான் பாருங்க. அப்போ இருக்கு” என்று சாப்பிடாமல் வேக நடையுடன் வெளியேறினான்.

அதுவரை விளையாடிக் கொண்டிருந்த பத்மா அவனது கோபம் கண்டு “டேய் விஷாலு! சும்மா தான் சொன்னேன்” என்று பின்னே ஓடினார். ஆனால் அவனோ அதற்குள் காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டிருந்தான்.

“என்ன இது பத்மா! விளையாட்டுக்கு ஒரு அளவில்லையா? என்று செல்வநாயகம் கடிந்து கொண்டார்.

இது எதுவுமே தன்னை பாதிக்காதது போல உணவருந்தி விட்டு தந்தையை பார்த்து “நான் கிளம்புறேன் அப்பா” என்று கார் சாவியுடன் வெளியேறினான் கிருஷ்ணா.

நித்தியோ தன்னால் தான் விஷாலுக்கு கோவம் வந்து விட்டது என்கிற குற்ற உணர்வுடன், அரைகுறையாக உணவை முடித்துக் கொண்டு தந்தையை கல்லூரியில் விடுமாறு கேட்டுக் கொண்டாள்.

அன்னையிடம் கோவித்துக் கொண்டு வந்தவனது வாகனம் நேரே சென்று நின்றது ஒரு ஹோட்டலின் முன்பு. அங்கு உள்ளே சென்று வயிற்றுக்கு வேண்டியதை நன்றாக நிரப்பிக் கொண்டு , அவசரமாக நதியா தங்கி இருக்கும் ஹாஸ்டலின் முன்பு சென்று நின்றான்.

அவளது ஹாஸ்டலிலிருந்து சற்று தள்ளி காரை நிறுத்தி விட்டு, அதன் மீது சாய்ந்து நின்றபடி மெல்ல நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். நதியாவோ பரபரப்பாக கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். ஜன்னலில் மாட்டி இருந்த கண்ணாடியில் முகம் பார்க்கவென்று அதன் அருகே செல்ல, அவள் பார்வையில் விழுந்தான் விஷால். உள்ளம் ஒரு நிமிடம் பதறி போனது. என்ன இது! இவன் இவ்வளவு காலையில் இங்கு வந்து நிற்கிறானே! உள்ளபடியே தீவிரமாக இருக்கிறானோ? நிச்சயமாக என்னை பார்க்க மட்டுமே இங்கு வந்து நிற்கிறான் என்று உள் மனது அழுத்தமாக கூறியது.

உடலின் வியர்வை நாளங்கள் விழித்துக் கொண்டது. நகம் கடித்தபடி மெல்ல அவன் என்ன செய்கிறான் என்று ஒளிந்து நின்று வேடிக்கை பார்த்தாள். ஒய்யாரமாக காரில் சாய்ந்து கொண்டு அரை கண்ணால் ஹாஸ்டலில் இருந்து வெளியேறுபவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தான்.

உள்ளுக்குள் பயம் எழுந்தது. இதை வளர விட்டால் பெரிய பிரச்சனையாக வெடிக்கும். இந்த ஊரில் ஆதரவின்றி இருக்கும் தனக்கு உதவ கூட ஆள் இல்லாத நிலையில் இதெல்லாம் தேவையில்லாதது. இவனை எப்படி தடுப்பது? நித்யா சொன்னது போல அவளது அண்ணன்கள் நல்லவர்கள் இல்லை போல இருக்கே. ஒரு முறை மட்டுமே பார்த்த பெண்ணை பின் தொடர்வது என்ன மாதிரியான நடவடிக்கை? அதிலும் இப்படியொரு நெருக்கடியை உருவாக்குபவன் நல்லவனாக இருக்க முடியாது என்று சற்று நேரம் யோசித்தவள், அவனிடம் நேரடியாக பேசிவிட வேண்டியது தான் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

கடகடவென்று கிளம்பி கீழே வந்தவள் அவசரமாக உண்டு விட்டு, ஹாஸ்டலை விட்டு வெளியேறினாள். தான் வெளியேறுவதை கண்டதும் நிச்சயமாக அருகே வர முயலுவான் என்று எதிர்பார்த்தவள், வழக்கத்தை விட வெகு நிதானமாகவே நடந்தாள். அவனும் அவளை பார்த்து விட்டு காரை எடுத்தவன், அவள் அந்த தெருவை தாண்டும் வரை மெதுவாகவே ஓட்டினான். கல்லூரிக்கு அருகே செல்லும் முன் காரை அவள் அருகே சென்று நிறுத்தியவன் “நதியா! உன் கிட்ட பேசணும்” என்றான்.

அவன் அப்படி கேட்பான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும், சட்டென்று உள்ளுக்குள் பயம் எழ, அதை அடக்கிக் கொண்டவள் “தெரு முனையில் இருக்கிற பார்க்குகுக்கு போங்க. நானும் வந்துடுறேன்” என்று கூறிவிட்டு விடுவிடுவென்று திரும்பி பார்க்காமல் நடந்தாள்.

அவள் பேசுவதற்கு ஒத்துக் கொண்டதே பெரிய விஷயம் என்று எண்ணிக் கொண்டு அவள் சொன்ன பூங்காவிற்கு சென்று வண்டியை நிறுத்திவிட்டு காத்திருந்தான். அவளும் அதிக நேரம் காக்க வைக்காமல் வந்துவிட, இருவருமாக அங்கிருந்த மர பெஞ்சில் சென்றமர்ந்தார்கள். அவள் முதலில் எதுவும் பேசி விடாமல், அமைதியாக அவன் பேசட்டும் என்று காத்திருந்தாள்.

“நதியா! நீங்க என்னைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?”

“ஒரு மூன்றாவது மனுஷனை பற்றி நினைக்க என்ன இருக்கு?”

“நான் உங்க பிரெண்டோட அண்ணங்க”

“என் பிரெண்டுக்கு தான் அண்ணன். எனக்கு யாரோ தானே நீங்க”.

“சரி நேராகவே வரேன்...எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு நதியா. உன்னை பார்க்காமலே என் மனசுக்குள்ள நீ வந்து நிறைய நாள் ஆகிடுச்சு. அதுக்காக உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன். நிச்சயமா விலகி நின்னு உன்னோட சம்மதத்திற்காக காத்திருப்பேன்”.
 
Status
Not open for further replies.