இதயம் மேவிய காதலினாலே - கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
அத்தியாயம் - 19எந்த விஷயத்திலும் அவசரத்துடன் செயல்பட்டு வருந்தும் சூர்யா, நிஷாவின் விஷயத்தில் மிகத் தெளிவாக இருந்தான்.

‘இதற்கு முன்பு தன் வாழ்க்கையில் தான் காதல் என்று நினைத்தது சலமேயன்றி, காதல் அல்ல என்று உணர்ந்தவன், ‘நான் நிஷாவைக் காதலிக்கிறேன். அவளை மட்டும் தான் காதலிக்கிறேன். அவளுக்காகக் கூட அவளை விட்டுக் கொடுக்க முடியாது’ என்ற முடிவில் தெளிவாக இருந்தான்.

ஏற்கெனவே பேசிய பேச்சுகளால் நிகழ்ந்த உரசல்களையும், வருத்தங்களையும் இனியும் தொடரும் அளவிற்கு விடப்போவதில்லை. கொஞ்சம் காத்திருப்போம்… அவளே சமாதானம் அடைகிறாளா பார்க்கலாம் என்று நினைத்தான்.

முழுதாக பதினைந்து நாட்கள் இருக்கின்றன. எப்படியும் பரிட்சை முடிந்து இரண்டு, மூன்று நாட்கள் கழித்தே இங்கிருந்து அக்காவுடன் கிளம்புவாள். அதற்குள் பேசி ஒரு முடிவிற்கு வந்துவிட வேண்டும்.

திடமான மனத்துடன் ஹாலுக்கு வந்தான்.

கன்யா மட்டும் செஸ் போர்டின் எதிரில் அமர்ந்து, அதையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

“குட்டிமா! என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” கேட்டபடி அவளுக்கு எதிரிலிருந்த இருக்கையில் அமர வந்தான்.

“மாமா! நீங்க அங்கே வேணாம் இப்படி உட்காருங்க. அங்கே அத்தை உட்காருவாங்க…”

அக்கா மகள் போட்ட சப்தத்தில் எதிரில் அமர முயன்றவன் அவளுக்குப் பக்கத்தில் சென்று அமர்ந்தான்.

“உங்க அத்தை என்னடா குட்டி கண்ணுலயே படமாட்டேங்கறாங்க?” மென்குரலில் கேட்டான்.

“நீங்க ஏதாவது திட்டினீங்களா மாமா?” கண்கள் விரிய கேட்டக் குழந்தையை, அதிருப்தியுடன் பார்த்தான்.

“ம், நீயெல்லாம் கூட என்னைக் கிண்டல் பண்ற அளவுக்கு ஆளாகியிருக்க…”

“பின்னே, இன்னைக்கு உங்க பைக்கைப் பார்த்ததும் அத்தை எழுந்து ரூமுக்குப் போயிட்டாங்களே…. நான் பார்த்தேன்.”

கடமையாக மாமாவிடம் சொல்லிக்கொண்டிருக்க, கண்கள் செஸ் போர்டில் பதிந்திருந்தது.

‘இந்தச் சின்ன பம்ப்ளிமாஸ் கவனிக்க அளவுக்கு இந்தப் பெரிய பம்ப்ளிமாஸ் நடந்துக்குது. வீட்ல அக்கா கண்ணுல படறதுக்குள்ள இதை சரிபண்ணியாகணும்’ நினைத்துக் கொண்டே அமர்ந்திருந்தவன், அங்கே வந்த நிஷாவைப் பார்த்தான்.

“கேம் ஆரம்பிக்கலாமா…” கேட்டுக் கொண்டே வந்தவள் அங்கே அமர்ந்திருந்த சூர்யாவைக் கண்டதும் பட்டென வாயை மூடிக் கொண்டாள்.

சில நிமிடங்களுக்கு என்ன செய்வதென அவளுக்குப் பிரியவில்லை.

‘குழந்தையிடம் விளையாடலாம் என்று சொல்லியாகிவிட்டது. இப்போது வேண்டாம் என்று சொன்னால் ஏன், எதற்கு என்று ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு குடைந்துவிடுவாள். விளையாடலாமென்றால், இப்படிச் சட்டமாக உட்கார்ந்திருப்பவனை எழுந்து போகச் சொல்லவா முடியும்?’

யோசித்தவள் அமைதியாக கன்யாவிற்கு எதிரில் சென்று அமர்ந்தாள்.

“அத்தை! பெட் மேட்ச் விளையாடலாமா?”

“ம்”

“பெட் மேட்ச்னா ஈக்வல் ஆப்போனட்ஸ் தானே விளையாடுவாங்க?”

“ஆமாம்”

“அப்போ உங்களுக்கு ஈக்வல் ஆப்போனட் மாமா தான். சோ நீங்களும் மாமாவும் விளையாடுங்க… நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்” என்ற அண்ணன் மகளை உறுத்து விழித்தாள்.

“இப்போ உதை வாங்கப் போற பார் என்கிட்ட… நீ கூப்பிட்டதால தானே விளையாட வந்தேன்” கோபத்துடன் கேட்டாள் நிஷா.

“இப்பவும் நான் தானே அத்தை சொல்றேன். மாமாவும், நீங்களும் விளையாடுங்க… நான் உங்க கேம் பார்த்து புது மூவ்ஸ் ஏதாவது கத்துக்குவேன் இல்ல”

சாமர்த்தியமான அவளது பதிலுக்கு மறுப்பு சொல்ல முடியாத நிலையும், தன்னை இக்கட்டில் மாட்டிவைத்துவிட்டு உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் சூர்யாவின் மீது கோபமும் எழுந்தது.

“கேமும் வேணாம், ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம்” என்றவள் இருக்கையிலிருந்து எழுந்தாள்.

“உன் அத்தைக்கு தோத்துடுவோம்னு பயம் குட்டி!” என்றான்.

திரும்பி அவனை முறைத்தவள், “ஆமாம் அப்படியே வச்சிக்கோங்க. இந்த பயத்தால நான் ஒண்ணும் குறைஞ்சிட மாட்டேன். இப்படிலாம் பேசினா மட்டும் உட்கார்ந்து விளையாடுவேன்னு நினைக்காதீங்க…” சொல்லிவிட்டு கோபத்துடன் அங்கிருந்து சென்றாள்.

“வரவர இந்த அத்தை ரொம்ப பேட் ஆகிட்டாங்க. எனக்குச் சுத்தமா பிடிக்கல” சிணுங்கிய குழந்தையை தன்னருகில் அழைத்து அமரவைத்தான்.

“அப்படிலாம் சொல்லக்கூடாதுடா. அவங்களுக்கு எக்ஸாம் இருக்கு இல்ல. அந்த டென்ஷன் தான்” சமாதானமாக சொன்னான்.

“போங்க மாமா நீங்களும் அவங்களுக்கே சப்போர்ட் பண்றீங்க. அப்போ நான் கூப்பிட்டப்பவே வரலைன்னு சொல்லணும் இல்ல…”

விடாமல் கேட்ட குழந்தையைப் பார்த்து புன்னகைத்தான்.

“இப்போ உன்கூட விளையாடணும் அவ்வளவு தானே வா நாம விளையாடலாம்” என்றான்.

“ஹய்யா! நல்ல மாமா. நான் வின் பண்ணிட்டா எனக்கு டெய்ரிமில்க் வாங்கிக் கொடுக்கணும் ஓகேவா…”

“ரெண்டாவே வாங்கித் தரேன். ஆனா, நான் வின் பண்ணிட்டா….”

“ம், ஃபைவ் ஸ்டார் வாங்கிக் கொடுங்க போதும்.”

குறும்புடன் சொல்லிவிட்டுக் கண்களைச் சிமிட்டிச் சிரித்த கன்யாவை, “குட்டி வாலு!” என்று அவளது குதிரை வால் பின்னலைப் பிடித்து ஆட்டினான்.

*************​

அதன் பிறகு வந்த நாட்களில் நிஷா அவன் பார்வை படும் இடங்களிலேயே இருந்தாள். ஆனால், அவன் ஒருவன் அங்கே இருப்பதை கண்டு கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க ஆரம்பித்தாள்.

இழுத்துப் பிடித்த பொறுமையுடன் சூர்யா அமைதி காத்தான்.

‘இந்தக் குட்டிச் சாத்தானுக்கு எவ்வளவு கொழுப்பு பார். இருடி உன் ஆட்டமெல்லாம் எத்தனை நாளைக்குன்னு பார்க்கிறேன். என்கிட்ட மாட்டு அன்னைக்கு இருக்கு உனக்கு’ மனத்திற்குள் அவளுடன் பெரிய மல்யுத்தமே நடத்தினான்.

செமஸ்டரின் கடைசி பரிட்சையையும் நல்லபடியாக முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் நிஷா.

“பாப்பா! உன் அண்ணி, பெரியம்மாவை கூட்டிகிட்டு ஹாஸ்பிட்டலுக்குப் போயிருக்கு. நீ காலேஜ்லருந்து வந்ததும், உன்னைப் போன் பண்ணச் சொல்லி சொல்லுச்சி” தனக்கு இட்டிருந்த வேலையை சரியாக செய்து முடித்துவிட்டாள் சுந்தரி.

“சரிக்கா. நான் பேசிக்கிறேன். எனக்குக் கொஞ்சம் சாப்பாடு மட்டும் டேபிள் மேல வச்சிடுங்க” சொல்லிவிட்டு அறைக்குச் சென்றாள்.

உடைமாற்றிக் கொண்டு செல்போனில் பேசிக்கொண்டே வந்து டைனிங்கில் அமர்ந்தாள்.

“புரிஞ்சிச்சி அண்ணி! சுந்தரி அக்காகிட்ட மூணாயிரம் பணத்தையும் அந்த லிஸ்டையும் கொடுக்கணும். அவ்வளவு தானே கொடுத்திடுறேன்” என்றாள்.

“அப்புறம், எனக்கும் அம்மாவுக்கும் சாப்பாடு கட்டி வச்சிடு. சூ…” பேசிக்கொண்டிருந்த அமுதாவின் மொபைல் பாதியில் கட்டாகிவிட, நிஷா முயற்சித்தாள்.

மொபைல் ஸ்விட் ஆஃப் என்று வர, “வழக்கம் போல அண்ணி இன்னைக்கும் சார்ஜ் போடலை போல…” சொல்லிக் கொண்டே சுந்தரியை அழைத்தாள்.

“அக்கா! அண்ணி இதை உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாங்க. இதை அண்ணாச்சி கடைல கொடுத்திட்டு அப்படியே அண்ணிக்கும், அத்தைக்கும் சாப்பாடு கட்டி கொடுக்கறேன் அதை ஹாஸ்பிட்டல்ல கொடுத்திட்டு வந்திடுங்க” என்றாள்.

சுந்தரி கிளம்பிச் சென்றதும், கதவை மூடிவிட்டு சாப்பிட அமர்ந்தாள்.

விரித்து வைத்திருந்த புத்தகத்தில் பார்வையைப் பதித்தபடி, இரண்டு வாய் சாப்பிட்டவள், அழைப்பு பணியின் ஓசை கேட்டதும் சென்று கதவைத் திறந்தாள்.

அங்கே சூர்யா!

‘இந்த நேரத்தில் இவன் எங்கே?’ என்று அவள் திகைப்புடன் பார்க்க, அவன் அவளை வியப்புடன் பார்த்தான்.

அவள் எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட, அவன் சுந்தரியைத் தேடினான்.

“சுந்தரி அக்கா இல்ல…?” அவளிடம் கேட்டான்.

அவள் பதிலே சொல்லவில்லை.

“உன்னைத் தானே கேக்கறேன். காதுல விழுந்துதா இல்லையா?”

‘கேட்டது’ என்பது போல நிமிர்ந்து அவனைப் பார்த்துவிட்டு, மீண்டும் புத்தகத்தில் கவனத்தைச் செலுத்தினாள்.

‘அந்த புக்கைத் தூக்கி விட்டெறியப் போறேன் பார்’ மனத்திற்குள் திட்டியவன், கையைக் கழுவிக் கொண்டு வந்தான்.

அவனே தட்டை எடுத்து, உணவைப் பரிமாறிக் கொண்டு அவளெதிரில் அமர்ந்தான்.

அவளுக்குமே உள்ளுக்குள் உதறல் தான். ஆனாலும், வெளிகாட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.

“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பேசாமல் இருக்கப் போற?” அமைதியாகவே கேட்டான்.

அவளோ கவனமாக புத்தகத்தின் பக்கத்தைப் புரட்டினாள்.

“நிஷா! என்னோட பொறுமைக்கும் ஒரு எல்லையிருக்கு…”

சாவதானமாக நிமிர்ந்தவள், எரிச்சலுடன் புத்தகத்தை மூடி வைத்தாள்.

“சும்மா இந்த மிரட்டற வேலையெல்லாம் வேணாம். இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்” அழுத்தமாகச் சொன்னாள்.

“நான் மிரட்டல. உன்கிட்ட பேசத்தான் வந்திருக்கேன்” இழுத்துப் பிடித்த பொறுமையுடன் பேசினான்.

“நான் உங்ககிட்ட பேச விரும்பல” எரிச்சலுடன் சொன்னாள்.

“ஏன்?”

“நான் உங்ககிட்ட உண்மையா நடந்துகிட்டது போல, நீங்க என்கிட்ட நடந்துக்கல…”

“அப்படி என்ன தப்பா நடந்துடுச்சி…?”

“இன்னும் என்ன நடக்கணும்? என் வாழ்க்கைல என் விருப்பப்படி எதுவுமே நடக்கல. உங்களை ரொம்ப நம்பினேன். ரொம்ப மரியாதை வச்சிருந்தேன். அது எல்லாத்தையும் நீங்க குழி தோண்டி புதைச்சிட்டீங்க” கோபத்துடன் கத்தினாள்.

“அன்னைக்கு அவங்க பேசினதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?”

“நீங்க மறுத்து சொல்லியிருக்கணும். ஏன் சொல்லல. நாலு வருஷத்துக்கு முன்ன அண்ணிகிட்ட சொல்ல முடிஞ்சதை அன்னைக்கு உங்க ஃப்ரெண்ட்ஸ்கிட்ட ஏன் சொல்ல முடியல?”

“ஏன்னா அன்னைக்கு நான் உன்னை லவ் பண்ணல அதனால அக்காகிட்ட அப்படிச் சொல்லவேண்டி இருந்தது. உன்னை உதாசீனப்படுத்தறது போல பேசினேன். ஆனா, அதுக்காக நான் வருத்தப்படாத நாளில்லை நிஷா!

அதேநேரம், இப்போ என்னால அப்படி அவங்ககிட்ட மறுத்துச் சொல்ல முடியல. ஏன்னா, நான் உன்னை மனசார காதலிக்கிறேன். நானே நேரம் பார்த்து உன்கிட்ட சொல்லணும்னு இருந்தேன். அதுக்குள்ள…” என்று தலையைக் கோதிக் கொண்டான்.

கோபத்துடன் இருக்கையைத் தள்ளிக் கொண்டு எழுந்தாள்.

“எல்லாமே ப்ளான் பண்ணித்தான் நடந்துட்டு இருக்கீங்க. என்கிட்ட சாரி கேட்டது, ஃப்ரெண்டா இருக்கேன்னு சொன்னது எல்லாமே இதுக்குத் தானா? நான்தான் உங்களைப் புரிஞ்சிக்காம நடந்துட்டு இருக்கேன்.

எப்படி உங்களுக்கு இப்படி நடந்துக்க முடிஞ்சது? நினைச்சா வேண்டாம்னு சொல்வீங்க. நாங்க வாயை மூடிட்டு இருக்கணும். பிடிச்சா கல்யாணம் செய்துக்கறேன்னு சொல்வீங்க நாங்க மறுபேச்சில்லாமல் கழுத்தை நீட்டணும்.

ஆளாளுக்கு உதைச்சி விளையாட நான் என்ன ஃபுட்பாலா? அன்னைக்கு அண்ணியோட ஆசையால எனக்கு ஒரு பைத்தியக்காரி பட்டம். அதைக் கொடுத்த நீங்களே இன்னைக்கு அந்தப் பைத்தியக்காரியைக் கல்யாணம் செய்துக்க முடிவு பண்ணியிருக்கீங்க.

எனக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கறதை ஏன் புரிஞ்சிக்கல நீங்க? உங்களைப் பார்க்கும் போதெல்லாம் நீங்க என்னை வேண்டாம்னு சொன்னது தானே மனசுல வருது. நான் என்ன பண்ணுவேன்? உங்களை முழுமனசோட என்னால நிச்சயமா ஏத்துக்கவே முடியாது.

அதுவரை அவள் பேசியதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவன், “இல்ல நிஷா! உன் மனசுல நான் இருக்கேன். உன்னையே நீ கேட்டுப் பாரு” என்றான்.

“இல்ல இல்ல இல்ல… அப்படி ஒரு நாளும் உங்களைக் காதலிக்க மாட்டேன். உங்களைப் பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு காரணம் நீங்க அமுதா அண்ணியோட தம்பி, வசந்தா அத்தையோட மகன் இது மட்டும் தான் காரணம்…”

“திரும்பத் திரும்பச் சொல்றதால பொய் உண்மையாகிடாது. என் மனசுல நீ எந்த அளவுக்கு ஆழமா இருக்கியோ அதே அளவுக்கு உன் மனசுல நிச்சயமா நான் இருக்கேன்.”

தீர்மானமாகச் சொன்னவனை முறைத்தவள், டேபிள் மீதிருந்த தண்ணீர் டம்ளரை எடுத்து ஆத்திரத்துடன் அவனது முகத்தில் ஊற்றினாள்.

“இதுதான் கடைசி. இனி இப்படி முட்டாள்தனமா உளறினா, நான் சும்மா இருக்கமாட்டேன்.”

சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தவளது துப்பட்டா எதிலோ மாட்டிக் கொள்ள, திரும்பாமலேயே வேகமாக இழுத்தாள்.

ஆனால், இறுக்கமாக அதைப் பற்றியிருப்பதைப் போலத் தோன்ற திடுக்கிடலுடன் செய்வதறியாமல் நின்றாள்.

அவன் அவளுக்குப் பின்னால் வந்து நிற்பதை, வாஷ்பேசினின் அருகில் இருந்த கண்ணாடி தெளிவாகக் காட்டியது.

பயத்தில் வெலவெலத்துப் போனாள் நிஷா.

கண்ணாடி வழியாகவே அவளது முகத்தை ஊடுருவியவன், துப்பட்டாவால் தனது முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

“நீ ஆயிரம் தான் சொன்னாலும், உன் மனசுல நான் இருக்கேங்கறது தான் உண்மை. ஏன்னா, நான் உன்னைக் காதலிக்கிறேன். ஐ லவ் யூ!”

அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து செல்ல, நிஷா பரிதவிப்புடன் அங்கேயே நின்றாள்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
அத்தியாயம் - 20“டாக்டர் என்ன சொன்னாங்க அண்ணி?” உற்சாகமில்லாமல் கடமைக்கு விசாரித்தவளைக் கண்ட அமுதா உன்னிப்பாக நாத்தனரைப் பார்த்தாள்.

“ஏன் ஒரு மாதிரியா இருக்க? முகமெல்லாம் வாடிப் போயிருக்கு” நெற்றியைத் தொட்டுப் பார்த்து அக்கறையுடன் கேட்டாள்.

அண்ணியின் கரத்தை மெல்ல விலக்கியவள், “நம்ம வீட்டுக்குப் போறோமில்ல அதான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அத்தை எப்படி தனியா இருப்பாங்கன்னு நினைச்சேன்…” சமாளிப்பாக சொன்னாள்.

ஆதரவுடன் அவளைத் தன் மீது சாய்த்துக் கொண்ட அமுதா, “எனக்கும் கஷ்டமாதான்டா இருக்கு. என்ன செய்றது? நம்மகூட கொஞ்ச நாள் வந்து இருங்கன்னு கூப்பிட்டாலும் அவங்க வரமாட்டேங்கறாங்களே. ஒரு பத்து நாளைக்கு சிரமமா இருக்கும். அப்புறம் பழகிடும்” சமாதானம் கூறினாள்.

அப்போதும் அவளது முகம் தெளியாததைக் கண்டு, “அம்மா எதிர்ல எதையும் காட்டிக்காதே புரிஞ்சிதா. நீ கிளம்பும் போது கூட முடிஞ்சவரைக்கும் சாதாரணமா இரு. நீ எப்படி இருக்கியோ அப்படித் தான் அவங்களும் ரியாக்ட் பண்ணுவாங்க…” மேலும் சில அறிவுரைகள் சொல்லிவிட்டு எழுந்து சென்றாள்.

மீண்டும் எதற்கோ அறைக்குள் வந்த அமுதா, சுருண்டு படுத்திருந்தவளைப் பார்த்ததும் கவலையுடன் எதுவுமே கேட்காமலேயே திரும்பினாள்.

உறங்கிவிட்ட கன்யாவை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, முகுந்தனின் வரவை எதிர்பார்த்தபடி, ஹாலில் வந்து அமர்ந்தாள் அமுதா.

மனத்திற்குள் ஏதோ நெருடாலாகவே இருந்தது அவளுக்கு.

அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமித்தேன்
கண்ணே உன் பொன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதே.
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா? அதில் கொள்ளை போனது என் தவறா?
பிரிந்து சென்றது உன் தவறா? நான் புரிந்து கொண்டது என் தவறா?
ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம், சதையல்ல கல்லின் சுவரா?

சூர்யாவின் கைங்கர்யத்தால் கிட்டாரில் இசையாகக் கசிந்த பாடலை, அவளால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

எழுந்து சென்று, “சூர்யா!” அழைத்தபடி அவனது அறைக்கதவைத் தட்டினாள்.

“வாக்கா!” கட்டிலில் சாய்ந்திருந்தவன், எழுந்து அமர்ந்தான்.

“மாமா எங்கே இருக்கார்னு போன் பண்ணாரா?”

“இன்னும் அரைமணி நேரத்துல வந்திடுவார்” சொல்லிக்கொண்டே அவனருகில் அமர்ந்தாள்.

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா?”

“இதென்ன கேள்வி சொல்லு” சிரித்துக் கொண்டே கிட்டாரை கட்டில் மீது வைத்தான்.

“இப்போல்லாம் அடிக்கடி கிட்டார் வாசிக்கிற போல…”

“ஏன்? உனக்கு ஏதாவது டிஸ்டர்பென்ஸா இருக்கா? இலகுவாகவே கேட்டான்.

“சந்தோஷமா இருக்கு. உன்னைப் பழைய சூர்யாவா பார்க்க” ஆதூரத்துடன் சொன்னாள்.

வாய்விட்டுச் சிரித்தான்.

“பேச வந்ததை விட்டுட்டு எதையெதையோ பேசிட்டு இருக்க.”

“எதையோ இல்ல. என் தம்பியைப் பத்தி பேசிட்டு இருக்கேன்.”

அவளது பேச்சிலிருந்த உரிமையும், அன்பும் அவனுக்கு சந்தோஷமாக இருந்தது.

“உனக்கு நான் சொல்லணும்னு இல்ல. அம்மாவை பத்திரமா பார்த்துக்கோ. கொஞ்ச நாளைக்கு உன்னோட ரூமை இப்போ நிஷாவோட ஸ்டடி ரூமா இருக்கற இடத்துக்கு மாத்திக்க. முடிஞ்ச வரைக்கும் அவங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ணு. நான் பதினைஞ்சி நாளைக்கு ஒருமுறை வந்து பார்த்துட்டுப் போறேன்” என்றாள்.

“ம், சரிக்கா” என்றான்.

“அப்புறம் சீக்கிரமா கல்யாணம் செய்துக்கோ சூர்யா. இன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல அம்மாவுக்கு தெரிஞ்சவங்க ஒருத்தங்க உனக்கு ஒரு வரனைப் பத்திச் சொன்னாங்க. நாங்க பேசிட்டு சொல்றோம்னு சொல்லிட்டு வந்துட்டோம்” என்றாள்.

சூர்யாவின் முகம் கன்றியது. மீசையை நீவிவிட்டுக் கொண்டவன், பின்னங்கழுத்தை தடவிக் கொண்டான்.

நீண்ட பெருமூச்சை வெளியேற்றியவன், “எனக்கு ஒரு மூணு மாசம் டைம் கொடுக்கா. அதுக்குள்ள பிரச்சனையை சரி பண்ணிடுறேன். முடியலைனா… அதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம். இந்த முறை என் கல்யாண விஷயத்துல நான் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாதுன்னு உறுதியா இருக்கேன்” என்றான்.

“பிரச்சனைனா…?”

“ப்ளீஸ்க்கா! சந்தர்ப்பம் வரும்போது நானே சொல்றேன். இப்போதைக்கு என்னால இதை மட்டும் தான் சொல்ல முடியும்” என்றவனை கூர்ந்து பார்த்தாள்.

அதற்குள் வெளியே கேட்டைத் திறக்கும் சப்தம் கேட்டது.

“மாமா வந்தாச்சு போல…” என்றான்.

“நான் வரேன்” என்று கிளம்பினாள்.

“நானும் வரேன். மாமாகிட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டு வந்திடுறேன்” என்று தமக்கையுடன் கீழே வந்தான்.

**********​

அப்பாவையும், தாத்தாவையும் பார்த்த குஷியில் கன்யா வீட்டையே இரண்டாக்கிக் கொண்டிருந்தாள்.

“லீவ்ல டிராயிங் பண்ணியிருக்கேன். மாமாகிட்ட கிட்டார் கத்துகிட்டேன்… அத்தையும், நானும் சேர்ந்து இந்த ப்ளாண்ட் வச்சோம்” வாய் ஓயாமல் அவள் சொல்லிக் கொண்டிருந்ததை சிரித்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான் முகுந்தன்.

“குட்டிமா நீ இல்லாமல் உங்க அப்பாவுக்கு அது வீடாவே இல்ல…” சிரித்தார் சிவராமன்.

“அப்படியாப்பா! நானும் உங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணினேன்” என்று தந்தையின் கழுத்தை கட்டிக் கொண்டாள் கன்யா.

சூர்யா மௌனச் சிரிப்புடன் அமர்ந்திருக்க, பெண்கள் மூவரும் நெகிழ்சியுடன் அந்தக் காட்சியைப் பார்த்தனர்.

சமையலறை வாசலில் சாய்ந்து நின்றிருந்த நிஷாவைப் பார்த்த சிவராமன், “கண்ணம்மா! இங்கே வாடா” என்றார்.

தந்தையின் அருகில் முழங்காலிட்டு அமர்ந்தாள்.

“செமஸ்டர் எப்படி எழுதியிருக்க?” என்று கேட்டார்.

“இப்பவாவது என்னைக் கேஎட்கணும்னு உங்களுக்குத் தோணுச்சே. நான் தான் உங்க பொண்ணு நிஷா. என்னை நினைவிருக்கான்னு உங்களை கேட்க வேண்டிய சூழ்நிலை வந்திடுமோன்னு கொஞ்சம் பயந்துட்டு இருந்தேன். பரவாயில்ல ஞாபகம் இருக்கு.”

குறும்புடன் சொன்ன மகளது தலையைப் பிடித்து ஆட்டினார்.

“இன்னும் இந்த வால்தனம் மட்டும் குறையவேயில்ல…” என்றார்.

“எல்லாம் கல்யாணம் ஆகற வரைக்கும் தானே. அப்புறம் இப்படிலாம் பேச முடியுமா?” முகுந்தன் பேச்சை துவக்க, சிவராமன் மகளை வாஞ்சையுடன் பார்த்தார்.

‘முகுந்தன் சொல்லுங்கப்பா’ என்பது போல அவருக்குச் ஜாடை காட்ட, சிவராமன் வசந்தாம்மாவிடம் பேச ஆரம்பித்தார்.

“சம்மந்தியம்மா! வீட்டுக்கு மருமக வரும் போது, இன்னொரு மகள் வரான்னு சந்தோஷம் இருக்கும். அதே தன்னோட மகளுக்குக் கல்யாண வயசு வந்ததும், ஒரு தகப்பனுக்கு மனசோரம் சின்ன வலி இருக்கும். இத்தனை வருஷம் வளர்த்த மகளைப் பிரியறது பெரிய கொடுமை.

என் மகள் எங்களுக்கு மட்டும் மகளா இல்ல. உங்க வீட்டுக்கும் மகளா இருந்திருக்கா. அதனால அவளோட கல்யாண விஷயத்துல உங்ககிட்டயும் கலந்து பேசறதுதான் முறை” என்றதும், நிஷா தவிப்புடன் நிமிர்ந்து தந்தையைப் பார்த்தாள்.

சாதாரணமாக அமர்ந்திருந்த சூர்யா சட்டென விறைப்புடன் நிமிர்ந்து அமர்ந்தான்.

“சொல்லுங்க சம்மந்தி!” என்றார் வசந்தா.

“என்னோட ஸ்நேகிதன் ஒருத்தனை ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் எதேச்சையா சந்திச்சேன். பேசிட்டு இருக்கும் போது தான் தெரிஞ்சிது அவனோட பெரிய பையன் நம்ம முகுந்தனுக்கு க்ளாஸ்மெட்டுன்னு.

அவனோட சின்னப் பையன் சிங்கப்பூர்ல வேலை பார்த்துட்டு இருக்கானாம். அவனுக்கு வரன் பார்க்கறதா சொன்னான். பேச்சு வாக்குல நம்ம நிஷாவைப் பத்திப் பேசினதும் அவனுக்கு நம்ம வீட்ல சம்மந்தம் வச்சிக்கணும்னு ஆசை வந்திடுச்சி.

நான் வீட்ல எல்லோரையும் கலந்து பேசிட்டு சொல்றேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். பையனோட போட்டோவைப் பார்த்தோம், எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றவர் கையுடன் கொண்டு வந்திருந்த போட்டோவை வசந்தாவிடம் காண்பித்தார்.

நிஷா நடப்பதை நம்பமுடியாமல் பார்த்தாள். இப்படி ஒரு திருப்பத்தை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது பார்வை வெளிப்படுத்தியது.

அனிச்சையாக அவளது பார்வை சூர்யாவிடம் செல்ல, அவன் இறுகிய முகத்துடன் தன்னையே பார்ப்பதைக் கண்டாள். சொல்லமுடியாத ஏதோ ஒர் உணர்வு ஆட்கொள்ள, கண்கள் கலங்கின.

வசந்தாவின் மனத்திற்குள் ஒரு ஏக்கம் இருந்தாலும், அதைக் காண்பித்துக் கொள்ளாமல் சிரித்தபடி, “காலாகாலத்துல பொண்ணுங்களைக் கரையேத்தறது நல்லது தான். நல்ல பையனாதான் தெரியறான். எல்லாம் சரியா இருந்தா முடிச்சிடலாம் சம்மந்தி!” என்றார்.

“அப்போ உங்க எல்லோருக்கும் சம்மதம் தானே” உறுதிபடுத்திக் கொள்ள கேட்டார்.

“நமக்கெல்லாம் சரி. ஆனா, நிஷாவோட விருப்பத்தைக் கேட்கலையே மாமா!” அமுதா மெல்லச் சொன்னாள்.

“பையன் பேரு கிருஷ்ணா. நானும் ஸ்கூல் டேஸ்ல அவனைப் பார்த்திருக்கேன். ரொம்ப சுட்டி. உனக்கு ஈக்வலா இருப்பான். எங்க எல்லோருக்கும் பிடிச்சிருக்கு. உனக்கு ஓகேவான்னு நீதான் சொல்லணும்.”

தங்கையின் அருகில் வந்த முகுந்தன் கையிலிருந்த போட்டோவை அவளிடம் காட்டினான். கலங்கிய விழிகளில் போட்டோவிலிருந்த உருவம் படவேயில்லை.

கண்களை அழுந்த மூடி தன்னைச் சமாளித்துக் கொண்டு நிமிர்ந்தாள். சகோதரனின் முகத்தில் இருந்த எதிர்பார்ப்பை அவளால் உணரமுடிந்தது. அவனது சந்தோஷத்தைக் குலைக்க அவள் விரும்பவில்லை.

சிறுவயதிலிருந்தே தனக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்தவனுக்கு, ஏமாற்றத்தை அளிக்க மனம் வரவில்லை. சூர்யாவின் மீதிருந்த கோபமும், அண்ணனின் எதிர்பார்ப்பும், சேர்ந்து அவளைத் தலையாட்ட வைத்தது.

“உங்க விருப்பம் தான் என் விருப்பமும்” என்றவளை பாசத்துடன் தட்டிக் கொடுத்தான் முகுந்தன்.

**********​

பாட்டிலில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த நிஷாவை அழைத்தாள் அமுதா.

“நிஷா! பாரதி உன்கிட்ட பேசணுமாம். இந்தா…” - போனைக் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

அவன் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டு போனை வைத்தவள், “அண்ணி! பாரதி ஏதோ ஃபைலை வீட்ல வச்சிட்டுப் போயிட்டாங்களாம். அதுல ஒரு டீடெயில்ஸ் பார்த்துச் சொல்லணுமாம். நான் போய் என்னன்னு பார்த்துச் சொல்லிட்டு வரேன்” என்றாள்.“அவங்க அம்மா எங்கேயோ வெளியே போயிருக்காங்க. சாவியை ஸ்டேண்டுல வச்சிருக்கேன் எடுத்துட்டுப் போ” என்றாள்.

கதவைத் திறந்து, பாரதியின் வீட்டிற்குள் நுழைந்தவள், அவன் சொன்ன ஃபைலைத் தேடினாள். அவன் சொன்ன இடத்தில் எந்தப் ஃபைலும் இல்லை.

‘ரெட் கலர் ஃபைல் தானே சொன்னாங்க. இங்கே காணோமே’ டேபிளை முற்றிலுமாக ஆராய்ந்து விட்டாள்.

சலிப்புடன் பாரதிக்கு போன் செய்தாள்.

“இங்கே நீ சொன்னா மாதிரி எந்தப் ஃபைலும் இல்ல…”

“வீட்லதான் இருக்கு நிஷா! கொஞ்சம் என் ரூம்ல பாறேன். கொஞ்சம் அர்ஜெண்ட்… நிதானமா தேடிப் பார்த்துச் சொல்லு போதும்.”

“அர்ஜண்ட்ங்கற, நிதானமா தேடிப் பாருங்கற… டென்ஷன்ல இருக்கியா? நான் பார்த்துட்டு கால் பண்றேன்” போனை வைத்துவிட்டு திரும்பியவள், ஹால் சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த சூர்யாவைக் கண்டதும் திடுக்கிட்டுப் போனாள்.

வேகமாகச் சென்று கதவை இழுத்தாள் திறக்க முடியவில்லை. கலவரத்துடன் திரும்பி அவனைப் பார்த்தாள்.

அவன் நிதானமாக கையிலிருந்த சாவிக் கொத்தைத் தூக்கி டீபாய் மீது வீசினான்.

அவளுக்குக் கடுகடுவென வந்தது.

“நீங்க இப்படியெல்லாம் செய்யறதால என்கிட்டயிருந்து சம்மதம் வாங்கிடலாம்னு மட்டும் நினைக்காதீங்க” படபடப்பை மறைத்துக் கொண்டு வாயில் வந்ததை கொட்டித் தீர்த்தாள்.

“இங்கே பார் உன்கிட்ட நான் பேசதான் வந்திருக்கேன். ஓவரா சீன் போடாதே” அவனும் சுள்ளென்றான்.

“நிஷா! உன்னை நான் மிஸ் பண்ணினதெல்லாம் போதும். இனியும் அந்தத் தப்பைச் செய்ய நான் தயாரா இல்லை. நீ அவசரப்பட்டு ஒரு முடிவு எடுத்திருக்க. நல்லா யோசிச்சிக்க. பின்னால வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்ல. வாய்ப்பு ஒரு தடவை தான் கதவைத் தட்டும்.

அதைப் புரிஞ்சிக்காம உன்னை நான் உதாசீனப்படுத்திட்டேன். இன்னைக்கு அதை உணர்ந்து, நீ வேணும்னு நான் உன்னைத் தேடி வந்திருக்கேன். ஆத்திரத்துல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டு என்னை மாதிரி நீயும் ஃபீல் பண்ணாதே” என்றான் உருக்கமாக.

“இந்த ப்ரெயின் வாஷ் பண்ற வேலையெல்லாம் என்கிட்ட வேணாம். என் அண்ணனும், அப்பாவும் எனக்கு எப்பவும் நல்லது தான் செய்வாங்க. அவங்களை நான் நம்பறேன்” அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.

விரக்தியாகப் புன்னகைத்தான் சூர்யா.

“இந்த நம்பிக்கை எனக்கு என் அக்கா மேலேயும், அம்மா மேலேயும் இல்லாம போனது தான் இத்தனைப் பிரச்சனைக்கும் காரணம்” என்றவன் தாடையைத் தடவிக் கொண்டான்.

“எனிவே, நீ சீக்கிரமே என்னைத் தேடி வருவ. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. ஒரு முறை உன்கிட்ட பேசிப் பார்க்கலாம்னு தான் இப்படி உன்னை வரவச்சேன். உன்கிட்ட பேசிப் பிரயோஜனமில்லைன்னு தெரியுது. இந்தா சாவி. நீ கிளம்பு.

ஆனா, இன்னும் என் முடிவு அப்படியே தான் இருக்கு. நான் உன்கிட்ட கெஞ்சறேன்னு நீ நினைச்சாலும் பரவாயில்லை. நல்லா ஆழமா யோசிச்சிப் பாரு. உன் மனசுல எனக்கு இருக்கும் இடம் புரியும்” என்றவன் சாவியை அவள் கையில் திணித்தான்.

கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவள், அங்கே நின்றிருந்த பாரதியைப் பார்த்ததும் முறைத்தாள்.

“உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கல பாரதி! என் மூஞ்சிலயே முழிக்காத” என்றாள்.

“நீதான் கல்யாணம் பண்ணிகிட்டு சிங்கப்பூர் போகப் போறியாமே. இனிமே எங்கே முழிக்கிறது. ஆனா ஒண்ணு… சூர்யா மாதிரி ஒருத்தனை நீ மிஸ் பண்ற நிஷா. அவன் ரொம்ப நல்லவன்…”

“ஐயா சாமி” என்று கையெடுத்துக் கும்பிட்டவள், “போதும் அந்த நல்லவருக்கு ஒரு நல்ல பொண்ணு கிடைப்பா. முடிஞ்சா நீயும் கூட சேர்ந்து தேடு. என்னை ஆளை விடு” என்றவள், விறுவிறுவென கேட்டைத் திறந்து கொண்டு நடந்தாள்.

வெளியில் வந்த சூர்யாவிடம், “என்னடா இவள் இப்படிப் பேசிட்டுப் போறா?” எரிச்சலுடன் கேட்டான் பாரதி

“ம்ஹும்! நிச்சயம் என்னோட காதல் எங்களைச் சேர்த்து வைக்கும்” என்றான் திடமாக.

அவனை முறைத்த பாரதி, “ஏன்டா இப்படி இருக்கீங்க எல்லோரும்? நீங்க காதலிக்கறதோட இல்லாம, கூட இருக்கற எங்க உயிரையும் சேர்த்து எடுக்க வேண்டியது. அப்புறம் என் காதல் எங்களைச் சேர்த்து வைக்கும்னு டயலாக் வேற. இதுக்கு எதுக்கு அவளைத் தேடித் தேடிப் போய் பேசற? அப்படியே விட்டுத் தொலைக்க வேண்டியது தானே. அவளா வருவா இல்ல…” என்று கத்தினான்.

“உனக்கு இதெல்லாம் புரியாது. காதலோட வலி அனுபவிக்கிறவங்களுக்குத் தான் தெரியும்” என்றான் சூர்யா.

“அவனுங்க பண்ற டார்ச்சர், என்ன மாதிரி கூட இருக்கற ஃப்ரெண்டுங்களுக்குத் தான்டா தெரியும். பஞ்ச் டயலாக் பேசறான். உனக்கு மட்டும் தான் வருமா. நாங்களும் பேசுவோம்” என்றவனை நிதானமாக பார்த்தான்.

“சாரிடா. என் விஷயத்துல நான் உன்னை இழுத்து விட்டிருக்கக் கூடாது. நான் வரேன்” என்று கிளம்பியவனை அழைத்தான் பாரதி.

“சூர்யா! நீ மூட் அவுட்ட இருக்கியேன்னு தான் அப்படி பேசினேன்டா…”

“பரவாயில்ல பாரதி. உன்னோட ஹெல்புக்கு தேங்க்ஸ். இனி இப்படி என்னைக்கும் உன்னைத் தொல்லைப்படுத்த மாட்டேன். வரேன்” என்றவனைப் பரிதாபமாகப் பார்த்தான் பாரதி.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
அத்தியாயம் – 21வசந்தாம்மாவிற்குக் கவலையாக இருந்தபோதும், ‘என்ன சொல்லி அவளை இங்கே தங்க வைத்துக் கொள்ள முடியும்? என்ற கேள்வியைத் தன்னையே கேட்டுக் கொண்டார்.

வருத்தத்தை மனத்திற்குள்ளேயே மறைத்துக் கொண்டு, இயல்பாகவே தன்னைக் காட்டிக் கொண்டார்.

மதிய உணவு வேளை வரை நிஷாவைத் தன்னுடனேயே அமரவைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு மாத்திரையைக் கொடுத்து படுக்கும் வரை அப்படி இப்படி அவளும் அகலவில்லை.

சுந்தரியை அழைத்து, என்ன கொடுக்க வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று ஒரு பெரிய சொற்பொழிவையே நிகழ்த்தினாள்.

அமுதாவிற்கு சிரிப்பு ஒரு பக்கம் என்றால், கவலையும் மற்றொரு பக்கம் சூழ்ந்திருந்தது.

ஒருவழியாக வேலைகளை முடித்துக் கொண்டு வந்தவள், “கன்யாம்மா! தண்ணி பாட்டிலை பாட்டி ரூம்ல வச்சிட்டு, தூங்கிட்டாங்களான்னு பார்த்துட்டு வா” என்று மகளை அன்னையின் அறைக்கு அனுப்பி வைத்த அமுதா, நிஷாவை அழைத்தாள்.

“அண்ணி!” என்றபடி அறைக்குள்ளிருந்து எட்டிப்பார்த்தாள் அவள்.

“எனக்கு டயர்டா இருக்கு கொஞ்ச நேரம் படுத்து எழுந்துக்கறேன். நீ தூங்கப் போறியா?” எனக் கேட்டாள்.

“இல்லண்ணி! கொஞ்சம் வேலை இருக்கு…” என்றாள்.

“எல்லாத்தையும் கடைசி நேரத்துல இழுத்து போட்டுட்டு செய்யறது… சரி, நீ வேலையை முடி. முடிஞ்சா கொஞ்ச நேரம் படுத்து எழுந்திரு. நாலு மணி நேரம் ஜர்னி வேற… உட்கார்ந்துட்டே போகணும். என்ன…?”

அண்ணியின் அதட்டலான வார்த்தைகளில், அக்கறைதான் தென்பட்டது அவளுக்கு. புன்னகையுடன் தலையசைத்தாள் நிஷா.

“தண்ணி பாட்டிலை வச்சிட்டேம்மா. பாட்டி நல்லா தூங்கிட்டு இருக்காங்க…” என்றபடி அங்கு வந்தாள் கன்யா.

“சரிடா தங்கம்” மகளை ஆசையுடன் கொஞ்சினாள் அவள்.

“கன்யா அத்தை ரூமுக்கு வாயேன். கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்” அண்ணன் மகளை அழைத்தாள் நிஷா.

“நோ அத்தை அம்மாகிட்ட ரொம்ப கெஞ்சி ஒன் ஹவர் கேம் விளையாட பர்மிஷன் வாங்கியிருக்கேன். நான் விளையாடப் போறேன்” சொல்லிக் கொண்டே வேகமாக தங்களது அறைக்குச் சென்ற மகளைப் பார்த்து புன்னகைத்தாள் அமுதா.

“என்னைக்கு இருந்தாலும் நீ என்கிட்ட வரணும் ஞாபகம் வச்சிக்க…”

நிஷா சப்தமாக குரல் கொடுத்தாள்.

அறைக்கதவைத் திறந்து எட்டிப் பார்த்து, “அதை அப்போ பார்த்துக்கலாம் அத்தை!” என்று கிளுக்கிச் சிரித்த அண்ணன் மகளை, பெருமிதத்துடன் பார்த்தாள் நிஷா.

“அப்படியே உன் வாய் அங்கேயும் வந்திருக்கு… சரி சீக்கிரம் முடிச்சிட்டு கொஞ்ச நேரம் படுத்துக்க” சொல்லிவிட்டு அமுதா செல்ல, விட்ட வேலையைத் தொடரலானாள் நிஷா.

துணிகளை அடுக்கிவிட்டு சூட்கேஸை மூட, அதனுடன் மல்யுத்தமே நடத்திக் கொண்டிருந்தாள். கடைசியில் பெட்டியை தரையில் வைத்து முழுபலத்துடன் முழங்கால்களால் அழுத்தியும், அவளால் சரியாக பூட்ட முடியவில்லை.

“சே” என்று சலிப்புடன் கையை உதறிக் கொண்டு நிமிர்ந்தாள்.

“நான் வேணா ஹெல்ப் பண்ணட்டுமா?”

திடீரென காதருகில் ஒலித்த சூர்யாவின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவள், தடுமாறி கீழே விழுந்தாள்.

“அடடா! என்ன கேட்டேன்னு இப்படிக் கீழே விழுந்து அள்ற. கையைக் கொடு” - அவள் பற்றிக் கொள்ள கையை நீட்டினான்.

தனக்கு முன்பாக நீண்டிருந்த அவனது கரத்தை பட்டென தட்டிவிட்டவள், “நீங்க எப்படி உள்ளே வந்தீங்க?” கேட்டுக் கொண்டே எழுந்து நின்றாள்.

“இதோ கதவு வழியா தான் வந்தேன்” சொல்லிக்கொண்டே கட்டில் மீதிருந்த தலையணையை எடுத்து மடியில் வைத்தபடி அமர்ந்தான்.

“அடேங்கப்பா ஜோக்கா? முதல்ல என் ரூமைவிட்டு வெளியே போங்க” கடுப்புடன் சொல்லிக் கொண்டே, அவனது மடியிலிருந்த தலையணையை இழுத்தாள்.

“என்னது உன் ரூமா? உனக்கே இதெல்லாம் ஓவரா தெரியல?” என்று பதிலளித்தவன் தலையணையை விடாமல் இறுகப் பற்றினான்.

“தெரியாம சொல்லிட்டேன். இது உங்க வீடு தான். ஆனா, இப்போ இங்கேயிருந்து வெளியே போங்க” என்று பற்களை நறநறத்தாள்.

“இப்பவும் தப்பு. இது நம்ம வீடு. இன்னும் உனக்கு என்னலாம் சொல்லிக் கொடுக்கணுமோ…” சலித்துக் கொண்டான் சூர்யா.

“என்ன கொஞ்சம் விட்டா ஓவரா போறீங்க? இப்போ நீங்க வெளியே போகலைனா… சப்தம் போட்டு அண்ணியைக் கூப்பிடுவேன்” என குரலை உயர்த்தினாள்.

“ரொம்ப வசதியா போச்சு. கூப்பிடு நானே சொல்றேன். இந்த நிஷா என்னை லவ் பண்றேன்னு சுத்தி சுத்தி வந்தா. எனக்காக கிட்டார் வாசிங்கன்னு சொன்னா… வாசிச்சேன். என்கூட ஹோட்டலுக்கு வந்தா… கடைசில அண்ணன் சொல்ற மாப்பிள்ளைய தான் கல்யாணம் செய்துக்குவேன்னு டயலாக் பேசறா. நான் அன்னைக்குக் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு சொன்னதுக்கு சண்டைக்கு வந்த இல்ல, இன்னைக்கு எனக்கு நியாயத்தைச் சொல்லுன்னு எங்க அக்காவையே கேட்கறேன். கூப்பிடு…” அசட்டையாக சொன்னான்.

“எல்லாமே பொய்…” – வார்த்தைகள் அழுத்தத்துடன் வந்தாலும், மெல்லிய குரலிலேயே சொன்னாள்.

“எல்லாமேவா….?” நெற்றிச் சுருங்க கிண்டலாகக் கேட்டான்.

முறைத்தவள், “சரி, பாதி பொய்…” என்றாள்.

“மீதி உண்மை தானே…” கண்கள் மின்ன கேட்டான்.

“நான் அப்படி நடந்துகிட்டதுக்கு காரணம்… ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஷிப்…” என்றாள் கோபத்துடன்.

“ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஷிப்பா…?”

கேட்டுக்கொண்டே அவளை நெருங்கினான்.

மிரட்சியுடன் பின்வாங்கியவள், “ஆ..மாம்” தடுமாற்றத்துடன் பதிலளித்தாள்.

திகைப்புடன் தன்னைப் பார்த்தவளைக் கூர்ந்து நோக்கினான்.

சற்றுநேரம் முன்பிருந்த தைரியமெல்லாம் போன இடம் தெரியாமல் ஓடி மறைந்திருக்க, அவளது உடல் லேசாக நடுங்கியது.

“அப்படின்னு உன் வாய் தான் சொல்லுது. உன் கண்ணு சொல்லலையே.”

“கண்ணு வேற தனியா சொல்லுமா?” வீம்புடன் கேட்டாள்.

“நிச்சயமா சொல்லும். இப்போ கூட நீ பொய் சொல்றன்னு சொல்லுதே…” சொல்லிக் கொண்டே ஒற்றை விரலால் அவளது கன்னத்தைத் தடவினான்.

வேகமாக அவனது கரத்தை தள்ளிவிட்டவள், “நீங்க அளவுக்கு மீறி போறீங்க. உங்களோட இந்த முரட்டுத்தனத்தால என்கிட்ட சாதிக்கலாம்னு நினைச்சா எதுவுமே நடக்காது” என்றவளது கண்கள் தளும்பின.

அவளது கண்ணீரைக் கண்டவனுக்கு ஆத்திரம் அதிகமானது.

“என்னை இந்த அளவுக்கு இறங்கி வரவச்சதே நீதான்டி. எப்பவோ தெரியாத்தனமா சொன்ன ஒரு வார்த்தையைப் பிடிச்சிகிட்டு, விடாம தொங்கிட்டு இருக்க. அதுக்குத் தான் மன்னிப்பு கேட்டுட்டேன் இல்ல… இன்னும் என்ன எதிர்பார்க்கற? உன்கிட்ட கெஞ்சி கூத்தாடணுமா? இல்ல, உன் கால்ல விழணுமா? சொல்லு… அதைத் தான் எதிர்பார்க்கறியா?” ஆத்திரத்துடன் கேட்டவன் அவளது தோள்களைப் பற்றினான்.

“நான் எதிர்பார்க்கறது இது எதுவும் இல்ல. என்னை நிம்மதியா இருக்கவிடுங்கன்னு தான் சொல்றேன். நீங்க பேசின வார்த்தையை என்னால மறக்க முடியல. சாதாரணமா உங்ககிட்ட பழகின என்னால உங்களைக் காதலோட பார்க்க முடியல…” என்று கண்ணீரோடு சொன்னவளை பரிதாபமாகப் பார்த்தான்.

அவனுக்குத் தன்னை நொந்து கொள்வதா, தனது விதியை நொந்து கொள்வதா எனப் புரியவில்லை.

‘கோபத்தில் வரும் வார்த்தைகள் ஒருவரை எந்த அளவிற்குக் காயப்படுத்துகிறது’ என நினைத்த போது, தன்மீதே கோபம் எழுந்தது.

யோசிக்காமல் தான் பேசிய வார்த்தை, இப்போது தனது காதலுக்கே எதிராக நிற்பதை அவனால் ஜீரணிக்கமுடியவில்லை.

இறுகிய முகத்துடன் ஜன்னலருகில் நின்றிருந்தவளைப் பார்த்தவன், எதுவும் பேசாமல் இரண்டடி எடுத்து வைத்தான்.

அதேநேரம், “நிஷா!” என்ற அழைப்புடன் அறைக்கதவைத் தட்டினான் முகுந்தன்.

சட்டென சுதாரித்த நிஷா ஓடிச்சென்று கதவருகில் சென்றுவிட்ட சூர்யாவின் கரத்தைப் பற்றினாள்.

அதற்குள் மற்றொருமுறை முகுந்தன் அழைக்க, சூர்யாவிற்கும் விஷயம் விளங்கியது.

“நீங்க இங்கயே இருங்க…” என்றவள் அவனை பீரோவின் அருகில் நிற்க வைத்துவிட்டு, கதவைத் திறந்தாள்.

“என் மொபைல் சார்ஜர் வேலை செய்யல உன்னோடதை கொடும்மா” என்றதும் வேகமாக எடுத்துக் கொடுத்தாள்.

“வேற ஏதாவது வேணுமாண்ணா? நான் தூங்கப் போறேன் அதான் கேட்டேன்” என்றாள்.

”இல்லடா… நீ தூங்கு” என்றவன் அங்கிருந்து சென்றதும் தான் அவளுக்கு மூச்சே வந்தது.

‘நல்லவேளை அண்ணன் உள்ளே வராமல் அங்கேயே நின்றது நல்லதாகப் போயிற்று’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டவள், திரும்பி சூர்யாவைப் பார்த்தாள்.

அவன் அர்த்தபுஷ்டியான பார்வையை அவள் மீது செலுத்தினான்.

தலையை அசைத்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியவளாக, “அத்தான்! மரியாதைக்கும், காதலுக்கும் முடிச்சி போடாதீங்க. நான் உங்க மேல வச்சிருக்கறது மரியாதை” என்றாள்.

மெலிதாக முறுவலித்தவன், “அது கூடிய சீக்கிரம் உனக்கே புரியும். உன்னோட மன மாற்றத்தை எதிர்பார்த்து காத்திட்டு இருப்பேன். பத்திரமா போய்ட்டு வா. இனி உன்கிட்ட பேச நிச்சயமா முயற்சி பண்ண மாட்டேன். நான் என்னை நம்பறேன். என் காதலை நம்பறேன்…” என்றவனை இமைகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தாள்.

“கிளம்பறதுக்கு முன்னால…” என்றவன் அவள்புறமாக திரும்பினான்.

‘இன்னும் என்ன?’ என்பதைப் போல அலுப்புடன் பார்த்தவளை, சட்டென அணைத்தவன் அவளது நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அதே வேகத்தில் அவளிடமிருந்து விலகினான்.

கண் இமைக்கும் நேரத்தில் இது நடந்து முடிய அவளுக்குத் தலை சுற்றிப் போயிற்று. அதிர்ச்சியில் சுவருடன் ஒட்டி நின்று கொண்டாள்.

“இதுக்காக உன்கிட்ட சாரி கேட்க போறதில்லை. ஏன்னா, இதை நான் தெரிஞ்சே தான் செய்தேன்… டேக் கேர்” என்றவன் அறையிலிருந்து வெளியேறினான்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
அத்தியாயம் - 22“அடடே சிவராமா! உன்னை இங்கே எதிர்பார்க்கவே இல்லயேப்பா…”

சந்தோஷத்துடன் நண்பனின் கரத்தைப் பிடித்துக் கொண்டார் மகாதேவன்.

இரு குடும்பத்தினரும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பிரகாரத்தில் நின்றிருந்தனர்.

“என் பொண்ணு படிப்பை முடிச்சிட்டு நேத்துதான் சென்னையிலிருந்து வந்தா. அதான் எல்லோரும் சேர்ந்து கோயிலுக்கு வந்தோம்” என்ற சிவராமனை தனது குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தினார் மகாதேவன்.

“உங்க குடும்பத்தைப் பத்திச் சொன்னார். நாங்களே ஒருநாள் முறைப்படி சொல்லிட்டு வீட்டுக்கு வரலாம்னு இருந்தோம். அதுக்குள்ள கோயில்லயே பார்த்துட்டது எங்களுக்கு ரொம்பச் சந்தோஷம். உங்க மகள் வரலையா?” ஆர்வத்துடன் கேட்டார் மகாதேவனின் மனைவி.

“அதோ வராளே…” என்று சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்த நிஷாவைச் சுட்டிக் காட்டினார் சிவராமன்.

மகாதேவனின் பெரிய மகனான சுகுமாருடன் பேசிக்கொண்டிருந்த முகுந்தன், தனது குடும்பத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.

சுற்றும் முற்றும் பார்த்த சுகுமார் பிரகாரத்தின் ஒரு தூணிலிருந்த சிற்பத்தை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனை நோக்கி, “கிருஷ்ணா!” என்று அழைத்தான்.

அப்போது தான் அங்கிருந்த அனைவரையும் பார்த்தவன், அவர்களை நோக்கி வந்தான்.

“முகுந்தன்! என் தம்பி கிருஷ்ணா” என்று அறிமுகப்படுத்த, “ஹாய்! உங்களை எனக்கு ரொம்ப நினைவில்லனாலும், அண்ணா அப்பப்போ உங்க ஃப்ரெண்ட்ஷிப் பத்திச் சொல்வாங்க” என்றான் கிருஷ்ணா.

அவனது துறுதுறு பேச்சும், சட்டென அனைவரிடமும் பழகிவிடும் குணமும் முகுந்தனுக்கு மிகவும் பிடித்து விட, மகிழ்ச்சியுடன் அமுதாவைப் பார்த்தான்.

ஒப்புக்குப் புன்னகைத்தவளுக்கு உள்ளுக்குள் கவலையாக இருந்தது. அவள் திரும்பி அங்கே வந்துகொண்டிருந்த நிஷாவைப் பார்த்தாள்.

தனது குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்த புதியவர்களைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்த நிஷா, அமுதாவின் அருகில் வந்து நின்றாள்.

சிவராமன், மகாதேவனை தனது நண்பர் என்று அறிமுகப்படுத்த, “வணக்கம் அங்கிள்!” என்று இரு கைகளையும் கூப்பி வணங்கினாள்.

அதற்குள் கிருஷ்ணாவின் காதில், ‘உனக்குப் பார்த்திருக்கும் பெண் இவள்தான்’ என்று அவனது அண்ணி சொல்ல, அவன் ஆர்வத்துடன் அவளைப் பார்த்தான்.

“எல்லோரும் சேர்ந்து வாழ்க்கைல உருப்படியா இப்பத்தான் ஒரு வேலை செய்திருக்கீங்க…” என்று தனது அண்ணியிடம் முணுமுணுத்தவன், “ஹாய்! ஐயம் கிருஷ்ணா” என்று அவளிடம் கையை நீட்டினான்.

எதிர்பாராத அவனது செய்கையில் திகைத்துப் போனாலும், அவனது பளிச்சென்ற பேச்சு அவளுக்குப் பிடித்துவிட, “ஹாய்!” என்று இயல்பாக அவனது கரத்தைப் பிடித்துக் குலுக்கினாள்.

அனைவரும் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்ள, அமுதாவிற்கு அவஸ்தையாக இருந்தது. அவளால் எதுவுமே பேசமுடியவில்லை.

அவளைப் பற்றித் தெரிந்து கொள்ள அவன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சாதாரணமாக பதில் சொன்னாள்.

கோயில் கருவறையில் நுழைந்ததும் கூட்டத்தில் அமுதாவும், நிஷாவும் தனியாக சென்றுவிட மற்றவர்கள் சற்று பின்தங்கிவிட்டனர். அமுதாவிற்கு எதிர்புறத்தில் மகாதேவனின் குடும்பம் நின்றிருக்க, நிஷா கண்களை மூடி ஏகாம்பர நாதரை வேண்டிக் கொண்டிருந்தாள்.

அர்ச்சனைத் தட்டை ஐயரிடம் கொடுத்த அமுதா வரிசையாக அனைவரின் பெயரையும், நட்சத்திரத்தையும் சொல்லிக் கொண்டே வந்தவள், வசந்தா என்ற பெயருடன் முடித்துக் கொண்டாள்.

ஐயர் அடுத்தவரிடம் செல்ல முற்பட, “சாமி! சூர்யா… அஸ்வினி நட்சத்திரம்…” என்றாள்.

அர்ச்சனைத் தட்டைத் தொட்டுக் கும்பிட்ட நிஷா, குறுகுறுவென தன்னைப் பார்த்த அண்ணியிடம், “நீங்க அத்தான் பெயரை சொல்ல மறந்துட்டீங்க அண்ணி…” என்றாள்.

இதழ்கள் மலர திரும்பி ஏகாம்பரநாதரைக் கண்ட அமுதாவிற்கு மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. ‘கடவுளே! நீதான் நல்ல வழி காட்டணும்’ என்ற வேண்டுதலுடன் கண்களை மூடினாள்.

இமைகளின் அழுத்தம் தாளாமல், அவளது கண்கள் கசிந்தன.

அனைவரும் பிரகாரத்தில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்ப, சிவராமன் தான் சற்று நேரம் கழித்து வருவதாகக் கூறிவிட, மற்றவர்கள் விடைபெற்றுக் கிளம்பினர்.

முகுந்தன் நேரம் கிடைக்கும் போது வீட்டிற்கு வரும்படி சுகுமாரையும், கிருஷ்ணாவையும் நட்பின் அடிப்படையில் அழைத்துவிட்டே கிளம்பினான்.

வீட்டிற்கு வந்த முகுந்தன், தங்கையை அழைத்து, “இப்படி உட்கார்” என்று எதிரிலிருந்த சோஃபாவைக் காட்டினான்.

அண்ணன் ஏதோ பேசப்போகிறான் என்று எண்ணிக் கொண்டு புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.

“கிருஷ்ணா எப்படி?” கேட்டுவிட்டு தங்கையின் பதிலுக்காக ஆவலுடன் அவளைப் பார்த்தான்.

“ம், நைஸ் பெர்சன். கலகலப்பா பேசறார். ஆனா… கொஞ்சம் குறைச்சிகிட்டா நல்லா இருக்கும்” என்று சிரித்தாள்.

“ஏண்டா அப்படி சொல்ற?”

“ஜெண்ட்ஸ் ரொம்பப் பேசினா நல்லா இருக்காதுன்னா. கொஞ்சம் கெத்தா இருக்கணும்…” என்றாள்.

“சரி, மத்தபடி ஓகே தானே…” தங்கைக்குப் பிடிக்க வேண்டுமே என்ற தவிப்பு அவனது முகத்தில் தெரிந்தது.

“ஓகேவா… நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியவே இல்ல” என்றாள்.

“என்னடா! அன்னைக்குப் போட்டோ காட்டினேனே… கிருஷ்ணா… மறந்துட்டியா?”

முகுந்தன் சொன்னது தான் தாமதம், அத்தனை நேரம் சிரிப்புடன் இருந்த அவளது முகம் சட்டென வாடிப் போனது.

‘தான் இதை எப்படி மறந்தோம்? அந்த நினைவே சுத்தமாக இல்லையே. அதிலும் அன்று அண்ணன் போட்டோவைக் காட்டிய போது நான் எங்கே அதைப் பார்த்தேன்…’ அவளது மனம் தன் நிலையில்லாமல் புலம்ப, ‘பார்த்தா மட்டும் உனக்கு அப்படியே நினைவுக்கு வந்திடுமாக்கும்?’ வரிந்துகட்டிக் கொண்டு வந்தது அவளது மனசாட்சி.

‘அதென்னவோ உண்மை தான். நிச்சயம் அவனது முகம் என் மனத்தில் பதிந்திருக்காது’ என்றவளை, ‘ஏன்’ என்று கேள்வி கேட்டது மனசாட்சி.

‘அதானே ஏன்…?’

அந்த ஏன் என்ற கேள்விக்கான பதில் சூர்யா என்று புலப்பட, அமர்ந்திருந்தவள் சட்டென எழுந்துவிட்டாள்.

தலையை உலுக்கிக் கொண்டு வேகமாக தனது அறையை நோக்கி ஓடியவளை, புரியாமல் பார்த்தான் முகுந்தன்.

“என்ன அமுதா… இவளைக் கேட்டுத் தானே அன்னைக்கு முடிவு பண்ணோம். இன்னைக்கு எல்லாத்தையும் புதுசா கேட்கறா மாதிரி கேட்டுட்டு எதுவுமே சொல்லாமல் போறா?” அதிருப்தியுடன் புலம்பினான்

“என்னைக் கேட்டா எனக்கென்னங்க தெரியும்? நானும் உங்களை மாதிரிதானே புரியாம பார்த்துட்டு இருக்கேன்” என்றாள்.

அவளது பதிலுக்கும், முகத்தில் தெரிந்த பாவத்திற்கும் சம்மந்தமில்லாமல் இருக்க, முகுந்தன் எரிச்சலுடன் அவளைப் பார்த்தான்.

“இந்தப் பொண்ணுங்களை புரிஞ்சிக்கவே முடியாதுங்கறது உண்மைதான் போல. இத்தனை வருஷம் குடும்பம் நடத்தறேன், சமயத்துல உன் மனசுல என்ன நினைக்கிறங்கறதையே என்னால புரிஞ்சிக்க முடியறதில்லை. ரெண்டு நாள் போகட்டும் என்ன சொல்றான்னு பார்க்கலாம். அதுவரைக்கும் நீயும் அவகிட்ட எதையும் பேசாதே” என்றான்.

“சரிங்க” பவ்யமாக சொன்னவளை சந்தேகமாக ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றான் அவன்.

*************​

கையிலிருந்த லிஸ்டை மீண்டும் சரிபார்த்துக் கொண்டிருந்தவள், “வாட் எ சர்ப்ரைஸ்?” என்ற குரலைக் கேட்டதும் சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.

சிரிப்புடன் அங்கே நின்றிருந்த கிருஷ்ணாவைக் கண்டதும் சற்றுத் திணறிப் போனாள் நிஷா.

“ஹவ் ஆர் யூ நிஷா? ஒரு சிரிப்புகூட சிரிக்க மாட்டீங்களா?” பரிதாபமாக கேட்டான்.

சுதாரித்துக் கொண்டு அவனைப் பார்த்து மெல்ல முறுவலித்தவள், “சாரி, உங்களை எதிர்பார்க்கல” என்றாள்.

“நீங்க என்னை எதிர்பார்ப்பீங்கன்னு, நானும் எதிர்பார்க்கல…” என்றவனை, கூர்ந்து பார்த்தாள்.

“புரியறது போல பேசமாட்டீங்களா?”

“தமிழ்ல தானே பேசறேன்…” என்று தோள்களைக் குலுக்கினான்.

முடியல என்பது போல தலையை அசைத்தவள், “நான் கிளம்பணும்… நேரமாகுது” என்றாள்.

“நானும் தான். இஃப் யூ டோண்ட் மைண்ட்… என்கூட ஒரு கப் காஃபி சாப்பிடலாமே…” என்றான்.

“சாரி, எனக்கு யாரோடயும் இப்படிலாம் வெளியே போற பழக்கமில்ல…” என்றாள்.

முகத்திலடித்தது போல அவள் பேசியதைக் கேட்டதும், அவனது முகம் சட்டென சுருங்கியது.

‘இவனிடத்தில் கோபத்தைக் காட்டி என்ன பிரயோஜனம்? என் புத்தி அப்பப்போ ஏன் இப்படி மழுங்கிப் போகுது?’ தன்னையே கோபித்துக் கொண்டவள், “சாரி… ஏதோ டென்ஷன்ல அப்படி பேசிட்டேன்” என்றாள்.

“இல்லைங்க… என் மேலேயும் தப்பு இருக்கு. தெரிஞ்சவங்களாச்சேங்கற எண்ணத்துல தான் கூப்பிட்டேன். இட்ஸ் ஓகே… நான் கிளம்பறேன்” என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து சென்றான்.

‘தனது முட்டாள்தனம் அளவில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. இது எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் காரணம் அவன்தான். இப்படி என் மனத்தில் சலனத்தை உண்டாக்கியதோடு இல்லாமல், என்னையும் என நினைவுகளையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறான். இதற்கு முடிவுதான் என்ன?’

இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது அவளுக்கே தெரிந்த பதில் தான். ஆனால், அதை ஒப்புக் கொண்டு, அதற்கான தீர்வை ஏற்றுக் கொள்ளக்கூடிய தைரியம் அற்றவளாக அவள் இருந்தது தான் அங்கே பரிதாபம்.

வீட்டிற்கு வந்தவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.

தேவையில்லாமல் கிருஷ்ணாவின் மண்டையை உருட்டியாகிவிட்டது. இதற்கான பின்விளைவு எப்படி இருக்கும் என்று அவளுக்கு அனுமானம் இல்லாவிட்டாலும், அச்சம் இருந்தது.

‘அண்ணாவுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான். சாமியாடிவிடுவான்’ அந்த நினைவே மிரட்சியைத் தோற்றுவிக்க, அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.

சோம்பிக் கிடக்கும் மனம் சாத்தானின் உலைகளம்’ என்பதைப் போல எண்ணங்கள் எங்கெங்கோ சென்று வந்தது.

அத்தை எப்படி இருப்பார்கள் என்பதில் ஆரம்பித்து, சூர்யாவில் வந்து முடிந்தது.

அவனைப் பற்றி நினைக்கும் போதே மனத்தில் சந்தோஷப்பூ பூத்தாலும், அவனது வார்த்தைகள் நெருஞ்சி முள்ளாய் உறுத்தியது.

‘அன்றைக்கு அவன் பேசிய வார்த்தைகள் மட்டும் தனக்குத் தெரியாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். நான் ஏன் அங்கு செல்லவேண்டும்? அவன் ஏன் அப்படிப் பேச வேண்டும்? அதைத் நான் ஏன் கேட்கவேண்டும்?

இத்தனை ஏன்களும் இல்லாமல் இருந்திருந்தால், அவன் இன்று என்னவனாக ஆகியிருப்பானே!

நான் ஏன் இதை இவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு அவனது காதலை நிராகரிக்க வேண்டும். இந்த ஒற்றை வார்த்தையை தாங்கும் சக்தி எனக்கில்லாமல் போய்விட்டதே…’

அழுகையாக வந்தது. ஆனால், எதற்காக என்றுதான் அவளுக்குப் புரியவில்லை.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
அத்தியாயம் - 23‘தனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?’

இந்தப் பத்து நாட்களில் இந்தக் கேள்வி எத்தனை முறை தனக்குத் தோன்றியது என்று கேட்டால், அதற்கும் அவளால் பதில் கூற முடியாது.

‘தான் ஏன் இப்படியாகிவிட்டோம்? எப்போதும் ஏதோ ஒரு கூண்டிற்குள் அடைப்பட்டிருக்கும் உணர்வு. சாதாரணமாக பேசக்கூட முடியவில்லை. உறக்கம் பிடிக்கவில்லை. பாதி இரவில் விளக்கைப் போட்டுக் கொண்டு, கொட்டு கொட்டென்று விழித்துக் கொண்டு அமர்ந்திருப்பது கொடுமையாக இருந்தது.

போதாகுறைக்கு அன்று மனத்தாங்கலுடன் சென்ற கிருஷ்ணா அத்துடன் விடவில்லை. மறுநாளே அவளுக்குப் போன் செய்தான்.

புதிய எண்ணாக இருக்கவும், யோசனையுடன் போனை எடுத்தாள்.

“நான் கிருஷ்ணா பேசறேன்” என்றான்.

தயக்கத்துடன், “சாரி” என்றாள்.

“உங்க சாரிக்காக நான் இப்போ போன் பண்ணல. நம்ம ரெண்டு பேர் வீட்லயும் நடக்குற ஏற்பாடு உங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்கும். எனக்கும் உங்களைப் பிடிச்சிருக்கு. ஆனா, அதுக்கு முன்னால எனக்குச் சில விஷயங்களை உறுதிபடுத்திக்கணும்…”

“சொ..ல்லுங்க…”

“அன்னைக்குக் கோவில்ல பார்த்தபோதே உங்க அண்ணன் கல்யாண விஷயத்தைப் பத்தி உங்ககிட்ட சொல்லிட்டதா சொன்னார். அதனால் தான் அன்னைக்கு நீங்க பேசினப்போ எனக்குப் பெரிசா எதுவும் தோணல. நானும் உங்ககிட்ட சகஜமா பேசினேன். ஆனா, சாமி கும்பிட்டுட்டு வந்ததுக்குப் பிறகு, நீங்க என்னைத் திரும்பிக்கூட பார்க்கல.

அப்போதான் எனக்குக் கொஞ்சம் டௌட் வந்தது. நேத்து எதிர்பாராமல் தான் உங்களை சூப்பர் மார்க்கெட்டில் பார்த்தேன். ஆனா, உங்களோட அந்த உதாசீனமான பேச்சு எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்தது. நீங்க நாசுக்காவே சொல்லியிருக்கலாம்…”

சொல்லும் போதே அவனது குரலில் இருந்த வேதனையை அவளால் அறிய முடிந்தது.

“நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா? உங்களுக்கும் அவருக்கும் ஏதாவது பிரச்சனையா?”

திடீரென அவன் கேட்ட கேள்வியில் ஆடிப்போனாள் அவள்.

ஏற்கெனவே அவனை நோகடித்துவிட்டோமே என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு அவனது கேள்வி தலையில் இடியை இறக்கியது போலிருந்தது.

அவளது மௌனமே அவனுக்குச் சம்மதம் என்று சொல்வதைப் போல தோன்றியது போலும்.

“அவர் பேர் சூர்யாவா?” என்று அடுத்த இடியை இறக்கினான்.

அத்தனை நேரம் வாயை மூடிக்கொண்டு இருந்தவளால் ஏனோ இதற்குப் பதில் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.

“ம், ஆமாம்…” என்றாள்.

“ஓ! எனிவே கங்கிராஜுலேஷன். பட் ஒரு சின்ன ஃப்ரெண்ட்லி ரெக்வெஸ்ட்... யாரையும் முகத்திலடிச்சா மாதிரி பேசிடாதீங்க” என்றான்.

“சாரி மிஸ்டர்.கிருஷ்ணா… என்னையும் அறியாமல் தான்…” -தடுமாறினாள்.

”இட்ஸ் ஓகே… இதை ரெண்டு நாளில் மறந்திடுவேன். நீங்க சீக்கிரம் சமாதானம் ஆகும் வழியைப் பாருங்க…” என்றான்.

“தேங்க்யூ!” என்றாள் நெகிழ்ச்சியுடன்.

“வெல்கம்” என்று போனை வைத்தான்.

அவன் போனை வைத்ததும் தான், சூர்யா தன்னைப் பேசியதை இத்தனை ஆண்டுக்குப் பிறகும் இன்னும் விடாமல் நினைத்து தன்னைத் தானே பலவீனப்படுத்திக் கொண்டிருக்கும் தனது முட்டாள்தனம் அவளுக்கு உறைத்தது.

அவனாவது தனக்குச் சிறுவயது முதலே தெரியும். பாவம் இந்தக் கிருஷ்ணாவை, தான் தேவையில்லாமல் பேசித் தொலைத்ததை என்னவென்று சொல்வது?

அதன்பிறகு சூர்யாவை நினைக்கும் போதெல்லாம், அவனை எந்த அளவிற்கு அலையவிட்டிருக்கிறோம் என்று புரிந்தது. அவனது குணத்திற்கு தன்னிடம் இந்த அளவிற்கு இறங்கி வந்து பேசியவனை ஓட ஓட அல்லவா துரத்தியிருக்கிறோம்.

என்னுடைய தவறை நான்தான் சரிப்படுத்த வேண்டும். ஆனால், எப்படி? எங்கிருந்து ஆரம்பிப்பது?’ - புரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தாள்.

“அத்…தை!” என்று தன்னை உலுக்கிய கன்யாவால், தனது நினைவுச் சிதறல்களிலிருந்து வெளியில் வந்தாள் நிஷா.

“ஹா… என்னடா குட்டி!” சுதாரித்துக் கொண்டு கேட்டாள்.

“அம்மா உங்களை எவ்ளோ நேரமா கூப்பிடுறாங்க. நீங்க என்னவோ ட்ரீம்ல உட்கார்ந்திருக்கீங்க? நானும் எவ்ளோ நேரம் உங்களைக் கூப்பிடுறது. போங்க…” அதட்டலுடன் சொன்ன சின்னவளைப் பார்த்து அசடு வழிய சிரித்தாள்.

மெல்ல படியிறங்கியவள் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அமுதாவைக் கண்டதும், “கூப்டீங்களா அண்ணி!” எனக் கேட்டாள்.

ஆழ்ந்து நோக்கிய அமுதா, ‘ம்’ என்பது போல தலையசைத்தாள்.

அண்ணியின் பார்வை வீச்சிலிருந்த ஆளுமையைத் தாளவியலாமல், உதட்டை அழுந்த கடித்தவள், “என்னங்கண்ணி! ஏதாவது செய்யணுமா?” தடுமாற்றத்துடன் கேட்டாள்.

“உன் அண்ணன் போன் பேசிட்டு இருக்கார். வந்தார்னா ரெண்டு தோசை ஊத்திக் கொடுத்திடு. நான் குளிச்சிட்டு வந்திடுறேன்” என்றாள்.

“ம், சரிங்கண்ணி!” மெல்லத் தலையசைத்தாள்.

ஒரு நொடி கூட ஓரிடத்தில் நிற்காமல் இங்கும் அங்குமாக ஓடியாடுபவள் அவள். ஆனால், இந்தப் பத்து நாட்களாக ஓரிடத்திலிருந்து அசைவதே பெரும் சுமை என்பது போல, ஏதோ சிந்தனையுடன் எதிலும் ஈடுபாடில்லாமல் இருப்பவளைக் காணவே அமுதாவிற்குச் சங்கடமாக இருந்தது.

கையிலிருந்த புத்தகத்தை வெறித்துக் கொண்டிருந்த மகளின் அருகில் வந்து அமர்ந்தார் சிவராமன்.

“என்னடா கண்ணா! டல்லா இருக்க? உடம்பு சரியில்லையா?” கேட்ட தந்தையை நிமிர்ந்து பார்த்தாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா…” என்றாள்.

“இங்கே வந்தா வீட்ல தங்கவே மாட்ட. லைப்ரரி, ஃப்ரெண்ட் வீடுன்னு கிளம்பிடுவ. ஆனா, இப்போலாம் வீட்டை விட்டு வெளியவே போறதில்லையே ஏன்?”

என்னவென்று சொல்வாள்? என் மனத்திற்கும், மனசாட்சிக்கும் புறம்பாக நடந்து கொண்டிருக்கிறேன் என்று எப்படிச் சொல்வாள்?

எல்லாவற்றிற்கும் மேலாக சூர்யா தனக்குள் விதைத்திருக்கும் காதல் எனும் வித்தை, மூடி மறைக்க முடியாமல் தவிக்கிறேன் என்று எப்படிச் சொல்வாள்?

நடந்தவற்றை யாரிடமாவது சொல்லி, ஓவென்று அழவேண்டும் போலத் தான் உள்ளது. ஆனால், அதுவும் முடியவில்லை.

மகளின் சோர்ந்த முகத்தைப் பார்த்த சிவராமன், “நிஷாம்மா!” என்றழைத்தார்.

தந்தை ஏதும் கேட்கும் முன்பாக விரைந்து எழுந்தவள், “அப்பா! அண்ணா வந்தா டிஃபன் வைக்கச் சொன்னாங்க அண்ணி. நான் வச்சிட்டு வரேன்ப்பா!” என்று சொல்லிவிட்டுச் செல்பவளை கேள்வியுடன் பார்த்தார்.

விரித்து வைத்திருந்த பேப்பரில் கண்களை பதித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த முகுந்தனின் தட்டிலிருந்த பொங்கல் காலியாவதற்குள், சுடச்சுட தோசையுடன் வந்தாள் நிஷா.

‘கர்மா கரம் தோஸா ரெடி’ எப்போதும் வரும் அவளது வழக்கமான வசனம் வராததால், நிமிர்ந்து தங்கையின் முகத்தைப் பார்த்தான்.

துறுதுறுவென கண்கள் அலைபாய, ஓயாமல் பேசுபவளது முகம் தெளிவில்லாமல் இருப்பதைக் கண்டான்.

“நீ சாப்டியாடா?” என பாசத்துடன் கேட்டான்.

“அண்ணிகூட சாப்பிடுறேண்ணா!” - மெலிதாக முறுவலித்தாள்.

“இப்படி உட்கார்” என்றவன் படித்துக் கொண்டிருந்த பேப்பரை மடித்து வைத்துவிட்டு, அவள்புறமாக திரும்பினான்.

“என்கிட்ட ஏதாவது சொல்லணுமா?” தங்கையின் கண்களைப் பார்த்தபடி கேட்டான்.

ஒரு நொடி அவளது விழிகளில் தெரிந்த ஒளியை அவன் கவனிக்கத் தவறவில்லை.

“நான் ஒண்ணு சொன்னா கோபப்படக்கூடாது…” என்று பீடிகை போட்டாள்.

“அது சொல்லப் போற விஷயத்தில் இருக்கு” நானும் சளைத்தவன் அல்ல’ என்பது போல சிரித்துக் கொண்டே சொன்னான் முகுந்தன்.

அவனது பதில் அவளுக்கு உவப்பாக இல்லை.

தயங்கிக் கொண்டே, “இப்போ எனக்குக் கல்யாணம் வேணாம் அண்ணா!” ஒருவழியாக மனத்திலிருந்ததை சொல்லி முடித்துவிட்டாள்.

ஹாலில் அமர்ந்திருந்த தந்தையையும், அங்கு வந்த அமுதாவையும் பார்த்தவன் எழுந்து வாஷ்பேசினை நோக்கிச் சென்றான்.

நிஷாவிற்குத் திக்திக்கென்றிருந்தது. பதிலே சொல்லாமல் செல்லும் சகோதரனை பரிதவிப்புடன் பார்த்தாள்.

கையைத் துடைத்தபடி, “காரணத்தைத் தெரிஞ்சிக்கலாமா?” என்றான்.

குரல் என்னவோ இலகுவாகத் தான் வந்தது. ஆனால், பார்வை முன்னிலும் கூர்மையாக அவளைத் துளைத்தது.

“மு..ன்னயே சொன்னா மாதிரி… வேலைக்குப் போயிட்டு… அப்புறம்…” முடிக்க முடியாமல் பாதியில் நிறுத்தினாள்.

கர்சீஃபை மடித்து பாக்கெட்டில் வைத்தவன், “லைஃப்ல நல்ல வாய்ப்புங்கறது ஒருமுறை தான் வரும். இன்னைக்கு அதை மிஸ் பண்ணிட்டு, பின்னால அதை நினைச்சி வருத்தப்படக் கூடாது” என்றான் அழுத்தமாக.

‘அன்றைக்கு இதே வார்த்தைகளைத் தான் சூர்யாவும் சொன்னான்.’

அவளுக்குக் கண்கள் கலங்கின.

அத்தனை நேரம் தவிப்பும், பயமுமாக பேசியவள், “இதைவிட நல்ல வாய்ப்பும் வரலாமில்ல. இதுதான் பெஸ்ட்ன்னு எப்படிச் சொல்லமுடியும்?” வேகமாக கேட்டாள்.

“நி..ஷா!” என்று ஏதோ பேச ஆரம்பித்த அமுதாவை, கைநீட்டித் தடுத்தான் முகுந்தன்.

“நீ சொல்றதும் கரெக்ட் தான். ஆனா, விதண்டாவாதம் பேசணும்னா இதுக்கும் என்னால பதில் சொல்ல முடியும். எனக்கு இப்போ டைம் ஆச்சு. நீ நல்லா யோசிச்சி வை. நான் ஈவ்னிங் வந்ததும் பேசறேன்” என்றான்.

“யோசிக்க ஒண்ணும் இல்லண்ணா! நான் ரொம்பத் தெளிவா இருக்கேன். இந்தக் கல்யாணப் பேச்சை இதோட நிறுத்திடுங்க…” என்றவள் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் அறைக்கு ஓடினாள்.

நெற்றியைத் தடவியபடி அமுதாவைப் பார்த்தவன், “அப்பா! கொஞ்ச நாளைக்கு உங்க டூர் ப்ரோக்ராமையெல்லாம் கேன்சல் பண்ணிட்டு, நல்ல கல்யாண மண்டபமா பார்க்க ஆரம்பிங்க” என்றவன், “அமுதா! உன்னோட கெஸ் சரியா இருந்தா சந்தோஷம். போய் விசாரி” என்றவன் அலுவலகத்திற்குக் கிளம்ப, அமுதா புன்னகையுடன் தலையசைத்தாள்.