இதயம் மேவிய காதலினாலே - கதை திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,659
1,618
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

இக்கதையின் அத்தியாயங்கள் இங்கு பதிவிடப்படும்
 
  • Love
Reactions: selviesan and Anuya

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
196
437
63
இதயம் மேவிய காதலினாலே - ஷெண்பா

அத்தியாயம் – 1


“அமுதா! இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்திருப்ப? நேரமாகுது. உங்க அம்மா இதோடு பத்து முறைக்கு மேலே, போன் செய்துட்டாங்க. உன்னுடைய கோபத்தைக் காட்ட, இது நேரமில்லை! கிளம்புமா…!” - முகுந்தன் கெஞ்சாத குறையாகச் சொல்லிக் கொண்டிருக்க, அமுதா அசையாமல் அமர்ந்திருந்தாள்.

அவளது கண்களின் விளிம்பில் நின்று கண்ணீர் எட்டிப் பார்த்தது. முகுந்தனுக்குக் கோபம் வந்த போதும், மனைவியின் ஈரவிழிகள் அவனைக் கவலையுறச் செய்தன.

“அமுதா! என்ன இது?” என அவளது தோளைத் தொட்டதுதான் தாமதம், சட்டெனக் கண்ணீர் வெளிவந்துவிட, தலையைக் குனிந்து கொண்டாள். “ம்ச்சு! என்னப்பா நீ?” என்றபடி மனைவியைத் தனது தோளில் சாய்த்துக்கொண்டான்.

சமாளித்துக் கொண்டு நிமிர்ந்தவள், “எப்படிங்க உங்களால, இப்படிப் பேச முடியுது? நாம நினைச்சது என்ன? இப்போது நடக்கறது என்ன?” என்று குமுறினாள்.

உள்ளுக்குள் நிலவிய ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு, “நினைச்சதெல்லாம் நடக்கணும்னு இருக்கா என்ன?” என்ற கணவனின் பதிலில், வெடுக்கென நிமிர்ந்தாள்.

“இந்தத் தத்துவமெல்லாம் எனக்கு வேணாம். உங்க மனசுல கஷ்டம் இல்லைன்னு சொல்லுங்க!” என நேருக்கு நேராக அவனது முகத்தைப் பார்த்துக் கேட்டதும், பதில் சொல்லாமல் சோர்வுடன் இருக்கையில் அமர்ந்தான் அவன்.

“அம்மா!” எனச் சப்தமிட்டபடி கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஓடிவந்தாள் நான்கு வயது கன்யா. “அம்மா! அம்மா! ஃபங்ஷனுக்கு நான் இந்த ட்ரெஸ்ஸைப் போட்டுக்கட்டுமா?”

ஆசையுடன் கேட்ட மகளின் முதுகில் ஓங்கி அறையொன்றை வைத்தவள், “யாரும் எங்கேயும் போகப் போறதில்ல…!” எனக் கத்தினாள்.

அன்னையின் திடீர் ஆவேசத் தாக்குதலில் மிரண்ட குழந்தை, வெளிறிய முகத்துடன் உடல் நடுங்க ஓடிச் சென்று, தந்தையின் இடுப்பைக் கட்டிக்கொண்டது.

குழந்தையை அணைத்துத் தூக்கிக்கொண்ட முகுந்தன், “ஏன்டி! நீ என்ன லூசா? உன் கோபத்தையும், ஆத்திரத்தையும்… குழந்தைமேலயா காட்டுவ?” என இறைந்தான்.

குழந்தையை அடித்துவிட்டதை எண்ணி தன்னையே நொந்து கொண்டிருந்தவள், கணவனின் கோபத்தையும் சேர்த்துக் காணநேர்ந்ததில், செய்வதறியாமல் திகைத்தாள்.

“இங்கே பார்! உனக்கு அரைமணி நேரம் டைம். அதுக்குள்ள தயாராகி, காருக்கு வர்ற! இல்லைனா, நடக்கறதே வேற!” எனச் சொல்லிவிட்டு குழந்தையுடன் வெளியேறினான்.

இந்த ஒன்பது வருடத் தாம்பத்தியத்தில், அமுதா – முகுந்தன் இருவரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்தும், உணர்ந்தும் இருந்தனர்.

வங்கியொன்றில் உயர் அதிகாரியாகப் பதவி வகிக்கும் முகுந்தன், மிகவும் சாது. ‘சாது மிரண்டால்… காடு கொள்ளாது!’ என்ற சொல்லிற்கேற்ப, அவனுக்குக் கோபம் வந்தால், யாராலும் தாக்குப் பிடிக்க முடியாது. சொன்னால் சொன்னது தான்!

அமுதா எதையும் ஆராய்ந்து முடிவெடுப்பவள். மகப்பேறு மருத்துவராக இருந்த போதும், மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நேரும் கணவனது இடமாற்றத்தின்போது, சளைக்காமல் அவனுடன் தனது பணியிடத்தையும் மாற்றிக் கொள்பவள் அவள். கணவனின் பேச்சிற்கு எதிராக, எதையும் மறுத்துப் பேசிப் பழக்கமில்லாதவள்.

வேண்டாவெறுப்பாக தேவையான உடைகளை பெட்டியில் அடுக்கினாள்.

வாசலில் நின்று யாரிடமோ பேசிவிட்டு, மொபைலை அணைத்துப் பாக்கெட்டில் வைத்துவிட்டு நிமிர்ந்தான் முகுந்தன்.

“நான் ரெடி!” என எங்கோ பார்த்துக்கொண்டு சொன்ன மனைவியைப் பார்த்து முறுவலித்தான்.

“பேகைக் கொடு!” என கை நீட்ட, “பரவாயில்லை. கார் வரைக்கும் தானே…? நானே கொண்டு வரேன்” என நகர்ந்தவள் அப்போதுதான் நினைவு வந்தவளாக, “நீங்க நிஷாவுக்குப் போன் செய்து, ஹாஸ்டலிலேயே இருக்கச் சொல்லுங்க!” என்று சொல்லிவிட்டுச் செல்ல, முகுந்தன் தவிப்புடன் பார்த்தான்.

********​

காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வந்துசேர ஆகும் ஒன்றரைமணி நேரத்திற்குள், அலுத்துவிட்டது அமுதாவிற்கு. காரிலிருக்கும் ஏசி அதிக அளவில் இருந்தும் கூட, சுள்ளென அடிக்கும் வெயிலுக்கு முன்பாக, சற்றும் எடுபடவில்லை.

உஸ் என்று பெருமூச்சு விட்டபடி காரிலிருந்து இறங்கியவளுக்கு, “அத்தை! அண்ணி வந்தாச்சு” எனக் குரல் கொடுத்தபடி ஓடிவந்தவளைக் கண்டதும், விழிகள் விரிந்தன.

“ஹாய் அண்ணி! வாங்க… வாங்க! பாவம். அத்தைதான் புலம்பிட்டே இருந்தாங்க” என்றவள், “ஹாய் கன்யா!” என்றபடி உறக்கத்திலிருந்து விழித்த குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.

“ஆமாம், நீ எப்போ வந்த?” என்று கேட்டாள் அமுதா.

“நேத்து நைட்டே வந்துட்டேன் அண்ணி! அண்ணாகிட்டக் கூட காலைல பேசினேனே. கிளம்பிட்டேன்னு சொன்னாங்களே. என்ணண்னா! நீ, அண்ணிகிட்ட சொல்லலியா?” என முகுந்தனையும் நடுவில் இழுத்துவிட்டாள்.

அமுதா திரும்பி கணவனை முறைத்தாள்.

அவனோ தங்களை வரவேற்க வந்த மாமியாரை விசாரித்துக் கொண்டே நழுவ, அமுதாவின் எரிச்சல் இரண்டு மடங்கானது.

“வா அமுதா! முன்னால நின்னு எடுத்துச் செய்யவேண்டியவங்களே இவ்ளோ லேட்டா வந்தா எப்படி?” என்று கேட்ட அன்னையை கடுப்புடன் பார்த்தாள்.

“நாங்க வரலைனாலும் நேரத்துக்கு எல்லாம் நடந்துட்டு தானே இருக்கு. அப்புறம் என்ன கடமைக்குக் கேட்கறியாம்மா?” என்று பட்டென்று கேட்டாள்.

வசந்தாவின் முகம் வாடிவிட, அமுதாவிற்கே சற்று சங்கடமாகிவிட்டது.

‘மற்றவர் மீதிருக்கும் கோபத்தை, அம்மாவிடம் காட்டி என்ன செய்வது?’ என்று தன்னையே கேட்டுக் கொண்டாள். ஆனாலும், மனத்திலிருந்த சஞ்சலம் அத்தனைச் சீக்கிரம் விலகாது என்றே அவளுக்குத் தோன்றியது.

அன்னையின் கரத்தைப் பற்றிக் கொண்டு, “சாரிம்மா! ஏதோ குழப்பத்துல அப்படி பேசிட்டேன்” என்றாள் வருத்தத்துடன்.

“உன்னைப் புரிஞ்சிக்காம இல்ல அமுதா! எனக்கும் வருத்தம் தான். ஆனா, இதுல என்னால எதுவும் செய்ய முடியலம்மா.”

“நீ என்னம்மா செய்வ? சரி விடு. முடிஞ்சதைப் பேசி என்ன பண்ண முடியும்?” என்று பெருமூச்சு விட்டாள்.

“உன் மாமனார் இன்னும் ஊரிலிருந்து வரலையா?”

“இல்லம்மா! டெல்லில ரொம்பப் பனி. அதனால ட்ரெயின் கான்சல் ஆகிருச்சி. அனேகமா ரெண்டுமூணு நாள்ள வந்திடுவாங்கன்னு நினைக்கிறேன்” என்றாள்.

அதேநேரம், “அண்ணி! இந்தாங்க உங்களுக்காக ஜில்லுன்னு ஃப்ரெஷ் லைம் ஜூஸ்” என்று சிரித்தபடி டிரேயை நீட்டிய நாத்தனாரைப் பார்த்தாள்.

“உன்னை யார் கூட்டிட்டு வந்தது? என்று கேட்டாள் அமுதா.

“பாரதி கூட வந்தேன் அண்ணி! ஆனா, சரியான ரம்பம்… அவனை ரொம்பப் பேசாதேன்னு சொல்லிவைக்கணும். ஹாஸ்டல்லயிருந்து இங்க வந்து சேர்றதுக்குள்ள மொக்கை ஜோக்குங்களா சொல்லி என்னை அறுத்துட்டான்” என்று அலுத்துக் கொண்டவள், “அச்சச்சோ! கன்யா என்னைச் சீக்கிரமா வரச் சொன்னா நான் போறேன் அண்ணீ!” என்று ஓடியவளை, ஆயாசத்துடன் பார்த்தாள்.

“காலேஜ்ல அடுயெடுத்து வச்சும் இன்னும் அந்தக் குழந்தைத்தனம் மாறவேயில்ல” என்று சிரித்தார் வசந்தா.

“எல்லாம் உன் மாப்பிள்ளையும், என் மாமனாரும் கொடுத்த செல்லம் தான். அதான் காஞ்சிபுரத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் வந்ததுமே, இவளை இங்கேயே ஹாஸ்ட்டல்ல போட்டேன். வீட்ல இருந்தா இவளுக்கும், கன்யாவுக்கும் வித்தியாசமே தெரியாது” என்ற அமுதாவின் வார்த்தைகளில் வருத்தம் துளிகூட இல்லை. முழுக்க முழுக்க அன்பு மட்டுமே இருந்தது.

*******​

நிஷா! முகுந்தனின் ஒரே பாசமிகு தங்கை.

இருவருக்குமிடையே கிட்டதட்ட பதினைந்து வயது வித்தியாசம். அவள் பிறந்த போது, பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த முகுந்தன் ‘உடன் படிக்கும் மாணவர்கள் தன்னைக் கிண்டல் செய்கிறார்கள்’ என்று ஒருவாரம் பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு, அழுத காலமெல்லாம் உண்டு.

ஆனால், தங்கை வளரவளர அவளை அத்தனைப் பிரியமாக பார்த்துக் கொண்டான்.

அதிலும் இரத்த சோகையினால் ஏற்பட்ட பாதிப்பில், அவர்களது அன்னை இறந்த போது அவளுக்கு வயது ஏழு. அன்னையின் இறப்பிற்குப் பிறகு, அவளுக்கு ஒரு அன்னையாகவே மாறிப் போனான்.

ஆயினும், இரு ஆண்கள் எத்தனை நாட்களுக்குத் தான், ஒரு சிறு பெண்குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியும்? முகுந்தனும் அவனது தந்தை சிவராமனும் தவியாய் தவித்துப் போயினர். அதிலும் இரவில் அன்னை வேண்டும் என்று அழுபவளைக் காணவே இருவருக்கும் அச்சமாக இருக்கும்.

முகுந்தன் வங்கி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடமே ஆகியிருந்த நிலையில் அவனுக்குக் திருமணம் செய்து வைக்க எண்ணினார் சிவராமன். தூரத்து உறவு முறையிலேயே அமுதாவைப் பற்றிக் கேள்விப்பட்டு மகனுக்கு முடிக்க நினைத்தார்.

பெண் பார்க்க சென்ற போது அமுதாவிடம் தனியாகப் பேசினான் முகுந்தன்.

“உங்க அப்பா இறந்ததுக்குப் பிறகு, பணப்பிரச்சனையால ரெண்டு வருஷத்தோட நீங்க உங்க படிப்பை நிறுத்திட்டீங்கன்னு கேள்விப்பட்டேன். இருந்தாலும் உங்ககிட்ட நான் ஒரு உதவியை எதிர்பார்த்து வந்திருக்கேன். நீங்க எனக்காக அதைச் செய்தால், உங்களை நான் மேற்கொண்டு படிக்க வைக்கிறேன்” என்று அவளுக்கு உறுதியளித்தவன் சொன்ன காரணத்தைக் கேட்டு, அமுதாவிற்குத் திகைப்பாக இருந்தது.

‘தங்கள் குடும்பத்திற்கு மருமகளாக மட்டும் அல்லாமல், தனது தங்கைக்கு ஒரு அன்னையாக இருக்கவேண்டும். அதோடு நம் இருவருக்குமே சின்ன வயசுதான். அதனால உங்கள் படிப்பு முடியும் வரை, என்னால் உங்களுக்கு எந்த இடையூறும் இருக்காது’ என்றவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

தந்தை இறந்து படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தனக்குத் திருமணம் செய்து வைக்க நினைக்கும் அன்னையை எதிர்க்கவும் முடியாமல், திருமணத்திற்குச் சம்மதிக்கவும் முடியாமல் இருந்தவளை, முகுந்தனின் பேச்சு வெகுவாக கவர்ந்து விட்டது.

‘இருபதே வயதாகும் தன்னால், ஒரு ஒன்பது வயது பெண்ணிற்குத் தாயாக இருக்க முடியுமா?’ என்று யோசித்தாள். தான் வந்தபோது ஹாலில் கொழுக்மொழுக்கென்று சைனா பொம்மை போல் அமர்ந்திருந்த குட்டிப் பெண்ணை, அவளுக்குமே பிடித்திருந்தது.

ஆனாலும், “இப்போ சரின்னு சொல்லிட்டு, பின்னால என்னால முடியாதுன்னு சொன்னா…” என்று குறும்புச் சிரிப்போடு கேட்டாள் அமுதா.

நேராக அவளது கண்களைப் பார்த்தவன், “நீங்க ஏமாத்தமாட்டீங்க” என்றான்.

அவனது பார்வையின் வீச்சை எதிர்கொள்ளமுடியாமல் வேறுபக்கம் பார்த்தபடி, “எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?” என்று முனகினாள்.

சிறு புன்னகையை உதிர்த்தவன், “என் மனசுக்குப் பிடிச்ச பொண்ணு, நிச்சயமா நல்லவங்களா தான் இருப்பாங்க. அந்த நம்பிக்கை தான்” என்றான்.

இதற்கு மேலும் பேச்சை வளர்ப்பது முட்டாள்தனம் என்று புரிந்து கொண்டவள் புன்னகையுடன், திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தாள்.

அடுத்த மூன்று மாதத்திலேயே முகுந்தன் – அமுதா இருவரது திருமணமும் மிக எளிமையாக நடந்தது.

சொன்னபடி அவளை மீண்டும் கல்லூரியில் சேர்த்தான். மகப்பேறு மருத்துவராக்கினான். வங்கித் தேர்வுகள் எழுதி, தன்னையும் உயர்த்திக் கொண்டான்.

அமுதாவும், நிஷாவைத் தனது மகளாகவே பாவிக்கத் துவங்கிவிட்டாள். இப்போதெல்லாம் அவளுக்கு அண்ணனை விட, எல்லாவற்றிற்கும் அண்ணி தேவைப்பட்டாள்.

சமயங்களில் அண்ணனும், தங்கையும் தன்னை உரிமைக் கோரி அடிக்கும் லூட்டியை, மனதாரக் கண்டு இரசிப்பாள்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
196
437
63
அத்தியாயம் – 2​

சமையலறையில் மதிய உணவிற்குத் தயார் செய்து கொண்டிருந்த அமுதா, விசிலடித்தபடி வீட்டினுள் நுழைந்த தம்பியைப் பார்த்தாள்.

அவனோ, யாரையும் கண்டுகொள்ளாமல் நேராக மாடியிலிருந்த தனது அறைக்குச் செல்ல, திரும்பி அன்னையின் முகத்தைப் பார்த்தாள்.

வசந்தா தர்மசங்கடத்துடன் விட்ட வேலையைத் தொடர, அமுதா மனத்திற்குள் பொங்கிய ஆற்றாமையுடன் அடுப்பைக் கவனிக்கலானாள்.

‘உஸ்’சென்று மூச்சு விட்டு வெயிலின் தாக்கத்தை தீர்த்துக் கொள்ள முயன்றவன், சட்டை பொத்தானைக் கழற்றிக் கொண்டே தனது அறைக்குள் நுழைந்தான்.

அதேநேரம், “பே…!” என்றபடி திடீரென தன்னெதிரில் வந்து குதித்தவளைப் பார்த்து ஒரு நொடி பதறிப் போனான்.

அவன் பயத்துடன் இரண்டடி பின்னால் விலக, அவளோ, திருதிருவென விழித்தபடி செய்வதறியாமல் நின்றிருந்தாள்.

அவன் திகைத்து நின்றது சிலநொடிகள் தான். அடுத்து அவனது வாயிலிருந்து சரமாரியாக வார்த்தைகள் வந்து விழலாயின.

“ஏய்! என் ரூம்ல என்னடி பண்ற? உன்னை இந்தப் பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல!” - கோபத்துடன் அவளை நோக்கி அவன் முன்னேறினான்.

அவனது ரௌத்திரம் நிறைந்த முகத்தைப் பார்த்ததும், அவளது மூளையில் எச்சரிக்கை மணி ஒலிக்க, தனது சக்தியைத் திரட்டி அவனை ஒரே தள்ளாக தள்ளிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் கீழே ஓடினாள்.

கீழே விழாமல் தட்டுத் தடுமாறி சமாளித்து நின்றவனுக்கு, கடுகடுவென வந்தது.

“லூசு! லூசு! அரைலூசு…! இதைப் போயி… என் தலையெழுத்து…!” என்று தலையில் அடித்துக் கொண்டவன், “இன்னைக்கு உன்னை ஒரு வழி பண்ணாம விடப்போறதில்லை. இனி நான் இருக்கும் பக்கமே நீ வரக்கூடாது” என்று ஆத்திரத்துடன் முணுமுணுத்தவன், காலை உதறிக்கொண்டு கீழே வந்தான்.

சலித்த மாவை எடுத்துக் கொண்டு எழுந்த வசந்தா ஹாலுக்கு வரவும், “அத்தை!” என்று அலறியபடி நிஷா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

இருவரும் மோதிய வேகத்தில் வசந்தா சுவற்றில் இடித்துக் கொண்டு, “கடவுளே!” என்று முனகினார்.

அவரது கையிலிருந்த மாவு சமையலறை முழுவதும் சிதறியிருக்க, வெள்ளை வெளேரென்று நின்றிருந்தாள் நிஷா.

வசந்தா முனகியதும், “அத்தை! சாரி சாரி. எல்லாம் அத்தானால தான்” என்றபடி அவரைப் பிடித்து நிறுத்தினாள்.

“ஏய்! அவன் இப்போ தானே வீட்டுக்குள்ள வந்தான். அதுக்குள்ள என்னடி பண்ண?” என்றாள் அமுதா.

“அதூ…” என்றபடி திரும்பியவள், அவன் வருவதைக் கண்டதும் வேகமாக அண்ணியின் பின்னால் சென்று மறைந்து கொண்டாள்.

“வளர்ந்திருக்கியே… கொஞ்சமாவது அறிவிருக்கா… எருமை!” என்று கத்தியபடியே வந்தவன், அங்கே தனது தமக்கையைக் கண்டதும் சட்டென மௌனியானான்.

அமுதாவும், சகோதரனையே பார்த்தாள்.

“எப்போ வந்த?” என்று தழைந்த குரலில் கேட்டான்.

“நான் வந்து ஒரு மணி நேரமாகுது…” என்றாள்.

“ஓ!” என்றவன் வந்த வழியே திரும்பினான்.

“நான் வரமாட்டேன்னு நினைச்ச இல்ல…” என்று அவனது வாயைக் கிளறினாள் அமுதா.

அவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்க, “வெளியே நிக்கிற காரும், உன் கண்ணில் படல. நாங்க வந்திருப்போங்கற நினைப்பும் இல்ல. அந்த அளவுக்கு நினைச்சதை நடத்தி முடிச்சிகிட்டோம்ங்கற சந்தோஷம். எல்லாம் இப்போ என்னைப் பார்த்ததும் போன இடமே தெரியல போல…” என்று மறைமுக வார்த்தைகளால் அவனைச் சாடினாள்.

பற்களைக் கடித்துக் கொண்டு அவள் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டவனுக்கு, மூக்கின் மீது கோபம் வந்தது.

“அதானே பார்த்தேன்… என்னடா நம்ம மேல இருக்க பாசத்துல வந்துட்ட போலன்னு ஒரு நிமிஷம் கொஞ்சம் தடுமாறிட்டேன். இப்போ தானே தெரியுது. இவ்வளவு நல்ல எண்ணம் இருக்கறவ எதுக்கு வரணும்?” என்று பேசிக்கொண்டே போனவனை முறைத்துக் கொண்டே நின்றாள் அமுதா.

“டேய்! என்னடா அக்கான்னு மரியாதை இல்லாம…” வேகமாக அவனது பேச்சிற்குள் இடைபுகுந்தார் வசந்தா.

எங்கே இரண்டும் முறுக்கிக் கொண்டு ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்துவிட்டால் என்ன செய்வதென்ற பயம் அவருக்கு. மகனும் சொன்னால் செய்பவன். மகளும் தனக்கு ஒன்று வேண்டாமென்றால், ஒரேயடியாக வெட்டிக் கொள்பவள் என்பதால் ஒரு அன்னைக்கே உரிய பயம் அவரைப் பிடித்து ஆட்டியது.

‘அட! என்ன அதிசயம்? அத்தை சொன்னதுக்கா இந்த சிடுமூஞ்சி இப்படிப் பம்மிட்டு நிக்குது?’ என்ற ஆச்சரியத்துடன் தலையை மட்டும் வெளியே நீட்டி அவனது முகத்தை ஆராயந்தாள் நிஷா.

அன்னையின் வார்த்தைக்கு ஏதோ சொல்ல முயன்றவன், தலையை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு தன்னைப் பார்ப்பவளைக் கண்டதும், ‘எல்லாம் இந்த அனுமாரால தான்’ என்று மனத்திற்குள் திட்டிக் கொண்டான்.

“இன்னொரு முறை என் ரூம் பக்கம் வா… உன் காலை உடைச்சிடுறேன்” என்று தமக்கையின் மீதிருந்த கோபத்தையும் அவளிடமே காட்டிவிட்டுச் சென்றான்.

“ஹப்பா! சிடுமூஞ்சி இதோட விட்டுதே” என்று முணுமுணுத்தவளை, தனக்கு முன்னால் இழுத்து நிறுத்தினாள் அமுதா.

“உனக்கு வீட்ல இடமேவா இல்ல. எதுக்கு அவனோட ரூமுக்குப் போன?” என்று கேட்டாள்.

“நானும், கன்யாவும் ஹைட் அண்ட் சீக் விளையாடிட்டு இருந்தோம் அண்ணி!” என்றவளை என்ன சொல்வதெனத் தெரியாமல் பார்த்தாள்.

“அண்ணா உங்க ரூம்ல தூங்கிட்டு இருந்தாங்களா… அதான் நான் ஒளிஞ்சிக்க அத்தான் ரூமுக்குப் போனேன். கன்யாதான் என்னைத் தேடிட்டு வரான்னு நினைச்சி, ‘பே’ன்னு முன்னால போய் குதிச்சேன்… பார்த்தா அத்தான்” என்று பாவனையுடன் சொன்னவளைப் பார்த்து, வசந்தாவிற்குச் சிரிப்பாக வந்தது.

அன்னையை முறைத்தவள், “அறிவு கெட்டவளே! முழுசா பதினேழு வயசை முழுங்கிட்டு வளர்ந்து நிக்கிற. ஆனா, இன்னும் சின்னக் குழந்தை மாதிரி ஆட்டமும், பாட்டமுமா சுத்தி வர. நீ பண்ற கூத்துக்கெல்லாம் ஊர்ல என்னைத் தான் திட்டப் போறாங்க” என்று கடுமையாக சொன்னாள்.

“போங்க அண்ணி! நீங்கல்லாம் ஜாலியா வீட்ல இருக்கீங்க. என்னை மட்டும் ஹாஸ்டல்ல விட்டுட்டீங்க. என்கூட யாருமே பேசறதில்லை தெரியுமா? நான் விளையாடக் கூடாதா? என் கூடப் படிக்கிற பசங்களைப் பாருங்க… எப்படி அரட்டை அடிப்பாங்க தெரியுமா? நான் அப்படியா பண்றேன். வீட்டுக்கு வந்தா கூட என் இஷ்டப்படி இருக்கக் கூடாதா?” என்று பரிதாபமாகக் கேட்டவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது வசந்தாவிற்கு.

“அமுதா! விடு. சின்னப் பொண்ணுதானே. உன் வயசுல நீயும் இப்படித் தான் இருந்த…” என்றதும், “அப்படியா அத்தை! அண்ணியும் என்னை மாதிரி தானா?” என்று வெகுளியாகச் சிரித்தாள் நிஷா.

“உன்னை மாதிரி அவளும் வாலுதான். ஆனா, அநாவசியமா பேசமாட்டா. ஏடாகூடமா ஏதாவது வேலை செய்து, மத்தவங்ககிட்ட திட்டு வாங்க மாட்டா” என்றார்.

கவனமாக, “ஓ!” என்று கேட்டுக் கொண்டவளைப் பார்த்து தலையில் அடுத்துக் கொண்டாள் அமுதா.

“போதும்மா. நீ எது சொன்னாலும், அது அடுத்த ஐந்து நிமிஷத்துக்குத் தான். அப்புறம் வழக்கம் போல பழைய குருடி கதவைத் திறடி கதைதான். பேசாம வேலையைப் பாரு” என்றவள், “ஒழுங்கா போய்க் குளிச்சிட்டு ஹால்ல வந்து உட்கார்ற. கன்யா கூட சேர்ந்து கூத்தடிக்கிறத பார்த்தேன் அவ்வளவு தான் சொல்லிட்டேன்… போ” என்று அதட்டினாள்.

“ம்” என்று வேகமாகத் தலையை அசைத்துவிட்டு அங்கிருந்து ஓட்டமாக ஓட, அவள் மீது மிச்சமிருந்த மாவு சென்ற வழியெல்லாம் சிதறியது.

அமுதாவிற்கு மலைப்பாக இருக்க, நெற்றியைப் பிடித்துக் கொண்டாள்.

“இவளை எப்படி வழிக்குக் கொண்டு வர்றதுன்னே தெரியலம்மா. நான்தான் அளவுக்கு அதிகமா செல்லம் கொடுத்து கெடுத்துட்டேனோன்னு தோணுது. இவள் ஒழுங்கா இருந்திருந்தா, இன்னைக்கு எந்தப் பிரச்சனையும் இருந்திருக்காது. அவனும் என்னோட இப்படி மல்லுகட்டிட்டு நின்னிருக்க மாட்டான்…” என்றவளுக்குக் கண்கள் கலங்கின.

“என்ன அமுதா இது? அவளுக்கு இன்னும் விளையாட்டு புத்தி மாறல. மத்தபடி, குறை சொல்றா மாதிரி என்ன இருக்கு சொல்லு? எல்லாம் சரியாகிடும். காலா காலத்துல, எது நடக்கணுமோ அது நடக்கும். அவளுக்குன்னு ஒருத்தன், இனியா பிறந்து வரப்போறான்? எல்லாம் நல்லபடியா நடக்கும்!” என்ற அன்னையின் வார்த்தை அவளைச் சற்றுச் சாந்தப்படுத்த, முகத்தைக் கழுவிக் கொண்டு வேலையைத் தொடரலானாள்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
196
437
63
அத்தியாயம் – 3​

மாலை மங்கிக் கொண்டிருக்க வாசல் கதவைத் திறந்த அமுதா, வெளிகேட்டின் அருகில் நின்று போன் பேசிக் கொண்டிருந்தவனைப் பார்த்தவள், “பாரதி! பாரதி! என்று இரண்டு முறை அழைத்தும், அவன் திரும்பிப் பார்க்கவே இல்லை.

அவள் மீண்டும் அவனை அழைக்க வாயைத் திறக்கும் முன், “டேய் பாரதி! அண்ணி கூப்பிடுறாங்களே, காதுல விழல?” - மொட்டை மாடியில் நின்று கத்தினாள் நிஷா.

அத்தனை நேரம் திரும்பிப் பார்க்காதவன், வெடுக்கென திரும்பியவன், மாடியில் நின்றபடி, “ஹாய்!” என்று கையசைத்தவளைப் பார்த்தான்.

“நீதானா வரேன் இரு…” என்று கேட்டைத் திறந்து கொண்டு வேகமாக உள்ளே வந்தான்.

‘ஆரம்பிச்சாச்சா! இன்னைக்கு இவன் என்ன ஆகப்போறானோ!’ என்று அமுதா மனத்திற்குள் சிரித்துக் கொண்டாள்.

“வாவா!” என்றவள், “நம்ம அடிமை சிக்கிடுச்சி போகலாமா?” என்று அண்ணன் மகளிடம் கேட்டாள்.

“ஓகே அத்தை!” என்ற குட்டியின் கன்னத்தில் முத்தத்தைப் பதித்தவள், குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வந்தாள்.

கதவருகில் நின்றிருந்த அமுதாவைப் பார்த்தவன், “ஹாய் அக்கா! ரெண்டு நிமிஷம் இரு” என்றவன் வீட்டின் உள்ளேயே இருந்த படியருகில் வரவும், நிஷா கீழே வரவும் சரியாக இருந்தது.

“ஏய்! சின்னப் பொண்ணாச்சேன்னு விட்டா ரொம்பப் பேசற? இன்னொரு தடவை என்னை டேய் பாரதின்னு கூப்பிட்ட அவ்வளவுதான்” என்றான்.

“ஓ” என்று பாவனையாக தலையசைத்தவள், “சரி, இனி அப்படிக் கூப்பிடல பாரதி!” என்று கிண்டலாகச் சொன்னாள்.

“பேரைச் சொல்லாதன்னா… ஓங்கி ஒரு குட்டு குட்டினா அவ்வளவு தான் அஞ்சடியில இருந்து நாலடி ஆகிடுவ” என்றான்.

“அண்ணி! பாருங்கண்ணி இவனை” என்று தனக்குப் பரிந்து பேச அழைத்தாள்.

“இந்த விளையாட்டுக்கு நான் வரல. நீங்க ரெண்டு பேருமே பேசித் தீர்த்துக்கோங்க” என்று வாகாக சோஃபாவில் அமர்ந்து இருவரையும் புன்னகையுடன் பார்த்தாள் அமுதா.

“வெவ்வெவ்வே!” என்று ஒழுங்கெடுத்தவன், “பம்ப்ளிமாஸ்!” என்றான்.

“இங்க பாரு இன்னொரு தடவை இப்படிக் கூப்பிட்ட அவ்வளவுதான்…” என்றாள் வீம்புடன்.

“இதப்பார்றா! நான் சொல்லக்கூடாதாம். அவன் சொன்னா மட்டும் சும்மா இருப்பாங்களாம்.”

“அவர் என் அத்தான். நீ என் அத்தானா?” என்றவளுக்கு ஆத்திரமாக வந்தது.

“ஹய்யோ! உனக்கு அத்தானா இருக்கறதுக்கு பதிலா, நாலு முழம் கயித்துல தொங்கச் சொல்லு சந்தோஷமா தொங்குவேன்” என்றான் பாரதி.

“அப்படியா? அப்போ இந்தா” என்று மாடிப்படிக்கு கீழிருந்த கயிற்றை எடுத்து வந்து, அவனிடம் நீட்டினாள்.

இப்போது திகைத்து நிற்பது பாரதியின் முறையாயிற்று.

“மாமா! மாமா! வடிவேலு மாதிரி நீ தொங்கினா… நானும், அத்தையும் உன் காலைப் பிடிச்சிட்டு ஊஞ்சல் ஆடுவோம். ஜாலியா இருக்கும் மாமா” என்று கவிபாரதியின் பேண்ட்டைப் பிடித்தபடி குதித்தாள் கன்யா.

பின்பக்கமிருந்து உலர்ந்த துணிகளை எடுத்துக் கொண்டு வந்த வசந்தாவிற்கு விஷயம் முழுவதுமாக தெரியாது.

ஆனால், அவன் கையிலிருந்த கயிற்றையும், பேத்தியின் கெஞ்சலானப் பேச்சையும் கேட்டவர், “பாரதி! குழந்தை ஆசைப்படுறா இல்ல, ஊஞ்சல் தான் கட்டிக் கொடேன்ப்பா” என்று பரிவுடன் சொன்னார்.

நிஷாவின் செய்கையால் திகைத்து நின்றவன், இப்போது வசந்தாம்மாவின் பேச்சால் அதிர்ச்சியில் வாயைப் பிளந்தான்.

அமுதாவும், நிஷாவும் அடக்கமாட்டாமல் சிரிக்க, ஒன்றும் புரியாவிட்டாலும் கன்யாவும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தாள்.

‘தான் என்ன கேட்டுவிட்டோம் என்று இப்படிச் சிரிக்கின்றனர்?’ என்று புரியாமல் அவர்களைப் பார்த்தார் வசந்தா.

“ஆக மொத்தம் நீங்க ஜாலியா இருக்க, என் ஜோலியை முடிக்க தயாரா இருக்கீங்க. எங்க அப்பா, அம்மாவுக்கு நான் ஒரே ஒரு மூணாவது பையன். என் பாவமெல்லாம் உங்களைச் சும்மா விடாது” என்றான்.

“ஐயோ பாரதி! நீ இப்படி சீரியசா ஏதாவது பேச ட்ரை பண்ணாத. பார்க்கவே காமெடியா இருக்கு” என்று சிரித்த நிஷாவை, “வாலு!” என்று வலிக்காமல் அவளது தலையில் குட்டினான்.

“ஹும்!” என அவனது கையைத் தட்டிவிட்டு, கன்யாவை இழுத்துக் கொண்டு தன் அறைக்கு ஓடினாள்.

“ஆளுக்குத் தான் மதிப்பு கொடுக்க மாட்டேன்னுதுங்கன்னா… வச்சிருக்கற பேருக்காவது கொஞ்சம் மரியாதையா பேசக்கூடாதா?” என்று வாய்விட்டுப் புலம்பியவன், சிரித்துக் கொண்டே அமுதாவின் அருகில் அமர்ந்தான்.

அங்கே நடப்பதையெல்லாம் புரியாமல் பார்த்த அன்னையிடம், நடந்ததை விளக்கினாள் அமுதா.

“ஹய்யோ! ஏம்மா பிள்ளையை அப்படிச் சொல்றீங்க?” என்று மகனின் நண்பனுக்குப் பரிந்து வந்தார் வசந்தா.

“நாம தானேம்மா பேசிட்டு இருக்கோம். அது விளையாட்டுப் பொண்ணு ஏதோ சொல்லிட்டுப் போகுது. நானும் கொஞ்ச நேரம் ரிலாக்ஸாகிக்க அப்பப்போ ஏதாவது பேசுவேன் உங்களுக்குத் தெரியாதா?” என்று அவன் கேட்க, வசந்தா சிரித்துக் கொண்டார்.

“அப்புறம் அக்கா! எப்போ வந்தீங்க?” என்று கேட்டான்.

“ரொம்பதான்டா அக்கறை உனக்கு. நான் வந்திருப்பேன்னு தெரிஞ்சும், உள்ளே வந்து பார்த்தியா நீ? உன் ஃப்ரெண்டோட பைக் இல்லன்னதும், அப்படியே ஓடத்தானே பார்த்த.”

“உண்மையாவே நீங்க நாளைக்குத் தான் வருவீங்கன்னு நினைச்சேன். வாசல்ல காரும் இல்ல. இருந்திருந்தா உள்ளே வந்திருப்பேன்க்கா!” என்றான்.

“நம்பிட்டேப்பா…” என்று கேலியாகச் சொன்னாள்.

“ம்ச்! உனக்கும், அவனுக்கும் சண்டையாமே சொல்லி, ரொம்ப வருத்தப்பட்டான்” என்றதும், அமுதா அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

“நான்கூட அக்கா எதிர்பார்க்கறதுல தப்பு இல்லைன்னு சொன்னேன். ஆனா, நான் அந்தக் கண்ணோட்டத்துல இதுவரைக்கும் அவளைப் பார்த்ததேயில்லைன்னு சொன்னான். எனக்கு, அவனோட வார்த்தையும் தப்பா தெரியல” என்றான் மெல்ல.

“அவனுக்காக நீங்களும், மாமாவும் எவ்வளவோ செய்திருக்கீங்க. அவனை நல்லா புரிஞ்சிகிட்டவங்க நீங்க. அப்புறம் இதுல மட்டும் எதுக்குப் பிடிவாதமா இருக்கீங்க? உங்களோட ஆதங்கம் சரி தான் நான் அதைத் தப்பு சொல்லலை.

ஆனா, பிடிக்காத ஒரு விஷயத்தை ஏன் வற்புறுத்தி செய்ய வச்சி அவனோட வாழ்க்கையை மட்டும் இல்ல, நிஷாவோட வாழ்க்கையையும் கேள்விக் குறியாக்க முயற்சி பண்ணாதீங்க” என்றான்.

அவனது பக்குவப்பட்ட பேச்சைக் கேட்ட அமுதாவிற்கு, அன்று இதே வார்த்தைகளை முகுந்தனும் தன்னிடம் சொன்னது நினைவிற்கு வந்தது.

“நான் என்னடா தப்பா கேட்டுட்டேன்? நாளைக்கேவா கல்யாணத்தை வச்சிக்கச் சொன்னேன்? இப்போ என்ன அவனுக்கு வயசாகிடுச்சி? இருபத்தி நாலு வயசுல இப்போ கல்யாணம் தேவையா?

அவளும் படிப்பை முடிக்கணும், அப்புறம் வேலைக்குப் போகணும்னு எல்லாம் எனக்கும் தெரியும். தெரியாமலா இதெல்லாம் பேசறேன். என்னைக்கா இருந்தாலும் ரெண்டு பேருக்கும் கல்யாணம்னு ஒண்ணு செய்யத் தானே போறோம்.

அதை இவங்க ரெண்டு பேருக்கும் செய்து வச்சா என்னன்னுதான் கேட்டேன். எனக்கு ஒண்ணும் இந்த ஆசை நேத்து வந்ததில்ல. ரொம்ப நாளாவே இருக்கு. உங்க மாமாவுக்கும் அதில் சம்மதம். ஏன் அதைச் சொல்லக் கூடாதா?

திடீர்னு வந்து ஃபாரின் போகும் ஆஃபர் வந்திருக்கு. போனா வர குறைந்தது மூணுலயிருந்து நாலு வருஷமாகும். அதனால கல்யாணம் செய்துட்டு போகலாம்னு இருக்கேன்னு சொன்னான்.

என்ன வயசாச்சுன்னு உனக்கு இதுக்குள்ள கல்யாணம்? நீ நல்லபடியா ஊருக்குப் போய் வா, அதுக்குள்ள நிஷாவும் படிப்பை முடிச்சிடுவான்னு சொன்னேன். அதுக்கென்னவோ வானத்துக்கும், பூமிக்குமா குதிக்கிறான்.

அப்புறம் தான் தெரிஞ்சிது இது ஏதோ விவகாரம்னு. அப்பவாவது என்னன்னு சொன்னானா? தோண்டித் துருவி விசாரிச்சதுல தானே, அந்தப் பொண்ணைப் பத்தி தெரிஞ்சிது” என்று படபடப்பாக பேசினாள்.

“அவன் அதைச் சொல்லத்தான் கல்யாணப் பேச்சையே எடுத்தான். நீங்க நிஷாவைப் பத்தி பேசினதும், அவனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. அதோட எங்கே ஏதாவது பேசி, அம்மாவோட மனசையும் கலைச்சிடுவீங்களோன்னு பயம். அதான் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிட்டான்” என்றான் பாரதி.

“ஏன்டா நாங்க அவளை எவ்வளவு அருமை பெருமையா வளக்கறோம். இவள் வேண்டாம்னு சொல்றவனுக்கு, அவளை வற்புறுத்திக் கட்டிகொடுக்க எனக்கென்ன பைத்தியமா? இல்லை அவளுக்குத் தான் மாப்பிள்ளை கிடைக்காதா?” பாசமும், ஆதங்கமும் அந்த வார்த்தைகளில் கொட்டிக் கிடந்தது.

“படிச்சி முடிச்சி யாரோட தயவும் இல்லாம, சொந்தக் கால்ல நிக்க ஆரம்பிச்சிருக்க. இதுதான் சம்பாதிக்கிற வயசு. வாழ்க்கையை அனுபவிக்கிற வயசு. அதையெல்லாம் யோசிக்காம, தலைப் பெருதனமா ஆடினா ஒண்ணும் செய்யமுடியாது.

எனக்கு எதுக்கு பொல்லாப்பு? அவன் நல்லா இருந்தா எங்களுக்கும் சந்தோஷம் தானே. வாழ்க்கையில் வரும் கஷ்டநஷ்டத்தைப் புரிஞ்சி, எல்லாத்தையும் அனுசரிச்சிப் போனா சரிதான். இப்படிப் பிடிவாதமா எல்லாத்தையும் சாதிச்சிக்க நினைக்கிறவனுக்கு, வர்றவ ஒத்துப்போனா இன்னும் சந்தோஷம்” என்றாள்.

வார்த்தைகளில் ஆதங்கமிருந்தாலும், தம்பியின் வாழ்க்கை நன்றாக அமையவேண்டும் என்ற அவளது எண்ணத்தையும், ஆசையையும் பாரதியால் புரிந்துகொள்ள முடிந்தது.

“நீங்க நல்லதுக்குத் தான் சொல்றீங்கன்னு எனக்குப் புரியுது. நீங்க விருப்பப்பட்டது நடக்கலைனாலும், அவன் நல்லா இருக்கணும்னு தான் நினைக்கறீங்க. இப்போ அவனுக்கு இருக்க குற்ற உணர்ச்சிதான் உங்க மேல கோபமா திரும்புது. விடுக்கா இதைப் பெரிசா எடுத்துக்காதே எல்லாம் நேரம் வரும் போது தன்னால உணருவான்” நண்பனையும் விட்டுக் கொடுக்காமல், உடன்பிறவா சகோதரியைப் போல பழகுபவளையும் காயப்படுத்தாமல் பேசினான்.

பாரதி விளையாட்டுத்தனமாக இருந்தாலும், எதையும் சிந்தித்து செயல்படுபவன். இருகுடும்பங்களும் எதிரெதிர் வீட்டில் இருந்ததால், எப்பொதுமே அமுதாவின் வீட்டில் தான் அவனது வாசம்.

ஓரளவு வசதியான குடும்பம். ஒரு அண்ணன், ஒரு அக்காவிற்குப் பிறகு அந்தக் குடும்பத்தின் மூன்றாவது வாரிசு. வீட்டிற்கு மட்டுமல்ல, அனைவருக்குமே அவன் செல்லப் பிள்ளைதான்.

அமுதா திருமணமாகி அம்மாவின் வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் தன்னுடன் நிஷாவையும் அழைத்துச் செல்வாள். அவளைப் பார்க்கும் பொதெல்லாம் ஏனோ அவனுக்குச் சீண்டிக் கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கும்.

புஸுபுஸுவென அமுல்பேபி போல வருபவளை கன்னத்தைப் பிடித்துக் கிள்ளுவதும், ஜடையைப் பிடித்து இழுத்தும் அவளது கோபத்திற்கு ஆளாவன். கையில் கிடைத்ததை தூக்கி அடித்து, அவனை ஓடஓட விரட்டுவாள் நிஷா.

ஆனாலும், இருவருக்குள்ளும் நூலிழைப் பாசம் ஒட்டிக் கொண்டிருக்கும். அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அவன் வீட்டிற்கு வந்தால் தன்னோடு அமர்ந்து அவன் சாப்பிட்டே ஆகவேண்டும். இல்லையென்றால் வீடே ரணகளமாக மாறிவிடும்.

சொல்லப்போனால், அமுதாவையும், அவளது தம்பியையும் விட அந்த வீட்டின் செல்லப் பிள்ளைகள் நிஷாவும், கவிபாரதியுமே.

ஏதோ உணர்வுகளால் ஆட்பட்டிருந்தவளை, “அக்கா!” என்று உலுக்கி அழைத்தான் கவிபாரதி.

“என்ன கொசுவர்த்தி சுத்தப் போயிட்டீங்களா?” என்று சிரித்தவன், “நீங்க இதைப் ஃப்ரீயா விட்டுட்டு, நிம்மதியா இருங்க. யாருக்குத் தெரியும் இவனுக்கு நிஷாதான்னு இருந்தா, அவன் தலையெழுத்தை மாத்தவா முடியும்?” என்று புன்னகைத்தான்.

சட்டென அமுதாவின் முகத்தில் சந்தோஷம் கீற்றாக மின்னி மறைந்தது.

“நீ சொல்றா மாதிரி நடக்குமா பாரதி!” என்றவளது முகத்தைப் பார்த்தவனுக்கே சற்று பாவமாக இருந்தது.

“அக்கா! நான் கடவுள் இல்ல. ஏதோ சொல்லணும்னு தோணுச்சி சொன்னேன்.”

“அப்படிமட்டும் நடந்தா உனக்கு என்ன வேணுமோ கேளுடா… தரேன்” என்றவளது கரத்தைப் பிடித்து அழுத்திக் கொடுத்து, “உன்னை மாதிரியே நானும் ரொம்ப சந்தோஷப்படுவேன்கா!” என்றான்.

“சார் எங்கே ஆளையே காணோம்?” என்று கேட்டான்.

“சூர்யா தானே மூணு மணி இருக்கும் ஏதோ போன் வந்ததுன்னு அவசரமா கிளம்பிப் போனான். அவன் போன கொஞ்ச நேரத்துக்கெல்லாம் உன் மாமாவும் கிளம்பிப் போனார். ரெண்டு பேரும் எங்கே போனாங்கன்னு எனக்குத் தெரியாது” என்றாள் அவள்.