இதயத்திற்கு இலக்கணமில்லை - கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
196
437
63
45

நர்ஸ் கொடுத்த மாத்திரைகளைக் கையில் வாங்கிய நேரத்தில் அறைக்கதவு படாரெனத் திறக்க, நிமிர்ந்து பார்த்தான்.

“ஹீரோ சார்! என்ன இது... சின்னக் குழந்தையா நீங்க? ரோட்ல குட்டிக் கரணமெல்லாம் அடிக்க?” என கலாய்த்தபடி வந்த மித்ராவை பார்த்தவனின் பார்வையில், அவளுக்குப் பின்னால் உர்ரென்ற முகத்துடன் நின்றிருந்த மானசா தான் கண்ணில் பட்டாள்.

மித்ராவின் குறும்பு பேச்சிற்கான காரணத்தைப் புரிந்து கொண்டவன், தானும் உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தான். “குட்டிக்கரணம் அடித்தது நான் இல்லைங்க மேடம்... நம்ம ஜீப்தான்” என்றுவிட்டு நடந்த விஷயத்தைச் சுருக்கமாகக் கூறினான்.

“ஓ! குறுக்கால ஓடின அந்தப் பிரகஸ்பதிக்கு, கண் என்ன பிடறியிலா இருந்தது?” என எரிச்சலுடன் கேட்டாள்.

“பிடறியிலிருந்திருந்தா தான் இந்த ஆக்சிடென்ட் நடக்காமல் தப்பிச்சிருப்பேனே!” என்றான் ஈஷ்வர்.

“ம், அதுவும் சரிதான். உங்களை ஹாஸ்பிட்டலில் சேர்த்ததும் அந்தப் புண்ணியவான் தானா?” எனக் கேட்டாள்.

“ஆமாம், ஜஸ்ட் ஒரு பத்து நிமிஷம் முன்னாடிதான் மிஸ்டர்.ஷக்தி கிளம்பினார்.”

“ஷக்தி!” என முகத்தைச் சுருக்கிக் கேட்டாள் மித்ரா.

“ம்! அவரோட பெயர்தான்” என தோளைக் குலுக்கினான்.

“ஓ!” என்றவள், “நான் கேண்டீன் போய் காஃபி சாப்பிட்டுட்டு, உங்க ரெண்டு பேருக்கும் வாங்கிட்டு வரேன்” என்றவள்,உடனே வெளியேறினாள்.

பதட்டத்துடன் அறைக்குள் வந்த மானசாவிற்கு, தலையில் கட்டுடன் இருந்தவனைக் கண்டதும் அதுவரையிருந்த அவளது தைரியமெல்லாம் போன இடம் தெரியாமல் போக, அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கஷ்டப்பட்டு அழுகையை அடக்கியவளுக்கு, ‘கொஞ்ச நேரத்தில் தன்னை எப்படிப் பதற வைத்து விட்டான்’ என்ற கோபம் ஜிவ்வென ஏறியது.

அவளது மனக்கஷ்டத்தை உணர்ந்து அங்கிருந்த இறுக்கத்தைப் போக்க, மித்ரா வேடிக்கையாக பேசுவதைப் புரிந்து கொண்ட ஈஸ்வரும் பதிலுக்குப் பேசினான். இருவரையும் கவனித்தபடி, அமைதியாக கட்டிலருகி லிருந்த ஸ்டூலில் அமர்ந்திருந்தாள்.

மித்ரா அறையிலிருந்து வெளியேறியதும், “மானு டியர்! கோபமா” என்றபடி அவளருகில் நகர்ந்து வந்தான்.

“ஏதாவது சொல்லிடப்போறேன். என் கோபத்தைக் கிளறாதீங்க” என்றவள் கட்டிலில் தலைகவிழ்ந்து, ஓவென அழ ஆரம்பித்தாள். ஈஸ்வரின் நிலைமை தர்மசங்கடமாகப் போயிற்று. வலது கரத்தை ஊன்றி எழுந்து அமர்ந்தான்.

“ஷ்! மானு... எனக்கு ஒண்ணுமில்லை” என்று அவளது தலையைத் தடவிக்கொடுத்தான்.

“பேசாதீங்கத்தான். நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா. மித்ரா மட்டும் இல்லைனா நான் என்ன செய்திருப்பேன்?” என்றவளைத் தன்னோடு சேர்த்தணைத்து, கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் தன் உதடுகளால் ஒற்றியெடுத்தான்.

“நடக்கணும்னு இருப்பது நடந்தே தீரும். பெரிதாக ஒண்ணும் இல்லை. விடு” என்றான்.

கண்களைத் துடைத்துக்கொண்டு, “பின்னந்தலையில் அடிபட்டிருக்கே” என்றபடி அவனது முகத்தைத் தடவிக் கொடுத்தவள், “ரொம்ப வலிக்குதா?” என்றாள் கம்மிய குரலில்.

“வலிக்குது. ஆனால், ரொம்ப இல்லை” என்றான்.

“சி.டி.ஸ்கேன் எடுத்தாங்களா? ரிசல்ட் வந்துடுச்சா?”

“எக்ஸ்ட்ரே எடுத்தாங்க. பயப்பட ஒண்ணுமில்லை. சி.டி ஸ்கேன் எடுக்க ஈவ்னிங் ஆறு மணிக்குத்தான் வருவாங்களாம் அப்போ எடுப்பாங்க” என்றான்.

“மெடிசன்ஸ் என்னென்ன சாப்பிடணும், எத்தனை வேளை சாப்பிடணும்னு சார்ட் கொடுத்திருப்பாங்களே எங்கே?” என எழுந்து வந்து மருந்துகள் வைத்திருந்த ட்ரேயை ஆராய்ந்தாள்.

“ஹே! அதெல்லாம் இருக்கு... முதல்ல இங்கே வா.” பின்னால் நின்றிருந்தவளைப் பிடித்து இழுத்து, தன் பக்கத்தில் அமரவைத்துக் கொண்டான். கட்டிலுக் கருகிலிருந்த ஷெல்ஃபை எட்டித் திறந்தான்.

“ஏதாவது வேணுமா நான் எடுத்துத் தரேன்” என்று எழுந்தாள்.

அவளை நகராமல் பிடித்தவன், கண்ணோடு கண் பார்த்து ரோஜாப் பூங்கொத்தை அவளிடம் நீட்டியவன், “தேங்க்யூ!” என்ற வார்த்தையைக் காதலில் தோய்த்துச் சென்னான்.

பூங்கொத்தை வாங்கிக்கொண்டவள், அவன் ‘தேங்க்யூ’ என்றதும் முதலில் புரியாமல் பார்த்தாள். ஆனால், அவனது வார்த்தைகள் வந்த விதமும், கண்களில் வழிந்த காதலும், உதடுகளில் மலந்திருந்த புன்னகையும் அதற்கான அர்த்தத்தைச் சொல்லி விட, மானசாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

இருந்தும் ஒன்றும் அறியாதது போல, “எதுக்கு இந்த தேங்க்ஸ்...?” என வினவினாள்.

“எதுக்கா... இதுக்குத்தான்” என அவள் கன்னத்தில் முத்தமிட்டவன், “மலர்க்கொத்து ஒன்றை, என் காதலுக்குப் பரிசளிக்கும் நந்தவனத்திற்கு” என காதலுடன் சொன்னான்.

வெட்கத்துடன் அவனது தோளில் சாய்ந்துக்கொண்டு, “உங்களுக்கு எப்படித் தெரியும்...?” என்றாள்.

“தெரியும்...” என சிரித்தான்.

“அத்தை சொல்லியிருப்பாங்க. நான் சொல்ல வேணாம்னு சொன்னேன்... சொல்லிட்டாங்க...” என செல்லம் கொஞ்சினாள்.

“அவங்க எங்கே சொன்னாங்க...? வீட்டுக்கு போன் பண்ணா நீ கிளம்பிட்டன்னு சொன்னாங்க. நாளைக்குத் தானே மித்ராகூட வரேன்னு சொன்னா; அதுக்குள்ள என்ன அவசர அவசரமா கிளம்பியாச்சுன்னு கேட்டேன். அம்மாவுக்கு சொல்லவும் முடியலை; சொல்லாம இருக்கவும் முடியலை. என்னம்மான்னு கொஞ்சம் அழுத்திக் கேட்டதும் விஷயத்தைச் சொல்லிட்டாங்க.

அதுக்கு மேல எனக்கு தாங்குமா கிளம்பிட்டேன். கிளம்பின நேரம் ஹிமாச்சல்ல இருந்து தெரிந்தவர் ஒருத்தர் வந்திருந்தார். அவர்கிட்ட ஏற்கெனவே சொல்லி வச்சிருந்த ரோஜாப் பூவை கொண்டுவந்தார். எல்லாம் இன்னைக்கு அமைந்து வந்தது. டபுள் சந்தோஷத்தோட வந்தேன்... இப்படி ஆகிடுச்சி!” என்றவனை அணைத்துக் கொண்டாள்.

“நானும் எத்தனையோ ஆசையாகச் சொல்லலாம்னு வந்தேன்...” என்றவளின் கண்கள் கலங்கியது.

”டோண்ட் வொரிடா, எல்லாத்துக்கும் மனசு தான் காரணம். நல்ல விதத்திலேயே எடுத்துக்கலாமே... என்ன ஒரு ரொமாண்டிக் சிச்சுவேஷன் மிஸ் ஆகிடுச்சி... அவ்வளவு தான்!” என்றதும் நிமிர்ந்து அமர்ந்தாள்.

கையிலிருந்த ரோஜாப் பூக்களையே திருப்பித் திருப்பிப் பார்த்தாள். “என்னத்தான்... வித்தியாசமா இந்த ரோஜாவில் முள்ளே இல்லை...”

“இது ‘முள்ளில்லா ரோஜா...!’ உன்னை மாதிரி!”

“முள்ளில்லாத ரோஜாவா...!” ஆச்சரியத்துடன் பூக்களைப் பார்த்தாள்.

“இதை இன்ஸ்டியூட் ஆஃப் ஹிமாலயன் பயோ ரிசர்ச் டெக்ல புதுசா கண்டுபிடிச்சிருக்காங்க. முள்ளிருக்காது, பூக்களுக்கு பக்கத்தில் இலைகள் இருக்காது. ஏழு நாளைக்கு வாடவே வாடாது.”

“ஓ! ஆனா, ரோஜாவுக்கு முள்ளு தான் பாதுகாப்பு. அழகு. நம்மளை மாதிரி” என்றபடி தன் நெஞ்சில் சாய்ந்து கொண்டவளை காதலுடன் அணைத்துக் கொண்டான்.

அதேநேரம் ஹோட்டல் அறையில் ரஞ்சித் கொடுத்த புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஷக்தியின் பார்வையில் அதிர்ச்சியும், உள்ளத்தில் கொந்தளிப்பும் உருவானது.

46

சி.டி. ஸ்கேன் எடுத்ததில், ரிப்போர்ட் நார்மல் என வந்துவிட, அன்று ஒரு நாள் அப்சர்வேஷனில் வைத்திருந்துவிட்டு, மறுநாள் ஈஸ்வரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டனர். வீட்டிற்கு வந்த மானசா முதல் வேலையாக மாமியார் - மாமனாருக்கு போன் செய்து நடந்ததைச் சொல்லிவிட்டாள். விஷயத்தைக் கேள்விப்பட்டதும் கிளம்பி வந்தவர்களிடம் ஒரு மூச்சு புலம்பித் தீர்த்தாள்.

“இப்போ என்ன நடந்து போச்சுன்னு இந்த ஆர்ப்பாட்டம்?” ஈஸ்வரின் குரலில் எரிச்சல் எட்டிப் பார்த்தது.

“இவருக்கு என்ன அத்தை அவஸ்தைப்பட்டது நான்தானே? அதுல, உங்களுக்கு விஷயத்தைச் சொல்லவேணாமுன்னு இந்த மித்ரா சொல்றா, இவரும் கூடசேர்ந்து ஆமாம் சாமி போடுறார்” என்றாள் காட்டமாக.

“ஏய்! உங்க பிரச்சனையில் ஏண்டி என்னை இழுக்கற?” என்று இடைபுகுந்தாள் மித்ரா.

“அது வேற ஒண்ணுமில்லை மித்ரா! நீ எனக்கு சப்போர்ட் பண்ற இல்ல... அதுல வந்த காட்டம்” என்று அவளுக்குப் பரிந்து கொண்டு வந்தான் ஈஸ்வர்.

அதைக் காதிலேயே வாங்காதவளாக, “அத்தை! போனது போகட்டும். அவர் இன்னும் ஒருவாரத்துக்கு ஆபிஸுக்கு போகக்கூடாது. ஜீப்புக்கு ஒரு டிரைவரை ஏற்பாடு பண்ணணும். குறைஞ்சது ஒரு மாசத்துக்காவது பைக்கைத் தொடக்கூடாது. குறிப்பா, போட்டோ எடுக்கறேன் பேர்வழின்னு, பாறைக்குப் பாறை தாண்டும் வேலையை மூட்டை கட்டி வைக்கணும்” என்று கண்டிஷன் போட்டவளை, வீட்டினர் மூவரும் அதிசயமாகப் பார்த்தனர்.

திடீரென, “நாட்டாமை! தீர்ப்பை மாத்து” என வீராவேசமாக பொங்கிய மித்ராவை, அலட்சியமாகப் பார்த்தாள் மானசா.

“அம்மா! இதெல்லாம் கொஞ்சம்கூட நல்லாயில்ல... சொல்லிட்டேன்!” என்று கத்தினான் ஈஸ்வர்.

“ஏண்டா தம்பி! அவள் சொல்றதைத்தான் கொஞ்சம் கேளேன்” என்றார் விஜயா.

“அம்மா!” என பல்லைக் கடித்தவன், அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த தந்தையின் பக்கமாகத் திரும்பினான். “ஐயா! பார்த்துகிட்டு அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? நீங்களாவது எடுத்துச் சொல்லி இவளுக்குப் புரிய வைங்க. ஆபிஸ் போகாம வீட்டிலேயே இருன்னா எப்படி முடியும்?” என்றான்.

அவரும், “ஏம்மா” என ஆரம்பிக்கும் போதே இடைமறித்தாள் மானசா.

“ஒரு மாசம் ஃபாரின் டூர் போனப்போ, என்ன செய்தாராம்னு கேளுங்க மாமா” என்றதும் மகனையும், மருமகளையும் மாறி மாறிப் பார்த்தார்.

“மகனே! க்ளீன் போல்ட். இதுக்கு மேல ஒண்ணும் பண்ண முடியாது. அனுபவங்கறது ஒரு மனுஷனுக்கு நல்ல பாடம். அதனால் தான் இத்தனை நேரம் நான் வாயைத் திறக்காமல் உட்கார்ந்துட்டு இருந்தேன். பேசி முடிவுக்கு வர்றவங்ககிட்ட பேசலாம். இதான் பேசணும்னு முடிவு பண்ணிட்டு வர்றவங்ககிட்ட, ஒண்ணும் பேச முடியாதுப்பா” என்றவரை பரிதாபமாகப் பார்த்தான்.

“பழகிக்க, பழகிக்க கல்யாணமாகி ஆறு மாசத்திலேயே இப்படிச் சோர்ந்து போய்ட்டா எப்படி?” என்று தோளில் தட்டிவிட்டு, சௌந்தரபாண்டியன் எழுந்து செல்ல, கள்ளச் சிரிப்புடன் மாமியாரின் பின்னால் நின்றிருந்தாள் மானசா.

“இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை. ஹிட்லரும், முசோலினியும் ஒரே வீட்டில் இப்போ சந்தோஷமா இருக்குமே” என முறைப்புடன் சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்றான்.

மானசாவின் முகம் சோர்ந்து போனது. “பாருங்கத்தை! என்ன சொல்லிட்டுப் போறாருன்னு?” என்றாள்.

“விடும்மா, அவன் ஏதோ கோபத்தில் சொல்றான். உனக்காகவாவது வெளியே போகாமல் இருப்பான். ஆனால், நீயும் சும்மா கண்டிஷன் போடாதே. அவனும் குழந்தை இல்லையே!” என்றார் புன்னகையுடன்.

“அத்தை! உங்களுக்குக் கூடவா என் பயம் புரியலை. ரஞ்சித் இங்கே வந்திருக்கான்னு ஆதி அண்ணா சொன்னதிலிருந்தே, மனசுக்குள்ள இனம்புரியா பயம் வந்துடுச்சி. அதனால தானே கன்சிவ் ஆன விஷயத்தை, உடனே அவர்கிட்ட சொல்லணும்ங்கறதை சாக்காக வச்சி, பிடிவாதமா கிளம்பி வந்தேன்” என்றாள் கவலையுடன்.

“இதைக்கூட புரிஞ்சிக்க முடியாத முட்டாள்னா என்னை நினைச்ச. உன்னை, பெரியவங்க யாரும் இல்லாமல், மித்ராவோட அனுப்பும் போதே தெரியணும் இல்ல? உறவுக்காரங்க எல்லாம் கிளம்புனதுக்கு பிறகு, நாங்களே இங்கே வரணும்னு இருந்தது தானே. என்ன, நீ போன் பண்ணினதால அவசரமா கிளம்பி வந்துட்டோம். அவங்க எல்லோரும் இருக்கும் போது போன் பண்ணாதது கூட நல்லதுதான். உங்க ஆச்சி பயந்து போயிருப்பாங்க. மதுரையிலிருந்து போன் வந்தா, நீயும் எதுவும் சொல்லிடாதே” என்றதற்கு சரியென்று தலையாட்டினாள்.

“நீ மனசை குழப்பிக்காம, பாரத்தை அந்த ஆத்தா மேல போட்டுட்டு, நிம்மதியா இரு. அவள் எல்லாத்தையும் பார்த்துக்குவா. போய் கொஞ்சநேரம் படு, சோர்ந்து தெரியற” என்று அவளை அனுப்பி வைத்துவிட்டு திரும்பியவர், மித்ரா தன்னையே பார்ப்பதைக் கண்டார்.

“என்னம்மா, உன் வருங்காலத்தைப் பத்தி கனவு காண்றியா?” எனக் கேட்டார்.

“இந்த நிமிடம் தான் நிஜம். நாளைக்குன்னு ஒண்ணு இருக்குன்னு சொன்னா, அதை வரும்போது பார்த்துக்கலாம்னு நினைக்கிறவள் நான்” என தத்துவம் பேசியவள், ”எனக்கு… நான் ரொம்ப நாளா உங்களை ஒண்ணு கேட்கணும்னு நினைக்கிறேன்” என்றாள்.

“கேளேன்”

“உங்களை மாதிரி நல்ல மாமியார் கிடைக்க என்ன பண்ணணும்?”

“மானசா மாதிரி நல்ல மருமகளா இருக்கணும்” என யோசிக்காமல் பதில் சொல்ல, மித்ரா தலையைப் பிடித்துக் கொண்டாள்.

“முடியலை இந்தக் கொஞ்சல், குலாவலை தாங்க முடியலை” என்று தலையைப் பிடித்துக்கொண்டவளைப் பார்த்துச் சிரித்தார் விஜயா.

சௌந்தரபாண்டியனுடன் வாக்கிங் செல்வது, விஜயாம்மாவிடம் சமையல் கற்கிறேன் பேர்வழி என ஏடாகூடம் செய்வது, மானசாவிடம் வம்பாய் நிற்பது, ஈஸ்வரிடம் புகைப்பட கலையைப் பற்றி ஆர்வத்துடன் பேசுவது என மித்ராவின் கலகல நடவடிக்கைகளால், அடுத்து வந்த இரண்டு நாட்களும் வேகமாகக் கழிந்தது.

தன் வீட்டிற்கு வந்த தோழியை சரியாகக் கவனிக்கமுடியவில்லையே என்ற கவலை மானசாவுக்கு. மித்ராவோ, “நான் பார்க்காத கூர்கா? உன் வீட்டைத் தான் புதுசா பார்க்கிறேன்” என வீட்டையும், ஹோம் ஸ்டேவையுமே சுற்றி வந்தாள்.

மூன்றாவது நாள் மதிய உணவுக்குப் பிறகு, “மானஸ்! இந்த மூணு நாள், நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். இப்போ இங்கேயிருந்து கிளம்பணும்னு நினைத்தாலே என்னவோ போல இருக்கு. உங்களோட சேர்த்து கூர்கையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்று பெருமூச்சு விட்டாள்.

“சரி, அதை விடு. அடிக்கடி போன் பண்ணு. சந்தோஷமா இரு... என்னால் முடிந்த போது வரேன். நீ மைசூர் வந்தால், கட்டாயம் எங்க வீட்டுக்கு வரணும்” என இருவரிடமும் பிரியா விடை பெற்ற மித்ரா, ஈஸ்வரின் பெற்றோருடனேயே மைசூருக்குக் கிளம்பினாள்.

 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
196
437
63
47

மானசாவிற்காக, வீட்டிலிருந்த ஈஸ்வரால் இரண்டு நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இரண்டு நாட்களாக சிரிப்பும், கேலியுமாக இருந்த வீடு வெறிச்சோடியிருந்தது. அதே நினைப்புடனேயே ஹாலில் டீவி பார்த்துக் கொண்டிருந்த மானசாவும், திவானில் படுத்தபடி உறங்கி விட்டாள்.

அவள் விழிப்பதற்குள் வெளியே கிளம்பிவிட வேண்டுமென வேகமாகப் படிக்கட்டில் இறங்கிய ஈஸ்வர், படியருகில் இடுப்பில் கைவைத்தபடி அலட்சிய பாவனையுடன், மானசா நின்றிருப்பதைக் கண்டான். ‘ஹய்யோ! செல்ல ராட்சஷி!’ என மனத்திற்குள் செல்லமாகத் திட்டியவன், அவளைப் பார்த்து சமாளிப்பாக புன்னகைத்தான்.

“போதும் வழியுது” என்றாள் கிண்டலாக.

“தூங்கலியா நீ...?” என புன்னகைத்தான்.

“நான் எழுந்து ரொம்ப நேரமாகுது” என்றவள், “வெளியே கிளம்பியாச்சு போல... ரொம்பத் தூரமோ?” என நக்கலாகக் கேட்டாள்.

“வெளியே போகும்போது எங்கே போறீங்கன்னு கேட்கக் கூடாதுன்னு தெரியாது உனக்கு” - வேண்டுமென்றே எகிறினான்.

“அது... சொல்லிட்டுப் போறவங்களுக்கு. இப்படித் திருட்டுத்தனமா போறவங்களுக்கு இல்லை” என்றாள் கேலியாக.

“இதெல்லாம் ஓவர்... சொல்லிட்டேன். ஆக்சிடென்ட் ஆயிடுச்சி ஓகே. அதுவும் லேசா பின்னந்தலையில் அடி. கையில கொஞ்சம் வலி, உடம்பில் ஆங்காங்கே சிராய்ப்பு. இதுக்கே பைக்கைத் தொடக்கூடாதுன்னு சொன்ன... ஒத்துகிட்டேன். ரெண்டு நாளா வெளியேயும் போகலை. வீட்டிலேயே அடைஞ்சிருக்க போர் அடிக்குதும்மா” மிரட்டலில் ஆரம்பித்து கெஞ்சலில் முடித்தான்.

‘இதற்கெல்லாம் நான் அசருவேனா’ என்பது போல் முறைத்தபடி நின்றிருந்தாள். “மூணு நாளா நான் பட்ட வேதனை எனக்குத் தான் தெரியும். அதெல்லாம் எங்கேயும் போகவேணாம். நான் மாமாவுக்கு போன் செய்து வரச் சொல்லப்போறேன்” என மிரட்டலாகச் சொன்னாள்.

“ஆன்னா ஊன்னா ஸ்கூல் பசங்க மாதிரி, கம்ப்ளெயிண்ட் பண்ண கிளம்பிக்கிறாப்பா. தாங்க முடியலை” என்று சலித்துக் கொண்டவன், “என்ன? இப்போ நான் வெளியே போகக்கூடாது... அவ்வளவு தானே? போகலை... போதுமா?” என்றவன் கோபத்துடன் சோஃபாவில் சென்று அமர்ந்தான்.

புன்னகையுடன் அவனது நாடகத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவள், அவனருகில் சென்று அமர்ந்தாள். “நான் ஒண்ணும் உங்களைப் போகவேணாம்னு சொல்லலை. நானும் கூட வருவேன்னு தான், சொல்ல வந்தேன்” என்று கணவனின் முகத்தைப் பார்க்காமலேயே சொன்னாள்.

“ஆஹா! மானு, இது ரொம்ப நல்லாயிருக்கே. குளிருக்கு இன்னும் சுகமா...” என இழைந்தவன், அவளது தோளில் கை போட்டான்.

புன்னகையுடன் அவனது கையை விலக்கியவள், “ஆனால், ஒரு கண்டிஷன். ரெண்டு பேருக்கும் நடுவில் ஓரடி இடைவெளி விட்டுத்தான் நடக்கணும்” என்றாள்.

“அதுக்கெதுக்கு நீ வர்ற? வீட்டிலேயே இரு” என்று கடுப்புடன் எழுந்து சென்றவனின் பின்னால், சால்வை ஒன்றை எடுத்துப் போர்த்திக் கொண்டு சிரிப்புடன் சென்றாள்.

இருபது நிமிட பயணத்தில் ராஜா சீட் சென்று சேரும்வரை வாயைத் திறக்காமலேயே வந்தனர். காரை பார்க் செய்துவிட்டு ஈஸ்வர் டிக்கட் வாங்கி வரச் சென்றான். பேல்பூரியை வாங்கிச் சுவைத்துக் கொண்டு, பொம்மை ரயிலில் ஆரவாரத்துடன் சுற்றி வந்த குழந்தைகளுக்கு ‘டாட்டா’ சொல்லியபடி நின்றிருந்தாள். டிக்கெட்டுடன் வந்தவன், ஒரு ஸ்பூன் பேல்பூரியை அள்ளி வாயில் போட்டுக் கொண்டு, மானசாவை பூங்காவினுள் அழைத்துச் சென்றான்.

நடப்பதற்காகவே போடப்பட்டிருந்த பாதையில் இருவரும் அமைதியாக இரண்டு சுற்று சுற்றிவிட்டு, அங்கிருந்த கான்கிரீட் பெஞ்ச்-சில் அமர்ந்தனர். மேகக் கூட்டங்களையும், தூரத்தில் தெரிந்த மலைகளையும், அதில் ஊர்ந்து செல்லும் வாகனங்களையும் பார்த்துக் கொண்டிருந்தது, அந்த மாலைப் பொழுதை ரம்மியமாக்கியது.

ஆதவன் மெல்ல மறைந்து கொண்டிருக்க, இருள் கவிழத் தொடங்கிய நேரம் பார்ப்பதற்கே அத்தனை அழகாக இருந்தது. மலைத் தொடர்களெல்லாம் கருமைநிறத்திற்கு தங்களை உருமாற்றிக் கொள்ளத் தொடங்கியிருந்தன.

தூரத்தில் வாகனங்களின் முகப்பு விளக்குகள் உமிழ்ந்த வெளிச்சத்தையும், அவ்வப்போது வந்து மறைந்த பனிக்கூட்டத்தையும் சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தவளை நெருங்கி அமர்ந்தவன், தோளில் கை போட்டு தன்னோடு அணைத்துக் கொண்டான்.

“யாரோ இத்தனை நேரம் பேசாமல் வந்தாங்க... இப்போ மட்டும் ஒரேடியா இழையறாங்க!”

“உன்கிட்ட யாரு இழைந்தது. என் பொண்ணுக்கு குளிருமேன்னு பக்கத்தில் வந்தேன்.”

“இன்னும் ஆறு மாதம் கழித்துப் பார்க்கப்போகும் பொண்ணு மேல, ரொம்பதான் அக்கறை.”

“அவங்க அம்மாமேல அதைவிட அக்கறை இருக்கு. எங்கே அதெல்லாம் புரிந்தால் தானே. சொல்லிப் புரியவைக்கிறதா என்ன? ஹூம்!” என பெருமூச்சு விட்டான்.

“ஆமாமாம்! இது கூட புரியாமல் தான் இருக்காங்களாக்கும். வந்து ஒரு மணி நேரம் வேஸ்ட் பண்ணிட்டு, பேச்சைப் பாரு” எனச் செல்லமாக ஊடல் கொண்டவள், காதலுடன் அவனது தோளில் சாய்ந்தாள்.

அவர்களுக்குப் பின்னால் நின்றபடி, வெகுநேரமாக தங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒரு உருவத்தை இருவரும் கவனிக்கவேயில்லை.

இரவு உணவையும் வெளியிலேயே முடித்துக் கொண்டு வீட்டிற்குக் கிளம்ப, மானசா சோர்வுடன் கண்களை மூடினாள். அடுத்த சில நிமிடங்களிலேயே சோர்வில் உறங்கிவிட்ட மனைவியைப் பார்த்து புன்னகைத்தவன், சாலையில் கவனத்தை செலுத்தினான்.

போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமாகவே இருக்க, மெல்ல நகர்ந்த பாதையிலிருந்து விலகி வேறு வழியாகக் காரைச் செலுத்தினான். சற்று தூரம் அதிகமாக இருந்தாலும் நெரிசல் அதிகமில்லாத சாலையாக இருந்தது. வீட்டருகில் ஒரு திருப்பத்தைக் கடந்ததும், சட்டென்று காரைச் சாலையோரமாக நிறுத்தினான்.

திடீரென கார் நின்ற அதிர்வில் கண்விழித்தவள், “என்னாச்சுங்க?” என்றாள் கவலையுடன்.

“மானு! ரெண்டு நிமிஷம் இரு; வந்திடுறேன்” என்று விரைந்து இறங்கி வந்தவழியே சென்றான்.

வெகுநேரம் பனியில் அமர்ந்திருந்ததால் தலை பாரமாக இருப்பது போலவும், உள்ளே அமர்ந்திருப்பது மேலும் இறுக்கத்தைக் கொடுக்கவும், கீழே இறங்கி காற்றாட வெளியில் நின்றாள். ஈஸ்வர் யாருடனோ பேசிக்கொண்டே வர, குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தாள்.

சிரித்தபடி தன்னுடன் வந்தவனைச் சுட்டிக்காட்டி, “மானு! இவர் யாருன்னு தெரியுமா? நீ யாருக்கு தேங்க்ஸ் சொல்லணும்னு சொல்லிட்டு இருந்தியோ அவர் தான்” என்றான்.

மானசா அந்தப் புதியவனை இமைக்காமல் பார்த்தாள்.

“புரியலையா... மிஸ்டர். ஷக்தி! என்னை ஹாஸ்பிட்டல் கூட்டிக் கொண்டு போனது சார் தான்” என்றவன், “மிஸ்டர்.ஷக்தி, இவங்க என் மனைவி மானசா” என அறிமுகப்படுத்தினான்.

“ஹலோ! உங்களைச் சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம்” என்றவனைப் பார்த்துத் திணறியவள், வரவேற்பாக லேசாகத் தலையசைத்தாள்.

“ஓகே! நீங்க ஃபேமலியா வந்திருக்கீங்க. நான் டிஸ்டர்ப் பண்ண விரும்பலை. கிளம்பறேன்” என்றான்.

“நல்லாயிருக்கு நீங்க சொல்றது! ரெண்டு நிமிஷ டிரைவ்ல நம்ம வீடு வந்துடும். நீங்க, கட்டாயம் நம்ம வீட்டுக்கு வந்துட்டுத்தான் போகணும்” என்றவன், அமைதியாக எங்கோ பார்த்துக் கொண்டிருந்த மானசாவிடம், “என்னம்மா அமைதியாக இருக்க, சாரைக் கூப்பிடு” என்றான்.

“ம்” என்றவள், “வாங்க” என்று சொல்ல, ஷக்தியும், “ஓகே” என்றான்.48

“வாங்க மிஸ்டர்.ஷக்தி, இதுதான் எங்களோட அரண்மனை” என வரவேற்றான் ஈஸ்வர்.

ஹாலில் நின்றபடி வீட்டை அளந்த ஷக்தி, “வீடு ரொம்ப அழகா, கலைநயத்தோட இருக்கு சார்” என மனம் திறந்து பாராட்டினான்.

“எல்லாம் என் மனைவியோட கைவண்ணம். சமைப்பது, கைவேலைன்னா அவங்களுக்கு ரொம்ப இஷ்டம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மானசா டீ-யுடன் வந்தாள்.

“எடுத்துக்கோங்க மிஸ்டர். ஷக்தி” என்ற ஈஸ்வரிடம், “நீங்க என்னை ஷக்தின்னே கூப்பிடலாம் ஈஸ்வர்” என்றான் சகஜமாக.

“ஓகே” என்றபடி தோள்களைக் குலுக்கினான் ஈஸ்வர்.

“டீ ரொம்ப நல்லாயிருக்கு!” என ஸ்லாகித்தவன், வெகுநாள் பழகியவன் போல, இயல்பாக ஈஸ்வருடன் பேச ஆரம்பித்தான்.

“உங்களை மீட் பண்ணணும்னு என் வைஃப் தான் ரொம்ப ஆவலாக இருந்தாங்க” என்றதும் ஷக்தி வியப்புடன் பார்த்தான்.

“அது..., அவரை ஹாஸ்பிட்டலில் சேர்த்தவரை நேரில் பார்த்து தேங்க்ஸ் சொல்லணும்னு சொல்லிகிட்டு இருந்தேன். அதைத் தான் அப்படிச் சொல்றாங்க” என்றாள்.

“ஓ! உங்க உபசரிப்புக்கும், நன்றிக்கும் ரொம்ப ரொம்ப நன்றி” என்றவன் காலி கப்பை டீபாயின் மீது வைத்துவிட்டு, “கிளம்பறேன் ஈஸ்வர்” என்றபடி எழுந்து, ஈஸ்வரிடம் கையை நீட்டினான்.

நீட்டிய கையைப் பற்றிய ஈஸ்வர், “அதுக்குள்ள தப்பிச்சி ஓடப் பார்க்கறீங்க? இருந்து சாப்பிட்டுட்டுப் போகலாம்...” என்றான் நிதானமாக.

“தேங்க்யூ அண்ட் சாரி. நான் ஆல்ரெடி சாப்பிட்டாச்சு. இப்போ போனால் தான், ஏதாவது நல்ல ஹோட்டலாக தேடிப் பிடித்து தங்க வசதியாக இருக்கும்.

“ஒரு ஹோம் ஸ்டேயோட சொந்தக்காரன் வீட்டிலேயே வந்து, தங்க ரூம் தேடப் போறேன்னு சொல்றீங்க. நல்ல கதையாக இருக்கு. நீங்க தங்க, நல்ல இடமா கொடுக்கவேண்டியது என் பொறுப்பு. ரூம் பத்தின கவலையை விட்டுடுங்க. எத்தனை நாள் வேணுமோ தங்கிக்கலாம்...” என்றான்.

“சார் என் நிலைமை தெரியாமல் பேசாதீங்க. நான் ஒரு முக்கியமான வேலையாக வந்திருக்கேன்; அது என்னைக்கு முடியும்னு எனக்கே தெரியாது!” என்றான் புன்னகைத்தபடி.

“அதெல்லாம் பார்த்துக்கலாம் சார். அப்படியென்ன முக்கியமான வேலைன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“அதை இன்னொரு நாளைக்குச் சொல்றேனே...” என ரகசியக் குரலில் சொல்ல, ஈஸ்வரும் தலையாட்டிக் கொண்டான்.

ஈஸ்வர், ஷக்தியை அழைத்துச் சென்று அங்கே தங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தான். ஷக்தியும் எல்லாம் திருப்தியாக இருப்பதாகக் கூற, ஈஸ்வர் காலையில் சந்திப்பதாகக் கூறிவிட்டு வீட்டிற்கு வந்தான்.

டைனிங் டேபிள் மீது கைநீட்டி தலைசாய்த்து படுத்திருந்தவளை அழைத்தான். “என்ன மானசா டயர்டா இருக்கா?”

“ஆமாங்க...” என்றாள் சோர்வுடன்.

“டேப்லட்ஸ் போட்டியா?”

“இன்னும் இல்லை.”

கிச்சனுக்குச் சென்று அவனில் பாலைச் சூடுபடுத்தி எடுத்து வந்தான். மாத்திரையை எடுத்துக் கொடுத்தவுடன் போட்டுக் கொண்டவளிடம், பாலைக் கொடுத்தான்.

“ஒரு பத்து நிமிடம் ரிலாக்ஸ்டா உட்கார்ந்திரு மானு, அப்புறம் படுத்துக்கலாம். எனக்குக் கொஞ்சம் ஆஃபிஸ் வேலையிருக்கு. அதை முடிச்சிட்டு வந்திடுறேன். உனக்கு வேற ஏதாவது வேணுமா?” என அக்கறையுடன் கேட்டான்.

“எதுவும் வேணாம். நீங்க உங்க டேப்லெட்ஸை மறக்காமல் போடுங்க” என்றவளின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, ஆஃபிஸ் அறைக்குச் சென்றவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவளின் பக்கத்திலிருந்த டெலிபோன் அங்கு நிலவிய அமைதியைப் பொசுக்குவது போல அலற, திடுக்கிட்டுப் போனாள். ரிசீவரை எடுத்து, “ஹலோ” என்றவளுக்கு, மறுமுனையிலிருந்து எந்தச் சப்தமும் கேட்கவில்லை.

‘என்ன இது’ என்று நினைத்தவள், சட்டெனச் சுதாரித்துக்கொண்டு, “ஷ..க்தி!” என்று மெல்ல குரல் கொடுக்க, “மித்ரா” என ஆழ்ந்த குரலில் அழைத்தான் அவன். பதில் பேசமுடியாமல் திகைத்து நின்றாள், மித்ரா என்கின்ற மானச மித்ரா.

49

“இது என்ன பேரு? மானச மித்ரா-ன்னு!” அவளது கைப்பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தபடி கேட்டான் ஷக்தி. இருவரும் பீச்சில் அமர்ந்திருந்தனர்.

“எங்க அம்மாவுக்கு மானசா என்ற பேர் ரொம்பப் பிடிக்கும். அப்பாவுக்கு மித்ரா என்ற பேர் பிடிக்கும். இந்த பேர் பிரச்சனையால, ரெண்டு பேருக்கும் சண்டையே வருமாம். அவங்க நினைச்சா மாதிரியே, நான் பொண்ணாவே பிறந்ததால, அம்மா ரெண்டு பேரையும் சேர்த்து மானச மித்ரான்னு வச்சிட்டாங்க.

ஆனாலும், அப்பா என்னை மித்ரான்னு தான் கூப்பிடுவார். எங்க அம்மா மானுன்னு கூப்பிடுவாங்க. ஆனா ஸ்கூல்ல என் க்ளாஸ் மேட் ஒருத்தி மானசான்ற பேரில் இருந்தால மித்ரான்னு கூப்பிடுவாங்க, சங்கீதா, சவிதா ரெண்டு பேரும் என் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ். அதனால, அவங்க காலேஜ் வந்தப்புறமும் மித்ரான்னே கூப்பிடுவாங்க. எங்க அம்மா இறந்ததுக்கு அப்புறம், எங்க அப்பாவும் என்னை மானசான்னே கூப்பிட ஆரம்பிச்சிட்டார்” என்று தன் பெயருக்கான காரணத்தைச் சொல்லி முடித்தாள்.

“ஓ! உன் பேருக்கு பின்னாடி இத்தனை பெரிய வரலாறு இருக்கா? ஆனால், நான் உன்னை மித்ரான்னுதான் கூப்பிடுவேன். ஐ லவ் மித்ரா!” என்றான் ஷக்தி.

“ம், நான் எப்பவும் உன்னை ரௌடின்னு தான் கூப்பிடுவேன்டா ரௌடி! ஏன்னா, எனக்கு இந்த ரௌடியை ரொம்பப் பிடிக்கும்” என்றவளின் குரல் குழைந்தது.

*********

சட்டென்று தேவையில்லாத நினைவுகளெல்லாம் வர, மானசா தன்னையே நொந்து கொண்டாள். “என்ன மித்ரா, பதிலே சொல்ல மாட்டேன்ற?” ஏக்கத்துடன் ஒலித்தது ஷக்தியின் குரல்.

‘தேவையில்லாத விஷயத்தைச் செய்கிறோம். இதை வளரவிடுவது நல்லதல்ல’ என நினைத்து புருவத்தைச் சுளித்தவள், “ஷக்தி! அவரிடம் பேசணும்னா சொல்லுங்க. கீழே இருக்கார் அவருக்குக் கனெக்ட் பண்றேன்” குரலில் எந்த வித்தியாசத்தையும் காட்டாமல் சொன்னாள்.

“நான் உன்னிடம் தான் பேசணும் மித்ரா...”

“இத்தனை நேரம் பேசியிருக்கலாமே ஷக்தி.”

”உன்னிடம் தனியாகப் பேசணும்!”

“த...தனியாக பேச நமக்குள்ளே என்ன இருக்கு?” மானசாவின் குரல் இப்போது சற்றுத் தயங்கி ஒலித்தது.

“புரிஞ்சிக்காத மாதிரியே பேசாதே மித்ரா. உன்னிடம் தனியாக மனம்விட்டுப் பேசணும், நடந்ததுக்கெல்லாம் மன்னிப்பு கேட்கணும்.”

“இங்கே பாருங்க, நான் புரிந்து தான் பேசறேன். எது பேசுவதுன்னாலும், நாளைக்கு வீட்டுக்கு வாங்க, எவ்வளவு நேரம் வேணும்னாலும் பேசுங்க. ஆனால், இவர் வீட்டில் இருக்கும் நேரமாக வாங்க!” என நறுக்குத் தெறித்தாற் போல வந்த வார்த்தைகளில், ஷக்தி உள்ளுக்குள் சூடானான்.

ஆனாலும், தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன், “மித்ரா! ப்ளீஸ், எனக்காக... நாளைக்குக் காலையில் பதினோரு மணிக்கு, உனக்காகக் கோவில்ல காத்துட்டு இருப்பேன்.”

“இங்கே பாருங்க, நான்...!” என அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே, மறுபக்கம் போன் வைக்கப்பட்டிருந்தது. மானசாவும் குழப்பத்துடனே போனை வைத்தாள்.

மனம் முழுதும் என்னவென்று சொல்ல முடியாத நிலையில் தவித்தது. ‘இப்போது ஷக்தியின் அழைப்பிற்குத் தேவையென்ன? ஈஸ்வர் அவனை அறிமுகப்படுத்தியபோதே உள்ளுக்குள் அதிர்ந்து போனாலும், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தவனைப் பார்த்தபோது, தானும் அவ்வாறே இருந்துவிட எண்ணியது தவறோ? தான் இன்னொருவரின் மனைவி என்று தெரிந்தபின், தன்னை விட்டு விலகி நிற்க நினைத்திருந்தால், எதற்காக இந்த நேரத்தில் அழைக்க வேண்டும்?’ என்றும் குழம்பினாள்.

தங்கள் பிரிவிற்கு காரணமான... கசந்து போன, மனத்தின் அடியில் மறைத்து வைக்கப்பட்ட அந்த கறுப்பு நாட்கள் அவளது சிந்தனையை வலுக்கட்டாயமாக ஆக்ரமிக்க, நெஞ்சின் ஓரத்தில் சொல்ல முடியாத ஏதோ ஒன்று வந்து அழுத்தியது.

சோர்வுடன் படுத்தவளால் வெகுநேரமாகியும் தூங்க முடியவில்லை. இருதலைக் கொள்ளி எறும்பாகத் துடித்தவளின் இடையைச் சுற்றி வளைத்த ஈஸ்வர், அவளது காது மடலில் தன் உதடுகளைப் பதித்தான்.

“அத்தான் ப்ளீஸ்...!” என்று பலவீனமான குரலில் சொல்ல, ஈஸ்வர் எட்டி கட்டிலருகிலிருந்த விளக்கைப் போட்டான்.

“மானு! என்ன பண்ணுது உனக்கு...?” அவளது நெற்றியைப் பதறிப் போய் தொட்டுப் பார்த்தான்.

அவன் கையைத் தட்டிவிட்டவள், “எனக்கு ஒண்ணும் இல்லை. கொஞ்சம் பேசாமல் இருக்கீங்களா?” என்று எரிச்சலுடன் சொல்லவும், ஈஸ்வர் திகைப்புடன் பார்த்தான்.

கலங்கியிருந்த அவளது கண்களைக் கண்டவன் எதுவும் சொல்லாமல் விலகிப் படுத்தான். என்னவென்று புரியாமல் உறங்காமலேயே படுத்திருந்தான்.

ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த மானசா, திடீரென உறக்கம் கலைந்து எழுந்தாள். ஈஸ்வர் படுத்திருந்த இடம் வெறுமையாக இருக்க, கண்கள் அவனைத் தேடின. பாதி மூடியிருந்த கதவின் வழியாக அறைக்கு வெளியே நின்று அன்னையிடம் போனில் பேசிக்கொண்டிருந்தவனின் குரல் தெளிவாகக் கேட்டது.

“பாவம்மா! அவளுக்கு என்னமோ செய்யுது போல. என்கிட்ட சொல்லலை. அவ கண்கலங்கறதப் பார்க்கவே கஷ்டமா இருக்கு.”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா. இந்த நேரத்தில் அப்படித்தான் இருக்கும். அம்மா வேணும்னு தோணும். சமய சந்தர்ப்பம் தெரியாம கோபம் வரும், எரிச்சல் வரும்... அதையெல்லாம் நீ பெரிசா எடுத்துக்காம, அவளுக்கு அனுசரணையா இரு; அவளே என்னன்னு சொல்லுவா. கவலைப்படாமல் போய்த் தூங்கு!” என்றார்.

“சரிம்மா, நான் பார்த்துக்கறேன். ரொம்ப தேங்க்ஸ்” என்றவனை, “உதைபடப் போற!” என்றபடி சிரிப்புடன் போனை அணைத்தார் விஜயாம்மா.

அறைக்குள் வந்தவன், எப்போது தூங்கினானோ! அவனது இரவு உடையில் ஈரம் படர்வதை உணர்ந்து, தூக்கத்திலிருந்து விடுபட்டான்.

“மானு! என்னம்மா...” என எழ முயன்றவனை, “சாரி... சாரித்தான்!” என இறுக அணைத்தபடி, அவனது மார்போடு ஒன்றினாள்.

“ஓகே! ரிலாக்ஸ். அமைதியா தூங்கு” என ஆறுதலுடன் அவளது முதுகைத் தடவிக்கொடுத்து ஆறுதல் படுத்தினான்.

‘இனி, நிச்சயமாக ஈஸ்வருக்குத் தெரியாமல் தான் எந்த வேலையையும் செய்யப் போவதில்லை. நாளை ஷக்தியைச் சென்று சந்திக்கப் போவதுமில்லை’ என திடமாக முடிவெடுத்துக் கொண்ட மானசா, மெல்ல கண்ணயர்ந்தாள்.

மூன்று தினங்களுக்கு முன், ஹாஸ்பிட்டலில் ஈஸ்வருடன் பேசிக்கொண்டிருந்தவன், ரஞ்சித்தின் தொலைபேசி அழைப்பால் அவசரமாக ஹோட்டலுக்குக் கிளம்பி வந்தான். ரிசப்ஷனில் காத்திருந்த ரஞ்சித் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தான் கொண்டுவந்த போட்டோவை ஷக்தியிடம் கொடுத்தான்.

“இவன்தான் நான் சொன்ன ஆள்...” என ரஞ்சித் கொடுத்த போட்டோவை வாங்கிப் பார்த்த ஷக்தி, திகைத்துப் போனான்.

‘இவனா! சில மணி நேரத்திற்கு முன்பு தன்னைக் காப்பாற்ற நினைத்து, விபத்துக்குள்ளாகிய இவனா ஈஸ்வர்? இவனைக் கொல்லவா என்னை இங்கே வரவழைத்தார்கள். எத்தனை பிரியமுடன் என்னிடம் பேசினான்.

தான் அந்த ரோஜாப் பூங்கொத்தை அவனிடம் கொடுத்ததும், அவனுக்குள் எத்தனை சந்தோஷம் பீரிட்டது. அவனது மனைவியைப் பற்றி பேசும் போது, அவனது கண்களில் தெரிந்த காதல்...!’ மனத்திற்குள் எழுந்த ஈஸ்வரைப் பற்றிய நினைவுகள், அவனை மேற்கொண்டு எதையும் செயல்பட விடாமல் முடக்கிப் போட்டது.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல, திருவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றைக் கொடுத்து, “இவள் தான் மானசா, ஈஸ்வரின் மனைவி” என அவன் காட்டிய புகைப்படத்தைப் பார்த்தும், யாரோ சம்மட்டியால் தன் தலையில் ஓங்கி அடித்ததைப்போல, துடித்துப் போனான் ஷக்தி.

இது ஒரு கட்டாயக் கல்யாணம் என்றது மட்டுமே, அவனது காதில் விழுந்தது. மேற்கொண்டு ரஞ்சித் சொன்ன எதுவும் அவனது காதில் விழவில்லை. ஒரு வழியாகத் தன்னை எப்படியோ சமாளித்துக் கொண்டு, ரஞ்சித்தை அனுப்பி வைத்தான்.

மானசா, ஈஸ்வரின் குடும்பத்தினருடன் இருந்த படத்தை மீண்டும் பார்த்தான். ‘மித்ரா! மித்ரா’வென அவனது உள்ளம் அரற்றியது; கண்கள் கலங்கியது; “மித்ரா!” என வாய்விட்டு அலறியவன், முழங்காலிட்டு குனிந்து அமர்ந்து முகத்தில் அறைந்து கொண்டு கதறினான். “ஏண்டி இப்படியொரு துரோகத்தை எனக்குச் செய்த...?” என அவளது புகைப்படத்தைப் பார்த்து கேட்டான்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, தன் முன்பு கண்ணீருடன் நின்றிருந்தவளின் முகம் மனக்கண்ணில் தோன்றியது. ‘நானா ஷக்தி உனக்குத் துரோகம் செய்தேன்?’ என்று அவனிடம் எதிர்க் கேள்வி கேட்ட அன்றைய மித்ரா, கண்ணீருடனேயே மறைந்தாள்.

“இல்லை! நான்தான்... எல்லாமே என்னால் தான்! என்னோட நிலையில்லாத புத்தியால் தான், ஒரு நல்ல வாழ்க்கையை இழந்துட்டேன் நான்” என்று புலம்பியவன், எழுந்து முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியே சென்றான். திரும்பி வந்தவனின் கையில் மது பாட்டில்கள். போதையின் பிடியில் அவளை மறக்க முயன்றான். குரங்கை நினைத்து மருந்தைக் குடித்த கதையாக, அவளது நினைவுகள் மட்டுமே அவனைப் பீடித்திருந்தது.

இரவெல்லாம் போதையில் புரண்டவன், பகலெல்லாம் நிதானமாக யோசித்தான். சாத்தானின் பிடியிலிருந்தவன், கொஞ்சம் மனிதனாக மாறியிருந்தான். இது ஒரு கட்டாயக் கல்யாணம்’ என ரஞ்சித் சொன்னதே மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது. அவளுக்குப் பிடித்தமில்லாத திருமணத்திலிருந்து அவளை மீட்டு, தன்னுடன் அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் வலுவாக அவனது மனத்தில் எழுந்தது.

ஆனால், அவளது கணவன் ஈஸ்வர் என்ற போது, இது சாத்தியமா என்ற கேள்வி முளைத்தது. அவனது கண்களாலேயே ஈஸ்வரின் காதலை நேரடியாக உணர்ந்தவனின் மனம் அதிகமாகக் குழம்பியது. அதற்காகவே தொடர்ந்து இரண்டு நாட்கள் அவர்களை கண்காணிக்க நினைத்தும் முடியவில்லை. மூன்றாவது நாள் இருவரும் வெளியில் வருவதைப் பார்த்து அவர்களைப் பின்தொடர்ந்தான்.

‘விதி வலியது’ என்ற சொல்லிற்கேற்ப, ஈஸ்வரின் மூலமாகவே அவனது மித்ராவை மீண்டும் கண்டு விட்டான். தன்னைக் கண்டதும் முதலில் திகைத்தாலும், சட்டென முகம் மாறியவளைப் பார்த்தான்.

தன் மனத்திலிருப்பதை மித்ராவிடம் சொல்லிவிட வேண்டுமென, அதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, நல்ல வழி கிடைத்தது போல, ஈஸ்வரின் மூலமாகவே அவர்களது இடத்திற்கே வந்து சேர்ந்துவிட்டான். மித்ராவிடம் நாளை மனம் விட்டுப் பேசிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் படுக்கையில் விழுந்தான்.

 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
196
437
63


50

சிறுசிறு துண்டாக நறுக்கப்பட்ட வசம்பை வெள்ளைத் துணியில் மூட்டையாகக் கட்டி ஹாலிலிருந்த புக் செல்ஃபில் ஆங்காங்கே வைத்துக் கொண்டிருந்த வளின் பார்வை கடிகாரத்தில் பதிந்தது. மணி ஒன்று. இன்னும் சிறிதுநேரத்தில் மதிய உணவிற்கு கணவன் வந்துவிடுவான் என மனம் கணக்கு போட்டுக் கொண்டிருக்க, காதுகள் அவனது ஜீப்பின் ஹாரன் ஒலியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

ஆனால், திடீரென்று இடைவிடாமல் அழைப்பு மணியின் ஓசை கேட்டது. ‘ஜீப் சப்தமே கேட்க வில்லையே’ என்று நினைத்தபடி கதவைத் திறந்தவள், கோப முகத்துடன் நின்றிருந்த ஷக்தியைப் பார்த்ததும் துணுக்குற்றாள்.

அவனைச் சற்றும் எதிர்பாராதவள் சிறு தடுமாற்றத்துடன், “வாங்க உட்காருங்க. என்ன சாப்பிடுறீங்க? காஃபி... இல்லைனா லெமன் ஜூஸ் கொண்டுவரச் சொல்லட்டுமா?” என்றவளை எரித்துவிடுவது போல் பார்த்தான்.

வீட்டு வேலையாளை அழைத்து என்னவோ சொல்லி வெளியே அனுப்பியவள், நின்று கொண்டிருந்தவனை, “இன்னும் நிக்கிறீங்களே உட்கா...!” என்றவளை ஆத்திரத்துடன் இடைமறித்தான்.

“போதும். உன்னோட விருந்தோம்பலுக்காக நான் இங்கே வரலை” என்று கத்தினான்.

“எதுக்கு இத்தனை டென்ஷன்?”என்றாள்.

“போதும் மித்ரா. உனக்காகப் பைத்தியக்காரன் மாதிரி, ரெண்டுமணி நேரமா காத்துகிட்டு இருந்தேன். நீ இப்படி வராமல் ஏமாத்துவேன்னு நினைக்கவேயில்லை.”

“நீங்க சொன்னதும் நான் வருவேன்னு நினைத்தது உங்க தப்பு. நான் வராத போதே, என்னோட முடிவை நீங்க புரிஞ்சிகிட்டு இருந்திக்கணும்.”

எரிச்சலுடன் அவளைப் பார்த்தவன் தலையைக் கோதிக்கொண்டு, கண்களை மூடி தன்னை நிதானப் படுத்திக் கொண்டான். “ஓகே மித்ரா! பழசையெல்லாம் மறந்திடுவோம்...” என அவன் சமாதானத்திற்குத் தாவினான்.

மெதுவாக அங்கிருந்த சோஃபாவில் அமர, மானசா ஜில்லென லெமன் ஜூஸ் தயாரித்து எடுத்து வந்தாள். இருவரும் அமைதியாக ஜூஸைக் குடித்து முடித்தனர். அவனுக்கு, பேச்சை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. சந்தனநிறச் சேலையில் எளிமையாக எந்த அலங்காரமும் இல்லாமல் இயல்பாக இருந்தவளைப் பார்க்கப் பார்க்க, தன்னுடைய இழப்பு எத்தனை அதிகம் என்பது புரிய, தவித்துப் போனான்.

அவளது கைகளைத் தனது கைகளுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என அடக்கமுடியாத ஆசையில் தடுமாறினான். எங்கே தன் நிதானத்தை இழந்துவிடுவோமோ என்று பயமாகவும் இருந்தது.

“மித்ரா!” என முதல்நாள் போனில் அழைத்தது போலவே ஆழ்ந்த குரலில் அழைத்தான்.

மானசா உள்ளுக்குள் இருந்த தவிப்பை வெளிக்காட்டாமலிருக்க, வெகுவாகப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள். ‘கடவுளே! என்னை மேலும் சோதிக்காதே. ஈஸ்வரை சீக்கிரம் வீட்டுக்கு வரவச்சிடு. என்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்று’ என வேண்டிக் கொண்டாள்.

“என்னை மன்னிச்சிடு மித்ரா! பக்கத்தில் இருக்கும் போது, ஒரு பொருளோட அருமை தெரியாதுன்னு சொல்வாங்க. என் விஷயத்தில் அது நிஜமாகிடுச்சி. நான் எடுத்த அவசர முடிவால் இழக்கக்கூடாததையெல்லாம் இழந்துட்டு, தனிமரமா நிக்கிறேன். என்னைத் தேடி வந்த சந்தோஷத்தை எட்டி உதைச்சிட்டு, இன்னைக்கு ஒரு பிச்சைக்காரன் மாதிரி என் வாழ்க்கையைத் தேடி அலையறேன். இந்த நாலு வருஷத்தில் உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியாதுன்னு புரிஞ்சு, எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு, எனக்காக நீ காத்திருப்பேன்னு நம்பிக்கையோட வந்தேன். ஆனால், இன்னைக்கு உன்னை இப்படி ஒரு நிலைமையில்... முடியலை மித்ரா! வலிக்குது” என நொந்து போய் பேசியவனை பார்க்க முடியாமல் தவித்தாள்.

‘இவனது இன்றைய நிலைக்கு, நிச்சயம் நான் தான் காரணம். தன் விளையாட்டுத்தனத்தால், அவனது வாழ்வையே ரணமாக்கிவிட்டோம்’ என்று நினைத்த வளுக்கு, துக்கம் நெஞ்சை அடைப்பது போல இருந்தது. கண்களில் வழிந்த கண்ணீரை அவன் பார்க்கும்முன் நாசூக்காகத் துடைத்துக் கொண்டாள்.

“கைக்கு எட்டும் தூரத்தில் நீ இருந்தும்...” என்றவன், கண்களில் எல்லையில்லா சோகத்தை உள்ளடக்கி, மனத்திலிருப்பதை வெளியில் சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் அமர்ந்திருந்தான்.

“நடந்ததுக்கெல்லாம் மன்னிப்பு கேட்கணும்னா, நான்தான் முதலில் மன்னிப்பு கேட்கணும். தப்பு ரெண்டு பேர் மேலேயும் இருக்கு. விடுங்க ஷக்தி! முடிந்த விஷயத்தை நாம மாற்ற முடியாது.”

“ம்ம், நடந்ததை யாராலும் மாற்ற முடியாது” என்றபின் ஒரு நீள்மூச்செடுத்தவன், “ஆனால், கொஞ்சம் யோசித்தால் இனி நடக்கப் போவதை மாற்றலாம்!” என்றதும், புருவத்தைச் சுருக்கி அவனைப் பார்த்தாள்.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் திடுக்கிட்டவள், ‘என்ன சொல்ல வருகிறான் இவன்? அவன் மறைமுகமாகச் சொன்னதை நினைக்கவே அவளுக்கு அருவருப்பைக் கொடுத்தது. கோபத்தில் மூக்கு விடைக்க, உதடுகள் ஆத்திரத்தில் துடிக்க, விழிகளிரண்டும் அருவியெனப் பொங்கியது. கண்களை இருட்டிக்கொண்டு வருவது போல இருக்க, ஒரு கையால் நெற்றியைப் பிடித்தபடி நிதானமில்லாமல் தள்ளாடினாள்.

“மித்ரா!” என்று பிடிக்க வந்தவனை, “கிட்ட வராதே!” என அலறிய அலறலில் அசையாமல் நின்றான்.

தடுமாறியபடி டைனிங் டேபிள் மீதிருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்துக் கொண்டவள், ஒரு டம்ளர் தண்ணீரை மடமடவெனக் குடித்தாள். வேகவேகமாக மூச்சு வாங்கியது. உடலிலிருந்த தளர்ச்சி சற்று மட்டுப்பட, கண்களைத் துடைத்துக்கொண்டு, கண்களில் அலட்சியம் தெரிய அவனை நோக்கி நடந்தாள்.

“உன் பேச்சு, எந்த அளவுக்கு என்னைக் கேவலப்படுத்தியிருக்குன்னு புரியுதா உனக்கு?” எனக் கோபத்துடன் கேட்டாள்.தொடர்ந்து, “என்ன ஒரு பெருந்தன்மை சார் உங்களுக்கு?” என்று கிண்டலாகச் சொன்னவளின் முகம், தீவிரமாக மாறியது. ஷக்தி அசையாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“பெருந்தன்மைக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு? குடும்பம்னா என்னன்னு தெரியுமா? காதல்னா என்னன்னு தெரியுமா?” என பெருங்குரலில் கத்தினாள். “என் கணவருக்கு உதவி செய்தவன் என்ற ஒரே காரணத்துக்காகத் தான், இத்தனை நேரம் பொறுமையாகப் பேசிகிட்டு இருக்கேன். என்னை மீறி, நான் ஏதாவது சொல்றதுக்குள்ள, வெளியே போ” என அடிக்குரலில் உறுமினாள்.

“மித்ரா!” என அதட்டலாகச் சொன்னவன், “நான் சொல்ல வர்றதை, கொஞ்சம் பொறுமையா கேளு” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

“உன்னோட நாடகத்தையெல்லாம் வேற எங்கேயாவது வச்சிக்கோ. அதுக்கு நான் ஆள் கிடையாது. என் மனசுல ஈஸ்வருக்கு மட்டும் தான் இடம் இருக்கு. தாலி கட்டிட்டதால, என்னை ஒரு அடிமையா நினைக்காம... தனக்கு மட்டுமே உரிமை இருக்குன்னு நினைக்காமல், அவளுக்கும் ஒரு மனசிருக்குன்னு... என்னுடைய ஒவ்வொரு செயலுக்கும், உணர்வுகளுக் கும் மதிப்புக் கொடுத்து, என்னை ஒரு மகாராணி மாதிரி வச்சிருக்கார். அவருக்கு முன்னால, நிக்கக் கூட உனக்கு அருகதையில்லை. இன்னும் ஏதாவது மோசமா பேசி, உன்னை நீயே அசிங்கப் படுத்திக்காதே. என் கண் முன்னால நிக்காதே!” என்றவளுக்கு தலை சுற்றுவது போல இருந்தது.

மௌனமாக அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு, பொறுமை எப்போதோ பறந்திருந்தது. “அப்போ உன் முடிவு இதானா?” கால் மீது கால் போட்டு சோஃபாவில் அமர்ந்துகொண்டு, நிதானமாகக் கேட்டான்.

அவனது நிதானமான பேச்சு, அவளுக்கு பூகம்பத்தின் அறிகுறியாகத் தென்பட்டது. உடல் சோர்ந்து போனதில் பேச்சு வராமல் நின்றாள்.

“ம், நல்லது. ஆனால் உன் சம்மந்தபட்ட ஒரு விஷயம் என்னிடம் இருக்கு. நீ சொன்ன குடும்பம், கணவன், கௌரவம் அந்தஸ்து எல்லாம் உன்னை விட்டுப் போக அது ஒண்ணே போதும். உன்னோட பேச்சுப் படியே வரேன். உனக்கு ஐந்து நாள் டைம் தரேன்; நல்ல பதிலாகச் சொல்லு. அதுக்கு முன்னாலேயே சொன்னாலும், எனக்கு ஓகே. ஆனால், எதுவும் சொல்லாமல், என்னை ஏமாத்தலாம்னு மட்டும் நினைக்காதே. அப்படி நினைத்தால், ஆறாவது நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா இந்த ஷக்தியோட ஆட்டத்தைப் பார்ப்ப. இப்போ கிளம்பறேன். ஆனால், திரும்ப வருவேன்...! வரட்டுமா மித்ரா!” என்றவன் பார்வையில் கோபமும், வார்த்தைகளில் குரோதமும் தெரிய, அவன் புன்னகைத்து விட்டுச் சென்றது அவளது வயிற்றை கலக்கியது.

தொய்ந்து போய் சோஃபாவில் அமர்ந்தவள், அறியாமல் செய்த தவறின் விளைவையெண்ணி அழுது கரைந்தாள்.

*********

“மானு! என்ன இங்கே படுத்திருக்க? கட்டில்ல படுக்கறது தானே... சாப்பிட்டியா இல்லையா?” சோஃபாவில் தன் அருகில் அமர்ந்திருந்த கணவனைக் கண்டதும், சேர்த்தணைத்துக் கொண்டு கதறி அழ வேண்டுமென்ற எண்ணத்தை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள். அவன் முகத்தைப் பார்க்கும் திராணி இல்லாமல், “சாப்பிடணும்” என எழுந்து சென்றவளின் பின்னாலேயே சென்றான்.

“இன்னைக்கு ஒரு கிளையண்ட் வந்ததால், வெளியில் சாப்பிடவேண்டியதா போச்சு. உனக்குப் போன் பண்ணனும்னு நினைச்சது, எப்படியோ மறந்து போச்சு” என அவளருகில் அமர்ந்தவன், உணவைப் பரிமாறியபடி சொன்னான்.

அவனுக்குப் பதில் சொல்லாவிட்டாலும், வேறு வழியில்லாமல் உணவை விழுங்கிவிட்டு எழுந்தாள்.

“ரொம்ப களைப்பா இருக்கியே; கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடு!” என்றதும், மறுபேச்சில்லாமல் அறைக்குச் சென்று படுத்தாள். அவனது கரிசனத்தில் அவளது குற்றவுணர்வு மேலோங்கியது. எதையும் அவனிடம் சொல்ல முடியாமல் தவித்தாள்.51மூன்று நாட்களுக்குப் பிறகு, மதிய நேரம். ஈஸ்வரின் வருகையை எதிர்பார்த்தபடி தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தவளின் மனத்தை, சில கேள்விகள் வண்டாகக் குடைந்து கொண்டிருந்தன. முன்தினம் மதியம் சொல்லாமல் கொள்ளாமல், ஆதிபன் திடீரென வந்திருந்தான். வரும் போதே சற்றுப் பரபரப்புடன் தான் வந்தான். ஈஸ்வருடன் பொதுவாக பேசிக் கொண்டிருந்த வர்கள், பின்பு கிளம்பி வெளியே சென்றனர். திரும்பி வரும் போது, ஈஸ்வர் தன் வழக்கமான கலகலப்பில் லாமல் இருந்தான்.

மதிய உணவின் போதும் ஈஸ்வர் அதிகமாகப் பேசவில்லை. அவ்வப்போது அவனது பார்வை தன் மீது படுவதையும் மானசா உணர்ந்தேயிருந்தாள். இந்த நான்கு நாட்களாகவே இருவருக்குள்ளும், இடையில் ஒரு திரை விழுந்தது போல இருந்தது. அவனது அருகாமையை விரும்பியவளுக்கு, அதை ஏற்றுக்கொள்ளவும் முடிய வில்லை; அவன் விலகிச் செல்வதைத் தாங்கவும் முடியவில்லை.

திடீரென ஆதீபன் வரக் காரணம் என்ன? கிளம்பும் நேரம், “ஜாக்கிரதையாக இரு ஈஸ்வர்!” என அவனை ஏன் எச்சரிக்க வேண்டும்? அதைப் பற்றிக் கேட்டதும், ஈஸ்வர் ஏன் மழுப்ப வேண்டும்? ரஞ்சித் பற்றிய விஷயமோ...? என்னவென்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தாள்.

“ஹாய் மித்ரா!” என்றபடி எதிரில் வந்து நின்றான் ஷக்தி. கோபத்தில் பல்லைக் கடித்தவள், “என் பேர் மானசா! மிசஸ்.மானசா ஈஸ்வர்!” என்றாள்.

“ஓ! அப்படியா? ஆனால், நீங்க சொன்னபடி பார்த்தால்... நாளை மறுநாளிலிருந்து எல்லாமே மாறப் போகுதே? புரியலையா... நான் சொன்ன ஆறாவது நாள் நாளன்னைக்குத் தானே...”

“ஷக்தி! நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் என் வாழ்க்கையோட விளையாடுற?” என்றாள் கலக்கத்துடன்.

“யோசி, நீ என்னென்ன செய்தன்னு புரியும். இன்னைக்கு இப்படி பைத்தியக்காரனா, உன்னோட பார்வையில் ஒரு மிருகமா நான் நிக்க, யாரு காரணம்னும் தெரியும்” எனச் சீற, மானசா கண்ணீரில் கரைந்தாள்.

இரக்கமே இல்லாமல் அவளைப் பார்த்தான். “அழறியா மித்ரா! இந்த அழுகை, எல்லாத்தையும் சரியாக்கிடுமா? தொலைந்து போன எல்லாத்தையும் திருப்பிக் கொடுத்திடுமா? நீ பேசின பேச்சையெல்லாம் திருப்பி எடுத்திடமுடியுமா?” என்றவனின் குரல் தழுதழுத்தது.

“இதுக்கு, அன்னைக்கே என்னை நீ கொன்னி ருக்கலாம் ஷக்தி. இன்னைக்கு நான் உன் பார்வையில் குற்றவாளியா நின்னிருக்க மாட்டேன். நீயும் என்னைப் பார்த்துத் துடிக்காம இருந்திருப்ப... நானும் இப்படி குற்றவுணர்ச்சியோட நின்னிருக்க வேண்டாம்” என்றவள் அழுதபடி வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றாள்.

அதுவரை கோபத்தில் வெடித்தவன், அவளது அழுகையைக் கண்டதும் இதயம் கனக்க, நின்றான். சிகரெட்டின் உதவியுடன் தன் மனத்தை ஆற்றிக் கொண்டிருக்க, அவனை நோக்கி ஈஸ்வர் நடந்து வந்தான்.

“ஹலோ ஷக்தி, என்ன இங்கேயே நின்னுட்டீங்க? வீட்டுக்கு வந்திருக்கலாமே” என்றான்.

“இல்ல, தோட்டத்தைப் பார்த்துக்கிட்டு இருந்தேன்...” என்றான்.

“அப்போ வாங்க, சாப்பிடலாம்.”

“இப்போதான் சாப்பிட்டேன். முடிந்தால் ஈவ்னிங் வரேன்; உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவன், “சரி” என்ற ஈஸ்வரிடம் விடைபெற்றுக் கொண்டான்.

‘இன்பத்தை ஏற்கத் தூண்டுவதும், பின்பு துன்பமென அதை வெறுப்பதும், பின்பு வெறுப்பது தவறு எனத் துடிப்பதும் என்னே அதனுடைய சபலம்’ தொலைக் காட்சியில் ஓடிக் கொண்டிருந்த கர்ணன் திரைப்படத்தில், தன்னையும் மீறி லயித்திருந்தாள் மானசா.

“அட அட அட! இனி ஒருத்தன் பிறந்து தான் வரணும் இப்படி நடிக்க! என்ன, நான் சொல்வது சரிதானே?” என்று கதவருகில் நின்று பேசிக் கொண்டிருந்தவனைப் பார்த்து திகைத்துப் போய் எழுந்தாள்.

‘இவன் எப்படி வந்தான்? வாசலில் ஈஸ்வர் இருந்தானே!’ என யோசனையுடன் பார்த்தாள்.

“என்னம்மா இப்படிப் பார்க்கற? நான் சொன்ன ஆறாவது நாள் இன்னைக்கு. உனக்கான முதல் வெடி இன்னைக்குக் காத்திருக்கு” என்றவன், வேகமாக அவளருகில் வந்து கையை இறுகப் பற்றிக்கொள்ள, மானசா திமிறினாள்.

“ஷக்தி! கையை விடு. நீ செய்வது கொஞ்சம்கூட சரியில்லை. ப்ளீஸ் ஷக்தி! என்னை விட்டுடு... உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்” என கரத்தை விடுவித்துக் கொள்ள போராடினாள்.

அதையெல்லாம் பார்த்துச் சிரித்தவன், “ஏன், ஏதாவது வசனம் பேசறது தானே; அன்னைக்குப் பேசினது போல.”

“ஷக்தி! தயவு செய்து விடு, அவர் எந்த நேரமும் வந்திடுவார். ப்ளீஸ்” என்றவளுக்கு அழுகை வரும் போல இருந்தது.

“வரட்டும். நீதானே சொன்ன என் வீட்டுக்காரர் பக்கத்தில் நிற்கக் கூட, உனக்குத் தகுதி இல்லைனு? அவர் வல்லவர், நல்லவர்ன்னு. வரட்டும் வந்து பார்க்கட்டும். எடுக்கவா, கோர்க்கவான்னு கேட்கறானா... இல்லை... கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்றானான்னு பார்க்கலாம்!” என வன்மத்துடன் சிரித்தான்.

‘சீ இவனெல்லாம் ஒரு மனிதனா!’ என எண்ணமிட்டுக் கொண்டிருக்க, ஈஸ்வர் வரும் சப்தம் கேட்டது. பயத்துடன் தன் கரத்தை வேகமாக விடுவித்துக் கொள்ள முயன்றும், முடியாமல் நின்றவளை, “மானசா!” என்று அழைத்தபடி உள்ளே வந்தான்.

ஈஸ்வர் தன்னைப் பார்ப்பதற்குள் மானசாவின் கரத்தை விட்டவன், “ஹலோ ஈஸ்வர்!” என அவனுடன் கைக்குலுக்கியதை கையாலாகாத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் வந்தேன்” என்றவனின் பார்வை மானசாவிடம் நிலைத்ததும், அவளுக்கு வியர்த்து வழிந்தது. “அதாவது, ஒரு வேலை விஷயமா இங்கே வந்திருக்கேன்னு சொன்னேன் இல்லையா? அது என்னன்னா, என் லவ்வர் இங்கே இந்த ஊரில்தான் இருக்காங்க.”

“க்ரேட் நியூஸ்! வாழ்த்துக்கள்!” என்றபடி கை குலுக்கினான் ஈஸ்வர்.

“தேங்க்யூ!” என்றபின் சிரித்தவன், “அவங்களுக்கும், எனக்கும் ஒரு சின்ன பிரச்சனை. அவங்களைச் சமாதானம் செய்து, என் கூட கூட்டிக்கொண்டு போகத்தான் வந்திருக்கேன்.”

“ம்” என்று புருவம் உயர்த்தியவன், “சமாதானம் செய்துட்டீங்களா?” என ஆவலுடன் கேட்டான்.

“இப்போ வரைக்கும் இல்லை. ஆனால், கூடிய விரைவில் காம்ப்ரமைஸ் பண்ணிடுவேன்!” என்றவனின் கழுத்தை நெறிக்க வேண்டும் என உள்ளுக்குள் எழுந்த ஆத்திரத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“மானசா! சாருக்கு, டீ கொண்டுவா.”

“இ..இதோ கொண்டு வரேன்” என நகர்ந்தாள்.

“நம்ம வீட்டு விருந்தாளியை, நாம நல்லா கவனிக்கணும்மா. இல்லைனா அவங்க ஊரில் போய், நம்மளைப் பத்தி ஏதாவது ஏடாகூடமா சொல்லிடப் போறார்” என சிரித்தான்.

அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த கொதிநீரைப் போல அவளது மனதும் கொதித்தது. ‘எத்தனை தைரியம் இவனுக்கு? இதற்கெல்லாம் பயந்து, இவனுக்குப் பணிந்துவிடுவேன்னு நினைக்கிறானா?’ என நினைத்தவ ளுக்கு, ஹாலிலிருந்து யாரோ கீபோர்ட் இசைக்கும் ஒலி கேட்டதும், திடுக்கிட்டு நின்றாள்.

“நல்ல கலாரசிகன் சார் நீங்க. பிஸினசோட நிறுத்திடாம கார்டனிங், போட்டோகிராபி, அதோட மியூசிக்கிலும் விருப்பமா” ஹாலின் ஒரு மூலையிலிருந்த கீபோர்டை சுட்டிக்காட்டி வினவினான்.

“மியூசிக் கேட்பேனே தவிர, இதெல்லாம் வாசிக்கத் தெரியாது. ஆனா, என் வைஃப் வாசிப்பாங்க.” “ஓ! ரியலி” என போலியாக ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான்.

“காலேஜில் அதுக்காக பரிசெல்லாம் வாங்கியிருக்காங் களாம். அதுகூட அவங்க எனக்குச் சொல்லலை. அவங்க ஃப்ரெண்ட் சவிதா ஒருமுறை யதேச்சையா எங்க ஹோம் ஸ்டேவில் வந்து தங்கியிருந்தாங்க. அவங்க சொல்லித் தான் எனக்குத் தெரியும். அவங்க பிறந்த நாளுக்காக ஆசையாக வாங்கி வந்தப்போ, ரொம்ப கம்பல் பண்ணதால ஒரே ஒரு முறை வாசிச்சாங்க. அதுகூட... இன்னொரு முறை வாசிக்கச் சொல்லிக் கேட்கக் கூடாதுன்னு கண்டிஷனோட. அதோட சரி. அப்படியே இருக்கு” என்றவன், “நீங்க வாசிப்பீங்களா?” என வினவினான்.

“என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க? எத்தனை பேருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கேன் நான்” என்றவனின் பார்வை சமையலறைப் பக்கமே இருந்தது.

“அப்போ நீங்க கட்டாயம் எனக்காக வாசிக்கணும்” என்றதும், “நிச்சயமா...” என தோளைக் குலுக்கிய ஷக்தியின் விரல்கள் கீபோர்டில் விளையாடியன.

பாரதியார் பாடல் இசையாய் அங்கு சூழ, மானசா தவியாய்த் தவித்தாள். “வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா... மார்பு துடிக்குதடி” என அவன் கடைசியாகப் பாடி முடிக்க, ஈஸ்வர் பாராட்டுதலாக புன்னகையுடன் கை தட்ட, உள்ளே டீ கோப்பைகள் உடைந்து சிதறும் ஓசை கேட்டது. அவசர அவசரமாக இருவரும் சமையலறைக்கு ஓடினர். கொதிக்கக் கொதிக்க இருந்த தேநீர், மானசாவின் கையில் கொட்டியிருக்க, எரிச்சலில் கண்கள் கலங்கியது அவளுக்கு.

“மானு!” என்று பதறிய ஈஸ்வர், தனது கைக்குட்டையை நனைத்து அவளது கரத்தில் சுற்றினான். “பார்த்துச் செய்யக் கூடாதா? நீ தான் கொண்டுவரணுமா வேலையாள் கிட்ட கொண்டுவரச் சொல்லி யிருக்கலாமில்ல” என்றவன், ‘சில்வரெக்ஸ்’ மருந்தை சிவந்திருந்த அவளது கையில் தடவினான்.

ஐந்து நாட்களுக்குப் பிறகு கணவனின் ஆறுதலான வார்த்தைகள், அவனது அக்கறை, நெருக்கத்தில் கண்கள் கலங்கியது. “என்னடா, எரியுதா...?” என கேட்டவனுக்கு, ‘இல்லை’ என்பது போல தலையசைத்தவள், ஈரம் கசிந்த விழிகளை துடைத்துக் கொண்டாள்.

ஷக்தி சப்தமில்லாமல் அங்கிருந்து நகர்ந்தான். அன்றைக்கு, அவனது இழப்பின் அளவு பலமடங்காகத் தெரிந்தது அவனுக்கு.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
196
437
63
52

‘அவளைச் சந்தோஷமாக வாழ வைக்கிறேன்னு சொன்னியே! இன்னைக்கு, நீயே அவளோட இத்தனைத் துன்பத்துக்கும் காரணமாயிட்டியே. மித்ராவோட கணவனின் உயிருக்கு எப்படியும் ஆபத்து என்று உணர்ந்து, அவனைக் காப்பாற்ற வந்த நீ, விஷயத்தை நேரடியாக அவளிடம் சொல்லியிருக்கலாம்.

அதை விட்டுட்டு, ‘நான் சொல்ல வந்ததை அவள் தவறாக புரிந்து கொண்டாள்; என்னை எப்படி இத்தனைக் கேவலமாக நினைக்கலாம் என்ற கோபத்தில், நீயும் மூர்க்கத்தனமாக அவளிடம் நடந்து கொண்டிருக்க வேண்டுமா? இதனால் நீ நிம்மதியாக இருந்து விட்டாயா?’ - தன்னை விடாமல் கேள்வி கேட்ட மனசாட்சிக்கு, பதில் சொல்ல முடியாமல் தத்தளித்தான்.

அவனது மொபைல் அலறியது. “ஹலோ”

“மிஸ்டர்.ஷக்தி! நீங்க இங்கே வந்து, பத்து நாள் ஆகுது. கொஞ்சம் கொஞ்சமா ஈஸ்வரை நெருங்கி, அவன் வீட்டுக்கே போய்ட்டீங்க... இன்னும் ரெண்டு மூணு நாளில், என் பிரச்சனை தீர்ந்திடும்னு நினைத்தேன். ஆனால், நீங்க ஒவ்வொரு நாளும் என் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறீங்க!” என உறுமினான் ரஞ்சித்.

“மிஸ்டர்.ரஞ்சித்! எல்லாத்தையும் நேரம் காலம் பார்த்துத் தான் செய்ய முடியும். உங்க விருப்பத்துக்கு ஏத்தது போல, என்னால் நடந்துக்க முடியாது” என ஷக்தியும் பதிலுக்குச் சீறினான்.

“நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது; இன்னும் ரெண்டு நாளில், அந்த ஈஸ்வர் இந்த உலகத்தில் இல்லைன்னு மட்டும் தான் எனக்குத் தகவல் வரணும்” என்றான் கோபத்துடன்.

“எனக்கு உத்தரவு போட, உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. மைண்ட் இட்” என்றவன், அழைப்பு மணி ஓசை கேட்க, போனை மேஜையின் மீது வைத்துவிட்டுச் சென்று, கதவைத் திறந்தான்.

”மித்ரா! நீ இங்..கே!” அதிர்ச்சியில் வார்த்தைகள் தடுமாறின. அவள் வாசலிலேயே நின்றிருக்க, “உள்ளே வா மித்ரா!” என வழிவிட்டு ஒதுங்கி நின்றான். நின்று கொண்டிருந்தவளை, “உட்காரு!” என்றான்.

சோஃபாவில் உட்கார்ந்தவள் தாளமுடியாமல் அழுதாள். ஷக்தி தயக்கத்துடன் கைகளைப் பிசைந்தபடி அமர்ந்திருக்க, கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்த மானசா, தன் மௌனத்தை உடைத்தாள்.

“சில விஷயங்களை உங்ககிட்ட மனம் திறந்து பேசணும்னு நினைக்கிறேன் ஷக்தி. அது உங்க மனசுக்குப் பிடிக்காது என்றும் தெரியும். ஆனால், என் நிலையை உங்களுக்குப் புரிய வைக்கணும்னா, வேற வழியில்லை” என்றவளை அமைதியாகப் பார்த்தான்.

“என்னை மன்னிச்சிடுங்க! இந்த மன்னிப்பு, இதுவரை நான் அறிந்தும், அறியாமலும் செய்த எல்லா தவறுகளுக்கும் தான். ரெண்டுங்கெட்டான் வயசுல, காதல்னா என்னன்னே தெரியாமல், எனக்கு நானே உருவாக்கிக்கொண்ட ஒரு பிம்பத்தை காதல்ன்னு நினைத்துட்டேன். தைரியம்தான் புருஷலட்சணம் என்ற எண்ணத்தில், வயசுக் கோளாறுல வர்ற ஈர்ப்பை காதல்னு தப்பா அர்த்தம் செய்துகிட்டு, உங்களோட மனசுலயும் ஆசையை வளர்த்து பெரிய தப்புப் பண்ணிட்டேன். ஆனால், அத்தனையும் என்னையறியாமல் செய்தது தான் ஷக்தி. மனசால உங்களுக்குத் துரோகம் செய்யணும்னு என்னைக்கும் நினைச்சதில்லை.

நீங்க முதலில் மறுத்தப்போ, எனக்குக் கோபம் வந்தது. நீங்க சம்மதிச்சபோது... எனக்குச் சந்தோஷத்தைவிட, இனம்புரியா ஒரு பயம்தான் மனசுக்குள்ளே உருவாச்சி. ஆனால், தானா இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கோமேன்ற எண்ணத்தால் வந்ததுன்னு நினைத்தேனே தவிர, வேற ஒண்ணும் தோணலை. உங்க அம்மாவுக்கு ஆபரேஷன் ஆனபோதும், இறந்த போதும் உங்களுக்கு ஆறுதலாக இருக்கணும்னு தோணியது, எல்லாமே நண்பன் என்ற ஸ்தானத்தில் தான்னு இப்போ புரியுது.

உங்களைத் தொடர்ந்து வற்புறுத்தினது..., குடும்பத்தில் எனக்குக் கிடைக்காத அன்பு, பாசம், அரவணைப்பு எல்லாமே உங்ககிட்ட கிடைச்சதால் தான், அதை இழக்க விருப்பமில்லாமல் தான்னு பொறுமையாக யோசித்த போது தான் புரிந்தது.

உங்களைப் பிரிந்து இருக்கமுடியாதுன்னோ, பேசாமல் இருக்க முடியாதுன்னோ ஒருநாளும் நான் நினைத்ததே இல்லை. ஏன்னா, அது காதல் இல்லைனே எனக்கு ஈஸ்வரை சந்திச்சதுக்குப் பிறகு தான் தெரிந்தது. அப்போகூட இது உண்மையான காதலா இல்லையான்னு குழம்பி, அவரை விட்டு விலகித்தான் போனேன்.

ஆனால், நான் காதலித்ததா சொன்ன... உங்ககிட்ட வராத உணர்வுகள் அத்தனையும், ஈஸ்வர் அவரோட காதலைச் சொன்னப்போ வந்தது. நான் அவரோட காதலை ஏற்க மறுத்ததும், அவர் என் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து என்னைப் பார்க்காமல் தவிர்த்த போது நிறைய அனுபவித்தேன். ஆனாலும், ஏற்கெனவே இப்படி ஒரு அனுபவம் இருந்ததால், அவர்கிட்ட என்னால் சகஜமாக இருக்க முடியலை. கல்யாணம் பேசும் போதும், பழைய விஷயங்கள் தெரிய வந்தால் என்னாகுமோன்னு மனசுக் குள்ளிருந்த பயம், கல்யாணத்துக்கு பிறகு இந்த விஷயத் தை அவரிடம் மறைக்கிறோமே என்ற உறுத்தலும், அவரிடம் சகஜமாக இருக்க விடாமல் செய்தது.

அவரை நல்லா புரிந்துகொண்ட பிறகு, எனக்கு பழைய நினைவுகள் எதுவுமே நினைவுக்கு வரலை ஷக்தி! உங்களுக்கு கசப்பாக இருந்தாலும் இதுதான் நிஜம். இதை நீங்க வருத்தப்படணும்னு சொல்லலை. நிச்சயம் ஈஸ்வரைப் பிரிந்தால் நான் ஒண்ணுமே இல்லாமல் ஆகிடுவேன் ஷக்தி! ப்ளீஸ், என்னைப் புரிஞ்சிக்கங்க! என்னால் இந்தப் போராட்டத்தைத் தாங்க முடியலை. அவரைப் பார்க்கும் போதெல்லாம், என்னோட குற்றவுணர்ச்சி வாளாய் மாறி என் இதயத்தை அறுக்குது.

உங்களைப் பார்க்கும் போது என்னால்தானே இதெல்லாம்னு, கொஞ்சம் கூட யோசிக்காம செய்த வேலை... இன்னைக்கு விருட்சமா வளர்ந்து, அதோட வேர் என் கழுத்தை நெறிக்குது. என்னால் எத்தனை நாளைக்குத் தான் இதையெல்லாம் தாக்குப் பிடிக்க முடியும்னு தெரியலை ஷக்தி! உங்களால முடிந்தால், என்னை மன்னிச்சிடுங்க. இல்லைனா... உங்க கையாலேயே என்னைக் கொன்னுடுங்க!” என்று சொல்லி முடித்துத் தள்ளாடியபடியே எழுந்தவள், சுயநினைவில்லாமல் சரிவதை அதிர்ச்சியுடன் பார்த்தான்.

அவள் சொல்லச் சொல்ல அவர்களது கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தான். தனக்கிருந்த அந்த எதிர்பார்ப்புகள், சின்னச் சின்ன சந்தோஷங்கள் அவளுக்கு இருந்ததில்லை என புரிந்தது. தன் எதிரில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசினாலும், ஒரு நாளும் அவளது கரத்தைப் பிடித்துக் கொள்ளக்கூட அவள் அனுமதித்ததில்லை என்பதும் நினைவில் வந்தது.

தன்னிடம் அவள் எதிர்பார்த்தது காதலை இல்லை. அன்பு, ஆதரவு, நட்பு என்பது தெளிவாகியது. தனக்காக அவள் செய்த அனைத்திற்குப் பின்னாலும் நட்பு என்ற ஒன்று மட்டுமே இருந்ததாக தோன்றியது. யோசிக்க யோசிக்க மித்ராவிற்கு தன் மீது இருந்தது காதல் இல்லை... வெறும் கவர்ச்சி மட்டுமே என அவனுக்கும் விளங்கியது.

கடைசியாக, ‘என்னைக் கொன்னுடு!’ என அவள் கதறியதைக் கேட்டுத் துடிதுடித்துப் போனான். ‘தன் மனத்தில் அப்படியொரு எந்தத் தவறான எண்ணமும் இல்லை!’ என்று சொல்ல நினைத்த நேரத்தில், மயங்கிச் சரிந்தவளை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க, “மானு!” என்றபடி வெளியிலிருந்து ஓடிவந்த ஈஸ்வர், பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.


53

“ஒண்ணும் பிரச்சனை இல்லை ஈஸ்வர். மானசா நல்லா இருக்கா...” என்றவர், அவனது தவிப்பான முகத்தைப் பார்த்து, “பேபியும் ஃபைன்” என்றார் அத்த லேடி டாக்டர். ஈஸ்வரின் முகத்தில் சந்தோஷம் தெரிய, ஷக்தியின் உதடுகளும் லேசாகப் புன்னகைத்தன.

“திடீர்ன்னு இப்படி ஒரேடியா ஷூட்-அப் ஆனது தான் கவலையாக இருக்கு. மனசுல எதையோ வச்சிகிட்டு, சொல்ல முடியாமல் தவிக்கிறாங்கன்னு நினைக்கிறேன். பார்த்துக்கோங்க. நான் ஈவ்னிங் வந்து பார்க்கிறேன்” என்ற டாக்டர் கிளம்பிச் சென்றார்.

அறை வாசலில் நின்றிருந்த ஷக்தியின் பார்வை, கட்டிலில் பொலிவிழந்திருந்தவளைப் பார்த்தான். அவனது மனசாட்சி ‘எல்லாம் உன்னால்தான்’ என்று குற்றஞ்சாட்டியது.

‘சாரி மித்ரா! நான் இப்படிச் செய்திருக்கக் கூடாது. ரஞ்சித் ஈஸ்வரை கொல்வதற்காக என்னை அனுப்பினான். அவன் உன் கணவன் என்று தெரிந்ததும், விலகிப் போகணும் என்று தான் நினைத்தேன். ஆனால், எப்படியும் ஈஸ்வரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறதே! அதனால், அவனைக் காப்பாற்ற ஏதாவது வழியை யோசிக்கவும், நான் உனக்குச் நான் துரோகத்துக்குப் பிராயச்சித்தம் தேடிக்கொள்ளவும் தான் என்று நினைத்து இங்கே வந்தேன்.

ஆனால், நான் சொல்ல வந்த விஷயத்தைக் காது கொடுத்துக் கேட்காமல், நீ என்னைத் தவறாக நினைத்தது எனக்கு மிகவும் ஆத்திரமூட்டியது. நீ நினைத்தபடியே உன்னிடம் சில நாட்களுக்கு நடந்து கொள்ளவதுதான், உனக்குக் கொடுக்கும் தண்டனையென முட்டாள்தனமாக நினைத்து விட்டேன்.

இதெல்லாம் கோபத்தில் விளைந்தது தானே தவிர, உன் மேல் எனக்கு எந்த விதமான வன்மமும் இல்லை. நான் செய்த தவறுக்கு உன்னைப் பலியாக்க, எனக்கு என்ன தகுதியிருக்கிறது? அதுவும், நீ கர்ப்பமாக இருப்பது தெரிந்திருந்தால், நிச்சயம் இப்படியெதுவும் செய்திருக்க மாட்டேன் மித்ரா...’ என மனத்திற்குள் அவளிடம் மன்னிப்பை யாசித்தான்.

“ஷக்தி” என்றபடி அவனது தோளில் கை போட்டு வேறு அறைக்கு அழைத்துச் சென்றான். அவன் தன்னைப் பார்த்த பார்வையில் கூனிக்குறுகிப் போனான் ஷக்தி.

“சாரி ஈஸ்வர். என்னால்தான் எல்லாம். நான் இங்கே வந்ததே”

“ரஞ்சித் அனுப்பியதால்...” என்ற ஈஸ்வரை திகைப்புடன் பார்த்தான் ஷக்தி.

“உங்களுக்கெப்படி...?”

“ரஞ்சித் உங்க மூலமாக ப்ளான் போட்டது... நீங்க ரத்னவேலுவிடமிருந்து விலகி வந்தது... மானசாவைப் பார்த்தது... அவளை மிரட்டியது எல்லாமே எனக்கும் தெரியும்” என்றான்.

“எல்லாமே உண்மை தான். உங்க மனைவியை மிரட்டியது மட்டும் உண்மை இல்லை.”

“அதுவும் தெரியும்...”

“எப்போ? எப்படி?”

“நீங்க இங்கே வந்த மூன்றாவது நாளே உங்களைப் பற்றிய எல்லா விஷயமும் என் நண்பன் போலீஸ் அதிகாரி ஆதிபன் மூலமாக எனக்கு வந்துடுச்சி. நீங்களும், மானசாவும் பழகியது முதல் எல்லாமே தெரியும். ஹாஸ்பிட்டல்ல மானசாவும், அவளோட தோழி மித்ராவும், ஷக்தி என்ற பேரைக் கேட்டதும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டது, அப்போ எனக்கு எதுவும் பெரிசா தோணலை.

ஆனால், உங்களை நேரடியாக மீட் பண்ணியதும், மானசாவின் முகத்தில் ஒரு திடுக்கிடலையும், உடனே சமாளித்துக் கொண்டதையும் கவனித்ததும் தான், எனக்குள்ளே ஏதோ ஒரு சின்ன பொறி வந்தது. வீட்டுக்கு வந்ததும் அவளோட தனிமை ஏதேதோ சிந்தனைகள்னு, இதுவரை நான் பார்க்காத மானசாவைப் பார்த்தேன்.

முதல்முறை என் காதலைச் சொன்னபோது, எனக்கும் சில பெர்சனல் விஷயங்கள் இருக்குன்னு மானசா சொன்னது, அப்போதுதான் நினைவுக்கு வந்தது. நீங்க மானசாவை சந்திக்க வரச் சொல்லியும், அவள் வராத கோபத்தில் வீட்டுக்கு வந்து சப்தம் போட்ட போதே, பாதி விஷயத்தைத் தெரிஞ்சிகிட்டேன். மீதியை விசாரிக்கச் சொல்லி என் நண்பனிடம் சொன்னபின்பு, அவன் சேகரித்துக் கொடுத்தது தான் மீதி விஷயங்கள்” என்றான்.

இத்தனை நாள் இதையெல்லாம் நான் கண்டும் காணாமல் இருந்ததற்குக் காரணம், இது எவ்வளவு தொலைவுக்குத் தான் போகுதுன்னு பார்க்கவும், இப்போதாவது மானசா என்னிடம் மனம் திறந்து பேசுவாளான்னும் நினைச்சித் தான். ஆனா, அவ என்னைப் பார்த்து உள்ளுக்குள்ள தவிச்சா! அதை நினைத்து நான் அவளிடமிருந்து கொஞ்சம் விலகிப் போனப்போ துடிச்சா! என்னால், நேரடியாக அவளிடம் கேட்க மனசு வரலை. என் கண் முன்னால், அவ கூனிக்குறுகி நிக்கறதைப் பார்க்கும் சக்தியும் எனக்கு இல்லை.ஏன்னா, அவளை அந்த அளவுக்கு நான் நேசிக்கிறேன்.

அதோடு எனக்கு உங்க மேல நம்பிக்கை இருந்தது ஷக்தி. இத்தனை வருடம் பிசினஸ் வட்டாரத்தில் எத்தனையோ பேரைப் பார்த்த எனக்கு, ஒரு மனிதனைப் பார்த்ததும் நூறு சதவீதம் இல்லைனாலும், ஓரளவுக்குக் கணிக்கும் திறமை இருக்கு. உங்களால் மானசாவுக்கு ஏதாவது தீங்கு நேரும்னு நினைத்திருந்தால் கூட, அவள் பக்கத்தில் உங்களை நெருங்க முடியாத அளவிற்குச் செய்திருப்பேன்.

அதோடு ரஞ்சித்தின் கவனம் முழுதும் உங்க மேலே தான் இருக்கும். அதுதான் எங்களுக்கு அவனை வளைத்துப் பிடிக்க வசதியும் கூட. அவன் ஜாமீனில் வந்தது முதலே, அவனோட ஒவ்வொரு அசைவையும் கவனிச்சிக்கிட்டு தான் இருக்கோம்” என அனைத்தையும் சொல்லி முடித்தான்.

ஷக்திக்கு அவனைப் பார்க்க பெருமையாக இருந்தது. அன்றைக்கு மானசா சொன்னது எத்தனை உண்மை! இவன் பக்கத்தில் நிற்கக் கூட எனக்குத் தகுதியில்லை. இப்படி ஒரு நல்ல துணையைக் கொடுப்பதற்காகவே, அவளைத் தன்னிடமிருந்து அந்தக் கடவுள் பிரித்தார் போலும் என்று நினைத்துக் கொண்டான்.

முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டவன், “நானும் காதலிக்கிறேன் என்ற உணர்வை விட, நாமும் காதலிக்கப்படுகிறோம் என்ற சந்தோஷம் எல்லோருக்கும் கிடைக்கிறதில்லை! என்னோட மித்ராவைத் தேடித் தான் நான் இங்கே வந்தேன். என்னைக்கு அவங்க என் மித்ரா இல்லைன்னு ஆகிடுச்சோ, அன்னைக்கே அவங்களுக்கும், எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லைன்னு ஆகிடுச்சி ஈஸ்வர்.

ரஞ்சித் பத்தி அவங்ககிட்ட சொல்லி எச்சரிப் பதற்காகத் தான் நான் தனியா பேசணும்னு சொன்னதே. நேரடியா இதில் இன்வால்வ் ஆக எனக்கு விருப்பமில்லை. அதனால்தான் அவங்களோட உதவியை எதிர்பார்த்தேன். இப்போ அவனைப் பத்தி உங்களுக்கே தெரியும் எனும்போது, இனி நீங்களே சமாளிச்சிக்குவீங்க.

போறதுக்கு முன்னாடி ஒரு ரிக்வெஸ்ட். நான் இங்கே எதுக்காக வந்தேன்னு மட்டும் தயவு செய்து உங்க மனைவிக்குத் தெரியவேண்டாம். அதோடு அவங்களை டார்ச்சர் செய்ததை பொய்யென்றும் சொல்லவேண்டாம் ஈஸ்வர். என்னை அவங்க தப்பா நினைச்சது, நினைச்சதாகவே இருக்கட்டும். நானும் ஏதேதோ பிரச்சனைகளைச் செய்துட்டேன். என்னை மன்னிச்சிடுங்க ஈஸ்வர். இதுக்கு மேலே உங்களுக்கு என்னால் எந்தப் பிரச்சனையும் வராது. நான் இன்னைக்கே சரண்டர் ஆகிடுறேன்” என்றான்.

“ஒரு நிமிஷம் ஷக்தி, நீங்க சரண்டர் ஆக எந்தத் தேவையும் இல்லை... எந்தப் பிரச்சனையும் இல்லை! கவலைப்படாதீங்க. அப்புறம் இன்னொரு விஷயம்..., ரத்னவேலுவிடமிருந்து நீங்க பிரிந்து வரும்போதே, அவர் உங்களைக் கொல்ல ஒரு ஆளையும் ஏற்பாடு செய்தாச்சு” என்றான்.

“இது எனக்கு எப்பவோ தெரியும் சார். அவர் கூட நாலு வருஷம் நிழலாக இருந்தவன் நான்! இதைச் சமாளிக்க வேண்டியது நான்... நீங்க இல்லை!” என்றவன், அமைதியாகத் தன் அறையை நோக்கி நடந்தான்.