இதயத்திற்கு இலக்கணமில்லை - கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
196
437
63
21

வீட்டிற்கு சென்றதும், வந்து சேர்ந்து விட்டதாக போன் செய்தான். வீட்டுத் தொலைபேசியில் அழைத்ததால் விஜயாம்மா பேசிவிட்டு, மருமகளை அழைத்து போனைக் கொடுத்தார். ஆசையுடன் போனை வாங்கிக்கொண்டாலும் என்ன பேசுவதென்று புரியாமல், “ஹ..லோ” என்றாள்.

“மானு!” ஆழ்ந்த குரலில் காதலுடன் அழைத்தான். மனத்தில் பொங்கிய காதலை குரலில் தேக்கி, தன் நேசத்தை வெளிப்படுத்தியதும், அவளது உடலில் சிலீரென்ற உணர்வு தோன்றியது. ஒரு நொடி கண்களை மூடி அந்த இனிமையான நேரத்தை, தன் மனத்திற்குள் சேமித்துக் கொண்டாள். அந்த நிமிடம் தன் மனத்தில் அவன் மீதிருந்த காதலை உணர்ந்து கொண்டாள்.

‘இது எத்தனை நாட்களாக...? தன் கழுத்தில் மூன்று முடிச்சிட்டபோதா... இல்லை... உரிமையுடன் அவன் தன்னை அணைத்து முத்தமிட்ட நொடியிலா...?’ நிச்சயமாக அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், அவன் தன் கணவன் என்ற கடமைக்காக எழுந்த அன்பில்லை என்பது மட்டும் புரிந்தது.

அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே, ஈஸ்வர் சற்று சோர்வடைந்து போனான்.

‘தன் மீது கோபமாக இருக்கிறாளோ...? ஒருவேளை தன் செய்திக்கு பதில் அனுப்பவேண்டும் என்று எண்ணித் தான் பதில் அனுப்பினாளோ?’ என்று குழம்பினான்.

“ஹலோ...!” இம்முறை அழைத்தது மானசா.

வடிந்த உற்சாகமெல்லாம் மீண்டு வந்தது போல, ஈஸ்வரின் மனம் குதூகலித்தது. “சொல்லு மானு!”

“போன் கட்டாயிடுச்சின்னு நினைத்தேன்!”

“இல்லையில்லை. சரி சாப்பிட்டியா?”

“இனிமே தான். நீங்க...?”

“இப்போதான் வந்து சேர்ந்தேன். இனிதான் சாப்பிடணும். வந்து சேர்ந்துட்டேன்னு சொல்லத்தான் கூப்பிட்டேன்.”

“சரி, அப்போ போனை வச்சிடட்டுமா?” வேறேன்ன பேசுவதென தெரியாமல் கேட்டாள்.

“கொஞ்சமிரு. அம்மா அங்கே இருக்காங்களா?” என கேட்டான்.

“ம், ஆமாம்” என்றாள்.

“அப்போ வச்சிடாதே. சட்டுன்னு வச்சிட்டா, அம்மா தப்பா நினைச்சிப்பாங்க.”

அதற்கு ஏற்றார்போல மாமியாரும், அவ்வப்போது ஜாடையாகத் தன்னைப் பார்ப்பது தெரிய, அவளுக்கும் அவன் சொல்வது சரியாகப் படவே, கணவன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம், “ம்ம், இல்லை, ஆமாம், சரி” எனத் தயங்கித் தயங்கி பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“நீ என்னைக்கு காலேஜ் போகப் போற?”

“அத்தை, மாமாவிடம் கேட்கணும். அவங்க சரின்னு சொன்னா, நாளையிலிருந்தே போகலாம்ன்னு இருக்கேன்.”

அவள், வீட்டுப் பெரியவர்களிடம் கேட்க வேண்டும் எனச் சொன்னது அவனது மனதுக்கு இதமாக இருந்தது. “சரி பத்திரம். நான் நாளைக்குப் பேசறேன்” என்றவன் தொலைபேசியை வைத்தான்.

அடுத்து வந்த நாட்களிலும் காலை, இரவு என இரண்டு வேளையும் வீட்டிற்கு பேசும் போது அவளிடமும் பேசினான்.


22

அன்று வெள்ளிக்கிழமை. காலையில் எழுந்து குளித்து முடித்து, ஈரக்கூந்தலை இருபக்கக் காதோரங்களில் இருந்த முடியை எடுத்து கிளிப் போட்டுக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்த போது, விஜயா அனைவருக்கும் காஃபி கலந்து கொண்டிருந்தார்.

“குட் மார்னிங் அத்தை” என்றபடி புன்னகைத்த மருமகளைப் பார்த்து பதிலுக்குப் புன்னகைத்த விஜயாம்மா, “குட்மார்னிங். இந்தப் பாலை சாமிக்கு வச்சிட்டு, காமாட்சி அம்மன் விளக்கைப் பொருத்திட்டு வந்து, நீ காஃபி எடுத்துக்கோ” என்றவர் வெள்ளி டம்ளரை அவளிடம் கொடுத்தார்.

“சரிங்கத்தை” என்றபடி சென்றவளை, “மானசா, இங்கே வா!” என அழைத்தார்.

“என்னங்கத்தை!”

“மல்லி, கொடியிலிருக்கும் வெள்ளைத் துண்டை எடுத்துட்டு வா...” என்று வேலைக்காரப் பெண்ணை பணித்தவர், “திரும்பு..” என மருமகளைப் பற்றித் திருப்பினார். “இப்படியா ஈரம் சொட்டச் சொட்ட வருவ...? உடம்புக்கு ஏதாவது வச்சிகிட்டா என்ன பண்றது?” மெல்லிய குரலில் கடிந்து கொண்டவர், மல்லி கொண்டு வந்து கொடுத்த காசித் துண்டால், அவளது கூந்தலை ஈரம் போகத் துடைத்து, அடியில் முடிச்சிட்டார்.

“பொம்பளைப் பிள்ளைங்க தலைமுடியை எப்பவுமே விரிச்சி விட்டுட்டு இருக்கக் கூடாது. இப்படி அடியில் முடிச்சி போட்டுக்கணும். மகாபாரதச் சண்டை நடக்க எத்தனையோ காரணம் இருந்தாலும், திரௌபதி இப்படித் தலையை விரிச்சி விட்டு இருந்ததும் கூட ஒரு காரணம்ன்னும் சொல்லுவாங்க.

இப்போதான் பேஷன்ற பேருல இந்தப் பொண்ணுங்க தலையைக் கட்டாமலேயே திரியுதுங்க” என தன் ஆற்றாமையையும் சற்று வெளிப்படுத்தினார். “இப்படியே காயட்டும், காலேஜ் கிளம்பும் போது தலை பின்னிவிடுறேன்” என்றார்.

“அடடா! பார்க்கவே எத்தனை அழகா இருக்கு இந்தக் காட்சி... மாமியாரும், மருமகளும் இத்தனை ஒற்றுமையா இருக்கறது! ஏன் விஜயா, உனக்கு மருமகக் கூட சண்டை போடுற மூட் இன்னும் வரலையா?” என்ற கணவரை விஜயா முறைக்க, சிரித்துக் கொண்டே மாமனாருக்கு காஃபிக் கப்பை நீட்டினாள்.

“என்ன மருமகளே, உங்க அத்தை மௌன விரதமா இன்னைக்கு? அப்போ கேள்வியை உன்கிட்ட தான் கேட்கணுமா?” என்றபடி சிரித்தார்.

“அச்சச்சோ! இந்த விளையாட்டுக்கு நான் வரலை மாமா; என்னை விட்டுடுங்க” என்று போலியாக அலறினாள்.

”உங்க மாமனாருக்கு காலங்கார்த்தால பொழுது போலையாக்கும்? அதான், மாறி மாறி வம்பிழுத்துக் கிட்டிருக்கார்” என்றார் கிண்டலாக.

காபியை ஒரு வாய் உறிஞ்சியவர், “போகப் போகத் தெரியும், இந்தப் பூவின் வாசம் புரியும்“ என பாட, குலுங்கிக் குலுங்கிச் சிரித்தபடி தன் அறைக்குச் சென்ற மருமகளைப் பாசத்துடன் பார்த்தார் சௌந்தரபாண்டியன். “பொம்பளப் பிள்ள வீட்டிலே வளைய வந்தாலே, எவ்வளவு நல்லா இருக்கில்ல விஜயா?” என்றார் நெகிழ்ச்சியுடன்.

“ஆமாங்க! நம்ம ஈஸ்வரனோட குணத்துக்கு எப்படிப்பட்ட பொண்ணு அமையணும்ன்னு நினைச்சேனோ, அதே மாதிரி அமைஞ்சிருக்கு. என் பிள்ளயோட வாழ்க்கை, நிச்சயமா சந்தோஷமா இருக்கும்” என்றார் மனநிறைவுடன்.

அனைத்தையும் அறையிலிருந்தபடி கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு, அப்போதே ஈஸ்வரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் பலமாக எழுந்தது. ‘இன்னைக்கு வெள்ளிக்கிழமை; நாளைக்கு நிச்சயம் வந்துவிடுவான் அதுவரை பொறு மனமே!’ என்று தறிகெட்டு ஓடத் துடித்த மனத்தை, தடைபோட்டு நிறுத்த முயற்சித்தாள். ‘நீ தடை போட்டால் என்ன? எதைப் போட்டால் என்ன?’ என அவளது எண்ணங்கள், தனது நாயகனைத் தேடியே ஓடியது. ‘இதேதடா இப்படி ஒரு இம்சை!’ என நொந்து கொண்டாலும், அவனது நினைவுகள் மனத்திற்கு இதமாகத் தான் இருந்தது.

மனத்திற்குள் பிராவாகமாகப் பொங்கி எழுந்த கணவனின் நினைவுகளுடன் அமர்ந்திருந்தவளை, “மானசா, சாப்பிட வா; காலேஜுக்கு நேரமாகுது பார்” என்ற விஜயாவின் குரல் சட்டென அவளைக் கனவுலகிலிருந்து இழுத்து வந்து வெளியே போட்டது.

திடுக்கிட்டுப் போனவள், ‘அடக் கடவுளே! மணி எட்டாகப் போகுது’ என தயக்கத்துடனே வெளியே வந்தாள். “சாரி அத்தை... நான் உங்களுக்கு உதவி பண்ணாமல்...” என திக்கித் திணறினாள்.

“அதனால என்ன? அரைக்க, பொடிக்க ஆள் இருக்கு. அடுப்புல ஏத்தி இறக்கிறது என்ன பெரிய வேலை? சரி, உட்கார்ந்து சாப்பிடு, நேரமாகுது பார்” என டிபனைப் பரிமாறினார்.

மணி எட்டு எனக் கடிகாரக் குருவி எட்டு முறை குரல் கொடுத்துவிட்டுச் செல்ல, எப்போதும் வரும் போனுக்காக இன்றும் அவளது மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. கண்கள் தொலைபேசியையும், கடிகாரத்தையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தன. முகத்தில் எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் மாறிமாறித் தோன்றி மறைய, கைகள் தட்டை அளைந்து கொண்டிருந்தது.

ஏமாற்றத்துடனே அறைகுறையாக உண்டு முடித்து எழுந்தவளை அழைத்த விஜயா, விரித்து விடப்பட்டிருந்த கூந்தலைத் தளரப் பின்னி, நெருக்கமாகத் தொடுத்த ஜாதி மல்லியைச் சூட்டிவிட்டார். ‘கேட்கலாமா வேண்டாமா?’ என ஒற்றையா, இரட்டையா போட்டுக் கொண்டிருந்த மனத்தை, கேட்டுவிடுவோம் என்ற முடிவெடுத்தவள், “அத்தை!” என மெல்ல அழைத்தாள்.

“என்னம்மா?” என்றார் விஜயா.

“இல்ல, நாளைக்கு அவங்க வருவாங்களா...?” என பாதி வார்த்தைகளை மென்று முழுங்கி, தயக்கத்துடன் கேட்டாள்.

சிரிப்பை அடக்கியபடி, “யாரு வருவாங்க...?” என்றார் வேண்டுமென்றே.

“அ..வங்க தான் அத்தை! உங்க மகன்...”

“தெரியலையேம்மா...?” என்றார் மொட்டையாக.

அவளுக்கு மேற்கொண்டு என்ன சொல்வதென்று விளங்கவில்லை. முகம் வாடிய மலராகச் சுருங்கியது. “இல்ல, நாளைக்கு அவங்க காலைல வருவதாக இருந்தா, நான் ஸ்பெஷல் கிளாஸ்க்கு வரலைன்னு சொல்லி டலாம்ன்னு பார்த்தேன்!” என்று தன்னிலை விளக்கம் அளித்து விட்டு கல்லூரிக்குக் கிளம்பினாள்.


*********

பாடத்தில் மனம் ஒன்றவேயில்லை. வீட்டிலிருந்து கிளம்பி, கல்லூரிக்கு வருவதற்குள் மூன்று முறை அவனது மொபைலுக்குத் தொடர்பு கொண்டும் லைன் கிடைக்கவில்லை. அவளுக்கே ‘சே’ என்றாகிவிட்டது. மதிய உணவிற்காக வெளியே வந்தவளுக்கு, பார்க்கிங் ஏரியாவில் கார் மீது சாய்ந்து நின்றிருந்தவனைக் கண்டதும் மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. அதே நேரம் அவளது காதல் கொண்ட மனது, ஊடலுக்குத் தாவியது.

‘காலைல போனும் பண்ணலை, நான் பண்ணினாலும் எடுக்கலை, வரேன்னும் சொல்லலை. இப்போ மட்டும் எதுக்கு வரணும்? இப்போ, நான் சகஜமாகப் போய் பேசணுமா?’ குதூகலித்த மனத்திடம் கேள்வி கேட்டதும், மனமும் சட்டென, ‘அதானே’ என அவளுக்கு வக்காலத்து வாங்கியது. ‘உன்னைப் பார்த்ததும் வந்து விடுவேன்’ என இதழ்கடையோரத்தில் காத்திருந்த புன்னகையை, உதடுகளை இறுக மூடி அடக்கினாள்.

அவள் தன்னைப் பார்க்கும் முன்பே, அவளைப் பார்த்து விட்டவன், விகசித்த அவளது முகத்தைக் கவனித்து விட்டான். அடுத்த நொடியே முகத்தைச் சாதாரணமாக வைத்தபடி தன்னை நோக்கி வந்தவளை, உள்ளுக்குள் மெச்சிக் கொண்டான். “ஹாய் மானசா, எப்படி இருக்க?” என ஒன்றுமறியாதவன் போல புன்னகைத்தான்.

அவ்வளவுதான்...! இழுத்துப் பிடித்திருந்த பொய்க் கோபமெல்லாம் எட்ட விலகி ஓடியது. பதிலுக்குப் புன்னகையுடன் “நல்லாயிருக்கேன்” என மொழிந்தவளை, அவளது மனசாட்சி மேலும் கீழுமாகப் பார்த்து, ‘உன்னையெல்லாம் என்ன செய்தால் தகும்?’ என வினவ, அதைக் கண்டு கொள்ளாமல் காரினுள் அமர்ந்தாள்.

காரின் கதவை இழுத்து மூடுவதற்தாக லேசாக அவன்புறம் சாய்ந்தவளின் கூந்தலிலிருந்த பூவின் வாசனையை நுகர்ந்து அனுபவித்தான். அவனது செய்கையை உணர்ந்து திரும்பிப் பார்த்தவளைக் கண்டு வசீகரமாகப் புன்னகைத்து, “நல்ல வாசனை! என்ன பூ இது?”

அவனது செய்கையிலும், புன்னகையிலும் சற்றுத் தடுமாறியவள், “ஜாதி மல்லி” என்றாள் கிசுகிசுப்பாக.

“என்ன ஆச்சு? தொண்டை சரியில்லையா! மாத்திரை ஏதாவது எடுத்துகிட்டியா...?” என்று கேட்டவனை, கண்களை உருட்டி உறுத்து விழித்தாள்.

உண்மையான அக்கறையுடன் கேட்டது போல அவனது முகமிருந்தாலும், அவனது கண்களில் ஒளிர்ந்த குறும்புச் சிரிப்பைக் கண்டு கொண்டவளுக்கு, சட்டெனக் கோபம் மூண்டது. வேகமாகக் கார் கதவைத் திறந்து இறங்கி திரும்பிப் பார்க்காமல் சிறிது தூரம் நடந்தவள், அதே வேகத்தோடு திரும்பி வந்து காரில் அமர்ந்தாள். அவளது செய்கைகளை அமைதியாக ரசித்தவன், வாய் விட்டு நகைத்தான்.

“எதுக்கு இப்போ சிரிக்கிறீங்க?” எரிச்சலுடன் வினவினாள்.

“ரொம்ப ஆவேசமா எழுந்து போன, அதே வேகத்தில் திரும்ப வந்திட்டியே! அதை நினைச்சுத் தான் சிரித்தேன்” என பதில் மொழிந்தான்.

“நா...ன்!” என யோசனையுடன் இழுத்தவள், “எதையோ விட்டுட்டுப் போய்ட்டேன். அதான்” என சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“விட்டுட்டுப் போய்ட்டேன்னு தெரியுது. ஆனா, என்னன்னு தெரியலை” என்றான் கிண்டலாக. அடுத்த நொடியே கிறங்கிய குரலில், “நீ விட்டுட்டுப் போனது என்னன்னு எனக்குத் தெரியும். அது பத்திரமாக இங்கே இருக்கு!” என்றவன் அவளது வலது கரத்தைப் பற்றி, தன் இடது மார்பின் மீது வைத்து அழுத்திக் கொண்டான்.

‘ஙே’ என்று விழித்தபடி பார்த்தவளுக்கு, கையை விலக்கிக் கொள்ளக் கூட முடியவில்லை. அவனது பார்வையுடன் சங்கமிக்க தைரியமில்லாமல், அவளது இமைகள் தாழ்ந்தன. அவளது வெட்கம், அவனைப் பெருமை கொள்ளச் செய்தது. தன் காதலுக்குக் கிடைத்த அங்கீகாரத்தை, அவளது விரல்களுக்கு முத்தமிட்டு, சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டான்.

அவன் முத்தமிட்ட இன்ப அதிர்ச்சியில் விரல்கள் தன்னிச்சையாக மூடிக்கொள்ளும் முன்பே, காது மடலின் பின்புறமிருந்த பூனை முடிகள் உடலில் ஏற்பட்ட அதிர்வால் சிலிர்த்துக் கொண்டு நின்றன.

இதயம் வேகமாக வேலை செய்ய, மூச்சும் வேகமாக வந்தது. விரல்கள் மூடிக்கொண்டாலும், கரத்தை அவள் இழுத்துக் கொள்ளவேயில்லை. ‘இன்னும்’ என எதிர்பார்த்த மனத்தை அடக்குவது தான் பெரும் சிரமமாக இருந்தது.

திருமணமான அன்று கூட, இவனை நீ நேசிப்பாய் என்று யாராவது சொல்லியிருந்தால்,அதை நிச்சயம் நம்பியிருக்க மாட்டாள். இனி அவனில்லாத ஒரு வாழ்க்க்கையை நினைக்கக் கூட முடியாது அவளால்.

‘இது எப்படிச் சாத்தியம்? எதனால்? கணவன் என்ற உரிமையினாலா? நிச்சயம் இல்லை. இது கடமைக்காக விளைந்த பந்தமில்லை. காதலுக்காக. காதலுக்காகவா...! மானசா, ஈஸ்வரை நீ காதலித்தாயா...?’ அவளது மனம் கேட்ட கேள்விக்கு சட்டென விடை சொல்லத் தெரியாமல் விழித்தாள்.

அதுவரை இருந்த அத்தனை சந்தோஷமும் சட்டென வடிந்தது போலானது. முகத்தில் நாணம் விலகி, குழப்பமும், கவலையும் படர்ந்தது. தனது பிடியிலிருந்து அவளது கரம் நழுவுவதை உணர்ந்து அவளது முகத்தைப் பார்த்தவனுக்கு ஏதோ புரிய, ஒன்றும் சொல்லாமல் காரைக் கிளப்பினான்.

காரை விட்டிறங்கியவள் நேராக தங்களறைக்குச் சென்றுவிட, ஈஸ்வர் ஹால் சோபாவில் அமர்ந்தான்.

இவர்களின் வருகையை உணர்ந்து அறைக்குள் ளிருந்து வந்த விஜயா, “ஏண்டா தம்பி! மருமகளைக் கூட்டிக்கிட்டு, அப்படியே எங்கேயாவது வெளியே போய் வரவேண்டியது தானே?” என்றார்.

“அவளுக்குப் படிக்கணுமாம். அதான் வீட்டுக்கே வந்துட்டோம்” என எங்கோ பார்த்துக் கொண்டே சொன்னவன், சட்டென எழுந்து தோட்டத்திற்குச் சென்றான். விஜயா அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தார்.

உடை மாற்றிக் கொண்டு வந்த மானசா, “அத்தை, நான் டீ போடட்டுமா?” எனக் கேட்டாள்.

“ம்..., போடும்மா. ஈஸ்வருக்கு...” என ஆரம்பிக்க, “அவங்களுக்கு சர்க்கரை கம்மியா ஸ்ட்ராங்கா, மாமாவுக்கும், உங்களுக்கும் சர்க்கரை இல்லாமல் லைட்டா சரியா?” எனப் புன்னகையுடன் தலையசைத்துக் கேட்டவளைப் பார்த்தவருக்குக் குழப்பமாக இருந்தது.

‘இவளைப் புரிஞ்சிக்கவே முடியலையே. காரை விட்டு இறங்கி வந்தப்ப முகமே சரியில்லை. இப்போ சிரிச்சிகிட்டே வந்து, ஒரு தடவை சொன்னதை சரியா நினைவு வச்சிகிட்டு செய்யறா! இவளோட மனசுல அப்படியென்ன குழப்பம்?’ புரியாமல் அமர்ந்திருந்தார். அடுத்தவரின் பேச்சிலும், பார்வையிலுமே அவர்களை ஒரளவுக்குக் கணித்துவிடும் விஜயாவிற்கு, மானசா ஒரு சவாலாக இருந்தாள்.

 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
196
437
63
23

குளித்துவிட்டு வந்தவளை, “மானசா டிபன் சாப்டுட்டு, தம்பி கூட சாமுண்டீஸ்வரி கோயிலுக்குப் போய்ட்டு ,அப்படியே வேற எங்கேயாவது போய்ட்டு வாங்க. அப்புறம் மத்தியானமும், நைட் டின்னரையும் வெளியிலேயே பார்த்துக்கோங்க” என்றார். அவர் சொன்ன தோரணையில் அவளுக்கு மறுத்துப் பேச வேண்டு மென்றே தோன்றவில்லை.

அமைதியாக அறைக்கு வந்தவளை, “என்ன மானசா, டல்லா இருக்கே” என்று கேட்டான்.

“ம், அத்தை...” என்றவள் விஜயா சொன்னதைச் சொல்லி விட்டு, “எனக்குக் கொஞ்சம் எழுத வேண்டிய வேலையிருக்கு. அதான்!” என்று தயக்கத்துடன் சொன்னாள்.

“அவ்வளவு தானே! சரி, நீ படிப்பைப் பார், நான் அம்மாவிடம் பேசிக்கிறேன்” என வெளியே சென்றவனைப் பின் தொடர்ந்தாள்.

டைனிங் ஹாலில் சென்று அமர்ந்தவனுக்கு, “இந்தாப்பா காஃபி” என்று கப்பை நீட்டினார் விஜயா.

“அம்மா! அரைமணி நேரத்தில் டிபன் ரெடியாயிடுமா?”

“தாராளமா ஆகிடும். உனக்கு ஏதாவது ஸ்பெஷலாக வேணுமா?”

“இல்லையில்லை. காலைல முக்கியமான ஒருத்தரைப் போய்ப் பார்க்கணும்” என்றவனை, மானசா ஓரக் கண்ணால் பார்த்தாள்.

“அப்படியா... எப்போ வருவ?” மகனிடம் கேள்வி கேட்டாலும், பார்வை மருமகள் மீது படிய, அவள் சட்டென்று வேறுபுறம் திரும்பிக் கொண்டதையும் கவனித்துவிட்டார்.

“தெரியலைம்மா! முடிந்ததும் வந்து விடுவேன்” என்ற மகனையும், டைனிங் டேபிளை ஒழுங்குபடுத்துவது போல பாவனை செய்து கொண்டிருந்த மருமகளையும், பார்த்தவருக்கு மனத்திற்குள் நெருடியது.

அன்று முழுவதும் அவரது ஆராய்ச்சிப் பார்வை மானசா மீதே இருந்தது. இரவு களைத்துப் போய் வீட்டிற்கு வந்த மகனைப் பார்க்கப் பார்க்க, மருமகள் மீதிருந்த எரிச்சல் கூடியது.

“சாப்பிட வாடா தம்பி!” என அழைத்தார். அவனோ, “வேண்டாம்மா. ஈவ்னிங் சாப்பிட்டதே வயிறு திம்முன்னே இருக்கு” என்று சட்டை பட்டனைக் கழற்றியபடி அறைக்குச் சென்றான்.

கதவைத் திறக்கும் சப்தம் கேட்டுத் திரும்பியவள், “வந்துட்டீங்களா?” என்றபடி எழுந்து வரவும், “மானசா, இங்கே வா” என்று விஜயாவின் குரல் கேட்கவும் சரியாக இருந்தது.

“வந்துட்டேன் அத்தை” என்று உரக்கக் குரல் கொடுத்தவள், “உங்களுக்குச் சாப்பாடு எடுத்து வைக்கிறேன், சாப்பிட வரீங்களா?” என்றாள்.

“இல்லமா வேணாம். நீ சாப்டியா?”

“ம், ஆச்சு” என்றபடி சென்றாள்.

“பொம்பளைன்னா, நாலும் அனுசரிச்சித் தான் போகணும். தன்னோட வேலைதான் பெரிசுன்னு இருக்க முடியுமா? தான், தன் சுகம்ன்னு இருக்கணும்னா எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கணும்?” என்று சப்தமாக முனகிக் கொண்டே வெள்ளி டம்ளரில் பாலை ஊற்றிக் கொண்டிருக்க, மானசா திகைப்புடன் சமையலறை வாசலில் நின்றிருந்தாள்.

மெட்டிச் சப்தம் கேட்டு திரும்பிப் பார்த்த விஜயா, “உன் வீட்டுக்காரன் எதுவும் சாப்பிடலை. இந்தப் பாலையாவது கொண்டு போய்க் கொடு” என அவளது கையில் டம்ளரை கொடுத்து விட்டுச் செல்ல, மானசா இறுக்கமான முகத்துடன் தங்கள் அறைக்குச் சென்றாள்.

கட்டிலின் அருகிலிருந்த டேபிளின் மீது பால் டம்ளரை வைத்தவள், தலையணையை மடியில் வைத்துக்கொண்டு யோசனையுடன் அமர்ந்திருந்தாள். ‘அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்? காலையிலிருந்தே ஏதாவது ஜாடையாக சொல்லிக் கொண்டும், வித்தியாசமாகப் பார்ப்பதுமாக...’ என நினைத்தவளுக்கு எரிச்சல் மண்டியது.

ஒரு குளியல் போட்டுவிட்டு வந்த ஈஸ்வர், “என்னாச்சு மானசா, ஒரு மாதிரி இருக்க?” எனக் கேட்டான்.

“ஏன், உங்களுக்குத் தெரியாதா?”என்றாள் சுள்ளென்று.

நிமிர்ந்து அவளைப் பார்த்தவன், “என்னாச்சு உனக்கு?” என்றான் அமர்ந்த குரலில்

“இன்னும் என்ன ஆகணும்? எல்லாம் எனக்குத் தானே ஆகுது. நானா உங்களை வெளியே கிளம்பிப் போகச் சொன்னேன் ?” என எரிச்சலுடன் கேட்டாள்.

“இல்லை” என்றான் நிதானமாக.

“அத்தை என்னமோ, நான்தான் ஏதோ பேசி உங்களை வெளியே அனுப்பினதைப் போல, இன்னைக்கெல்லாம் என்னை வாட்டி எடுத்திட்டாங்க” என்று ஆற்றாமையுடன் புலம்பினாள். புருவத்தை உயர்த்தி பின்னந்தலையை தடவிக் கொண்டவன், “ஹுப்ஸ்!” என்றபடி பெருமூச்சை வெளியிட்டான்.

“நீங்க எதுக்காக பெருமூச்சு விடுறீங்க? நான்தான் விடணும்” என்றவள் டேபிள் மீதிருந்த புத்தகங்களை கோபத்துடனேயே அடுக்கி தன் கைப்பைக்குள் திணித்தாள்.

“இங்கே பார் மானசா! அம்மா கொஞ்சம் பழைய டைப். ஆனால், ரொம்ப ‘அட்ஜஸ்டபுல்’. பெரியவங்க கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், நீ கொஞ்சம் அனுசரித்துப் போகப் பாரேன்” என்று தன்மையாகவே அவளிடம் பேசினான்.

தான் இத்தனை தூரம் சப்தமிட்டும், எதற்கும் அசராமல் பேசுபவனை ஆயாசத்துடன் பார்த்தாள்.

“என்னம்மா... சொல்றது புரியுதா...? இந்த விஷயத்தில் நான் தலையிட முடியாது. எனக்கு நீங்க ரெண்டு பேருமே முக்கியம்...” என்றவனிடம், எதையும் மறுத்துப் பேச முடியவில்லை அவளால்.

“நானும் சண்டைக்காரி இல்லை! அத்தை, என்னை ஏதோ குற்றவாளி மாதிரி பார்த்தது தான் எனக்குக் கஷ்டமாக இருந்தது. நீங்க சங்கடப்படாதீங்க. சாரி” என்றவள், அவனுக்கு முதுகு காட்டியபடி படுத்துக் கொண்டாள்.

புன்னகைத்துக் கொண்டவன், “உனக்கு இவ்வளவு கோபம் வருமா என்ன?” எனக் கேட்டான்.

அவன் புறம் திரும்பாமலேயே, “கோபம் வராதுன்னு எப்போ சொன்னேன்? ரொம்பவே வரும். அதுவும் எனக்குப் பிடிச்சவங்க மேலே ரொம்ப வரும்” என்றாள் மிடுக்குடன்.

“அதான் தெரியுமே!” என்றான் குறும்பாக.

“ஆஹாஹா! சும்மா பேச்சு. உங்களுக்கு எப்படித் தெரியும்?” கேட்டபடி அவன் புறமாகத் திரும்பினாள்.

மர்மமாகப் புன்னகைத்தவன், “ஏன் தெரியாது? அதனால் தானே அடிக்கடி என்கிட்ட கோபப்படுற!” என்று சொல்லிவிட்டு இரு கண்களையும் சிமிட்டினான்.

அதுவரை வார்த்தைக்கு வார்த்தை பதில் சொன்னவள் படக்கென்று வாயை மூடிக் கொள்ள, பார்வை வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தது.

“என்ன பதிலையே காணோம். அப்போ மௌனம் சம்மதமுன்னு எடுத்துக்கலாமா?” என விடாமல் கேட்க, பதில் சொல்ல முடியாமல் தவிப்புடன் பழையபடி திரும்பிப் படுத்துக் கொண்டவள், “ எனக்கு தூக்கம் வருது, குட்நைட்!” என பெட்ஷீட்டை இழுத்து மூடிக்கொண்டாள்.

அதுவரை புன்னகையுடன் பேசிக்கொண்டிருந்த ஈஸ்வர் யோசனையில் ஆழ்ந்து, ‘இனி அன்னையின் முன்னால் எதையும் வெளிச்சம் போட்டுக் காட்டும்படி நடந்து கொள்ளக்கூடாது’ என முடிவெடுத்துக் கொண்டான். குடும்பத்தில் இப்படிச் சிறுசிறு பிரச்சனைகள் வந்தாலும், தன் அன்னையும் அதைப் பெரிதாக்க மாட்டார்; மானசாவும் அதை வளரவிட மாட்டாள். இதுவும் இருவருக்குள்ளும் ஒரு புரிதலை ஏற்படுத்தும் என நம்பினான்.

மானசாவின் கையில் பால் டம்ளரை எரிச்சலுடன் கொடுத்துவிட்டு அறைக்கு வந்தவரை, சௌந்தர பாண்டியன் பிலுபிலுவென பிடித்துக் கொண்டார். மருமகளைத் திட்டியபடி தலையணையை தட்டிப் போட்டுக் கொண்டிருந்தவரை, “கொஞ்சம் வாயை மூடுறியா!” என்று கண்டிப்பான குரலில் கட்டளை யிட்டார் சௌந்தரபாண்டியன்.

திரும்பிக் கணவரைப் பார்த்த விஜயா முகத்தில் அதிர்ச்சியோடு, “என்னையா சொல்றீங்க?” என குரலே வெளிவராமல் கேட்டார்.

“இங்கே என்ன பத்து பேரா இருக்காங்க? நீ தானே இருக்க.”

“நான் என்னங்க செய்தேன்?” என்று பரிதாபமாகக் கேட்டார் அவர்.

“நானும் காலைல இருந்து பார்த்துகிட்டுத் தான் இருக்கேன். அந்தப் பொண்ணை இஷ்டத்துக்கு விரட்டிகிட்டும், ஜாடையாக பேசறதும்னு உன் அதிகாரம் தூள் பறக்குதே! நானும் எதுவும் சொல்லக்கூடாதுன்னு பேசாமல் இருந்தால், இப்பவும் மூஞ்சியை காட்டிட்டு வர்ற. சின்னப் பொண்ணு; அம்மா இல்லாமல் வளர்ந்தவ. எதுவா இருந்தாலும், நீ தான் சொல்லிப் புரிய வைக்கணும்; அதை விட்டுட்டு இப்படி சுள்ளுனு எரிஞ்சு விழுந்தா எப்படி?” எனச் சிடுசிடுத்தார்.

“புரியாம பேசாதீங்க” என்றார் கடுப்புடன்.

“புரியாமல் பேச நான் என்ன சின்னக் குழந்தையா?” என்று சுள்ளென்றவர், சிறிது நேரம் அமைதியாக இருந்து தன்னை சாந்தப்படுத்திக் கொண்டார்.

“இங்கே பார் விஜயா! அவங்க சின்னப் பிள்ளைங்க. ஆனால், நல்லது கெட்டது தெரிஞ்சவங்க. அவங்க வாழ்க்கை மேலே அவங்களுக்கு இல்லாத அக்கறையா? மருமக படிப்பை முடிக்க இன்னும் இரண்டு மாசம் தான் இருக்கு.

அவ அதை நல்லபடியாக முடிக்கட்டுமேன்னு ஈஸ்வரன் நினைச்சிருக்கலாம். அவங்களே ஒத்துப் போகும் போது, நீ ஏன் நடுவில் போய் குட்டையைக் குழப்பற. எல்லாத்தையும் புரிஞ்சிக்கிற நீ, இதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேன்ற?” என்ற கணவரை வெறித்துப் பார்த்தார்.

“இத்தனை வருஷம் குடும்பம் நடத்தின நீங்களே என்னைப் புரிஞ்சிக்கலையே!” என்று பரிதாபமாகச் சொன்னார்.

மனைவியின் கேள்வியில் சௌந்தரபாண்டியன் சற்று ஆடித் தான் போனார். ‘இத்தனை வருடத் தாம்பத்தியத் தில், தன்னைப் போல் தன் மனைவியை யார் புரிந்து வைத்திருக்க முடியும் என்று அவருக்குள் பெருமை இருக்கத் தான் செய்தது. ஆனால், இன்றைய நிகழ்ச்சியில் தானும் அவளைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டோமோ’ என்று யோசித்தார்.

“நானும் இதே போல நிறைய அனுபவத்தை யெல்லாம் கடந்து தான் வந்திருக்கேன். ஆரம்பத்தி லிருந்தே ஈஸ்வர்தான் அவள் மேல விருப்பமாக இருக்கான். அவனோட மனசுக்குப் பிடிச்சவ என்ற ஒரே காரணத்துக்காகத் தான், அவளை இந்த வீட்டுக்கு மருமகளாக்கினேன். நான் சுயநலம் பிடிச்சவ தான்; என் பிள்ளை விஷயத்தில். ஆனா, நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. அவன் சந்தோஷமாக இருந்தா, நானும் சந்தோஷமாக இருப்பேன். கல்யாணமாகி அவன் இங்கிருந்த நாள்ல ரெண்டு பேரும் எப்படி இருந்தாங்கன்னு பார்த்தீங்க இல்ல!

அவள் என்னமோ கடமைக்கு இருக்குறாப் போலத்தான் இருந்தா. சரி, எல்லாம் போகப் போகச் சரியாகிடும்னு நினைச்சேன். அவனுக்கு மனசெல்லாம் அவ மேலே தான். அவள் பக்கத்தில் வந்தா, எதிரில் நின்னா, சாப்பிடும் போது பரிமாறினான்னு என் பிள்ளை முகத்தில் தெரியும் சந்தோஷத்தைப் பார்த்திருக்கேன்.

அவளுக்குள்ளே ஏதோ ஒரு தயக்கம்... நான் அவளோட சூழ்நிலையை பயன்படுத்திக்கிட்டேன்னு கூட நினைக்கலாம். ஆனால், ஈஸ்வரனை அவளுக்கும் பிடிச்சித் தான் இருக்கு. வாரத்தில் ரெண்டு நாள் அவளுக்காகவே வரான். அவளோட இருந்தா தான் அவனுக்கும் சந்தோஷமாக இருக்கும. அவளுக்கும் அவனைப் புரிஞ்சிக்க ஒரு சந்தர்ப்பமாக இருக்கும்னு நினைச்சித் தான் சொன்னேன்.

அதுக்கும் முடியாதுன்னு சொன்னா என்ன அர்த்தம்? காலைல வெளியே போனவன், இத்தனை நேரம் எங்கே போய் உட்கார்ந்திருந்தானோ? பிரெண்டுங்க இருந்தும், யார் வீட்டுக்கும் போகும் பழக்கமும் கிடையாது. எந்த பார்க்குல உட்கார்ந்திருந்தானோ... எந்த ரோட்டில் சுத்திகிட்டு இருந்தானோ?” என்றவர் கலங்கிய விழிகளைத் துடைத்துக் கொண்டார்.

மனைவியின் குணமறிந்தும், அவரை இந்த விஷயத்தில் புரிந்து கொள்ளாமல் பேசியதை நினைத்து வருந்தியபடி அமர்ந்திருந்த மனைவியை, ஆற்றாமையுடன் பார்த்தார்.

“மன்னிச்சிடு விஜயா! நானே உன்னைப் புரிஞ்சிக்கலையே” என்று மனைவியின் கைகளைப் பற்றிக் கொள்ள, “என்னங்க இது? நீங்க என்கிட்ட மன்னிப்பு கேட்கணுமா? நானும் கொஞ்சம் அவசரப்பட்டுத் தான் நடந்துகிட்டேன். மானசா மனசு கஷ்டப்படும்னு நான் நினைக்கவேயில்லைங்க!” என்றார் வருத்தத்துடன்.

“சரி விடு, எல்லாம் சரியாகிடும்!” என்று மனைவிக்குச் சமாதானம் சொல்ல, அவரும் புரிந்து கொண்டதாகத் தலையசைத்தார்.24

நாட்கள் வேகமாகக் கடந்து போயின. ஆனால், இந்தப் பிரச்சனைக்குப் பிறகு மானசா பெரிதாக எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும், மனதிற்குள் மாமியாரின் மீது சிறு மனக்கசப்பு வந்துவிட்டது. அவர் எதைச் சொன்னாலும் அதை இரண்டு விதமாக யோசிக்க வைத்தது. அதே நேரம் கணவனிடம் சற்று நெருங்கிப் பேசுமளவிற்கு, அவர்களது உறவில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. விஜயாம்மாவிற்கு இதைவிட வேறென்ன வேண்டும்? மகனது சந்தோஷத்தை எதிர்பார்த்தவருக்கு, அது சிறிது சிறிதாக நிறைவேறுவதைக் கண்டு திருப்தியுற்றார்.

“மானசா! இன்னும் பத்து நாள்ல, நாம மூணு நாள் மதுரைக்குப் போய் வராப்பல இருக்கும். உனக்குச் சௌகரியப்படும் தானே?”

“அதெல்லாம் பிரச்சனை இல்ல அத்தை. போய் வரலாம்.”

“நம்ம குலதெய்வம் பெத்தனாட்சிக்கு மாசி மாசம் ரெண்டாவது வாரத்துல திருவிழா வரும். வருஷாவருஷம், நம்ம குடும்பத்துல அத்தனை பேரும் தவறாம கலந்துக்குவோம். எல்லாச் சொந்தமும் ஒரே இடத்துல குடும்பமா நின்னு அம்மனை தரிசிச்சிட்டு, பொங்க வச்சி படைச்சிச் சாப்பிட்டு, ரொம்ப விசேஷமா இருக்கும். உனக்கும் ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்கும் பாரேன்!” என்று மருமகளுக்கு விளக்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆனால், அது ஒரு வித்தியாசமான அனுபவம் மட்டுமல்ல, மறக்கமுடியாத அனுபவமாகவும் இருக்கப் போகிறதென்று மானசாவிற்கு அப்போது தெரியவில்லை. உற்சாகத்துடன் திருவிழாவிற்குத் தயாரானாள். மைசூரிலிருந்து விமானம் மூலமாக மதுரைக்குச் சேர்ந்தவர்களை வரவேற்க, தன் சின்ன மாமனார் ராஜபாண்டியனுடன், தன் தந்தையும் வந்திருப்பதைக் கண்டவளுக்கு ஆச்சரியத்துடன் கூடிய மகிழ்ச்சி வெளிப்பட்டது.

“நல்லாருக்கீங்களா மாமா” என சின்ன மாமனாரை நலம் விசாரித்தவள், பாசத்துடன் தந்தையின் கரத்தைப் பற்றிக் கொண்டாள். “எப்படியிருக்கீங்கப்பா?” என்று கேட்டவளின் குரல் சந்தோஷத்தில் தழுதழுத்தது.

“எனக்கென்னம்மா... நல்லாயிருக்கேன! சம்மந்தி அம்மாதான் நம்ம ஊர் திருவிழாவுக்கு வாங்க, நாங்களும் அவசர அவசரமா வந்து போவதால, உங்களை வந்து பார்க்க நேரமில்லாமல் கூட போய்விடும். நீங்க வந்தா உங்க மகளோட மூணு நாள் இருந்தாப்பலயும் இருக்கும், மருமகளுக்கும் சந்தோஷமாக இருக்கும்னு கார் அனுப்பி வச்சாங்க” என்று தந்தை சொன்னதை இமைக்காமல் கேட்டுக் கொண்டாள்.

வீட்டிற்கு வந்து சேர்ந்ததும், அரண்மனை போன்ற வீட்டின் கம்பீரத்தை ஆச்சரியத்துடன் பார்த்தாள். ஈஸ்வரின் ஐயம்மா, சின்னய்யா, சின்னம்மா, கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கும் அவர்களது ஒரே மகள் மீனா, அத்தை தங்கம், மாமா தினகரன், அவர்களது குழந்தைகள் இருவர்... இன்னும் சில உறவினர்கள் என வீடே நிறைந்திருந்தது.

அனைவரும் பேச்சும் சிரிப்புமாகப் பொழுதைக் கழிக்க, “மானசா, நீ உங்க அப்பா கூட ரூம்ல பேசிக்கிட்டிரு” என ஈஸ்வரின் சித்தி ஜெயக்கொடி அனுப்பி வைத்தார்.

அறைக்கு வந்த பிறகு தான், மானசாவிற்குச் சற்று நிம்மதியாக இருந்தது. “அப்பாடி, எவ்வளவு சொந்தக்காரங்க இல்லப்பா?”

“ம், உன் கல்யாணம் மதுரையில நடந்திருந்தா, திருவிழா மாதிரி இருந்திருக்கும்” என்று சிரித்தார் தேவராஜன்.

உடன்சேர்ந்து சிரித்த மகளிடம், “நீ எப்படிம்மா இருக்க? எல்லோரிடமும் நல்லபடியா, அவங்க மனசு கோணாம நடந்துக்கற தானே?” என்று எதிர்பார்ப்புடன் கேட்ட தந்தைக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், அசட்டுப் புன்னகை புரிந்தாள்.

“இந்தக் கேள்வியை நீங்க என்னிடம் கேட்டிருக்கணும் மாமா” என்று சிரித்தபடி அறைக்குள் வந்தான் ஈஸ்வர்.

“வாங்க மாப்பிள்ளை” என்றபடி தேவராஜன் இருக்கையிலிருந்து எழுந்தார்.

“நீங்க உட்காருங்க” என்றவன், எழுந்து நின்ற மானசாவின் தோளைப் பற்றி அமரவைத்து, அவளை நெருங்கி அமர்ந்தான்.

தன் உடலில் சூடாக ஏதோ ஒன்று எழுந்து, தன் கழுத்துப் பகுதியை அடையும் போது சில்லெனத் தாக்கியதைப் போல் உணர்ந்தாள். முகம் சூடானது. ‘அதெப்படி கழுத்துப் பகுதி சில்லிட்டுப்போக முகம் மட்டும் சூடாகும்?’ திடீரென இப்படியொரு கேள்வி தோன்ற, அவள் மனமோ, ‘உன்னை! கஷ்டப்பட்டு இப்படி ஒரு கேள்வியை யோசிக்கணுமா?’ என முறைத்துக் கொண்டு நிற்க, தன்னையே செல்லமாகத் திட்டிக் கொண்டாள்.

திடீரென, “ஏன் மானு, நான் சொல்வது சரிதானே!” என ஈஸ்வர் அவள் தோளில் கை போட, விருட்டென நிமிர்ந்தாள்.

“ஆஹ்! ஆமாம்” என்று தலையசைத்துச் சிரித்தவளைப் பார்த்தவன், தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் வாய்விட்டுச் சிரித்தான்.

அவனுடன் சேர்ந்து தந்தையும் சிரிப்பதைக் கண்டவள், கணவன் தன்னை ஏதோ வம்பில் மாட்டி விட்டிருக்கிறான் என்பது புரிய, “எதுக்கு, இப்படி ரெண்டு பேரும் சிரிக்கிறீங்க?” என எரிச்சலை அடக்கிக் கொண்டு கேட்டாள்.

“பின்னே என்னம்மா? மானசாவுக்கு, என்கூட இருப்பதைவிட... உங்ககூட இருக்கத்தான் ரொம்ப பிடிக்கும்ன்னு மாப்பிள்ளை சொன்னா, நீயும் ஆமாம்னு சொல்றியே” என்றதும் அவளுக்குச் சங்கடமாகப் போனது.

“நான் ஏதோ யோசனையில்” என்றவள் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கணவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்பது போல, “அத்தை கூப்பிடுற மாதிரி இருக்கு; இதோ வரேன்” என்று அறையிலிருந்து வெளியேறினாள்.

ஹாலுக்கு வந்தபோது பெரிய உறவுக் கூட்டமே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது. “வாம்மா புதுப் பொண்ணு! வந்ததும் நேரா மாடிக்குப் போயிட்ட” என்று ஒரு பெண்மணி கேட்க, கொல்லென மற்றவர்கள் பெரிய ஹாஸ்யத்தைக் கேட்டதைப் போல சிரிக்க, மானசாவுக்கு வெட்கம் பிடுங்கியது.

அவர்களின் பேச்சைக் கேட்டவளுக்கு, பாதிக்கு மேல் எதுவும் புரியவேயில்லை. சிவனே என அமர்ந்திருந்தாள். பெரியவர்களுக்குச் சமமாக, கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கும் ஈஸ்வரின் சின்னய்யா மகள் மீனா பேசுவதை பார்த்தாள். ‘இவர்களெல்லாம் எத்தனை சந்தோஷமாக இருக்கிறார்கள். தன்னால் ஏன் அப்படி இருக்க முடியவில்லை?’ என்று நினைத்துக் கொண்டாள் மனதிற்குள்.25

இரவு உணவு முடிந்தபின், ஆண்கள் அனைவரும் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, ஈஸ்வரின் அத்தை தங்கம், காலையில் நேரத்துடன் கோவிலுக்குக் கிளம்பவேண்டும் என்று சொல்லி மானசாவை அனுப்பி வைத்தார். வெளியில் விளையாடிக் கொண்டிருந்த வாண்டுகளை இழுத்து வந்து படுக்க வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

மானசாவும் தங்களுக்கு ஒதுக்கியிருந்த அறைக்கு வந்தாள். சிறிது நேரத்தில் தன்னருகில் படுத்தவனை திரும்பிப் பார்க்காமலே உணர்ந்தாள்.

“தூங்கிட்டியா மானசா?” எனக் கேட்டும் அவளிடமிருந்து எந்த சப்தமும் இல்லை. தலையை உயர்த்திப் பார்த்தவன், இடது கையை ஊன்றியபடி சற்று நெருங்கி பாதி அமர்ந்த நிலையில், அவளது தோளைப் பற்றித் தன் பக்கமாகத் திருப்பினான்.

பட்டென்று அவனது கரத்தைத் தட்டி விட்டவள், “உங்க மனசுல, என்னைப் பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?” என்றபடி எழுந்து அமர்ந்தாள்.

‘இதேதடா வம்பு’ என நினைத்துக் கொண்டவன், “உன்னை மட்டும் தான் நினைச்சிட்டு இருக்கேன்” என்றான் குறும்புடன்.

“இந்த மழுப்புற வேலையெல்லாம் வேணாம்” எனக் கடுகடுத்தாள்.

“இப்போ என்ன ஆகிடுச்சி மகாராணிக்கு?” என்றபடி தலைணையை மடியில் வைத்துக் கொண்டு கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான்.

“நான் நடந்துக்கிறது உங்களுக்குப் பிடிக்கலைன்னா, நேரடியாக என்கிட்டயே சொல்லியிருக்கலாமில்லை. அப்பாகிட்ட சொல்லி கிண்டல் பண்ற அளவுக்குப் போயாச்சா? ஆரம்பத்தில் எனக்குச் சங்கடமாக இருந்தாலும், உங்களைப் பிடிச்சித் தான் கல்யாணம் செய்துகிட்டேன்” என்றவளின் கண்கள் அதற்குள் கலங்கிவிட்டன.

அவளது முகத்தைப் பிடித்து நிமிர்த்தி கண்ணோடு கண் நோக்கினான். “ஹே மானு! உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? இதை நீ, தனியா வேறு சொல்லணுமா...? இப்படி படக்படக்குன்னு அடிக்கிற உன்னோட ரெண்டு கண்ணும், என்கிட்ட பேசும் கதைகளைப் புரிஞ்சிக்க முடியாத முட்டாளா நான்? உன் மனசுல என்ன இருக்குன்னு, உனக்கே கொஞ்சம் கொஞ்சமா இப்பத் தான் புரியுது. இப்போ கூட புரியுதோ... இல்லையோ!” என அவளது நெற்றியில் முட்டியவனின் விரல்கள், அவளது கழுத்தில் விளையாடின.

கூச்சத்தில் நெளிந்தவளின் இமைகள் தன் துணையைத் தழுவிக் கொள்ள, அதைப் பாராட்டும் விதமாக, அவனது உதடுகள் அளித்த ஈரமுத்தத்தைப் பரிசாகப் பெற்றுக் கொண்டன. கணவனின் அருகாமையில் நெகிழத் துவங்கிய மனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், கீழுதட்டை அழுந்தக் கடித்தவளின் கன்னத்தில், தன் முத்திரைகளைப் பதித்தான்.

தாங்க முடியாதவளாய் வேகமாக விலகியவளின் கரத்தைப் பற்றினான். நினைத்தால் அவனது பிடியிலிருந்து தன் கரத்தை விடுவித்துக் கொள்ளும் அளவிற்கு மென்மையாகத் தான் பற்றியிருந்தான். ஆனால், விடுவித்துக் கொள்ள அவள் விரும்பவில்லையோ! அதற்கான சிறுமுயற்சியைக் கூட எடுக்கவில்லை அவள்.

பக்கவாட்டில் அமர்ந்திருந்தவனைப் பாராமலேயே, “ப்ளீஸ்” என்றாள். அவனும் குறும்புடன், “எதுக்கு இந்தப் ப்ளீஸ்?” என்று வினவினான்.

அவனது கேள்விக்கு பதில் மட்டும் கிடைக்கவே யில்லை. அவளது வேகமான நாடித்துடிப்பை, பற்றியிருந்த பிடியில் உணர்ந்தான். தனக்குள்ளே சிரித்துக் கொண்டவன், அவளை நெருங்கி நின்று கூந்தலில் சூடியிருந்த பூக்களில் முகம் புதைத்து, அதன் வாசத்தை ஆழ்ந்து நுகர்ந்தான். எதிர்பார்ப்பும், மனத்தில் பயமும் ஒருசேர எழ தேகம் மெலிதாக நடுங்க, கண்களை அழுந்த மூடிக்கொண்டாள் மானசா.

ஒரு கையால் அவளது இடையை வளைத்து, கழுத்தின் பின்புறம் அழுந்த முத்தமிட, துவண்ட மலர்க்கொடியாய் அவனது மார்பில் சாய்ந்தாள். அவளது தோளிலிருந்த அவனது மற்றொரு கரமும் இடையைச் சுற்றி வளைத்து நெருக்க, உதடுகள் முன்னேறி காது மடலைத் தீண்டியது.

மெல்ல மெல்ல இருவரின் மூச்சுக்காற்றும் வெப்பமாக, தயக்கம் அணையுடைக்கும் நேரம், தட் தட்டென யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டு சடாரென்று விலகினர் இருவரும். அதுவரை விலகி மறைந்திருந்த வெட்கம் வந்து அவளை மீண்டும் சூழ்ந்து கொள்ள, நாணத்துடன் தலை குனிந்தாள்.

புன்னகையுடன், “நீ இரு; நான் பார்க்கிறேன்” என முன்னறைக்கு வந்து கதவைத் திறந்தான்.

“சாரி அண்ணா... தூங்கிட்டீங்களா?” என்று மன்னிப்பு கோரும் குரலில் கேட்டாள் அவனது சித்தப்பா மகள் மீனா.

“பரவாயில்லைம்மா... என்ன விஷயம்?”

“ஐயம்மா! அண்ணியைக் கையோடு கூட்டி வரச் சொன்னாங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, நலுங்கியிருந்த சேலையைச் சற்று நீவிவிட்டு, தலையை ஒதுக்கியபடி வந்தாள் மானசா. “உன் அண்ணியே வந்தாச்சு... கூட்டிட்டுப் போ” என்றவன், ‘போய் வா’ என்று கண்ணசைவால் மனைவியை அனுப்பி வைத்தான்.

“வாம்மா” என்றழைத்த ஆச்சியைப் பார்த்து புன்னகைத்தாள் மானசா.

“கூப்பிட்டீங்களா ஆச்சி?”

“ஆமாம்மா” என்றவர் மேஜை மேலிருந்த புடவையையும், நகைப்பெட்டி ஒன்றையும் எடுத்து அவளிடம் கொடுத்தார்.

சற்று தயங்கினாலும் மறுக்காமல் வாங்கிக் கொண்டவள், “எதுக்கு ஆச்சி இதெல்லாம்!”என்றாள்.

“என் ஒரே பேரனோட பொண்டாட்டி; இந்த வீட்டு மகாலஷ்மி. உனக்குச் செய்யாம, யாருக்குச் செய்யப் போறோம்? உங்க கல்யாணத் தன்னைக்கே கொடுக்கணு ம்னு நினைத்தது. நம்ம அவசரத்துக்கு எல்லாம் நடக்குதா? நமக்கு இந்த பெரிய பெரிய நகைக்கடைக்குப் போய் வாங்குறது சரிபடாது. நம்ம ஆசாரிகிட்ட சொல்லிச் செய்தது” என்றபடி பெட்டியிலிருந்த உள்ளங்கை அளவு பதக்கம் வைத்த செயினை எடுத்து அவள் கழுத்தில் போட்டு விட்டார்.

“என் ராசாத்தி, காலையில் குளிச்சிட்டு இந்தப் பட்டுப்புடவையைக் கட்டிக்கிட்டு, செயினைப் போட்டுக்கோ. அப்புறம்... நாளைக்குக் கோவிலுக்குப் போறதால, சுத்தபத்தமாக இருந்தா நல்லது... என்ன, நான் சொல்றது புரியுதா?” என்றார்.

‘என்ன, இப்படி நம்ம மானத்தை வாங்குகிறாறே’ என்று நினைத்துக் கொண்டவள், தலைகுனிந்தபடி, “புரியுது ஆச்சி” எனக் கிசுகிசுத்தாள்.

“சரிம்மா, நீ போய் படுத்துக்கோ. போகும் போது இந்தப் பழத்தட்டை, சமையலறையில வச்சுட்டுப் போயிடு” என்றார்.

ஒரு கையில் புடவையையும், மற்றொரு கையில் பழத்தட்டையும் எடுத்துக் கொண்டு சமையலறையி லிருந்த ப்ரிட்ஜில் பழங்களை வைக்கச் செல்லும் வழியில், புழக்கடையில் பெண்கள் மூன்றுநான்கு பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள். அவர்களது பேச்சில், தன் பெயர் அடிபடுவதை உணர்ந்து நின்றவள்,அதைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
196
437
63
26

“நம்ம மதனிக்கு, ஏன் இப்படி புத்தி போகணும்? ஊர்ல, நாட்டுல பொண்ணுங்களா இல்லை? இப்படித் தன் குடியைக் கெடுக்கப் பார்த்தவனோட பொண்ணையே மருமகளாக்கிக்க, என்ன தேவையிருக்கு?”என்றபடி ஒரு பெண்மணி நீட்டி முழக்கி வம்பை ஆரம்பித்து வைத்தாள்.

“நான் கூட என் நாத்தனார் பொண்ணைச் சொன்னேன். அதையெல்லாம் விட்டுட்டு…, ஹூம்! என்னத்த சொல்றது?” இது இன்னொரு பெண்மணி.

“இருக்கிறது ஒத்தபிள்ள. அவன் கல்யாணத்துக்கும் நம்மள கலந்துக்காம, அவங்களே பேசி தேதி குறிச்சிட்டுச் சொல்றாங்க?”

“அட! உண்மையில் அவங்களுக்கு இதுல சம்மதமே இல்லையாம். நம்ம ஈஸ்வரனுக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருந்ததால், கடைசியில வேற வழி இல்லாம, அக்கா இந்தக் கல்யாணத்தை முடிச்சாங்க.”

“ஆக மொத்தம், அவளுக்கு நல்லநேரம். அப்பன்காரன் கிடைக்கிறதைச் சுருட்டப் பார்த்தான்; பொண்ணுக்காரி அதுக்கு மேலே போய் புள்ளைய மடக்கிப் போட்டு, மொத்த சொத்தையுமில்ல ஆட்டைய போட்டுபுட்டா!” என நக்கலாகச் சொல்ல, அங்கிருந்த அத்தனை பேரும் கொல்லெனச் சிரித்தனர்.

மானசா அவமானத்தில் கூனிக் குறுகிப் போனாள். கையிலிருந்த பழத்தட்டும், புடவையும் கீழேவிழ, சப்தம் கேட்டு பேசிக்கொண்டிருந்த கூட்டம் உள்ளே எட்டிப்பார்த்தது. அங்கே மானசாவைக் கண்டதும் திடுக்கிட்டுப் போயினர்.

ஊரே சுற்றி நின்று தன்னைப் பார்த்து கேலி பேசி சிரிப்பதைப் போல் தோன்ற, காதுகளை இறுகப் பொத்திக் கொண்டாள். அவமானத்தால் ஏற்பட்ட கோபத்தில் உடல் நடுங்கியது. பேசியவர்களின் நேரே சென்று, அவர்களை நாலு கேள்விகள் கேட்க நாக்கு பரபரத்தது.

அவர்களிடம் பேசி தன் மேலே இன்னும் சேற்றை வாரி இறைத்துக் கொள்ள, அவளது தன்மானம் இடம் கொடுக்கவில்லை. என்றாவது இப்படியெல்லாம் கேள்வி வருமென்று தெரிந்திருந்தாலும், அதை நேருக்கு நேராகச் சந்திக்கும் வேளையில் மனம் வலித்தது.

அங்கே மேலும் நிற்கப் பிடிக்காமல், அறைக்குச் செல்லத் திரும்பியவள், திகைத்த பார்வையுடன் ஈஸ்வர் நின்றிருப்பதைக் கண்டாள். அடக்கி வைத்த அழுகை விம்மிக்கொண்டு வந்தது.

அவளது மனநிலையை உணர்ந்திருந்தவனுக்கு, அது வேதனையாக இருக்கவே, “மானசா!” என இறைஞ்சும் குரலில் அழைத்தான். வேகமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டவள், பதிலேதும் சொல்லாமல் மாடிக்கு விரைந்தாள்.

பின்னாலேயே வந்து கதவைத் தாளிட்டவன், ஜன்னலருகில் நின்றிருந்தவளை, “மானசா” என அழைத்தான்.

அவளோ பதில் சொல்லாமல் நகர்ந்தாள். அவளது பாராமுகம் அவனைச் சீண்டிவிடுவது போலானது. சட்டென அவளது மணிக்கட்டை இறுகப் பற்றித் தன்புறமாகத் திருப்ப, அவனது வேகத்தில் அரண்டு போனாள்.

“உன்னைத் தானே கூப்பிடுறேன்! காதிலேயே விழாத மாதிரி போனா, என்ன அர்த்தம்?” அவனது குரல் மெதுவாக ஆனால், அழுத்தமாக வெளிவந்தது.

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், “உங்ககிட்ட பேசப் பிடிக்கலைன்னு அர்த்தம்” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

அவள் கரத்தை இறுக்கிப் பிடித்து தன்னருகில் இழுத்தவன், “அரைமணி நேரத்துக்கு முன்னாலே பேசப் பிடிச்சது. இப்போ பிடிக்கலையா?” என்றான் ஆத்திரத்துடன்.

தன் கையை விடுவித்துக் கொள்ள முயன்றபடி, “ஆமாம் பிடிக்கலை. உங்க கூட பேசப் பிடிக்கலை... பழகப் பிடிக்கலை ஏன்! மொத்தத்தில் உங்களையே பிடிக்கலை. கேட்டீங்க இல்லை என்ன பேசினாங்கன்னு? இதுக்குத்தான் படிச்சிப் படிச்சி சொன்னேன், இந்தக் கல்யாணம் வேணாம்னு. யார் கேட்டீங்க; இன்னைக்கு அவமானப்பட்டு நிக்கிறது நான் தானே?”

“ஹே! அவங்க யாரோ எவரோ... அவங்க பேசறதை ஒரு பொருட்டா எடுத்துக்காதே. அவங்க சார்பில் நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்.”

“போதும்! உங்க மன்னிப்பை யார் கேட்டா? உங்களுக்கு, காதலிச்ச பொண்ணைக் கல்யாணம் செய்துக்கணும். உங்க அம்மாவுக்கு, பையனோட சந்தோஷம் எதுவாக இருந்தாலும், அதை நடத்திக் கொடுத்திடணும்.”

“மானசா வாய்க்கு வந்தபடி பேசாத. கொட்டின வார்த்தைகளைத் திரும்ப எடுக்க முடியாது.”

“ஏன், பேசறதுக்குக் கூட எனக்கு உரிமை இல்லையா?”

“எதுக்கு இப்படி எல்லாத்தையும் தப்பாகவே எடுத்துக்கற? நீ நினைக்கிறா மாதிரியில்லை, அம்மா.”

“அம்மா! ஹும், எங்கம்மா இருந்திருந்தா, இன்னைக்கு நான் இப்படி அசிங்கப்பட்டு நின்னிருப்பேனா?

இதுக்கு மேல எங்க அப்பா! சென்டிமெண்ட் பிளாக்மெயில் பண்ணி, நினைச்சதைச் சாதிச்சிட்டார். என்னோட சந்தர்ப்பத்தை நீங்களும், உங்க அம்மாவும் சேர்ந்து பயன்படுத்திக்கிட்டீங்க. உங்க அம்மாவுக்கு நான் எப்படிப் போனா என்ன? நீங்க சந்தோஷமாக இருக்கணும். உங்க ரெண்டு பேருக்கும் நினைச்சதைச் சாதிக்கணும். என் அப்பா பண்ணின தப்புக்கு என்னைப் பழி வாங்கறீங்க. வெளியிலே சிரிக்கச் சிரிக்கப் பேசினாலும், உள்ளுக்குள்ள உங்கம்மா...” என மேலும் பேசிக்கொண்டே சென்றவளைக் கோபத்துடன் தள்ளிவிட, கட்டில் மீது தொப்பென்று விழுந்தாள்.

“ஏய்! எங்கம்மா பத்தி உனக்கென்ன தெரியும்? அவங்களைப் பத்தி பேச, உனக்கு எந்தத் தகுதியும் கிடையாது. உங்க அப்பா பத்தின எல்லா விஷயமும் தெரிந்தும், எனக்குப் பிடிச்சிருந்ததுன்னு ஒரே காரணத்துக்காக என்னிடம் கூடச் சொல்லாமல், உன்னைப் பொண்ணு கேட்டு வந்தாங்க. உன்னோட அப்பா பிளாக்மெயில் செய்தா, அதுக்கும் எங்க அம்மாதான் காரணமா? இன்னைக்கு இவ்வளவு பேசறவ, அன்னைக்கு உங்க அப்பாவை கன்வின்ஸ் பண்ண வேண்டியது தானே?

என் அம்மா மேல எந்தத் தப்பும் இல்லைன்னு உனக்கும் தெரியும். உன் மேல இருக்கும் தப்பை மறைக்க, இந்த மாதிரி பேசிக்கிட்டு இருக்க. இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை, இன்னும் ஒன்பது மாதம் பொறுத்துக்கோ... அதுக்கப்புறம்...” என நிறுத்தியவன், சொல்ல வந்ததைச் சொல்லாமல் வேதனையுடன் தலையைக் கோதிக்கொண்டான்.

“உன் இஷ்டப்படி இருந்துக்கலாம். ஆனால், ஒண்ணு மட்டும் உண்மை. உங்க அப்பாவோட கட்டாயத்தால் மட்டுமே நீ இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்னு தெரிஞ்சிருந்தா, நானே கல்யாணத்தை நிறுத்தி யிருப்பேன்!” என்று சொல்லிவிட்டு, அவளது முகத்தைக் கூடப் பார்க்காமல், கட்டிலில் ஒரு பக்கமாக திரும்பிப் படுத்துக் கொண்டான்.

மானசாவிற்கு அவன் என்ன சொல்கிறான் என நன்றாகவே புரிந்தது. ‘இருவரும் பிரிந்து விடலாம் என்கிறான்’ நினைக்கும் போதே தொண்டைக்குழி வலித்தது. ஆனால், அடுத்த நொடியே அவளுக்கு இன்னொன்றும் நன்றாகப் புரிந்தது.

‘அவனைப் பிடிக்கவில்லை என்று சொன்னதற்காகக் கூட அவன் எதுவும் சொல்லவில்லை. அவன் அம்மாவைப் பற்றிப் பேசியது தான் பிடிக்கவில்லை. தன்னை விட, அவனது அன்னையைத் தான் பெரிதாக மதிக்கிறான். அன்பில் கூட அவனது மனத்தில் தனக்கு இரண்டாம் இடம் தான்!’ இந்த ஒரு நினைவே அவளுக்கு மாமியாரின் மீது மீண்டும் கோபத்தை உண்டு பண்ணியது. கணவன் மீதிருக்கும் காதலால் தான் இந்த உரிமைப் போராட்டம் என, அந்தப் படித்த முட்டாளுக்குப் புரியாமல் போனது. கட்டிலில் இருபுறமும் முகத்தைத் திருப்பியபடி படுத்திருந்தாலும் உறங்கவேயில்லை இருவரும்.

மனம் வேதனையில் இருந்தாலும், ஒன்றில் தெளிவாக இருந்தான் ஈஸ்வர். ‘மானசாவின் மனத்தில் தன் மேல் காதல் இருக்கிறது. சற்று நேரத்திற்கு முன் நடந்த நிகழ்வுகளே அதற்குச் சாட்சி. ஆனால், எல்லாவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறாள். எந்த நிலையிலும் உனக்கென்று நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையைத் தான் அவளுக்கு கொடுக்கத் தவறிவிட்டேன்; என்றைக்கு அவளுக்குத் தன் மீது அந்த நம்பிக்கை வருகிறதோ..., அன்று தன் வாழ்க்கை நிச்சயம் மலரும்’ என நம்பினான்.

‘அதே போல அம்மாவையும் புரிந்து கொள்வாள். ஒரே வீட்டில் பிறந்து வளர்பவர்களுக்குள்ளேயே சரியான புரிதல் இல்லாத நிலையில், மூன்று மாதத்திற்கு முன் வந்தவளுக்கு எப்படிப் புரியும்? அம்மாவின் கண்டிப்போடு கலந்த அன்பை கூடிய விரைவில் மானசாவும் புரிந்து கொள்வாள்.

இப்போது கூட அம்மாவைப் பற்றிப் பேசியதை யெண்ணி உள்ளுக்குள் அவளுக்குள் கோபமிருக்கும். ஆனால், நேரம் காலம் வரும் போது இதெல்லாம் வெயில் பட்ட பனியாக மறைந்து போகும். அதோடு தன் வாழ்க்கையை அழித்துக் கொள்ளக் கூடிய அளவிற்கு, அவளொன்றும் முட்டாள் அல்ல!’ என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்.


27

“ஈஸ்வரா, நீங்க ரெண்டு பேரும் ஐயம்மாகூட அந்த வண்டியில் வாங்க. நாங்க பெரிய வண்டியில் வரோம்” என்றார் சௌந்தரபாண்டியன்.

“சரிப்பா” என்றவன் காரின் முன்பக்க சீட்டில் அமரப்போனான்.

“ஏண்டாப்பா பேராண்டி! நான் முன்சீட்டுல உட்கார்ந்துக்கறேன். நீ பின்னால உட்காரு” என்றார் ஐயம்மா.

“இல்ல ஐயம்மா! பின்னாலேன்னா, நீங்க கொஞ்சம் தாராளமா உட்காரலாம்.”

“இப்ப மட்டுமென்ன சீட்டைப் பின்னால் தள்ளிட்டு, சாய்ந்து உட்கார்ந்துக்கறேன்” என்றபடி முன்சீட்டில் அமர்ந்து கொண்டார். வேறு வழியில்லாமல் காரின் பின்சீட்டில் அமர்ந்து கொண்டான் ஈஸ்வர்.

கார் கிளம்பும் நேரம் குடுகுடுவென ஓடிவந்த மீனா, “அண்ணி,கொஞ்சம் அப்படியே தள்ளி உட்காருங்க. நானும் உங்களோடு வரேன்” என்றபடி மானசா தள்ளி அமரக்கூட நேரம் கொடுக்காமல், இடித்துக் கொண்டு ஏறினாள். அவளது வேகத்தைப் பார்த்து சட்டென நகர்ந்தவள், ஈஸ்வரின் தலையோடு இடித்துக் கொண்டாள்.

“ஸ்ஸ்!” என இருவரும் தேய்த்து விட்டுக் கொள்ள, ஈஸ்வர் எரிச்சலுடன், “ஏன் மீனா, நீ பெரிய வண்டியில் வரவேண்டியது தானே?” என்றான்.

“பெரியம்மாதாண்ணா இந்த வண்டியில் வரச் சொன்னாங்க” அவள் சொல்லி முடித்த அடுத்த நொடி, அவனது பார்வை மானசாவின் முகத்தில் படிந்தது. அதே நேரம் அவளும் கணவனின் முகத்தைப் பார்க்க, இருவருமே வந்த வேகத்தில் தத்தம் பார்வையை மீட்டுக் கொண்டனர்.

காலையில் தான் எழுந்து தயாராகும் முன்பே கிளம்பி அறையிலிருந்து வெளியே வந்துவிட்டவனை, அவளே கிளம்பும் நேரத்தில் தான் பார்த்தாள். கிட்டத்தட்ட அரைமணி நேரமாக அவன் அவளது முகத்தைப் பார்க்கவேயில்லை.

காலையிலிருந்து தன்னைத் தவிர்த்துக் கொண்டிருப் பவனின் கடைக்கண் பார்வைக்காக, வெகுவாக ஏங்கிப் போனாள் மானசா. ஆனால், தன்னருகில், தனக்காக ஒருத்தி உருகிக் கொண்டிருப்பதை உணராமல், அந்த அதிகாலை நேர மதுரை மாநகரின் அழகைக் கூட ரசிக்கும் மனநிலை இல்லாமல், வெறுமனே பார்த்துக் கொண்டு வந்தான்.

அந்த அதிகாலை நேரத்திலும் மீனாட்சி அம்மனின் சன்னதியில், அவளது அருளாசி பெறவேண்டி திரளாகக் காத்திருந்த பக்தர்களைக் கண்டு மானசாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அழகர் கோயில், திருப்பரங் குன்றம் என்று தரிசனத்தை முடித்துக் கொண்டு, காலை உணவை ஹோட்டலிலேயே சாப்பிட்டு முடித்த பின்பே தூத்துக்குடி மாவட்டம், மேல்மாந்தையை நோக்கி விரைந்தது அவர்களது கார்.

முள்மரங்கள் அடர்ந்திருந்த பகுதியைச் சீரமைத்துக் கொட்டகையிட்டு, அந்த இடமே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. ஆண்களெல்லாம் ஆங்காங்கே எதிர்பட்ட உறவினர்களிடம் ஆரவாரத்துடன் பேச்சும், சிரிப்புமாக இருக்க, வீட்டுப் பெண்கள் ஒருபக்கம் கூடி, பொங்கல் வைக்கும் ஏற்பாட்டில் மும்முரமாகினர்.

மூன்று கற்களை முக்கோணமாக அமைத்து அதன் மீது மண்பானையை வைத்து கடவுளை வேண்டிக் கொண்டு விஜயாம்மாவும், ஜெயாம்மாவும் சொல்லச் சொல்ல, பொங்கல் வைப்பதில் மும்முரமானாள் மானசா. முந்தியை இழுத்து முடிந்து, சேலைக் கொசுவத்தைத் தூக்கிச் சொருகியபடி, வியர்க்க விறுவிறுக்க, பொங்கலைப் பொங்கி, கடவுளுக்குப் படைத்து முடித்து அனைவரும் சேர்ந்து அமர்ந்து உண்டது, அவளுக்குப் புது அனுபவமாக இருந்தது.

அன்று மாலை ஒவ்வொரு குடும்பத்திலிருந்த கன்னிப்பெண்களும் பட்டுடுத்தி, பாவை விளக்கேந்தி உலாவந்த காட்சி பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அன்றைய இறுதி நிகழ்வாக காப்புகட்டி விரதமிருந்தவர்கள், மஞ்சளாடையுடுத்தி பூக்குழி இறங்க, அங்கே பக்திப் பரவசம் தாண்டவமாடியது. மறுநாள் காலை பூக்குழிச் சாம்பலை எடுத்து வைத்துக் கொண்டனர், பூஜையறையில் வைத்து நெற்றியில் இட்டுக்கொள்ள.

திருவிழா ஆர்வத்தில் தங்கள் உரசலைச் சுத்தமாக மறந்தே விட்டாள். கிளம்பும் நேரம் துணிமணிகளைப் பெட்டியில் அடுக்கியபடி, “ரொம்ப வித்தியாசமான அனுபவம் எனக்கு. இதை மறக்கவே முடியாது” என்று புன்னகையுடன் சொல்ல, “சில விஷயங்களை, என்னைக்கும் மறக்க முடியாது” என இறுகிய குரலில் சொல்லிவிட்டு வெளியே செல்ல, அடிபட்ட பாவனையு டன், பரிதாபமாக நின்றிருந்தாள் மானசா.

“எதுவும் விட்டுப்போச்சான்னு ஒருமுறை பார்த்துட்டு வரேன்” என முன்னறையில் தங்கத்தின் குரல் கேட்க, அவசரமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

ஈஸ்வர் காரில் அமராமல் அவளது வருகைக்காக காத்திருந்தான். ‘இப்படியே இன்னும் இரண்டுமணி நேரத்திற்கு எப்படி பக்கத்தில் உட்கார்ந்து செல்வது? என்னாலும் நிம்மதியாக இருக்கமுடியாது; அவருக்கும் தொல்லை. சிறிது நேரமாவது அவன் நிம்மதியாக இருக்கட்டும்’ என நினைத்தவள் பெரிய வண்டியை நோக்கி நடந்தாள்.

‘இவள் இங்கே வராமல், அங்கே எதற்குப் போகிறாள்? காரியமே கெட்டுது! வீட்டிலிருந்தால் தான் அங்கேயும், இங்கேயும் மறைந்து நின்று கொண்டு கண்ணில்கூட படாமல் ஆட்டம் காட்டுவாள். ஒரு ரெண்டுமணி நேரமாவது பக்கத்தில் இருப்பளே. அந்த அருகாமையே போதுமேன்னு நினைத்தால், அதையும் கெடுத்திடுவா போலிருக்கே. ஏதோ கடுப்பில் ஒரு வார்த்தை சொன்னால், இந்தக் கோபத்துல ஒண்ணும் குறைச்சல் இல்லை’ என நினைத்தவன், “ஏய் மானசா! கார் அங்கே இருக்கு. வா” என்று அவளது கையைப் பற்றி நிறுத்தியவனின் கண்கள் கோபத்தை வெளிக்காட்டின.

அவள் பதில் சொல்வதற்குள் பின்னாலேயே வந்த தங்கம், “நாளைக்கு எல்லோரும் ஊருக்குக் கிளம்பிடப் போறீங்க! இன்னைக்கு மானசா எங்ககூட வரட்டுமே. உன் சித்தப்பாவை காருக்குக் கூட்டிக்க ஈஸ்வர்” என்றதும் பதில் சொல்ல முடியாமல் எரிச்சலை மறைத்துக்கொண்டு, சரியென்பது போல தலையசைத்தவன், கோபத்துடன் கையை உதறிவிட்டுச் செல்ல, கவலையுடன் பார்த்தாள் மானசா.

“நீ வாம்மா!” என்ற தங்கத்தின் பின்னால் சென்றாலும், பார்வை மட்டும் திரும்பத் திரும்பக் கணவனிடம் சென்றது.

திருவிழா முடிந்து அப்படியே கிளம்புகிறேன் என்ற தேவராஜனை, மகளுடன் மேலும் ஒருநாள் இருந்துவிட்டுச் செல்லலாம் என்று தங்களுடனேயே அழைத்து வந்துவிட்டனர்.

வீட்டிற்கு வந்து சேர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் ஈஸ்வருக்கு அலுவலகத்திலிருந்து போன் வர, அரைமணி நேரத்திற்கு மேல் பேசிவிட்டு வந்தவன், “அம்மா! நான் அவசரமாக ஊருக்குக் கிளம்பணும். முக்கியமான ஒரு மெஷின் ரிப்பேர் ஆகிடுச்சாம்.”

“ஏன்ப்பா! நாளைக்கு நைட் எல்லோரும் சேர்ந்து கிளம்பலாம் இல்லை? வேற யாரையாவது பார்க்கச் சொல்லக் கூடாதா?”

“இல்லீங்க ஐயம்மா! அப்புறம் புரொடக்?ஷன் ரெண்டுநாள் லாஸ் ஆகிடும். அம்மா, அப்பா வேணா கூட ரெண்டுமூணு நாள் இருந்துட்டு வரட்டும்” என்றவன் அறைக்குச் செல்ல, மானசா அவன் பின்னோடு சென்றாள்.

திருமணம் முடிந்து அவன் கிளம்பிய போது இருந்ததைப் போலவே, இன்றும் அமைதியாக நின்றிருந்தாள். மனத்தில் தவிப்புடன் எதையும் பேசமுடியாமல்..., கிளம்பும் நேரத்தில் ஏதாவது பேசி, அதனால் அவன் மேலும் கோபமடைந்து விடக்கூடாதே என்ற பயத்துடன் தன்னை வெகுவாக கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருந்தாள் மானசா.

ஈஸ்வர், அவளொருத்தி அங்கில்லாததைப் போலவே நடந்து கொண்டான். கிளம்பும் போது கூட தன் பக்கம் திரும்புவானா ஒரு பார்வையாவது கிடைக்குமா என்று ஏக்கமும், எதிர்பார்ப்புமாக நின்றிருந்தவளை ஏறெடுத்தும் பாராமல், கிளம்புகிறேன் என்று ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் கிளம்பிச் சென்றுவிட்டான் ஈஷ்வர்.

கணவனின் செய்கையால் மனம் சோர்ந்து வேதனையடைந்தவளுக்கு, ‘தான் அவனது மனத்தை எந்த அளவிற்கு நோகடித்திருந்தால், அவன் இப்படி நடந்து கொள்வான்’ என்று நன்றாகப் புரிந்தது.

அவனைச் சமாதானப்படுத்த என்ன செய்ய வேண்டுமென்று சுத்தமாகப் புரியாததால், அவனது பாராமுகத்தால் உள்ளுக்குள் இறுகிப் போனாள். இங்கேயே இருந்தால் கட்டாயம் அழுகை வருமென நினைத்தவள், தன்னைத் தானே தேற்றிக் கொண்டு கீழேயிறங்கிச் சென்றாள்.

 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
196
437
63
28


மறுநாள் பகலுணவு முடிந்ததும் அனைவரும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, மானசா அமைதியாகக் கட்டிலில் அமர்ந்திருந்தாள். “என்னம்மா! நீ தூங்கலையா?” என்றபடி வந்தார் சிவகாமி ஆச்சி.

“வாங்க ஆச்சி! மதியம் தூங்கிப் பழக்கமில்லை” என்று சொல்லிக் கொண்டே எழுந்து நின்றாள்.

“நல்ல பழக்கம்” என்றவர் கட்டிலில் அமர்ந்து, “நீ ரொம்ப நல்லா சமைப்பியாம்! கைவேலையெல்லாம் செய்வியாமே!”

“எல்லாம், புத்தகத்தைப் பார்த்துக் கத்துகிட்டது தான் ஆச்சி!”

“ம்! ஆனாலும் அதுக்கும் ஒரு திறமை இருக்கணும். எல்லாம் தெரியும்... ஆனா அரைகுறையா தெரியும்னு இல்லாம, கத்துக்கறது பெரிசு இல்லயா? நீ உன் மாமனார், மாமியாருக்கு சால்வை பின்னிக் கொடுத்தியாமே ரொம்பப் பெருமையா, ‘என் மருமகளே பின்னியதுன்னு’ சொல்லிச் சொல்லி பூரிச்சிப் போய்ட்டா உன் அத்தை!” என்று சிரிக்க, அவளும் பதிலுக்கு மெலிதாகப் புன்னகைத்தாள்.

ஆச்சி ரகசியம் போல, “ஆமாம்! என் பேராண்டிக்கு என்ன பரிசு கொடுத்த?” என்று கிசுகிசுத்தார்.

வெட்கப் புன்னைகையுடன், “மஃப்ளர்.” என்றாள் மானசா.

“ஓ! இன்னைக்கு வரைக்கும் அதை உன் மாமனார், மாமியார் கிட்ட கூடச் சொல்லலை. திருடன்! எதுவா இருந்தாலும் அம்மாகிட்ட கொட்டிடுவான். இதைப் பத்தி மட்டும் இன்னும் மூச்சே விடலை.”

கணவனைப் பற்றி பேசியதும், அதுவரை இருந்த புன்னகை மறைந்து, விழிகளில் ஏக்கம் நிறைந்தது.

“அம்மா, அப்பான்னா அவனுக்கு உயிர்! கல்யாணமாகி ரொம்ப வருஷம் கழித்துப் பிறந்தவன். பிள்ளமேல ஒரு பூ விழுந்தாக் கூட துடிச்சிப் போயிடுவா உன் மாமியார். இந்த வீட்டுக்கு ஒரே ஆண் வாரிசுங்கறதால, எல்லோருக்கும் அவன் தான் செல்லப் பிள்ள. அவனுக்கும் எல்லாரிடமும் ரொம்பப் பாசம் அதிகம். அவன் தான் ஒத்தைப் பிள்ளையா வளர்ந்துட்டான். உங்களுக்காவது ஒத்தையாவும் இல்லாமல், வதவதன்னும் இல்லாம ஆணொன்னும், பொண்ணொன்னுமா, அழகா ரெண்டு குழந்தைங்களைச் சீக்கிரமா கொடும்மா தாயேன்னு வேண்டிகிட்டு வந்திருக்கேன். இனிமேல் இதுக்கு நீ தான் பொறுப்பு” என்று அசராமல் இடியை இறக்க, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறலுடன் பார்த்தாள்.

“என்னம்மா! ஏன் இப்படிப் பார்க்குற? சொல்லும்மா, மனசுல என்னத்த வச்சி மருகுற?” எனப் பாசத்துடன் கேட்டதும் மடை திறந்த வெள்ளமாக, ஆதிமுதல் அந்தம் வரை கொட்டிவிட்டு, முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

அவளது தலையை ஆறுதலாகத் தடவியவர், அவளது நாடியைப் பற்றி, “அழாதம்மா, வாழ வந்த பொண்ணு இப்படி கண்ணைக் கசக்கக்கூடாது. எல்லா வீட்டிலும் வழக்கமா நடக்கறது தான். ஆரம்பத்துல ஒருத்தரை யொருத்தர் புரிஞ்சிக்காம, இப்படியெல்லாம் ஆகறது சகஜம் தான். ஆனா, அதையெல்லாம் மாத்திக்கறது பொம்பளைங்க நம்ம கையில தான் இருக்கு.

நீ படிச்ச; உனக்குச் சொல்லணும்னு அவசியமில்லை. ஆனாலும், வீட்டுக்கு மூத்தவங்கற முறையில சொல்றேன். மனசுல எதையும் வச்சிக்காதே கண்ணு. நிறை குறையோட ஒருத்தரை ஏத்துக்கறது தான் வாழ்க்கை. சரி, எனக்கு இதுக்கு பதில் சொல்லு. முன்னமே உன் மாமியாரே சொன்னா, மானசாவுக்கு இந்தக் கல்யாணத்தில் முழு விருப்பம் இல்லைன்னு. ஆனா, நான் அதை அப்போ நம்பலை” என்றவர் அவளது முகத்தையே பார்த்தார்.

அவளோ, உதட்டைப் பற்களால் அழுந்தக் கடித்தபடி தலைகுனிய, கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த் துளிகள் அவளது கைகளில் பட்டுத் தெறித்தது.

“நீ வருத்தப்படணும்னு சொல்லை. பூ வச்ச அன்னைக்கு, நான் உன்னைக் கவனிச்சிக்கிட்டுத் தான் இருந்தேன். விஜயா உன் வீட்டுக்காரனுக்குப் போன் செய்து, மானசாகிட்ட பேசறியான்னு கேட்டப்போ, உன் கண்ணுல தெரிந்த எதிர்பார்ப்பை கவனிச்சேன். அதை இல்லைன்னு மறுக்கப் போறியா?” எனக் கேட்டவருக்கு, ‘இல்லை’ என்று மெதுவாகத் தலையசைத்தாள்.

“உனக்கு ஒரு விஷயம் சொல்லவா?” என கேள்வியுடன் ஆரம்பித்து, “இன்னைக்கு உன் மாமியாரும், நானும் இத்தனை ஒத்துமையாக இருக்கோம். ஆனா, ஒரு காலத்தில் நான் உன் மாமியார் போலவும், உன் மாமியார் உன்னைப் போலவும் இருந்தோம். ஆச்சரியமாக இருக்கில்ல? எல்லாத்துக்கும் காரணம் விட்டுக் கொடுத்துப் போவது தான். நாம ஒருத்தருக்கு விட்டுக் கொடுத்துப் போறதால, எதையும் இழக்கப் போறதில்லை. ஆனா, மத்தவங்களோட பிரியத்துக்கு ஆளாகிடுவோம்.

நீ உன் மாமியார் மேல இத்தனை கோபப்படறியே, அவ இன்னைக்கு வரைக்கும், என்னைக் கேட்காம ஒரு விஷயத்தையும் ஆரம்பிக்க மாட்டா தெரியுமா! இவ்வளவு ஏன்? உன்னைப் பொண்ணு கேட்கச் சொன்னதே, நான் தான். தெரியுமா?” எனச் சொல்ல, விழிவிரிய ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

“ஒரு நல்லவன் கெட்டுப் போக ரொம்பநாள் ஆகாது. அதேபோல, திருந்திய ஒரு நல்ல மனுஷன், திரும்பக் கெட்டுப் போகணும்னு ஒரு நாளும் நினைக்க மாட்டான். அதோடு உங்க அப்பாகிட்டயே தன்மானம் பார்த்தவ நீ. உன்னை மாதிரி ஒரு பொண்ணை விட்டுட, எங்களுக்கு மனசு இல்லை. ஈஸ்வரனுக்கு, இதை விட நல்ல பொண்ணு கிடைக்கமாட்டான்னு, நான் தான் பேசச் சொன்னேன். நீ கோபப்படுவதுன்னா, என்கிட்ட தான் கோபப்படணும்” என்று சொன்னவர், ஆழ்ந்து அவளை நோக்கினார்.

“இன்னைக்கு வரைக்கும், நம்ம குடும்பத்தில்… உன்னையோ, உன் அப்பாவையோ யாராவது தப்பாக ஒரு சொல் சொல்லியிருக்கோமா? யாரோ ஒருத்தி சொன்னதுக் காக, இப்படி உன் சந்தோஷத்தைக் கெடுத்துக்குவியா என்ன? இல்ல அப்படிப் பேசினவங் களை நாங்க சும்மா விட்டுடுவோமா? என்ன நடந்ததுன்னு தெரியாம, என் பேரனையும் சத்தம் போட்டு, எல்லோருக்கும் மனக் கஷ்டம் வந்தது தான் மிச்சம். நீ பேசினதைக் கேட்டு, உன் மாமியார் எந்த அளவுக்கு மனசு சங்கடப்பட்டாள்னு தெரியுமா உனக்கு?”

‘அத்தை எப்படி அங்கே?’ திகைப்புடன் பார்த்தாள்.

“அவங்க பேசினதை நீயும், ஈஸ்வரும் மட்டும் கேட்கலை, உன் மாமியாரும் கேட்டிருக்கா. நீ அழுகையோட வந்ததைப் பார்த்துட்டு, உன்னைச் சமாதானப்படுத்தச் சொல்லி ஈஸ்வரனை அனுப்பிட்டு, அப்படிப் பேசினவங்களை கேட்ட கேள்வியெல்லாம் உனக்குத் தெரியுமா?” என்று கேட்டபோது திகைப்புடன் ‘இல்லை’ எனத் தலையாட்டினாள்.

“இப்படித் தெரிய வேண்டியதை தெரிஞ்சிக்காம, தேவை இல்லாததையெல்லாம் எதுக்கு மண்டையில போட்டு உருட்டிக்கிட்டு இருக்க? ரெண்டு நாளா சந்தோஷமா இருக்கறாப்போல தெரிஞ்சாலும், எதையும் வெளிய சொல்லாம அவ படற வேதனையை என்னால பார்க்க முடியலை. சொல்லணும்னு தோணுச்சி! சொல்லிட்டேன்!” என்றவர் ‘அதுக்கு மேல உன் இஷ்டம்’ என்பது போல பார்த்தார்.

‘தான் எத்தனை சுயநலக்காரி! எங்கம்மா உயிரோடு இருந்திருந்தால், இப்படி நடந்திருக்குமான்னு கேட்டேன். கோபமிருக்கும் இடத்தில்தான், குணம் இருக்கும் என்பது இது தானா? அந்த அன்பான தாயுள்ளத்தைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாளாக இருந்திருக்கேன். அவங்க கிட்ட எப்படி முகத்தைத் திருப்பிக் கொண்டு போனேன். அவங்க மனம் எத்தனை வேதனைப் பட்டிருக்கும்! இப்போ எப்படி அத்தையோட முகத்தைப் பார்ப்பது’ என்பதை நினைத்துக் கண் கலங்கியவள், “என்னை மன்னிச்சிடுங்க ஆச்சி!” என்று தழுதழுத்தாள்.

“மண்டு! உன்கிட்ட நான் எதிர்பார்க்கிறது மன்னிப்பை இல்லை!”எனக் குறும்பாகச் சிரித்தார். அவரது சிரிப்புக் கான காரணத்தை உணர்ந்து கொண்டவளது கண்கள் நாணத்தை வெளிப்படுத்த, உதடுகள் புன்னகையைச் சிரமப்பட்டு அடக்கின.

*********

“அத்தை...!” மருமகளின் குரல் கேட்டதும் படுத்திருந்தவர் திடுக்கிட்டு எழுந்து உடனே கதவைத் திறந்தார்.

“அத்தை...!” என்றபடி தன் மீது சாய்ந்து அழும் மருமகளை, என்ன ஆயிற்று என்று புரியாத போதும், ஆறுதலுடன் அணைத்துக் கொண்டார். பின்னாலேயே வந்து நின்ற மாமியாரின் முகத்திலிருந்த புன்னகையும், கசிந்திருந்த ஈரவிழிகளும் எல்லாவற்றையும் புரியவைக்க, சந்தோஷத்தில் பூரித்துப் போனார். பேச்சற்ற அந்த அமைதி கூட அன்று அழகாகத் தான் தெரிந்தது விஜயாம்மாவிற்கு.

விஜயாம்மா தன் மௌனத்தைக் கைவிட்டு மருமகளிடம் மனம் விட்டுப் பேசினார். தன் தவறுகளுக்கு மன்னிப்பை யாசித்தாள் மானசா.

அவளது கன்னத்தை பாசத்துடன் வருடியவர், “நீ வேணா, ஒரு ரெண்டுநாள் உங்க அப்பா கூட ஊருக்குப் போய் இருந்துட்டு வாயேன் மானசா” என்றார்.

“இல்ல அத்தை. நம்ம வீட்டுக்கே போகலாம்” என்ற (மரு)மகளைப் பெருமையுடன் பார்த்தார்.


29

கூர்க். இரண்டு நாட்களுக்குப் பிறகு...

ஜாகிங்கை முடித்துக் கொண்டு கேட்டைத் திறந்து உள்ளே வந்தவன்,வாசலில் நின்றிருந்த காரைப் பார்த்தான். ‘ஐயா வந்திருக்காரா என்ன?அதுவும் இத்தனைக் காலையில்!’ என்ற யோசனையுடன் வீட்டினுள் நுழைந்தவன், ஹால் சோபாவில் அமர்ந்திருந்த ஐயம்மாவைக் கண்டதும், ஆச்சரியத்தின் எல்லையை அடைந்தான்.

“ஐயம்மா! இதென்ன சர்ப்ரைஸ். நீங்க மைசூர் வந்திருப்பதையும் சொல்லலை. இங்கே வர்றதாகவும், ஒரு வார்த்தை சொல்லலை. ஐயா கூட வந்தீங்களா? ஐயா எங்கே?” என்று கேட்டான் ஈஷ்வர்.

“நேத்து வந்தோம். நீ பிசியா இருப்ப. எதுக்கு உனக்குச் சிரமம் கொடுக்கணும்னு நானே, என் பேத்தியோட கிளம்பி வந்துட்டேன்.”

ஐயம்மாவின் குற்றம் சாட்டும் குரலையும், ஆராய்ச்சிப் பார்வையையும் கவனியாதவன் போல, “மீனா வந்திருக்காளா?” என கேட்டுக் கொண்டிருக்கும் போதே, காபி டிரேயுடன் ஹாலுக்குள் பிரசன்னமானாள் மானசா.

பேசிக் கொண்டே நிமிர்ந்தவனின் கண்களில் எழுந்த பிரகாசமானது, அடுத்த நொடியே அது பொய்யோ எனும்படி சட்டென்று மறைந்து போனது. ஆவலுடன் கணவனைப் பார்த்தவளது பார்வை, அவனது கழுத்திலிருந்த மஃப்ளரில் படிந்ததும் உற்சாகமும், சந்தோஷமும் பீறிட்டது.

“இந்தப் பேத்தி கூட வந்தீங்களா?” எனக் கேட்டுக் கொண்டே சோபாவிலிருந்து எழுந்து, “எப்படியிருக்க மானசா?” என்றபடி காஃபி கப்பை எடுத்துக் கொண்டு, “குளிச்சிட்டு வந்திடுறேன் ஐயம்மா!” என்றவன், அவளுக்குப் பதிலளிக்கும் வாய்ப்பைக் கொடுக்காமல் படியேறினான்.

ஆர்வத்துடனும், ஏக்கத்துடனும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, அவன் விசாரித்ததும் உச்சி குளிர்ந்து போனது. ஆனால், பதில் சொல்ல வாய் திறக்கும் முன்பே தன் அறையை நோக்கிச் சென்றவனைக் கண்டதும், அத்தனை உற்சாகமும் வடிந்து போனது. இந்த விசாரிப்பு கூட ஐயம்மாவுக்காக எனவும் புரிந்தது.

“ஷ்! பொண்ணே எதுக்கு இப்போ முகத்தைத் தூக்கி வச்சிட்டிருக்க? இத்தனை நாள் நீ பிடிவாதம் பிடிச்ச. இன்னைக்கு, அவன் முறுக்கிட்டுப் போறான். ஆனாலும், எப்படியிருக்கன்னு விசாரிக்கத் தானே செய்தான். ஏன் வந்தேன்னு கேட்கலையே? உன்னைப் பார்த்ததும் அவன் மலையிறங்கிட்டா, நீ அவன் தலைமேல உட்கார்ந்துடு வேன்னு பயம். விடாதே போ. குளிக்கப் போயிருக்கான், கூடவேயிருந்து அவனுக்கு வேணுங்கிறதை செய்” என்று கட்டளையிட்டு அனுப்பி வைத்தார்.

தயங்கித் தயங்கி அறைவாசலில் நின்றவள், அவன் காபியைக் குடித்துவிட்டு, கப்பை கீழே வைக்கும் நேரத்தில் ஓடிச்சென்று கைநீட்டினாள்.

திரும்பிப் பார்த்தவன், “நீ ஏன் இதெல்லாம் செய்யற?” என்றான் கடினமான முகத்துடன்.

“ஆ..ஆச்சிதான்!” என திக்கித்திணறினாள்.

“இங்கே பார்! யாருக்காகவும் உன் சுயத்தை நீ விட்டுக் கொடுக்க வேணாம். நீ நீயாகவே இரு!” என்றவன் கப்பை அவளது கைகளில் கொடுத்து விட்டு, டவலுடன் குளியலறைக்குள் நுழைந்தான்.

சோர்ந்த முகத்துடன் இறங்கி வந்தவளைப் பார்த்த ஆச்சி, “விட்டுத் தள்ளு ! நீ போய் டிபன் வேலையைப் பார். சொல்றவன் சொல்லிட்டுப் போகட்டும். நான் இருக்கேங்கறதுக்காவது, ஒண்ணும் சொல்லமாட்டான்” என்று அவளைச் சமாதானப்படுத்தினார்.

புன்னகைத்தாலும் மனத்திற்குள் சுணக்கம் இருக்கத் தான் செய்தது. சமையலறைக்குள் புகுந்தவள், உருளைக் கிழங்கு மசாலாவை கேசரோலில் வைத்து விட்டு, பூரிக்கு மாவு பிசைந்து ஈரத்துணியைப் போட்டு மூடிவைத்தாள். சமையலறையிலிருந்த அலாரம் மணி எட்டு என அலறி அறிவிக்க, “ஆச்சி! டிபன் ரெடி. ரெண்டு பேரும் சாப்பிட வாங்க” என்று அழைத்ததும் மறுப்பில்லாமல் வந்தமர்ந்த வன், தட்டிலிருந்த பூரியை உண்டு முடித்ததும், “இன்னொன்னு வச்சிக்கோங்க” என மேலும் இரண்டு பூரிகளை வைக்கப்போக, ‘போதுமென்பது போல’ கைநீட்டித் தடுத்து விட்டு எழுந்து சென்றான்.

மானசாவுக்கு எரிச்சலாக வந்தது. “எத்தனை நேரம் தான் பொறுமையை இழுத்துப் பிடிச்சிகிட்டு நிக்கிறது. வாய்ல என்ன கொழுக்கட்டையா இருக்கு? வேண்டாம்னு சொன்னா, எங்கேயாவது குறைஞ்சிடுவாராமா?” என முணுமுணுத்தபடி டைனிங் சேரில் அமர்ந்தாள்.

“மானசா, அவன் மதியானம்...” என ஆரம்பித்த ஆச்சியை முறைத்தாள்.

“இங்கே பாருங்க ஆச்சி! நீங்க இருக்கீங்களேன்னு பார்க்கறேன். இல்லைனா எனக்கு வர்ற கோபத்துக்கு, என்ன செய்வேன்னே தெரியாது?” எனப் படபடத்தாள்.

“ம்! என்னடா இந்தப் பொண்ணை இங்கே விட்டுட்டுப் போகணுமே, இவன் இப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சிருந்தா, என்ன செய்யறதுன்னு நான் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தேன். இப்ப, நீ படபடக்கறதைப் பார்த்தா, என் பேரனை நினைத்துத் தான் கவலைப்படணும் போலிருக்கு!” என்றவர் தன் முகவாயில் கை வைத்து, வியப்பது போல கேலி செய்தார்.

வெட்கத்துடன், “போங்க ஆச்சி” என முகம் சிவந்தாள் மானசா.

“போறேன்டீயம்மா போறேன். நான் கொஞ்ச... ஒரு பேரனையோ, பேத்தியையோ பெத்துக் குடு. அவனைச் சீராட்டி வளர்த்து ஆளாக்கி, ஒரு கல்யாணம் செய்து கொடுத்து..., அவனுக்குப் பிறக்கப்போற பிள்ளையையும் பார்த்துட்டா...” என நீட்டி முழக்க, “ஹய்யோ, என் ஸ்வீட் ஆச்சி!” என்றபடி சலுகையுடன் அவரது தோளைக் கட்டிக்கொண்டு சிரித்தாள்.

மாடிப்படியிலிருந்து ஈஸ்வர் இறங்கி வரும் ஓசை கேட்கவும், “உங்க உம்மணாமூஞ்சி பேரன் வராரு; நான் எஸ்கேப்!” என்றவள், டைனிங் டேபிளை சுத்தம் செய்வது போல பாவனை செய்தாள்.

“ஐயம்மா! நான் கிளம்பறேன். மதியானம் முடிந்தால் வரேன். நீங்க நேரத்தோடு சாப்பிடுங்க” என்றவன் ஷூக்களை அணிய ஆரம்பித்தான்.

“ஆச்சி, என்ன செய்வீங்களோ தெரியாது? அவர் மதியானம் சாப்பிட வரணும் சொல்லிட்டேன்!” என்று கண்களை உருட்டினாள்.

“அதுக்கு எதுக்குடி கண்ணாம்முழியை இந்த உருட்டு உருட்டுற?” என கிசுகிசுத்தவர், அவளது முறைப்பைக் கண்டு பார்வையை பேரனிடம் திருப்பினார்.

“ஈஸ்வரா! நான் இங்கே இருக்கப்போறதே ரெண்டு நாளைக்கு. அதுவரைக்குமாவது எங்க கூட சேர்ந்து சாப்பிடக்கூடாதா?” என்றவரையும், தான் பார்ப்பது தெரிந்ததும் கவனமாக பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்ட மனைவியையும் மாறிமாறிப் பார்த்தான்.

“சரி வரப் பார்க்கிறேன்” என விடைபெற்று வாசல் வரை சென்றவன் திரும்பி, “பூரி, மசால் ரொம்ப நல்லாயிருந்தது” என்று புன்னகைக்காமலேயே சொல்லி விட்டு வெளியேறினான்.

ஓடிவந்து கதவருகில் நின்றவள், அவனது கார் சென்றதும் உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தாள். “பூரி மசால் நல்லாயிருந்தது. அதைக் கொஞ்சம் சிரிச்சிகிட்டே சொன்னா, எங்கேயாவது குறைஞ்சிடுவாராமா?” என கடுகடுத்தாள். அவன் சொன்னதுபோல செய்து காட்ட ஆச்சிக்கு சிரிப்பு பொங்கி வந்தது. இருந்தாலும் அடக்கிக் கொண்டார்.

‘ஆ..’ என வாயைத் திறந்த ஆச்சியின் வாயைப் பொத்தி, “எதுவும் பேசக்கூடாது சொல்லிட்டேன்!” என்றவளின் கரத்தைத் தட்டி விட்டார்.

“வயசான காலத்துல ஏண்டி இப்படிப் படுத்தற? நீ இங்கே கிளம்பி வர்ற குஷியில் ராத்திரி பேசிப்பேசியே ரெண்டு மணி வரை தூங்கவிடாம பண்ண. காலைல மூணு மணிக்கெல்லாம் எழுப்பி கூட்டிக்கிட்டு வந்து, கொஞ்ச நஞ்சமா அமர்க்களம் பண்ண. இப்போ என்னடான்னா, ஒரு கொட்டாவி விடக்கூட வாயை திறக்க விடமாட்டேன்ற! என்ன நினைச்சிட்டு இருக்க?” என்று தனது வெண்கலக் குரலில் ஒரு அதட்டல் போட, “ஹி ஹி!” என அசடுவழிந்தவள், விட்டால் போதுமென அங்கிருந்து எழுந்தோடினாள்.

நன்றாகத் தூங்கி எழுந்து வந்தவர், டைனிங் டேபிளின் மீது கைநீட்டி, அதில் தலை வைத்து சாய்ந்தபடி அமர்ந்திருந்தவளை பார்த்தார். செய்து வைத்திருந்த உணவு வகைகள், தீண்டப்படாமல் அப்படியே இருந்தது.

“மானசா! ஈஸ்வரன் இன்னும் வரலையா?”

“இன்னும் இல்லை ஆச்சி. ஏதோ அவசர மீட்டிங்காம். ஆஃபிசுக்குப் போன் செய்தேன். அங்கே சொன்னாங்க” என்றாள் சோகத்துடன்.

சரி, அவன் வருவான்... நீ சாப்பிடு. அவன் சொல்லிட்டுத் தானே போனான். அவனுக்காக எதுக்குக் காத்திருக்க?”

“உங்க பேரன் ப்ளானோட தான் சொல்லிட்டுப் போயிருக்கார். நான் வந்தது அவருக்குப் பிடிக்கலை. நான் என்ன அவருக்காகவா காத்திருந்தேன்? நீங்க வரணுமேன்னு தான் உட்கார்ந்திருந்தேன். நீங்க உட்காருங்க” என பேசிக் கொண்டே தட்டில் மளமளவெனப் பரிமாறியவள், அதே வேகத்தோடு உணவை வாயில் அடைத்துக் கொண்டாள்.

ஏமாற்றத்தால் வந்த கோபம்; கோபத்தால் வந்த வேகம். அழாமலிருக்க முயற்சிக்கிறாள் என்று ஆச்சிக்குப் புரிந்தது.

“நிதானமா சாப்பிடு. இப்படி வகைவகையா செய்து, ருசி தெரியாம எடுத்து விழுங்கணுமா?”

“ருசியாம் ருசி! யாருக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்தேனோ, அவரே வரலை! அப்புறமென்ன, ருசி வேண்டியிருக்கு” என்றவள் தட்டிலிருந்ததைக் காலி செய்து விட்டு, அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

‘தன்மீது அவனுக்கு ஏன் இத்தனைக் கோபம்? போனையும் எடுக்கலை. ஆஃபீசுக்குப் போன் செய்தால் மீட்டிங்கில் இருக்கார்ன்னு சொல்றாங்க. ஒரு ரெண்டு நிமிஷம், இத்தனை முறை போன் செய்ததுக்காகவாவது பேசியிருக்கலாமில்லையா?’ என மனம் புலம்பியது.

*********

இரவும் அவன் வரத் தாமதமாக, ஆச்சிக்கு மட்டும் இரவு உணவைக் கொடுத்தவள், அவர் சொல்லச் சொல்லக் கேட்காமல் மீதமிருந்தைப் ப்ரிட்ஜிக்குள் வைத்துவிட்டு, அறைக்குச் சென்று படுத்து விட்டாள்.

திருமணம் ஆன நாளிலிருந்து நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் நினைத்துப் பார்த்தவளுக்கு, ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. ‘தன் அத்தனை உதாசீனமான நடவடிக்கைகளையும், அலட்சியமான பேச்சுக்களையும், முன்னுக்குப் பின் முரணான செயல்களையும், முடிந்த அளவுக்கு பொறுத்துத் தான் போயிருக்கிறான். இதே நிலை தனக்கு நேர்ந்திருந்தால் கட்டாயம் இந்நேரம் பெரிய பிரச்சனையையே உருவாக்கியிருப்பேன். அவன் மீது இப்போது வருந்தப்பட்டு எந்தப் பிரயோஜனமும் இல்லை.

அவனருகில் இருந்து கொண்டு, அவனது பாரா முகத்தை மட்டும் தன்னால் சகித்துக் கொள்ள முடியாது என்று தெளிவாகப் புரிந்தது. நாளை ஆச்சியுடனேயே மைசூருக்குக் கிளம்பிச் சென்று விட வேண்டும். சில நாட்கள் பார்க்கலாம். அவனது கோபம் மாறாமலிருந்தால், அவன் சொன்னது போலவே பிரிந்து விட வேண்டியது தான்’ என நினைக்கும் போதே அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

இமைகளைத் தட்டி விழித்தும், ஆழ்ந்த மூச்செடுத்தும் அழுகையை தடுக்க முயன்றவள் ஓடிச்சென்று கட்டிலில் விழுந்தாள். வேதனை நிறைந்த நினைவுகளின் தாக்கம் மனத்தை ரணமாக்கியது. அதை நினைத்து நினைத்துத் தன்னை வேதனைப்படுத்திக் கொண்டவளுக்கு, ஏனோ தன் ‘ஈகோ’வை விட்டுவிட்டு, கணவனிடம் மனம்விட்டுப் பேச வேண்டுமென்று தோன்றவேயில்லை. தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்பவன், தன் தவறுகளை மன்னித்து விடுவானென்றும் தெரியாமல் போனது.

உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவள், ஜீப் வந்து நிற்கும் சப்தம் கேட்டதும் நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பன்னிரெண்டு. சில நிமிடங்களில் அறைக்கதவு திறக்கும் சப்தம் கேட்டதும், தூங்குவது போல கண்களை மூடி பாசாங்கு செய்தாள். அறைக்குள் வந்தவன், கையில் வைத்திருந்த பாலை டேபிள் மீது வைத்து விட்டு, உறங்குபவளைப் பார்த்தான்.

ஹீட்டரைப் போட்டுவிட்டு, வார்ட்ரோபை திறந்து பூந்துவாலையுடன் குளியலறைக்குள் நுழைந்தான். மிதமான சூட்டில் சுகமாகக் குளித்தவன், தலைமுடியை தட்டிவிட்டபடி வெளியே வர, தூங்குவது போல படுத்திருந்தவளின் முகத்தில் சிற்சில நீர்த்துளிகள் தெறித்து விழுந்தது. திடீரென முகத்தில் குளிர்ந்த நீர் விழவும், சட்டென்று கண்களைத் திறந்தவள் முகத்தைத் துடைத்தாள்.

அவளது கைவளையல் ஓசையில் திரும்பிப் பார்த்தவன், “சாரி மானசா!” என்றபடி உடை மாற்று வதற்கென உள்ளேயே இருந்த பிரத்தியேக அறைக்குச் சென்று இரவு உடையில் வர, முழங்காலைக் கட்டியபடி கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் மானசா.

“உன் தூக்கத்தைக் கெடுத்திட்டேனா?” என்றபடியே அவளருகில் அமர்ந்தான்.

“தூங்கினா தானே கெடுக்க முடியும்” என்றாள் வெடுக்கென.

நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். “அப்போ நான் வந்தது தெரிந்தும், தூங்கற மாதிரி நடிச்சிருக்க” என்றான் திடமான குரலில்.

“ஆமாம். ஆனா, உங்களைப் போல எனக்கு நடிக்க வரலையே” என்றாள் கிண்டலாக.

“நான் நடிக்கிறேனா? என்ன கொழுப்பா?”

“ஆமாம். அப்படியே வச்சிக்கோங்க. காலைல வேற வழி இல்லாமல் சகிச்சிகிட்டு, நான் செய்த டிபனை சாப்பிட்டுட்டு, ஆச்சி எதிரில் பாராட்டிட்டும் போயிட்டீங்க. மதியானம் சாப்பிட வருவீங்கன்னு எத்தனை தூரம் எதிர்பார்த்துகிட்டு இருந்தேன். எனக்காக வேணாம், ஆச்சிக்காக வந்திருக்கலாமில்ல” என்றாள் ஆதங்கத்துடன்.

‘அனைத்தையும் மறந்து முழுமனதுடன் தன்னைத் தேடி வந்திருப்பவளுக்கு, இனி தன் காதலை மட்டுமே தரவேண்டும்’ என எண்ணிக்கொண்டு வந்திருந்தவன், நெற்றி சுருங்க, கயல்விழிகள் இரண்டும் அவள் பேச்சுக் கேற்றபடி நர்த்தனம் ஆட, நாசி விடைக்க, கோபத்தில் துடித்த இதழ்களிரண்டும் சுழித்துப் பேச, சுழித்த உதடுகளின் எதிரொலியாக மாம்பழக் கன்னங்களில் விழுந்த சிறு கன்னக்குழி’ என அவள் முகத்தின் ஜாலங்களை உள்வாங்கிக் கொண்டிருந்தான்.

பேசிய பேச்சில் நா வரண்டு போக, தண்ணீரை எடுத்து மடமடவென குடித்து முடித்தாள். வைத்தகண் வாங்காமல், பதில் பேச்சும் பேசாமல் அமர்ந்திருந்த வனைப் பார்த்ததும் எரிச்சல் வர, பட்டென அவன் முழங்கையில் தட்டினாள்.

“ஹே! இப்போ எதுக்கு என்னை அடிச்ச?” அவனும் ஊடலுக்குத் தாவினான்.

“இங்கே என்ன டிராமா வசனமா பேசிட்டு இருக்கேன். ‘ஆ’ன்னு பார்க்க?” எனப் பொங்கினாள்.

“ஆன்னு பார்த்தேனா! மனுஷன் ரொமான்ட்டிக்காக பார்ப்பது கூடவா புரியாது, இந்த டியூப் லைட்க்கு” என முணுமுணுத்தான்.

மூக்கு விடைக்க, “திட்டுங்க திட்டுங்க, நான் டியூப்லைட் தான். உங்களுக்காகவே உங்களைத் தேடி ஓடிவந்தேன் இல்ல, நான் டியூப்லைட் தான். திட்டுங்க... இன்னும் எத்தனை நாளைக்கு? நாளைக்கு... ஒரு நாளைக்கு மட்டும் தானே.”

கண்கள் இடுங்க, “ஏன் அப்புறம் என்ன செய்யப்போற?”என்றான் ஈஷ்வர்.

“இந்த ஊரை விட்டுப் போறேன். என்னை நீங்க சகிச்சுகிட்டு வாழ வேண்டாம். ஒரு வருஷம் முடியட்டும், அன்னைக்கு நீங்க சொன்னது போலவே...” என்றவள், மேற்கொண்டு பேசமுடியாமல் வெடித்து அழுதாள்.

ஈஸ்வர் திகைத்துப் போனான். ‘ஏதோ கொஞ்சம் விளையாட நினைத்து செய்தால், இப்படித் தப்புத்தப்பாக அர்த்தம் செய்து கொண்டு!’ என நினைத்தவனுக்கு கோபமாக வந்தது. கோபத்துடனே எழுந்தவன் அவள் கரம் பற்றி எழுப்பினான். அவனது வேகத்தில் அவளுக்கு பழைய நினைவு வந்துவிட, கண்களில் மிரட்சி தோன்றியது. ஆனால் அந்த நிமிடம் ஈஸ்வரின் மனத்திலிருந்த வேகம் பார்வையில் இல்லாமல் போனது.

“முட்டாள்தனமாக எல்லாத்தையும் போட்டு குழப்பிக்குவியா நீ? உன்னிடம் நான் விளையாடக் கூடாதா? இப்போ என்ன தெரியணும் உனக்கு? எனக்கு உன்னை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். என் உயிராக உன்னை நேசிக்கிறேன்” என்றவனை இமைக்காமல் ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

அவளது பார்வைக்கு அர்த்தம் புரியாமல், “ஹே! இதுக்கு மேல எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது” என்று நினைத்தவன், வேகமாக அவளைத் தன்னுடன் இறுக்கிக்கொள்ள, அதற்குள் அவனது உதடுகள், அவளது இதழ்களை அணைத்தன. தன் மொத்தக் காதலையும் காட்டிவிடும் வேகம், தன் தாபத்தையெல்லாம் வெளிப்படுத்திவிடும் நிலையிலிருந்தவன், மானசாவின் மனநிலையைப் பற்றிச் சற்று மறந்து போனான்.

கணவனின் வேகத்தைச் சற்றும் எதிர்பார்க்காத மானசா வெலவெலத்துப் போனாள். கணவனின் அன்பிற்காக ஏங்கிய மனத்திற்கு, அவனது பதில் சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அவனது வேகத்தில் திணறினாள். அவனது பொறுமையை சோதித்ததோடு, கோபத்தையும் கிளறிவிட்டோமென புரிந்தது. ஆயினும் அவளது தளிர் உடலும், பூ மனமும் வேகத்தை ஏற்க முடியாமல் தடுமாறியது.

தன்னுடன் இறுக்கி அணைத்திருந்த பிடியிலிருந்து உடலை நெளித்து விலக முயன்றவளை, மேலும் அழுத்தமாக அணைத்தான். இருவருக்குமிடையில் நுழைத்து இடைவெளி ஏற்படுத்த முயன்ற கைகள் பலமிழந்தது. கால்கள் துவள, நிற்க முடியாமல் தள்ளாட, தன் அணைப்பை இளக்கியவனின் கரத்திலிருந்து நழுவி பொத்தென கட்டிலில் விழுந்தாள்.

துவண்டு விழுந்தவளைக் கண்டதும் பதறிப் போனான். தண்ணீரை எடுத்துக் குடிக்கக் கொடுத்தான். அதை மறுபேச்சில்லாமல் குடித்தவள், முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு அவனிடமிருந்து விலகி கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள். எழுந்து நின்ற ஈஸ்வர் கைகளைக் கட்டிக்கொண்டு, அவளையே பார்த்துக் கொண்டிருந் தவன், குத்துக்காலிட்டு, முகத்தை உர்ரென வைத்தபடி அமர்ந்திருந்தவளைக் கண்டு, பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டு நகைத்தான்.

நிமிர்ந்து முறைந்தவள், “வெவ்வவ்வெ” என்று பழிப்பு காட்டி, “என்ன சிரிப்பு வேண்டியிருக்கு இப்போ?” எனப் பொரிந்தாள்.

கட்டிலின் மறுபக்கம் அமர்ந்து, “பேச்சுக்கும், செயலுக்கும் சம்மந்தமே இல்லையே?” என்றவன், மீண்டும் நகைத்தான்.

அவனது கேலியில் அவளது முகம் சுருங்கியது. “ஏன் அத்தான்! என்னைப் பார்த்தா, உங்களுக்குச் சிரிப்பா இருக்கா?” என்று கேட்டவளுக்கு கண்ணைக் கரித்தது.

அவளது மனநிலை புரிய, “இல்லைடா” என்றபடி அவளது கரத்தைப் பற்றினான்.

“ஒண்ணும் தேவையில்லை விடுங்க” என்று அவனது பிடியிலிருந்து கரத்தை உருவியவள், மறுகையால் அவனது இடது கரத்தைத் தள்ளிவிட்டாள்.

அத்தனை நேரம் சிரித்துக் கொண்டிருந்தவன், “ஆ... அம்மா” என்று இடது தோளைப் பற்றிக் கொண்டு வலியில் துடித்துப் போனான். முதலில் விளையாடுகிறான் என நினைத்தவள், அவனது முகம் வேதனையில் கசங்குவதைக் கண்டதும் பயந்து போனாள்.

“எ... என்னங்க...என்னாச்சு?” என்றவள், அவனிடமிருந்து பதில் வரவில்லை என்றதும், “ ஆச்சி...!” என அலறினாள்.

“ஏ மானசா! எதுக்கு இப்படி அலர்ற. பேசாம இரு” என்று அவளது வாயைப் பொத்தினான்.

அவன் சகஜமாகப் பேசுவதைக் கண்டதும்தான் அவளுக்கு மூச்சே வந்தது. “நீங்க திடீர்ன்னு வலியில் துடிச்சதும், பயந்தே போய்ட்டேன். இப்போ ஒண்ணுமில்லையே. என்னாச்சு... எங்கேயாவது அடிபட்டிருக்கா? எப்படி?” என கேள்விகளாக அடுக்கினாள்.

“இரு இரு மூச்சுவிடு. முதல்ல நான் சொல்றதை செய்” என்றவன் டேபிள் மீதிருந்த பாலை எடுத்துக் கொடுத்து, “முதலில் இதைக் குடி! அப்புறம் சொல்றேன்” என்றான்.

“இப்போ இது ரொம்ப முக்கியமா?”

“முக்கியம் தான்! முதல்ல குடி. நைட்ல வெறும் வயித்தோட படுக்காதே” என்றவனின் அக்கறையில் நெகிழ்ந்து போனாள்.

குடிக்காவிட்டால் விடமாட்டான், சொல்லவும் மாட்டான் எனப் புரிய, மடமடவென பாலைக் குடித்துவிட்டு, “குடிச்சிட்டேன். சொல்லுங்க” என்றாள் வேகமாக.

“பெரிசா ஒண்ணும்மில்ல, ஒரு சின்ன விபத்து...” என அவன் சொல்லி முடிக்கவில்லை.

“விபத்தா? நிதானமா வரக்கூடாதா? அப்படியென்ன அவசரம். எப்படியாச்சு? டாக்டர்கிட்ட போனீங்களா? உள்காயம் எதாவது இருக்கப்போகுது” எனப் பதறினாள்.

தனக்காகத் துடிப்பவளை நிதானமாகப் பார்த்தான். மெல்ல அவளது காதருகில் வந்தவன், “ரெண்டு நாளைக்கு முன்னால மதுரையில் மையம் கொண்டிருந்த புயல், மைசூரைத் தாண்டி இன்னைக்கு கூர்கில் கரையைக் கடந்து வந்திடுச்சா. அடி அடின்னு அடிச்ச பேய் மழையில்...” என பேசிக்கொண்டே போக, இவன் தன்னைக் கேலி செய்கிறான் எனப் புரிந்து அவனை முறைத்துக்கொண்டு நின்றாள்.

“பார்த்தியா பேய் மழைன்னு சொன்னதும் நீயே பயந்து நின்னுட்ட...” என்று சொல்லிக் கொண்டிருந்தவனை, “நான் பேயா?” என வேகமாக இடைமறித்தவளை, இழுத்துத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

முதலில் முரண்டுபிடித்தவள் அவனது சிரிப்பைக் கண்டதும், “ஆக்சிடென்ட்னு சொன்னதும் நான் எவ்வளவு பயந்து போய்ட்டேன் தெரியுமா? உங்களுக்குச் சிரிப்பா இருக்கு” என பட் பட்டென்று இரண்டு மூன்று அடியடித்தாள்.

“சாரி சாரி, போதுமா? இனி சொல்லமாட்டேன். இன்னைக்கு நடக்குமோ நடக்காதோன்னு இருந்த கிளையண்ட் மீட்டிங். ரொம்ப நாளா பெண்டிங்ல இருந்ததெல்லாம் பேசி முடிச்சே ஆகவேண்டிய கட்டாயம். அதான் வரமுடியலை. மனசெல்லாம் உன் மேல தான் இருந்தாலும், இத்தனை நாள் நான் பட்ட கஷ்டத்தை நீயும் கொஞ்சம் அனுபவிக்கணும்னு நினைத்து விட்டுட்டேன்” என்றான்.

அவள் அமைதியாக இருப்பதைக் கண்டு, “என்ன ரியாக்ஷன் பெரிசா இருக்கும்னு பார்த்தா, ஒண்ணும் காணோம்?” என்றான்.

“நீங்க சொன்னது உண்மை தானே. ஆனால், இனி விளையாட்டுக்குக்கூட ஆக்சிடெண்ட் அப்படி இப்படின்னு சொல்லாதீங்க. என்னால் தாங்க முடியாது” என்றவள், அவனைத் தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

வார்த்தைகளால் பரிமாற முடியாத தனது நேசத்தை, வார்த்தைகளற்ற அணைப்பில் வெளிப்படுத்தினாள். அவளாகத் தன் மனத்தில் புதைந்திருந்த நேசத்தை உணர்ந்து, வெளிப்படுத்திய முதல் அணைப்பு. கண்டதும் வரக் கூடியதல்ல காதல், விழியில் விழுந்து இதயம் நுழைந்து,உயிரில் கலப்பது(தே) காதல்.

அவனது விழிகளில் விழுந்தாள்;
அந்தி மஞ்சள் நேரத்தில் ஒவியப் பாவையாக!

அவனது இதயம் நுழைந்தாள்;
கம்பீரத்துடன் பாரதியின் புதுமைப் பெண்ணாக!

அவனது உணர்வில் கலந்தாள்;
தன் மனத்தில் எழுந்த காதல் எண்ணங்களுடன்!

அவனது உயிருடன் கலந்துவிட்டாள்;
கசிந்துருகிய காதலுடன்!
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
196
437
63
30

நேரமாச்சே’ என்ற பதைபதைப்புடன், புடவை முந்தானையை இழுத்துச் செருகியபடி வேகமாகப் படியிறங்கியவள், தளர ஆரம்பித்த காசித்துண்டை இறுக்கிச் சுற்றியபடி பூஜையறைக்குள் நுழைந்தாள். நெற்றியில் கீற்றாக விபூதியைப் பூசிக்கொண்டு, குங்குமத்தை வகிட்டில் இட்டுக் கொண்டவள், விளக்கையேற்றினாள்.

‘கடவுளே! எல்லோரும் நல்லா இருக்கணும். இந்த நிம்மதியும், சந்தோஷமும் என்னைக்கும் நிலைச்சிருக் கணும்’ என்ற கோரிக்கையைக் கடவுளிடம் வைத்துவிட்டு வெளியே வந்தாள்.

மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டியபடி, குறுகுறுவென தன்னையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த கணவனைக் கண்டதும், இமைகள் விரிந்தன. அடுத்த நொடியே நாணத்தால் உதடுகள் இறுக அணைத்துக் கொள்ள, கருமணி இரண்டும் என்ன செய்வதெனப் புரியாமல் அலைபாய, இடது கை சூடேறிய கன்னத்தைத் தடவிக் கொடுத்தன.

அவளை நோக்கி முன்னேறி வந்தவன், “மானு! இதென்ன, உன்னோட கண்ணு இப்படிச் சிவந்திருக்கு? ராத்திரி சரியா தூங்கலியா?” என்று குறும்புடன் கேட்க, மானசாவிற்கு வெட்கம் பிடுங்கியது. பதிலேதும் சொல்லாமல் விலகிச் செல்ல முயன்றவளின் கரத்தைப் பிடித்தவன், “கேட்டா, பதில் சொல்லணும்” என்று தன் புறமாகத் திருப்பினான்.

“போங்கத்தான், இப்படியெல்லாம் கேட்டா நான் அழுதிடுவேன்!” என்ற செல்லச் சிணுங்கலுடன் சமையலறைக்குள் நுழைந்தவளைப் பார்த்து உல்லாசமாகச் சிரித்தான்.

செய்த வேலையையே திரும்பத் திரும்ப பதட்டத்துடன் செய்துகொண்டிருந்த மனைவியை ரசித்தபடி சமையல் மேடையில் சாய்ந்து நின்றிருந்தான். அவள் எதிர்பாராத நேரத்தில் பின்னாலிருந்து இறுக அணைத்து, அவளது கன்னக் குழியில் அழுந்த முத்தமிட்டான்.

“ரிலாக்ஸ் மானு!” என்றபடி அவளுடன் இழைந்தவன், வெட்கத்தில் சிவந்துவிட்ட அவளது கன்னத்தை வருடியபடி, “இன்னைக்கு நான் ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். டிஃபனை முடிச்சிட்டு வெளியே போய்ட்டு வரலாம்” என்றதும், “ம்!” என்று பதிலளித்தவளின் கன்னத்தைத் தட்டிவிட்டு நகர்ந்தான்.

காலை உணவுக்குப் பிறகு, ஐயம்மாவையும் தங்க ளுடன் வரச் சொல்லி அழைக்க, “எதுக்குடாப்பா? அப்பறம் என்னைக் கரடின்னு சொல்லவா?” என்று சிரிக்க, “ஐயம்மா...!” என்று சங்கடத்துடன் நெளிந்தான்.

“விளையாட்டுக்குச் சொன்னேண்டா. ரெண்டு பேரும் சந்தோஷமா போய்ட்டு, பொறுமையாக வாங்க” என்றவர் இருவரையும் அனுப்பி வைத்தார்.

அருகிலிருந்த கோவிலொன்றுக்கு முதலில் அழைத்துச் சென்றவன், குஷால் நகருக்கு அருகில் தங்க நிறத்திலான புத்தர் சிலை அமைக்கப்பட்டிருந்த விகாரத்திற்கு அழைத்துச் சென்றான். அந்த இடத்தில் சிறு வயது முதல் முதியவர்கள் வரையிலான திபெத்திய பௌத்தத் துறவிகள் அதிகமிருந்தனர்.

அந்த புத்த விகார வளாகத்தின் இருபுறமும் துறவிகள் தங்கியிருக்க, அறைகளையும் அவற்றுக்கு முன்னாலிருந்த நீண்ட அழகிய பூங்காவையும் பார்த்தபடி கோவிலின் முகப்பை வந்தடைந்தனர் இருவரும்.

தலாய்லாமாவின் உருவப் படம் பதிக்கப்பட்ட புத்த விகாரம் அவர்களை வரவேற்க, வியப்புடன் பார்த்தபடி உள்ளே சென்றாள். திபெத்திய கட்டிடக் கலை அமைப்புடன், தங்கக் கூரையுடன் அமைந்திருந்தது அந்த புத்த விகாரம். அதில் மாபெரும் புத்தர் சிலை தங்கத்தில் ஜொலிக்க, பௌத்த மதத்தை வழிநடத்திச் சென்றவர் களின் பிரம்மாண்டமான சிலைகளும் அமைக்கப் பட்டிருந்தன. கதவுகளில் இருந்த நுணுக்கமான சிற்பங்களும், சித்திர வேலைப்படும் கண்களைக் கவர்ந்தன. புத்தத் துறவிகள் அங்கே அமர்ந்து இசைக்கருவிகளை இசைத்தபடி பாடல்கள் பாடிக்கொண்டிருந்தனர்.

“ஹப்பா! எவ்வளவு அழகு. அதுவும் இந்த குட்டிக் குட்டி துறவிங்கள்ளாம், இந்த ட்ரஸ்ல எவ்வளவு அழகா இருக்காங்க. எனக்கு என்னமோ திபெத்ல இருக்கறாப் போல இருக்கு. அவங்களோட கட்டிடக்கலை, அதுவும் இந்தக் கலர் காம்பினேஷன் நீலமும், சிகப்பும் ரொம்பவே அருமை. ஆனால் இந்த ஓவியத்தையெல்லாம் பார்க்கத் தான் கொஞ்சம் பயம்மா இருக்கு” என்றாள்.

சிரித்தவன், “நம்ம இந்து கோவில்கள்ல எப்படி நாம கடவுளோட திருவிளையாடல்களை சிற்பமாகவும், ஓவியமாகவும் வடிச்சிருக்கோமோ, அப்படித்தான் இவங்களும் செய்திருக்காங்க” என விளக்கினான்.

மேலும் சிறிது நேரம் அமர்ந்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த குட்டித் துறவிகளைச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். “மானு கிளம்புவோமா ” என்றதும் மனமே இல்லாமல், குழந்தைகளுக்கு டாட்டா காட்டிவிட்டு கிளம்பினாள்.

அவர்கள் வீட்டிற்குச் செல்லும் வழியிலேயே சென்றவன், வீட்டைத் தாண்டிச் செல்லவும், “இந்தப் பக்கம் எங்கே போறீங்க?” என்று வினவினாள்.

“உன்னை ஒரு முக்கியமான இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போறேன்” என்றவன், ஆள் அரவமே இல்லாமல் சற்று மேடாக வளைந்துச் சென்ற பாதையில் ஜீப்பை நிறுத்தினான்.

சுற்றும்முற்றும் பார்த்த மானசா, “இந்த மாதிரி ஒரு இடத்தை நீங்க எப்படித் தான் கண்டு பிடிக்கிறீங்களோ?” என்று சிரித்தபடி அவனைப் பின்தொடர்ந்தாள்.

“என்ன மேடம் செய்வது? இங்கே வந்ததால் தான், வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பமே வந்தது” என்றபடி புன்னகைத்தான்.

“அதென்ன... அப்படி ஒரு திருப்பம்?”

“வாங்க, வந்து பார்த்தால் தெரிஞ்சிடப் போகுது” என்றவன், மேட்டில் ஏற ஆரம்பித்தான்.

பாதி தூரம் ஏறியதும் இடுப்பைப் பிடித்தபடி, “ஹப்பா! இத்தனை நெட்டாக இருக்கு. என்னால முடியலை” என பாதி தூரத்திலேயே நின்றுவிட்டாள்.

“ஆசைஆசையாக உன்னைக் கூட்டிட்டு வந்தா, இப்படி பாதியில் நின்னா எப்படி? வா வா” என்று அவளது கரத்தைத் தன் கரத்துடன் பிணைத்துக்கொண்டு, மலையின் உச்சிக்கு அழைத்துச் சென்றான்.

மூன்று புறமும் மலைகள் சூழ்ந்திருக்க, ஒரு பக்கம் காவிரி அன்னை நதியாக வளைந்து நெளிந்து, சுழன்று ஓடிக் கொண்டிருந்தாள். சந்தோஷச் சிரிப்புடன் திரும்பி ஈஸ்வரைப் பார்த்தாள். ‘எப்படி’ என்பது போல புருவத்தை உயர்த்திச் சிரித்தவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“அப்படி என்ன திருப்பம் வந்தது இந்த இடத்தில்?” ஆர்வத்துடன் விழிகள் மின்ன ஈஷ்வரைக் கேட்டாள்.

அவளைத் தன் கைவளைவில் கொண்டு வந்தவன், “என்னுடைய தேவதையை, முதன்முதலில் இந்த இடத்திலிருந்து தான் பார்த்தேன்!” என ஆழ்ந்த குரலில் சொன்னதும், நிமிர்ந்து அவனது முகத்தைப் பார்த்தாள். ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டி, “அதோ தெரியுதே ஒரு பாறை, அது மேலே நீ சாய்ந்து கைகட்டியபடி நின்னுகிட்டு இருந்த போது தான், என்னுடைய காமிராவில் சிக்கின. கரும்பச்சை சல்வார்ல, ஒரு சிற்பம் மாதிரி... அன்னைக்கு என் காமிராவில் நீ சிக்கின; அதுக்குப் பின்னால் வந்த நாள்ள, நான் தான் உன்கிட்ட சிக்கிக்கிட்டேன்” என்று சிரித்தவனை, இமைக்காமல் பார்த்தாள் மானசா.

“என்ன அப்படியே ‘ஸ்டன்’னாகி நிக்கிற?” என்றவனை, ஒருவிதமான பாவனையுடன் பார்த்தவளின் கண்களில் கண்ணீர் திரள ஆரம்பித்தது.

அவனை இறுக அணைத்து முத்த மழையால் நனைத்தவள், சட்டென்று விலகினாள். அவளது உணர்ச்சி வெளிப்பாட்டில் பொதிந்திருந்தவன், அவளது விலகலைப் புரியாமல் பார்த்தான். அதற்கான காரணமும் புரிந்துவிட, அவளை நிறுத்தி ஆதரவுடன் தோளோடு அணைத்துக் கொள்ள, அவனது அணைப்பில் பாந்தமாக தன்னைப் பொருத்திக் கொண்டாள்.


*********

இருவரும் வீட்டிற்கு வந்த போது சௌந்தரபாண்டியனும், விஜயாம்மாவும் வந்திருந்தனர். எதிர்பாராத அவர்களது வருகையால் உற்சாகமடைந்தவள் மாமனாரை வரவேற்றுவிட்டு, “அத்தை” என்று விஜயாம் மாவைக் கட்டிக்கொண்டாள். மகன், மருமகள் இருவரின் முகத்திலும் தெரிந்த சந்தோஷத்தைக் கண்டதும், அவரது உள்ளம் மகிழ்ச்சியில் பூரித்தது.

மதிய விருந்து, பேச்சு, சீண்டல் என வீடே கலகலத்தது. பெரியவர்கள் மூவரும் அர்த்தம் பொதிந்த பார்வையொன்றைப் பரிமாறிக்கொண்டனர். சௌந்தர பாண்டியன் வந்த விஷயத்தை ஆரம்பித்தார். அவர் சொல்லச் சொல்ல அவர்களின் திடீர் வரவிற்குக் காரணம் புரியாமலிருந்தவர்களுக்கு, மெல்லப் புரிய ஆரம்பித்தது. முன்தினம் மாலை ரஞ்சித்தின் பெற்றோர் வந்திருந்ததா கவும், தன் மகனை மன்னித்து, வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டதாகக் கூற, ஈஸ்வர் நிர்தாட்சண்யமாக மறுத்து விட்டான்.

“யார் சொன்னாலும், இந்த விஷயத்தில் என் முடிவை மாத்திக்க மாட்டேன். அவன் பெயிலில் வருவதோ, வாய்தா வாங்கி வழக்கை தள்ளிப் போட்டுக்கறதோ... என்ன வேணா செய்துக்கட்டும்; அது அவனோட சாமர்த்தியம். ஆனால், இந்தக் கேஸை எதுக்காகவும் வாபஸ் வாங்கமாட்டேன். இனி இதைப் பத்தி என்னிடம் யாரும் பேசவேணாம்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட, ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டனர்.

”நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுடா கண்ணா” என விஜயாம்மா ஆரம்பிக்க, “சாரிம்மா! இந்த விஷயத்தில் என்னைக் கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணாதீங்க. அவன் வெளியே வந்தால், பிரச்சனை எனக்கு மட்டும் இல்லை...” என்றவன் சொல்ல வந்ததை சொல்லாமல், மனைவியைப் பார்த்தான். “நான் கொஞ்சம் தனியாக இருக்கணும்” என்றவன், எழுந்து தன்னறைக்குச் சென்று விட்டான்.

மகனது வாதத்திலிருந்த உண்மை புரிந்தாலும், ஒரு தாயின் கண்ணீர் அவரைச் சற்று அசைத்துப் பார்த்திருந்தது. விஜயாம்மா சங்கடத்துடன் மருமகளைப் பார்க்க, அவளும் தயக்கத்துடன் மாமியாரைப் பார்த்தாள்.

“இவன் ஒத்துக்கமாட்டான்னு தெரிந்துதான் நான் நேரில் பேச வந்தேன். இவன் இப்படிப் பேசறானே அத்தை” என சிவகாமி ஆச்சியிடம் வருத்தத்துடன் சொன்னார் விஜயாம்மா.

“அவனைப் பத்தி தெரியும் தானே. யோசி! அவன் சொல்றதுல இருக்கற நியாயம் புரியும். கடவுள் மேலே பாரத்தைப் போட்டுட்டுப் போ” என மருமகளுக்குச் சொன்னவர், “மானசா, அவன் ரொம்பக் கோபமாக இருக்கான், நீ கொஞ்சம் போய்ப் பாரும்மா” என்று அனுப்பிவைக்க, அமைதியாக எழுந்து சென்றாள் அவள்.

அறைக்குள் வந்தவள், கண்களை மூடிப் படுத்திருந்தவனைப் பார்த்தாள். “என்னங்க...” என்று அவனது தோளைத் தொட்டாள்.

“மானு! வேணாம்...” என்றான் கண்களைத் திறக்காமலேயே.

“இல்லைங்க அது” என்றவளை கண்களைத் திறந்து முறைத்தான்.

அவனது பார்வையில் தெரிந்த கோபத்தில் மிரண்டு போய், இரண்டடி பின்னாலேயே நகர்ந்தவள், வேகமாக அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.

‘அவனுக்கு இத்தனைக் கோபம் வருமா என்ன? பார்வையாலேயே தன்னைப் பேசவிடாமல் செய்து விட்டானே’ என நினைத்துக் கொண்டாள். அதுவே அவனிடம் கேட்க நினைத்த கேள்விகளைக் கேட்க விடாமலும், சொல்ல நினைத்ததைச் சொல்ல விடாமலும் செய்தது.


31


சில மாதங்களுக்குப் பிறகு

சென்னை பாலவாக்கத்தில் உள்ள நிழல் உலகின் முடிசூடா மன்னன்- ரத்னவேலுவின் பண்ணை வீடு.

போனில் பேசிக் கொண்டிருந்த ரத்னவேலு, தன்னெதிரில் வந்து நின்ற ஷக்தியைக் கண்டதும், “நான் அப்புறம் பேசறேன்” என்றபடி போனை அணைத்தவர், “உட்காரு ஷக்தி” என்று சோஃபாவைக் காட்டினார்.

ஷக்தியும் அமைதியாக அமர்ந்தான். “அப்புறம்... என்ன முடிவு பண்ணியிருக்க?” என்று கேட்டார்.

நெற்றியைத் தடவிக்கொண்டவன், “உங்ககிட்ட எல்லாத்தையும் சொன்னது தானே” என்றான் திடமாக.

“எங்களை விட்டுக் கிளம்பறதுல முடிவா இருக்க...! ” என்றார்.

“இல்லண்ணே! பாதியில் தொலைச்சிட்டு வந்த என்னோட வாழ்க்கையைத் தேடிப் போறேன்” என்றவனது கண்கள் ஈரமாகியது.

“ம். நாலு வருஷமாகியும், உன்னால அந்தப் பொண்ணை மறக்கமுடியலை இல்ல?”

“ஆமாம்...” என்றான்.

“அந்தப் பொண்ணு இப்போ எங்கே இருக்குன்னு தெரியுமா?”

“மைசூர்ல ஒரு காலேஜில் பி.ஜி. சேர்ந்தாள்னு தெரியும். மத்தபடி வேற எந்த விஷயமும் தெரியாது.”

சிறிதுநேரம் யோசித்த ரத்னவேலு, மூர்த்தியைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார். பிறகு, “சரி ஷக்தி, நீ கேட்டபடியே உன்னை இங்கேயிருந்து அனுப்பி வச்சிடுறேன். ஆனா, அதுக்கு முன்னாடி நீ கடைசியா எனக்கு ஒரு வேலை செய்யணும்...” என்றார்.

அத்தனை சீக்கிரம் ரத்னவேலுவின் சம்மதம் கிடைக்கும் என அவன் எதிர்பார்க்கவே இல்லை. சந்தோஷத்துடன், “என்ன பண்ணணும் சொல்லுங்க?” என்று கேட்டான்.

“ஒருத்தனைப் போடணும்...” என்று சர்வ சாதாரணமாகச் சொல்ல ஷக்தி திகைத்துப் போனான்.

“நானா!” அதிர்ச்சியுடன் கேட்டான்.

“புரியுது. நீ இதுவரைக்கும் எல்லாத்திலேயும் கூட இருந்திருக்கியே தவிர, இந்த மாதிரி விஷயத்துல நேரடியா சம்மந்தப்பட்டது இல்லைன்னு தெரியும். இது கொஞ்சம் பெரிய இடம், நீயும் இப்போதைக்கு இங்கேயிருந்து போகப்போற. அதனால, நீ தான் இதை முடிக்கணும். எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. முடிச்சிடு...” என்றார்.

தயங்கித் தயங்கி ஏதோ சொல்ல முயன்றவனை கைநீட்டி தடுத்து, “இதை முடிச்சிடு, அதுக்கப்புறம் உனக்கு எந்தப் பிரச்சனையும் வராது. சந்தோஷமா உன்னோட வாழ்க்கையைத் தொடங்கலாம். அதுக்கு நான் கியாரண்டி” எனச் சொல்ல, அவன் குழப்பத்துடன் நின்றிருந்தான்.

“யோசி. அவசரம் எதுவும் இல்லை. சாயந்தரம் வரை நான் இங்கேதான் இருப்பேன்” என்றவர் அவன் பேச இடம் கொடுக்காமல் அங்கிருந்து அகன்றார்.

யோசனையுடனேயே தன் அறைக்கு வந்தான். ஷெல்ஃபில் இருந்த புகைப்படத்தைப் பார்த்தான். ‘என் முட்டாள்தனத்தால், அற்புதமான ஒரு பெண்ணை இழந்து விட்டேன். இப்போது மீண்டும் அதை விட பெரிய முட்டாள்தனத்தைச் செய்ய வேண்டுமா?’ என்று தன்னையே கேட்டுக்கொண்டான்.

‘ஆமாம் செய்துதான் ஆகவேண்டும். இங்கேயிருந்து செல்ல வேறு வழியில்லை. நிச்சயம் ரத்னவேலுவை நம்ப முடியாது. நான் அவனுடன் கூட்டு சேர என்னென்ன செய்தான் என்பது தெரிந்தது தானே. இப்போது இங்கிருந்து செல்வதற்கு இந்தச் செயலுக்கு ஒப்புக் கொள்வது போல நம்ப வைத்து, இங்கிருந்து வெளியேற வேண்டும். பின்னால் வரப்போவதை சமாளித்துக் கொள்ளலாம்’ என முடிவெடுத்துக் கொண்டான்.

“உன்னுடைய பழைய ஷக்தியாக உன்னைத் தேடி வரும் என்னை, மன்னிச்சி ஏத்துக்குவியா மித்ரா?” என்று அவனது மித்ராவின் புகைப்படத்திடம் மானசீகமாக மன்னிப்பை வேண்டியவன் வேதனை பொங்க, ஆயாசத்துடன் கண்களை மூடினான். அவனது மூடிய விழிகளுக்குள் சிதறிக்கிடந்த நினைவுச் சிதறல்களின் சேர்க்கையில், ஒற்றைப் பிம்பமாக விரிந்தது அவனது கடந்தகால நிகழ்வுகள்.

*********

அதிகாலை இரண்டரை மணி. நகரின் பரபரப்பெல்லாம் ஓய்ந்து அமைதியில் ஆழ்ந்திருந்த நேரம், சூழ்ந்திருந்த நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு, அந்தத் தனியார் மருத்துவமனையின் வாசலில் வந்து நின்ற நான்கு சக்கர வாகனங்களின் பேரிரைச்சலால், சாலையோரம் படுத்திருந்த ஐந்தறிவு ஜீவன்களெல்லாம் மிரண்டு ஒதுங்கின.

சிரிப்பைத் தொலைத்த முகத்துடன், காரிலிருந்து இறங்கிய ரத்னவேலு வேகமாகப் படிகளைக் கடந்து ரிசப்ஷனை நெருங்கினார். ரத்னவேலு ஊரையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் அரசியல் செல்வாக்கு பெற்ற தாதா. வேகத்தை விட விவேகத்தை நம்பும் மனிதர். சாணக்கியத்தனம் மிக்கவர். எதிரிகளைக் களையெடுக்கும் நேரத்தில் தனக்குச் சிறிதுகூட சேதாரமில்லாமல், எடுத்த காரியங்களைக் கன கச்சிதமாகக் கணக்குப் போட்டு முடிப்பதில் திறமைசாலி. அத்தனை சீக்கிரம் எந்த விஷயத்திலும் நேரடியாகத் தலையிடமாட்டார். விஷயத்தை முடிக்க, அவருடைய பெயர் மட்டுமே போதும்.

அப்படிப்பட்ட ரத்னவேலு இப்போது மருத்துவ மனைக்கு அடித்துப் பிடித்து ஓடிவந்திருப்பதற்கு காரணமே, அவரது வலது கையான மணி மருத்துவ மனையில் அடிபட்டுக் கிடப்பதே. ஒரு திருமணத்திற் காகக் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தவர், திரும்பி வந்து விஷயம் கேள்விப்பட்டு உடனே புறப்பட்டு வந்திருந்தார்.

ரத்னவேலு வந்திருப்பதை அறிந்த தலைமை மருத்துவர், அவரை எதிர்கொண்டு அழைக்க ஓடி வந்தார். “ஐயா! நீங்க நேர்ல வரணுமா என்ன? நாங்க பார்த்துப்போமில்ல” வேகமாக நடந்த ரத்னவேலுவின் பக்கத்தில் நடந்தபடி பேசிக்கொண்டே வந்தார்.

“இந்த ரூம் தான் சார்!” மருத்துவர் கதவைத் திறந்து முன்னால் செல்ல, ரத்னவேலு அவரைப் பின்தொடர்ந்தார்.

உடலின் பலபாகங்களில் கட்டுகளுடன் மயக்கத்தில் இருந்தவனைப் பார்த்தவரின் கண்களில், வேதனை பரவி சட்டென மறைந்தது. சிறிதுநேரம் கைகளைப் பின்னால் கட்டியபடி கட்டிலில் கிழிந்த நாராகக் கிடந்தவனை வெறித்துப் பார்த்தார். வேக மூச்சுடன் எதுவும் பேசாமல் அந்த அறையிலிருந்து வெளியேறி, காரில் ஏறினார். கண்ணாடியைக் கழற்றிவிட்டு நெற்றியைத் தடவிக் கொண்டவர், “வண்டியை, அந்தப் பையன் வீட்டுக்கு விடு” என்றார்.

“அண்ணே! நீங்க எதுக்குண்ணே அங்கே வரணும்? வீட்டுக்குப் போண்ணே. பின்னாலேயே அவனை நம்ம இடத்துக்கு கட்டித் தூக்கிட்டு வரேன்” என்றவனை, வார்த்தைகள் ஏதுமின்றி பார்த்தார். ‘இதை, இந்நேரத்துக்கு நீ செய்திருக்கணும்’ என்ற குற்றச்சாட்டு, அந்தப் பார்வையில் பொதிந்திருந்தது.

“நீங்க ஊர்ல இல்லாதப்போ நாங்க ஏதாவது செய்யப்போய் பிரச்சனை ஆகிட்டா... அதாண்ணே...” என இழுத்தான் மூர்த்தி.

“ஆரம்ப காலத்திலேயிருந்து என் கூடவே இருக்கான்டா. அவன் இங்கே இப்படி இருக்கும் போது, என்னை ஏசி ரூமில் நிம்மதியா படுத்துத் தூங்கச் சொல்றியா? பார்க்கணும்டா மூர்த்தி. இவனை இந்த நிலைக்கு ஆளாக்கினவன் யாருன்னு நான் பார்க்கணும்.”

அமைதியாக, நிதானமாகப் பேசினாலும், உள்ளுக்குள் கோபத்தை அடக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்திருந் தான். “இப்போ விடுண்ணே. அவனைக் கண்காணிக்க ஆள் போட்டிருக்கேன். பய இன்னும் இதே ஊர்ல தான் இருக்கான். ஒண்ணு நம்மளைப் பத்தி தெரியாதவனா இருக்கணும். இல்ல நம்ம எதிரியோட சம்மந்தப்பட்டவனா இருக்கணும். அதோட, அவனை மாதிரி ஆளை நீ போய் நேர்ல பார்த்தா நல்லாவா இருக்கும்? நாளைக்கு அந்தப் பயலைக் கொண்டுவந்து உன் முன்னாடி நிறுத்தறது, என் பொறுப்பு. நம்புண்ணே” என்றான் மூர்த்தி.

தன் எதிரில் நின்றிருந்தவனைப் பார்வையாலேயே எடை போடுக்கொண்டிருந்தார் ரத்னவேலு. மிஞ்சிமிஞ்சிப் போனால் அவனுக்கு இருபத்தைந்து வயதுதான் இருக்கும். அவர் எதிர்பார்த்தது இப்படி ஒரு இளைஞனை அல்ல. பார்த்தவுடன் ஒரு நொடி அவரது விழிகளில் ஆச்சரியம் தெரித்தது. அருகிலிருந்த மூர்த்தியை பார்வையாலேயே விசாரித்தார்.

அதைக் கண்டுகொண்ட அந்த இளைஞன், “அவங்க தப்பான ஆளையெல்லாம் கூட்டிக்கொண்டு வரலை. நாந்தான் உங்க ஆளை அடிச்சேன்” என்றான் சற்றும் பிசிறில்லாத குரலில்.

“பார்த்தா இத்தனைச் சின்னப் பையனா இருக்க! என்னோட பலம் தெரியாம மோதிட்ட. நான் நினைத்தால் உன்னை இல்லாமலேயே செய்திட முடியும்.”

“உங்க பலம் என்னன்னு வேணா தெரியாம இருக்கலாம். ஆனா, என்னோட பலம் எதுன்னு, எனக்கு நல்லாத் தெரியும்.

அதேநேரம் எதிரியோட பலவீனத்தையும் தெரிஞ்சி தான் வச்சிருக்கேன். அதோட என் தலைவிதி அப்படி தான்னு இருந்தால், நான் ஒண்ணும் செய்யமுடியாது” அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆணித்தரமாக வந்து விழுந்தன.

ரத்னவேலுவின் கவனம் முழுவதும் அவனது கண்கள் மீதே இருந்தன. “அப்போ, என்னோட ஆளுன்னு தெரியாமல் அடிச்சிட்ட?”

“ஆமாம் தெரியாமல் தான் அடிச்சேன். தெரிந்திருந்தா, இன்னும் நல்லா அடிச்சிருப்பேன். இந்த இருபத்திநாலு மணி நேரத்துல உங்களைப் பத்தி அளவுக்கு அதிகமாகவே கேள்விப்பட்டுட்டேன். நீங்க செய்றது சட்டப்படி தப்புன்னாலும், எந்த விதமான போலியான / போதை யான விஷயங்களுக்கும் துணை போகமாட்டீங்க ன்னும் கேள்விப்பட்டேன். அப்படிபட்ட உங்ககூட, அப்பாவிங்க கிட்ட கட்டப் பஞ்சாயத்து பண்ணும், பெண்கள்கிட்ட வீரம் பேசும் இப்படிப்பட்ட ஆட்களெல்லாம் இருக்கக் கூடாது சார். தப்புன்னு தெரிந்தா, கட்டாயம் தட்டிக் கேட்பேன்” என்றான்.

அதுவரையிருந்த கோபமெல்லாம் மாறி, அந்த நொடி அவனது தைரியத்தைப் பார்த்து வியந்த ரத்னவேலுவிற்கு அவனை மிகவும் பிடித்துவிட்டது. “ம்ம், சரி. நீ உங்க அம்மாவுக்கு ஒரே பிள்ளைன்னு கேள்விப்பட்டேன். அதோட உனக்கு இன்னும் விவரம் நிறைய தெரியணும். இள இரத்தம் வேற; அதான் இப்படியெல்லாம் நடந்துக்கற. இதுவரைக்கும் போனது போகட்டும். நடந்ததுக்கு மன்னிப்பு கேளு, உன்னை விட்டுடுறேன்” என்றார் கறாராக.

அதுவரை சாதாரணமாக அமர்ந்திருந்தவன் உரக்க நகைத்தான். “சார், நான் உங்க ஆளுங்களுக்குப் பயந்து இங்கே ஓடிவந்து, உங்ககிட்ட உயிர்ப் பிச்சை கேட்டு வந்திருக்கேன்னு நினைக்கிறீங்களா? ரத்னவேலுன்னா அப்படி இப்படின்னு கேள்விப்பட்டதெல்லாம், எந்த அளவுக்கு உண்மைன்னு தெரிஞ்சிக்கத்தான் வந்தேன்” என்றான்.

தீர்க்கமாக அவனைப் பார்த்த ரத்னவேலு, “சரி நீ போ. நான் நம்ம பசங்ககிட்ட சொல்லிக்கிறேன். இனி இப்படி யோசிக்காம எதுவும் செய்யாதே. நான் எல்லா நேரமும் இதே போல இருக்கமாட்டேன்” என்றார்.

“நானும் இன்னைக்கு மாதிரியே என்னைக்கும் இருக்கமாட்டேன் சார். உங்க ஆளுங்களுக்குச் சொல்லுங்க. என் நண்பர்களுக்கு இவங்களால எந்தத் தொல்லையும் இருக்கக் கூடாது. நேத்து மாதிரி நான் இல்லாத நேரம் அவங்களை மிரட்டுற வேலையெல்லாம் வேணாம். அவங்களும் பொறுத்துகிட்டு இருக்க மாட்டாங்க. இதையும் சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன். வரேன்!” என்றவன் விடுவிடுவென நடந்தான்.

“அண்ணே! என்னன்னே இந்தப் பய இந்தப் போடு போடுறான் நீ பேசாம இருக்க?” என்றதும், ரத்னவேலுவின் உதடுகள் லேசாக விரிந்தது.

“புரியுதண்ணே, கூடிய சீக்கிரம் இவன் நம்ம பக்கம் வந்திடுவான்னு சொல்லாம சொல்ற” என்றதும் ரத்னவேலு மர்மப் புன்னகை புரிந்தார்.

“ம்ம், பேரென்ன சொன்ன? ஷக்தியா!”

“ஆமாம்ண்ணே”

“இந்த ஷக்தி எப்போதும் என்கூடவே இருக்கணும் மூர்த்தி”

“நான் பார்த்துக்கறேண்ணே” என்று பதிலளித்தான் .

ரத்னவேலு வேலியில் போகும் ஓணான் என்று தெரியாமல், அதைத் தடவிக் கொடுத்துவிட்ட சக்தியின் வாழ்வில் முதல் திருப்பம் அன்றுதான் நிகழ்ந்ததென்றால், அவனது வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகும் இரண்டாவது திருப்பத்தை அடுத்த சில மாதங்களில் எதிர்கொண்டான்.