இதயத்திற்கு இலக்கணமில்லை - கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
163
394
63
5

‘பூவர் சோலை மயிலாலப் புரிந்து குயில்கள் இசைபாடக், காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி, காவேரி!‘ என்று இளங்கோவடிகளால் புகழ்ந்து பாடப்பட்ட காவேரி...

‘சோழ நாடு சோறுடைத்து’ என்று ஔவைப் பாட்டியால் பாடப்பட்ட காவேரி...

கரைகாணாமல் ஓடியவளைக், கல்லணையைக் கட்டி கரிகாலனால் முடக்கப்பட்ட காவேரி...

அழகாக இரண்டரை சதுர அடி ஊற்றில், அமைதியாக உறங்கும் குழந்தையைப் போல இருந்தவளை, ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

அருகில் சிறு கோயில். ஆனால் விக்ரகம் ஏதும் இல்லை. ஊற்றிலிருக்கும் வற்றாத காவேரி அன்னைக்குத் தான் பூஜை. அங்கு தவழ்ந்த அமைதி மனதுக்கு நிறைவாக இருக்க, கோவிலை ரசித்தபடியே அமைதியாகத் தந்தையுடன் சுற்றி வந்தாள்.

கோவிலில் பூஜாரியுடன் சேர்த்து நான்கைந்து பேர் மட்டுமே இருந்தனர். கோவிலை ஒட்டி இருந்த மலைக்குச் செல்ல படிகள் தெரிந்தன.

“அங்கே என்னப்பா இருக்கு?”

“அது பிரம்மகிரி மலையோட உச்சிம்மா. அங்கே எதுவும் கிடையாது. வெட்டவெளி தான்.”

“அப்பா! அங்கே போய் பார்த்துட்டு வரலாம்ப்பா.”

“அப்பாவால முடியலைடா. இன்னொரு முறை போலாம்மா.”

“ப்ளீஸ்ப்பா. அடுத்த முறை நாம என்னைக்கு வருவோம்?”

“சரிம்மா, அப்போ நீ போய்ப் பார்த்துட்டு வா. நான் இங்கேயே இருக்கேன்” என்று அங்கிருந்த கல் பெஞ்ச்சில் அமர்ந்தார்.

“தேங்க்யூப்பா...!” என்றவள் வேகமாகச் செல்ல, “அம்மாடி, பார்த்துப்போடா! பனி அதிகம் இருக்கு; வழுக்கப் போகுது. விளிம்புக்குப் போய்ப் பார்க்காதே” எனச் சப்தமாகச் சொல்ல, “ஓகே ஓகே...!” என்றபடி வேகமாக நடந்தாள்.

நெட்டாக இருந்த மலையின் முன்னூறு சொச்சம் படிகளையும் கடந்து, பிரம்மகிரியின் உச்சியை அடைந்த வளுக்கு மூச்சடைத்தது. எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் போல, காணுமிடமெல்லாம்... வெண்பனிக் கூட்டம், சாம்பல் நிற மேகக் கூட்டத்துடன் கைகோர்த்து, கட்டழகு ஓவியமாகக் காட்சியளித்தது.

திடீரென பனிக்கூட்டம் இறங்கி வந்து அவளைத் தழுவிக் கொள்ள, பத்தடி தூரத்திற்கு மேல் என்ன இருக்கிறது என்று சுத்தமாகத் தெரியவில்லை. லேசான தூறல் உடலை நனைக்க, ஆனந்தத்துடன் அதை அனுபவித்தாள். குளிர் காற்று உடலை ஊசியாகக் குத்தியது. இயற்கையை ரசனையுடன் சுகமாக அனுபவித்துக் கொண்டிருப் பவளுக்கு, அதெல்லாம் பெரிதாகப்படவில்லை.

ஸ்வெட்டரின் மேல் போட்டிருந்த துப்பட்டாவை விரித்து, இரு கைகளிலும் உயர்த்திப் பிடித்தாள். அது காற்றுடன் சேர்ந்து படபடத்தபடி, புதிய ஸ்வரம் ஒன்றை இசைத்தது. முகம் கொள்ளா சிரிப்புடன் நின்றிருந்தவள், ஏதோ தோன்ற, சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அங்கே நின்றிருந்தவனைத் திகைப்புடன் பார்த்தவள், உடனே அருகிலிருந்த கல்லின் மீது அமர்ந்து கொண்டாள்.

பிரம்மகிரி மலையின் உச்சியில் நின்று இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தவன், சாரல் வரவும் கிளம்ப நினைத்து திரும்பியபோது, உற்சாகத்துடன் துப்பட்டாவை தலைமேல் உயர்த்திப் பறக்கவிட்டவளைப் பார்த்தான். அவனது கைகள் அனிச்சையாக செயல்பட்டு, அவளை கேமராவுக்குள் சிறைப்படுத்திக் கொண்டன.

‘இரண்டு முறை என்னைப் பார்க்கும் போதெல்லாம் விழுந்து எழுந்தாள். இன்னைக்கு என்ன செய்யப் போகிறாளோ?’ என்று நினைத்தபடி மெல்ல அவளை நோக்கி நடந்தான். தன்னைக் கண்டதும் அருகிலிருந்த கல்லில் அமர்ந்தவளைப் பார்த்து, அடக்க முடியாமல் சிரித்தான். ஏனோ அவனது சிரிப்பு, அவளுக்குக் கோபத்தைத் தரவில்லை. தன் செயலையே நினைத்து, மெல்லப் புன்னகைத்தாள்.

“சாரி மேடம்! ரியலி சாரி...” என்றவன் மீண்டும் சிரிக்க, “போதும் சார்!” என்றாள் புன்னகையுடன்.

“ரெண்டு நாளும் நீங்க விழுந்து எழுந்தபோது தான் நாம சந்திச்சோம். இன்னைக்கு என்ன புதையலை அள்ளப் போறீங்களோன்னு நினைச்சிக்கிட்டே வந்தேன்! சட்டுன்னு நீங்க உட்காரவும், சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியலை!”

“நானும் அதையேதான் நினைத்தேன்; அதான் உட்கார்ந்துட்டேன்.”

“இப்போ எப்படி இருக்கு? கைகாலில் அடிபட்டிருந்ததே...”

“இதோ, இத்தனைப் படிக்கட்டுகளை ஏறி வந்திருக்கேனே...”

புன்னகைத்தவன், “எனிவே, நான் ஈஸ்வர்.”

“நான் மானசா.”

“ஊரைச் சுத்திப் பார்க்க வந்திருக்கீங்களா? ஆனா, நான் உங்களை எப்போதும் தனியாகத் தானே பார்க்கிறேன்.”

“இன்னைக்கு அப்பாகூடத் தான் வந்திருக்கேன். அப்பா முடியலைன்னு கீழே உட்கார்ந்திருக்காங்க.”

“ஓ! நீங்க கூர்க் வருவது இதான் முதல்முறையா?”

“சின்ன வயதில் வந்திருக்கேன். நினைவு தெரிந்து வருவது இதான் முதல்முறை. நீங்க?”

“கிட்டதட்ட ஏழு வருடமா இங்கே தான் வாசம். அப்பா, அம்மா மைசூர்ல இருக்காங்க. அம்மாவுக்கு இந்த ஊரைப் பிடித்த அளவுக்கு, கிளைமேட் பிடிக்கலை! எனக்காக அப்பப்போ வந்து போவாங்க. நானும் நினைத்த போது அங்கே போய் வருவேன்.”

“எங்க அப்பா, கிரீன்வேலி காஃபி எஸ்டேட் மேனேஜர்.”

ஒரு நொடி புருவத்தைச் சுளித்தவன், “யார்... தேவராஜன் சாரா?”

“ம்ம், அவரேதான். எங்க அப்பாவை உங்களுக்குத் தெரியுமா?” அகன்று, நீண்ட விழிகளில் ஒரு வியப்பு.

“ம்” என்ற ஒற்றைச் சொல்லோடு நிறுத்திக் கொண்டான்.

“எப்படித் தெரியும்?”

“தெரியும்...!” என்று அழுத்தமாகச் சொன்னபடி கைக்கடிகாரத்தைப் பார்த்தவன், காமிராவைப் பிரித்துத் தோள் பையில் வைத்து குறுக்காக மாட்டியபடி, “ஓகே! எனக்கு நேரமாகுது, கிளம்பறேன்.”

“நைஸ் டூ மீட் யூ சார்!” என்று புன்னகைக்க, பதிலுக்கு பெயருக்குப் புன்னகைத்தவன், தலையசைத்துவிட்டு வேகமாகச் சென்றான்.

நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவன், திடுதிப்பென கிளம்புவதைக் கண்டு புரியாமல், அவன் செல்வதையே பார்த்தவள், ‘மிஸ்டர். ஈஸ்வர்’ என்று அவனது பெயரை மனதிற்குள் உச்சரித்தாள்.

‘இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோம்; ஆனால், எங்கேயென்று தான் தெரியவில்லை’ என எண்ணியவளுக்கு, அதற்கு மேல் இயற்கையை ரசிக்கும் மனநிலை இல்லாமல் போக, படிக்கட்டுகளில் இறங்கத் துவங்கினாள்.

*********

இரண்டு நாட்கள் மகளது விருப்பப்படியே குடகு முழுக்கச் சுற்றி முடித்து, வீட்டிற்கும் வந்தாகி விட்டது. ‘தலைக்காவிரி கோவிலைச் சுற்றி வரும் வரை சந்தோஷமாகத் தானே இருந்தாள். இப்போது என்ன இத்தனை அமைதியாக இருக்கிறாள்?’ என்று யோசித்தார் தேவராஜன்.

“அங்கிள்” என்றபடி வந்த பக்கத்து வீட்டுச் சிறுமி தேவராஜனிடம் ஏதோ கேட்க, அவர் மகளை அழைத்தார்.

“இதோ வரேன்ப்பா” என்றவள் கையை அலம்பிக் கொண்டு வந்தாள்.

“ஹாய் லலி...” என்று பக்கத்துவீட்டுச் சிறுமியை வரவேற்றாள்.

“அம்மாடி, லலிதாவுக்கு போனவாரம் பேப்பரில் வந்த ஏதோ ஆர்டிக்கிள் வேணுமாம். கொஞ்சம் எடுத்துக்கொடு”

“சரிப்பா” என்றவள், அவள் கேட்ட ஆர்ட்டிக்கிளைத் தேடிக் கொடுத்தனுப்பி விட்டு பேப்பரை ஒழுங்காக அடுக்கி வைக்கும் போது, ஏதோ தோன்ற, ஞாயிற்றுக்கிழமை வந்த சப்ளிமெண்டரியை எடுத்து அவசரமாகப் புரட்டினாள்.

‘ஈஸ்வரை எங்கே பார்த்தோம்’ எனக் குழம்பிக் கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்தது. ‘பெஸ்ட் போட்டோக்ராபி கன்டெஸ்ட்’டில் அவனது புகைப்படத்திற்கு மூன்றாம் பரிசு கிடைத்திருந்தது. மூன்று பேரின் புகைப்படமும், அவர்களுக்குப் பரிசைப் பெற்றுத்தந்த புகைப்படத்துடன், கூடவே அவர்களைப் பற்றிய சிறுகுறிப்புடன் பிரசுரமாகியிருந்தது.

‘ஈஸ்வர், கிரீன்வேலி காஃபி எஸ்டேட் அண்ட் ஹோம் ஸ்டே ப்ரொபரைட்டர்’ படித்த மானசாவின் கண்கள் அகல விரிந்தன. அவளது மனதிற்குள் எழுந்த கேள்விகளுக்கு அளவேயில்லை. ‘இவன் முதலாளி என்றால் அந்த ரஞ்சித் யார்? அப்பா, சின்ன முதலாளி என்று சொன்னாரே! ஒரு வேளை அண்ணன், தம்பியோ? சே... சே! ஈஸ்வரின் தம்பி என்று அவனை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இருவரின் பேச்சுக்கும், பார்வைக்குமே எத்தனை வித்தியாசம்! ஒருவேளை இருவரும் சகோதரர்கள் தானோ?’

ஆனால், அந்த எண்ணமே அவளுக்குக் கசந்தது. ‘இதுக்கு எதுக்குக் குழம்பணும்? அப்பாவிடமே கேட்டு விட வேண்டியது தான்’ என்று பேப்பரை எடுத்துக் கொண்டு தந்தையைத் தேடிச் சென்றவள், அவரது தடுமாற்றமான குரலைக் கேட்டு அறைக்கு வெளியிலேயே நின்றாள்.

“தம்பி! என்னை இதுக்கு மேலும் வற்புறுத்தாதீங்க. ஏற்கெனவே நான் செய்யக்கூடாததெல்லாம் செய்துடேன். தயவு செய்து என்னை விட்டுடுங்க. நானும், என் மகளும் எங்கேயாவது போய்ப் பிழைச்சிக் கிறோம். எதையோ செய்ய நினைத்து, என் குழந்தையோட சின்னச் சின்ன சந்தோஷத்தைக் கூட நிறைவேத்த முடியாத பாவியா இருந்திருக்கேன்ற குற்ற உணர்ச்சியால தவிக்கிறேன். நான் செய்த பாவமெல்லாம் போதும்!” என்று சொல்வதைக் கேட்டு அதிர்ந்து நின்றாள்.

‘யாரிடம் இப்படிக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்?’ என்ன தான் நடக்கிறது இங்கே? அப்பா எதற்காக, யாரைப் பார்த்து பயப்படுகிறார்? ஒருவேளை அந்த ரஞ்சித்தா?’ ரஞ்சித்தைப் பற்றி நினைத்தவுடனே, அவள் மனத்தில் அத்தனை ஆத்திரம் எழுந்தது. ‘இருக்கும்... அன்றும் அவனைப் பார்த்துத் தானே, பயந்து பயந்து பேசினார். அப்படி பயப்படும் அளவிற்கு என்ன நடந்திருக்கு?’ யோசிக்க யோசிக்க, தலை வலித்தது.

ஒரு முடிவுடன் வேகமாகத் தந்தையின் அறைக் கதவைத் தள்ள, திறந்து கொண்டது. ஆனால், தேவராஜன் அங்கே இல்லை. “அப்பா!” என அழைத்தும் அவரது பதில் குரல் கேட்கவில்லை. ‘எங்கே போயிருப்பார்?’ என நினைத்தபடி திரும்பியவளின் கண்களில், கட்டிலின் மீது கிடந்த செல்போன் தென்பட்டது.

வேகமாக அதை எடுத்து, யாருடைய எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது என்று ஆராய்ந்தவளுக்கு, அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் போனிற்கு வந்திருந்த அத்தனைக் கால் ஹிஸ்ட்ரியும் அழிக்கப்பட்டிருந்தது. அவளது அதிர்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை.

தந்தையின் கைப்பேசியிலிருந்து தன்னுடைய கைப்பேசிக்கு அழைப்புவிடுத்தவள், கால் ஹிஸ்ட்ரியி லிருந்த தனது எண்ணை அழித்துவிட்டு, எடுத்த இடத்திலேயே அந்த மொபைலை வைத்தாள்.

தன் மொபைலை ஆராய, அந்த எண் இதுவரை அவளுக்குக் கூடத் தெரியாத புது எண்ணாக இருந்தது.மனத்திலிருந்த குழப்பம் சற்று மறைந்து, நடந்து கொண்டிருக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு விடை தேடும் பொருட்டு, தனது முதல் அடியை எடுத்து வைத்தாள்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
163
394
63
6

“அட என்னம்மா...” எனத் தலையைச் சொறிந்த ஆளின் கையில் ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை வைத்தாள்.

“எனக்கு உடனே வேணும். கொஞ்சம் முயற்சி பண்ணுங்களேன். ப்ளீஸ்!”

சிரித்தபடி, “நம்ம ஊரு பொண்ணா போய்ட்ட! நம்பரைக் கொடுத்துட்டு போய்ட்டு, ஒரு ரெண்டு மணி நேரம் கழித்து வாம்மா; எடுத்து வைக்கிறேன்” என்றவரிடம் மீண்டும் ஒரு சிரிப்பை விரயம் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

தன் ஸ்கூட்டியில் கிளம்பியவள், அருகிலிருந்த சிறு குன்றின் மீது அமைந்திருந்த பெருமாள் கோயிலுக்குச் சென்றாள். மனதிற்குள் இருந்த வேதனைகளுக்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்காத போதும், எது நடந்தாலும் நன்மைக்கே எனும் ஒரு தெளிவு பிறந்தது. உடம்பில் ஏதோ புது சக்தி பாய்ந்தது போலிருக்க, அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் நினைத்தபடி, தந்தையின் கைப்பேசியிலிருந்து செய்திருந்த அத்தனை அழைப்புகளும், ஒரேயொரு எண்ணிற்கே இருந்தது. வீட்டிற்கு வந்தவள், புதிதாக வாங்கி வந்திருந்த ‘சிம் கார்டைப்’ போட்டு அந்த மர்ம எண்ணிற்கு அழைத்தாள். ஆனால் அவளுடைய அழைப்பிற்கு, மறுபக்கத்திலிருந்து எந்தப் பதிலும் இல்லை.

யோசித்தவள், மறுநாள் தந்தை வேலைக்குச் சென்றதும், அவரது அறையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு அந்த மொபைலைத் தேடினாள். கட்டில் அடியில் கிடைக்கவில்லை. சட்டென பீரோவின் அடியில் கைவிட்டுத் துளாவினாள். அவளது எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல், பத்திரமாக வைக்கப்பட்டிருந்த கைப்பேசியை எடுத்து, மனத்தில் பதிந்து போயிருந்த எண்களை அழுத்தினாள். அவளது இதயத்துடிப்பின் ஒலி அவளுக்கே தெளிவாகக் கேட்டது.

“ஹலோ தேவராஜன்! என்ன இந்த நேரத்தில்?” என ஒலித்த குரலை ஓரளவிற்கு எதிர்பார்த்த போதும், சட்டென்று என்ன சொல்வதெனத் தெரியாமல் தவித்துத் தான் போனாள்.

“நான் சொன்னதை யோசிச்சீங்களா? எனக்குத் தெரியும் தேவராஜன்! பணம்னா, பிணம் கூட வாயைத் திறக்கும்னு சும்மாவா சொன்னாங்க?” என்று கெக்கலித் தவனின் குரலில் நினைவுலகுக்கு வந்தவளுக்கு, ஆத்திரம் பொங்கியது.

“என்ன பதிலே பேச மாட்டேன்றீங்க? தேவராஜன்...!” என்று சந்தேகத்துடன் குரல் கொடுத்தான்.

“நான் மானசா!” என்றாள் பற்களைக் கடித்தபடி. அவன் எதிரில் மட்டும் இருந்திருந்தால் ஓங்கி முகத்தில் குத்தியிருப்பேன் என்ற அளவிற்கு ஆத்திரம் பொங்கியது.

உற்சாகத்துடன் விசிலடித்தவன், தன் வலது கன்னத்தைத் தடவிக் கொண்டான். பரவாயில்லயே! நான் நினைத்ததை விட, நீ புத்திசாலி தான்!”

“உன் பாராட்டு எனக்குத் தேவையில்லை. என் அப்பாவை எதுக்குப் பயமுறுத்தற? அவரை என்ன செய்யச் சொல்லி வற்புறுத்தற?”

“ஏன், இவ்வளவு கண்டுபிடித்த நீயே, இதையும் கண்டுபிடியேன்.” சிரித்தான்.

“முடியாதுன்னு நினைச்சிகிட்டு இருக்கியா? உன் மேல போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் கொடுத்தால் தெரியும் சேதி!”

“அடடடடா! இப்போ தானே நீ ரொம்ப புத்திசாலின்னு சொன்னேன். அதுக்குள்ள அது பொய்ன்னு நிரூபிக்கணுமா? நீ போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணா, மாட்டப் போறது யாரு? உன் அப்பா தான்! தண்டனை யாருக்கு? உன் அப்பாவுக்கு!” என்று ஒன்றும் தெரியாதது போன்ற பாவனையுடன் சொல்ல, மானசா வாயடைத்துப் போனாள்.

“என்ன மானசா, கம்ப்ளெயிண்ட் கொடுக்கறியா...?” என்று அழுத்தமாகக் கேட்டான்.

“உனக்கு என்னதான் வேணும்? ஏன் என் அப்பாவை இப்படி தொல்லை செய்யற?” என்றவளின் சுருதி முற்றிலும் இறங்கியிருந்தது.

“ம், கட்டாயம் சொல்லணுமா? அப்போ ஒண்ணு செய், நாளைக்குக் காலையில் பத்து மணிக்கு, நான் சொல்லும் இடத்துக்கு வா.”

ஆத்திரத்துடன், “ஏய்! என்னைப் பத்தி என்ன நினைச்சிட்டு இருக்க நீ?” என்று கத்தினாள்.

“நீ ஏன் எப்பவும் என்னை தப்பாகவே நினைக்கிற? நானாகவா உனக்கு போன் செய்தேன்? நீ தானே செய்த! உனக்குத் தேவை உன் அப்பாவோட நிம்மதி. அது கிடைக்கணும்னா, கண்டிப்பாக நீ வருவன்னு எனக்குத் தெரியும். ஏன்னா! உனக்கு உங்கப்பா மேல் பாசம் அதிகம். உனக்கு எல்லாமே அவர்தான். அவர் ஜெயிலுக்குப் போவதை உன்னால் பார்க்க முடியுமா? முடியாது!” என்று அழுத்திச் சொன்னவன், “நாளைக்கு காலைல பத்து மணிக்கு பாகமண்டலா கோவிலுக்கு வெளியே காத்திரு” என்றவன், அவள் வருவதற்கான வழியையும் சொன்னான்.

கைப்பேசியை அணைத்தவள் அப்படியே அமர்ந்து விட்டாள். புத்திசாலித்தனமாகச் செயல்படுவதாக நினைத்து, எத்தனை பெரிய விபரீதத்தைத் தேடிக் கொண்டோமென்று புரிந்தது. ‘இதனை யாரிடம் சொல்வது? தான் ஆரம்பித்த வேலையை, தான்தான் முடித்து வைக்க வேண்டும்’ என்று புரிய, எழுந்து முகத்தைக் கழுவிக்கொண்டு அன்னையின் புகைப்படத்தின் முன்பாக நின்று, தனக்குத் துணை நிற்க வேண்டுமென்ற வேண்டுதலை முன்வைத்தாள். மூடியிருந்த இமைகளைத் தாண்டி கண்ணீர் வழிந்தது.

*********

பாகமண்டலா கோவிலின் முன்பாக இருந்த வாகன நிறுத்தத்தில் காத்திருந்தவளின் அருகில், ஜீப் ஒன்று வந்து நிற்க, டிரைவர் சீட்டிலிருந்தவன், “மேடம்! நீங்க தானே மானசா? போனில் ரஞ்சித் சார்” என்றபடி, அவளிடம் ஒரு மொபைலை நீட்டினான்.

போனை வாங்கிக் கொண்டவள், நீண்ட மூச்செடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள். ரஞ்சித்தின் கட்டளைப்படி மறுபேச்சில்லாமல் ஜீப்பில் ஏறி அமர்ந்தாள். இருபது நிமிட பயணத்திற்குப் பிறகு, ஒரு அடர்ந்த காபி எஸ்டேட்டின் நடுவேயிருந்த பழைய கட்டிடத்தின் முன்பாக ஜீப் நின்றது.

கைப்பையை அழுந்தப் பற்றியபடி, உள்ளுக்குள் ளிருந்த பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், கட்டிடத்தின் உள்ளே நுழைந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். யாருமே இல்லை. கட்டிடத்தில் புழங்கிக் கொண்டிருந்தாலும் சரியான அளவு பராமரிப்பு இல்லாததால், ஒருவித வாடையுடன், இறுக்கமும் சூழ, அந்தச் சூழ்நிலையே அவளது மனத்திற்கு ஒப்பவில்லை.

முகத்தைச் சுளித்தபடி நின்றிருந்தவளின் நாசியை சிகரெட் புகை தாக்க, தொண்டைக் கமறலுடன் முகம் சுருங்க, நிமிர்ந்து பார்த்தாள். கையில் புகைந்த சிகரெட்டுடன் மாடியிலிருந்து இறங்கி வந்தவன், “வெல்கம் டியர். இப்படி என்னைத் தேடி நீயாக வருவேன்னு நினைக்கவேயில்லை!” அலட்சியமாகக் கூறியபடி அவளெதிரில் வந்து நின்றான்.

“நான் ஒண்ணும், உன்னைத் தேடி வரலை. என் அப்பாவுக்காக வந்தேன்.”

“சரி, உங்க அப்பாவுக்காகத் தான் வந்த... போதுமா திருப்தியா?” என்றான் கடுப்புடன்.

“என் அப்பாவுக்கு எதிராக இருக்கும் ஆதாரத்தை கொடுத்திடு; நாங்க இந்த ஊரை விட்டே போய்டுறோம்.”

“என்னமோ என்னிடம் கொடுத்து வச்சதைக் கேட்பது போல கேட்கற? ஆதாரம்மா ஆதாரம்! ஒரு மனுஷனோட எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் விஷயம்! அதைப் போய் எத்தனைச் சுலபமா கேட்கற?” என்று கைகளை விரித்து பாவனையுடன் சொன்னான்.

கைகளைக் கட்டிக் கொண்டு, கூர்மையாக அவனையே பார்த்தாள். “இப்போ என்ன செய்யணும்?” இழுத்துப் பிடித்த பொறுமையுடன் கேட்டாள்.

அவள் நின்றிருந்த தோரணையையும், பேசும் பேச்சில் தெரிந்த அலட்சியத்தையும் கண்டு ரஞ்சித் கொஞ்சம் எரிச்சலானான். “எல்லாத்துக்குமே ஒரு விலை இருக்கு. உன் அப்பாவுக்கு எதிராக இருக்கும் ஆதாரங்களுக்கு விலை, அவரோட மகளான நீ!” என்றவனை அசராமல் பார்த்தாள்.

பயப்படுவாள்... தடுமாறுவாள்... என்று தான் நினைத்துக் கொண்டிருக்க, அதற்குச் சற்றும் சம்மந்த மில்லாமல், கண்ணோடு கண் பார்த்தபடி நின்றிருந்த வளைக் கண்டு அசந்து போனான்.

“உன்னோட இடத்துக்கு வரேன்னு தைரியமா ஒத்துகிட்டேனே, அப்பவே தெரிய வேணாம்... எல்லாத்துக்கும் தயாராக வருவேன்னு?” பேசிக் கொண்டே கைப்பையிலிருந்த துப்பாக்கியை எடுத்து அவன் முன்பாக நீட்டினாள்.

“ஐய்யோ! என்ன இது? மானசா ப்ளீஸ்!” என்று பதட்டத்துடன் நடுங்கியவன், திடீரென அந்தக் கட்டிடமே அதிரும் அளவிற்குச் சிரித்தான். “சுடப்போறியா மானசா? சுடு... கம் ஆன்!” என்று வேகமாக அவளை நோக்கி வந்தான்.

அவனது செயலில் தடுமாறியவள், “கிட்டே வராதே ரஞ்சித்! உண்மையாகவே சுட்டுடுவேன்” என்றபடி அவனது வேகத்திற்கு ஈடு கொடுத்து பின்னால் நகர்ந்தவள், அங்கிருந்த சோஃபாவில் இடித்துக் கொண்டு சுதாரிப்பதற்குள், ரஞ்சித்தின் இரும்புப் பிடிக்குள் வந்திருந்தாள்.

“என்கிட்டயே உன் விளையாட்டைக் காட்டுறியா? என்னை என்ன கேனையன்னு நினைச்சியா?” என்றபடி மின்னல் வேகத்தில் அவளது கரத்தைக் கோபத்துடன் பற்றித் திருப்ப, தோள்பட்டையில் வலி உயிர் போனது மானசாவிற்கு.

“ஆ... அப்பா! ப்ளீஸ் விடு, வலி தாங்கமுடியலை!” என்றவளின் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.

“என்கிட்டயேவா!” என்று அவன் கொக்கரித்த அதே நேரம், அவனுக்குப் பின்புறமிருந்து, “ரஞ்சித்!” என்று அதட்டலாக ஒலித்தது ஈஸ்வரின் குரல்.

திகைத்துத் திரும்பி... மறுநொடி, “ச்சே!” என்று ஆத்திரத்துடன் கத்தியவனின் பிடி, அங்கே நின்றிருந்தவர் களைக் கண்டதும் இளகியது.

அந்த சமயத்தைப் பயன்படுத்தி, அவனிடமிருந்து திமிறி தன்னை விடுவித்துக்கொண்ட மானசா, “ஈஸ்வர்!” என்றபடி ஓடிவந்து அவனது கரத்தை இறுகப் பற்றிக் கொள்ள, ஆதரவுடன் தோளோடு அணைத்துக் கொண்டான்.

“ஈஸ்வர்! என் வாழ்க்கையில் அனாவசியமா தலையிடுற, இதெல்லாம் நல்லாயில்லை! என்னுடைய ஆத்திரத்தை அதிகமாக்காதே. உன்னைக் காப்பாத்திக் கணும்னா, அவளை விட்டுட்டு இங்கேயிருந்து ஓடிப் போயிடு” என்று கத்தினான்.

“உன்னைக் காப்பாத்திக்க, நீதான் இப்போ ஓடணும். உன்னை மாமியார் வீட்டு விருந்துக்குக் கூட்டிக்கொண்டு போக வந்திருக்காங்க. போய்ட்டு வா தம்பி!” என்று நிதானமாகச் சொல்ல, இரண்டு மூன்று போலீஸ் அதிகாரிகள் உள்ளே வந்து ரஞ்சித்தின் கையில் விலங்கைப் பூட்டினர்.

“ஒரு பொம்பளை பின்னால நின்னுகிட்டு... டபுள் கேம் ஆடறியாடா? உன்னைச் சும்மா விடமாட்டேன்!” என்று துள்ளினான்.

“தைரியம் இருந்திருந்தா, நீ நேரடியா என்கிட்ட மோதியிருக்கணும். அதை விட்டுட்டு, என் ஃபாக்டரியில் பிரச்சனை செய்றது, பணத்தைக் கையாடல் பண்றது, டெண்டரைத் திருடி அதைவிட குறைச்சிப் போடறதுன்னு ஆள் வச்சி என்னென்னலாமோ செய்து பார்த்த... ஆனால், கடைசியில் என்ன ஆச்சு? என்னைக்குமே நியாயம் தான் ஜெயிக்கும்!

உனக்கு உன் மேல நம்பிக்கை இருந்திருந்தா, அடுத்தவனை கெடுத்துப் பிழைக்கணும்னு நினைச்சிருக்க மாட்ட. ஆள் வச்சி வேவு பார்த்திருக்க மாட்ட! ஊரில், என் ஃபாக்டரி பேரைக் கெடுக்கணும்னு நினைச்சிருக்க மாட்ட! நான் உழைப்பை நம்பறவன்; அடுத்தவனோட உழைப்பைச் சுரண்டி வாழறவன் இல்லை.

எனக்கும், என்னைச் சேர்ந்தவங்களுக்கும், உழைப்பும், நேர்மையான முறையில் முன்னேறணும்ற வெறியும் இருக்கும் வரை, ஒருத்தரும் எங்களை அழிக்க முடியாது. இந்த மாதிரி கத்திக் கத்திப் பேசி, தொண்டைத் தண்ணியை வத்த வச்சிக்காதே! இனியாவது திருந்தி வாழ முயற்சி பண்ணு!” என்றவன் இன்ஸ்பெக்டரின் பக்கம் திரும்பி, கன்னடத்தில் ஏதோ சொன்னான்.

மானசாவின் பக்கம் பார்வையை திருப்பிய ஈஸ்வர், “மானசா! ஆர் யூ ஓகே?” என்று கண்களில் கனிவும், வார்த்தைகளில் மென்மையும் நிரப்பியபடியே கேட்டான். அதுவரை பற்றிய அவனது கரத்தை விடாமல் நின்றிருந்தவள், “ம்!” என்றபடி அவனது கைகளிலிருந்து விலகி நடக்க, அவளுடன் இணைந்து நடந்தான்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
163
394
63
7

தோளில் மாட்டிய பெரிய பையுடன் வீட்டு வாசலில் நின்றிருந்தவளை, சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவனது பார்வையே சொல்லிவிட, “ஒரு பத்து நிமிடம் உங்ககிட்ட பேசணும் சார்!” என்றவளின் முகம் அழுதழுது வீங்கியிருந்தது.

சிவந்திருந்த விழிகளையும், தடித்திருந்த இமைகளையும் கண்டவனுக்கு, ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது. “உள்ளே வாங்க” என்று அழைத்தவன், அமரச் சொல்லி எதிரிலிருந்த இருக்கையைக் காட்டினான்.

“நான் மானசா. உங்க மேனேஜர், தேவராஜனோட மகள்!” என்று தன்னை மீண்டும் அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“ம், நினைவிருக்கு! சொல்லுங்க; ஏதாவது ஹெல்ப் வேணுமா?”

‘அவனது கரிசனத்தில் அழுது விடப்போகிறோம்’ என மனத்தில் பயம் எழுந்தது. “நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேட்டீங்கன்னாலே போதும் சார்!”

“சொல்லுங்க.” தன் மடியிலிருந்த தோள் பையை அவன் எதிரில் வைத்து, ஜிப்பைத் திறந்தாள். கட்டுக் கட்டாகப் பணம். ஈஸ்வர் அவளது முகத்தைப் பார்த்தான்.

“இதெல்லாம் உங்க உழைப்பில் வந்த பணம். உங்களை ஏமாற்றி, ரஞ்சித் மூலமாக எங்க அப்பா முறைகேடாக சம்பாதிச்ச பணம்.”

“இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது?” அலட்டிக்கொள்ளாமல் கேட்டவனை, வியப்புடன் பார்த்தாள். ‘ஒருவேளை இவருக்கு எல்லாம் முதலிலேயே தெரியுமோ? அதனால்தான் அன்று அப்பாவின் பெயரைச் சொன்னதும் விலகிச் சென்றாறோ!’ என்ற ஐயம் தோன்றியது.
ரஞ்சித்தைத் தங்கள் வீட்டில் சந்தித்தது முதல், ரஞ்சித்திடம் போனில் தன் தந்தை இறைஞ்சியது, தான் அவனுடன் பேசியது வரை அனைத்தையும் சொல்லி முடித்தாள். கையோடு கொண்டுவந்திருந்த மொபைல் கால் லிஸ்ட்டையும் அவனிடம் கொடுத்தாள்.

அதுவரை, சாதாரணமாக, ஒரு பெண் என்ற அளவிற்கு மட்டுமே அவள் மீதிருந்த மதிப்பு... இப்போது பலமடங்கு உயர, பிரமிப்புடன் அவளைப் பார்த்தான். ‘தன் தந்தை தான் எல்லாம் என்றிருக்கும் போதும், வாழ்க்கையில் நேர்மை தான் முக்கியம் என்று தந்தைக்கு எதிராக குரல் கொடுக்கும் இவளை என்ன சொல்வது?’ சற்றுநேரம் பேச்சிழந்து போனான். ‘இப்படியொரு சூழ்நிலை தனக்கு ஏற்பட்டிருக்குமாயின்... இத்தனை திடமாக... நீதிக்கு ஆதரவாக, அநீதியை எதிர்த்து தன் உறவுகளுக்கெதிராக... அதுவும் தந்தைக்கு எதிராக... முடிவெடுத்திருக்க முடியுமா?’ என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.

தொண்டையைச் செருமிக் கொண்டு, “உங்களை நினைத்தால் எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கு. அதே சமயம், இதனால் எத்தனை பெரிய பாதிப்பை நீங்க சந்திக்க வேண்டியிருக்கும் என்று தெரியுமா?”

“எல்லாத்தையும் யோசித்துத் தான் சார் இதில் இறங்கியிருக்கேன். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது வாழ்க்கை இல்லை. இப்படித் தான் வாழணும்னு, எனக்கும் சில கொள்கைகள் இருக்கு.”

“ம், உங்க அப்பா வெறும் அம்பு தான். அவர் அப்ரூவராக மாறிட்டா, தண்டனையை எந்த அளவுக்குக் குறைக்க முடியுமோ, அந்த அளவிற்குக் குறைக்க முயற்சி பண்றேன்!” என்றவன், “அதுவும் உங்களுக்காக!” என்று அழுத்திச் சொன்னான்.

“இல்ல சார். யாருடைய அனுதாபத்தையும் எதிர்பார்த்து நான் இதைச் செய்யல. என் அப்பா தப்பு செய்திருக்கார். என்ன தண்டனை கிடைக்கணுமோ, அது அவருக்குக் கிடைக்கட்டும். மகளுக்காக வேண்டுமே என்று நினைத்து, எனக்காகத் தான், எங்கப்பா இந்த அளவுக்கு இறங்கிப் போனார். ஆனால், அதே மகள் இந்த அப்பா இல்லாவிட்டால், எந்த அளவுக்கு வேதனைப் படுவாள்ன்னும் அவருக்குப் புரியணும்.

பணம் மட்டும் வாழ்க்கை இல்லை; பணத்தால் மட்டும் எதையும் தக்க வச்சிக்கமுடியாதுன்னும் அவருக்குத் தெரியணும். நல்ல உறவுகள் தான், நமக்கு என்னைக்கும் துணை வரும்னு புரியணும். அதை அனுபவத்தில் தான் உணரமுடியும். கசப்பான மருந்து தான் நோயைக் குணப்படுத்தும். ஒரு கஷ்டம் தான், வாழ்க்கையில் நம்ம மேல உண்மையான அன்பு வச்சிருக்கவங்களை அடையாளம் காட்டும்.

ரஞ்சித் எப்படிபட்டவன்னு தெரிந்தும், அவனோட கண்ணசைவுக்கு ஏத்தபடி எங்க அப்பா ஆடினார். அவனுக்காக இத்தனை செய்த எங்க அப்பாவுக்கு, அவனோட சுயரூபம் தெரியணும். பெத்தவங்க செய்யும் பாவ, புண்ணியத்தோட பலனை... பிள்ளைங்க அனுபவிப்பாங்க என்பதை, எங்க அப்பா பார்க்கணும். என் அப்பான்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும் சார். அவர் என் மேல உயிரையே வச்சிருக்கார். ஆனால், இன்னைக்கு என்னாலேயே இந்த நிலைக்கு வந்துட்டார்!” என்றவள் தாளமாட்டாமல் அழுதாள்.

அவளைச் சந்தித்தது இரண்டு மூன்று முறை தான் என்ற போதும், அமைதியாக, சந்தோஷமாக, சிறகில்லாப் பறவை போல சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தவளை, இன்று கண்ணீருடன் பார்க்கச் சகிக்கவில்லை அவனுக்கு. ‘எத்தனை வேதனை இருந்திருந்தால், முன்பின் தெரியாத என்னெதிரில் இப்படி வெடித்து அழுவாள்!’ என்று நினைத்தவன், அவள் சற்று மனம்விட்டு அழட்டும் என்றெண்ணி, அங்கிருந்து எழுந்து சென்றான்.

மனம் விட்டு பேசி அழுதது சற்று ஆறுதலாக இருந்தது. முகத்தை துப்பட்டாவால் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள். இருவருக்குமாக காஃபி கலந்து எடுத்து வந்தவன், “எடுத்துக்கோங்க மானசா” என்று வழக்கமான நிதானமான குரலில் சொன்னான்.

“பரவாயில்லை சார்!”

“ஃபார்மாலிட்டிஸ் வேணாம். நீங்க கொஞ்சம் ரெஃப்ரெஷ் பண்ணிக்கங்க” என்று டைனிங் ஹாலில் இருந்த வாஷ்பேசினைக் காட்டினான்.

மறுபேச்சில்லாமல் எழுந்து சென்று முகத்தை அலம்பிக்கொண்டு வந்தவளிடம் காஃபிக் கப்பை நீட்ட, “தேங்க்யூ சார்!” என்றபடி வாங்கிக் கொண்டாள்.

இருவரும் மௌனமாக காஃபியை அருந்தி முடித்தனர். காலி கப்பை டீபாயின் மீது வைத்தபடி, “உங்களோட அடுத்த மூவ் என்ன?” என்றான்.

“நாளைக்கு ரஞ்சித்தை, அவன் சொன்ன இடத்தில் சந்திக்கப் போறேன்.”

“கண்டிப்பாக இந்த ரிஸ்க்கை எடுக்கணுமா? உங்க மேல இருக்கும் அக்கறையில் சொல்றேன். உங்க அப்பா அப்ரூவராக மாறி, எல்லா உண்மையையும் சொல்றேன்னு சொன்னாலே போதும்! இந்தச் சிச்சுவேஷனை நான் ஹாண்டில் பண்ணிக்குவேன்.”

“அப்பா கண்டிப்பாகச் சாட்சி சொல்வாங்க! அதுக்கு நான் பொறுப்பு. ஆனா, நான் யாருன்னு அந்த ரஞ்சித்துக்கும் தெரியணும். ஒரு பொண்ணு நினைத்தால், என்ன வேணும்னாலும் செய்வாள்ன்னு அவனுக்குப் புரியணும்.”

தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவளை மனதிற்குள் மெச்சிக் கொண்டான். “ஓகே! நீங்க நாளைக்கு அவன் சொன்னபடி கிளம்பிப் போங்க. உங்களுக்குத் துணையாக நான் வரேன். எதுக்கும், ஒரு பாதுகாப்புக்கு இதை வச்சிக்கோங்க!” என்று தன்னிடமிருந்த துப்பாக்கியை அவளிடம் கொடுத்தான்.

“இது ஒரு சேஃப்டிக்குத் தான். நீங்க அங்கே போய்ச் சேர்த்த பத்து நிமிடத்தில், நான் அங்கே வந்திடுவேன். அதோடு உங்க அப்பாவையும்...”

“புரியுது சார்...!” என்று கண்களை இறுகமூடி, தன் துக்கத்தைத் தொண்டைக்குழிக்குள் அடக்கியவள், “நான் கிளம்பறேன் சார்!” என்று சொல்லிவிட்டு, விறுவிறுவென நடந்தாள்.

அதன்பிறகு போலீஸ் உதவியுடன் ரஞ்சித்தின் வீட்டுக் காவலாளியிடமிருந்த சாவியைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்தான். மானசா அவன் பிடியில் இருந்ததைக் கண்டு கொதித்தவன், தன் குரல் கேட்டதும், ‘ஈஸ்வர்’ என்று அழைத்தபடி ஓடி வந்தவளைக் கண்டதும், பனியாய் உருகிப் போனான்.

நடந்ததையெல்லாம் நினைத்துக் கொண்டவன் தன்னருகில் அமர்ந்திருந்தவளைத் திரும்பிப் பார்த்தான். மொத்தத் துக்கத்தையும் முகத்தில் தேக்கி, இமைகளை நனைக்கத் துடித்த கண்ணீரைக் கட்டுப்படுத்தியபடி, சீட்டில் தலைசாய்த்து அமர்ந்திருந்தாள்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
163
394
63
8

இரவு ஒரு மணி. ஆழந்து உறங்கிக் கொண்டிருந்த விஜயா தொலைபேசி ஒலிக்கும் சப்தம் கேட்டு எழுந்தார். ‘இந்த நேரத்தில் யாரு’ என்று நினைத்தபடி, “ஹலோ” என்றார்.

“அம்மா!” - தயக்கத்துடன் வந்த மகனின் குரலைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனார்.

“என்னடா தம்பி, இந்த நேரத்துல? இத்தனை நேரத்துக்கு முழிச்சிகிட்டு இருந்தா, உடம்பு என்னத்துக்கு ஆகும்?”

“உங்ககிட்ட பேசணும் போல இருந்துச்சிம்மா” என்ற மகன் அவருக்கு புதிதாகத் தெரிந்தான்.
“ஏன்டா ராஜா, உடம்பு நல்லாத்தானே இருக்கு?” பதறியது தாய் மனம்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா. மனசுதான் சரியில்லை. அதான் உங்ககிட்ட பேசலாம்ன்னு! சாரிம்மா, உங்களையும் பாதி தூக்கத்தில் எழுப்பிட்டேன்.”

“அது ஆச்சு போ! மனசு சரியில்லாமல் போக, இப்போ என்ன வந்தது?”

“அது, கண்ணை மூடினா மானசா கதறி அழுததுதாம்மா தெரியுது” என்ற மகனின் பதிலைக் கேட்டு, பலமாக அதிர்ந்து போனார் விஜயா. அதற்கு மேல் மகன் சொன்ன எதுவுமே அவர் காதில் விழவில்லை.

“அம்மா! லைனில் இருக்கீங்களா?”

“ஆ! இருக்..கேன்.”

“சரிம்மா நீங்க தூங்குங்க. நான் காலையில் பேசுறேன்” என சொல்லி போனை வைத்தும்கூட, விஜயா ரிசீவரை காதுக்குக் கொடுத்தபடி நின்றிருந்தார்.

*********

வெகுநேரம் விழித்திருந்ததால் விடிந்ததுகூட தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தவனை, தொலை பேசி அலறி எழுப்பியது. சோம்பலுடன் எழுந்து ரிசீவரை காதுக்குக் கொடுத்தவன், மறுபக்கம் சொன்ன செய்தியில் அதிர்ந்து போனவனாய், விரைந்து கிளம்பினான்.

வேகமாக வந்து நின்ற ஜீப்பிலிருந்து இறங்கிய ஈஸ்வரைக் கண்டதும், கூடியிருந்த கூட்டத்தில் இருந்த சலசலப்பு மறைந்து விலகி வழிவிட, தான் கண்ட காட்சியில் திடுக்கிட்டுப் போனான். தேவராஜனின் மீதிருந்த ஆத்திரத்தில், அவரது வீட்டின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, முன்புறமிருந்த தோட்டத்தையும் நாசமாக்கியிருந்தனர்.

“என்ன செய்து வச்சிருக்கீங்க?” என கோபத்துடன் கேட்டான்.

“தம்பி, நீங்க இதில் தலையிடாதீங்க...!” கூட்டத்திலிருந்து ஒரு குரல் ஒலிக்க, “ஆமாம்” என்ற பின்பாட்டு பல குரல்களில் எழுந்தது.

“நிறுத்துங்க” என்று கையை உயர்த்தித் தடுத்தவன், “அவங்க அப்பா செய்த தப்புக்கு, அந்தப் பொண்ணு என்ன செய்வாங்க...?”

”பெத்தவங்க செய்ததெல்லாம் பிள்ளைங்க தலை மேல தான் விழும். இவ செத்து போய்ட்டான்னு தெரிந்தா, அவளோட அப்பன் துடிப்பான் இல்லை. அப்போ, வலின்னா என்னன்னு அவனுக்குப் புரியுமில்ல!”

“எடுத்தேன் கவிழ்த்தேன்னு பேசாதீங்க. அன்னைக்கு அவர் செய்த தப்பை, இன்னைக்கு நீங்க செய்யப் போறீங்களா?”

“எங்களுக்குத் துரோகம் செய்ய அந்த ஆளுக்கு என்ன உரிமை இருக்கு?”

“அதே போல அவர் மகளை தண்டிக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? ‘எவன் ஒருவன் யோக்கியனோ, அவன் இப்பெண் மீது கல்லெரியக் கடவான்’ அன்னைக்கு இயேசுபிரான் சொன்ன அந்த வார்த்தையை, இப்போ நான் உங்களுக்கு நினைவுபடுத்தறேன். உங்கள்ள யார்யார் இதே போல ரஞ்சித்தோடு சேர்ந்து, நம்ம ஃபாக்டரிக்குள்ளே பிரச்சனை பண்ணீங்கன்னு, அவங்கவங்க மனசாட்சியைக் கேட்டுப் பாருங்க. ஒரு மனுஷன் தப்பு பண்ணி மாட்டிக்கிட்டான்னு, அவர் மேலேயே அத்தனை பழியையும் போட்டுட்டுத் தப்பிக்கலாம்னு நினைக்கா தீங்க. அவர் செய்தது பெரிய தப்பு; ஒருசிலர் செய்தது சின்ன தப்பு. பெரிதாக இருந்தாலும் சின்னதாக இருந்தாலும், தப்பு தப்புதான்! அப்பா செய்த தப்புக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த மானசாவைப் போல, ஒவ்வொரு பிள்ளைகளும் நினைத்தால் எத்தனை அப்பாக்கள் குற்றவாளியாக நிப்பீங்களோ?

நான் உங்க எல்லோரையும் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கிறேன்னு நினைக்காதீங்க. சிலரை கண்டும் காணாமல் விட்டு வச்சிருக்கேன். எதிரியை வெளியே விடுவதற்குப் பதிலா, நம்ம கண் பார்வையிலேயே வச்சிக்கிறது தான் புத்திசாலித்தனம். போதும்! இதோடு விட்டுட்டு அவங்கவங்க வேலையைப் பாருங்க. ப்ளீஸ்!” என கையெடுத்துக் கும்பிட, பலர் முணுமுணுத்தபடியும், ஒரு சிலர் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கமுடியாமலும் கலைந்து சென்றனர்.

வீட்டின் முகப்பு வாசற்கதவில் பதித்திருந்த கண்ணாடி உடைந்திருந்தது. கதவை ஓங்கிக் காலால் உதைக்க, தாழ்ப்பாள் தனியாகக் கழன்று விழுந்தது. கதவைத் திறந்து கொண்டு வீட்டினுள் நுழைந்தான். வராண்டா, சமையலறை ஜன்னல்கள் உடைக்கப்பட்டு வீடு முழுக்க கண்ணாடி சில்லும், பொருட்களும் சிதறிக் கிடந்தன. அங்கே மானசா இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

“மானசா!” அழைத்த அவனது குரல் அவனுக்கே கேட்கவில்லை. வேகமாக மாடிக்கு ஓடினான். படுக்கையறையில் யாருமில்லை; மூடியிருந்த மற்றொரு அறைக் கதவோ உள்பக்கமாகத் தாளிடப்பட்டிருந்தது. “மானசா! மானசா! நான் ஈஸ்வர். பயப்படாமல் கதவைத் திறங்க...” என்று குரல் கொடுத்தும், உள்ளிருந்து எந்தப் பதிலும் வராமல் போகவே, கலவரமானான்.

“மானசா!” என விடாமல் படபடவென கதவைத் தட்ட, உள்ளே தாழ்ப்பாள் நீக்கும் ஓசை கேட்டதும் அவசரமாக கதவைத் தள்ளித் திறந்தான். கண்களில் மிரட்சியுடன் தாயைத் தேடி பரிதவிக்கும் குழந்தையைப் போல, தேற்ற ஆளில்லாமல் நின்றிருந்தவளைப் பார்த்ததும், கண்களை மூடி ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் தலையைக் கோதியவன், “தேங்க் காட்!” என்று மனதாரக் கடவுளுக்கு நன்றி சொன்னான்.

கதவைப் பிடித்தபடி நின்றிருந்தவள், திரும்பி ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் கால்கள் துவண்டு சரிந்து விழ முற்பட, சட்டென்று விழாமல் தாங்கி, அருகிலிருந்த இருக்கையில் அமரவைத்தான். ஏதோ சொல்ல விழைந்தவளுக்கு, பேச நா எழும்பவில்லை. உடனே கீழேயிருந்த சமையலறைக்குச் சென்றவன் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, அதை வாங்கிக் குடித்தவள் வேகமாக மூச்சுவிட, கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

“சாரி! இதையெல்லாம் நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை.”

“ஆனால், நான் இதை எதிர்பார்த்தேன் சார். அவங்க கோபம் நியாயமானது. யாரா இருந்தாலும் கோபம் வரும்.”

“கோபம் வரும்தான். ஆனால், மனுஷன் அதை அடக்கக் கத்துக்கணும். இல்லைனா, அது நம்மை அடிமையாக்கிடும். ஓ.கே, நடந்ததுக்கு அவங்க சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்.”
“ஹய்யோ! என்ன சார் நீங்க போய்... நான்தான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும். எங்களால் உங்களுக்குத் தான் பிரச்சனைக்கு மேல பிரச்சனை.”

“இட்ஸ் ஓகே!” என்று தோளைக் குலுக்கினான். “ஏதாவது சாப்பிட்டீங்களா? கிச்சனைப் பார்த்தால் அதுக்கான அறிகுறியும் இல்லை. ஏன் நைட் கொடுத்தனுப்பினதையும் சாப்பிடலை” என்று கேட்டவனுக்கு, மௌனம் மட்டுமே பதிலாக வந்தது.

“சரி, உங்களுக்கு வேண்டிய முக்கியமான பொருட்களை மட்டும் எடுத்துக்கோங்க. என்கூட வந்து, எங்க வீட்டில் தங்கிக்கோங்க. நான் அம்மாவை இன்னைக்கே கிளம்பி வரச் சொல்றேன்.”
“அதெல்லாம் வேண்டாம் சார். நான் இங்கேயே இருந்துக்கறேன். அதுதான் எல்லோருக்கும் நல்லது.”

“இல்ல மா...”

“இல்ல சார், வேணாம். நான் நாளைக்குக் காலையில் என் காலேஜ் ஹாஸ்டலுக்குக் கிளம்பிடலாம்னு இருக்கேன். எனக்காக இதுவரைக்கும் நீங்க செய்ததே போதும். உங்க பெருந்தன்மையால, என்னைக் கொல்லாதீங்க!” என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.

தன்னைத் தள்ளி நிறுத்துவது போல வந்த அவளது வார்த்தைகளால் உள்ளுக்குள் தவித்துப் போனாலும், அவனது மனத்தை ஒட்டு மொத்தமாக ஆக்ரமித்துக் கொண்டாள் மானசா. அந்த நொடி, அவள் மீதான தனது காதலை உணர்ந்து கொண்டான். அவளுக்காகத் தவிப்பதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டான். அதேநேரம், ‘தன் காதலை இவள் ஏற்றுகொள்வாளா?’ என்ற சந்தேகமும் தோன்றியது.

“சரி மானசா, இதுக்கு மேல உங்களை வற்புறுத்தலை. என் வீட்டில் வேலை செய்யும் ரெண்டு பேரை வரச் சொல்லியிருக்கேன். அவங்க வந்து வீட்டைச் சரி பண்ணிடுவாங்க. நீங்க, உங்க ஹாஸ்டலுக்குப் போய்ச் சேரும் வரைக்கும், உங்க கூடவே இருப்பாங்க. இதையும் மறுத்து, என்னை அவமானப்படுத்திடாதீங்க!” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள், ‘சரி’ என்பது போல தலையசைத்தாள்.