Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அன்பென்ற மழையிலே!- கதை திரி | SudhaRaviNovels

அன்பென்ற மழையிலே!- கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
445
63
அத்தியாயம் - 9



‘யாரிவன்? ராஜேஷ் அறையில்…!’ என்று நினைத்தபடி அவள் திகைப்புடன் நிற்க, அவளைக் கண்டவனோ கண்கள் மின்ன அவளைப் பார்த்தான்.

தன்னிலையை அடைந்த வைஷ்ணவி, அரைகுறை உடையில் தன்னெதிரில் நின்றிருப்பவனை உணர்ந்தவளாக, “சாரி! நான் ராஜேஷ்ன்னு…” எனச் சொல்லியபடி கதவை நோக்கி நடந்தவள்,

ஏதோ நினைவு வந்தவளாகத் திரும்பி அவனைப் பார்த்தாள்.

அவனும் குறுகுறு பார்வையுடன், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீ..ங்க… நா..ன்.. நா..ம..” என்று வாயில் வந்ததை உளறிக் கொட்டினாள்.

சிரிப்பை அடக்கிக் கொண்டு, “என்ன?” என்றான் தீவிர பாவத்துடன்.

“அது…” என்று ஆரம்பித்தவள் அப்போதுதான் அவனது கோலத்தை மீண்டும் உணர்ந்தவளாக, “ஒண்ணுமில்லை” என்றபடி சட்டென அங்கிருந்து திரும்பி நடந்தாள்.

அவள் கதவருகில் செல்லும் வரை மௌனமாக இருந்தவன், “ராஜேஷ் குளிச்சிட்டு இருக்கான்” என்றான்.

நின்றவள் திரும்பிப் பார்க்காமலேயே, “தேங்க்ஸ்” என்றாள்.

“ஒரு நிமிஷம்” என்றான்.

அவள் லேசாகத் திரும்பிப் பார்க்க, “நீ..ங்க… நா..ன்.. நா..ம..ன்னு ஏதோ ஆரம்பிச்சீங்க. அப்புறம் எதுவுமே சொல்லாம கிளம்பறீங்களே” என்றான்.

அப்போது தான் நினைவு வந்தவளாக, “உங்களை எங்கேயோ பார்த்தது... நாம மீட் பண்ணியிருக்கோமா?” எனக் கேட்டாள்.

“அப்படியா! எனக்கு அப்படி எதுவும் நினைவில்லையே. ஒரு வேளை இதே போல எப்போதாவது இங்கேயே நாம சந்திச்சிருக்கலாம்” என்று தோள்களைக் குலுக்கினான்.

அவனை ஆழ்ந்து நோக்கியவள், “ம்ஹும்… எனக்கென்னவோ… பார்த்திருக்கோம்ன்னு….” என்று இழுத்தாள்.

கைகளைக் கட்டிக்கொண்டு சற்று சாய்ந்து நின்றவன், “எதுக்குச் சுத்தி வளைக்கிறீங்க? என்கிட்டப் பேசணும்ன்னா நேரடியாகவே பேசலாம். நான் தப்பா எடுத்துக்க மாட்டேன். என் பேர்…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, அவள் அவனை முறைத்தாள்.

“ஆளைப் பாரு ஆளை. ஊர்ல இல்லாத மன்மதன். இவரைப் பார்த்ததும் அப்படியே மயங்கி பேச வந்துட்டாங்க” என்று கோபத்துடன் சொன்னாள்.

கண்கள் பளபளக்க, “பின்னே இல்லையா? ராஜேஷ்னு நினைச்சி என்னை அடிச்சீங்க. இல்லன்னு தெரிஞ்சதும் கிளம்பியிருக்கணும். அதை விட்டுட்டு, என்கிட்டச் சரிக்குச் சமமா பேசிட்டு இருக்கீங்க. இதிலிருந்தே தெரியலையா! கேட்டா மன்மதனான்னு என்னையே கேட்கறீங்க” என்றான் கிண்டலாக.

கண்களை உருட்டியவள், “உன் மூஞ்சி. ராஜேஷோட ஃப்ரெண்ட் அவனை மாதிரியே டீசன்டா இருப்பேன்னு நினைச்சேன். இப்போல்ல தெரியும். நீ மன்மதன் தான்னு” என்றாள் கடுப்புடன்.

“ஆக மொத்தத்தில், மனசுலயிருந்தது வெளிவந்துடுச்சி” என்று சிரித்தவனை, முறைத்துவிட்டு, அங்கிருந்து வேகமாக வெளியேறினாள்.

கடுகடுவென்ற முகத்துடன் கீழே வந்தவள், அங்கே அமர்ந்திருந்த பத்மஜா பாட்டியையும், ஜனார்த்தனன் தாத்தாவையும் பார்த்தாள்.

“வாம்மா வைஷு நல்லாயிருக்கியா?” என்று கேட்ட பாட்டியை எளிதாக அடையாளம் கண்டுகொண்டாள்.

“நல்லாயிருக்கேன் பாட்டி! நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க?” என்று இருவரையும் விசாரித்தாள்.

பரஸ்பரம் நலவிசாரிப்புகள், மற்ற விஷயங்கள் என்று அவளிடம் பேசிக்கொண்டிருந்தாலும், பெரியவர்களின் கண்கள் மொழியற்ற பாஷைகளைச் சந்தோஷத்துடன் பரிமாறிக்கொண்டன.

அங்கே வந்த வளர்மதி, “வைஷு சீக்கிரம் ரெடியாகிடும்மா. நேரமாகுதே” என்றார்.

“இதோ அரைமணி நேரத்தில் வந்திடுறேன் அத்தை” என்றவள், பெரியவர்களிடம் சொல்லிக்கொண்டு தன் அறைக்கு ஓடினாள்.

பக்கத்து அறையிலிருந்து வெளியே வந்த ஹரிணி, “அண்ணனைப் பார்த்துப் பேசினியா?” எனக் கேட்டாள்.

“அம்பானி ரொம்ப பிஸியா இருந்தார். ஆனா, ஒரு அரை மெண்டலைப் பார்த்துப் பேசினேன்” என்று காட்டத்துடன் சொன்னாள்.

“யாரு? ஸ்ரீ அண்ணாவா?” என்று கேட்டாள்.

“மதன காமராஜன்னு பேர் வச்சிருக்கணும். ஸ்ரீயாம் ஸ்ரீ” என்றவள் நடந்ததை அவளிடம் சொன்னாள்.

“ஹேய்! உனக்கு உண்மையிலேயே ஸ்ரீ அண்ணாவைத் தெரியலையா?” என்று கேட்டாள்.

“எனக்கெப்படித் தெரியும்…” என்று இழுத்தவள், “ஸ்ஸ்…” என்று நெற்றியில் கை வைத்தபடி, “மை காட்! பாட்டி, தாத்தாவை பார்த்தும் கூட எனக்கு நினைவு வரலைடி. நான் யாரோ ஸ்ரீயோட ஃப்ரெண்டுன்னு நினைச்சேன்” என்றாள் மெதுவாக.

”காலங்கார்த்தால அண்ணன் நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டாரா? சரி சரி விடு. அண்ணா அதையெல்லாம் சீரியஸா எடுத்துக்க மாட்டார். நீ தயாராகி வா” என்று சொல்லிவிட்டுச் சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தாள்.

வைஷ்ணவிக்கு புகை படிந்த ஓவியம் போல அந்த நாள் நினைவில் வந்தது. தனது கல்லூரி முதல் வருடத்தை முடித்துவிட்டு, விடுமுறைக்காக அம்பாசமுத்திரம் வந்திருந்தாள். அப்போது ஸ்ரீநிவாஸும், தனது தாத்தா, பாட்டியுடன் அங்கே வந்திருந்தான்.

ஆனால், அவள் அங்கே வந்த அன்று மாலையே அவன் கிளம்பிச் சென்றதால், அவனது முகம் அவ்வளவாக அவளது மனத்தில் பதியாமல் போனது. தாத்தா, பாட்டி இருவரும் அங்கேயே ஒரு வாரம் இருந்ததில் அவர்களுடன் இவளும் ஒட்டிக்கொண்டு விட்டாள்.

இப்போது இதெல்லாம் நினைவுக்கு வர, தன்னையே நொந்துகொண்டு குளியளறைக்குள் நுழைந்தாள்.

‘சற்றுநேரமே பார்த்த தன்னை அவனுக்குத் தன்னை நினைவிருக்கிறதா என்ன?’ என்று யோசித்தவள், ‘இருந்தாலும், இவனை எங்கோ சந்தித்துப் பேசியிருக்கிறோம். இந்த முகம் பரிச்சயமானதாகத் தான் தெரிகிறது’ என்று அவளது உள்மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.

அவள் குளித்துவிட்டு வெளியே வந்தபோது, கற்பகம் அறைக்குள் நுழைந்தார்.

“வைஷு! இந்தப் புடவையைக் கட்டிக்க, இந்த நகையைப் போட்டுக்க” என்று அவர் கொடுத்ததை மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.

தனது ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் வார்த்தையை எதிர்பார்த்து வந்தவருக்கு, மகளின் மௌனமான செயல் வியப்பை அளித்தது. தான் சற்றுநேரத்தில் வருவதாகக் கூறி வெளியே சென்றவர், சிறிது நேரத்திற்குப் பின் வந்தார்.

மஞ்சள் வண்ண ஆர்ட் சில்க் புடவையில், வஞ்சிக் கொடியைப் போல நின்றிருந்த மகளை சில நொடிகள் இமைக்காமல் பார்த்தார்.

“என்னம்மா அதிசயமா பார்க்கறீங்க?” என்று புன்னகையுடன் கேட்டாள்.

“அதிசயமா இல்ல… ஆனா, ஆச்சரியமா இருக்கு. ஏதாவது விசேஷத்துக்குப் போகும்போது புடவை கட்டிக்கோன்னு சொன்னா, வானத்துக்கும் பூமிக்குமா குதிப்ப. இப்போ, எதுவுமே சொல்லாம நான் சொல்றதையெல்லாம் செய்றியே… உனக்கு ஏதாவது வேலையாகணுமா?” என்று கேட்டார்.

அவரைப் பார்த்து மென்நகை புரிந்தவள், “இங்கே இருக்கும்வரைக்கும் நீங்க சொல்றதை தட்டாம கேட்கணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்” என்றாள் இலகுவாக.

“உண்மையாகவா?” கற்பகத்தின் விஷமத்தனமான வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல், “ம்ம்” என்று தலையை மட்டும் அசைத்தாள்.

கற்பகத்திற்கு மனம் சந்தோஷத்தில் திளைக்க ஆரம்பித்தது.

“திரும்பு” என்றவர், அவளது ஈரக்கூந்தலை துவட்டி கூந்தலைத் தளர பின்னிவிட்டார். இடை வரை நீண்டிருந்த கருங்கூந்தலில் நெருங்கக் கட்டிய முல்லைப் பூவைச் சூட்டினார்.

மகளைத் திருப்தியாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டார். ஏனோ, அவரது விழிகளில் ஈரம் படர்ந்தது.

அதைக் கண்ட வைஷ்ணவி, “அம்மா!” என்று கனிவுடன் அவரை அணைத்துக் கொண்டாள். ஏனென்றே புரியாமல் அவளது விழிகளும் தளும்பின.

சமாளித்துக் கொண்ட கற்பகம், “சரி வா. எல்லோரும் சாப்பிட வந்திருப்பாங்க” என்று சொல்லிகொண்டே முந்தானையால் கண்களை ஒற்றிக்கொண்டு சென்றார்.

சில நொடிகள் அங்கேயே நின்றிருந்தவள், நீண்ட மூச்செடுத்துக்கொண்டு, அறையை மூடிக்கொண்டு ஹாலுக்குச் சென்றாள்.

அவள் வந்தபோது ராஜேஷும், ஸ்ரீநிவாஸும் வெளியே சென்றிருந்தனர்.

எல்லோருடனும் சாப்பிட அமர்ந்தவள், “ராஜேஷ் எங்கே?” என்று கேட்டாள்.

“அவன் முன்னாலேயே கிளம்பி ஹோட்டலுக்குப் போய்ட்டான்டா!” என்றார் வளர்மதி.

“என்னை வந்து பார்க்கவே இல்லயே” என்று கேட்டாள்.

“வந்து உன்னைக் கேட்டான். நீ தயாராகிட்டு இருக்கேன்னு சொன்னேன். அதான் கிளம்பிட்டான்” என்றார்.

“ஓஹ்!” என்றவளது பார்வை ஸ்ரீநிவாஸைத் தேடியது.

ஆனால், அவனும் அங்கே இல்லை. ‘இவன் எங்கே போனான்? ராஜேஷுடனேயே சென்றிருப்பானோ!’ என்று தன்னையே கேட்டுக்கொண்டவள், ‘அவன் எங்கே போனா உனக்கென்ன?’ என்று மீண்டும் தனக்கே சொல்லிக்கொண்டு தனது கவனத்தை திசைத் திருப்பினாள்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
445
63
அத்தியாயம் - 10



“ஹே ஜனனி! எப்படி இருக்க? என்னமா வளர்ந்துட்ட?” என்ற ஸ்ரீநிவாஸை, “அண்ணா!” என்று அவனை அன்புடன் அணைத்துக் கொண்டு, “நீங்க என்னைப் பார்த்து எத்தனை வருஷமாச்சு! அதுவரைக்கும் நான் வளராமலேயா இருப்பேன்” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.

“ஆள் மட்டுமில்ல. வாலும் சேர்ந்தே வளர்ந்திருக்கு” என்றவனைச் செல்லமாகத் தோளில் குத்தினாள்.

தனது கணவனின் குடும்பத்தினருக்கு, அவனை அறிமுகப்படுத்தி வைத்தாள். இரண்டு மூன்று முறை வீடியோ காலில் பேசியிருந்தபோதும், அவர்களை நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை.

“ஓஹ்! உடன்பிறவா சகோதரர்…” என்று அவளது கணவன், ஸ்ரீயின் கரத்தைப் பற்றிக் குலுக்கினான்.

அனைவரும் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க, “சரி ஜனனி நேரமாகுது. நாம ரூமுக்குப் போகலாமா?” எனக் கேட்டார் அவளது மாமியார்.

“ஆமாம்டா! நீ ரெடியாகு. உங்களுக்கு டிஃபனை ரூமுக்கே கொண்டு வரச்சொல்றேன்” என்று அவளை அறைக்கு அனுப்பி வைத்தான்.

ஜனனியின் வளைகாப்பை ஹோட்டலில் வைத்திருந்ததால், விழாவினருக்கு மேற்பார்வை வேலை மட்டுமே இருந்தது. மாப்பிள்ளை வீட்டினர் ஏற்று நடத்தும் விழாவாக இருந்தபோதும், ராஜேஷும், ஸ்ரீநிவாஸும் அவர்களுக்கு உதவியாக காலையிலேயே ஹோட்டலுக்கு வந்து சேர்ந்துவிட்டனர்.

ராஜேஷ் மாப்பிள்ளை வீட்டினர் ஹோட்டலுக்கு வந்துவிட்டதை வீட்டிற்குப் போன் செய்து தெரிவித்தான். ஹரிணியின் குடும்பத்தினர் கிளம்பி விட்டதாகவும், தாங்கள் அரைமணி நேரத்தில் வந்துவிடுவதாகக் கூறி போனை வைத்தார் அவனது தந்தை தயாளன்.

மணி எட்டை நெருங்கிக் கொண்டிருக்க, “மச்சான்! நான் ஸ்டேஷன் போய் அப்பா, அம்மாவை பிக் அப் பண்ணிட்டு வீட்டுக்குப் போய்ட்டு, அவங்க ரெடி ஆனதும் கூட்டிடிட்டு வரேன்” என்றான்.

“ஓகேடா! இந்தா கார் சாவி” என்று நண்பனிடம் கொடுத்தான்.

“ரிட்டர்ன் கிஃப்ட் பேக்ஸ் கார்லயே இருக்கில்ல” என்றான் ஸ்ரீ.

“ஆமாம்டா. இரு இறக்கிடலாம்” என்று இருவருமாக பார்க்கிங்கிற்கு வந்தனர்.

“குட்டிப் பையா நாம எங்கே போறோம்?” என்று தன் மடியில் அமர்ந்திருந்த ஹரிணியின் குழந்தையை ஆசையுடன் கேட்டாள் வைஷு.

“சித்தி….” என்றது அந்த மழலை.

“சமர்த்துக் குட்டி!” என்று குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டவள், தன் கையிலிருந்த டெய்ரி மில்கை குழந்தையிடம் கொடுத்தாள்.

“சாக்லெட் கொடுத்தே என் பையனைக் கவிழ்த்துட்ட” என்று சிரித்தாள் ஹரிணி.

கார், பார்க்கிங்கில் வந்து நிற்க, ஹரிணியின் குடும்பத்தினரும், வைஷுவும் இறங்கினர்.

இரண்டு கார்கள் தள்ளி நின்றிருந்த காரிலிருந்த ராஜேஷைக் கண்டதும், “மாமா!” என்று குதூகலத்துடன் குதித்தான் குழந்தை.

அப்போது தான் காரிலிருந்து எதையோ எடுத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்த வைஷு, ‘உன் மாமனுக்கு இருக்கு இன்னைக்கு’ என்று மனத்திற்குள் சொல்லிக் கொண்டவள், அவனை நோக்கி நடந்தாள்.

“ஹலோ மிஸ்டர் அம்பானி! ரொம்பப் பிஸியோ!” என்று அவன் முதுகில் தட்ட, சட்டென நிமிர்ந்து திரும்பிப் பார்த்தான் ஸ்ரீநிவாஸ்.

‘மீண்டும் இவனா!’ என்று அவள் இரண்டடி பின்னால் நகர, மிரண்ட விழிகளுடன் மீண்டும் தனக்குக் காட்சியளிக்கும் அந்தத் தேவதையைத் தனது நெஞ்சில் பதித்துக் கொண்டிருந்தான் அவன்.

முகம் சுருங்க, “சாரி!” என்றபடி வேகமாக அவனைத் திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து கிட்டத்தட்ட ஓடினாள்.

‘காலைல பண்ணின வேலை போதாதுன்னு திரும்பவும் அவன்கிட்டயே… உனக்கு மூளையே இல்லை வைஷு’ என்று தன்னையே கடிந்தபடி லிஃப்டின் அருகில் வந்தாள்.

அப்போதுதான் அவளைக் கவனித்த ஹரிணி, “என்னாச்சு?” எனக் கேட்டாள்.

“ஒண்ணுமில்ல” என்று தலையை இடமும் வலமுமாக ஆட்டினாள்.

லிஃப்ட் நின்றதும் அவர்கள் வெளியே வர, அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தான் ராஜேஷ்.

“ஹேய் வைஷு! ஒருவழியா வந்துட்டியா?” என்று சிரித்தான்.

உள்ளுக்குள் திணறிக்கொண்டிருந்தவள், அவனைப் பார்த்து முறுவலித்தாள்.

“வாட் எ சர்ப்ரைஸ்! வைஷுவா இது? இவ்வளவு அமைதியா!” என்று பலமாகச் சிரித்தான் அவன்.

‘எல்லாம் உன்னால்தானடா!’ என்று கத்தவேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஆனால், அனுபவம் தந்த பாடம் பலமாக இருக்க, “ஃபைன்” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள்.

அவளை அதிசயமாகப் பார்த்தான்.

“உன்னைப் பார்த்தால் மந்திரிச்சி விட்டது போலயிருக்கு” என்றவன், “உள்ளே போ” என்று ஜனனி இருக்கும் அறையைக் காட்டிவிட்டு நகர்ந்தான்.

நேரம்காலம் தெரியாமல் அவன் சொன்ன வார்த்தைகள் அவளது கடுப்பை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. ஆனால், அதைக் காட்டும் நேரமும், இடமும் இதுவல்ல என்று உணர்ந்தவளாக அறைக்கதவைத் தட்டினாள்.

“ஹேய் வைஷு!” என்று ஆசையுடன் அணைத்துக் கொண்ட ஜனனியை, வாஞ்சையுடன் பார்த்தாள்.

************

தென்காசியை நோக்கிக் காரைச் செலுத்திக் கொண்டிருந்த ஸ்ரீயின் முகம் விகசித்துக் கொண்டிருந்தது.

அன்று பாட்டியின் கையிலிருந்த மொபைலில் வைஷுவைக் கண்டவனுக்கு, இதயத்தை மயிலிறகால் வருடுவதைப் போன்று இருந்தது.

அவளைச் சிறுவயதிலிருந்தே அறிந்திருந்தவன். அவளுக்கு, அவனைப் பெரிதாக நினைவில்லாத போதும், ராஜேஷுடன் மட்டுமல்லாது, அவனது குடும்பத்தினருடனும் நல்லதொரு உறவு அவனுக்கு இருந்தது. அவர்களைத் தனது மற்றொரு குடும்பமாகவே நினைத்திருந்தான்.

வைஷ்ணவி படிப்பு, வேலை என்று தனது வாழ்க்கையில் ஒருபக்கம் இருந்தாள். அதேநேரம் தனது பணியில் முனைப்பாக இருந்தபோதும், ராஜேஷுடனான நட்பையும், அவனது குடும்பத்துடனான பிணைப்பையும் வளர்த்துக் கொண்டே இருந்தான் ஸ்ரீ.

அதனால், வைஷுவைப் பற்றியும் அவனால் அறிந்து கொள்ள முடிந்திருந்தது. நண்பனின் அத்தை மகள். அத்துடன் அவளை அந்த வீட்டின் மருமகளாக ஆக்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வளர்மதியின் மனத்தில் இருக்கிறது என்பதும் அவன் அறிந்திருந்ததே.

ஆனால், சம்மந்தப் பட்ட இருவரின் மனத்திலும் அப்படி ஒரு எண்ணம் இல்லவே இல்லை என்பதையும் ராஜேஷின் மூலமாக அறிந்திருந்தான்.

ஹரிணியின் திருமண ஆல்பத்தில் அவளைப் பார்க்கும் வரை, அவள் மீது எவ்விதமான ஈடுபாடும் அவனுக்கு இருந்ததில்லை. அந்த வயதில் ஏற்படும் கவர்ச்சியா? அன்றி வேறென்ன என்று உடனே அவனால் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை.

ஆயினும், காலம் அதற்கும் ஒரு பதிலை வைத்திருந்தது.

அப்போது அவன் கொச்சியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு மாலை வேளையில் பீச் ஓரமாக அவன் காலார நடந்துகொண்டிருந்த போது, ஐந்தாறு பெண்கள் பயத்தில் அலறும் சப்தம் கேட்டது.

அவன் இருந்த இடத்திலிருந்து அவர்களை அவனால் பார்க்க முடிந்தது. அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பெண்ணிடமிருந்து ஒரு கைப்பையைப் பிடிங்கிக் கொண்டு ஓட, நிலைமையை உணர்ந்தவன் அவனை விரட்டிச் சென்றான்.

ரோந்து பணியில் இருந்த காவலர்கள் இருவரும் அவனைத் துரத்த, அச்சத்தில் கைப்பையை அங்கேயே போட்டுவிட்டு அவன் ஓடிவிட, எடுத்தவன் தன் அருகில் வந்து நின்ற பெண்ணிடம் கொடுத்தான்.

“தேங்க்யூ” என்றவளை அப்போது தான் கவனித்தான்.

“வைஷ்ணவி! நீ எங்கே இங்கே?” என்று அவனது மனம் உற்சாகத்துடன் கூக்குரலிட்டது.

அவன், அவளிடம் பேச நினைக்க, “ரொம்பத் தேங்க்ஸ் சார்! எங்க எல்லோருடைய க்ரெடிட் கார்ட், ஐடி கார்டும் இதுல தான் இருந்தது. நல்ல நேரத்துல வந்து சேஃப் பண்ணிக் கொடுத்துட்டீங்க” என்றாள் நிம்மதி பெருமூச்சுடன்.

“இட்ஸ் மை பிளஷர்!” என்றவன், “கொச்சில ஒர்க் பண்றீங்களா?” என்று அவள் அங்கே மாற்றலாகி வந்திருக்கிறாளோ என அறிந்துகொள்ளக் கேட்டான்.

என்ன நினைத்தாளோ அவள், “இல்லை” என்பதுடன் நிறுத்திக் கொண்டாள்.

ஆனால், அந்தக் கைப்பைக்குச் சொந்தக்காரி, “சென்னையிலிருந்து டூர் வந்திருக்கோம் சார்!” என்றாள்.

“ஓஹ்!” என்றவனது பார்வை அவளைத் தொட்டு மீண்டது.

“ஓகே சார்! நாங்க கிளம்பறோம்” என்று அவள் தோழியின் கையைப் பற்றி இழுத்தபடிச் சொல்ல, “ஓகே மிஸ் வைஷ்ணவி. டேக் கேர்” என்றபடி அவன் செல்ல, இவள் திகைப்புடன் நின்றாள்.

அன்று இரவு ராஜேஷிடம் இதைச் சொல்லிச் சிரித்தவன், “ராஜேஷ்! உன்னை ஒண்ணு கேட்பேன். மறைக்காம பதில் சொல்லணும்” என்றான்.

“என்னடா?” எனக் கேட்டான் அவன்.

“வைஷ்ணவி பத்தின உன்னோட எண்ணம் எதுவும் மாறிடலையே” எனக் கேட்டான்.

“என்னடா கேட்கற?” என்று அசுவாரசியத்துடன் கேட்டவனின் மூளையில் மின்னல் வெட்ட, “ஸ்ரீ! உனக்கு ஏதாவது அபிப்ராயம் இருக்கா?” என்று ஆவலுடன் கேட்டான்.

“தெரியலடா! ஆனா, அவளைப் பார்க்கும்போதெல்லா சம்திங் சம்திங் ஆகுதுடா” என்றவனை குறும்புப் புன்னகையுடன் பார்த்தான்.

“எவ்ளோ நாளா இதெல்லாம்?”

“ஐ திங்க் இன்னைக்குத் தான் கொஞ்சம் ஸ்ட்ராங் ஆச்சுன்னு நினைக்கிறேன்” என்றான்.

“அதுசரி” என்று ராஜேஷ் புன்னகைக்க, சட்டென ஏதோ நினைவு வந்தவனாக, “வைஷுக்கு ஏதேனும்…” என்று கேள்வியாக அவன் நிறுத்த, “சான்ஸே இல்ல. அவள் கல்யாணமே வேணாம்ன்னு தள்ளிப்போட்டுட்டே வர்றா” என்றான்.

“ஏன்?” – ஸ்ரீ.

“கேட்டா நேரா விஷயத்தைச் சொல்லாமல் ஆயிரம் காரணம் சொல்றா” என்றான்.

அதற்குமேல் அன்றைய பேச்சு அத்துடன் முடிந்து போனது. அதன்பிறகான, இடைப்பட்ட நாட்களில் அவர்கள் இருவரும் பேசும்போது அவளைப் பற்றிய பேச்சு வராமல் இருந்ததில்லை. அவளைப் பார்க்கவே ஜனனியின் திருமணத்திற்கு வர அவன் பெரிதும் முயன்றான்.

ஆனால், அந்த நேரத்தில் அவனுக்கு விசாகப்பட்டிணத்திற்கு மாற்றல் வந்துவிட, அவனால் வரமுடியாமல் போனது. இப்போது வளைகாப்பிற்கு அவள் கட்டாயம் வருவாள் என்று அறிந்து கொண்டவன், பத்து நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான்.

எப்படியும் அவளிடம் பேசி, அவளது மனத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்றுதான் அவன் எண்ணி வந்தான். ஆனால், அவன் எதிர்பாராத ஒன்று அவர்களது திருமணப் பேச்சு. மறுநாள் நேரிலேயே பார்த்திருக்க வேண்டிய பெண்ணை, அவசரமாக மொபைலில் பாட்டியும் தாத்தாவும் பார்க்க வேண்டிய அவசியம் என்ன என்று அவனால் யூகிக்க முடியாதது அல்லவே.

அன்று மாலை அதை உறுதிபடுத்துவதைப் போல, “மச்சான்! சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அம்மா மூலமா, உன்னைப் பத்தி அத்தை, மாமாகிட்ட பேசிட்டோம். உன் வீட்ல உன் அம்மாவை கன்வின்ஸ் பண்ண வேண்டியது உன் பொறுப்பு” என்றான் ராஜேஷ்.

“தேங்க்யூடா மச்சான்! மத்ததை நான் பார்த்துக்கறேன்” என்று சந்தோஷத்துடன் நண்பனை அணைத்துக் கொண்டான்.

ஆனால், காலையில் எதிர்பாராத நேரத்தில் அவளது தரிசனம். அதன்மூலமாக இருவருக்குள்ளும் எழுந்த பேச்சு, சற்றுமுன் பார்க்கிங்கில் ராஜேஷ் என்று எண்ணி மீண்டும் தன்னிடம் மாட்டிக்கொண்டதைப் போல அவள் விழித்தது என்று நடந்தவற்றை எண்ணிச் சிரித்துக்கொண்டவனின் மொபைல் ஒலித்தது.
 
  • Like
Reactions: Indhupraveen

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
445
63
11


“ஹலோ அப்பா! நான் ஸ்டேஷனுக்குத் தான் வந்துட்டு இருக்கேன். பத்து நிமிஷத்துல வந்திடுவேன்” என்று எதிர்முனையில் இருந்த தந்தைக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தான் ஸ்ரீ.

“ட்ரெயின் பிஃபோராவே வந்துடுச்சிப்பா. இங்கே பக்கத்துல ஒரு ஹோட்டால்ல இருந்து பேசறேன்” என்று ஹோட்டலின் பெயரையும், இடத்தையும் சொல்லி அவனை அங்கே வரச்சொன்னார்.

ஹோட்டலில் பார்க்கிங்கில் காரை நிறுத்தியவன், தந்தை சொன்ன அறைக்குச் சென்றான்.

கதவைத் திறந்தவரிடம், “ஹலோப்பா! எப்படி இருக்கீங்க?” என்று விசாரித்தவன், “இங்கே ஏன் ரூம் எடுத்திருக்கீங்க? ராஜேஷ் வீட்லயே தங்கியிருக்கலாமே. இடத்துக்கா பிரச்சனை?” என்று கேட்டான்.

“எல்லாம் மேலிடத்து உத்தரவு” என்று உள் அறை பக்கமாகக் கையைக் காட்டினார்.

ஏன் என்று அவனுக்குப் புரியாமல் இல்லை. பாட்டியும், தாத்தாவும் அங்கே இருப்பதனால் அம்மாவும் அங்கே தங்க விரும்பவில்லை என்று அவனுக்குமே புரிந்தது.

“அம்மா!” என்றழைத்தபடி உள்ளே சென்றான்.

“ஸ்ரீநி” என்றவர், கனிவுடன் மகனைப் பார்த்தார். “என்னடா! இப்படி இளைச்சிப் போயிருக்க?” என்று அவனது தோள்களைத் தடவிக் கொடுத்தார்.

“நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்” என்று சிரித்தவன், அன்னையிடம் சற்றுநேரம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தான்.

’இது இப்போதைக்கு முடியாது’ என்று எண்ணியவராக, குளியளறைக்குள் புகுந்தார் சுந்தரம்.

அவர்கள் ஆர்டர் செய்த காஃபியும் டிஃபனும் வந்துவிட, “கிளம்பும் போதே ரூமை வெகேட் பண்ணிடலாம் தானே” என்று கேட்டான்.

காஃபியை ஒரு மிடறு விழுங்கியவர், “இல்லப்பா! பங்க்‌ஷன் முடிச்சிட்டு ஈவ்னிங் வந்திடலாம்னு இருக்கேன். நாம எதுக்கு அவங்க வீட்டுல இடைஞ்சலா” என்றார்

“என்னம்மா இப்படிச் சொல்றீங்க? அவங்க என்ன நினைப்பாங்க? ராஜேஷ் அப்பாவும், நம்ம அப்பாவும் சின்ன வயசுலயிருந்து ஃப்ரெண்ட்ஸ். நம்ம எல்லோருக்குமே ஒருத்தரை ஒருத்தர் நல்லா தெரியும். நீங்க வெளியே தங்கினா அவங்களுக்குச் சங்கடமா இருக்காதா?” என்று கேட்டான்.

“அங்கே அவங்க உறவுக்காரங்களும் இருப்பாங்க. அதோடு, இங்கேயே இருந்தா, காசிநாதர், குற்றால நாதர் எல்லோரையும் தரிசிக்கலாம். திருநெல்வேலி கோவிலுக்கும் போகணும்ன்னு இருக்கேன். நாலு நாள் தானே. சமாளிச்சிக்கலாம்” என்றார்.

“அம்மா! ஒரு வாரம் என்னோட இருக்கறேன்னு சொல்லிட்டு வந்தீங்க. இப்போ ஏன் இப்படி ஒரு ப்ளான்?” என்று கேட்டான்.

“நீ கூடத்தான் தனியா வர்றதா சொன்ன. கடைசில உன் தாத்தா, பாட்டியையும் கூட்டிட்டு வரலையா? அப்படித்தான் என் பிளானும் மாறிடுச்சி” என்றார் அவர்.

தனது அன்னையையே சற்று நேரம் இமைக்காமல் பார்த்தான்.

“நான் அங்கேயும், நீங்க இங்கேயும் இருந்தால் எப்படி ஒண்ணா இருக்க முடியும்?” என்று கேட்டான்.

“நாலு நாளைக்கு நீயும் எங்களோடே இருந்திடு” என்றார் விடாமல்.

ஆழமூச்செடுத்தவன், “இதையே தானேம்மா தாத்தா பாட்டியும் எதிர்பார்ப்பாங்க” என்றான் ஆழ்ந்த குரலில்.

மகனை வெறித்துப் பார்த்த ஜெயந்தி இறுகிய முகத்துடன் மௌனமாக அமர்ந்திருந்தார்.

அவரது கரத்தைப் பற்றியவன், “கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்கம்மா! இன்னும் ஆறு மாசத்துல அப்பா ரிடையர் ஆகப்போறாங்க. உங்களுக்காக அப்பா எவ்வளவோ விட்டுக்கொடுத்துப் போயிருக்காங்க. அப்பாவும், நீங்களும் சந்தோஷமா இருக்கணும்ன்னு தான் பாட்டியும் தாத்தாவும் தனியாவே போனாங்க. எல்லோருமே உங்க நிம்மதிக்காகவும், சந்தோஷத்துக்காகவும் தான் விட்டுக்கொடுத்துப் போறாங்க. நீங்களும்…” என்று முடிக்காமல் நிறுத்தினான்.

“அப்போ, நான் விட்டுக்கொடுக்கலயா ஸ்ரீநி?” என்று கேள்வியுடன் மகனைப் பார்த்தார்.

“நான் அப்படிச் சொல்லலம்மா! இந்த நாலு நாள் சேர்ந்து இருக்கலாமேன்னு சொல்றேன். அப்படி உங்களுக்கு பிடிக்காத விஷயம் ஏதாவது நடந்தால்… நடக்காது. அப்படியே நடந்தால்… நானே உங்களைக் கூட்டிட்டு வந்திடுறேன். சரிதானே” என்று அவரது கரத்தைப் பற்றியபடி மென்மையான குரலில் கேட்டான்.

சற்று யோசித்தவர், “உனக்காகத் தான் ஸ்ரீநி. உனக்காக மட்டும்தான் நான் ஒத்துக்கறேன்” என்றார் ஆழ்ந்த குரலில்.

மலர்ந்த முகத்துடன், “தேங்க்யூம்மா! தேங்க்யூ சோ மச்!” என்றவனின் தலையை சிறு முறுவலுடன் கலைத்துவிட்டார்.

குளியலறை திறக்கும் சப்தம் கேட்டு, “அப்பா வந்தாச்சு. குளிச்சிட்டு வந்திடுங்கம்மா. டிஃபனை முடிச்சிக்கிட்டுக் கிளம்பச் சரியாக இருக்கும். நான் போய் ரூம் வெக்கெட் பண்றோம்ன்னு சொல்லிட்டு வந்திடுறேன்” என்று அன்னையின் பதிலுக்காகக் காத்திருக்காமல் அறையிலிருந்து வெளியேறினான்.

ஜெயந்தி எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார். மனைவியின் மாற்றத்திற்குக் காரணம் புரிந்த சுந்தரத்திற்கு மகனின் மீதான அன்பு பெருகியது.

இன்று நேற்றல்ல, திருமணமான நாளிலிருந்தே ஏனோ ஜெயந்திக்குத் தனது மாமியார் என்றாலே பிடித்தம் இல்லாமல் போனது. ஆரம்பத்தில் எவ்வளவோ விட்டுக்கொடுத்தும், மௌனமாக இருந்தும் மருமகளின் செயலுக்கு எந்த எதிர் வினையும் ஆற்றாமல் தான் இருந்தார் பத்மஜா.

ஆனால், அதை ஜெயந்தியால் புரிந்து கொள்ள முடியாமல் போனது. இருவருக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் மகனுக்காக, பத்மஜா ஒதுங்கிக் கொள்ள ஆரம்பித்தார். ஆனால், அதுவும் ஜெயந்தியின் பார்வைக்கு தவறாகவே தோன்றியது.

வேறு வழியில்லாமல் கணவரின் பணியை சென்னைக்கு மாற்றிக்கொண்டு இருவருமாக தனியாக வந்துவிட்டனர். சுந்தரத்திற்கு இதில் சிறிதும் பிடித்தம் இல்லாதபோதும், தனது நிம்மதி மட்டுமல்லாமல், பெற்றோரின் மனமும் சற்று சாந்தமடைய இது தேவை தான் என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டார்.

ஆனால், ஸ்ரீநிவாஸ் வந்த பிறகு, பேரனுக்காக என்று மாதம் இருமுறை பெரியவர்கள் இருவரும் சிங்கபெருமாள் கோவிலுக்குச் சென்று வர ஆரம்பித்தனர். ஸ்ரீயும் தாத்தா, பாட்டியுடன் சுலபமாக ஒட்டிக்கொண்டுவிட்டான்.

நேவியில் சேர்ந்து தனது பணிக்காக அவன் கொச்சிக்குச் சென்றபோது, “அம்மா! உங்களால் அப்பாவைத் தனியாக விட்டுட்டு என்னோடு வரமுடியாது. எனக்கும் ஹோட்டல் சாப்பாடெல்லாம் ஒத்துக்காது. அதனால, தாத்தா பாட்டியை என்னோடு கூட்டிக்கட்டுமா?” என்று அவரிடமே ஆலோசனைக் கேட்பதைப் போலக் கேட்டான்.

மகனின் மனத்தை ஊடுறுவதைப் போலப் பார்த்தார் ஜெயந்தி. அவருக்கு இது பிடித்தமில்லாத போதும், மகனுக்காக யோசித்தவர் சம்மதம் என்று சொல்லாவிட்டாலும், மறுப்பும் சொல்லவில்லை. பெரியவர்களை வற்புறுத்தித் தன்னுடன் அழைத்துக் கொண்டான்.

அன்றிலிருந்து பெரியோர்கள் இருவரும் பேரனுடன் தான் இருக்கின்றனர். சுந்தரம் மனம்விட்டு இதைப் பற்றிப் பேசாதபோதும், அவரது மனம் பெருத்த நிம்மதியாக இருப்பதை அவனும் உணர்ந்தே இருந்தான்.

இரண்டு மூன்றுமுறை பாட்டியிடம் இதைப் பற்றிப் பேசியிருக்கிறான். ஆனால், அவர் சொன்னதெல்லாம் வழக்கமாக எல்லா வீடுகளிலும் நடக்கும் கதைதான் என்பது அவனுக்குப் புரிந்தது. ஆனால், ஏனோ தனது அன்னையின் இந்த விலகலை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

அவன் திரும்பி வந்தபோது, இருவரும் தயாராகி இருந்தனர். ஹோட்டலைக் காலி செய்துவிட்டு அம்பாசமுத்திரம் நோக்கிக் கிளம்பினர்.

“மச்சான்! கிளம்பிட்டேன் ஃபார்ட்டி மினிட்ஸ்ல வந்திடுவேன்” என்று ராஜேஷுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டுக் காரைக் கிளப்பினான்.

அவர்கள் விழா நடக்கும் இடத்திற்கு வந்து சேரவும், ஜனனியை மேடையில் அமர வைக்கவும் சரியாக இருந்தது. அவர்களை எதிர்கொண்டு வரவேற்ற வளர்மதி, ஜெயந்தியின் கரத்தை அன்புடன் பற்றிக் கொண்டார்.

தயாளன், சுந்தரத்தை அணைத்துக் கொள்ள, ஜெயந்தியை மேடைக்கு அழைத்துச் சென்றார் வளர்மதி.

பத்மஜா பாட்டியை அழைத்து, “நீங்க முதல்ல வளையல் போட்டு ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா!” என்றார் ஜனனியின் மாமியார்.

அதன்படியே செய்த பாட்டி மேடையிலிருந்து கீழே வர, அங்கே வந்த மருமகளைப் பார்த்தார்.

ஜெயந்தியின் முகம் லேசாகச் சுணங்கியது. மருமகளின் முகத்தைப் பார்த்த பாட்டிக்கு ஆயாசமாக இருந்தது.

“எப்படி இருக்க ஜெயந்தி?” என்று விசாரித்தார்.

“சௌக்கியமா இருக்கேன்” என்றவர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் மேடைக்குச் சென்றார்.

பாட்டியின் மனம் வேதனையில் வெம்பியது. பெயருக்காவது தங்களை விசாரித்திருக்கலாம் என்று எண்ணியவர் படியிறங்க, கீழே அவரையே பார்த்தபடி ஸ்ரீ நின்றிருந்தான்.

பேரனைப் பார்த்ததும் அவரது விழிகள் “எல்லாம் சரியாகிடும் பாட்டி!” என்று மென்குரலில் உரைத்தவன், அவரை அழைத்துச் சென்று பக்கவாட்டில் இருந்த இருக்கையில் அமரவைத்தான்.

ஏனோ பத்மஜாவினால் இம்முறை அவ்வளவுச் சுலபமாகச் சமாதானமடைய முடியவில்லை. விழிகளில் ஈரம் கசிய, கண்களைத் தட்டித் தன்னைச் சமாளித்தார்.

“பாட்டி! என்ன இது?” என்று அவன் மென்குரலில் சமாதானம் செய்தபடி அவரது கரத்தைப் பற்றி வருடினான்.

காலையில் பார்க்கிங்கில் தான் செய்த காரியத்தை எண்ணி தன்னையே நொந்துகொண்டிருந்தாள் வைஷ்ணவி. ஹரிணியும், ஜனனியும் ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என்று கேட்டும், புன்சிரிப்புடன் அவர்களைச் சமாளித்துக் கொண்டிருந்தாள்.

சற்றுநேரத்தில் அங்கே நிலவிய கலகலப்பான நிகழ்வுகளில் மெல்ல அவளும் இணைந்து கொண்டாள். அவனை சற்று மறந்தும் போனாள். ஜனனியின் வளைகாப்பு விழா ஆரம்பிக்க, தன் கையிலிருந்த ஹாண்டி காமில் நிகழ்ச்சியைப் பதிவு செய்ய ஆரம்பித்தாள்.

அப்போது தான் பாட்டி யாரிடமோ பேசிவிட்டு முக வாட்டத்துடன் சென்றடும், அவன் அவரைச் சமாதானம் செய்து கொண்டிருப்பதையும் பார்த்தாள். அவனது முகத்தில் தெரிந்த கனிவும், அவரைச் சமாதானப்படுத்திய அவனது அன்பையும் கண்டாள்.

காலையில் தன்னிடம் வம்பிழுத்த அவனது குறும்பு விழிகளில் இப்போது பரிவும், பாசமும் போட்டிப் போட்டுக் கொண்டிருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
 
  • Like
Reactions: Indhupraveen

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
445
63
அத்தியாயம் - 12


“வைஷு! அப்பா எங்கேன்னு பார்த்துக் கொஞ்சம் கூட்டிட்டு வா!” என்றார் கற்பகம்.

“சரிம்மா!” என்றவள் மேடையிலிருந்து இறங்க, ஸ்ரீயின் கையிலிருந்த டிஜிட்டல் கேமரா அவளையே தொடர்ந்தது.

விடுவிடுவென அங்கிருந்து சென்றவள், கையுடன் தந்தையை அழைத்து வந்தாள். ஜனனி, அவளது கணவன் இருவருக்குமாக உடைகள், தாம்பூலம், பூவுடன் பச்சைக் கல் வளையலும் அடங்கிய சீர் வரிசை தட்டை ஜனனியிடம் கொடுத்தனர்.

“வளையலை போட்டுவிடு கற்பகம்” என்ற வளர்மதி, “வைஷு! கேமராவை யாரிடமாவது கொடுத்துட்டு வா!” என்றார்.

அதுவரை அங்கே நண்பனுடன் பேசிக்கொண்டிருந்த ராஜேஷை அவளது விழிகள் தேடின. அவன் அந்த ஹாலிலேயே இல்லை. அதேநேரம் தன்னை நோக்கி நீண்ட கரத்திற்குச் சொந்தக்காரனைப் பார்த்தாள்.

“நானும் வீடியோ எடுப்பேங்க. தைரியமா கொடுங்க” என்றான் ஸ்ரீ.

சூழ்நிலையைக் கருதி அவனிடம் ஹாண்டி கேமராவை கொடுத்துவிட்டு, ஜனனியின் பின்னால் சென்று நின்றாள். ஏனோ, மனம் ஒரு நிலையில் இல்லாமல் தள்ளாடியது. புன்னகையுடன் அங்கே நடந்த உரையாடலில் கலந்துகொண்டாலும், விழிகளில் ஒரு அலைப்புறுதல் தெரிந்தது.

மெல்ல அவள் விழிகளை உயர்த்திப் பார்க்க, ஸ்ரீயின் டிஜிட்டல் கேமரா அவளையே குறிவைத்திருந்தது. வேகமாக அங்கிருந்து வந்தவள், அவனிடமிருந்து ஹேண்டிகேமராவை அவன் கையிலிருந்து பிடுங்காத குறையாக வாங்கிச் செல்ல, அவன் முறுவலித்துக் கொண்டான்.

ஜனனிக்கு வளையல் அணிவித்துவிட்டு கீழே வந்த ஜெயந்தி, கடைசி இருக்கையில் அமர்ந்து தயாளனுடன் பேசிக்கொண்டிருந்த கணவரின் அருகில் சென்று அமர்ந்தார். மேடையில் இருந்த போதும், மகன் தனது பாட்டியைச் சமாதானப்படுத்தியதைப் பார்த்துக் கொண்டே தான் இருந்தார்.

இது மட்டுமா! மேடையில் இருந்த வைஷ்ணவியையே அவ்வப்போது தீண்டிச் செல்லும் மகனின் பார்வையும், கவனித்தவருக்கு ஆச்சரியமாகக் கூட இருந்தது.

இது அவனது குணம் அல்லவே. பெண்களிடம் இயல்பாகப் பழகுபவன். அதிலும், தன்னிடமே அவனது பெண் தோழிகளைப் பற்றிப் பேசக் கூடியவன். இவளை, அவன் பார்க்கும் பார்வையில் சுவாரசியமும், ஒருவிதமான ஈர்ப்பும் தெரிவது அவருக்குப் புதிதாக இருந்தது.

‘என் மகனின் கவனத்தை, தன்பக்கமாக ஈர்த்துக் கொண்டிருக்கும் இவள் யார்?’ என்று மேலும் இருவரையும் கவனிக்க ஆரம்பித்தார்.

அவளிடமிருந்த ஹாண்டிக்கேமை வலிய வாங்கிக் கொண்டதுடன், அதில் வீடியோ எடுத்தபடியே அவனது கேமிராவிலும் அவளைப் படமெடுத்ததை அவர் கவனித்தார். அவள் ஹாண்டிக்கேமை அவனிடமிருந்து பறித்துச் செல்ல, அவன் அதைப் புன்னகையுடன் பார்த்ததைக் கண்ட பிறகும் புரியாமல் இருக்குமா என்ன?

அந்தப் பெண்ணை நன்றாக ஆராய்ந்தார். ‘தோற்றத்தில் குறை என்று சொல்ல எதுவுமே இல்லை. மகனுக்கும் பிடித்திருக்கிறது. எத்தனையோ வரன்கள் வந்தபோதும் ஏதேதோ காரணங்கள் தட்டிக்கழித்துக் கொண்டு வந்தவனுக்கு இவளைப் பிடித்திருக்கிறது போலும்’ என எண்ணிக்கொண்டார்.

சற்றுநேரத்திற்கெல்லாம் அவர்களைக் கடந்து செல்ல முயன்றவளை, “அம்மாடி வைஷு!” என்றழைத்தார் தயாளன்.

“என்னங்க மாமா!” என்று அவரருகில் வந்து நின்றவள், அவர்களைப் பார்த்துப் பொதுவாகச் சிரித்தாள்.

ஜெயந்தியைப் பார்த்ததும், ‘இவரிடம் பேசிவிட்டு வந்தபின் தானே பாட்டியின் முகமே மாறிப் போனது’ என எண்ணியவளின் கவனத்தை தயாளனின் குரல் கலைத்தது.

“என் தங்கை பொண்ணு வைஷ்ணவி. எம்.பி.ஏ படிச்சிட்டு எம்.என்.சி யில் டீம் லீடரா வேலை பார்த்துட்டு இருக்கா” என்றவர், “என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் சுந்தரம். அவங்க இவரோட வைஃப் ஜெயந்தி” என்றதும், “வணக்கம்” என்று இருவரையும் கைகூப்பி வணங்கினாள்.

ஜெயந்தி புன்னகையுடன் பார்க்க, “அடடே! வளர்மதியோட பொண்ணா! தங்கச்சியையே எனக்கு அடையாளம் தெரியலைடா!” என்று சிரித்தார் சுந்தரம்.

தயாளன் அத்துடன் விடாமல், “நம்ம, ஸ்ரீநிவாஸோட அப்பா, அம்மா” என்றார்.

சிறு திகைப்புடன், “ஓஹ்!” என்றவள், “அத்தை, ஒரு வேலை சொன்னாங்க மாமா. முடிச்சிட்டு வந்திடுறேன்” என்றவள், “வரேங்க” என்று அவர்களிடம் சிறு முறுவலைச் சிந்திவிட்டு அங்கிருந்து சென்றாள்.

“இந்தப் பொண்ணைத் தானே உன் பையனுக்கு முடிக்கறதா பேச்சு?” என்று கேட்டார் சுந்தரம்.

“நாம பேசி என்னப்பா செய்யறது? பசங்க ரெண்டு பேருமே எங்க மனசுல அப்படி ஒரு எண்ணமே இல்லைன்னு மறுத்துட்டாங்க. ராஜேஷைக் கூட ஏதாவது பேசி சம்மதிக்க வச்சிடலாம். ஆனா, என் மருமக இருக்காளே, அவ்வளவு சீக்கிரம் எந்த விஷயத்தையும் செய்ய வைக்க முடியாது. ஆனா, பொறுப்பான பொண்ணு” என்றார் சிரிப்புடன்.

அவர்களது பேச்சில் கலந்து கொள்ளாவிட்டாலும், அனைத்தையும் ஊன்றி கவனித்துக் கொண்டிருந்தார் ஜெயந்தி.

விழா முடிந்து அனைவரும் கடைசி பந்தியில் ஒன்றாக அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். அவள் ஜனனி பக்கத்தில் அமர்ந்திருக்க, அவளுக்கு எதிரில் சற்று தள்ளி அமர்ந்திருந்த ஸ்ரீ, “ஜனனி இங்கே கொஞ்சம் பார்த்துச் சிரிக்கலாமே” என்றதும் அவனைப் பார்த்துப் புன்னகைத்தவளை கேமராவில் க்ளிக்கிக் கொண்டான்.

வைஷுவின் முகம் கடுகடுவென மாறியது.

அனைவரும் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருக்க, கார் சாவியுடன் பார்க்கிங்கை நோக்கிச் சென்றவனைப் பின்தொடர்ந்தாள் வைஷு.

லிஃப்ட்டிலிருந்து வெளியே வந்தவன் எதிரில் மூச்சு வாங்க படியிறங்கி ஓடிவந்து நின்றாள்.

“என்னங்க மூணு மாடியும் படியிறங்கியா வந்தீங்க? அப்படியென்ன அவசரம்?” என்று கேட்டான்.

மூச்சு வாங்க, “உங்க டிஜிட்டல் கேமராவைக் கொடுங்க” என்றாள்.

“அது எதுக்கு உங்களுக்கு?” என்று கேட்டான்.

“தெரியாதா உங்களுக்கு? எதுக்கு என்னை போட்டோ எடுத்தீங்க?” என்றாள் எரிச்சலுடன்.

“உங்களையா? நான் இன்னைக்கு பங்க்‌ஷனுக்கு வந்த எல்லோரையுமே தான் எடுத்தேன். உங்களை என்னவோ தனியாக எடுத்தது போலச் சொல்றீங்க?” என்று கேட்டான்.

“இல்லையா?” என்றாள் கிண்டலாக.

“இல்லையே” என்றான்.

“நான் பார்த்தேன்.”

“எப்போ?”

“பங்க்‌ஷன்ல…”

“உங்களைத் தனியாக எடுத்ததைப் பார்த்தீங்களா?” என்று அழுத்தமாகக் கேட்டான்.

அவள் மௌனமாக இருக்க, “பார்த்தீங்களா! உங்களாலேயே பதில் சொல்ல முடியல. வழியை விடுறீங்களா?” என்றான்.

அவள் ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன் ஹரிணி தனது கணவனுடன் வருவது தெரிய, அவள் சட்டென அங்கிருந்து நகர்ந்தாள்.

“ஹேய் நீ இங்கே இருக்கியா? உன்னை அத்தை மேலே தேடிட்டு இருக்காங்க” என்று சொல்ல, வேறு வழியில்லாமல் லிஃப்ட்டில் ஏறியவள், தன்னைச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீயைப் பார்த்தாள்.

வீட்டிற்கு வந்தவளுக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை. அவன் தன்னைப் புகைப்படம் எடுத்து தெரிந்தும், எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் அவளை அலைகழித்தது. விழா களைப்பில் அனைவரும் சற்று படுத்தனர்.

தனது பெற்றோர் இருந்த விருந்தினர் அறையில் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தான் ஸ்ரீ. ராஜேஷ் அலுவலக விஷயமாக போனில் பேசிக்கொண்டிருக்க, அவனது அறையை நோக்கி நடந்தாள்.

படியருகில் இருந்த பத்மஜா பாட்டி, “என்னம்மா! நீ தூங்கலையா?” எனக் கேட்டார்.

“தூக்கம் வரலை பாட்டி. ராஜேஷ் ஏதாவது புக் வச்சிருப்பான். எடுத்துட்டு வரலாம்ன்னு போறேன்” என்றவள் அவரை எதுவும் கேட்காமல் வேகமாக படியேறினாள்.

நல்லவேளை கதவு திறந்தே இருந்தது. உள்ளே நுழைந்தவள், முகத்தைச் சுருக்கிக் கொண்டே அவன் அணிந்திருந்த பேண்ட்டை தட்டிப் பார்த்தாள். அதில் கேமரா இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

மெல்லப் பார்வையைச் சுழலவிட்டவள், வார்ட்ரோபைத் திறந்தாள். அங்கே அவனது வார்ச், இரண்டு மொபைல்களுடன் அவள் எதிர்பார்த்து வந்த டிஜிட்டல் காமெராவும் இருந்தது.

“ஹப்பா! கிடைச்சிடுச்சி” என்ற நிம்மதி பெருமூச்சுடன் நிமிர்ந்தவள், “ஹலோ!” என்ற குரலில் உறைந்தாள்.

“என்ன தேடுறீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று கேட்டான் ஸ்ரீ.

அவனது, ஹலோவிலேயே தூக்கி வாரிப்போட திரும்பாமல் அப்படியே நின்றாள்.

அவளிடமிருந்து பதில் இல்லாமல் போக, “ஒருத்தரோட அனுமதி இல்லாம, அவங்களோட அறைக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்வாங்க” என்றான் அவன் கிண்டலாக.

அவனது கிண்டலான பேச்சில் எரிச்சலானவள் திரும்பாமலேயே, “இது, ராஜேஷோட ரூம். இங்கே வர, எனக்கு முழு உரிமை இருக்கு” என்றாள் காட்டமாக.

“ஓஹ்!” என்றவன், “ஆனா, என்னோட திங்க்ஸை எடுக்கவோ, இல்ல தேடவோ எந்த உரிமையும் இல்லன்னு நினைக்கிறேன்” என்றபடி அவளுக்குப் பின்னால் வந்து நின்றான்.

சட்டென தன் கையிலிருந்த டிஜிட்டல் கேமிராவை துப்பட்டாவில் சுற்றி மறைத்துக் கொண்டு, “சாரி! ஷெல்ஃப்ல இருந்ததால, ராஜேஷோடதுன்னு நினைச்சேன்” என்றவள் இதயம் படபடவென அடித்துக் கொண்டது.

இப்படிக் கையும் களவுமாக மாட்டிக்கொண்டதில் வார்த்தைகள் தடுமாறின.

‘நீ எதற்காக பயப்படவேண்டும்? தவறு செய்தவனே அமைதியாக இருக்கிறான்’ என்று தேவையில்லாமல் மூளை எடுத்துரைக்க, கதவை நோக்கி நடந்தாள்.

கதவருகில் செல்லும்வரை மௌனமாக இருந்தவன், “உண்மையிலேயே ராஜேஷோட பொருள்ன்னு நினைச்சித்தான் தேடுனீங்களா?” என்று கேட்டான்.

நின்று அவனை முறைத்தவள், “நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டதற்கு இரு தோள்களையும் அழகாகக் குலுக்கினான்.

மூடியிருந்த கதவைத் திறக்க முயன்றாள் ஆனால், அது பூட்டியிருக்க, பயத்துடன் அவனைப் பார்த்தாள். அவளது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவன் தனது பாக்கெட்டிலிருந்த சாவியை எடுத்துக் காட்டினான்.

படபடத்த இதயத்துடன் உதட்டை அழுந்தக் கடித்தவள், “வம்பு பண்றீங்களா? சாவியைக் கொடுங்க” என்று கோபமாகக் கேட்க நினைத்து ஆரம்பித்தவளின் குரல் முடியும் போது கெஞ்சலாக முடிந்தது.

சாவியை சட்டைப் பாக்கெட்டில் போட்டுகொண்டு பாக்கெட்டை இரு விரல்களால் தட்டியவன், “என்கிட்ட இருந்த எடுத்ததைக் கொடுத்துட்டா, சாவி தன்னால உங்க கைக்கு வந்திடும்” எனச் சொல்லிக் கொண்டே அவளை நோக்கி அடி எடுத்து வைத்தான்.

“பக்கத்துல வந்தா சப்தம் போட்டுக் கத்துவேன்” என்றபடி அச்சத்துடன் பின்னாலேயே நகர்ந்தாள்.

நின்று சிரித்தவன், “உங்களுக்கு விஷயம் தெரியாதா? இந்த ரூம், சௌண்ட் ப்ரூஃப் பண்ணினது. அப்படின்னா, இங்கே உள்ளே என்ன நடந்தாலும் சப்தம் வெளியே போகாது” என்றான் தீவிர பாவனையுடன்.

வைஷுவிற்கு மெல்ல வியர்க்க ஆரம்பித்தது. தனது துப்பட்டாவில் மறைத்து வைத்திருந்த டிஜிட்டல் காமெராவை, அவன் அறியாதவண்ணம் சுடிதார் பாக்கெட்டில் போட்டவள், “நீங்க பொய் சொல்றீங்க” என்று தழுதழுத்தாள்.

“சந்தேகம் இருந்தால், சப்தமா குரல் கொடுத்துப் பாருங்க” என்றான் நிதானமாக.

ராஜேஷை அழைக்கும் பொருட்டு வாயைத் திறந்தவளுக்குக் காற்று மட்டுமே வந்தது.

இது வேலைக்காகாது என்பதைப் போல, “ராஜேஷ்!” என்று உரக்க அழைத்தான் அவன்.

அடுத்த இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகியும் எந்தச் சப்தமும் வரவில்லை. அவன் இரு புருவங்களையும் உயர்த்தி மௌனமாகப் புன்னகைத்தான்.

தைரியத்தைத் திரட்டிக் கொண்டு, “வழியை விடுறீங்களா இல்லையா?” என்றாள்.

“தாராளமா” என்று நகர்ந்து நின்றவன், “ஆனா, என்னோட பொருளைக் கொடுத்துட்டு, இந்தச் சாவியை எடுத்துத் திறந்துட்டு நீங்க போகலாம்” என்று சாவியைக் கையில் வைத்துக் கொண்டு நின்றான்.

“என்கிட்ட எதுவும் இல்லன்னு சொல்றேன் இல்ல” என்றவள், அவனிடமிருந்த சாவியைப் பறிக்க முயன்றாள்.

அவளது எண்ணத்தைப் புரிந்தவனாக, சட்டெனக் கையைப் பின்னுக்கு அவன் இழுத்துக் கொண்டான். அவனது செயலால் சற்றுத் தடுமாறி விழ இருந்தவள் கையை அவன் பற்றினான். ஆனால், வேகமாக வந்தவள் அவனது கரத்தைப் பிடித்தபடியே அருகிலிருந்த திவானின் மீது சரிய ஆரம்பிக்க, அவள் விழாதபடி மற்றொரு கரத்தால் அவளது இடையைப் பற்றித் தன்னோடு இழுத்தான்.

ஒரு சில நொடிகளுக்குள் இதனைத்தும் நடந்திருக்க, அவள் சுதாரித்து விலகும் முன் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த ராஜேஷ் அவர்களைப் பார்த்து ஸ்தம்பித்து நின்றான்.

அவனைக் கண்டதும் முகம் சிவக்க வேகமாக ஸ்ரீயின் கரங்களிலிருந்து விலகினாள்.

“சாரி சாரி நான் தப்பான நேரத்துல…” என்று சிரிப்புடன் சொல்லிக்கொண்டிருக்க, வைஷு இறுகிய முகத்துடன் அங்கிருந்து வெளியேறினாள்.

ராஜேஷ் புரியாமல் பார்க்க, ஸ்ரீ பின்னந்தலையைத் தடவியபடி மௌனமாக நின்றான்.

 
  • Like
Reactions: Indhupraveen

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
445
63
13

அறைக்கு வந்த வைஷ்ணவிக்கு, ‘அவசரத்தில் தான் என்ன காரியம் செய்து வைத்திருக்கிறோம். முன்பின் தெரியாத ஒருவனுடன் ஒரே அறையில்… ச்சே!’ என்று கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. ‘இதில், ராஜேஷ் வேறு. தாங்கள் இருந்த நிலையைப் பார்த்து என்ன நினைத்திருப்பானோ!’ என்று அவமானமாக இருந்தது.

‘அவன் முகத்தில் எப்படி விழிப்பது?’ என்று சங்கடமாக இருந்தது.

தனது பாக்கெட்டிலிருந்து டிஜி கேமை எடுத்து அங்கிருந்த மேஜை மீது வைத்தாள். அதைத் திறந்து பார்க்கக் கூட அவளுக்கு மனமில்லை. கலங்கிய விழிகளுடன் மெத்தையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.

“இப்படிக் கவிழ்ந்து படுத்துத் தூங்காதேன்னு இந்தப் பொண்ணுக்கு எத்தனை முறை சொல்வது?” என்ற அன்னையின் குரல் எங்கோ கேட்பது போல இருந்தது.

“கேட்டா, இப்படித்தாம்மா படுக்கணுமாம். இப்போ டாக்டர்ஸே அதான் சொல்றாங்கன்னு கதையளப்பா. ம்ம், கேமராவை எங்கே வச்சிருக்கா பாரு” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்க, அதுவரை கனவு என்று நினைத்துக் கொண்டிருந்தவள், பட்டென கண்களைத் திறந்தாள்.

அருகிலிருந்த மொபைலை எடுத்து மணி பார்த்தாள். ஐந்தரை ஆகியிருந்தது. எழுந்து துப்பட்டாவை சரிசெய்து கொண்டு, முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தாள்.

தலையை குனிந்தபடியே, “சாரிம்மா! அசந்து தூங்கிட்டேன்” என்றாள்.

மகளை வாஞ்சையுடன் பார்த்தவர், “நீ என்ன தினமுமா தூங்கற? நம்ம வீடா இருந்தா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்ன்னு விட்டுட்டிருப்பேன்” என்றவர், சிவந்திருந்த மகளின் கண்களைப் பார்த்தார்.

“வேலை வேலைன்னு ஓடிட்டு இப்போ ரெஸ்ட் எடுத்ததும், உன் கண்ணுல எவ்வளவு சோர்வு தெரியுது பார். சிவந்தே போச்சு” என்றதும் தான், கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள்.

“திரும்பு” என்று அவளது தலையைப் பின்னி மல்லிகைப் பூவைச் சூட்டிவிட்டவர், “சரி! லேசா மேக் அப் போட்டுக்கோ. அங்கே ஹாலுக்கு வா. எல்லோரும் பேசிட்டு இருக்காங்க” என்றார்.

“எல்லோரும்ன்னா!” என்றாள் மெலிதான குரலில்.

“என்னடி கேள்வி இது? நம்ம வீட்ல இருக்கவங்க. ஸ்ரீயோட அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி எல்லோரும் தான்” என்றார்.

‘அப்படியானால், அவனும் அங்கே தான் இருப்பான்’ என்று நினைத்ததுமே, உடலில் சட்டென மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது.

“எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கும்மா! நான் முடிச்சிட்டு வரேனே” என்றாள்.

“ஏற்கெனவே, ஸ்ரீயோட அம்மா உன்னைக் கேட்டாங்க. கொஞ்ச நேரம் அங்கே இரு. காஃபி குடிக்கிற வரை. அப்புறம் வந்திடு” என்றார் சமாதானமாக.

அவளுக்குத் தான் மனம் சமாதானம் அடையவில்லை. என்ன சொல்லி அம்மாவை சமாளிக்கலாம் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க, யாரோ கதவு தட்டும் ஓசை கேட்டது.

எட்டிப் பார்த்த ஹரிணி, “அத்தை! அம்மா உங்களைக் கூப்பிடுறாங்க” என்றாள்.

“ம்ம், வரேம்மா!” என்றவர் அங்கிருந்து செல்ல, ஹரிணி உள்ளே வந்தாள்.

“என்னடி! நானும் பார்க்கிறேன் மதியானத்துல இருந்து டல்லா இருக்க? உடம்பு சரியில்லையா?” எனக் கேட்டாள்.

”லேசா தலைவலி” என்றாள் முணுமுணுப்பாக.

“வா. சூடா ஒரு ஃபில்டர் காஃபி குடிச்சா சரியாகிடும்” என்றவள் அவளை பதில் பேச விடாமல் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

“கையை விடுடி! நானே வரேன்” என்றாள்.

“வா” என்றவள் முன்னால் செல்ல, வைஷு தயக்கத்துடன் அவளைப் பின் தொடர்ந்தாள்.

அவள் நினைத்ததைப் போலவே அனைவரும் அங்கே கூடியிருந்தனர். மௌனமாக ஹாலிலிருந்த தூணைப் பற்றியபடி அவன் பார்வையில் படாமல் மறைந்து நின்றாள்.

“இப்படி வந்து உட்காரேம்மா வைஷு” என்றார் ஜெயந்தி.

சங்கடத்துடன் அவரருகில் அமர்ந்தாள்.

“வைஷ்ணவி அமைதின்னு தெரியும். ஆனா, இவ்வளவு அமைதியா இப்போதான் பார்க்கிறேன்” என்று நேரம் காலம் தெரியாமல் கிண்டலடித்தான் ஹரிணியின் கணவன்.

“பாதி தூக்கத்திலிருந்து எழுப்பிட்டு வந்துட்டாங்க போல” என்று அவனுக்குச் சமமாகக் கிண்டலில் இறங்கினாள் ஜனனி.

முறுவலிப்பதைத் தவிர அப்போது அவளால் எதையுமே செய்ய முடியவில்லை. தன்னை யாரோ கூர்ந்து நோக்குவது புரிந்தது.

‘யாரோ என்ன? அவன் தான்’ என்று மூளை எடுத்துரைத்தது.

மெல்ல நிமிர்ந்து பார்த்தாள், அவன் அருகிலிருந்த ஜனனியின் கணவனிடம் ஏதோ சொல்லிவிட்டு வெளியே செல்வது தெரிந்தது.

போர்ட்டிகோவில் வந்து நின்றவனுக்கு ஆயாசமாக இருந்தது. நான் வேண்டுமென்றே அப்படிச் செய்யவில்லை என்று அவளிடம் சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால், அவள் இருக்கும் மனநிலையில் நிச்சயமாக அதற்கு எந்தப் பிரயோஜனமும் இருக்கப் போவதில்லை என்று புரிய மௌனமாக இருந்தான்.

மதியம், தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு வந்த சிறிது நேரத்திலேயே, ஜெயந்தி மகனிடம் தனது விசாரணையை ஆரம்பித்துவிட்டார். அவனுமே மறைக்காமல் தனது மனத்திலிருந்த எண்ணத்தைச் சொல்லிவிட்டான்.

சற்று யோசித்தவன், “உங்களுக்கு வைஷுவைப் பிடிச்சிருக்காமா?” எனக் கேட்டான்.

அவனது கண்களில் தெரிந்த அலைப்புறுதலைக் கண்ட ஜெயந்திக்கு, புன்னகை அரும்பியது.

அவனது தலையைக் கோதிக் கொடுத்தவர், “உன் சந்தோஷம்தான் எங்க சந்தோஷம். ஆனாலும், நீ கேட்டதுக்காகச் சொல்றேன். எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ராஜேஷுக்குத் தான் முதலில் பேசினாங்களாமே. தயாளன் அண்ணனே தன் பிள்ளைக்குக் கட்டணும்ன்னு நினைச்சிருக்காருன்னா, நல்ல பொண்ணாதானே இருக்கணும். எங்களுக்குப் பரிபூரண சம்மதம்” என்றார்.

”தேங்க்யூம்மா!” என்றவன், நம்ம தாத்தா பாட்டிகிட்டயும் ஒரு வார்த்தைச் சொல்லுங்களேம்மா. நீங்க சொன்னா அவங்க மறுக்கப் போறதில்லை. உங்க பையனோட லைஃப்ல நடக்கற முதல் சந்தோஷமான விஷயம். எல்லோருடைய ஆசீர்வாதத்திலும் நடக்கணும்மா! ப்ளீஸ்” என்றான் எதிர்பார்ப்புடன்.

ஆழ்ந்த அமைதியுடன் அவனைப் பார்த்தவர், “சரி” என்பதைப் போலத் தலையை ஆட்டினார்.

“ஓகேம்மா! நீங்க ரெஸ்ட் எடுங்க. ஈவ்னிங் பேசுவோம்” என்றபடி எழுந்தவனிடம், “தயாளன் அண்ணன்கிட்டப் பேசிட்டு வரேன்னு போன உங்க அப்பா, பாட்டி ரூம்ல இருப்பார். அவரை வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு ஈவ்னிங் பேசலாம்ன்னு வரச்சொல்லு” என்றார்.

நகைத்தவன், கீழே சென்று தந்தையிடம் சொல்லிவிட்டு, சந்தோஷத்துடனே ராஜேஷின் அறைக்கு வந்தான். அப்போதுதான், அவளை அந்த அறையில் பார்த்தான்.

அவள் மீதிருந்த காதலும், பெற்றோரின் சம்மதமும் தைரியத்தைக் கொடுக்க, சற்று அவளிடம் விளையாடிப் பார்க்க நினைத்தான். ஆனால், அது இந்தளவிற்கு அவளைப் பாதிக்கும் என்று அவன் கனவில் கூட நினைக்கவில்லை.

நடந்த அனைத்தையும் ராஜேஷிடம் பகிர்ந்து கொண்ட போது, “அவள், எல்லாத்தையுமே சீரியசா எடுத்துக்குவா ஸ்ரீ!” என்று கவலையுடன் சொன்னான்.

“நான் விளையாட்டுக்குத் தான்டா மிரட்டினேன். எந்தத் தப்பான எண்ணமும் இல்லடா!” என்று தன்னிலை விளக்கம் கொடுத்த நண்பனை ஆதூரத்துடன் பார்த்தான்.

“ஹே! உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? விடுடா. என்கிட்டயே அவள் பேசுவாளான்னு தெரியாது. ரெண்டு நாள் ஆகட்டும் நானே பேசறேன்” என்றான்.

“இல்லடா! வேணாம். நானே பேசறேன்” என்றான் அழுத்தமாக.

“ஏதாவது பிரச்சனையாகிடப் போகுதுடா!” என்றான் கவலையுடன்.

“நான் பார்த்துக்கறேன்டா!” என்று முடித்துவிட்டான்.

ஆனால், ‘எப்படி இவளிடம் பேசப் போகிறோம்?’ என்று அச்சமாகக் கூட இருந்தது.

ஆழமூச்செடுத்தவன் உள்ளே பார்த்தான். அவள், தன்னை இயல்பாகக் காட்டிக் கொள்ள பெரிதும் முயற்சிப்பது தெரிந்தது. தனது அன்னை அவளிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருக்க, அதற்குப் பதிலளித்துக் கொண்டிருந்தாள்.

மகனிடம் பேசிவிட்டு படுத்த ஜெயந்திக்கு உறக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார். அருகில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த கணவரை பார்த்தார்.

எவ்வளவு முக்கியமான விஷயம் சொன்னேன். எல்லாவற்றையும் தலையாட்டிக் கேட்டுவிட்டு ஆழ்ந்து உறங்குவதைப் பார் என்று அவருக்கு எரிச்சலாக வந்தது.

மணி நான்காகி இருந்தது. கீழே பாத்திரங்களின் ஓசை கேட்க, எழுந்து சமையலறைக்குச் சென்றார். வளர்மதி வேலையாட்களை வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

ஜெயந்தியைக் கண்டதும், “வா ஜெயந்தி” என்று அழைத்தார்.

”விசேஷம்ன்னாலே வேலைதான் இல்ல” என்றார்.

“வீட்டைக் கட்டிப்பார். கல்யாணம் பண்ணிப்பார்ன்னு சும்மாவா சொன்னாங்க” என்று சிரித்தார் வளர்மதி.

“ராஜேஷோட கல்யாணம் முடிச்சிட்டா, நீங்க ப்ரீயாகிடுவீங்க” என்றார் ஜெயந்தி.

“அப்படித் தான் நினைக்கிறோம். ஆனா, அந்தந்த நேரத்துக்கு நமக்கு வேலை இருந்துகிட்டே தான் இருக்கு. அதிலும், இவ்வளவு பெரிய வீட்டை நிர்வாகம் பண்றது இருக்கே. அதுக்கு ரெண்டு கல்யாணம் செய்திடலாம்” என்றதும், ஜெயந்தியும் அவரது சிரிப்பில் கலந்துகொண்டார்.

இதுதான் சமயம் என, “நீங்க எப்போ உங்க வீட்டுக் கல்யாணச் சாப்பாடு போடப்போறீங்க?” என்று கேட்டார் வளர்மதி.

“ம்ம், பார்த்துக்கிட்டே இருக்கோம். உங்களுக்குத் தெரிந்த பொண்ணு இருந்தால் சொல்லுங்களேன்” என்று ஜெயந்தியும் பந்தை அவர்புறமாகவே திருப்பி விட்டார்.

அதைத் தானே எதிர்பார்த்திருந்தார் வளர்மதி.

“ஹரிணி, ஜனனி வீட்டுப் பக்கம் நம்ம ஸ்ரீக்கு ஏத்தபடி எந்த பொண்ணும் இருக்கறதா தெரியல. இப்போதைக்கு என் நாத்தனார் பொண்ணு வைஷு தான் இருக்கா. அவளுக்கும் வரன் பார்த்துட்டு இருக்காங்க. உங்களுக்குச் சரின்னா பார்க்கலாமா?” என்று கேட்டார்.

“ம்ம், ஆமாம். காலைல அண்ணன் அறிமுகப்படுத்தி வச்சாங்க. பொண்ணு நல்லா தான் இருக்கா. நான் வீட்ல கலந்து பேசிட்டுச் சொல்றேனே” என்றார்.

அதன் தொடர்ச்சியாகத் தான் இப்போது அவளிடம் படிப்பு, வேலை என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும், எப்போதடா இங்கிருந்து செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று மனத்திற்குள் புலம்பிக் கொண்டிருந்தாள். அவளது ஆசையைப் பூர்த்தி செய்வதைப் போல அவளது மொபைல் ஒலித்தது.

“ஆஃபிஸ்லயிருந்து போன்” என்றபடி, விட்டால் போதுமென அங்கிருந்து எழுந்து சென்றாள்.
 
  • Like
Reactions: Indhupraveen