Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 8 | SudhaRaviNovels

அத்தியாயம் - 8

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
333
319
63
அத்தியாயம் – 8

மறுநாள் காலை சென்னை வந்து இறங்கியவளை வரவேற்க அண்ணன், தம்பி இருவரும் ஆவலாக நின்றனர். அவளுடன் கயல் வந்திருக்கிறாளா என்று பார்த்துவிட்டு சற்றே ஏமாற்றத்துடன் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே நின்றனர்.

வரவழைத்துக் கொண்ட சிரிப்புடன் “என்ன ரெண்டு பேரும் நைட் தூங்கவே இல்லையா? பஸ் ஸ்டாண்டிலேயே உட்கார்ந்திருக்கீங்களா?”

“உண்மை தான் சுடர். கயல் என்ன சொல்லுவளோ எப்படி இருக்காளோன்னு கவலையா இருந்துச்சு. உன் முகத்தை பார்த்ததும் தான் நிம்மதியா இருக்கு” -குணா.

அர்ஜுனோ அவளை கூர்ந்து பார்த்தபடி நின்றிருந்தான்.

அவளுக்கு உள்ளுக்குள் உதறலாக இருக்க “இங்கேயே வச்சு எல்லாவற்றையும் பேச வேண்டாம். எதாவது ஹோட்டலுக்குப் போயிட்டு அங்கே உட்கார்ந்து பேசுவோம்” என்றாள்.

குணா உடனே ஒத்துக் கொள்ள, அர்ஜுன் இதுவரை ஒற்றை வார்த்தை பேசவில்லை. அமைதியாக அவர்களுடன் நடந்தான்.

அருகே இருந்த ஹோட்டலுக்குள் மூவரும் நுழைந்து அங்கிருந்த மேஜையில் அமர்ந்தனர். சுடர் எழுந்து சென்று முகம் கழவி விட்டு வந்து அமர்ந்தாள். காபி ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்ததும் இருவரின் பார்வையும் அவள் மீது தான்.

மனதிற்குள் சொல்லித்தானே ஆக வேண்டும் என்கிற எண்ணம் எழ, இங்கிருந்து போனதில் இருந்து அவள் வர மாட்டேன் என்று சொன்னவரை அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

அங்கே இருவரும் பேச மறந்து அமர்ந்திருந்தார்கள். அர்ஜுனின் முகம் வருத்தத்தில் சுருங்கி போயிருந்தது.

இருவரின் உணர்வுகளையும் பார்த்துக் கொண்டிருந்தவள் “இதை அவள் சொல்லக் கூடாது என்று சொன்னாள். சொல்லாம இருக்க என் மனசாட்சி இடம் கொடுக்கல மாமா” என்றவள் அன்று நடந்தவைகளை எல்லாம் கயல் சொன்னவற்றை ஒன்று விடாது சொல்லி முடித்தாள்.

குணாவின் முகம் உள்ளுக்குள் எழுந்த கொந்தளிப்பிலும், கோபத்திலும் ரத்தச் சிவப்பாக மாறி இருந்தது என்றால் அர்ஜுனின் முகமோ தாடை இறுக கல்லாக மாறிப் போய் அமர்ந்திருந்தான்.

“நேரே போய் அவளை வெட்டிப் போடுறேன். பொம்பளையா அவ” என்றான் குணா ஆத்திரமாக.

“வெட்டி போட்டுட்டா போன மானம் மரியாதை எல்லாம் திரும்பி வந்துடுமா? நம்ம கயலுக்கு நடந்த கேவலம் மாறி விடுமா?” என்றான் அர்ஜுன் இறுகிய குரலில்.

“என்னடா பண்ண சொல்ற? எனக்கு உடம்பெல்லாம் எரியுதுடா! இவளோட குடும்பம் நடத்தி ஒரு புள்ளையும் பெத்திருக்கேன்னு நினைச்சா கூசிப் போகுது” என்று சொல்லவும் சுடரின் முகம் கசங்கிப் போனது.

அவனோ விடாது “என்ன குடும்பம்டா அது? ஒரு பொம்பளை புள்ளேன்னு பார்க்க மாட்டாளா என் மாமியா? அவ பொண்ணுக்கு நடந்தா சும்மா இருப்பாளா?” என்று குதித்தான்.

அவர்கள் தன் குடும்பத்தைப் பேசப்பேச உள்ளுக்குள் நொறுங்கிக் கொண்டிருந்தாள். அக்காவும் அம்மாவும் செய்து வைத்த வேலையில் தன் எதிர்காலமே மொத்தமாக குழி தோண்டி புதைக்க வேண்டிய கட்டாயம்.

அவளின் சிந்தனையை கலைக்க “அவளை கூப்பிட நாம போகலாம் குணா. யார் என்ன சொன்னாலும் நம்ம வீட்டுக்கு ராணி அவ தான். அவளுக்கு அடங்கி இருக்கிறதா இருந்தா அவங்களை வீட்டில் இருக்க சொல்லு. இல்லேன்னா அவங்க வீட்டுக்கேப் போக சொல்லு” என்றான் அர்ஜுன் கடுமையாக.

அந்த இடத்தில் சூழ்நிலையில் அவளால் உட்காரவே முடியவில்லை. அதிலும் அர்ஜுன் அவளின் பக்கமே திரும்பவில்லை. காதலித்தவன் வாயாலேயே அவளின் குடும்பத்தைப் பற்றி கேவலமாக கேட்பது என்பது கொடுமையான விஷயம்.

“ஆமாம்டா! அவளை முதலில் அடிச்சு துரத்தி விடனும். குழந்தையை நம்ம கிட்ட வச்சுக்கிட்டு அந்த நாயை அவள் வீட்டுக்கே விரட்டனும்” என்றான் குணா.

இருவரும் அங்கே ஒருத்தி உணர்வுகள் எல்லாம் செத்து ஜடமாக அமர்ந்திருக்கிறாள் என்பதை மறந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“குணா இது மட்டும் அம்மாவுக்கு தெரியவே கூடாது. நான் எப்படியாவது கயலை சமாதானப்படுத்திக் கூட்டிட்டு வந்துடுறேன்”.

“அம்மாவுக்கு தெரிஞ்சா செத்துடும்டா. பாவம் எத்தனை கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. இந்த நாய் குடும்பத்துக்குள்ள வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டா”.

கண்கள் கண்ணீரைப் பொழிய இருவரையும் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

உணர்ச்சிப் போராட்டத்தில் இருந்த இருவரும் மெல்ல நிதானத்திற்கு வர, அப்போது தான் எதிரே ஒருத்தி உள்ளுக்குள் துடித்தபடி அமர்ந்திருக்கிறாள் என்பதையே உணர்ந்தனர்.

குணாவுக்கு நாக்கு வறண்டு போக “சுடர்..” என்றான் இறங்கிய குரலில்.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
333
319
63
அர்ஜுனும் அந்த நிமிடம் தான் அவள் இருப்பதை உணர்ந்தான். அவள் முகத்தில் தெரிந்த வலியைக் கண்டு பயந்து போனவன் “சுடர்! இங்கே பாரு! உன்னை நாங்க எதுவும் சொல்லல” என்று முடிக்கும் முன் “நான் கிளம்புறேன். என் வேலை முடிஞ்சு போச்சு. இனி, என்னை எதுக்கும் கூப்பிடாதீங்க” என்று சொல்லி தனக்கான காசை வைத்துவிட்டு சென்று விட்டாள்.

இருவரும் அவளது செயலில் திகைத்துப் போய் அமர்ந்திருந்தார்கள்.

“டேய்! அவ போறாடா! எனக்கு தான் கூறு இல்ல. நீயாவது யோசிச்சிருக்கலாமில்லை” என்று குணா கடிந்து கொண்டான்.

அர்ஜுனுக்கு அவளின் மனநிலை நன்றாகவே புரிந்தது. நிச்சயம் அவள் விலகி செல்ல தான் முயலுவாள். அவளை சமாதானப்படுத்துவது கடினம் என்று புரிந்திட, “விடு குணா! முதல்ல நாம கயலை பாப்போம்” என்று விட்டான்.

குணாவோ அதிர்ந்து “என்னடா சொல்ற?”

“கஷ்டம்! அவளோட நிலையிலிருந்து பாரு குணா. நம்ம வீட்டைப் பொறுத்தவரை இனி அவங்க வீட்டு ஆட்களை பேசாம இருக்க மாட்டோம். ஒவ்வொரு முறையும் அதை கேட்கும் போது அவள் நெருப்பில் விழுந்த மாதிரி துடித்து தான் போவாள். தன் வீட்டு ஆட்களை இன்னொருத்தர் இப்படி பேசுவதை கேட்பது அவளுக்கு அவமானம் இல்லையா. இந்த கொஞ்ச நேரத்திற்குள்ளேயே அவளையும் வச்சுகிட்டு நாம என்னவெல்லாம் பேசினோம் அதிலேயே அவளுக்கு எதிர்காலம் புரிஞ்சிருக்கோம். என்னை கேட்டா அவளை அப்படியே அவளின் இஷ்டத்துக்கு விடுவது தான் முறை”.

“அப்போ உங்க வாழ்க்கை?”

“ம்ச்...விடு குணா. இப்போ நமக்கு கண் முன்னால இருப்பது கயலின் வாழ்க்கை மட்டுமே” என்று சொல்லி எழுந்து கொண்டான்.

குணாவிற்கு வேதனையாக இருந்தது. தன் ஒருவனின் வாழ்க்கையால் தம்பி தங்கை இருவரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி இருப்பதை எண்ணி வசந்தியை கொன்று போட்டு விடும் ஆத்திரம் எழுந்தது.

அவனது முகத்தைப் பார்த்து எண்ணத்தைப் புரிந்து கொண்டவன் “நாம பேசியது எதையும் வீட்டில் சொல்ல வேண்டாம். முக்கியமா அவங்களுக்கு எதுவுமே தெரியக் கூடாது. கயல் இருக்கும் இடம் நமக்கு தெரியும் என்பதே அவங்களுக்கு போக கூடாது குணா. உனக்கு ஆத்திரம் வந்தாலும் வேறவழியில்லை.அவங்க எப்பேர்பட்ட கிரிமினல் என்று உனக்கு தெரியும். கயல் அங்கே பத்திரமாக இருக்கிறாள். அதை மனதில் பதிய வச்சுக்கோ”.

“எப்படிடா? என்னால அவளை எப்படி சும்மா விட முடியும்? கை பரபரங்குது அர்ஜுன். தூக்கிப் போட்டு மிதிக்கனும்னு தோணுது”.

“உன்னுடைய சிறு அசைவும் கயலுக்கு எதிரா மாறும். நீ எதுவுமே நடக்காத மாதிரி நடமாடுறது தான் நல்லது’.

தம்பியின் பைக்கில் ஏறியவன் அவன் முதுகில் தட்டி “ஒரே ஒரு கல்யாணம் பண்ணினேன் மொத்த குடும்பத்தையும் தெருவுல கொண்டு வந்து விட்டுட்டா” என்று புலம்பினான்.

“குணா! கண்ட்ரோல் பண்ணு. நாம இப்போ கயல் விஷயத்தில் என்ன முடிவு பண்றது சொல்லு?”

“நம்மள வரக்கூடாதுன்னு சொல்லி இருக்காடா. இப்போ உடனே போய் நின்னா அவ வேற எங்கேயாவது போயிட்டா கஷ்டம். அதனால கொஞ்ச நாள் விட்டுப் பிடிப்போம். சுடர் தான் அந்தம்மா நம்பர் வாங்கிட்டு வந்திருக்கே. அவங்க கிட்ட பேசி அவளுடைய நலனை விசாரிச்சுப்போம். அதுக்குள்ளே இங்கே என் பொண்டாட்டிக்கும் மாமியாளுக்கும் ஒரு பாயாசத்தை போட்டுட வேண்டியது தான்”.

“கண்டிப்பா செய்யணும் குணா”.

அவர்களிடம் காசை கொடுத்துவிட்டு ஹாஸ்டலுக்கு வந்த சுடருக்கு அழுத்தம் அதிகமாக இருந்தது. அம்மாவும், அக்காவும் செய்து வைத்த துரோகத்தில் பாதிக்கப்பட்டது அவர்கள் குடும்பம். அதில் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது வாழும் கயலும் தான்.

அவளின் அறையில் யாருமில்லாமல் போக தன் படுக்கையில் விழுந்தவள் அழுது தீர்த்தாள்.

அப்போது அவளின் போன் அழைக்க, எடுத்துப் பார்க்க அன்னை தான் அழைத்துக் கொண்டிருந்தார். அவரின் அழைப்பை ஏற்க மனமில்லை. அவரும் விடாமல் அழைத்தார்.

போனை சுவிட்ச் ஆப் செய்து போட்டுவிட்டு படுத்து விட்டாள்.

சுமார் ஒரு மணி நேரம் கடந்திருக்க, அவளின் அறைக் கதவு தட்டப்பட்டது. கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து சென்று கதவை திறந்தாள். அங்கே நின்ற பெண் அவளைப் பார்க்க கெஸ்ட் வந்திருப்பதாக சொல்லிச் சென்றது.

அர்ஜுன் வந்திருப்பானோ என்கிற சந்தேகத்துடதுன் இறங்கி கீழே இறங்கிச் சென்றாள். அங்கே மங்களம் தான் அமர்ந்திருந்தார்.

அவரைப் பார்த்ததும் கயல் சொல்லிச் சென்றது எல்லாம் நினைவிற்கு வர, ஒருவித அழுத்தத்துடன் அவரின் முன்னே சென்று நின்றாள்.

“போனை எடுக்க மாட்டியாடி? ரெண்டு நாளா அடிக்கிறேன் ஏன் எடுக்கல?”

“ம்ச்... என்ன விஷயமா வந்த அதை சொல்லு?”

“இப்படி உள்ளூரிலேயே வந்து ஹாஸ்டலில் இருக்கிறது எங்களுக்கு அசிங்கமா இருக்கு. கிளம்பு வீட்டுக்குப் போகலாம்”.

“எதுக்கு என்னை கூப்பிடுற? இன்னும் எந்த குடும்பத்தை கெடுக்க அம்மாவும் பெண்ணும் ப்ளான் போடுறீங்க?”

கையை ஓங்கியவர் “போட்டேன்னா! ஓவரா பேசாதே. உன் சாமான்களை எல்லாம் எடுத்திட்டு வா போகலாம்”.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
333
319
63
“அப்படி எல்லாம் உடனே வர முடியாது. எனக்கு ஓரு வாரம் டைம் கொடு வரேன்”.

“இங்கே பாரு அவனோட இனி பேசாதே! ஒருத்தியை அந்தக் குடும்பத்துக்கு கொடுத்திட்டு நாம படுறபாடு போதாதா? உன்னை அவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கிற ஐடியா எல்லாம் இல்ல”.

அன்னையை திரும்பிப் பார்த்தவளின் முகத்தில் அத்தனை கோபம் இருந்தது.

“அவங்களா படுத்துறாங்க? மனசாட்சியே இல்லாம எப்படிம்மா பேசுறீங்க?”

“இதோ பாரு! சும்மா வளவளன்னு பேசிட்டு இருக்காதே. அந்த அர்ஜுனோட உனக்கு கல்யாணம் நடக்காது. அவனை கட் பண்ணிவிடு சொல்லிட்டேன்”.

இருகைகளையும் கட்டிக் கொண்டு அன்னையைப் பார்த்தவள் “அப்புறம்”.

“என் பிள்ளைகளுக்காக தாண்டி இந்த பாடுபடுறேன். நீங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிறது ஒரு குத்தமா?”

“சொல்லு உனக்கு என்னென்ன தோணுதோ சொல்லிட்டே இரு. கொஞ்சம் கூட உன்கிட்ட குற்ற உணர்வே இல்லையாம்மா?”

“எதுக்குன்னேன் நான் என்ன பண்ணினேன்? உங்க அக்கா மாமியாரும் சரி புருஷனும் சரி ஓவரா தான் ஆடுறாங்க. வயசுக்கு வந்த பெண்ணை ஒழுங்கா வளர்க்க தெரியல ஆனா பேச்சு மட்டும் ஓவரு”.

“மா! போதும் நிறுத்து! நீ சொல்ல வந்ததை சொல்லியாச்சு தானே கிளம்பு”.

மகளை முறைத்துவிட்டு “அடுத்த வாரம் எப்போ வர? சீக்கிரம் வந்து சேரு. உங்கப்பா வேற நான் என்னவோ உன்னை வீட்டை விட்டு துரத்திட்ட மாதிரி அந்தப் பேச்சு பேசுறாரு”.

“நீங்க கிளம்புங்க. நான் இங்கே எல்லாவற்றையும் முடிச்சிட்டு வரேன்” என்று அவரை அனுப்புவதிலேயே குறியாக இருந்தாள்.

அவர் சென்றதும் அவசரமாக சென்று மொபைலில் தனது தோழி அனுவிற்கு செய்தி அனுப்பினாள். நீ சொன்ன அந்த வேலையில் சேர நான் விருப்பப்படுகிறேன். அடுத்த வாரம் அங்கு வந்துவிடலாம் என்று இருக்கிறேன் என்று அனுப்பி விட்டாள்.

இனியும் இங்கிருந்து இந்தப் போராட்டங்களை சமாளிக்க அவளிடம் தெம்பில்லை. கயலிடம் தான் கேட்டறிந்த விஷயங்களை எண்ணிப் பார்த்தபோது இங்கிருப்பது மன வலியை தான் அதிகப்படுத்தும். அவனும் தன்னை சமாதானப்படுத்தவும் முடியாமல் குடும்பத்தை எண்ணியும் கவலை கொள்வான். அதனால் ஒதுங்கி போய் விடுவது என்கிற முடிவிற்கு வந்து விட்டாள்.

அடுத்து வந்த இரு நாட்களில் அனு அங்கே எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட, இங்கே வேலை செய்யும் இடத்தில் எமர்ஜென்சியில் வேலையை விட்டுச் செல்வதாக எழுதிக் கொடுத்து இரு மாத சம்பள பணத்தை கட்டி ஒப்புதல் வாங்கிக் கொண்டு வெளியேறினாள்.

மும்பை செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்தவளின் மனம் கனத்துப் போயிருந்தது. அவளின் உயிரை இங்கே விட்டுவிட்டு செல்கிறாள். இனி, அவனுக்கும் தனக்கும் எதுவுமே இல்லை என்கிற நிலையில் தான் பிரிந்து செல்கிறாள். ரயில் கிளம்பி மெல்ல ஆடி அசைந்து நகரத்தை விட்டு வெளியேறும் போது அவனது வாட்ஸ் ஆப்பிறகு சிறு பிரிவு கவிதை ஒன்றை அனுப்பி வைத்தாள்.

இந்த ஜென்மம் முழுவதும்
உன்னோடு வாழ்ந்திட ஆசை கொண்டேன்
வாழ்க்கையின் அத்தியாயத்தில் நம்
காதலுக்கு இடமில்லை என்று
காலமும் என் குடும்பமும் சொல்லியது
யார் என்ன சொன்னால் என்ன
உன்னை மட்டுமே நெஞ்சில் தாங்கி
இவ்வுலகின் வேறொரு மூளைக்குச்
செல்கிறேன் என்றென்றும் உன்
நினைவுகளுடன்!
என்று அனுப்பிவிட்டு அவனுடைய எண்ணை ப்ளாக் செய்து விட்டாள்.

அவளிடமிருந்து ஏதோ செய்தி வந்திருக்கிறது என்று எண்ணி திறந்தவனுக்கு அந்தக் கவிதை சொன்ன செய்தி உவப்பானதாக இல்லை. தன்னை விட்டு எங்கோ பிரிந்து செல்கிறாள் என்று உணர்ந்த நொடி தனது கையறு நிலையை வெறுத்தான்.

அவளிடமிருந்து இப்படியொன்றை எதிர்பார்த்தே இருந்தான் தான். ஆனால் அவள் அதை செயலாற்றும் முன் தடுத்து விடலாம் என்று எண்ணி இருந்தான். இத்தனை விரைவாக அவள் கிளம்புவாள் என்று நினைக்கவில்லை.

உடனே குணாவிற்கு அழைத்து விட்டான்.

“என்னடா இந்த நேரத்துக்கு கூப்பிடுற?”

“சுடர் ஊரை விட்டு எங்கேயோ போறா”.

“என்ன சொல்ற?”

“உன்னை விட்டு பிரிந்து போறேன்னு சொல்லி எனக்கு ஒரு கவிதை அனுப்பி வச்சிட்டு நம்பரை ப்ளாக் பண்ணிட்டா குணா. எது நடக்க கூடாது என்று பயந்தேனோ அதுவும் நடந்து விட்டது”.

“என்னடா சொல்ற? நம்மளை சுற்றி என்ன நடக்குது? அத்தனை தெளிவான பொண்ணு ஏன் இந்த முடிவை எடுக்கணும்?”

“தெளிவா இருந்ததினால தான் இந்த முடிவை எடுத்திருக்கா. கயலுக்கு நடந்ததை அவளால் கிரகிக்க முடியல. அதோட எங்களோட இந்த உறவிற்கு எதிர்காலம் இல்லை என்று தெரிந்து போச்சு குணா. இங்கே இருந்தா அவளையும் நிம்மதியா வாழ விட மாட்டாங்க”.