Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 8 | SudhaRaviNovels

அத்தியாயம் - 8

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,826
113
அத்தியாயம் – 8

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

தெய்வம் ஏதுமில்லை – நடந்தைதையே

நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை...

நீதிபதியின் முன்பு அமர்ந்திருந்த இருவரும் இருவேறு மனநிலையில் இருந்தனர். நிகிலோ எப்படியாவது அவள் மனதை மாற்றி, தான் இழைத்த தவறுகளுக்கெல்லாம் மன்னிப்பை பெற்று அவளுடன் சேர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணத்திலிருந்தான்.

அவளோ இன்றுடன் அனைத்தும் முடிந்துவிட்டால் நிம்மதி என்ற நிலையிலிருந்தாள்.

இருவரின் முகங்களையும் ஆராய்ந்த நீதிபதி அவளிடம் “இன்னைக்குத் தீர்ப்பு கொடுக்க முடியாத நிலையிலிருக்கிறேன். அதுக்குக் காரணம் இவர். உங்களோட சேர்ந்து வாழணும்ன்னு நினைக்கிறார்.தீர்ப்பை கொஞ்ச நாள் தள்ளி போடுங்கன்னு கேட்கிறார்.”என்றவர் ஸ்ருதியின் முகத்தை ஆராய்ந்தார்.

அதுவரை இன்று முடிவுக்கு வந்துவிடும் என்ற எண்ணத்தில் இருந்தவளுக்கு, நீதிபதியின் வார்த்தைகள் அதிகக் கோபத்தை வரவழைத்தது. கண்களில் உக்கிரத்துடன் அவனைத் திரும்பி பார்த்துவிட்டு “ஆறுமாதம் சேர்ந்து வாழ்ந்த போது தோன்றாதது. இந்த ஒருவருடப் பிரிவில் தோன்றாதது, இப்போ எப்படித் தீர்ப்புக்கு முதல்நாள் இந்த எண்ணம் வந்திருக்கும்?.அதுமட்டுமில்ல துபாய்க்கு அழைச்சிட்டு போய் ஆறுமாதம் ஜெயிலில் வச்சிருந்த மாதிரி வீட்டிலேயே அடைச்சு வச்சிருந்தார். இப்போ இவரை எப்படி நான் நம்புறது சார்?”.

நிகிலின் பக்கம் திரும்பிய நீதிபதி “அவங்க கேட்கிற நியாயமான கேள்விக்குப் பதில் சொல்லுங்க. நீங்க இவங்களோட வாழணும்னு நினைக்கிறது உண்மை தானா?ஆனா, அவங்க உங்க கூட வாழ விருப்படலையே?என்ன செய்யலாம் சொல்லுங்க?”

அவர் சொன்னதைக் கேட்ட நிகில் “ப்ளீஸ் சார்..ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுக்க முடியுமா?நான் பேசி கன்வின்ஸ் பண்ணி பார்க்கிறேன்.”

அவளோ “வேண்டாம் சார்! நான் இவர் கிட்ட பேச விரும்பல.நீங்க முடிச்சு வச்சிடுங்க” என்றாள்.

இருவரையும் பார்த்தவர் நிகிலிடம் தெரிந்த தவிப்பில் சற்று யோசனை செய்தவர், “நீங்க பேசிப் பாருங்க” என்றார் முடிவாக.

அதைக் கேட்டதும் மேலும் கோபமாக நாற்காலியிலிருந்து எழுந்தவள் நிகிலை திரும்பி முறைத்துவிட்டு “நன்றி சார்” என்றுரைத்துவிட்டு அறையை விட்டு வெளியே சென்றாள்.

அவளின் பின்னே வேகமாகச் சென்றவனைப் பார்த்துக் கொண்டிருந்த காயத்ரி நீரஜிடம் “பார்த்தியா நீரஜ்! செஞ்ச தப்புக்கு அவ பின்னாடி நாய் குட்டி மாதிரி ஓடுறான் பாரு. இன்னைக்குத் தர்ம சாத்து இருக்கு அவனுக்கு.”

“அம்மா! இருந்தாலும் நீங்க அவனை ரொம்பவே படுத்துறீங்க” என்றான் நீரஜ்.

“நான் படுத்தலடா அவனே தான் கஷ்டப்படுத்திக்கிறான்.அழகா போயிருக்க வேண்டியதை தானே கெடுத்துகிட்டான். இப்போ அதுக்குத் தண்டனையை அனுபவிக்கிறான்.”

அறையிலிருந்து வெளியே சென்றவள் நேரே கோர்ட் வளாகத்திலிருந்த மரத்தடியில் சென்று நின்றாள்.மனதின் ஒருபக்கம் இன்று தீர்ப்பில்லை என்று நினைத்து மகிழ்ச்சியாகவும் இருந்தது. அதேசமயம் அவன் பேசிய வார்த்தைகளை நினைத்து மீண்டும் இறுகி போனது.

அவளின் முகத்தில் வந்து உணர்வுகளையே பார்த்துக் கொண்டிருந்தவன் “என்ன டாலி இது? எதுக்கு இந்த டென்ஷன்?”என்றான்.

அவனது டாலி என்ற அழைப்பில் கடுப்பாகி “முதல்ல இந்த டாலின்னு கூப்பிடுறதை நிறுத்துங்க.என்னை பார்த்தா கேணச்சி மாதிரி தெரியுதா? என்னமோ ஒண்ணுமே நடக்காத மாதிரி பேசுறீங்க?”

அவளின் கோபம் கண்டு சற்று அயர்ந்து போய் “சரி! நான் கூப்பிடல?நான் பண்ணினது தப்புதான்.உனக்கு என்னை மன்னிக்க முடியாதுன்னு தெரியும்.இப்பவும் நான் செஞ்சதை நியாப்படுத்த முயற்சி பண்ண மாட்டேன்.ஆனா,ஒரே ஒரு சான்ஸ் எனக்குக் கொடுக்கலாமில்லை” என்றான் கெஞ்சலாக.

அவனைக் கூர்மையாகப் பார்த்தவள் “இங்கே பாருங்க, எனக்கு உங்களோட வாழ்ந்த அந்த ஆறுமாத வாழ்க்கையே ஜென்மத்துக்கும் போதும்.உங்க தப்புக்கான விளக்கம் எனக்குத் தேவையில்லை.நாம ரெண்டு பேரும் பிரியிறது தான் சரியான முடிவு.”

அவளின் பதிலில் நொந்து போனவன் மனதிற்குள் ‘நாம நினைச்ச மாதிரி சீக்கிரம் இறங்கி வர மாட்டா போலருக்கேடா! இப்போவே கண்ணைக் கட்டுதே!’ ஒருவேளை அம்மா இவளை ஏத்தி விட்டு இருப்பாங்களோ?’ என்றெண்ணி அவசரமாகத் திரும்பி காயத்ரியைப் பார்த்தான்.

அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவர் அவன் திரும்பி தன்னைப் பார்த்ததும் அவசரமாகத் திரும்பி அகல்யாவிடம் பேச ஆரம்பித்தார்.அதை பார்த்ததும் ‘இது நிச்சயமா

அம்மா வேலைதான்’ என்று நினைத்துக் கொண்டான்.

மெல்லிய சிரிப்புடன் அவளைப் பார்த்தவன் “உனக்குப் பயமாயிருக்குன்னு நினைக்கிறேன்.எங்கே டைம் குடுத்தா என்னைக் கண்டு மயங்கி போயிடுவோம்னு”என்றான்.

கேவலமானதொரு பார்வையை அவனுக்குப் பரிசாகத் தந்தவள் “நிறையப் படம் பார்ப்பீங்களோ?இல்ல கதைகள் படிப்பீங்களா? நான் தான் முடிவு பண்ணனும். என் மனசுக்குள்ள யார் எப்போ வரணும் என்பதை.நீங்க என்ன குட்டிகரணம் அடிச்சாலும் நடக்காது. முதலில் அதைப் புரிஞ்சுக்கோங்க.”

அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் இரு கைகளையும் உயரத் தூக்கி “சரண்டர்! கொலை குற்றவாளிக்கு கூட ஒரு வாய்ப்பு கொடுப்பாங்க தன்னை நிரூபிக்க.நான் என்ன செய்தா உன் மனசுக்குள்ள வர முடியும்னு சொல்லு? அதைச் செய்யத் தயாரா இருக்கேன்”என்றான்.

அவனையே ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தவள், அவனது பேச்சில் நெற்றி சுருங்க யோசித்து அங்குமிங்கும் நடந்தாள், பலத்த யோசனைக்குப் பிறகு “ஓகே..நான் ஒத்துகிறேன்” என்றவள் “பட் ஒன் கண்டிஷன்.இந்த டாலி, வாளின்னு எல்லாம் கொஞ்சிகிட்டு என் பின்னாடி வரக் கூடாது.நீங்க என் கண் முன்னாடியே வரக் கூடாது.நானா கூப்பிட்டு பேசும் வரை” என்றாள்.

“ஊப்ஸ்..என்றவன் ‘இதெல்லாம் பண்ணாம உன்னை எப்படி நான் கன்வின்ஸ் பண்றது?’ என்று தனக்குள்ளேயே முனகிக் கொண்டான். ‘சரி எவ்வளவோ பார்த்துட்டோம் இதையும் பார்த்துடுவோம்’ என்றெண்ணியவன் அவளின் முன்னே குனிந்து காதோரம் “தேங்க்ஸ்” என்றான்.

அவனது செய்கையில் தடுமாறி பின்னே நகர்ந்தவள் “என்ன இது!இப்போ தானே சொன்னேன்.இந்த மாதிரியெல்லாம் செஞ்சீங்கன்னா நான் வேண்டாம்னு சொல்லிட்டு போய்டுவேன்” என்றாள் ஆத்திரமாக.

“தேங்க்ஸ் தானே சொன்னேன்.அதுக்குப் போய்”

‘இடத்தைக் கொடுத்தா மடத்தைப் பிடிக்கிறது’ என்று முணுமுணுத்தவள் “நேரமாகலையா? சார் சொன்னதுக்கு மேல டைம் ஆச்சு” என்றவள் திரும்பி நீதிபதி அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

அவளுடன் இணைந்து கொண்டான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த காயத்ரி “இப்போவே என்னவோ சாதிச்ச மாதிரி வரான் பாரு நீரஜ்.”

“சும்மாயிருங்கம்மா”

இருவரும் நீதிபதியிடம் அனுமதி வாங்கி உள்ளே சென்றமர்ந்தனர்.அவர்களிருவரையும் நிமிர்ந்து பார்த்தவர் “சொல்லுங்க என்ன முடிவு பண்ணுனீங்க?தீர்ப்பை கொடுக்கலாமா? இல்ல இன்னும் ஒரு மூணு மாசம் ஒத்திப் போடலாமா?” என்று கேட்டார்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,826
113
ஸ்ருதி மெல்ல திரும்பி நிகிலை பார்த்தவள் “தீர்ப்பை தள்ளிப் போட நான் ஒத்துக்கிறேன் ஐயா” என்றாள்.

தன் கண்ணாடியை கழற்றி சரி செய்து கொண்டவர் “நல்ல முடிவும்மா. ஒரு கல்யாணம் நடக்க எவ்வளவோ தடைகள் இருக்கு.அதை மீறி பல பேருடைய ஆசிகளோட நடக்கிற கல்யாணங்கள் பாதியிலேயே முடிஞ்சு போறது வருத்தப்பட வேண்டிய விஷயம்.தம்பதிகள் தங்களுக்குள்ள இருக்கிற ஈகோ, பிடிவாதம், மனசு விட்டு பேசிக்காம சின்னச் சின்ன விஷயங்களுக்காக ஈஸியா கோர்ட் படி எறிடுறாங்க. நாங்களும் பிரிவை தடுத்து நிறுத்த போராடி தான் பார்க்கிறோம்.எப்பவும் சில விஷயங்களை ஆற போட்டு யோசித்து முடிவு பண்றது தான் நல்லது.பிரியணும்னு நினைச்சு வருகிற எல்லாத் தம்பதிகளுக்கும் இதைச் சொல்வதில்லை. ஏன்னா சில மோசமான சம்பவங்களால சேர்ந்து வாழவே முடியாது என்ற சூழல் இருக்கும் போது அவங்களை நாங்க தடுக்க மாட்டோம்.பிரிவு தான் அவங்க வாழக்கைக்கு நல்லதுன்னு முடிவெடுப்போம்.உங்க விஷயத்தில் எனக்குப் பிரிவு ஒரு நல்ல முடிவா தோணல.நீங்க ரெண்டு பேரும் மனசு விட்டு முதலில் பேசிக்கணும். அது நடந்தாலே உங்களுக்குள்ள இருக்கிற எல்லாப் பிரச்சனைகளும் சரியாகும்னு எனக்கு தோணுது. அதற்கான சின்ன முயற்சி தான் இது.அதனால இந்த மூணு மாதங்கள் உங்கள் இருவர் வாழ்க்கையிலும் மாற்றங்களைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன்.திரும்பி வரும் போது நல்ல முடிவோட வர வாழ்த்துக்கள்” என்று இருவருக்கும் கை கொடுத்தார்.

அவரிடம் பேசிவிட்டு வெளியே வந்த இருவரையும் நிகிலின் குடும்பம் சூழ்ந்து கொண்டது. காயத்ரி ஸ்ருதியின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவளின் பதிலிற்காகக் காத்திருந்தார்.

நிகிலிடம் சென்ற ஆகாஷும், நீரஜ்ஜும் அவனிடம் நடந்தவைகளைக் கேட்டு அறிந்து கொண்டனர். தம்பியை இறுக்கி அணைத்து தங்களின் வாழ்த்தை தெரிவித்தனர்.

அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ருதி காயத்ரியிடம் திரும்பி “மூணு மாசம் டைம் கொடுத்திருக்காங்க அத்தை” என்றாள்.

அதைக் கேட்டவர் “எதுவுமே உன் மனசுக்குப் பிடிச்சா தான் ஸ்ருதிம்மா.இந்த குடும்பத்துக்காக எதையும் யோசிக்காதே.உனக்கு எது நல்லதுன்னு தோணுதோ அதைச் செய்.அவன் பண்ணின தப்பை எல்லாம் உன்னால மன்னிக்க முடியும்ன்னு தோணினா மட்டும் அவன் கூடச் சேர்ந்து வாழுவதைப் பற்றி யோசி” என்றார்.

அண்ணன்களுடன் பேசிக் கொண்டே வந்த நிகிலின் காதில் இந்த வார்த்தைகள் விழ “பார்த்தியா ஆகாஷ் இந்த அம்மாவுக்கு இருக்கிற லொள்ளை.நானே அவளை எப்படிச் சமாதானப்படுதுறதுன்னு மூளையைப் போட்டு கசக்கிக்கிட்டு இருக்கேன்.இவங்க என்ன வேலை செய்றாங்க பாரு” என்றான்.

“அதை விடு நிக்கி! நீ மூணு மாசம் இங்கே இருக்கணும்னா எப்படி?அப்போ உன் வேலை?” என்றான் நீரஜ்.

“அங்கே வேலையை விட்டுட்டு தானே வந்திருக்கேன் நீரஜ்.எனக்குத் தெரியும் அவ்வளவு சீக்கிரம் மேடம் சமாதானமாக மாட்டாங்கன்னு.அதுதான் விட்டுட்டு வந்துட்டேன்.”

அதைக் கேட்ட ஆகாஷ் “நல்ல தெளிவா தான் இருக்கே.அப்போ சரி உன்னைப் பத்தி இனி கவலைப்படவேண்டாம் பொழுச்சுக்குவ” என்றான்.

“அப்போ நம்ம வீட்டுக்கே வந்துடு. எத்தனை நாளைக்கு ஹோட்டல்ல தங்குவே?”.

“நம்ம மதியை வீடு பார்க்க சொல்லிட்டேன் நீரஜ்.எல்லாம் ரெடியா இருக்கு.நாளைக்கு அங்கே மாறிடுவேன்”என்றான்.

“அதுசரி” என்று தலையாட்டிய ஆகாஷ் “இங்கே ஏதாவது கம்பனில ஜாயின் பண்ணி இருக்கியா?”.

இடம் வலமாகத் தலையாட்டியவன் “இங்கே எனக்கு ஒரே வேலை அவளைச் சரி கட்டுறது தான்.அவளை கரெக்ட் பண்ணினதும் தள்ளிகிட்டு துபாய் போயிடுவேன்” என்றான்.

“ஹாஹா..ஹாஹா..என்ன பேச்சுப் பேசுறான் பாரு.கரெக்ட் பண்றானாம்,தள்ளிகிட்டு போவானாம்”என்று சிரிக்க ஆரம்பித்தார்கள் நீரஜ்சும், ஆகாஷும்.

தன் மகன்கள் மூவரின் சிரிப்பையும் கண்ட காயத்ரிக்குத் தன்னை அறியாமலேயே முகம் மலர்ந்து போனது.அதை பார்த்துக் கொண்டிருந்த ஸ்ருதிக்கு காயத்ரியின் தவிப்பும், மகன்கள் மீதான அவருடைய பாசமும் புரிந்தது.

“அத்தை நான் கிளம்புறேன்.எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு.நான் தங்குறதுக்கு இடம் பார்க்க வரேன்னு சொல்லி இருக்கேன்.தாமரை சிஸ்டர் வெயிட் பண்ணுவாங்க.நான் கிளம்பட்டுமா?” என்றாள்.

அதுவரை மகன்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவர் அவளின் கேள்வியில் “ம்ம்..சரிம்மா.நீ கிளம்பு.எது வேணும்னாலும் என்கிட்ட கேட்கணும் புரியுதா?நான் உனக்கு மாமியார் என்பதை விட அம்மான்னு நினைச்சுக்கோ.அப்போ தான் என்கிட்ட தயக்கம் போகும்.”

அவரது பேச்சில் கண்களில் கண்ணீர் குளம் கட்ட “நான் என்னைக்குமே உங்களை மாமியாரா நினைச்சதில்லை அத்தை” என்றவள் கன்னங்களில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு “போயிட்டு வரேன் அத்தை” என்று அங்கிருந்து விடுவிடுவென்று நடந்தாள்.

அவள் கண்ணீருடன் போவதை பார்த்த நிகில் “சரி நானும் கிளம்புறேன்” என்று சொல்லி வேகமாக அவள் பின்னே நடந்தான்.

சிறிது தூரம் யோசனையுடனே நடந்தவள், தன் பின்னே யாரோ வருவது போல் தோன்ற



திரும்பி பார்த்தாள்.அங்கு நிகிலை கண்டதும் எரிச்சலாகி “நான் என்ன சொன்னேன் நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்றாள்.

“நீ சொன்னதை அட்சரம் பிசகாம பாலோ பண்றேன் ஸ்ருதி”.

“எது என் பின்னாடி வரதையா?”

“ஆமாம்! நீ தான் என் கண் முன்னாடி வரக் கூடாதுன்னு சொன்ன.அதனால தான் பின்னாடி வரேன். அப்புறம் நானா உன்கிட்ட பேசல.நீயா தான் பேசினே”என்றான்.

அவன் பேச்சில் கடுப்பாகி போனவள் “என்ன நக்கலா? ரொம்பப் புத்திசாலித்தனமா பண்றதா நினைப்பா?இந்த வேலையெல்லாம் வச்சுக்காதீங்க.இனி, என் கண்ணுல படுற மாதிரி உங்களை எங்கேயாவது பார்த்தேன்.மூணு மாசத்துக்கு எல்லாம் வெயிட் பண்ண மாட்டேன்.இப்போவே தீர்ப்பு வேணும்னு சொல்லி இங்கே வந்துடுவேன் ஜாக்கிரதை” என்று மிரட்டினாள்.

அவள் பேசுவதையே பார்த்திருந்தவன் ‘ஹப்பா கோபத்திலேயே அந்த முகம் அவ்வளவு சிவக்குதே,அந்த உதடு’என்று முணுமுணுத்தவனைக் கண்டு “என்ன?” என்றாள்.

அவளின் கேள்வியில் தன்னைச் சமாளித்துக் கொண்டவன் “ஒண்ணுமில்ல.. ஒருமணி நேரம் டைம் கிடைக்குமா?உன்கிட்ட சில விஷயங்களைப் பேச நினைக்கிறேன்”.

“நீங்க நடந்துகிட்டதுக்கு விளக்கமா?” என்றாள் கேலியாக.

“ஆம்”என்று தலையாட்டினான்.

“இப்போ எனக்கு நேரமில்லை.எனக்கு அதைக் கேட்க எப்போ விருப்பமிருக்கோ அப்ப கேட்டுகிறேன்.நானா கூப்பிட்டுக் கேட்டா சொல்லுங்க போதும் புரிஞ்சுதா?” என்றவள் தன் வழியில் செல்லத் தொடங்கினாள்.

அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் ‘எனக்கு இது தேவை தான் டாலி.நான் உனக்கு இழைச்ச கொடுமைக்கு, நீ அடிச்சாலும் வாங்க தயாராயிருக்கிறேன்.ஆனா, உன்னை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை’என்றெண்ணிக் கொண்டு தன் காரை நோக்கி நடந்தான்.

அப்போது அந்தப் பக்கம் வந்த ஒருவர் நிகிலை பார்த்ததும் சந்தேகமாக அவனருகில் வந்து “நீ நிகில் தானே?”என்றார்.

அவர் யாரென்று தெரியாமல் “ஆமாம்! நீங்க?” என்று கேட்டான்.

“நந்தனாவோட மாமா”.

அதைக் கேட்டதும் முகம் இறுகியவன் சட்டென்று கார் கதவை திறக்க முயன்றான்.

“கல்யாணம் ஆகிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்? மறுபடியும் விவாகரத்துக்கு வந்திருக்கேன்னு சொன்னாங்களே ?உனக்கெல்லாம் எத்தனை கல்யாணம் பண்ணினாலும் விடியாது” என்று கேவலமாக வார்த்தைகளைக் கொட்டினார்.

“ஏய்!..என்று ஒற்றை விரட்டி நீட்டி மிரட்டியவன் “ஓடி போயிடு..இங்கே நின்னே கொன்னு போட்டுடுவேன்”என்றான் ஆக்ரோஷமாக.

அவனது மிரட்டலில் முகம் வெளிறி அங்கிருந்து சென்றார்.

அவர் சென்றதும் கைகால்கள் வெலவெலத்து போனது.அதுவரை மகிழ்வான மனநிலையில் இருந்தவன் வந்து விழுந்த வார்த்தைகளின் வீரியத்தில் நெஞ்சடைக்க வேகமாகக் காரின் கதவை திறந்து உள்ளே அமர்ந்து கொண்டான்.உள்ளே இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தவனின் மனம் அடங்க மறுத்தது. ஸ்டியரிங் வீலின் மேல் தலையைச் சாய்த்த வண்ணம் படுத்து விட்டான்.

பழைய நினைவுகளின் பின்னே போகத் துடித்த மனதை கடிவாளமிட்டு அடக்கி ‘அதை நினைக்கக் கூடாது’ என்று தன்னைத் தானே சமாளித்துக் கொண்டான்.

அங்கிருந்து சென்றாலே தவிர இதிலிருந்து மீள முடியாது என்றெண்ணியவன் காரை ஸ்டார்ட் செய்து வேகமாகக் கோர்ட் வளாகத்திலிருந்து வெளியேறினான்.

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது

எங்கே எவ்விதம் முடியும் – இதுதான்

பாதை இதுதான் பயணம் என்பது

யாருக்கும் தெரியாது- பாதையெல்லாம் மாறிவிடும்

பயணம் முடிந்து விடும் – மாறுவதை புரிந்து

கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்
 

Priyakutty

New member
Nov 24, 2022
28
0
1
நிகில் மனசு மாற காரணம் என்ன...

அவரும் பாஸ்ட் ல ஹர்ட் ஆகிருக்காரு... ஒரு பொண்ணால ஆன இப்படி அவங்கள சம்பந்தம் இல்லாம 6 மாசம் கண்டுக்காம இருந்தது தப்பு... 😔