Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 7 | SudhaRaviNovels

அத்தியாயம் - 7

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
333
319
63
அத்தியாயம் – 7

அடுத்து வந்த நாட்கள் குணாவிற்கு வீட்டில் பெரும் போராட்டமாக இருந்தது. வசந்தி ஏடாகூடமாகவே எல்லாம் செய்து கொண்டிருந்தாள். கல்யாணி ஒதுங்கிப் போனாலும் தானாகவே சென்று அவரிடம் வம்பு வளர்த்தாள்.

இந்தக் கொடுமை எல்லாம் பார்க்க முடியாமல் அர்ஜுன் வீட்டில் இருப்பதையே குறைத்துக் கொண்டான், என்ன பேசினாலும் எது பேசினாலும் அது சண்டையில் தான் முடிந்தது.

அவளை ஏன் அழைத்து வந்தோம் என்று எண்ணும் அளவிற்கு மனம் நொந்து போனான். குழந்தை மட்டுமே ஆசுவாசத்தைக் கொடுத்தது. துப்பறியும் நிர்வாணம் கொடுத்த பத்து நாட்களும் இப்படியே சென்றது.

அன்று கடையில் இருக்கும் நேரம் அங்கிருந்து குணாவிற்கு போன் வந்தது. உடனே வந்து தங்களை பார்க்கும்படியும், அவர்களுக்கு கொடுத்திருந்த வேலையை முடித்து விட்டதாகவும் கூறினார்கள். அதைக் கேட்டதும் குணாவிற்கு உள்ளுக்குள் படபடப்பும் பதற்றமும் எழுந்தது. தன்னை மெல்ல சுதாரித்துக் கொண்டவன் அர்ஜுனை அழைத்து விஷயத்தைச் சொல்லி, உடனே கிளம்பி வரும்படி சொல்லிவிட்டு வைத்து விட்டான்.

அர்ஜுனுக்கும் கயலின் இருப்பிடம் தெரியப் போகிறது என்று தெரிந்ததும் டென்ஷன் ஆகிவிட்டது. உடனே சுடரை அழைத்து செய்தியை பகிர்ந்து கொண்டான். தானும் வருவதாக அவள் சொல்லிவிட, பலத்த சிந்தனையுடன் மூவரும் அங்கு கிளம்பிச் சென்றார்கள்.

ஒரு பத்து நிமிடங்கள் வித்தியாசத்தில் வந்து சேர்ந்திருக்க, அலுவலகத்தின் உள்ளே நுழைந்தனர். உள்ளுக்குள் இருந்த பதற்றத்தை மறைத்துக் கொண்டு அர்ஜுன் தான் கேட்டான்.

“கயல் இருக்கும் இடம் தெரிஞ்சிடுச்சா சார்?”

எதிரே இருந்தவர்களின் உணர்வுகளைப் படித்தபடி “ம்ம்...தஞ்சாவூரில் இருக்காங்க” என்று தலையசைத்தார்.

அதைக் கேட்டதும் சந்தோஷப்படுவதா அடுத்து என்ன கேட்பது என்கிற சிந்தனைகள் தான் ஓடியது.
அவர்களின் நிலையை உணர்ந்தவர் தன்னிடம் இருந்த பைலை அவர்களின் முன்னே தள்ளி வைத்தார்.
“இதுல எல்லா தகவல்களும் இருக்கு. பாருங்க!”

குணாவிற்கு கைகள் நடுங்கியது அதை எடுத்துப் பார்க்க. அதை கவனித்த அர்ஜுன் வேகமாக எடுத்து திறந்துப் பார்த்து படிக்க ஆரம்பித்தான்.

கையிலிருந்த பைலை படிக்க-படிக்க அவன் முகத்தில் குழப்ப ரேகைகள் தான் ஓடியது. தாங்கள் ஒன்று நினைத்திருக்க, அங்கே அவர்களின் கேள்விகளுக்கான எந்த விடையும் அதில் இல்லை.

சற்றே தைரியத்துடன் அர்ஜுனின் கைகளில் இருந்த பைலை வாங்கி குணாவும் படிக்க, அவனுக்கும் எதுவும் புரியவில்லை. கயலும் படித்து முடித்திருக்க அவள் மனதிலும் ஆயிரம் கேள்விகள்.

எதிரே இருந்தவர் “அவங்க எங்கே போனாங்க என்ன என்று எல்லாமே கண்டுபிடிச்சிட்டோம். ஆனால் அதற்க்கான காரணங்களை அவங்க தான் சொல்லணும். நீங்க எங்களுக்கு கொடுத்த வேலையை சரியா செஞ்சு முடிச்சிட்டோம். இப்போ அவங்க பாதுகாப்பா தஞ்சாவூரில் இருக்காங்க. அந்த அட்ரஸ் கூட கொடுத்திருக்கோம்”.

மூவருக்கும் உணர்ச்சிகளின் வெள்ளத்தில் இருந்தனர். கண்ணை கட்டி காட்டில் விட்டது போல அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு ஒரு வழித்தடம் கிடைத்திருக்கிறது. கயல் இருக்குமிடம் தெரிந்து விட்டது. இனி, மற்றதை பார்த்துக் கொள்ளலாம் என்கிற தைரியம் எழுந்தது.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு மூவரும் வெளியே வந்தனர். கீழே வந்து நின்றவர்களுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. மௌனம் மட்டுமே அங்கு ஆட்சி செய்தது.

சுடர் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தாள்.

“லவ் பண்ணி தானே போனான்னு சொன்னாங்க. ஆனா யார் வீட்டிலேயோ இருக்காளே. அது ஏன்? என்ன நடந்திருக்கும்?”

“ஒருவேளை அவன் விட்டுட்டுப் போயிட்டானோ?” என்று சொன்னவனின் குரலில் நடுக்கம் இருந்தது.
“இருக்காதுடா! அப்படி எல்லாம் இருக்காது” என்றான் வேகமாக குணா.

“அப்புறம் ஏன் யார் வீட்டிலோ இருக்கா?”

“நம்ம கிட்ட ஏன் திரும்பி வரல? என்று மூவரும் மாறி மாறி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர்.

“இப்படியே பேசிக் கொண்டிருந்தா சரி வராது. நான் போய் பார்த்து அவளை கூட்டிட்டு வரேன்” என்றான் அர்ஜுன்.

“அவள் வர விருப்பபடலேன்னா?” என்று கேட்டு அவன் பிபியை ஏற்றினாள் சுடர்.

“லூசு மாதிரி பேசாதே சுடர்”.

குணா சற்று நிதானமாக “எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு அர்ஜுன்”.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
333
319
63
இருவரையும் கடுமையாக முறைத்தவன் “அப்படி எல்லாம் சொல்ல மாட்டா என் தங்கச்சி”.

“அப்போ ஏன் இத்தனை நாளாக யார் வீட்டிலோ இருக்கா? நீங்க எல்லாம் தேடுவீங்கன்னு தெரிஞ்சும் வீடு திரும்பாம இருக்க காரணம் என்ன?”

அவள் பேசுவதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் “நீ விதண்டாவாதம் பண்ற சுடர். கயலை பற்றி தெரிந்து கொண்டாயிற்று இல்லையா? அப்போ நீ கிளம்பு” என்று விட்டான்.

அவனுடைய பேச்சில் காயப்பட்டுப் போனவள் “அதை சொல்ல நீங்க யாரு?” என்றவள் குணாவின் பக்கம் திரும்பி “மாமா! நான் போய் கயலை பார்த்து பேசுறேன். என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கிறேன்” என்றாள்.

“நீ எதுக்குடி போற? அதெல்லாம் வேண்டாம். கயலை பார்க்க நான் தான் போவேன்” என்று சண்டைக்கு நின்றான்.

சுடரொ பரிதாபமாக குணாவைப் பார்க்க “டேய்! சுடர் சொல்றது கரெக்ட் தான். அவ போய் பார்த்திட்டு முடிஞ்சா கூட்டிட்டு வரட்டும்”.

“அவங்க அக்கா நம்ம வீட்டை விட்டு விரட்டி விட்டாங்க. இவ போய் அங்கிருந்து விரட்டவா?”

“டேய்!” என்று குணா சத்தம் போட்டதும் தான் என்ன சொன்னோம் என்று புரிய, அதிர்ந்து அவள் முகத்தைப் பார்க்க, அவளோ கோபமும், அழுகையும் போட்டிப் போட குணாவிடம் திரும்பி “மாமா! நான் நைட் தஞ்சாவூருக்கு போயிட்டு வரேன்” என்று சொன்னவள் அர்ஜுனை திரும்பியும் பார்க்கவில்லை.

அவளிடம் சென்று தடுக்கவும் பயம் எழ, குணாவைப் பார்க்க “என்னடா நீ! சுடரைப் போய் இப்படி பேசி வச்சிருக்க. அவ என்ன வசந்தி மாதிரியா? அவளுக்கு முகமே விழுந்து போச்சு. என்னவோ போடா” என்று சலித்துக் கொண்டான்.

“அவளை சொல்லனும்னு சொல்லல குணா. நான் போகணும் என்பதற்காக சொல்லிட்டேன்..ச்சே!” என்று தலையில் அடித்துக் கொண்டான்.

“போடா! போய் அவளை சமாதானப்படுத்து! நல்ல பொண்ணுங்க அமையறது கஷ்டம் அர்ஜுன்.

என் வாழ்க்கையைப் பார்த்தாவது கத்துக்க” என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பி விட்டான்.

அவள் எங்கே என்று பார்த்துக் கொண்டே அருகே இருந்த பஸ் ஸ்டான்ட்டிற்கு சென்றான். அங்கே தான் கலங்கிய விழிகளுடன் அமர்ந்திருந்தாள்.

அவள் அருகே சென்று அமர்ந்தவன் “சாரிடி! நான்...”என்று பேசும் முன்பே “வேண்டாம் அர்ஜுன்! இதுக்கு தான் சொன்னேன். விலகியே இருப்போம்னு. முதல்ல உங்கம்மா பேசுனாங்க. அடுத்து நீங்க பேசிட்டீங்க. உங்க வீட்டைப் பொறுத்தவரை எங்க அக்காவை வைத்து தான் என்னை எடை போடுவீங்க. விட்டுடுங்க! கயலுக்காக மட்டும் தான் தொடர்பில் இருக்கேன். அவளின் பிரச்சனை முடிந்ததும் நான் யாரிடமும் பேச தயாராக இல்லை” என்றவளின் குரல் தழுதழுத்தது.

அவளின் முகம் பார்த்தவனின் மனம் தவித்தது.

“நான் ஒரு முட்டாள் சுடர். தஞ்சாவூருக்கு உன்னை போக விடாம தடுக்க எதையாவது சொல்லி தடுக்கணும்னு நினைச்சு தான் பேசிட்டேன். நிச்சயமா என் மனசில் இருந்து பேசலடி”.

அவனை நிமிர்ந்து பார்த்தவளின் முகம் அழுத்தத்தில் சிவந்து போயிருந்தது.

“இப்படி ஒவ்வொரு தடவையும் என்னை காயப்படுத்திட்டு நான் அதனால சொல்லல என் மனசில இல்லேன்னு வாழ்நாள் முழுக்க சொல்லிட்டு இருக்க முடியுமா? நான் என்ன தப்பு பண்ணினேன்? அவளுக்கு தங்கையாகப் பிறந்தது என் தவறா சொல்லுங்க? இத்தனை மாதங்கள் பழகி இருக்கீங்க. அப்பவும் சட்டுன்னு அவளுடைய குணத்தோட சேர்த்து வச்சு பேசிட்டீங்கள்ள? நான் எப்படின்னு உங்களுக்கு தெரியாது?”

அவளின் கைகளைப் பற்றிக் கொண்டவன் “தெரியும்டி! எல்லாமே தெரியும். என்னுடைய நோக்கம் உன்னை தடுப்பது மட்டும் தான். அதுக்கு என்ன பேசணுமோ அதை தான் சொன்னேன்”.

“அதை தான் சொல்றேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தோம் என்றால் இப்படி ஒவ்வொரு முறையும் என்னை காயப்படுத்த பேசிட்டு மன்னிப்பு கேட்பீங்களா?”

“ஏய்! ஏண்டி! எங்கெங்கயோ போற? நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேனே”.

“ப்ளீஸ்! நான் அமைதியா தஞ்சாவூர் போயிட்டு வரணும்னு நினைக்கிறேன். இதை விட்டுடுங்க”.

பட்டென்று அவளது கரத்தில் முத்தமிட்டவன் “என் சார்பா போயிட்டு வா. அவளுக்கு அண்ணியா நீ அங்கே போற. அதை ஞாபகம் வச்சுக்கோ”.

கைகளை விலக்கிக் கொண்டவள் பதில் எதுவும் தரவில்லை. மனமோ உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தது.

பேருந்து வர அவளுடன் அவனும் பயணித்தான். அவளை அலுவலகத்தில் விட்டு விட்டே அங்கிருந்து கிளம்பினான்.

அன்று இரவு தஞ்சாவூருக்கு பஸ் ஏறி விட்டாள் சுடர். அர்ஜுன் வழியனுப்ப வந்திருந்தான். தங்கையிடம் எப்படி பேச வேண்டும், அவளை சமாளித்து கையோடு அழைத்து வந்து விடு என்று பல அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தான்.

மறுநாள் காலை தஞ்சாவூர் சென்று இறங்கியவள் தனக்காகப் போடப்பட்டிருந்த அறையில் குளித்து முடித்து காலை உணவை முடித்துக் கொண்டு சௌடாம்பிகை அவர்களின் வீட்டை நோக்கி கிளம்பி விட்டாள்.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
333
319
63
அருளானந்தா நகரில் இருந்த அந்த வீட்டின் வாசலுக்கு சென்று நின்றவளை வெளியே இருந்த செக்யுரிட்டி உள்ளே அனுமதிக்காமல் அனுப்ப முயன்றான். புதிதாக அங்கே தங்கி இருக்கும் பெண்ணின் சொந்தக்காரி என்று உள்ளே சொல்லுமாறு அனுப்பி வைத்தாள்.

சௌடாம்பிகை அவளை உள்ளே அனுப்பும்படி சொல்ல மெல்ல வீட்டை அளந்து கொண்டே மாளிகையின் வாசலில் சென்று நின்றாள். அங்கே சற்றே பருமனான உடல்வாகுடன் நெற்றியில் பெரிய பொட்டுடன் ஒருவர் நின்றிருந்தார்.

“வாம்மா! உள்ள வா”.

“வணக்கங்க”

உள்ளே சென்று சோபாவில் அமர்ந்ததும் “சொல்லுங்க! நீங்க அவளுக்கு என்ன வேணும்?”

“கயலுடைய அண்ணியின் தங்கை”.

யோசனையுடன் அவளைப் பார்த்தவர் “இங்கே இருப்பது எப்படி தெரிஞ்சுது?”

“ஒரு துப்புறியும் நிறுவனத்திடம் சொல்லி இருந்தாங்க. அவங்க தான் உங்க அட்ரஸ் ஸில் கயல் இருப்பதாக கண்டு பிடிச்சு சொன்னாங்க”.

“நீங்க அவளுக்கு சொந்தம் தான் என்று நான் எப்படி நம்புவது?”

“ஒரு நிமிஷம்” என்றவள் தனது போனில் வசந்தி திருமணத்தின் போது கயலும் கல்யாணியும் இருந்த போட்டோவை எடுத்து காண்பித்தாள்.

“இவங்க கயலுடைய அம்மா”.

அவருக்கு சுடரின் மீது சற்றே நம்பிக்கை வந்தது. “உன் பேர் என்னம்மா?”

மெல்ல தலையசைத்தவர் அங்கிருந்த வேலையாளை அழைத்து கயலை அழைத்து வரும்படி கூறினார்.

சற்று நேரத்தில் அங்கு வந்து நின்ற கயல் சுடரை எதிர்பார்க்கவில்லை. அவள் முகத்தில் அதிர்ச்சி. அவளைப் பார்த்ததும் வேகமாக எழுந்து கொண்ட சுடர் “கயல்!” அருகே செல்ல முயன்றாள்.

“உங்க வாழ்க்கைக்கு தடையாக இருக்க கூடாது என்று தான் நான் ஒதுங்கி வந்துட்டேனே. இன்னும் எதுக்கு தேடி வந்திருக்கீங்க?”

“கயல் என்ன பேசுற? அத்தை உன்னை நினைச்சு ரொம்ப கவலையா இருக்காங்க” என்றாள் அவளின் அருகே சென்று கையைப் பிடித்துக் கொண்டு.

“போதுங்க! எங்க அண்ணனை நம்ப வைக்க இந்த நாடகமா? என்று விட்டாள்.

அவளின் பேச்சில் திகைத்து நின்று விட்டாள் சுடர். என்ன பேசுகிறாள் இவள் என்று அதிர்ச்சி.

“எங்க அம்மாவால உங்களுக்கு எந்த கஷ்டமும் இருக்காது. பேரன் பேத்திகளைப் பார்த்திட்டு அவங்க பாட்டுக்கு இருந்திடுவாங்க. காலப் போக்கில் என்னையும் மறந்திடுவாங்க. என்னை இப்படியே விட்டுடுங்க”.

“எதுக்கு இப்படி எல்லாம் பேசுற கயல்? எனக்கு சத்தியமா புரியல” என்றாள் கலங்கிய குரலில்.

“என்ன புரியல? அது தான் குடும்பமா சேர்ந்து தானே சதி பண்ணி என்னை வெளில அனுப்புனீங்க. நான் இருந்தா எனக்கு கல்யாண செலவு பண்ணனும் அதெல்லாம் உங்க புருஷனுங்க காசை எடுக்கணும். அதுக்கு தான் ப்ளான் பண்ணி என்னை விரட்டி விட்டாச்சு. இன்னும் என்ன வேணும் உங்களுக்கு?”

இரு கரங்களாலும் வாயைப் பொத்திக் கொண்டவளின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

சௌடாம்பிகைக்கே அவளைப் பார்த்து வருத்தமாக இருந்தது.

“கயல்! என்னைப் பார்த்தா சொல்ற? நான் என்னைக்காவது அப்படி உன்கிட்ட நடந்த்கிட்டு இருக்கேனா சொல்லு?”

“கிளம்பிடு சுடர்! உங்க அக்காவை நம்பி நான் இழந்தது என்னுடைய மரியாதையை என் குடும்பத்தின் மரியாதையை. என்னால உங்க குடும்பத்தில் உள்ள யாரையும் நம்ப முடியாது. என்னை அப்படியே விட்டுடுங்க. போனவள் போனவளாகவே இருக்கட்டும்”.

அவளின் பேச்சு சுடரை மொத்தமாக அடித்து வீழ்த்தியது. இன்னும் எத்தனை முறை இந்த பேச்சை கேட்க வேண்டி இருக்கும். செய்யாத தவறுக்கு எத்தனை முறை தான் சிலுவையை சுமப்பாள். கயலுக்கு தன் மீது நல்ல அபிப்பிராயம் இருக்கும் என்று நம்பி தான் கிளம்பி வந்திருந்தாள். ஆனால் அவளின் பேச்சு வாழ்க்கைக்கான ஆதாரத்தையே அசைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

“அவ்வளவு தானா கயல்? நீ என்னை புரிந்து கொண்டது அவ்வளவு தானா? எங்க அக்கா உன்னை தவறாக வழி நடத்தி இருக்கலாம். அதில் என்னை எப்படி நீ சேர்க்கலாம்?”

“எனக்கு வாழ்க்கை பலமான அடியைக் கொடுத்து பாடம் கத்துக் கொடுத்திருக்கு சுடர். இதற்கு மேலும் நான் யாரையும் நம்ப தயாராக இல்லை”.

ஒருவித தவிப்புடன் “ எனக்காக வேண்டாம் கயல். உன் அம்மாவுக்காக அண்ணன்களுக்கு என்று யோசி”.

“தயவு செய்து இனிமே வீட்டிலிருந்து யாரும் என்னைத் தேடி வர வேண்டாம். என்னை இப்படியே விட்டுடுங்க”.

“கயல்! அங்கே அத்தை உங்க நினைவாகவே இருக்காங்க. ப்ளீஸ்! அவங்களுக்காக நீ வீட்டுக்குத் திரும்பி வரணும்”.

“வந்து? அம்மா சந்தோஷப்படுவாங்க. ஆனா மற்றவங்க?”

“நா...நான் விலகி நின்னுடுறேன். எங்க அக்காவால உனக்கு எந்த பிரச்சனையும் வராது”.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
333
319
63
இரு கைகளையும் கட்டிக் கொண்டு சுடரைப் பார்த்தவள் “சோ என் குடும்பத்துல நீங்க தான் எல்லாம் முடிவு பண்ணுவீங்க. இதுலையே தெரியலையா? வேண்டாம் சுடர். அதுவரை அமைதியாக இருந்த சௌடாம்பிகை “எனக்கு என்ன நடக்குது என்று புரியலேன்னாலும் யாருக்காகவோ உங்க அம்மாவை ஏன் கஷ்டப்படுத்தனும்னு தோணுது கயல்”.

“எனக்கும் அம்மாவை நினைத்து கஷ்டமாக தான் இருக்கு மேடம். ஆனால் சில விஷயங்களை அவங்க ஏற்றுக் கொண்டு தான் ஆகணும். எனக்கு என்று சுயமரியாதை இருக்கில்லையா? என்னுடைய மரியாதையை மொத்தமா குழி தோண்டி புதைச்சாச்சு. அங்கே எனக்கு இடமில்லை மேடம்”.

சுடரோ கசங்கிய முகத்துடன் “எங்களை மொத்தமா வெறுத்துட்டியா கயல்? உங்க அண்ணன் அங்கே தவிச்சுகிட்டு இருக்காங்க”.

“அண்ணனை நீ பார்த்துக்கோ சுடர். மேடம் அனுமதிக்கிற வரை இங்கே இருப்பேன். அதன் பிறகு வேற எங்கேயாவது கிளம்பிடுவேன். தயவு செய்து யாரும் என்னைத் தேடி வர வேண்டாம்”.

சௌடாம்பிகா கவலையாக அவளைப் பார்த்து “உன் அம்மா வயதில் இருப்பதால் சொல்றேன் கயல். பெண்ணை காணும் என்று அந்த மனசு என்ன பாடுபட்டிருக்கும். அது உனக்குப் புரியலையா?”

கண்களை அழுந்த மூடித் திறந்தவள் “நிச்சயமா மேடம். ஆனா அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கு. அதை நான் பேச விரும்பல மேம்”.

சுடருக்கு அழுகையே வந்தது அங்கே சென்று அவனிடம் என்ன சொல்வாள்? வீராப்பாக பேசிவிட்டு வந்தாளே. என்ன செய்வது என்று புரியாமல் தவித்துப் போய் நின்றாள்.

அவளின் நிலையை உணர்ந்த கயல் அவள் அருகே சென்று “உன் மேல எனக்கு எந்த கோபமோ, வருத்தமோ இல்லை சுடர். என் சூழ்நிலை உன்னை ஓரிடத்தில் தள்ளி வைக்க சொல்லுது. உன்னை நீ குற்றவாளியா நினைச்சுக்காதே. இங்கே நடந்ததை அண்ணன்களிடம் சொல்லு புரிஞ்சுப்பாங்க”.

‘அப்படியே அண்ணனை மாதிரியே பேசுறா. சொல்வதை எல்லாம் சொல்லிட்டு நீ எதுவும் நினைசுக்காதேன்னு சொன்னா என்ன சொல்றது?’ என்று மனதிற்குள்ளேயே தாளித்துக் கொண்டவள் “இது தான் உன் முடிவா கயல்?”

“ம்ம்...ஆமாம்!”

“அப்போ எனக்கு அன்று நடந்த விஷயங்களை கண்டிப்பா சொல்லியாகனும். என்ன நடந்தது என்று எதுவுமே தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கிறோம். நீ அதை சொன்ன பிறகு கண்டிப்பா உனக்காக அவங்க கிட்ட பேசுவேன்”.

இருவரையும் ஒரு பார்வை பார்த்தவள் மெல்ல அன்று நடந்தவைகளை சொல்ல ஆரம்பித்தாள். அவள் சொல்ல சொல்ல இருவருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. சுடருக்கோ உள்ளம் இறுகி போய் விட்டது. இது தெரிந்தால் நிச்சயமாக அவளுக்கும் அர்ஜுனுக்கும் திருமணம் நடக்காது என்று புரிந்து போனது.

அவளின் மனதை உணர்ந்த கயல் “இது நீ தெரிந்து கொள்வதற்காக மட்டும் தான் சொல்றேன் சுடர். எங்க அண்ணன்களுக்கு தெரிய வேண்டாம். என்னுடைய இரண்டு அண்ணன்களின் வாழ்க்கையும் நல்லா இருக்கணும்”.

மெல்ல விழி உயர்த்தி பார்த்தவளின் கண்களில் வெறுமை மட்டுமே. மனமோ ஆறாத ரணத்தை உருவாக்கிக் கொண்டது.