Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 7 | SudhaRaviNovels

அத்தியாயம் - 7

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
216
146
43
அத்தியாயம் – 7

மகன் கேட்கவும் கணவரின் முகத்தைப் பார்த்துவிட்டு நீண்ட நெடிய பெருமூச்சுடன் “என்னத்தச் சொல்ல? இப்படிக் கூட நடக்குமான்னு இருக்கு” என்று அவர் இழுத்தவுடன் “மா! என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க” என்றான் கோபமாக.

மகனின் கோபத்தில் பதறி போனவர் “பெரியவர் பொண்ணு எவனையோ இழுத்துகிட்டு ஓடிப் போயிடுச்சுடா. அந்த அதிர்ச்சி தாங்காமல் தான் இறந்து போயிட்டார்” என்று சொல்லி முடிக்கும் முன் “என்ன!” என்கிற அதிர்வுடன் எழுந்தே விட்டான்.

தன் காதால் கேட்பது உண்மை தானா என்கிற சந்தேகம் எழ “என்ன சொன்னீங்க?” என்று உடல் நடுக்கத்துடன் கேட்டான்.

“அது தாண்டா! பெரியவர் பொண்ணு தாட்ச்சாயினி யாரையோ இழுத்துகிட்டு ஓடிப் போயிடுச்சு. அந்த அதிர்ச்சியில அவருக்கு அட்டாக் வந்து போயிட்டார்”.

இது என்ன புதுக்கதை? அவள் விரும்புவது தன்னைத் தானே? பின் வேறு யாருடனோ ஓடி விட்டதாக எப்படி கூறுகிறார்கள்? என்ன நடந்திருக்கிறது என்று புரியாமல் பெரியவர்கள் இருவரையும் பார்த்தான்.

“ஆமாம்-பா! அது யாரையோ காதலிச்சு இருக்கும் போல...அது தெரியாம இவங்க மாப்பிள்ளை பார்க்க ரெண்டு மூணு முறை அவனை வச்சு தடுத்திருக்கு. கடைசியா நெருங்கிய சொந்தத்தில் ஒரு பையனை பார்த்து முடிவு பண்ண நினைச்சிருப்பாங்க போல. உடனே அவனை இழுத்துகிட்டு ஓடிப் போச்சு” என்றார் தந்தை.

‘இருக்காது! நிச்சயமாக இது கட்டுக்கதை தான்’ என்று அவன் மனது அடித்துக் கொண்டது.

“ஆனந்த் தம்பி தான் அல்லாடுது. பெரியவர் போய் சேர்ந்துட்டார். பெரியம்மாவுக்கு புத்தி பிரண்டு போச்சு. சின்னம்மா எந்நேரமும் அழுது கரைஞ்சுட்டே இருக்காங்க. இந்தப் புள்ள நிலைமையை சமாளிக்க முடியாம தவிக்குது”.

குரலில் ஒரு உதறலுடன் “அவன் யாருன்னு தெரியுமா?”

லேசாக முகத்தை தோளில் இடித்துக் கொண்டு “யாருக்கு தெரியும்? ஊமை கோட்டான் மாதிரி வீட்டோட தான் கிடந்துச்சு. அதுக்கு எப்படி எவனோ பழக்கம் ஆனான்னு தெரியல தம்பி” என்றார் கனகம்.

“ஆ...ஆனந்த் என்ன சொல்றான்?”

“அந்தப் புள்ளை முகத்தை பார்க்கவே சகிக்கல. இந்த ஊரே அவனை கரிச்சு கொட்டுச்சு. பிச்சைக்காரப் பயலுக்கு வந்த வாழ்வைப் பாருன்னு. ஆனா இன்னைக்கு அவன் வளர்த்தப் பாசத்துக்கு நன்றியா கிடக்குறான். பெத்து வளர்த்த பொண்ணு அப்பா, அம்மாவைப் பற்றி கவலைப்படாமல் ஓடிப் போயிடுச்சு. இப்படி ஆகும் என்று பெரியவருக்கு ஏதோ மனசில் பட்டிருக்கு. அது தான் இவனை எடுத்து வளர்த்திருக்கார்” என்று அவர் சொல்லிக் கொண்டே போக, அவனுடைய காதில் எதுவும் விழவில்லை.

அவள் எங்கே சென்றாள்? என்ன பிரச்சனை நடந்திருக்கும்? நிச்சயமாக வேறு யாரையும் காதலிக்கவில்லை. இவர்கள் சொல்வதை தவிர ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. என்னை தொடர்பு கொள்ள முடியாமல் எத்தனை தவித்திருப்பாள். கண்ணம்மா நீ எங்கே இருக்கிறாய்? ஆனந்தின் மனநிலை என்ன? அவனும் அவள் ஓடி விட்டாக தான் எண்ணிக் கொண்டிருப்பானா? அடுத்து என்ன செய்வது?
செய்தியைக் கேட்ட அதிர்வில் இருந்தவனின் மனம் மெல்ல நிதானத்திற்கு வர தொடங்கியது.

அவனுடைய போலீஸ் புத்தி விழித்துக் கொண்டது. இதன் பின்னணியை ஆராய வேண்டும். அவளை தேடி கண்டு பிடித்து தன்னிடம் கொண்டு வர என்று முடிவெடுத்துக் கொண்டான்.

“மா! நான் போய் ஆனந்தை பார்த்திட்டு வரேன்”.

“தம்பி! இவ்வளவு சொன்னப் பிறகும் இப்போ போகனுமா?”

“கண்டிப்பா!” என்றவன் செருப்பை மாட்டிக் கொண்டு பைக்கை கிளப்பினான். பைக்கின் வேகத்தை விட, அவனுடைய மனம் வேகமாக பயணித்தது. பத்து நிமிடத்தில் வீட்டை அடைந்துவிட, வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான். காவலாளியில் இருந்து தோட்டக்காரர், டிரைவர் என அனைவரும் துக்கத்தோடு அவனைப் பார்த்தனர்.

வீட்டின் வாயில் மணியை அடித்துவிட்டு தோட்டத்துப் பக்கம் திரும்பி நின்றவனின் பார்வை ஒவ்வொரு இடத்தையும் அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தது.

சற்று நேரத்தில் ஆனந்த் வந்து நிற்க, அவனை பார்த்ததும் பதறி போய் விட்டான். தாடியும் மீசையுமாக கண்களில் ஒளியிழந்து வந்து நின்றவனை தன்னை மீறி ஓடிச் சென்று கட்டித் தழுவிக் கொண்டான்.

“மச்சான்!”

இருவருக்கும் பேச வார்த்தை எழவில்லை. ஆனந்தின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.


“என்னடா? ஏன்?”
 
  • Love
Reactions: Kothai suresh

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
216
146
43
கண்களைத் துடைத்துக் கொண்டவன் “பாப்பா இப்படி பண்ணுவான்னு சத்தியமா நினைக்கவே இல்லடா. அப்பா துடிச்சு போயிட்டார்”.

“உனக்கு தெரியாதாடா?” என்றான் எச்சிலை விழுங்கியபடி.

“என்கிட்டே சொல்லி இருந்தா நானே அப்பா கிட்ட பேசி சம்மதிக்க வச்சிருப்பேன்-டா. எதையுமே சொல்லாமல் இப்படி பண்ணிட்டா” என்றவனின் குரல் கரகரத்தது.

இருவரும் சற்று நேரம் பேசாமல் அமைதியாக இருக்க “வேலன் ஐயா எப்படி இறந்தாங்க ஆனந்த்?”

அவனுடைய கையைப் பற்றி தோட்டத்துப் பக்கம் அழைத்துச் சென்றவன் அங்கே இருந்த கல்லில் அமர வைத்து “நீ ஊருக்குப் போன பிறகு பாப்பாவுக்கு இன்னொரு இடம் வந்தது. ஆனா பெண் பார்க்க வரேன்னு சொன்னவங்க வரல. அப்பவும் எங்க யாருக்கும் சந்தேகம் வரல. எல்லோருமே உடைஞ்சு போயிருந்தோம். அப்போ தான் பாட்டியம்மாவோட சொந்தத்தில் நல்ல பையன் ஒருத்தன் இருக்கான்னு சொல்லி பார்க்க ஆரம்பிச்சாங்க. பாப்பா கிட்ட இதை பற்றிய தகவல் எதுவுமே சொல்லல. இதுவும் நடக்காமல் போனால் மனசு உடைஞ்சு போயிடுவான்னு நினைச்சு விட்டுட்டோம். பாட்டிக்கு தெரிஞ்ச இடமாக போனதால் போட்டோவை பார்த்தே அவங்க சம்மதிச்சுட்டாங்க. அதனால நிச்சயம் பண்ணிடலாம்னு முடிவு செஞ்சு பாப்பா கிட்ட சொல்லிட்டோம். அவ எதுவுமே சொல்லல. அமைதியாகவே இருந்தாள். நிச்சயத்துக்கு ஒரு நாள் இருக்கும் முன்னே என் கிட்ட போனை வாங்கிட்டுப் போய் பிரெண்ட் கிட்ட பேசப் போறேன்னு சொன்னா. நானும் பெருசா எடுத்துக்கல”.

“உன் போனில் அவள் பேசிய நம்பர் இருக்குமே”.

“அவள் தெளிவாக தான் இருந்திருக்கா தீபன். நம்பரை டெலிட் பண்ணிட்டு தான் கொடுத்திருக்கா”.

“ஒ..”

“நிச்சயம் பண்ண போகிற நாள் காலையில அவளை தயார் செய்ய அம்மா அவள் ரூமிற்கு போனாங்க. அங்கே அவளைக் காணாமல் தேடி அலுத்துப் போய் அழ ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் நானும் அப்பாவும் ஓடிப் போய் அவள் ரூமில் பார்க்க, மேஜை மேல் என் மனதிற்கு பிடித்தவருடன் வாழப் போகிறேன் என்று எழுதி வச்சிட்டு போயிருக்கா. அதை பார்த்ததும் நெஞ்சை பிடிச்சுக்கிட்டு விழுந்தவர் தான் மருத்துவமனைக்கு போகிற வழியிலேயே போயிட்டார்”.

கண்களை அழுந்த மூடித் திறந்தவன் “அவள் எழுதி வச்சிட்டுப் போனது இருக்கா ஆனந்த்”.

“ம்ம்...இருக்குடா”

“பாட்டியம்மா எப்படி இருக்காங்க? சின்னம்மா எப்படி தாங்கிட்டாங்க?”

“அதை ஏன் கேட்கிற? பேத்தி ஓடிப் போனது அவங்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. அடுத்து மகன் இறந்தது பேரதிர்ச்சி. அதனால மூளைக் குழம்பி போச்சு. அவங்க பாட்டுக்கு தானா பேசிகிட்டு உட்கார்ந்திருக்காங்க. என்னால சத்தியமா இந்த சூழ்நிலையை சமாளிக்க முடியல-டா. எப்படி இருந்த வீடு தெரியுமா?” என்றவன் கலங்கிய கண்களுடன் தலை குனிந்து கொண்டான்.

நண்பனின் தோள்களை அழுந்தப் பற்றி “நீ தான் தைரியமாக இருக்கணும் மச்சான். மீனாட்சி அம்மாவுக்கு ஆறுதலாக இருக்க வேண்டியது நீ தான். அப்புறம் பாப்பாவை தேடி பார்த்தியா? எங்கே இருப்பான்னு எதுவும் ஐடியா கிடைச்சுதா?”

“ம்ம்ச்...இல்லடா! என்னால எல்லாவற்றையும் சமாளிக்க முடியுல. அப்பா இறந்தது.

பாட்டியம்மாவுக்கு உடம்பு முடியாம போனது. அம்மாவை சமாளிக்க முடியாம திண்டாட வேண்டியதாகப் போச்சு. அதனால அவளை தேட முயற்சி எடுக்கவே இல்லை”.

“ஏன் ராமதுரை சார் அவங்க மனைவி எல்லாம் உதவிக்கு வரலையா ஆனந்த்”.

“அது என்னன்னு தெரியல மச்சான். அப்பா இறந்ததுக்கு வந்து பார்த்திட்டு போனவங்க தான் அதுக்குப் பிறகு இந்தப் பக்கமே வரல. என்னால எதையுமே யோசிக்க முடியாம இருக்கேன்.

என்னைச் சுற்றி என்ன நடக்குதுன்னே தெரியாம இருக்கேன்-டா. அம்மாவை இப்படி பார்க்க முடியல” என்று கூறி அழுது விட்டான்.

நண்பனின் நிலை கண்டு தீபனுக்கும் கண்கள் கலங்கி விட்டது. அதே சமயம் தன்னவளை நினைத்து உள்ளம் அழுது கொண்டு இருந்தது. யாராவது தவறானவர்கள் கையில் அவள் சிக்கி விட்டால் என்னாவது என்கிற பயமும் எழுந்தது.

இது எதையுமே காட்டிக் கொள்ளாது நண்பனை தேற்றிவிட்டு அங்கிருந்து கிளம்பி ஆற்றங்கரைக்குச் சென்று விட்டான். அவனுக்கு நிறைய சிந்திக்க வேண்டி இருந்தது.

வீட்டை விட்டு செல்லும் அளவிற்கு அப்படி என்ன நடந்திருக்கும்?

கல்யாணத்தை சாக்காக வைத்து நிச்சயம் அவள் வெளியேறி இருக்க மாட்டாள். அதை சமாளிக்கும் தைரியம் அவளுக்கு உண்டு. ஆனால் வேறு ஏதோவொரு சம்பவம் நிகழ்ந்திருகிறது. தான் வருவதற்கு முன்பு இத்தனை பெரிய முடிவை அவள் எடுக்க ஏதோவொரு பெரிய சம்பவம் காரணமாக இருந்திருக்கிறது. அது என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும்.
 
  • Like
Reactions: Kothai suresh