Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 7 | SudhaRaviNovels

அத்தியாயம் - 7

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் - 7

தேவேந்திரன் தலையைப் பிடித்தபடி அமர்ந்து விட்டார். என்ன காரியத்தை செய்து வைத்திருக்கிறாள் மகள் என்று எண்ணி நொந்து போனார். இது அனைவருக்கும் தெரியும் போது எத்தனை தலைகுனிவு. தனக்கு அடுத்து தங்கை ஒருத்தி இருக்கிறாளே என்று கூட எண்ணாமல் குடும்ப மானத்தை குழி தோண்டி புதைத்திருக்கிறாளே. தன் மகள் இப்படியொரு காரியத்தை செய்வாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

வர்ஷுவின் அன்னையோ தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார். தான்யாவிற்கு அவர்களிடம் பேசவே பயமாக இருந்தது. இப்போது தான் எது பேசினாலும் தவறாக தெரியும் என்பதால் கண்ணீருடன் கைகளைப் பிசைந்தபடி நின்றிருந்தாள்.

தேவேந்திரனோ முகமும் உடலும் இறுகிப் போய் அமர்ந்திருந்தார். அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மூச்சுக்கு போராடுபவரை போல தவித்தபடி இருந்தார். தான்யா தான் மெல்ல “அப்பா! அக்காவை கூட்டிட்டு வந்துடுவோம்” என்றாள்.

சட்டென்று நிமிர்ந்து அவளை முறைத்தவர் “வேண்டாம்! போனவ போனவளாவே இருக்கட்டும். சாந்தி! போய் வெந்நீர் போடு. எல்லோரும் தலைமுழுகுவோம்” என்றார் அதட்டலாக.

அதைக் கேட்டு அதிர்ந்து போன தான்யா அன்னையைப் பார்க்க அவருக்குமே கணவரின் பேச்சில் அதிர்ச்சி தான்.

“என்னங்க!”

உதட்டருகே விரலை வைத்து “ஷ்! ஒரு வார்த்தை பேசாதே! எப்போ படி தாண்டி வீட்டை விட்டுப் போனாளோ இனி அவளுக்கு இங்கே இடமில்லை” என்றார் அழுத்தமாக.

தான்யாவோ மனதிற்குள் ‘ஐயோ! அக்கா!’ என்று அலறிக் கொண்டிருந்தாள்.

சாந்தியோ கண்ணீரை மறந்து “என்னங்க! இது சரியில்லைங்க! அவ கஷ்டத்தில் இருக்காங்க. நாம போய் கூட்டிட்டு வந்துட்டு எதுவாக இருந்தாலும் பேசிக்கலாம்” என்றார் கெஞ்சலாக.

அவரை கடுமையாக முறைத்து “பொத்தி-பொத்தி வளர்த்த நம்மள தூக்கி போட்டுட்டு போனவளை நாம எதுக்கு பாதுக்காக்கனும்?”.

“வேண்டாங்க! என்ன இருந்தாலும் வயசு பொண்ணுங்க. அந்த பையனும் இல்லேன்னு சொல்றா. எனக்கு பயமா இருக்குங்க. நாடு இருக்கிற நிலைமைக்கு சின்ன பெண்ணை தெரிஞ்சே விடக் கூடாதுங்க” என்றார் கெஞ்சலாக.

ஆங்காரத்துடன் “சீரழிஞ்சு போகட்டும். பெத்தவங்களோட அன்பு, பாதுக்காப்பு எதுக்குன்னே புரியாம அப்படி என்ன காதல் வேண்டி இருக்கு. அவனை நம்பி போனாளே, ஒரு நாள் கூட இல்லாம விட்டுட்டு ஓடி போயிட்டான். இது தான் நிதர்சனம். வாழ்க்கைன்னா என்னன்னு தெரிஞ்சுக்கட்டும்”.

அவரின் பதிலில் அரண்டு போனவர் “என்னங்க! என்ன இருந்தாலும் அவ நம்ம பொண்ணுங்க. தயவு செய்து வாங்க போய் கூட்டிட்டு வந்துடுவோம்” என்றார் கெஞ்சலாக.

மனைவியை அடிக்க ஓங்கிக் கொண்டு சென்றவர் ‘சை’ என்று விட்டு நாற்காலியில் அமர்ந்து விட்டார். அதுவரை அமைதியாக இருந்த தான்யாவும் தந்தையின் அருகே சென்று “அப்பா! ப்ளீஸ்! பா” என்றாள் கெஞ்சலாக.

மகள் தங்களை ஏமாற்றி விட்டாள் என்கிற கோபத்தில் இருந்தவருக்கு அவளின் கெஞ்சலான குரலும் மீண்டும்- மீண்டும் காதில் ஒலித்தது. தோளிலும், மார்பிலும் போட்டு வளர்த்த மகளின் குரலில் இருந்த பயம் அவரை அனைத்தையும் தூக்கி போட்டுவிட்டு கிளம்ப செய்தது.

“சரி கிளம்பு” என்று எழுந்து கொண்டார்.

அவசரமாக இருவரும் கண்களைத் துடைத்துக் கொண்டு கிளம்ப “அந்த சனியன் எங்கே இருக்குன்னு கேளு?” என்றார் தான்யாவிடம்.

“எனக்கு லொகேஷன் அனுப்பி இருக்காப்பா” என்றாள் மெல்லிய குரலில்.

அதுவரை அடங்கி இருந்த கோபம் மீண்டும் எழ அவளை முறைத்து “உனக்கு இது முன்னமே தெரியுமா? நீயும் சேர்ந்து தான் என்கிட்டே மறைச்சியா?” என்றார் அவளை மிரட்டும் வகையில்.

அதைக் கண்டு நடுக்கத்துடன் “இல்ல...இல்லப்பா! எனக்கு எதுவும் தெரியாது” என்றாள் பயத்துடன்.

“ம்ம்..”என்று உறுமலாக சொல்லிவிட்டு கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினார். தாயும், மகளும் எதுவும் பேசாமல் அவசரமாக ஓடிச் சென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டனர். அவர்களின் கார் வீட்டை விட்டு வெளியேறும் நேரம், அதை படமெடுத்து அனுப்பினான் ஒருவன். அவர்களை பின்தொடர ஆரம்பித்தது மற்றொரு கார். இது எதையுமே அறியாமல் மகள் மீது இருந்த எரிச்சலில் காரை ஒட்டிக் கொண்டிருந்தார் தேவேந்திரன்.

பின்தொடர்ந்து சென்ற காரில் இருந்தவர்களுக்கு சில பல செய்திகள் வந்து கொண்டே இருந்தது. சுமார் இரேண்டரை மணி நேரம் பயணித்து வர்ஷினி இருக்கும் இடத்திற்கு சென்றடைந்தார்கள்.

அவளோ வீட்டின் கதவடைத்துக் கொண்டு இருளில் பயந்தவண்ணம் அமர்ந்திருந்தாள். அவர்கள் வந்து கதவை தட்டவும் பயந்து போனவள் “யா...யாரு” என்றாள்.

மகளின் மீது இருந்த கடுப்பில் “உங்கப்பன்” என்றார்.

தந்தையின் குரல் கேட்டதும் படாரென்று கதவை திறந்து கொண்டு வந்தவள் பாய்ந்து சென்று தந்தையின் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

“என்னை மன்னிச்சிடுங்க அப்பா! நான் தப்பு பண்ணிட்டேன் அப்பா” என்று கதற ஆரம்பித்தாள்.
 
  • Sad
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அதுவரை மகளின் மீது கடும் கோபத்தில் இருந்தவருக்கு அவளின் அழுகை என்னவோ செய்தது. கடுமையை காட்ட நினைத்த அவரால் அதை செய்யவும் முடியாமல் தன்னை மீறி கண்களில் விழும் கண்ணீரை துடைக்க மனமின்றி முகத்தை திருப்பி நின்றார்.

சாந்தியோ மகளின் முடியை பற்றி தூக்கி அவள் எதிர்பார்க்கும் முன் ஓங்கி கன்னத்தில் அறை ஒன்றை கொடுத்தார். அதற்கு மேலும் முடியாது மாறி-மாறி அடித்து ஓய்ந்தார். தேவேந்திரன் கையைக் கட்டிக் கொண்டு தடுக்காமல் வேடிக்கை பார்த்தார். தான்யா தான் தவித்தாள்.

“பெண்ணாடி நீ! உன் மேல எத்தனை அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்தோம். அதென்னடி படிக்கிற வயசில் காதல்?” என்று கேட்டு மேலும் முதுகில் நான்கு அடியை போட்டார்.

“மா! தப்பு தான்மா” என்றாள் அவ்வளவு அடியையும் வாங்கி கொண்டு.

“நம்ம குடும்ப மானத்தை மொத்தமா குழி தோண்டி புதைச்சிட்டியேடி” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

அன்னையின் கைகளைப் பற்றிக் கொண்டு “தப்பு தான்மா. தப்பு தான்” என்று அழுது கரைந்தாள்.

“உன் வாழ்க்கையோட உன் தங்கச்சி வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி வச்சிட்டியே. நீ நல்லாவே இருக்க மாட்ட” என்று சபித்தார்.

தான்யா அன்னையின் கைகளைப் பற்றிக் கொண்டு “மா! பாவம்மா அக்கா. ப்ளீஸ்! திட்டாதீங்க” என்று கெஞ்சினாள்.

சின்ன மகளைப் பார்த்து ஒற்றை விரலை நீட்டி “கொன்றுவேன்! தள்ளிப் போ!” என்று விரட்டியவர் வர்ஷினியிடம் சென்று அவளது கழுத்தில் கிடந்த புத்தம் புது தாலியை அறுத்து மண்ணில் வீசினார்.

கணவர், மகள் இருவரிடமும் “நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோங்க. இவ வாழ்க்கையில் இப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை. நம்மை தவிர இது வேறு யாருக்கும் தெரியக் கூடாது. நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது. நாம உடனடியா வேற ஊருக்கு போயாகனும். இவ சம்மதப்பட்ட யாருக்கும் இவளோட இருப்பிடம் தெரியக் கூடாது. முக்கியமா காலேஜ் பசங்களுக்கு”.

அதுவரை தான் செய்த தவறை எண்ணி அழுது கரைந்தவளுக்கு தன் கழுத்திலிருந்த தாலியை அன்னை அறுத்து வீசியதும் இதயம் வலித்தது. மண்ணில் கிடந்த அந்த தாலியின் மீது தான் அவளது பார்வை இருந்தது.

தேவேந்திரனும் மனைவி சொன்னதை யோசித்து அதை ஏற்றுக் கொண்டார். மகளிடம் அவர் ஒரு வார்த்தை பேசவில்லை. மனைவியிடம் கிளம்பலாம் என்றார். வர்ஷினியோ அந்த தாலியின் மீதே பார்வையை பதித்திருந்தாள். மனதிற்குள் அத்தனை வலி. எங்கோ ஏதோவொரு இடத்தில் தவறு நடந்திருக்க, தங்களின் காதல் தவறாக போனதை எண்ணி மனம் குமைந்து கொண்டிருந்தாள். தாலி கட்டி அந்த ஈரம் காய்வதற்குள் அறுத்து எறியப்பட்டுவிட்டது. இதற்காக தான் இத்தனை அவசரமாக எல்லாம் நடந்ததா? என்றெண்ணியவளின் விழிகளில் இரு சொட்டு நீர் வழிந்து கன்னங்களை நனைத்தது.

தேவேந்திரன் முன்னே செல்ல சாந்தி அவரைத் தொடர, தான்யா மெல்ல வந்து வர்ஷுவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

வர்ஷிணியின் பார்வை மட்டும் தாலியின் மீதே இருந்தது. தங்கையிடமிருந்து கைகளை உருவிக் கொண்டவள் அன்னைக்குத் தெரியாமல் வேகமாக சென்று மண்ணில் கிடந்த தாலியை எடுத்து தனது புடவைக்குள் மறைத்துக் கொண்டாள்.

அக்கா செய்ததைப் பார்த்த தான்யாவிற்கு வருத்தமாக இருந்தது. அவள் மனதில் இருந்த உணர்வுகளை உணர்ந்து கொண்டவள் வர்ஷுவின் கரங்களை அழுத்தமாகப் பற்றிக் கொண்டாள். உனக்கு நானிருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லியது அவளது செயல்.

அனைவரும் காரில் அமர்ந்ததும் எந்த பேச்சுமின்றி காரை எடுத்தார் தேவேந்திரன். சாந்தியோ கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடியே அமர்ந்திருந்தார். வர்ஷுவோ இருளை வெறித்தவண்ணம் அமர்ந்திருந்தாள். உணர்வுகள் சுத்தமாக மரத்து போயிருந்தது. தாய், தந்தை இருவரும் திருமணம் மட்டுமே நடந்திருப்பாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தான் இழக்க கூடாததையும் இழந்து நிற்பது தெரிந்தால் என்று எண்ணும் போதே உடல் இறுகிப் போனது.

இனி, என்ன நடக்கும் என்பதை அறியாதவாறு அமர்ந்திருந்தாள். அவன் தன்னை ஏமாற்றி விட்டு சென்று விட்டானா? அவன் சொன்னது எல்லாமே பொய்யா? என்று மனதில் பல கேள்விகள் முளைத்தது. மிகப் பெரிய பணக்காரன் என்றும் சொன்னார்களே. அவனுக்கு இதெல்லாம் சாதாரணம். நிச்சயமாக அவனுக்கு தன் மீது உண்மை காதல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது.

அவன் பேசியவற்றை எல்லாம் நினைத்து பார்க்க- பார்க்க எல்லாமே பொய்யாக தெரிந்தது இப்போது. இதெல்லாம் முன்பே ஏன் தெரியாமல் போனது என்று உடைந்து போனாள். எல்லோரும் சொன்னார்களே டைம் பாஸ் காதல் என்று. இப்போது அது உண்மையாக போய் விட்டதே என்று எண்ணி கலங்கித் தவித்தாள்.

அக்காவின் மனதில் ஓடும் எண்ணங்களை எல்லாம் புரிந்து கொண்டவள் போல அவளது கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அன்னை அறியாதவண்ணம் “கவலைப்படாதே அக்கா” என்று சமாதானம் கூறிக் கொண்டிருந்தாள் தான்யா.

தேவேந்திரனோ மகளின் பக்கம் திரும்பக் கூட இல்லை. எல்லாவற்றையும் மீறி தந்தையின் புறக்கணிப்பு அவளை வாட்டியது. அவர்களின் காரை தொடர்ந்தவர்களின் கார் இப்போதும் தொடர்ந்தது. அதில் இருந்தவர்களுக்கு உத்தரவு வர, உடனே அதை செயல்படுத்த முடிவு செய்தனர்.

ஊட்டியிலிருந்து மலைப் பாதையில் தேவேந்திரனின் கார் இறங்க ஆரம்பித்தது. இருளும், அந்தகாரமும் சூழ்ந்த அந்த மலைப் பாதை மனதிற்குள் பயத்தை ஏற்படுத்தியது. காரினுள் இருந்தவர்கள் யாருக்கும் அந்த பயமில்லை. அவர்களின் மனமோ வேறு ஒரு சோகத்தில் இருந்ததால் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
லேசாக மழை தூறல் போட, மிக ஜாக்கிரதையாக காரை ஒட்டிக் கொண்டிருந்தார் தேவேந்திரன். எதிர்புறம் ஒரு சில வண்டிகள் கடந்து செல்லும் போது மிக கவனமாக கீழே இறங்க ஆரம்பித்திருந்தார்கள்.

மலைப் பாதையின் முடிவை நோக்கி இறங்கி விட்டிருந்தவர்களை கலைத்தது பின்னே கேட்ட ஹாரன் சப்தம். அதில் அதிர்ந்த தேவேந்திரன் “லூசுப் பசங்க! மலைப்பாதையில் எப்படி போகணும்னு தெரியாம படுதுறானுங்க” என்று எரிச்சலுடன் மெதுவாக சென்றார்.

ஆனால் பின்னே வந்தவர்களோ விடாது ஹாரன் அடித்தும், லைட்டை அணைத்து- அணைத்து போட்டும் அவரை டென்ஷன் ஆக்கினார்கள். அதில் அவர் சற்று தடுமாற பின்னே வந்தவர்களோ அதிக இடைவெளி விடாமல் பின்னோடு தள்ளிக் கொண்டே வர, மேலும் பதட்டமானார்.

ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் முடியாமல் போக, அப்போது பின்னே வந்தவர்கள் லேசாக காரை இடிக்க, ஏற்கனவே இருந்த பதட்டத்தில் கார் அவர் கைகளில் தள்ளாட, யாரும் எதிர்பார்க்கும் முன் கார் பள்ளத்தில் உருள ஆரம்பித்திருந்தது. மலைப் பாதையின் முடிவில் இருந்ததால் பெரும் பள்ளத்தில் விழாமல் சிறிய குன்றின் மீது உருண்டு நின்றது. மொத்தமாக தலைகீழாக கிடந்த காரில் அனைவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

தேவேந்திரனின் முகமெல்லாம் காரின் கண்ணாடிகள் குத்தி கிழித்து ரத்தமாக வழிந்து கொண்டிருந்தது. காரை இடித்து தள்ளியவர்கள் இறங்கி வந்து குனிந்து பார்த்தனர்.

“உயிர் இருக்கா? எல்லாம் போயிடுச்சா?”

“பார்த்தாலே தெரியலையா முடிஞ்சு போச்சு” என்று பேசிக் கொண்டார்கள்.

சாந்தியோ தலை மேலே மோதியதில் கபாலம் லேசாக விரிசல் கண்டிருக்க, அந்த இடத்திலேயே உயிர் துறந்திருந்தார். வர்ஷிணியின் கால்களில் கார் சீட் விழுந்திருக்க, கால் நசுங்கி ரத்தம் வந்ததில் மயங்கி இருந்தாள். தான்யா கீழே குப்புற விழுந்ததில் முதுகெல்லாம் கண்ணாடி குத்தி ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. மற்றபடி அவளின் உயிருக்கு சேதாரம் இல்லை. ஆனால் தாய், தந்தை இருவரும் அந்த இடத்திலேயே மரித்திருந்தனர்.

அவர்கள் பேசிவிட்டு செல்லும் நேரம் வர்ஷினிக்கு மெல்ல விழிப்பு வந்திருக்க, அவர்கள் யாருக்கோ தகவல் சொல்வதை முழுவதும் காதில் வாங்கி இருந்தாள். அவளின் காதுகளில் விழுந்த செய்தி மொத்தமாக அவளை மயங்க செய்தது.

ஆசையாக அவன் வாங்கிக் கொடுத்த கொலுசை அன்று காலில் அணிந்திருந்தாள். அவளது கால் முற்றிலுமாக உடைந்து ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது. இடுப்பின் மறைவில் வைத்திருந்த தாலியானது ரத்தக் கரை பூசிக் கொண்டிருந்தது.

மயங்கியவளின் விழிகளில் இருந்து கண்ணீர் துளிகள் காரை நனைத்துக் கொண்டிருந்தது.

மலைப்பாதையில் ஏற ஆரம்பித்திருந்த யாரோ அவர்களின் காரைக் கண்டு போலீசிற்கு தகவல் சொல்லி, அவர்கள் வந்து அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 

Chitra Balaji

Active member
Feb 5, 2020
125
68
28
Adapaavingala manushanugala avanuga avan paiyan thaan kutikitu poitaane appram ஏன் அவங்களை konnaa பணம் இருந்தா என்ன vennaalum panalaama......Che paavam maa... Very very emotional episode maa
 
  • Love
Reactions: sudharavi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
Adapaavingala manushanugala avanuga avan paiyan thaan kutikitu poitaane appram ஏன் அவங்களை konnaa பணம் இருந்தா என்ன vennaalum panalaama......Che paavam maa... Very very emotional episode maa
Thankyou Chitra.............................
 
  • Love
Reactions: Chitra Balaji