Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 7 | SudhaRaviNovels

அத்தியாயம் - 7

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,951
2,683
113
வணக்கம்!


எப்படி இருக்கீங்க? இவ்வாரம் ஒரு எபி தப்பிப் போய்விட்டது. மன்னிக்கவும்! முயன்ற அளவு வாரம் இரண்டு எபி போட முயற்சிக்கிறேன். இந்த எபியை வாசித்துவிட்டு மறக்காமல் அப்படியே உங்கள் கருத்துகளையும் பகிருங்கள்.


நன்றி!தேன் மழையிலே

ஆர்த்தி ரவி


அத்தியாயம் 07:


பிரயாணம் முழுவதும் சூர்யாவைக் கட்டிக் கொண்டே வந்திருந்தாள் தேன்மொழி. ரிஷி கண்ணனைப் பார்த்தது அவளுடைய ஞாபகங்களைப் பற்ற வைத்திருந்தது.


செக் இன் ஃபார்மாலிட்டீஸ் முடிந்து, செக்யூரிட்டி செக் கடந்து, போர்டிங்கான காத்திருப்பில் அமர்ந்திருந்த போதே மற்ற அனைவரும் அவளைவிட்டுப் பின்னுக்குச் சென்றனர்.


சூர்யாவின் முகம் மட்டுமே மூடிய இமைகளுக்கிடையே சிறைபட்டு இருந்தது. அவனுடனான காலம், நெதர்லேண்டின் வசந்த கால டியூலிப் மலர்களின் வரிசை கட்டும் அணிவகுப்புக் காட்சியாய் விரிந்தது.


அதனூடே போர்டிங் முடிய, விமான இருக்கையில் அமர்ந்து, இயர் பாட்ஸ்ஸை செவிகளுள் சொருகிக் கொண்டாள். வேறு எந்தச் சத்தமோ தொந்தரவோ இன்றிப் போக…


எத்தனை தடவை சூர்யாவின் ரெக்கார்டட் மெசேஜை ஒலிக்க விட்டாள் என்பது கணக்கிலேயே அடங்காது!


தன் மொபைலின் பதிவுகளிலிருந்து மீண்டும் மீண்டும் கேட்டாள்.


“தேனு…


தேனம்மா…”


அவளை இதமாக வருடிக் கொடுத்துக் கொண்டே இருந்தது. அந்தக் குரல் தான் அவளின் உயிரின் சுவாசத்திற்கு பெரிய பூஸ்ட்!


இருந்தும் அந்நேரம் கண்ணீர் வந்தது. கன்னம் தொட்டு விடாமல் இமைகளை இறுக்கி, கண்ணீரை உள்ளிழுக்க முயன்றாள். ஒரு கட்டத்தில் அயர்ச்சியாக வர, விட்டு விட்டாள்.


அந்தக் கொடுமையான நாட்களின் ஞாபகங்கள் தாங்கவியலாததாய்!


தான் அழுது கரைவதால் மாண்டவன் மீண்டு வந்துவிட மாட்டான் என்று அறிவுக்கு எட்டினாலும் மனது கிடந்து தவித்தது!


தனி உலகினில் உனக்கென நானும்

ஓர் உறவென எனக்கென நீயும்

அழகாய் பூத்திடும் என் வானமாய்

நீயே தெரிந்தாயே

உன் விழி இனி எனதெனக் கண்டேன்

என் உயிர் இனி நீ எனக் கொண்டேன்

நான் கண் இமைக்கும் நொடியினில் பிரிந்தாயே

பிணமாய் தூங்கினேன்…


அவர்களுக்கென்று ஒரு தனி உலகம் இருந்ததே!


நேற்றுப் போலிருந்தது அவளின் சூர்யாவுடனான காலம். எப்படித் தன்னைவிட்டு விட்டுக் காற்றாகிப் போனான்? அந்த அன்னியோனமான காலத்தின் சுவடு அவளுக்குள்ளே அழுத்தமாய்!


அவனே அவளிடம் சொல்லிவிட்டுத் தானே விடைபெற்று இருந்தான். இருந்தும், அந்த ‘மூவ் ஆன்’ அப்படி எளிதாக இல்லையே!


எதுவும் சொல்வது எளிது… செயலாற்றுவது சிரமம் என்றே நினைத்தாள்.


விமானம் சிங்கப்பூர் தரை தொட்டதும், தேன்மொழி மெல்ல மெல்ல சுயநினைவுக்கு வந்திருந்தாள்.


இந்த முறை விடுமுறை முடிந்து சிங்கப்பூர் வந்து சேர்ந்தது என்னவோ அவளுக்கு வித்தியாசமாய் தோன்றியது. பத்து நாட்கள் தான் விடுமுறை. அது தான் கஷ்டமாக இருக்கிறதா?


அம்மா, அப்பா, தம்பியின் பிரிவு தான் வாட்டுகிறதா? வீட்டினரின் பிரிவு எதற்கு அவஸ்தையைத் தரப் போகிறது? பிரிவு ஏக்கத்தையல்லவா தரும்?


இதெல்லாம் எதிர்பார்த்தது… பழகிப் போனது தானே?


இல்லை… இல்லை…


அதையும் தாண்டி ஓர் அவஸ்தை நெஞ்சு முழுக்க வியாபித்து இருந்தது. இம்முறை தான் மறுமணத்திற்கு சம்மதம் தெரிவித்தது தான் காரணம் என்பது தேன்மொழிக்குப் புரிந்தது. ஒரு கில்டி கான்சியஸ் கூட அவளிடம் குடியேறியது!


தொடர்ந்து யோசிக்க நேரமின்றி… இமிக்ரேஷன், பேக்கேஜ் கிளைம் என்று பார்த்து முடித்ததும் வீட்டிற்கு பேசினாள்.


அப்போது… அந்த இரண்டுங்கெட்டான் வேளையிலும், “தேனு நாளைக்கு ஆஃபீஸ் போனதும் அப்படியே உன் வேலையிலேயே நேரத்தைக் கடத்திடாதேடி. அப்பா இன்னைக்கு இரண்டு மூணு மாப்பிள்ளைங்க பயோடேட்டா பார்த்து எடுத்து அனுப்பியிருக்காங்க பாரு…


அந்தப் பையன்கள்ல எந்த புரொபைல் உனக்கு ஓகேன்னு பொறுமையா பாரு. நீ எதுன்னு சொன்னாத்தான் ஜாதகம் பார்க்கணும். என்ன?” என்று வனிதா சொல்லவும்,


“அம்மா…ஆ! அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டீங்களா? அலுப்பா இருக்கும்மா எனக்கு. அது தான் அப்பாட்ட சொல்லிட்டேனே. நீங்களே எல்லாம் பார்த்து முடிவு பண்ணுங்கன்னு. ப்ளீஸ் என்னை எதுக்கும் இழுக்க வேண்டாம்!” எரிச்சலும் அயர்வுமாக தேன்மொழி பதில் சொன்னாள்.


அம்மா ஏன் இப்படிப் பிடி பிடியென நிற்கிறாள் என்று அவளுக்கு ஆயாசமாக வந்தது.


வனிதாவிற்கு மகள் எங்கே மனசு மாறிவிடுவாளே என்று பயந்து வந்தது. இப்படி ஒத்தையாகவே வாழ்வது பழகி விட்டால்? அப்புறம் கல்யாணம், குடும்பம் பற்றிய எண்ணம் எப்படித் தோன்றும்?


அப்படி ஆகிவிட்டால் தங்களால் என்ன செய்ய முடியும்?


காலங்காலமாய் நம் பண்பாட்டில் ஊறிய சிந்தனை… ஒரு பெண் தனியாக நிற்கக் கூடாது... அவளுக்கென்று ஒரு துணையை அமைத்துக் கொடுப்பதே பெற்றோர்களின் முக்கியக் கடமையுள் ஒன்று என்கிற எண்ணம் வனிதாவிற்கு மட்டுமா என்ன? இங்குப் பலருக்கும் இருப்பது தானே?


அதிலும், இப்போதுள்ள சந்ததியினருக்கு, வீட்டில் கல்யாணம் என்று பேச ஆரம்பித்ததுமே பல கண்டிஷன்கள் வரிசை கட்டுகிறது.


மாப்பிள்ளையைக் குறித்தோ, பெண்ணைக் குறித்தோ முன்பெல்லாம் இத்தனை எதிர்பார்ப்புகளை யாரும் வைத்திருக்கவில்லை.


ஜாதகம்; குடும்பம்; பழக்கவழக்கங்கள்; படிப்பு; வேலை; சம்பளம்; சொந்தமா? எப்படி? இன்னார் என்றால் முறை வருமா?


இவையெல்லாம் தான் பொதுவான அலசல்களாக இருந்தன. இவற்றைத் தாண்டி போனால், தோற்றம் ஃபேக்டர் அலசப்படும்.

அதுவும் அநேகமாகச் சில சம்பந்தங்களில் மட்டும் புறத்தோற்றத்திற்கு முக்கியத்துவம் இடம்பெறும்.


அவ்வளவு தான்… இதிலேயே ஒரு சம்பந்தம் முடிவாகிவிடும்.


இப்போது அப்படியா?


இவற்றையெல்லாம் தாண்டி வந்தால், ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், வேலையின் நிலை… ஐடியாக இருப்பின் ப்ராஜெக்ட் பற்றிய கூடுதல் அலசல்கள், மருத்துவ துறை என்றால் ஸ்பெஷலைசேஷன் டீடெயிலிங்… இப்படி ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொன்று!


அதி முக்கியமான விருப்பமாக நியூக்ளியர் ஃபேமிலி கான்செப்ட்!


இத்தனை எண்ணற்ற விருப்பங்களைக் கொண்டுள்ள இளைஞர்கள் மத்தியில், தேன்மொழி எளியவளாகவே இருந்தாள்.
 
  • Love
Reactions: Shanbagavalli

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,951
2,683
113
அன்று சூர்யாவுடனான அவளது திருமணம் சிறப்பாகவே நடைபெற்று இருந்தது.


ஆனால் இன்று?


மகளின் எண்ணப்போக்கு என்னவோ ஏதோ… மீண்டும் திருமணம் செய்துகொள்ள அவளின் விருப்பமின்மையைக் காட்ட எதையாவது சாக்காகச் சொல்வாள்.


இப்போது முன்பு போலில்லை மகள். அவளின் குண இயல்பே மாறிவிட்டது என்று தான் வனிதா நினைத்தார். அதனாலேயே அவளும் வரன்களின் குறிப்புகளைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.


சில சூழ்நிலைகள் ஒருத்தரின் குண இயல்பை மாற்றிவிடும் வல்லமை படைத்தவை. அத்தனை பெரிய இழப்பிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் மகளிடம் வனிதா இன்னும் கொஞ்சம் நெருக்கமாக நடந்து கொண்டிருக்கலாம்.


அந்த நெருக்கம் அவருக்கு மகளை நன்றாக உணர்ந்து கொள்ள வைத்திருக்கும். வெற்றிமாறனின் கூற்றும் அது தான் அல்லவா?


வனிதா நினைப்பது போன்று அப்படி ஒன்றும் தேன்மொழியின் குணங்கள் பெரிதாக மாறி விடவில்லை.


வனிதா மற்றும் உஷாவின் கூட்டணி அவளுக்கு வெறுப்பேற்றி வைத்திருக்கிறது என்பது தான் உண்மை. அவளுக்கு மறுமணத்தை வலியுறுத்துவது போன்று அவர்களின் நடவடிக்கைகள் இருக்கவே சள்ளையாக வந்தது.


‘நான் ஏன் இப்படியே இருந்துவிடக்கூடாது? என்ன நான் தனிமையில் நிற்கிறேன்? சூர்யா என்ன ரீப்ளேஸபிள் லெகோ ஃபிகரின்னா? அவனுக்குப் பதில் வேறொருத்தனை இவர்கள் கொண்டு வந்து நிரப்ப?’


வெறுப்பாக வர, அப்படியே அம்மாவிடம் தன் கோபத்தை வெளிப்படுத்தி விடுபவள், மாமியாரிடம் காட்ட முடியாமல் இருந்தாள். அவர் தான் அழைப்பில் வருவதையே நிறுத்தி விட்டாரே! எங்கிருந்து எப்படி அவரிடம் தன் கோபத்தைக் காட்டுவது?


தேன்மொழிக்கு உஷாவிடம் பயமெல்லாம் கிடையாது!


அத்தனை பேசுவார்கள் இருவரும். தி சோ கால்ட் ‘கேட்டகோரியல் மாமியார்ஸ்’ போல் உஷா நடந்து கொண்டதில்லை. அதற்காக அவர் மருமகளைக் கொஞ்சிக் கொண்டே இருந்தார் என்றும் இல்லை தான்.


அவரிடம் அவளுக்கு இயல்பாக இருக்க முடிந்தது. புகுந்த வீடு என்பது பெயரளவில் தான். சூர்யா, அஜித் வரிசையில் தேன்மொழி இருந்தாள்.


இப்படிப்பட்ட ஒரு குடும்ப அமைப்புப் பலரின் கனவு!


புகுந்த வீட்டு அமைப்பு மட்டும் அன்பாக, அரவணைப்பாக, அனுசரணையாக இருந்தால் போதாது… அப்படிப்பட்ட வீட்டில் வாழப் போகும் பெண்ணும் அதே எண்ணங்களுடன் இருந்தால் தான் அந்தக் கனவு வாழ்க்கை நிஜத்திலும் சாத்தியப்படும்!


தேன்மொழிக்கு அப்படிப்பட்ட வாழ்க்கை கிட்டியது. இயல்பிலேயே நற்குணங்களுடன் இருந்தவளுக்குப் புகுந்த வீட்டுடன் பொருந்திப் போக முடிந்தது.


சூர்யாவின் மறைவிற்கு பின்னரே உஷா கூடுதல் அரவணைப்பை வெளிப்படையாக அவளிடம் காட்டியிருந்தார். அதுவே தேன்மொழிக்குப் பழகி, அக்கூட்டில் இருந்து கொள்ளவே விரும்பினாள்.


மகனின் விருப்பம் மட்டுமின்றி, உஷாவும் சுகுமாரனும் மருமகள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்திருந்தனர்.


இளையவன் அஜித் லண்டனுக்குச் சென்றுவிட, அதையே ஒரு வாய்ப்பாக அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். தேன்மொழி அதை எதிர்பார்க்கவில்லை.


இவளை வீட்டைவிட்டு வெளியே அனுப்பவில்லை தான். ஆனால், மும்பாயில் தனியாக விட்டுவிட்டு, மிஸ்டர் உஷாவுடன் லண்டன் போனது தேன்மொழிக்குப் பிடிக்கவில்லை.


உஷா அவ்வாறு முடிவு செய்தது இவளுக்கு வேறொரு வாழ்க்கை அமைய வேண்டும் என்கிற நல்லெண்ணத்தைக் கொண்டு தான். அவர்களுடன் ஐக்கியமாகி அப்படியே வாழ்வைக் கொண்டு செல்லும் நினைப்பில் இருந்தவளை எவ்வாறு மனம் மாற்றுவது?


இந்தப் பிரிவும் தனிமையும் அவளைச் சிந்திக்க வைக்கும். அவளைக் காயப்படுத்தும் செய்கை தான். ஆனால், முயற்சி செய்தால் தானே முடிவு தெரியும்?


தேன்மொழியை மனம் மாற்றி, அவளை மடை மாற்றம் செய்துவிட, உஷா முதல் அடியாகத் தனது மாமியார் பதவியை ராஜினாமா செய்தார். தன் கணவரையும் மருமகளுக்காக இரங்க விடவில்லை.


சம்பந்தி எடுத்து வைத்த அடியை வனிதா கெட்டியாகப் பற்றிக் கொண்டார்.


அவருக்கும் மகளின் மனம் பற்றித் தெரியும். சூர்யாவைக் கடந்து வர வேண்டும் என்றே அடிக்கடி மறு மணம் பற்றிய போதனை தந்து கொண்டிருப்பார்.


மீண்டும் அவளுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்காமல் ஓய்வதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டது போலவே தோற்றத்தைக் கொடுத்தார் வனிதா.


கடந்த ஒரு வருடத்துக்கு மேலேயே அம்மாவின் நச்சு தேன்மொழிக்குப் பெரும் தொல்லையாகிவிட்டது.


அதைச் சகிக்க முடியாமல் போன சில நாட்கள், தேன் அம்மாவிடம் பேசாமல் கூட இருந்திருக்கிறாள்.


முன்பு தான் அப்படியென்றால், தான் இப்போது மறு மணத்திற்கு சம்மதம் சொன்ன பிறகும் தன்னை இப்படி விரட்டிக் கொண்டிருந்தால்?


தேன்மொழிக்கு அத்தனை கோபம் வந்தது. பேசாமல் சிங்கப்பூரை விட்டுத் தொலைவில் போய் விடலாமா… யாரிடமும் சொல்லாமல் என்று கூட நினைக்க ஆரம்பித்தாள்.


அப்படி இவள் போய் விட்டால் அஜித் குமார் சும்மாவா இருப்பான்? தொலைவில் இருந்தாலும் அண்ணியின் பாதுகாவல் அவனே! தேன்மொழியும் அதனை அறிந்திருந்தாள்.


எப்படி நகர்ந்தாலும் ஒரு செக்!


பேசாமல் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டியது தான் தனக்குள்ள சிங்கிள் சாய்ஸ்!


அம்மாவை விட அப்பா மட்டுமே தன் உள்ளத்தைப் பற்றி அதிகம் யோசித்துச் செயல்படுகிறார் என்று புரிந்திருந்த தேன்மொழி, இனி இது சம்மந்தமாக அப்பாவிடம் மட்டுமே பேசுவது என்று முடிவு செய்து கொண்டாள்.


“என்னடி இப்படி ஒட்டாம பேசுற?” ஆதங்கம் மேலோங்க வனிதா கேட்டார்.


“வேற எப்படிப் பேசச் சொல்ற? நம்ம வீட்ல இருந்து கிளம்பி ஒரு எட்டுப் பத்து மணி நேரங்கூட ஆகியிருக்காது. அதுக்குள்ள என்னை ஏன் இப்படிப் படுத்துற?


போம்மா அப்பாட்ட ஃபோனை தா. நான் ஏர் போர்ட் வாசலுக்கு வந்துட்டேன். உன் கேள்விக்குப் பதில் சொல்லிட்டு நிக்க இப்ப எனக்கு டைம் இல்லை!”


“சரி சரி சிடு சிடுங்காத. அப்பா நைட்டு நீ கிளம்பவும் ஒரு மாதிரி டல்லா இருந்தாரு. தூக்கம் வரலைன்னு ஒரு மாத்திரையைப் போட்டுக்கிட்டுப் படுத்தாரு. இப்ப அசந்து போயி தூங்குறாரு. நீ வீட்டுக்குப் போயிட்டு அப்புறமா பேசுடி. இல்லை அப்பா எந்திருச்சதும் அவரே பேசுவாரு. பார்த்துப் பத்திரமா போ.”


“சரிம்மா வச்சிடறேன்.” என்று சொன்ன தேனு, அப்பாவை நினைத்து வருத்தம் கொண்டாள். தன்னால் பெற்றோருக்கு வேதனை!


யோசனையில் சுழன்றவள் அழைப்பை அணைக்கிறேன் என்று அவசரத்தில் வேறு பொத்தானை அமுக்கிவிட்டாள்.


“என்ன அவசரமோ இந்த அம்மாக்கு. அப்பாவையும் இப்படிப் பேசியே படுத்தி வைக்கிறது!


ஜாதகம் பார்க்கணுமாம். அப்படி ஜாதகம் பார்த்து அத்தனை பொருத்தம் இருக்குன்னு சொல்லிக் கல்யாணம் செஞ்சு வச்சு… சூர்யா… உனக்காவது தெரியுமா? நிஜமாவே இவங்க நம்மளுக்குப் பொருத்தம் பார்த்தாங்களாமா?”
 
  • Love
Reactions: Shanbagavalli

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,951
2,683
113
தன் பாட்டில் புலம்பியபடி டேக்ஸிக்காக காத்திருந்தாள். அந்தப் பக்கம் வனிதா மகள் சொன்னதைக் கேட்டுத் திக்கென்று நின்றிருந்தார்!


தேன்மொழி தனக்கான குடியிருப்புப் பகுதிக்கு வந்து சேர்ந்தாள். அதே பகுதியில் நான்கைந்து வீடுகளை அவளுடைய அலுவலகத்திலிருந்து லீசுக்கு எடுத்திருந்தனர்.


தேன்மொழியைப் போன்று வெளி நாட்டிலிருந்து குறைந்த காலத்திற்காக வேலைக்கு வருபவர்களின் பொருட்டுச் செய்து தரும் வசதி. வாடகைப் பணம் அங்குத் தங்குபவர்களின் பொறுப்பு என்றிருந்தது.


அடுக்கு மாடிக்குடியிருப்பு ஒன்றில் ஒரு இரண்டு படுக்கையறை வீட்டில் தான் இருக்கிறாள். அவள் வந்திறங்கிய நேரம் பூட்டிய இல்லமே அவளை வரவேற்றது.


அதைப் பார்த்ததும் தான் நினைவுக்கு வந்தது… கடந்த மூன்று மாதங்களாய் உடன் தங்கியிருந்த சூசானா பிலிப்பைன்ஸ் திரும்பிப் போய் விட்டிருந்தாள். இனி யாரும் புதிதாக வரும் வரை தான் மட்டுமே அங்குத் தங்க வேண்டும்.


வீட்டிற்குள் போனதும் தூய்மையான வரவேற்பு அவளுக்குக் கிடைக்க, புன்னகைத்துக் கொண்டாள்.


முதலிலிருந்த சூசானாவிற்கு இப்படிச் சுத்தம் வராது. ஆங்காங்கே சாமான்கள் இரைந்து கிடக்கும். சமையலறையில் புழங்க முடியாத அளவுக்கு அசுத்தமாக்கி விடுவாள்.


அப்படி இருந்த சூசானா மூன்று மாதத்தில் நிறைய மாறியிருந்தாள். தேன்மொழி இருப்பிடத்தைச் சுத்தமாக வைத்திருக்க, சூசானா அவளுக்கு நேர்மாறாக இருந்தாள்.


அவள் விட்டுச் செல்வது போன்று அலுவலகத்திலிருந்து திரும்பும் போது வீடு இருப்பதில்லை. அது தேன்மொழிக்கு ஒத்து வரவில்லை. மற்ற இடங்களைக் கூட சகிக்க முடிந்தது. சமையலறையில் தான் அவளுடன் ஒன்றாகப் புழங்க முடியவில்லை.


உடன் வசிப்பவரும் சுத்தம் செய்துவிட வேண்டும் என்று ஒரு நாள் அந்த அசுத்தத்தைப் பொறுக்க முடியாமல் சூசானாவிடம் சற்றுக் கடினமாகச் சொல்லிவிட, மூன்று மாதங்களில் சின்ன சின்னதாக எத்தனை மாற்றங்கள் அவளிடம்?


சூசானா மாற்றங்களை வரவேற்பவளாக இருந்தாள். அதனால் தான் என்னவோ அவளால் அப்படி மாறிப் போக, தன்னை மாற்றிக்கொள்ள முடிந்தது.


சூசானாவைப் பற்றி நினைத்தபடி தேன்மொழி குளித்து முடித்து வந்தாள். தூக்கம் வந்து கண்களைக் கெஞ்சியது. கூடவே பசியும் வந்து வயிற்றைக் கிள்ளி வைக்க… தேன்மொழி சாப்பிட என்ன இருக்கிறது என்று பார்க்கப் போனாள்.


குளிர்ப்பதனியில் சிறிது பழங்கள், ஒரு பால் கார்டன், இரண்டு மூன்று முட்டை, கேரட், தக்காளியுடன் இவளுக்குப் பிரியமான இரண்டு சிம்லா மிர்ச்சியும் சிரித்துக் கொண்டிருந்தன.


தேன்மொழிக்கும் அச்சிரிப்புத் தொற்றிக்கொண்டது!


உடனே சூசானாவுக்கு ஒரு குறுஞ்செய்தியுடன் நன்றி சொன்னாள். அவளும் அப்பொழுதே பதிலுரைக்க, சிறிது நேரம் அவளுடன் பேசிக்கொண்டே ஒரு கப் பால் மற்றும் சிறிது பழங்களுடன் உணவை உண்டு முடித்தாள்.


அப்படியே தூங்க வேண்டாமென அரை மணி நேரம் அமர்ந்திருந்தாள். அந்த நேரத்தில் அப்பாவுடனும் தம்பியுடனும் பேசினாள்.


அது முடிந்ததும் மடிக்கணினியில் அப்பா அனுப்பிய மாப்பிள்ளைகளின் விபரங்களை மேலோட்டமாகப் பார்த்தாள். தனக்குப் பிடிக்குதா இல்லையா என்றெல்லாம் பார்க்கவில்லை. அந்நேரத்திலே ஏதோ கடனே என்று ஒரு மனப்பான்மை மட்டுமே அவளிடம்.


அவற்றில் ஹரி இல்லை! வேறு யாரோ மூன்று நபர்களின் பயோடேட்டா விபரங்கள் வந்திருந்தன. ஒருத்தர் டிவோர்ஸி. ஒருத்தர் விடோயர். மூன்றாவது நபர் லேட் மேரேஜ்… முப்பத்தி எட்டு வயது ஆள்… பட் படிப்பு, வேலை, குடும்பம் எல்லாம் கவருவதாகவே இருந்தது.


ஒருவேளை ஹரியின் சுயம்பு வந்திருந்தால், தேன்மொழி அவனை நினைவுக்குக் கொண்டு. வந்திருப்பாளோ என்னவோ!


தேன்மொழிக்கு அதற்கு மேல் அமர முடியவில்லை. தூக்கம் சுழற்றியது. சிறிது நேரம் தூங்கி எழ நினைத்துப் படுக்கையறைக்குள் சென்றாள். தூங்கும் போது ஏஸியை மிதமாக வைத்துவிட்டுப் படுக்க…


அவள் அணைத்துக் கொண்டு உறங்கியது, சூர்யாவும் அவளும் உபயோகித்தத் தலையணை. மேலும் அவளைக் கதகதப்பாக்கிக் கொண்டிருந்த போர்வை அவர்கள் இருவரும் ஹனிமூன் சென்ற போது வாங்கியது!


நன்றாகக் தூங்கி எழுந்தாள். அப்புறமே ரிஷிக்குச் சொல்லவில்லை என்பது நினைவுக்கு வந்தது. தான் வந்து சேர்ந்ததைத் தெரியப்படுத்தவும் நன்றி சொல்லியும் அவனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி வைத்தாள்.


மறுநாள் அலுவலகம் செல்லும் நிமித்தம் தயார்படுத்திக் கொள்ள விழைந்தாள். சில பொருட்கள் வாங்க வேண்டியதாக இருந்தது. அவற்றை வாங்கச் செல்லும் சாக்கில் காற்றாட நடந்துவிட்டு வரலாம் என்று நினைத்துத் தயாராகிக் கொண்டு கீழே வந்தாள்.


ஒரு ப்ளாக் கடந்திருப்பாள். அப்போது, “ஹாய் மொழி!” என்று ஒரு குரல் ஒலித்தது. திரும்பிப் பார்த்த தேன்மொழியின் முன்னே விரிந்த புன்னகையுடன் கபில் நின்றிருந்தான். அவனுடன் லுல்லாவும் இருந்தான்.


தொடர்ந்து மூன்றாவது வாரமாகக் கடலூருக்கு வந்திருந்தான் ஹரி கிருஷ்ணன். எப்போதும் இப்படித் தொடர்ந்து வர மாட்டான். தைப்பொங்கலுக்கு முன்பும் வந்திருந்தான். பொங்கல் விடுமுறை என்று இரண்டு நாட்கள் வந்து தங்கிச் சென்றான்.


பொங்கல் சமயம் அவன் வந்திருந்த போது தான் வீட்டில் பெரிய வாக்குவாதம் நடந்தது. பானுமதி அவனுக்கு வேறு பெண் தான் பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்.


ஹரி தேன்மொழியை மணம் முடிக்கக் கூடாது என்று ஆடித் தீர்த்துவிட்டார்.


“ஒரு விதவைக்கு வாழ்க்கை கொடுக்கணும்னு உனக்கு என்ன கிறுக்குப் பிடிச்சி ஆட்டுது ஹரி?”


“அம்… மா!” அதிர்ச்சியில் ஹரி தன்னுடைய குரலை உயர்த்திவிட, அது பிடிக்காதவராய் முகத்தைக் கடுமையாக்கினார் பானுமதி.


“என்னடா நொம்மா? அவளை விதவைன்னு சொன்னா, உனக்கு ஏன் பதறுது? நானென்ன இல்லாததையா சொல்லிட்டேன்?” அவருக்கு அவ்வளவு கோபம்!


பானுமதிக்கு மகன் முட்டாள்தனமாகப் பேசுவதாகப்பட்டது. தனக்கு இருப்பது ஒரே பிள்ளை. அவன் கல்யாணத்தைப் பற்றி எத்தனையோ எதிர்பார்ப்புகளை வைத்திருப்பவருக்கு, ஒரு விதவையைத் தன் மருமகளாக நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. வெறுத்து வந்தது.


இப்பேச்சே ஜீரணிக்க முடியாததாக இருக்கும் போது, அவளை நேரில் காணும் போது முகத்தை எப்படிச் சாதாரணமாக வைத்துக் கொள்வது? தன்னால் இயலுமா? கண்டிப்பாக விருப்பமின்மையைக் காட்டி விடுவார் என்றே அவருக்குத் தோன்றியது.


“என்னம்மா இப்படிப் பேசுறீங்க? அந்த மாதிரி வாழ்க்கை கொடுக்கணும்னு நினைச்சி நான் தேன்மொழியைக் கல்யாணம் செய்ய நினைக்கலைன்னு உங்களுக்குத் தெரியும்!” கண்டனத்துடன் ஆரம்பித்து அழுத்தமான குரலில் முடித்தான்.


“நீ எதுக்கு அவளை முடிவு பண்ணியோ… எனக்கு அதைப் பத்தி இப்ப கவலையில்லை. என் மகனுக்கு இப்படிப்பட்ட ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ண எனக்கு இஷ்டமில்லை!”


“இப்படிப்பட்ட பொண்ணுன்னா? எனக்கு நீங்க எதை முக்கியத்துவம் கொடுத்துப் பேசுறீங்கன்னு புரியலை. தேன்மொழி எப்படிப்பட்டவள்னு சொல்ல வர்றீங்க? உங்களுக்கு அவங்களை இந்த பயோடேட்டா அளவு தான் தெரியும். அதை வச்சு என்ன முடிவு பண்ணுவீங்க?”


“ஹரி நான் அவள் குணத்தைப் பற்றியா பேசிட்டு இருக்கேன்? நான் சொல்றது புரியாத மாதிரி, இதென்ன எதிர் கேள்வி?”


“இன்னைக்கி தான் நல்லாப் புரிஞ்சது. நீங்களா இப்படி? என் அம்மா இப்படியெல்லாம் பேசுவாங்களான்னு திகைச்சுப் போயிருக்கேன். ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணை இந்தளவு இறங்கி அலச முடியும்ங்கிறதும் புரியுது. ஏன்மா?”


“டேய் நீ என் மனசைப் பற்றி யோசிக்காம இப்பவே அந்தப் பொண்ணுக்காக மட்டும் பார்க்கிற…”


அழுக ஆரம்பித்தவரைக் காணச் சகிக்கவில்லை ஹரிக்கு.
 
  • Love
Reactions: Shanbagavalli

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,951
2,683
113
“நான் பொதுவா பேசுறேன் மா. சரி விடுங்க. இப்ப இதைப் பற்றிப் பேச வேண்டாம். நீங்க நான் என்ன சொல்ல வர்றேங்கிறதை அப்புறம் பொறுமையா யோசிச்சுப் பாருங்க. அடுத்த வாரம் வர்றப்ப முடிவு பண்ணிக்கலாம்.” என்று சொல்லிச் சென்றுவிட்டான்.


என்ன படித்து… எப்படிப்பட்ட வேலை செய்தும்… என்ன செய்ய? இந்த மாதிரி ஒரு மனப்போக்கா? பரந்த மனம் சில விசயங்களில் சுயநலமாகச் சிந்திப்பது ஏன்?


ஹரி மனம் வருந்தினான்.


கோபால கிருஷ்ணனும் யோசனையில் இருந்தார். மகனுக்கு ஆதரவாகப் பேசவுமில்லை. மறுக்கவுமில்லை. மனைவியின் பேச்சை எப்பவும் கண்டிப்பது போன்று அம்முறை கண்டிக்கவும் இல்லை.


அதிலேயே ஹரிக்குப் புரிந்து போனது… தான் நிறையப் போராட வேண்டும் என்று!


அதனால், பிறகு மேட்ரிமோனியல் சைட்டில் நிதானமாகத் தேன்மொழியின் குறிப்புகளை வாசித்தும்… ஹரி அவர்களை அங்கிருந்து தொடர்பு கொள்ளவில்லை. சற்று நிதானித்தான்.


இதோ இன்று ஞாயிறு விடுமுறை… ஆன் கால் டியூட்டி இல்லை என்று சொல்லி வந்திருந்தான்.


அவன் இன்றும் கண்டிப்பாக வருவான் என்று தெரிந்தோ என்னவோ நண்டு மசால், பூரி, இட்லி, பூண்டு சாம்பார் என‍ மகனுக்காகப் பார்த்துப் பார்த்துச் சமைத்து வைத்திருந்தார் பானுமதி.


இவன் காரின் சத்தம் கேட்டதும் மாவைத் தேய்த்து, சுட சுட பூரிகளைப் போட்டுக் கொண்டிருந்தவரை, சமையல்கட்டின் நிலைப்படியில் நின்று கூர்ந்து பார்க்க, பானுமதிக்கு மகனின் பார்வை பட்டாலும் கண்டு கொள்ளாமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.


ஹரிக்கு அந்த நேரம் கோபம் வந்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டான். ஒன்றும் பேசாமல் காலை உணவை உண்டுவிட்டுப் பின் பக்கம் போய்விட்டான்.


பழைய பூர்வீக வீடு அவ்வீடு. கோபாலகிருஷ்ணனின் தந்தையே அந்த வீட்டில் இளம் பருவத்திலிருந்து வாழ்ந்திருந்தார்.


கோபாலகிருஷ்ணன் அங்குப் பிறந்து வளர்ந்தவர். அவரும் அவரின் அக்கா பிரபா, தங்கை சியாமளா மற்றும் கவிதா என அனைவரும் விளையாட்டு போல் வைத்திருந்த செடிகள், தின்று போட்ட கொட்டைகள் என நிழல் தரும் மரங்களுடன் பழம் கொடுக்கும் மரங்களும் பின் பக்கம் அடர்ந்திருந்தன.


சில மரங்கள் பட்டுப் போனதில் அவ்வப்போது அவற்றை அகற்றி வேறு செடிகளை நட்டு வைத்திருந்தனர். அவை வளர்ந்து இப்போது இளம் பருவ மரங்களாகி இருந்தன.


அம்மரங்களின் நிழலில் உட்கார்ந்திருந்தவனின் பார்வை இயற்கை காட்சிகளை வெறித்துக் கொண்டிருந்தது.


சிரிப்பதைப் போல் பிளந்திருந்த மாதுளம் பழம் ஒன்றை அணில்பிள்ளைகள் இரண்டு ஜோடியாகப் பற்றப் பார்த்தன. ஒன்றோடு ஒன்று முட்டிப் பின் மீண்டும் கிளைகளில் தாவி, ரோஸ் நிற முத்துக்களைச் சுவைக்க, ஹரிக்கு அழகானதொரு முறுவல் தோன்றியது.


அதே நேரம் அவன் தோளில் ஒரு கரம் படிந்தது! 
  • Love
Reactions: Shanbagavalli