அத்தியாயம் - 7

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,546
1,114
113
அத்தியாயம் –7

நண்பர்களுக்குள் நடந்த வாக்குவாதத்திற்குப் பிறகு, நால்வரும் மன வருத்தத்துடனே திருநெல்வேலி நிகழ்ச்சிக்கு கிளம்பிச் சென்றனர்.

பிரச்சனைக்குக் காரணமானவளோ மற்றவர்களின் உணர்வுகளைப் பற்றிக் கவலைக் கொள்ளாமல் வழக்கமான தன் பணிகளை மேற்கொண்டிருந்தாள்.

நிரஞ்சனும், அன்றைய ஏமாற்றத்திற்குப் பிறகு சற்று சோர்வாகவே சுற்றிக் கொண்டிருந்தான்.இந்த நான்கு வருடமாக இது போன்ற பல ஏமாற்றங்களைச் சந்தித்திருந்தாலும், அன்று ஏனோ அவனது எதிர்பார்ப்பு பொய்த்து போனதை தாங்கமுடியாமல் போனது.அதன் விளைவாக அவன் மனம் சோர்வுற தொடங்கியது. ‘இன்னும் எத்தனை நாட்களுக்கு மனைவியுடனான தனிமைக்காக ஏங்க வேண்டியிருக்கும்!’ என்கிற எண்ணம் எழத் தொடங்கியிருந்தது.

நிரஞ்சனின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்த ரேணுவுக்கு அவனது நிலை புலப்பட்டது. தன்னை மணந்ததால் தானே அவனும் தன் உணர்வுகளுக்கு வடிகால் இல்லாமல் தவிக்கிறான் என்று எண்ணி குற்ற உணர்ச்சியில் உழன்றாள்.

ரேணுவின் முகம் வாடியிருப்பதைக் கவனித்த நித்தியோ, அன்றைய மோசமான நிகழ்வுகளை எண்ணி மனம் வருந்துகிறாள் என்று வழக்கம் போலத் தவறாகக் கணித்தாள். அதற்காக அவளை வெளியில் அழைத்துச் சென்று அவளது மனநிலையை மாற்ற விரும்பினாள்.

அலுவலகத்துக் கிளம்பிக் கொண்டே “அக்கா! இன்னைக்குச் சாயங்காலம் பீச்சுக்கு போகலாமா? உனக்கு ரொம்பப் பிடிக்குமே” என்றாள்.

அப்போது அறையை விட்டு வெளியில் வந்த நிரஞ்சனின் கால்கள் ஒரு நிமிடம் தயங்கி பின் தன் வழியே சென்றது. அதைக் கண்ட ரேணுவின் மனதில் தங்கையிடம் பேசியே ஆக வேண்டும் என்கிற எண்ணம் எழ “சரி நித்தி! போகலாம்” என்றாள்.

நிரஞ்சனின் வரவைக் கண்டதும் அவனைச் சீண்டிப் பார்க்கும் எண்ணம் எழ “அக்கா! பீச்சுக்கு போயிட்டு அப்படியே ஹோட்டலில் சாப்பிட்டிட்டு வரலாம். நீ இன்னைக்கு யாருக்கும் சமைக்க வேண்டாம்” என்றாள் நக்கலாக.

வாசல் கதவருகே சென்று கொண்டிருந்த நிரஞ்சனின் காதில் விழ...அவனது இதழில் விரக்திப் புன்னகை வந்து போனது. இவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த ரேணுவுக்கோ மனம் அலைப்பாய்ந்தது. அவனது மனம் மெல்ல விரக்தி நிலையை அடைந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டாள். தங்கையோ எதையும் புரிந்து கொள்ளாமல் மேலும் மேலும் அவனை புண்படுத்திக் கொண்டிருக்கிறாளே என்று எண்ணி மனம் வருந்தினாள். இவற்றுக்கெல்லாம் இன்றோடு முடிவு கட்டிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

அக்காவின் முன்னே கையை முன்னும் பின்னும் ஆட்டி “அக்கா! எனக்குக் கேப் வந்தாச்சு நான் கிளம்புறேன். ஈவினிங் ரெடியா இரு!” என்று கூறி சென்றாள்.

கேபிள் ஏறி பயணிக்கும் போது அக்காவை சுற்றி சுற்றியே சுழன்றது. ‘அந்த ஆள் என்னவோ சொல்லி படுத்தியிருக்கான். அதுதான் அக்கா முகம் வாடி கிடக்கு. இன்னைக்குச் சரி பண்ணியே ஆகணும்’ என்று எண்ணி வெளியே பார்த்தவளுக்கு அங்கே போய்க் கொண்டிருந்த இசைக்குழுவின் வண்டியை பார்த்ததும் அன்றைய நாளின் நினைவுகள் வந்து போனது.

‘எப்படி மிரட்டினான்? மரியாதையைப் பற்றி எனக்குக் கிளாஸ் எடுத்தான். படிக்காத முட்டாள்! இந்த வேலை பார்க்கும் போதே இத்தனை திமிரு. இன்னும் நல்ல வேலை பார்த்தா என்ன ஆட்டம் ஆடுவான்” என்று விஸ்வாவைப் பற்றி மோசமாக எண்ணிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

அவளது எண்ணங்கள் இப்படி வேறு பாதையில் பயணித்தாலும், அவ்வப்போது அவனது உருவம் கண் முன்னே வந்து வேறு செய்தியை கூறிக் கொண்டிருந்தது.

அன்று அவன் பாடிய பாடலும் அவன் மனதை எடுத்துரைக்க, அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனதினுள் பலமாக வசை பாடிக் கொண்டிருந்தாள்.

அலுவலகத்திற்கு வந்த பிறகும் ஒருவித மந்த நிலையிலேயே சுற்றிக் கொண்டிருந்தாள். ஏனோ விஸ்வாவின் முகம் அவள் மனதை விட்டு அகல மறுத்தது.

மதிய உணவு வேளையில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாகச் சாப்பிட அமர, அவளது குழுவில் இருந்தவர்கள் தங்களது தோழியின் திருமண வரவேற்பை பற்றிப் பேச, இசைக்குழுவை பற்றித் திரும்பியது பேச்சு. பெண்கள் அனைவரும் விஸ்வாவின் ஆளுமையான குரலையும், அவன் பாடிய பாடலையும் பற்றிப் பாராட்டி பேசப் பேச நித்யாவிற்குக் கடுங்கோபம் எழுந்தது.

“என்ன பிரெண்ட்ஸ் இது! ஆப்டர் ஆல் அவன் ஒரு பாடகன். அவனைப் போய் இப்படிப் புகழறீங்க? அப்படியாவது பெரிய அளவில் வளர்ந்த பாடகனா இருந்தா கூடப் பரவாயில்லை. இவன் கல்யாண வீட்டிலும், கோவிலிலும் பாடுகிறவன். அவனைப் போய்...” என்று இழுத்தாள்.

அவள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் ‘என்ன இவள் இப்படிப் பேசுகிறாளே?’ என்கிற எண்ணமே எழுந்தது.

“நிறுத்து நித்தி! அதென்ன ஆப்டர் ஆல் பாடகன்? நீ பேசுகிற விதமே தப்பாயிருக்கு. நீயும், நானும் படிச்சியிருக்கிற படிப்பு யார் வேணா படிக்கலாம். ஆனால், இந்த மாதிரி கலைகள் எல்லாம் கடவுள் கொடுக்கிற வரம். முதலில் மனிதனை மதிக்கக் கத்துக்கோ நித்தி” என்றாள் ரம்யா ஆத்திரமாக.

அவளது கோபத்தைக் கண்டு அதிர்ந்து போன நித்தி “ஹே! இதென்ன எவனோ ஒருவனுக்காக என் மேல கோபப்படுற ரம்ஸ்”.

அவள் மீதிருந்த கோபம் குறையாமல் “உன்னோட சில நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்கல நித்தி. யாராக இருந்தாலும் மரியாதை கொடுத்து பேசு. நீ இப்படிப் பேசுவதைப் பார்க்கிறவங்க உன் அக்காவை தான் குறை சொல்வாங்க” என்று அவளது வீக் பாயிண்டில் அடித்தாள்.

சுற்றியிருந்த அனைவரும் ரம்யாவின் பேச்சை ஆதரிப்பதை போல அமைதியாக நித்தியை பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர். தன்னை அவள் இப்படிக் குறை சொல்வாள் என்று எதிர்பார்க்காத நித்யா, அனைவரையும் கண்கள் கலங்க ஒரு பார்வை பார்த்து விட்டு பட்டென்று எழுந்து ரெஸ்ட் ரூமிற்கு ஓடினாள்.

அவள் அழுகையுடன் ஓடியதை கண்டு ஒரு சிலர் ரம்யாவை கடிந்து கொள்ள..”அழட்டும்! எப்போ பாரு எல்லோரையும் மதிக்காம ஒரு பேச்சுப் பேசுறது. அவளோட பிரெண்டா அவளுக்கு நான் நல்லது தான் சொல்லியிருக்கேன்” என்று விட்டு தனது இருக்கைக்குச் சென்றாள்.

ரெஸ்ட்ரூம் சென்றவளோ அனைவரின் முன்பும் ரம்யா தன்னை அவமானபடுத்தி விட்டதாக எண்ணி ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். முகத்தை நீரை அடித்து ஊற்றி கழுவி விட்டு வெளியே வந்தவள் மாலை வரை ரம்யாவின் புறம் திரும்பவேயில்லை. ரம்யாவுமே அவளைக் கண்டுகொள்ளவில்லை.

அக்காவை பீச்சிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற ஞாபகம் வந்ததும் தனது பணிகளைத் துரித கதியில் முடித்து விட்டு பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். அப்போது ரம்யா

அவளைப் பார்க்க..நித்தியோ வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றாள். அதைக் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டவள் ‘இனி, யாரையும் சட்டென்று பேசும் முன் நான் சொன்னது உனக்கு ஞாபகம் வரும் நித்தி. அதுக்குத் தான் அப்படி நடந்துகிட்டேன். நல்ல தோழி தன்னோட தோழமை கிட்ட இருக்கிற தவறான செயல்களைச் சொல்லி திருத்தணும். அதைத் தான் உனக்கு இப்போ நான் செஞ்சேன். உன் கிட்ட தனியா நான் சொல்லியிருந்தா கண்டிப்பா நீ அதை மனதில் வச்சுக்க மாட்ட. ஆனால், எல்லோர் முன்னாடியும் பட்ட அவமானத்தையும், அதற்கான காரணத்தையும் நீ மறக்க மாட்ட. இப்போ என் மேல கோபமாக இருந்தாலும் என்றாவது ஒரு நாள் என்னைப் புரிஞ்சுப்ப’ என்று நினைத்துக் கொண்டாள்.கும்பகோணம்...

சாய்வு நாற்காலியில் நன்றாகச் சாய்ந்தமர்ந்த சிவகாமி பாட்டி “சுமதி! ரஞ்சிதத்துக்குப் போனை போடு! கையோட பேசிடுவோம்” என்றார்.

“இப்போவே பேசிடலாமா அம்மா?” என்று இழுத்தார் சுமதி.

மகளை நக்கலாகப் பார்த்து “ஏன் பேரன் சாமியாரா போன பிறகு பேசிக்கலாம்னு சொல்றியா? நல்லா நாலு வருஷமா என் பேரன் வாழ்க்கையைத் தரிசாக விட்டுட்டு இப்பவும் என்ன இழுவை? போனை போடு!” என்று அதட்டினார்.

அம்மாவின் அதட்டலில் உடனே ரஞ்சிதத்தை அழைத்தார் .

“ஹலோ ரஞ்சிதம்! நான் சுமதி பேசுறேன். எல்லோரும் எப்படி இருக்கீங்க?”

“நல்லாயிருக்கேன் அக்கா. வீட்டில் எல்லோரூம் எப்படி இருக்காங்க?

“நல்லாயிருக்கோம்-மா.அம்மா இங்கே வந்துருக்காங்க. உன் கிட்ட பேசணும்-னு சொன்னாங்க..ஒரு நிமிஷம் இரு.அம்மா கிட்ட போனை தரேன்” என்று கார்ட்லெஸ் போனை எடுத்து சென்று சிவகாமியிடம் கொடுத்தார்.

காதை இழுத்துப் பிடித்துக் கொண்டு “என்ன ரஞ்சிதம் சௌக்கியமா? அன்பு எப்படி இருக்கான்?” என்றார்.

“ரெண்டு பேரும் நல்லாயிருக்கோம் சித்தி.”

“ம்ம்..பேரன் எப்படி இருக்கான்? அவன் தொழிலு நல்லா போகுதா?”

“நல்லாயிருக்கான்..நிறைய இடங்களில் கூப்பிடுறாங்க. இப்போ கூடத் திருநெல்வேலிக்கு போயிருக்கான்” என்றார் பதவிசாக.

“ஒ...சரி! நான் சுத்தி வளைக்காம விஷயத்துக்கு வரேன். அவனுக்குக் கல்யாணத்துக்குப் பார்க்கிறியா இல்லையா?”

கல்யாண விஷயம் கேட்டதும் மனதில் இருந்த வருத்தம் மேலோங்க “அண்ணன் தான் பொண்ணு தர மாட்டேனுட்டாங்க. வேற இடம் தான் பார்க்கணும்” என்றார் பெருமூச்சுடன்.

“அதுகேண்டி இப்படி அலுத்துக்கிற...உங்க அண்ணனை விட்டா ஊரு உலகத்தில் பொண்ணு வச்சிருக்கிறவனே இல்லையா என்ன? என் பேரனுக்கு என்ன குறை? ராஜா வீட்டு கன்னுகுட்டி மாதிரி இருக்கான்”.

“இல்ல..சித்தி!சொந்தத்தில உள்ளவங்களே அவனோட தொழிலை ஏத்துக்கத் தயாரில்லை. அன்னியத்தில எப்படி ஒத்துப்பாங்கன்னு தான் யோசனையா இருக்கு”.

“இதோ பார்! நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். நிரஞ்சன் பொண்டாட்டியோட தங்கச்சி இருக்கா. அவளுக்குப் பெத்தவங்க இல்லை. என் பேரன் தான் எல்லாம் செய்யணும். எனக்கு நம்ம விசுவுக்குப் பார்க்கலாம்ன்னு தோணுச்சு. நீ என்ன சொல்ற?” என்றார்.

பாட்டி சொன்னதைக் கேட்ட ரஞ்சிததிற்குச் சந்தோஷமாக இருந்தாலும் ஒரு புறம் பயமும் இருந்தது. “பொண்ணு எப்படி சித்தி?” என்றார்.

அதைக் கேட்டு மெல்லிய புன்னகையைச் சிந்திய பாட்டி “நிரஞ்சன் பொண்டாட்டியை பார்த்திருக்க இல்ல. அவ தங்கையும் அவளை மாதிரி தான்” என்றார்.

“அவ ரொம்ப அமைதியான பொண்ணாச்சே.அவளை மாதிரி பொண்ணு கிடைக்கக் கொடுத்து வச்சிருக்கணும். பொண்ணு பேர் என்னம்மா? என்ன படிச்சிருக்கா?”

மகளைப் பார்த்து வெற்றி சிரிப்பு சிரித்து “அவ பேர் நித்யா. கம்யூட்டர் படிப்பு படிச்சிட்டு பெரிய வேலையில இருக்கா. அவ அக்கா மாதிரியே தங்கமான பொண்ணு” என்று புளுகு மூட்டையை அவிழ்த்து வைத்தார்.

அவர் சொல்வதைக் கேட்டுத் தாவங்கட்டையில் கை வைத்து தனது அதிர்ச்சியான முகத்தைச் சிவகாமியிடம் காண்பித்தார்.

ரஞ்சிதாமோ மிகவும் அப்பாவியாக “நல்ல வேலையில் உள்ள பொண்ணு இவனைக் கட்டிக்க ஒத்துக்குவாளா...” என்றார் சந்தேகத்துடன்.

“என்ன ரஞ்சிதம் இப்படிக் கேட்டுட்ட? அவ அக்கா சொன்னா மலையைக் கூடத் தாண்டுவா..அப்புறம் என் பேரனை பத்தி நீயே குறைவா பேசாத. நல்லா வளத்தியா சும்மா காத்தவராயன் மாதிரி இருக்கிறவனைப் பிடிக்காம போய்டுமா என்ன?”

அவர் சொன்னதைக் கேட்ட ரஞ்சிதாமோ ‘என்ன காத்தவராயனா? மகனே நீ இதை மட்டும் கேட்டு இருக்கணும்.உன் பாட்டி உன்னை வர்ணிக்கிறேன் பேருன்னு கலாய்ச்சிட்டு இருக்காங்க’ என்றெண்ணி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார்.

அவரிடமிருந்து பதில் வராததைக் கண்டு “என்ன ரஞ்சிதம் உனக்குச் சம்மதமா? அன்பு வந்தா பேசிட்டு சொல்றியா?”

“எனக்குச் சம்மதம் தான் சித்தி.அவரும் ஒத்துக்குவார்”.

“அப்ப சரி! நாங்க இன்னும் ரெண்டு நாளில் அங்க சென்னைக்கு வந்துடுவோம். மீதி விஷயத்தை அங்கே வச்சு பேசிக்கலாம்”.

“சரிங்க சித்தி.” என்றவரின் குரல் துள்ளலாக ஒலித்தது.

போனை அனைத்ததும் “ஏன் அம்மா நம்ம பிள்ளை வாழ்க்கைக்காக இன்னொரு பிள்ளையோட வாழ்க்கையில் விளையாடுறோமே தப்பில்லையா?” என்றார் சுமதி தவிப்புடன்.

யோசனையுடன் நாற்காலியில் இருந்து எழுந்த சிவகாமி “ஒரு கல்யாணம் பண்ண ஆயிரம் பொய் சொல்லலாம் சுமதி” என்றார் அழுத்தமாக.

அதைக் கேட்டு கடுப்பான சுமதி “அம்மா! அவனும் உங்களுக்குப் பேரன் தான். நீங்க இவளுடைய உண்மையான குணத்தைச் சொல்லாம ஆஹா..ஓஹோ-னு புகழ்ந்து வச்சிருக்கீங்க. பாவம் ரஞ்சிதம்!” என்றார்.

“இங்க பாரு சுமதி! என் பேரனோட குணம் தெரிஞ்சு தான் அவனுக்கு இவளை ஜோடி சேர்க்க நினைக்கிறேன். இவளோட குணத்துக்கு வெளியிடத்தில் கொடுத்தா கண்டிப்பா நல்லாயிருக்க மாட்டா. ஆனால், என் பேரன் இவளை தன் வழிக்குக் கொண்டு வந்துடுவான்” என்றார் ஆணித்தரமாக.

அவர் சொன்னதைக் கேட்டு அதிசயத்துடன் “அதெப்படி-மா அவ்வளவு உறுதியா சொல்றீங்க?”

கூடத்தில் நடந்து கொண்டே லேசான நகைப்புடன் “நீங்க நினைக்கிற அளவுக்கு நித்யா மோசமான பொண்ணு கிடையாது சுமதி. பெத்தவங்க இல்லாததால் தன்னுடைய ஒரே பிடிப்பான அக்காவை தனக்குப் பாதுகாப்பாகவும், அன்பை தரக் கூடியவளாகவும் நினைக்கிறாள். அதனால் தான் நிரஞ்சனை எதிரியா பார்க்கிறா. அதே அன்பும் பாதுக்காப்பும் புருஷன் கிட்ட இருந்து கிடைக்கும் போது எல்லாத்தையும் மறந்திட்டு அவனோட ஒன்றி போயிடுவா” என்றார்.

அவர் சொன்னதை யோசனையுடனே கேட்டுக் கொண்டிருந்த சுமதி “இதெல்லாம் கேட்க நல்லாயிருக்கு. ஆனால், அவ தான் பெரிய படிப்பு படிச்சிருக்கோம், பெரிய வேலையில் இருக்கோம்ன்னு தலைகனத்தோட சுத்திட்டு இருக்காளே. விசுவை கட்டிக்க ஒத்துக்குவாளா?” என்றார்.

மகளின் அருகே வந்தவர் “இப்படியே நடுக் கூடத்தில் நின்னுகிட்டு ஒத்துக்குவாளா, கட்டிக்குவாளான்னு கேட்டுகிட்டே இருந்தா ஒன்னும் நடக்காது. நான் எதுக்கு இருக்கேன். எல்லாத்தையும் சரி பண்றேன். முதல்ல மாப்பிள்ளையை நாளைக்குச் சென்னைக்குப் போறதுக்கு வேண்டிய ஏற்பாடை பண்ண சொல்லு. மீதியை அங்கே போய்ப் பார்த்துக்கலாம்” என்றார் உறுதியுடன்.

கும்பகோணத்தில் தனது வாழ்க்கையின் நிம்மதியை அழிக்கச் சதி நடப்பதை அறியாத விஸ்வா நண்பனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

“சாரி சிவா! அன்னைக்கு இருந்த மன நிலையில் நான் அப்படிப் பேசிட்டேன். மிகப் பெரிய தப்பு தான். அதற்காக இப்படி என்னை ஒதுக்கி வைக்காதே” என்று நெல்லையப்பர் கோவிலின் பிரகாரத்தில் அவன் கைகளைப் பற்றிக் கொண்டிருந்தான்.

சிவாவோ கல் போன்ற முகத்துடன் “இல்ல விசு! பேசிய வார்த்தைகளை மாற்ற முடியாது. அதோட நான் என் நண்பனின் நலன் முக்கியம்னு நினைச்சு பேசிய விஷயம் உனக்குத் தவறா தெரிஞ்சிருக்கு. உன் மேல கோபம் என்பதை விட வருத்தம் தான் அதிகமா இருக்கு. இத்தனை வருஷம் உன் கூடப் பழகிய என்னைப் புரிஞ்சுக்கவே இல்லையே” என்றான் வருத்ததுடன்.

அவன் சொன்னது மனதை தாக்க என்ன செய்வதென்றே புரியாமல் கைகளை உதறி தலையைத் தட்டிக் கொண்டவன் “சரிடா! நான் உன்னைப் புரிஞ்சுக்கவே இல்லை. தப்பு தான் பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடு” என்றான் பாவமாக.

அவர்களுடன் இருந்த சுந்தர்..சிவாவின் தோளில் தட்டி “அவன் தான் இவ்வளவு சொல்றான் இல்ல. இன்னுமுமா உன் கோபத்தை இழுத்து பிடிக்கணும். விட்டுடுடா” என்றான்.

முகத்தில் மகிழ்ச்சி இல்லை என்றாலும் விசு இறங்கி வந்த பிறகு விட்டுக் கொடுக்காமல் இருப்பது தவறென்ன நினைத்து “ம்ம்..சரி” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.

அதைப் பார்த்த சுந்தர் விஸ்வாவிடம் “கொஞ்ச நாள் போகட்டும்-டா. அவன் மனசிலேயும் காயம் இருக்கும் அது ஆறட்டும். பழையபடி எல்லாம் மாறும்” என்றான்.

அதைக் கேட்டு தலையாட்டிவிட்டு “ஏதோ அன்னைக்குக் கல்யாண வீட்டில் பார்க்கும் போது மனசு அந்தப் பெண்ணை நினைச்சுது. ரெண்டு நாள் என்னை அப்படியே விட்டு இருந்தீங்கன்னா சரி ஆகியிருப்பேன். நானென்னவோ சினிமா ஹீரோ மாதிரி அந்தப் பெண்ணைத் தேடி அலைஞ்சு அவ ஆபிஸ் வாசலிலும், வீட்டு வாசலிலும் நிற்க போகிற மாதிரி கற்பனை பண்ணிக்கிட்டு அட்வைஸ் பண்ணுனீங்களேடா...மறுபடியும் அவளா என் கண்ணில் பட்டாளே தவிர நானெங்க போய்த் தேட போறேன் சொல்லுங்க” என்று நண்பர்களைப் பார்த்து கேட்டான்.

அவன் சொல்வதில் இருந்த நியாயம் புரிய சுந்தரும், சிவாவும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

விஸ்வாவும் அவர்களுடன் இணைந்து கொள்ள அவர்களின் சிரிப்புச் சத்தம் கோவில் சுவர்களை மோதி மீண்டது.

கோவில் தூணிலிருந்த ஆஞ்சநேயர் விஸ்வாவை பார்த்து நகைத்துக் கொண்டிருந்தார். ‘மகனே உன்னைப் பார்த்து விதி சிரித்துக் கொண்டிருக்கிறது. இப்போவே நல்லா சிரிச்சுக்கோ. இன்னும் சில நாட்களில் எனக்கு வெண்ணைக்காப்பு, வடைமாலை எல்லாம் உன் கையால்

கிடைக்கப் போகுது.”
 
  • Love
Reactions: Chitra Balaji

Chitra Balaji

Member
Feb 5, 2020
43
27
18
பாட்டி semma ah திட்டம் thittitaanga வசமா maatikita நித்தி... Paavam namba hero...... அவன் friend ah எப்படியோ சமாதானம் pannitaan..... Ava மாமா va romba romba hurt panra... Ava akka pesanum nu நினைச்சி இருக்கா... Super Super maa
 

Ramavaradharajan

New member
Jun 21, 2020
4
4
3
பாட்டி semma ah திட்டம் thittitaanga வசமா maatikita நித்தி... Paavam namba hero...... அவன் friend ah எப்படியோ சமாதானம் pannitaan..... Ava மாமா va romba romba hurt panra... Ava akka pesanum nu நினைச்சி இருக்கா... SuperSuper maa
அளவுக்கு அதிகமான பாசம் கூட விஷம் ஆகும்
 
  • Love
Reactions: Chitra Balaji