Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 6 | SudhaRaviNovels

அத்தியாயம் - 6

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
333
319
63
அத்தியாயம் – 6

அன்று குணா, அர்ஜுன் இருவருமாக ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்திற்கு வந்திருந்தனர். அர்ஜுனின் நண்பர் ஒருவர் இந்த நிறுவனத்தின் முகவரி கொடுத்து சென்று பார்க்கும்படி கூறி இருந்தார்.

கயலுடைய புகைப்படம் மற்றும் அவள் சம்மந்தப்பட்ட விபரங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்திருந்தனர். இவர்கள் தந்த விபரங்களை எல்லாம் சரி பார்த்துக் கொண்டவர்கள் ஒரு பத்து நாளில் சொல்கிறோம் என்று சொல்லி அனுப்பினார்கள்.

வெளியில் வந்த இருவருக்கும் அவர் பேசியதை வைத்து சற்றே நம்பிக்கை பிறந்திருந்தது. ஒரு சிறு துப்பாவது கிடைத்து அவள் இருக்குமிடம் தெரிந்து விட்டாள் போதும் என்று பேசியபடி அருகே இருத்த ஒரு ஹோட்டலுக்கு சென்றனர்.

காப்பி ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தவர்களுக்கு ஆயாசமாக இருந்தது. இந்த மூன்று மாதங்களுக்குள் என்னவெல்லாம் நடந்து விட்டது. சிறுவயதில் பட்ட கஷ்டத்திற்கு படித்து முடித்து மூவருக்கும் வேலை கிடைத்த பின் வாழ்க்கை அத்தனை கொண்டாட்டமாக மாறி இருந்தது.யாரெல்லாம் அவமானப்படுதினார்களோ அவர்கள் எல்லாம் மரியாதையாகப் பார்த்தார்கள்.

இன்றோ எல்லோரும் மீண்டும் கேலியாகவும், பரிதாபமாகவும் பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருகிறார்கள். அதிலும் வீட்டில் வசந்தியின் அராஜகத்தை தாங்கவே முடியவில்லை.
இன்று கூட காலை அர்ஜுன் ஒருபுறம் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருக்க, குணாவும் கடைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். கல்யாணி வழக்கம் போல காலை உணவைத் தயாரித்துக் கொண்டிருக்க, இவளோ பிள்ளையை ஹாலில் கொண்டு வந்து படுக்கப் போட்டுக் கொண்டவள் டிவியை சத்தமாக வைத்துக் கொண்டாள்.

கல்யாணி அவளின் செயலைக் கண்டு கொள்ளாமல் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கிருந்த மூவருக்கும் அத்தனை எரிச்சலாக தான் இருந்தது. ஏதாவது பேசி சண்டையை ஏற்படுத்த வேண்டாம் என்று அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது டிவியில் அந்தப் பாடல் ஒலித்தது.

கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா
இல்ல ஓடிப் போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா? என்று பாடவும் சமையலறைக்குள் வேலை செய்து கொண்டிருந்தவருக்கு ரத்தம் அழுத்தம் ஏற ஆரம்பித்தது.

அறைக்குள் குளித்து தயாராகிக் கொண்டிருந்த குணா வேகமாக ஓடி வந்தான். அர்ஜுனுக்கும் அந்தப் பாடலைக் கேட்டதும் திடுக்கிட்டு அவசரமாக வசந்தியை முறைத்துக் கொண்டே சமயலறைக்குச் சென்றான்.

அதற்குள் குணா “டிவியை ஆப் பண்ணு முதல்ல” என்று கத்தி இருந்தான்.

அவன் கத்தியதில் குழந்தை பயந்து போய் வீல் வீல் என்று அழ ஆரம்பித்தது. அவனுடைய கோப முகத்தைப் பார்த்து எரிச்சலுடன் டிவியை ஆப் செய்யாமலே “இப்போ எதுக்கு கத்துறீங்க? குழந்தை அழறான் பாருங்க” என்று அவளும் சத்தமாகப் பேசினாள்.

அங்கே சமயலறையில் நின்றிருந்த கல்யாணியின் கண்களில் இருந்த கண்ணீர் ஊற்ற, அவரின் உடலில் மெல்லிய நடுக்கம். அன்னையை தோளோடு அணைத்துக் கொண்டவன் “ஒண்ணுமில்லம்மா” என்றான் காதோரம்.

டிவியை ஆப் செய்யாது வார்த்தையாடிக் கொண்டிருந்தவளின் மீது கடுங்கோபம் எழ , அவள் கையிலிருந்த ரிமோட்டை வாங்கி ஆப் செய்து விட்டு சுவற்றை நோக்கி வீசி அடித்திருந்தான்.

“எங்களை எல்லாம் படுத்தனும்னே கிளம்பி வந்தியாடி?”

ரிமோட் தூள் தூளாக உடைந்து போயிருக்க, அழும் குழந்தையை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டவள் “உங்க வீட்டுப் பொண்ணு ஓடிப் போனதுக்கு நானும் என் குழந்தையும் என்ன பண்ணினோம். ஆண்டவா இந்த கொடுமையிலிருந்து எங்களை காப்பாற்றக் கூடாதா?” என்று புலம்பினாள்.

“உனக்கு அடுத்தவங்க உணர்வுகளை மதிக்கவே தெரியாதா? அம்மா இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா அதிலிருந்து வெளியே வராங்க. மறுபடியும்..ம்ச்..” என்றவன் தலையில் அடித்துக் கொண்டான்.

அவ்வளவு தான் ஓவென்று சப்தமாக அழத் தொடங்கியவள் “எப்போ பாரு அம்மா தங்கச்சி இவங்களை மட்டும் தான் நினைப்பீங்க. நானும் என் குழந்தையும் இந்த வீட்டில் எதுக்கு இருக்கோம்?”

குணாவிற்கு என்னடா இது சோதனையாக இருக்கிறதே என்று எண்ணியபடி “சீ! சும்மா டிராமா போடாதே. குழந்தை அழறான். அவனை கவனி” என்று சத்தம் போட்டான்.

அதற்குள் சமயலறையில் நின்றிருந்த கல்யாணிக்கு மயக்கம் வரும் போல இருக்க, அவரை கைத்தாங்கலாக பிடித்து அழைத்துக் கொண்டு வந்து டைனிங்கில் அமர வைத்தான். கண்ணீருடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்த வசந்தி “டிராமான்னா என்னன்னு இதோ உங்கம்மாவை கேளுங்க. என்னை பேச்சு வாங்க வைக்கனும்ன்னே ஒரு நடிப்பு” என்று விட்டாள்.

அவள் சொல்லியதைக் கேட்டு குணாவிற்கு அத்தனை கோபம். பட்டென்று பாய்ந்து அவளது கன்னத்தில் அறைந்திருந்தான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனுக்கு நன்றாக வேண்டும் என்று தோன்றியது. கல்யாணிக்கோ எதெல்லாம் தன் குடும்பத்தில் நடக்க கூடாது என்று நினைத்தாரோ அதெல்லாம் நடந்து கொண்டிருப்பதை எண்ணி மனம் வலித்தது.
 
  • Like
Reactions: Kothai suresh

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
333
319
63
மைத்துனரின் முன்பும், மாமியாரின் முன்பு அடித்திருந்தவனைப் பார்த்து ஆங்காரம் எழ, ஓவென்று சப்தம் போட்டு “எல்லோர் முன்னாடியும் என்னை அடிக்கிற இல்ல? இதுக்கு தான் என்னை கூட்டிட்டு வந்தியா?” என்று கத்தினாள்.

இவர்களின் சண்டையில் அவள் கையிலிருந்த குழந்தை அழுது கரைந்தது. அதை கவனித்த குணா அவளிடமிருந்து குழந்தையைப் பறித்து தம்பியிடம் கொடுத்து “டேய்! பாலை கரைச்சுக் கொடுடா” என்றவன் வசந்தியின் கையைப் பற்றி அறைக்குள் இழுத்துச் சென்றான்.

அழும் குழந்தையை கையில் வாங்கியவன் அதை ஆற்றுப்படுத்தி அன்னையின் கையில் கொடுத்துவிட்டு பாலைக் கரைத்து எடுத்து வந்தான். கல்யாணி அதை வாங்கி பேரனுக்குக் கொடுக்க, பசியில் இருந்த குழந்தை வயிறு முட்டக் குடித்துவிட்டு உறங்கி விட்டது.

“குழந்தை பசியை விட நம்மள அழ வைப்பதில் தான் இருக்கா” என்று முனகிக் கொண்டே குழந்தையை தூக்கிச் சென்று தனது அறையில் படுக்க வைத்தார்.

அர்ஜுனுக்கும் நேரமாகி விட, காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டான். அதுவரை குணா அறையை விட்டு வெளியே வரவே இல்லை.

காலை நடந்தவைகளை எண்ணியபடியே அமர்ந்திருந்தவர்களுக்கு அப்போது சிரிப்பு தான் வந்தது.

“என்ன குணா கதவை சாத்திட்டு காலில் விழுந்திட்டியா காலையில?”

தம்பியை முறைத்தவன் “நான் பாட்டுக்கு நிம்மதியா இருந்தேன். கல்யாணம்னு பண்ணி வச்சு சாவடிக்கிறீங்கடா”.

மெல்லிய சிரிப்புடன் “உனக்காவது கல்யாணத்துக்கு அப்புறம் தான் நடக்குது. எனக்கு இப்போவே ஆரம்பிச்சாச்சு”.

அவனுடைய பேச்சில் கவலையாகிப் போனவன் “நான் வேணா சுடர் கிட்ட பேசிப் பார்க்கவா?”

மறுப்பாக தலையசைத்தவன் “பேயாட்டம் ஆடுவா. அண்ணி சுயநலவாதின்னா இவ அடுத்தவங்களுக்காக தான் வாழ்வே செய்வா. என்னை பற்றி மட்டும் நினைக்கவே மாட்டா” என்றான் சற்றே கசந்த குரலில்.

“அம்மா வசந்தியைப் பேசியதில் தப்பில்லை அர்ஜுன். ஆனா சுடரை பேசியது ரொம்பவே ஓவர் தான். அவ்வளவுக்குப் பிறகும் உன்னிடம் பேசிக் கொண்டிருப்பதே பெரிய விஷயம் தான்”.

“அதுவேணா உண்மை தான். எல்லோருமே அவங்க அவங்க தரப்பு ஞாயத்தைப் பார்க்கிறாங்களே தவிர, நம்மள யாருமே நினைச்சுப் பார்க்கல”.

அர்ஜுனின் கரங்களைத் தட்டிக் கொடுத்தவன் “எல்லாம் சரியாகிடும்-டா. இவங்க எப்படியும் கயலை கண்டுபிடிச்சு கொடுத்திடுவாங்கன்னு நினைக்கிறேன்”.

“அண்ணி கிட்ட சொல்லாதே. நாம இவங்க மூலியமா தேடுவதை. இவங்களையும் தடுத்து நிறுத்த உன் மாமியார் எல்லா வேலையும் பார்க்கும்”,

அவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரம் அர்ஜுனின் மொபைல் அடிக்க, அதில் சுடரின் எண் தெரிந்ததும் அதை குணாவிடம் காண்பித்தான்.

அதைப் பார்த்ததும் “இப்போ தானேடா அலுத்துகிட்ட. எனக்கென்னவோ ரெண்டு பேரும் களவாணிகளா இருக்கீங்கன்னு தோணுது. அவ பேச மாட்டேன்றான்னு சொன்ன தானே?” என்று சந்தேகமாக கேட்டான்.

“ராட்சசி! நம்மள கண்காணித்துக் கொண்டே இருக்கா குணா. நாம இங்கே வந்தது அவளுக்கு தெரிஞ்சிருக்கும்”.

மெல்லிய சிரிப்புடன் “சரிடா நான் கிளம்புறேன். நீ பேசிட்டு கிளம்பு” என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்.

போனை ஆன் செய்து காதில் வைத்தவன் “என்னை வேவு பார்க்க ஆள் வச்சிருக்கியாடி? கரெக்ட்டா கூப்பிடுற”.

“அந்த அளவுக்கு எல்லாம் நீங்க வொர்த் இல்ல. அப்புறம் இந்த வாடி போடின்னா மூஞ்சி முகரை எல்லாம் பேத்து விட்டுடுவேன்”.

“அப்படித்தாண்டி சொல்வேன்டி என் டால்டா டப்பா. அடிக்காவவது வாடி” என்று விட்டான்.

அந்தப் பக்கம் ஆழ்ந்த மௌனம்.

“எதுக்கு கூப்பிட்ட?”

“இவங்க கயலை கண்டுபிடிச்சு தந்துடுவாங்களா?”

“ம்ம்...கண்டுபிடிக்கணும். உன் கிட்ட பேசணும் சுடரு இங்கே வரியா?” என்றான் சற்றே கலங்கிய குரலில்.

“ம்ம்..சரி அங்கே பக்கத்துல இருக்க பார்க்கில் வெயிட் பண்ணுங்க வரேன்”.

ஹோட்டலில் இருந்து வெளியே வந்தவன் அருகே இருந்த பார்க்கிற்கு நடக்க ஆரம்பித்தான். இது தான் சுடர். அவனுக்காக யோசிப்பாள்.

அரை மணி நேரத்தில் அவன் இருந்த இடத்திற்கு வந்து விட்டிருந்தாள். அருகே வந்தமர்ந்தவளை பார்த்தவனின் கண்களில் அத்தனை காதல்.

“என்னை அவ்வளவு பிடிக்குமாடி. இப்படி ஓடி வந்திருக்க?” என்றான் குறும்பு சிரிப்போடு.

அவன் தோளில் லேசாக ஒரு அடியைப் போட்டவள் “என்னாச்சு ரொம்ப டல்லா தெரியுறீங்க?”


அருகே இருந்தவளின் கரங்களை தன் கரங்களுக்குள் பொதித்துக் கொண்டவன் “முடியலடி! நானும் மூணு மாசமா சொல்ல முடியாத வேதனையில் தவிக்கிறேன். குணா கிட்ட பேச முடியாது. அம்மாட்ட சுத்தமா முடியாது. கயல் எனக்கு பொண்ணு மாதிரி”.
 
  • Like
Reactions: Kothai suresh

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
333
319
63
“தெரியுமே எனக்கு”.

“அம்மா வேலைக்குப் போன பிறகு அவளை பார்த்துகிட்டது முழுக்க நான் தான். அண்ணன் கிட்ட அவளுக்கு அவ்வளோ நெருக்கம் கிடையாது. அவளோட எல்லாமே என்னிடம் தான் சொல்வாள். அவ்வளவு ஏன் பெரிய பெண் ஆன போது கூட என்னிடம் தான் சொன்னா. அவள் என்னோட முதல் குழந்தை சுடரு”.

அவனது கைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டவள் “நல்லா இருப்பா அர்ஜுன். அவளுக்கு கெடுதல் எதுவும் நடந்திருக்காது. சீக்கிரம் நம்ம கிட்ட வந்துடுவா”.

பெருமூச்சுடன் “வரணும்! உங்க அக்கா என்னைக்கு எங்க வீட்டுக்கு வந்தாங்களோ அன்னையிலிருந்து கயல் அவங்க கிட்ட தான் நெருக்கமானா. நானும் பொம்பள பிள்ளை அப்படி இருப்பது நல்லதுன்னு நினைச்சேன்”.

“அதென்ன எங்க அக்கா. உங்களுக்கு அண்ணி இல்லையா?”

“அண்ணி என்கிற ஸ்தானம் அம்மாவுக்கு நிகரானது. அந்த இடத்தை உங்க அக்கா எப்போவோ இழந்துட்டாங்க”.

சுடரின் முகம் சுருங்கிப் போக “ம்ம்..” என்றாள்.

“அவங்க உன்னை மாதிரி இல்லடி. அவள் வாழ்க்கையை அழித்ததில் அவங்களுக்கு தான் முக்கிய பங்கே இருக்கு”.

“எனக்கு என்ன சொல்றதேன்னு தெரியல அர்ஜுன். மனசெல்லாம் வலிக்குது. சந்தோஷமா இருந்த உங்க குடும்பத்தை நிலைகுலைய வச்சிட்டோம்” என்றாள் கண்ணீருடன்.

அவளை தோளோடு அணைத்துக் கொண்டவன் “நீ உன் மேல பழியை போட்டுக்காதடி. இதுல நீ எங்கேயுமே வரல”.

“சொன்னாங்களே உங்க அம்மா என்னையும் தானே சொன்னாங்க. அந்த வார்த்தைகளை மறக்க முடியாம கிடந்தது அல்லாடுறேன்”.

அவளை முறைத்தவன் “எங்கம்மாவை விடுடி! என்னை கட்டிக்கப் போறியா எங்கம்மாவை கட்டிக்கப் போறியா?”

“கனவு காண வேண்டாம் அர்ஜுன். நான் உங்களை மட்டுமில்ல உங்க குடும்பத்தையே என்னுடயதாக்கிக் கொண்டு தான் வரணும். ஆனால் இப்போதிருக்கும் சூழ்நிலையில் இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை”.

“உங்க அக்காவும் உன்னை மாதிரி இருந்திருந்தா எல்லாமே நல்லதா நடந்திருக்கும். எனக்கு யாரிடமும் சொல்லிக்க முடியலடி. மனசெல்லாம் கயலை நினைத்தே பயமா இருக்கு. எங்கே போய் எப்படி கண்டுபிடிக்க? ஏதாவது செய்து அவளை அழைத்து வந்துவிட மாட்டோமான்னு இருக்கு. அவளுடைய நிலை என்னன்னு தெரியாம உள்ளுக்குள் உதறலாகவும் இருக்கு”.

“கயல் அப்படி எல்லாம் யாரையோ நம்பி போகிற ஆள் இல்ல. எங்கக்கா சொல்வதை என்னால நம்ப முடியல. ஆனா அதே சமயம் அந்தாளும் போயிருக்கவும் தான் சந்தேகமா இருக்கு அர்ஜுன். ரெண்டு பேரில் யாரையாவது ஒருத்தரை கண்டுபிடிச்சிட்டா போதும். கயல் இருக்கும் இடத்தை தெரிஞ்சுக்கலாம்”.

“என் பிரெண்ட் இவங்க சீக்கிரம் பார்ப்பாங்கன்னு சொன்னான். பத்து நாள் டைம் கேட்டிருக்காங்க. அதுக்குள்ள தகவல் கிடைச்சிட்டா நல்லா இருக்கும்”.

அவனது கரங்களை இறுகப் பற்றிக் கொண்டவள் “கண்டிப்பா தெரிஞ்சிடும். அவ நல்லா தான் இருப்பா. கவலைப்படாதீங்க. அப்புறம் அக்காவை எதுக்கு இப்போ அங்கே அழைச்சிட்டுப் போனீங்க? அவ அம்மாவோடைய கொஞ்ச நாள் இருக்கட்டும்னு விட்டிருக்க வேண்டியது தானே?”

ஒருவித எரிச்சலுடன் “கடைக்குப் போய் மிரட்டி இருக்காங்க குணாவை. உடனே கூட்டிட்டுப் போகலேன்னா அசிங்கப்படுத்திடுவேன்னு சொல்லி இருக்காங்க” என்று அவன் சொன்னதும் நறநறவென்று பல்லைக் கடித்தவள் “திருந்தவே மாட்டா போல. குணா மாமா எப்படித்தான் சமாளிக்கிறாரோ?”

“எங்கே இன்னைக்கு காலையில கூட ஒரே ஏழரை தான். அம்மா தான் பாவம். கொஞ்சம் கூட நிம்மதி இல்லை அவங்களுக்கு”.

“பேசாம கடைகிட்டேயே ஒரு வீட்டைப் பார்த்திட்டுப் போக சொல்லுங்க. இங்கே இருந்து எந்த தகவலும் அவளுக்குப் போகாமல் இருந்தாலே சரியா இருக்கும். அத்தையும் நிம்மதியா இருப்பாங்க”.

“நான் சொன்னேன் சுடர். ஆனா அம்மாவுக்கு அதுல இஷ்டமில்லை. கயல் காணாமல் போன பிறகு குணா வீட்டை விட்டுப் போனா அது இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்”.

“அதுவும் சரி தான். எனக்கே எங்க அக்காவை நினைச்சு அசிங்கமா இருக்கு. பேசாம குணா மாமாவை நாலு அப்பு அப்ப சொல்லுங்க. அப்போ தான் அடங்குவா”.

அவளைப் பார்த்து லேசாகச் சிரித்தவன் “உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல?”.

“என்னை என்ன பண்ண சொல்றீங்க? எங்கம்மாவும் அவளுமா சேர்ந்து பண்ணுகிற தப்புக்கு உங்க குடும்பமே கிடந்தது அல்லாடுது. அதை நினைச்சா மனசுக்கு கஷ்டமா இருக்கு. இவங்க இரண்டு பேரையும் எப்படி சரி பண்றதுன்னு சத்தியமா புரியல”.

“குணா தான் அவங்களை கண்ட்ரோல் பண்ணனும் சுடர். அவனால மட்டும் தான் முடியும்”.

மெல்ல எழுந்து கொண்டவள் “கயல் பற்றி எந்த தகவல் தெரிந்தாலும் உடனே எனக்கு சொல்லிடுங்க. நான் கிளம்புறேன்”.

அவளின் கையைப் பற்றி நிறுத்தியவன் “கயலுக்காக மட்டும் தான் உனக்கு நான் தேவைப்படுகிறேனா சுடர்? என்னைப் பற்றி யோசிக்கவே மாட்டியா?”

அவனை ஆழ்ந்துப் பார்த்தவள் “என் மனசுல கயல் மட்டும் தான் இப்போ நிறைஞ்சு இருக்கா. அவளுக்காக மட்டும் தான்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து சென்றாள்.


அவளின் முதுகையே வெறித்துக் கொண்டிருந்தவனின் இதழ்களில் புன்சிரிப்பு. என் குரல் டல்லானதும் ஓடி வந்து என்னை ஆறுதல் படுத்திட்டு அவளுக்காக வந்தேன்னு சொல்லிட்டுப் போற. கயல் கிடைக்கட்டும் அப்புறம் உன்னை விட மாட்டேன் என்று எண்ணிக் கொண்டான்.
 
  • Like
Reactions: Kothai suresh

Kothai suresh

Member
Jan 26, 2022
83
19
18
பாவம் குணா, அர்ஜூன் அக்கா, தங்கச்சி இருவரும் ஒவ்வொரு விதமா படுத்தறாங்க
 
  • Love
Reactions: SudhaRavi50

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
333
319
63
பாவம் குணா, அர்ஜூன் அக்கா, தங்கச்சி இருவரும் ஒவ்வொரு விதமா படுத்தறாங்க
நன்றி அக்கா..........................