Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 6 | SudhaRaviNovels

அத்தியாயம் - 6

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,951
2,683
113
வணக்கம்!

சென்ற அத்தியாயத்திற்கு response குறைவு என்று பட்டது. கதையின் சுவாரசியம் குறைந்துவிட்டதா தெரியவில்லை. உங்கள் கருத்து எதுவாகினும் சொல்லுங்கள். இப்பதி்வை எழுதும் போது இரண்டு முறை அழுதுவிட்டேன். எழுதிய சில வரிகளை உங்கள் மனம் கருதி நானே நீக்கிவிட்டேன் தான். கனமாக அழுத்தம் தருவதாக இருக்கிறதா? இக்கதை 2017ல் எழுதி பாதியிலே விட்டிருந்தேன். இப்பொழுது மீண்டும் தொடர வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. இப்பதிவை வாசிக்கும் போது, முதல் அத்தியாயத்தில் ஒலித்த சூர்யாவின் குரல் நினைவுக்கு வருகிறதா? உங்கள் லைக்ஸ், கமெண்ட்ஸ் பார்த்து மகிழ்ச்சி! புதிய வாசகர்கள் இணைந்திருப்பதைக் காண்கிறேன். Love
❤️
and hugs
🫂
to all! Take care!

அன்புடன், ஆர்த்தி ரவி
 
  • Love
Reactions: Shanbagavalli

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,951
2,683
113
தேன் மழையிலே

ஆர்த்தி ரவி


அத்தியாயம் 06:


மறுநாள் ஏற்பாடாகியிருந்த அறுவை சிகிச்சையைக் கருத்தில் கொண்டு, அந்த மிச்சமிருந்த இரவு நேரத்தில் நண்பர்கள் இருவரும் வேறு எதைப் பற்றியும் பேசிக் கொள்ளவில்லை.


கிடைத்திருந்த சில மணி நேரத்தில் தூங்கி எழுந்து புத்துணர்ச்சியுடன் மருத்துவமனைக்குச் சென்றனர்.


அங்குப் போனதுமே திலோ எதிர்பட்டாள். அவளைப் பார்த்ததும் ரிஷி நமட்டாகப் புன்னகைக்க, ஹரி அவனை முறைத்து வைத்தான். அவளைக் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து விரைவாக உள்ளே சென்றுவிட்டான்.


திலோத்தமா ஹரியின் செய்கையைப் பார்த்து விட்டாள். ஹரி தன்னிடம் சகஜமாகப் பழகாதது வருத்தம் அளித்தது. இப்படி ஏன் அப்பட்டமாகத் தவிர்க்க வேண்டும் என்று சிறு கோபம் கூட எழுந்தது. இருக்கும் இடமறிந்து தன் முக மாற்றத்தை மறைத்துக் கொள்ளவும் செய்தாள்.


டாக்டர். திலோத்தமா குமாரை ரிஷிக்குத் தெரியும். முன்னர் வந்து போன சில சமயங்களில் அவளைப் பார்த்திருக்கிறான். பேசியும் இருக்கிறான். அந்தப் பரிட்சயத்தில் அவளைப் பார்த்துத் தூரத்திலிருந்தே புன்னகைத்தான்.


அவளருகே போனதும் அவளே ரிஷியிடம் ‘ஹலோ’ சொன்னாள். சில நிமிடங்கள் நின்று அவனிடம் பேசிவிட்டே அங்கிருந்து தன் கன்சல்டேஷன் அறைக்குள்ளே போனாள்.


இருக்கையில் அமர்ந்து கொண்டவளுக்கு ஒரு விதமான படபடப்பு சூழ்ந்தது. அவள் மனதில் ஹரிக்கு நல்ல இடமளித்து வைத்திருந்தாள். ஏனோ, ஹரி தன்னை அலட்சியப்படுத்துவதாக உணரத் தொடங்கி இருந்தாள்.


தானாக அவனிடம் அடிக்கடி பேசப் போய், தன் மதிப்பைத் தொலைத்து விட்டேனோ என்கிற கோணத்தில் யோசிக்கத் தொடங்கினாள். இனி மேல் தானாக அவனை அணுகுவது சரியா?


தன் மனதை, அதிலுள்ள விருப்பத்தை அவனிடம் சொன்னால், அவன் தன்னை இளக்காரமாகப் பார்ப்பானோ? இப்படி நினைக்க, உடனே கண்களில் மழுக்கென்று ஈரத்துளிகள் எழுந்தன.


அவளின் நிறத்திற்கு அப்படியொரு சிவப்பு அவள் முகத்திலே!


மூக்கை உறிஞ்சி, கலங்கிய கண்களை டிஸ்யூவால் துடைத்தவள், எப்படி இந்த விசயத்தைக் கையாள்வது என்கிற யோசனையில் பயணிக்கத் தொடங்கினாள்.


ஹரி அறுவை சிகிச்சைப் பற்றிய குறிப்புகளை முதலில் பார்த்துவிட்டு, கிடைத்திருந்த வாய்ப்பில் ரிஷியுடன் சென்று இன்னும் இரண்டு பேஷண்ட்ஸ் பற்றிப் பகிர்ந்து கொண்டான். இருவரும் அவர்களை நேரிலும் பார்த்துப் பரிசோதனை செய்து முடித்தனர்.


அறுவை சிகிச்சைக்கான நேரமும் வர, தியேட்டருக்குள் நுழைந்தனர். திட்டமிட்டது போல் எல்லாம் நன்றாக நடந்து முடிய, அக்குழந்தையின் பெற்றோர் வந்து இருவருக்கும் நன்றி கூறிவிட்டுச் சென்றனர்.


ரிஷி பின் மாலையிலேயே மும்பாய் திரும்புவதாக இருந்தான்.


அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தையின் வைட்டல்ஸ் எல்லாம் நார்மல் என்று தெரிந்தது. அடுத்து டியூட்டி டாக்டரிடம் பேசிவிட்டு வந்தான் ஹரி.


அதன் பின்னரே ஹரி, ரிஷி இருவரும் மருத்துவமனையில் இருந்து ரிஷியின் வீட்டிற்கு புறப்பட்டனர்.


அவர்கள் மருத்துவமனையின் வாயிலுக்குப் பேசிக் கொண்டே வர, அதே நேரம் ரிஷிக்கு ஒரு வெளிநாட்டு நம்பரில் இருந்து குறுஞ்செய்தி வந்தது.


அதன் சமிக்ஞை ஒலித்ததும் ரிஷி யாரென்று எடுத்துப் பார்க்க, புதிய தெரியாத எண். அது யாராக இருக்கும் என்கிற யோசனையில் அவனுடைய புருவங்கள் முடிச்சிட்டன.


அனுப்பியது தேன்மொழி எனத் தெரிந்ததும் இலகுவாகி ரிஷியின் முகத்திலும் கனிவு தெரிந்தது.


ஹரி நண்பனின் பாவனைகளை உள்வாங்கிக் கொண்டாலும், என்ன யார் என்று கேட்டு இடையிடவில்லை.


அவளிடமிருந்து வந்திருந்தது குறுஞ்செய்தியா? நீளமாகவே இருந்தது. ரிஷி என்ன சொல்லியிருக்கிறாள் என்று வாசித்துப் பார்க்க…


‘ஹாய் டாக்டர்,


நான் பத்திரமாகச் சிங்கப்பூர் வந்து சேர்ந்துவிட்டேன். உடனே மெசேஜ் செய்ய முடியவில்லை. மன்னிக்கவும்!


உங்களை நேற்று ஏர்போர்டில் சந்திப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை. பார்த்ததும் சரியாகப் பேசினேனா என்பது கூட இப்போது ஞாபகத்தில் இல்லை. நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.


நேற்று நீங்களும் உங்கள் நண்பரும் செய்த உதவிக்கு ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்! சாரி, அவர் பெயர் நினைவுக்கு வரவில்லை!


இது என் சிங்கப்பூர் நம்பர். நீங்கள் இங்கு வந்தால் கண்டிப்பாக எனக்குத் தெரியப்படுத்துங்கள். மீண்டும் சந்திப்போம். பை!


-Mrs. Surya Prakash.’


மடல் போலவே எழுதி இருந்தாள் தேன்மொழி. வாசித்து முடித்ததும் ரிஷி மென்மையாகப் புன்னகைத்துக் கொண்டான். ஹரி அவன் முக மாற்றத்தை யோசனையாகப் பார்த்தான்.


“என் முகத்தில் என்ன தெரியுதுன்னு இப்படிப் பார்த்திட்டு இருக்கடா?”


“உன்னைப் போயி பார்த்து வைக்க நீ என்ன என் ஹீரோயினா. உள்ளே ஏறி உட்கார்ந்தா காரை எடுப்பேன்.” அவனுக்காக கார் கதவைத் திறந்து வைத்துவிட்டுக் காத்திருந்த ஹரி வெடுக்கெனச் சொல்ல,


நண்பனின் கடுப்புப் பாதிக்காதவனாய் ரிஷி ஒரு விரிந்த சிரிப்புடன், “யாரு மெசேஜ் பண்ணியிருக்கான்னு உனக்குத் தெரிஞ்சிக்க வேண்டாமா?” என்று கேட்டு ஒற்றைப் புருவத்தை உயர்த்தி கேள்வியும் சிரிப்புமாக ஹரியை குறு குறுவெனப் பார்த்தான்.


“என்ன தேவைக்குத் தெரியணும்? சும்மா ஷோ காட்டாம பேசாம வா. எனக்குப் பசிக்குது ரிஷி.”
 
  • Love
Reactions: Shanbagavalli

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,951
2,683
113
வெளியே கடுப்படித்தாலும் மனதில் ‘ரிஷி ஒரு மார்க்கமா பார்க்குறான். ஒரு வேளை தேன்மொழி மெசேஜ் பண்ணியிருக்காங்களா?’ என்று குறு குறுத்தது. ஆனால், நண்பனிடம் வாயைத் திறந்து கேட்கவில்லை.


ரிஷியே ஹரியிடம் சேதியைப் பகிர்ந்து கொண்டான்.


“மிஸ்ஸ…” திருமதி சூர்ய பிரகாஷ் என்று சொல்ல வந்தவன், உடனே சுதாரித்து, “தேன்மொழி மெசேஜ் பண்ணியிருக்காங்க.” என்று சொல்லி முடித்தான்.


ஹரி ரிஷி சொல்ல வந்த மிஸஸ்ஸை கவனித்தான். பின் அவசரமாக அவன் திருத்திக் கொண்டதையும் உள் வாங்கினான். மனதினுள் ரிஷியை மெச்சிக் கொண்டான்.


அதே நேரம் ரிஷியோ, இனி மேல் தேன்மொழி என்று அழைக்கப் பழகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறித்துக் கொண்டான்.


“ஓஹ் என்ன சொல்லியிருக்காங்க… நல்லபடியா சிங்கப்பூர் போய்ச் சேர்ந்திட்டாங்களா?” ஒரு கனிந்த முறுவலுடன் ஹரி கேட்டான்.


இப்போது தேன்மொழியைச் சுட்டுகையில் ஹரிக்குத் தானாகவே மரியாதை பன்மை வந்திருந்தது. நேற்று இன்னார் எனத் தெரிய வந்தும், தேன்மொழியை அவள் இவள் என்று ஹரியால் அழைக்க முடியவில்லை.


ஏனோ ஒரு ஜாக்கிரதை உணர்வு உதித்திருந்ததை அவனால் உணர முடிந்தது. இது நல்லதிற்கா என்று தெரியவில்லை. எதுவாகினும் இனி மேல் தான் சந்திக்க வேண்டிய விசயங்கள் நிறைய வரப் போகின்றன என்பது புரிந்தது.


“யா சேஃபா போயி இறங்கிட்டாங்களாம்.” ரிஷி சொல்லவும்,


“ம்ம்… குட்.” எனக் கேட்டுக் கொண்டான் ஹரி. நேற்றுப் பார்த்த தேன்மொழியின் தோற்றம் கண்ணுக்குள் வர, அப்படியே அமைதியாகி விட்டான்.


ஹரியின் மனதில் என்ன ஓடுகிறது என்பது ரிஷிக்குத் தெரியவில்லை. ஆனால், எதையோ யோசிக்கிறான் என்பது நன்றாகத் தெரிந்தது. சட்டென காருக்குள் ஓர் அமைதி படர்ந்தது.


சீரான வேகத்துடன் ஹரி காரை செலுத்த, அவனருகே அமர்ந்திருந்த ரிஷி, ஹரி தன்னிடம் தேன்மொழி, சூர்ய பிரகாஷ் பற்றி ஏதேனும் கேட்பான் என்று நினைக்க, அவனோ பேசாமல் அமைதியாக இருந்தான்.


ரிஷிக்கு நண்பனிடம் கேட்கச் சில கேள்விகள் இருந்தன. முக்கியமாக எப்படி ஹரிக்கு முதலில் தேன்மொழியைத் தெரியும்? ஹனி என்று நெருக்கமாகச் சொல்வதென்றால்?


அவன் வீட்டினர் பார்த்திருக்கும் அலையன்ஸா? அந்தளவுக்கு அவர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்களா என்ன? அதுவும் ஹரி அவர்களுக்கு ஒரே பிள்ளை! பானு ஆன்ட்டி எப்படிச் சம்மதம் சொன்னார்கள்?


இல்லை ஹரியே பெண்ணைப் பார்த்திருக்கிறானா?


நேற்றைக்கு, தான் மிஸஸ். சூர்ய பிரகாஷ் என்றதும் துணுக்குற்றானோ? முந்தைய நாளின் நிகழ்வை மனதில் ஓட்டிப் பார்த்தான் ரிஷி. அவனால் நினைவு படுத்திக்கொள்ள முடியவில்லை.


அவன் எங்கே அதைக் கவனித்தான்? இப்போது ஞாபகத்தில் கொண்டு வருவதற்கு? தேன்மொழி விடைபெற்றதும் தானே, அவள் ஹரியின் மகிழ்ச்சிக்குரிய ஹனி என்பது தெரிய வந்தது!


‘ஹரிக்கும் தேன்மொழிக்கும் கல்யாணம் நடந்திருச்சுன்னா ரொம்ப நல்லாயிருக்கும். சூர்யாவின் ஆசையும் நிறைவேறும். அப்ப பொசுக்குன்னு முடிஞ்சு போனது இனியாவது தேன்மொழிக்கு ஒரு நீண்ட நல்ல வாழ்க்கை அமையணும். ஹரி நல்லவன். இப்பவே மனைவியாக வரப் போறவங்க மேலே பிரியம் வச்சிருக்கான்.’


இருவருக்குமே களைப்பாக இருக்க, தன் கேள்விகளை அப்புறம் நண்பனிடம் கேட்டுக் கொள்ளலாம் என நினைத்த ரிஷி, கண்களை மூடி இருக்கையில் ரிலாக்ஸாக சாய்ந்து அமர்ந்து கொண்டான்.


சூர்ய பிரகாஷ் ஐ.பி.எஸ். அவன் மூடிய இமைகளுள் வந்து நின்றான்.


டெரர் போலீஸ் ஆஃபீசர் என்று அழைக்கப்பட்டவனின் மற்றொரு முகத்தைக் கண்டிருந்தான் ரிஷி.


சூர்ய பிரகாஷ் மும்பாய்வாசிகளுக்கு நன்கு அறிமுகமானவன். அவனின் பதவி காலத்தில் பல தடவை தலைப்புச் செய்தியானவன். தினசரி செய்தி ஆக்கப்பட்டவனும் கூட.


தன் அதிரடியான நடவடிக்கைகளால் பலருக்குப் பீதியைக் கிளப்பி கண்ட நேரத்தில் லூஸ் மோஷன் போக வைத்து, அவர்கள் எதிர்பாராத நேரத்தில் களத்தில் இறங்கி, இடிகளாக இறக்கி, துவம்சம் செய்து மருத்துவமனை படுக்கைகளை நிறைத்தவன்.


சைலெண்ட் கில்லரும் கூட. அமைதியாகச் செயல்பட்டு ஆப்பு வைப்பதில் கில்லாடி. மும்பாய் ஸ்பெஷல் யூனிட் டெப்லாய்மெண்டில் இயங்கிக் கொண்டிருந்தான்.


அத்தனை கடுமைக்குள்ளே இத்துணை மென் இதயமா என்று ரிஷி கண்ணன் அவனைப் பார்த்து வியந்திருக்கிறான்.


திறமையானவன், தைரியமானவன், நியாயமும் நேர்மையும் கொண்டவன் என்று டிபார்ட்மெண்டில் பெயர் வாங்கியவன் சூர்ய பிரகாஷ்.


சூர்யாவை ரிஷிக்குத் தொழில் முறையிலும் பழக்கம். பெர்சனலாக அதிகம் பழக்கமில்லை என்றாலும் பரிட்சயத்தைத் தாண்டிய வகையிலும் தெரியும். ரிஷியின் மனைவி அனுராகாவிற்கு தூரத்து உறவில் வருபவன்.


அன்று தக்க சமயத்தில் முதலுதவி (CPR) தந்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தால் சூர்யா பிழைத்திருக்கக்கூடும் என்று இன்றும் ரிஷி உறுதியாக நினைத்தான்.


கிரிமினல்களின் சதியால் ஏற்படுத்தப்பட்ட சம்பவம் அது. சூர்யாவின் உயிரை எடுப்பதே நோக்கமாக நடந்திருந்தது. அவர்கள் அவனைச் சுட்டுப் போட்டு அப்படியே குற்றுயிராய் ஒரு குட்டையில் தூக்கி வீசியிருந்தனர்.


இருட்டில் எங்கோ எறியப்பட்டுக் கிடந்தவனை ஒரு சிறுவன் பார்த்து, பின் ஓடி உதவிக்கு ஆட்களை அழைத்து வந்து, அதன் பின்னர் போலீஸ், ஆம்புலன்ஸ் என்று கால தாமதமாகி, எப்படியோ மருத்துவமனைக்குக் கொண்டு வரப் பட்டிருந்தான் சூர்யா.
 
  • Wow
Reactions: Shanbagavalli

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,951
2,683
113
தன் வாழ்வின் கடைசி மணித்துளிகள் அவை என்று சூர்யாவிற்கும் அப்போது தெரிந்திருந்தது தான்.


அது அவனுக்குக் கிடைத்திருந்த சாபமா என்று ரிஷி யோசிக்க, ‘எனக்குக் கிடைச்சிருக்கும் கடைசி வரம்’ என்று சொல்லி அத்தனை வலி வேதனையிலும் முறுவலித்தவனை எப்படி மறப்பான் ரிஷி?


ஒரு மருத்துவராக அந்த உயிரைக் காப்பாற்ற அத்தனை முயற்சிகளையும் எடுத்திருந்தான் ரிஷி. சூர்ய பிரகாஷ் மருத்துவமனைக்கு வந்து சேரவுமே செய்தி வெளியே கசிந்திருக்க, மருத்துவமனைக்கு உள்ளேயும் வெளியேயும் பயங்கரப் பதட்டம் சூழ்ந்து கொண்டது.


ரிஷி கண்ணனின் கீழ் ஒரு மருத்துவக்குழு துரிதமாக இயங்கிக் கொண்டிருந்தது. அத்தனை முயற்சிகள் செய்தும் அந்த உயிர் பூமியில் நிற்கவில்லை.


மருத்துவர்களின் பெரும் முயற்சியால் சில மணித்துளிகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


“நன்றி டாக்டர். ரிஷி!” சொன்னது சூர்யாவே தான். ரிஷியின் கைகளை இறுகப் பற்றியிருந்தான்.


“என் தேனம்மாகிட்ட பேசணும் ரிஷி. பேரண்ட்ஸ் புரிஞ்சிப்பாங்க. தம்பி தேத்திருவான் அவங்களை. பட் தேனு… என்… தே… தேனு… அவ இங்க வர்ற வரைக்கும் என் உயிர் தங்… குமா?”


அந்த உருக்கமான மனநிலையில் டாக்டர் ரிஷியுமே பரிதவித்துப் போனான். அந்நேரத்தில் தானும் ஒரு சக மனிதனாக, ஒரு மகனாகத் தவிக்கத்தான் செய்தான்.


ஆனால், அதையெல்லாம் மிஞ்சும் வகையில் தன் மனைவியின் காதலனாக அத்தனை உணர்ச்சிக்கு ஆட்பட்டிருந்தான்.


“சூர்யா ரிலாக்ஸ்… காட் இஸ் கிரேட்! இதைக் கடந்து வருவீங்க. நம்புங்க. பீ பிரேவ்!” ஆறுதலாக அவன் கையில் அழுத்தம் கொடுத்துத் தட்டிக் கொடுத்தான்.


“பொய் சொல்றேன்னு உன் முழியே காட்டிக் கொடுக்குது ரிஷி.” என்கிட்டேயேவா என்கிற பாவனை சூர்யாவிடம்.


“உங்க வைஃப்க்கு கூப்பிடறேன் சூர்யா…” கரகரத்த குரலைச் சரி செய்தபடி ரிஷி சொல்ல,


“நோ ரிஷி! நா… நான் இப்ப…டிப் பேசுறதை… அவளாலே தாங்க முடியாது! நேரிலே வரட்டும். இந்நேரம் வீட்டிக்குத் தெரிஞ்சிருக்குமே!” அத்தனை பரிதவிப்பு அவனிடம்.


இவ்வளவு பேசவுமே மூச்சிற்கு தவித்தான். அவசரமாக ரிஷி மாற்று ஏற்பாடுகள் செய்யப் பிரயத்தனப்பட, சூர்யா கேட்டான், “ப்ளீஸ் ரிஷி… நான் பேசுறதை மட்டும் ரெகார்ட் பண்ணு.”


ரிஷி வீடியோ ரெக்கார்ட் செய்ய முனைய, அவ்வளவு பதட்டத்திலும் சூர்யா கவனமாக அவனைத் தடுத்தான்.


“இந்தச் சிதைப்பட்ட உடம்பு தேனுக்கு ஞாபகத்துல இருக்கக் கூடாது ரிஷி. அவள் ஃப்யூச்சர் முழுக்க என்னால் அவ கூட டிராவல் பண்ண முடியலை… பட், என்னோட அவ லைஃப் நின்னுட கூடாது ரிஷி! ஐ ஹோப் ஷி லிவ்ஸ் ஏ குட் லைஃப் ஈவன் ஆஃப்டர் மீ லீ… லீவிங் ஹெர்! வீடியோ வேண்டாம். வாய்ஸ் மட்டும் பண்ணு.”


துயரத்தை விழுங்கிக் கொண்டு, கண்களில் காதலும் ஆதுரமும் வழிய பேசிக் கொண்டிருந்த சூர்யாவைப் பார்த்துக் கொண்டிருந்த ரிஷிக்கும் கண் கலங்கிப் போனது!


அவன் மனைவிக்குப் பேசப் போகிறான். அந்த பிரைவசிக்குள் தான் எதற்கு என்கிற இங்கிதத்துடன் வாய்ஸ் ரெக்கார்டிங்கை ஆன் செய்து சூர்யா அருகே வைத்துவிட்டு வெளியே வந்து விட்டான் ரிஷி.


அத்தனை மருத்துவ சாதனங்களுக்கு மத்தியில் படுத்துக் கொண்டிருந்த சூர்யாவை வெளியே இருந்தும் பார்க்க முடிந்தது. கண்ணாடித் தடுப்புக்கு அந்தப் பக்கமிருந்தவனின் உணர்ச்சிகளை ரிஷியால் கவனிக்க முடிந்தது.


அவன் ரெக்கார்டரில் என்ன பேசினான் என்று காதுகளுக்குக் கேட்காவிட்டாலும், சூர்யா தன்னிடம் பகிர்ந்தவற்றில் இருந்து யூகித்துக் கொண்டான்.


அடுத்து வந்த நிமிடங்களில் சூர்யா மிகவும் சிரமப்பட்டுப் போனான். அந்த நேரத்திலே அவன் குடும்பமும் வந்து சேர்ந்தது. போலீஸ் பாதுகாப்புடன் தான் அழைத்து வந்திருந்தனர்.


அவர்கள் அனைவரையும் சூர்யா ஒன்றாகப் பார்த்தான். ஒன்றிரண்டு நிமிடங்கள் மட்டுமே அவனால் பேச முடிந்தது. அங்கிருந்த அனைவருக்குமே உணர்வு போராட்டமாக இருந்தது.


தேன்மொழி அன்றிருந்த நிலைமையைப் பற்றி இப்போது நினைத்தாலும் ரிஷிக்கு வேதனை படர்ந்தது!


சூர்யாவின் கடைசி மணித்துளிகள் தேன்மொழியின் அருகாமையில் தான் கழிந்தன. அவன் மனைவியிடம் என்ன சொன்னானோ, கண்ணீருடன் கஷ்டப்பட்டுப் புன்னகையை வரவழைத்து, அந்தக் கடைசி நிமிடம் அவன் புன்னகையுடன் கலக்கவிட்டு அவனை அப்படியே அணைத்துக்கொண்டாள்.


உறைந்த புன்னகையுடனேயே சூர்ய பிரகாஷ் விடைபெற்றிருந்தான். அதன் பின்னரே தேன்மொழி வாய்விட்டு அழுதாள். அத்தனை நேரம் சூர்யாவின் பேச்சுக்கும் கோரிக்கைக்கும் கட்டுப்பட்டு அடக்கி வைத்திருந்ததை எல்லாம் வெளியேற்றினாள்.


அழுகையின் ஊடே அந்தக் கதறல்? அவனைத் தொட்டு அசைத்துப் பார்த்து, அது வலிக்குமோ எனப் பயந்து இங்கும் அங்கும் வருடிக் கொண்டு, சூர்யா சூர்யா என விடாமல் சொன்னவள், திடீரென அவன் உடலிலேயே மயங்கிச் சரிந்ததை ரிஷி இன்றும் மறக்கவில்லை.


அப்போது மயங்கிச் சரிந்தவள் மீண்டு வந்ததே பெரும்பாடு!


அதற்கு காரணமாய் தேன்மொழிக்குத் துணை நின்ற சூர்யாவின் குடும்பத்தைக் கண்டு ரிஷி பிரமித்திருந்தான்.


மகனின் இழப்புப் பெற்றோருக்குப் பெருந்துயரமாக இருக்கையில், அதையும் தாங்கிக் கொண்டு மருமகளுக்கு ஆறுதல் சொல்லி, அவளை அரவணைத்து, சிதைவிலிருந்து மீட்டுக் கொண்டு வந்திருந்தனர், உஷா சுகுமாரன் தம்பதியர்.


சூர்யாவின் அம்மா உஷா… கன்றை இழந்த பசு போன்ற நிலையில் துடி துடித்தவர், தன் துக்கத்தை விழுங்கி மகனின் கடமையைத் தனதாக்கிக் கொண்டு மருமகளின் நலனுக்காகச் செயல்பட்டிருந்தார்.


அண்ணன் தான் அஜித் குமாரின் ஹீரோ, வழிகாட்டி, உயிர் என அனைத்துமாக இருந்தது. அந்த அண்ணனின் மரணம் கொடூரமான வகையில் நடந்திருக்க… அஜித்துக்குள்ளே அத்தனை உணர்வு போராட்டங்கள் அன்று!
 
  • Love
Reactions: Shanbagavalli

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,951
2,683
113
அதையும் கடந்து, அண்ணி அண்ணி என்று தேன்மொழியை அத்தனை பாசத்துடன் கவனித்துக் கொண்டான்.


சில நாட்கள் கழித்தே சூர்யாவின் வாய்ஸ் ரெக்கார்டிங்கை ரிஷி தேன்மொழியிடம் சேர்ப்பித்தான். அவளுடைய உடல்நிலையை எண்ணியே கொடுப்பதைத் தாமதித்திருந்தான்.


சில நிமிடங்கள் ரிஷிக்கு அத்தனை ஞாபகங்களும் நினைவில் வலம் வந்தன.


அந்த இனிய மனிதனின் சாவு தன் முன்னே நிகழ்ந்ததை நினைத்து எத்தனையோ நாட்கள் அவனுடைய தூக்கத்தைத் தொலைத்திருக்கிறான் ரிஷி.


ஒரு சமயம் அந்த விசயத்தை ஹரி, நீத்துவிடம் கூட பகிர்ந்து கொண்டதாக ரிஷிக்கு இப்போது ஞாபகம் வந்தது.


மருத்துவர்களாக எத்தனையோ உயிர் இழப்புகளைச் சந்திப்பவர்கள்… மூவரும் பல விசயங்களைப் பற்றிப் பேசிக் கொள்வதால், ஹரி ‘சூர்ய பிரகாஷ்’ என்று சொன்னதும் அப்பெயரை வைத்து நேற்று கனெக்ட் பண்ணிக் கொள்ளவில்லை என்று ரிஷி நினைத்துக் கொண்டான்.


நண்பனைத் திரும்பிப் பார்க்க, ஹரி அமைதியாக இருந்தான். சாலையில் மட்டுமே கவனம் வைத்திருப்பது போல் ஒரு தோற்றம். ஆனால், அவனுமே ஏதோ யோசனையில் மூழ்கி இருப்பதாக ரிஷிக்குப் பட்டது.


“என்ன ஹரி கொயட் ஆகிட்ட?” ரிஷி அமைதியான நிமிடங்களை முடித்து வைத்தான்.


“நீ ஏதோ பழைய நாட்களுக்குப் போன மாதிரி உன் முகத்திலே வருத்தம் தெரிஞ்சது. அதான் நான் எதுவும் பேசலை.”


“ம்ம்… சூர்ய பிரகாஷ் பற்றி நினைச்சிட்டு இருந்தேன். நீ அவரைப் பற்றிக் கேட்பன்னு நினைச்சேன்டா. தேன்மொழி… சூர்யா பற்றி நீ எதுவும் கேட்டுக்கலை.”


“அவர் அந்த மும்பாய் ஸ்பெஷல் ஃபோர்ஸ்ல இருந்த சூர்ய பிரகாஷ் ஐ.பி.எஸ். தானே? நேத்து நைட் தூங்கப் போகும் போதே உன்கிட்ட சொல்ல நினைச்சேன். பட், ரொம்ப லேட்டானதுல கேட்கலை. விட்டுட்டேன்.”


“அவரே தான் ஹரி. நல்லா ஞாபகத்துல வச்சிருக்கே!”


“நேத்து உன் எமோஷன்ஸ் பார்த்துப் புரிஞ்சிக்கிட்டேன் ரிஷி. அவங்க ஃபேமிலி அனு அவங்களுக்குச் சொந்தம்னு கூட சொன்னியே நீ?”


“யா டிஸ்டெண்ட் ரிலேடிவ் டா. ரொம்ப க்ளோஸ்ல இல்லைன்னாலும் விசேஷங்கள்ல பார்த்துப்போம். இப்ப அந்த அங்கிள் ஆன்ட்டி ரெண்டு பேரும் அவங்க ரெண்டாவது பையன் கூட லண்டன்ல இருக்காங்கன்னு நினைக்கிறேன். அனு கூட அப்ப போயி அவங்களைப் பார்த்தது தான்.”


“ம்ம்…” தலையசைத்துக் கேட்டுக் கொண்டான் ஹரி கிருஷ்ணன்.


ரிஷி மேலும் அந்த நாள் நினைவைப் பகிர்ந்து கொள்ள நினைக்கும் போதே, ஹரி தன் க்யூட்டி கொரோல்லாவை ‘தி க்ராண்ட் மேனர்’ அபார்ட்மெண்ட் வளாகம் பார்க்கிங்கில் வந்து நிறுத்தியிருந்தான்.


இருவரும் பேச்சை அத்தோடு விட்டு விட்டு ஹரியின் வீட்டை நோக்கி நடந்தனர். லிஃப்டில் மேலே போகும் போது,


“ஹரி, அன்னைக்கு நடந்த சம்பவத்தை முழுசா நான் யாரு கிட்டேயும் சொல்லலை. அது தேன்மொழி சூர்யாவுக்குள்ள பிரைவசின்னு விட்டுட்டேன். இப்ப நீ அவங்களைக் கல்யாணம் செய்யப் போறவன் என்கிறதால… “ என்று ரிஷி இழுக்க…


“நீ எமோஷனல் ஆகியிருக்க ரிஷி! எனக்கு சூர்யா தேன்மொழி பற்றிய பர்சனல் விசயங்களை நீ சொல்லணும்னு இல்லை. நம்ம எதிக்ஸ்படி இதிலும் நீ பேஷண்ட்ஸ் பிரைவசிக்கு மதிப்புத் தந்திருக்க. அது அப்படியே இருக்கட்டும்டா.


முதல்ல நீ என்கிட்ட ஷேர் பண்றதை நானும் விரும்பலை…


இது பேஷண்ட்ஸ் பிரைவசி எதிக்ஸ்க்காக மட்டும் நான் சொல்லலை. ஒரு பொண்ணுக்கு வருங்கால கணவனா நினைச்சி சொல்றேன். தேன்மொழி என் வைஃபா வரணும்னு நான் ஆசைப்படுறேன். என் ஆசை நிறைவேறணும்னு வேண்ட ஆரம்பிச்சிட்டேன்.


என் விருப்பம் நிறைவேறும் போது, தேன்மொழி எதை என்கிட்ட சொல்ல நினைக்கிறாங்கன்னு நமக்குத் தெரியாதில்லையா? அவங்க என்கிட்ட ஷேர் பண்ணுறது மட்டும் எனக்குத் தெரிஞ்சா போதும். அது தான் எங்க பிரைவசியா இருக்கப் போகுது.


மற்ற விசயங்கள் தான் எனக்குத் தெரியுமே! நீ என்னைப் புரிஞ்சிக்குவன்னு நினைக்கிறேன்.”


“புரியுது ஹரி. ஐ விஷ் யூ குட் லக்! நானும் குருவாயூரப்பனுக்கு வேண்டிக்கிறேன்.”


தேன்மொழிக்குச் சூர்யா தந்திருந்த வாய்ஸ் ரெக்கார்டர் பற்றி ஹரிக்குத் தெரியாமல் போனது!


“தேங்க் யூ ரிஷி!”


இருவரும் இறுக்கமாகக் கை குலுக்கிக் கொண்டு விலக, லிஃப்ட் ஹரியின் வீட்டுத் தளத்தை அடைந்திருந்தது.


வீட்டிற்குள் போனதுமே ஹரி அவசரமாக அவன் படுக்கையறைக்குள் சென்று விட்டான்.


ரிஷி ஷூவை கழற்றி வைத்துவிட்டு வரவுமே, நலம் விசாரிப்பது போல் அவனருகே நின்று வாலாட்டியபடி, மெல்ல குலைத்தது டிம்பிள்.


“ஹாய் டிம்பிள்” ஜாக்கிரதையாக ரிஷி அதைத் தொடாமல் விலக, “ங்கூங்…” என்று ஏமாற்றத்தில் குரல் எழுப்பிய டிம்பிளின் முகம் சுணங்கியது.


“இரு டா பேபி குளிச்சிட்டு வந்து கொஞ்சுறேன்.” என ரிஷி இன்னொரு அறைக்குள்ளே நுழைந்தான்.


உடனே டிம்பிள் மாஸ்டர் பெட் ரூமுக்குள் ஹரியைத் தேடிக்கொண்டு போனது. அங்கே ஹரி டவலை சுற்றிக் கொண்டு ரூம் கிளாசட்டின் முன்னே புது சோப்பை எடுத்துக் கொண்டிருக்க, தன் முன்னங் கால்களை உயர்த்தி ஹரி மேலே தாவ முயன்றது டிம்பிள்.


“ஹாஸ்பிடல்ல இருந்து வந்திருக்கேன் டிம்பிள். இப்படியே நீ என்னைத் தொட்டுக் கொஞ்சினா உன்னையும் குளிக்க வைப்பேன் பரவாயில்லையா?”


டிம்பிள் அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டது. ஹரி புன்னகையுடன் குளிக்கப் போனான்.
 
  • Love
Reactions: Shanbagavalli