அத்தியாயம் - 6

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,852
2,042
113
நெருப்பு ரதங்கள் - 6

திவாரி வழியும் எச்சிலை துடைக்கும் முன்னேற்பாடுகள் ஏதும் இன்றியே எல்லா டிவி திரைகளிலும் தோன்றினார். நீண்ட நாள் ஆசைப்பட்ட சிவப்பு சாந்து கிடைத்த விதவையின் நெற்றியினைப் போல அவரின் மார்பு குளிர்ந்திருந்தது.

கையைக் கொடு ரஜீவ். பப்ளிக் பிளேஸ்ல அத்தனை பேர் முன்னாடி என்ன தைரியமா பிஸ்டலைத் தூக்கி நமக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் அந்த தைரியம் வராது அஜய் பையா ரியல் டான். சேட்டு பான்பராக் அதக்கிக் கொண்டு மற்றொரு கையில் இரண்டு சூட்கேஸ்களை ரஜீவ்வின் கைகளில் திணித்தான்.

அந்த தைரியம்தான் எங்கள் மூலதமே ! அதேநேரம் ரஜீவ்வின் சாம்சங்கில் அஜய்யின் அழைப்பு.

சொல்லு அஜய்..

என்ன நிலவரம் அங்கே ? சேட் பணத்தை செட்டில் பண்ணியாச்சா ?

மும்பை முழுவதும் பயநெருப்பு பற்றிக்கொண்டு இருக்கிறது. ஒரு அரசியல்வாதி அவருக்கே பாதுகாப்பு இல்லை இனி சமானிய பொதுமக்களின் நிலைமை என்ன ? கேள்வியோடு செத்துப்போன திவாரியின் பூதஉடல் போட்டோவும் ஒளிபரப்பி டிபெட் ஷோக்கள் நடந்து கொண்டிருக்கிறது ஜரூராக. பணம் கைக்கு வந்திட்டது. ஹோட்டலில் எல்லா புட்டேஜ்களையும் வாங்கியாச்சு. எல்லாம் நிமிஷ நேரத்தில் நடந்திட்டது, அதனால யாரும் கவனிக்கலை, துப்பாக்கி சப்தம் கேட்டதும் நடைபெற்ற குழப்பத்தில் யார் உபயோகித்தார்கள் என்றே தெரியவில்லை என்று ஹோட்டல் சிப்பந்திகள் அனைவரும் ஒரேமாதிரி போலிஸில் சொல்லியாச்சு. ஆதாரச் சுவடுகளே இல்லாதபடி அழித்தாகிவிட்டது. இப்போ பணத்தோட எங்கே வரட்டும்.

பணம் உன்கிட்டேயே இருக்கட்டும். நான் சொன்னதைப் போல அந்த முதியோர் இல்லங்களுக்கு பணத்தை சேர்த்துவிடு பெயர் போடாமல் ! போனை அணைத்தான்.

என்ன சொல்றார் அஜய் பையா....?! சேட்டு குழைந்து கொண்டே,

ம்...உன் எதிரியைப் போட்டுத்தள்ளிட்டே, காரியம் முடிஞ்சிட்டது இனிமே அஜய் என்ன சொன்னா என்ன ?

ஹரே ரஜீவ் ஒரு கொலையையே அசால்ட்டா பண்ணிட்ட அவர் ஏன் இந்த பிசினஸில் நமக்கு ஒப்பு வரமாட்டேங்கிறார். நல்ல பணம் கொழிக்கும் இடம், கொல்கத்தாவில் ஏற்கனவே தமிழ்நாட்டு சில இடங்களில் புழக்கம் வந்திட்டது. எல்லாமே நீ சொன்னாமாதிரி அஜய் பாய் பேரில்தான். ஆனா இப்போவரைக்கும் அவர் இந்த தொழிலுக்கு ஒப்புக்கலை.

அவன் ஒப்புக்கலைன்னா என்ன நான் சரின்னு சொல்லிட்டேனே

அதுக்குத்தான் மாசாமாசம் ஒரு தொகையும் உனக்குத் தர்றேன்

சரி அப்புறம் என்ன கவலை சேட்...! ரஜீவ்வின் குரலில் எரிச்சல் மண்டியிருந்தது.

நாளைக்கு ஏதாவது பிரச்சனை வந்து அது அவர் காதுக்குப் போயிட்டா...?!

அந்தக் கவலையே உனக்கு வேண்டாம். மும்பையில் இன்டுஇடுக்குல இருக்கிற சின்னசின்ன ரவுடிகளெல்லாம் ஏதாவது ஒரு வகையில் அவங்க செய்யுற தப்புக்கு அஜய்யைத்தான் முன்னாடி வைக்கிறாங்க. போலிஸ்ஸ்டேஷன்லே எத்தனையோ கேஸூ அவன் பேருலே ஆனா ஆதாரம் ஏதுமில்லை. நூத்துக்கணக்கிலே இதுவும் ஒண்ணு. சரி நான் போறேன் கஸ்தூரிபாய் முதியோர் இல்லத்துக்கு பணம் அனுப்பனும்

செய்யுறது கொலை அந்த பணத்தில் சோசியல் சர்வீஸா பேஷ் பேஷ் ...சேட்டு சிரிக்க....?!

அஜய் வித்தியாசமானவன். இல்லைன்னா குறுகிய காலத்திலே மும்பையிலே ஏதோ ஒரு மூலையில் இருந்தவன் இப்போ இந்த மும்பையை ஆட்டிப்படைக்கிற சக்தியா மாறியிருக்க முடியுமா ?. ஒரு போன்காலுக்கு பயத்திலே அத்தனை பேரும் பணத்தைக் கொண்டு வந்து கொட்டத்தயார். ஆனா தேவைக்கு விரோதமா அஜய் என்னைக்கு கேட்டதே இல்லை. அவனின் வேலைக்கு தகுந்த கூலி மட்டும்தான். அதையும் பெரும்பாலும் அநாதை ஆசிரமங்களுக்கும் ஆதாரவற்றோர்களுக்கும் போக்கிடுவான். பெண்களையும் குழந்தைகளையும் அவன் கொன்னதே கிடையாது.

அப்படிப்பட்டவன் எப்படி இந்தமாதிரி ?

சேட் ஆணிவேரை அசைக்காதே நீ என்ன அவனை வைச்சு படமா எடுக்கப்போறே கதை கேட்கிறதுக்கு. சரக்கு வந்தாச்சான்னா சொல்லு எங்கே எப்படி டெஸ்பாட்ஜ் பண்ணனுன்னு நான் சொல்றேன். வரட்டா ?! சென்னை டீலரை நான் பார்க்கணும் அவனை வரச்சொல்லு நாளைக்கு உடனே...! சூட்கேஸை சுமந்து செல்லும் போது ரஜீவ் என்று மறுபடியும் அழைத்தான் பலராம் சேட்.

என்ன ?

இல்லை அஜய் பையாவுக்கு தெரியாம நீ செய்யற இந்தகாரியங்கள் எல்லாம் அவருக்குத் தெரிந்தா நானும் பாதிக்கப்படுவேன் அதனால கூடிய சீக்கிரம் பேசி சமாதானப்படுத்து. அவ்வளவுதான் விஷயம் என்பதைப் போல பலராம் அடகுகடை என்று பெயருக்கு வைத்திருந்த கடையின் முன்ஷெட்டரைத் திறந்தான் அவன்.

ரஜீவ்வின் மனதில் பலராம்சேட் கேள்வி ஓடியது. உண்மை தெரிந்தால் அஜய்யின் கோபத்தை தன்னால் தாங்கிக்கொள்ள இயலுமா ? அஜய்யின் கோபம் அவன் அறிந்ததே ?!

அவர்களின் கூட்டத்தில் இருந்த சுதேஷ் அஜய்யின் இன்னொரு கட்ட ஆள், நீட்டிய இடங்களில் பாய்வது அவனின் வேலை, மும்பையின் பாதிதெருக்கள் இவனின் புல்லட் சப்தம் கேட்டாலே அதிரும். ஆனால் பெண்கள் விஷயத்தில் மோசமானவன். சுதேஷ்ஷை காணவில்லை என்றால் அவனிருக்கும் பலான இடத்தினை கைகாட்டிவிடுவார்கள் அந்தளவிற்கு பெண்பித்தன்.

திரைமறைவில் இருந்தவரையில் பிரச்சனையில்லை ஆனால் அவனின் பார்வை கல்லூரிப்பெண் ஒருத்தியின் மேல் விழ, அவளைக் கடத்திவந்து அவனின் முரட்டுத்தனத்தில் அவள் இறந்துவிட விஷயம் தீயாய் பரவியது. தர்ணா போராட்டம் என்று வெடிக்க சுதேஷ் இதையெதையும் கண்டுகொள்ளாமல் மற்றொரு மோசமான இடத்தில்.

தவறு யார் செய்தது என்பதை உணர்த அஜய் அடுத்த சில நிமிடங்களில் அரைகுறை ஆடையோடு மூன்றாம்தர பெண்ணொருத்தியின் அணைப்பில் இருந்த சுதேஷ்ஷின் முன்னால், அறைக்குள் காலியாய் இருந்த குளியலறைத் தொட்டியினை சுதேஷ்ஷின் ரத்தம் நிரப்பிக்கொண்டு இருந்தது. நிமிஷத்திற்குள் நடந்துவிட்ட இந்த செயலில் சுற்றியிருந்தவர்கள் அதிர்ந்தனர். அதில் ரஜீவ்வும் ஒருவன்.

சுதேஷ் அஜய்க்கு எத்தனை முக்கியமானவன் என்று அவனுக்குத் தெரியும். இந்த மும்பை நகரத்தில் தங்களுக்குள் நட்பு ஏற்பட்ட பிறகு தன்னைத்தாண்டி சுதேஷ்ஷை அஜய் நம்பியதும் தெரியும் ஒரு பக்க நிழல் என்று இருந்தவன். தப்பு என்று தெரிந்ததும் நிமிஷ நேரம் கூட யோசிக்காமல் தண்டித்து விட்டான் என்றால், அவனுக்குத் தெரியாமல் நான் செய்யும் இந்தக்காரியம் தெரியவந்தால். ரஜீவ்வுக்கு நினைக்கும் போதே ஒரு நொடி பயபந்து உருண்டது நெஞ்சுக்குள் ஆனால் இப்படி பயந்து கொண்டே இருந்தால் கடைசிவரையில் அவன் காலுக்கு கீழே அவனிடும் கட்டளைக்கு அடிபணிந்தே வாழவேண்டியதுதான் என்றைக்கு இந்த மும்பை தன்னைக் கண்டு பயப்படுவது. சில கொள்கைகளை விட்டுக்கொடுத்தால் அஜய் இன்னமும் சம்பாதிக்கலாம். முட்டாள் சம்பாதித்த கொஞ்ச நஞ்சத்தையும் தானம் பண்ணுகிறான். எச்சரிக்கையும் காய் நகர்த்தி இந்த பரமபதத்தில் அவனை வெல்லவேண்டும் முடிந்தால் கொல்லவும் என்று நினைப்பு வந்தவுடனே ரஜீவ் மெல்லிய விசிலோடு பயணிக்கத் தொடங்கினான்.

பள்ளிக்கு எதிரில் தோளில் தொங்கிய ஜோல்னா பையும் நாலுநாள் தாடியுமாய் அவன் சுனிதாவைக் கண்டதும் முகம்மலர வருகிறான். அவளின் முகம் சுருங்கியது.

சுனிதா நானும் நாலுநாளா உன்கிட்டே பேசணுன்னு இருக்கேன் ஆனா நீ தள்ளிப்போறீயே ? காவ்யா எங்கே என்றான்.

சுனிதா அவனையே வெறித்தாள். என் பெயர் இவனுக்கு எப்படி தெரியும் ஒருவேளை காவ்யா சொல்லியிருப்பாளோ என்று யோசித்தாள். பிறகு காவ்யாவுக்கு என்ன நடந்ததுன்னு உனக்குத் தெரியாதா ? பொய் சொல்லாதே ஊருக்கே தெரிந்த விஷயம் உனக்கு எப்படி தெரியாம போகும் ? வெறுப்பை உமிழ்ந்தாள்.

சுனிதா நான் ஒருவாரம் ஊரில் இல்லை, காவ்யா என் காதலை ஏத்துக்கிட்டதும், அவளோட குடும்ப சூழ்நிலை எல்லாம் சொல்லிஎன்கூட உடனே வந்திடறேன்னு சொன்னா ?! வடநாட்டைச் சேர்ந்த நான் இங்கே மாமாவின் கடையை கவனிக்க வந்திருக்கிறேன் முதல்ல நம்ம விஷயத்தை எங்கம்மாகிட்டே சொல்றேன் அவள் நல்லவள் நம்மை ஏற்றுக்கொள்வாள் என்று சொல்லி கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ண போயிருந்தேன் அம்மா ஒப்புக்கிட்டாங்க நானே அவங்க வீட்டுலே வந்துபேசறேன்னு எங்கூட புறப்பட்டு வந்திட்டாங்க. அவளை அந்த நரகத்தில் இருந்து காப்பாற்றனுன்னு நான் ஆவலோட வந்து நாலுநாள் ஆச்சி காவ்யா எங்கேயும் கண்ணுலே படலை, அவங்க வீடு பூட்டியிருக்கு, யாருக்கும் எந்த தகவலும் தெரியலை. ஒருவேளை எங்க விஷயம் தெரிந்து அவங்க வீட்டுலே ஏதும் பிரச்சனை பண்ணிட்டாங்களா ?

சுனிதா அமைதியாக இருந்தாள். அன்று பள்ளியில் நடந்த களேபாரத்திற்குபிறகு காவ்யாவைப் பற்றி அக்கா சக்தி சொன்ன விவரங்கள். காவ்யா பள்ளிக்கு அருகாமையில் உள்ள ரயில்வே டிராக்கில் அரைகுறையான ஆடையில் சிதைக்கப்பட்டு தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறாள் என்றும் அவளுக்கு போதைமருந்து பழக்கம் இருந்திருக்கிறது என்றும் தெரியவந்திருக்கிறது உனக்கு ஏதாவது தெரியுமா என்று தன்னைக் கேட்டபோது அவளுமே விக்கித்துதான் போனாள்.

காவ்யாவா போதை மருந்து பழக்கம் கொண்டிருந்தாளா என்று மனம் ஏற்க மறுத்தது. என்னை யாரும் புரிஞ்சிக்கலை என்று ஏக்கமும், அவனுக்கு என் பிளஸ் நிறைய தெரியுதுடி என்ற சந்தோஷமான புன்னகை முகமும் மாறிமாறி வர, காவ்யாவிற்கு நடந்த விவரங்களைக் கூறினாள்.

கடவுளே....என் காவ்யாவிற்கா இப்படி ? அவளுக்கு வீட்டில் ரொம்ப பிரச்சனைன்னு தெரியும் நான்தான் ஒரு நல்ல முடிவோட வர்றேன்னு சொன்னேனே அதற்குள் இந்தப்பழக்கம் அவளுக்கு எப்படியேற்பட்டது என்று சுனிதாவிடம் கேட்ட அவனின் பழுப்பு நிற கண்களில் கலக்கம் தெரிந்தது.

அவளுக்கு பிடிக்குன்னு சாக்லேட்ஸ் எல்லாம் எடுத்துவந்தேன் ஆனா இப்போ.....அவன் முகத்தில் அறைந்து கொண்டு அழுதான். பையில் இருந்த சரிகைத்தாள் பேப்பர் எட்டிப்பார்த்தது. சட்டென்று சுனிதா அதை எடுத்தாள். இது இது...காவ்யா சாப்பிட்ட சாக்லேட்தானே ?!

ஆமாம் எங்க மாமாவோட பேக்டரியிலே ஸ்பெஷலா தயாரித்தது அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும் என்றான் சோகமாய்.

நான் இதை எடுத்துக்கவா ? காவ்யா இதை எனக்கு சாப்பிடக் கொடுத்தாள். ஆனா இந்த டேஸ்ட் எங்கேயும் நான் சாப்பிட்டதில்லை எனக்கு கிடைக்கவும் இல்லை. எங்கே வேண்டாம் என்று சொல்லிவிடுவானோ என்ற தவிப்பு அவளிடம்.

இனிமே இங்கே நான் இருக்கப்போறது இல்லை சொந்த ஊருக்குப் போறேன். காவ்யா பத்தி ஏதாவது தகவல் தெரிந்தால் உடனே இந்த எண்ணுக்கு போன் பண்ணு. காவ்யாவுக்காக எடுத்துவந்தேன். இதை ஒரு சகோதரனின் பரிசா வைச்சிக்கோ அவள் கரங்களில் சாக்லேட் பாக்ஸ் இரண்டையும், ஒரு காகிதத்தையும் திணித்தான். நான் வர்றேன் என்று திரும்பிப்பார்க்காமல் நடந்தான்.

சுனிதா அந்த சாக்லேட் பாக்ஸையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஒருவித ஆசையோடு அவளின் பார்வை மட்டும் நிமிர்ந்திருந்தால் தனக்கு அருகாமையிலேயே இது தனக்கான வலை என்று அவள் உணர்ந்திருப்பாள். ஆனால் விதி அந்தளவிற்கு அவளை மயக்கத்தில் ஆழ்த்தியிருந்தது.

ரதம் நகரும்.............