அத்தியாயம் - 6

rajeswari sivakumar

Moderator
Staff member
Mar 26, 2018
219
44
43
இதயம் -6
“எப்படி என்னோட ஐடியா?” வலப்புருவத்தை உயர்த்தி கெத்தாக கேட்ட மதியை சோம்பலாக பார்த்த நிலா,
“நல்லாவே இல்லை!” என்றாள் பட்டென்று.
என்னதான் நாள்தோறும் போனில் பேசிக்கொண்டிருந்தாலும் நெருங்கிய சொந்தங்களை நேரில் பார்த்து பேசுவதை போல வருமா? தன் தாய்,தந்தை,தங்கைகள் இவர்களிடம் தொலைபேசியில் தொடர்பில் இருந்தாலும் அதெல்லாம் நிலாவிற்கு தொலைதூர தொடர்பாகவே இருந்தது.மூப்பின் காரணமாக பெற்றோரிடம் நலவிசாரித்தலுக்கு மேல் வேறெதுவும் பேசமுடிவதில்லை.ஊரில் கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் தங்கைகளிடமும் அவர்களின் குடும்ப சுமைக் காரணமாக ஓரளவிற்கு மேல் பேசமுடியவில்லை.
இந்நிலையில் இருந்த நிலாவிற்கு மதியின் அறிமுகம் வரப்பிரசாதமாக அமைந்தது. இதுவரை தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் முதற்கொண்டு தற்பொழுது தினமும் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் இவள் மதியிடம் பகிர்ந்துக் கொள்வாள்.
அன்றொரு நாள் அப்படி பேசிக்கொண்டிருக்கும்போது நிலா, ‘வேலைக்கு போக வேண்டும்’ என்ற தன்னுடைய நீண்டநாள் ஆசையையும் அதற்கு கதிரிடமிருந்து வந்த எதிரொலியையும் மதியிடம் பகிர்ந்துக்கொண்டாள்.
நிலாவின் ஆசையை கேட்டவளோ அதற்கு தன்னால் ஆனதை செய்துவிட்டு ‘எப்புடி... என்னோட திறமை!’ என்று கெத்தாக கேட்டதற்குதான் அவளிடமிருந்து நோஸ்கட் வாங்கிக் கொண்டாள்.
நிலாவிற்கு காலையில் வீட்டில் அனைத்து வேலைகளையும் முடித்து வேலைக்கு அவசரவசரமாக கிளம்பி சென்று மாலையில் அதே அவசரத்தோடு வீட்டில் நுழைந்து அதன் பின் தன் கடமைகளை சரிவர முடித்து கதிரவனிடம் ‘சபாஷ்!’ வாங்க வேண்டும் என்பதுதான் முதற்குறிக்கோளாக இருந்தது.
வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.ஆனால் மதி சொன்ன, தன் தந்தைக்கு தெரிந்த ஆடிட்டருக்கு வீட்டில் இருந்தே அக்கவுன்ஸ் பார்த்துக் கொடுக்கலாம் என்ற ஐடியாவில் அதற்கான வாய்ப்புகள் இல்லாது போனதால், உடனே மறுத்தாள்.
கல்யாணத்திற்கு முன்பும், அது ஆன புதிதிலும் வேண்டுமானால் இவளுக்கு வேலைக்கு சென்று தன் காலில் சுயமாய் நிற்கவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கலாம்.ஆனால் இப்போதும் அந்த ஆசை இருக்கிறதா... என்றுக் கேட்டால் ஆமாம் என அடித்து சொல்லமுடியாத நிலையில்தான் இருக்கிறாள்.
வருடங்கள் செல்ல செல்ல சம்சார சாகரம் அவளை அதன் சுழலில் இழுத்துக் கொண்டது.இதுதான் தன் வாழ்க்கைமுறை என்ற வட்டத்திற்குள் வலம்வர இவள் பழகிக்கொண்டாள்.புலியை பூனையின் பழக்க வழக்கங்களில் பழக்கி, வீட்டில் வளர்த்தால் நாளடைவில் அது உள்ளத்தில் பூனையாகவே மாறிவிடக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்.புலிக்கே அந்த நிலைமை என்றால்... பூவைக்கு?
இப்போது இவளின் தேவை, என்னுடைய மனைவி மற்றவர்களை போல சாமார்த்தியமானவள் தான், அவளால் எதையும் சமாளிக்கமுடியும் என்ற பாராட்டையும் நம்பிக்கையும் கதிரவனிடத்தில் இருந்து பெறவேண்டும் என்பது மட்டும்தான்.
தன்னுடைய மறுப்பிற்கு காரணம் கேட்ட மதிக்கு, தன் எண்ணத்தை இவள் சொன்னதும்,”என்ன -க்கா நீங்க இப்படி சொல்றீங்க? எங்க இருந்து வேலை செய்தா என்ன? சொல்லப்போனா வீட்டில் இருந்துக்கொண்டே வேலை செய்வது எவ்வளவு வசதி தெரியுமா?” எனக் கேட்டாள்.
“நான் சொன்னதை நீ சரியா கவனிக்கலை மதி. எனக்கு வேலை செய்யனும்னு ஆசை இல்ல.வேலைக்கு போகனும்னுதான் ஆசை!” என்று தெளிவாக சொல்லி, கேட்டுக்கொண்டிருந்தவளை அதைவிட தெளிவாக குழப்பினாள் நிலா.
‘வேலை செய்யறது, வேலைக்கு போறது... இது ரெண்டும் ஒன்னு இல்லையா? வேற வேறையா? அது எப்படி ரெண்டும் ஒன்னு இல்லாம போகும்?’ நிலா குழப்பிவிட்டதில் தனக்குள்ளே பேசிக்கொண்டிருந்த மதியின் மைன்ட்வாய்ஸ் ஆகாஷிற்கு கேட்டது.
‘வழக்கமா என்னோட மூன்தான் இப்படி பேசி மத்தவங்க குழப்பிவிடும். இன்னைக்கு என் மூனுக்கேவா...!’ அதுவரை அவர்களின் உரையாடல்களை அமைதியாக அங்கே ஒரு மூலையில் தன் வேலையோடு வேலையாக கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு நிலாவின் எண்ணப்போக்கு நன்றாக புரிந்தது.அது கதிரவனால் வந்தது என்பதும் புரிந்தது.
என்னதான் பட்டணத்திலேயே படித்து இங்கேயே குடியிருந்தாலும் இவனின் வேர் அங்கே ஊரில் இருக்கும் கிராமத்தில் இருந்து தானே வந்தது. தன்னை போல அங்கிருந்து வந்த கதிரவனின் மனதை நிலாவை காட்டிலும் இவனால் சரியாக புரிந்துக்கொள்ள முடிந்தது.
பாசத்தை கூட முரட்டுத்தனமாக காட்டும் தன் தந்தையை போலவே கதிரவனும் இருப்பதுதான் இங்கு பிரச்சனை என்பது புரிந்தது. பாசத்தையே வெளிப்படையாக காட்டத்தெரியாத அந்த பட்டிக்காட்டானுக்கு காதலை எப்படி காட்ட தெரியும்? அது தெரியாததால்தான் இத்தனை வருடங்களாக கதிரவன் நிலாவிடம் அப்படி நடந்துக்கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தது.
இவனுக்கு தெரிந்தவரை கதிர், நிலாவை மட்டமாக நினைத்ததில்லை. அதேபோல கேவலமாகவும் நடத்தியதில்லை. ஆனால் என்ன... ரோஷ்னியிடம் அவனின் நடவடிக்கைகள் எப்படி இருக்குமோ அப்படியே நிலாவிடமும் இருக்கும்.மகளை, அங்கே செல்லாதே, இங்கே போகாதே... அப்படி செய், இதை செய்... என்று பொத்தி பொத்தி பொறுப்பாக பார்த்துக் கொள்வதை போல மனைவியும் பார்ப்பதுதான் இங்கு நிலாவிற்கு தொல்லையாகிப்போனது.
அப்படி நடக்க வேண்டாமென கதிரிடமோ... அல்லது இதுதான் உங்கள் கணவரின் எண்ணம் என்று நிலாவிடமோ இவனால் வெளிப்படையாக பேசிடமுடியாது. அந்த அளவிற்கு ஒரு மூனாவது மனிதன் அவர்களிடம் உரிமை எடுத்துக் கொள்வதை இருவருமே விரும்பமாட்டார்கள். அதிலும் என்னதான் சகோதரனாக பழகினாலும் வேறொரு ஆடவனிடம் கணவனைப் பற்றி பேசுவதை நிலா நிச்சயமாக விரும்பமாட்டாள் என்பது தெள்ளதெளிவு. அப்படி இருக்க, பிரச்சனைக்கு முடிவு எப்படி கிடைக்கும்? என்று யோசித்தவனுக்கு கதிரின் சமீபத்திய நடவடிக்கைகளை பற்றி நிலா கூறியது நினைவிற்கு வந்தது.
ஒருவழியாக மனஸ்தாபம் பெரியதாக உருவெடுக்கும் முன்பே கதிருக்கே விஷயம் புரியத் தொடங்கி விட்டது என்பது தெரிந்தது.இனி எல்லாம் அவனே பார்த்துக் கொள்வான் என நம்பியவன், இதை மதியிடம் கூறி, நிலாவிற்கு எந்த வேலைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டாமென சொல்ல எண்ணினான்.
இவளின் பதிலில் தலை சுற்றி போய் அமர்ந்திருந்த மதியிடம் வேறு நல்ல வேலை பார்த்துவைக்க கூறிவிட்டு, வீட்டிற்கு சென்றாள் நிலா.அவள் சென்றதும் சொல்ல நினைத்த அனைத்தையும் ஆகாஷ் சொல்லி முடித்ததும்,
“நிலா-க்கா ரொம்ப லக்கி இல்ல. அதான் அவங்களுக்கு சார் போல ஒரு ஹஸ்பன்ட் கிடைச்சியிருக்கார்.எனக்கு கூட முதலெல்லாம் சாரை பத்தி அவங்க சொல்லும்போது என்னடா இப்படி ஒரு மனுஷன் இருப்பாரான்னு கோபம் வரும்.ஆனா நீங்க சொன்னதை கேட்டதும்தான் இப்படி ஒரு மனுஷனான்னு ஆச்சரியமா இருக்கு” என சந்தோஷமிகுதியில் வளவளத்தவள் திடீரென,
“ஹும்... ஆமா, நீங்க ஏன் அப்படி இல்ல?” என கேட்டாள்.
‘அதானே... என்ன இன்னும் வேதாளம் நம்மமேல ஏறலையேன்னு பார்த்தேன்.இதோ... வந்தாச்சு. இவ தொல்லை தாங்கலடா சாமி!’ பெருமூச்சு விட்டவன், “நான் எப்படி இல்ல ஸ்கைமூன்?” என பொறுமையாக கேட்டான்.
அவனின் அளவுக்கதிகமான பொறுமையே இவளுக்கு அனைத்தையும் உணர்த்த,”தெரிந்துக் கொண்டே கேள்வி கேட்டா எனக்கு பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியாதா?” என்று கோபமாக சொன்னாள்.
“சத்தியமா எனக்கு தெரியல ஸ்கைமூன்” என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னவனை நம்பாத பார்வைப் பார்த்தவள்,
“அதான்... சார் போல ஓவர் ப்ரோடேக்டிவா நீங்க ஏன் இல்ல” எனறாள்.
“யார்கிட்ட எப்படி நடந்துக்கனுமோ அப்படிதான் ஸ்கைமூன் நடந்துக்க முடியும். சிஸ்டர் ரொம்ப அமைதி, பயந்த சுபாவம்.அதனால அவங்களை அப்படி ப்ரோடேக்ட் பண்ணனும்.ஆனா உன்னை...”என்றவன் எச்சரிக்கையாய் நாலடி பின் சென்று,
“உன் வாய்கிட்ட இருந்துதான் எல்லோரையும் ப்ரோடேக்ட் பண்ணனும் மூன் பேபி. தேவதைக்கு பாதுகாப்பு தேவை. ராட்சஸிக்கு...” என்று சொல்லிவிட்டு அவசரமாக ரூமிற்குள் ஓடி சென்று கதவடைத்துக் கொண்டான்.
“ஆகாஷ்....யாரு... நானா ராட்சஸி!” என்று கத்தி கொண்டே கதவுகளை படபடவென்று தட்டினாள். சிறிது நேரத்தில் தட்டி,தட்டி ஒய்ந்து போனவள்,
“கதவை திறக்க போறீங்களா இல்லையா?” என்றபோது அவளின் குரலில் இருந்தே கோபத்தின் அளவு குறைந்துவிட்டதை அறிந்தவன்,
“அடிக்க மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு வெளிய வரேன்” என்று உள்ளிருந்து டீல் பேசினான்.
“அதெல்லாம் பண்ண முடியாது!”
“சரி அப்ப வலிக்காம அடிப்பேன்னு பண்ணு வரேன்!”
இதைக் கேட்டு சத்தமின்றி சிரித்தவள் ‘ஜோக்கர்’ என வாய்க்குள் முனகி, ”அதுவும் முடியாது!” என்றாள்.
“ஓகே... ரெண்டு அடியோட நிப்பாட்டிப்பேன்னு பண்ணு. வெளிய வரேன்!” என்று படிப்படியாய் இவன் பேரத்தை குறைக்கவும்,
கலகலவென சிரித்தவள்,”ச்சி... உங்ககிட்ட கோபம் கூட படமுடியல. வெளிய வாங்க-ப்பா!” என்ற போது அவளையும் மீறி குரல் கொஞ்சியது.
அவளையே பார்த்துக் கொண்டு வெளியே வந்தவன், “ஆமாம் ஸ்கைமூன். நீ ராட்சஸிதான்! இருபத்தியேழு வருடங்களாக யாராலும் அசைக்க முடியாத என்னை பார்த்த முதல் பார்வையிலேயே அடித்து வீழ்த்திய நீ... என்னோட செல்ல ராட்சஸியேதான்!” என்று கண்களில் காதல் கசிந்துருக அவளை நோக்கி கைகளை விரிக்க,ஓடி சென்று அதில் பாந்தமாக இவள் பொருந்திக் கொண்டாள்.
அன்று வழக்கம் போல கதிர் ஹாலில் இருந்த டிவியில் ஒருகண்ணையும், டைனிங் டேபிளில் அமர்ந்து எதையோ வரைந்துக் கொண்டிருந்த மகளின் மேல் ஒரு கண்ணையும் வைத்திருந்தான்.அப்போது அவர்கள் ஃப்ளாட்டின் செகரெட்டரி இவனிடம் அலுவல் விஷயமாக சில சந்தேகங்களை கேட்டு வந்தார்.
அவரை வரவேற்று அமரவைத்து, உள்ளே வேலையாய் இருந்த நிலாவை இவன் அழைக்க, வந்தவள் அவருக்கு வேண்டிய உபசாரங்களை செய்தாள்.அவர் வந்த வேலை முடிந்ததும் இவர்களிடம் தங்களின் குடியிருப்பில் நடக்கவிருக்கும் பொங்கல் கொண்டாட்டங்களில் கண்டிப்பாக கலந்துக் கொள்ளவேண்டுமென்று அழைப்பு விடுத்து சென்றார்..
அதுவரை அமைதியாக இருந்த ரோஷ்னி, “அப்பா! நீங்க இப்ப அம்மாவை என்ன சொல்லி கூப்பிட்டீங்க?” என்றாள்.
எதற்கு இப்படி கேட்கிறாள் என்று இருவரும் அவளை புரியாது பார்த்தபோதும்,கதிர் அவளின் கேள்விக்கு பதிலளித்தான்.
“நீங்க ஏன்-ப்பா ஆகாஷ் மாமா போல இல்ல?” என அதிரடியாய் அடுத்து அவள் கேட்டதும்.இந்த பாப்பா ஏன் இப்படி வம்பை இழுத்து விடறா...என்று நிலா ஆடிப் போனாள்.
நிலாவை போல மகளின் பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ளாத கதிர், ”எப்படி இருக்கனும் நீங்க சொல்லுங்க.நான் அப்படியே இருக்கேன்” என்றவன் மகளை தன்னருகில் இழுத்துக் கொண்டான்.
“நீங்க அம்மாவை வெண்ணிலான்னு சொல்லாதீங்க ப்பா. மாமா அக்காவை ஸ்கைமூன்னு சொல்வதைபோல,இனிமே நீங்க அம்மாவை வைட்மூன்னு சொல்லனும்” என்று கட்டளையிட்டாள்.
அதைக்கேட்டு, “அப்படியா.. உங்க அம்மா என்ன அவ்வளவு வைட்டாவா இருக்காங்க?” என இவன் கணவனாய் ஆராய்ச்சி பார்வை பார்க்க,அதில் முகம் சிவந்தாள் நிலா.
தந்தையின் கள்ளத்தனம் தெரியாத மகள், ”வான்மதி... ஸ்கைமூன், வெண்ணிலா... வைட்மூன். சூப்பரா இருக்கு இல்ல-ப்பா” என்று ஆர்ப்பரித்தாள்.அதற்கு தந்தை ஆமோதிப்பாய் தலையசைக்கவும், நிலா எவ்வளவு தடுத்தும் கேட்காது, அவளின் புதிய பெயரை மதியிடம் கூற, கதிரிடம் சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.
“குட்டி பிசாசு! சொல்ல,சொல்ல கேட்காம ஓடறதை பாரேன்! வரட்டும் நல்லா நாலு சாத்து சாத்தறேன். சும்மாவே இந்த மதிக்கு வாய் பத்து ஊருக்கு போகும். இதில் இவள் வேற இந்த பெயரை சொன்னா... நாளைக்கு என்னை ஓட்டி எடுப்பாளே...” என்றுப் புலம்பிக் கொண்டே உள்ளே சென்றாள்.
மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தவனின் காதில் இது தெளிவாக விழுந்து புன்சிரிப்பை வரவைத்தது.அன்று கதிர் எரிந்து விழுந்ததிலிருந்து அவன் முகம் பார்க்க மறுத்தாள் நிலா. முன்பெல்லாம் எப்படி பேசினாலும் எதையும் கண்டுக்கொள்ளாது கடமையாய் தன் பணியை மட்டும் செய்துக் கொண்டிருந்தவளிடம் கதிரின் சமீபத்திய மாற்றம், இந்த மாற்றத்தை கொண்டுவந்திருந்தது.உரிமையாக அவனிடம் ஊடல் கொள்ளும் இந்த நிலா கதிரவனுக்கு புதியவளாய் தெரிந்தாள்.
இதுவரை எதையும் பிரதிபலிக்காது நிர்மலமாய் இருந்த நிலாமுகம், இப்போது கோபத்தையும் கொஞ்சலையும் சிணுங்கலையும் இவனுக்கு காட்சியாக்கியது.இதெல்லாம் திடீரென முளைத்த ஆசையின் கற்பனையா... அல்லது நிஜமா... என்று தெரியாத போதும் அனைத்தையும் இவன் ரசித்தான்.
சொன்னதை மட்டுமே முன்பு செய்துக் கொண்டிருந்தவள், தற்போது அவளின் எண்ணங்களை செயலில் காட்டினாள். அன்று திட்டியபிறகு, அவன் தானாக பேச வந்தாலும் முகம் பார்க்காது பதிலளித்து விலகி சென்றாள். அவனிடம் தனக்கிருக்கும் உரிமையை நிலைநாட்ட தொடங்கியிருந்தாள். இப்படி உயிர்ப்புடன் இருக்கும் நிலாவை இவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளை சீண்டி பார்க்க இளவயது காளையை போல ஆவல் கொண்டவன்,
“நான் உன்னை இனிமே வைட்மூன்னு சொல்லட்டா? உனக்கு ஓகே வா?” என்று கேட்டுக் கொண்டு அவள் பின் சென்று நின்றான்.
தங்கள் அறையில் இருந்த கபோர்டில் மடித்த துணிகளை வைத்துக் கொண்டிருந்தபோது, காதோரம் எதிர்பாராத வேளையில் கணவனின் குரல் கேட்டதும் திடுக்கிட்டவள் கையில் வைத்திருந்த துணிகளை கீழே விட்டாள்.அதை பார்த்தவன் அவளுக்கு உதவுவதற்கு குனிந்தபோது அவளும் அதையே செய்ய இருவரின் முகமும் அருகருகே வந்தது.அப்போது கதிரின் பார்வை இவளை ஏதோ செய்ய கண்களை தாழ்த்திக் கொண்டாள்.அவளின் முகத்தை பற்றி நிமிர்த்தியவன்,
“கேட்டேனே... உனக்கு ஓகே வா?” என்றான் கிசுகிசுப்பான குரலில்.
கணவனின் குரலும் அருகாமையும் பாவையை தன்னிலை மறக்க செய்ய அவன் என்ன கேட்கிறான் என்று புரியாமலேயே சம்மதமாய் தலையை ஆட்டினாள்.மனைவின் நிலை அறிந்தவன் மந்தகாசமான புன்னகையை வீசி, ”எதுக்கு இப்ப ஓகே சொன்ன?” என்று குறும்பு கூத்தாடும் குரலில் கேட்டான்.
இதில் பேந்த பேந்த விழித்தவளின் கன்னங்களை ஆசையாக தடவியவன், ”நீ இப்படி பார்க்கும்போது ‘க்யூட்மூன்!’ சொல்ல தோணுது எனக்கு” என்றவன் அவளின் கைகளை பிடித்து தூக்கி தோள்களை அணைத்துக் கொண்டான்.அதில் பாந்தமாய் அடங்கியவளின் உள்ளம் காடுமேடெல்லாம் அலைந்து திரிந்து வீடுவந்து சேர்ந்த நிம்மதியை அடைந்தது
 
  • Like
Reactions: lakshmi

lakshmi

Active member
Staff member
May 9, 2018
306
72
43
முன்பு பார்த்த கதிரவனா இது தீடீரென்று காதல் மன்னனாகி விட்டார்.
 
  • Like
Reactions: rajeswari sivakumar

rajeswari sivakumar

Moderator
Staff member
Mar 26, 2018
219
44
43
முன்பு பார்த்த கதிரவனா இது தீடீரென்று காதல் மன்னனாகி விட்டார்.
இந்த கதிரவனை உங்களுக்கு பிடிக்கலையா லக்ஷ்மி? :D