Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 5 | SudhaRaviNovels

அத்தியாயம் - 5

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
216
146
43
அத்தியாயம் -5

ராமதுரை விஷயத்தை சொல்லிவிட்டு போனை வைத்துவிட, வேலனுக்கு மனம் கனத்துப் போனது. மகளுக்கு கூடி வந்த முதல் வரனே தடைப்பட்டு போனது அதிர்வை கொடுத்தது.

“மீனா! மாப்பிள்ளை என்ன சொன்னார்ன்னு கேளு உன் புருஷன் கிட்ட”.

“என்னங்க சொன்னார் அண்ணன்? நீங்க ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”

“விஜய் வீட்டில் வேற பெண்ணை பேசி முடிசிட்டாங்கலாம்”.

“என்ன! புரியலங்க! என்ன சொல்றீங்க?”

அங்கயற்கன்னி எழுந்து வந்துவிட “என்ன சொன்னார்ன்னு ஒழுங்கா சொல்ல சொல்லு” என்று கடிந்து கொண்டார்.

அன்னையை பரிதாபமாக பார்த்துக் கொண்டே “திடீர்னு போன் பண்ணி நாங்க வேற பெண்ணை பார்த்து முடிவு பண்ணிட்டோம்னு மட்டும் சொல்லி இருக்காங்க”.

பேத்தியின் திருமணபேச்சு நின்று விட்டதைக் கேட்டு அதிர்ந்து போனவர் “அவனுங்களுக்கு கூறு கெட்டுப் போச்சா? நாமளா போய் நம்ம பெண்ணை கட்டிகோங்கனு கேட்டோம். தானே வந்து கேட்டுட்டு இப்போ வந்து வேற பெண்ணை முடிசிட்டோம்னு சொன்னா என்ன அர்த்தம்?”

“இது ரொம்ப அநியாயங்க! எதுக்கு நம்ம பெண்ணை விட்டுட்டு வேற பெண்ணை முடிச்சாங்களாம்? காரணம் ஏதாவது சொல்லனுமா இல்லையா?” என்றார் மீனா கோபமாக.

“நீ போனை எடு மீனா. நானே சம்மதி அம்மா கிட்ட பேசுறேன். எதுக்கு என் பேத்தியை வேண்டாம்னு சொன்னாங்கன்னு தெரியனும்?”

அப்போது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த தாட்சாயினியின் மனதிற்குள் பெரும் நிம்மதி எழுந்தது. பாட்டியின் அருகே சென்றவள் “வேண்டாம் பாட்டி! இதை அப்படியே விட்டுடுங்க. அவங்க வேண்டாம்னு முடிவு பண்ணின பிறகு நாம எதுக்கு காரணத்தை கேட்கணும். ப்ளீஸ்! விட்டுடுங்க”.

அவள் திருமணப்பேச்சு நின்று விட்டதில் சோர்வடைந்து விட்டாள் என்று எண்ணி “அவ சொல்றதும் சரி தான். இனி, யாரும் அவர்களைப் பற்றி பேச வேண்டாம். மீனா உன் புருஷன் கிட்ட சொல்லி என் பேத்திக்கு அந்த விஜயை விட நல்ல மாப்பிள்ளையா பார்க்கச் சொல்லு. அவன் கல்யாணம் நடக்கும் முன்னே என் பேத்திக்கு ஜாம்ஜாம்னு நடக்கணும் சொல்லிட்டேன்!” என்று சத்தம் போட்டுவிட்டு பேத்தியை கையோடு அழைத்துக் கொண்டு தன்னறைக்குச் சென்றார்.

அவளே தீபனிடமிருந்து எந்த செய்தியையும் அறிந்து கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்க, பாட்டி சொன்னது உள்ளுக்குள் கலவரத்தை கொண்டு வந்தது. விஜய் உடனான திருமணப்பேச்சு நின்று போனதில் நிம்மதி அடையலாம் என்று பார்த்தால் பாட்டி அடுத்ததை துவங்கவும் உள்ளுக்குள் பயந்து போனாள்.

அதே நேரம் மேலதிகாரியின் முன் நின்றிருந்தான் தீபன். அவனுடைய கவனம் அவர் பேசுவதில் இருந்தாலும் மனமோ அவளைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்தது. இப்போது வந்திருக்கும் வேலையானது அதிக சவால்கள் நிறைந்தது. உடனடியாக முடித்துக் கொடுத்துவிட்டு அவளைப் பார்க்க ஓடிவிட முடியாது. தன்னைப் பற்றிய எந்த தகவலையும் அறிந்து கொள்ள முடியாமல் அவள் தவித்துக் கொண்டிருப்பாள்.

ஆனந்திடம் தங்களைப் பற்றி கூறி விடலாமா என்றும் யோசித்தவன், அது சரி வராது என்று முடிவெடுத்தான். நேரில் பேசி சொல்வது வேறு. எங்கோ அமர்ந்து கொண்டு தங்களின் காதலை சொன்னால் அவன் எப்படி உணருவான் என்று தெரியாது. அதன் பின்னர் அதிகாரி பேசுவதில் கவனம் வைத்து அவரிடம் மேற்கொண்டு நடக்க வேண்டியவற்றை பேசிவிட்டு வெளியே வந்தவனுக்கு ஒரு ஐடியா தோன்றியது.

உடனே அதை செயலபடுத்த முடிவு செய்தான். ஆனந்தின் எண்ணிற்கு அழைத்தான்.

“மச்சான்! என்னடா அதிசயமா இருக்கு? சென்னை போனா போன் பண்ணவே மாட்ட. என்ன விஷயம்-டா?”

“விஷயம் இல்லாம பண்ணுவேனா? இங்கே ஒரு முக்கியமான கேஸ் விஷயமா தான் கூப்பிட்டிருந்தாங்க.

அந்த கேஸ் டீடைல்ஸ் பார்த்ததும் மனசு பதறி போச்சுடா. அது தான் உன்கிட்ட பேசலாம்னு வந்தேன்”.
“என்னடா சொல்லு”.

மெதுவாக அந்த கேஸ் பற்றிய சிலவிபரங்களை மேலோட்டமாக சொல்லியவன் “வெளில போகிற பொண்ணுங்களுக்கு கையில மொபைல் இருக்கிறது ரொம்ப அவசியம். நீ கூட உன் பாப்பாவுக்கு உடனே ஒரு மொபைல் வாங்கி கொடுத்திடு” என்றான் நைச்சியமாக.

“ம்ம்...அதுவும் நல்லது தான். ஆனா பாப்பா எங்கேயும் தனியா போக மாட்டா”.
 
  • Like
Reactions: Kothai suresh

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
216
146
43
அவன் அப்படி சொன்னதும் “ம்ச்...வாங்கி கொடுத்திடு மச்சான். அவங்க பாதுகாப்புக்கு நல்லது”.

“ம்ம்...சரி-டா. அப்புறம் அந்த விஜய் வீட்டில் பாப்பாவை விட்டுட்டு வேற பெண்ணை முடிச்சிட்டாங்க-டா. தாட்ச்சு ரொம்ப வருத்தமா இருக்கா” என்கிற செய்தியை அவன் காது குளிர கூறினான்.

உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டாலும் “அவனை விட நல்ல பையனா கிடைப்பாங்க விடு. சரி நான் சொன்னதை மறந்திடாதே. போன் வாங்கி கொடுத்திட்டு எனக்கு மெசேஜ் போடு”.

“சரி-டா”.

அவன் போன் வாங்கி கொடுத்து விட்டால் அவளுடைய நம்பரை எப்படியும் எடுத்து விடலாம். ஊரில் கடை வைத்துள்ளவர்களை அவனுக்கு நன்றாக தெரியும் என்பதால் எப்படியாவது அவளின் எண்ணை வாங்கி விடலாம் என்கிற நம்பிக்கையுடன் சென்றான்.

மகளை வேண்டாம் என்று சொல்லிச் சென்றதில் லேசான அழுத்தத்தில் இருந்தார் வேலன். அதோடு ஆனந்த்திற்கு எதுவும் கொடுக்க கூடாது என்று மறுக்கும் அன்னையை எண்ணி சோர்ந்து போயிருந்தார். ஆனால் யார் தடுத்தாலும் அவனுக்குத் தேவையானதை செய்து விட என்று உறுதியாக இருந்தார். அதற்கான வேலைகளையும் ஆரம்பித்திருந்தார்.

பெரிய அளவில் சொத்துக் கொடுப்பதை வீட்டில் உள்ளவர்களும், தங்கையும் தங்கை கணவரும் கூட விரும்ப மாட்டார்கள். அதனால் தான் முதன் முதலாக தொடங்கிய அந்த சிறிய கம்பனியை அவன் பெயருக்கு மாற்றிக் கொடுத்து முதலாளி ஆக்கி விடலாம். அதன் மூலியமாக அவனுடைய எதிர்காலத்திற்கு தேவையானதை செய்து விட்ட திருப்தி எழும். அதனால் வக்கீலைப் பார்த்து ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

அங்கயர்கன்னியும் மீனாட்சியும் மிகவும் சோர்வுடன் இருந்தார்கள். ரம்யாவின் அண்ணன் நெருங்கிய சொந்தம் என்பதால் எந்த பிரச்சனையும் வந்துவிடாது என்பதில் உறுதியாக இருந்தவர்களை இந்தச் செய்தி அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. அதிலும் தாட்சாயினியும் உற்சாகமில்லாமல் இருப்பது அவர்களை குற்ற உணர்விற்கு தள்ளியது.

“குழந்தை இப்படி இருக்கிறதை என்னால பார்க்க முடியல மீனாட்சி. அவள் மனசில என்னென்ன நினைச்சாளோ? முதல் இடமே தட்டிப் போறது பெரும் கொடுமை”.

“ஆமாம் அத்தை! நம்ம கிட்ட காட்டிக்கலேன்னாலும் அவள் மனதில் வருத்தம் இருக்கு”.

“உன் புருஷன் இன்னும் என்ன பண்றான்? அந்த தரகரை கூப்பிட்டு பேச வேண்டியது தானே?”
“அவரும் வருத்தமாக தான் இருக்கார் அத்தை”.

“நீ உன் போனை எடுத்திட்டு வா. நானே அவன் கிட்ட பேசுறேன். என் பேத்தி முகத்தில் சந்தோஷத்தைப் பார்க்கணும்”.

மீனாட்சி சென்று போனை எடுத்து வந்து அவர் கையில் கொடுக்க, தரகருக்கு அழைத்துப் பேச ஆரம்பித்தார்.

“நானே கூப்பிடலாம் என்று இருந்தேங்கம்மா”.

“சொல்லு மாதவா! இன்னமும் ஒரு ஜாதகம் கூடவா வரல என் பேத்திக்கு?”

“அப்படி இல்லைங்கம்மா நம்ம பாப்பாவுக்கு ஏப்பை-சாப்பையா பார்த்திட முடியுமா? இப்போ தான் காஞ்சீபுரம் பக்கம் பெரிய மிராசுதார் குடும்பத்துல கேட்டிருக்காங்க. அவங்களுக்கு போட்டோவைப் பார்த்தே பெண்ணை பிடிச்சு போச்சு. எப்போ பார்க்க வரலாம்னு கேட்டாங்க. ஐயாவுக்கு கூப்பிட்டு எல்லா விவரமும் சொன்னேன். மாப்பிள்ளை போட்டோ அவங்க குடும்ப விவரம் எல்லாம் சொல்லி இருக்கேன். நீங்க பேசிட்டு சொல்லுங்கம்மா”.

“சரி மாதவா!” என்றவர் போனை வைத்துவிட்டு “இப்போ தான் என் மனசு குளிர்ந்திருக்கு மீனா. சீக்கிரம் உன் புருஷனுக்கு போனை போட்டு வீட்டுக்கு வர சொல்லு. மாப்பிள்ளை வீட்டைப் பற்றி தெரிஞ்சுகிட்டு மேற்கொண்டு ஏற்பாடு செய்வோம்”.

மீனாட்சியின் முகத்திலும் லேசான மலர்வு தெரிய, உடனே கணவருக்கு அழைத்து வீட்டிற்கு வர சொன்னார். அந்நேரம் பாட்டியிடம் பேசலாம் என்று கதவருகே வந்து நின்றவளுக்கு அனைத்தும் காதில் விழுந்தது. விஜய் உடனான திருமணப் பேச்சு நின்று போனதில் ஆசுவாசம் அடைய விடாமல் அடுத்தது வந்து நிற்பதை பார்த்து மனம் உடைந்து போனாள்.

அமைதியாக அங்கிருந்து தன்னறைக்குச் சென்று அமர்ந்து கொண்டாள். உள்ளம் எகிறி குதித்துக் கொண்டிருந்தது. எப்படியாவது அவனை தொடர்பு கொள்ள வேண்டும். ஆனந்தின் போனிலிருந்து அவனுடைய எண்ணை அறிந்து கொண்டு கோவிலுக்கு செல்வது போல வெளியே சென்று அவனிடம் பேசிவிடலாம் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

வேலன் சீக்கிரமே வீட்டிற்கு வந்துவிட, மாப்பிள்ளை வீட்டினரைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் பகிர்ந்து கொண்டார். அதை கேட்டு பெண்கள் இருவருக்கும் திருப்தி. மாப்பிள்ளையும் பார்ப்பதற்கு நன்றாக இருந்தான்.
 
  • Like
Reactions: Kothai suresh

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
216
146
43
“மாப்பிள்ளை போட்டோவை இப்போ தாட்ச்சு கிட்ட காண்பிக்க வேண்டாம்னு நினைக்கிறேன் மீனா. நீ என்ன சொல்ற? நீங்க என்னம்மா சொல்றீங்க?”

“ஏங்க அவளுக்கும் பார்க்கனும்னு தோணும் இல்லையா?”

“இல்ல மீனா அவன் சொல்றது சரி தான். அவள் நேரா பார்த்துக்கட்டும். உன் புருஷன் கிட்ட சொல்லி இந்த வெள்ளிக்கிழமை அவங்களை வர சொல்லி சொல்ல சொல்லு”.

“சொல்லிடுறேன்-மா. நீங்க மற்றதெல்லாம் ஏற்பாடு பண்ணிடுங்க”.

அவர்கள் பேசுவது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவளின் மனம் ஆனந்திடம் இருந்து எப்படி தீபனின் எண்ணை எப்படி எடுப்பது என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தது.

மீண்டும் வீடு உற்சாகத்தில் நிறைந்திருந்தது. ஆனந்த் வந்ததும் அவனிடமும் பகிர்ந்து கொண்டார்கள். அவனுமே பெண் பார்க்க வருபவர்களுக்கு என்னென்ன ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். தானே அனைத்தையும் பார்த்துக் கொள்வதாக வேலனிடம் கூறி விட்டான். அதைக் கண்டு அங்கயர்கன்னி தோளில் முகத்தை இடித்துக் கொண்டு நகர்ந்து விட்டார். அப்பாவும், மகனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

தன்னறைக்கு சென்றவனை தடுத்து நிறுத்தியது அவளின் குரல்.

“அண்ணா! ஒரு நிமிஷம்!”

“என்ன பாப்பா?”

“உங்க போன் தரீங்களா? என் பிரெண்ட்டுக்கு பேசணும். பேசிட்டுத் தரவா?”

அவள் அப்படி கேட்டதும் காலையில் தீபன் கூறியது நினைவிற்கு வர “இந்தா பிடி மெதுவா பேசிட்டு கொடு. நாளைக்கே கடைக்கு அழைச்சிட்டு போய் உனக்கு ஒரு போன் வாங்கி தரேன்”.

“ஐயோ அண்ணா! அதெல்லாம் வேண்டாம். பாட்டிக்கு பிடிக்காது”
.
“பாட்டிக்கு ஏன் தெரியனும்? அவங்களுக்கு தெரியாம வச்சுக்கோ”.

“ம்ம்...சரி அண்ணா!” என்றவள் போனை எடுத்துக் கொண்டு தன்னறைக்கு சென்று விட்டாள்.

கதவை அழுந்த சாற்றிவிட்டு தன்னவனின் நம்பரை தேடி எடுத்தாள். டைரியில் அதை குறித்துக் கொண்டவளின் மனம் அப்பொழுதே அவனிடம் சென்றடைந்தது போல உற்சாகம் அடைந்தது. ஆனந்திற்கு சந்தேகம் எழுந்து விடக் கூடாது என்பதால் டைரியில் இருந்த தோழியின் எண்ணிற்கு அழைத்துப் பேசிவிட்டு வைத்து விட்டாள். அவளது எண்ணமெல்லாம் மறுநாள் அவனிடம் பேசப் போகும் வார்த்தைகளை சிந்திக்க ஆரம்பித்திருந்தது.
 
  • Like
Reactions: Kothai suresh

Kothai suresh

Member
Jan 26, 2022
59
18
8
ஒண்ணு நல்லபடியா தடங்கித்தேன்னு பார்த்தா அடுத்து ஒண்ணு வருது
 
  • Love
Reactions: SudhaRavi50