Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 5 | SudhaRaviNovels

அத்தியாயம் - 5

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,826
113
அவளிடம் சொல்லிவிட்டானே தவிர, அவளின் திகைப்பான பார்வையே மனதினில் ஓடியது. ‘நான் என்ன பேசப் போறேன்னு நினைப்பா? அவ நின்னதைப் பார்த்தா அதிர்ச்சி தெரிந்தது.

எப்படி அவளிடம் சொல்லப் போகிறோம் என்று யோசித்து யோசித்துத் தலை வேதனை அடைய இரு கைகளாலும் தலையைப் பிடித்தபடி கட்டிலில் அமர்ந்துவிட்டான்.

பத்து பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு வீட்டினில் சுற்றி வந்த குருமா வாசத்தில் அவன் வயிறு சப்தம் போட மெல்ல எழுந்தான். ‘குருமா பண்ணி யிருப்பா போலருக்கு.பசி வேற வயிற்றைப் பிடித்து இழுக்குது. இப்போவே போன் பண்ணினாதான் அரைமணி நேரத்திலேயாவது கொண்டு வருவான். அதுக்குள்ளே பசி கெண்டை ஏறிடும்’ என்று நினைத்துக் கொண்டு ஹோட்டலுக்குப் போன் செய்தான்.

“ம்ம்..ஆமாங்க அந்தப் பிளாட்லே இருந்துதான் கூப்பிடுறேன்.ரெண்டு ரொட்டி ஒரு குருமா அனுப்பிடுங்க.”

வெளியில் அவன் வரவுக்காகக் காத்துக் கொண்டிருந்த ஸ்ருதியின் காதில் அவன் பேசியது விழ, ‘அடபாவி! நான் இவன் வருவான்னு காத்துகிட்டு இருந்தா, இவர் குருமா வாசனையில் ஹோட்டலில் ஆர்டர் பண்ணிட்டான் போல. எல்லாம் தலையெழுத்து ‘எம்ஸ்கொயர்’. பொண்டாட்டி வீட்டிலிருக்கிறப்ப வெளில சாப்பிடனும்னு உனக்குத் தலையெழுத்து’ என்று அவனைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள் அவன் மனையாள்.

அவனும் அவசரமாக ரெப்ரெஷ் செய்து கொண்டு டிராக் பாண்டும், டீ-ர்ட்டும் அணிந்து கொண்டு அவள் எதிரில் அமர்ந்தான்.

தலைக்குக் குளித்திருப்பான் போல அலைஅலையான கூந்தலில் ஆங்காங்கே நீர் துளிகள் படிந்திருக்க, பிரெஷ்ஷாகத் தன் முன்னே அமர்ந்திருந்தவனை அவ்வளவு அருகே பார்த்ததும், தனக்கு அவன் செய்த அக்கிரமங்கள் எல்லாம் மறைந்து போய் அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

மெல்ல தொண்டையைக் கனைத்தவன் “அப்புறம் எப்போ கிளம்புறே?” என்றான்.

அவன் பேசியதில் சுயநினைவுக்கு வந்து ‘இதென்ன கேள்வி’ என்பது போல் பார்த்து வைத்தாள்.

“உன்னைத் தான் கேட்கிறேன்..எப்போ கிளம்புறதா உத்தேசம்?”

“எங்கே”

“அதை நீ தான் முடிவு செய்யனும்.”

“எனக்குப் புரியல. நீங்க என்ன சொல்ல வரீங்களோ அதைத் தெளிவா சொல்லுங்க.”

“நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ற. எனக்கு இங்கே ப்ரைவசி இல்லாம போச்சு.நீ என் வீட்டில் இருக்கிறதால என்னோட தனிமையே பாதிக்கப்படுது.”

அவன் சொன்னதைக் கேட்டு அதுவரை இருந்த பொறுமை பறந்து போக “நீங்க என்ன லூசா?பொண்டாட்டி கிட்ட போய் ப்ரைவசி போச்சுன்னு சொல்றீங்க?”

“ஏய்!..என்ற அரட்டலுடன் கையை ஓங்கிக் கொண்டு அவளை அடிக்கச் சென்றான்.

“இந்தக் கையை ஓங்குற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம். அது ஒன்னு தான் செய்யாம இருந்தீங்க. இப்போ அதையும் செஞ்சாச்சு” என்று ஆத்திரமாக மொழிந்தாள்.

“ஏய்! நீ அதிகமா பேசுற. உன்னை இங்க தங்க வச்சு, என் செலவுல சாப்பாடு போட்டு வசதியா உட்கார வச்சிருக்கிறேன் பாரு. இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ” என்றான்.

“என்ன! நீங்க இவ்வளோ சீப்பான ஆளா? நான் யார் சார் உங்களுக்கு. பொண்டாடிக்கு சாப்பாடு போட கூடக் கணக்கு பார்க்கும் நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்?”

“நீ ரொம்ப ஓவரா பேசுற! நானென்ன உன்னை விரும்பியா கட்டிக்கிட்டு வந்தேன்.”

“ஒ..இதுவேறையா? பிடிக்கலேன்னு சொல்லவே தைரியமில்லாத ஆளெல்லாம் எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கணும்.”

“அறைஞ்சிடுவேன் ராஸ்கல்!இத்தனை நாள் என்னவோ ரொம்ப நல்லவ மாதிரி சீன் போட்ட, இப்போ வெளி வந்துடுச்சு இல்ல உன் சுயரூபம்.”

“ஆறுமாசத்தில் நீங்க பண்ணிய கொடுமைக்கு இதைக் கூடப் பேசலேன்னா நான் மனுஷியே இல்ல.”

“என்ன கொடுமை பண்ணினேன்.உன் கையைப் பிடிச்சு இழுத்தேனா, இல்ல அடிச்சேன்னா. சொல்ல வந்துட்டா? எனக்குத் தான் பிடிக்கலேன்னு தெரியுதில்ல போக வேண்டியது தானே.”

“இதெல்லாம் பண்ணினா தான் கொடுமையா? மனசை காயப்படுத்தினாலும் அதுவும் கொடுமை தான்” என்றவளுக்கு அவன் மீண்டும்மீண்டும் பிடிக்கல..பிடிக்கல என்று சொல்வதைக் கேட்டவளின் மனம் நொறுங்கிப் போனது. “உங்களுக்கு என்ன பிரச்சனை..எதுவா இருந்தாலும் சொல்லுங்க. நாம பேசி தீர்த்துக்கலாம்” என்றாள் கெஞ்சும் குரலில்.

“எனக்கு இந்தத் திருமணத்தைத் தொடருவதில் விருப்பமில்ல. நாம பிரிஞ்சிடலாம்” என்று ஒரே வரியில் அவள் தலையில் இடியை இறக்கினான்.

அந்த நிமிடம் அவள் எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. நெஞ்சை அழித்திப் பிழிந்தது போல் ஒரு வலி. கண்களில் கண்ணீர் குளம் கட்ட ‘இதற்காகவா இந்த ஆறு மாதமும் பொறுமையாக இருந்தேன். இதைக் கேட்கவா எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு இருந்தேன்’ என்று உறைந்து போய் அமர்ந்துவிட்டாள்.

அவளின் அதிர்ச்சியான முகத்தைப் பார்த்து சற்றும் கவலைப்படாமல், அவள் முகத்தின் முன்னே சொடக்கு போட்டு “ஹலோ..ஹலோ..இப்படி உட்கார்ந்தா என்ன அர்த்தம்?” என்றான்.

நெஞ்சில் வலியுடன் அவனைப் பார்த்து “ஒரு பெண்ணோட வாழ்க்கை அவ்வளவு எளிதா போயிடுச்சு இல்ல உங்களுக்கு?”
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,826
113
“என்னவோ எங்கேயுமே நடக்காத அதிசயத்தைச் சொல்ற மாதிரி கேட்கிற.ஊர்ல போய்ப் பாரு நாளொன்றுக்கு எத்தனை விவாகரத்து நடக்குதுன்னு.”

கலங்கிய கண்களுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள் “இல்லேன்னு சொல்லல. ஆனா, அவங்க எல்லாம் வாழ்ந்து பார்த்து அவங்களுக்குள்ள ஒத்து வரல என்கிற பட்சத்தில் தான் பிரியிறாங்க.”

அதைக் கேட்டவுடன் கோபத்தில் முகம் சிவக்க “கட்டாயத்தின் பேர்ல தான் உன்னைக் கட்டிகிட்டேன். விருப்பமில்லாம பண்ணிகிட்ட உன் கூட வாழணும்னு அவசியமில்லை” என்று வெடுவெடுத்தான்.

இகழ்ச்சியான முகசுளிப்பை தந்தவள் “உங்களுக்கு வேணா இந்தத் திருமணப் பந்தம் கேலி கூத்தா இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை நான் உயிரோட இருக்கும் வரை இது நிலைக்கனும்னு தான் நினைக்கிறேன்.”

“இங்கே பாரு! இந்த மாதிரி டயலாக் எல்லாம் பேசி நடிக்காதே! உன்னோட சுயநலத்துக்குத் தான் நீ இப்படிப் பேசிகிட்டு இருக்குறேன்னு தோணுது. உங்களுக்கெல்லாம் ஆண்களைக் கண்டால் இளக்காரமா போச்சில்ல.”

“ஆமாங்க! நான் நடிக்கிறேன் தான்! ஏன் சொல்ல மாட்டீங்க.கல்யாணம் பண்ணி வந்த நாளிலிருந்து நீங்க எத்தனை முறை என்கிட்ட பேசி இருப்பீங்க?இதோ துபாய்க்கு வந்து ஆறு மாசமாச்சு.இந்த வீட்டிலுள்ள சுவர்களைக் கேளுங்க அதுங்க சொல்லும் என் கதையை.இங்கே வந்து இறங்கின அன்னையிலிருந்து ஒருவேளை சாப்பாட்டைக் கூட நீ சாப்பிட்டியான்னு கேட்டீங்களா?முகம் பார்த்து பேச மாட்டீங்க, சாப்பாட்டை வாங்கி என் கையில் கூடக் கொடுக்க மாட்டீங்க. அப்படியே டேபிளில் தூக்கி எறிஞ்சிட்டுப் போய்டுவீங்க.கையில் இந்த ஊர் காசு கிடையாது. அக்கம் பக்கத்தில் யார் கூடவும் பழக முடியாது. வீட்டில் போன் கிடையாது. உடம்பு முடியலேன்னா கூடச் சொல்ல ஆள் இல்லாமல் எத்தனை நாள் தவிச்சிருக்கேன் தெரியுமா உங்களுக்கு.இதெல்லாம் எதுக்காகத் தாங்கி கிட்டேன்? என்ன சுயநலம் இருக்கு இதில்?ஒரு ரெண்டு நாள் இந்த வீட்டில என்னை மாதிரி இருந்து பாருங்க. அப்போ தெரியும் என்னோட வலி” என்று ஆத்திரமாகப் பேசித் தீர்த்தாள்.

அவள் சொன்னவற்றைக் கேட்டபோது அவன் முகத்தில் லேசான மாற்றம் வந்தது.ஆனால் அது பொய்யோ என்று என்னும்படி உடனே கடுமையாக மாற்றிக் கொண்டு...“இதுக்குத் தான் சொன்னேன். ஏன் தேவையில்லாத கஷ்டத்தை அனுபவிக்கனும்.அதற்கான வழியைத் தான் சொன்னேன் பிரிஞ்சிடலாம் என்று.”

அவன் சொன்னதைக் கேட்டவள் ‘ஐயோ’ என்று மானசீகமாகத் தலையில் கை வைத்துக் கொண்டாள். இவ்வளவு நேரம் என் கஷ்டத்தைச் சொல்லி இந்தக் கல்யாணத்தைக் காப்பாற்றத் தான் நான் பொறுமையா இருக்கிறேன் என்று புரிய வைக்க முயன்றால், இவன் என்ன மறுபடியும் அதிலேயே வந்து நிற்கிறானே.இவன் தெரிஞ்சு செய்றானா? இல்ல தெரியாம செய்றானான்னு தெரியலையே? என்று நொந்து போய் அவன் முகத்தைப் பார்த்தாள்.

அவனோ அசராமல் “சரி எப்போ ஊருக்குப் போகணும்-னு சொல்லு.நான் டிக்கெட் புக் பண்ணி தரேன்.லீகல் பார்மாலிட்டீஸ் எல்லாம் நான் பார்த்துக்குறேன்” என்றவன் பேச்சு முடிந்தது என்று எழுந்தான்.

அவன் சொன்னதைக் கேட்டுக் கண்களில் கண்ணீர் துளிர்க்க அவசரமாக எழுந்தவள் “ஒருநிமிஷம்” என்று தன்னறைக்குச் சென்றாள்.உள்ளே நுழைந்து சுவற்றோரம் அப்படியே மடங்கி அமர்ந்தவள் ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.

அந்தநேரம் காலிங்க்பெல் சப்தம் வர அவசரமாக எழுந்து குளியலறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டு அங்குச் சிறிது நேரம் அழுது தீர்த்தாள். அவனோ அங்குச் சாப்பாடு வந்திருக்க, ஸ்ருதியை காணாமல் பசியில் கடுகடுவென்று அமர்ந்திருந்தான்.

“ஒருநிமிஷம்னு போனவ என்ன பண்ற? நான் போய்ச் சாப்பிடனும். எதைச் சொல்றதா இருந்தாலும் சீக்கிரம் வந்து சொல்லித் தொலை” என்று கத்தினான்.

முகம் கழுவி கொண்டு வேகமாகக் குளியலறையை விட்டு வெளியில் வந்தவள் கப்போர்டில் இருந்த பணத்தை எடுத்துக் வந்து அவனிடம் தந்தாள். “இதுல இருபதாயிரம் திராம்ஸ் இருக்கு. நான் ஆறுமாசம் இங்கே தங்கினதுக்கும்,கேஸ், கரென்ட் யூஸ் பண்ணினதுக்கும் வச்சுக்கங்க. அப்புறம் என்ன சொன்னீங்க?நீங்க போடுற சாப்பாட்டைச் சாப்பிட்டேன்னா? நீங்க என்னை வேண்டாத விருந்தாளியா நடத்த ஆரம்பிச்ச அன்னையிலிருந்து நான் என் உழைப்பில் தான் சாப்பிட்டுகிட்டு இருக்கேன்.”

அவள் பணத்தைக் கொடுத்ததும் அதிர்ந்து பார்த்தவன் கோபத்துடன் எழுந்து “இவ்வளவு பணம் உன்கிட்ட எப்படி?” என்றான்.

“சீ..இதென்ன கேள்வி?”

“ஹலோ..நானென்ன கேட்கிறேன் நீயென்ன பதில் சொல்ற?”

“பின்ன உன்கிட்ட ஏது இவ்வளவு பணம்னு கேட்டா எப்படி நினைக்கிறதாம்?” என்று முகம் சிவக்க ஆங்காரமாகக் கேட்டாள்.

அவளின் கோபம் கண்டு சற்று தணிந்தவன் “நான் அப்படிக் கேட்கல. நீ இங்க வேலைக்குப் போகல. உனக்கு நானும் பணம் குடுக்கல. அப்புறம் எப்படித் திராம்ஸ் வந்துதுன்னு தான் கேட்டேன்.”

“நான் இங்கே இருக்கிற பிள்ளைகளுக்கு டியுஷன் எடுக்கிறேன். அதில வந்த பணம் தான் இது” என்றாள் அவனைக் கண்டு முறைத்துக் கொண்டு.

“வாட்! டியுஷன்ல இவ்வளவு பணமா? அதெப்படி?” என்றான்.

அவன் கேட்டவிதத்தில் கடுப்பாகிப் போனவள் “நான் ஒன்னும் ஒரு பிள்ளைக்கு டியுஷன் எடுக்கல. என்கிட்ட முப்பது பேர் படிக்கிறாங்க. ஒரு பிள்ளைக்கு நானூறு திர்ஹாம்ஸ் கொடுக்கிறாங்க.நீங்களே எவ்வளவுன்னு கணக்கு பண்ணிகோங்க” என்றாள்.

அதைக் கேட்டுத் தோள்களைக் குலுக்கியவன் “கொஞ்ச நேரம் முன்னாடி நீ என்னவோ தீவுல வந்து மாட்டிகிட்ட மாதிரி அந்தப் பேச்சு பேசின. இப்போ எப்படி டியுஷனுக்குப் பிள்ளைகள் வந்தாங்களாம்?”

அவனுடைய நக்கலில் முகம் சிவக்க, உதடு துடிக்க “உங்க தப்பை நீங்க உணரவே மாட்டீங்களா? என்னைப் பற்றியே ஆராயஞ்சுகிட்டு இருக்கீங்க?”

அதற்கும் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் “ சரி! அதைவிடு..இந்த பணம் எனக்கு வேண்டாம். நீயே வச்சிக்கோ” என்று அவள் கைகளில் திணித்தவன், “ஊருக்குப் போகிற தேதியை பார்த்து சொல்லு” என்றுவிட்டு வேலை முடிந்த கணக்கில் அங்கிருந்து நகர்ந்தான்.

“அதை உங்க அம்மாவுக்குப் போனை போட்டு கேளுங்க சொல்வாங்க. அப்படியே என்கிட்ட பேசினதையும் சொல்லுங்க.அப்புறம் நான் போறேன்” என்றாள்.

அவள் புறம் திரும்பியவன் “மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறியா? நீ சரிவர மாட்ட, டிக்கெட் புக் பண்ணிட்டு சொல்றேன்.உன் திங்க்ஸ் எல்லாம் பாக் பண்ணி வச்சிக்கோ” என்றான் சர்வசாதரணமாக.

அதுவரை அழுதழுது சோர்ந்திருந்தவள் இறுகிய முகத்துடன் “நான் போக மாட்டேன்! உங்களால முடிஞ்சதை பார்த்துகோங்க!” என்றவள் தன்னறைக்குச் சென்று கதவை வேகமாக அறைந்து சாத்தினாள்.

தனக்கு முன்னே அவள் கதவை அறைந்தது தன்னையே அறைந்தது போல் உணர்ந்தான். முதன்முறையாகத் தான் அவளை நடத்திய முறை பற்றிச் சிந்திக்கத் தொடங்கினான்.

மீண்டும் பசியில் வயிறு சப்தம் போட சாப்பிடலாம் என்று சென்றவன், அங்கு அவள் செய்து வைத்துவிட்டுப் போயிருந்த சப்பாத்தி, குருமா எல்லாம் டைனிங் டேபிளிலேயே இருந்ததைப் பார்த்தான்.‘ஒ..சாப்பிடாம போய்ட்டாளோ’ என்று திரும்பி அவளுடைய அறைக் கதவை பார்த்தான். சிறிது நேரம் யோசனையில் நின்றவன் பின் தனக்கு வந்த உணவை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தான்.

ஒரு ரொட்டிக்கு மேல் சாப்பிட முடியாமல் எதுவோ நெஞ்சை அழுத்த தண்ணீரை குடித்துவிட்டு தன்னறைக்குச் சென்றான். அதுநாள் வரை மனதிலிருந்த வேதனை, பழியுணர்ச்சி எல்லாம் மறைந்து போய் மனதில் ஏதோ பாரம் அழுத்தியது. ஏதேதோ நினைவுகளில் மூழ்கியவன் அப்படியே உறங்கிப் போனான்.

அவளும் கதவின் மேல் சாய்ந்து அழுது கொண்டிருந்தவள் அப்படியே கால்களைச் சுருட்டிக் கொண்டு, கன்னங்களில் கண்ணீருடன் உறங்கி விட்டாள்.

எதை நாம் இங்குக் கொண்டு வந்தோம்

எதை நாம் அங்குக் கொண்டு செல்வோம்

அழகே பூமின் வாழ்க்கையை அன்பில்

வாழ்ந்து விடை பெறுவோம்.....