Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 5 | SudhaRaviNovels

அத்தியாயம் - 5

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 5

அவள் மனதில் ஆயிரம் குழப்பங்கள். திடீரென்று ஒரு பதினைந்து நாட்களுக்குள் தன் வாழ்க்கையில் இப்படியொரு மாற்றம் வரும் என்று எண்ணவில்லை. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்னைச் சுற்றி? சித்துவின் குடும்பத்தினர் தங்களது காதலை ஏற்கவில்லை என்றால், இந்த திருமணத்தை எப்படி ஏற்பார்கள்? தன்னை பெற்றவர்களையும் ஏமாற்றி விட்டு என்ன வாழ்க்கை வாழ்ந்துவிடப் போகிறோம்? என்று எண்ணங்களின் சுழற்சியில் சிக்கிக் கொண்டவளை மாலினியும், சரவணனும் அழைத்துக் கொண்டு லைப்ரரிக்கு சென்றார்கள்.

அங்கு வைத்து தங்களது பிளானை கூறினார்கள். கல்லூரியிலிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்று விட்டு அங்கிருந்து தோழிகளுடன் வெளியே செல்வது போல கிளம்பி வர வேண்டும் என்று கூற, அவளோ அதை மறுத்தாள்.

“நாளைக்கு கல்யாணம்னு சொல்றீங்க? இன்னைக்கு நைட் நான் திரும்பலேன்னா பிரச்சனை ஆகுமே?” என்றாள் கவலையுடன்.

அவளது கைகளை இறுகப் பற்றிக் கொண்ட மாலினி “எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்றேன் வர்ஷூ. நீயும் நானும் எப்பவும் க்ரூப் ஸ்டடி பண்றது புது விஷயமில்லையே” என்றாள்.

“அப்போ உங்க வீட்டில் என்ன சொல்லுவ?”

“உங்க வீட்டில் க்ரூப் ஸ்டடின்னு தான்” என்று சிரித்தாள்.

வர்ஷினிக்கு மனசு ஆறவே இல்லை. பெரிய தவறை நோக்கி தான் அடியெடுத்து வைப்பதாக தோன்றியது. சரவணனிடம் திரும்பி “சித்துவை மறுபடியும் பேசி பார்க்க சொல்லலாமா?” என்றாள் தவிப்புடன்.

அவளது நிலையை உணர்ந்த சரவணன் உடனே சித்துவை அழைத்து விட்டான். அவளிடம் போனை கொடுத்து விட்டு அவர்கள் அனைவரும் அங்கிருந்து நகர்ந்தார்கள்.

கண்களில் அலைபுருதளுடன் “சித்து!” என்றழைத்தவளின் அழைப்பு அவனது உயிர் வரை தீண்டியது.

“சொல்லு சோட்டி? என்ன பயம் உனக்கு?”

“இ...இது சரியா வருமா? எனக்கு பயமா இருக்கு” என்றாள் குரலில் நடுக்கத்துடன்.

அவனது மூச்சு சீறலாக அவளது செவியைத் தீண்ட “என் மேல நம்பிக்கை இருக்கில்ல? என்னோட உடலில் உயிர் இருக்கும் வரை உனக்கு எந்த சங்கடமும் வர விட மாட்டேன்னு நம்பு-டா. நமக்கு இப்போ இதை விட்டா வேறுவழியில்லை” என்றாள் அவளின் பயத்தை போக்கும் வண்ணம்.

அவனது குரலில் தன் மீதான நேசம் வழிந்தோடுவதை உணர்ந்தவளுக்கு அதன் பிறகு அடுத்த சிந்தனை வரவில்லை.

“நான் வரேன் சித்து” என்று விட்டாள்.

“எதற்கும் பயப்படாதே! நானிருக்கேன்”.

“ம்ம்..” என்று கூறி போனை வைத்துவிட்டு சரவணனை தேடினாள். அவள் போனை வைத்ததும் அவளிடம் வந்தவர்கள் அவளது கண்களில் பிறந்திருந்த தெளிவை கண்டு நிம்மதி அடைந்தார்கள்.

அதன்பிறகு மாலை மாலினியும், வர்ஷுவும் ஒன்றாக அவள் வீட்டிற்கு சென்றார்கள். அடுத்து வரப் போகும் பரீட்சைக்கு க்ரூப் ஸ்டடி செய்யப் போவதாக அனுமதி கேட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். அவளது கல்லூரி பையிலேயே இரு நாட்களுக்கு வேண்டிய துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டு மாலினி வீட்டை அடைந்தார்கள். அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களை நீராஜின் ஆட்கள் தொடர்ந்தார்கள். வர்ஷினி மாலினியின் வீட்டில் இருக்கவும் அதையும் நீரஜிற்கு தெரிவிக்கப்பட்டது.

“அவளை மிஸ் பண்ணிடாதீங்க. நிச்சயம் என் மகன் அவளைத் தேடி வருவான்”.

“ஓகே சாப்”.

மாலினியின் வீட்டில் அவளது அறையில் இருந்தவளின் மனநிலை நேரம் ஆக-ஆக மேலும் பதட்டம் அடைந்தது. கலவரம் அடைந்த முகத்துடனே அமர்ந்திருந்தவளை கண்டு பாவமாக இருந்தது மாலினிக்கு. இந்த காதல் படுத்தும் பாட்டை பார்த்தவளுக்கு அவளின் நிலை பரிதாபத்தையே கொடுத்தது.

அவளது தோளில் கை வைத்து ஆதரவாக தட்டிக் கொடுத்தவள் “எதையும் நினைச்சு கலங்காதே வர்ஷூ. சித்தார்த் எல்லாவற்றையும் ஹாண்டில் பண்ணிடுவார்” என்று தைரியமூட்டினாள்.

“ம்ம்..” என்று சொன்னாலும் அவளது மனநிலை மாறவே இல்லை.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
மெல்ல இரவு நெருங்கத் தொடங்கி இருந்தது. நீரஜின் ஆட்கள் மாலினி வீட்டைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தனர். சரவணனும், மற்றவர்களும் அவர்களை எப்படி அப்புறபடுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சித்தார்த் அவர்களுக்கு போன் செய்து ஒரு ஐடியாவை கொடுக்க, அதன்படி செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதே சமயம் மாலினிக்கும் போன் செய்து தயாராக இருக்கும்படி கூறி விட்டார்கள்.

நீரஜின் ஆட்கள் அனைவரும் அந்த தெருவை சுற்றிக் கொண்டிருக்க, சரவணன் தனது மற்றொரு நண்பனான கேஷவை அழைத்து விஷயத்தைக் கூற அவனும் முதலில் மறுத்து பின் ஒத்துக் கொண்டான். அவர்கள் நிலைமையை கையாள தயாராக அங்கு வந்து காத்திருக்க ஆரம்பித்தனர். இரவு நெருங்க நெருங்க அங்கு நடமாட்டம் குறைய ஆரம்பிக்க, நீரஜின் ஆட்களைத் தவிர வேறு எவரும் இல்லை. அப்போது அந்த வழியாக ஒரு பெண் தனது ஸ்கூட்டியில் செல்ல, அதற்காவென்றே காத்திருந்த கேசவ் தனது பைக்கில் அவளைத் தொடர்ந்து சென்று வழிமறிக்க, அவள் அதிர்ந்து போய் சப்தம் போட, மேலும் அவன் அவளிடம் வம்பிழுக்க, நீரஜின் ஆட்களோ இதென்ன புது பிரச்சனை என்று வேடிக்கை பார்க்க ஆர்மபித்தனர்.

அப்போது சரவணனும் மற்றவர்களும் திடுதிடுவென்று அங்கு ஓடி வர, அந்தப் பெண் ஒ-வென்று கத்த ஆரம்பித்ததும் வீடுகளில் உறங்க ஆரம்பித்தவர்கள் எல்லாம் வெளியே வந்து விட்டிருந்தனர். அதற்குள் கேஷவ் அங்கிருந்து நழுவி இருக்க, சரவணனும், மற்றவர்களும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நீரஜின் ஆட்களின் மீது தாக்குதலை தொடங்கி இருந்தனர்.

ஏரியாவாசிகள் என்னவென்று விசாரிக்க, அவர்கள் தனியாக சென்று கொண்டிருந்த பெண்ணிடம் பிரச்சனை செய்தார்கள் என்று விட்டனர். அந்தப் பெண்ணிற்கும் அவர்கள் எல்லோரும் சேர்ந்து தான் தன்னிடம் பிரச்சனை செய்தார்கள் என்று எண்ணி ஆம் என்று விட்டாள்.

அவ்வளவு தான் அடுத்த நிமிடம் யாரோ ஒருவர் போலீசிற்கு அழைத்துவிட, அவர்கள் வந்து மொத்தமாக நீரஜின் ஆட்களை அள்ளிக் கொண்டு சென்றனர். வெற்றிகரமாக தடையை விலக்கிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்கள் சரவணன் குழுவினர். அனைவரும் வீட்டிற்குள் முடங்கியது. மாலினியும், வர்ஷினியும் சரியான நேரத்திற்காக காத்திருந்தார்கள்.

மாலினியின் பெற்றோர் உறக்கத்தை தழுவியதும் இருவரும் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தனர். தெருமுனை வரை பயத்துடனே வந்தவர்கள் அவர்களுக்காக காத்திருந்த சரவணன் காரில் ஏறி அமர்ந்தனர்.

வர்ஷினியின் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. நாளை என்ன மாதிரியான விடியல் என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

மாலினி அவளது கரத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு “சித்தார்த் கிட்ட விட்டுட்டு நான் திரும்பி வந்துடுவேன் வர்ஷு. நானும் இங்கே இல்லேன்னா எல்லோருக்கும் விஷயம் தெரிஞ்சிடும். அதனால விடியும் முன்னே நான் வந்துடுவேன்” என்றாள்.

வேறு எதையும் நினைக்க வேண்டாம் என்று மனதிற்குள் உரு போட்டபடி அந்த இரேண்டரை மணி நேர பயணத்தையும் கடந்தாள். அவர்கள் வருவதற்குள் தனது நண்பன் மூலமாக அவனிடமிருந்த கெஸ்ட் ஹவுசின் சாவியை வாங்கி இருந்தான் சித்தார்த். அந்த அடரசிற்கு வரும்படி தகவல் தெரிவித்து விட்டு அவர்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

அவர்கள் வந்து சேரவும் வர்ஷினியை பார்த்ததும் தான் சித்தார்த்திற்கு மூச்சே வந்தது. அவள் தன்னிடம் வராமல் எதுவும் தடை வந்து சேர்ந்து விடுமோ என்று உள்ளுக்குள் பயந்திருந்தான். அதனால் அவளைக் கண்டதும் தான் நிம்மாதியானது.

பதினைந்து நாட்களாக மனதில் அழுந்திக் கிடந்த தவிப்பு அவனைக் கண்டதும் யாரையும் கண்டு கொள்ளாமல் “சித்து!” என்றழைத்தபடி அவனை நோக்கி ஓடினாள்.

தன்னைக் கண்டு ஓடி வருபவளை கைகளை விரித்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். அவனது நண்பர்களுக்கு இத்தனை நேரம் இருந்த படபடப்பு மறைந்து இதற்கு தானே இவ்வளவு தடைகளையும் தாண்டினோம் என்கிற நிம்மதி எழுந்தது.

அந்த சூழ்நிலையின் கனத்தை குறைப்பது போல “ஏன் சரவணா யாரோ எனக்கு பயமா இருக்கு அப்படி இப்படின்னு சொன்ன மாதிரி இருந்துச்சே உனக்கு தெரியுமா?” என்றாள் மாலினி கிண்டலாக.

அவனது கைகளில் இருந்து விலகி மாலினியை முறைக்க, அவளருகே சென்றவளோ “மனசுக்குள்ள இத்தனை ஆசையை வச்சுகிட்டு எப்படித் தான் அமைதியா இருந்தியோ” என்று மேலும் கிண்டல் செய்தாள்.

சுமார் அரை மணி நேரம் எல்லோருமாக அமர்ந்து அடுத்த நாளுக்கான ஏற்பாடுகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, வர்ஷினியோ சித்தார்த்தின் கரங்களை இறுகப் பற்றியபடியே அமர்ந்திருந்தாள். அவர்கள் எல்லாமே பக்காவாக தயாராகி இருப்பதை பார்த்தாலும் அவளது மனம் ஏனோ நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. எதுவோ தவறாக நடக்க இருக்கிறது என்பதை உணர்த்தியது.

ஆனால் அதை எல்லாம் சித்தார்த்தின் அருகாமை தகர்த்தது. அதிலும் அவளது மனநிலையை உணர்ந்தவன் போல ஆறுதலாகவும் துணையாகவும் நின்றான்.

மாலினி கிளம்ப நேரமாகிவிட, அவளுடன் சரவணனின் நண்பர்கள் இருவர் மட்டும் கிளம்பி விட்டனர். மற்றவர்கள் மறுநாள் திருமணத்திற்காக அங்கேயே இருப்பதாக முடிவு செய்யப்பட்டது.

மாலினியிடம் “உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல மாலினி. இந்த உதவியை நாங்க என்னைக்கும் மறக்க மாட்டோம். வீட்டுக்கு போயிட்டு மறக்காம மெசேஜ் பண்ணிடுங்க” என்றவன் தனது நண்பர்களிடம் அவளது பாதுகாப்பு முக்கியம் என்று கூறி கவனமாக கொண்டு விடும்படி கூறினான்.

மாலினியை அணைத்துக் கொண்ட வர்ஷினி “தேங்க்ஸ் மாலு! நீ செய்த உதவியை எங்க வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டோம்” என்றாள் கலங்கிய கண்களுடன்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
“தைரியமா இரு வர்ஷூ”

“என்னால உனக்கு பிரச்சனை வந்துடாதே” என்றாள் பயத்துடன்.

“அதெல்லாம் இல்லை. நீ எதையும் பற்றி கவலைப்படாம கல்யாணப் பெண்ணா சந்தோஷமா இரு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

அவர்கள் கிளம்பியதும் வர்ஷினிக்கு என்று ஒரு அறையைக் கொடுத்து விட்டு மற்றவர்கள் அனைவரும் ஒரு அறையில் தங்கிக் கொண்டு மறுநாள் எப்படி எந்த நேரத்திற்கு போவது என்பதை பற்றி பேச ஆரம்பித்திருந்தனர்.

தன்னைச் சுற்றி அனைவரும் ஆண்களாக இருக்க, புதிய இடத்தில் உறக்கம் வராமல் விட்டத்தை வெறித்தவண்ணம் படுத்திருந்தாள் வர்ஷினி. இந்த விஷயம் தனது பெற்றவருக்கு தெரியும் போது அதிர்ந்து போவார்களே என்று கலங்கிக் கொண்டிருந்தாள். அப்படியே படுத்திருந்தவள் விடியலின் நேரம் உறங்கிவிட, திடீரென்று கதவை சப்தம் கேட்டதும் அதிர்ந்து எழுந்தவள் பயத்துடன் நின்றாள்.

“சோட்டி! நாம கிளம்பனும் நேரமாச்சு” என்று கூப்பிட்டான் சித்தார்த்.

அவனது குரல் கேட்டதும் அவசரமாக சென்று கதவைத் திறந்தாள். அங்கு அவன் பகுளித்து முடித்து பட்டு வேஷ்டி சகிதம் நின்றிருந்தான்.அதைப் பார்த்ததும் “சாரி நான் தூங்கிட்டேன்” என்றாள் தவிப்புடன்.

“நோ! நோ! நமக்கு நேரமிருக்கு” என்றவன் அவள் கைகளில் ஒரு பையைக் கொடுத்து “குளிச்சிட்டு இதை எல்லாம் போட்டுக்கிட்டு தயாராகி வா” என்றான்.

அவனிடமிருந்து பையை வாங்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டாள். அவனிடமும் திருமணத்திற்கான எந்த உற்சாகமும் இல்லை. எந்தவித தடங்களும் இல்லாமல் நடக்க வேண்டுமே என்கிற பரபரப்பு மட்டுமே இருந்தது.

பதிவு திருமணம் செய்வதற்கான நேரம் கிடைக்காமல் கோவிலில் மட்டும் வைத்து திருமணத்தை முடித்து விடலாம் என்று முடிவெடுத்திருந்தனர். அதன்பின்னர் பதிவு திருமணத்தை செய்து கொள்ளலாம் என்று பேசி வைத்திருந்தனர்.

அதற்கான நேரம் என்ற ஒன்று வராமலே போகப் போவதை அறியாமல் வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

அவள் குளித்துவிட்டு வந்து அவன் கொடுத்துவிட்டு சென்ற பையிலிருந்த புடவையை எடுக்க, அதில் அப்படியே மனம் லயித்துப் போனது. தனக்காக பார்த்து-பார்த்து தேர்வு செய்திருக்கிறான் என்பதை உணர்த்தியது. அவளுக்கான நகைகள் முதற்கொண்டு ஒவ்வொன்று அவளை கண்முன்னே நிறுத்தி வாங்கி இருக்கிறான். அதுவரை இருந்த தவிப்பு பயம் எல்லாம் விலக, தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டு வெளியே வந்தாள்.

அந்நேரம் அவளைத் தேடி அவனும் வர, இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தழுவிச் சென்றது. தான் வாங்கிக் கொடுத்திருந்த புடவையில் அவளைக் காணவும் சித்தார்த்தின் மனம் எகிறி குதித்தது. அவளுமே அவனைத் தான் விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதுவரை உணர்வுகளே இல்லாதவன் போல சுற்றிக் கொண்டிருந்தவன் தேவதை போல முன்னே நின்றவளைக் கண்டதும் பட்டென்று அவளது கையைப் பற்றி அறைக்குள் இழுத்துக் கொண்டான்.

அவன் இழுத்த வேகத்தில் அவன் நெஞ்சின் மீது மோதி நிற்க, தனது கரத்தால் இடையை வளைத்தவன் முகத்தருகே குனிந்து “அழகா இருக்க சோட்டி’ என்றான் காதுகளை இதழ்கள் உரச.

அவனது அதிரடி தாக்குதலில் பயந்து போனவள் “ப்ளீஸ்! தள்ளி நின்னு பேசுங்க சி..சித்து” என்று நெளிந்தாள்.

அவனோ மேலும் தன்னோடு இறுக்கிக் கொண்டவன் “நமக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் கல்யாணம் சோட்டி. இப்போ போய் தள்ளி நிற்க சொல்றியே” என்றபடி கன்னத்தில் இதழ் பதித்தான்.

அவன் மார்பில் அழுத்தமாக முகத்தை புதைத்துக் கொண்டவள் “ப்ளீஸ்! இதெல்லாம் இப்போ வேண்டாமே” என்றாள் மெல்லிய குரலில்.

அவனோ குறும்பு புன்னகையுடன் “அப்போ கல்யாணம் முடிஞ்சு ஓகே வா?” என்றான் மெல்லிய சிரிப்புடன்.

“சித்து!” என்று சிணுங்கினாள்.

அதற்குள் சரவணனும் மற்றவர்களும் வந்துவிட “டேய் சித்து! நேரமாச்சு! சீக்கிரம் வெளியே வாடா” என்றான் சின்ன சிரிப்புடன் சரவணன்.

அதைக் கேட்டு அவனிடமிருந்து அவசரமாக விலகியவள் “போச்சு! அவங்க எல்லாம் வந்தாச்சு. எனக்கு வெட்கமா இருக்கு. போங்க சித்து” என்று அவன் நெஞ்சில் குத்தினாள்.

அவளை விடுவிக்க மனமில்லாமல் அழுத்தமாக கன்னத்தில் முத்தத்தை வைத்துவிட்டு “நோ வெட்கம் சோட்டி” என்று மெல்லிய சிரிப்புடன் அவளின் இடையில் கரத்தை போட்டு தன்னர்கே நெருக்கிக் கொண்டே வெளியே வந்தான்.

அவர்களை அப்படி பார்த்ததும் நண்பர்கள் விசிலடிக்க, அதைக் கண்டு அவன் நெஞ்சில் மீண்டும் முகம் புதைத்துக் கொண்டாள்.

அந்நேரம் இருவரின் மனதிலும் இருந்த சஞ்சலங்கள் நீங்க அந்த தருணத்தை ரசிக்க ஆரம்பித்திருந்தனர். நண்பர்களோடு கிளம்பி அருகே இருந்த கோவிலுக்கு செல்ல, அங்கே முன்னரே எல்லாம் தயாராக இருக்க, ஐயர் வந்து மந்திரம் சொல்லி திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுக்க அவளது கழுத்தில் கட்டினான். அவனது மனமோ இந்த உறவு எந்த காலத்திலும் பிரிவென்னும் பாதைக்கு சென்று விடக் கூடாது என்கிற வேண்டுதலை முன் வைத்தது. அவளும் அதையே வேண்டி இருந்தாள்.

அவர்களின் கோரிக்கையை சோதனைக்கு உள்ளாக்க இருப்பதை எண்ணி சிரித்துக் கொண்டிருந்தார் முருகப் பெருமான்.
 

Chitra Balaji

Active member
Feb 5, 2020
125
68
28
ரெண்டு perukum kalyaaname mudinjidicha.... அவன் அப்பா vuku maatum vishayam therinjithu ellam mudinjithu enna aaga pooguthoo.... Super Super maa.....