அத்தியாயம் - 5

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,546
1,114
113
அத்தியாயம் –5கும்பகோணம்....“இப்படி உட்காருங்கம்மா! அங்கே உட்கார்ந்தா காலை தொங்க விட்டுட்டு உட்காரனும். இது தான் உங்களுக்கு வசதிபடும்” என்றவரை முறைத்துப் பார்த்தார் சிவகாமி பாட்டி.“எனக்கு எது வசதிப்படும்-னு யோசிக்கிற நீ, உன் புள்ளைக்கு நல்லது எதுன்னு யோசிக்க மாட்டேன்னு உட்கார்ந்திருக்கியே சுமதி” என்றார் ஆதங்கத்துடன்.அன்னையின் வருத்தம் சுமதியைத் தாக்க “என்னம்மா பண்ண சொல்றீங்க? எனக்கு மட்டும் பேரன், பேத்தியை பார்க்கணும்-னு ஆசை இல்லையா என்ன? போகாத கோவில் இல்ல, வேண்டாத தெய்வம் இல்ல.வழி தான் பிறக்க மாட்டேங்குது” என்றார் பெருமூச்சுடன்.“பட்டணத்தில் தான் ஆயிரம் ஆஸ்பத்திரி இருக்கு. அந்த காலம் மாதிரி இல்லாம இப்போ தான் எல்லாத்துக்கும் வழியிருக்கே. அதை விட்டுட்டு நீ இப்படி கோவில் கோவிலா சுத்தினா சரியா போயிடுமா?”“ம்ச்...இது பிரச்சனையே வேற உங்களுக்கு புரியாதுமா” என்றார் சலிப்புடன்.சுமதியையே சற்று நேரம் ஆழ்ந்து பார்த்தவர் “அந்த சீமை சித்துராங்கி எப்படியிருக்கா? பள்ளிக்கூடம் படிக்கிறப்பவே சலம்பிகிட்டு அலைவாளே” என்றார்.அம்மாவை நிமிர்ந்து பார்த்தவர் “ம்ம்..அவளுக்கென்ன நல்லாயிருக்கா” என்றார் சோர்வுடன்.“அதுக்கேன் இவ்வளவு அலுத்துக்குற. அவ எதுவும் பிரச்சனை பண்றாளா?”அதுவரை அன்னையின் கேள்விகளுக்கு பட்டும்படாமலும் பதில் சொல்லிக் கொண்டிருந்தவர் நான்கு வருடங்களாக மனதை உறுதிக் கொண்டிருந்தவற்றை எல்லாம் கொட்டித் தள்ளினார்.அவர் சொன்னவற்றை எல்லாம் முகவாயில் கையை வைத்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்த சிவகாமி பாட்டி “ஒரு குடும்பத்தில் அங்கங்கே ஒன்னு, ரெண்டு கூமுட்டைகள் இருக்கும் சரி. ஆனா, இங்கே எல்லாமே கூமுட்டையாவுல இருக்கு. என்னடி இது! ஊர்ல இல்லாத அதிசயம். அக்காவுக்கு கல்யாணம் ஆன பிறகும் தங்கச்சிகாரி அவளோட அறையில இருப்பாளாமில்ல. அவ கூட பொறந்தவளுக்கு தான் தங்கச்சி கிட்ட பேச துப்பில்லை. என் பேராண்டி அதுக்கும் மேல. அவனவன் பொண்டாடிக்கு தங்கச்சி இருந்தா ரெண்டையும் சேர்த்து குடும்பம் நடத்திட்டு இருக்கானுவ.இவன் என்னடான்னா...நாலு வருஷமா அந்த அலங்காரிகிட்ட பொண்டாட்டியை விட்டுட்டு வேடிக்கை பார்த்திட்டு இருக்கான்” என்றார் எரிச்சலுடன்.சுமதியோ என்ன சொல்வது என்று தெரியாமல் தலையை குனிந்தபடி அமர்ந்திருந்தார்.அதைப் பார்த்து மேலும் எரிச்சலடைந்த சிவகாமி “இந்தா பாரு சுமதி! அது அது காலாகாலத்தில் நடக்கணும். என்ன தான் பேரன் பொறுமைசாலியா இருந்தாலும், அவனும் மனுஷன் தானே. ஒரு நேரம் அலுப்பும், சலிப்பும் வாழ்க்கை மேல வெறுப்பும் வரத் தொடங்கிடும். இனியும், நீ இப்படி உட்கார்ந்திருந்தா வேலைக்கு ஆவாது. அந்த குட்டிக்கு தான் கல்யாண வயசு வந்திடுச்சு இல்ல. ஒரு மாப்பிள்ளையை பார்த்து தாட்டி விட்டுடுவோம். தனக்குன்னு ஒருத்தன் வந்துட்டா அக்காளாவது, ஆட்டுக்குட்டியாவது. தன் பொழப்பை பார்க்க போயிடுவா” என்றார் உறுதியாக.“நாம எப்படிம்மா மாப்பிள்ளை பார்க்கிறது? அவ நாம சொன்னா ஒத்துக்குவாளா?” என்றார் சந்தேகமாக.காலை லேசாக சாய்த்து ஊன்றி நாற்காலியிருந்து எழுந்தவர் “பட்டணத்துகாரங்க எளிமையா முடிக்க வேண்டிய பிரச்னையை சிக்கலாக்கி தான் வச்சுப்பீங்க. எங்களை மாதிரி கிராமத்து ஆட்கள் எல்லாம் நறுக்கு தெறிச்சா போல பிரச்சனையின் நாடியை பிடிச்சு அதுக்கு தீர்வு கண்டுடுவோம்” என்றபடி தோட்டத்து பக்கம் சென்றார்.அவரை பின் தொடர்ந்த சுமதி “எங்க? யாரை பார்க்கிறதுன்னு புரியலம்மா. நீங்களே சொல்லுங்க? நமக்கு தெரிஞ்ச இடத்தில் நல்ல பையனா இருந்தா நித்யாவுக்கு பேசி முடிச்சிடலாம்”.தோட்டத்தில் போடப்பட்டிருந்த கல்லில் அமர்ந்தவர் “நம்ம அன்புமணியைத் தெரியுமா சுமதி? கோமளக்கா பையன். அவன் பொண்டாட்டி ரஞ்சிதத்தை ஞாபகம் இருக்கா? சண்முகம் மருமக வளைகாப்பில் கூட பார்த்து பேசிட்டு இருந்தியே” என்றார்.“ஆமாம்மா..நல்லா ஞாபகம் இருக்கு”.“அவளுக்கு ஒரு பையன் இருக்கான். விஸ்வான்னு பேரு. பெரிய படிப்பெல்லாம் படிச்சு பட்டணத்தில் வேலை பார்த்துகிட்டு இருந்தான். திடீர்ன்னு ஒரு நாள் வேலையை விட்டுட்டு பாட்டு பாட போறேன்னு சொல்லி வந்து நின்னானாம். அதுக்கு பெத்தவங்க ரெண்டு பேரும் அவனை தப்பா ஒத்தை வார்த்தை சொல்லல. உன் விருப்பம் போல செய் ராசான்னுட்டாங்க. ஆனா, இதை காரணமா வச்சு அவன் மாமன்காரன் அவனுக்கு பொண்ணு கொடுக்கலையாம். என் கிட்ட சொல்லி வருத்தப்பட்டா. அவனை அந்த குட்டிக்கு பார்த்தா நல்லது ” என்றார்.“எப்படிம்மா? அவ நல்ல வேலையில் இருக்கா. இந்த பையனோ பாட்டு பாடி சம்பாதிக்கிறான்னு சொல்றீங்க. இது எப்படி சரி வரும். அவ முதலில் ஒத்துக்குவாளா?”அதை கேட்டு கன்னத்தை தோளில் இடித்துக் கொண்டவர் “தெரியாம தான் கேட்கிறேன்? இந்த ஆம்பள பயலுவோ பெரிய படிப்பு படிச்சிருந்தாலும் படிக்காத பெண்ணை கட்டி குடும்பம் நடத்தல. ஆனால், இந்த குட்டிக கொஞ்சம் படிச்சதுமே என்னா ஆட்டம் ஆடுறாளுங்க. அவனும் படிச்சவன் தான். நல்லா சம்பாதிக்கவும் செய்றான். வீட்டுக்கு ஒரே புள்ள. வீடு, வாசல்,சொத்து சுகம்-னு எல்லாம் இருக்கு. அதோட பையன் தங்கமான பையன். அம்மா,அப்பா ரெண்டு பேரும் தங்கமான மனுஷங்க. வலைவீசி தேடினாலும் அந்த குட்டிக்கு இப்படியொரு சம்மந்தம் கிடைக்காது சொல்லிப்புட்டேன்” என்றார் கடுப்புடன்.

“சரிம்மா! அப்போ அந்த பையனை நித்திக்கு கேட்டு பார்க்கலாமா? அம்மா, அப்பா இல்லாத பொண்ணு. அவங்க கொடுப்பாங்களா?” என்றார் பயத்துடன்.நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டவர் “உறவுன்னு எதுக்கு இருக்கோம் சுமதி. அவளுக்கு அம்மா, அப்பா இல்லேன்னா என்ன. நாம எதுக்கு இருக்கோம். இது ஒரு விதத்தில் சுயநலம் தான். அந்த குட்டி நல்லா இருந்தா தான் என் பேரன் வாழ்க்கையும் நல்லா இருக்கும். நீ ஒன்னும் கவலைப்பாடாதே. நான் இந்த கல்யாணத்தை முடிச்சு காட்டுறேன்” என்றார் அழுத்தமாக.“அவ ஒத்துக்கமாட்டேன்னு எதுவும் வம்பு பண்ணினா என்ன செய்றதும்மா?”மகளின் முகத்தில் தெரிந்த யோசனையைக் கண்டு புன்னகைத்துக் கொண்டவர் “இதோ பாரு சுமதி! ஜாதகத்தை வாங்கின மறுநொடி நாம எல்லோரும் சென்னைக்கு போறோம். கல்யாணத்தை முடிச்ச பிறகு தான் இங்கே திரும்புறோம். உங்களை எல்லாம் நம்பினா என் பேரன் வாழ்க்கை சரியாகாது. அந்த குட்டியை நான் பார்த்துக்கிறேன். என் பேரன் வாழ்க்கையை சீர் செஞ்சிட்டு தான் என் புள்ளை வீட்டுக்கே போவேன் போதுமா?” என்றார்.சுமதியின் முகத்தில் நிம்மதியின் சாயல் குடி கொண்டது. அன்னையின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு “நிரஞ்சன் வாழ்க்கை இப்படியே போயிடுமோன்னு ஒவ்வொரு நாளும் தூக்கமில்லாம தவிச்சேன்-மா. இப்போ உங்க வார்த்தைகள் எனக்கு நம்பிக்கையை கொடுக்குது. இனி, என் பையன் வாழ்க்கை நல்லாயிடும். அவனோட குடும்பம் பூத்து குலுங்கணும். என் பேரன், பேத்திகள் என் மடியில் தவழணும்” என்றவர் கண் கலங்கினார்.மகளின் நிம்மதியை, ஆசையாய் பார்த்து சுமதியின் தோள்களில் தட்டிக் கொடுத்தவர் “எல்லாம் சரியாகிடும். நான் பார்த்துகிறேன்” என்றார்.சென்னை..அலுவலகத்தில் ரம்யாவிடம் முறைத்துக் கொண்டிருந்தாள் நித்யா.“என்னால வர முடியாது ரம்ஸ். நான் அவ பத்திரிக்கை கொடுக்கும் போதே சொல்லிட்டேன். எனக்கு சீக்கிரம் வீட்டுக்குப் போகணும். நேத்தே அந்த மனுஷன் எதுவோ சொல்லி அக்கா கொஞ்சம் அப்செட்டா இருந்தா” என்றாள்.அதை கேட்டு முறைத்த ரம்யா “ஏண்டி! நீ புரிஞ்சு தான் செய்றியா? உங்க அக்காவுக்கும், மாமாவுக்கும் கொஞ்சமாவது ப்ரைவசி வேண்டாமா? நீ எப்போ பார்த்தாலும் நந்தி மாதிரி அவங்களுக்கு முன்னாடி உட்கார்ந்திருக்க. இந்த மாதிரி பங்க்ஷனுக்கு வந்தாலாவது அவங்களுக்கு கொஞ்சம் டைம் கிடைக்கும்”.அவளை முறைத்து “உனக்கு புரியல ரம்ஸ். அதெல்லாம் நார்மல் தம்பதிகளுக்கு. இங்கே அந்த ஆளுக்கு கொஞ்சம் கேப் கிடைச்சாலும் எங்க அக்காவை அழுக விடுறதே வேலை. நான் எங்கேயும் வரலப்பா”.அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனவள் “எனக்கென்னவோ அவங்களுக்கு நடுவில் பிரச்சனை வரதுக்கு நீ தான் காரணமாக இருப்பியோன்னு தோணுது நித்தி”.“லூசு மாதிரி பேசாதே ரம்ஸ்…விட்டா நான் தான் அவங்க வாழ்க்கையை கெடுக்கிறேன்னு சொல்லுவா போலயிருக்கே” என்றாள் கிண்டலாக.“எனக்கு அப்படித்தான் தோணுது நித்தி. நீ வருத்தபட்டாலும் எனக்கு கவலை இல்லை” என்று கூறி எழுந்து தனது கியுபிகளுக்கு சென்றாள்.அவள் அப்படி சொல்லி சென்றதும் அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தாள். மனமோ ‘நானா? என் அக்கா வாழ்க்கையை நானே கெடுப்பேனா? எனக்கு அம்மாவாகவும், அப்பாவாகவும் இருக்கிற அவள் மேல் அக்கறை வச்சிருக்கிறது ஒரு தப்பா? என்று நினைத்தவளின் மனம் மீண்டும் தவறான பாதையில் யோசிக்க ‘இவளுக்கு என்ன தெரியும்? யாருக்காகவும் நான் அக்காவை விட்டு கொடுக்க மாட்டேன்.அவளை நல்லா பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு’ என்று தீர்மானித்துக் கொண்டாள்.அதே சமயம் மாலை நடக்கவிருக்கும் அலுவலக தோழியின் வரவேற்பிற்கு சென்றால் என்ன என்று யோசித்தாள். ‘அலுவலகத்தில் நடக்கும் எந்த விழாக்களுக்கும் போகாமல் இருப்பதால் நண்பர்களிடையே பேர் கெட்டு போகும்,அதனால் போய்விட்டு வந்துவிடலாம்’ என்று எண்ணினாள்.மெல்ல எழுந்து ரம்யாவின் அருகில் சென்று நின்றாள். அவளோ முகத்தை திருப்பிக் கொண்டு கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தாள். சிறிது நேரம் அமைதியாக நின்று பார்த்தவள் அவள் கண்டு கொள்வதாக தெரியவில்லை என்றதும், லேசாக தொண்டையை கனைத்து “ரொம்ப தான் பண்ற! இப்போ என்ன சாயங்காலம் நானும் வரணும்.அவ்வளவுதானே! சரி! வரேன்” என்றாள் கடுப்பாக.அவள் வருகிறேன் என்று சொன்னதுமே அதுவரை இழுத்துப் பிடித்திருந்த கோபத்தை விட்டு, அவசரமாக எழுந்து நித்தியை தோளோடு அணைத்துக் கொண்டு “தேங்க்ஸ் நித்தி! நாம மதியமே கிளம்பி எங்க வீட்டுக்குப் போயிடுவோம்’ என்றாள்.“உங்க வீட்டுக்கு வந்துட்டா நான் எப்படி ட்ரெஸ் பண்றது?”“முதல்ல உங்க வீட்டுக்குப் போய் உன் டிரெஸ்ஸை எல்லாம் எடுத்துகிட்டு போவோம். டிரஸ் பண்ணிக்கிட்டு எங்க வீட்டில் இருந்தே கிளம்பி போயிடலாம்” என்றாள் ரம்யா.அதைக் கேட்டு சற்று யோசனையுடன் “ம்ம்..சரி” என்று கூறி விட்டு தனது மேஜைக்கு சென்றாள்.“திருநெல்வேலி கச்சேரி இருக்கிறப்போ இது எதுக்குன்னு சொன்னா கேட்டியா? எல்லாம் லாஸ்ட் மினிட்ல வச்சுகிட்டு அவஸ்தையா இருக்கு” என்று சுந்தரை கடிந்து கொண்டே இசை வாத்தியங்களை வேனில் ஏற்றிக் கொண்டிருந்தான் விஸ்வா.வாத்திய கருவிகளை வேனின் உள்ளே ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்த சுந்தர் “என்ன பண்றது விசு. மாப்பிள்ளை என் நண்பனா போயிட்டான். உங்க ட்ரூப் தான் வரணும்-னு ஒரே வம்பு. அதுதான் உன்னை கேட்காமல் ஒத்துகிட்டேன்” என்றான் பாவமாக.அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவா விஷமத்துடன் “சுந்தர்! அவ்வளவு க்ளோஸ் ப்ரெண்டுக்காக நீ ஏன் ஒரு பாட்டு பாடக் கூடாது?” என்றான்.அந்தநேரம் இசைக் கருவிகளை இணைக்கும் வயர்களுடன் வேனில் ஏறிக் கொண்டிருந்த வாசிம், அதை அப்படியே டொமென்று கீழே போட்டு விட்டு “அப்படியொரு அசம்பாவிதம் நடக்கிறதா இருந்தா சொல்லுங்க நான் இப்படியே ஓடி போய்டுறேன்” என்றான்.அதைக் கேட்டு விஸ்வாவும், சிவாவும் சிரிக்க...சுந்தரும் அவர்களுடன் சேர்ந்து சிரித்து “அட! ஏன்பா! நீங்க வேற..கல்யாண மாப்பிள்ளையே ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த பெண்ணை உஷார் பண்ணியிருக்கான். நான் பாடி அவன் குடியை கெடுக்கவா?” என்றான்.“நல்லகாலம் சுந்தர். உன் குரலை பற்றி உனக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. அதனால பல விபரீதங்களை தடுக்க முடியுது. நீ ஒரு நாள் பாடினதே இன்னமும் எனக்கு குலை நடுங்குது போ!” என்று மேலும் ஓட்டினான் வாசிம்.அதற்கு குழுவில் இருக்கும் பெண் பாடகர்களும் வந்துவிட வரவேற்பு நடக்க இருக்கும் மண்டபத்தை நோக்கி இரு வேன்களில் கிளம்பினர்.அதேநேரம் அலுவலகத்தில் இருந்து ரம்யாவும், நித்யாவும் ஆட்டோவில் கிளம்பியிருந்தனர். ரம்யா சொன்னபடி முதலில் நித்தியின் வீட்டிற்க்கு சென்று ஆடைகளை எடுத்து வந்துவிடலாம் என்றெண்ணி அந்த வழியில் பயணித்துக் கொண்டிருந்தனர்.வெவ்வேறு திசையில் பயணத்தை தொடங்கிய இரு வண்டிகளும் ஒரு சிக்னலில் எதிர் எதிர் திசையில் நின்றிருந்தது. நித்யாவும், ரம்யாவும் பயணம் செய்த ஆட்டோ டிரைவர் சற்று நிதானமன்றி இருந்தார்.சிக்னல் விழுந்ததும் விஸ்வாவின் வேன் யு-டர்ன் எடுக்க, அந்தநேரம் நித்யாவின் டிரைவர் வேகமாக வண்டியை எடுத்து முன்னே திரும்பிக் கொண்டிருந்த வேன் மீது மோதினார்.பின்னிருந்து இடிக்கப்பட்டதில் அதிர்வுடன் நின்றது விஸ்வா சென்ற வேன். உடனே கீழே இறங்கிய டிரைவரும், விஸ்வாவும் வண்டிக்கு என்ன மாதிரியான பாதிப்பு என்று பார்க்கத் தொடங்கும் போது, நித்யாவின் ஆட்டோ டிரைவர் தன் மீது தப்பு இல்லாதது போல் குதிக்க ஆரம்பித்தார்.அதற்குள் மற்றொரு வேனில் இருந்த குழுவினரும் இறங்கி வர, நிலைமை களோபரம் ஆனது. இரு வேன் டிரைவர்களிடமும் சரிக்கு சமமாக சண்டை போட ஆரம்பித்தான் ஆட்டோ டிரைவர்.விஸ்வா மிகவும் பதமாக “இங்க பாருங்கண்ணே! நாங்க சரியான வேகத்தில் தான் திரும்பினோம். வேகமா வந்தது நீங்க தான். அதோட எங்க வண்டிக்கு தான் அதிக அடி. ஆனா நீங்க ரொம்ப தப்பா பேசுறீங்க” என்றான் நிதானத்துடன்.விபத்து நடந்த அதிர்வில் இருந்து மீண்ட ரம்யா பயத்துடன் ஆட்டோவில் இருந்து மெல்ல எட்டிப் பார்த்தாள். நித்யாவோ நடந்தவைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள் விஸ்வா பேசுவதைக் கண்டதும் வேகமாக கீழே இறங்கினாள்.“ஹலோ சார்” என்று சொடக்கு போட்டு கூப்பிட்டு “எங்க டிரைவர் ஒழுங்கா தான் வந்தார். நீங்க பேரிச்சம் பழத்துக்கு போட வேண்டிய குப்பையை எல்லாம் இந்த டிராபிக்கில் ஓட்டிட்டு வந்தா இப்படித் தான் ஆகும்” என்று எகிறினாள்.அவள் சொடக்கு போட்டு கூப்பிட்டதிலேயே முகத்தை சுளித்தவன், அவளது வார்த்தைகளை கேட்டு மேலும் எரிச்சலைடைந்தான்.அதற்குள் அங்கு ஓடி வந்த ரம்யா அவளது கைகளைப் பற்றி இழுத்து அவளது காதில் ‘ஏய்! என்ன பண்ணிட்டு இருக்க? நம்ம டிரைவர் மேல தான் தப்பு” என்று கிசுகிசுத்தாள்.இவர்கள் வழக்கடித்துக் கொண்டிருக்க...சிவாவும், வாசிமும் ஆட்டோ டிரைவரிடம் சண்டையிட, குறுக்கே புகுந்த விஸ்வா டிரைவரின் தோளில் கையைப் போட்டு ஓரமாக தள்ளிக் கொண்டு சென்று ஏதோ சொல்லவும்..அதுவரை கத்திக் கொண்டிருந்தவன் தணிந்து போய் ஒரு கும்பிடு போட்டுவிட்டு வண்டியை எடுக்க சென்றான்.அதை பார்த்துக் கொண்டிருந்த நித்யா இகழ்ச்சியான ஒரு பார்வை பார்த்துவிட்டு “அவன் காலில் விழுந்துட்டான் போல இருக்கு” என்று கூறியபடி நகர்ந்தாள்.அவள் திரும்பும் சமயம் விஸ்வாவின் குரல் அவளை நிறுத்தியது.“ஹலோ மேடம்! ஒரு நிமிஷம் நில்லுங்க! ஒரு பிரச்சனை நடக்கிற இடத்தில் யார் செஞ்சது தப்பு, ரைட்டுன்னு தெரிஞ்சுகிட்டு பேசுங்க. அதோட இனிமே யாரையும் சொடக்கு போட்டு கூப்பிடாதீங்க. அது மரியாதையில்லை” என்று கூறிவிட்டு தனது வேனில் ஏறினான்.வேன் ஜன்னலருகே நின்று கொண்டிருந்த சிவாவோ அவளை கொலைவெறியுடன் பார்த்து “ஆளையும், மண்டையும் பாரு! இவளை மாதிரி ஆள் கிட்டே எல்லாம் பேசுறதே வேஸ்ட். குப்பை வண்டியாமில்ல இது” என்று விஸ்வாவிடம் கத்திவிட்டு தங்களது வண்டியில் ஏறினான்.அவன் பேசியதில் முகம் மாறி நின்றிருந்தவளை கையை பிடித்து இழுத்து வந்து ஆட்டோவில் ஏற்றினாள் ரம்யா. அப்போது வேனில் இருந்த “சப்தஸ்வரங்கள் இசைக்குழு” என்கிற பேனர் கண்ணில் பட.. “ஒ..கரகாட்டகாரன் ட்ரூப்பா? அது தான் பேரிச்சம் பழ வண்டி வச்சிருக்கானுங்களா?” என்றாள் நக்கலாக.அதைக் கேட்ட ரம்யா “நித்தி! என்ன இப்படி பேசுற? சும்மா வாயை மூடிகிட்டு வா!” என்று அதட்டினாள்.நித்தியின் மனமோ விஸ்வா பேசிவிட்டு சென்றதை எண்ணியே உழன்று கொண்டிருந்தது. ‘எப்படி பேசிட்டு போறான்! தெருவுக்கு தெரு கோவிலில் கொடுக்கிற தேங்காய் மூடிக்கு பாடுறவன், படிச்ச என்னைப் பார்த்து மரியாதையை பத்தி பாடம் எடுக்கிறான்’ என்று காய்ந்தாள்.அவளிடம் பேசிவிட்டு சென்ற விஸ்வாவின் மனமும் நித்யாவை பற்றி தான் எண்ணிக் கொண்டிருந்தது. அவளது நடவடிக்கை பிடிக்கவில்லை என்றாலும், அவளது தோற்றமும், அந்த குழந்தை முகமும் அவனது எண்ணத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டது.இருவரின் எண்ணங்களும் ஒரே பாதையில் பயணித்தாலும், அவள் வெறுப்பை சுமந்து கொண்டும், அவன் அன்பை சுமந்து கொண்டும் சென்று கொண்டிருந்தனர்.அத்தனை களோபரங்களையும் கடந்து மிதமான அலங்காரத்துடன் தோழிகள் இருவரும் வரவேற்புக்கு வந்திறங்கினர். அங்கு அலுவலகத்தின் மற்ற நண்பர்களும் வந்திருக்க நித்தியும் தன்னை மறந்து மற்றவர்களுடன் ஐக்கியமானாள்.அப்போது அந்த ஹாலின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமர்ந்திருந்த இசைக் குழுவினர் தங்களது பணியை துவங்கினர். பாடலின் ஒலி கேட்டு அசுவாரசியமாக பார்த்தவள் அங்கு தொங்கிக் கொண்டிருந்த பேனரை பார்த்ததும் அதிர்ந்தாள்.“சப்தஸ்வரங்கள் இசைக்குழுவினரின் இன்னிசை சங்கமம்”குழுவிலிருந்த பாடகர்கள் ஒவ்வொருவராக பாட ஆரம்பிக்க, ஒரு பக்கம் உறவுகளுடன் கதை பேசிக் கொண்டிருந்தவர்கள் கூட பேச்சை நிறுத்திவிட்டு பாட்டை ரசிக்க ஆரம்பித்தனர். பேனரை பார்த்த நித்தியின் விழிகளோ அவளை அறியாமலே அவனைத் தேட ஆரம்பித்தது.அவனோ தங்களது குழுவினருக்கு தேவையான உதவிகள் செய்வதில் மும்மரமாக இருந்தான். அவனை கண்ட நிமிடம் முதல் நண்பர்களிடம் பேசுவதை கூட நிறுத்திவிட்டு விஸ்வாவை பார்வையால் தொடரும் வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தாள்.அதிலும் அவனது குரல் காந்தமென அவளது மனதை கட்டியிழுக்க ஆரம்பித்தது. ஆனால், மனமோ ஒருபுறம் இப்படி கல்யாண வீட்டில் பாடி என்னத்தை சம்பாதிச்சிட போறான் என்று கணக்கு போட்டது. தன் மனம் போகும் பாதையை எண்ணி துணுக்குற்றவள்..தன்னை தானே கடிந்து கொண்டு அவனைப் பார்ப்பதை தவிர்த்தாள்.திருமண மண்டபத்திற்குள் அவள் நுழைந்த அந்த நிமிடமே அவளை கண்டு கொண்டான் விஸ்வா. அதே சமயம் அவள் தன்னை விழியால் தொடர்வதை கண்டதும் மனம் துள்ளி குதிக்க ஆரம்பித்தது. ‘பாட வந்த இடத்தில் இப்படி மனம் அலைபாய கூடாது!’ என்றெண்ணி தனக்கு தானே கடிவாளம் இட்டுக் கொண்டான்.அதனால் முடிந்தவரை அவளது பார்வைகளை தவிர்த்தான். இவற்றை எல்லாம் சிவாவும் கவனித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு நித்யாவை சுத்தமாக பிடிக்கவில்லை. விஸ்வாவின் மனம் அவள் பின்னே செல்ல தொடங்குகிறதோ என்று எண்ணி பயந்தான்.அப்போது சுந்தர் வந்து தனது நண்பன் மாப்பிள்ளையின் வேண்டுகோளாக ஒரு பாடலை பாட வேண்டும் என்று சிவாவிடம் கேட்டுக் கொண்டான்.பாடல் என்ன என்று கேட்டு தெரிந்து கொண்ட விஸ்வா தானே அதை பாடுவதாக கூறினான். அதை கேட்டதும் அவனை சந்தேகமாக பார்த்தபடியே போய் அமர்ந்தான் சிவா.உன் மேல ஒரு கண்ணு

நீ தான் என் முறை பொண்ணு

ஒன்னோட இவ ஒன்னு – உனை

மறந்தா வெறும் மண்ணு..

இருக்கிறேன் உன்னால- மறுக்கிற

தன்னால கிறங்குற, நொறுங்குற

பாரு நான் உன் மாப்பிள்ளைஎன்று பாடியவனின் விழிகள் அவ்வப்போது அவளை தீண்டி சென்றது. நித்தியின் மனமோ அவனது பாடலிலும், விழி தீண்டலிலும் நெகிழ்ந்தாலும், ‘போயும் போயும் திருமண வீடுகளில் பாடுபவனிடமா என் மனம் செல்ல வேண்டும்? என் படிப்பென்ன, என் வேலை என்ன? இவனை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்!’ என்று எண்ணிக் கொண்டாள்.
 

Chitra Balaji

Member
Feb 5, 2020
43
27
18
இந்த loose yaarayume நல்லா விதமா நினைக்க மாட்டா போல... Ivala vechi சமாளிக்க poraano.... நிரஞ்சன் பாட்டி ஒரு mudivoda kalambitaanga... Super Super maa