அத்தியாயம் - 5

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,470
1,032
113
அத்தியாயம் – 5

பௌர்ணமி இரவு!

கருமை நிறைந்த ஆகாயத்திற்கு வெளிச்சம் கொடுத்து நடக்கவிருக்கும் சம்பவத்திற்கு சாட்சியாக போவதற்காக காத்திருந்தது பால் நிலவு.

அலையின் ஓசை காதுகளை தொட்டு மீள, இரு கைகளையும் பின்னே கட்டிக் கொண்டு கரையை நனைத்துச் செல்லும் அலைகளை பார்த்தபடி அமைதியாக நின்றிருந்தான் ஆதி.

அவனது முகத்தில் அத்தனை இறுக்கம். அதையும் மீறி ஒரு தெனாவெட்டு. ஆதிகேசவனை தொட்டுப் பார்க்க அவன் நினைத்தால் மட்டுமே முடியும் என்கிற திமிர்.

அவன் பின்னே சற்று தள்ளி நின்று கையிலிருந்த மொபைலை அவ்வப்போது பார்த்தபடி நின்றிருந்தான் கார்த்தி. எதிரே இருப்பவனின் மோன நிலையை கலைக்கும் எண்ணமில்லாமல் நேரத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரம் கடலலையின் ஓசையைத் தவிர அங்கு வேறொரு சப்தமில்லை. கேசவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று புரியாமல் அவன் முதுகை வெறித்தபடி நின்றிருந்தவனை கலைத்தது ஆதியின் குரல்.

“நேரமாச்சா கார்த்தி?”

“ஆமா கேசவா! எல்லாம் தயாரா இருக்கு! ஆனா உன்னோட ப்ளானில் என்ன மாற்றம்? அதை சொல்லு?”

மெல்ல அவனை திரும்பி பார்த்தது சிரித்தவன் “மாற்றம் எதுவுமில்லை கார்த்தி. சரக்கு அவனுங்க கைக்கு போகட்டும்” என்றான்.

“என்ன! சரக்கு அவனுங்க கைக்கு போகட்டுமா? ஏன் கேசவா?”
சற்றே முன்னே நடந்து கார்த்திக்கின் அருகில் வந்தவன் அவன் காதில் மெல்ல சில விஷயங்களை முணுமுணுக்க, அதைக் கேட்டதும் அவன் முகம் பளீரென்று புன்னகையை பூசிக் கொண்டது.

“இதை நான் எதிர்பார்க்கவே இல்ல கேசவா! இத்தனை வருஷம் உன் கூடவே இருக்கேன். என்னாலையே உன்னை கணிக்க முடியல” என்றான் வியப்பாக.

அவன் தோள்களை பிடித்து தட்டிக் கொடுத்து “அடுத்தவன் என் முடிவை கெஸ் பண்ணிட்டா நான் இங்கே இருக்க முடியாது கார்த்தி!” என்றபடி முன்னே நடந்தான்.

“அது உண்மை! கேசவா! நம்ம இடத்திலிருந்து எல்லாம் பக்காவா தயாராகி இருக்கு. அன்னைக்கு யாருக்கோ தகவல் அனுப்பினானே அவனை என் கண்காணிப்பில் தான் வச்சிருக்கேன். அவன் இப்போ ரொம்ப சுறுசுறுப்பா இருக்கான்”.

“ம்ம்...அவனுக்கு கொஞ்சம் கூட சந்தேகம் வரக் கூடாது! அவனை வைத்து தான் பொருள் யார் கைக்கு போகுது என்று தெரிந்து கொள்ளப் போகிறோம்”.

“ஓகே! கிளம்பலாமா?”

“நீ கிளம்பு கார்த்தி...என் இடத்திலிருந்து நீயே நடத்து. நான் எப்போ எங்கே வரணுமோ அங்கே சரியா வரேன்”.

அவன் சொன்னதைக் கேட்டதும் எழுந்த சிரிப்புடன் “முடிவு பண்ணிட்ட! இனி, தான் ஆட்டம் சூடு பிடிக்க போகுது” என்று கார் சாவியுடன் வெளியேறினான்.

சிவலிங்கம் வைக்கப்பட்டிருந்த ஆதிகேசவனின் கோடவுனை சுற்றிலும் ஆட்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

அவர்களின் நடவடிக்கையை அடுத்தவருக்கு சொல்ல காத்திருந்தவனோ ஒருவித பதட்டத்துடனேயே இருந்தான். கேசவனுக்கு தெரியாமல் காரியத்தை முடிப்பது இமாலய சாதனை. அவன் மோப்பம் பிடித்து விட்டால் மரணம் மட்டுமே தன்னை காப்பாற்ற முடியும் என்பதை அறிவான்.

அதனால் தனது நடவடிக்கையில் மிக கவனமாக இருந்தான். அதே சமயம் கண் கொத்தி பாம்பாக ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டிருந்தான். லிங்கம் பக்காவாக ஒரு இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டு வெளியில் செல்ல தயாராக இருந்தது.

ஒரு கண்டைனர் லாரி முழுவதும் ஒரே மாதிரி இரும்பு பெட்டிகளுடன் அங்கு காத்திருந்தது. சிவலிங்கம் வைக்கப்பட்டிருக்கும் இரும்பு பெட்டியை அந்த லாரிக்குள் ஏற்றினர். கார்த்தி முன்னே நின்று ஆட்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே சென்ற ஆட்கள் இரும்பு பெட்டியை வைத்துவிட்டு கீழே இறங்க சிறிது தாமதம் ஆனது.
வேவு பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு லிங்கம் உள்ள பெட்டி சரியாக எங்கு வைக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. அதனால் லாரியின் அருகே முன்னேறியவன் “என்னப்பா வச்சாச்சா?” என்றான் இயல்பு போல.

லாரியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த ஒருவன் “வச்சாச்சு வச்சாச்சு!” என்றபடி இறங்கினான்.

கார்த்திக் அவனை கவனித்தபடி மெல்ல அங்கே செல்ல, அதைக் கண்டவுடன் எதுவும் தெரியாத மாதிரி அங்கிருந்து மெல்ல நகர்ந்தான்.

உள்ளுக்குள் எந்த பெட்டி என்று தெரியவில்லையே என்று யோசித்தபடி சென்றவனை நிறுத்தியது ஒருவனின் குரல்.
“டேய்! நடுவால அஞ்சாவது தானே வச்ச” என்றபடி அருகில் இருந்தவனிடம் பேசிக் கொண்டே இறங்கி வந்தான் ஒருவன்.

அதைக் கேட்டதும் உள்ளுக்குள் உற்சாகம் போங்க, அவசரமாக அங்கிருந்து நகர்ந்து எவரும் கவனிக்காத இடத்திற்கு சென்று தகவல் கொடுத்தான். அனைத்தையும் தனது ஆளின் மூலம் கவனித்துக் கொண்டிருந்தான் கார்த்தி. அவன் இதழில் மெல்லிய சிரிப்பொன்று படர்ந்திருந்தது.

இரவு நெருங்க நெருங்க ஆட்களிடம் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கேசவன் அதுவரை அங்கு வராதது அவர்களுக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தியது.

சுமார் ஒரு மணியளவில் லாரி மெல்ல கோடவுனை விட்டு வெளியேறியது. லாரியின் டிரைவர் தவிர இருவர் முன்னே அமர்ந்திருந்தனர். அவர்களின் இடுப்பில் சக்தி வாய்ந்த கள்ளத் துப்பாக்கிகள் மறைந்திருந்தது. பெட்டிகளின் மீது இருவர் மட்டும் அமர்ந்திருந்தனர்.

லாரியின் முன்னே கார்த்தியின் கார் செல்ல, பின்னே ஒரு காரில் நால்வர் அமர்ந்திருந்தனர். அனைவரின் கைகளிலும் துப்பாக்கிகள் இருந்தது. அதை தவிர, காரின் இருக்கைகளுக்கு இடையில் கத்தி, மற்றும் அருவாள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
ஏர்போர்ட் செல்லும் சாலையில் லாரி மிதமான வேகத்தில் பயணிக்க ஆரம்பித்திருந்தது. வேவு பார்த்தவன் கோடவுனின் பின்புறம் சென்று லாரி கிளம்பிவிட்ட தகவலை தெரிவித்து விட்டு திரும்பியவனை இரு வலிய கரங்கள் அலேக்காக தூக்கியது.

திடீரென்று நடந்து விட்ட சம்பவத்தில் பயந்து போனவன் போராட, பிடித்திருந்தவனின் அழுத்தமான பிடியை மீறி அவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. சத்தம் போட முடியாமல் அவனது வாயும் அடைப்பட்டிருந்தது. அவனை தூக்கிக் கொண்டு இருளில் நடந்தவன் அங்கிருந்த ஒரு சிறிய அறையில் போட்டு கை, கால்களை எல்லாம் கட்டி போட்டுவிட்டு வெளியேறினான். அவனது முகத்தை பார்க்க முயல, கருப்பு நிறத் துணியால் கண்கள் மட்டுமே தெரியும் அளவிற்கு மறைக்கப்பட்டிருந்தது.
அந்த கண்களில் தெரிந்த உக்கிரத்தை வைத்தே தன்னை அடைத்து போட்டிருப்பவன் யார் என்பதை கண்டு கொண்டான். எப்படியாவது அங்கிருந்து தப்பித்தாக வேண்டும் என்கிற பயம் எழுந்தது அவனிடத்தில். தனது முடிவு வேதனையான முடிவாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டவன் தப்பிக்கும் முயற்ச்சியில் ஈடுபடலானான்.

ஏர்போர்ட்டிற்கு நேர்வழியில் செல்லாமல் குறுக்கு வழியில் எங்கும், எவரிடமிருந்து தொல்லைகள் வராத வண்ணம் பாதையை தேர்ந்தெடுத்து சென்று கொண்டிருந்தது லிங்கம். இருளடர்ந்த பாதையில் நிலவின் வழிகாட்டலுடன் மெல்ல நாட்டை விட்டு வெளியேறுவதற்காக முன்னேறிக் கொண்டிருந்தது.

பாதி தூரத்தை கடந்திருந்த வேளையில் திடீரென்று பாதையின் நடுவே சர சரவென்று வரிசையாக குறுக்கே வழியை மறித்து பிரமாண்டமாக ஒரு லாரியும், அதன் பின்னே இரு பெரிய கார்களும் வந்து நின்றது.

அதை பார்த்ததுமே கார்த்தி அவசரமாக போனை எடுத்து லாரியில் இருந்த டிரைவரை அழைத்து லாரியை பின்னே திருப்பக் கூறினான். ஆனால் அதை செய்ய முடியாதபடி லாரியின் பின்னே இரு பெரும் கார்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

தாங்கள் வசமாக சிக்கிக் கொண்டோம் என்று உணர்ந்தவர்கள் வேகம் வேகமாக கீழே இறங்கி அந்த லாரியை நோக்கியும், காரை நோக்கியும் கையில் ஆயுதங்களுடன் ஓடினர்.

காரில் இருந்தவர்களும் ஆயுதங்களுடன் இறங்கி சண்டை போட ஆரம்பிக்க, கார்த்திக்கோ அலட்டிக் கொள்ளாமல் நிதானமாகவே கார்கள் இருந்த இடத்திற்கு சென்றான். அதற்குள் இருபுறமும் கலவரமாக இருந்தது. கேசவனின் ஆட்கள் சண்டை போடுவதில் மும்மரமாக இருக்க, மற்றவர்களோ லாரியில் இருந்த பெட்டிகளை இறக்கி தங்களது லாரிக்கு மாற்ற ஆரம்பித்திருந்தனர்.

அதை தடுக்க முயன்ற கார்த்திக்கின் கைகளை கட்டி, வாயில் பிளாஸ்திரி ஒட்டி அவனது காருக்குள் அடைத்து விட்டு பெட்டிகளை லாரியில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.
அவர்களை துரத்த முயன்றவர்களை துப்பாக்கியால் சுட்டும், ஆயுதங்களால் தாக்கி விட்டு பறந்தனர். கேசவனின் ஆட்கள் வேகமாக வந்து கார்த்திக்கை அவிழுத்து விட்டு அவர்களின் பின்னே துரத்திக் கொண்டு செல்லலாயினர்.

ஏர்போர்ட்டுக்கு செல்லும் பாதையை விட்டு விலகி மாற்று பாதையில் விலகி செல்ல ஆரம்பித்திருந்தது எதிரணியின் லாரி. பெட்டிக்குள்ளிருந்த லிங்கேஸ்வரனும், விண்ணில் இருந்த நிலவும் அனைத்து நிகழ்வுகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பெட்டியை தாங்கள் கைப்பற்றி விட்டதை தங்கள் தலைவனுக்கு தெரிவித்த லாரிக்காரன், பின் தொடர்பவர்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல் மிகுந்த உற்சாகத்துடன் முன்னேறிக் கொண்டிருந்தான்.

இருளில் முன்னே செல்லும் வண்டிகளின் வெளிச்சம் கண்களை கூசியது. கேசவனின் ஆட்களை வெற்றிக் கொண்டு அவனது பொருளை எடுத்து விட்டோம் என்கிற மகிழ்ச்சியில் சற்றே தெனாவெட்டாக சென்று கொண்டிருந்தனர். அப்போது டிரைவரின் எண்ணிற்கு அழைப்பு வர, “ஐயா! சொல்லுங்க!...ம்ம்..அப்படியே செஞ்சிடுறேன்” என்று கூறி போனை அனைத்தவன் “டேய்! ரெடி ஆகுங்க. சரக்கை கை மாத்தி விடணும்னு ஐயா சொல்லிட்டார்” என்றான்.

“வண்டி வருதா?”

“ஆமாம்! பின்னாடி வரவனுங்களை சமாளிச்சு போக்கு காட்டிட்டு மாத்தனும்”.

“கேசவன் இதுல எங்கேயுமே வரலையே? இவ்வளவு பெரிய சரக்கை அசால்ட்டா அடிக்க விட்டுடுவானா அண்ணே?”

“எனக்கும் அதான் சந்தேகமா இருக்குடா”

“கவனமா இருங்கண்ணே! குறுக்கால புகுந்து அத்தனை பேரையும் தூக்கிட போறான்”.

“கேசவன் சரக்கையே அடிச்சிருக்கோம் என்று நமக்கு பேர் வந்தா பீல்டுல நின்னுடலாம்டா. எவன் வந்தாலும் அடிச்சு தூக்க தயாராகுங்க” என்றபடி லாரியின் வேகத்தை அதிகப்படுத்தினான்.

கார்த்தியும் மற்ற ஆட்களும் அவர்களை தொடர முயற்சிக்க, எங்கிருந்தோ வந்த ஜீப்கள் அவர்களை வழிமறித்து லாரியை பின்தொடரா வண்ணம் செய்தது.

அவர்களை தடுத்தபின் சற்றே ஆசுவாசமாக முன்னேறிக் கொண்டிருந்தது லாரி. அப்போது இருளடைந்த பாதையின் குறுக்கே இருந்து ஒரு கண்டைனர் லாரி குறுக்கே வந்து அவர்களை வழிமறித்து நின்றது. அதைக் கண்டதும் ப்ரேக் போட்டு நிறுத்திய டிரைவர் “சீக்கிரம் இறங்கி எல்லா பெட்டியையும் அந்த லாரிக்கு மாத்துங்கடா” என்றான் சத்தமாக.

உடனே சடசடவென்று ஆட்கள் அனைவரும் இறங்கி பெட்டிகளை இறக்க ஆரம்பித்தனர். புயல் வேகத்தில் பெட்டிகள் அனைத்தும் மற்றொரு லாரிக்கு இடமாற்றப்பட்டது. பெட்டிகள் அனைத்தும் ஏற்றப்பட்டதும் லாரியின் டிரைவர் சென்று கண்டைனர் லாரி டிரைவரின் அருகே சென்று பணி முடிந்தது என்று சொல்ல வாயை திறந்தவனின் விழிகள் நிலை குத்தி நின்றது.

ஓங்கு தாங்காக கருப்பு துணி கொண்டு முகத்தை மூடி நின்றவனின் விழிகளை கண்டு அச்சம் ஏற்ப்பட பதட்டத்துடன் தனது லாரியை நோக்கி ஓட முயற்ச்சிதான். பட்டென்று அவனது சட்டையைப் பற்றி இழுத்து பையிலிருந்த போனை எடுத்து, கடைசியாக அவனுக்கு வந்திருந்த நம்பருக்கு அழைத்தான்.

“முடிஞ்சிருச்சா?”


அந்தக் குரல் காதில் ஒலித்த மறுநிமிடம் முகமூடிக்குள் மறைந்திருந்த இதழ்களில் மெல்லிய புன்னகை “கொஞ்ச நேரத்தில் முடிஞ்சிரும்” என்று கூறி முடிக்கவும் அந்தப் பக்கம் அதிர்ச்சியில் “ஆதிகேசவா!” என்று பதட்டத்துடன் கையிலிருந்த மொபைல் கிழே விழுந்து உடைந்தது.
 

Chitra Balaji

Member
Feb 5, 2020
34
21
8
Woooooow..... Vechi senjitaan da ஆதி yaaru அந்த ஆளு..... Semma sketch potaan la... Super Super maa... Semma semma episode
 

bselva

Active member
Sep 19, 2018
122
18
28
ப்பா இப்படி பரபரன்னு seat நுனில உக்கார வைக்கிறது உங்க special. super போங்க. 😁😁