அத்தியாயம் - 5

rajeswari sivakumar

Moderator
Staff member
Mar 26, 2018
219
44
43
இதயம் – 5
அன்று ஆகாஷ் சொன்னதிலிருந்து மதி சமையல், பாட்டி பேச்சு... இப்படி எதைபற்றியும் கவலைப்படாது அவள் போக்கில் எப்போதும்போல ஆகாஷை ஒரு வழியாக்கி கொண்டிருந்தாள். இவனும் அடிக்கடி அவளிடம் வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொண்டான்.
அலுவலகம் முடித்து வழக்கம்போல ஒன்றாக வீடு வந்த மதி அதன் பின் இவனின் கண்ணுக்கு கிடைக்கவில்லை. அப்படி என்ன செய்கிறாள் என பார்க்க போனவனுக்கு இவனின் வருகையை கூட உணராது, லாப்டாப்பில் அவள் எதையோ குடைந்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் ‘ஒருவாரமா அமைதியா இருந்தாளே... இன்னைக்கு என்ன ஆச்சு? மறுபடியும் எதையாவது புதுசா செய்யபோறாளா...’என்று கதிகலங்கிப்போனது. அவளிடம் இப்போதைக்கு எதையும் கேட்டு தானே போய் ஏன் வம்பில் மாட்டவேண்டும் என்று நினைத்து,வந்த சுவடே தெரியாது வெளியேறியவன் ஹாலில் அமர்ந்து டிவி பார்க்க தொடங்கினான்.
டிஸ்கவரியில் மூழ்கியிருந்தவனை மிகமுக்கியமான செய்தியை பகிர்வதற்காக அவனது கைபேசி சப்தமிட்டு அவனை அழைத்தது. அருகில் இருந்ததை கை நீட்டி எடுத்து பார்த்தவனுக்கு கிரெடிட்கார்டை உபயோகித்ததற்கான தகவல் வந்திருந்தது.நேற்று தானே மன்த்லி பர்சேஸ் முடித்தாள். திரும்பவும் என்ன... என்று அதில் இருந்த தொகையை பார்த்தவன் உச்சத்தொனியில்,
“ஸ்கை மூன்!” என அலறினான்.
அவனின் குரலுக்கும் அலறலுக்கும் கொஞ்சம் கூட அசராத வான்மதி,”இப்ப எதுக்கு இப்படி கத்தறீங்க?” என சாதரணமாய் கேட்டுக் கொண்டு அவனருகில் வந்தாள்.
“பத்தாயிரத்துக்கு என்ன வாங்கின ஸ்கை மூன்?” என்று வார்த்தைகளை துப்பியவனிடம்,
“என்னது...? பத்தாயிரமா! அந்த கிரெடிட்கார்டுகாரன் உங்களை நல்லா ஏமாத்திட்டான் ஆகாஷ். நான் அவ்வளவுக்கெல்லாம் ஒன்னும் வாங்கலைஅவனை நீங்க சும்மா விடாதீங்க.என்ன தைரியம் இருந்தா இப்படி சீட் பண்ணுவான்?” என்று அவனுக்கும் மேல் குதித்தாள்.
‘மதி சொன்னதை அப்படியே நம்ப இவனென்ன மதியில்லாதவனா! இவ்வளவு செலவு செய்து அப்படி என்னதான் வாங்கினாள் என்பதை அறிந்துக் கொள்ள விரும்பியவன்,
“சரி... நீ அவ்வளவுக்கெல்லாம் வாங்கல. ஓகே... நான் நம்பிட்டேன். அதை அப்படியே விடு. இப்ப நீ என்ன வாங்கினன்னு சொல்லு?” என கேட்டான்.
இவனை சுத்தலில் விடாது ஆரம்பத்திலேயே விஷயத்தை சொல்லிவிட்டால் அவள் மதியல்லவே! “அடுத்த வாரம் நியூஇயர் வருது இல்ல...” என இழுத்தாள்.
“ஆமா! வருது. அதுக்கென்ன இப்ப?”
“நம்ம ஆபீஸில் நியூஇயர் செலிப்பரேஷன் இருக்கு இல்ல...”
“ஆமா இருக்கும். அதுக்கு?”
“நாங்க லேடிஸ் எல்லாம் ஒரே மாதிரி டிரெஸ் போடலாம்னு பிளான் பண்ணியிருக்கோம்னு அன்னைக்கு உங்ககிட்ட சொன்னேன் இல்ல...”
இதுவரை பொறுத்தது போதும் என பொங்கியெழுந்த ஆகாஷ், ”நான் கேட்டேனா...? இந்த வெங்காய விவரத்தையெல்லாம் நான் கேட்டேனா ஸ்கை மூன்? கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு!” என கத்தினான்.
“நீங்க கேட்டதுக்குதான் பதில் சொல்லிட்டு இருக்கேன். எனக்கு இப்படிதான் சொல்லவரும்.இஷ்டமிருந்தா கேளுங்க. இல்லைன்னா நான் போய் என் வேலையை பார்க்கிறேன்” என்றவள் கோபத்தோடு அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழும்ப,
அதில் பதறிப்போனவன், “அச்சோ... ஸ்கை மூன்! அதுக்குள்ள கோவிச்சிகிட்டா எப்படி? இப்ப பாரு... நீ உன்னோட போன ஜென்மத்தில் இருந்து கதை சொல்ல ஸ்டார்ட் பண்ணாலும் நான் வாயை திறக்காம அமைதியா கேட்பேன்.நீ விட்ட இடத்தில் இருந்து கண்டினியூ பண்ணுடா மூன் பேபி!” என்றதோடு அவளை இழுத்து தன்னருகில் அமர்த்திக் கொண்டான்.
“ம்ம்ம்... எதுல விட்டேன் ஆகாஷ்?” என கெத்தாக கேட்டவளை கொலைவெறியில் முறைத்தாலும்,
“ஒரே மாதிரி டிரெஸ் போடலாம்னு பிளான் பண்ணீங்களா...” என எடுத்துக் கொடுத்தான்.
“ஹாங்க்... ஆமா. பிளான் பண்ணோமா... அதுக்குதான் நான் ஒரு டிரஸ் வாங்கினேன்”
“ஒரு டிரஸ்ஸா பத்தாயிரம்?” என மீண்டும் அலறியவன் அவளின் முறைப்பில் அடங்கி,
“என்ன டிரஸ் வாங்கின?” என சாதாரணமாக கேட்டான்.
“லேடீஸ் வாங்கற டிரஸ் பத்தியெல்லாம் நீங்க ஏன் கேட்கறீங்க?” என சந்தேககுரலில் கேட்டு முறுக்கிக்கொண்டவளிடம்,
இப்படி எதையாவது பேசி கடைசியில் அது சண்டையில் வந்து நிற்க, அதன்பின் எல்லா பிரச்சனைக்கும் இவன்தான் காரணம் என்று சொல்லி பழியை இவன் மேல் போட்டு விடுவது மதியின் வழக்கம். இதை அனுபவத்தில் அறிந்தவன், “எனக்கு எதுக்குமா மத்த லேடீஸ்.... பத்தி கவலை? என்னோட லேடி என்ன வாங்கினான்னு மட்டும்தான் நான் கேட்கறேன் ஸ்கைமூன்” என சண்டைக்கு நான் ஆளில்லை என்றான்.
அதில் கொஞ்சம் மலை இறங்கியவள், “லேஹங்கா!” என்றாள்.
“அது எதுக்கு புதுசு வாங்கின. அடிக்கடி அதை போடவும் முடியாது. நம்ம ரிசப்ஷனுக்கு போட்டதே இருக்குமே. அதையே...” என்றவனின் பேச்சில் இடைவெட்டியவள்,
“லூசாப்பா நீங்க? அன்னைக்கு நான் அதை போட்டதை நம்ம ஆபீஸ் மொத்தமும் பார்த்திருக்கும். திரும்பவும் அதையே போடனுமா...” எனக் கேட்டு கண்களால் எரித்தாள்.
“அடிப்பாவி... அதுக்காக ஒரு நாள் போடறதுக்கு ஒரு புது டிரஸ் எடுப்பியா?” என தன்னை மறந்து இவன் கத்தியதும்,
குற்றம் சாட்டும் பார்வையை இவனிடம் செலுத்தி, “ஒரே ஒரு டிரஸ் எடுத்தேன்.அதுக்கு இவ்வளவு கேள்வி கேட்பீங்களா...” என சண்டைக்கு அடித்தளமிட்டாள். இதற்கு மேல் இதை பற்றி பேசினால் வம்புதான் வரும் என உஷாரானவன்,
“ஸ்கைமூன்! ஜஸ்ட் கொஞ்சம் நேரம் போட, பத்தாயிரத்துக்கு ஒரு டிரெஸ் வாங்கறது எல்லாம் உனக்கு ரொம்ப ஓவரா தெரியலையா...”என்று பதமாய் கேட்டான்.
“நீங்க என்னப்பா செவிடா? இப்பதானே அவ்வளவுக்கெல்லாம் வாங்கலைன்னு சொன்னேன்” என எரிந்து விழுந்தவளிடம்,
ஷப்பா... இவகிட்ட முடியல.... காதலிக்கும் போதுதான் சுத்தல்ல விட்டான்னா.. ஆயூசுக்கும் அப்படியே அலையவிடறாளே... என்று நொந்தவன், “சரி... எவ்வளவுக்கு வாங்கின?” என பொறுமையாக கேட்டான்.
“ஜஸ்ட் நைன் தவுசன்ட் நைன் ஹன்ரட் அன்ட் நைட்டிநைன் ஒன்லி!”
இதைக் கேட்டு திருதிருவென விழித்தவன், அடுத்து என்ன பேசுவது என தெரியாது மொழி மறந்து போனான்.
ஒத்த ரூபாய்க்குதான் இவள் அந்த ஆட்டம் போட்டாளா... கடுப்பானவன்,அதையே அவளிடம் சொல்லியும் விட்டான்.
சொன்னவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்தவள்,”எல்லாத்தையும் காசைக் கொண்டு அளக்க கூடாது ஆகாஷ்தம்பி!” என்றாள் சாந்த சொரூபியாய்.
“இதை பத்தாயிரத்தை ஒரு நாள் கூத்துக்கு துணியில் போட்டவள் எல்லாம் சொல்லக் கூடாது!” என்றான் காட்டமாய்.
“திருப்ப திரும்ப பத்தாயிரம்னு சொல்லாதிங்க ஆகாஷ்!” என்றவளிடம், தன்னுடைய பர்சில் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து கொடுத்துவிட்டு,
“இப்ப சொல்லலாமா?” என்றான்.
“இப்பவும் சொல்ல கூடாது! நான் செலவு செய்தது பத்தாயிரம் இல்லை. அதனால நீங்க இப்ப இல்ல, எப்பவும் சொல்ல கூடாது” என்றாள் கண்டிப்புடன்.
மதியின் அலப்பறையில் அலுத்துப் போனவன்,”ஒரு ரூபாய்க்கு எதுக்கு இந்த ஆர்பாட்டம் பண்ற?” என சலிப்பாய் சொன்னவனிடம்,
“இங்கதான் உங்களோட பார்வையும் எங்களோட பார்வையும் வேறுபடுது மிஸ்டர். ஆகாஷ்!” என மிதப்பாய் சொன்னவளை,
‘என்ன சொல்ல வரா இவ?’ என புரியாது பார்த்தான்.
“நீங்க அந்த ஒரு ரூபாயை பணமா பார்க்கறீங்க.நானும் அந்த துணியை தயாரித்த நிறுவனமும் இலக்கமா... அதாவது லகரமா பார்க்கிறோம்!” என்று தெளிவாக விளக்கம் கொடுத்தாள்.
ஆரம்பிச்சுட்டாடா.... என்று நினைத்தவன், “நான் உன்னை இப்ப பயந்து போய் பார்க்கிறேன் ஸ்கைமூன்! இவ்வளவு நேரம் நல்லாதானே இருந்தே?” என மிரண்டுப் போய் கேட்டான் ஆகாஷ்.
“இதுக்குதான் படிக்கும்போது படிப்பில் ஆழ்ந்து படிக்கனும்.அப்படி படிக்காததால் இப்ப பாருங்க ஒரு சாதாரண விஷயம் கூட உங்களுக்கு தெரியல! அய்யோ பாவம்...” என்று அவனை நக்கலடித்தவள், ஒரு புரியாத புதிருக்கு விடையளிக்க ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை ரிலாக்ஸாக்கிக் கொண்டு,
“நான் செலவு செய்தது ஃபோர் டிஜிட். அதாவது... ‘நைன் தவுசன்ட் நைன் ஹன்ரட் அன்ட் நைட்டிநைன்’ ஒன்லி. ஆனா... நான் செலவு செய்ததாக நீங்க சொல்வது பத்தாயிரம்... அது ஃபைவ் டிஜிட். இப்ப கணக்கை நல்லா கூட்டி கழிச்சி பார்த்தா உங்களுக்கு புரியும் நான் சொல்ல வருவதில் இருக்கும் உண்மை!” என ஏற்ற இறக்கத்தோடு சொன்னவளை வெட்டவா... குத்தவா... என பார்த்து வைத்தான் ஆகாஷ்.
வாயடைத்துபோய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம்.“என்ன தம்பி! இவ்வளவு நேரம் உங்ககிட்ட எதுக்காக நான் வாதாடினேன்னு இப்பவாவது விளங்கியதா?” என்று ஒற்றை புருவத்தை தூக்கி கேட்டாள்.
“ஒழுங்கா ஓடிப்போயிடு ஸ்கைமூன். எனக்கு இருக்கும் காண்டுல உன்னை கொலைப்பண்ணிடுவேன்” என்று கோபமாக எச்சரித்தவனை வழக்கம் போல கணக்கில் கொள்ளாது, ஒரு தோள் குலுக்கலுடன் தன்னுடைய தோழியிடம் போனில் பேசிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.
“குறை சொன்னாமட்டும் கோபம் பொத்துக்கிட்டு வரும்.ஆனா பண்றது பேசறது எல்லாம் பைத்தியக்காரத்தனம்!” வல்லென்று எரிந்து விழுந்த கதிரவன் அங்கிருந்து கோபமாக சென்றான்.அவனையே பார்த்துக் கொண்டிருந்த வெண்ணிலா இப்படி கத்திட்டு போகும் அளவிற்கு அப்படி என்ன தப்பா கேட்டேன்? என்று யோசித்தாள்.
அரசு அலுவலர்கள் தங்களுக்கு வரும் வருமானம் போதவில்லையென பல நாட்களாய் போராட்டம் செய்துவந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத அரசோ நாளைக்குள் பணிக்கு திரும்பாதவர்களின் இடங்களுக்கு தற்காலிகமாக ஆட்களை எடுக்கப்போவதாகவும், அடுத்தவாரமும் போராட்டம் தொடர்ந்தால் அப்படி எடுக்கும் ஆட்களை நிரந்தரமாக்கப் போவதாகவும் ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்தது. அதோடு அந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை சமர்பிக்கும்படி அறிக்கையும் விடுத்தது.அதற்கு விண்ணப்பிக்கட்டுமா... என்று கணவனின் மாற்றத்தால் தைரியம் வரப்பெற்ற நிலா கேட்க, அதற்குதான் அவன் அப்படி கத்திவிட்டு போனது.
‘இவ படிச்ச படிப்புக்கு, அதுவும் பத்து வருஷம் முன்னாடி படிப்பை முடித்த,முன் அனுபவம் ஏதுமில்லாத இவங்களுக்கு ஆபீசர் வேலையா தருவாங்க? பேசறா பாரு பைத்தியக்காரி! இவளை ராணி மாதிரி வச்சிக்க நான் ஆசைப்படறேன். இவ என்னடான்னா நான் ஆபிசரா இருக்கும் இடத்துல அட்டன்டர் வேலை பார்க்க வரட்டான்னு கேட்கறா. இவ அறிவை... சின்னபிள்ளைதனமா யோசிக்காதன்னு சொன்னா குதிகுதின்னு குதிக்க வேண்டியது.ஆனா பண்றதெல்லாம்...’ அறைக்கு வந்தபிறகும் கதிரவனுக்கு ஆத்திரம் அடங்காத்து அப்படியும் இபப்டியும் நடந்தான்.
மனைவியின் மனமறிந்து தன்னை கொஞ்சம், கொஞ்சமாக மாற்றிவந்த கதிருக்கு மனைவியின் வேலைக்கு போக வேண்டுமென்ற நெடுநாள் ஆசையை மட்டும் ஒத்துக் கொள்ளமுடியவில்லை. எவ்வளவுதான் காலம் முன்னேறி இருந்தாலும் வீட்டைவிட்டு வேலைக்கென வெளியே வரும் பெண்கள் இன்றுமே பல இன்னல்களை சந்திக்கவேண்டிய துர்நிலையிலேயே இருக்கிறார்கள்..
அத்தியாவசியம் என்றால் ... மறுப்பதற்கு இல்லை.ஆனால் இவள் என்ன தேவைக்கு வேலைக்கு போகவேண்டும் என்ற எண்ணத்தை என்ன முயன்றும் இவனால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும் சில நாட்களாய் கணவன் தன்னையும் தன் விருப்பத்தையும் மதிக்கிறான் என்ற தெளிவில் நிலாவின் முகத்தில் தோன்றியிருக்கும் பொலிவிற்காக அவளின் இந்த ஆசையை நிறைவேற்றினால் என்ன... என்று இவன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் நிலா இப்படி ஒன்றைக் கேட்டு அவனை கோபம் கொள்ள செய்து விட்டாள்.
நான் வேலைக்கு போகப்போறேன்னு சொல்லி, இவர் சரி... பார்க்கலாம்னு சொல்லியாச்சு. அதுக்கு ஒரு ட்ரையல் போல இவங்க கூட இவங்க ஆபிஸில் கொஞ்ச நாள் வேலைக்கு போனா நல்லாயிருக்கும்னு தானே நான் அப்படி கேட்டேன்? இதில் என்ன தப்பு இருக்கு? அதுக்கு போய் எதுக்கு இப்படி கடிச்சிட்டு போறார்?அப்ப வேலைக்கு போக ஓகே சொன்னது சும்மாவா...? எப்படியும் இவ வீட்டை விட்டு கிளம்ப மாட்டாள்னு நினைப்பா? இந்த என்னோட முயற்சி பிடிக்காம கத்தினா நான் அடங்கிடுவேன்னு கத்திட்டு போறாரா...?’ என்று குழம்பிபோய் நின்றாள் நிலா
 
  • Like
Reactions: lakshmi

lakshmi

Active member
Staff member
May 9, 2018
306
72
43
மதி மாதிரி தான் இருப்பது தான் இந்த காலத்திற்கு சரி.
 
  • Haha
Reactions: rajeswari sivakumar

rajeswari sivakumar

Moderator
Staff member
Mar 26, 2018
219
44
43
மதி மாதிரி தான் இருப்பது தான் இந்த காலத்திற்கு சரி.
ஆமாம் மா. வாயிருந்தால் தான் இந்த காலத்தில் பிழைக்க முடியும் :D