அத்தியாயம் - 5

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,391
895
113
அத்தியாயம் – 5


பெண் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தவர்கள் ஆளுக்கொரு பக்கம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்தார்கள்.சரோஜாவுக்கு மகனின் நடவடிக்கையில் பயங்கர எரிச்சலாக இருந்தது.


“ஏண்டா! ஒரு வார்த்தைக்கு கூட என்னை கேட்காம என் பக்கம் பார்க்காம அதெப்படி நீயே முடிவை சொல்லுவ?”


அன்னையை முறைத்தவன் “கல்யாணம் பண்ணிக்கப் போறது நீங்களா நானா?” என்றான்.


“அதுக்கு பெரியவங்க கிட்ட கேட்கனும்னு மரியாதை வேண்டாமா?” என்று எகிறினார்.


சிவசுவோ இருவர் பேசுவதையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். நடுவில் தான் ஏதாவது பேசப் போக, தன் மீதே பாயும் சம்பவம் நடக்க காரணமாகி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் அவரை நிம்மதியாக விடக் கூடாது என்று முடிவே செய்த சரோ “என்னங்க! அவன் நம்மளை அசிங்கப்படுத்திட்டான்னு பேசிட்டு இருக்கேன். அமைதியா இருந்தா எப்படி?” என்று சண்டைக்கு நடுவில் இழுத்து விட்டார்.


தான் என்ன பதில் கூறினாலும் அடி நிச்சயம் என்று உணர்ந்த சிவசு திருட்டுப் பார்வை பார்த்தபடியே மகனையும், மனைவியையும் மாறி மாறி பார்த்தார்.


“அவரை ஏன் கேட்கிறீங்க? அப்பாவுக்கு நான் சொன்னதில் எந்த வருத்தமும் இல்லை” என்றான் மகன்.


அதைக் கேட்டு மானசீகமாக தலையில் கை வைத்துக் கொண்ட சிவசு ‘மகனே! தேரை இழுத்து தெருவில் விட்டுட்டுடியே டா. இனி, அவ உன்னை விட்டுட்டு என் பக்கம் திரும்பிடுவாளே’ என்று பயத்துடன் சரோவை பார்த்தார்.


அவர் நினைத்தது நடந்தது.


“என்னங்க! உங்க மரியாதையை காப்பாத்த பேசிட்டு இருக்கேன். அவனுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி அமைதியா இருந்தா எப்படி? அவன் பேசினது தப்புன்னு சொல்லுங்க” என்றார்.


அதற்கு மேலும் பேசாது இருந்தால் பூகம்பம் வெடிக்கும் என்பதை உணர்ந்து “ஜீவா நீ எங்க கிட்டே கேட்காம முடிவை சொன்னது தப்பு” என்றார்.


அவரை அதிசயப் பிறவி போல பார்த்தவன் “நீங்க ரெண்டு பேரும் எதுக்கு இப்படி பேசுறீங்கன்னே புரியல? பொண்ணு பார்க்க அழைச்சிட்டு போனீங்க. அங்கே பெண்ணை எனக்கு பிடிச்சு போச்சு. அதை அவங்க கிட்டேயே சொன்னேன். அது ஒரு தப்புன்னு இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கீங்க. நீங்க தானே இந்த பெண்ணை பார்த்தீங்க. போட்டோ எல்லாம் பார்த்து உங்களுக்கு பிடிச்சு தானே பார்க்க ஒத்துகிட்டீங்க. அப்புறம் என்ன இழவுக்கு என்னை படுத்துறீங்க?” என்றான் எரிச்சலாக.


அதுவரை பொறுமையாக பேசிக் கொண்டீருந்த சரோ கடுப்பாகி “நீயெல்லாம் ஒரு வாத்தியார். எல்லோருக்கும் பிடிச்சு இருந்தது தான். இல்லேன்னு சொல்லல. ஆனா முடிவை சொல்லும் முன் பெரியவங்க கிட்ட மரியாதைக்கு ஒரு வார்த்தை கேட்காம சொன்னது தப்பு தான்” என்றார்.


இரு கையையும் தூக்கி கும்பிட்டு “நாளைக்கு காலையில பொண்ணு வீட்டுக்கு போன் பண்ணி எங்கப்பா அம்மா கிட்ட கேட்காம முடிவை சொல்லிட்டேன். அந்த முடிவை மறந்திடுங்க. அவங்க கிட்ட மரியாதையா நின்னு பேசி முடிவை சொல்லி விடுறேன்னு சொல்லிடுறேன்” என்றான் கிண்டலாக.


மகனை வேதனையுடன் பார்த்து “ஏண்டா கல்யாணத்துக்கு முன்னமே இப்படி ஆகிட்டியே கல்யாணம் ஆனா எங்க நிலைமை என்னவாகப் போகுதோ?” என்றார் கவலையுடன்.


“நான் மனைவி கிட்ட பேசுறதுக்கு கூட உன் பெர்மிஷன் வேணும்னு நான் நிற்கணும்னு எதிர்பார்த்தா உன் நிலைமை கவலைக்கிடம் தான்” என்று கூறி விட்டு அறைக்குச் சென்று கதவை சாத்திக் கொண்டான்.


தாடையில் கை வைத்து ஆ- வென்று நின்றிருந்தார் சரோஜா.இங்கு இப்படி களேபரங்கள் நடந்து கொண்டிருக்க, இனியாவின் வீட்டிலோ சந்தோஷ மன நிலையில் இருந்தனர். பாட்டி மட்டும் யோசனையோடு அமர்ந்திருந்தார்.


இனியாவுக்கு அவன் பேசி விட்டுச் சென்ற வார்த்தைகளை எண்ணி உள்ளுக்குள் கோபம் எழுந்தாலும், தான் அவன் மனதை தன் கேள்வியால் காயப்படுத்தி இருக்கிறோம் என்பதை உணர்ந்து நகம் கடித்தபடி தனதறையில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள்.


அவளருகில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஷிவானி “என்ன இனி இவ்வளவு யோசனை? அது தான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சே. இன்னும் என்ன யோசனை” என்றாள்.


“இல்ல! நான் ரிப்போர்ட் கேட்டதும் அவன் வேகமாக எழுந்ததைப் பார்த்து ஒரு நிமிஷம் பயந்துட்டேன். ஆனா கேட்டான் பாரு ஒரு கேள்வி. அவனுக்கு கோபம் அதிகம் வராது போல. சூழ்நிலைகளை அசால்ட்டா சமாளிப்பான்னு நினைக்கிறேன்” என்றாள்.


“அதை விட இனி அவங்க பெத்தவங்க கிட்ட கூட கேட்காம சட்டுன்னு உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னது செம” என்றாள்.


அதைக் கேட்டதும் லேசான வெட்கம் வர “ம்ம்..ஆமாம் ஷிவு. ஆனா பாட்டி மரியாதை தெரியாத பையன்னு திட்டுறாங்க” என்றாள்.


“ஹே! இதுகெல்லாமா கவலைப்படுவ. இந்த பெருசுங்களே இப்படித்தான்” என்றாள் சிரித்துக் கொண்டே.


இரு குடும்பங்களிடையே திருமணம் முடிவு செய்யப்பட்ட மகிழ்ச்சி இருந்தாலும் அதையும் மீறி மனதிற்குள் சிறு சிறு குழப்பங்கள் இருந்தது. அவற்றை எல்லாம் தங்களுக்குள் வைத்துக் கொண்டு நிச்சயதார்த்ததிற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்திருந்தனர்.


நாள் குறிப்பதில் இருந்து இரு வீட்டினரும் கலந்து பேசி அனைத்தையும் செய்தனர்.


ஜீவாவும், இனியாவும் பெண் பார்த்து விட்டு சென்ற பிறகு போனில் பேசிக் கொள்ள முயலவில்லை. அன்னையிடம் எழுந்த பிரச்சனையால் ஜீவா எப்பொழுதும் போல அமைதியாக கல்லூரி சென்று வந்து கொண்டிருந்தானே தவிர, இனியாவின் எண்ணை வாங்கி பேசவில்லை.


இனியாவிற்கோ அவன் பேசாதது குழப்பத்தை ஏற்படுத்தியது. அது முகத்தில் நன்றாக தெரிந்தது. அதை உணர்ந்து கொண்ட அவளது அன்னை ஜானகி ஒரு நாள் அவள் வேலைக்கு செல்லும் முன் நிறுத்தி வைத்து கேட்டார்.


“என்னடா கொஞ்ச நாளா முகம் டல்லா இருக்கு?” என்றார்.


“ம்ச்...ஒண்ணுமில்ல மாம்” என்றவள் கைப் பையை எடுத்துக் கொண்டு கிளம்ப, அவளைத் தடுத்தவர் “வேலைல எதுவும் பிரச்சனையா?” என்றார்.


“இல்லமா” என்றவளின் முகம் சோபை இழந்திருந்தது.


அவளது கையைப் பிடித்துக் கொண்டவர் “என்னடா இது? கல்யாணப் பொண்ணு மாதிரி இல்லாம என்னவோ சோகமாவே இருக்கியே” என்றார்.


“பொண்ணு பார்த்திட்டு போன பிறகு அவர் போன் பண்ணவே இல்லமா” என்றாள் மெல்லிய குரலில்.


அதைக் கேட்டதும் அதிர்ந்த ஜானு “என்னமா சொல்ற? மாப்பிள்ளை பேசவே இல்லையா?” என்றார்.


அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை சோபாவில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த பாட்டி “நான் என்னவோ நினைச்சு பயந்துட்டேன். அதுக்காகவா இப்படி வாழைக்காய் மாதிரி மூஞ்சியை வச்சிருந்த? நாங்க எல்லாம் கல்யாணம் முடிஞ்சே பேசிக்கல” என்று இடித்துக் கொண்டார்.


பாட்டியை கொலைவெறியுடன் பார்த்தவள் “வேணாம் பாட்டி! நான் ஏதாவது சொல்லிட போறேன் பேசாம இருங்க” என்றாள்.


அவர்கள் இருவருக்கும் இடையே புகுந்த ஜானு “ஐயோ! அத்தை சும்மா இருக்கீங்களா? இந்த காலத்தில் கல்யாணத்துக்கு முன்னாடி பேசிக்கலேன்னா தான் தப்பு” என்றவர் மகளிடம் திரும்பி “பேசுவார் டா...நீ ஒன்னும் கவலைப்படாதே” என்றார்.


“ம்ம்...நான் கிளம்புறேன் மாம்” என்று கூறி விட்டு சென்றவளை கவலையுடன் பார்த்துக் கொண்டு நின்றார்.


சற்று நேரம் அப்படியே நின்றவர் அவசரமாக சென்று போனை எடுத்து வந்து சரோஜாவிற்கு அழைத்தார்.


மகன் கிளம்பிக் கொண்டிருக்க அவனுக்கு தோசை ஊற்றிக் கொண்டிருந்தவரை அலைப்பேசியில் குரல் அழைத்தது.


அதை எடுத்தவர் ஜானுவின் நம்பரை பார்த்ததும் ‘சம்மந்தி அம்மா இந்த நேரத்தில் கூப்பிடுறாங்க’ என்கிற யோசனையுடன் “சொல்லுங்க சம்மந்தி” என்றார்.


அனைவரின் நலத்தையும் விசாரித்து விட்டு “மாப்பிளைக்கு வேலை அதிகமோ சம்மந்தி” என்றார் மெல்ல.


தலை குனிந்து உணவருந்திக் கொண்டிருந்தவனை யோசனையுடன் பார்த்துக் கொண்டே “இல்லையே எப்பவும் போல தான் இருக்கு வேலை” என்றார்.


சற்றே தயக்கத்துடன் “இல்ல சம்மந்தி மாப்பிள்ளை இனியா கூட பேசவே இல்ல போல. அது தான் கேட்டேன். இந்த காலத்து பசங்க இதெல்லாம் எதிர் பார்க்கிறாங்களே” என்றார் மெல்ல.


அதைக் கேட்டதும் மகனைப் பார்த்து பல்லைக் கடித்துக் கொண்டவர் “போன வாரம் முழுக்க ஏதோ பிரெண்ட் ஊருக்குப் போறான்னு அவன் கூட சுத்திட்டு இருந்தான் சம்மந்தி. அதனால தான் பேசலையா இருக்கும். இனி பேசுவான்” என்றார் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க.


“சரி சம்மந்தி...நீங்க இனியாவை எதுவும் தப்பா நினைக்காதீங்க. சின்னஞ்சிறுசுங்க பேசி கிட்டா நல்லா இருக்குமேன்னு நான் தான் அவ கிட்ட சொல்லாம உங்க கிட்ட சொல்லிட்டேன்”என்றார் தயக்கத்துடன்.


“அதெல்லாம் நினைக்க மாட்டேங்க” என்று கூறி மேலும் சில பல விஷயங்களை பேசி விட்டு போனை அனைத்தவர் தோளில் பையை மாட்டிக் கொண்டு கிளம்பிக் கொண்டிருந்த மகன் முன்பு நின்றார்.


எதுவுமே தெரியாதது போல “என்னம்மா சாயங்காலம் வரும் போது எதுவும் வாங்கிட்டு வரணுமா?” என்றான்.


அவனை முறைத்தவர் “ஒண்ணுமே தெரியாத மாதிரி எப்படிடா இப்படி நடிக்க முடியுது? அப்படியே மண்டைல ஒன்னு போட்டேன்னா” என்றார் எரிச்சலாக.


“மா! என்னன்னு சீக்கிரம் சொல்லுங்க. எனக்கு நேரமாகுது” என்றான் எரிச்சலாக.


“ஏண்டா இப்படி பண்ற? அந்த பொண்ணு கிட்ட ஒரு தடவை கூட பேசலயாமே?”

“எந்த பொண்ணு கிட்ட?”


“டேய்! இது உனக்கே ஓவரா தெரியல? மருமக கிட்ட ஏன் போன்ல பேசல?”


அன்னையை சீரியசான முகத்துடன் பார்த்தவன் “நீ தானேம்மா சொன்ன? உன் கிட்ட கேட்காம எதுவும் பண்ணக் கூடாதுன்னு. நீ என்னை அவ கிட்ட பேச சொன்னியா?” என்றான் அமைதியான குரலில்.


ஓரமாக அமர்ந்து பேப்பரை கையில் வைத்துக் கொண்டு நடப்பவற்றை கவனித்துக் கொண்டிருந்த சிவசு மகனுக்கு மனதிலேயே ஹை-பை கொடுத்துக் கொண்டார். சபாஷ்-டா மகனே. உங்கம்மாவையே தலையால தண்ணி குடிக்க வைக்கிற என்று பாராட்டிக் கொண்டார்.


இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி “நீ கிளம்பு! நான் எதுவும் பேச விரும்பல” என்று கதவை நோக்கி கையைக் காட்டினார்.


உள்ளுக்குள் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு பரிதாபமான ஒரு பார்வையை அவரை நோக்கி வீசி விட்டு அங்கிருந்து வெளியேறினான்.


அவன் சென்றதும் சோர்வாக சென்று சோபாவில் அமர்ந்தவர் “ஏங்க! அப்படி என்னங்க நான் சொல்லிட்டேன்? இவன் ரொம்ப தான் பண்றான்” என்றார்.


“ம்ம்..விடு சரோ” என்றார்.


“ஆனா ஒண்ணுங்க...இவன் கல்யாணம் முடியிறதுக்குள்ள நான் பைத்தியமா தான் சுத்தப் போறேன்” என்றார்.


சிவசுவோ வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் “நான் நாற்பது வருஷமா அப்படித்தானே சுத்திகிட்டு இருக்கேன்” என்றார்.


அவரை முறைத்த சரோ “என் சாபம் சும்மா விடாதுங்க. என்னைப் படுத்துறதுக்கு அவ கிட்ட நல்லா வாங்குவான் பாருங்க” என்றார்.


தேவதைகள் ததாஸ்து என்று கூறிச் சென்றது...