Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 4 | SudhaRaviNovels

அத்தியாயம் - 4

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,826
113
அத்தியாயம் - 4

நிகிலும் துபாயில் தாங்கள் இருந்த நாட்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான். இருவரின் எண்ணங்களும் ஒன்றுபோல ஆறுமாத வாழ்க்கையை நோக்கிப் பயணித்தது.துபாயின் டிஸ்கவரி கார்டன்.

ஜென் அபார்ட்மெண்டின் எட்டாவது மாடியில் அமைந்திருந்த தங்களது பிளாட்டின் பால்கனியில் அமர்ந்திருந்தாள் ஸ்ருதி.

தொலைவிலிருந்த கட்டிடங்களில் தெரிந்த பொட்டுப்பொட்டான வெளிச்சம், அந்த ஊருக்கே சீரியல் விளக்குப் போட்டது போன்ற ஒர் அழகைத் தந்தன.

அவள் கண்கள் - அவ்விரவின் ஒளியில் நகரத்தின் அமைப்பைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தது.

சிறிதும் பெரிதுமாய்க் கட்டிடங்கள் பல எழும்பி நின்றன. பால்கனியில் இருந்து பார்க்கையில் தெரிந்த அரை வட்டமான காட்சி - மனதை கொள்ளை கொண்டது! இரவு பதினொரு மணிக்கும் கூடப் பரபரத்துக் கொண்டிருந்த அந்நகரத்தைப் பார்த்து,அவள் ஆரம்பத்தில் மலைத்து போயிருக்கிறாள். துபாய்வாசியான கடந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, அந்த வாழ்க்கை அவளுக்குப் பழகிப் போனது.

துபாய் என்றதும், எண்ணற்ற கனவுகளுடன்தான் அங்கு வந்திறங்கினாள். இந்நகரம் அவளுக்குப் பலப்பல புதுமைகளைக் காட்டியது. ஆனால், ஒருபோதும் தாம் இந்தப் பால்கனியிலேயே சிறைபடுவோம் என்று அவள் நினைத்தும் பார்க்கவில்லை.‘இந்தப் பால்கனியும் இல்லாமல் போயிருந்தால் - நான்கு சுவர்களுக்குள்ளாகவே வெறும் ஏசியின் ஓசையை மட்டும் கேட்டுக்கொண்டு பைத்தியம் பிடித்து அலைந்திருப்பேன்!’ என்று எண்ணிக் கொண்டாள்.

“கிளிக்” என்று கதவு திறக்கும் சப்தம் கேட்டது.

‘வந்துவிட்டான்’ என்றறிந்து கொண்டவள், மறந்தும் அங்கே செல்ல நினைக்கவில்லை.

அவன் அங்குமிங்கும் நடப்பதும், தனது அறைக்கதவைத் திறப்பதும், பாத்திரங்ககளை உருட்டுகின்ற சப்தம் கேட்டுக்கொண்டு தான் இருந்தது. அவன் எதையோ தேடுவது போல் தோன்றியது.

‘போய், என்னவென்று கேட்டுவிடுவோமா’ என்று எண்ணினாள்.

அன்றொரு நாள் அப்படிக் கேட்டதற்கு, முகத்தில் அடித்தார் போல் வந்த பதில் நினைவிற்கு வந்தது.

இரு படுக்கை அறைகளைக் கொண்ட அந்தப் பிளாட்டில் ஆளுக்கொரு தீவாக வசிக்கும் தங்களை நினைத்து அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சிரிப்பு வந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்கூட நேருக்கு நேர் சந்தித்து விட்டால் ஒரு புன்சிரிப்போ, ஒரு ஹாய், ஹலோவோ சொல்லிக் கொள்ளும்போது, கணவன் மனைவியான தாங்கள் இருவரும் வாழ்ந்து வரும் விசித்திரமான வாழ்க்கையை நினைத்து பெருமூச்சு எழுந்தது.

எதிரே மனைவி வந்து விட்டால் அவளை அறிமுகமற்ற ஒருவரை பார்க்கும் விதத்தில் நடத்தும் கணவனின் நடத்தையை என்னவென்று சொல்வது?

பெருமூச்சுடன் அமர்ந்திருந்தவளை குளிர்காற்று உடலைத் தீண்ட, மனமே இல்லாமல் எழுந்து அறைக்குச் சென்றாள். ஹாலில் டிவி ஓடும் சப்தம் கேட்டது. ஏதோ அரசியல் விவாத நிகழ்ச்சி... சந்தைக்கடை போல் காரசாரமாகச் சேற்றை அள்ளி ஒருவர் மேல் ஒருவர் வீசிக் கொண்டிருந்தனர்.

அப்படியே விட்டத்தைப் பார்த்தபடி படுக்கையில் சாய்ந்தாள். ஆறு மாதத்திற்கு முன்பு யாராவது தன்னை இப்படிப் பேசாமடந்தையாகிப் போவாய் என்று சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டாள்.

ஆனால், இன்று உள்ள நிலை?

‘தூரதேசத்தில் கணவனை மட்டுமே ஆதாரமாக நம்பி வந்தவளுக்கு அவன் கொடுத்த இடம் என்ன?’ பல்வேறு எண்ணச் சுழலில் சிக்கித்தவித்தவள், சலிப்புடன் படுக்கையை விட்டு எழுந்தாள். தொண்டை வறண்டு போனது போலிருக்க, தண்ணீர் எடுத்து வர எழுந்தாள்.

ஹாலில் டிவியின் ஓசை குறைந்து மெல்லிய பாடல் ஒலி கேட்டது.

“ஒன்றா ரெண்டா ஆசைகள்” அதைக் கேட்டவுடன் அப்படியே கதவின் மேல் சாய்ந்து நின்றவள், ‘போச்சு மிட் நைட் மசாலா பார்க்க ஆரம்பிச்சாச்சு போல.இனி அங்கே போக முடியாது’ என்று அலுத்துக் கொண்டு படுக்கையில் விழுந்தாள்.

தன் நிலையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று புரியாமல் படுத்திருந்தாள். ஒருவர் தண்டிக்கப்படுவதற்குத் தகுந்த காரணமிருந்தால் அந்தத் தண்டனை சரியானது. ஆனால், இங்கே அவளது கணவன் அனுதினம் அவளுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் தண்டனைக்குக் காரணமே தெரியாமல் அனுபவித்துக் கொண்டிருக்கிறாளே.

சுவிட்சுகள் அணைக்கப்படும் சப்தம் கேட்டு எழுந்து வெளியே சென்றாள். எதிரே வந்த நிகில் அவளைக் காணாதவாறு யோசனையுடன் தன் அறை வாயிலுக்குச் சென்றான். அவனைப் பார்த்ததும் தயங்கிய கால்களைக் கஷ்டப்பட்டு நகர்த்தினாள். அவனோ அங்கு ஒருத்தி இருப்பதைப் பற்றிக் கவலைப்படாது தன் அறைக் கதவை வேகமாக அறைந்து சாத்தினான்.

ஸ்ருதிக்குப் பயங்கரக் கோபம் எழுந்தது.

‘பேசாம நேராப் போய்ச் சட்டையைப் பிடித்து உனக்கு என்னதான்யா பிரச்சனைன்னு கேட்டுவோமா?’ என்று நினைத்தாள். அதற்கு அவள் மனசாட்சி இடித்தது ‘ஆமா, நீ கேட்டா மட்டும் அப்படியே வாயைத் திறந்து பதில் சொல்லிடுவானா?’

பல எண்ணங்களுடன் போராடி உறக்கம் வராமல் தவித்து விடியும் நேரத்தில் உறங்கிப் போனாள்.

மூடியிருந்த திரைச்சீலையைத் தாண்டி முகத்தில் பட்ட வெளிச்சக் கீற்றுகளில் விடிந்து விட்டதை உணர்த்த கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஆறு என்று காட்டியது. மனமில்லாமல் எழுந்தவளது மனமோ ‘சீக்கிரம் எழுந்து என்ன பண்ணப்போறே? அவனுக்குச் சமைச்சு கொடுக்குப் போறீயா? அப்படியே சமைச்சு வச்சாலும் அவன் சாப்பிட்டிட்டு தான் மறுவேலை பார்ப்பான்’ என்று கேலிப் பேசியது.மனதிலிருந்த சோர்வுடன் அறையை விட்டு வெளியே வந்தாள். ஹாலிலிருந்த சோபாவில் அமர்ந்தவள், கால்களை மடக்கி தன் கைகளால் கன்னங்களைத் தாங்கிக் கொண்டு சுவாரசியமாகக் கிச்சனில் ஆம்லேட் போட்டுக் கொண்டிருந்தவனைப் பார்க்கத் துவங்கினாள்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,826
113
கிரே கலர் டிராக் பாண்டும் ஸ்லீவ்லெஸ் பனியனும் அணிந்து கொண்டு மும்மரமாகப் பானில் ஆம்லெட்டை ஊற்றினான். பிரிட்ஜ்ஜிலிருந்து பழங்களை எடுத்து வந்து அழகாக ஒன்று போல வெட்டி டப்பர்வேர் டப்பாக்களில் வைத்துதான் ஆபிஸ் கொண்டு செல்லும் பையில் எடுத்து வைத்தான். பால் கேனை எடுத்துப் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து விட்டு, சிங்க்கிலிருந்த பாத்திரங்களைத் தேய்த்து அடுக்கி வைத்தான். அதற்குள் பால் ரெடியாக, காப்பியை கலந்து டிராவல் மக்கில் ஊற்றி வைத்து விட்டுத் தன் அறைக்குச் சென்றான்.

இவற்றைச் சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தவள் ‘பரவாயில்லை பயபுள்ள நல்லாத்தான் வேலை செய்யுது’ என்றெண்ணிக் கொண்டாள்.

டார்க் லாவெண்டர் கலர்சட்டையும், கிரீம் கலர் பாண்டும் அணிந்து கொண்டு வெளியில் வந்தான். அவன் வரும் முன்பே அவனது ஆப்டர் ஷேவ் லோஷனின் மனமும், யார்ட்லி பாடி ஸ்ப்ரேயின் மனமும் முன்னே வந்தது. தன்னை ஒருத்தி விழி அசைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாளே என்பதைக் கண்டு கொள்ளாமல் நேரே சென்று டிராவல் மக்கையும், பையையும் எடுத்துக் கொண்டு கதவை அறைந்து சாத்திவிட்டு நடந்தான்.

‘இப்படி அடிச்சு சாத்தினா எல்லாக் கதவையும் பேத்து தனியா எடுத்து வைக்க வேண்டியதுதான்’ என்று நினைத்துக் கொண்டு எழுந்து கிச்சனுக்குள் நுழைந்தாள்.

காப்பியுடன் பால்கனியில் சென்றமர்ந்தாள். ‘பிரெண்ட்ஸ் எல்லோரும் துபாய் போனா அங்கே போகலாம் இங்கே போகலாம்ன்னு ஆசையைக் கிளப்புனாளுங்க. இங்கே வந்து பார்த்தா காலையில ஹால் பால்கனி, ராத்திரி ரூம் பால்கனின்னு நான் பால்கனி டூர்தான் போயிட்டு இருக்கேன்.” என்று பெருமூச்சுடன் சிறு புன்னகை எழுந்தது.

ஒரு மணிநேரம் அங்கேயே செலவழித்தவளுக்கு உட்கார்ந்திருந்தது அலுத்துப் போக எழுந்து வீட்டிற்குள் சென்றாள். மணி ஏழு என்றது. ஒரு வாக் போய் விட்டு வந்தால் என்ன என்று யோசித்து உடைமாற்றி வந்தாள்.

பிங்க் நிற டிராக் பாண்டும் ஆழ்ந்த நீலத்தில் டி- ஷர்ட்டும் அணிந்து முடியை போனி டைல் போட்டுக் கொண்டு கிளம்பினாள். லிப்ட்டில் கதவை சாத்தும் நேரம் எதிர் அபார்ட்மென்ட் வெள்ளைக்காரியும் அவளுடன் இருந்தவனும் நுழைந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் மெலிதான ஒரு புன்னகையைச் சிந்த, அவளோ “ஹாய், குட்மார்னிங்” என்றாள்.

இதுதான் இவர்களிடம் இருக்கும் நல்ல குணம். ஒருவரை பார்த்ததும் அவர்களுக்கு வணக்கம் சொல்லி மரியாதையாக நடத்துவது. இதுவே நம்ம ஊர்காரர்கள் என்றால் இந்நேரம் போட்டிருக்கும் உடையில் இருந்து தலை முதல் கால் வரை ஆராய்ந்து, பலத்த யோசனைக்குப் பிறகு உதட்டை கஷ்டப்பட்டு இழுத்து ஒரு மில்லி மீட்டர் வேண்டா வெறுப்பாக முகத்தைப் பார்ப்பார்கள். பல்வேறு எண்ணங்களில் மூழ்கி இருந்தவளை லிப்ட் நின்றதற்கான பெல்லின் சத்தம் நினைவுக்குக் கொண்டு வந்தது. மெல்ல நடந்து தங்களின் குடியிருப்பின் வாயிலுக்கு வந்தாள்.

சூரியனின் கதிர்கள் மெதுவாகப் பூமியை வந்தடைந்து கொண்டிருந்தது. மார்ச் மாதம் ஆதலால் காற்றிலும் ஈரப்பதம் அதிகமிருந்தது. சில்லென்ற காற்று மேனியை தழுவ மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். ஆங்காங்கே குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தங்கள் வேனின் வருகைகாகக் காத்திருந்தனர்.

கட்டிடத் தொழிலாளர்கள் தாங்கள் வந்த பேருந்திலிருந்து இறங்கி மெல்ல ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டே அன்றைய பணிகளைப் பார்க்க சென்றனர். ஒவ்வொரு முகங்களிலும் பலவித கனவுகள். ராணுவத்தினர் நாட்டுக்காகத் தங்களை அர்பணித்துக் கொள்வது போல, அரபு தேசங்களில் வேலை செய்யும் கட்டிடப் பணியாளர்கள் தங்களின் குடும்பத்தினரின் நலனுக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்.

தங்கள் குடும்பத்தின் தேவைகளை எல்லாம் நிறைவு செய்து முடிக்கும் போது முதுமையை எட்டி இருப்பார்கள். அவர்களுக்காகக் காத்திருப்பது வயதான மனைவி மட்டுமே. பெற்ற குழந்தையின் மழலை மொழியைக் கேட்காமல், அவர்களின் வளர்ச்சியைக் கண்டு களிக்க முடியாமல், வாழ்வின் வசந்தங்கள் அனைத்தையும் விடுத்து அவர்களுக்காகக் காத்திருப்பது ஒட்டாத வாழ்க்கையே.

துபாய் சென்ற புதிதில் அங்கிருந்த உயரமான கட்டிடங்களைப் பார்த்து பிரமித்தவளுக்கு, அதன்பின்னே இருந்த தொழிலாளிகளின் ஏக்கம் தோய்ந்த கண்களைக் கண்டு கொண்ட பின்னர் அந்தப் பிரமிப்பு மறைந்து போனது. மனதில் எண்ணற்ற கனவுகளும், ஏக்கங்களும் நிறைந்திருந்தாலும் என்றாவது ஒருநாள் வாழ்வை வென்று விடும் வைராக்கியம் ஒவ்வொருவரிடமும் இருந்தது.

எண்ணங்களின் ஆக்கிரமிப்பில் குடியிருப்பைத் தாண்டி வெகுதூரம் வந்து விட்டதை உணர்ந்தாள். அவள் நின்ற இடம் ஒரு பூங்கா. அங்கிருந்த கல்லில் அமர்ந்தவள், ஆறு மாதங்களில் தன் வாழ்வில் நடந்த மாற்றங்களை நினைத்துக் கொண்டாள்.

அவள் எண்ணத்தின் நாயகனும் அதே சிந்தனையில் காரில் சென்று கொண்டிருந்தான். ஷேக் சயீத் ரோட்டில் சென்று கொண்டிருந்த கார் டிராபிக்கின் காரணமாக இன்ச்இன்சாக நகர்ந்து கொண்டிருந்தது. ஏசியை மீறி உள்ளத்தின் புழுக்கம் காரணமாக வெளியிலும் வியர்க்கத் தொடங்கியது.

‘ஆறு மாசமா இதோ போய்டுவா-இதோ போயிடுவான்னு எதிர்பார்த்து அலுத்துப் போச்சு. அவ என்னவோ விருந்துக்கு வந்த மாதிரி சட்டமா இங்கேயே உட்கார்ந்திருக்கா’ என்று எரிச்சலுடன் நிந்தித்துக் கொண்டிருந்தான் நிகில்.

‘என்னைத் தனியா புலம்புற அளவுக்குக் கொண்டு வந்து வச்சிட்டா’

அவன் நினைவை தடை செய்யத் தொலைபேசி அழைத்தது. “சொல்லுங்க கருணா! கான்கிரீட் பம்ப் வந்துதா?”

“இல்ல சார். அப்ரூவல் இல்லேன்னு சொல்லறாங்க.”

“அவனை ஒழுங்கா ட்ராயிங்கைப் பார்க்கச் சொல்லுங்க.”

“என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்றான் சார்.”

“இல்ல கருணா. அவன் அப்படித்தான் பேசுவான்.நீங்க ஸ்ட்ரோங்கா எடுத்து சொல்லுங்க.”

“..............”

“ சரி நான் பேசிக்கிறேன். பம்ப் வந்தா கான்கிரீட் போடுறதுக்கு எல்லாம் தயாரா இருக்கணும். டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.”

“சரி சார்.”

அடுத்தடுத்த அழைப்புகளை மேற்கொண்டு பிரச்னையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தான். ‘வேலையில் இவ்வளவு எளிதாகப் பிரச்சனைகளைச் சமாளிக்கத் தெரிந்த எனக்கு, ஏன் சொந்த வாழ்க்கையில் அது முடியாமல் போகிறது?’ என்று நொந்து கொண்டான்.

வண்டிகளின் ஹாரன் ஓசையில் நினவு திரும்பியவன்...ட்ராபிக் குறைந்து வண்டி வேகம் எடுக்கத் தொடங்கியதும், அவன் மனமும் வேகமாகச் செயல்படத் தொடங்கியது. ‘இன்னைக்கே அவ கிட்டப் பேசிடனும். இதை இப்படியே வளர விடக் கூடாது’ என்ற முடிவுக்கு வந்தான்.

ஸ்ருதியும் அதே முடிவிற்கு வந்திருந்தாள். ‘ஆறுமாதம் தேவையான கால அவகாசத்தைக் கொடுத்தாச்சு. இனி பொறுமையா இருக்க வேண்டியது இல்லை. ஒதுங்கி போனா கண்டிப்பா முடிவு கிடைக்காது. இனி, நம்ம வழியில் களம் இறங்க வேண்டியதுதான். அதைப் பார்த்து ஒன்னு தலைவர் ஒத்து வரணும் இல்லேன்னா விட்டுட்டு ஓடனும்’ என்று எண்ணியவளின் இதழில் குறுநகை வந்தது.

மாலை நான்கு மணியளவில் டியுஷனிற்கு வந்த பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். இங்கு வந்த புதிதில் கீழே இருக்கும் கடைக்குப் பால் வாங்க சென்ற போது பக்கத்துப் பிளாட்டில் இருக்கும் பெண்ணொருத்தியின் தோழமை கிடைத்தது.

அவள் மூலமாகதான் டியுஷனிற்குப் பிள்ளைகள் வரத் தொடங்கினர். ஆரம்பத்தில் நான்கு பிள்ளைகளில் தொடங்கியது இன்று முப்பது பிள்ளைகள் வரை வந்திருக்கிறது.நான்கு மணியிலிருந்து ஏழு மணி வரை மட்டுமே எடுப்பாள். அதன் பின்னர் அவன் வருவதற்குள் தனக்குத் தேவையானவற்றைச் செய்து கொண்டு அறைக்குள் அடைந்து விடுவாள்.

அன்றும் ஏழு மணியானதும் பிள்ளைகள் சென்றவுடன், பட்டாணி குருமாவை செய்தவள், சப்பாத்தியை போட்டு வைத்துவிட்டு, கிச்சனை கிளீன் செய்து முடித்து ஹாலில் வந்தமர்ந்தாள்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,826
113
மனதிற்குள் அவனிடம் என்ன பேச வேண்டும் என்ற எண்ணங்களே சூழ்ந்திருந்தது. ‘பேசனும்-னு சொன்னா முதலில் காது கொடுத்து கேட்பானா? என்ற ஐயமும் எழுந்தது.

முதல்ல அவனுக்கு என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுக்கணும். ஒருவேளை உடலில் ஏதாவது நோய் இருக்குமோ? டாக்டர் சீக்கிரம் செத்துப் போயிடுவேன்னு சொல்லி இருப்பாரோ? அதைக் குடும்பத்துக்குத் தெரியாம மறைச்சு வச்சி கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லிட்டு இருந்திருப்பானோ? ‘ச்சே..ச்சே’ அதெல்லாம் உடம்பை பார்த்தா நல்லா பயில்வான் மாதிரி தான் இருக்கு, உடம்புல ஒன்னும் குறை இருக்காது. அப்போ என்னைப் பிடிக்கலையா?என்று பலவாறு யோசித்து ஒன்றிற்கும் பதில் கிடைக்காமல் ‘உனக்கு என்னதாண்டா பிரச்சனை மிஸ்டர். எம் ஸ்கொயர்.’

அவனும் அதே சிந்தனையுடனே வந்து கொண்டிருந்தான். எப்படி அவளிடம் பேச்சை ஆரம்பிப்பது. இத்தனை நாள் முகம் கொடுத்து பேசாமலும், தன்னிடமிருந்து விலக்கி வைத்தால் அவமானத்தில் அங்கிருந்து போய் விடுவாள் என்று எதிர்பார்த்தது போக, அவளோ எதுவுமே நடக்காத மாதிரி நடந்து கொள்கிறாள். ‘இவள் நல்லவள் தானோ?’ என்று யோசித்த மனது ‘வேண்டாம்! ஒருமுறை பட்டாச்சு! இனி,சலனங்களுக்கு என் வாழ்க்கையில் இடமில்லை.எனக்கு யாரும் வேண்டாம். இன்றோடு எல்லாவற்றையும் முடித்தவிட வேண்டும் என்று மாற்றி யோசித்தது.

அவள் அவனிடம் பேசி பிரச்னையை அறிந்து சரி செய்துவிட வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அவனோ அவளிடமிருந்து விலகிவிடத் துடித்தான்.

அவள் எழுந்து தன்னறைக்குச் செல்லும் நேரம் கதவை திறந்து கொண்டு அவன் உள்ளே நுழைந்தான். இருவரின் பார்வையும் ஒருநிமிடம் தொட்டு மீண்டது. முதலில் தன்னைச் சுதாரித்துக் கொண்டவள், ‘அவன் போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வரட்டும். அப்புறம் பேசுவோம் என்றெண்ணி திரும்பி நடக்கத் தொடங்கினாள்.

“ஒரு நிமிஷம்”

தன்னையா கூப்பிட்டான் அதிசயத்துடன் திரும்பி அவனைப் பார்த்தாள்.

“உன்கிட்ட பேசணும். நான் போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வரேன். கொஞ்சம் வெயிட் பண்ணு” என்று சொல்லி சென்றான்.

“என்ன நடக்குது? இவன் என்ன நம்மகிட்ட பேசப் போறான்.நல்லதா போச்சு நாம சொல்றதுக்கு முன்னே அவனே கேட்டுட்டான். என்னதான் சொல்றான்னு கேட்போம்” என்று காத்திருந்தாள்.