அத்தியாயம் - 4

rajeswari sivakumar

Moderator
Staff member
Mar 26, 2018
219
44
43
இதயம் – 4
தன்அன்னையிடம் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தவன், அப்போது அங்கே வந்த மதியை பார்த்து,”இதோ-ம்மா அவளே வந்துட்டா.உனக்கு என்ன கேட்கணுமோ அதை நீயே கேட்டுக்க” என அவளிடம் கொடுத்தான்.
மாமியாரிடம் பேசிமுடித்த மதி, அதைப்பற்றி ஏதும் சொல்லாது, அமைதியாக வந்து அருகில் அமர்ந்துக்கொள்ளவும் ஆகாஷிற்கு ஏதோ வித்தியாசமாய் தெரிந்தது. இது இவளின் வழக்கம் இல்லையே!
மதி எப்போதும் எதையாவது பேசிக்கொண்டோ இல்லை செய்துக் கொண்டோ இருப்பாள். இவனே பலமுறை அதை சொல்லி கேலி செய்திருக்கிறான். அமைதியாக அதுவும் இவன் அருகிலிருக்கும் போது இப்படி ஏதும் பேசாது எப்போதும் இருந்ததில்லை.அவளை யோசனையாக பார்த்தால் அவள் இவனுக்கும் மேல் ஏதோ யோசனையில் இருந்தாள்.
ஆகாஷின் அன்னை எல்லா மாமியார்களைப்போல மருமகளிடம் குறை காண்பவரோ, வம்பு வளர்பவரோ கிடையாது.அப்படியே அவர் அதிசயத்தில் அதிசயமாக எதையாவது சொல்லியிருந்தாலும் அதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அளவிற்கு மதி சீரியஸ்ஸான ஆளும் கிடையாது.அவர் என்னதான் கழுவி கழுவி ஊற்றியிருந்தாலும் அது அப்படியே காற்றில் காய்ந்துவிடும் என்று கண்டுக்கொள்ளாமல் இருப்பவள்.பின் ஏன் இந்த மௌனம்?
மதியின் வலது கையில் இருக்கும் வளையலில் தன் விரலை நுழைத்து அதை இழுத்து விளையாடிக்கொண்டே, “ஹோய் ஸ்கைமூன்! என்ன ஆச்சு? மௌனவிரதம் இருக்க போறியா? உன்னால முடியாததை எல்லாம் செய்ய ட்ரை பண்ணாதே!” என்றான்.
தன்னை சீண்டியவனை சிறிது நேரம் அமைதியாக பார்த்தவள் ஏதும் சொல்லாது அவனை இன்னும் நெருங்கி தோளில் சாய்ந்துக்கொண்டாள். ’என்னடா இது ஓவர் ஸீனா இருக்கு?’ என்று எண்ணியவன்,
“என்ன-ப்பா? என்ன ஆச்சு? அம்மா ஏதாவது உன்னை குறை சொன்னாங்களா?” அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தும் கனிவாய் கேட்டான்.
அதற்கு இல்லை என தலையாட்டிவள் அடுத்து ஏதும் பேசாது அமைதியாக இருக்கவும்,”என்ன நடந்ததுன்னு இப்ப சொல்லப்போறியா? இல்ல நான் அம்மாக்கு போன் பண்ணி மதியை என்ன சொன்னீங்கன்னு சத்தம் போடட்டா?”கேட்டுக்கொண்டே போனைக் கையில் எடுத்தான்.
“நாங்க ஒழுங்கா ஒத்துமையா இருந்தா உங்களுக்கு கண்ணு பொறுக்காதே! சண்டையை மூட்டிவிட வந்துடுங்க” எரிந்து விழுந்து, அவனின் போனைப் பிடுங்கிக் கொண்டாள்.
இதைக் கேட்டதும் வந்த சிரிப்பை வாயினுள் அடக்கியவன், ‘அப்ப பிரச்சனை அம்மாகிட்ட இல்ல.பின்ன எதுக்கு இந்த மேடம் அமைதியா இருக்காங்க?’ குழம்பியவன்,
“நான் எப்போதும் எல்லாத்தையும் என் ஸ்கைமூன்கிட்ட ஷேர் பண்ணிப்பேன்... அப்ப நீங்க?” என விளம்பர பாணியில் விளையாட்டாக அவளிடமிருந்து வார்த்தையை வாங்க முயற்சித்தவனை,
“பொய்! வாய் கூசாம பொய் பேசறது எப்படின்னு உங்ககிட்ட கத்துக்கனும். அப்படியே எல்லாத்தையும் இவர் ஷேர் பண்ணிட்டாலும்...” என்றுக் கோபமாக முறைத்தாள்.
எதற்கு இந்த குற்றசாட்டு, ஏன் இந்த கோபம் புரியாது திகைத்தவன், “அப்படி எதை நான் உங்ககிட்டேயிருந்து மறைச்சிட்டேன் மேடம்?” என தன்மையாக கேட்டான்.
“உங்களுக்கு கத்தரிக்காய் பிடிக்காதா?”
எதற்கு இந்த சம்மந்தம் இல்லாத கேள்வி? விழித்தவன்,”ஆமாம்! பிடிக்காது. அதுக்கென்ன இப்ப?”
“அதை ஏன் என்கிட்ட மறைச்சீங்க?”
‘ஆமாம் நான் கள்ளகடத்தல் பண்றேன்.அதை இவங்ககிட்டமறைத்து,, அதுக்கு இப்ப விசாரணை கமிஷன் நடக்குது! ஒரு கத்தரிக்காய்கா இவ்வளவு பெரிய அலட்டல்? கண்ணைக் கட்டியது இவனுக்கு.
மாமியாரிடம் பேசும்போது பேச்சுவாக்கில் அன்று கத்தரிக்காய் புளிக்குழம்பு சமைத்ததாக இவள் கூறினாள். அதைக் கேட்டவர் சிறுவயதிலிருந்து ஆகாஷிற்கு கத்தரிக்காய் பிடிக்காது என்று சொல்லி,
“போன வாரம் கூட நீ இதை சமைத்ததா சொன்ன இல்ல? பரவாயில்ல மதி. கத்தரிக்காய் பிடிக்காதவனை வாரா வாரம் அதை சாப்பிட வச்ச பெருமை உனக்குத்தான்!” என மேலும் புகழ்ந்தார்.
மாமியாரின் புகழில் பாரசூட்டில் பறக்க வேண்டியவளோ, அதிலிருந்து கீழே விழுந்தவளைப்போல மாறிப்போனாள். திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. இன்னும் இவளுக்கு ஆகாஷிற்கு எது பிடிக்கும், பிடிக்காது என்பது சரியாக தெரியவில்லை.அவனுக்கோ இவளைப் பற்றி சகலமும் தெரியும். முதன்முதலில் இவளிடம் காதல் சொன்ன போதே அவனுக்கு இவளைப்பற்றி அனைத்தும் அத்துப்படி. ஆனால் இவளுக்கோ...?
எதுவுமே தேடிக்கிடைத்தால்தான் அதன் அருமை தெரியும். இவனோ அவளுக்கு தவமின்றி வரமாய் கிடைத்தவன். அதனால் தானோ இவனின் அருமை தெரியவில்லை. எப்போதுமே எல்லா விஷயத்திலும் அவன்தான் இவளுக்காக விட்டுக்கொடுத்திருக்கிறான், இப்போதும் கூட அனைத்தையும் அவளுக்காக அட்ஜஸ்ட் செய்துகொண்டிருக்கிறான். ஆனால் இவளோ..?’ மனம் குற்ற குறுகுறுப்பில் குன்றிப்போனது.
இவனைத்தவிர வேறுயாரையாவது மணந்திருந்தால் இப்படி நிம்மதியாக, சந்தோஷமாக, முக்கியமாக சுதந்திரமாக இருந்திருப்பேனா... என்று தன் மனதிடம் இவள் எப்போது கேட்டாலும்,”நிச்சயமாக இல்லை!” என்ற பதில் பட்டென்று வரும். இதே பதில் அவனிடமிருந்து வருமா... என்ற இவளின் அடுத்த கேள்விக்கு பதிலளிக்காது, ‘அடுத்த கேள்வி?” என இவளின் மனம் சட்டென்று கேட்கும்.
இவன் அளவிற்கு, இவனை நான் விரும்புகிறேனா? அடிக்கடி தோன்றும் அதே கேள்வி இப்போதும் மனதில் உதிக்க, அதற்கு விடை தெரியாதவளோ மௌனமானாள்.
“உங்களுக்கு பிடிக்காததை நான் அடிக்கடி செய்யும் போது இது எனக்கு பிடிக்காதுன்னு ஏன் நீங்க சொல்லலை? நான்தான் எதையும் கேட்காம இப்படி பண்ணிட்டேன். நீங்களாவது சொல்லியிருக்கலாம்ல. எப்போதும் எல்லாத்தையும் ரொம்ப ஈஸியா எடுத்துக்கறேன். கொஞ்சம் கூட எனக்கு பொறுப்பே இல்லை.உங்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு கூட தெரியாம நான் காதல் கல்யாணம் பண்ணியிருக்கேன்னு நினைச்சதும் கொஞ்சம் கஷ்டமா போச்சு!” என்றவள் தன் அமைதியின் காரணத்தை கூறினாள்.
இதைக் கேட்டவன் குறும்பு சிரிப்போடு, “என்னோடதுதான் காதல் கல்யாணம்... அதுவும் அக்மார்க் காதல் கல்யாணம். உங்களோடது காதல் கல்யாணம் இல்ல மேடம்! நீங்க பெரிய மனசு பண்ணி... என்னை அக்செப்ட் பண்ணி... அதன் பிறகு அரேஞ்ஜ் பண்ணி... நடந்த கல்யாணம்!” என அவளின் மூடை மாற்ற இவன் சொன்னது,
”ஆமாம்... உங்க அளவுக்கு என்கிட்டே லவ் இல்ல.அதனால் தான் எனக்கு உங்களை பற்றி எதுவும் தெரியலை.” என்று இவளை புலம்ப வைத்தது.
அதைக் கேட்டவனோ அவளின் வருத்தம் தனக்கானது என புரிந்ததும், தன் ஸ்கைமூன் முகம் நோமூன் போலானதை பொறுக்க முடியாது, ”லூசு! நீ சமைக்கறதுல சாப்பிடறமாதிரி இருக்கற ஒரே டிஷ் அதுதான். அதனால தான் பிடிக்காதது கூட எனக்கு பிடித்து போனது!” என்று அவளை இழுத்தணைத்தான்.
மதியின் பாட்டி, கல்யாணம் முடிந்து இவ்வளவு மாதமாகியும் இன்னும் சமைக்க கற்றுக் கொள்ளாமல் இருப்பதை அடிக்கடி சொல்லிக்காட்டுவார். ‘இப்படியே இன்னும் எத்தனை நாட்களுக்கு உன்னோட வீட்டுக்காரர் வெளியே சாப்பிடுவார். பொண்ணுன்னா சமைக்க தெரிந்திருக்க வேணாமா?உங்க அம்மாகூடதான் வேலைக்கு போறா.அவ அவளோட புருஷனுக்கு சமைத்து கொடுக்கல...‘ என தினமும் இவளை வசைப்பாடுவார். இப்போதுதான் அவரின் தினப்படி பாட்டை கேட்டு முடித்தாள்.சரியாக அதே நேரத்தில் ஆகாஷின் அம்மா வேறு இப்படி சொல்லவும் இவளுக்கு மனம் குழம்பிப்போனது. அது வார்த்தைகளில் வெளிவந்தது.
“எனக்காக ரொம்ப அட்ஜஸ்ட் பண்ணிக்கறீங்க இல்ல!” கண்களில் வலியை தேக்கி அவள் கேட்டது இவனுக்கு வலித்தது. எப்போதும் இப்படி பேசாதவள் இப்படி பேசியதும் சில கணங்கள், அப்படியா... என்ற யோசனையோடு அவளை பார்த்தான்.
‘அட்ஜஸ்ட்!’ என்பது எவ்வளவு பெரிய வார்த்தை. பொருந்தாத ஒன்றை பொறுத்துக் கொண்டிருப்பது.. இதுதானே அதன் பொருள். அப்படியா இவள் அவனுக்கு? இவளை பார்த்ததும் பிடித்தது.அதை சொன்னபோது இவள் அதை ஏற்காது மறுத்ததும் ஒருவிதமான வேதனை உயிரில் தோன்றியதே... இனி உயிர் வாழ்வதே வீண் என்ற எண்ணம் தோன்றியதே.... இவள் பின் அலைந்த ஒவ்வொரு நொடியும் இவள் ‘நோ!’ சொல்லிவிட்டால்... தன் நிலை? என்ற ஒருவித பயம் ஆட்டிப்படைக்குமே...அதெல்லாம் சொல்லுமே அவனுக்கு, இவள் யார் என்று?
இவள் மட்டும் அவனுக்கு கிடைத்திருக்காவிட்டால்..?. என்ன செய்துக்கொண்டிருப்பான்? எப்படி இருந்திருப்பான்? அவளை அடைய பிரம்மபிரயத்தனங்களை செய்தான். அதையெல்லாம் இல்லை என்பதற்கில்லை. அப்படியும் இவள் அவனை மறுத்திருந்தால்...? கடத்தவோ கட்டாயப்படுத்தவோ முடிந்திருக்குமா இவனால்? இப்படிப்பட்ட எந்த கேள்விக்கும் இவனிடம் பதில் இல்லை!
“நீ என்னோட உயிர்.எனக்கு நீ எவ்வளவு முக்கியம்னு உனக்கு தெரியாததால அட்ஜஸ்ட் அது இதுன்னு ரொம்ப பெரிய வார்த்தை எல்லாம் பேசற. நீயில்லாம என்னால இருக்கவே முடியாதுன்னு புரிந்ததால்தான் உன் பின்னாடி அலைந்து உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேன்.”
“நான் கேட்டது, எனக்கு வேண்டியது இப்ப என்கையில இருக்கு. எனக்கு இது போதும். மத்தபடி நீ எனக்காக சமைக்கனும், காத்திருக்கனும், சேவை செய்யனும்...இப்படி எந்த ஆசையும்... ஆசைன்னு கூட சொல்லக் கூடாது. இப்படி சாதரணமான எண்ணம் கூட சத்தியமா எனக்கு இதுவரை தோணினதில்லை.நிச்சயமா சொல்வேன்... இனியும் தோணாது! எனக்கு என்ன வேணுமோ அது எனக்கு கிடைத்துவிட்டது... இந்த நிம்மதியே எனக்கு போதும்” என்றவன், அவளை கையணைப்பில் இறுத்தி, தன் கண்களைக் காணும்படி செய்தவன்,
“நீங்க லேடீஸ் உங்களுக்கு பிடித்தாலும் பிடித்தமில்லாமல் போனாலும் ஒன்ஸ் கமிட்டாகிட்டா எவ்வளவு வேண்டுமானாலும் இறங்கிவருவீங்க. எதை வேண்டுமானாலும் விட்டுத்தருவீங்க. ஆனா நாங்க எங்க மனசுக்கு பிடிச்சா மட்டும்தான் விட்டும் தருவோம். இருக்கிற இடத்தை விட்டு இறங்கியும் வருவோம்.”
“எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.அதனாலதான் நான் உன்கிட்ட இபப்டி நடந்துக்கிறேன். நான் என்ன பண்ணாலும் அதெல்லாம் எனக்காகத்தான். என்னோட சந்தோஷத்துக்காகதான். என்னோட சந்தோசம் நீன்னு தெரிஞ்ச பிறகு வேற ஒன்னும் எனக்கு பெருசா தெரியலை” என சொன்னவனின் வார்த்தைகளில் காதல் வழிந்தோடியது. தன் சந்தோஷத்தை சந்தோஷமாய் இறுக்கிக்கொண்டவனின் அன்பு அந்த அணைப்பில் தெரிந்தது.
காதல் கன்னியரின் கடைக்கண் பார்வை பட்டுவிட்டால் காளையருக்கு... மாமலையும் சிறு கடுகாம்.... மலைக்கே அந்த நிலைமை என்றால் கத்திரிக்காய்க்கு?
மணவாளனின் வார்த்தைகள் மங்கையை நெகிழ்த்தி,அவன் இழுத்த இழுப்பிற்கு அவளை கொண்டு சென்றாலும் மனம் இன்னும் சமாதானமாகவில்லை. எல்லா கணவர்களும் அவர்களின் மனைவியிடம் சவரச்சனை செய்துக்கொள்ளதான் ஆசைப்படுவார்கள் என்று பாட்டி சொல்லியிருக்கிறார்கள்,.தந்தை கூட அப்படித்தான் நடந்து பார்த்திருக்கிறாள். ஆனால் இவருக்கு மட்டும் என்னிடம் அப்படி எந்த ஆசையும் எப்படி இல்லாதிருக்கும்?. எதையாவது சொன்னால் நான் வருந்துவேன் என்பதால் சொல்லாமல் இருக்கிறாரா... என்று நினைத்தவள் அமைதியாக இருந்தாள்.
“என்னடா ஸ்கைமூன்! இன்னும் ஏன் இப்படி இருக்க?”
“ப்ச்... ஓன்னும் இல்ல!”
“இவ்வளவு சொல்றேன். அப்பவும் நீ இப்படி உம்முன்னு இருந்தா எனக்கு எப்படி இருக்கும்?” என்று ஆதங்கமாய் அவன் கேட்டதும், தன் எண்ணங்களை அவனிடம் பரிமாறினாள்.
தன்னை அன்னார்ந்து பார்த்து கண்களில் தவிப்புடன் கேள்வி கேட்டவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன்,”ஆசை எல்லோருக்கும் ஒரேமாதிரி இருக்காது ஸ்கைமூன்!” என்றான்.
“அது எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்றீங்க?”
“ஆமா... நிச்சயமா அப்படித்தான்!.இப்ப நம்மையே பாரு, எனக்கு ட்வென்டி ஃபோர் இன்ட்டு செவென் உன்னை இப்படி அணைச்சிக்கிட்டே இருக்கனும்னு ஆசை.ஆனா உனக்கு...” என குறும்பாய் கண்ணடித்தான்.
அவனின் பேச்சில் சிவந்த முகத்தை அவனிடம் மறைத்தவள்,”பேச்சை மாத்தாம கேட்டதுக்கு பதில சொல்லுங்க”என்றாள் உள்ளே போன குரலில்.
“அதைதான் சொல்லிட்டு இருக்கேன் ஸ்கைமூன்!” என்றவன் மார்பில் புதைந்திருந்த அவளின் முகத்தை நிமிர்த்தினான். தன்னை பார்த்த அந்த கண்களில் கலக்கம் இன்னும் மிச்சம் இருப்பதை பார்த்து தவித்துப் போனவன்,
“எதற்குமே நீ கஷ்டப்படக்கூடாதுன்னு நான் நினைத்து கொண்டிருக்கும்போது, நீ இப்படி எனக்காக வருத்தமாக இருப்பதை பார்த்தா எனக்கு எப்படி இருக்கும்னு சொல்லு ஸ்கைமூன்! உன்னோட இந்த வேதனையான முகத்தை பார்க்கவா உன்னை விடாம துரத்தி காதலித்து கல்யாணம் பண்ணேன்.கண்டதையும் நினைத்து இனி நீ இப்படி இருக்காத ஸ்கைமூன்.உன்னோட சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்”
“இப்போதெல்லாம் நீ அடிக்கடி இப்படி மூட் அவுட்டாகிடற. உன்னை இப்படி பார்க்க எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு. என்னைத்தவிர யாரை நீ மணந்திருந்தாலும் சந்தோஷமா இருந்திருப்ப. ஆனா நான்... நீ இல்லாம இருந்திருப்பேனான்னு தெரியல...” என சொல்லும் போதே கோபமாக முறைத்தவள், பட்பட்டென்று சரமாரியாக அவனது கையில் அடித்தாள்.அதை எல்லாம் தூசை போல தட்டியவனை,
“என்ன பேச்சு பேசற லூசு?” என்று கேட்டு தோள்களை பிடித்து ஆவேசமாக உலுக்கினாள்.
“.நான் இப்படி பேசக்கூடாதுன்னா நீ எப்போதும் போல நார்மலா இருக்கனும்.இனி ஒருதரம் என்னை இதை திரும்ப சொல்ல வைக்காத!” என்றவனின் குரலில் இருந்த உறுதி கலங்கிப்போயிருந்த மதியை பழையநிலைக்கு கொண்டுவந்தது.
அவனின் சந்தோசம் இவள்தான் என்றால்... இவளின் சந்தோஷமும் அவன்தானே! தன்னை பற்றி இவனுக்கு எந்த குறையும் இல்லாத போது மற்றவரின் பேச்சுக்கு ஏன் மதிப்பளிக்க வேண்டும்? என்று எண்ணியவள் தெளிந்தாள்.
“என்ன... நான் சொன்னது புரிந்ததா? நீ எப்படி இருந்தாலும் எனக்கு ஓகே. அதனால இனிமே இப்படி கண்டதுக்கும் கவலைப்படமாட்ட தானே?” என அழுத்திக் கேட்டவனுக்கு,
“இந்த பெட்ரோமாஸ்தான் வேணும்னு நீங்களே சொல்லிட்ட பிறகு நான் ஏன் கவலைப்பட போறேன்?” என குறும்பாக கேட்டாள்.
“என்ன பண்றது ஸ்கைமூன்? வேற வழியில்லையே... அந்த கடவுள் என்னோட உயிரை இந்த பெட்ரோமாஸ்ல வச்சிட்டானே...” என சோகமாய் சொன்னவனை காதல் பொங்கப் பார்த்தவள், அவளுக்கு சொந்தமான இடத்தில் அழுத்தமாக முத்திரையை பதித்து,”ஐ லவ் யூ சோ... மச்!” என்றாள் உணர்ச்சி கொந்தளிக்கும் குரலில்.
அவளின் மலர்ந்த முகம் இவனுக்கு மனநிம்மதியை தர, “மீ டு...” என்று மார்பில் அவளை இன்னும் இறுக்கிகொண்டான்.
தன் தமக்கையிடம் போனில் பேசிவிட்டு வந்தவள் தனக்குள்ளே எதையோ முணுமுணுத்துக்கொண்டிருப்பதை பார்த்து,” என்ன? அருணா- க்கா அப்படி என்ன சொன்னா?” என கதிர் விசாரிக்கவும்,
கதிரவனின் தூரத்து சொந்தமான கமலா சித்தியின் அண்ணன் மகனுக்கு கும்பகோணத்தில் நடக்கவிருக்கும் திருமணத்திற்கு தங்களுடன் வருமாறு அருணா அழைத்ததையும், அதற்கு ரோஷ்னிக்கு பரீட்சை இருப்பதாக பொய் சொல்லி தான் மறுத்ததையும் வெண்ணிலா விளக்கினாள்.
“நான் வரலைன்னு சொன்னதும் அருணா அண்ணி, நீங்க எங்க கூட எல்லாம் வருவீங்களா? உங்க வீட்டுக்காரர் கூடத்தான் உங்க கார்ல வருவீங்க.இது தெரியாம நம்ம தம்பி பொண்டாட்டின்னு பாசமா நான் லூசாட்டம் கேட்கறேன் பாருன்னு ஒரே புலம்பல். நானா அவங்க கூட போகமாட்டேன்னு சொல்றேன். நீங்க தான் யார் கூடவும் என்னை சேரவிடறது இல்ல இது தெரியாம அவங்க எங்கையாவது என்னை வர சொல்லி, அதுக்கு நான் மறுக்க,நீங்க எல்லாம் புது பணக்காரங்க, எங்களை போல இருக்கறவங்க கூட வருவீங்களான்னு அவங்க என்னை பேசறாங்க. எல்லாம் உங்களால தான்!” என அருணாவிற்கு மேல் புலம்பி தீர்த்து விட்டாள்.
உண்மைதான்! கதிரவன் நிலாவை தன் சொந்தங்களிடம் கூட தனியே விட்டதில்லை. சுற்றியிருப்பவர்கள் அனைவரும் சூதனமானவர்கள், தன்னுடைய நிலா மட்டும்தான் அப்பாவி. அவளால் தனியே எங்கேயும் சமாளிக்கமுடியாது என்ற இவனின் ப்ரோடேக்டிவ் குணமே இதற்கு காரணம்.
எவ்வளவு உயரிய நிலைக்கு தன் மகன் போனாலும் அவனுக்கு சாமார்த்தியம் பத்தாது என ஒரு தந்தை சிலபல அறிவுரைகளை சொல்லி அவனின் விரோதியாக மாறுவதை போலதான் இதுவும். எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் அளவுக்கதிகமான அன்புதான்!
“அவங்க கூட போனா அங்கயிங்கன்னு உன்னை அலைச்சல்பட வைப்பாங்க. அதையெல்லாம் நீ தாங்கமாட்ட” என்றவனை பார்த்துக் கொண்டு அப்படியே நின்றாள் நிலா.
“என்ன... எதுக்கு இப்படியே நிக்கற? உனக்கு அங்க போகனும்னு ரொம்ப ஆசையா இருக்கா?” என்று அக்கறையாய் கேட்டவனிடம்,
“இல்ல... நான் இல்லாம தனியா சமாளிக்க உனக்கு துப்பு இல்ல. அந்த அளவுக்கு உனக்கு சாமார்த்தியம் இல்ல. பொறுப்பு இல்ல... இப்படி அடுத்து பல இல்ல வருமே அதையும் கேட்டுட்டு உள்ள போகலாம்னு வெயிட் பண்றேன்” என்று அவனின் வழக்கத்தை சொன்னாள். இப்படி பேசினதுக்கு இன்னும் நாலு வார்த்தை எக்ஸ்ட்ராவா வரும்... என இவள் எதிர்பாத்திருக்க,
“ஸாரி! உன்னை கஷ்டப்படுத்தனும்னோ இல்ல மட்டமாவோ எப்போதும் நான் நினைத்ததில்லை. என்னை.. நான் சொல்றதை நீ நம்பற தானே?” என்று கலக்கமாய் கேட்டவனை நிலா மலைத்துப் போய் பார்க்க,
அவளின் அதிர்ச்சியை இன்னும் அதிகரிக்கும் வண்ணம், “எனக்கு நீ எப்போதும் ஸ்பெஷல்தான்! என்ன.. அதை நான் சரியான விதத்தில் உன்கிட்ட இதுவரைக்கும் சொன்னதில்லை.இனி.. முடிந்தவரை அப்படி எல்லாம் பேசறதை குறைச்சிக்கிறேன். ஸாரி...” என மனமுருக சொன்னான்.இதைக் கேட்டதும் மங்கையின் மனம் மயங்கி அவனின் காலடியில் வீழ்ந்தது.
கணவனிடமிருந்து வரும் ஆதரவான சில வார்த்தைகளில், அவன் முன் செய்த அனைத்து பிழைகளையும் மனைவிமார் ‘செலெக்டிவ் அம்னீஷியா’ போல அப்படியே மறந்துவிடுவதற்கு மஞ்சள் கயிறு மேஜிக் மட்டும் காரணம் அல்ல. நம்ம அளவிற்கு பக்குவம் இல்லாத இவர்களை நாமே புரிந்துக் கொள்ளவில்லை என்றால்... பாவம் இவர்களுக்கு போக்கிடம் ஏது... என்ற பரந்தமனப்பான்மையே காரணம்! அப்படிதான் நிலாவும் கதிரின் முந்தைய பேச்சுக்களை மன்னித்து மறந்தாள்.
“அச்சோ... என்னங்க நீங்க? நான் உங்ககிட்டயிருந்து எதிர்பார்க்கறது எனக்கே எனக்கான மெச்சுதலா ஒரு சின்ன பார்வை, லேசான தலையசைப்பு இதைத்தானே தவிர வேற எதுவும் பெருசா இல்ல” என்றவளின் கை தன்னிச்சையாக அவனை நோக்கி நீள, இப்படிப்பட்ட சகஜமான நடவடிக்கைகள் அவர்களுக்குள் இதுவரை இருந்ததில்லையாதலால் நீண்டதை சட்டென்று பின்னுக்கு இழுத்துக்கொண்டாள்.
மனைவியின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருந்த கதிர் நெருங்கிவந்து அவளின் கைகளை பற்றிக் கொண்டு, “உனக்கு அந்த கல்யாணத்திற்கு போகனும்னு விருப்பம் இருந்தா சொல்லு.நான் உன்னை கூட்டிட்டு போறேன்” என்றான்.
இவன் இவ்வளவு தூரம் இறங்கிவந்ததில் பூரித்துப்போன நிலா,”இல்லைங்க,எனக்கு அப்படி ஒன்னும் ஆசை இல்லை!” என மறுத்தாள். அவளையே குறுகுறுவென பார்த்து,
“வேற என்ன ஆசை இருக்கு?” என கேட்டு சிரித்தான்.
“நீங்க எப்போதும் இப்படியே இருக்கனும்” என்றவளிடம்,
“கண்டிப்பா இனி நான் இப்படித்தான் இருப்பேன்” என்று கூறி தோளோடு சேர்த்தணைத்துக் கொண்டான்.
சில சமயங்களில் அன்பு... அதிகப்படியான அன்பு தான் அனைத்துக்கும் காரணமாகி விடுகிறது.கண்மூடி அனைத்தையும் கடக்கவும், கண்ணுக்குள் பொத்தி வைக்கவும் கண்மூடித்தனமான அன்பே காரணம் என்பதை அறியாமல் போவதால் நெருக்கமானவர்களிடையே பல பிரச்சனைகள் உருவாகிறது.
ஒருவர் மேல் வைத்த அன்பை உணரமுடியாது போவதும், உணர்த்தமுடியாது போவதும் மிகவும் கொடுமையானது! அனைத்தையும் காலமும் சூழ்நிலையும் நமக்கு வலிக்கொடுத்து புரியவைக்கும் போது காலம்... கடந்துவிடுகிறது.
இங்கே மதி அவளின் அன்பை எப்போது உணரப் போகிறாள்...? கதிரவன் நிலாவின் மேல் வைத்த அன்பை எப்படி உணர்த்தப் போகிறான்? உணரப்படும் போதும் உணர்த்தப்படும் போதும் எவ்விதமான வலிகளை இவர்கள் அனுபவிக்கப் போகிறார்கள்?
மதியை உயிராய் நினைக்கும் ஆகாஷ் இப்படியே காலத்திற்கும் அவளை உயிரில் வைத்து காப்பானா...? நிலா நீண்ட நாளாய் ஆசைப்பட்ட ஒன்று அவளின் கை சேரும் போது அதை அவள் ஆவலாய் ஏற்பாளா...? இந்த கேள்விகளுக்கெல்லாம் காலம்தான் விடை சொல்லவேண்டும்!