Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 3 | SudhaRaviNovels

அத்தியாயம் - 3

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
அத்தியாயம் – 3

அவளின் மனம் ஏனோ அன்று தடுமாற்றமாகவே இருக்க, அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

அவளுடன் பார்கிங் வரை வந்த மாறன் “வீட்டுக்குப் போய் நல்லா ரெஸ்ட் எடு தர்ஷ். தேவையில்லாம எதையும் யோசிக்காதே” என்றான் ஆறுதலாக.

அவனுடைய வார்த்தைகள் மயிலிறகாய் மனதை வருட, என் விருப்பம் கண்டிப்பாக பலிக்க வேண்டும். இவனே எனக்கு கணவனாக வர வேண்டும் என்று ஏக்கம் எழுந்தது அவளுள்.

சோர்வான முகத்துடன் “ம்ம்..ஓகே மாறன்” என்றவள் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
மதியமே வீட்டிற்கு வந்த மகளைக் கண்டு திகைத்து “என்னாச்சு தர்ஷும்மா? உடம்பு சரியில்லையா?” என்று கேட்டு நெற்றியில் கை வைத்துப் பார்த்தார்.

கதவை சாற்றிவிட்டு உள்ளே வந்தவள் “தலைவலிம்மா...கொஞ்சம் டல்லாக இருந்தது. அதுதான் கிளம்பி வந்துட்டேன்” என்றாள்.

அவளின் பதில் கேட்டு “இந்த மனுஷனுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது. வேலைக்குப் போகிறப்ப இதெல்லாம் பேசாதீங்கன்னு சொன்னா கேட்கிறாரா? அப்பா பேசினதை எல்லாம் மனசில வச்சுக்காதே தர்ஷு. உன் ரூமில் போய் கதவை சாத்திட்டு நல்லா படுத்து தூங்கு”.

“ம்ம்...சரிம்மா” என்றவள் அன்னை சொல்லியபடியே சென்று படுத்து விட்டாள்.

சுமார் இரண்டு மணி நேரம் அயர்ந்து உறங்கி எழுந்தவளின் மனம் சற்றே தெளிவடைந்திருந்தது.
அறையை விட்டு வெளியே வந்தவளிடம் “என்னடா இப்போ பரவாயில்லையா? என்றவர் காப்பி டம்ளரைக் கொடுத்தார்.

அன்னையின் காப்பி ருசியை அனுபவித்தபடி “மா! கோவிலுக்குப் போயிட்டு வரலாமா?”
சட்டென்று மணியைப் பார்த்தவர் “அப்பா இன்னைக்கு ஏழு மணிக்குத்தான் வருவேன்னு சொன்னார். அதுக்குள்ள போயிட்டு வந்துடலாம்” என்றார்.

“அப்பா கிட்ட சாவி இருக்கில்லம்மா. கொஞ்ச நேரம் ஆனால் தான் என்ன?”

“நீ என்ன புதுசா கேட்கிற? அவர் வரும் நேரம் நான் வீட்டில் இல்லேன்னா சாமியாடிட மாட்டாரா?”
மனதில் எழுந்த ஒருவித சலிப்புடன் “இன்னும் எத்தனை வருஷத்துக்கும்மா இப்படியே பயந்து பயந்தே வாழப்போறீங்க?”

மகளை அதிசயமாகப் பார்த்து “காலையில அப்பா பேசும்போது என்னால வேலையை விட முடியாது. நான் வேலைக்குப் போறதை ஏற்றுக் கொள்வதைப் போல ஒரு மாப்பிள்ளை பாருங்கன்னு சொல்ல வேண்டியது தானே?”

அன்னை கேட்டதும் “அதெப்படிம்மா? அஞ்சனா மாதிரி பேசணும்னு தோணுது. ஆனா, அப்பாவை பார்த்ததும் வார்த்தை தொண்டையை விட்டு வெளியே வரவே மாட்டேங்குது”.

“இதே தான் எனக்கும். சரி விடு! நான் கிளம்பி வரேன் கோவிலுக்குப் போயிட்டு வந்துடுவோம்”.
சற்று நேரத்தில் இருவரும் கோவிலுக்கு கிளம்பிச் சென்று கடவுளை தரிசித்துவிட்டு, பிரகாரத்தில் வந்தமர்ந்தனர்.

போவோர் வருவோரை பார்த்துக் கொண்டிருந்த காயத்ரி “எனக்கு அஞ்சனாவைப் பற்றி கவலை இல்லை தர்ஷு. உன்னை நினைத்தால் தான் கவலையாக இருக்கு. அப்பா நிச்சயமாக தன்னைப் போல ஒருவரை தான் மாப்பிள்ளையாக தேர்ந்தெடுப்பார்”.

“அப்பாவாக எனக்கு அவர் மீது அழுத்தம் மட்டும் தான் இருக்கு. அவரைப் போல குணங்களுடன் கணவர் என்று வரும்போது, நிச்சயம் பயப்படத்தான் வேண்டும். நீங்க எப்படிம்மா சமாளிக்கிறீங்க?”

நீண்ட நெடிய பெருமூச்சுடன் “திருமணமான புதிதில் அவரை கேட்காமல் பல விஷயங்கள் செய்துவிட்டு, நிறைய பேச்சு வாங்கி இருக்கிறேன். எதிலும் அவர் சொல்வது மட்டுமே நடக்க வேண்டும். எனக்கும் வேலைக்குப் போக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. நீ சம்பாதித்து நான் சாப்பிடுவதா? என்று தடை போட்டார். சம்பாத்தியம் எனக்கான ஒரு சுதந்திரம் என்பதை தெரிந்து கொண்டே வேண்டாம் என்றார்”.

“நீங்க ஏனம்மா ஒத்துக் கொண்டீர்கள்?”

“இன்றைக்கு இத்தனை வளர்ச்சி அடைந்திருக்கும் காலகட்டத்திலேயே உனக்குப் பிடித்த ஒரு வாழ்கையை தேர்ந்தெடுக்க முடியுமா? அவர் சொல்வதற்கு தலையாட்டத்தானே செய்கிறாய்?”


காயத்ரி அப்படி சொன்னதும் முகவாட்டத்துடன் “ஆமாம்மா”.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
“அன்றைக்கு சமூக அழுத்தங்கள் அதிகம். என் மாமியார் பிள்ளை மனம் போல நடந்து கொள்ள வேண்டும் என்று உத்திரவு போட்டுவிட்டார். அதோடு என் வீட்டிலும் மாப்பிள்ளை மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும் என்றே சொல்லி அனுப்பினார்கள்”.

“நீங்கள் ரொம்பவே தவித்துப் போயிருப்பீர்களே?”

“நின்றால் குற்றம். நடந்தால் குற்றம். உண்மையை சொன்னால் நானாக யோசித்தாலே குற்றம் தான். அவர் சொல்லும் வேலைகளை செய்ய அனுப்பட்ட அடிமையாக தான் எண்ணினார்...எண்ணிக் கொண்டு இருக்கிறார்”.

“எப்படிம்மா? அப்பாவை பிரிந்துவிட ஒருதடவை கூட நினைக்கவில்லையா?”

“நினைத்து எந்த உபயோகமும் இல்லைடா. முதலில் என் வீட்டில் ஆதரவு இருக்க வேண்டும். அடுத்து எனக்கென்று வருமானம் இருக்க வேண்டும். இது இரெண்டுமே இல்லாத இடத்தில் அந்த யோசனை வந்து பிரயோஜனம் இல்லையே”.

“பாவம்மா நீங்க. எனக்கு அப்பாவாக இருந்தாலும் அவர் செய்வது ரொம்பவே தப்பு. அதை என்னால் அவரிடம் நேரடியாக சொல்ல தைரியம் இல்லை. அஞ்சனா பரவாயில்லம்மா அவரின் கருத்துக்களுக்கு எதிராக நின்று விடுகிறாள்”.

“அதற்கு தான் சொல்கிறேன் தர்ஷு. வேலையை விட சொல்லும் மாப்பிள்ளையை மட்டும் எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதே. அதில் மட்டும் உறுதியாக இருந்துவிடு. அப்பா சொல்கிறார் என்பதற்காக தலையாட்டாமல் உறுதியா நில். இன்னொரு காயத்ரி உருவாக வேண்டாம்”.

“அம்மா!” என்று அன்னையின் கரங்களைப் பற்றிக் கொண்டவள் “எனக்கு நிச்சயம் நல்லவர் ஒருவர் தான் கணவராக வருவார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீங்கள் தைரியமாக இருங்க” என்றாள்.

கண்கள் கலங்க அவளின் கைகளைத் தட்டிக் கொடுத்து “எனக்கு இனி நீங்கள் இருவரும் நல்லா இருக்கணும். அது மட்டும் தான் வேணும்” என்றார்.

அன்னையை தோளோடு அணைத்துக் கொண்டு “நிச்சயமா! உங்க ஆசிர்வாதத்தில் நல்லா இருப்போம். கிளம்புங்க வீட்டுக்குப் போகலாம். அப்பா வர நேரம்”.

இருவரும் ஒருவித நெகிழ்ச்சியான மனநிலையில் வீடு வந்து சேர்ந்தனர். அஞ்சனாவும் வந்துவிட, அக்காவும், தங்கையுமாக அமர்ந்து சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். காயத்ரி இரவு உணவிற்கு தயார் செய்து கொண்டிருக்க, கல்யாணராமன் வந்தார்.

இருவரையும் முறைத்துப் பார்த்துவிட்டு “காயத்ரி! இதென்ன வீடா இல்ல கிளப்பா? இவளுங்க சிரிக்கிற சத்தம் தெருமுனை வரை கேட்குது” என்று கத்த ஆரம்பித்தார்.

அவரின் ஆர்ப்பாட்டத்தைக் கண்டு எழுந்த அஞ்சனா “ஏம்ப்பா நீங்க எப்பவுமே சந்தோஷமா இருக்க மாட்டீங்களா? நீங்க இல்லேன்னாலும் அடுத்தவங்க இருந்தாலும் உங்களுக்குப் பிடிக்காதா?” என்று கேட்டு விட்டாள்.

அவ்வளவு தான் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டது.

“காயத்ரி! காயத்ரி! மரியாதையா இங்கே வா!” என்று காட்டுக்கத்தலாக கத்த ஆரம்பித்தார்.
மெதுவே கையைத் துடைத்துக் கொண்டு வந்து நின்றவர் “என்னங்க! என்னாச்சு?” என்றார் மெதுவாக.

“மடச்சி! மடச்சி! உன்னை கட்டி வச்சு உங்கப்பன் என் கழுத்தை அறுக்கிறான். பெத்தா மட்டும் போதுமா? பிள்ளைகளை பார்த்து வளர்க்கத் தெரியாதா?”

“நான் என்னைக்கு அவங்களை வளர்த்தேன். எனக்கு தான் எதுவும் தெரியாதே. இந்த மடச்சி கிட்ட எதுக்கு கேட்குறீங்க?” என்று விட்டார்.

அஞ்சனாவோ ‘சபாஷ்!’ என்று மனதிற்குள் பாராட்டிக் கொண்டு தந்தையைப் பார்த்தாள்.

மனைவியின் மீது இருந்த வெறியில் தர்ஷனாவைப் பார்த்து “இவளோட பழக்கவழக்கங்களை கத்துகிட்டின்னா நீ போகிற இடத்தில் உருப்பட மாட்ட சொல்லிட்டேன்” என்றார்.

தந்தையின் கோபம் கண்டு நடுங்கிப் போய் நின்றிருந்த தர்ஷனாவுக்கு அவரின் வார்த்தைகள் மனதை காயப்படுத்தி விட்டது. கண்கள் லேசாக கலங்கிவிட, “சாரி-பா” என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்று விட்டாள்.

அஞ்சனாவோ பல்லைக் கடித்தபடி “அக்கா! நாம என்ன தப்பு பண்ணினோம்? எதுக்கு சாரி சொல்லிட்டுப் போற?” என்று அழுத்தமாகக் கேட்டாள்.

அவளின் கேள்வி அவரை மேலும் கோபப்படுத்த கையிலிருந்த டிபான் பாக்சை தூக்கி அடித்துவிட்டு “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன கொன்னுடுவேன். போ! போய் படிக்கிற வழியைப் பாரு” என்றார்.

அவரை வெட்டும் பார்வை ஒன்று பார்த்துவிட்டு தங்களின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.


காயத்ரி தான் முகவாட்டத்துடன் கீழே சிதறிக் கிடந்த பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தார்.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
எரிச்சலுடன் சட்டையைக் கழற்றி விட்டு சோபாவில் அமர்ந்தவர் “காப்பி கேட்டால் தான் கொண்டு வருவியா?” என்று காயத்ரியிடம் பாய்ந்தார்.

கல் போன்ற முகத்துடன் காப்பியை எடுத்து வந்து அவரிடம் தந்தார்.

“பெண்ணுக்கு கல்யாணம் பண்ணுகிற வயதில் உனக்கு நக்கல் எல்லாம் வருது?

பொண்ணுங்களுக்கு முன்னாடி அசிங்கப்படுத்த வேண்டாமேன்னு விட்டுட்டேன். இனியொரு தடவை அப்படிப் பேசினா அறைஞ்சிடுவேன் பார்த்துக்க” என்றார் மிரட்டலாக.

அவரின் பேச்சிற்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தார். முகத்திலும் எந்தவிதமான உணர்வையும் காட்டாது நின்றிருந்தார். எத்தனை வருடப் பழக்கம். இயல்பாக வந்தது.

மனைவி அப்படி அமைதியாக நிற்பதை பார்த்ததும் அதுவரை இருந்த கோபம் மறைந்து மனதிற்குள் ஒரு நிம்மதியும், பெருமிதமும் பரவியது. தனக்கு இந்த வீட்டில் மரியாதை இருக்கிறது என்று எண்ணி கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டார்.

“நைட் என்ன சமைக்கிற?” என்று அதிகாரமாக கேட்டார்.

அவருக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து கொண்டிருந்த காயத்ரி “நீங்க என்ன சொல்றீங்களோ பண்றேன்” என்றார்.

அந்த பதிலில் மேலும் பெருமிதம் எழ, “ரவா கிச்சடி பண்ணி தேங்காய் சட்னி செஞ்சிடு” என்று சொல்லிவிட்டு டிவியை போட்டு பார்க்க ஆரம்பித்தார்.

காயத்ரியோ மனதிற்குள் அவரை தாளித்துக் கொண்டே நகர்ந்தார்.

அஞ்சனாவிற்கு ரவா கிச்சடி பிடிக்காது. அதற்காகவே இன்று அதை செய்ய சொல்லி இருக்கிறார் என்று புரிந்து கொண்ட காயத்ரி, கல்யாணராமனுக்கு தெரியாமல் மகளுக்கு மெலிசாக மூன்று நெய் தோசை ஊற்றி மறைவாக எடுத்து வைத்துவிட்டு மற்ற வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.

அஞ்சனா சற்று நேரம் கழித்து சமயலறைக்குச் சென்றாள். இரவு என்ன உணவு என்பதை தெரிந்து கொண்டு தன்னால் சாப்பிட முடியாது என்று சத்தமாக சொல்ல வந்தவளை தடுத்து அவள் கையில் தோசையைக் கொடுத்தார்.

“நான் எதுக்கு திருட்டுத்தனமா சாப்பிடனும்? இது நம்ம வீடு தானே?” என்று எகிறியவளை கெஞ்சி அங்கேயே நின்று சாப்பிட வைத்து அனுப்பினார்.

பின்னர் அஞ்சனா தவிர, மூவரும் அமர்ந்து ரவா கிச்சடியை சாப்பிட்டனர். அஞ்சனாவிற்கு உணவு வேண்டாம் என்று சொல்லி விட்டாள் என்று சொல்லி விட்டார் காயத்ரி.

“ஒரு நாள் சாப்பிடலேன்னா நல்லது தான்” என்று அவரே சொல்லிக் கொண்டார்.

அன்று நடந்தவைகள் எல்லாம் தர்ஷனாவின் மனதை வலிக்கச் செய்தது. இத்தனை வருடங்களாகப் பார்த்து வளர்ந்தது தான் என்றாலும், இன்று அன்னையின் பேச்சில் தெரிந்த வலி அவரின் வாழ்வை அவளுக்கு உணர்த்தியது. அதோடு எப்படியாவது மாறனிடம் பேசி தங்களின் காதலை தந்தை ஏற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டாள்.

மறுநாள் காலை வீட்டிலிருந்தவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளாமல் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதிசயமாக அஞ்சனா கூட எதுவும் பேசிக் கொள்ளாமல் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.

கல்யாணராமனோ தன் அதிகாரம் தான் வீட்டில் கொடிகட்டிப் பறக்கிறது என்கிற திருப்தியோடு காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார்.

அவர் கிளம்பியதும் அன்னையின் கைகளைப் பற்றிக் கொண்ட தர்ஷணா “சாரி மா! அப்பா இப்படி பீகேவ் பண்றது கஷ்ட்டமாக இருக்கு” என்றாள்.

“அதுக்கு நீ என்ன பண்ணப் போற? அம்மா கொடுத்த இடம் தான் அவர் இன்னமும் ஆடிகிட்டு இருக்கார்” என்றபடி வந்து நின்றாள் அஞ்சனா.

“ம்ச்...விடு அஞ்சு! உனக்கு அம்மாவுடைய நிலை புரியாது” என்று கண்டித்தாள்.

வேகமாக தர்ஷுவின் பக்கம் திரும்பிய அஞ்சனா “அம்மாவுடைய நிலை புரிய வேண்டாம். நீ உன் நிலையை புரிஞ்சு நடந்துக்கோ அக்கா. நாம கொடுக்கிற இடம் ஒருவரை எப்படி ஆட வைக்கிறது என்று நீ பார்த்துவிட்டாய். அதனால உனக்கு வருகிறவனுக்கு அந்த இடத்தை கொடுக்காதே. கவனமாக இரு”.

அதைக் கேட்டு அவள் தலையில் லேசாக கொட்டி “சரிங்க பெரிய மனுஷி. அப்படியே செய்றேன். அவன் எது பேசினாலும் அதுக்கு எதிரா பேசி அவனை அடக்கி வச்சிடுறேன். என்னம்மா நான் சொல்றது சரி தானே” என்று அன்னையிடமும் கிண்டலாக கேட்டாள்.

“யாரு நீ! எதிர்த்து பேசி அடக்கி வைக்கப் போற? ஏதோ அவனாகப் பார்த்து உனக்கு அடங்கிப் போனால் தான் உண்டு” என்று அவளை திருப்பி கலாய்த்து விட்டு கிளம்பி விட்டாள்.

முதல்நாள் இருந்த மனநிலைக்கு முற்றிலும் வேறான ஒரு நிலையுடன் சந்தோஷமாக அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றாள் தர்ஷு.
 

Kothai suresh

Member
Jan 26, 2022
66
23
18
கல்யாண ராமன் உனக்கெல்லாம் எதுக்கு பெண்டாட்டி, குழந்தைகள்
 
  • Haha
Reactions: SudhaRavi50

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
கல்யாண ராமன் உனக்கெல்லாம் எதுக்கு பெண்டாட்டி, குழந்தைகள்
நன்றி அக்கா......................................