Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 3 | SudhaRaviNovels

அத்தியாயம் - 3

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
216
146
43
அத்தியாயம் – 3

எப்படியாவது அவனை சந்தித்து விட வேண்டும் என்கிற எண்ணத்துடன் கோவிலுக்கு கிளம்பிச் சென்றாள் தாட்ச்சு. தொடர்பு கொள்ள எந்த வழியும் தெரியவில்லை. கடவுளிடம் வேண்டிக் கொண்டாலாவது வழி பிறக்காதா என்கிற ஆதங்கத்தில் அவரின் முன்பு கண் மூடி நின்றாள்.

சிறிது நேரம் தன்னை மறந்து வேண்டிக் கொண்டிருந்தவளை யாரோ பார்ப்பது போன்றதொரு உணர்வு. மெல்ல கண்விழித்துப் பார்க்க, எதிரே அவன். சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனை காண வழி வேண்டி அந்த ஈசனின் முன் நிற்க, அவனையே அவள் முன் நிற்க வைத்திருந்தார் அவர்.

அவனுமே அன்று அவள் கோவிலுக்கு வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை. இருவரின் மனதும் ஒரே அலைவரிசையில் படபடவென்று அடித்துக் கொண்டது. தாங்கள் வாழ்வில் ஒன்று சேர்வதை அந்த இறைவனும் விரும்புகிறான் என்பதை உணர்ந்து கொண்டார்கள்.

குருக்கள் வந்து திருநீறு அளித்ததும் அதை வாங்கிக் கொண்டு மெல்ல மற்ற சன்னந்திகளை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவனும் சற்றே இடைவெளி விட்டு அவளை பின் தொடர்ந்தான். அங்கே இருவரும் நேராக நின்று பேசிவிட முடியாது. யாரேனும் பார்த்து இரு வீட்டுப் பெரியவர்களிடம் சொல்லி விட்டால் அனைத்தும் அனர்த்தம் ஆகி விடும் என்பதால் மௌனமாகவே நடந்தார்கள்.

ஒவ்வொரு சன்னதியிலும் அவளின் எதிரே நின்று அவளது உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டிருந்தான். அதுவரை அவளின் மனம் புரியாமல் இருந்தவனுக்கு இன்று நன்றாகவே புரிந்தது. கோவிலை விட்டு வெளியேறும் முன் பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.

நவகிரகத்தின் முன்பு அவள் கண் மூடி நின்றிருக்க, மெல்ல சூழ்நிலையை ஆராய்ந்து கொண்டவன் அவளது காதோரம் “என்னை பிடிச்சிருக்கா?” என்று கேட்டு விட்டு பின் பக்கம் சென்று விட்டான்.

அந்த வார்த்தை அவளது காதில் கீதமாய் ஒலிக்க, கண்கள் கலங்கி லேசாக கண்ணோரம் வழிய, உதடுகளோ வியர்வை துளிகளுடன் படபடவென்று அடித்துக் கொண்டது. இந்த ஒற்றை வார்த்தைக்குத் தானே காத்திருந்தது.

நவகிரகத்தைச் சுற்றி முடித்து விட்டு வந்தவன் எதிரே நின்றவளின் உணர்வுகளை அவதானித்துக் கொண்டான். அவளின் படபடப்பு அவன் மனதை நெகிழச் செய்தது. யாரோ கடவுளின் பாதத்தில் வைத்திருந்த மல்லிகைப் பூவை எடுத்து அவள் கையில் வைத்து “தலையில வச்சுகிட்டு பின் பக்கம் வா பேசணும்” என்று முணுமுணுத்து விட்டுச் சென்றான்.

முதன்முதலாக அவன் கொடுத்தது. மலர்ந்த முகத்துடன் மல்லிகையை தலையில் சூடிக் கொண்டு கோவிலின் பின்னே இருக்கும் தோட்டத்திற்குச் சென்றாள். அங்கே ஒரு ஓரமாக காலை மடக்கி மரத்தின் மீது சாய்ந்து நின்றிருந்தவன் வாவென கண்களாலேயே அழைத்தான்.

ஒருவித தடுமாற்றத்துடன் அவன் முன்னே சென்று நின்றாள். மெல்லிய புன்னகையுடன் அவள் முகத்தருகே குனிந்து “கல்யாணம் பண்ணிக்கலாமா தாட்ச்சு” என்றான் கிசுகிசுப்பான குரலில்.

தலை பூமிக்குள் புதைந்து விடும் அளவிற்கு குனிந்து கொண்டவளின் கன்னங்கள் சிவந்திருந்தது.
“பேசுடா! என்னை பிடிச்சிருக்கா. உன்னுடைய அசைவுகள் எனக்கு உணர்ந்தினாலும் உன் வாயிலிருந்து கேட்கணும் என்று நினைக்கிறேன்”.

“ம்ம்...பிடிச்சிருக்கு”.

அவளது முகவாயை நிமிர்த்தி “சொல்லு நான் எப்போ வந்து பேசட்டும்?” என்றான் கண்களை ஆழ்ந்து பார்த்தபடி.

அதைக் கேட்டதும் சட்டென்று கண்கள் கலங்கிவிட “சீக்கிரம் வந்து பேசுங்க. மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. ரம்யா அக்காவோட அண்ணா வீட்டில் கேட்டு வந்திருக்காங்க. எனக்கு பயமாக இருக்கு” என்றாள் உதடு துடிக்க.

அவளது கரங்களை இறுகப் பற்றிக் கொண்டவன் “ரெண்டு நாளில் வரேன்-டா. வீட்டில் பேசிட்டு வந்துடுறேன்”.

“ம்ம்...” என்றவளின் முன்னுச்சி முடி முகத்தை லேசாக மறைக்க, அதை தன் விரல்களால் நகர்த்தி விட்டு “இப்போவே கையோட கூட்டிட்டுப் போகணும் போல தோணுது”.

உதடுகளை அழுந்த கடித்துக் கொண்டு வேறு பக்கம் பார்வையைச் செலுத்தினாள்.

அவனுடைய பார்வையும் தோட்டத்தின் பக்கம் திரும்ப “ஆனந்த் என்னை தவறாக நினைப்பானோ என்று கவலையாக இருக்கு”.

அவசரமாக திரும்பியவள் “நிச்சயமா அண்ணன் அப்படி நினைக்காது. என்னை விட உங்களை அதிகமாப் பிடிக்கும். அப்படி இருக்கும் போது தவறாக நினைக்க வாய்ப்பே இல்லை”.

அவளையே பார்த்திருந்தவனின் மனம் பல கதைகள் பேசத் தொடங்க, தன்னை நிதானித்துக் கொண்டவன் லேசாக தொண்டையைச் செருமி “நீ கிளம்பு-டா! நான் ரெண்டே நாளில் வந்துடுறேன்.

ஆனந்த் கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம் நானே பேசிக்கிறேன்” என்றான் அவளது விரல்களை வருடியபடி.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
216
146
43
மனதில் உற்சாகத்துடன் வீடு வந்து சேர்ந்தவளை ரம்யா தன்னறைக்கு அழைத்துச் சென்றாள்.

“தாட்ச்சு! நாங்க கொஞ்ச நேரத்தில் கிளம்புறோம். எங்க அண்ணன் கிட்ட நான் பேசிடுறேன். ஆனால் நீ எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்தனை விரைவா முடிவெடுக்கணும் இல்லேன்னா கஷ்டமாகிடும்”.

“அக்கா! எ...எனக்கு இனி எந்தப் பிரச்சனையும் இல்ல. நான் கேட்ட பதில் கிடைச்சிடுச்சு. நீங்க உங்க அண்ணன் கிட்ட பேசியதும் நானும் இங்கே பேசிடுவேன் அக்கா”.

“என்ன! நேத்து நைட் அப்படித் தயங்கின இன்னைக்கு முகத்தில் ஒளிவட்டம் தெரியுது. சொல்லுமா பொண்ணே! யார் அந்த கள்வன்?” என்றாள் கேலியாக.

வெட்கத்துடன் “கூடிய விரைவில் உங்களுக்கே தெரியும் அக்கா”.

அவளை லேசாக அணைத்து விடுவித்தவள் “நல்லா இருடா! நீ இப்படி சந்தோஷமாக இருப்பதைப் பார்க்க நல்லா இருக்கு. என்ன எங்க அண்ணன் உன்னை மிஸ் பண்ணிட்டாங்கன்னு கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கு”.

“அவங்களுக்கும் நல்ல பெண்ணாக கிடைக்கும் அக்கா. வருத்தப்படாதீங்க!”

அடுத்து அனைவரும் காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பி சென்றனர். ஆனந்த் அவர்களை எல்லாம் வழியனுப்பி வைத்து விட்டு அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றான்.

அங்கயற்கண்ணி மருமகளை தன்னோடு அறைக்கு அழைத்துச் சென்று நிச்சயத்திற்கு என்னென்ன செய்ய வேண்டும். திருமணத்திற்கு யாரை எல்லாம் அழைக்க வேண்டும் என்றெல்லாம் பட்டியல் போட ஆரம்பித்திருந்தார். மாமியாரின் உற்சாகத்தைப் பார்த்து மீனாட்சிக்கும் மகளின் திருமணத்தைப் பற்றிய கனவு விரிய ஆரம்பித்தது.

“மீனா! இந்த கல்யாணத்தோட நான் சொல்றதையும் உன் புருஷன் செஞ்சு வச்சிடணும். அது தான் தாட்ச்சுவுக்கு பாதுகாப்பு”.

“என்னங்கத்தை செய்யணும்? சொல்லுங்க நான் அவர் கிட்ட சொல்லிடுறேன்”

“கல்யாணம் முடிஞ்ச கையோட ஒரு உயில் தயார் பண்ணிடனும். நம்ம சொத்தெல்லாம் என் பேத்திக்கும் அவளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும் தான்னு எழுதணும்”.

“உயிலா? அதுக்கு இப்போ என்ன அத்தை அவசரம்?”

“அவசியம் வரணும்னு இல்ல மீனா. நாம முன்னெச்செரிக்கையா இருப்பது நல்லது இல்லையா?”

“அத்தை! நீங்க நிறைய யோசிக்கிறீங்க. எந்தப் பிரச்சனையும் நம்ம குடும்பத்தில் வராது”.

நீண்டப் பெருமூச்சுடன் மருமகளை பார்த்தவர் “சரி நீ கிளம்பு நான் கொஞ்ச நேரம் படுக்க போறேன்”.

மருமகள் வெளியேறியதும் சுவற்றில் மாட்டி இருந்த கணவரின் படத்தை பார்த்துக் கொண்டே இருந்தார். அவருடைய மனமோ ‘நான் சொல்ல வருவதை இவங்க யாருமே புரிஞ்சுக்க மாட்டேன்றாங்க’ என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

அலுவலகத்தில் இருந்த ஆனந்தோ கோபத்தோடு தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது மனம் நடந்த நிகழ்வில் கொந்தளித்துக் கொண்டிருந்தது. யாரையும் பார்க்கவோ, பேசவோ மனமில்லாமல் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான்.
அந்நேரம் அவனது அலைப்பேசி அழைக்க, சற்றே எரிச்சலுடன் எடுத்துப் பார்க்க தீபன் தான் அழைத்துக் கொண்டிருந்தான்.

தீபனின் எண்ணை பார்த்ததும் அதுவரை இருந்த உணர்வுகள் சற்றே வடிய “சொல்லு மச்சான்” என்றான் சலிப்போடு.

“என்னடா பிசியா இருக்கியா? உன்னைப் பார்க்க தான் கூப்பிட்டேன்”.

“வரேன்டா” என்று கூறி போனை வைத்து விட்டு தனது வண்டி சாவியை எடுத்துக் கொண்டு எவரையும் நிமிர்ந்து பார்க்காது அங்கிருந்து கிளம்பி விட்டான்.

அவன் வெளியே சென்ற பிறகு வேலன் அவன் அறைக்கு வந்து நின்றார். வெளியே சென்று விட்டான் என்று கேட்டதும் யோசனையுடன் அங்கிருந்து சென்றார்.

வழக்கமாக அவர்கள் சந்திக்கும் இடமான ஆத்தங்கரையில் வண்டியை நிறுத்தி விட்டு வந்தவனின் முகத்தில் தெரிந்த வருத்தத்தை கண்டு கொண்டான் தீபன்.

நண்பனின் தோளை தட்டி “என்னடா மச்சான்? என்னாச்சு என்னவோ போல இருக்க?”
அதுவரை பொங்கிக் கொண்டிருந்த உணர்வுகள் வெடிக்க “அனாதையாக பிறந்தது என் தப்பா மச்சான்? அதுவும் பிச்சை எடுத்தது என் தவறா? இன்னும் எத்தனை வருஷத்துக்கு அதையேப் பேசி கொல்லப் போறாங்க?”

அவனது தோள்களை தட்டிக் கொடுத்து “நீ தி கிரேட் சிங்கரவேலனோட மகன். அது தான் உன்னுடைய அடையாளம். வெளியாட்கள் பேசுவதை ஏண்டா நினைக்கிற”.
 
  • Like
Reactions: Kothai suresh

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
216
146
43
“வெளில மட்டும் இல்ல மச்சான். பாட்டியும் என்னைக் கண்டாலே திருட்டுப்பயலை பார்ப்பது போல தான் பார்க்கிறாங்க”.

“மச்சான்! வயசானவங்க எப்போதுமே சில விஷயங்களை ஏற்றுக் கொள்ள மாட்டாங்க. சாரும், மேடமும் உன்னை என்னைக்காவது வெளியாளாக நடத்தி இருக்காங்களா?”

“இல்லை-டா! அவங்க மகனாக தான் உணர வச்சிருக்காங்க”.

“அப்போ நீயேன் மற்றவங்க பேசுவதைப் பற்றி கவலைப்படுற?”

“இல்ல மச்சான். ஆபிசில் சில பேர் என்னை மதிக்கிறதே இல்லை. அப்பா சொன்னால் மட்டும் தான் செய்றாங்க. நீயே திடீர்னு அடிச்ச காற்றில் அங்கே போய் ஓட்டிக்கிட்ட பய தானேன்னு மறைமுகமா பேசுறாங்க”.

“சாருக்கு அடுத்த இடத்தில் இருப்பது நீ தானே? அப்புறம் எப்படிடா உன்னை எதிர்க்க முடியும்?”

“எல்லாமே இருக்கு ஆனால் என்னுடைய கடந்த காலம் கடைசி வரை துரத்திகிட்டே இருக்கும்”.

“விடுடா! எல்லாமே ஒரு நாள் சரியாகும். நீ சந்தோஷமா இரு."

“சரி நீ எதுக்கு கூப்பிட்ட?”

அவன் கேட்டதும் தீபனின் முகம் பிரகாசமாகிவிட, தன்னை மீறி ஒரு வெட்க உணர்வு முகமெங்கும் பரவியது.

“மதுரைக்கு போகலாம்னு தான் கூப்பிட்டேன்."

அவனையே கவனித்துக் கொண்டிருந்தவன் “டேய்! இரு! இரு! உன் முகத்தில் என்னவோ ஒரு வித்தியாசம் தெரியுது? என்னடா பொண்ணு செட்டாச்சா?” என்றான் அதிர்ச்சியாக.

“ம்ம்...ஆமாண்டா!”

“அடப்பாவி! நான்கு நாட்களா உன் கூடவே சுத்துறேன் சொல்லவே இல்லை. யாரு? எங்கே இருக்கா?”

“இருடா! இப்போ என்னால சொல்ல முடியாது. அவளுக்கு முதன்முதலாக ஒரு புடவை எடுக்க ஆசைப்பட்டேன். வா! போகலாம்."

அவன் இந்த விஷயத்தை சொன்னதும் ஆனந்த் தனக்கு நடந்தவற்றை மறந்து, உற்சாகமாக அவனோடு மதுரைக்கு கிளம்பினான். இருவரும் பல கதைகளை பேசியபடி பைக்கில் சென்றார்கள்.

புடவை கடையில் சென்று இறங்கியவனுக்கு என்ன எடுப்பது எப்படி எடுப்பது என்று எதுவும் புரியவில்லை.

அவனது திகைப்பைப் பார்த்து மெல்லிய சிரிப்போடு “முன்னே பின்னே எடுத்திருந்தால் தானே தெரியும். வா! நான் ஹெல்ப் பண்றேன். பாப்பாவுக்கு எடுத்து எனக்குப் பழக்கம்” என்று கூறி இழுத்துச் சென்றான்.

ஆனந்திடம் பேச்சக் கொடுத்து தாட்ச்சுவிற்கு என்ன மாதிரியாக பிடிக்கும் என்று தெரிந்து கொண்டவன் தன்னவளுக்காக அழகானதொருப் புடவையை தெரிவு செய்தான்.

புடவையை வாங்கி கொண்ட பைக்கில் அமரும் போது அந்தக் கவரை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். ஆனந்த் ஏதேதோ பேசிக் கொண்டு வர, இவனது எண்ணமெல்லாம் தான் வாங்கிக் கொடுக்கும் புடவையில் அவளின் தோற்றம் எப்படி இருக்கும் என்பதிலேயே இருந்தது. மனம் முழுவதும் அவளே நிறைந்திருந்தாள்.

அவனது எண்ணம் முழுவதும் அவள் தான். தான் வாங்கிக் கொடுத்த புடவையில் அவன் முன்னே-பின்னே நடை பழகி மயக்கிக் கொண்டிருந்தாள். தங்களின் திருமண நாளை எண்ணி மனம் ஏங்க ஆரம்பித்தது. அவளின் கரம் பற்ற அவனது தேகம் துடித்தது.

சாலையில் எங்கோ ஒரு டீக்கடையில் ஒலித்த பாடல் அவனுடைய மனதை பிரதிபலித்தது.

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீ தானே வா நிலா
என்னோடு வா நிலா

அவனுடைய உணர்வுகள் அவளுக்காக ஏங்கித் தவிக்க, எத்தனை விரைவாக தாய், தந்தையிடம் பேசி சம்மதம் வாங்க வேண்டுமோ வாங்கிவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.

நண்பர்கள் இருவரும் பேசி முடித்து வீட்டிற்கு வந்த நேரம் தீபனுக்கு சென்னையிலிருந்து அழைப்பு வந்தது. உடனடியாகக் கிளம்பி வரும்படி கூறினார்கள்.

இரு நாட்களில் அவளிடம் பெண் கேட்பதாக சொன்னவனுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சி. என்ன செய்வது என்று தெரியவில்லை. நண்பனுக்கு ஒரு மெச்செஜ் போட்டுவிட்டு தான் அவளுக்காக வாங்கிய சேலையையும் பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டு அன்றிரவே கிளம்பி இருந்தான்.
 
  • Like
Reactions: Kothai suresh

Kothai suresh

Member
Jan 26, 2022
59
18
8
அச்சச்சோ 2 நாள்ல வரேன்னான், இப்படி திடீர்னு கிளம்பிட்டான்
 
  • Love
Reactions: SudhaRavi50