Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 3 | SudhaRaviNovels

அத்தியாயம் - 3

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,830
113
அத்தியாயம் -3

இருவாரங்களில் அழகான விடியலுடன் ஆராவரமில்லாத எளிமையான திருமணமாகக் கோவிலில் நடந்தது.அவன் மனமோ எந்தவித ஆர்வமோ,சந்தோஷமோ இல்லாமல் வெறுமையாக இருந்தது. இந்தத் திருமணம் தேவைதானா என்றே தோன்றியது.நிகில் குடும்பத்தினரும் நிம்மதியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் .எந்தநேரம் அவன் முரண்டு பிடிப்பானோ திருமணம் வேண்டாம் என்று போய் விடுவானோ , என்றெண்ணி பயந்து கொண்டிருந்தது போக மிக அமைதியாக எந்தவித சங்கடங்களுமின்றி முடிந்தது திருப்தியை தந்தது.காயத்ரி தன் நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.நிகிலுக்கோ அம்மாவின் முகத்தில் தெரிந்த நிம்மதியில் சந்தோஷம் அடைந்தாலும், வாழ்க்கையை எப்படி வாழப்போகிறோம் என்று கலக்கம் மனதை அரித்துக் கொண்டிருந்தது..ஸ்ருதியின் பாட்டியோ மாலையும் கழுத்துமாக நின்றிருந்த பேத்தியின் மேல் கண் வைத்திருந்தவர்,பொறுப்பை முடித்த திருப்தியுடன் நின்றிருந்தார். அருகில் நின்ற பேரனைப் பார்த்து மெலிதாக ஒரு புன்னகையைச் சிந்தியவர் “இப்போதான் நிம்மதியா இருக்குப்பா.இவளை கட்டிக் கொடுத்து அவளுக்கு ஒருவழியைக் காண்பிச்சாச்சு. தேவையில்லாத பாரத்தை இத்தனை நாள் தூக்கிச் சுமந்தோம். இப்போ அடுத்தவன் தலையில் இறக்கி வச்சாச்சு.இனியாவது புத்தியுள்ள புள்ளயா அவளைத் தள்ளி வைக்கிற வழியைப் பாரு. அப்போ தான் உனக்கு நல்ல குடும்பத்து பொண்ணு கிடைக்கும்.”என்றார்.அவரைச் சற்று கோபத்துடன் திரும்பி பார்த்த அருண் “என்ன பாட்டி இது!எந்த நேரத்தில் என்ன பேசுறது கணக்கில்லாம போச்சு !”என்று அதட்டினான்.சாமி சன்னதியில் இருந்து வெளியே வந்து பெரியவர்கள் பிரகாரத்தில் அமர்ந்து விட, நிகிலையும் ஸ்ருதியையும் பிரகாரத்தைச் சுற்றி வரும்படி கூறினார்கள்.இருவரும் சேர்ந்து நடக்கும் போது லேசாக அவள் உடல் அவன் மீது உரச சட்டென்று தீப்பட்டார் போல் விலகி நடந்தான். அதை எல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை ஸ்ருதி. தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டே சென்றாள்.அவர்களின் பின்னால் வந்து கொண்டிருந்த நிகிலுடைய அண்ணன்கள் ஆகாஷ் , நீரஜ் இருவரும் தம்பி செய்த செயலை கண்டு திட்டிக் கொண்டே வந்தார்கள். “என்னடா இவன், இப்படி இருந்தான்னா அந்தப் பொண்ணு வாழ்க்கையும் இல்ல கெடும்.எத்தனை நாளைக்குதான் நடந்ததையே நினைச்சுச் சந்தோஷங்களை இழக்கப் போறானோ தெரியல”என்று சலிப்புடன் கூறினான்ஆகாஷ்.“நேத்து அவ்வளவு நேரம் உட்கார வச்சு பேசினேன் ஆகாஷ்.ஆனா, இவன் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேன்றானே.பொண்ணு பார்க்க கூட வர முடியாதுன்னு தான் பிடிவாதம் பண்ணினானே”என்று புலம்பினான் நீரஜ்.கையில் குழந்தையுடன் நீரஜின் அருகில் வந்த மனைவி ஆர்த்தி “எல்லாம் சரியா போகும் விடுங்க”என்றாள் சிரித்துக் கொண்டே.அவளிடம் அண்ணன் மகனை வாங்கிக் கொண்டவன் “ஸ்ருதி நல்ல அமைதியான பொண்ணா தான் தெரியுது. இனியாவது அவனுக்கு அமைதியான வாழ்க்கை அமையட்டும்.”

அவர்கள் இருவரும் பேசியதை கேட்டுக்கொண்டே வந்த ஆகாஷ் “அவ சின்னப் பொண்ணுமா.இவன் இந்த மாதிரி உதாசீனப்படுத்தினா மனசு சுணங்கி போயிடாது”.“ அப்படி எல்லாம் விட்டுட மாட்டோம். நாம எல்லாம் எதுக்கு இருக்கோம்”என்று சொல்லியபடியே அவர்களுடன் வந்து இணைந்து கொண்டாள் அகல்யா ஆகாஷின் மனைவி.“அதானே ! சாதாரணக் கூட்டணியா?எமகாதகக் கூட்டமாச்சே! ஆளை கவுக்காம விடமாட்டீங்களே!”என்றான் நீரஜ்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,830
113
அவர்கள் அரட்டை அடித்துக் கொண்டே வர,பேச வேண்டியவர்களோ ஆளுக்கொரு சிந்தனையில் பிரகாரத்தைச் சுற்றி வந்து பெரியவர்கள் இருக்குமிடத்திற்கு வந்து சேர்ந்தனர். பெண்ணும் மாப்பிள்ளையும் வந்ததும் அனைவரும் நிகிலின் வீட்டிற்குச் செல்லத் தயாராகினர்.சாம்பசிவம் தன் பெரிய மகனை கூப்பிட்டு “ஆகாஷ் நீ ஒரு கார்ல அம்மாவையும், அகல்யாவையும் அழைச்சிட்டு வீட்டுக்கு முன்னாடி போயிடு. அவங்க போய் ஆரத்தி எடுக்க ரெடி பண்ணுவாங்க. நாங்க எல்லாம் வேன்ல வரோம்.நீரஜ் பொண்ணு மாப்பிளையை அழைச்சுகிட்டு வரட்டும்”என்றார்.

அவர் சொன்னபடி அம்மாவையும், மனைவியையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான் ஆகாஷ் . ஆனால் அவன் மகன் அபிமன்யுவோ அவர்களோடு செல்லாமல் சித்தப்பாவுடன்தான் வருவேன் என்று சொல்ல,அவனை விட்டு விட்டு கிளம்பி சென்றார்கள்.அவர்கள் சென்றதும் பெரியவர்கள் கூடி நின்று பேசிக் கொண்டிருக்க, நிகிலோ ஸ்ருதியின் பக்கத்தில் நில்லாமல் நீரஜிடம் சென்று பேசத் தொடங்கினான். அவன் அப்படி அவளைத் தனியே விட்டுச் சென்றதும், ஸ்ருதியின் அண்ணன் அருண் அவள் அருகில் வந்து அவளிடம் பேச்சுக்கொடுத்தான்.”என்னடா?காலையில் இருந்து பலமான யோசனையோடவே இருக்கே?”அருனின் புறம் திரும்பியவள் உதட்டில் குறுஞ்சிரிப்புடன் அவன் அருகே வந்து மெல்லிய குரலில் “ஏன்னா மாப்பிள்ளை சரியான கடுவன் பூனையா?”என்றாள்.அவளின் கேள்வியில் சற்று அதிர்ந்து சுற்றிலும் உள்ளவர்கள் காதில் அவள் கேட்டது விழுந்திருக்கப் போகிறது என்ற பயத்துடனே பார்த்தவன் “என்னடா இது! இப்படியா சொல்லுவே! யார் காதிலேயாவது விழுந்தா என்ன நினைப்பாங்க.இப்படி எல்லாம் பேசக் கூடாது.பொறுப்பா இருக்கனும்மா”என்றான்.அவன் சொன்னதைக் கேட்டவள் “ஐயோ அண்ணா! இந்த ரெண்டு நாளா இந்த மாதிரி அட்வைஸ் கேட்டுகேட்டு காது ஜவ்வு கிழிஞ்சு போச்சு.நீங்களும் ஆரம்பிக்காதீங்க.”“சரிடா ஆனா, இந்த மாதிரி எங்க கிட்ட பேசுறது ஓகே. மத்தவங்க முன்னாடி பேசாதே. நிகில் வேற ரொம்ப எமோஷனல் டைப்பாத்தான் தெரியுறான்.”அருண் சொன்னதைக் கேட்டு மெலிதாகச் சிரித்தவள் “இதைத்தான் நான் கேபி( கடுவன் பூனை) சொன்னேன். நீங்க அதைக் கொஞ்சம் மரியாதையா சொல்றீங்க.”அவர்களிருவரும் பேசி சிரித்துக் கொண்டிருக்க, நீரஜிடம் பேசிக் கொண்டிருந்த நிகில் யதார்த்தமாக அவளிருந்த பக்கம் திரும்ப, அவன் கண்களில் அவளின் சிரித்த முகம் பட ஒருநிமிடம் தன்னையும் மீறி அயர்ந்து நின்றான். சின்னஞ்சிறிய முகத்தில் கூர்வாள் போன்று விழிகளும், கூர்மையான நாசியும், செம்மாதுளை இதழ்களும் பார்ப்பவரை அப்படியே கட்டிப்போட வைக்கும் அழகுடன் நின்றிருந்தவளை கண்டு தன் விரக்தி, வெறுப்பு அனைத்தையும் மறந்து நின்றான். பேசிக்கொண்டிருந்தவன் திடீரென்று அமைதியானதை பார்த்து அவன் விழிகள் நிலைத்து நின்ற இடத்தைக் கண்டு தனக்குள் புன்னகைத்துக் கொண்டு, தம்பியின் வாழ்வு இனி மலர்ந்துவிடும் என்ற எண்ணத்துடன் அங்கிருந்து நகர்ந்தான் நீரஜ்.நேரமானதால் எல்லோரும் வீட்டிற்குச் செல்லத் தயாராக, அங்கு நின்றிருந்த வேனில் ஏற ஆரம்பித்தனர். நீரஜ் தன்னுடைய ஹுண்டாய் அக்சென்ட்டை கொண்டு வந்து நிறுத்தி நிகில் , ஸ்ருதி இருவரையும் ஏறுமாறு கூறினான். அப்போது தாத்தாவுடன் வேனில் ஏறிக்கொண்டிருந்த அபி சித்தப்பாவுடன் போக வேண்டும் என்று அவர் கையில் இருந்து துள்ளி குதித்து ஓடி வந்து நிகிலின் கால்களைக் கட்டிக்கொண்டான்.காரினில் ஏறி தங்கள் இருவருக்கும் நடுவில் அபியை அமர வைத்தான். ஆனால், அபியோ கையைக் காலை உதறி “நான் தித்தி அப்புதம் உக்கா”என்று அழ ஆரம்பித்தான்.அவனைத் தூக்கி மடியில் உட்கார வைத்துச் சமாதானப்படுத்த முயற்சித்தான். அவனிடமிருந்து முண்டியடித்துக் கொண்டு ஸ்ருதியின் மடியில் தாவி அவளின் மறுபுறம் சென்றமர்ந்து கொண்டான். இதில் ஸ்ருதியை அழைத்து “தித்தி! அபிக்குப் பேஸ் வேணும் தள்ளி” என்று அவளைப் பிடித்து அவன் பக்கம் தள்ளினான்.அவளின் நெருக்கத்தில் அதுவரை இருந்த இலகு தன்மை மாறி மீண்டும் கடுகடு என்று முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்து கொண்டான். இதை எல்லாம் கண்ணாடி வழியாகப் பார்த்த நீரஜ் சிரித்து வைக்க, அதைப் பார்த்து கடுப்புடன் “அவனை மாதிரியே புள்ளையை வளர்த்து வச்சு இருக்கான் . இப்போ நீ எதுக்குச் சிரிக்கிற” என்று எரிந்து விழுந்தான்.அவனது கோபமோ பேச்சோ எதுவுமே அவளைப் பாதிக்காதது போல் தன் அருகில் அமர்ந்திருந்த குழந்தையுடன் பேச ஆரம்பித்தாள். அபியின் கைகளைத் தன் கைகளுக்குள் எடுத்து வைத்துக் கொண்டு “குட்டிப் பையா, உங்க பேர் என்ன?” என்று கேட்டாள்.“என் பேரு அபிமன்னு”.அவன் சொன்ன அழகை ரசித்து “ஹாஹா..நீங்க அபிமன்னு வா செல்லம்” என்று கேட்டு அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள் .அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தவன் “தித்தி பேரு என்ன?.“ஸ்ருதி”“சுதி”அவன் சொன்ன விதத்தில் சிரிப்பு வர தலையை ஆட்டி மறுத்து “ சுதி இல்ல ஸ்ருதி..எங்கே சொல்லு பார்ப்போம்”.சிறிது யோசித்து “ம்ம்..சுத்தி”என்று சொல்லி அவள் முகம் பார்த்தான்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,830
113
“சுத்தி இல்லடா குட்டி ஸ்ருதி சொல்லு.”இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த நீரஜ் “விடுமா அவன் நினைச்சதை தான் கூப்பிடுவான். உனக்குப் பரவாயில்லை, என்னை நிஜ சித்தப்பாம்பான் , அப்பாவை தாம்பு தாத்தா, அம்மாவை காதி பாட்டின்னு கூப்பிடுவான். இதெல்லாம் கூடப் பரவாயில்லை நிக்கியை ...ந..”என்று ஆரம்பிக்கும் போதே “டேய்! இப்போ இது ரொம்ப முக்கியமா ஒழுங்கா ரோட்டை பார்த்து ஒட்டு”என்று ஆத்திரமாக மிரட்டினான் நிகில்.நீரஜ் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்ட ஸ்ருதி, வந்த சிரிப்பை அடக்க வழியறியாது தலையைக் குனிந்து கொண்டு சிரித்துக் கொண்டாள்.

அபி சிறிது நேரத்தில் ஸ்ருதியின் மேலே சாய்ந்தவாறு உறங்க ஆரம்பித்தான். அதைப் பார்த்தவள் மெல்ல அவன் உறக்கம் கலையாதவாறு தூக்கி தன் மடியில் போட்டுக் கொண்டாள். பின் அவன் தலையைக் கோதியவாறே அமர்ந்திருந்தாள். அவள் புறம் திரும்பவில்லை என்றாலும் ஓரக்கண்ணாலேயே அவளின் செய்கைகளைப் பார்த்தவனுக்குத் தன்னை மீறி அவளிடம் மனம் போவதை தடுக்க முடியவில்லை.வீடு வந்ததும் அவன் இறங்கி வந்து அவள் மடியில் இருந்து குழந்தையைத் தூக்கி நீரஜிடம் கொடுத்தான். இருவரையும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்று ஸ்ருதியை விளக்கேற்ற சொன்னார் நிகிலின் அன்னை. சாமி கும்பிட்டு முடித்ததும் அவன் ஹாலில் சென்று அமர்ந்துவிட, ஸ்ருதியையும் அழைத்து வந்து நிகிலின் அருகே அமர்த்திவிட்டு எல்லோரும் அமர்ந்து ஓய்வாகக் கதை பேச ஆரம்பித்தனர்.வழக்கமான திருமணமாக இல்லாததால் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே குழுமி இருக்க, அனைவரும் ஒருவரோடு ஒருவர் அளவளாவ ஆரம்பித்தனர். அவளின் அருகே அமர்ந்திருந்ததால் ஒருவித அவஸ்தையுடனே அமர்ந்திருந்தான். அவனைத் தவிரக் குடும்பத்தினர் எல்லோரும் அவளிடம் மிக இயல்பாகப் பழகினர்.மதிய உணவிற்குப் பின் ஸ்ருதியை ஓய்வெடுக்கச் சொல்ல, அவளும் இருந்த களைப்பில் படுத்ததும் உறங்கி விட்டாள். நிகில் திருமணத்திற்குச் சம்மதம் கொடுத்ததே பெரிய விஷயம். ஆதலால் வரவேற்பு கூட ஏற்பாடு செய்யாமல் இருந்தார்கள்.

மாலை நேர அனைவரும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்க ,ஸ்ருதியை பற்றித் தன் தோழியின் மூலம் அறிந்த ஆர்த்தி அவளிடம் “நீ நல்லா பாடுவேன்னு கேள்விபட்டேன். காலேஜ் விழாக்களில் எல்லாம் பாடி ப்ரைஸ் வாங்கி இருக்கேன்னு சொன்னாங்க. ஒரு பாட்டு பாடேன் ஸ்ருதி”என்றாள்.அவள் கேட்டதும் அதுவரை கலகலவென்று பேசிக் கொண்டிருந்தவர்கள் ஆர்வமாய் ஸ்ருதியின் முகத்தைப் பார்த்தனர். காயத்ரியும் “பாடுமா , நாங்களும் உன் பாட்டைக் கேட்க ஆசையா இருக்கோம்”.மரகதம் பாட்டி “அருமையா பாடுவா சம்மந்தி. எனக்கு மனசு சங்கடமா இருக்கும் போது அவளைப் பாட சொல்லி தான் கேட்பேன்”.எல்லோரும் தன்னைப் பாட சொன்னதும் அவள் கண்கள் தன்னை அறியாமலே நிகிலைப் பார்த்தது. உரிமையுடன் அவளைக் கேட்க வேண்டியவனோ அவள் புறம் திரும்பாது கையில் இருந்த செல்லில் தலையைக் கவிழ்த்திருந்தான். தனக்குள் எழுந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு மெல்ல பாட ஆரம்பித்தாள்.

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை

என் கண்களைப் பறித்துக் கொண்டு ஏன் இன்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே

அலை பாயும் சிறுபேதை நானோ

உன் பேரும் என் பேரும் தெரியாமலே

உள்ளங்கள் இடம் மாறுமேனோ

வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோசெல்லின் மேல் கவனம் வைத்திருப்பது போல் அமர்ந்திருந்தாலும் பாடல் வரிகள் காதில் விழுந்ததுமே அவனது உடலில் ஒரு நடுக்கம் ஓடியது. அவளது குரல் அவனுடைய உணர்வுகளை அப்படியே கட்டிப்போட்டது. அவளோ யாரையும் நிமிர்ந்து பார்க்காமலே பாடி முடித்தாள்.சட்டென்று உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து வெளியே சென்று விட்டான்.எதிலிருந்தோ தப்பித்துக் கொள்ளும் வேகம் அவனிடம் தெரிந்தது. எல்லோரும் ஸ்ருதியை பாராட்டிக் கொண்டிருக்க, ஆகாஷ் தம்பியை தேடி சென்றான்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,830
113
தோட்டத்தின் இருளில் வானத்தை வெறித்தபடி நின்றிருந்தவன் முதுகில் ஆதரவாகக் கை போட்டு தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டான். “நிக்கி! பழசை எல்லாம் மறக்கணும். இப்போ உன்னை நம்பி ஒரு பொண்ணு வந்துட்டா. இன்னும் இப்படியிருந்தா நல்லதுக்கில்லை. நீ பழைய நிக்கியா மாறனும். நாங்க எல்லோரும் அதைத்தான் எதிர்பார்த்துகிட்டு இருக்கோம்.”அவன் சொன்னதைக் கேட்டு திரும்பி முகத்தைப் பார்த்தவன் “வாழ்க்கை மேல நம்பிக்கையே போச்சு ஆகாஷ். எதுவுமே நிலைக்காதுன்னு ஒரு பயம் இருந்துகிட்டே இருக்கு”என்றான்.அவன் தோளில் லேசாகத் தட்டி “தேவையில்லாததை எல்லாம் நினைக்காதே. ஸ்ருதி அருமையான பொண்ணு. இனி, உன் வாழ்க்கை நல்லா இருக்கும். ஆனால், நீயும் நடந்து கொள்வதைப் பொறுத்துத்தான் இருக்கு.”சலிப்பான ஒரு பார்வையை ஆகாஷுக்கு கொடுத்து “வேண்டாம் ஆகாஷ்! நான் இனி எந்த ஆசையோ, பாசமோ வைக்கத் தயாரில்லை.”சற்று கோபத்துடன் அவனைப் பார்த்த ஆகாஷ் “ என்ன இது நிக்கி? நீ எழுந்து வந்ததே எனக்குப் பிடிக்கல. இப்போ இப்படிப் பேசினா என்ன அர்த்தம். அந்தப் பொண்ணு பாடி முடிச்சதும் உன்னுடைய பாராட்டுக்காக எவ்வளவு ஆர்வமா பார்த்துச்சு தெரியுமா? எனக்கென்னவோ இந்த முறை நீயே உன்னுடைய வாழ்க்கையைத் தவறான பாதையில் கொண்டு போகப் போறேன்னு தோணுது. இது நல்லதுக்கில்லை சொல்லிட்டேன். இனி, எல்லாமே உன் கையில்தான் இருக்கு. அப்புறம் உன்னிஷ்டம்” என்று சப்தம் போட்டுவிட்டு அங்கிருந்து சென்றான்.

அண்ணனின் முதுகையே வெறித்துக் கொண்டு நின்றவன், மெதுவாக அங்கிருந்த கல்லில் அமர்ந்து விட்டான். ‘ எப்படி இருந்த வாழ்க்கை? எத்தனை கனவு? எத்தனை ஆசைகள்? எல்லாமே ஒரு நாளில், ஒரே நிமிஷத்தில் மண்ணாய் போனதே. ஒன்றா, ரெண்டா,மூன்று வருடங்கள் யார் முகத்தையும் பார்க்காது சிறை வாழ்க்கை போல் வாழ்ந்த எனக்கல்லவா தெரியும் அந்த வலி. கத்தியில்லாமல் ரத்தமில்லாமல் ஒருவனின் உணர்வுகளைக் கொல்ல முடியும் என்பதை உணர்ந்து கொண்ட நாளின் நினைவுகள் அவன் மனதை அறுக்க, முகம் மேலும் கசங்கி போனது. அன்று பட்ட வலியின் தாக்கம் இன்றும் எழ ,கண்மூடி அந்த வேதனையை முழுங்க முயன்றான்.நிகிலை இரவு உணவுக்கு அழைக்க வந்த நீரஜ் அவனது கசங்கிய முகத்தைப் பார்த்து யோசனையுடன் அவனருகில் சென்றான். “ என்ன பண்ற நிக்கி? நீ எப்போ ராக்கெட் சயின்ஸ் படிச்சே? இப்படி வானத்தை உத்து உத்துப் பார்த்துகிட்டு இருக்கே?” என்றான்.தன் கூரிய விழிகளால் அவனைப் பார்த்தவன் “ரொம்பக் கஷ்டப்படாதே நீரு. இப்போ எதுக்கு வந்தே சொல்லு?”

“சரி சரி, நேரமாச்சு வா. எல்லோரும் உனக்காகச் சாப்பிட காத்துகிட்டு இருக்காங்க.”இருவரும் தோட்டத்திலிருந்து உள்ளே செல்ல, அங்கே அதுவரை இருந்த கலகலப்பு மாறி ஒருவித அமைதி தவழ்ந்தது. ஒருவரோடு ஒருவர் பேசுவது கூட மெதுவாக அடுத்தவர் காதில் விழாத வண்ணம் பேசிக் கொண்டனர். முதலில் நடப்பது என்னவென்று புரியாமல் பார்த்தவனுக்கு, அடுத்து வருவது என்னவென்று தெரிந்ததும் முகத்தில் கடுமை கூடியது. முறைப்புடன் திரும்பி ஆகாஷையும் , நீரஜையும் பார்க்க, அவர்களிருவரும் அவசரமாக ஏதோ வேலையிருப்பது போல் அங்கிருந்து சென்றனர்.

உணவை முடித்துக் கொண்டு தன்னறைக்கு வந்தவனுக்கு அங்கு எப்பவும் போலிருந்த அறை மன அமைதியை கொடுத்தது. ஆனாலும்,கீழே அண்ணிகளின் மெல்லிய சிரிப்பொலியும் , ஸ்ருதியை அவர்கள் கேலி செய்து கொண்டிருப்பது காதில் விழுந்ததும் அதுவரை அடங்கி இருந்த கோபத்திற்குத் தூபம் போட்டது. மனதிலிருந்த புழுக்கத்தில் அறையைக் குறுக்கும் நெடுக்குமாக அளந்து கொண்டிருந்தான். அந்நேரம் மாடிப்படியில் கொலுசொலியும், வளையோசையும் கேட்க , அவனது மனது காயங்களை விசிறிவிட ஆரம்பித்தது.கோர்ட் வளாகத்தில் கேட்ட மனிதர்களின் கலவையான குரல்களும், சுற்றுப்புறத்தில் எழுந்த ஓசையும் அவனது நினைவை மீட்டது.கண்கள் தன்னை அறியாமல் ஸ்ருதியைத் தேட, அங்கே அவனது குடும்ப உறுப்பினர்கள் அவளிடம் அன்புடன் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு இதழ்கள் புன்னகையைப் பூசிக் கொண்டது.“உலகத்துலேயே உன் குடும்பம்தாண்டா வித்தியாசமான குடும்பம். மருமகளுக்குச் சப்போர்ட் பண்ணிட்டு, பெத்த புள்ளையைக் கூடக் கண்டுக்காம இருக்காங்க” என்றான் மதி.“தப்பு என் மேலதானே..அதுதான் அவளுக்குச் சப்போர்ட் பண்றாங்க.”“அதுசரி! உன்னை நம்பி நான் கேசை ஒத்துக்கிட்டேன் பாரு! என்னைச் சொல்லணும்.”“விடுடா..விடுடா..உனக்கு எப்போவாவது தானே கேசே கிடைக்குது. அதனால தான் போனாபோகுதுன்னு கொடுத்தேன்.”அவன் பக்கம் திரும்பிய மதி “உன்னை இப்படிப் பார்க்க ரொம்பச் சந்தோஷமா இருக்குடா. நடந்ததிலிருந்து நீ வெளிவர போறதே இல்லைன்னு நினைச்சேன்டா. ஆமாம், எப்படி இந்தத் திடீர் மாற்றம்?”அவனது கேள்விக்கு விடையளிக்காமல், புன்னகையை மட்டும் தந்தவன் “அம்மாவுக்கு இப்போ எதுவும் தெரிய வேண்டாம் மதி. முதலில் நான் அவளைக் கரெக்ட் பண்ணனும்.”“ஹாஹா..டேய்..டேய்..அவங்க உன் வைப்டா. என்னவோ லவ் பண்ற பெண்ணைச் சொல்ற மாதிரி கரெக்ட் பண்ணனும்னு சொல்ற.”“ உண்மைதான் மதி. இனிதான், லவ் பண்ணப் போறேன். ஜட்ஜ்கிட்ட பேசிட்டே இல்ல. ஒன்னும் ப்ராப்லம் வராதில்லை.”“அவங்களுக்கு நீ மனசை மாத்திக்கிட்டது சந்தோஷம்தான். தினம்தினம் பல விவாகரத்து வழக்குகளைப் பார்க்கிறவங்களுக்கு ஒருத்தராவது மனம் மாறி சேர்ந்து வாழ்ந்தால் நல்லதுன்னு நினைக்கிறாங்க. அதுக்காக அவங்க தீர்ப்பை தள்ளி போடவும் தயாரா இருக்காங்க.”“தேங்க்ஸ்டா மச்சி! என்னோட முதல் குழந்தைக்கு உன் பேரை வைக்கிறேன்.”“அடபாவி! ஓகே..ஓகே..நான் அப்படியே கழண்டுக்கிறேன்.நீ போய்ப் பொண்டாட்டிக்கு ரூட் போடும் வேலையைச் செவ்வனே தொடரு மகனே.”

தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் ஸ்ருதியின் பார்வை அவனையே சுற்றி வந்து கொண்டிருந்தது. மதியிடம் அவன் பேசி சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தவளுக்கு, தன்னுடன் இருந்த நாட்களில் ஒரு நாளாவது இப்படிச் சிரிச்சு இருப்பானா? எந்த நேரமும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரியே சுத்திட்டு இருப்பானே என்றெண்ணினாள்.

அவளுடைய நினைவுகள் தாங்கள் துபாயில் இருந்த நாட்களை நோக்கி ஓடியது.
 
Need a gift idea? How about a tea mug?
Buy it!