அத்தியாயம் - 3

rajeswari sivakumar

Moderator
Staff member
Mar 26, 2018
219
44
43
இதயம் – 3
அன்று செய்ய வேண்டிய வீட்டு பாடங்களை சீக்கிரமாக முடித்த ரோஷ்னி அடுத்து என்ன செய்வது என சுற்றும் முற்றும் பார்த்தாள்.தினமும்ஒரு மணி நேரம் மட்டுமே டிவி பார்க்க இவளை நிலா அனுமதிப்பாள்.அதில் முதல் அரைமணியை பள்ளியில் இருந்து வந்ததும் முடித்தாகிவிட்டது. அடுத்தது, இவள் வழக்கமாக பார்க்கும் கார்ட்டூன் வருவதற்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது. இப்போது என்ன செய்வது... என யோசித்தவள், அன்னையிடம் சென்றாள்.
ஹாலில் அமர்ந்து கதிர் டிவியில் செய்தி சேனலை பார்த்துக் கொண்டிருக்க, நிலா அங்கிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து இரவு உணவிற்கு சட்னி அரைக்க புதினாவை கிள்ளிக் கொண்டிருந்தாள். அவளின் அருகில் சென்ற ரோஷ்னி,
“ம்மா... மதி-க்காக்கு இன்னைக்கு என்ன ஷிஃப்ட்?” என மெதுவாக கேட்டாள்.
அவள் என்னதான் மெதுவாக கேட்டாலும் அது கதிரின் காதிலும் விழ, அவனுக்கு மகள் எதற்கு இப்போது இதை கேட்கிறாள் என்பது புரிந்ததால் உதட்டில் புன்னகை மலர்ந்தது. ’கேடி! அப்படியே அவ சின்ன அத்தை போல!’ என எண்ணியவன் அடுத்து மகள் என்ன கேட்கப் போகிறாள் என்பது தெரிந்திருந்தும் அங்கே கவனத்தை செலுத்தினான்.
“மார்னிங்-டா பாப்பா! ஏன் கேட்கிற?”
‘என் பொண்ணுக்கு இருக்கும் புத்திசாலித்தனத்தில் பாதியாவது என் பொண்டாட்டிக்கு இருந்திருக்கலாம்’ என கதிர் நினைக்க,
“இல்ல... அக்கா என்னோட பிராஜெக்ட் வார்க்கை பார்க்கனும்னு அன்னைக்கு சொன்னாங்க.நானும் அதை மேம் கிட்ட சப்மிட் பண்ணிட்டேன், அவங்க சைன் பண்ணி திரும்ப கொடுத்ததும் உங்ககிட்ட காட்டறேன்னு சொன்னேன்... இப்போ போய் அவங்ககிட்ட காட்டிட்டு வரட்டுமா? ஜஸ்ட் டென் மினிட்ஸ் ம்மா. ஓடி போய் ஓடி வந்திடுவேன்.பாவம்-ம்மா அக்கா. ரொம்ப ஆசையா பார்க்க கேட்டாங்க!” என்னவோ மதிகாகதான் என்பதை போல ஆயிரம் அபிநயங்களை கண்களையும் கைகளையும் கொண்டு காட்டினாள்.
மகளை ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கோ அப்படியே அவளை அள்ளிக்கொள்ள தோன்றியது.என்னுடைய இரத்தம்... என்னுடைய அறிவு அப்படியே இருக்கிறது என புரித்துப்போனான்.
மணாளனின் மனம் அறியாத நிலாவோ,”அவளுக்கு எதுக்கு சின்ன பசங்க ப்ராஜெக்ட்?” என அப்பாவியாய் கேட்டாள்.
‘தத்தின்னு சொன்னா மட்டும் கோபம் மூக்குக்கு மேல வரும்!’ என கதிர் நினைக்க,
“தெரியல-ம்மா! இதை காட்டிட்டு அப்படியே எதுக்குன்னு கேட்டுட்டும் வரட்டுமா?” என நைச்சியமாய் ரோஷ்னி கேட்டாள்.
இப்போது முகத்தில் முறுவல் வெளிப்படையாக பூப்பதை மறைக்க முடியாதவனோ, மனைவி அடுத்து என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிய ஆர்வமானான்.
“சரிடா! அப்பாகிட்ட சொல்லிட்டு போ! அவங்களை தொல்லை பண்ணாம சீக்கிரம் வந்துவிடனும்”
மகளின் தந்திரத்தை மனைவி அறிந்துக் கொள்வாள் என ஆவலாக எதிர்பார்த்தவன், அது இல்லாது போகவே இந்த வாண்டு கூட இவளை ஈஸியா ஏமாத்துது.இந்த லட்சணத்தில் இவளுக்கு வேலைக்கு போகனும்னு ஆசைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை! என எண்ணிக் கொண்டான்.
“அப்பா...ப்ளீஸ்...! நான் அக்காகிட்ட காட்டிட்டு பைவ் மினிட்ஸ்ல வந்திருவேன்.ப்ளீஸ்... ப்பா, போகவா?” என ரோஷ்னி கண்ணை சுருக்கி இவனிடம் அனுமதி கேட்டதும் ஒன்றும் சொல்லாமல் தலையசைத்தான்.
மகளிடம் விருப்பத்திற்கு மறுப்பு சொல்லாத போதும், தனக்கு கண்டிப்பாக இப்போது ஆயிரம் அட்வைஸ்கள் கிடைக்கும் என இவள் காத்திருந்த போது, அப்படி ஏதும் அவனிடமிருந்து வரவில்லை. கதிரின் இது போன்ற சமீபத்திய அதிசய நடவடிக்கைகள் இவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பள்ளி முடிந்து வரும் வேளையில் மதி வீட்டில் இருந்தால் அங்கு சிறிது நேரம் செலவழிப்பது ரோஷ்னிக்கு இப்போதெல்லாம் வழக்கமாகிவிட்டது. விடுமுறை நாட்களில் கூட இப்பழக்கம் தொடர்ந்தது. இவளுக்கு இணையாய் குறும்பு செய்யும் மதியையும், அவள் என்ன செய்தாலும் அனைத்தையும் விளையாட்டாய் எடுத்துக் கொள்ளும் ஆகாஷையும் இவளுக்கு மிகவும் பிடித்துப்போனது..
. அப்பார்மென்ட்களில் பெண் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தற்போது நிலவுவதால் முதலில் அவளை ஆகாஷ் வீட்டிற்க்கு அனுப்ப தயங்கினாள் வெண்ணிலா. அவளின் தயக்கத்தை சரியாக புரிந்துக்கொண்ட ஆகாஷ்,
“சிஸ்டர்! உங்க பயம் எனக்கு நல்லா புரியுது. உங்க தயக்கத்தை நான் தப்பு சொல்லமாட்டேன். ஒரு அம்மாவா நீங்க யோசிக்கறது சரிதான்.ஊரில் இருக்கும் எல்லோரும் நல்லவங்களும் இல்ல, அதே போல எல்லோரும் கெட்டவங்களும் இல்ல. நான் ஒரு நல்ல அம்மாவோட வளர்ப்பில் வளர்ந்தவன். பெண்களை மதிக்கவும், குழந்தைகளை பொக்கிஷமா பாக்கவும் எங்க அம்மா எனக்கு சொல்லி தந்திருக்காங்க. நான் ரோஷ்னியை என்னோட குழந்தையாதான் பார்ப்பேன். நீங்க வீணா எதைப்பத்தியும் யோசிக்காம என்னை நம்பி பாப்பாவ எங்க வீட்டுக்கு அனுப்பலாம்!” என வெண்ணிலாவின் கண்ணைப்பார்த்து தைரியமாக சொன்னான்.
அவனின் தெளிவான பேச்சும் நேர்மையான பார்வையும் வெண்ணிலாவை அசைத்துவிட்டது. அன்றிலிருந்து ரோஷ்னி ஆகாஷ் குடும்பத்தில் ஒரு நபராக பொருந்திப்போனாள்.நிலாவிற்க்கு மதி, மதியுக மந்திரியானாள்.எந்த ஒரு விஷயமானாலும் மதியிடம் சொல்லி அவளின் ஆலோசனை பெற்றே இவள் செயல்படுத்த தொடங்கினாள்.
இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த கதிர் முதலில் வெளியாட்களிடம் இப்படி நெருங்கி பழகவேண்டாமென நிலாவை கண்டித்தான்.எப்போதும் அவன் எதை சொன்னாலும் அப்படியே கடைப்பிடிக்கும் நிலா, மதி விசயத்தில் மட்டும் அதை செய்யவில்லை. மாறாக ஒரு நாள் இவன் இருக்கும் நேரத்தில் அவர்களை வீட்டிற்கு அழைப்பதாகவும் அவர்களை நேரில் பார்த்து பேசிவிட்டு இதையே சொன்னால் அப்படியே அதை ஏற்பதாகவும் சொன்னதை கேட்டவன், அவள் எப்போதும் இப்படி பேசியதில்லை என்பதால் அதற்கு சம்மதித்தான்.
அன்று இரண்டாவது சனிக்கிழமை.அனைவருக்கும் விடுமுறை நாள். ஆகாஷையும் மதியையும் தங்களின் வீட்டிற்கு நிலா மதிய உணவிற்கு அழைத்தாள். முதலில் வெகுவாக மறுத்தவர்கள் ரோஷ்னி வந்தே ஆகவேண்டுமென அடம் பிடிக்கவே ஒப்புக்கொண்டனர்.
இப்போது, இப்படி, இவரால்தான்... வரவேண்டும் என்ற விதி முறையெல்லாம் மாற்றத்திற்கு பொருந்தாது. அதுவும் மனதில், அதன் எண்ணத்தில் மாற்றமென்றால்... அங்கு விதி என்ற ஒன்று இல்லாது, அதன் மீறல்களே அதிகமாக இருக்கும்.
புத்தனின் வாழ்க்கை மாற்றம் ஓரிரவில் வந்தது. காந்தியின் ஆடை மாற்றம் ஒரு நிகழ்வில் வந்தது. அதே போன்றுதான் இங்கு கதிரின் உள்ளத்தில் மாற்றம் திடீரென நிகழ்ந்தது.
அழைப்பின்பேரில் வீட்டிற்கு வந்தவர்களையும் அவர்களின் நடவடிக்கைகளையும் இவன் ஆரம்பத்திலிருந்தே கவனித்துக் கொண்டு இருந்தான்.தனக்கு மிகவும் முக்கியமான இருவர் இவர்களிடம் அதிகப்படியாக பழகுவதால் இவர்களின் பின்புலம் பழக்கவழக்கம் பற்றி தெரிந்துக் கொள்வது அவசியமாகிப்போனது.
முதலில் ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தவன், சிறிது நேரத்தில் அவர்களை ரசிக்க தொடங்கிவிட்டான். ‘மேட் ஃபார் ஈச் அதர்!’ என்ற வாசகத்திற்கு இருவரும் கனகச்சிதமாய் பொருந்திப்போயினர். அவனை அறியாமலேயே ஆகாஷ் அவன் மனைவியிடம் நடந்துக்கொள்ளும் முறையை பார்த்து, இப்படி நிலாவிடம் தான் நடந்துக் கொள்கிறோமா என யோசிக்க தொடங்கினான்.
இத்தனைக்கும் ஆகாஷ் அப்படி ஒன்றும் மதியை தாங்கவில்லை.அதே நேரம் அவனின் ஒவ்வொரு செயலிலும் ‘அவள் இவனுக்கு மிகவும் முக்கியமானவள்!’ என்பதை மதிக்கு மட்டும் அல்ல, அங்கிருப்போருக்கும் அதை உணர்த்திக் கொண்டிருந்தான்.
எப்போதாவது நிலாவிடம் இப்படி நடந்துக் கொண்டிருக்கிறோமா... என ஒவ்வொன்றிலும் தன்னை பொருத்தி யோசித்தவனிடம் அவனின் உள்ளம், அதற்கு நீ அவளை காதலித்து மணந்திருக்க வேண்டும் என சொல்லியது. காதலித்து மணக்கவில்லை என்றாலும் இப்போது நான் அதைத்தான் செய்துக் கொண்டிருக்கிறேன்... என மனதிற்கு பட்டென்று பதிலளித்தவனுக்கு அந்த பதில் அவ்வளவு ஆச்சரியத்தை அளித்தது.
காதல் என்று சொன்னாலே அதற்கெல்லாம் என்னிடம் நேரம் இல்லை! என்று இளவயது முதல் சொல்லிக் கொண்டு திரிந்தவன், இப்போது போய் இப்படி நினைக்கிறேனே... என வெட்கப்பட்டான். திடீரென தன்னிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் அவனுக்கு அதிசயமாக இருந்த அதே நேரத்தில் ஆனந்தமாகவும் இருந்தது.
ஆகாஷை போல மனைவியின் மேல் நானும்தான் அதிகப்படியாக அன்பும் பாசமும் வைத்திருக்கிறேன், ஆனால் அவனை போல நான் அதை அவளிடம் கூட வெளிப்படுத்தவில்லை. இது தெரிந்தே... வேண்டும் என்று செய்த தவறில்லை. தெரியாமல் செய்தது. அதுவும் இப்போது அவனுக்கு புரிந்துவிட்டது.இனி...
நிலா யாரிடமும் முகம் திருப்பியோ சுனங்கியோ இத்தனை ஆண்டுகளில் இவன் பார்த்ததில்லை.எப்போதும் சிரித்தமுகமாக இருப்பாள்.ஆனால் எப்போதும் இருக்கும் சிரிப்பிற்கும் இப்போது இவர்களோடு இருக்கும் போது சிரிக்கும் சிரிப்பிற்கும் நிறைய வேறுபாடு இவனுக்கு தெரிந்தது. இதுவரை இப்படி எல்லாம் யோசிக்க இவனுக்கு தோன்றியதில்லை.இப்போது ஏன் இப்படி எல்லாம் நினைக்கிறான் என்பதும் புரியவில்லை.
ஆகாஷை பார்க்கும் போதெல்லாம் மதியின் முகத்தில் வரும் அந்த ஒளியை இவனை பார்க்கும் போதெல்லாம் நிலாவின் முகத்திலும் காண பேராவல் கொண்டான்.ஐம்பதிலும் ஆசைவரும் என்பதற்கேற்ப இவனுக்கு நாற்பதில் பேராசை முளைத்திருக்கிறது!
அன்றிலிருந்து அவன் அப்படியே தலை கீழாக மாறி. நிலாவை தலையில் தாங்கினான் என்று சொல்வதற்கு இல்லையென்றாலும்,அவனின் எண்ணங்களில் மாற்றம் வரத்தொடங்கியது. அது அவ்வப்போது அவனின் நடவடிக்கைகளில் பிரதிபலித்தது.
சிறு வயதிலிருந்தே இவனும் சரி, இவனின் குடும்பதாரும் சரி ஒன்றாக கூடி கேலியும் கிண்டலுமாக பேசி சிரித்ததில்லை. அன்னையும் தந்தையும் அருகருகே நின்று பேசி சிரித்து பார்த்ததாக இவனுக்கு நியாபகம் இல்லை.ஆண் பிள்ளைகளான இவனிடமும் இவன் அண்ணனிடமும், சகோதரிகள் கல்யாணத்திற்கு பிறகு அது வேண்டும் இது வேண்டும் என்று உரிமையாய் கேட்பார்களே ஒழிய, அதற்கு முன் நண்பர்களை போல பழகியதில்லை. இதனால் இவனுக்கு மனைவியிடம் மனம் விட்டு சாதரணமாக பழக தெரியவில்லையே தவிர அப்படியெல்லாம் நடந்துக்கொள்ள ஆசையே இல்லை என்று சொல்ல முடியாது.
முதலில் எல்லாம் வீட்டிற்கு வந்தால் அவன் உண்டு அவன் செய்தி சேனல் உண்டு என இருப்பான். இல்லையென்றால் படுக்கையில் ஓய்வெடுப்பான்.ஆனால் இப்போது மனைவியும் மகளும் இருக்கும் இடத்தில் தன்னுடைய இருப்பை மாற்றிக் கொண்டான்.அவர்கள் அறியாது அவர்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். கணவனின் இந்த மாற்றத்தை நிலாவும் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.
பத்தே நிமிடத்தில் வந்துவிடுகிறேன் என சொல்லி சென்றவள்,வெகு நேரமாகியும் வராது போக, கதிர் தங்களிடம் சகஜமாக இருக்க தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் போய் ரோஷ்னி இப்படி செய்கிறாளே... என்ற டென்ஷனில் ஹாலுக்கும் சமயலறைக்கும் நடையாய் நடந்து கொண்டிருந்தவளை பார்த்து,”இப்ப எதுக்கு வீடுக்குள்ள வாக்கிங் போற?” என்றான்.
“இல்ல... ரோஷ்னி இதோ வந்துடுவேன்னு சொல்லிட்டு போனா... இன்னும் வரக்காணோமேன்னு..” இதற்கு என்ன மண்டகப்படி வரப்போகிறதோ என்று நினைத்து இழுத்தாள்.
“அவளோட கார்ட்டூன் ஆரம்பிக்கும் நேரத்துக்குதான் வருவா. அதுக்குதானே பக்காவா ப்ளான் பண்ணி அவ கிளம்பினா” என்றவனின் குரலும் முகமும் குறும்பில் திளைத்திருந்தது.
இதைக் கேட்டு அதிசயமாய் அவனைப் பார்த்தாள் நிலா. மகளைப்பற்றி தனக்குதான் அனைத்தும் அத்துப்படி என எண்ணி இருந்தவளுக்கு, கதிரும் மகளை அறிந்துவைத்திருக்கிறான் என்ற செய்தி மனதிற்கு இதமாய் இருந்தது.
“என்ன அப்படி பார்க்கிற? என்னமா யோசிச்சு உன்னால மறுக்க முடியாத அளவுக்கு பேசிட்டு போறா என்னோட பொண்ணு!” என கர்வமாய் சொன்னான்.
“ஆஹாங்... உங்களுக்கும் தெரியுமா...?” என மனைவி கேட்டதும் கதிருக்கு சிரிப்பு வந்தது.
“உனக்கே தெரிந்திருக்கும் போது எனக்கு தெரிவதற்கு என்ன?” என கெத்தாய் கேட்டவனை புரியாத புதிரை பார்ப்பது போல பார்த்து வைத்தாள்.
குட்டி ஏய்கிறான்னு தெரிந்தும் அவளை எப்படி அனுப்பினார்? என்னை ஏன் அதுக்கு எதுவும் சொல்லலை? ம்ம்ம்...இப்ப எல்லாம் இவர் என்ன ஒரு மார்க்கமா இருக்கார்! என்ற யோசனையில் உள்ளே திரும்பியவளை,
“பாப்பா கேடி வேலை செய்யறான்னு தெரிந்துக் கொண்டே நீ ஏன் அவகிட்ட ஒன்னும் தெரியாதமாதிரி பேசின?” என்ற கணவனின் குரல் தடுத்தது.
“அவ அவ்வளவு சமத்தா யோசித்து பேசும்போது நான் அதை இல்லன்னு சொன்னா அவளுக்கு கஷ்டமா இருக்கும்.அதனால நான் தெரிந்தைப்போல காட்டிக் கொள்ளவில்லை. அந்த நேரத்தில் அவகிட்ட புத்திசாலியா இருக்கறதை விட மக்கா இருக்கத்தான் எனக்கு பிடிச்சது. பிடிச்சவங்ககிட்ட தோற்று போறது அப்படி ஒன்னும் கஷ்டமான வேலையில்ல” என சாதாரணமாக சொல்லி சிரித்தவளை ஆழப்பார்த்தவன்,
“என்கிட்ட கூட நீ இப்படித்தான் நடந்துக்கற இல்ல” என்றான் ஒரு மாதிரி குரலில். இதற்கு என்ன பதில் சொல்வாள் இவள்!
இரவு உணவு முடிந்ததும் வெகு நேரமாக தாயும் மகளும் போனில் எதையோ பார்த்து குசுகுசுவென பேசி சிரித்துக் கொண்டிருந்ததை கவனித்த கதிர், “பாப்பா அப்படி என்ன நீயும் உங்க அம்மாவும் பேசிக்கிறீங்க?” என்றான் ஆர்வம் அடங்கா குரலில்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் புதுவிதமான கேம் ஷோ ‘வைஃப் கையில லைஃப்!’ இதைதான் அவர்கள் இவ்வளவே நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த விளையாட்டில் கணவன் மனைவி ஜோடியாகதான் பங்குகொள்ள வேண்டும். இதில் மனைவியிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவள் பதில் தெரியாமலோ அல்லது, தெரிந்தும் வேண்டுமென்றே சொல்லாமலோ போனால் கணவனுக்கு சேதாரம் எக்கசக்கம்.
அது எப்படி என்றால்...கணவன்மார்களுக்கு அவர்களின் மனைவிகளின் தவறான பதிலுக்கு வேறொருவரிடமிருந்து வித்தியாசமான தண்டனைகள் கிடைக்கும்.இதில் கொடுமை என்னவென்றால்...அவனின் மனைவி அதைப் பார்த்து ரசிப்பதுதான்!
மகள் அந்த நிகழ்ச்சியை பற்றி விவரித்த விதத்தில் அதை பார்க்க ஆர்வம் கொண்டவன் டிவியில் ஹாட் ஸ்டாரை செலக்ட் செய்து அந்த நிகழ்ச்சியை ஓடவிட்டான். அதில் பங்குபெறுபவர்களும்,கேட்கபடும் கேள்விகளும், கொடுக்கப்படும் தண்டனைகளும் சுவாரஸ்யமானதாக இருக்கவே இவர்கள் அதில் மூழ்கிப்போயினர்.
“ம்மா! இந்த ப்ரோக்ராமில் கலந்துக்கலாமான்னு மதிக்கா உங்ககிட்ட கேட்க சொன்னாங்க.நீங்க நாலு பேரும் போனா நல்லாயிருக்கும்-ம்மா!”
நிகழ்ச்சியில் மூழ்கியிருந்த நிலா மகளின் குரலில் கவனம் கலைந்தவள் அவள் சொன்னதை மனதில் வாங்கியதும், “என்னது... இதில் நாங்களா! என்ன தைரியம் அந்த மதிக்கு? எங்களை போய் இதுல கலந்துக்க கூப்பிடறா! நாளைக்கு இந்த பக்கம் வரட்டும். நல்லா நாலு சாத்து சாத்தறேன்!” என கறுவினாள்.
“ம்மா... இந்த் ப்ரோக்ராம் சூப்பரா இருக்கு. ப்ளீஸ்... கலந்துக்கங்க-ம்மா.அக்காவை நாளைக்கே டிவிக்கு மெயில் பண்ண சொல்லட்டுமா?ப்ளீஸ்... ப்ளீஸ்!” என நிலாவின் தாடையை பிடித்துக் கொண்டு செல்லமாய் கெஞ்சினாள்.
‘கொஞ்சம் அப்படி இறங்கிவரும் அவங்க அப்பாவை இவள் மறுபடியும் மரமேற்றாமல் விடமாட்டா போல இருக்கே... இந்த ஷோவில் கலந்துக்கலாமான்னு இவரை நான் கேட்டா... எனக்கு அரைடிக்கெட் எடுத்துக் கொடுத்து எங்க அம்மாவீட்டுக்கு பார்சல் பண்ணிடமாட்டாரா...!’
“அப்பாவை அடிவாங்க வைக்க அம்முக்கு அவ்வளவு ஆசையா?” என கதிர் சிரித்துக் கொண்டே ரோஷ்னியிடம் கேட்டான்.
இதற்கு என்ன சொல்வது என முதலில் திகைத்தவள், “நீங்க ஏன்-ப்பா அடிவாங்க போறீங்க? அம்மா சூப்பரா எல்லா கேள்விக்கும் ஆன்சர் பண்ணிடுவாங்க. உங்களை அம்மா அப்படியெல்லாம் விட்டுட மாட்டாங்க-ப்பா!” என சாமார்த்தியமாய் சமாளித்தாள்..
“ம்ம்ம்... அப்படியா சொல்ற! எனக்கு என்னமோ நம்பிக்கை இல்லை....” என கதிர் இழுத்ததை பார்த்த நிலா, என்னைக்குதான் இவருக்கு என்மேல நம்பிக்கை இருந்திருக்கு... என எண்ணி முகம் வாடினாள்.
அதை ஓரக்கண்ணால் பார்த்தவன், ”உங்க அம்மாக்கு எல்லா ஆன்சரும் தெரியும்.அதில் எனக்கு டவுட் இல்லை. ஆனா...எனக்கென்னவோ என்மேல இருக்கும், அது என்ன வார்த்தை... ஆஹாங்... காண்டுல உங்க அம்மா வேணும்னே ஆன்சர் சொல்லாம இருந்துடுவான்னு தோணுது” என்றான் இலகுவான குரலில்.
கதிரிடம் இப்படிப்பட்ட பேச்சுக்களை ஆசையாக எதிர்ப்பாத்திருந்த ரோஷ்னிக்கு மிகவும் குஷியாகிவிட்டது.அன்னையிடமிருந்து தந்தையிடம் ஓடியவள், ஷோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தவனின் இரண்டு கைகளையும் பிடித்து,
“இல்லப்பா... அம்மா அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க-ப்பா. நீங்க கண்டிப்பா எனக்காக பார்டிசிபேட் பண்ணுங்க-ப்பா.ப்ளீஸ்...” என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள்.
பூப்பந்தாய் குதித்துக் கொண்டிருந்த மகளை ஆவலாய் இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டவன், “உங்க அம்மாக்கு விருப்பம்னா எனக்கு ஓகே தான்டா” முகத்தில் விழுத்திருந்த முடியை ஹேர் பேண்டில் சரிசெய்துக்கொண்டே சொன்னான்.
நடக்கும் அனைத்தையும் எட்டாவது அதிசயத்தை காண்பதைபோல பார்த்துக் கொண்டிருந்த நிலாவிற்கு கண்கள் கலங்கியது.இதைத்தானே... இந்த சின்ன சின்ன பாச பரிவர்த்தனைகளைதானே இவளும் மகளும் இவனிடம் இத்தனை ஆண்டுகள் எதிர்பார்த்திருந்தனர். சிறிது காலம் கடந்து கிடைத்தாலும் பொக்கிஷத்தின் மதிப்பு உயரத்தான் செய்யுமே அன்றி குறையாது! இந்த நொடிகள் இவளுக்கு பொக்கிஷத்தைவிட பெரிதாக தோன்றியது.
மடியில் இருந்த மகளை அவ்வளவு சீக்கிரத்தில் இறக்கிவிட மனமில்லாதவன், “இந்த ஷோவை பற்றி உன்னோட ஆகாஷ் மாமா என்ன சொன்னாங்க?” எனக் கேட்டு பேச்சை வளர்த்தான்.
அதற்கு கிண்கிணியாய் சிரித்தவள்,”அவருக்கு இந்த ஷோ பற்றி தெரிந்தா வரமாட்டேன்னு அடம் பிடிப்பாராம்.அதனால மதிக்கா எதையும் சொல்லாம கூட்டிட்டு போக ப்ளான் பண்ணியிருக்காங்க!” என ரகசியமாய் சொன்னாள்.இதை கேட்ட கணவனும் மனைவியும் ஒரே நேரத்தில்,
“பாவம்... ஆகாஷ்!” என்றனர் சிரிப்பினிடையே. ரோஷ்னியும் தன் கிணிகிணியை மீண்டும் ஒருமுறை இசைத்து ஆமோதித்தாள்.
வேலைகள் அனைத்தையும் முடித்து படுக்கைக்கு வந்தவளிடம்,”உனக்கு ஆசையா இருந்தா நாமளும் அதில் கலந்துக்கலாம்” என்றவனை விழிவிரிய பார்த்தவள்,
“பாப்பாக்காக அப்ப சும்மா சொல்றீங்கன்னு நினைத்தேன். நிஜமாவா...” எனக் கேட்டாள்.
அள்ளி மொட்டாய் விரிந்திருந்த கண்களையே பார்த்தவன், ”ஆமாம். சொன்னேனே... உனக்கு ஆசையா இருந்தா போலாம். ஆனா..” என நிறுத்தியவன்,
“ஆனா...”
அவளை நெருங்கி, ”தப்பி தவறி நீ எதையாவது தப்பா சொல்லிட்டா, எனக்கு பனிஷ்மென்ட்டும் நீதான்... கொடுக்கனும்”என்றான் காந்தக்குரலில்.
கணவனின் இந்த புதிய அவதாரத்தை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் கதிரவனின் வெண்ணிலா
!