அத்தியாயம் - 29

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,862
2,051
113
அத்தியாயம் – 29

சமூக ஊடகங்கள் முழுவதிற்கும் தீனி கொடுத்தது நானாஜியின் குடும்பம். தந்தை ,மகன், மகள் என்று அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிற்க வைத்திருந்தான் சிவதாஸ். அவர்களால் தொழிலை இழந்தவர்கள் அனைவரும் முன் வந்து நடந்தவைகளை பற்றிய வாக்குமூலம் கொடுக்க, அவர்களின் தவறுகள் வெளியுலகிற்கு தெரிந்தது. தவறுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்க, இனி அவர்கள் வெளியில் வருவது கஷ்டம் என்பது புரிந்து போனது. அதோடு சட்டத்திற்கு புறம்பான காரியங்களிலும் ஈடுபட்டிருக்க, அவர்களின் சொத்தும் முடக்கப்பட்டது.

இவை எல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க சித்தார்த் தங்களது சட்டக் குழுவினரின் உதவியுடன் பிம்லாவை தொழிலில் இருந்து நீக்கி விட்டு தானே அனைத்து தொழில்களுக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டான். நீரஜ் தான் அனைத்தையும் ஏற்பாடு செய்தார். அதே நேரம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய வர்ஷினியை காயத்ரியுடன் தங்க வைக்கபட்டாள்.

தாதி தான் நல்ல நாள் பார்த்து காயத்ரியையும் சேர்த்து மாளிக்கைக்கு அழைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார். அதற்கான ஏற்பாடுகளை மும்மரமாக கவனிக்க ஆரம்பித்தார். தங்களின் அனைத்து சொந்தங்களுக்கும் அழைப்பு விடுத்தார். காயத்ரியை முறையாக அனைவருக்கும் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே அவரின் ஆசை. அவருக்கு நடந்த தவறுக்கு ஞாயம் செய்து விட வேண்டும் என்று எண்ணினார்.

அதனால் ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க தொடங்கியது. அன்று மருத்துவமனையில் பார்த்த பின் சித்தார்த் வேலைகளில் பிசியாகி போக வர்ஷூவை சென்று பார்க்க நேரமில்லாமல் போனது. ஆனால் தினமும் அவளிடம் போனில் பேசி நடப்பவற்றை அனைத்தையும் தெரிவிப்பான். இருவரும் அடுத்தவரின் அருகாமையை அதிகம் தேடினர்.

தான்யா காயத்ரியிடம் நன்றாக ஒட்டிக் கொண்டாள். அவர் மிக அமைதியானவராக இருந்தார். அவரின் இதழில் எந்நேரமும் மெல்லிய புன்னகை இழையோடிக் கொண்டிருந்தது. அதை பார்க்கும் போதேல்ல்லாம் மாமா ஏன் மயங்கினார் என்று தெரிகிறது என்று நினைத்துக் கொள்வாள். பெண்கள் இருவரையும் தன் உள்ளங்கையில் வைத்து தாங்கினார்.

தாதி அவ்வப்போது போனில் பேசி மாளிகைக்கு வருவதற்கு முன் அவர்களுக்கு தேவையானதை எல்லாம் செய்து கொள்ள சொன்னார். நீரஜ் அதற்காக ஓரிரு முறை அங்கு வந்து சென்றார். வர்ஷினியிடம் தன்னால் அவளுக்கு உதவ முடியாததற்கு மன்னிப்பு கேட்டார் நீரஜ். தான்யாவை இருவரும் தங்கள் மகள் போல பார்த்துக் கொண்டனர். அதில் வர்ஷினிக்கு அத்தனை சந்தோஷம்.

மாளிகைக்கு செல்லும் நாளும் வந்தது. நீரஜும், சித்தார்த்தும் வந்து அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றனர். அவர்களின் உறவுக்காரர்கள அனைவரும் வந்திருக்க, தாதி நீரஜையும், காயத்ரியையும் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து மாளிகையினுள் அழைத்தார். அதே போல சித்தார்த், வர்ஷிநியையும் அழைத்துச் சென்றார்கள். அனைவருக்கும் தனது மருமகளையும், அவர்களின் மருமகளையும் அறிமுகப்படுத்தி வைத்தார் தாதி.

மிகப் பெரிய அளவில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொழில் முறை உறவுகளும் அழைக்கப்பட்டிருந்தனர். தொழில் துறையை சேர்ந்தவர்கள் அனைவரும் சித்தார்த்திற்கும், நீரஜிற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இனி சுதந்திரமாக தங்களால் தொழில் செய்ய முடியும் என்பதில் அத்தனை மகிழ்ச்சி. சிவதாசும் அந்த விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்தான்.

கேஷ்வியும் அவளது பெற்றோர்களும் கூட அழைக்கப்பட்டிருந்தார்கள். அவளைப் பொறுத்தவரை சூழ்நிலை தான் தவறாக செயலபட வைத்தது.அதிலிருந்து வெளி வந்து வர்ஷினிக்கு உதவியதால் சித்தார்த்தின் குடும்பம் அவளை மன்னித்தார்கள்.

வர்ஷினி அழகிய வேலைபாடுகள் செய்யப்பட்ட லேஹங்கா உடை அணிந்திருக்க, அவளது முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியின் சாயல் அவளை மேலும் அழகியாக காட்டியது. அதுநாள் வரை வேலைப்பளுவிலும் டென்ஷனிலும் சுற்றித் திரிந்து கொண்டிருந்த சித்தார்த்தின் பார்வை அவளையே சுற்றி சுற்றி வந்தது. எங்கு திரும்பினாலும் அவளிடமே வந்து நின்றது.

வர்ஷினியும் அவனது பார்வையை உணர்ந்தே இருந்தாள். அவளது அலங்காரமும், நளினமும் அவனை பித்தாக்கியது. அவனிடம் ஏதோ பேச வந்த சிவதாஸ் அவனது பார்வையை கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு “சித்தார்த்! நீங்க பிசியா இருக்கீங்க போல. நான் அப்புறம் வரவா?” என்று கேட்டு வர்ஷ்ணியை நோக்கி கையை காட்டினான்.

அதில் சித்தார்த்தின் முகம் லேசாக சிவந்து போக அதை கண்டு முதன்முறையாக சத்தமாக சிரித்தான் சிவதாஸ்.

“இண்டரெஸ்ட்டிங்” என்றான் குறுகுறு பார்வையுடன்.

“தாஸ்” என்றான் தயக்கத்துடன்.

“என்ன மேன்? ஒரு ஆணை வெட்கப்பட வைக்க கூடியதா காதல்? ம்ம்...எனக்கு சம்மதம் இல்லாத சப்ஜெக்ட்” என்று தலையை தட்டிக் கொண்டான்.

“உங்களுக்கும் ஒரு நாள் காதல் வரும் தாஸ்”.

“நெவர்! என் வாழ்க்கையில் அதற்க்கெல்லாம் சாத்தியமில்லை”

“என்ன பேசணும் தாஸ்?” என்று அவனை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்றான்.

“உங்க நானாஜி குடும்பம் வெளியே வராத அளவிற்கு செய்ய வேண்டிய எல்லாம் செய்தாச்சு. நாம செய்ததை விட அவர்கள் செய்திருப்பதே அவர்களை வெளியே வர விடாது. அதோடு எனக்கு தமிழ்நாட்டிற்கு ட்ரான்ஸ்பார் கிடைச்சிருக்கு. ஒன் வீக்கில் கிளம்பனும்”.

“ஒ...நீங்க கிளம்புறீங்களா? இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல தாஸ். நீங்க செய்திருப்பது பெரிய உதவி” என்று கைகளைப் பற்றிக் கொண்டான்.

லேசாக தோள்களை குலுக்கியவன் “நான் எதுவும் செய்யல சித்தார்த். நீங்க உண்மையா இருந்தீங்க. அது தான் உங்களை காப்பாற்றி இருக்கு. உங்க நானாஜி மாதிரி இல்லாமல் தொழிலை நன்றாக நடத்தி மேல வாங்க. நான் கிளம்புறேன்” என்றான்.
 
  • Like
Reactions: Sumathi mathi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,862
2,051
113
“நிச்சயமா தாஸ். தமிழ்நாட்டிற்கு வந்தால் உங்களை வந்து பார்க்கிறேன்” என்று கூறி அவனை வழியனுப்பி வைத்தான்.

விருந்து முடியவும் வீட்டு மக்கள் மட்டும் தாதியின் அறையில் கூடி இருந்தனர். தாதியின் முகம் அத்தனை சந்தோஷத்தை பிரதிபலித்தது. காயத்ரியின் கைகளைப் பற்றியபடியே அமர்ந்திருந்தார். தான்யாவும், வர்ஷினியும் அருகருகே அமர்ந்திருந்தனர். சித்தார்த்திற்கு வர்ஷினியை தன்னருகே அமர்த்திக் கொள்ள ஆசை. ஆனால் அவளோ அவன் பக்கம் திரும்பாது தான்யாவிடமும், தாதியிடமும் மாறி- மாறி பேசிக் கொண்டிருந்தாள்.

அதில் சற்று கடுப்பானவன் தாதியிடம் “தாதி ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்றான்.

அனைவரும் அவன் பக்கம் பார்க்க, அவனோ அவளை கண்டு கொள்ளாது “நானும் வர்ஷூவும் ஹனிமூனுக்கு சுவிஸ் போக போறோம். நாளைக்கு கிளம்பலாம்னு இருக்கோம்” என்றான்.

தான்யாவோ அதைக் கேட்டு அக்காவின் கைகளை கிள்ள அவளோ அவன் இப்படி எல்லோரின் முன்பும் சொல்வான் என்று எதிர்பார்க்காதவள் வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டாள்.

தாதி சிரிப்புடன் ஏதோ சொல்ல வர, காயத்ரி அவசரமாக “சித்து! நான் ஒன்னு சொல்றேன். கோபப்படாம கேளு” என்றார்.

அன்னையை பார்த்தவன் “என்னம்மா?” என்றான்.

“வர்ஷூ இன்னும் படிப்பை முடிக்கல சித்து”

“அதுக்கு”

“அவள் படிப்பை முடித்ததும் நீங்க உங்க வாழ்க்கையை தொடங்குங்க. நானும் பப்பாவும் ஒரு முடிவு எடுத்திருக்கோம். நீ காதல் என்று சொல்லி அவள் படிப்பை கெடுத்து வச்சிருக்க அதனால அவள் படிப்பை முடித்ததும் எங்கே வேணும்னாலும் கூட்டிட்டு போ. அதுவரை நீ அப்பாவோட பிஸ்னெஸசை கத்துக்கோ” என்றவரை கொலைவெறியுடன் பார்த்தான்.

“மா! அதெல்லாம் சரி வராது. நாங்க வேண்டிய அளவு பிரிவை அனுபவிச்சாச்சு. இனியும் எங்களால பிரிஞ்சு இருக்க முடியாது” என்றான் கோபமாக.

அதைக் கேட்டு வர்ஷூவிற்கு சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது. தான்யாவோ சிரிப்பை அடக்கியபடி தலையை குனிந்து கொண்டாள்.

தாதி இதழில் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “பேராண்டி! இதுக்கே குதிச்சா எப்படி?” என்றார் கிண்டலாகா.

“அவனோ “யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் தாதி. நாளைக்கு நான் வர்ஷூவை தூக்கிட்டுப் போயிடுவேன்” என்றான் அழுத்தமாக.

அதுவரை அமைதியாக இருந்த நீரஜ் “சித்தார்த்! சொன்னதை கேளு. இந்த காலத்தில் படிப்பு முக்கியம். அவள் படிச்சு முடிக்கட்டும். அவள் உன் மனைவி. உன்னை விட்டு எங்கே போக போகிறாள்?” என்றார் சமாதானமாக.

யோசனையுடன் அமர்ந்திருந்தவனை கலைத்தது காயத்ரியின் குரல் “அப்புறம் சித்து வர்ஷூ படிப்பு முடிகிற வரை தாதியோட தங்கிக்கட்டும்” என்றதும் படாரென்று நாற்காலியை விட்டு எழுந்தவன் “நான் அவளோட வெளில தங்கிக்கிறேன். இது சரி வராது” என்று கூறி அவள் அருகே கைகளைப் பற்றி எழுப்பினான்.

அதைக் கண்டு சத்தமாக சிரித்த தாதி “சித்து! பொறுமை! பொறுமை! அவள் படிப்பை முடிக்க ரெண்டு வருஷம் தான் இருக்கு. அவளுக்கான நேரத்தை கொடு” என்றார்.

“யார் என்ன சொன்னாலும் அவள் என்னோடு தான் இருப்பாள். அவளை படிக்க வேண்டாம்னு சொல்லல. அதுக்கு எதுக்கு என்னிடம் இருந்து பிரிக்கிறீங்க?”

அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. வர்ஷுவோ யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. அத்தனை வெட்கம். இவன் என்ன இப்படி பேசிட்டு இருக்கான் என்று நெளிந்து கொண்டு நின்றாள்.

அவனை கரைக்க மாற்றி மாற்றி பேசினாலும் விடாபிடியாக நின்றதில் அவன் முடிவிற்கே ஒத்துக் கொண்டனர். பேசி முடித்ததும் அவளது கையைப் பற்றி அழைத்துக் கொண்டு தன்னறைக்கு சென்றான்.

அறைக்குள் சென்றதும் அவனை அடித்தவள் “என்ன பண்ணிட்டு இருக்கீங்க சித்து. எல்லோர் முன்னாடியும் இப்படி பேசி வைக்கிறீங்க. எனக்கு மானமே போச்சு”

அவளது கரங்களைப் பற்றி கொண்டவன் “என்ன பண்ணினேன் சோட்டி? அதுக்கு தான் எல்லோருமா சேர்ந்து தடா போட ட்ரை பண்ணினாங்க” என்றவனது வாயில் ஒரு போடு போட்டவள் “பேச்சை பாருங்க” என்றாள்.

அவளை தன கைவளைவில் கொண்டு வந்தவன் இறுக அணைத்துக் கொண்டு இந்த நிலைக்கு வர எத்தனை போராட்டம் எத்தனை கண்ணீர். அதிலும் உன்னுடைய இழப்பு அதிகம்-டா. ஆனாலும் நம்ம காதல் உண்மையானதா இருந்ததால ஒன்று சேர்ந்துட்டோம்”.

அவனது மார்பில் சாய்ந்தவளின் கண்ணோரம் சிறுதுளியாய் கண்ணீர். அங்கே இங்கே ஓடி இறுதியாக பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர்ந்த உணர்வு. மெல்ல நிமிர்ந்து பார்த்தவளின் நுனி மூக்கில் முத்தமொன்றை வைத்தவன் “என்ன சோட்டி?”

அவனது கரம் பற்றி அழைத்துச் சென்றவள் மேசையிலிருந்து அவன் வாங்கிக் கொடுத்திருந்த கொலுசை எடுத்து கையில் கொடுத்து “போட்டு விடுங்க” என்றாள்.

அதை கண்டதும் அவன் முகத்தில் லேசான வேதனையின் சாயல். அதை புரிந்து கொண்டவள் “போட்டு விடுங்க சித்து. ஒரு கால் போனாலும் இன்னொன்னு இருக்கு. மற்றொரு கட்டை கால் தான் நம் காதலின் சின்னம். அதில் இதை போட்டு விடுங்க”.

கலங்கிய கண்களுடன் இரு கால்களிலும் அந்த கொலுசை அணிவித்தான். மெல்ல எழுந்து கொலுசின் ஓசை வர நடந்தவள் அவனை நோக்கி கை நீட்ட, அவளது கரங்களைப் பற்றிக் கொண்டு அவளோடு அவனும் இணைந்து நடந்தான். இருவரின் மனதிலும் நீங்காத பாரமாக இருந்த வலிகள் விடை பெற்றிருக்க, நிம்மதியான வாழ்க்கையை நோக்கி அடியெடுத்து வைத்தனர்.

முன்பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே

விழுகிறதே என் உயிர் நனைகிறதே!
 
  • Like
Reactions: Sumathi mathi