Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 27 | SudhaRaviNovels

அத்தியாயம் - 27

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,951
2,683
113
அத்தியாயம் – 27

அரங்கம் முழுவதும் அப்படி ஒரு அமைதி. யாரும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. வெளியில் இருப்பவர்களுக்கு தான் தொந்திரவு கொடுத்தார்கள் என்றால் சொந்த குடும்பத்திலேயே வில்லன் வேலை பார்த்திருக்கும் அவர்களை அற்ப பிறவிகளை போல பார்த்தனர். அதே சமயம் இவற்றை எல்லாம் மனைவியாகிய பிம்லா எப்படி அனுமதித்தார் என்று அனைவரின் பார்வையும் அவரை தீண்டிச் சென்றது.

பிம்லாவோ நெருப்பின் மீது நின்று கொண்டிருந்தார். சித்தார்த் தங்கள் குடும்பத்தை பற்றி பேசியதை கேட்டு அலட்டிக் கொள்ளாமல் நின்றிருந்தவர், நீரஜ் கம்பீரமாக உள்ளே நுழைவதை கண்டதும் முதன்முறையாக அதிர்ந்து போனார்.

சாமர்த்தியமாக அனைத்தையும் நடத்திக் கொண்டதாக எண்ணி இருந்ததை இப்படி சித்தார்த் சுக்கு சுக்காக உடைப்பான் என்று எண்ணவில்லை. அதிலும் நீரஜ் முழுவதுமாக குணமடைந்து பழைய தெளிவுடன் வந்து நிற்பதை கண்டதும் தனது அத்தனை கனவுகளும் சிதைந்து போனதை அறிந்து கொண்டார்.

நீரஜின் பார்வை முழுவதும் பிம்லாவின் மீது தான் இருந்தது. அவர் முகத்தில் வந்து போகும் உணர்வுகளை அவதானித்தபடி இருந்தார்.

அப்போது ஒருவர் “நீரஜ் உங்கள் மனைவியே உங்களை கொல்வதற்கு முயன்றிருக்கிறார்கள். இதை எப்படி நீங்கள் எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள்?” என்று கேட்டார்.

அங்கிருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பிம்லாவை பார்த்து விட்டு “உங்கள் எல்லோருக்கும் ஒரு உண்மையை இங்கே நான் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்” என்று அவர் முடிக்கும் முன் அவசரமாக அவர் அருகே சென்ற பிம்லா “என்னை மன்னிச்சிடுங்க நீரு. எங்கப்பாவும், அண்ணன்களும் என்னை மிரட்டி தான் இதை செய்ய வச்சாங்க” என்றார் நீலி கண்ணீருடன்.

அவர் பேசியதை கேட்டதும் சிவதாஸின் இதழ்களில் கூட மெல்லிய புன்னகை. சித்தார்த்தோ அவரை கூர்மையாக பார்த்தபடி நின்றிருந்தான்.

“என்ன சொல்லி மிரட்டினாங்க பிம்லா? உன் உயிரை எடுத்திடுவேன்னா? அப்போ கணவன் உயிரை விட உன் உயிருக்கு மதிப்பு அதிகமில்லையா? அதனால என்னை கொல்ல ஒத்துக் கொண்டாயா?”

அங்கிருந்த அனைவருக்கும் அவரின் வார்த்தைகள் சாட்டையடியாக தோன்ற, பிமலா என்ன சொல்லப் போகிறார் என்று பார்த்தார்கள்.

“இல்ல நீரு. நம்ம பிள்ளையை கொன்று விடுவேன்னு சொன்னாங்க”.

“ஒ...தாயுள்ளம் தவிச்சு போய் என்னை கொல்ல ஒத்துகிட்டீங்க?”

“ம்ம்...” என்றார் கண்ணீருடன்.

“ஆமாம் உனக்கும் அவனுக்கும் என்ன சம்மந்தம்? அவன் என் பிள்ளை. நீ எதுக்கு அவனுடைய உயிரை காப்பாற்ற என்னை பலி கொடுக்க நினைச்ச?”

அவர்களின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த அனைவரும் அவரின் கேள்வியில் அதிர்ந்து நீரஜை பார்க்க, “இவங்க என்னுடைய ரெண்டாவது மனைவி. என் காதலை ஏற்றுக் கொள்ள முடியாமல் என் முதல் மனைவியை ஒதுக்கி வச்சிட்டு இவங்களை என் மனைவியாக்கினார். சொல்லப் போனா ஒரு தொழில்முறை ஒப்பந்தம் போல. சித்தார்த்திற்கும் நடந்தது இது தான். என் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை தான் சித்தார்த்” என்று அனைவரின் முன்பும் அத்தனை நாள் பாதுகாத்து வந்த உண்மையை போட்டு உடைத்தார்.

அவர் சொன்னதும் பாய்ந்து அவரது சட்டையைப் பற்றி உலுக்கி “பொய் சொல்லாதே! யாரும் நம்பாதீங்க! இவருக்கு நான் மட்டுமே மனைவி” என்று கத்தினார்.

அனைவரின் மனதிலும் நினைத்தேன் என்கிற வார்த்தை எழ, ஒரு சிலர் வாயை திறந்து அதை சொல்லவும் செய்தனர். நானாஜி மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அவமானப்பட்டு நின்றது வெறியை கூட்டியது. அதிலும் தினு ஆத்திரமடைந்து நீரஜை நோக்கி பாய, அவனை அலேக்காக பற்றி தூக்கி தன கைப் பிடியில் வைத்துக் கொண்ட சிவதாஸ் “துள்ளாதே! உள்ளே கொண்டு வச்சு அக்குவேறு ஆணி வேறா பிரிச்சிருவேன்” என்றான்.

அப்படியும் அடங்காமல் “யாரை பார்த்து என்ன பேசிட்டு இருக்கீங்க?’ என்று கத்தினான்.

சித்தார்த்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு தினுவின் மூக்கில் ஓங்கி குத்தி இருந்தான். அதில் முகமெங்கும் ரத்தம் வழிய, மடங்கி அமர்ந்தவனை பிடித்து தூக்கி நிறுத்தி “இங்கே எல்லாம் பேசி முடிக்கும் வரை சத்தம் வரக் கூடாது” என்றான் மிரட்டலாக.

பிம்லாவோ சமூகத்தின் முன்பு தனது அங்கீகாரம் பறி போனதை எண்ணி ஆங்காரத்துடன் சித்தார்த்திடம் “உன்னை பெத்தது வேணா அவளா இருக்கலாம். பாலூட்டி வளர்த்தது நான். அந்த பாசம் கொஞ்சம் கூட உன் மனசுல இல்லையா?” என்றார் கோபமாக.

“அந்த பாசம் உங்களுக்கு இருந்ததா? உங்களுக்கு யாரிடமும் அன்பு இல்லை. நீங்கள் ஒரு சுயநலவாதி. சமூகத்தில் நீரஜ் மல்ஹோத்ராவின் மனைவி என்கிற அந்தஸ்து வேண்டும் என்பதற்காக அவரை மணந்து கொண்டீர்கள். அவருக்கு எத்தனை மனைவி இருந்திருந்தாலும் உங்களை அது பாதித்திருக்காது. உங்களுக்கு வேண்டியது அவருடைய தொழில், அதன் மூலியம் கிடைக்கும் மரியாதை. பாசம் அன்பு என்று ஒன்று இருந்திருந்தால் வர்ஷினியின் பெற்றோரை கொலை செய்திருப்பீர்களா?” என்று அடுத்த குண்டை போட்டான்.

அதைக் கேட்டதும் முகம் மாறிப் போனது பிம்லாவிற்கு. தனது அனைத்து பிம்பங்களும் உடைந்து கொண்டிருப்பதை உணர்ந்தார்.

சித்தார்த்தின் கைகளைப் பற்றிக் கொண்டவர் “உனக்குமா என்னுடைய நிலை புரியல? எங்கேயும் என் உணர்வுகளுக்கான மரியாதை அளிக்கப்படல. அவங்க அவங்க சுயநலத்திற்காக என்னை உபயோகப்படுகிட்டாங்க. இங்கே பாதிக்கப்பட்டது நான் மட்டுமே”.
 
  • Like
Reactions: Sumathi mathi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,951
2,683
113
“அத்தனை பாதிக்கப்பட்ட நீங்க என்ன செய்திருக்கணும்? பப்பா கிட்ட மனதை திறந்து பேசி இருக்கணும். உதாசீனத்தின் வலி என்னன்னு தெரிஞ்ச உங்களுக்கு அன்பின் வழி என்னனு தெரியாம போனது தான் கொடுமை. நான் உங்கள் மீது திணிக்கப்பட்டவனாகவே இருக்கட்டும். பெற்ற தாயாக இருந்திருந்தால் நிச்சயமாக என்னுடைய மனதை, அன்பை புரிஞ்சுகிட்டு இருந்திருப்பாங்க. ஆனா நீங்க எதையுமே செய்ய தயாராக இல்லையே?”

“எல்லோருக்காகவும் நான் ஏன் பார்க்கணும்? அப்படி பார்த்து பார்த்து தான் என் வாழ்க்கை இப்படி அந்தரத்தில் தொங்குகிறது”.

“தப்பு! இது நீங்களா உருவாக்கிக் கொண்ட ஒன்று. அந்தஸ்த்தும், சொத்தும் மட்டுமே வாழ்க்கைன்னு நினைத்த உங்களுக்கு அன்பை கொடுக்க தெரியல. எல்லோர் மீதும் பழி வெறியை மட்டும் வளர்த்துக் கொண்டீங்க. கொலை செய்யும அளவிற்கு உங்களை கொண்டு சென்று இருக்கிறது அது”.

“ஆமாம்! நான் தான் நீரஜை கொலை செய்யவும், உன்னுடைய வர்ஷினியை கொலை செய்யவும் ஆள் அனுப்பினேன். எனக்கு கிடைக்காத எதுவும் யாருக்கும் கிடைக்க கூடாது. நான் மட்டும் யாரையோ காதலித்த ஒருவனுக்கு மனைவியா, கடைமைக்காக வாழ்ந்து அவன் பிள்ளைக்கு பாலூட்டி வளர்க்கும் ஆயாவாக வாழனும். நீங்கள் எல்லாம் சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அனுபவிப்பீங்க” என்று ஆத்திரமாக கத்தினார்.

அவரின் முகத்தில் தெரிந்த கோபத்தை பார்த்தவன் திரும்பி சிவதாசை பார்க்க, அவன் தலையசைத்து விட்டு போனை எடுத்து வெளியே காத்துக் கொண்டிருந்த போலீசாரை வரவழைத்தான்.

அவர்கள் வந்து நானாஜி, தினு, தேவ் மற்றும் பிம்லாவை கைது செய்து அழைத்துச் செல்லும் நேரம் “ஒரு நிமிஷம்! எல்லாவற்றையும் தெரிந்து கொண்டவங்க இதையும் பார்த்திட்டு போங்க” என்றவன் தன் கையிலிருந்த மொபைலில் இருந்து ஒரு வீடியோவை ஓட விட்டான். அதில் அவனது அன்னை காயத்ரி பேசினார்.

“வணக்கம் பிம்லா! முதலில் மன்னிப்பு கேட்டுக்கிறேன். உங்கள் வாழ்க்கையின் குறுக்கே வந்ததற்கு. நீங்கள் நீரஜின் வாழ்வில் வருவதற்கு முன்பே அவர் என்னை காதலித்தார். மாமாவின் மறுப்பினால் எங்கள் திருமணம் ஊரறிய நடைபெறாமல் போனது. உங்களை இர்ண்டாவதாக திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. அதற்காக நான் வருந்துகிறேன் பிம்லா. என்னால் உங்கள் மனதில் பல சஞ்சலங்களை அடைந்திருப்பீர்கள். அதற்காக என்னை மன்னிக்கவும். அதோடு என் மகனை உங்கள் மகனாக இத்தனை வருடங்களாக வளர்த்ததற்கு எத்தனை நன்றி சொன்னாலும் தீராது. நாம் இருவருமே சூழ்நிலைக் கைதிகள் தான். இருவருமே ஒரு ஆதார சுருதியை நம்பி இணைத்தவர்கள். உங்களுக்காவது அவரின் அருகாமை தொடர்ந்து கிடைத்தது ஆனால் நானோ தலைமறைவாக வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். இதில் யாரை குறை சொல்வது. எல்லாம் விதியின் செயல். என் மகன், மருமகள் வாழ்க்கையாவது நம் வாழ்க்கையை போல் அல்லாது நன்றாக அமைய வேண்டும். எல்லாவற்றிற்கும் என்னை மன்னித்து விடுங்கள்” என்று பேசி முடிக்கவும் பிம்லாவின் மனம் தன்னையே காறி துப்பியது.

தான் இத்தனை வேலைகள் செய்தும் அதை எதையுமே காட்டிக் கொள்ளாது மிக அமைதியாக பேசி முடித்த அவள் எங்கே? கணவனையே கொலை செய்ய முயன்ற தான் எங்கே? என்று எண்ணியவர் எதுவும் பேசாமல் அமைதியாக தலையை குனிந்தபடி போலீஸ்காரர்களுடன் நடந்தார்.

நானாஜியோ மெல்ல நாற்காலியை உருட்டிக் கொண்டே வந்தவர் சித்தார்த்தின் அருகே சென்று அவனது கைகளைப் பற்றி குனிய செய்து “நினைத்ததை சாதிச்சிட்ட இல்ல? ஆனா எங்களை கூண்டில் ஏற்றுவது பெரிது இல்லை. உன்னுடைய காதலுக்கு சமாதி கட்டிட்டு தான் இதை நீ செய்திருக்க” என்றார் மெல்லிய குரலில்.

அதைக் கேட்டதும் உள்ளுக்குள் பதறினாலும் அதை வெளிக் காட்டாது “நான் பார்த்துக்கிறேன் அதெல்லாம்” என்றான்.

அவரின் இதழில் வக்கிரமான சிரிப்பு எழ, “ம்ம்...பாரு- பாரு” என்று கூறிவிட்டு நகர்ந்தார்.

அவர்களை கவனித்துக் கொண்டிருந்த சிவதாஸ் “என்ன சொல்லிட்டுப் போறான் கிழவன்?” என்று வந்து நின்றான்.

அதற்குள் தனது மொபைலை எடுத்து வர்ஷிணியின் காவலுக்கு வைத்திருந்த ஆட்களுக்கு அழைத்தவன் அவர்கள் பத்திரமாக இருப்பதை கேட்டு அறிந்து கொண்டான்.

சிவதாசிடம் நானாஜி பேசியதை கூற, “அப்படியா சொல்றான்? அப்போ நிச்சயமா எங்கேயோ எதுவோ தவறா இருக்கு சித்தார்த்” என்று தாடையை தடவியவன் “கேஷ்வி எங்கே இருக்கா?” என்றான்.

“அவ வர்ஷூவோட தான் இருக்கா. ஏன்?”

வேகமாக தலையை அசைத்தவன் “அவளை அங்கே எப்படி விட்டு வச்ச சித்தார்த். அவ இவங்க ஆள்” என்றவன் வேக நடையுடன் “வா போகலாம்” என்று ஜீப் நோக்கி ஓடினான்.

“அவளை சந்தேகப்படுரியா தாஸ்? நிச்சயமா அவள் இவங்களை மாதிரி இல்ல” என்றபடி அவனை பின்தொடர்ந்தான்.

“பார்ப்போம்! சீக்கிரம் ஏறு” என்றவன் வேகமாக வண்டியை எடுத்தான்.

ஜீப் சீறிக் கொண்டு பாய, அன்றைய ஊடகங்கள் முழுவதிலும் நீரஜ் மல்ஹோத்ராவின் குடும்ப கதையும், நானாஜியின் ஏமாற்று வேலைகளை பற்றி தான் பேச்சாக இருந்தது. தொழில் வட்டாரத்தில் தீப்பற்றி எரிந்தது. தாதி அனைத்தையும் டிவியில் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார். வெகுநாட்களுக்குப் பிறகு அவரின் முகத்தில் நிம்மதி வந்திருந்தது. கணவர் செய்த தவறை சரி செய்வதற்கு முயன்று தோற்றுக் கொண்டிருந்தவர், பேரனால் அது நிறைவேறியதை எண்ணி அமைதியாக அமர்ந்திருந்தார்.

ஆரம்ப காலங்களில் பிம்லாவின் மீது அவருக்கு பரிதாபமும் அன்பும் இருந்தது. ஆனால் நாளைடைவில் அவளின் நடத்தையில் தோன்றிய மாறுதல்கள் அவரை பிம்லாவிடம் இருந்து ஒதுக்கி வைத்தது. எப்படியாவது பிம்லாவின் வாழ்க்கைக்கு நியாயம் செய்து விட வேண்டும் என்று தான் எண்ணினார். ஆனால் பிம்லாவிற்கு வாழ்க்கையை விட, நீரஜை விட அந்த மாளிகையின் அந்தஸ்து, அதிகாரத்தின் மீது தான் ஆவல் என்பதை உணர்ந்து கொண்டதும் ஒதுங்கி விட்டார்.

தன் கணவரின் மீது தாதிக்கு தீராத கோபம் இருந்தது. இரு பெண்களின் வாழ்க்கையோடு விளையாடி விட்டார். அதோடு மட்டும் இல்லாமல் சித்தார்த்தை தாயிடம் இருந்து பிரித்து பிம்லாவிடம் கொடுத்தது மிகப் பெரிய பாவம் என்றே எண்ணினார். அவன் தன் மகனில்லை என்று தெரிந்த நாளில் அவர் ஆடிய ஆட்டத்தைக் கண்டு அமைதியாகவே இருந்தார். அதுவொரு தாயின் குமுறல் என்றே பொறுத்துக் கொண்டார்.

அதோடு தாதாஜி இருக்கும் வரை சித்தார்த்தை காயத்திரியின் கண்களில் படாமலே வைத்திருந்தார். எக்காரணம் கொண்டும் காயத்ரி இந்த மாளிக்கைக்கு வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதை எல்லாம் நினைத்து தாதி பல நாட்கள் உறங்காமல் தவித்திருக்கிறார்.

காயதிரியிடம் பேசவோ, அவளை நெருங்கவோ முடியாது அவளின் நிலையை எண்ணி வேதனை அடைந்தார். இதில் ஒருமுறை காயத்ரியை பிம்லாவின் குடும்பத்தினர் துரத்துவதற்கு முயற்சி எடுத்ததை கண்டதும் தான் விழித்துக் கொண்டார். மகனிடம் முதன்முறையாக பேசி அவருக்கான பாதுகாப்பை ஏற்பாடு செய்ய சொன்னார். ஆனால் இத்தனை நடந்தும் காயத்ரி யார் மீதும் குற்றம் சொல்லாமல் நீரஜின் மேலிருந்த காதலுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டார்.

ஆனால் பிள்ளை பாசம் மட்டும் அவரை அலைக்கழித்தது. தாதாஜி இறந்த பிறகு நீரஜ் அவ்வப்போது காயத்ரியை சந்திக்க அழைத்துச் செல்வது உண்டு. அப்படியொரு சந்திப்பிற்கு பிறகு தான் பிம்லாவிற்கு உண்மை தெரிந்தது.

எப்படியோ ஓரளவிற்கு அனைத்தையும் சரி செய்து விட்டான் பேரன் என்கிற நிம்மதியோடு அவர்களின் வருகைக்காக காத்திருந்தார்.

வர்ஷினியை வைத்திருந்த இடத்திற்கு சென்று இறங்கிய இருவரும் அவசரமாக மாளிகையினுள் நுழைய, அங்கே யாருமில்லாமல் காட்சியளித்தது. பாதுகாப்பிற்கு இருந்த ஆட்கள் கூட எவரையும் காணவில்லை. வெறிச்சோடி இருந்த மாளிகையே சொன்னது வர்ஷினி அங்கில்லை என்பதை.

சித்தார்த் அதைக் கண்டு பதறி போனவன் அங்குமிங்கும் ஓடி வர்ஷினியின் பெயரை சொல்லி கத்தினான். சிவதாஸ் நிதானமாக ஒவ்வொரு அறையாக தேடிக் கொண்டு வந்தான்.

“தாஸ்! தாஸ்! நீ சொன்னது சரி தான். அந்த கேஷ்வி வேலையை காட்டிட்டா. என் வர்ஷினியை காணும்” என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டான்.

“ஷ்..சித்தார்த்! பதட்டபட்டா எதுவுமே நடக்காது. கொஞ்ச நேரம் முன்னே தானே உன் ஆட்களிடம் பேசின. அப்போ இருந்தவங்க இப்போ இல்லேன்னா நிச்சயமா ரொம்ப தூரம் போயிருக்க முடியாது” என்றவன் வேக நடையுடன் மாளிகையின் பின்பக்கம் சென்றான். அங்கு இருந்த பழைய சாமான்கள் போடும் அறையில் பாத்காப்பிற்கு இருந்த ஆட்கள் அனைவரையும் கட்டிப் போட்டுவிட்டு சென்றிருந்தார்கள்.

அவர்களை விடுவித்தவன் என்ன நடந்தது என்று கேட்டறிந்து கொண்டான். சித்தார்த்தை தன்னுடன் அழைத்து கொண்டு “டோன்ட் வொர்ரி சித்தார்த். இன்னைக்கு அவனுங்களுக்கு சங்கு தான்” என்று ஜீப்பில் ஏறினான்.

சித்தார்த்தோ “அவளை கழுத்தை நெரிச்சு கொல்லாம விட மாட்டேன்” என்றான் கண் நரம்புகள் புடைக்க.
 
  • Like
Reactions: Sumathi mathi