அத்தியாயம் - 25

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,652
1,596
113
சாரி பிரெண்ட்ஸ் தாமதமான பதிவிற்கு.............

அத்தியாயம்- 25

நிரஞ்சனின் மூலம் அறிந்து கொண்ட செய்தியில் மகிழ்ந்து போய், வீட்டிற்குள் சென்றதும் அன்னையை அணைத்து “நித்தி சம்மதம் சொல்லிட்டாம்மா” என்றான்.

அவன் சொன்னதை கேட்டு மனதிற்குள் எழுந்த வாட்டத்தை காட்டாதவாறு முகத்தை வைத்துக் கொண்டு “ரொம்ப சந்தோஷம் விச்சு” என்றார்.

அவர் கைகளை பற்றி அழைத்துக் கொண்டு சென்று சோபாவில் அமர்ந்து அவர் மடியில் தலை வைத்துக் கொண்டான். அவரது விரல்கள் அவன் தலையை வருட, கண்களை மூடிக் கொண்டவன் “அவளை சந்தோஷமா வச்சிக்கனும்மா...அவ சந்தோஷமா இருந்தா அண்ணியும், அண்ணனும் கூட நல்லாயிருப்பாங்க” என்றான்.

“நீ சந்தோஷமா இருக்க வேண்டாமா விச்சு?”

அவரது கேள்வியில் அதிர்ந்து எழுந்தவன் “என்னமா இப்படி கேட்குறீங்க? அவளை பார்த்த நிமிஷத்தில் இருந்து என் மனசுக்குள்ள வந்துட்டா...அவளுக்கு நடந்தவைகள் எல்லாம் அவளோட கடந்தகாலம்...விஸ்வாவின் மனைவியா வரப் போகிறவளுக்கு எந்த வருத்தமும் இருக்க கூடாது” என்றான் உறுதியாக.

கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டவர் “நல்லாயிருப்பா விச்சு...பாட்டி கிட்ட பேசி சீக்கிரம் நாள் குறிக்க சொல்லணும்” என்றார்.

அவர் கைகளைப் பற்றிக் கொண்டவன் “அம்மா! ஆடம்பரமா பண்ண வேண்டாம்மா. இந்த கல்யாணத்தை...சாதரணமா கோவிலில் வச்சு பண்ணிடலாம்” என்றான்.

“இல்ல விஸ்வா...நீ எதுக்கு இப்படி யோசிக்கிறன்னு புரியுது...இந்த கல்யாண சடங்கை எல்லாம் அவள் சாதரணமா தான் எடுத்துக்குவா...யோசிச்சு பாரு..அவ்வளவு பெரிய சம்பவங்களுக்கு பிறகு ஆண்கள் கூட வேலை செய்கிற அளவுக்கு அவளுக்கு தைரியம் இருக்கு...உங்களுக்குள்ள எல்லாம் சரியாகி வருங்காலத்தில் இந்த திருமண நிகழ்வை நினைச்சு பார்க்கும் போது, எதனால இப்படி சாதரணமா கல்யாணம் பண்ணினோம்னு தோணும்...ஆடம்பரமும் வேண்டாம், அதே சமயம் ரொம்ப எளிமையாகவும் பண்ண வேண்டாம்” என்றார்.

அதை கேட்டு சற்று யோசித்தவன் “ நீங்க சொல்றதும் சரி தான்” என்றான்.

நிரஞ்சன் வீட்டிலும் பாட்டி மேற்கொண்டு என்ன ஏற்பாடுகள் செய்வது என்று பேச ஆரம்பித்திருந்தார். வெளியில் சென்று வந்ததில் இருந்து கணவன் தன் பக்கம் முகம் கொடுத்து பேசவில்லை என்பதை புரிந்து கொண்ட ரேணுவின் முகத்தில் வலியின் சாயல் வந்து போனது.

நித்யா சம்மதம் சொன்ன கையோடு அலுவலகத்திற்கு கிளம்பி சென்று விட்டாள்.

ரேணுவை தவிர மற்றவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கல்யாண வேலைகளை பற்றி பேச ஆரம்பித்தனர். கணவனின் புறக்கணிப்பு வலியை ஏற்ப்படுத்த என்ன செய்வதென்று தெரியாமல் அறையின் வாயிலில் சாய்ந்து நின்றபடி அவர்கள் பேசுவதை கேட்கலானாள். அப்போது சுமதி அவளை திரும்பி பார்த்து “ஏன் ரேணு அங்க நிற்கிற, இப்படி வந்து உட்காரு” என்றார்.

அவன் அருகில் சென்று அமர, அப்போதும் அவள் பக்கமே திரும்பாமல் மற்றவர்களை பார்த்து பேசிக் கொண்டிருந்தான். பாட்டி அன்புமணிக்கு போன் செய்து அடுத்தடுத்து நடக்க வேண்டியவற்றை பேச ஆரம்பித்தார்.

தங்கையின் திருமணம் என்பதை எண்ணி மகிழ்ச்சியடைய முடியாமல். உணர்ச்சி வேகத்தில் விட்ட வார்த்தை வண்டாய் குடைய, அவர்களுடன் ஒன்ற முடியாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.திருமணம் அந்த மாதத்திலேயே ஒரு நாளில் முடிவாகி விட, நாட்கள் சரசரவென்று நகர்ந்தது. நித்யாவிடம் சம்மதம் வாங்கியதோடு வேறு எதுவும் அவளிடம் பகிர்ந்து கொள்ளாமல் மற்ற வேலைகளை குடும்பத்தினரே பார்த்துக் கொண்டனர்.

அவளும் ஆளை விட்டால் போதுமென்று இருந்து கொண்டாள். புடவை எடுப்பதிலாகட்டும், நகை வாங்குவதாகட்டும் அவள் எந்த ஆர்வமும் காட்டாது ‘உங்கள் இஷட்டதிற்கு ஏதோ ஒன்றை செய்யுங்கள்’ என்று விட்டு விட்டாள். தங்கைக்காக ரேணு தான் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தாள். பத்து நாட்கள் கடந்த நிலையிலும் நிரஞ்சன் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாது புறக்கணித்துக் கொண்டே இருந்தான். தனது வார்த்தையில் அவன் எத்தனை காயப்பட்டிருப்பான் என்று புரிந்து கொண்டாலும், அதையும் மீறி அவளது மனம் வலிக்கத் தான் செய்தது. திருமணம் நன்றாக முடியட்டும் அவனை சமாதனப்படுத்துவோம் என்றெண்ணி அமைதியாக இருந்தாள்.

விஸ்வாவின் வீட்டிலோ நித்யா காட்டாத ஆர்வத்தை எல்லாம் விஸ்வாவே சேர்த்து காட்டினான். அவளுக்கு எந்த குறையும் வந்துவிட கூடாதென்பதில் மிகவும் கவனமாக நடந்து கொண்டான். சுந்தரோ அவனது நடவடிக்கையை கண்டு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நடமாடினான். ரஞ்சிதம் அவனிடம் பேசி சமாதானப்படுத்தி வைத்திருந்தாலும், விஸ்வா மீது செம கடுப்பில் இருந்தான். அதிலும் சிவா அவனோடு சேர்ந்து செய்யும் ஆர்ப்பாட்டத்தை எல்லாம் கண்டு மிகவும் எரிச்சலடைந்தான்.

இருதரப்பும் தங்களது நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருந்தனர். விஸ்வா தனது இசைக் குழுவினரையும், ஒரு சில வெளி நண்பர்களையும் அழைத்தான். நித்யாவோ ரம்யாவை மட்டும் அழைத்துவிட்டு பேசாமல் இருந்தாள். பின்னர் ரேணுவும்,ரம்யாவும் சேர்ந்து ஆபிசில் உள்ள மற்றவர்களை அழைக்காமல் இருந்தால் நன்றாக இருக்காது என்று எடுத்துக் கூறி அழைத்தனர்.

விஸ்வா எதிர்பார்த்த அந்த அழகான நாளும் விடிந்தது. நகரத்தின் புறநகர் பகுதியில் இருந்த ஒரு மணடபத்தில் நாதஸ்வர இசையுடன் மங்களகரமாக விடிந்தது. காலை ஆறரை மணிக்கு பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளையாக அமர்ந்து ஐயர் கூறிய மந்திரங்களை கூறிக் கொண்டிருந்தான் விஸ்வா.
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,652
1,596
113
மணமகள் அறையில் மணப்பெண் அலங்காரத்துடன் அமர்ந்திருந்த நித்யாவின் மனம் ‘எதற்கு இந்த விபரீத விளையாட்டு? உன்னால் அவனுடன் வாழ முடியுமா? அலுவலகத்தில் ஆண்களுடன் பழகுவது வேறு...கணவன் என்பவனுடன் ஒரே அறையில் எப்படி இருக்கப் போகிறாய்?’ என்று பயமுறுத்தியது. அவளது நெஞ்சத்தில் ஓடிய எண்ணங்கள் முகத்தில் பிரதிபலிக்க, கண்கள் கலங்க ரேணுவை பார்த்தாள்.

அவளது மன நிலையை உணர்ந்து கொண்டவள்...அங்கிருந்தவர்களை வெளியேறும்படி கூறிவிட்டு தங்கையின் அருகில் அமர்ந்து அவள் கைகளை பிடித்துக் கொண்டு “நித்தி! என்னை பாருடா...மனசை போட்டு குழப்பிக்காதே...அமைதியா இரு! விஸ்வா ரொம்ப நல்லவர்...உன்னோட உணர்வுகளை நிச்சயம் புரிஞ்சுக்குவார்...உன் மேல அதிகமா பாசம் வச்சிருக்கார்” என்றாள் சிறு குழந்தைக்கு சொல்வது போல...

அவளோ கன்னங்களில் வழிந்த கண்ணீருடன் “பயமா இருக்கு-கா...எனக்கு ரொம்ப பயமா இருக்கு-கா” என்றவளை தன்னுடன் இழுத்தணைத்துக் கொண்டு “இல்ல-டா...பயப்படாதே...நிச்சயம் விஸ்வா உன்னை நல்லா பார்த்துக்குவார்” என்று கூறி அவளது கண்ணீரை துடைத்து விட்டு அலங்காரத்தை சரி செய்தாள்.

அந்நேரம் பெண்ணை அழைப்பதாக சொல்லி கதவை தட்ட, அவசரமாக அவளது அலங்காரத்தை சரி பார்த்துவிட்டுச் சென்று கதவை திறந்தாள். நித்யாவின் கையை அவள் ஒருபுறம் பற்றிக் கொள்ள, விஸ்வாவின் சொந்தக்கார பெண் மற்றொரு புறம் பற்றிக் கொள்ள, மணவறையை நோக்கி நடந்தாள் நித்யா. அதுநாள் வரை தன்னை தைரியமாக காட்டிக் கொண்டு, திமிராக இருப்பது போல் நடித்துக் கொண்டிருந்தவளின் கால் தடுமாறியது. ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க தயங்கியது. இந்த கல்யாணம் வேண்டாம் என்று ஓடி விடலாமா? என்றும் நினைத்தாள்.

ஐயர் கூறிய மந்திரங்களையும், சடங்குகளையும் செய்து கொண்டிருந்த விஸ்வா, நிமிர்ந்து தன்னவளின் வருகையை கண்டான். அவன் அவளது அலங்காரத்தை பார்க்காமல் அவளது முகத்தை ஆராய்ந்தான். அதில் தெரிந்த கலக்கத்தை கண்டு கொண்டான். அவளது நிலையை உணர்ந்து கொண்டான். இவளது இந்த நிலைமைக்கு காரணமானவர்களை கண்டம் துண்டமாக வெட்டிப் போடும் ஆத்திரம் எழுந்தது.

நித்யா அவன் அருகில் அமரும் வரை அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. அவளது மனதை சரி செய்துவிடும் எண்ணத்துடன் தன்னை மறந்து மாலைகளுக்கிடையில் இருந்த கையைப் பற்றினான். அவன் கை பட்டதும் ஷாக் அடித்தார் போல் உதறியவள், அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள். அப்போது தான் அவளது மனநிலை ஞாபகம் வர, மெல்ல வாயசைத்து சாரி என்றான்.

அவளோ அவனிடமிருந்து நகர்ந்து தள்ளி அமர்ந்து கொண்டாள். விஸ்வாவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ரஞ்சிதம், நடந்தவற்றை கவனித்து விட்டு...விஸ்வாவின் மாலையை சரி செய்வது போல் குனிந்து “விச்சு! அவ இப்போ அப்படி தான் இருப்பா...நீ சமாதானப்படுத்துறேன்னு எதையாவது செஞ்சு வைக்கப் போய் நிலைமை மோசமாகிட போகுது...பேசாம அமைதியா இரு” என்று கூறினார்.

அவர் சொன்னதை ஒத்துக் கொண்டவன், அதன் பிறகு அவள் பக்கமே திரும்பாது ஐயர் சொன்னவற்றை செய்தான். முஹுர்த்த நேரம் நெருங்க, மண்டபத்தில் இருந்தவர்கள் திருமாங்கல்யத்தை ஆசிர்வதித்துக் கொடுக்க, ஐயர் எடுத்துக் கொடுத்ததும் அவளது கழுத்தில் கட்ட செல்லும் போது, ரஞ்சிதம் வேகமாக நகர்ந்து அவள் அருகில் சென்று நின்று கொண்டார். அவன் தாலியை கட்டும் போது ரேணு ஒருபுறமும், ரஞ்சிதம் ஒருபுறம் அவளை அணைத்தார் போன்று நின்று அவளை பிடித்திருந்தனர்.

அவளது உடல் விறைத்துக் கொண்டிருந்தது. தன்னருகில் வந்து கழுத்தில் அவன் தாலியை கட்ட ஆரம்பித்ததும் இறுகிய உடல், அவன் நகர்ந்ததும் தான் இயல்புக்கு வந்தது.

குனிந்திருந்தவளின் பார்வை கழுத்தில் கிடந்த திருமாங்கல்யத்தின் மீது விழுந்தது. அவளை அறியாமலே கண்ணீர் வழிந்து அதன் மீது விழுந்தது. அவளது நிலையை உணர்ந்தவனோ யாரையும் கவனிக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். விஸ்வாவின் மனம் தவித்தது....கூட்டத்திலிருந்து விலக்கி அவளை தனியே அழைத்துச் சென்று சமாதானப்படுத்த வேண்டும் என்று பரிதவித்தான்.

அதற்குள் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் வாழ்த்து கூற மேடையேற, வேறுவழியில்லாமல் அவர்களிடம் பேச ஆரம்பித்தான். நித்யா தனக்குள் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தை வெளிக்காட்டாதவாறு இருக்க போராடிக் கொண்டிருந்தாள்.

அவளது நிலையை கண்ட ரேணு மெல்ல ரஞ்சிதத்திடம் சென்று சொல்ல, அவர் ஐயரிடம் சீக்கிரம் சடங்குகளை முடித்து அவர்களை அனுப்பி வைக்கும்படி கூறினார்.

அவனுடன் சேர்ந்து செய்யும் சடங்குகளின் போதெல்லாம், அவள் உடல் விறைத்தும், நடுங்கிக் கொண்டும் இருந்தது. ஒரு மணி நேரத்தில் அனைத்தும் முடிய, நெருங்கிய சொந்தங்கள் மட்டும் குடும்பமாக நின்று போட்டோ எடுத்தனர்.

பாட்டி தன் மகளை குடும்பத்துடன் போட்டோ எடுக்க அழைக்க, அதுவரை கண்ணில்படும்படி சுற்றிக் கொண்டிருந்த நிரஞ்சன் எங்கோ சென்று விட்டான். ரேணுவிற்கு அவன் தன்னை புறகணிக்க தான் இவ்வாறு செய்கிறான் என்று புரிந்து கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

சிறிதுநேரத்தில் ரஞ்சிதம் ரேணுவை அழைத்து, நித்யாவை அறைக்கு அழைத்து செல்ல சொன்னார்.

“அத்தை...நான் இவளை மாடியிலிருக்கிற அறைக்கு கூட்டிட்டு போறேன்” என்றாள்.

அதை கேட்ட ரஞ்சிதம் “ஏம்மா...இங்கே தான் நித்தியோட திங்க்ஸ் எல்லாம் இருக்கு” என்றார் குழப்பத்துடன் கூடிய குரலில்.

அவர் அருகில் சென்று காதில் முணுமுணுத்தாள் ரேணு...அதை கேட்டு முகம் வெளிறி போக...”சரிம்மா..நீ கூட்டிட்டு போ” என்றார்.

ஒரு பொம்மை போல நின்று கொண்டிருந்தாள் நித்யா. கண்களில் கண்ணீரின் தடம், முகமோ சிவந்து காணப்பட்டது...உடலில் ஒரு நடுக்கம்...உதடுகளை அழுத்தி கடித்து அதுவும் சிவந்து போயிருந்தது.

அவளை கையைப் பிடித்து விறுவிறுவென்று அழைத்துச் செல்லும் போது, அங்கு வந்த நிரஞ்சனிடம் “பாட்டு சத்தத்தை அதிகமா வைக்க சொல்லுங்க’ என்று கூறிவிட்டு சென்றாள்.

அவள் எதற்கு அப்படி கூறி செல்கிறாள் என்று புரியாதபோதும், பாட்டு போடுபவர்களிடம் சத்தத்தை அதிகப்படுத்த சொன்னான்.

அதற்குள் திருமணம் முடிந்து சற்று நேரத்திலேயே மாப்பிள்ளை மட்டும் நிற்க, பெண் எங்கே என்று ரஞ்சிதத்தை கேட்க ஆரம்பித்தனர்.

“அவளுக்கு பிவேர் நேற்றிலிருந்து..அதுதான் ரெஸ்ட் எடுக்க அனுப்பிட்டேன்” என்று கூறி சமாளித்தார்.

மாடிக்கு சென்ற ரேணு நித்யாவை அறைக்குள் அழைத்துச் சென்று கதவை சாத்திவிட்டு “நித்தி...நித்தி” என்று அவள் கன்னம் தட்டினாள்.

அதுவரை பொம்மை போல நின்று கொண்டிருந்தவள், ரேணு கன்னத்தை தட்டவும் ‘அம்மா! எனக்கு வேண்டாமா...ஐயோ நான் என்ன செய்வேன்’ என்று கத்த ஆரம்பித்தாள்.

வெறிபிடித்தவள் போல தலையில் அடித்துக் கொண்டு அலறி அழ ஆரம்பித்தாள். கழுத்தில் போட்டிருந்த நகைகள், கையிலிருந்த வளையல்கள் என்று ஒவ்வொன்றையும் பிடுங்கி எறிந்தாள்...மடேர்-மடேரென்று தலையிலடித்துக் கொண்டு கதற ஆரம்பித்தாள்.

கதவில் சாய்ந்து நின்று கொண்டிருந்த ரேணு கன்னங்களை தாண்டி வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைக்காமல், தங்கையின் அழுகையை கண்டு மடங்கி அமர்ந்து தானும் அழ ஆரம்பித்தாள்.

ரேணுவிடம் சென்று அவளைப் பிடித்து உலுக்கி “ஏன்-கா...எனக்கு பயமா இருக்கு-கா...எனக்கு வேண்டாம்...எதுவும் வேண்டாங்கா...நான் செத்து போறேன்” என்று கீழே உருண்டு பிரண்டு அழுதாள்.

சிறிது நேரம் ஆர்பாட்டத்துடன் கூடிய அழுகை ஓய்ந்ததும் களைத்து போய் அப்படியே படுத்திருந்தாள். அதுவரை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தவள் மெல்ல எழுந்து அவளருகில் சென்று தலையை வருடி கொடுத்து “நித்தி” என்றழைத்தாள்.
 
  • Sad
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,652
1,596
113
அவளை தன்னோடு சேர்த்தணைத்து “நான் சொன்னா கேட்பயில்ல...உன்னால நல்லா வாழ முடியும்-டா...விஸ்வா என்னை மாதிரியே உன்னை பார்த்துக்குவார்” என்றவளை இடைமறித்து “அவன் என்னை...என்னை” என்று சொருமலுடன் கூறியவளை தடுத்து நிறுத்தி தலையசைத்து “இல்லம்மா...விஸ்வா அப்படியில்ல” என்றாள்.

அக்காவின் தோளில் சாய்ந்திருந்தவளின் உடல் அழுகையில் லேசாக தூக்கி தூக்கி போட்டது. அவளை மெல்ல..மெல்ல சமாதானப்படுத்தி தூங்க வைத்தாள். அவள் தூங்கி எழும் வரை அவளுடனே அமர்ந்திருந்தாள். அப்போது ரஞ்சிதம் மட்டும் வந்து உறங்கும் மருமகளை பார்த்துவிட்டு சென்றார். அவர் முகத்தில் கவலையின் சாயலைக் கண்ட விஸ்வா விசாரிக்க, நடந்தவைகளை கூறினார்.

“நீ அவசரப்பட்டுட்டியோன்னு தோணுது விஸ்வா...அவ ரொம்ப மூர்கம்மா இருக்கா...ரொம்ப பயமாயிருக்கு” என்றார்.

அவனும் யோசனையுடன் “நான் போய் பார்க்கட்டுமாம்மா?” என்றான் பதட்டத்துடன்.

அப்போது அங்கு வந்த சிவகாமி “அம்மாவும் பிள்ளையும் பேசுறதுக்கு இப்போ தான் நேரம் பார்த்தீங்களா? மசமசன்னு நிற்காம வீட்டுக்கு கிளம்புகிற வழியை பாருங்க” என்றார்.

ரஞ்சிதம் பாட்டியிடம் நடந்தவைகளை கூறி “அதுதான் என்ன பண்றதுன்னு தெரியாம நின்னுட்டு இருக்கோம் சித்தி” என்றார்.

“ரஞ்சி நீ போய் வீட்டுக்கு கிளம்புகிற வழியை பாரு...விஸ்வா நீ நிரஞ்சனை கூப்பிடு...போன் பண்ணி ரேணுவை கீழே வர சொல்லு” என்றார்.

“நித்தியை விட்டுட்டு அண்ணி எப்படி தனியா வருவாங்க பாட்டி” என்றவனை முறைத்து “ரஞ்சி! நீ போய் உன் மருமகளுக்கு துணைக்கு இரு...ரேணுவை இங்கே அனுப்பி வை” என்றார்.

பாட்டி சொன்னதை கேட்டு மாடிக்கு சென்று மெல்ல கதவை தட்டினார். ரேணு அவசரமாக திறந்து பயத்துடன் எட்டிப் பார்க்க, அங்கு ரஞ்சிதத்தை கண்டதும் “தூங்குறா அத்தை” என்றாள்.

“நீ கீழே போ...பாட்டி உன்னை கூப்பிடறாங்க...நான் அவளை பார்த்துகிறேன்” என்றார்.

அவர் சொல்வதை மறுக்க முடியாமல் தலையசைத்து திரும்பி-திரும்பி பார்த்த்துக் கொண்டே கீழே சென்றாள்.

ரஞ்சிதம் அறைக்குள் சென்று நித்யாவின் அருகில் அமர்ந்தார். அவளையே பார்த்துக் கொண்டிருந்தவரின் மனதில், தன் மகன் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதென்கிற பயமே இருந்தது.

சற்று நேரத்தில் தூக்கத்தில் இருந்து விழித்த நித்யா, எதிரே அமர்ந்திருந்தவரை கண்டதும் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.

“பார்த்தும்மா...மெதுவா எழுந்திரி...ஒன்னும் அவசரமில்லை” என்றார்.

அவர் யார் என்று புரியவே சற்று நேரமெடுத்து...குனிந்து தன் ஆடையை கண்டவளுக்கு தனக்கு நடந்த திருமணம் ஞாபகம் வர...ரேணுவை தேடி கண்கள் அலைபாய்ந்தது.

அவளது தேடலை உணர்ந்து கொண்டவர் “ரேணு கொஞ்சம் வேலையா போயிருக்கா...நீ முகம் கழுவி டிரஸ் பண்ணிக்கிட்டேன்னா...நம்ம வீட்டுக்கு கிளம்பிடலாம்” என்றார் பதமாக.

பதில் எதுவும் சொல்லாமல் சற்று யோசித்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தாள். முகத்தை கழுவிக் கொண்டு வந்தவளின் முகத்தில் பழைய நிமிர்வும், திமிரும் வந்திருந்தது.

அவரிடம் எதுவும் பேசாமல் தலையை ஒதுக்கி, கழட்டி எறியப்பட்டிருந்த நகைகளை எல்லாம் எடுத்து மாட்டிக் கொண்டாள். அவளையே ஆராய்ந்து கொண்டிருந்த ரஞ்சிதம், அவள் முகத்தில் வந்திருந்த தெளிவை கண்டு நிம்மதியடைந்தார்.

ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் அமைதியாக அறையைவிட்டு கீழே வந்தனர். பாட்டி சாமர்த்தியமாக ரேணுவை பிடித்து வைத்து வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.

அன்னையுடன் இறங்கி வரும் மனைவியை கண்டு அவளை அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்ற மனதை அடக்கி ‘டேய்! நீ கிட்ட போகாம இருக்கிறது தான் அவளுக்கு நல்லது’ என்று கூறிக் கொண்டான்.

நித்யா பழையபடி நிமிர்வோடு வருவதை கண்ட ரேணு ஓடிச் சென்று அவளை பிடித்துக் கொண்டாள்.

நல்லநேரம் போய்விட போகிறதென்று அனைவரையும் பாட்டி விரட்ட, வீட்டிற்கு கிளம்ப தயாராகினர்.

விஸ்வாவும், நித்யாவும் ஒரே காரில் செல்ல வேண்டும் என்றவுடன், அவள் எப்படி ரியாக்ட் செய்வாளோ என்கிற பயத்துடன் பார்த்தான் விச்சு.

அவளோ கொஞ்சமும் அசராது பாட்டியின் கையைப் பற்றி அழைத்து வந்து காரில் நடுவில் அமர வைத்து தான் ஒருபுறம் அமர்ந்து கொண்டாள்...மற்றொரு புறம் விஸ்வா அமர்ந்தான்.

அவளது செயலை கண்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டார் சிவகாமி.

அவரின் காதுக்கருகில் குனிந்து “இப்போ தான் உண்மையான வில்லின்னு நிரூபிச்சிட்டீங்க பாட்டி” என்றான் விஸ்வா.

இதழ்க்கடையில் சிரிப்பு துளிர்க்க “பேராண்டி! உனக்கு சாமர்த்தியம் பத்தலேன்னு சொல்லு” என்று கேலி செய்தார்.

அவர்கள் பக்கமே திரும்பாது வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் நித்யா.

அவளை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தன்னையறியாமலே பெருமூச்செழுந்தது. ‘இவளுடனான வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் கடவுளே!’ என்று பிராத்தித்துக் கொண்டான்.

வீட்டிற்கு சென்று சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்ததும், நித்யாவை விஸ்வாவின் அறையில் ஓய்வெடுக்க விட்டு-விட்டு அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

நித்யாவிற்கு துணையாக ரேணு அவளோடு சென்று அமர்ந்திருந்தாள்.

மாலை நிரஞ்சன் தன் பெற்றோருடன் வீட்டிற்கு கிளம்பினான். ரேணுவிற்கு தங்கையை விட்டு செல்ல மனமில்லை என்றாலும், அவள் வாழ்க்கையை அவள் பார்த்துக் கொள்ளத் தான் வேண்டும் என்றெண்ணி கிளம்ப தயாரானாள்.

ரேணு கிளம்புகிறாள் என்றறிந்ததும் அதிர்ச்சியான நித்யா ஓடிச் சென்று அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு “அக்கா...போகாதே அக்கா..இங்கேயே இரு” என்று கெஞ்சினாள்.

அதை கண்டு ரஞ்சிதம் அவளருகில் சென்று தன்னோடு அணைத்துக் கொண்டு “நித்யா...அக்கா எங்கே போறா? நீ பார்க்கனும்னு நினச்சா ஓடி வந்துட போறா...இல்லேன்னா விச்சு உன்னை அங்கே கூட்டிட்டு போக போறான்” என்றார்.

அவரிடம் முறைத்துக் கொள்ள மனமில்லாமல் “ப்ளீஸ்..அக்கா” என்றாள் ரேணுவை பார்த்து.

அதற்குள் பாட்டி “அடியே! சின்ன சிறுக்கி...என்னமோ சிலுப்பிகிட்டு திரிவ...இவ்வளவு தானா உன் பவுசு” என்று சீண்டி விட்டார்.

அவர் அப்படி சொன்னதுமே “உங்க கிட்ட பேசினேன்னா..தேவையில்லாம என் விஷயத்தில் தலையிடாதீங்க?” என்று பாய்ந்தாள்.

“உன் விஷயத்தில் நானெங்கடி தலையிட்டேன்...எங்க வீட்டு மருமகளை பிடிச்சு வச்சுகிட்டு நீ விட மாட்டேன்ற...அதை தான் சொன்னேன்” என்றார்.

கண்களை துடைத்துக் கொண்டு “நீ கிளம்புக்கா...நான் பார்த்துகிறேன்” என்றவள் பாட்டியின் காதில் “கிழவி...எங்க அக்காவை விட்டு உன்னை துரத்தல என் பேர் நித்யா இல்ல” என்றாள்.

“நானும் அதை தான் சொல்றேன்...நட்டுவாக்கிளின்னு மாத்திக்கோ...அதுதான் சரியா இருக்கும்” என்று வெறி ஏத்தி விட்டு கிளம்பினார்.

அவர்கள் கிளம்பியதும் உள்ளே நுழைந்தவளுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் நகத்தை கடித்துக் கொண்டே விஸ்வாவின் அறையில் சென்றமர்ந்தாள்.

தனதறைக்குள் செல்லலாமா என்கிற யோசனையுடன் நுழைந்தான் விஸ்வா. அவன் அறைக்குள் நுழையவும் பதட்டத்துடன் எழுந்தாள் நித்யா.

“ஏன் எழுந்திரிக்கிற உட்காரு” என்றான்.

ஒன்றும் சொல்லாமல் கடுப்புடன் அவனை பார்த்துக் கொண்டு நின்றவளை பார்த்து “மரியாதை மனசில் இருந்தா போதும் டார்லிங்...இப்படி எழுந்திரிச்சு நிற்க வேண்டாம்” என்றான் சிரிப்புடன்.

இடுப்பில் கை வைத்து அவனை முறைத்து “உன்னை பார்த்து மரியாதை கொடுக்கிறேனா...ஓவர் நினைப்பு தான் உனக்கு” என்று எகிறினாள்.

“ஹப்பா..அனல் பறக்குது” என்றவன் பாட ஆரம்பித்தான்....

கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே

கற்பனை செய்தானே----கம்பன் ஏமாந்தான்

ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானே

அவன் பாடி முடிக்கவும் கட்டிலில் இருந்த தலையணையை தூக்கி அவனை நோக்கி வீசினாள்.
 
  • Love
Reactions: Chitra Balaji