Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 22 | SudhaRaviNovels

அத்தியாயம் - 22

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,037
2,735
113
அத்தியாயம் - 22மூன்று மாதங்களுக்குப் பிறகு அனைவரும் உத்ரா, கார்த்தியின் திருமணத்திற்காக சிதம்பரம் வந்திருந்தனர்.உடலவிலும் மனதளவிலும் உத்ரா நன்றாக தேறி இருந்தாள்.பெற்றோரின் அன்பும்,தங்கையின் பாசமும்,கார்த்திக்கின் காதலும் நான்கு வருடத் துன்பத்தை சற்று குறைத்திருந்தது..

கார்த்திக்கின் சார்பில் எடுத்துக் கொடுத்திருந்த கிரே கலர் உடலில் மெரூன் கலர் ஜரிகை பின்னிய பார்டர் போட்டப் புடவையும் ,அதற்கு மேட்சாக மெரூன் கலர் ப்ளௌசும் அணிந்து , காதுகளில் ரூபி ஜிமிக்கியும், நெற்றியில் சிவப்பு கல் பதித்த நெற்றி சுட்டியும் ,கழுத்தில் சிறிய சிறிய ரூபி கற்கள் பதித்த மாங்காய் மாலை ஒன்றும் அணிந்து, இரு கைகளிலும் மருதாணி இட்டு அதில் தங்கமும் ரூபியும் கலந்த வலையலணிந்து தயாராகி நின்ற மகளை பார்த்த ராஜிக்கு அதுவரை இருந்த மனக்கவலைகள் எல்லாம் அகல நிம்மதியாக அவளைப் பார்த்து புன்னகைத்தார்.

விஸ்வாவின் வீட்டில் தயாராகிக் கொண்டிருந்த கார்த்தியும் பட்டு வேஷ்டி, பட்டுச்சட்டை அணிந்து தோளில் அங்கவஸ்திரத்தைப் போட்டுக் கொண்டு கல்யாண மாப்பிள்ளைக்கான முழு தோரணையுடன் கிளம்பினான். அப்போது வெளியில் இருந்து வந்த ஆதி அன்றைய தினசரியை கார்த்திக்கின் கையில் கொடுத்து தலைப்பு செய்தியை காட்டினான். அதில் நாட்டிற்கு எதிராக திருட்டுத்தனமாக ஆயுதங்கள் செய்து தீவீரவாதிகளுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த தாண்டவத்திற்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு வக்கீல் கேட்டு கொண்டதாக தெரிவிக்கப்படிருந்தது., அவருக்கு துணை நின்ற அவர் மகன்களுக்கு பத்தாண்டு கால சிறை தண்டனையும் விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக என்ற செய்தியை சொன்னது. கதிர் என்கிற ஆர்ஜேவை அவன் மனநலம் குன்றியவன் என்கிற காரணத்தினால் அவன் செய்த செயல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவனை அரசு மனநல காப்பகத்தில் அவனை ஒப்படைக்கலாம் என்று கருத்து தெரிவித்து இருந்தனர்.

அதைப் படித்ததும் கார்த்தியின் முகத்தில் மேலும் நிம்மதி தெரிந்தது.விஸ்வா வீட்டில் இருந்தவர்கள் கோவிலுக்கு முன்னே சென்று விட,உத்ராவை அழைத்து கொண்டு அவளின் பெற்றோர்கள் கோவிலுக்கு சென்று இறங்கினர். வாயிலேயே காத்திருந்த கார்த்தி, உத்ரா காரை விட்டு இறங்கியதும் இருவரின் பார்வைகளும் ஒரு நிமிடம் கலந்து பிரிந்தது. மணப்பெண் அலங்காரத்தில் அவளை பார்த்தவன் மூச்சு விடவும் மறந்து நின்றான். அவளும் அவனை வேஷ்டி சட்டையில் பார்த்து, அவனுருவத்தை தன் மனதிற்குள் பொக்கிஷமாக பூட்டி வைத்தாள். இருவரும் இணைந்து நடக்க சாமி சந்நிதானத்திற்கு சென்று கண் மூடி பிரார்த்தித்தனர்., ஐயர் தாலியை எடுத்து கொடுக்க அவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவளாக்கிக் கொண்டான்.அவளின் திருமாங்கல்யத்தில் பொட்டு வைக்கும் போது ஒரு சொட்டு கண்ணீர் அவன் கைகளில் விழுந்து அவளின் நிலையை அவனுக்கு எடுத்துரைத்தது.

பின்னர் பெரியவர்கள் முன்னே செல்ல கார்த்திக்கும் உத்ராவும் இணைந்து பிரகாரத்தை சுற்றி வந்தனர். இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை ஆனால் வாய் தான் பேசிக் கொள்ளவில்லையே தவிர அவ்விரு மனங்களும் ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டு தான் இருந்தது.. உத்ராவின் மனமோ ‘இந்த நாளுக்காக இந்த நிமிடத்திற்காக எத்தனை போராட்டம், எத்தனை அழுகை, தவிப்பு,மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பி இன்று கைகூடி இருக்கிறது’ என்று எண்ணியபடியே நடந்தாள்.

வீட்டிற்கு சென்று மற்ற சடங்குகளை முடித்த பிறகு உத்ரா தன் அறையிலே முடங்கி கொண்டாள். அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டவர்கள் அவளை தொந்திரவு செய்யாமல் விட்டனர். கார்த்தி, ஆதி, விஸ்வா மூவரும் அன்றைய பொழுதை நடந்து முடிந்தவைகளை பற்றி பேசியே கழித்தனர்.

அன்று இரவு தனிமையில் அவனை சந்திக்க தயாரான போது அவள் மனம் இனம் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரையும் உத்ராவின் வீட்டில் விட்டு விட்டு அனைவரும் விஸ்வாவின் வீட்டிற்கு சென்று விட்டனர்.

அறையில் இருந்த ஜன்னலை பார்த்துக் கொண்டு நின்றிருந்தவன் பின்னால் வந்து நின்றாள் உத்ரா. மெல்லிய கொலுசொலியும், வளையோசையும் அவள் வந்ததை அவனுக்குத் தெரிவிக்க, அவள் புறம் திரும்பியவன் “வா”என்று தன் கையை நீட்ட அதைப் பற்றி கொண்டு அவன் அருகில் சென்று நின்றாள். அந்த ஜன்னலின் வழியே தெரிந்த இருள் சூழ்ந்த வானத்தில் வெள்ளி நிலவு தக தகவென்று மின்னிக் கொண்டிருந்தது. “நம்ம காதலுக்கும் இந்த நிலவுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கு சின்னு. நாம சந்தித்துக் கொண்ட பொழுதுகள், நாம் பேசிக் கொண்டவை, சந்தோஷ நிகழ்வுகள், நமது துயரமான நாட்கள் என்று எல்லாமே இந்த நிலவு பார்த்துக் கொண்டிருந்தது இல்லையா?”.

அவளும் மெல்ல அடியெடுத்து ஜன்னலின் புறம் நகர்ந்து நிலவைப் பார்த்து அவனுடைய கேள்விக்கு “ம்ம்” என்று சொல்லி மயங்கி நின்றாள். அப்போது கார்த்திக்கின் அலைபேசியில் இருந்து

மன்னவன் வந்தானடி தோழி

மன்னவன் வந்தானடி தோழி

மன்றத்திலே இருந்து

நெஞ்சத்திலே அமர்ந்த

மன்னவன் வந்தானடி தோழி...

என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. அந்த பாடல் அவளின் நினைவலையை தூண்ட , உத்ரா அப்படியே அவன் மார்பில் சாய்ந்து நின்று விட்டாள்.

இருவரின் நினைவுகளும் நான்கு வருடங்கள் பின்னோக்கிச் சென்றது. மெல்ல அவளை தன் கையணைவில் கொண்டு வந்தவன் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான்.அவர்களின் நிலையை கண்ட காற்று மகிழ்ந்து போய் துள்ளி குதித்து ஆட்டம் போட ஆரம்பித்தது. காற்றின் மகிழ்ச்சியில் ஜன்னலின் கதவுகள் வேகமாக அடித்துக் கொண்டது.. அவர்களின் காதலின் சங்கமம் இனிதே தொடங்கியது...ஐந்து வருடங்களுக்குப் பிறகு....

சிதம்பரத்தில் இருந்த உத்ராவின் வீட்டிற்கு வந்திருந்தனர் இரு ஜோடிகளும்.

இரு வருடங்கள் முன்பு தான் ஆதிக்கும் , மித்ராவிற்கும் திருமணம் முடிந்திருந்தது. கா கார்த்திக், தங்கள் திருமணம் முடிந்த கையோடு உத்ராவை சென்னை அழைத்து சென்று, அங்கு உள்ள ஒரு கல்லூரியில்

அவளைச் சேர்த்து, அவள் பாதியில் விட்ட படிப்பைத் தொடர செய்தான். திடிந்த கையோடு

அவள் கல்லூரி படிப்பை முடித்த பிறகே அவர்கள் காதலின் பரிசாக ரித்விக் பிறந்தான். இரு ஜோடிகளும் ஒரு நான்கு நாட்களுக்கு விடுமுறையை கழிக்க சிதம்பரம் வந்திருந்தனர். உத்ராவிற்கு அங்கு வருவதற்கு மனமில்லாவிட்டாலும் கார்த்திக்கிற்காக வந்திருந்தாள்.தங்கள் திருமணத்திற்கு பிறகு இப்பொழுது தான் அவள் முதன் முறையாக சிதம்பரம் வருகிறாள்.
 
  • Love
Reactions: Shanbagavalli

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,037
2,735
113
ஊரின் எல்லையை தொட்டதுமே மனத்தால் சுணங்கி போனவளை தன் பேச்சாலும் செய்கையாலும் அவள் கணவன் மாற்றிக் கொண்டிருந்தான். முதல் நாள் மட்டும் சற்று அளவுக்கு அதிகமாக சோர்வுற்று இருந்தாள். அடுத்த அடுத்த நாட்கள் இயல்பாக போன விதத்தில் நான்காவது நாள் முற்றிலும் பழைய உத்ராவாகவே மாறி இருந்தாள். அன்று அனைவரும் சிதம்பரம் கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.

உத்ரா ரிதிவிக்கின் பின்னே ஓடிக் கொண்டிருந்தாள். கார்த்திக் அவளைப் பிடித்து நிறுத்தி ,“நீ எப்போ கிளம்ப போறே? நான் அவனை பார்த்துக்கிறேன்.நீ போய் கிளம்பு”என்றான்.

அவனிடம் பிள்ளையை கொடுத்து விட்டு கிளம்ப சென்றாள். ரித்விக்கை தூக்கி கொண்டு ஹாலிற்கு வந்தவன் அங்கு ஆதி ஒரு பாட்டிலில் ஜூஸ்சை ஊற்றி எடுத்து பையில் வைத்து விட்டு உஸ்..என்ற பெருமூச்சுடன் நிமிர்வதை பார்த்து கேலியாக சிரித்தான்.

அதை பார்த்து எரிச்சலான ஆதி”என்னடா சிரிப்பு...நீயும் தான் லகேஜ்ஜோட நிக்கிறே. இதில் என்னைப் பார்த்து சிரிப்புன்னு கேட்கிறேன்”என்று எகிறினான்.

மேலும் பற்கள் தெரிய சிரித்து “இல்ல கலயாணத்துக்கு முன்னாடி வாய் பூட்டு போடுறேன் அப்படி இப்படின்னு உதார் விட்டுகிட்டு திரிஞ்ச.இப்போ பார்த்தா அவ ஹன்ட்பாக்கை தூக்கிட்டு போற அளவுக்கு முன்னேறிட்ட. இத்தனைக்கும் இன்னும் லக்கேஜ் கூட வெளியே வரவே இல்ல அதுக்குள்ளேயே இப்படி.”என்றான்.

“ஆமாண்டா என் பொழைப்பு உனக்கு சிரிப்பா தான் இருக்கும்.போடா போய் உன் புள்ளைக்கு பாம்பெர்ஸ் மாத்து போ. இப்போ நீ மாத்துற நாளைக்கு நான் மாத்த போறேன். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா”என்று சொல்லி விட்டு”மித்து மித்து செல்லம் கொஞ்சம் கதவை திற”என்று கொஞ்சி கெஞ்சி கொண்டு நின்றான்.

அவனை பார்த்து தலையில் அடித்து கொண்டே ரித்விக்கையும் கிளப்பி தானும் கிளம்பினான் கார்த்தி .

கோவிலுக்கு சென்று சாமி தரிசனத்தை முடித்து விட்டு , பிரகாரத்தில் வந்து அமர்ந்தனர் அனைவரும். அப்போது கார்த்தியும், ஆதியும் பிரசாதம் வாங்க சென்று விட உத்ராவும் , மித்ராவும் ரித்விக்கை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். பெரிய பிரகாரத்தை பார்த்ததும் உத்ராவின் மடியில் இருந்து இறங்கி தத்தி தத்தி நடக்க ஆரம்பித்தான் ரித்விக். அதை பார்த்த உத்ரா, மித்ராவிடம் “நீ உட்கார்ந்துக்கோ மித்து நான் இவன் பின்னாடியே போறேன். நடக்க ஆரம்பிச்ச பிறகு துரை நிக்க மாட்டேன்ராறு பாரு..மாமா வந்தா சொல்லு”என்று சொல்லி அவன் பின்னே போக ஆரம்பித்தாள்.

சிறிது தூரம் அங்கேயும் இங்கேயும் தள்ளாடித் தள்ளாடி நடந்து சென்று கொண்டிருந்தான் ரித்விக். அப்போது ஓரிடத்தில் சிறிய கல் ஒன்று தடுக்க தடுமாறி விழ போனவனை அவசரமாக தூக்க ஓடினாள். அதற்குள் அவளுக்கு முன்னே அங்கே வந்த ஒருவன் குனிந்து குழந்தையை தூக்கி கொண்டான் .

அவனிடம் இருந்து ரித்விக்கை வாங்க போனவள் அவன் முகம் பார்க்க அங்கே கதிர் நின்றிருந்தான்.. அவனை பார்த்ததும் முகம் வெளிறி ,பயத்தில் உடல் நடுங்க குழந்தையை அவனிடம் இருந்து வாங்கி கொண்டாள்..

உத்ராவை தேடி அவர்கள் அருகே வந்த கார்த்திக்கும்,அங்கு அவள் எதிரே கதிர் நிற்பதை பார்த்து சற்று அதிர்ச்சி அடைந்தான்.உடனே தன்னை சமாளித்துக் கொண்டு உத்ராவின் அருகில் சென்று அவள் தோளில் கையை போட்டு ஆதரவாக நின்றான். அப்போது சற்றே மேடிட்ட வயிற்றுடன் அங்கே வந்த பெண் கதிரின் அருகில் வந்து “என்னங்க உங்களை எங்க எல்லாம் தேடுறது. இங்கே என்ன பண்றீங்க?”என்றாள்.

உத்ராவிடம் இருந்து பார்வையை விலக்கியவன் அவள் புறம் திரும்பி “ஒன்னுமில்லை தேனு உனக்கு பிரசாதம் வாங்கலாம்ன்னு வந்தேன். அப்போ இந்த குழந்தை கீழே விழ பார்த்துதுன்னு தூக்கி இவங்க கிட்ட கொடுத்தேன். ஆனா இவங்க என்னை என்னவோ பேயை பார்த்த மாதிரி பார்க்கிறாங்க”என்றான்.

கதிரின் நிலைமையை புரிந்து கொண்ட கார்த்தி சட்டென்று அவன் புறம் தன் கையை நீட்டி “ஹாய் நான் கார்த்தி, இவங்க என் மனைவி உத்ரா, இவன் என் பையன் ரித்விக்.நாங்க இங்கே டூர் வந்து இருக்கோம்.”என்றான்.

கதிரும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு “இது என் மனைவி தேன்மொழி” என்று அவளையும் அவர்களுக்கு என்று அறிமுகப்படுத்தினான்.

அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்ட உத்ராவும் அவர்கள் இருவரையும் பார்த்து பொதுவாக சிரித்து வைத்தாள். கார்த்தி, கதிரிடம் பேச்சுக் கொடுக்க அவன் உத்ராவின் புறம் திரும்பாது கார்த்தியிடம் சகஜமாக பேசிக் கொண்டிருந்தான். அவர்களிருவரும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த உத்ராவிற்கு கதிரின் குணத்தில் ஏற்பட்ட மாற்றம் புரிந்தது. முன்பெல்லாம் புது ஆட்களிடம் பேசத் தயங்கி நிற்கும் கதிர், இப்போது மிக இயல்பாக கார்த்தியிடம் பேசிக் கொண்டிருப்பதை கவனித்தாள். அவன் உடல் மொழியிலேயே ஒரு கம்பீரம் வந்தது போல் தோன்றியது.

உத்ராவின் கரத்தைப் பிடித்த தேன்மொழி அவளை சற்று தள்ளி அவளை அழைத்து வந்து “உங்களை எனக்கு தெரியும் உத்ரா”என்றாள்.

அவள் சொன்னதை கேட்டு அதிர்ந்து போய் பார்த்தாள் உத்ரா. அவளின் பயத்தை அறிந்து “பயப்படாதீங்க உத்ரா. அவருக்கு இப்போ பழைய நியாபங்கள் எதுவுமே இல்லை..உங்களை அட்மிட் பண்ணின அந்த ஹாஸ்பிடலில் தான் வேலை பார்த்தேன். அப்போ தான் உங்களை பற்றியும் இவரைப் பற்றியும் எல்லா விவரங்களும் எனக்கு தெரிஞ்சது.”

“அவர் உங்க மேல வச்சிருந்த காதலை பார்த்து என்னை அறியாமலேயே எனக்கு இவர் மேல் ஒரு ஈடுபாடு வந்துடுச்சு. அதனால அவரை பார்த்துக்கிற பொறுப்பை நானே கேட்டு வாங்கி அவரை கவனிக்க ஆரம்பித்தேன். ரெண்டு வருஷம் முன்னால அவருடைய மன நிலை நல்லா தேறிடுச்சு.அவரும் என்னோட காதலை புரிஞ்சுகிட்டார். எங்களுக்கு கல்யாணமும் முடிஞ்சு இதோ எங்க வாரிசும் வந்தாச்சு.”

“இப்போ உங்க நியாபகங்கள் அவர் மனசிலே எதுவுமே இல்லை. முழுக்க முழுக்க நான் மட்டும் தான் அவர் மனசுல நிறைஞ்சு இருக்கேன். அதனால எந்த பயமோ குற்ற உணர்ச்சியோ இல்லாம உங்க வாழ்க்கையை சந்தோஷமா அனுபவிங்க ”என்று சொல்லி அவள் கைகளை தட்டிக் கொடுத்து விட்டு கதிரின் அருகில் சென்று “என்னங்க போலாமா அத்தை தேட போறாங்க” என்றாள்.

பிறகு கார்த்திக்கிடமும் உத்ராவிடமும் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள் இருவரும் . “என்னங்க எவ்வளவு நேரம் தான் நிக்கிறது கால் வலிக்குது இல்ல.இப்படியா பேசிகிட்டே இருப்பீங்க”என்று அவனிடம் புலம்பிக் கொண்டே நடந்தாள் தேன்மொழி.

“இல்லடா அவங்க என்னவோ என்னை பார்த்து பயந்த மாதிரி இருந்துது அது தான் அப்படியே நின்னுட்டேன்.. நான் வேணா தூக்கிக்கவா”என்று கேட்டவனை பார்த்து தலையிலடித்துக் கொண்டு “இது கோவில்னு மறந்து போச்சா சார் உங்களுக்கு”என்று சிரித்தாள் தேன்மொழி.

அவர்கள் இருவரும் அன்னியோனியமாக பேசிக் கொண்டு போவதையே பார்த்திருந்த உத்ரா கண்ணீருடன் கார்த்திக்கின் தோளில் சாய்ந்து கொண்டாள். “ என் மேல அவனுக்கிருந்த காதல் தான் அவனுடைய அந்த நிலைக்கு காரணமோன்னு உறுத்தல் இருந்துது. இப்போ அது இல்லைங்க. இனி எனக்கு மனசு நிம்மதியா இருக்கும்.”

அப்போது கதிரின் அம்மா ஈஸ்வரி அங்கு வந்தார். வேக வேகமாக அவர்களை நோக்கி வந்தவர். கார்த்தியை பார்த்து, “எப்போ தம்பி வந்தீங்க?’ஒரு வார்த்தை சொல்ல மாட்டீங்களா? உங்களை நான் வந்து பார்த்திருப்பேனே” என்றார்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,037
2,735
113
உத்ரா இதை அதியசமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். “கதிரையும், தேன்மொழியையும் பார்த்தேன். அவனும் உத்ராவையும் பார்த்திட்டு என் கிட்ட பேசிட்டு தான் போனான்மா”என்றான் கார்த்திக்.

“தேனு சொன்னாப்பா.அது தான் அவங்களை காருக்கு அனுப்பிட்டு உன்னை பார்க்க ஓடி வந்தேன்.இந்த பொண்ணுக்கு என் பையன் பண்ணின கொடுமைக்கு, பழி வாங்க நினைக்காம, அவனோட மன நிலையை புரிஞ்சுக்கிட்டு அவனுடைய தண்டனையை குறைக்க உதவி இருக்கியேப்பா உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது”என்று சொல்லி கையெடுத்து கும்பிட்டார் ஈஸ்வரி.

அவரின் கைகளை பற்றிய கார்த்திக் “நானும் உங்க பையன் தான்ம்மா.பையனுக்கு அம்மா எங்கேயாவது நன்றி சொல்வாங்களா சொல்லுங்க? ஆனா உங்க கணவருக்கு மன்னிப்பை கொடுக்க தான் எனக்கு மனசு வரல.கதிருக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சதே எனக்கு நிம்மதியா இருக்கு”என்றான்.

தாண்டவத்தை பற்றி சொன்னதும் முகத்தை சுளித்தவர் “அவருக்கு அந்த தண்டனை தேவை தான். அவர் பிறந்த நாட்டுக்கும் உண்மையானவரா இல்லை, கட்டின மனைவிக்கும் நல்ல கணவரா நடந்துக்கல, பெற்ற பிள்ளைகளுக்கும் ஒழுங்கான தகப்பனா நடந்துக்கல.அப்படிப்பட்டவரை மன்னிக்க என் மனசும் இடம் கொடுக்கலப்பா” என்றவர் உத்ராவின் பக்கம் திரும்பி அவள் கைகளில் இருந்த ரித்விக்கின் கன்னத்தில் முத்தத்தை கொடுத்து .”நீயும் என் பிள்ளையை மன்னிசிடுமா.உன் மன்னிப்பு தான் அவன் சந்ததிகள் வரை நல்லா வாழ வைக்கும்”என்று அவளின் கையை தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டு அவள் முகத்தை பார்த்தார் ஈஸ்வரி.

அதை பார்த்த கார்த்தி உத்ராவின் தோளைப் பற்றி அழுத்தி கண்களால் அவருக்கான பதிலை கொடுக்க சொன்னான். அவன் கண்கள் சொன்ன செய்தியில் ஈஸ்வரியின் பக்கம் திரும்பியவள் “நான் ரொம்ப சின்ன பொண்ணும்மா.மன்னிப்பு என்பது பெரிய வார்த்தை. உங்க பையனுக்கான மன்னிப்பை அந்த கடவுளே வழங்கி இருக்கார். உங்க மகனுடைய வாழ்க்கை இனி நல்லா இருக்கும் கவலைப்படாம போங்க”என்றாள்.

ஈஸ்வரி அவள் சொன்னதை கேட்டு கண்களில் இருந்து கண்ணீர் வழிய இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு” நீங்க ரெண்டு பேரும் நூறு வயசு வரை எல்லாம் பெற்று நல்லா இருக்கணும்”என்று ஆசிர்வதித்து விட்டு அங்கிருந்து சென்றார்.

அவர் ஆசிர்வதித்து விட்டு செல்வதை பார்த்ததும் இருவரும் கண்கள் கலங்க அவரை பார்த்தபடி நின்றனர்.உத்ரா உணர்ச்சி பிழம்பாக நிற்பதை பார்த்த கார்த்தி அவளை தன் தோளோடு இழுத்து சாய்த்துக் கொண்டான்.

அப்போது அவர்களை தேடி வந்த ஆதியும் மித்ராவும் அவர்கள் இருந்த நிலையை கண்டு “அடடா என்ன மாம்ஸ் இது?யார் புது ஜோடின்னே தெரியல போங்க...மொட்டை மாடியை கண்டாலும் விட மாட்டேன்றீங்க. கோவிலுக்கு வந்த இடத்தில கூடவா உங்க ரொமான்சை தொடரனும்.அதுவும் ரெண்டு சின்ன பிள்ளைங்களை வச்சுகிட்டு”என்று மிரட்டினாள்.

“அதை சொல்லு மித்து கையில லகேஜ்ஜோட வேற ரொமான்ஸ் அடங்க மாட்டேன்றாங்கப்பா” என்றான் ஆதி.

அதுவரை கண்கள் கலங்க நின்றிருந்த உத்ரா அவளின் பேச்சில் இயல்புக்கு திரும்பி “நாங்க இப்போ தான் எங்க வாழ்க்கையே தொடங்கி இருக்கோம்.இதுக்கே எங்களை பார்த்து பொறாமைபட்டா எப்படி? இன்னும் எவ்வளவோ இருக்கே ”என்றாள்.

“யாரு நீங்க இப்போ தான் வாழ்க்கையை தொடங்கி இருக்கீங்க.இன்னும் பத்து வருஷம் கழிச்சு சொல்லுங்களேன்.”என்றாள் மித்ரா.

அதை கேட்ட கார்த்திக் “ஆமாம் சின்னு இனி நமக்கு வாழ்க்கையில் எந்த வில்லனும் கிடையாது வில்லி மட்டும் தான் ”என்று சொல்லி மித்ராவை பார்த்து சிரித்தான்.. அப்போது ரித்விக்கும் “அப்பா நானு நானு” என்று அவர்களுக்கிடையில் புகுந்து கொண்டு அவர்களின் முகம் பார்த்து சிரித்தான்.

அவர்களின் செயலை கண்ட மித்ரா”ஹ்ம்ம்..குடும்பமே ஒரு மார்கமா தான் இருக்காங்க ...நீங்க வாங்க நாம போகலாம்”என்று நொடித்து கொண்டு கிளம்பினாள்.

அவள் சென்றவுடன் உத்ராவின் புறம் திரும்பிய கார்த்தி “ஆர்ஜே ஆயிரம் தப்புகள் செய்திருக்கலாம்.ஆனால் அவன் காதல் பொய்யில்லையே. அவனுடைய நேசம் உன் மனதை தொடலைன்னாலும், உன் மேல எந்த அளவுக்கு காதல் இருந்திருந்தால், நீ இறந்து போயிட்டதா எண்ணிய மறு நிமிடம் அவனுடைய உணர்வுகள் செயலற்று போய் இருக்கும்.சத்தியமா எனக்கு அந்த காதலின் அளவை பார்த்து பிரமிப்பா தான் இருக்கு உத்ரா” என்றான்.

அதைக் கேட்டு உத்ரா லேசான குறும்புடன் “ஹலோ பீகே நீங்க என்னதான் அவனுடைய காதலை பத்தி விழுந்து விழுந்து பேசினாலும், இந்த கதைக்கு அவன் தான் ஹீரோன்னு அழுத்தமா பதிவு பண்ணிட்டான். அதனால அவனை பத்தி பேசுறதை விட்டுட்டு என்னை கவனிச்சாலும் நானாவது உங்களை என்னுடைய ஹீரோன்னு சொல்லுவேன்”என்றாள்.

அவள் சொன்னதை கேட்டு “உன்னை”என்று கைகளை ஓங்கியபடி துரத்த ஆரம்பித்தான் கார்த்திக்.
 
  • Love
Reactions: Shanbagavalli

Shanbagavalli

New member
Mar 26, 2018
23
5
3
அருமை. சிறுவயதில் கதிரை தாண்டவம் முரட்டு தனமாக கையாண்டதை ஈஸ்வரி எந்த விதத்திலும் தடுக்கலை யா ? இது அந்த பகுதியில் சிறு முரண்பாடாக இருக்கே
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,037
2,735
113
அருமை. சிறுவயதில் கதிரை தாண்டவம் முரட்டு தனமாக கையாண்டதை ஈஸ்வரி எந்த விதத்திலும் தடுக்கலை யா ? இது அந்த பகுதியில் சிறு முரண்பாடாக இருக்கே
நன்றி ஷெண்பகவள்ளி......நிறைய வீடுகளில் இப்படி பிள்ளைகளை முரட்டுத்தனமாக நடத்துவது இன்றும் இருக்க தான் செய்கிறது. தாயார் கேட்டாலும் அவனை சரி பண்றேன் நீ போய் உன் வேலையை பாருன்னு சொல்றது தான் தகப்பனார்களின் வேலை...