Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 2 | SudhaRaviNovels

அத்தியாயம் - 2

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
329
323
63
அத்தியாயம் – 2

கல்யாணி கண்ணீருடன் சோபாவில் அமர்ந்திருந்தார். அவர் அருகே அமர்ந்திருந்த குணா சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான். அவனுடைய மாமனார் வந்துவிட்டு சென்றதில் இருந்து இப்படித்தான் இருக்கிறார். என சொல்லியும் கேட்காமல் அழுது கொண்டே தான் இருக்கிறார்.

“அம்மா! அவன் ஏதோ ஒரு வேலையா தான் போய் இருக்கான். இப்போ தான் போன் பண்ணினேன். வந்துடுறேன்னு சொன்னான்”.

“என் பொண்ணு என்ன ஆனா? நீ ஸ்டேஷனுக்குப் போனியே என்ன சொன்னாங்க?”

“தேடிகிட்டு தான் இருக்கோம் கண்டுபிடிச்சிடுவோம்னு சொல்றாங்க”.

“மூணு மாசம் ஆச்சே குணா. அவளுக்கு எதுவும்னா நான் அந்த நிமிஷமே போய் சேர்ந்திடுவேன்”.

“மா! ஏன் இப்படி பேசுறீங்க? அவளுக்கு எதுவும் ஆகாது நல்லா இருப்பா” கோபமாக.

“எத்தனை பாடுபட்டு வளர்த்தேன். எல்லாமே பாழாப்போச்சு. உன் மாமனார் எதுக்கு வந்தாராம்? அந்த ராட்சசியை இங்கே கொண்டு வந்து விடவா?”

அவரின் கேள்வியில் முகம் சுருங்க “குழந்தையை நினைச்சுப் பாருங்க மாப்பிள்ளைன்னு கெஞ்சினார்”.

“என் பெண்ணை உயிரோட தூக்கிக் கொடுத்திட்டு உட்கார்ந்திருக்கேன். அதுக்கு காரணமானவளை நாம சேர்த்துக்கனுமா?”

“விடுங்கம்மா! நமக்கு இப்போ தங்கச்சி தான் முக்கியம்”.

அந்நேரம் உள்ளே வந்த அர்ஜுனைப் பார்த்ததும் “எங்கேடா போய் தொலைஞ்ச? அந்தக் குட்டியைப் பார்க்க போயிட்டியா?” என்று கத்த ஆரம்பித்தார்.

அவரின் கோபத்தைக் கண்டு தடுமாறி நின்றவன் “என்னம்மா இது! என் பிரெண்ட்டுக்கு கமிஷனரை தெரியும். அவர் கிட்ட உதவி கேட்கலாம் என்று தான் போனேன்”.

அவ்வளவு தான் எழுந்து வந்து அவன் கைகளைப் பற்றிக் கொண்டவர் “எனக்கு பயமா இருக்குடா. ரெண்டு பேரும் சேர்ந்து என் பெண்ணை அப்படியே விட்டுடுவீங்கலோன்னு பயமா இருக்கு. நீ அந்தக் குட்டியைப் பற்றியே நினைச்சிட்டு இருக்க. போனவ போனவளாளே இருக்கட்டும்னு விட்டுடாதீங்கடா” என்று கெஞ்சினார்.

அன்னையின் பேச்சில் அவனது உடலும் மனமும் தளர்ந்து போனது.

“அவ எங்களுக்கு தங்கச்சிம்மா. எப்படிம்மா அவளை விடுவோம்? எல்லாவற்றையும் விட அவள் தான் எங்களுக்கு முக்கியம்”.

அன்னையின் பயத்தைக் கண்டு சகோதரர்கள் இருவருக்கும் மனம் கலங்கிப் போய் விட்டது. எத்தனை கம்பீரமாக வாழ்ந்த மனுஷி. இந்த மூன்று மாதங்களாக உடைந்து போய் விட்டாரே என்று கண் கலங்கினார்கள்.

குணாவும் அருகே வந்து அன்னையின் கைகளைப் பற்றிக் கொள்ள அந்தக் குடும்பமே கலங்கிப் போய் நின்றது. அன்றைய நினைவுகளில் அன்னையை இறுக்கி அணைத்துக் கொண்டனர் இருவரும்.

தந்தை இறந்த பின்பு மூன்று பிள்ளைகளை வைத்துக் கொண்டு ஒரே நாளில் வாழ்க்கை என்னவென்று உணர்ந்து கொண்ட தருணம் அது. மூன்றும் சிறு பிள்ளைகள். கல்யாணிக்கோ படிப்பறிவும் இல்லை. வெளியுலக அறிவும் கிடையாது. கணவர் குழந்தைகள் தவிர வேறு எதுவும் அறியாதவராய் இருந்தார் அதுநாள் வரை.

ஒரே நாளில் அனைத்தும் மாறியது. வேலைக்குச் சென்ற மனிதன் பிணமாக திரும்பி வந்த போது அவருக்கு இருபதெட்டு வயது. குணாவிற்கு ஏழு வயது. அடுத்தவனுக்கு ஐந்து. கயலுக்கு இரண்டு வயது. தந்தை இறந்து விட்டார் என்று புரியாத வயது.

பிறந்த வீட்டில் கல்யாணிக்கு கீழே இருவர். அப்பா ஒரு தொழிற்ச்சாலையில் மேலாளர். அவரின் வருமானம் ஒரு மாதத்தை ஒட்டவே கஷ்டமாக இருக்கும், மூன்று குழந்தைகளோடு அங்கு சென்று நிற்க முடியாது. அடுத்து என்ன என்கிற கேள்வியே மிரட்டியது.

முதல் இரண்டு நாட்கள் அக்கம்பக்கத்தில் இருந்த சொந்தங்களிடம் இருந்து பிள்ளைகளுக்கும் அவளுக்கும் சேர்த்து உணவு வந்ததது. மெல்ல நாள் செல்ல செல்ல ஒவ்வொன்றாக நிற்க ஆரம்பித்தது.

குழந்தைகள் முதன்முறையாக பசியை உணர ஆரம்பித்தார்கள். பெரியவனுக்கு மட்டும் வீட்டின் நிலைமை லேசாக புரிந்தது. அடுத்தது இரெண்டும் சின்னவர்கள். அதிலும் கயல் எந்நேரமும் அழுது கொண்டே இருந்தாள்.
 
  • Love
Reactions: Kothai suresh

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
329
323
63
கல்யாணியின் தந்தை வீட்டின் நிலை உணர்ந்து யார் யாரிடமோ கடன் வாங்கி வந்து ஒரு இருபதாயிரம் ரூபாய் அவளிடம் கொடுத்தார்.

“என்னால கொடுக்க முடிஞ்சது இது தான் தாயி. இனி, நீ தான் சூதானமா இருந்து பிள்ளைகளை கவனிக்கணும்”.

பணத்தை கையில் வாங்கியவளுக்கு உடலில் நடுக்கம். அதே நேரம் கணவன் இறந்த தூக்கத்திலிருந்து மீளாமல் மௌனமாக தந்தையிடம் தலையசைத்தாள்.

அவளின் அன்னையோ “உங்க வீட்டுக்காரரோட சொந்த பந்தம் எல்லாம் இங்கே தான் இருக்கு. அவங்களை அண்டி பொழைச்சுக்கோ. உன்னையும் உன் புள்ளைகளையும் வச்சு காப்பாத்துகிற அளவிற்கு எங்களுக்கு வசதி இல்ல கல்யாணி” என்றார் கண்ணீருடன்.

அன்னையின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போய் நின்றாள். மறைமுகமா வராதே என்பதை தான் இப்படி சொல்கிறார்கள் என்று புரிந்தது. தன்னருகே நின்ற பெரியவனை இழுத்து அணைத்துக் கொண்டவள் “நான் பார்த்துக்கிறேன்-மா” என்று மட்டும் கூறினாள்.

அந்த நிமிடம் பெற்றவர்கள் அங்கிருந்து விலகிச் சென்றார்கள். கல்யாணம் செய்து கொடுத்தோம் கடமை முடிந்தது. அவளின் கணவனின் இழப்பிற்குப் பிறகு சமாளிக்க வேண்டியது அவள் பொறுப்பு என்று ஒதுங்கினார்கள்.

அவர்கள் கொடுத்துச் சென்ற பணம் கையில் கனத்தது. அதை வைத்திருப்பதே வேதனையாக இருந்தது. பணத்தை எடுத்துச் சென்று பீரோவில் வைத்துவிட்டு பிள்ளைகளுக்கு உணவை எடுத்து வந்து ஊட்டினாள்.

அப்போது அவளின் நாத்தனாரும் அவரின் வீட்டுக்காரரும் உள்ளே வந்தார்கள்.

“வாங்க அக்கா...வாங்க”.

பிள்ளைகளையும் அவளையும் ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு “என்ன பண்ண போற?” என்றார்.

அவரின் கேள்வி எதை நோக்கி என்று புரிய “தெரியல. இனிமே தான் யோசிக்கணும்”.

“ஏன் உனக்கு எவனாவது கூப்பிட்டு வேலை கொடுக்கப் போறானா? யோசிக்கனுமாம் இல்ல யோசிக்கணும். நான் சொல்றதை கேளு. தினமும் எங்க வீட்டுல வந்து எல்லா வேலையும் செஞ்சிட்டு சாப்பாடு எடுத்திட்டு வந்துடு. இதோ நிக்கிறானுங்களே என் தம்பி பிள்ளைங்க இவனுங்களை நான் தானே பார்க்கணும். பெரியவன உங்க அண்ணனோட கடைக்கு அனுப்பிடு. அப்புறம் மூணு வேலை சாப்பாடு கொடுத்துப் பழக்காதே” என்றார் அதிகாரமாக.

அவர் பேசபேச அவளின் மனம் உள்ளுக்குள் கதற ஆரம்பித்தது. நாதியின்றி இருப்பதனால் யார் வேண்டுமானாலும் வீடு தேடி வந்து என்ன வேண்டுமானாலும் பேசி விடலாம் என்கிற தைரியத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது.

“ம்ச்...நீ சும்மா இரு ஞானம். கல்யாணி அவ கிடக்குறா நான் உன் குடும்பத்துக்கு மாசா மாசம் மளிகை வாங்கி போட்டுடுறேன். நீ வீட்டுக்கும் வந்து இவளுக்கு உதவிட்டு கடைக்கும் வந்து சுத்தம் பண்ணி கொடுத்திட்டுப் போ” என்றார்.

அந்த நிமிடம் கல்யாணியிடம் எதுவுமில்லை. சரி என்று சொல்வதை தவிர.

அவர்கள் இருவரும் கிளம்பி வீட்டை விட்டு வெளியே செல்லும் நேரம் கயல் அழுகையுடன் வந்து கல்யாணியின் கால்களைக் கட்டிக் கொண்டாள். அவளை குனிந்து தூக்கி கொண்டு நிமிர்ந்தவளை வெறித்தபடியே நின்றிருந்தாள் ஞானம்.

“என்ன அக்கா?”

“இதோ பாரு! இனிமே இந்த மாதிரி ஜார்ஜெட் புடவை எல்லாம் உடுத்தாதே. அப்புறம் காதுல கழுத்துல சின்னதா போடு. அது தான் என் தம்பி போய் சேர்ந்துட்டானே இன்னும் என்னத்துக்கு எல்லாம் போட்டுக்கிட்டு” என்று நாவால் அவளை கொன்று தின்று விட்டு வெளியேறினார்.

சின்னவன் அர்ஜுன் ஓரமாக கார் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருக்க, குணா அன்னையின் கண்ணீரைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

அவர்கள் சென்றதும் ஓடி வந்து அவளின் கால்களைக் கட்டிக் கொண்டவன் “அம்மா! அழாதே! நான் இருக்கேன்” என்றான்.

இருபதெட்டு வயதில் கையில் மூன்று குழந்தைகளுடன் நின்றவளை சமூகமும் பார்வைகளாலும், பேச்சாலும் ஓட ஓட விரட்டியது. மேலும் மூன்று மாதங்கள் கடந்திருக்க நாத்தனார் வீட்டிலும் கடையிலும் வேலை செய்து அவர்கள் கொடுத்த கால் வயிறு கஞ்சியை குடித்துக் கொண்டு பசியுடனும், வேதனையுடனும் நாட்களை ஓட்டினாள்.

நாத்தனார் வீட்டில் சம்பளம் இல்லாத வேலைக்காரியாக மாறி இருந்தாள் கல்யாணி. மாடு போல உழைத்தவளுக்கு சரியாக உணவளிக்காமலும், ஜாடை மாடையாக பேசியும் கொன்றார்கள்.

வீடு வறுமையை நோக்கி சென்று கொண்டிருந்தது. குழந்தைகள் மூவரும் உடல் மெலிந்து கண்களில் ஜீவனில்லாமல் நடமாடிக் கொண்டிருந்தனர். அன்று கயலுக்கு அதிக ஜுரம் அடிக்க, அவளையும் தூக்கிக் கொண்டு ஞானத்தின் வீட்டிற்குச் சென்றாள்.

கயலுடன் நுழைந்தவளை எரிச்சலுடன் பார்த்த ஞானம் “இதை எதுக்கு தூக்கிட்டு வந்த கல்யாணி? ‘நை-நைன்னு’ அழுது வைக்கும். உன்னால வேலை செய்ய முடியாது”.


“அவளுக்கு ஜுரமா இருக்குக்கா. உங்க கிட்ட மருந்து இருந்தா குடுங்க. அதை கொடுத்து தூங்க வச்சிட்டு வேலையைப் பார்க்கிறேன்”.
 
  • Like
Reactions: Kothai suresh

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
329
323
63
அவ்வளவு தான் “உன் குடும்பத்துக்கு சோறு போடுறது இல்லாம இந்த இழவை வேற நாங்க செய்யணுமா? உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல கல்யாணி” என்று கத்தினார்.

“நல்லா கொதிக்குது அக்கா. குழந்தை சுருண்டு போயிட்டா. சிரமம் பார்க்காம அண்ணன் கிட்ட சொல்லி டாக்ட்டர் கிட்ட போயிட்டு வரதுக்கு காசு வாங்கி கொடுங்க” என்று கண்ணீருடன் கெஞ்சினாள்.

“ஓஹோ! அப்படி போகுதா கதை. காசு வேற கொடுக்கனுமாமில்லை. ஆறு மாசமா என் தம்பி குடும்பம்னு நினைச்சு உட்கார வச்சு சோறு போட்டதுக்கு இதை எல்லாம் வேற செய்யணுமா?”

“குழந்தைக்கு முடியல அக்கா” என்று கால்களைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.

அந்நேரம் அறைக்குள் இருந்து வந்த பழனி “ஞானம்! என்ன இது! குழந்தைக்கு முடியலேன்னு சொல்றா” என்றவர் “இந்தா கல்யாணி எழுந்திரு...இதை பிடி” என்று அவளிடம் ரூபாயை கொடுத்து “போய் டாக்டர் கிட்ட காண்பிச்சிட்டு வா” என்றார்.

அடுத்த நிமிடம் அவர் அவளுக்கு கொடுத்த பணத்தை பிடுங்கிக் கொண்டவள் “எப்போலருந்து இவளுக்காக பரிதாபபப்ட ஆரம்பிச்சீங்க? ச்சே! புருஷன் போயாச்சுன்னா அடக்க ஒடுக்கமா இருக்க வேண்டாமா? இப்படித்தான் மினுக்கி கிட்டு வருவியாடி” என்று தன் தேள் கொடுக்கு நாக்கால் அவளையும் தாக்கி விட்டாள்.

தன் காது இரெண்டையும் பொத்திக் கொண்ட கல்யாணி “ஐயோ! அக்கா என்ன பேசுறீங்க?” என்று அழுது விட்டாள்.

பழனியும் “என்னடி பேசுற?” என்று பதறி விட்டார்.

“போடி வெளில! இனி என் வீட்டுக்குள்ள நீ வரக் கூடாது! ஏதோ என் தம்பி குடும்பமாச்சேன்னு பார்த்தா என் குடும்பத்துக்கே குந்தகம் வந்துடும் போல இருக்கு” என்று சொல்லி அவளை குழந்தையுடன் இழுத்துச் சென்று வாசலில் தள்ளி விட்டுவிட்டாள்.

“பெண் பாவம் பொல்லாதது ஞானம். அந்த பொண்ணு..” என்று ஆரம்பித்தவரை திரும்பி பார்த்த பார்வையில் வாயை மூடிக் கொண்டார்.

கீழே விழுந்தவள் கையிலிருந்த பிள்ளையை அழுத்திப் பிடித்துக் கொண்டு எழுந்து பார்க்க, தெருவே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. மனம் வெறுத்துப் போனது. கண்களை துடைத்துக் கொண்டு எவரையும் நிமிர்ந்து பார்க்காது விறுவிறுவென்று தன் வீட்டிற்குள் வந்து கதவடைத்துக் கொண்டாள்.

பிள்ளையை மடியில் போட்டுக் கொண்டு சுவற்றோரம் சாய்ந்தவள் தான் கண்களில் தாரை தாரையாக கண்ணீர். பெரியவனும், சின்னவனும் அன்னையை பார்த்துக் கொண்டே வந்து மடியில் படுத்து விட்டனர்.

எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ கயலின் உடல் கொதிக்க தொடங்க, அவள் மெல்ல முனக ஆரம்பித்திருந்தாள். சின்னவனோ வயிற்றைப் பிடித்துக் கொண்டு “மா! பசிக்குது!” என்று கேட்க ஆரம்பித்தான்.

பிள்ளையின் உடல் சூட்டையும் அவளின் நிலையையும் உணர்ந்தவள் அதுவரை அழுது கொண்டிருந்த மனதை அடக்கிக் கொண்டு அவசரமாகச் சென்று தனது பீரோவை திறந்து ஒரு சிறிய டப்பாவில் வைத்திருந்த அந்த குட்டி மூக்குத்தியை எடுத்துக் கொண்டாள். பிள்ளையைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு அவசரமாக அருகே இருந்த சேட்டுக் கடையில் மூக்குத்தியை விற்று விட்டு, அரசு மருத்துவமனைக்கு கயலை தூக்கிச் சென்று காண்பித்தாள். அவர்கள் கொடுத்த மருந்தை கொடுத்து குழந்தையை தூக்கிக் கொண்டு பிள்ளைகளுக்கு வயிறார சாப்பாட்டை வாங்கிக் கொடுத்து வீட்டிற்கு அழைத்து வந்தாள்.

வீட்டிற்குள் நுழைந்து கதவை மூடியவளின் மனம் ஒரு முடிவிற்கு வந்திருந்தது. இதற்கு மேல் உயிர் வாழ்ந்து எந்த பிரயோஜனமும் இல்லை என்று எண்ணி குழந்தைகளுக்கும் மருந்தை கொடுத்து, தானும் உண்டு விட்டு உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டியது தான் என்ற முடிவிற்கு வந்தாள்.

பெரியவனும், சின்னவனும் உண்ட திருப்தியில் படுத்திருக்க, மெல்ல எழுந்து சென்று சூடான பாலை கலந்து எடுத்து வந்து அமர்ந்தாள். அந்நேரம் கதவு தட்டும் ஓசை கேட்க, யோசனையுடன் எழுந்து சென்று கதவை திறந்தாள்.

அவளின் பக்கத்து வீட்டுப் பெண் சந்தியா நின்றிருந்தாள்.

“என்ன சந்தியா?” என்று வாசலை மறைத்தபடியே கேட்டாள்.

அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டே லேசாக உள்ளே தள்ளிவிட்டு வீட்டினுள் நுழைந்தவள் “நினைச்சேன்! இன்னைக்கு நடந்ததை கேள்விப்பட்டவுடனே நீ இப்படித்தான் முடிவெடுப்பென்னு நினைச்சேன்”.

“இல்ல அது வந்து..”

“புருஷன் போயிட்டா வாழவே கூடாதா? இல்ல முடியாதா? உன்னை நம்பி இந்தக் குழந்தைகள் இருக்கு. அதை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கு. போராடு! வேலைக்குப் போ! குழந்தையைப் பாரு”.

“எனக்கு என்ன வேலை கிடைக்கும் சந்தியா? அந்த வருமானத்தில் நான் எப்படி?”

“என்ன கிடைக்குதோ போ! எந்த வேலையையும் கீழான வேலையா நினைக்காதே. உன் நாத்தனார் வீட்டில் செய்த வேலையை வெளியில் செய். உன் குடும்பத்துக்கு தேவையான வருமானம் கிடைக்கும்”.

“...”

“வாழ்க்கையை போராடி வாழப் பாரு கல்யாணி. உன்னால முடியும்” என்று நம்பிக்கை கொடுத்தாள்.

அன்று அவள் கொடுத்த நம்பிக்கை அடுத்து வந்த நாட்களில் கல்யாணியை வேலை தேட வைத்தது.
 
  • Like
Reactions: Kothai suresh