Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 2 | SudhaRaviNovels

அத்தியாயம் - 2

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
அத்தியாயம் – 2

மறுநாள் காலை எழுந்ததில் இருந்து சிந்தனையுடனே வேலை செய்து கொண்டிருந்தாள் தர்ஷனா. மாறனிடம் இதுவரை தன் பிடித்ததை கூறவில்லை என்றாலும் அவன் உணர்ந்திருக்கிறான். ஆனால் மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ளாமல் நேரடியாக எப்படி திருமணத்தைப் பற்றி பேசுவது என்று யோசனையாக இருந்தது.

வேலைக்குச் செல்ல கிளம்பி தயாராகி உணவு மேஜைக்கு வர, அங்கே கல்யாணராமன் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். அவளை பார்த்ததும் “உட்கார்” என்றார்.

அமைதியாக எதுவும் பேசாமல் அமர்ந்தவளிடம் “தரகர் கிட்ட பேசப் போறேன். எதாவது வரன் அமைஞ்சா வேலைக்கு போக வேண்டாம்னு சொன்னா அதற்கு ஒத்துக்கொள்ளத் தயாராக இருக்கணும். என்ன புரியுதா?” என்றார்.

அப்போது அவளது தட்டில் இட்லிகளை கொண்டு வந்து வைத்த காயத்ரி “வேலையை விடுறது அவளுக்கு நல்லது இல்லங்க” என்றார் மெதுவாக.

“ஏன்? நீ என்ன வேலைக்கா போன?”

அவரோ ‘அதனால தான் சொல்றேன்’ என்று முணுமுணுத்துக் கொண்டே “இல்லங்க! கஷ்டப்பட்டுப் படிச்சு இவ்வளவு தூரம் வந்திருக்கா அவளுக்கு என்று ஒரு அங்கீகாரம் வேண்டாமா?” என்று விட்டார்.

சட்டென்று இருவரையும் நிமிர்ந்து பார்த்தவர் “இது தான்! இந்த மாதிரி யோசிக்கிறதால தான் இன்னைக்கு குடும்ப அமைப்பே கெட்டுப் போய் இருக்கு. பொண்ணுங்க குடும்பத்தை தான் முதல்ல யோசிக்கணும்” என்றார் கோபமாக.

“இல்லங்க...” என்று காயத்ரி ஆரம்பிக்கவும் “மா! விடுங்க!” என்றவள் தந்தையின் பக்கம் திரும்பி “சரிப்பா! நான் பார்த்துக்கிறேன்” என்று விட்டாள்.

அப்போது தர்ஷுவின் அருகில் வந்தமர்ந்த அஞ்சனா மெல்லிய குரலில் “இப்படி எல்லாவற்றுக்கும் தலையாட்டாதே. உனக்கு என்ன வேணும்னு நீ தான் அக்கா சொல்லணும்” என்றாள்.

அதை கவனித்துக் கொண்டிருந்த கல்யாணராமன் “அஞ்சனா! படிக்கிற வேலையை மட்டும் பாரு” என்றார் கோபமாக.

அவரை நிமிர்ந்து பார்த்தவள் “நான் அக்கா மாதிரி இருக்க மாட்டேன்பா. எனக்கு என்ன பிடிக்குதோ அதைத் தான் செய்வேன்” என்று விட்டாள்.

அவ்வளவு தான் எதிரே இருந்த தட்டை எடுத்து ஓங்கி அடித்துவிட்டு “பெண்ணை எப்படி வளர்த்திருக்கப் பாரு. இது உருப்படாது” என்று கத்தி விட்டுச் சென்றார்.

தர்ஷனாவும், காயத்ரியும் பயந்திருக்க, அஞ்சனாவோ “மா! இட்லியை எடுத்து வை. எனக்குப் பிடிச்ச சட்னியை அரைச்சு வச்சிருக்க அதை சாப்பிடாம போவேனா?” என்று காரியத்தில் கண்ணாக இருந்தாள்.

அவரோ பயத்துடன் “நான் பாக்ஸ்ல போட்டு கொடுத்திடுறேன்-டி. அவர் வந்து கத்தப் போறாரு”.

“அவருக்கு வேண்டாம்னு தூக்கி அடிச்சிட்டு போயிட்டாரு அதுக்காக நான் சாப்பிடாம போக முடியுமா?”

யோசனையுடன் தர்ஷனா சாப்பிடாமல் எழ முயல, அவளது கையைப் பற்றி அமர வைத்தவள் “சாப்பிட்டிட்டு எழுந்திரு” என்றாள்.

காயத்ரியோ “இந்தப் பொண்ணுக்கு இவ்வளவு அழுத்தம் கூடாது தர்ஷு” என்றார் பயத்துடன்.

மௌனமாக மூவரும் அமர்ந்திருக்க, கோபத்தோடு உள்ளே சென்றவர் ஆபிசிற்கு கிளம்பி வெளியே வர, அங்கே தர்ஷுவும் அஞ்சனாவும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டதும் மேலும் எள்ளும் கொள்ளும் வெடித்தது அவர் முகத்தில்.

அதைக் கண்ட காயத்ரி “நான் சப்பிடலைங்க. ஆபிஸ் போறதுனால அவங்க ரெண்டு பேர் தான் சாப்பிடுறாங்க”.

“ஏன் நீயும் கொட்டிக்க வேண்டியது தானே? சம்பாதிக்கிற மனுஷனுக்கு இங்கே மரியாதை கிடையாது. பொண்ணுங்களை பெத்துக்கச் சொன்னா பேய்களை பெத்து வச்சிருக்க” என்று எகிறி விட்டு வெளியேறினார்.

கையைப் பிசைந்தபடி கதவை சாத்திவிட்டு வந்தமர்ந்தவரை பார்த்த அஞ்சனா “விடுமா! விடுமா! வாழ்க்கையில எவ்வளவோ பார்த்திட்ட இது ஒரு விஷயமா?” என்றாள் சிரிப்புடன்.

அவளை முறைத்தவர் “அடியே! இதோட முடிஞ்சிடுச்சுன்னா நினைச்ச? வேதாளத்தை சொறிஞ்சு விட்டுட்ட. இதோட பாதிப்பை நான் தான் இனி தினமும் அனுபவித்தாகனும்”.

“என்னம்மா செய்வார் ? பேசிப்பேசியே கொல்வார் அதானே? காதுல பஞ்சை வச்சுக்கோ கொஞ்ச நாளைக்கு”.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
“இவரைக் கட்டிகிட்டதுக்கும் உன்னைப் பெத்ததுக்கும் நான் மூக்கில் பஞ்சை வச்சுக்க வேண்டியது தான்” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டார்.

அக்காவைப் பார்த்து கண்ணடித்த அஞ்சனா “நம்ம அம்மாவுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கில்ல” என்றாள்.

“வேண்டாம் அஞ்சனா இப்படியெல்லாம் பேசாத. நமக்கு நிம்மதி முக்கியம். பார்த்துக்கலாம் விடு”.

ஒரு சலிப்புடன் “என்னவோ பண்ணுங்க” என்று சொல்லி எழுந்து கொண்டாள்.

இருவரும் வீட்டை விட்டு கிளம்ப, பலத்த யோசனையுடனே ஆபிசை நோக்கி பயணித்தாள் தர்ஷனா.

அலுவலகம் சென்றடைந்த பின்னும் அனைவரிடமும் பேசினாள் தான் ஆனாலும், மனம் முழுவதும் எப்படி அவனிடம் சொல்வது என்கிற சிந்தனையே உழன்றது. அவனும் அவளை கவனித்துக் கொண்டு தான் இருந்தான். என்றும் இல்லாமல் இன்று என்னவோ அவள் சரியாக இல்லை என்று கணித்தான்.

மதிய வேளை அவளிடம் கேட்டுக் கொள்வோம் என்று விட்டு விட்டான்.

ஆர்த்தி தான் அடிக்கடி அவளை கவனித்துக் கொண்டு இருந்தாள். சற்று நேரம் வரை பொறுத்துப் பார்த்தவள் எழுந்து வந்து “என்னாச்சு தர்ஷ்? நீ இன்னைக்கு நார்மலாகவே இல்ல?”

அவளை நிமிர்ந்து பார்த்தவள் விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. அவளிடம் சொல்லி விட்டால் அலுவலகம் முழுவதும் பரவி விடும். தான் சொல்லாமலே மாறனுக்கு விஷயம் போய்விடும் என்பதால் “காலையில இருந்து தலைவலி. அது தான் கஷ்டமாக இருக்கு” என்று விட்டாள்.

சற்று நேரத்தில் மாறன் அவளை நோக்கி வந்து விட்டான்.

“டேபிலேட் எதுவும் எடுத்துகிட்டியா தர்ஷ்? உன் முகமே சரியில்ல” என்றான் கவலையாக.
அவன் அப்படிக் கேட்டதும் அவள் கண்கள் கலங்கி விட்டது. இந்த அன்பு தானே அவள் எதிர்பார்ப்பது. இது காலம் முழுவதும் தனக்கு கிடைக்குமா? தந்தை இவனை ஏற்பாரா என்கிற பயமும் எழுந்தது.

அவளுடைய கலங்கிய கண்களைப் பார்த்ததும் பதறி போனவன் “ரொம்ப வலிக்குதா? நீ வீட்டுக்கு கிளம்பிடு தர்ஷ். ஹாஸ்பிடல் போயிட்டு போறியா?” என்றான் பதற்றமாக.

மனதிற்குள் ஆர்த்தியை திட்டிக் கொண்டே “இல்ல பரவாயில்ல மாறன். என்னால சமாளிக்க முடியும்” என்றாள்.

“என்ன பேசுற நீ? உன் கண்ணும் முகமும் சுத்தமா சரியில்ல. நீ முதல்ல கிளம்பு” என்றான்.

அதற்கு மேல் அவனிடம் போராட முடியாமல் “சரி லஞ்ச்க்குப் பிறகு கிளம்புறேன்” என்று விட்டாள்.

அவனோ போக மனமில்லாமல் “எதுவாக இருந்தாலும் சொல்லு தர்ஷ்” என்று சொல்லிவிட்டேச் சென்றான்.

இவை அனைத்தையும் ஒருவன் தன் கணினியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் லேசாக ஒரு கோபம் இருந்தது. சற்று யோசனையுடன் தாடையை தடவிக் கொண்டே அமர்ந்திருந்தான்.

சிறிது நேரத்திற்கு பின் கணினியில் எதையோ தேடிப் பார்த்துவிட்டு, அவளை தன்னை வந்து பார்க்கும்படி அழைத்தான் கார்த்திக். அவன் அந்த கம்பனியில் கிளவுட் என்ஜினீயர்.

முக்கியமான வேலையை செய்து கொண்டிருந்தவளுக்கு அவனுடைய அழைப்பு அதிசயமாக இருந்தது. தான் செய்யும் பணிக்கும் அவனுக்கு எந்த சம்மந்தமும் இல்லை. பின் எதற்கு தன்னை அழைக்கிறான் என்று யோசித்தபடியே அவன் அறை முன் சென்று நின்றாள்.

மெல்ல கதவை தட்டியதும் “எஸ் கமின்” என்ற கம்பீரக் குரல் அழைத்தது.

மெதுவே உள்ளே நுழைந்தவளை பார்த்து தலையசைத்தவன் எதிரே இருந்த நாற்காலியை காண்பித்து “உட்காருங்க மிஸ் தர்ஷனா” என்றான் அழுத்தமான குரலில்.

அமைதியாக நாற்காலியில் அமர்ந்து கொண்டவள் “சொல்லுங்க மிஸ்டர் கார்த்திக். எதற்கு என்னை வர சொன்னீங்க?”

அவனோ கணினியில் கண்களைப் பதித்தபடி “நம்ம அலுவலகத்தில் இருப்பவர்கள் எல்லோருடனும் எனக்கு பழக்கம் இருக்கிறது. உங்களை மட்டும் தான் எனக்கு தெரியாது. சோ தெரிஞ்சுக்க விரும்பினேன்”.

இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்ல.

“நான் இங்கே சேர்ந்த நேரம் நீங்கள் ஆன் சைட்டில் இருந்தீர்கள். அதோடு நான் என் டீம் மெம்பர்ஸ் தவிர அதிகம் யாரிடமும் பழகவில்லை”.

மெதுவே தலையசைத்துக் கொண்டவன் “ஒ...ஓகே. நைஸ் மீட்டிங் யூ. என்னைப் பற்றி தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அயம் கார்த்திக். இங்கே கிளவுட் என்ஜினீயராக இருக்கிறேன்” என்றவன் எழுந்து வந்து கை கொடுத்தான்.

அவனுடைய செயலைக் கண்டு அவளிதழில் மெல்லியப் புன்னகை. தானும் எழுந்து கொண்டு அவனுக்கு கை கொடுத்துவிட்டு “ஓகே! நான் கிளம்பலாமா?” என்றாள்.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
அவனும் புன்னகையுடன் “எஸ்! எஸ்! நீங்க கிளம்புங்க” என்றான்.

அவளது மனம் தன்னை தெரிந்து கொள்ளவா வர சொன்னான்? என்று கேள்வி எழுப்பியது. அவன் பார்வையில் ஏதோவொரு செய்தி இருந்ததைப் போலவும் தெரிந்தது. இந்த அலுவலகத்தில் சேர்ந்ததிலிருந்து பார்த்திருக்கிறேன். அவன் இது போல யாரையும் அழைத்ததில்லை. என்னவாக இருக்கும் என்கிற சிந்தனையோடு தனது மேஜைக்கு வந்து சேர்ந்தாள்.

அப்போது அவளின் அடுத்த டெஸ்கில் இருந்த ஆர்த்தி மெல்ல எட்டிப் பார்த்து “கார்த்திக் ரூமுக்கு போயிட்டு வர? என்ன விஷயம்?”

“என்னை தெரிஞ்சுக்க விரும்பினாராம். அதுக்காக கூப்பிட்டாராம்”.

“வாட்? என்ன சொல்ற தர்ஷ்? அவர் இது மாதிரி எல்லாம் பீகேவ் பண்ணினதே இல்லையே?”

“அப்நார்மலா நடந்துக்கல ஆர்த்தி. பட் என்னவோ சரியாக இல்லேன்னு தோணுது”.

“விடு! அடுத்த முறை மாறன் கிட்ட சொல்லிடு பார்த்துக்கலாம்”.

“ம்ம்...ஓகே” என்றவள் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

அதன்பின்னர் கார்த்திகைப் பற்றி சுத்தமாக மறந்து போனாள். மதிய நேரம் எல்லோருமாக சேர்ந்து காண்டீனிற்கு செல்ல, அவள் மனம் மாறனிடம் எப்படியாவது வீட்டில் நடந்ததை சொல்ல வேண்டும் என்று எண்ணியது.

உள்ளுக்குள் ஒருவித தயக்கம் அவளை தடுமாற செய்து கொண்டிருந்தது. இதுவரை இருவருமே தங்களின் காதலை, பிடித்ததை நேரடியாக பகிர்ந்து கொண்டதில்லை. அப்படி இருக்கும் போது மாப்பிள்ளை பார்ப்பதை அவனிடம் எப்படி பகிர்ந்து கொள்ள முடியும். சாதாரண விஷயங்களை எளிதாக பேச முடிந்த அவளால் இதை எவ்வாறு அவனிடம் சொல்ல முடியும். அவன் தன்னை தவறாக நினைத்து விட்டால் என்ன செய்வது என்ற யோசனையுடனே உணவைக் கொறித்துக் கொண்டிருந்தாள்.

நண்பர்கள் பேசியது எதுவும் அவள் காதில் விழவில்லை. அவள் மனம் முழுவதும் மாறனிடமே இருந்தது. அவனுமே அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். என்றும் இல்லாமல் இன்று ஏதோவொரு சிந்தனையில் மூழ்கி இருந்தவளைக் கண்டு அவளிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.

அனைவரும் உணவை முடித்துக் கொண்டு கிளம்ப, அவளும் அவர்களுடன் செல்ல தயாரானாள். அப்போது அங்கு வந்த மாறன் “தர்ஷ்! உன்னிடம் பேசணும். நீ வெயிட் பண்ணு” என்றான்.

மற்றவர்கள் அனைவரும் “ஓஹோ!” என்று மெல்லிய சிரிப்புடன் இருவரையும் விட்டுவிட்டு அங்கிருந்து சென்றனர்.

அவனே பேச வந்ததில் சற்றே ஆறுதல் அடைந்தவள் “சொல்லுங்க மாறன்” என்றாள்.

அவளை ஆழ்ந்து பார்த்தபடி “நீ தான் சொல்லணும்? உன் மூளைக்குள்ள என்ன ஓடுது? ஏன் இவ்வளவு டல்லா இருக்க? ”

நேரடியாகக் கேட்டதும் உடனே சொல்லிவிட துடித்த மனதை அடக்கிக் கொண்டு “அது..வந்து எப்படி சொல்றதுன்னு தெரியல மாறன்” என்றாள் மெல்லிய குரலில்.

“தலைவலி இருக்குன்னு சொன்ன. வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடு. எல்லாம் சரியாகும்” என்று சொன்னவனை கண்கள் கலங்க பார்த்து “இல்ல எனக்கு ...” என்று இழுத்தவளை கை காட்டி நிறுத்தினான்.

புன்னகையுடன் “எனக்கு தெரியும் தர்ஷ். நீ கார்த்திக்கை பார்த்திட்டு வந்ததில் இருந்தே இப்படித்தான் இருக்க. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் அவன் வில்லன் இல்ல. அவன் சொன்ன மாதிரி உன்னைப் பற்றி தெரிஞ்சுக்கத் தான் விரும்பி இருப்பான். சோ இது ஒரு மேட்டரே இல்லை”.

அவள் திகைத்துப் போனாள். தான் சொல்ல வந்தது என்ன? அவன் புரிந்து கொண்டு பேசுவது என்ன? அதற்கு மேல் அவனிடம் வீட்டில் நடந்தவற்றை எப்படி சொல்ல என்று மேலும் குழப்பமானது.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் “இன்னுமா யோசனை? வர-வர நீ நிறைய யோசிக்கிற. சியர் அப் தர்ஷ்” என்றவன் அவளின் எண்ணம் என்னவென்றே கேட்காமல் எழுந்து கொண்டான்.

அவளும் வேறுவழியில்லாமல் எழுந்து கொண்டாள். மாப்பிள்ளை பார்க்கும் விஷயத்தை சொல்ல இது நேரமில்லை என்றுணர்ந்து, அவனோடு நடக்க ஆரம்பித்தாள்.

அப்பா இப்போது தானே தரகரிடம் பேசி இருக்கிறார். உடனே மாப்பிள்ளை அமைந்து விடாது. அதற்குள் அவனிடம் பேசிவிட வேண்டியது தான் என்று எண்ணிக் கொண்டு இயல்பிற்கு திரும்பினாள்.

அவள் கேண்டீணிற்கு சென்றது அங்கு மாறன் சென்று பேசியது, இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டே வருவது என்று அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

அவன் இதழில் மென்புன்னகை மலர்ந்திருந்தது. அவர்களை அவன் பார்த்த விதத்தில் கோபமோ, வருத்தமோ எதுவும் இல்லை. மிக இயல்பாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது மனமோ பலமாக சிந்தித்துக் கொண்டிருந்தது. சில நிமிட யோசனைக்குப் பிறகு சென்று மாறனிடம் பேசிவிட்டு வந்தான். மாறனின் பார்வை அடிக்கடி தர்ஷுவின் பக்கம் சென்று மீள்வதை கேலியாகப் பார்த்துவிட்டு தன்னிடத்திற்கு வந்து சேர்ந்தான்.