Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 2 | SudhaRaviNovels

அத்தியாயம் - 2

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,826
113
அத்தியாயம் - 2

ஒன்றரை வருடங்களுக்கு முன்பொரு நாள். துபாயில் தனது அபார்ட்மெண்டின் ஸ்விம்மிங் பூலில் இரவு எட்டரை மணிக்கு சுகமாய் நீந்திக் கொண்டிருந்தவனைத் தொலைப்பேசி தொல்லைபேசியாய்க் கலைத்தது.

போனை எடுக்காமலே அன்னையிடமிருந்துதான் என்பதைப் புரிந்து கொண்டவன், ஈரம் சொட்டசொட்ட வெளியில் வந்து அரை மணி நேரம் கழித்து அழைப்பதாகக் கூறி வைத்தான்.

மனமோ இந்த அழைப்பு எதற்காக என்பதைப் புரிந்து கொண்டது போல் சலிப்பைக் காட்டியது. திருமணமில்லாமல் வாழவே முடியாதா? ஏன் இப்படிப் படுத்துகிறார்கள் என்று புலம்பிக் கொண்டே வீட்டிற்கு வந்து குளித்துத் தயாராகிப் போனுடன் அமர்ந்தான்.

“சொல்லுங்கம்மா, எப்படி இருக்கீங்க? எல்லோரும் நல்லா இருக்காங்களா?”

“எல்லாரும் நல்லா இருக்கோம். எப்பவும் லேட்டாத்தான் வீட்டுக்கு வருவியா நிக்கி.”

“ஆமாம்மா. நீங்க என்ன இந்த நேரத்துக்குத் தூங்காம இருக்கீங்க?”

“ என்ன பண்ண சொல்ற! எல்லாம் உன்னைப் பத்தி கவலைதான். தூக்கம் வந்து தொலைக்க மாட்டேங்குது.”

“...”

“பேசமாட்டியே! சரி உடனே உன் மெயிலை செக் பண்ணு. பொண்ணு போட்டோ அனுப்பி இருக்கேன்.”

“அம்மா! சொன்னா கேட்க மாட்டீங்களா? நான் எதையும் பார்க்க மாட்டேன். எனக்குக் கல்யாணம் வேண்டாம்.”

“ஏண்டா நீயென்ன சாமியாராகப் போறீயா? இதோ பாரு! உனக்கு அம்மா மேல உண்மையா பாசம் இருந்தா ஒழுங்கா பொண்ணு போட்டோவை பார்த்துச் சம்மதத்தைச் சொல்லு.”

“சரி எனக்கு உங்க மேல உண்மையான பாசமில்லேன்னு வச்சுகோங்க.”

அவனிடம் பேசிக்கொண்டிருந்தவர் அவனது பதிலில் அயர்ந்து போய் ரீசிவரை மூடிக் கொண்டு “ எப்பா, என்னால முடியல. தலையால தண்ணிக் குடிக்க வைக்கிறான்.இவனை நான் செத்துடுவேன்னு சொல்லி மிரட்டி கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு பார்த்தா இவனே கொண்டு தள்ளுவான் போலருக்குப் போய் சாவுன்னு” என்று கணவரிடம் புலம்பினார்.

“எதுக்கும் அப்படிச் சொல்லிப் பாரேன் காயு”என்றார் சாம்பசிவம்.

அவரை ஒருமாதிரியாகப் பார்த்து “ஓஹோ!..அந்த சாக்குல என்னைப் பரலோகத்துக்கு அனுப்ப ட்ரை பண்றீங்களா?”என்று நக்கலாகக் கேட்டார்.

அதற்குள் நிகில் “ஹலோ...அம்மா! அம்மா! லைன்லதான் இருக்கீங்களா?”

“இருக்கேன்..இருக்கேன்! எங்கே போகப்போறேன். எனக்குத்தான் முடிவை கொண்டு வர மாட்டேங்குறானே அந்த ஆண்டவன்.”

“அம்மா! இப்படியெல்லாம் பேசாதீங்க. நான் உங்களுக்கு விசாவுக்கு ஏற்பாடு பண்றேன். ஒரு மூணு மாசம் இங்கே வந்து என்னோட இருங்க.”

அவனை எப்படிச் சமாதானப்படுத்தித் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைப்பது என்கிற யோசனையில் எழுந்து நடந்தவர் அங்கிருந்த டீபாயில் இடித்துக் கொள்ள வலியில் “ஸ்..ஸ்..ஆ..ஆ..” என்று அலறினார்.

அவர் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்த ஆகாஷும், நீரஜும் பாய்ந்து வந்து “என்னம்மா ஆச்சு?” என்று பதற்றத்துடன் வினவினர்.

இடித்துக் கொண்டதில் கையிலிருந்த போன் கீழே விழுந்து ஸ்பீக்கர் ஆன் ஆகி இருந்தது. காயத்ரியின் அலறலும் அதைத் தொடர்ந்து ஆகாஷ், நீரஜின் விசாரிப்பும் போன் வழியே நிகிலை எட்ட, அவன் படபடப்புடன் “அம்மா! அம்மா! என்ன ஆச்சும்மா?” என்று பதறத் தொடங்கினான்.

அவன் பதறுவதைப் பார்த்த காயத்ரி ஆகாஷிடம் போனை ஆப் செய்யச் சொன்னார் சைகையில்.

“எதுக்கும்மா போனை ஆப் செய்யச் சொன்னீங்க?” என்று கேட்டான் ஆகாஷ்.

“உன் தம்பி தவிச்சதைப் பார்த்தேயில்ல.இதை வச்சு அவனைப் பிடிச்சு மடக்கிடலாம் அதுக்குத்தான்.”

“எது டீபாயில் இடிச்சு கிட்டதை வச்சா?” என்று கேலியாகக் கேட்டான் நீரஜ்.

“நீ அப்பப்போ சாம்பசிவம் வாரிசுதான்னு நிருபிக்கிறடா”.

அப்போது நிகில் மீண்டும் அழைக்க “டேய்! யாரும் போனை எடுக்காதீங்க.நான் சொல்றதை கவனமா கேட்டுக்கோங்க. நான் பேசிட்டு இருக்கும்போதே மயக்கம் போட்டு விழுந்துட்டேன். நீங்க என்னை டாக்டர்கிட்ட தூக்கிட்டு போனீங்க. டாக்டர் மைல்ட் அட்டாக்ன்னு சொல்லி ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணிட்டார். ஒருமணிநேரம் கழிச்சுப் போனை அட்டென்ட் பண்ணுங்க. பதட்டத்தோட பேசணும் சரியா” என்றார்.

“அவன் பாவம்மா. இப்போவே என்னவோ ஏதோன்னு பயந்து போயிருப்பான்.”

“இதோ பாருங்க! அவன் மேல இரக்கப்பட்டீங்கன்னா அவனுக்குக் கல்யாணமே நடக்காது. நமக்கு இப்போ நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு. இதை வச்சு அவனை ஒத்துக்க வச்சிடலாம்.ஆனா, ஒன்னு எல்லோரும் ஒழுங்கா நடிக்கணும்.”

அதன்பின்னர் காயத்ரி சொல்லியபடி நிகிலின் அழைப்பை நிராகரித்தனர். ஒரூமணி நேரம் சென்ற பின்னர் மீண்டும்மீண்டும் அவன் அழைத்துக் கொண்டேயிருக்க “ சரி, போனை எடுத்து நான் சொன்ன மாதிரி சொல்லுடா நீரஜ்” என்றார்.

“ஹலோ! ஹலோ! யார் லைன்ல இருக்கீங்க? அம்மாவுக்கு என்ன ஆச்சு? ஏன் யாருமே போனை எடுக்கல?”

“நிக்கி! நீரஜ் பேசுறேன்டா.நான் சொல்றதை பதட்டப்படாம கேளு. அம்மா உன்கிட்ட பேசிட்டு இருக்கும்போதே மயங்கி கீழே விழுந்துட்டாங்க.”

“என்னது! மயங்கிட்டாங்களா?என்னடா நல்லாத்தானே இருந்தாங்க.திடீர்ன்னு என்ன உடம்புக்கு?”

“தண்ணியைத் தெளிச்சு பார்த்தும் எழுந்திரிக்கவேயில்லடா. பயந்துபோய் டாக்டர்கிட்ட தூக்கிட்டு போனோம். அவர் செக் பண்ணிட்டு மைல்ட் அட்டாக்னு சொல்லி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இன்னைக்கு நைட் அப்சர்வேஷன்ல இருக்கனும்-னு சொல்லிட்டாருடா” என்றான் கரகரப்புடன் கூடிய குரலில்.

“நீரு! நீரு! கவலைப்படாதேடா அம்மாவுக்கு ஒண்ணுமில்ல.நாளைக்குக் காலையில எழுந்துடுவாங்க.எனக்கு தகவல் சொல்லிக்கிட்டே இருடா.நான் இப்போவே டிக்கெட் கிடைக்குதான்னு பார்க்கிறேன்.”

“சரிடா..நான் சொல்றேன்” என்று போனை வைத்தான்.

அவனைப் பார்த்த காயத்ரி “டேய் நீரூ! எப்படிடா இந்த மாதிரி ஒரு நடிகனை உள்ளுக்குள்ள இத்தனை நாள் மறைச்சு வச்சிருந்த? என்னமா நடிக்கிற!” என்றார்.

“ஆமாம் அத்தை. கமல் எல்லாம் தோத்தார்” என்றாள் நீரஜின் மனைவி ஆர்த்தி.

“ சரி, சரி..அடுத்து என்ன பண்றதுன்னு யோசனை பண்ணுங்க”என்றார் சாம்பசிவம்.
 
  • Like
Reactions: Radhi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,826
113
“உடனே ஏதாவது ஒரு பெரிய ஹோட்டல்ல ரூமை போடுங்க.நம்ம பக்கத்துவீட்டு ஆளுங்களுக்குத் தெரியிற மாதிரி என்னைத் தூக்கிட்டுப் போய்க் கார்ல ஏத்துங்க.இன்னைக்கு நைட் நாம எல்லாம் அந்த ஹோட்டல்லையே இருப்போம்.”

“ஹோட்டல்ல ரூம் போடணுமா? எதுக்கு அத்தை?” என்றாள் அகல்யா.

“உன்னைத் தூக்கிட்டு போகனுமா? என்னம்மா விளையாடுறியா?”என்றான் ஆகாஷ்.

“ஆமாண்டா! எனக்கு ஆசைபாரு. நாம நிகில்கிட்ட என்ன சொல்லி இருக்கோம். டாக்டர்கிட்ட தூக்கிகிட்டு போனோம். ஒருநாள் ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ண சொன்னார்-னு சொல்லி இருக்கோம்.ஓருவேளை அவன் கிளம்பி வந்துட்டான்னு வை. நாம சொன்னதை உண்மைன்னு நிரூபிக்க வேண்டாமா?”

“அத்தை சூப்பர் கிரிமினல் மூளை உங்களுக்கு” என்றாள் ஆர்த்தி.

“நீ என்னைப் புகழுறியா இல்ல கேலி பண்றியா?”

“ச்சே..ச்சே..மருமக உண்மையைத்தான் சொல்லுது” என்றார் சாம்பசிவம்.

“சரிம்மா.நான் ரூம் புக் பண்றேன்.நீங்க எல்லாம் ரெடி ஆகுங்க.”

“ம்ம்..நல்ல பெரிய ஹோட்டலா பார்த்து ரூம் போடுடா.நான் இதுவரைக்கும் பைவ்ஸ்டார் ஹோட்டல்ல தங்குனதே இல்ல.”

“அம்மா! பைவ்ஸ்டார் ஹோட்டலா வேணும். அதுக்கு எவ்வளவு ஆகும் தெரியுமா?”

“ஏண்டா ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருந்தா எவ்வளவு செலவு பண்ணி இருக்கணும். அதை இதுக்குப் பண்ணுங்கடா. நாங்களும் ஒருநாள் என்ஜாய் பண்றோம்.”

“இதுமட்டும் உம்புள்ளைக்குத் தெரியனும் அப்போ இருக்கு.”

“நீங்க வாயைத் திறக்காம இருந்தாலே போதும்.”

அடுத்த அரைமணி நேரத்தில் ராடிசன் ப்ளுவில் ரூம் போட்டு அனைவரும் அங்கே சென்றனர். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் நிகிலை அழைத்து நிலைமை அப்படியேத்தான் இருக்கிறது என்றும், கொஞ்சம் முன்னேற்றம் என்றும் கூறிக் கொண்டே இருந்தனர்.

காலையில் எழுந்த காயத்ரி அங்குள்ள உணவு வகைகளை ஒரு பிடிபிடித்துக் கொண்டிருந்தார்.

பதினொரு மணியளவில் பெரிய ஐஸ்கிரீம் ஒன்றை ஆர்டர் செய்து அதை ஆனந்தமாகச் சுவைத்துக் கொண்டிருந்தார்.

“அம்மா! இப்படியே உன்னை நிகில் பார்க்கணும்.சூப்பர் சீனா இருக்கும்” என்றான் ஆகாஷ்.

“ஏண்டா உனக்கு இந்தக் கொலைவெறி? நானே இப்போதான் பைவ்ஸ்டார் ஹோட்டலை என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கேன். இப்போ வந்து பீதியைக் கிளப்பிகிட்டு.”

அப்போது அங்கு அவசரமாக வந்த நீரஜ் “அம்மா! நிகில் வந்து இறங்கிட்டேன்னு போன் பண்ணினானம்மா” என்றான் பதட்டத்துடன்.

கையிலிருந்த ஐஸ்கிரீம் மேலெல்லாம் கொட்ட“என்னது! வந்துட்டானா?இவ்வளவு சீக்கிரமா எப்படிடா வந்தான்?இப்போ என்னடா பண்றது?” என்றார் அதிர்ச்சியில்.

“ஆமாம் இப்போ வந்து கேளுங்க! அவன் நேரா ஹாஸ்பிட்டலுக்கே வரேன்றான்.இங்கே வர சொல்லவா?”என்றான் நக்கலாக.

“ஆகாஷ்! உன் பிரெண்ட் ஒருத்தி ஹாஸ்பிடல் வச்சு இருக்காளே. அவளுக்கு உடனே போனை போடு.அவகிட்ட சொல்லிட்டு என்னை அங்கே கொண்டு சேரு.”

“ஐயோ! அது மெட்டர்னிட்டி ஹாஸ்பிட்டல்மா.”

“ஏண்டா அதுல என்னைச் சேர்க்க மாட்டாங்களா?”

தலையிலடித்துக் கொண்ட சாம்பசிவம் “இப்போவாவது நான் சொல்றதை கேளுங்கடா. ஆகாஷ்! நீ அகல்யாவை கூட்டிகிட்டு உடனே வீட்டுக்குக் கிளம்பு. நீரஜ்! நீ நிகிலை நேரா வீட்டுக்குப் போகச் சொல்லு. டாக்டர் அம்மாவை டிஸ்சார்ஜ் பண்ண சொல்லிட்டார்-னு சொல்லு. நாங்க கிளம்பி வீட்டுக்கு வந்துகிட்டே இருக்கோம்ன்னு சொல்லு .”

“சரிப்பா!ஆனா, ஹாஸ்பிட்டலில் இருந்து வர அம்மாவுக்கு ட்ரிப்ஸ் எல்லாம் ஏத்தி இருப்பாங்க இல்ல. அப்போ அம்மா கையில ஒண்ணுமே இல்லாம போனா சரி வராதே.”

“ஆமாம்! அதை மறந்தே போயிட்டேன் பாரு. ஆகாஷ்! நீ உன் பிரெண்டுக்குப் போனை போட்டு எப்படிப் போடுறதுன்னு கேட்டு அதை வாங்கிக் கொடுத்திட்டு போ.நாங்க போட்டு அழைச்சிட்டு வரோம்” என்றார் மகனைக் கண்டு கண்ணடித்தபடி.

“ஐயோ! ஊசியா? எனக்கு வேண்டாம். டேய்! என்னை விட்டுடுங்கடா! நான் பாவம் இல்ல.”

“ம்ம்..அதை நடிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே யோசிச்சு இருக்கணும்.இப்போ அனுபவி” என்றார் சாம்பசிவம்.

அதன்பின்னர் பேசியபடி அனைத்தும் நடந்திருக்க நிகில் வீடு போய்ச் சேர்ந்து ஒன்றைரை மணி நேரம் கழித்துக் காயத்ரியை அழைத்துச் சென்றனர்.

அன்னையை மூன்று வருடங்கள் கழித்து இப்படியொரு நிலையில் பார்ப்போம் என்று எதிர்பார்க்காத நிகிலுக்கு, அவருடைய உடல் மெலிவும், சோர்ந்த நிலையும் குற்ற உணர்ச்சியைத் தூண்டியது.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,826
113
அவர் அருகில் சென்றமர்ந்தவன் “என்னம்மா இது! உடம்பை பார்த்துக்க மாட்டீங்களா?”

அவனைப் பார்த்து சோர்வாகச் சிரித்தவர் “நான் படுக்கலேன்னா நீ வந்து இருப்பியா.மூணு வருஷமா வராமா தானே இருந்த” என்றார்.

அப்போது உள்ளே வந்த ஆர்த்தி ஒரு டம்ளர் கஞ்சியை எடுத்து வந்து கொடுத்தாள்.

“என்னதும்மா இது?”

“கஞ்சி அத்தை. டாக்டர் ஒருரெண்டு, மூணு நாளைக்கு ஜீரணம் ஆகுற மாதிரி கஞ்சி மட்டும் கொடுங்கன்னு சொன்னார் அத்தை” என்றாள்.

“ம்ம்”என்று முனங்கியவர் “ஆர்த்தி! என் கழுத்துல ஏதோ ஊருற மாதிரி இருக்கு என்னன்னு பாரேன்” என்றார்.

அவள் கிட்டே வந்து பார்க்கும்போது “உங்க மாமா சொன்னாரா கஞ்சி கொடுக்கச் சொல்லி. இந்த எகத்தாளம் எல்லாம் அவருக்குத் தான் தெரியும். இதெல்லாம் முடியட்டும் அவருக்கு ஒரு மாசத்துக்குக் கஞ்சிதான்.”

“இல்ல அத்தை..அது..வந்து..”

“சரி,சரி ரொம்ப இழுக்காதே! இவன் போன பிறகு சாப்பிட ஏதாவது கொண்டு வா. பசி உயிர் போகுது.”

“சரிம்மா நீங்க ரெஸ்ட் எடுங்க.நான் ஹாலில் இருக்கேன்” என்று எழுந்தவனைத் தடுத்து “நிக்கி கண்ணா, நீ வந்ததுதான் வந்துட்டே.அப்படியே நான் சொன்ன பொண்ணைப் பாரு.பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்.”

“என்னம்மா இது! எந்த நேரத்துல என்ன பேசிட்டு இருக்கீங்க? முதலில் உங்க உடம்பு குணமாகட்டும்.மத்ததெல்லாம் அப்புறம் பார்க்கலாம்.”

“இல்லடா! உனக்குக் கல்யாணம் பண்ணாம எனக்கு உடம்பு சரியாகவே ஆகாது.இப்படியே போனா நீ அடுத்து எனக்குக் காரியம் பண்ணத்தான் வரணும்.”

அவரது வார்த்தையில் அதிர்ந்து போனவன் “என்னம்மா..என்னம்மா..இப்படி..சரி உங்களுக்கென்ன நான் கல்யாணம் பண்ணிக்கணும் அவ்வளவு தானே. சரி பண்ணிக்கிறேன்.”

அவனது சம்மதத்தில் அதிர்ச்சியாகி நெஞ்சை பிடித்துக் கொண்டு தலையணையில் சாய்ந்துவிட, அதைப் பார்த்த ஆர்த்தி “அத்தை! அத்தை! என்ன பண்ணுது?” என்று அவரருகில் சென்று பார்க்க “என் பெர்பார்மன்ஸ் அவ்வளவு நல்லாவா இருக்கு.உடனே சம்மதம் சொல்லிட்டான்”என்றார் அவள் காதில்.

“சூப்பர் போங்க! என் வாழ்நாளில் இப்படி ஒரு பெர்பாமான்சை பார்த்ததேயில்லை.”

“நல்லவேளை அதிகநாள் என்னைப் பட்டினி போடாம காப்பாத்திட்டான்.”

“என்ன ஆச்சு அண்ணி அம்மாவுக்கு.ஏதோ சொல்றாங்களே?”

“ஒண்ணுமில்ல நிக்கி. அவங்களுக்கு ரொம்பச் சந்தோஷமாம்.உடனே எல்லா ஏற்பாடையும் செய்யணும்னு சொல்றாங்க.நீங்க திரும்பி போறதுக்குள்ள கல்யாணத்தை முடிக்கணும்னு சொல்றாங்க.”

நிகில் ஒத்துக் கொண்டதில் வியந்து போன சாம்பசிவம் “உங்க அம்மாவ என்னவோன்னு நினைச்சேன்டா ஆகாஷ். சாதிச்சிட்டாளே!” என்றார்.

அதன்பின் நேரத்தை கடத்தாமல் மடமடவென்று திருமண வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தனர். தாமதமாக்கினால் நிகில் மறுத்துவிடுவானோ என்கிற பயத்தில் அனைவரையும் விரட்டி கல்யாண வேலைகளைச் செய்ய வைத்தார் அன்னை காயத்ரி.