Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 19 | SudhaRaviNovels

அத்தியாயம் - 19

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம்- 19

வர்ஷினியை கீழே விடாது தூக்கிக் கொண்டே தன்னறைக்குச் சென்றான். அவளோ அவனிடமிருந்து விடுபட போராட, அதை கண்டுகொள்ளாமல் அசால்ட்டாக சமாளித்து அங்கிருந்த சோபாவில் அமர வைத்தான். அவர்களின் பின்னோடு வந்த தான்யா அறைக்குள் செல்ல தயங்கியபடி நிற்க, “தான்யா உள்ளே வாம்மா” என்றழைத்து விட்டு “மதுவை பார்த்துக்கோ வரேன்’ என்று சொல்லி விட்டு அங்கிருந்து வெளியேறினான்.

அவன் வெளியேறியதும் கோபத்தோடு எழுந்து நின்ற வர்ஷினியை லேசாக அணைத்துக் கொண்டவள் “அக்கா! கோபப்படாதே! அமைதியா இரு” என்று சமாதானப்படுத்தினாள்.

“நம்மை சுற்றி என்ன நடக்குது தானு? ஒருமுறை நாம இழந்தது எல்லாம் போதாதா? எதுவுமே நடக்காத மாதிரி வந்து நின்னா நமக்கு நடந்தது இல்லேன்னு ஆகிடுமா?”

அவளின் பேச்சைக் கேட்டு சங்கடத்துடன் நின்ற தான்யா “நீ சொல்றது எல்லாம் சரி அக்கா. ஆனா இங்கே நடக்கிறதை பார்த்தா நம்மை மாதிரி மாமாவும் பெரிய சுழலில் சிக்கி இருப்பாருன்னு தோணுது. அவருக்கு நமக்கு நடந்த எதுவுமே தெரியாதுன்னு தோணுது”.

“எதுவேணா இருக்கட்டும் தானு. நமக்கு இது வேண்டாம். என்னால இங்கே இருக்க முடியாது. இப்போவே மூச்சு முட்டுது” என்றாள் கலங்கிய கண்களுடன்.

அவளை அணைத்துக் கொண்ட தான்யா “எனக்கு உன்னை நல்லா புரியுது அக்கா. நீ சொல்கிற எல்லாம் உண்மை தான். எனக்குமே இந்த சூழ்நிலையை எப்படி ஏத்துகிறதுன்னு புரியல. ஆனா ஒன்று மட்டும் புரியுது. மாமா பக்கம் நம்மிடம் சொல்லாத ஒரு ஞாயம் இருக்கு. அதுக்காக முயற்சி செய்து பார்க்கலாமே? முடியலேன்னா கிளம்பி போயிட்டே இருப்போம்”.

தங்கையை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் அத்தனை வலி. அவள் மனது நிச்சயமாக தன்னால் சமாளிக்க முடியாது என்று சொன்னது. எத்தனைக்கு எத்தனை அவனை காதலித்தாலோ இப்போது அது வெறுப்பாக மாறி இருக்கிறது. நிச்சயமாக அவனுடன் ஒரே அறையில் தன்னால் தங்க முடியாது என்றே தோன்றியது. இதை எல்லாம் தான்யாவிற்கு புரிய வைக்க முடியாதே என்று யோசனையாக பார்த்தாள்.

அந்நேரம் கதவு லேசாக தட்டப்பட, அவசரமாக இருவரும் ஒருவரை பார்த்தனர். அப்போது சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டு இருவரையும் பார்த்து புன்னகை சிந்தியபடி வந்தார் தாதி.

இருவரும் அவரை ‘வா’வென்று கூட அழைக்காமல் அமைதியாக பார்த்தபடி இருந்தனர். அவரோ அதை கண்டுகொள்ளாமல் “உட்காருங்கம்மா! பயணம் சௌகரியமா இருந்ததா?” என்றார்.

வர்ஷினியோ அவரின் கேள்விக்கு பதிலளிக்காமல் “இவ்வளவு பெரியவங்க நீங்க இருந்தும் உங்க பேரன் செய்ததை எல்லாம் எப்படி அனுமதித்தீங்க? ஒரு பெண்ணோட மனசு என்ன அவ்வளவு இளக்காரமாகவா போயிட்டு?” என்றாள் கோபமாக.

அவளையே பரிவுடன் பார்த்துக் கொண்டிருந்தவர் “உன்னுடைய இழப்பு ரொம்ப பெருசும்மா. நானோ என் பேரனோ என்ன பேசினாலும் செய்தாலும் அதை சரி செய்ய முடியாது. ஆனா அவன் உன் மேல வைத்த காதலை மட்டும் சந்தேகப்படாதே. அதில் துளி அளவும் பழுதில்லை”.

இகழ்ச்சியாக சிரித்து “ஆமாம் உண்மையான காதல் தான். ஒருத்தியை ஏமாத்திட்டு அந்த குற்ற உணர்வு கூட இல்லாமல் இன்னொருத்தியையும் கட்டிகிட்ட அந்தக் காதல் புனிதமானது தான்”.

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவர் “நான் இப்போ என்ன சொன்னாலும் உன்னால நம்பவோ ஏற்றுக் கொள்ளவோ முடியாதும்மா. எல்லாவற்றிற்கும் காலம் தான் பதில் சொல்லணும்” என்றவர் தான்யாவிடம் “இங்கே உங்களுக்கு நான் இருக்கேன். எதுனாலும் என்னை கேளுங்க. இந்த வீடு உங்களுடைய உரிமை. யார் எது பேசினாலும் தைரியமா கடந்து போங்க. நானும் என் பேரனும் இனி உங்களை எந்த துயரமும் நெருங்காமல் பார்த்துக்குவோம்”.

வர்ஷினி சலிப்புடன் வேறுபுறம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“நீ என்னோட தங்கிக்கலாம்” என்றார் தான்யாவிடம்.

பட்டென்று திரும்பியவள் “எனக்கும் அவளுக்கும் வேற ரூம் கொடுங்க. நானும் அவளும் தங்கிக்கிறோம். என்னால இந்த ரூமில் தங்க முடியாது. மூச்சு முட்டுது”.

அந்நேரம் கூர்மையான பார்வையுடன் உள்ளே வந்தான் சித்தார்த். அவனைக் கண்டதும் தான்யா பயத்துடன் அக்காவை பார்த்தாள்.

“தாதி! தான்யாவை உங்க கூட தங்க வைப்பது தான் நல்லது” என்றவனது பார்வை அழுத்தமாக வர்ஷினியின் மீது விழ “உனக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ நீ இந்த அறையில் தான் தங்கியாகனும்”.

அதைக் கேட்டதும் சீறலுடன் “அப்போ உங்க இன்னொரு மனைவி எங்கே தங்குவாங்க? என்னால இங்கே தங்க முடியாது” என்றாள் ஆங்காரமாக.

ஆழ்ந்த பார்வையுடன் “எனக்கு மனைவி என்றால் அது நீ மட்டும் தான். என்னுடைய மனைவி என் அறையில் தான் இருக்கணும்” என்றவன் தாதியிடம் “நீங்க தான்யாவை அழைச்சிட்டு போங்க. எனக்கு இவளிடம் சில விஷயங்கள் பேசணும்” என்றான்.

அவனை புரிந்து கொண்ட தாதி தான்யாவை அழைத்துக் கொண்டு வெளியேறினார். அவர்கள் வெளியேறியதும் கதவடைத்து விட்டு வந்தவன் அவள் முன்னே சென்று நின்றான். வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டு நின்றாள். மெல்ல அவளின் தோள்களைப் பற்றி அங்கிருந்த படுக்கையில் அமர வைத்தான். அவன் கை பட்டதுமே உடல் இறுகிப் போக “என்ன பேசப் போறீங்க?” என்றாள் இறுகிய குரலில்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அவனோ அவளது கேள்விக்கு பதிலளிக்காது கீழே அமர்ந்து அவளது கட்டை காலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கண்களில் கண்ணீர் தடம். அவளின் பாதத்தில் இருந்து எழும் கொலுசின் ஓசையை எத்தனை நாட்கள் ரசித்திருப்பான்.அந்த மென்பாதங்கள் சிதைந்து போனதை எண்ணி உடைந்து போனான். அவன் கைகள் தனது கட்டை கால்களைப் பற்றியதுமே அதை தள்ள முயன்று அவனை முறைத்தாள். ஆனால் அவனது கண்களில் வழிந்த கண்ணீர் அவளை யோசிக்க வைத்தது.

“என்ன அடுத்த டிராமாவா? என் கிட்ட கொடுக்க இனி எதுவுமில்லை. இருந்த அனைத்தையும் பறிச்சுகிட்டு எதுக்கு இந்த கண்ணீர்?”

அவளை நிமிர்ந்து பார்க்காமல் கண்ணீரை சிந்தியபடியே அமர்ந்திருந்தவனை முறைத்து “ஏன்? என்னால உங்களுக்கு என்ன ஆகணும்? இத்தனை நாள் இல்லாம இப்போ எதுக்கு என்னை தேடி வந்தீங்க?”

“நான் என்ன சொன்னாலும் அதை உன்னால ஏற்றுக் கொள்ள முடியாது சோட்டி” என்றவனை “சொல்லாதீங்க அப்படி கூப்பிடாதீங்க” என்று கத்தினாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தவனின் விழிகளில் அத்தனை வலி.

“உன்னை அப்படி விட்டுட்டுப் போனது தப்பு தான். சூழ்நிலை மட்டும் தான் அதற்கு காரணம்னு சொன்னா நிச்சயமாக உன்னால ஏற்றுக் கொள்ள முடியாது. நீ நம்பவும் மாட்ட. உனக்கு நடந்த எதுவுமே எனக்கு தெரியாது சோட்டி. உன் வலியைப் போல எனக்கும் நிறைய வலிகள் உண்டு. உன்னிடம் நான் எதையும் பேசி என்னை நிரூபிக்க முயலப் போவது இல்லை. எனக்காக சில நாட்கள் பொறுமையாக இரு. உன்னுடைய இழப்பிற்கு, என்னுடைய செயலிற்க்கான அனைத்து விஷயங்களும் வெளியே வரும்”.

“எங்களை விட்டுடுங்க! நாங்க எங்க வாழ்க்கையை அமைதியா வாழ்ந்திட்டு போயிடுறோம்”.

கீழே அமர்ந்திருந்தவன் மெல்ல எழுந்து நின்று அவளது முகவாயை நிமிர்த்தி “நீ என் மனைவி சோட்டி. நம்ம வாழ்க்கையில் நடந்த அனர்த்தங்களை சரி செய்து நல்லா வாழனும்” என்றான் அழுத்தமாக.

அவனது கையைத் தட்டி விட்டவள் “சொன்னா புரிஞ்சுக்க மாட்டிடிங்களா? ஊருக்காக நீங்க போடும் வேஷத்தில் என்னை எதுக்கு ஆட வைக்கிறீங்க? அது தான் ஊர் அறிய ஒருத்தியை தாலி கட்டி வச்சிருக்கீங்களே. அவளை வச்சு டிராமாவை போட வேண்டியது தானே?”

அதுவரை அவளிடம் அமைதியாக பேசிக் கொண்டிருந்தவன் நன்றாக தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று அவளது கன்னங்களை அழுந்தப் பற்றி “நான் சொல்றதை கேட்பதை தவிர உனக்கு வேற ஆப்ஷனே இல்லை. நீ இங்கே தான் இருக்கணும் நான் சொல்றபடி தான் கேட்கணும். காட் இட்” என்று கூறி கன்னத்தை விட்டான்.

அவனது பேச்சும் செயலும் அவளுள் பயத்தை கொடுக்க, மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்தாள். அவனோ அவளது பார்வையில் உடைந்து போய் மனதிற்குள் ‘சாரி சோட்டி! எனக்கு இப்படி செய்வதை தவிர வேறவழியில்ல’ என்று சொல்லிக் கொண்டான்.

அவளோ அவனது இந்த முகத்தை எதிர்பார்க்காமல் உள்ளுக்குள் பயத்துடன் நின்றிருந்தாள்.

“யார் என்ன சொன்னாலும் நீ அதை எல்லாம் மனதில் எடுத்துக்காம இந்த வீட்டின் உரிமையுள்ளவளா நிமிர்ந்து நில். எதற்காகவும் பயப்படாதே” என்று கூறி விட்டு கதவை திறந்து கொண்டு சென்று விட்டான்.

அவன் சென்றதும் தொப்பென்று அங்கிருந்த படுக்கையில் அமர்ந்தவளின் மனம் பந்தய குதிரை போல ஓடிக் கொண்டிருந்தது. அவனது விழிகளில் கண்ட கண்ணீர் நிச்சயம் பொய்யானதில்லை என்று மனம் அடித்துச் சொன்னது. ஆனால் தன்னை அம்போவென விட்டுவிட்டு சென்றவன் திடீரென ஏன் வந்து நிற்கிறான் என்று மனம் தவித்தது. அதே சமயம் அவனால் இழந்தவைகளை எல்லாம் நினைவிற்கு வர லேசாக இளகி இருந்த மனம் இறுகி போய் விட்டது.

அதே நேரம் கேஷ்வி பட்டேலை சித்தார்த் எங்கே வைத்திருக்கிறான் என்று தெரியாமல் நானாஜி தவித்துக் கொண்டிருந்தார். கேஷ்வியின் பெற்றோர்கள் அவர்களின் முன் தான் இருந்தனர். தினுவோ மிகுந்த கோபத்தோடு இருந்தான். தங்கள் வாழ்வில் சந்திக்கும் முதல் தோல்வி. அதை தாளாமல் கோபத்தோடு தந்தையை முறைத்துக் கொண்டிருந்தான். தேவ் மட்டும் மிக அமைதியாக ஒரு பார்வையாளராக அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் இருந்தே தந்தையின் செயல்களிலும், அதற்கு ஒத்துப் போகும் தம்பியையும் அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதை சொல்ல முயன்றாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் அவரை அதட்டி தங்களின் அதிகாரத்திற்கு உட்படுத்தி வைத்தனர். அதிலும் சித்தார்த்தின் விஷயத்திலும், நீரஜின் விஷயத்திலும் அவர்கள் நடந்து கொண்டது அறவே பிடிக்கவில்லை. அவரால் அவர்களுக்கு உதவ முடியாத நிலை.

“எங்க பெண்ணுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? உங்களை நம்பித்தானே அவனுக்கு பெண்ணை கொடுத்தோம்? அவ எங்கே?”

யோசனையுடன் கண்களை மூடித் திறந்தவர் “என்னை நம்பித்தானே கொடுத்தீங்க? என்னை நம்பினவங்களை நான் எப்போதும் கை விட மாட்டேன். இன்னைக்கு ராத்திற்குள்ள உங்க பொண்ணு உங்க கிட்ட இருப்பா” என்றார் நானாஜி.

“புதுசா ஒருத்தி மனைவின்னு வந்திருக்காளே. அதிலும் சட்டபூர்வ மனைவியா. அப்போ எங்க பெண்ணோட நிலை?”

பட்டென்று நிமிர்ந்து பார்த்தவர் “என்னால ஒருமுறை தான் பதில் சொல்ல முடியும். தினு இவங்களை வெளியே அனுப்பிட்டு வா” என்றார் கடுமையாக.

அவர் சொல்வதற்காகவே காத்திருந்தவன் அவர்களுக்கு கதவை நோக்கி கையை காட்டினான். அப்படியும் அவர்கள் நகராமல் இருக்கவும் அருகே சென்று அவர்களை நகர்த்திச் சென்றான்.

“பப்பா நீங்க செய்றது நல்லாயில்லை. சித்தார்த் நல்ல பையன். அவன் வாழ்க்கையில் நீங்க ஏன் விளையாடுறீங்க?” என்றார் தேவ்.

யோசனையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவர் “நீ என் ரத்தமான்னே சந்தேகமா இருக்கு. பிடிக்கலேன்னா உனக்கு கொடுத்த வேலையைப் பார்த்துகிட்டு ஓரமா இரு” என்றார் கடுமையாக.

அவர் சொன்னதில் முகம் கருத்துப் போக அங்கிருந்து வேகமாக வெளியேறினார். அந்நேரம் அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வந்த தினு ‘அவன் ஏன் போறான்?” என்றான்.

“அவனை விடு! நான் சொன்ன மாதிரி இன்னைக்கு நைட்டுக்குள்ள கேஷ்வி இங்கே வந்தாகணும். அதற்கான வேலையைப் பார். இங்கேயும் சிலவற்றை நாம செய்யணும்” என்றார் ஆழ்ந்த சிந்தனையுடன்.

“பப்பா சிவதாஸ் நம்ம விவகாரத்தில் தலையை நீட்டுறான். அது நல்லதா படல எனக்கு”.

“ம்ம்...பார்த்தேன். அவன் உள்ளே வருவது நமக்கு இடைஞ்சல். விஷயம் தெரிஞ்சதுமே அவனை இங்கிருந்து அகற்ற ஏற்பாடு செஞ்சிட்டு இருக்கேன்” என்றார்.

“ஓகே பப்பா! நான் கேஷ்வி விஷயத்தை பார்த்துகொள்கிறேன்” என்று கூறி வெளியேறினான்.

அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் தவித்துக் கொண்டிருந்தாள் கேஷ்வி. தான் யாரால் கடத்தப்பட்டிருக்கிறோம் என்கிற சிறிய க்ளு கூட கிடைக்காது, உள்ளுக்குள் பயத்துடனும் ஏமாற்றத்துடனும் அறைக்குள் நடந்து கொண்டிருந்தாள். வர்ஷினியை தன் ஆட்கள் கடத்தி இருப்பார்களா என்று அவளைப் பற்றிய எண்ணமும் சிந்தனையில் எழுந்தது. தன் நிலையே என்னவென்று தெரியாமல் இருக்க, அவளை பற்றிய புகைச்சலில் இருந்தாள்.

என்னை விட அழகில் சுமாராக இருக்கும் அவளிடம் எப்படி ஆசை வைத்தான் என்றெண்ணி குமைந்து போனாள். இங்கிருந்து தப்பித்ததும் அவனது வாழ்க்கையில் இருந்து அவளை அகற்றியே ஆக வேண்டும் என்றெண்ணிக் கொண்டாள்.

அந்நேரம் வெளியே ஏதோ சப்தம் கேட்க, என்ன நடக்கிறதென்று புரியாமல் அறைக் கதவருகே நின்று கவனித்தாள். அங்கே சண்டை நடப்பதைப் போல தோன்ற, அவள் இதழில் மெல்லிய புன்னகை. நானாஜி ஆட்களை அனுப்பி விட்டார் என்பதை புரிந்து கொண்டாள். அவசரமாக அங்கிருந்து தள்ளி நின்று அவர்களின் வருகைக்காக காத்திருந்தாள். சற்று நேர போராட்ட்டதிற்குப் பிறகு படாரென்று கதவு திறக்கப்பட படபடவென்று ஆட்கள் வந்து நின்றனர். அவளைக் கண்டதும் ஒருவன் போனை எடுத்து தினுவிற்கு அழைத்து “மேம் இங்கே தான் இருக்காங்க” என்று கூறி விட்டு வைத்தான்.

அவளை உடனே அழைத்து வரும்படி கூறி வைத்தவன் தந்தையிடம் சென்று விவரங்களை கூறினான். அதே நேரேம் சித்தார்த்திற்கும் கேஷ்வியை அவர்கள் கண்டு பிடித்த தகவல் கொண்டு சேர்க்கப்பட்டது.

தாதியின் அறையில் இருந்தவன் யோசனையுடன் எழுந்து அங்குமிங்கும் நடக்க ஆராம்பித்தான்.

“என்னாச்சு சித்து?”

“கேஷ்வி வரப் போறா தாதி. நிச்சயமா அவ சும்மா இருக்க மாட்டா. மது கிட்ட பிரச்சனை செய்து அவளை காயப்படுத்துவா”.

“ம்ம்...உன் மதுவும் நல்ல மனநிலையில் இல்ல சித்து. நான் பார்த்துகிறேன். நீ நடக்க வேண்டியவற்றை சீக்கிரம் நடத்தி முடி’ என்றார்.
 
  • Like
Reactions: Sumathi mathi