அத்தியாயம் - 17

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,826
1,984
113
அத்தியாயம் - 17

நடப்பவைகள் அனைத்தும் அவளை குழப்பி இருக்க, அவளால் அந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மாமாவுக்கு எப்படி தெரிந்தது? அவர் இவனுக்கு உதவுவதற்கு எப்படி ஒத்துக் கொண்டார் என்று பல கேள்விகள் அவள் சிந்தனையில் எழுந்தது.

அவனோ பரபரப்புடன் இருந்தான். அவர்களை அங்கிருந்து உடனடியாக அழைத்துச் சென்று விட வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்தான். கேஷ்வியின் ஆட்கள் வர்ஷூவை கடத்துவதற்காக வெளியில் காத்திருப்பதை அறிந்தவன், பஜ்ரங்கை அழைத்து அவர்களை அப்புறபடுத்தும்படி கூறினான்.

அவன் போனில் பேசிக் கொண்டிருக்கும் நேரம் வர்ஷினி மாமாவின் முன் சென்று நின்றாள். அவளது முகத்தில் பதட்டமும் கவலையும் இருந்தது.

“உங்களுக்கு எப்படி மாமா இந்த விஷயம் தெரியும்? நீங்க ஏன் இதுக்கு ஒத்துக்கிட்டீங்க?”

அவளை முறைத்தவர் “வேற என்ன செய்யணும்னு நினைக்கிற வர்ஷோ? உன் அம்மா அப்பா இருந்திருந்தாலும் இதை தான் செய்திருப்பாங்க”.

“இல்ல மாமா! அம்மாவும் அப்பாவும் நிச்சயம் இதுக்கு ஒத்துகிட்டு இருந்திருக்க மாட்டாங்க”.

அவளை மேலும் முறைத்து “எதையும் ஏற்றுக் கொள்ளவோ மறுக்கவோ எங்களுக்கு வாய்ப்பை கொடுக்கவே இல்லையே நீ. இந்த வயதில் செய்யக் கூடாத ஒன்றை செய்திட்டு எங்கள் முடிவை நீ கேள்வி கேட்கிற? உனக்கு பின்னாடி உன் தங்கையோட எதிர்காலம் இருக்கு என்று எந்த இடத்திலேயாவது யோசிச்சியா? எத்தனை நாளைக்கு நானும் உன் பாட்டியும் உங்களுக்கு காவலாக இருக்க முடியும் சொல்லு? உங்க அப்பா அம்மா வாழ்க்கையையும் சேர்த்து முடிவிற்கு கொண்டு வந்துட்டு இன்னமும் நீ அடங்கல. எல்லா தப்பையும் நீ செஞ்சிட்டு என்னை கேள்வி கேட்கிற” என்றார் கோபமாக.

“மாமா!”

“பேசாதே! மாப்பிள்ளை போன் பண்ணி சொன்னதுனால தான் எனக்கு எல்லாம் தெரிஞ்சுது. என்னெனவோ நடந்து போச்சு. எல்லாத்தையும் விட்டுட்டு இனியாவது ஒழுங்கா அவரோட வாழற வழியைப் பாரு. தான்யாவோட வாழ்க்கையும் உன் கையில் தான் இருக்கு” என்று சொல்லி விட்டு தள்ளிச் சென்று விட்டார்.

அவர் பேசிச் சென்ற வார்த்தைகள் ஓவ்வொன்றும் ஈட்டியாய் குத்த அப்படியே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டாள். போன் பேசிக் கொண்டிருந்தவனின் பார்வை அவள் மீது படிந்து விலக, அவசரமாக போனை அணைத்து வைத்துவிட்டு அவள் அருகே சென்று அமர்ந்தான்.

“என்ன செய்யுது சோட்டி?”

அவனது குரலில் கலைந்தவளின் விழிகள் கண்ணீரை சுமந்திருக்க “எல்லா தப்பையும் நீங்க செய்திட்டு இப்படியொரு கல்யாணத்தை செஞ்சு என்னை குற்றவாளியா ஆக்கிட்டீங்க இல்ல” என்றாள் வெறுப்பாக.

அவளது கரங்களைப் பற்றியவன் “உனக்கு நான் எல்லாவற்றையும் விளக்கமா ஊருக்கு போனதும் சொல்றேன் சோட்டி. தயவு செய்து என்னை வெறுக்காதே” என்றான்.

அவனது கரங்களில் இருந்து தனது கைகளை விடுவித்துக் கொண்டவள் “தயவு செய்து என்கிட்டே பேசவோ, தொடவோ முயற்சிக்காதீங்க” என்று வெறுப்புடன் எழுந்து சென்று தங்கையுடன் நின்று கொண்டாள்.

தான்யாவிற்கு தான் என்ன நடக்கிறது என்று புரியவே இல்லை. திடீரென்று எதிர்பாராமல் அக்காவின் திருமணம். இப்போது தானும் அவர்களுடன் செல்ல வேண்டிய நிலைமை. ஒரே நாளில் தங்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்திருந்தாள்.

அந்நேரம் வரிசையாக மூன்று கார்கள் வந்து நிற்க, முதல் காரின் முன் சீட்டிலிருந்து ஆஜானுபாகுவாக ஒருவன் இறங்கி காரின் பின் கதவை திறக்க சித்தார்த் வேக நடையுடன் வர்ஷிணியின் கைகளைப் பற்றிக் கொண்டு தான்யாவைப் பார்த்து “வாம்மா” என்றழைத்து விட்டு காருக்குள் சென்றமர்ந்தான். முதலில் அவனும் அடுத்து வர்ஷினி அமர, அடுத்து தான்யா அமர்ந்தாள்.

அவர்கள் ஏறியதும் கார் கிளம்ப அவர்களின் முன்னே ஒரு கார் செல்ல, பின்னே ஒரு கார் பாதுகாப்பிற்காக தொடர்ந்தது. அதை பார்த்ததும் ஏதோ ஒரு பெரிய அரசியல்வாதியின் பாதுகாப்பு படை பட்டாளத்துடன் செல்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

தான்யா பொறுக்க முடியாமல் “மாமா குஜராத் வரை இப்படித்தான் போக போறோமா?” என்று கேட்டு விட்டாள்.

அதைக் கேட்டதும் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “இல்லம்மா! ஏர்போர்ட் வரை தான் இப்படி”.

அந்நேரம் அவனுக்கு அழைப்பு வர எடுத்து காதில் வைத்ததும் “மிஸ்டர் சித்தார்த்! திஸ் இஸ் சிவதாஸ்” என்றான் அந்தப் பக்கம் இருந்தவன்.

“ஹலோ மிஸ்டர் சிவதாஸ்! ஷ்யாம் உங்க கிட்ட பேசி இருப்பான். உங்களால எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?”

“எதுவும் சரியா இருந்தா தான் என்னால பண்ண முடியும். எனக்கு எல்லா டீடைல்சம் அனுப்பிடுங்க நான் பார்த்துக்கிறேன்”.

“ஓகே...நான் அனுப்பிடுறேன்”.

அவன் அங்கு பேசிக் கொண்டிருக்கும் நேரம் வர்ஷினியின் அருகே குனிந்தவள் “என்னக்கா மாமா இவ்வளவு அப்பாட்டக்கரா?” என்றாள் கிசுகிசுப்பான குரலில்.

வெறுமை படிந்த கண்களுடன் அவளை திரும்பி பார்த்துவிட்டு இறுக்கத்துடன் அமர்ந்திருந்தாள். அவளது நிலையை உணர்ந்த தான்யா, கரத்தை அழுந்தப் பற்றி “அக்கா! இப்போ எதையும் யோசிக்காதே. மனசை விட்டுடாதே. அமைதியா இரு” என்றாள்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,826
1,984
113
வர்ஷிணியின் மனமோ உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தது. அன்றைய நினைவுகள் எல்லாம் அவளை சுனாமி பேரலையாய் தாக்க, தன்னையும் மீறி பர்சில் வைத்திருந்த தாலியை இறுகப் பற்றிக் கொண்டது கைகள்.

அன்று அன்னை அதை அறுத்து எரியும் போது மனம் எப்படி பற்றி எரிந்தது. தன்னவனை தவறாக சித்தரித்தபோது துடித்த மனம், அவனுக்காக எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் சிலுவையை சுமந்து கொண்டு நின்றது நெஞ்சு குழியில் தேங்கி நின்றது.

அவளது மனநிலையையோ அழுத்தத்தையோ கவனிக்கும் நிலையில் அவனில்லை. மாறி மாறி போன் வந்தவண்ணம் இருந்தது. அனைத்திற்கும் பதில் சொல்லியவன் மேற்கொண்டு நடக்க வேண்டியவற்றை ஏற்பாடு செய்து கொண்டிருந்தான். ஏர்போர்ட் சென்று இறங்கியதும் இருவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

அவர்களுக்கான விமானத்தில் ஏறி அமர்ந்ததும் “மது, தான்யா ரெண்டு பேரும் நான் சொல்றதை நல்லா மனசில் பதிய வச்சுக்கோங்க. அங்கே போய் இறங்கியதும் நிறைய சம்பவங்கள் நடக்கும். எல்லாவற்றையும் பார்த்து நீங்க பயப்படக் கூடாது தைரியமா இருக்கணும். அதே சமயம் என் மேல நம்பிக்கை வைக்கணும்’ என்றவனின் பார்வை அழுத்தமாக வர்ஷிணியின் மீது படிந்தது.

“நானே கேட்கனும்னு நினைச்சேன் மாமா. நீங்க இன்னொரு கல்யாணம் செஞ்சிருக்கீங்க. சட்டப்படி அது குற்றமாகாதா? உங்களை கைது செஞ்சு ஜெயிலில் போடலாம் இல்லையா?” என்றவளை பார்த்து அதுவரை இருந்த இறுக்கம் தீர புன்னகைத்தவன் “செம ஸ்மார்ட் தான்யா. நிச்சயமா செய்ய முடியும் என் கிட்ட நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லாம இருந்தா” என்றான் வர்ஷினியை பார்த்தபடி.

இகழ்ச்சியாக உதட்டை வளைத்து “பணத்தை தூக்கி போட்டா ஆதாரத்தை உருவாக்கிடலாம். இங்கே உண்மைக்கு என்ன வேலை?” என்றாள் வர்ஷினி.

“அக்கா!”

வர்ஷினியை கூர்ந்து பார்த்தவன் “இப்போ உனக்கு என் மேல நம்பிக்கை இல்லாம இருக்கலாம். ஆனா நிச்சயமா எல்லாவற்றையும் நிருபிச்சிட்டு பேசுறேன் சோட்டி” என்றவன் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டான்.

தான்யாவோ அக்காவின் கையை சுரண்டி மெல்லிய குரலில் “மாமாவை பார்த்தா நல்லவரா தான் தெரியுறார் வர்ஷூ. அவருக்கும் ஒரு சான்ஸ் கொடுத்துப் பாரேன்”.

அவள் சொன்னது சித்தார்த்தின் காதில் விழ ‘விட்டுடு தான்யா. யார் சொன்னாலும் வேதனையை அனுபவிச்சவ அவ. நம்பிக்கை அவளுக்கு தன்னால வரணும். அடுத்தவங்க சொல்லி வரக் கூடாது”.

அதன் பின்னர் இறங்கும் வரை ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளவே இல்லை. பிளைட் லான்ட் ஆகப் போகிறது என்ற அறிவிப்பு வந்தவுடன் சித்தார்த் பரபரப்பானான். இருவரின் பக்கமும் திரும்பியவன் “நீங்க இதுவரை சந்திக்காத நிறைய விஷயங்களை இப்போ பார்க்க நேரிடும். அதே மாதிரி பலவிதமான மனிதர்களை சந்திக்க நேரிடும். எதையும் மனதில் ஏத்திக்காம என்னை மட்டும் நம்பி என் பின்னாடி வாங்க. முக்கியமான பயப்படக்கூடாது” என்றவன் வர்ஷினியிடம் “நீ இப்போ சித்தார்த் மல்ஹோத்ராவின் மனைவி. ஊடகங்கள் நமக்காக ஏர்போர்ட் வாசலிலேயே காத்திருப்பாங்க. அவங்க கேட்கும் கேள்விகளுக்கு நீ புன்சிரிப்போடு நின்று கொள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான்.

அவன் சொன்னதை கேட்டதுமே அக்கா தங்கை இருவருக்கும் முகம் பயத்தில் வெளிறிப் போனது. என்ன நடக்கப் போகிறதோ என்கிற எண்ணத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அவர்களின் மனதை புரிந்து கொண்டவன் “நான் இறங்கி முன்னே போயிடுவேன். நீங்க ரெண்டு பேரும் பஜ்ரங் கூட வாங்க. வர்ஷூ மனசில பயம் இருந்தாலும் முகத்தில் எதையும் காண்பித்துக் கொள்ளாதே. நான் சித்தார்த்தின் மனைவி என்கிற கம்பீரத்தோட வந்து என் பக்கத்தில் நில்லு” என்று பல அறிவுரைகளை கொடுத்துவிட்டு இறங்குவதற்காக காத்திருந்தான்.

சொன்னபடி அவன் முன்னே இறங்கி சென்றுவிட, அக்காவும் தங்கையும் பஜ்ரங்குடன் இறங்கி சென்றனர். தங்களின் பெட்டிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வாயிலை நெருங்கும் சமயம் அங்கே சித்தார்த் கம்பீரமாக நின்றிருக்க, அவன் முன்னே பத்திரிகையாளர்கள் நின்றிருந்தனர்.

பஜ்ரங் எட்டியே நின்று கொண்டு வர்ஷினியிடம் “மேடம்! நீங்க மட்டும் சார் கிட்ட போங்க. இவங்க என் கூட இருக்கட்டும்” என்றார்.

அதை கேட்டதும் பயத்துடன் தங்கையை திரும்பிப் பார்க்க, அவளோ வர்ஷூவின் கைகளை அழுந்தப் பற்றி “அக்கா! தைரியமா போ! மாமா சொன்னதை நினைவில் வைத்துக் கொள்” என்றாள் ஆறுதலாக.

ஒருவித தயக்கத்துடன் மெல்ல நடந்து அவனருகே செல்லும் நேரம் அங்கிருந்த போட்டோகிராபர்கள் படபடவென அவளை படமெடுக்கத் தொடங்கினர். அதைக் கண்டு தன்னை அறியாமலே அவனோடு கைகோர்த்து நெருங்கி நின்று கொண்டாள்.

அவள் வந்ததுமே அவள் தோளில் கை போட்டு தன்னருகே இழுத்துக் கொண்டவன் “ஷி இஸ் மை வைப் மதுவர்ஷினி” என்று அறிமுகப்படுத்தினான்.

உடனே “அப்போ கொஞ்ச நாள் முன்னாடி கேஷ்வி பட்டேலுடன் நடந்த திருமணம்? இவங்க உங்க இரெண்டாவது மனைவியா?” என்று சரமாரியாக கேள்விகள் எழத் தொடங்கியது.

ஒவ்வொருவரின் கேள்விகளுக்கும் சளைக்காமல் அவன் பதில் தந்து கொண்டிருந்தான். வர்ஷினி தான் தனது முதல் மனைவி என்றும் இரெண்டாவது நடந்த திருமணம் தன்னை மிரட்டி செய்யப்பட்டது என்று அதற்க்கான ஆதாரங்களை ப்ரெஸ்ஸின் முன்பு சமர்ப்பிக்க ஆரம்பித்தான். தங்களுக்கு கோவிலில் நடந்த திருமணம், அன்று தன்னை கடத்தி வந்தது என்று ஒவ்வொன்றிருக்குமான ஆதாரங்களை தனது பிஎவை வைத்து அவர்களுக்கு வழங்கினான். அனைத்தும் லைவில் போய் கொண்டிருக்க, அதை பார்த்துக் கொண்டிருந்த தாதாஜி இறுக்கமாக அமர்ந்திருந்தார்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,826
1,984
113
தினுவோ பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவன் தாதாஜியை திரும்பி பார்த்துவிட்டு “தெருநாய் எல்லாம் எப்படி பேசுதுன்னு பாருங்க. நீரஜை அடித்து போட்ட அன்னைக்கே இவனையும் முடிச்சிடலாம்னு சொன்னேன் கேட்டீங்களா?” என்று கத்தினான்.

அவனை திரும்பி பார்த்த தாதாஜி “தினு! அவன் பேசட்டும். இது நம்ம கோட்டை. இங்கே எவனும் நம்மை மீறி எதையும் செய்திட முடியாது” என்றார் அழுத்தமாக.

அவரை முறைத்தவன் “இதையே சொல்லிட்டு இருங்க. ஒரு விஷயத்தை நீங்க மறந்துட்டீங்க. சொத்தெல்லாம் அவன் பேரில் தான் இருக்கு. அவனை இப்படியே விட்டா பிம்லா தெருவில் தான் நிற்கணும்” என்றான் கோபமாக.

“நான் எதுக்கு இருக்கேன் தினு. நீ அமைதியாக இரு. இவனெல்லாம் பச்சா. நான் பார்த்துக்கிறேன்”.

“இந்த கேஷ்வி எங்கே போய் தொலைந்தாள்?”

“என் கெஸ்படி அவளை அவன் தூக்கி இருப்பான்” என்றார் தாதாஜி.

அவரை நன்றாக முறைத்தவன் “இதெல்லாம் நல்லா சொல்லுங்க. ஆனா அவன் அவளை எங்கே கூட்டிட்டு போக போறான்? பிம்லா வீட்டுக்கு போனானா நான் சும்மா இருக்க மாட்டேன்”.

“அங்கே தான் போக போறான். போகட்டும்! கேஷ்வியோட பேரண்ட்ஸ் அவன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்திட்டு அவனை தூக்கி உள்ளே வைப்பாங்க”.

அதுவரை ஆடிக் கொண்டிருந்தவன் “ஏற்பாடு செஞ்சிட்டீங்களா?” என்றான் கண்கள் விரிய.

மெல்லிய புன்னகையுடன் “உன் அப்பாவை நீ தான் புரிஞ்சுக்கல” என்றார்.

“சபாஷ்!” என்று கையைத் தட்டிக் கொண்டவன் “அவனை உள்ளே தூக்கிப் போடட்டும் மற்றதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்றான் கண்களில் பழி வெறி மின்ன.

அவனை கூர்மையாக பார்த்தவர் “அமைதியாக இருக்கப் பழகு தினு. நம்மோட எண்ணங்களை எதிராளி கணிக்கும்படி நடந்து கொள்ளக் கூடாது” என்றவர் “நீ பிம்லா வீட்டுக்கு கிளம்பு. அவளுக்கு ஆதரவா அங்கே இரு. நடப்பவைகளை அமைதியா வேடிக்கை மட்டும் பார்”.

“ம்ம்...சரிப்பா” என்றவன் கிளம்பி பிம்லா வீட்டிற்கு சென்றான்.

அவன் சென்ற நேரம் சித்தார்த்தும் வந்திறங்கினான். அவன் உள்ளே நுழையும் நேரம் கேஷ்வியின் பெற்றோர்கள் போலீசுடன் வந்தார்கள். அவர்கள் முகத்தில் அத்தனை வெறுப்பும் கோபமும் இருந்தது.

போலீஸ் அதிகாரி அவனிடம் அவர்கள் கொடுத்திருந்த வழக்கைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்க வர்ஷினிக்கோ கால்கள் நடுங்க ஆரம்பித்திருந்தது. அதிலும் கேஷ்வியின் பெற்றோர் அவளைப் பார்த்த பார்வையில் உடல் கூசி கூனி குறுகி நின்றாள். தான்யாவோ அக்காவின் மனநிலையை அறிந்து “அக்கா! நீ எந்த தப்பும் செய்யல. தைரியமா நிமிர்ந்து நில்” என்றாள் அழுத்தமாக.